செவ்வாய், 12 மார்ச், 2019

கேட்டு வாங்கிப் போடும் கதை : அவன் அருளாலே அவன் தாள் – நெல்லைத் தமிழன்


அவன் அருளாலே அவன் தாள்

நெல்லைத் தமிழன்   

அதான் ஜாதகம் பார்த்துட்டேனில்ல. உங்களுக்கு இப்போ உள்ள கிரக நிலைக்கு ஆபத்ஸஹாயர் கோவிலுக்குப் போயிட்டுவாங்க. அங்க வேண்டிக்கிட்டு வந்தீங்கன்னா படிப்படியா உங்களுக்குள்ள பிரச்சனைகள் விலகும்”

ஜோசியர் வாக்குக்கு வீட்டில் மறு பேச்சே இல்லை. அவ்வளவு தூரம் போகணுமே..  நினைத்தாலே கண்ணைக் கட்டியது போலிருந்தது ராகவனுக்கு.  கும்பகோணம் போயிட்டு அங்கிருந்து 25 கிலோமீட்டர் டாக்ஸில போகணுமாம் கோவிலுக்கு. ரொம்பவும் தள்ளிப்போட முடியாது.

“நாம அடுத்த வாரம் பெங்களூருக்கு உங்க உறவினர் கல்யாணத்துக்குப் போகணுமே.  போய்ட்டு வந்து இந்தக் கோவிலுக்குப் போலாமா?”

“இல்லைமா. அது சரிப்பட்டு வராது.  கல்யாணத்துக்கே நம்ம பசங்களைத் தனியா விட்டுட்டுப் போறோம். திரும்பவும் கோவிலுக்குப் போறதுக்காக இன்னும் ஒரு தடவை அவங்களைத் தனியா விடணும். அது வேலைக்காகாது”

“சரி… அப்போ நீங்க மட்டும் போயிட்டு வாங்கோளேன்”

“நீ என்ன பண்றே… என் அக்கா பெங்களூர் போகும்போது அவளோடயே நீ போ. நான் கும்பகோணம் போயிட்டு, கோவில்ல சேவிச்சுட்டு அங்கேர்ந்தே நேர பெங்களூருக்கு,  பஸ்ஸில் வந்துடறேன். அங்கிருந்து நேர மண்டபத்துக்கே வந்துடறேன். மறுநாள் காலை முகூர்த்தம் முடிஞ்சு ரெண்டுபேரும் திரும்பிடலாம். கல்யாணம் முடிஞ்சு கோவிலுக்குப் போனாலும் தனியாத்தான் போகணும். அதுக்கு இப்பவே போயிட்டு வந்துடலாமில்லையா”

**



காலையிலேயே ஹோட்டலுக்குச் சென்று குளித்துவிட்டு, உடனே டாக்ஸி எடுத்துக்கொண்டு கோவிலுக்குப் போயிட்டு, திரும்ப மதியம் 12:30 மணி பஸ்ஸில் பெங்களூர் செல்வதாகத் திட்டம்.  கோவில் 8 மணிக்குத் திறப்பார்கள். அதனால் 9 மணிக்கு அங்கு சென்றுவிட்டு, அரை மணி நேரம் கழித்து அங்கிருந்து திரும்பினால், 11 மணிக்கு முன்னாலேயே ஹோட்டலுக்கு வந்துவிடலாம். உடனே சாப்பிட்டுவிட்டு பஸ் ஏறும் இடத்துக்குப் போயிடலாம். அதனால் டாக்ஸிய 7:30க்கு வரச்சொல்லியிருந்தான்.

“சார்… நான் வந்தாச்சு. லாபில காத்திருக்கேன். வர்றீங்களா”, சரியா 7.30க்கு டிரைவர் ரவி கூப்பிட்டார்.

“ரவி… நீங்க சாப்பிட்டாச்சா? இல்லைனா ரெண்டுபேரும் சாப்பிட்டுட்டு  கோவிலுக்குப் போகலாம். வழில நல்ல ஹோட்டல் இருக்கா”

“அதெல்லாம் பிரச்சனை இல்லை சார்.  வாங்க”

**

“ரவி.. அரை மணி நேரத்தில் கோவிலுக்குப் போயிடலாம் இல்லையா? இப்போ மணி 8.15 ஆறதே”

“சார்.. ரோடுலாம் சுமாராத்தான் இருக்கும். 3/4 மணி நேரத்துக்குள் போயிடலாம்.”

காலைல சாப்பிடுவதற்காக ஹோட்டலைத் தேடிப் போயிருக்கக்கூடாதோ என்று ராகவன் மனதில் தோன்றியது.  இந்த இரண்டு வருடங்களாகத்தான் ராகவனுக்கு உடம்பு ரொம்பவும் படுத்துகிறது. பொதுவா அவன் ஆரோக்கியமாகத்தான் இருப்பான்.  அவனுக்கே இது ஆச்சர்யம்தான். எதுனால இப்படி ஒண்ணு மாத்தி ஒரு பிரச்சனை உடம்புக்கு வருதுன்னு அவனுக்கே தோன்றியது. அவன் அக்காதான், அவனிடம் ஜோசியர் குலசேகரனைப் போய்ப் பார்க்கச் சொன்னார். ராகவனுக்கு இதிலெல்லாம் அவ்வளவு நம்பிக்கை இல்லை. ஆனால் காரணமே இல்லாமல் இரண்டு வருடங்களாக உடம்பு படுத்துவதை அவனால் தள்ளிவிட முடியவில்லை. ஒருவேளை கிரஹ கோளாறாக இருக்குமோ? பானுவும், அக்கா சொன்ன மாதிரி ஜோசியரைப் போய்ப் பார்போமே என்று சொல்லிவிட்டாள்.  ஜோசியரோ, ஜாதகத்தைத் தீவிரமாகப் பார்த்து ஏதேதோ கணக்குகள் போட்டு, இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்கு உடம்பு படுத்தத்தான் செய்யும். இது தெய்வ சாபமாய் இருக்கலாம். பேசாமல் ஆபத்சஹாயரைப் போய் சேவித்துவிட்டு வாருங்கள் என்று சொல்லிட்டார். அங்க அபிஷேகம் பண்ணி வேண்டிக்கொண்டால் வெள்ளத்தைக் கடக்கும் படகுபோல், ஆபத்சஹாயர் கஷ்ட காலத்தைக் கடக்க உதவுவார் என்றார்.

செல்போன் சப்தம் அவன் நினைவைக் கலைத்தது.

“கோவிலுக்குப் போயாச்சா”

“இல்லைடீ.. டாக்சீல போயிண்டிருக்கேன். இன்னும் அரை மணி முக்கா மணில சேர்ந்துடுவேன்”

“திரும்ப டயத்துக்கு பஸ் ஸ்டாண்டுக்கு வந்துடுங்கோ.  இந்த பஸ்ஸை விட்டால், அடுத்த பஸ் ராத்திரி 10 மணிக்குத்தான். அப்புறம் சில்க் போர்டுல இறங்கி அடுத்த டாக்சி பிடிச்சு கல்யாண மண்டபம் வர்றதுக்குள்ள கல்யாணமே முடிஞ்சுடும்”

“அதான் பஸ் புக் பண்ணியாச்சில்லையோ… அப்புறம் என்ன. சின்னக் குழந்தைக்குச் சொல்ற மாதிரி. போனை வை”  கொஞ்சம் எரிச்சலோடு போனை அணைத்தான்.

ரோடும் ஸ்மூத்தாக இல்லை. ஒரே சரளைக் கல்லும் பள்ளமுமாக வண்டி ஒரே குலுக்கல்.

“என்ன ரவி.. ரோடு கட முடான்னு இருக்கு”

“ஆமாம் சார்.. இன்னொரு 15 கிலோமீட்டர் இப்படித்தான் இருக்கும்.  அரசாங்கத்துக்கு சென்னையில் மட்டும் ரோடு போட்டு வளர்ச்சி காண்பித்தால் போதும்னு நினைப்பு. இல்லைனா, பெரிய நகரங்களுக்கு மட்டும் கொஞ்சம் கொஞ்சம் வசதி பண்ணித்தருவாங்க. இந்த மாதிரி கிராமங்களுக்கெல்லாம் எங்க சார் ரோடைச் சரி பண்ணறாங்க? ரெண்டு மாசம் முன்னால புஷ்கரத்துக்கு ஒரு ஃபேமிலியை திருநெல்வேலிக்குக் கூட்டிப்போயிருந்தேன். அங்க அப்போ, , அமைச்சர்கள், பெரிய தலைகள்லாம் வரும்னு ரோடுகளைச் சரிபண்ணியிருந்தாங்க. கும்பகோணத்திலயும் மகாமகத்துக்கு நகரத்துல ரோட்டைச் சரி பண்ணினாலும், சுற்றி இருக்கற கோவில்களுக்குப் போற பாதைகளைச் சரி பண்ணறதில்லை. இங்கயும் கோவில்களுக்கு கவர்னரோ இல்லை முதலமைச்சரோ விசிட் பண்ணினார்னா, அதைச் சாக்கிட்டாவது இந்த ரோடுகளைச் சரி பண்ணுவாங்களாயிருக்கும்”

ராகவன் கண்ணை மூடி யோசிக்க ஆரம்பித்தான்.  அர்ச்சகர்ட்ட அபிஷேகத்துக்கு ஏற்பாடு செஞ்சாச்சு. போய் பணம் கொடுக்கவேண்டியதுதான். அவர் எவ்வளவோ சொல்லியும் ராகவனுக்கு அங்கு சாப்பிட இஷ்டமில்லை. பேசாமல் ஹோட்டல்லயே சாப்பிட்டுடலாம்.  கோவில்ல சாப்பிட சவுகரியப்படாது.  அந்த ஊரே சிறிய ஊரா இருக்கும். ஒரு செளகரியமும் இருக்காது. நல்லவேளை… நாம பூ, அபிஷேகத்துக்கு உரிய சாமான்லாம் வாங்க வேண்டியிருக்காம, அர்ச்சகரே எல்லாம் ரெடி பண்ணறேன்னு சொல்லிட்டார். இல்லைனா, அதுக்கு வேற அலைய வேண்டியதிருந்திருக்கும்.  ‘டமால்’ என்ற சப்தம் அவனது நினைவுகளைக் கலைத்தது.

