திங்கள், 9 ஜனவரி, 2017

"திங்க"க்கிழமை 170109 :: மைசூர் சாத்துமது (ரசம்) - நெல்லைத்தமிழன் ரெஸிப்பிஎங்கள் வீட்டில் சாதம், குழம்பு, சாத்துமது, கரேமது, கூட்டு, திருவமாறுவது, தளிகைப்பண்ணுவது, கொதிக்க வை, சாதம் குழையட்டும், சாதத்தை சாதி (அதாவது போடு), தோசையை வார், இட்லி பண்ணு போன்றவைதான் வழக்குச் சொற்கள். மாற்றிச் சொன்னால், பெரியவர்களின் அனல் மற்றும் வித்தியாசமான பார்வையை எதிர்கொள்ள நேரிடும். (Pre KG படித்துக்கொண்டிருந்தபோது, என் பையனுக்கு அவன் அம்மா, Duck அப்படின்னா வாத்துன்னு சொல்லிக்கொடுத்தா. பையன், உடனே, ‘வாத்து வாத்து வாத்து.. தோசை வாத்து வாத்து வாத்து’ அப்படீன்னான். அதை அப்போதே வீடியோ கிளிப்பிங்க் எடுத்தேன் இப்போவும் அதைப் பார்க்கும்போது எங்களுக்கு குழந்தைகளின் மழலையும், வீட்டின் வழக்குச் சொற்களை மனதில் வைத்துக்கொள்ளும் குணமும், innocenceம் ஞாபகத்துக்கு வரும்). ‘வெங்காய சாம்பார்’ மட்டும்தான், எங்கள் வீட்டில் ‘சாம்பார்’ என்பது சேர்த்துவரும் (ஏன்னா, அது எங்கள் அகத்தில் வழி வழி வரும் உணவல்ல. பெரியவர்கள் இல்லாத நாட்களில், தனிப் பாத்திரத்தில் பண்ணவேண்டிய சமாச்சாரம் அது).  இப்போ புரிவதற்காக, ரசம் என்று உபயோகப்படுத்துகிறேன். என்னுடன் பணிபுரிபவர், ‘ரசம்’ என்று சொல்லாமல், ‘தண்ணிசாறு’ என்ற சொல்லை உபயோகப்படுத்துவார். அவர் மாயவரத்தான்.

முதல்ல ரசம் வைக்கணும்னா, (பெரும்பான்மையானவைகளுக்கு), கொத்தமல்லித் தழை முக்கியம். (வாசனைப்பொருட்கள், துணைப்பொருட்கள் இல்லாமல் நான் சமையலில் இறங்கவே மாட்டேன்!!)  அது இல்லைனா ரசம் ரொம்ப வாசனையா இருக்காது (ஜீரகரசம், மிளகு ரசம், மோர் ரசம் போன்றவைகளுக்கு கொத்தமல்லி வேண்டாம்). கொஞ்சம் குளிர் காலம்னா, மைசூர் ரசம் வச்சுச் சாப்பிட்டா, ரொம்ப நல்லாருக்கும். இப்போ எப்படிப் பண்ணறதுன்னு பார்க்கலாம்.முதல்ல, 1/3 கப் துவரம்பருப்பு, 2/3 கப் தண்ணீர், துளி மஞ்சள்பொடியோட குக்கர்ல வேகவைச்சுக்கோங்க. ஜீரகம் 1 ஸ்பூன், மிளகு 1 ஸ்பூன், கொத்தமல்லி விரை (தனியா) 1 மேசைக்கரண்டி, துவரம்பருப்பு 1 மேசைக்கரண்டி, 3 சிவப்பு மிளகாய், தேங்காய்த் துருவல் 1 மேசைக்கரண்டி ஆகியவற்றை, வெறும் வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும்.  நான் 1 ¼ ஸ்பூன் மிளகு உபயோகப்படுத்துவேன். வறுத்தவற்றை ஒரு தட்டில் போட்டு ஆறவைக்கவும்.2 சாதாரண அளவு தக்காளியைத் தோலுரித்துவிட்டு (நான் வென்னீரிலெல்லாம் போட்டுத் தோலுரிக்கமாட்டேன். சதக் சதக் என்று நல்ல கத்தியால் தோலை எடுத்துவிடுவேன்), சிறிது சிறிதாக கட் செய்துகொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெயில் கடுகு தாளித்துவிட்டு, தக்காளித்துண்டுகளையும் போட்டு நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள்.வறுத்தவை இப்போது ஆறியிருக்கும்.. அதை மிக்சியில் போட்டு நைசா அரைத்துக்கொள்ளவும்.

