செவ்வாய், 26 நவம்பர், 2019

கேட்டு வாங்கிப் போடும் கதை : கைப்பக்குவம் - துரை செல்வராஜூ

கைப்பக்குவம் 
துரை செல்வராஜூ 
------------------------------------


பெயர் தான் சிட்டி ஹோட்டல்...

மற்றபடி சிட்டிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை..

பாஹேல் நகரின் கடற்கரையை ஒட்டியுள்ள அபுகலீபா வட்டாரம்..  அதன் கிழக்காக கடற்கரைச் சாலை..

அந்தச் சாலையின் மேல்புறம் பொது வணிக வளாகம்..  அதை அடுத்த தெருவில் பத்து மாடிகளுடன் கூடிய அடுக்கு மாடிக் குடியிருப்பு..

அந்த குடியிருப்பின் பின்புறம் மூன்றாவது தெருவைக் கடந்தால் ஒன்றரைக்
கி.மீ., சுற்றளவுடைய பெரிய திடல்...

அதன் எதிர்புறம் தனியார் காய்கறி அங்காடி..   அதற்கு அருகில் தான் அந்த சிட்டி ஹோட்டல்...

அதை நோக்கித் தான் நடந்து கொண்டிருந்தார் - குருமூர்த்தி..

வெள்ளிக் கிழமையானால் குருமூர்த்திக்கு காலை உணவு அங்கே தான்...

மற்ற நாட்களில் -  பணி புரியும் இடத்திலும் இருப்பிடத்திலுமாக மூன்று வேளை உணவு..

என்றாலும் அமாவாசை கார்த்திகை விசேஷ நாட்களில் சொந்தச் சமையல்...

இந்த வட்டாரத்துக்கு இடம் மாறி வந்த பிறகு மூன்று வருடங்களாக சிட்டி
உணவகம் பழக்கம்..

வேலை நாட்களில் அதிகாலை நாலு மணிக்கெல்லாம் திறக்கப்படும் உணவகத்தில் கூட்டம் தாளாது..

வெளியே வேலைக்குச் செல்வோர்க்கு இந்த உணவகம் தான் அமுத சுரபி...
நூறு பேருக்கும் மேலாக மாதாந்திர உறுப்பினர்கள்...

இட்லி, தோசை, உப்புமா, பொங்கல், பூரி, சப்பாத்தி - என, பார்சல்கள் தயாராக இருக்கும்..

காலை ஐந்து மணிக்கு மேல் மதியம் வரை கடைக்குள் கடற்கரைக் காற்று தான்..

மாலையில் மறுபடியும் நெரிசல்.. கடைக்குள் நுழைய முடியாது...

வாராந்திர விடுமுறையான வெள்ளிக்கிழமையில் காலை எட்டு மணியிலிருந்து இரவு பத்து மணி வரை ஜேஜே!.. என்றிருக்கும்...

இத்தனைக்கும் உணவின் ருசி எப்படி?.. - என்றால் தலையைத் தொங்கப் போட்டுக் கொள்ளவேண்டும்...

சிட்டி ஹோட்டலை நடத்துபவர் கிருஷ்ணன் குட்டி..  உணவகத்தின் வாடிக்கையாளர்கள் தொண்ணூறு சதவீதம் நம்மூர்க்காரர்கள்..

அவர்களுக்கான சுவையும் மணமும் இங்கே கிடைக்கவில்லை..

பெயரளவுக்குத் தான் இட்லி, உப்புமா, பொங்கல் எல்லாம்...

அதற்கான கைப்பக்குவம் கொண்ட சமையல்காரர் -  இந்தக் கடைக்கு அமையாதது அங்கிருந்த தமிழர்களின் துரதிர்ஷ்டம்...

ஆனாலும் வேறு வழியில்லை...  ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்றாகி விட்டது...

சைவ உணவுகள் குறிப்பாக தமிழகத்து உணவுகள் தான் இப்படி...