‘என்ன ஆச்சு ரவி’

‘சார்.. டயர் வெடிச்சுடுச்சுன்னு நினைக்கறேன். என்னன்னு பார்க்கறேன்”

‘கொஞ்சம் இறங்கிக்கோங்க சார்… டயர் மாத்தணும்”

ராகவன் கடிகாரத்தைப் பார்த்தான். இப்போவே எட்டே முக்கால் ஆயிடுச்சே.. 9 மணிக்கு அபிஷேகம்னு சொன்னாரே.

“சார்… தப்பா நினைக்காதீங்க. நான் எப்போவும் டயர்லாம் செக் பண்ணுவேன். இன்னைக்கும் பார்த்தேன். ஆனா, ஸ்டெப்னியை பார்க்கவிட்டுட்டேன். …அதுவும் பிரச்சனை சார். கொஞ்சம் இருங்க சார்.. யாரையானும் கூப்பிட்டு சீக்கிரம்  டயர் மாத்திடறேன்”

யாரையோ பிடிச்சு, பஞ்சரான டயரை வந்தவருடன் சைக்கிளில் எடுத்துக்கொண்டுபோய் சரி பண்ணிக்கொண்டு வருவதற்கு முக்கால் மணி நேரமாகிவிட்டது.  அர்ச்சகரை செல்லில் கூப்பிட்டு ஒரு அரை மணி நேரம் பொறுத்திருக்கச் சொன்னான் ராகவன்.

**

“என்ன அபிஷேகம் ஆச்சா” போனில் மனைவி. 

“இல்லைடீ.. வழில டயர் பஞ்சர்னு பிரச்சனை… இப்போதான் கோவிலுக்குள் நுழையறேன்”

“மணி பத்தேகால்.. இப்போ… அபிஷேகம் ஆயிருக்குமே”
“நீ வேற… அர்ச்சகர்ட்ட பேசிட்டேன்… அபிஷேகத்துக்காக அவர் வெயிட் பண்ணிட்டிருப்பார்”

“சீக்கிரம்னா..  போறதுக்கே ரெண்டு மணி நேரம் ஆக்கிட்டேளே… பஸ் டயம் ஞாபகம் இருக்கோன்னோ”

“செத்த சும்மா இருக்கயா… டாக்சீல திரும்ப ஏறினப்பறம் பேசறேன். தொணதொணக்காதே”

**


நடக்க நடக்க சன்னிதி வந்தபாடில்லை. பெரிய கோவில். ராகவனுக்கு டென்ஷன் கூடிக்கொண்டிருந்தது. 

நல்லவேளை… சன்னிதியில் கூட்டம் இல்லை. அர்ச்சகர் அவன் வருகைக்காகக் காத்திருந்தார்.

“வாங்கோ வாங்கோ… நேத்து காலைல நீங்க திரும்ப கால் பண்ணிச் சொன்னபிறகுதான் நினைவு வந்தது.  பூ, பழம், வேஷ்டி, மத்த அர்ச்சனைப் பொருட்கள் எல்லாம் வாங்கி வச்சுட்டேன். 9 மணிக்கே வருவேள், அபிஷேகம் பண்ணிடலாம்னு நினைத்தேன்”

“என்னவோ நேரமாயிடுச்சு.. நீங்க ஆரம்பியுங்கோ” ராகவன் சொன்னான்.

“அபிஷேகம் ஆறது.. நன்னா தரிசிச்சுக்குங்கோ.. இந்த ஆபத்சஹாயர் கண் கண்ட தெய்வம்.  நாங்க 8 தலைமுறையா இந்தக் கோவில்ல சேவை செஞ்சுண்டிருக்கோம்.  கோவில் 1500 வருஷத்துக்கும் முந்தையது. அப்போல்லாம் சோழ மன்னர்கள், சிற்றரசர்கள்னு போட்டி போட்டுக்கோண்டு, சிவன் கோவில், பெருமாள் கோவில்னு  கட்டினாங்க, பழுது பார்த்தாங்க. அப்புறம் ஒரு சமயம் பாண்டிய மன்னர்களும் இங்க வந்து திருப்பணி செஞ்சிருக்காங்க.

ராகவன் மனது அவனது கைக்கெடிகாரத்திலேயே இருந்தது. இப்போவே மணி பத்தரை ஆயிடுச்சே..  போவதற்கு ஒரு மணி நேரம் ஆயிடுமே. அதுக்கப்புறம் பையை எடுத்துக்கொண்டு பஸ் ஸ்டாண்டுக்குப் போகணும். பேசாமல் ரூமை அப்போவே காலி பண்ணியிருந்திருக்கணுமோ?

“இதோ பார்தீங்களா… மரீசி முனிவர் தவம் பண்ணி அவர் முன்னால ஈசன் காட்சி கொடுத்ததனால கர்ப்பக்ருஹத்துல வலது புறம் மரீசி முனிவரோட சிலை இருக்கு. இந்த மாதிரி முனிவரோட சிலை ஈசன் கோவில்ல இருப்பது அபூர்வம். இந்தப் பகுதியில இந்த ஒரு கோவிலில்தான் அப்படி”

“ஈசன் மனது வைத்தால் அவன் தூசியையும் கோபுரத்தின் மேலே வைத்து ஒளிரச் செய்வான். இந்தக் கோவில் மஹாலிங்கம் அவ்வளவு சக்தி வாய்ந்தவர். சும்மாவா ஈசனைப் பற்றிப் பாடும்போது,

“வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழ் வெல்க”

என்று மாணிக்கவாசகனார் உருகியிருக்கார்.  நம்ம காஞ்சீபுரம் பரமாச்சார்யார் இருந்தாரோல்யோ… அவர் 50 வருஷத்துக்கு முன்னால இங்க வந்திருந்தார்… சன்னிதில நின்னுண்டு ப்ரார்த்தனை செய்தப்பறம் என்ன தோணித்தோ… இந்த ஊர்லயே ஒரு வாரம் தங்கி தினம் கோவிலுக்கு வந்து தரிசனம் செஞ்சார்… அப்போ நான் எங்க அப்பாவோடு சன்னிதில சின்னப் பையனா கைங்கர்யம் பண்ணிண்டிருந்தேன்”………..

ராகவனுக்கு எதிலும் மனம் செல்லவில்லை. ஏற்கனவே லேட். இதுலவேற இவர் விஸ்தாரமாச் சொல்லிண்டிருக்காரே. சீக்கிரம் முடிந்து கிளம்பவேண்டாமோ….

“இந்தக் கோவில்ல அம்பாள் சன்னிதில ஒரு விசேஷம் உண்டு. ஒரு கைல தாமரையும் ஒரு கைல அல்லியும் வச்சிண்டிருப்பாள். தாமரை மலர்ந்திருக்கும். இடது கையில் உள்ள அல்லி கூம்பியிருக்கும். அதுல ஒரு தாத்பர்யம் உண்டு.  தாமரை சூரியனைக் கண்டால் மலரும். அல்லி சந்திரனைக் கண்டால் மலரும். அதுபோல அவள் இரவும் பகலும் தனது பக்தர்களைக் காத்துக்கொண்டிருக்கிறாள். தன்னை நாடி வந்தவர்களை அவள் கைவிடமாட்டாள்”

ராகவன் மனதோ இங்கு இல்லை. நேரத்துக்கு திரும்பிப் போகணுமே. வரும்போது நடந்ததுபோல் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் பஸ்ஸைத் தவறவிட வேண்டியிருக்குமே. கல்யாணத்துக்குப் போகமுடியலைனா மத்தளத்துக்கு இரண்டு புறமும் இடி என்பதுபோல இரண்டு சைடுலயும் பேச்சு வாங்கணுமே..

ஒரு வழியா அபிஷேகம் முடிந்து திரை போட்டார் அர்ச்சகர். “கொஞ்ச நேரத்துல அலங்காரம் ஆயிடும்.  அப்புறம் கற்பூர ஆரத்தி காண்பிக்கறேன். தரிசனம் ஆனபிறகு கிளம்பலாம்.

ஐயையோ… அலங்காரத்துக்கு இன்னும் எவ்வளவு நேரமாயிடுமோ. எப்படி பாதியிலேயே கிளம்ப முடியும்? ஒருவேளை நாம் வருவதற்கு முன்பே அபிஷேகம் செய்யச் சொல்லியிருக்கணுமோ. ராகவன் நிலை கொள்ளாமல் தவித்தான்.