 (படம் படு கவர்ச்சியா இருக்கு நெல்லை..  அப்படியே ஒரு டம்ளர் கொண்டு மொண்டு குடிக்க ஆசை!!)¾ டம்ளர் நீர்த்த புளித் தண்ணீர் (ஒரு சிறிய எலுமிச்சம்பழ அளவு புளி போதும்), (ரசத்துக்கு எப்பவுமே ரொம்பக் குறைவாத்தான் புளி எடுத்துக்கறது வழக்கம்.  சிலசமயம் தக்காளியே போதும்னு விட்டுடறதும் உண்டு!) ½ டம்ளர் தண்ணீர், மஞ்சள் தூள், பெருங்காயம் கொஞ்சம், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவைக்கவும். புளிவாசனை போனபின், வேகவைத்த துவரம்பருப்பு, வதக்கின தக்காளி சேர்த்து 2-3 நிமிடம் கொதிக்கவிடவும்.  அப்புறம், அரைத்த பொடி, கொத்தமல்லி சேர்த்து, குறைந்த தணலில் கொதிக்கவைக்கவும். இப்போ, சுவையைப் பொறுத்து, கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். பொதுவா, காம்போட உள்ள கொத்தமல்லியைக் கொதிக்கும்போதும், அடுப்பை அணைத்தபின், கொஞ்சம் கொத்தமல்லி இலைகளையும் போட்டால், வாசனையாக இருக்கும்.மைசூர் ரசத்துக்கு எந்தக் காயும் (கரேமது) தொட்டுக்க நல்லா இருக்கும். சேப்பங்கிழங்கு ரோஸ்டோ, உருளை காரக் கறியோ எந்த ரசத்துக்கும் சேரும். நான் அன்றைக்கு பீன்ஸ் பருப்புசிலி செய்தேன் (அதன் செய்முறையை விரைவில் எழுதுகிறேன்). மைசூர் ரசம், அன்றைக்கு ரொம்ப நல்லா வந்திருந்தது. இரவுக்கு, என் favoriteஆன, சப்பாத்தி, அதன் மேல் ஒரு கரண்டி மைசூர் ரசம் மண்டி (ரசத்தில் மேலாப்புல நீரா இருக்கும், அடியில் கொஞ்சம் thickஆக இருக்கும். அதை மண்டி என்போம்), அதன் மேல் இன்னொரு சப்பாத்தி.. இப்படி 4-5 சப்பாத்திகளை அடுக்கி, பத்து நிமிடம் கழித்துச் சாப்பிட எனக்கு ரொம்பப் பிடிக்கும். அன்றைக்கு சப்பாத்தி, மைசூர் ரசம்தான் இரவுணவுக்கு.

சாதாரண தக்காளி ரசம், மிளகு ரசம், ஜீரக ரசம் போன்றவற்றைவிட, மைசூர் ரசம் நல்லா வாசனையா இருக்கும். செய்துபாருங்கள்.

அன்புடன்,

நெல்லைத்தமிழன்.


(நாங்கள் தேங்காய் சேர்க்க மாட்டோம்.  மைசூர் ரசம் என்று வைத்ததில்லை.  என் பாஸ் ஆண்டாள் ரசம் என்று வைப்பார்.  எளிதாகவும், சுவையாகவும் இருக்கும் அது.)

38 கருத்துகள்:

 1. அருமை
  படிக்கும்போரே வாசனை தூக்குகிறது நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
 2. மைசூர் ரசம் - எனக்கும் பிடித்தமானது.

  படத்தில் பார்க்கும்போதே ஒரு கரண்டி எடுத்துக் குடித்திடத் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 3. ரைட்டோ, ரைட்டு. என் மாமியார் வீட்டில் மைசூர் ரசத்திற்குக் கடலைப்பருப்பு வறுத்துச் சேர்ப்பார்கள். நான் துவரம்பருப்பு! :)நீங்க சொல்றாப்போல் நானும் மிளகு ஜாஸ்தி வைப்பேன். மற்றபடி செய்முறை இது தான். அன்னிக்கு நோ சாம்பார்! நோ வத்தக்குழம்பு! நோ மோர்க்குழம்பு! ரசம் ஒரு கறி அல்லது கூட்டு மட்டும் தான்.