மற்றபடி பலரது விருப்ப உணவுகளாகிய கூரை மேல் கொக்கரிப்பது, தண்ணீரில் வெள்ளியெனெத் துள்ளித் திரிவது, நாலு கால் பெரிய முட்டுவான் - இதிலெல்லாம் அபாரமான கைவரிசை..

அந்தக் கால விவித்பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு மாதிரி கொண்டாடிக் குதுகலிப்பர்!..

போன் செய்தால் போதும்.. அறையின் வாசலிலே கொண்டு கொடுப்பதற்காக இரண்டு பசங்களை வைத்திருக்கிறார் - கிருஷ்ணன் குட்டி...

இப்படியிருந்தாலும் -  கடைக்குள் உணவு பரிமாறும் ஆட்கள் அடிக்கடி புதிய ஆட்களாக இருப்பர்..

நமக்கு அதெல்லாமா முக்கியம்... நாலு இட்லி.. ஒரு வடை, காஃபி..  - என்ற வகையில் சிட்டி ஹோட்டலை நோக்கி நடந்து கொண்டிருந்தார் - குருமூர்த்தி...

இதோ சிட்டி ஹோட்டலுக்கு வந்தாயிற்று..

வாசலிலேயே கை கழுவுமிடம்...  கைகளைக் கழுவி விட்டு கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்ததும் சில்லென்ற குளிர் காற்று முகத்தை வருடியது...

எப்போதும் வழக்கமாக அமரும் அந்த மூன்றாவது மேஜை...  வாசலைப் பார்த்தபடி அமர்ந்தார் குருமூர்த்தி...

'' வாங்க சார்... என்ன சாப்பிடுறீங்க!... ''

அருகில் வந்து நின்றவரை நிமிர்ந்து பார்த்தார்..

புதியவர்.. நடுத்தர உயரம்... நெற்றியில் சந்தனமும் குங்குமமும்..  மஞ்சள் நிற சட்டை.. மேலே நீல நிற ஈரிழைத் துண்டு...

'' இட்லி ஒரு செட்!... ''

'' வடை வைக்கலாமா!... '' - கேட்கும் குரலில் ஒரு குழைவு...

'' ம்!.... ''

புதிதாக வந்திருக்கிறார் போலிருக்கிறது.. எத்தனை நாளைக்கோ!...

சில நொடிகளில் தண்ணீர்க் குவளை வந்தது...  அடுத்த சில நொடிகளில் இட்லியும் வடையும் வந்தன...

சிறு சிறு கிண்ணங்களில் சாம்பார், தக்காளிச் சட்னி, தேங்காய்ச்சட்னி!...

'' குருமா தரவா சார்!... ''

இத்தனை வருடங்களில் இந்தக் கேள்வி புதிதாக இருந்தது...

இந்தக் குருமா சப்பாத்திக்கு உரியது...  இப்படியெல்லாம் கேட்டு வைக்கும் வழக்கமில்லை...

சாப்பிடும்போதே சாம்பாரும் தக்காளிச் சட்னியும் கூடுதலாக வந்தன..

'' வேறு என்ன சார் வேண்டும்?... '' - சற்றே குனிந்து புன்னகையுடன்
கேட்டார் அந்தப் புதிய பணியாளர்...

அந்தப் புன்னகைக்காகவே ஏதாவது சாப்பிடலாம் போலிருந்தது குருமூர்த்திக்கு...

'' ஒரு காஃபி... '' - என்றார்...

காஃபியும் வந்தது...

'' எந்த ஊர் நீங்க?.. '' - என்றார் குருமூர்த்தி..

'' திருவாரூருக்குப் பக்கம்!... ''

'' ஓ... உங்க பேரு?.. ''

'' சிங்காரவேல்!... ''

'' வந்து எத்தனை வருசம் ஆகுது?... ''

'' ஒரு வருசம் ஆகுது.. அரபி வீட்ல வேலைக்கு வந்தேன்... இப்போ வெளியில
வேலை பார்த்துக்க சொல்லிட்டான்... இன்னிலேருந்து இங்கே வேலை!... ''

என்னவோ குருமூர்த்திக்கு அவரைப் பிடித்து விட்டது..