**
“கொஞ்சம் சீக்கிரம் போகமுடியுமா? இப்போவே பதினொண்ணேகால் ஆயிடுச்சு”

“முடிஞ்ச அளவு வேகமாத்தான் போறேன் சார்.. உங்க பஸ் எப்போன்னு சொன்னீங்க”

“பன்னெண்டரைக்கு. ஹோட்டல்ல பொட்டியை எடுத்துக்கிட்டு கிளம்பணும்”

“அது ஒண்ணும் பிரச்சனை இல்லை சார்.. பஸ் ஸ்டாண்ட் போறதுக்கு பத்து நிமிஷம் கூட ஆகாது”


நகரெல்லையைத் தொடும்போது மணி பதினொண்ணே முக்கால். ரோடு நல்லதாக ஆரம்பித்தது. ஆனால் ஒரே டிராபிக். பேசாமல் டாக்சிலாம் பேசாமல் ஆட்டோலயே போய் வந்திருக்கணுமோ என்று தோன்றியது ராகவனுக்கு. டிரைவர் அவனுடைய டென்ஷனைப் புரிந்து கொண்டவர்போல் ஹாரன் அடித்துக்கொண்டிருந்தார்.  இந்த ரோட்டில், சைக்கிள், பைக்லாம் போறதுக்கு தடை போடணும். ஒருத்தரும் கார்ல ஒழுங்கா போக முடியாதபடி டிராபிக் ஜாஸ்தியாகிடுது. இதுலவேற கண்ட கண்ட லாரிலாம் பகல்ல ரோட்டில் போனால், ஏன் டிராபிக் ஜாம் ஆகாது. இதுலவேற பாதிபேருக்கு எப்படி வண்டி ஓட்டணும்னு தெரியாது. டிராபிக் ரூல்ஸ்னா என்னன்னே தெரியாது… ராகவன் மனதில் வெறுப்பு வந்தது.



ஒரு வழியாக பன்னிரண்டு பத்துக்கு ஹோட்டலுக்கு வந்து, அடித்துப் பிடித்து பொட்டியை எடுத்துக்கொண்டு அதே டாக்சியில் பஸ் ஸ்டாண்டுக்கு விரைந்தான். அவன் பஸ் ஸ்டாண்ட் போய் இறங்கவும், பெங்களூர் பஸ் வரவும் சரியாக இருந்தது. டாக்சியை செட்டில் செய்து, டிக்கெட்டைக் காண்பித்து பஸ்ஸில் ஏறி, அவனுடைய ஸ்லீப்பர் இருக்கையில் அமர்ந்த பிறகுதான் கொஞ்சம் ஆசுவாசம் வந்ததுபோல் தோன்றியது.

தன் பையை வைக்கும்போது, டக் என்று மனதில் அதிர்ச்சி ஏற்பட்டது. அடடா…. இறைவன் முன்பு ஒன்றும் வேண்டிக்கொள்ளவில்லையே. அவன் உருவத்தையும் முழுமையாக தரிசிக்கவில்லையே. மனம் முழுவதும், எப்போ அபிஷேகம் முடியும், பிரசாதத்தைத் தருவார், எப்போ திரும்புவோம், பெங்களூர் பஸ் டயத்துக்குப் பிடிக்க முடியுமா என்பதிலேயே இருந்துவிட்டதே….. பிரசாதப் பையையும் டாக்சியிலேயே வைத்துவிட்டேனே…..

அர்ச்சகர் சொன்னதில் ஒன்றுமே அவன் மனதில் ஏறியிருக்கவில்லை

ராகவன் மட்டும் கவனித்திருந்தால்,

“சிவன் அவன் என் சிந்தியுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி”  

என்று சொன்ன அர்ச்சகரின் குரல் மனதில் கணீரென்று ஒலித்திருந்திருக்கும்.

111 கருத்துகள்:

  1. யாருடைய கதையா இருக்கும்னு யோசித்துக் கொண்டே வந்தேன்...நெல்லையின் கதை!!

    இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

      நீக்கு
    2. அனைவருக்கும் வணக்கம்.

      ஶ்ரீராம்.. இன்று நான் எழுதிய கதை.. இன்னும் ஓரிரு வாரங்கள் கழித்துத்தான் வெளிவருமோன்னு நினைத்தேன். நன்றி

      நீக்கு
    3. வாங்க திருமூர்த்தி சார்... எப்படி உங்க பின்னூட்டத்தை கவனிக்க விட்டுட்டேன். நன்றி

      நீக்கு
  2. பானுவும் அக்கா சொன்னது போல ஜோசியரை வரை வாசித்துவிட்டேன் மீதி வாசிக்க வருகிறேன்...

    இங்கு பானு என்ற பெயர் கூடப் பொருத்தம்தான் என்று தோன்றியது. நம்ம பானுக்காவுக்கும் ஜோசியம் கொஞ்சம் தெரியும் என்று நினைக்கிறேன்...ஆர்வமும் உண்டு அவங்களுக்கு...

    எனக்குத்தான் சுத்தமாக இல்லை...ஹிஹிஹி

    கும்பகோணப் பயணத்திலிருந்து பிறந்த கதை என்று தோன்றுகிறது...தொடக்கம் சூப்பர்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானு அக்காவுக்கு எதில்தான் ஆர்வம் இல்லை? பல்துறை வித்தகி.

      நீக்கு
    2. அதே அதே ஸ்ரீராம்...அவங்க எல்லாத்துலயும் கலக்குறாங்க...

      கீதா

      நீக்கு
    3. கீதா ரங்கன் - நிறைய கோவில்களுக்குப் பயணிக்கிறேன். நல்ல திருப்தியான சேவை 50% இடங்களில் கிடைத்தாலே அதிகம். அப்போது நம் மனம் 5% ஒன்றியிருந்தாலே ஆச்சர்யம்.

      என்னைப் பொறுத்தவரை பெரிய கோவில்களில்ஒரு முழு நாள் செலவழித்தாலும் போதாது.

      நீக்கு
    4. நெல்லையில் பிரம்மதேசம், மன்னார்கோவில் போன்ற பல கோவில்களை ஒவ்வொன்றும் ஒரு நாளாவது செலவழித்து சேவிக்கணும். நேர போய் பெருமாளை மட்டும் சேவித்துவிட்டு வந்தால் திருப்தி கிடைக்காது

      நீக்கு
    5. ஜோசியம்னு நீங்க சொன்னதும் எனக்கு ஒன்றை நினைவுபடுத்துது. மனித மனத்துக்கு தன் எதிர்காலம் பற்றித் தெரிந்துகொள்ள இயல்பான ஆசை, ஆர்வம்.

      நமக்குத் தெரிந்தவர்களுக்கு ஜோசியம் தெரியும்னா உடனே நம்ம ஜாதகத்தையும் நீட்டுவது மனித இயல்பு. கைரேகை பார்க்கத் தெரியும்னா நம்ம கையையும் நீட்டிடுவோம்.

      ரொம்ப வருஷம் முன்னால் ஒருவன் சொன்னான். எனக்கு கைரேகை பார்கக கொஞ்சம் தெரியும். அதனால யூனிவர்சிடில இல்லை கல்யாண மண்டபத்துல பெண்கள் கையை நீட்டுவாங்க, பிடித்துப் பார்க்க சான்ஸ் ஈஸியா கிடைக்கும்னு கண்ணில் ஒளி பொங்கச் சொன்னான். ஹாஹா

      நீக்கு
    6. //தனால யூனிவர்சிடில இல்லை கல்யாண மண்டபத்துல பெண்கள் கையை நீட்டுவாங்க, பிடித்துப் பார்க்க சான்ஸ் ஈஸியா கிடைக்கும்னு கண்ணில் ஒளி பொங்கச் சொன்னான். ஹாஹா//
      ஹாஆஹாஆ :) கர்ர்ர்ர்ர்

      நீக்கு
    7. ஏஞ்சலின்... இதுல என்ன கர்ர்ர்ர்ர்ர்... அட இந்த யோசனை எனக்கு இல்லையேன்னு தோணிச்சு. இனி கை நீட்டறவங்க, "அங்கிள்"னுனா (கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) சொல்லுவாங்க. ஹா ஹா

      நீக்கு
  3. இந்த ராகவனைப் போல எத்தனை எத்தனையோ பேர்...

    மனம் ஒன்றுவதில்லை எதிலும்...

    சும்மாவா சொன்னார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்...

    தாமரைத் தடாகத்துள் கிடந்தாலும் தவளைகள் ஒருபோதும் தாமரையின் சுகந்தத்தை நுகர்வதில்லை!..

    - என்று...

    அன்பின் நெல்லை அவர்களின் கை வண்ணம் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லையின் கதைகளில் என்னை மிகவும் கவர்ந்த கதைகளில் (இப்போதைக்கு) இதற்கு முதலிடம்!

      நீக்கு
    2. யெஸ் ஸ்ரீராம் ரொம்ப நல்லா எழுதியிருக்கிறார் நெல்லை...பெரும்பான்மையினரின் மனதின் பிரதிபலிப்பாய் ராகவன்!!

      கீதா

      நீக்கு
    3. துரை சார்.. மனது ஒன்றுவது ரொம்பக் கஷ்டம். எனக்கு ஓரிரு விநாடிகள் சில கோவில்கள்ல மனது லயித்தாலே அபூர்வம். சமீபத்துல திருப்பதி கர்ப்பக் க்ரஹத்துக்கு அருகிலும், தங்க வாயிலைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் பல்லக்கில் வந்த கோவிந்த ராஜர் உற்சவ விக்ரஹத்தின் அருகில் இரு அடி தூரத்தில் என் ஆச்சார்யாருடன் இருந்து வணங்கினபோதும் மனம் ஒன்றி உருகியது.

      இந்த மாதிரி சந்தர்ப்பங்கள் அபூர்வம் (அவன்தானே நம் மனம் ஒன்றாமைக்கும் காரணகர்த்தா)

      நீக்கு
    4. ஶ்ரீராம்.. மிக்க நன்றி. நீங்கள் இவ்வாறு எழுதுவதே அபூர்வம். உங்கள் ரசனைக்கு நன்றி.