  பதிலளிநீக்கு
 4. நெல்லைத்தமிழன் அவர்களின் மைசூர் ரஸம் (சாத்தமது) பற்றிய அருமையான படங்களிலும், சிரத்தையுடன் கூடிய செய்முறைகளிலும், ஒருவித காரசார மணமும், குணமும், ரஸமும் உள்ளது. பாராட்டுகள். வாழ்த்துகள்.

  >>>>>

  பதிலளிநீக்கு
 5. ஒருநாள் காஞ்சி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா, ஸ்ரீ மடத்தின் சமையல்காரரை அழைத்து, ஒரு சின்ன சந்தேகம் கேட்கிறார்.

  “குழம்புக்கும் ரஸத்திற்கும் என்ன வித்யாசம்?”

  சமையல்காரர் மிகவும் பெளவ்யமாக, கைகட்டி, வாய் பொத்தி, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளிடம் ஏதேதோ விளக்கங்கள் சொல்லிக்கொண்டு போகிறார்.

  அனைத்தையும் கேட்டுக்கொண்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா, சிரித்துக்கொண்டே தன்னுடைய விளக்கத்தைக் கீழ்க்கண்டவாறு சொல்லுகிறார்:

  -=-=-=-=-

  குழம்பில்தான் ‘தான்’ உண்டு.

  ’தான்’ என்ற ஒன்று இருப்பதால்தான் குழம்புபோல நாமும் மிகவும் குழம்பித்தவிக்க வேண்டியுள்ளது.

  (தான் = அகந்தை, அகம்பாவம், செறுக்கு, மண்டை கர்வம் முதலியன).

  ’தான்’ இல்லாத அதே குழம்பு தெளிவடைந்து விட்டால் ’ரஸம்’ என்றாகி விடுகிறது.

  ‘ரஸம்’ என்றால் ’பரமாத்மாவான பகவான்’ என்று பொருள்.

  நாம் குழம்பிலிருந்து (நம் குழம்பிய மனத்திலிருந்து) ரஸமான பகவானை அடைய முயற்சிக்கும் முன்பு, ‘தான்’ என்ற அகந்தையை முதலில் நம்மிடமிருந்து நீக்கிவிட முயற்சிக்க வேண்டும்.

  -=-=-=-=-

  பதிலளிநீக்கு
 6. ரசவடையை கேள்விபட்டுள்ளேன் ,ரச சாப்பாத்தியா ?நல்லாயிருக்குமா:)

  பதிலளிநீக்கு
 7. அட! மைசூர் ரசம் வீட்டில் அடிக்கடி செய்வதுண்டு!!! எல்லோருக்கும் மிகவும் பிடித்தம் என்பதால்....வீட்டில் இதே ரசத்தில் புளிக்குப் பதில் எலுமிச்சை பிழிவதுண்டு.

  பங்களூர் ரசம் செய்ததுண்டா நெல்லைத்தமிழன்??!! சூப்பராக இருக்கும்...நீங்கள் செய்திருப்பீர்கள்!!

  கீதா

  பதிலளிநீக்கு
 8. ஸ்ரீராம் இப்படியும் செய்து பாருங்கள்!! நன்றாக இருக்கும்...

  சரி பாஸின் ஆண்டாள் ரசம் குறிப்பு என்னவோ?! செய்து கொடுங்கள் "திங்க" வரேன்!!

  கீதா

  பதிலளிநீக்கு
 9. மைசூர் ரசம் மிகவும் அருமை. நான் அடிக்கடி செய்வேன்.

  பதிலளிநீக்கு
 10. நிறைய மதுக்கள் இருக்கின்றனவே?..

  நெல்லை! சாத்துமது-வா, இல்லை, சாத்தமுதுவா?..

  சாதம்+அமுது மருவி சாத்துமது ஆயிற்றோ?

  அப்படி மருவவில்லை என்றால்---

  சாதம்+ அமுது = சாத்தமுது தான் சரியோ?..

  பதிலளிநீக்கு
 11. நன்றி ஸ்ரீராம், எங்கள் பிளாக் - வெளியிட்டமைக்கு.

  பதிலளிநீக்கு
 12. சட்டென்று ஜீவி சாரின் பின்னூட்டம் கண்ணில் பட்டது. அப்புறம் வருவதாயிருந்தவன், இதற்கு மட்டுமாவது உடனே பதிலெழுதாமல் இருக்கமுடியவில்லை.