'' இது என்னோட நம்பர்.. ஓய்வு நேரத்துல பேசுங்க!... ''

'' நல்லது.. சார்!.. '' - சிங்காரவேல் புன்னகைத்தார்...

அடுத்த சில நாட்களில் சிங்காரவேல் குருமூர்த்தியை தொலைபேசியில் அழைத்தார்..

வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தனர்...

சிங்காரவேலின் தந்தை அந்தக் காலத்தில் ஹோட்டல் நடத்தியிருக்கிறார்.. கால சூழ்நிலைகளில் நொடித்துப் போனது உணவகம்.. அவரும் போய்ச் சேர்ந்து
விட்டார்...

குடும்ப சூழலைக் கருத்தில் கொண்டு படிப்பைக் கைவிட்ட சிங்காரவேல் -
கல்யாண வீடுகளுக்கு சமைக்கும் குழுவினருடன் சேர்ந்து கொண்டார் ...

சமைக்கும் கலையின் நுணுக்கங்கங்களைக் கற்றுத் தேர்ந்து
தனக்கென ஒரு குழுவை உருவாக்கிக் கொண்டார்...

ஆனாலும் மாறி வந்த சூழ்நிலைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை...

பிராமணர் அல்லாத சைவ குடும்பத்தைச் சேர்ந்த சிங்காரவேல்

யாரோ சொன்னார்கள் என்று இங்கே வந்து படாதபாடு பட்டு விட்டார்...

சைவ பரம்பரையில் வந்தவருக்கு புலால் உணவுகளைச் சமைக்க வேண்டிய
நிர்பந்தம்... தவித்துத் தடுமாறி விட்டார்...

அந்த அரபியின் டிரைவர் தஞ்சாவூர்க்காரர்.. இவரது நிலைமை எடுத்துச் சொல்லி அங்கிருந்து வெளியே செல்லும்படிக்கு ஏற்பாடு செய்து கொடுத்து விட்டார்..

எங்கெங்கோ சுற்றி இப்போது சிட்டி உணவகத்துக்கு வந்திருக்கிறார்..

ஆனாலும்-  '' மூன்று வருடங்களுக்கு நல்லபடியாக வேலை ஒண்ணு வேணும்...  சிக்கல் எல்லாம் தீர்ப்பான் சிங்கார வேலன்!.. '' - என்று சொல்லி சிரித்திருக்கின்றார்...

வெள்ளிக் கிழமை தோறும் சிட்டி ஹோட்டலில் சிங்காரவேலுடன்
பேசிக் கொண்டு சாப்பிடுவது கூடுதல் உற்சாகமானது குருமூர்த்திக்கு...

அதற்கப்புறம் ஒரு நாள் பேசியபோது -  சிட்டி ஹோட்டலில் செய்யப்படும் குதர்க்கங்களைச் சொல்லி வருத்தப்பட்டிருக்கின்றார்...

'' அதெல்லாம் ஓரளவுக்குத் தெரியுமே!... '' - குருமூர்த்தி...

'' ஆனாலும் இதெல்லாம் அநியாயம்... பாவம்.. மகாபாவம்!...  சாப்பாட்டு விஷயத்து....ல இந்தமாதிரி வஞ்சனை செய்யக்கூடாது!.. ''

'' நமக்கென்ன... ஹோட்டல்காரன் எதைக் கொடுத்து பரிமாறச் சொல்றானோ..
அதைச் செய்து விட்டுப் போக வேண்டியது தானே!... ''

'' இல்லீங்க... அப்படியெல்லாம் செய்றதுன்னா முகத்தில புன்னகை வராது...
புன்னகையோட பரிமாறப்படாத சாப்பாடெல்லாம் சாப்பாடு ஆகாது!... ''

'' அன்னம் சிவ ஸ்வரூபம்..ன்னு பெரியவங்க சொல்வாங்க!...  சந்தோஷமா சமைக்கணும்.. சந்தோஷமா பரிமாறணும்!... ''

'' கடுகடு...ன்னு சமைக்கிறதோ லொடலொட..ன்னு எடுத்து வைக்கிறதோ
அன்னத்துக்குச் செய்ற துரோகம்... ''

'' இப்படியான பாவம் எல்லாம் நான் செய்ததில்லை!..  அன்னலக்ஷ்மி சாதாரணமானவ இல்லை...  இடம் பார்த்து ஏத்தி வைப்பா!..  தடம் பார்த்து எறக்கி விட்டுடுவா!.. ''

சிங்காரவேலின் குரல் நெகிழ்ந்தது...