      உங்களுக்கு நான் தரவேண்டியது திருப்பதி லட்டு. நீங்க பிரேமா விலாஸ் அல்வா, கோவில்பட்டி க.மி.... லிஸ்ட் நீண்டுகொண்டே போகும்னு தோணுது

      நீக்கு
    5. மிக்க நன்றி கீதா ரங்கன். நாம எல்லோருக்கும் நிகழும் நிகழ்வுதானே இது

      நீக்கு
    6. //(அவன்தானே நம் மனம் ஒன்றாமைக்கும் காரணகர்த்தா)//

      நம் மனம் ஒன்றாமைக்கு அவன் காரணகர்த்தா இல்லை. இப்படிச் சொல்லிவிட்டு தப்பிக்கப் பார்ப்பது நம் மனது. யார் மேலேயாவது பழியைப்போட்டுவிட்டு நழுவிவிடுவது மனதின் வழக்கம்! ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவனில் மனம் ஒன்றாமைக்கு நாம்தான் கர்த்தா! அத்தகைய கர்மாக்களை செய்துவிட்டு இங்கு வந்து, ’மனம் ஒன்றுவதில்லை’ என்று புலம்பி நிற்கும் கர்த்தாக்காள் நாமேதான்..

      ’அவன்’மீது வீண்பழி வேண்டாம். பாவம், அவன்..

      நீக்கு
    7. //தங்க வாயிலைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் பல்லக்கில் வந்த கோவிந்த ராஜர் உற்சவ விக்ரஹத்தின் // திருமலையின் உற்சவர் மலையப்பர் இல்லையோ? கோவிந்தராஜப் பெருமாள்?

      ஏகாந்தன் சொல்லி இருப்பதைக் கன்னாபின்னாவென ஆதரிக்கிறேன். பொதுவாக நானெல்லாம் பிரார்த்தனைனு செய்துக்கறது வீட்டிலே தான். கோயில்களுக்குச் சென்றால் பிரார்த்தனையெல்லாம் நினைவில் வராது. கேட்கணும்ங்கற நினைப்பே தோணாது. கண்களால் முடிந்த மட்டும் இறை உருவை நிரப்பிக் கொள்வதிலே தான் புத்தி போகும். அப்புறமும் கொண்டையைப் பார்த்தோமா? இன்னிக்கு அலங்காரம் எப்படி இருந்தது? கையில் ஆயுதம் இருந்ததா? மூலவருக்கு என்ன அலங்காரம் செய்திருந்தார்கள்? மீனாக்ஷி என்ன நிறப்புடைவை கட்டிக் கொண்டாள். ஏன் எலுமிச்சை மாலையெல்லாம் இப்போப் போடறாங்க! முன்னெல்லாம் பார்த்ததே இல்லையே என்றே தோன்றும். நம் விருப்பமெல்லாம் நசிந்து போயிருக்கும்.

      நீக்கு
    8. ஏகாந்தன் சார்.. நீங்க எழுதியது சரி. இருந்தாலும், நமக்கு துன்பங்கள் சூழும்போது சுலபமா, “முள்ளு குத்திடுச்சு” (நாம முள்ளின்மேல் கால் வைத்தோம் என்று சொல்லாமல்) என்று சொல்லும் மனோபாவம்தான். Your point is correct and valid. நன்றி

      நீக்கு
    9. கீசா மேடம்.. மலையப்பர்தான். தேவிகளோடு பார்த்தபோது, அதுவும் ஆச்சார்யருக்குப் பக்கத்தில் நின்று தரிசனம்.

      கண்களால் தரிசனம் சரி.. புடவை கலரைப் பார்ப்பதை நிறுத்த முடியலையா? ஹாஹாஹா

      நீக்கு
    10. ஏன் புடைவை நிறத்தையோ, சுவாமி(ஈசன்), பெருமாளுக்கு உடுத்தும் உடையின் நிறத்தையோ கவனிக்கக் கூடாது? நான் கவனிப்பேன். நேற்று இந்த உடையில் காட்சி அளித்தது இப்படி இருந்தது. இன்னிக்கு இப்படி மாறுதலாத் தெரியறார் என நினைச்சுப்பேன். நம்ம குழந்தைகளுக்கு நாம் உடை உடுத்திவிட்டால் ஒவ்வொரு உடைக்கு ஒவ்வொரு மாதிரியாத் தானே குழந்தை தெரியும்! அதே தான் இங்கேயும். மீனாக்ஷி பச்சை உடுத்தி இருந்தால் அவள் நிறத்துக்கேற்ற புடைவை என மனசில் தோன்றும். சிறு பெண்ணாக ஒன்பது கஜத்துடன் பார்க்கையில் அந்த ரசனையே தனி! இங்கே நம்பெருமாள் பாண்டியன் கொண்டையில் வந்தால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ரசிச்சுப் பார்ப்பேன்.

      நீக்கு
    11. ஏகாந்தன் அண்ணா உங்க கருத்துக்கு ஹைஃபைவ்!!! டிட்டோ!! போடுறேன்.

      நம் தவறுகளுக்கு நாம் தான் காரணம் என்பதே என் எண்ணமும்...(இறைவனும் அப்படித்தானே சொல்லியிருக்கிறார்...என்று தத்துவங்கள் சொல்லுது..உனக்கு நடக்கும் சுக துக்கங்களுக்கு நான் அல்ல காரணம் என்று!!)

      கீதா

      நீக்கு
    12. அது எப்படி சரி கீதா ரங்கன்... எனக்கு நல்ல எண்ணத்தைக் கொடுன்னுதானே அவனை வணங்கறோம். ஈசன் நமக்குத் தாயுமானவன்தானே. பொறுத்து,, நமக்கு நல்லது செய்யாவிட்டால் கோப்ப்படுவதில் என்ன தவறு?

      நீக்கு
    13. ஏகாந்தன் சொல்லி இருப்பதைக் கன்னாபின்னாவென ஆதரிக்கிறேன். பொதுவாக நானெல்லாம் பிரார்த்தனைனு செய்துக்கறது வீட்டிலே தான். கோயில்களுக்குச் சென்றால் பிரார்த்தனையெல்லாம் நினைவில் வராது...

      நானும் கீதா மா சொல்றதை கன்னா பின்னா வென்று ஒத்துக்கொள்கிறேன் ...

      சன்னதியில் நின்று பிரார்த்தனை ஏதும் இருக்காது என்னில் அவனை நம் கண்ணில் , மன கண்ணில் நிறைக்கும் ஆவல் மட்டுமே இருக்கும் ...

      பிரார்த்தனைகள் இருந்தாலும் அவை சந்ததி வெளிய அமைரும் போது மட்டும் நினைத்துக் கொள்வேன் ...

      நீக்கு
    14. அனுராதா ப்ரேம்குமார், கீசா மேடம், ஏகாந்தன் சார், கீதா ரங்கன் - நீங்க எழுதினதைப் படித்த போது என் சிற்றப்பா எனக்குச் சொன்ன அறிவுரை ஞாபகத்தில் வந்தது.

      அவர் சொல்வார், நாம் கடவுளிடம் எதையும் கேட்கக்கூடாது, கஷ்டங்கள் வந்தாலும் உனை மறக்கக்கூடாதுன்னு நினைக்கணும் என்பார்.

      ஆனா அபூர்வமா நான் கேட்பேன், இதை எனக்குச் செய்யக்கூடாதான்னு.

      நீக்கு
  4. அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் அன்பின் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வரவு துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. அனைவருக்கும் நல்வரவும் வணக்கமும். பல நாட்களுக்குப் பின்னர் காலையில் வந்திருக்கும் துரைக்கு நலமே விளைய வாழ்த்துகள்.

      நீக்கு
    3. நல்வரவும் வணக்கமும் கீதா அக்கா.

      நீக்கு
  5. ஈசனின் அருகிருந்து அன்றாடம் சேவை செய்யும் அர்ச்சகர்களே இறை சூழலை இன்னும் உணராது இருக்கும் போது ராகவன் போன்ற ஆட்கள் மட்டும் உணர்ந்து விடுவார்களா... என்ன!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அர்ச்சகர்கள் நிறைய பேர் இதைத் தொழிலாகத்தான் செய்கிறார்கள். ஆத்மார்த்தமாக உள்ளார்ந்த பக்தியுடன் செய்பவர்கள் எத்தனை சதவிகிதம் இருப்பார்கள்?

      கோவில் செல்வதையும் கடமைகளிலொன்றாகச் சேர்த்தால் ராகவன் போலதான்!

      நீக்கு
    2. கோவில் செல்வதையும் கடமைகளிலொன்றாகச் சேர்த்தால் ராகவன் போலதான்!//

      ஸ்ரீராம் இதை நானும் சொல்ல நினைத்தேன்....மிகவும் சரியே...அப்படியே வழிமொழிகிறேன்...

      கீதா

      நீக்கு
    3. துரை செல்வராஜு சார்... இதுக்கு என் அனுபவத்துல நீளமான பதில் கொடுக்கணும். இன்றைக்கு முயற்சிக்கிறேன்.

      பக்தி, வருத்தம் போன்ற எல்லா மனித உணர்ச்சிக்கு, உடலுணர்வு உள்பட, ஆயுள் குறைவு. கடவுள் பக்தி என்ற உணர்ச்சிக்கும் சில மணித்துளிகளுக்கு மேல் ஒரு சமயத்தில் ஆயுள் கிடையாது.

      தொழில்ல கவனம் இருக்கும். உணர்வு இருக்காது.

      காலையில் அர்ச்சகரோ, உதவியாளர்களோ, வேலை பார்க்கும் நாமோ, வேலையை ஆரம்பிப்பதற்கு முன்னால் ஐந்து நிமிடம் ப்ரார்த்திப்போம். அப்புறம் தொழில்தான்.

      உதாரணத்துக்கு, தலைவர்களை நாம பார்க்கும்போது உணர்ச்சிவசப் படுவோம். (எம்ஜியார், கருணாநிதி, ஜெ போன்று). ஆனா அவங்களோட கூடவே இருக்கறவங்கள்ட அந்த பிரமிப்பு, பக்தி, உணர்ச்சி இருக்கவே இருக்காது. இதே உணர்வுதான் நமக்கு காதலியுடன் இருப்பதும்.