  சாதத்தில் சாற்றும் அமுது, சாத்தமுது. பேச்சுவழக்கில் சாத்துமது என்று வருவது சகஜம்தான் (கொழக்கட்டை, குழக்கட்டை போன்று). நாங்கள் பாயாசத்தை (ஆயாசமாகப் போகிறது. பாயசம் என்பதுதான் சரி என்று நினைக்கிறேன்) திருக்கண்ணன் அமுது (சுருக்கமாக திருக்கண்ணமுது) என்றுதான் சொல்வது வழக்கம். கொஞ்சல் மொழியில், திக்கம். பொதுவாக வழக்கமான பெயர்கள் எல்லாம் தூய தமிழில் இருப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன்.

  உங்கள் கேள்வி எனக்கு இன்னொன்றைச் சொல்ல வைத்தது. இலையில் முதலில் பாயசம் (எங்கள் வார்த்தை அல்ல) போடுவது (நாங்கள் சாதிப்பது என்ற சொல்லை உபயோகப்படுத்துவோம்) எங்கள் வழக்கமல்ல. இறைவனுக்குப் படைத்த பழம்+ஜீனி தான் இலையில் முதலில் வைப்பார்கள். பலர், முதலில் பாயசம் வைப்பார்கள். இது ஏதேனும் காரணமாகவா என்று தெரியவில்லை. நான் எப்போதும், பாயசம் சாப்பிட்ட வாயுடன் உணவை முடித்துக்கொள்வேன். மோர் சாதம் சாப்பிடமாட்டேன்.

  பதிலளிநீக்கு
 13. வாராவாரம் அசத்தறீங்க சகோ.
  அந்த தோசை வாத்து :) ரசித்தேன் ..என் மகள் ..கட்னி (சட்னி ) முங்காளி (முருங்கைக்கா )meems (beans ) அசம் (ரசம் )என நிறைய மழலையில் சொல்வா

  பதிலளிநீக்கு
 14. ரசங்களி வெரைட்டி எல்லாம் என் மனைவி செய்வாள் அநேகமாக ரசம் இல்லாமல் சமையலே கிடையாது

  பதிலளிநீக்கு
 15. ஆஹா.. விளக்கம அருமை. புரிந்து கொண்டேன். ரொம்ப நன்றி.

  அதே மாதிரி தயிர் சாதத்திற்கு... அவசரமில்லை, பின்னால் சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
 16. சுவையான குறிப்பும் குடிக்கத்தூண்டுகிற மாதிரியான புகைப்படமும் அருமை! சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் ரசத்திற்கு த‌ந்த விளக்கம் மிக அருமை!

  பதிலளிநீக்கு
 17. //நான் எப்போதும், பாயசம் சாப்பிட்ட வாயுடன் உணவை முடித்துக்கொள்வேன். மோர் சாதம் சாப்பிடமாட்டேன்.// ஆஹா, நீங்க நம்ம கட்சி போல. நானும் பாயசம் சாப்பிட்டால் அப்புறமா மோர் சாதத்துக்கு நோ சொல்லிடுவேன். அப்படி மோர் சாதம் சாப்பிடும்படி இருந்தால் பாயசத்தைக் கடைசியில் சாப்பிடுவேன். என்னை நன்கறிந்தவர்கள் எனக்கு மோர் சாதம் சாப்பிட்ட பின்னரே பாயசம், சர்க்கரைப் பொங்கல்னு சாப்பிடச் சொல்லி உபசாரம் செய்வாங்க.

  பதிலளிநீக்கு
 18. நன்றி ஜெயகுமார் சார்.

  நன்றி வெங்கட்ஜி. தில்லியிலேயே இருப்பதனால் நம் பக்கத்துச் சாப்பாட்டை மறந்திருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 19. நன்றி கீதா சாம்பசிவம் மேடம். 'வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி'யை ஞாபகப்படுத்திற்று உங்கள் 'ரைட்டோ ரைட்டு'. மைசூர் ரசம் பண்ணினால், வேறு எதுவும் தேவையில்லை. நீங்கள் சொன்னதுபோல் ஒரு கறி அல்லது ஒரு கூட்டு அதுவும் இல்லைனா, அப்பளாம்கூடப் போதும் (இருந்தாலும், ஜீரக சாத்துமது, அப்பளாம்போல் வராது)