'' இதையெல்லாம் பார்த்தா இங்கே ஒரு இடம் கூட ஒழுங்கா அமையாது!...
டிக்கெட்டுக்குக் காசைச் சேர்த்துக்கிட்டு ஊருக்குப் புறப்பட வேண்டியது தான்!.. ''
- என்று சொல்லிக்கொண்டே மெலிதாகப் புன்னகைத்தார் குருமூர்த்தி...

அதைக் கண்டு கொள்ள இயலாத சிங்காரவேல் - எப்போதும் போல,

'' பரவாயில்லை சார்...  பதினைஞ்சு வயசு பையனுக்கு.. பொண்ணுக்கு பன்னிரண்டு ஆகுது..  பையன் தலையெடுக்கிற வரைக்கும் இங்கே ஓட்டுவோம்..ன்னு இருக்கேன்!... ''

'' அதுக்கு ஒரு குந்தகம்..ன்னா...  பெட்டியக் கட்டிக்கிட்டு புறப்பட்டுடலாம்!..
நம்ம கைப்பக்குவம் நமக்குக் கை கொடுக்கும் சார்!..  சிங்கார வேலன் எதுக்கு இருக்கான்?..  சிக்கல் எல்லாம் தீர்க்கிறதுக்குத் தானே!.. ''

- என்று சொல்லி சிரித்திருக்கிறார்...

உண்மையிலேயே அப்போது சிக்கல் ஸ்ரீசிங்காரவேலனும் சிரித்துக்
கொண்டிருக்கிறான் என்பதை இருவருமே அறிந்திருக்கவில்லை...

அடுத்த சில நாட்களில் ஒரு மாலைப் பொழுது..  குருமூர்த்தி சிங்காரவேலை தொலைபேசியில் அழைத்தார்..

'' சிங்காரவேல்!... எங்க கம்பெனியில ஒரு வேலை இருக்கு செய்றீங்களா?.. ''

'' உங்க கம்பேனியா?.. என்ன கம்பெனி அது!?.. ''

'' கேட்டரிங்!.. ''

'' கேட்டரிங்.. கா!... அங்கே நீங்க என்னவா இருக்கீங்க?... ''

'' பர்சனல் மேனேஜரா இருக்கேன்!... ''

'' சார்!... இத்தனை நாள் பழகியும் தெரிஞ்சுக்காம இருந்துருக்கேன்... பாருங்க!..
அந்த சிங்காரவேலன் என் வயித்துல பாலை வார்த்துட்டான்... சார்!...  ஆனா - எனக்குத் தான் அசைவம் சமைக்கத் தெரியாதே!... ''

'' நீங்க வெஜிடேரியன் மட்டுந்தான் சமைக்கப் போறீங்க!... ''

'' முருகா!... ''

'' எங்க பில்டிங் தெரியும் தானே!.. உங்க பாஸ்போர்ட், விசா பேப்பர்
எல்லாம் எடுத்துக்கிட்டு நாளைக்குக் காலைல ஏழு மணிக்கு அங்கே வந்து
இருங்க...  வேன் அழைக்க வரும்... ரெண்டு வருசம் காண்ட்ராக்ட்... மாசம்
இருநூறு தினார் சம்பளம்... உங்களுக்கு ஒத்தாசையா ரெண்டு அஸிஸ்டெண்ட் குக்!... ''

'' ஆரூரா.. தியாகேசா!... '' - சிங்காரவேலின் கண்களில் நீர் வழிந்தது...