      இது மனித உணர்வு சம்பந்தப்பட்டது

      நீக்கு
    4. இன்னொரு சிம்பிள் உதாரணம்.. நாம நம்ம கம்பனி எம்டிஐ அபூர்வமா சந்திக்கப் போகும்போது ஒரு வாவ் உணர்வு வரும். ஆனா அவர் பக்கத்திலேயே வேலை செய்யும் அட்டென்டரோ இல்லை பிஏவோ அந்தமாதிரி நினைக்கமாட்டாங்க. அவரை சாதாரண மனிதரா டிரீட் பண்ணுவாங்க, ஆனால் அவர் முன்னிலையில் நடிப்பாங்க.

      நீக்கு
    5. ஒரு வைணவக் கோவிலில் கர்ப்பக்ரஹத்தின் முன் தரிசனம் செய்யும்போது, அர்ச்சகர் காலையில் நடந்த சம்மவத்தைச் சொல்லி நாராசமாக ஒருவனைத் திட்டிக்கொண்டிருந்தார்.

      இறையை மறந்தால்தான் அவன் சன்னிதியில் தகாத பேச்சு எழும். அதிர்ச்சி, பயம் ஏற்படுத்திய நிகழ்வு இது

      நீக்கு
    6. அர்ச்சகர் காலையில் நடந்த சம்மவத்தைச் சொல்லி நாராசமாக ஒருவனைத் திட்டிக்கொண்டிருந்தார்.//

      நெல்லை இது மட்டுமல்ல அங்கு வம்பும் பேசப்படும்...அதையும் கண்டிருக்கேன்....ஆனால் நமக்கு எதுக்கு வம்பு...நாம் சென்றது இறையைப் பார்க்க என்று ...பல சமயங்களில் எனக்கு இந்த ரா கா க கா(வெங்கட்ஜி!!!!) வேலை செய்யாது....ஹிஹிஹி

      நீங்க சொல்லிருக்கற நம் கான்சென்ட்ரேஷன் பத்தி அது அப்படியே சரியே.

      கீதா

      நீக்கு
  6. நல்லா எழுதி இருக்கார் நெல்லை. உண்மையில் பலருடைய நிலைமையும் இது தான் இப்படித் தான். ஆனால் நாங்க பொதுவாக இம்மாதிரிப் பரிகார அல்லது பிரார்த்தனை வேண்டுதல்கள் எனில் தனியாக்த் தான் வைத்துக் கொள்கிறோம். இன்னொரு விசேஷத்தோடு சேர்த்துக் கொள்ளுவதில்லை. முடிந்தவரை அந்தக் கோயில்களுக்கு எனத் தனியாகப் போய் வேண்டுதலை நிறைவேற்றி விட்டு வருவோம். குலதெய்வம் கோயில் சென்றால் அங்கே உள்ள சுற்று வட்டாரக் கோயில்களோடு சரி!. மற்ற எங்கும் போவதில்லை! இது ஒரு கொ"ல்"கையாவே வைச்சிருக்கோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
      ஈசன் அருள் செய்து அவனருகில் சென்றும் அவனிடத்தில் மனம் ஒன்ற முடியாமல் சூழ்னிலை அமைந்துவிட்டது ராகவனுக்கு. அதுவும் இந்த வேளையின் செயல் தான். நல்ல வேளையாக நாங்கள் சென்ற கும்பகோணம் கோவில்களுக்கு விரும்பியே சென்றோம்.

      இரண்டு வேலைகளோடு செல்வது தொந்தரவுதான்.

      பாவம் ராகவன்.
      நெத அருமையாக எழுதி இருக்கிறார்.
      எல்லோருக்கும் நேரக்கூடிய விஷயம் தான். வாழ்த்துகள் மா. ஆபத்சஹாயர்
      அருளே செய்யட்டும்.

      நீக்கு
    2. கீசா மேடம் ... எங்களை பாடலாத்ரி நரசிம்ஹரை (சிங்கப் பெருமாள் கோவில்) 7 வாரங்கள் ஒரே நாளில் தரிசனம் செய்து 9 பிரதட்சணம் -அந்தச் சிறிய குன்றை, செய்து பெருமாள் சேவித்துவிட்டு, வேறு எங்கும் போகாமல், உணவு சாப்பிடாமல் நேர வீட்டுக்குத் திரும்பி வந்துடணும்னு சொல்லியிருந்தது நினைவுக்கு வருது.

      (அதனால் அங்க பிரசாதம், தோசை மிளகாய்பொடி கூட வாங்க என் மனைவி என்னை அனுமதிக்கலை. ஹாஹா)

      நீக்கு
    3. வாங்க வல்லி சிம்ஹன்்அம்மா.. நான் திருவிடைமருதூர் மகாலிங்கத்தை இருமுறை தரிசனம் செய்திருக்கிறேன். பெரிய லிங்கம். நீங்கள் தரிசனம் செய்திருக்கிறீர்களா?

      நீக்கு
    4. இல்லம்மா. அந்த பாக்கியம் கிடைக்கவில்லை.பெரிய ஆசையாக வைத்திருக்கிறேன். அதுவும் ஐய்யாவாள் சரித்திரப் படி கங்கை அவர் வீட்டுக் கிணற்றில் பொங்கி வந்த
      சம்பவம் படித்ததிலிருந்து இன்னும் அது ஆசையாகவே இருக்கிறது.

      நீக்கு
  7. அனைவருக்கும் காலை வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  8. நெல்லைத் தமிழன் கதை மிகவும் அருமை.

    ''சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால்
    அவனருளாலே அவன் தாள் வணங்கி.''

    அவன் அருள் வேண்டும் தான். அவன் அருள் இருந்ததால் தான் அபிஷேகம், பூஜைகள் செய்ய முடிந்தது.
    ஒரு கணம் அவரை உள்ளன்போடு நினைத்தாலே அருள்வார்.அருளிவிட்டார்.

    ராகவனை அவர் பார்த்து விட்டார்.
    டயர் பழுது அடைந்த போதும் சரி செய்து கோவிலுக்கு போய் விட்டார்.
    பிரார்த்தனை முடிந்து பெங்களூர் பஸ்ஸை நேரத்திற்கு பிடித்து அமர்ந்து விட்டார், இப்போது மனது முழுவதும் அவன்.
    அப்புறம் என்ன வேண்டும்?


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது.

      இறை தரிசனம், அவன் அனுக்ரஹம் இல்லாமல் கிடைப்பதில்லை. எந்த ஒன்று நடைபெறுவதற்கும் நடைபெறாமல் இருக்கவும் காரணகாரியம் இருக்கும்.

      “கரணம் காரணம் கர்த்தா விகர்த்தா” இவை அவனின் குணங்களைச் சொல்லும் நாமங்கள்

      நீக்கு
  9. காலை வணக்கம் 🙏.

    இன்றைக்கு நெல்லைத் தமிழன் எழுதிய கதையா.... அவருக்கு வாழ்த்துகள்.... கதை மாலையில் தான் படிக்க வேண்டும். கடமை அழைக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. படங்கள் எல்லாம் பொருத்தமாய் அழகாய் அமைந்து விட்டது.

    //ஒரு கைல தாமரையும் ஒரு கைல அல்லியும் வச்சிண்டிருப்பாள். தாமரை மலர்ந்திருக்கும். இடது கையில் உள்ள அல்லி கூம்பியிருக்கும். அதுல ஒரு தாத்பர்யம் உண்டு. தாமரை சூரியனைக் கண்டால் மலரும். அல்லி சந்திரனைக் கண்டால் மலரும். அதுபோல அவள் இரவும் பகலும் தனது பக்தர்களைக் காத்துக்கொண்டிருக்கிறாள். தன்னை நாடி வந்தவர்களை அவள் கைவிடமாட்டாள்”//

    அருமையான விளக்கம்.

    ராகவனை கைவிடவில்லை. தாய்.

    ஆபத்ஸஹாயரும் கைவிடவில்லை.

    இப்போது மனம் முழுவதும் அவன் நினைவு.

    எல்லாம் வல்ல தெயவமது என்ற பாடலில் வரும் வரிகள் நினைவுக்கு வருது.

    //அவனில்தான் நீ, உன்னில் அவன்
    அவன் யார்? நீயார்? பிரிவேது?
    அவனை மறந்தால் நீ சிறியோன்
    அவனை அறிந்தால் நீ பெரியோன்
    அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம்
    அறிவு முழுமை அது முக்தி//

    -வேதாத்திரி மகரிஷி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த தாமரை விளக்கம், தொண்டரடிப் பொடி ஆழ்வார் அவதாரத் தலமான திருமண்டங்குடியில் அர்ச்சகர் தாயாரின் திரு உருவை விளக்குங்கால் சொன்னது (மண்டங்குடி கும்பகோணம் அருகில் உள்ளது). இரு முறை ஒரு மாத இடைவெளியில் சென்றபோதும் பொறுமையா எதையும் விடாமல் விளக்கமாகச் சொல்லி சேவை பண்ணிவைத்த அந்த அர்ச்சகரை மறக்க இயலாது.

      ஆனால் அந்தக் கோவிலுக்குக் கூட்டுச் செல்லும் டாக்சி டிரைவர்கள், “அவரு ஒரு மணி நேரம் விளக்கிக்கிட்டே இருப்பாரு. டக்குனு தரிசனம் முடிச்சிட்டு வந்திடுங்க. இன்னும் நிறைய கோவிலுக்குப் போகணும். அந்த சாமிகிட்ட நிறைய தடவை சொன்னாலும் கேட்கறதில்லை’ என்பார்கள். ஹாஹா

      நீக்கு
    2. அவனில் நீ... உன்னில்்அவன்..... சிறப்பான பதிவுக்கு நன்றி கோமதி அரசு மேடம்

      நீக்கு
  11. இப்போது இருக்கும் கால சூழ்நிலையில் , ஓடி கொண்டே இருக்கும் வாழ்க்கையில் இறைவனை நினைப்பதே பெரிய காரியம்.
    சமுத்திரத்தில் அலை ஓய்ந்த பின் ஸ்நானம் செய்யமுடியுமா?
    இத்தனை அவசரகதியிலும் அருணகிரி நாதர் சொன்னது போல் சரணகமலாயத்தை அரைநிமிஷநேரம் மட்டும் வணங்கினாலும் போதும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்கோமதி அரசு மேடம்.. எதையோ விட்டதைப் பிடிப்பதைப் போல நாம, வாழ்க்கைச் சக்கரத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஒவ்வொரு நாளின் நீட்சி துரதிருஷ்டவசமா பாவங்களை அதிகப் படுத்துவதா எனக்கு அமைந்துவிடுவதைக் காண்கிறேன்.