  பதிலளிநீக்கு
 20. நன்றி கோபு சார். 'காரம் மணம் குணம் நிறைந்த டி.கே.எஸ் பட்டணம் பொடி' என்ற 70கள்ல உள்ள விளம்பரத்தை ஞாபகப்படுத்திவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 21. மீள் வருகைக்கு நன்றி கோபு சார். பொருத்தமான இடத்தில், பெரியவாளின் அமுதமொழிகளை எழுதியதற்கு நன்றி. 'தான்' என்ற அகந்தையை நம்மால் நீக்க முடிந்தால், நாம் இருக்கும் இடத்திலா இருப்போம்.. எத்தனை முறை நமக்குச் சோதனை வந்து, நம் முயற்சியால் அல்ல, இறைவன் அருளால் நீங்கும்போதும், அப்போது தோன்றுகிற, 'இறைவன் அருளல்லவோ இடர்களைக் களைகிறது..' என்ற எண்ணம், கொஞ்ச நாளிலேயே மறந்து, 'தான்' என்ற அகந்தை வந்துவிடுகிறது...

  பதிலளிநீக்கு
 22. நன்றி பகவான்'ஜி.. சப்பாத்தியை, குழம்பிலோ அல்லது ரச மண்டியிலோ நான் எழுதியபடி கொஞ்சம் (5 நிமிடம்கூடத் தேவையில்லை) செட் ஆகவிட்டு சாப்பிட்டால் ரொம்ப நல்லா இருக்கும். வயதானவர்களுக்கு இன்னும் பிடிக்கும் (சப்பாத்தியோடு போராடவேண்டியதில்லை)

  பதிலளிநீக்கு
 23. நன்றி தில்லையகத்து கீதா ரங்கன். நான் பெங்களூர் ரசம் கேள்விப்பட்டதுகூட இல்லை (ஒருவேளை பெங்களூர் போய், மைசூர் ரசம் செய்து சாப்பிட்டால் அது பெங்களூர் ரசமாகிவிடுமா?). 94ல் துபாயில், கர்நாடகாவைச் சேர்ந்த ஆடிட்டர் அவர் வீட்டுக்குச் சாப்பிடக் கூட்டிருந்தார். அவர் வீட்டில், ரசத்தில், பீட்ரூட் எல்லாம் போட்டிருந்தார். ரசத்தின் நிறம் பீட்'ரூட் நிறத்தில் இருந்தது. ரொம்ப வித்தியாசமா இருந்தது (எனக்கு எதுவும் வித்தியாசமா இருந்தாப் பிடிக்காது)

  பதிலளிநீக்கு
 24. நன்றி ஏஞ்சலின். மழலையையும், வளரும்போது உள்ள பேச்சு, நடவடிக்கைகளையும் மறக்காம Movie Clipsஆ எடுத்து வச்சுக்கோங்க. அப்போ அப்போ பார்த்து எஞ்சாய் பண்ணமுடியும். நான் என் இரண்டு குழந்தைகளின் activitiesஐயும் முடிந்தவரை சிறு சிறு கிளிப்பிங்களாக எடுத்துவைத்திருக்கிறேன். அது இரண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் கம்ப்ளெயிண்ட் பண்ணும்போதாகட்டும், கோபத்தில் இருக்கும்போது, ரைம்ஸ் சொல்லும்போது (அதுவும் 1 1/2 வயதில் அவங்க இஷ்டப்படி இங்கிலீஷ் ரைம்ஸ் வார்த்தைகள் மழலையில் வரும்) என்று பல occassionகள்ல எடுத்திருக்கிறேன். டிஜிட்டல் கேமரா இல்லாதிருந்த 98களில், வாய்ஸ் ரெக்கார்ட் பண்ணிவைத்திருந்தேன்.

  பதிலளிநீக்கு
 25. நன்றி நண்டு அவர்களுக்கு

  நன்றி ஜி.எம்.பி ஐயா.