'' ஏ பிளாக்... ல அதாவது நான் இருக்கிற பிளாக்..ல இருந்து நாலாவது
கட்டடம்... அங்கே மூனாவது மாடி..ல.. அஞ்சாவது ரூம் உங்களுக்கு
போட்டாச்சு... ''

'' நீங்க எங்க கம்பெனி விசாவுக்கு மாறுனதும் உங்களுக்கு மெடிக்கல்
செக்கப்... அது முடிஞ்சு மெடிக்கல் கார்டு வந்ததும் தான் உங்களுக்கு
வேலை!... ''

'' அதுவரைக்கும்?... ''

சாப்பிட்டு விட்டு அறையில் தூங்குங்கள்!...

'' அப்போ சம்பளம்!?.. ''

'' அது கம்பெனி சட்டப்படி தன்னால வரும்!.. ''

'' முருகா!.. ''

'' நாளைக்கு ஆபீஸ்..ல பார்க்கலாம்...  சந்தோஷமா நிம்மதியா இருங்க!... ''

சிங்காரவேலின் காதுகளில் குருமூர்த்தியின் குரல் தேனாக இனித்தது...
ஃஃஃ  

59 கருத்துகள்:

  1. காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ...

    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
  2. ஏதோ கோளாறு...    அடைப்பை சரி செய்த உடன் வெளியாகி விட்டது!   மன்னிக்கவும்!

    பதிலளிநீக்கு
  3. கொஞ்ச நேரம் கவலையாப் போய் விட்டது. என்ன ஸ்ரீராம்? நல்லா இருக்கீங்க தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா...   வணக்கம்.  நல்வரவு.    உடல்நிலை ஓகே தான்!

      நீக்கு
  4. இந்த நாள் இனிய நாளாக
    அனைவருக்கும் அன்பின் நல்வரவு....

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் நல்வரவும், வணக்கமும், வாழ்த்துகளும், பிரார்த்தனைகளும்.

    பதிலளிநீக்கு
  6. நடுச்சாமத்துல முழிச்சிட்டோமோ.. என்று
    எனக்கும் சந்தேகம் வந்து விட்டது....

    சரி.. சரி.. மணி மூன்றரை தான்!....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...   ஹா...  ஹா...

      நானும் நேரத்தை கவனிக்க முடியாமல் கோமதி அக்கா பிளாக்ல இருந்தேன்.   அவங்க அம்மா பத்தி சுவாரஸ்யமா எழுதி இருந்தாங்க...    அதைப் படிச்சுக்கிட்டிருந்ததில நேரம் போனதே தெரியவில்லை.  இங்கே வந்து பார்த்தால்...

      நீக்கு
    2. நானும் தான் அங்கேயிருந்தேன்...

      என்னைப் பார்க்கலையா!...

      நீக்கு
    3. ஸ்ரீராம், என் பதிவை இங்கு சிறப்பித்துக் குறிப்பிட்டதற்கு நன்றி.

      நீக்கு
  7. ஆஹா, துரை சொல்லி இருக்கும் குறளுக்கு ஏற்ற கதை. காலத்தினால் செய்த உதவி சிறிதெல்லாம் இல்லை;ஞாலத்திலும் மாணப் பெரிது! இதை விட என்ன வேண்டும்! அருமையான கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  8. ஆனால் உணவு தயாரிப்புப் பற்றியும் ஓட்டல்களின் உணவு பற்றியும் சொல்லி இருப்பது முற்றிலும் உண்மை. ஒரு தோசை வார்க்கும் இடத்தில் இரண்டோ, மூன்றோ வார்த்துக்கொடுத்துப் பணம் பண்ணும் வித்தைதான் அனைவருக்கும் இருக்கிறதே தவிர அந்த ஒரு தோசையை நன்றாகக் கொடுக்கணும், திருப்தியாகச் சாப்பிடணும்னு யாருக்கும் எண்ணம் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணவகங்களில் உணவின் தரம் பேணப்ப்டுவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும்...