      அவன் சரண கமலங்களே கதி வேறன்றி வேறெதுவும் இல்லை

      நீக்கு
  12. அனுபவங்கள் கதையாகும்போது ரசிக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவங்களின் சிதறல் யதார்த்தமான கதையைக் கொடுக்கும். நம்மை அதில் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும்.

      ரசிப்புக்கு நன்றி ஜிஎம்பி சார்

      நீக்கு
  13. ராகவன் கல்யாண மண்டபம் சென்றதும் அவன் அக்கா அவனிடம்

    என்னடா ராகவா நான் சொல்லிருந்தபடி எல்லாம் பிரார்த்தனை பண்ணினியாடா தரிசனம் எல்லாம் நல்லபடியா ஆச்சா...

    ம்ம் என்ன சொல்ல எனக்கு பஸ்ஸை பிடிக்கறதுலேயேதான் பதட்டமா இருந்துது. ரொம்ப தூரம், ரோடு, டயர் பங்க்சர்...லேட்டு கோவில்ல அபிஷேகம்...எதுலயும் கண்ணு பார்த்துதே தவிர மனசு முழுக்க பஸ்ஸை பிடிக்கறதுலேயே தான்...வேண்டிக்கக் கூடத் தோனலைனா பாரு..."

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....இப்படியா கோயிலுக்குப் போவா? ஏண்டா மனசு ஒருமிச்சு போகவேண்டாமோ? வேண்டிக்கலைனா குத்தமில்லை...பிரச்சனையில்ல...அது சாமி பார்த்துப்பார் ஆனா நின்னு நிதானமா ரசிச்சு கும்பிட்டுருக்க வேண்டாமா...இப்படிக் கால்ல கஞ்சிய கொட்டிண்ட மாதிரியா கும்பிடப் போறது...நிதானமா போயிருக்கலாமோல்லியோ...சரி சரி இனி அடுத்த முறை போகும் போது இப்படி கெடு வைச்சுண்டுப் போகாத...ஒழுங்கா நின்னு நிதானமா தரிசிக்கறா மாதிரி போகனும் சொல்லிட்டேன்" என்று ராகவனின் தலையில் நங்கென்று நாலு குட்டு குட்டினாள் அக்கா.......

    ராகவனுக்கு அந்தக் குட்டு நன்றாகவே உரைத்து மனதில் இறங்கியது!!!


    அக்கா என்பதை அழுத்த்த்த்த்திப் படிக்கவும்!!! ஹா ஹா ஹா...ஹப்பா அக்கா ஸ்தானத்தை ஒயிங்கா செஞ்சுப்புட்டேன்...ஹிஹிஹிஹிஹி!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயகோ.. கதை எழுதினா என் அனுபவம்னே முடிவு பண்ணிட்டீங்களா? பல கோவில் தரிசனங்களின்போது மனம் ஒன்றாத்தை வைத்து சிலபல சம்பவங்கள் சேர்த்து கதை எழுதினேன்.

      நிறையபேர், ஏன் கடவுள் சுரிதார், சேலை கட்டினால்தான் கோவிலுக்கு வரணும்னு சொன்னாரா, அரை டவுசர் போட்டுப் போனால் அவருக்குப் பிடிக்காதா? வேஷ்டி கட்டிக்கிட்டு மனசுல கெட்ட எண்ணங்களோட போறவனுக்கும் அவர் அருள் தருவாரோ இல்லை பணத்தை விட்டெறிந்தால் தன் பக்கலிலேயே நிற்க வைத்து அருள்வாரோ என்று ஏகடீயம் பேசுவார்கள்.

      நம் உடை, உணர்வு மற்ற யாருக்கும் தெயவ சன்னிதியில் மனதை உறுத்தி புனித எண்ணங்களுக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்பதுதான் கான்சப்ட்.

      அதனால்தான் அமிதாப் பச்சன் திருப்பதி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது மன்னிக்கணும் எனக் கை கூப்பினார் (அங்கு இருந்தவர்களைப்்பார்த்து)

      நீக்கு
    2. ஹையகோ நெல்லைத் தம்பி அது ராகவனின் அக்காவாக்கும் அந்த வசனங்கள் எல்லாம்...

      கீழ இருக்கறது சும்மா இந்த கீதா அக்கா உங்களைக் கலாய்ச்சது...ச்சே நானே அக்கானு சொல்லிக்கிட்டாலும் கூட நெல்லை மகிழ மாட்டேன்றார்!!!! இப்படி ஒரு அக்கா நமக்கு இருக்காங்களேனு!!! ஹா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    3. //நம் உடை, உணர்வு மற்ற யாருக்கும் தெயவ சன்னிதியில் மனதை உறுத்தி புனித எண்ணங்களுக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்பதுதான் கான்சப்ட்.//

      அப்படியே வழிமொழிகிறேன் :) உடை மட்டுமில்லை இந்த மயக்கம் வரவைக்கும் சென்ட் பெர்ப்பியூமுக்கும்,ஹீல்ஸ் போட்ட ஸ்டூல் ஷூக்கும் சொல்லணும் ஸ்ஸ்ஸ் அப்பா நானா அடிக்கடி சர்ச்சில் கஷ்டப்படுவதுண்டு பிறரால்

      நீக்கு
    4. ஏஞ்சலின்... நன்றி... சென்ட் என்ற உடன் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருது.

      அராபியர்கள் அதிகமான விலை உயர்ந்த சென்ட் உபயோகப்படுத்துவாங்க. பயங்கர வாசனை (அல்லது அழுத்தும் வாசனை). அவங்களுக்கு பொதுவா சென்ட் போடாத, கொஞ்சம் வியர்வை ஸ்மெல் இருக்கறவங்களை சுத்தமா பிடிக்காது. அப்படிப்பட்ட ஒரு கம்பெனில, எம்டி அரபி, அக்கவுன்ட்ஸ்ல வேலை பார்த்த சீனியர் பெர்சன் எவ்வளவு சொன்னாலும் சென்ட் போடலைனு கோபத்துல ஒரு நாள் 10 சென்ட் பாட்டிலை அவனுடைய டேபிளில் கொண்டுபோய் வைக்கச் சொல்லிட்டார் எம்டி ரூமுக்கு வந்தா சென்ட் போட்டிருந்தாத்தான் வரணும் என்ற இன்ஸ்ட்ரக்‌ஷனோட...

      விலை உயர்ந்த சென்ட் என்பது, ஸ்ப்ரே பண்ணி 24 மணி நேரம் வாசனை இருக்கும், 12 மணி நேரம், 6 மணி நேரம்னுலாம் கேடகரி உண்டு. எனக்கு சில மீட்டிங்ல அந்தமாதிரி சென்ட் க்ராஸ் பண்ணும்போது கொஞ்சம் அசவுகரியமா இருக்கும்.

      நீக்கு
    5. கீதா ரங்கன்... அக்கான்னு கலாய்க்கறேன். ஆனா நேர்ல பார்க்கும்போது உல்டாவாத்தான் இருக்கும். (இவரா என்னை அக்கான்னது கர்ர்ர்ர்ர்ர்ர் என்று பல்லைக்கடிப்பீங்க) ஹாஹா

      நீக்கு
  14. நெல்லை கதை நன்றாக இருக்கு...

    ராகவன் வேண்டிக்கலைனாலும் பரவால்ல...இறவனுக்குத் தெரியாதா என்ன? ராகவனைப் பற்றி அவர் பார்த்துக் கொள்வார்...அஅதான் அவரை ஒரு ஃப்ளையிங்க் விசிட் கொடுத்துப் பார்த்தாகிவிட்டதே....ராகவனுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்...நல்லபடியாக எல்லாமும் நடக்கும்! அந்த இறைவன் துணையிருப்பான்...

    யதார்த்தமான பெரும்பான்மை மனிதனின் மன நிலை இப்படியான நிலையில் இப்படித்தான் இருக்கும் என்பதாய் நல்லா சொல்லிருக்கீங்க நெல்லை.....அது போலத்தான் சிலர் ஏதேனும் பொருளை வெளியில் விட்டு வந்தால் அப்பொருளின் மீதே மனது இருக்கும் செருப்பு, உடைமைகள் என்று.....யாதார்த்தம்

    வாழ்த்துகள், பாராட்டுகள்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் வடிவேலு நகைச்சுவை தான் ஞாபகம் வந்தது...

      நீக்கு
    2. வாங்க திண்டுக்கல் தனபாலன். அது விவேக் ஜோக் இல்லையோ

      நீக்கு
    3. விவேக் ஜோக் வேறு...

      கோவிலுக்கு வாசற்படியில் செருப்பை கழற்றி வைத்து விட்டு, உள்ளே செல்வார்... பார்வை முழுவதும் செருப்பின் மேலே... தீப ஆராதனை கும்பிட்டு பார்ப்பதற்குள் செருப்பு அபேஸ்... கதை வாசித்தவுடன் அந்த ஜோக் தான் ஞாபகம் வந்தது...

      ஜோசியர் வாக்குக்கு வீட்டில் மறு பேச்சே இல்லை என்பதால்...