  பதிலளிநீக்கு
 26. நன்றி ஜீ.வி சார். தயிர் சாதம், விருந்துகளில் அல்லது வீடுகளில் பொதுவாக இருக்காது. ரசம், பாயசம் அப்புறம் மோர் சாதம். கோவில்களில் தயிர் சாதம், 'ததியோன்னம்' என்ற பெயரில் வழங்கப்படுகிறது. பால், உறை ஊற்றுவதன்மூலம், கடைசி நிலையான தயிர் (ததி) என்ற நிலையை அடைவதுபோல், இறைவனிடம் சேரும் பேரானந்த நிலையை ததியோன்னம் நினைவுபடுத்துவதாக முன்னால் படித்துள்ளேன்... குழந்தைகளுக்கு 'தச்சி மம்மு'. இதைத்தான் நினைவுபடுத்தியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 27. மீள் வருகைக்கு நன்றி கீதா மேடம்.. எனக்கு ஸ்வீட் ரொம்பப் பிடிக்கும். இப்போ இளமையில் சாப்பிட்ட அளவு சாப்பிடமுடியாது.. அதுனால, ஸ்வீட் கடையில் எல்லா ஸ்வீட்களையும் நோட்டம் விடுவதும், இங்கு ரொம்பப் புதிய காய்கறிகள் எல்லாம் கிடைப்பதில்லை என்பதால் (கோஸ், முள்ளங்கி, கீரை, காலிஃப்ளவர், பீட்'ரூட், கத்தரி, தக்காளி போன்றவைகளைத் தவிர), காய்கறி மார்க்கெட்டில் எல்லாக் காய்கறிகளைப் பார்ப்பதும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். உங்களுக்கும் ஸ்வீட் ரொம்பப் பிடிக்கும் என்றே நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 28. இப்போதைய கல்யாண, நிச்சயதார்த்த விருந்துகளில் தயிர்சாதம் கட்டாயமாய் இருக்கு. அதுவும் ஐயங்கார் வீட்டுக்கல்யாணங்களில் தயிர் வடை,அக்கார அடிசில், காராசேவு, தயிர்சாதம் நிச்சயம் இருக்கும். :)

  பதிலளிநீக்கு
 29. @நெல்லைத் தமிழன், ஸ்வீட் பிடிக்காதவங்க யார் இருக்காங்க? அதிலும் எனக்குப் பாயசம் என்றால் உள் நாக்குத் தித்திக்கணும்னு சொல்வேன். நிறையத் தித்திப்புப் போடுவேன். என் பெரியப்பா சர்க்கரைப் பொங்கலுக்கு உப்பு நார்த்தங்காய் தொட்டுக் கொண்டு சாப்பிடுவார். :)

  பதிலளிநீக்கு
 30. கீதா மேடம்.... சமீபத்துல (பல பல வருடங்களாக) நான் கல்யாணவிருந்து சாப்பிட்டதில்லை. 'தயிர்சாதம்' இந்த கான்'ட்ராக்ட் கொடுக்கிற கல்யாண சமையல்களில் வசதிக்காக வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. தயிர்வடை, அக்கார அடிசில் உண்டு. (எனக்குப் பிடிக்காது. பாலில் செய்வது) காராசேவு?

  எனக்கு பாயசத்தில் பால் விடுவதே பிடிக்காது (இனிப்பைக் குறைத்துவிடும் என்பதால்). வெல்லப் பாயசத்துக்கு அப்பளாம், மோர் சாதத்துக்கு மாம்பழம்.. திருவாதிரைக் களிக்கு 7-கறி கூட்டு. நீங்கள் சொல்லியிருக்கும் சர்க்கரைப் பொங்கலுக்கு ஊறுகாய்/உப்பு நார்த்தங்காய் - வித்தியாசமான காம்பினேஷன்கள்.

  பதிலளிநீக்கு
 31. //பால், உறை ஊற்றுவதன்மூலம், கடைசி நிலையான தயிர் (ததி) என்ற நிலையை அடைவதுபோல், இறைவனிடம் சேரும் பேரானந்த நிலையை ததியோன்னம்.. //

  'ததி'க்கு இத்தனை நாள் தெரியாத விளக்கம் நெல்லை. அதை இறைவனிடம் சேரும் நிலையுடன் பொருத்திச் சொன்னது அற்புதம்.

  'ததி'யை 'தடி' என்ற புழக்க உச்சரிப்பால் விளைந்த குழப்பங்கள் வேறு.

  நீங்கள் உங்களுக்கென்று தனியாக பிலாக் (BLOG) ஏன் கொள்ளவில்லை?.. தெரியவில்லை. அதற்கான நேரம் வந்து விட்டதோ?..

  பதிலளிநீக்கு
 32. நன்றி ஜீவி சார். (தடி-இதை விளக்கியிருக்கலாம். தடியன்னம் என்று சொல்கிறார்களா? அப்படி என்றால் அது மருவு)

  நன்றி அசோகன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!