      ஜோசியர்(ம்) மீதும் நம்பிக்கை இல்லை... (இருந்தால் கேவலம்) பக்தி மீதும் நம்பிக்கை இல்லை...

      உங்கள் கதை ஏன் முழுமை அடையவில்லை என்பது தான் எனது சந்தேகேமே...!

      நீக்கு
    4. திண்டுக்கல் தனபாலன் சார்..

      இரண்டு வகையா சிந்திக்கலாம்.

      1. எது நடக்குதோ அது நன்மைக்கே, கடவுள் கொடுத்தது என்று அப்படியே இருப்பது. என் முன்னோர்கள் அதைத்தான் ஃபாலோ பண்ணுவாங்க. திருமணப் பொருத்தத்துக்கும் ஜோசியர்ட்ட போவது அபூர்வம். நியாயமா, கடவுள் மேல முழு நம்பிக்கை இருந்தால் ஜோதிடம் தேவையில்லை, கூடாது. ஜோதிடம் பார்ப்பது வாழ்க்கை எனும் வினாத்தாளுக்கு பரீட்சை எழுதாமல் பிட் அடிக்க நினைப்பது போன்றது ஜோதிடம்.

      2. வாழ்க்கைக்கு வழிகாட்டியா, எப்போ என்ன நடக்கலாம், கஷ்டதசை எப்போ தீரும் என்றெல்லாம் ஜோதிடரை கன்சல்ட் செய்வது. பக்தி வேறு இது வேறு என நினைப்பது. இது ஒரு காம்ப்ரமைசிங் அப்ரோச்தான்.

      இந்த இரண்டும் இல்லாமல், வள்ளுவர் சொன்னதுபோல்,

      மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
      பழித்த தொழித்து விடின்

      என்று வாழ்வது

      நீக்கு
  15. ஆஆவ்வ்வ் வ்வ் சமீபகால கோயில் சுற்றுலா அனுபவங்களை வைத்துக் கதை எழுதியிருக்கிறார் நெ தமிழன்...

    சூப்பரா ஆரம்பிச்சு சூப்பரா முடிச்சிருக்கிறீங்க.. நிறையப் பேச வருது ஆனாஇன்று முடியாதே கர்ர்ர்ர்ர்:).

    பதிலளிநீக்கு
  16. நோஓஓஒ அது ‘வாங்கோளேன்’ இல்லையாக்கும்:) வாங்களேன் ஆக்கும்... வாங்கோனா அட வாங்கோனா... பாட்டை நினைச்சுக்கொண்டு எழுதியிருப்பாரோ:)... ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொல்றது சரி அதிரா. ஆனா சில சமூகத்துல பேச்சுமொழி நான் எழுதியிருப்பதைப் போலத்தான்.

      அட.. அந்தப் பாடல் உங்கள் நினைவுக்கு வந்துவிட்டதா?

      நீக்கு
  17. இந்த சிவன் கோயில்ப் பெயரே புதுசாஇருக்கு... நெ தமிழன் போயிருக்கிறீங்க போல இருக்கு கோயிலுக்கு.
    உண்மைதான் 2,3 வேலைகளை ஒன்றாக இழுத்துப்போட்டுச் செய்யும்போது, மனம் எதிலுமே லயிக்காது.

    கோயிலுக்குப் போவது மனதை சாந்தப்படுத்த, இது இன்னொருவரின் கட்டாயத்தின் பேரில் போனால் இப்படித்தான் ஆகும், என்பதை முடிவில் அழகாக சொல்லிட்டீங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன கோவில்னு தெரியலை. மனசுல இந்தப் பெயர் ஓடியது.

      மனது செய்யும் காரியத்தில் ஒன்றாமல் பரபரவென அலைபாய்வதே இடைஞ்சல் அல்லவா?

      நீக்கு
  18. கோவிலில் எதையும் கும்பிடவில்லை கவனிக்கவில்லையே எனும் பிரச்சனைதான் இனி அடுத்த திருமணத்தில் மனதில் ஓடும்:).. அப்போ திருமணமும் மனதில் நிற்கப் போவதில்லை ஹா ஹா ஹா... நல்லாத்தான் கற்பனை பண்ணியிருக்கிறீங்க...

    உங்கள் கோயில் சுற்றுலாவிலும் கார் ரயர் பஞ்சரானதோ?:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை அதிரா. ஆனா அவனுடைய டென்ஷனை அதிகமாக்குவதுபோல் நிகழ்ச்சி வைத்தேன்.

      நான் பஞ்சவன்மாதேவி பள்ளிப்படைக்கு போனபோது மனைவிக்கு டென்ஷன், மற்ற வைணவக் கோவில்களை தரிசனம் செய்யணுமே என. நாங்கள் ஆட்டோவில் அமர்ந்ததும், ஆட்டோக்கார்ர் அந்த ரோட்டில் அவர் ஏற்கனவே பலகாலம் வசித்திருந்ததால் வழியில் பார்ப்பவர்களை எல்லாம் ஆட்டோவை நிறுத்தி நலம் விசாரித்தபோது, இவர் வேற காலதாமதம் செய்யறாரே என எனக்கு டென்ஷன்... ஹாஹா

      நீக்கு
  19. ஒரு எதார்த்த கதை ...

    படிக்கும் போது எனக்கும் திக் திக் ...அருமையா சொல்லி இருக்கீங்க ...

    ஆனாலும் அந்த ராகவன் இவொலோ கஷ்ட பட்டு அந்த கோவிலுக்கு செல்லும் போது இறைவனை பற்றிய நினைப்பு சிறிதும் இல்லாமல் சென்றது உறுத்தலே ...

    எப்படி முடியும் நம்பிக்கை இல்லாமல் செய்யும் காரியத்தில் பயன் ஏது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அனுராதா ப்ரேம்குமார். கதையை ரசித்ததற்கு நன்றி.

      என்னதான் முயற்சியெடுத்து கோவிலுக்குப் போனாலும் நாம் மனம் ஒன்றுவதற்கும் அவனிடம் ஏதேனும் கேட்கவும் அவன் அருள் வேண்டும். நான் மனதில் எண்ணிக்கொண்டு போவதை அவன் சன்னிதியில் நிறைய தடவை கேட்க முடிந்ததில்லை.

      சமீபத்தில் ஒப்பிலியப்பன் சிரவணத்தின்போது கியூவில் நின்றுகொண்டிருந்தேன். சன்னதி அருகில் வரும்போது (நானும் மனைவியும்தான் சென்றிருந்தோம்), நாதஸ்வரக்கார்ர் இசைத்த பாடல் என் பெண் சிறுவயதில் டீச்சரிடம் கற்றுக்கொண்ட மலையாள கர்நாடிக் பாடல். அதைக் கேட்டவுடன் என் மனதை என் பெண்தான் ஆக்பிரமித்திருந்தாள். அவளுக்கு மட்டும்தான் ப்ரார்த்தித்துக் கொண்டேன். வேறு எந்த நினைவும் வரலை. பிறகு நான் நினைத்துக்கொண்டேன், நான் கேட்க நினைத்ததைக் கேட்கும் சந்தர்ப்பத்தை அவன் தரவில்லை என்று.

      நீக்கு
  20. ரொம்பஅழகா அனுபவித்த மனோநிலையில் கதை. கடவுளைப் பார்த்தால் போதும். அப்ளிகேஷன் போடாமலே வேண்டியதைக் கொடுத்து விடுவார். என்ன சொல்றது. சுடச்சுட பிரயாணங்கள். எல்லா அனுபவங்களுடன் பாண்டித்தியமும் உங்களுடயது புலனாகிறது. ஆபத்ஸஹாயர் நல்ல தரிசனம். ஸந்தோஷம். பாராட்டுகள். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க காமாட்சியம்மா.

      எங்கம்மா அவர் கொடுக்கறார்? பார்த்து ஏகப்பட்ட அப்ளிகேஷன் போட்டும் ஒண்ணும் இன்னும் கொடுக்கலை. அதற்கான நேரம் வரட்டும்னு காத்திருக்காரோ என்னவோ! நம்ம அவசரம் அவருக்கு எங்க புரியுது :-((

      பாராட்டுக்கும் ஊக்கப்படுத்தும் வார்த்தைகளுக்கும் நன்றி

      நீக்கு
  21. பேசாமல் நெல்லைத்தமிழனை ஆ(சிரி)யர் குழுவில் இணைத்து விடுங்கள். திங்க, செவ்வா என்று வரிசை கட்டி எழுதுகிறார்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயக்குமார் சார். “உலகத் தொலைக் காட்சிகளிலே முதன் முறையாக” என்று சொல்லும்படி திங்கள், செவ்வாய் வெளியீட்டுக்கு அப்புறம் “புதன் புதிர்”ம் அனுப்பியிருந்தேன். கேஜிஜி சார் வெளியிடுவதை (ஷ்ஷெடியூல் பண்ணுவதை) மிஸ் பண்ணிட்டார். ஆசிரியர் குழுவில் இல்லாத ஒருவர் படைப்பு தொடர்ந்து மூன்று நாட்கள் வெளியானது என்ற இலக்கை அப்போ அடைய முடியலை.

      அது சரி.. கதை பற்றி ஒண்ணும் சொல்லலையே

      நீக்கு
    2. இப்படித்தான் இந்த வலைத்தளம் ஓடுகிறதோ...?

      நீக்கு
    3. திண்டுக்கல் தனபாலன் சார்... திங்கள் பதிவு மத்தவங்க அனுப்பினா தி.பதிவுல வெளியிடுவாங்க. கேட்டு வாங்கிப் போடும் கதை, செவ்வாய்ல, மத்தவங்கள்ட கதை கேட்டு வாங்கிப் போடறாங்க. வியாழன் பெரும்பாலும் ஶ்ரீராம், புதன் கேஜிஜி சார், ஞாயிறு கேஜிஎஸ், வெள்ளி அனேகமா ஶ்ரீராம் செலெக்‌ஷன் திரைப்பாடல், சிக்கிழமை அந்த வாரத்தில் கண்ணில் பட்ட நல்ல செய்திகள்னு கலந்துகட்டி இருக்கு.

      எபி மூலம், கில்லர்ஜி, நீங்க (தி த), துரை செல்வராஜு சார், கோமதி அரசு மேடம், ராஜி, ஜெயக்குமார் சார் மற்றும் பலரின் அறிமுகமும் நட்பும் கிடைச்சிருக்கு.

      நீக்கு
  22. எனக்கு கதையை வாசிக்குமோது ரொம்ப பிடிச்சது மனதில் ஆழமா பதிஞ்சது அந்த ஆலயப்படங்கள் தான் !!
    நீங்கள் எடுத்ததா ? அப்படியே நேரில் பார்ப்பது போன்ற அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சலின்... நான் எடுத்த படங்களையே சேர்த்திருக்கலாம். நிறைய நல்ல படங்கள் (நோ... இதுல கலாய்க்க விடமாட்டேன்) இருக்கு....

      நீக்கு
  23. கதை மிகவும் அருமையா எழுதியிருக்கீங்க நெல்லைத்தமிழன் .நம் எல்லாருக்கும் நடப்பதுதான் இது :) மனம் ஒருநிலைப்படுத்துவது என்பது ஒரு கலை வரம் :) என்னதான் கடிவாளமிட முனைந்தாலும் அது கட்டுக்கடங்காம ஓடும் .
    இங்கே ராகவனின் மனைவியும் விடுவதாயில்லை :) கோயிலுக்கு போறவரை எப்போ வருவீங்கன்னு டைம் ஆகுதுன்னு சொல்லியே பரபரக்க வைக்கிறார் :) ஆட்டோவின் டயர் வேறு தடங்கல் ! ஆனாலும் பிறகு பஸ்ஸில் அமர்ந்தபிறகு உணர்ந்தாரே .அதுவே போதும் இறைவன் காப்பார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைப் படிக்கும்போது நான் பார்த்த ஒரு நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வருது. எங்க +2 ஹாஸ்டல் அருகில் மிகப் பெரிய சர்ச் உண்டு (ரோ. கே). அதற்கு அருகில் மாதாவும் ஏசு பாலகனும் உள்ள பெரிய சிலை அழகாக இருக்கும். ஹாஸ்டல் நண்பன் ஒருவன் அதன் முன் மண்டியிட்டு அமர்ந்து மனத்தில் பேசிக்கொண்டு அழுதுகொண்டிருந்தான். ப்ரேயரில் மனம் ஒன்றுவது என நினைக்கும்போது அந்தச் சம்பவம் ஞாபகத்துக்கு வரும்.

      மனதை ஒருமுகப் படுத்துவது பெரிய வரம்.

      நீக்கு
  24. ஐயா. நீங்க கதையைப் பற்றி கருத்து கூறவில்லை என்கிறீர்கள். என் மனசில் பட்டதை வெளிப்படையாக சொல்கிறேன். கோபம் வேண்டாம். நீங்க எழுதியது தற்போதைய மெகா சீரியல் ஒரு எபிசோடு மாதிரி இருக்கிறது.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனாலென்ன ஜெயக்குமார் சார். உங்க விமர்சனம் தவறில்லை. சொல்ல வந்ததை இன்னும் சிறப்பா நான் சொல்லியிருக்கலாம்.

      ஆனா நான் தொலைக்காட்சி சீரியல்கள் 15 வருடமா பார்ப்பதே இல்லை. ஹா ஹா

      நீக்கு
  25. மனம் ஒருநிலைப்படுத்த ஒருவர் சொன்னது குறிப்பா ஆலயத்தில் இருக்கும்போது சாமி முன் நம்மை அங்குள்ள ஒரு முக்கிய கேரக்டரா நினைச்சிக்கணுமாம் :) தீபாராதனை செய்யும்போது கண்ணை மூடி நம்மைசேவகம் செய்பவரா அர்ச்சகரா நினைச்சிகிட்டா மனது பட்டுப்புடவை நெய்வாசம் மணிச்சத்தம் பூவாசாம் எதிலும் தாவாது :)

    பதிலளிநீக்கு
  26. ஹாஹாஹா ஆனா பாருங்க நெல்லைத்தமிழன் இந்த கதையை படிக்கும்போது எனக்கு ராகவனா நீங்க தான் தோணினிங்க :) உங்களை பார்த்ததில்லை ஆனா ஆட்டோவில் போகும்போது போனில் மனைவியுடன் இப்படி ஓவொரு சீனிலும் ராகவன் நெல்லைத்தமிழனா தோன்றினார் எனக்கு :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்தவரைல நான் கான்சன்டிரேட் பண்ணுவேன். ராகவன் மனநிலையும் எனக்கு வாய்த்திருக்கு. (போன் பேச்சு...ஹாஹா.. நம்மை அறியாமல் நான் வெளிப்பட்டுட்டேனோ?) நன்றி ஏஞ்சலின்.

      நீக்கு
  27. கோவிலுக்குச் செல்லும் ஒரு சாரார் நிலை இப்படித்தான்
    விறுவிறுப்பாய்ப் போனது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரிஷபன் சார்... நான்லாம் கொஞ்சம் வள வள டைப் (கதை மாதிரி எழுதறதுல). உங்களை மாதிரியே சுருக்கமா, உரையாடல்ல ஒரு கதை எழுதணும்னு ஆசை. (சட்டியில் இல்லாததை அகப்பையில் எதிர்பார்க்கிறேனோ?). நன்றி

      நீக்கு
  28. கூட்டமில்லாத் தன் கோவில் ஒன்றிற்கு வரச் செய்தார் சிவன். ஆனால் பையனுக்கு மன ஓட்டம் சரியில்லை. இருந்தும், சேவிக்க மறந்தவனையும் சேர்த்துவைத்தார் அவனுக்குத் தேவையான பஸ்ஸுக்குள்! அவர் அருள் அப்படி. இவன் இருள் இப்படி.

    டென்ஷனை நன்றாக பில்டப் செய்து வண்டியை ஓட்டியிருக்கிறீர்கள்..

    கோவிலுக்குப் போனவனெல்லாம் சாமியைக் கும்பிட்டான் என்று அர்த்தமில்லை. கோவிலுக்குப்போகாதவன் கும்பிடவேயில்லை என்றும் பொருளில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் சார். உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி.

      கோவிலுக்குப் போனவன், போகாதவனைப் பற்றி நீங்கள் சொன்னது ஆயிரத்தில் ஒரு வார்த்தை. பூசலார் நாயனார் கதை அறிந்தவர்கள் இதைப் புரிந்துகொள்வார்கள்.

      நீக்கு
  29. குறித்த நேரத்தில் கோவிலுக்கும் சென்று விட்டு, பங்களூர் பேருந்தையும் பிடிக்க வேண்டும் என்னும் அவசரம், அதனால் உண்டாகும் பதட்டம் எல்லாவற்றையும் அழகாக விவரித்திருக்கிறீர்கள். எங்களுக்கும் அந்த பதட்டம் தொற்றிக் கொள்கிறது. பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  30. நாங்கள் நவ திருப்பதி சென்ற பொழுது, என் கணவர் அசதியாக இருப்பதால் சில கோவில்களுக்கு வரவில்லை. அவர் காரில் காத்திருந்ததால் மனமொன்றி தரிசனம் செய்வது கடினமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரே நாளில் நிறைய கோவில் தரிசனம், அதிலும் பெரிய கோவில்கள் என்றால் கொஞ்சம் கடினமாக இருக்கும். அதிலும் குறிப்பிட்ட நேரத்துக்குள், அதாவது நடை அடைப்பதற்குள், என்றால் ஆயாசமாகிவிடும், ஒரு சமயத்தில் மெகானிக்கலாகி விடும்.

      நீக்கு
  31. இப்போது தான் வந்து படிக்க முடிந்தது.

    நல்ல கதை.

    இப்படித்தான் இன்றைக்கு ஓடிக்கொண்டே இருக்கிறோம் பலரும். எந்த வேலையிலும் முழுமையான ஈடுபாடு காண்பிக்காது, அடுத்தது அடுத்தது என ஓடிக் கொண்டே இருக்கிறோம்.

    நெல்லைத் தமிழன் அவர்களுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் சகோதரரே

    மிகவும் நன்றாக கதை எழுதியுள்ளீர்கள். கதையோட்டம் அடுத்து என்னவென்று எதிர்பார்க்கும்படியாக, மிகவும் அருமையாக இருந்தது.

    கோவில் தரிசனங்கள் போது பிற வேலைகளும், அதிலும் அந்த குறிப்பிட்ட பொழுதுக்குள் செய்து முடிக்க காத்திருக்கும் வேலைகள், இறைவழிபாட்டை முழுமையாக்காமல் செய்து விடும் என்று கதையை முடித்திருப்பது நன்றாக இருந்தது. பொதுவாகவே இது சிலசமயங்களில் அனைவருக்கும் நிகழ்வுதான். நன்றாக கதை போக்குடன் ஒன்றிப் போக செய்து விட்டீர்கள். பாராட்டுகள்.

    கதையில் ராகவன் கூட எப்படியோ அந்த நேரத்திற்குள் அடித்துப் பிடித்து பெங்களூர் பயணத்திற்கு தயாராகி விட்டார். நான் செவ்வாய் கதைக்கு புதன் கருத்துச் சொல்ல வந்திருக்கிறேன். இதுவும் ஒருவகை இறையருள்தான். ஹா ஹா ஹா. தாமதத்திற்கு மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்..உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!