      அந்த ஆதங்கத்தில் தான் அந்தக் கதையை எழுத முற்பட்டேன்....

      அது வழக்கம் போல சக மனித அன்பினில் வந்து விட்டது..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. இன்று எனது கதையைப் பதிப்பித்த ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.. மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  10. அன்பின் ஜி
    கதையும், கதாபாத்திரங்களும் இதில் ஏதோவொரு உண்மை இருப்பதாக மனதுக்கு படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...

      தாங்கள் சொல்வது போல இதற்குள் மனிதர்கள் இருக்கிறார்கள்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  11. '' கடுகடு...ன்னு சமைக்கிறதோ லொடலொட..ன்னு எடுத்து வைக்கிறதோ
    அன்னத்துக்குச் செய்ற துரோகம்... ''

    '' இப்படியான பாவம் எல்லாம் நான் செய்ததில்லை!.. அன்னலக்ஷ்மி சாதாரணமானவ இல்லை... இடம் பார்த்து ஏத்தி வைப்பா!.. தடம் பார்த்து எறக்கி விட்டுடுவா!.. ''////////உண்மை உண்மை மிக உண்மை.
    இது மிகப் பெரிய உதவி. இடம் அறிந்து மனம்
    தெரிந்து இளகி,உதவி செய்த குருமூர்த்தியே முரகன். அவன் சிங்காரவேலனின் சிக்கலை விடுவித்ததில் அதிசயமே இல்லை.
    மனம் குழையக் கதை எழுத இனிமெல் ஒருவர் பிறந்து வரவேண்டும் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    செவ்வேள் முருகனுக்கு அரோகரா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி....

      சிக்கல் எல்லாம் தீர்ப்பான்
      எங்கள் சிங்கார வேலன்...

      மனம் குழையக் கதை என்று சொல்லியிருக்கிறீர்கள்...

      நமக்கு முன் எத்தனையோ பேர் அப்படி எழுதி விட்டார்கள்...

      இன்று ஸ்ரீமதி கோமதி அரசு அவர்களது பதிவைப் பாருங்கள்..

      அற்புதமாக எழுதியிருக்கிறார்கள்...

      தங்கள் அன்பினுக்கு நன்றியம்மா...

      நீக்கு
    2. உங்கள் எழுத்து போல் எழுத முடியுமா?
      எனக்கு தெரிந்த மாதிரி எழுதி இருக்கிறேன்.
      நன்றி உங்கள் கருத்துக்கு.

      நீக்கு
    3. நீங்கள் சொல்வதிலேயே
      தன்னடக்கம் தெரிகிறது...

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  12. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் காலை வணக்கங்களுடன் இந்தநாள் அனைவருக்கும் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனப்பூர்வமாக பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  14. கதை மிக அருமை வழக்கம் போல.
    உண்மை கதை போல் இருக்கிறது.
    குருமூர்த்தியின் உருவம் மனகண்ணில் சகோவை போல் தெரிகிறது.

    //உண்மையிலேயே அப்போது சிக்கல் ஸ்ரீசிங்காரவேலனும் சிரித்துக்
    கொண்டிருக்கிறான் என்பதை இருவருமே அறிந்திருக்கவில்லை...//

    சிங்காரவேலனின் சிரிப்புக்கு அர்த்தம் புரிந்து விட்டது.
    சிங்காரவேலன் அவர்களின் காதில் மட்டும் அல்ல நம் காதுகளிலும் தேனாக இனித்தது.
    திக்கற்றவர்களுக்கு தெய்வம் துணை என்பதை வலியுறுத்தும் கதை.
    அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >> கதை மிக அருமை வழக்கம் போல.
      உண்மை கதை போல் இருக்கிறது...<<<

      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும்
      வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  15. நம் கிராமத்துக் கதைகள்போய் பாலைவன உண்மைக் கதைகளை தொடங்கிருக்கிறர் எபி யின் ஆஸ்தான கதை சொல்லி எதை எழுதினாலும் லயித்த எழுத்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா!...

      எபி யின் ஆஸ்தான கதை சொல்லி என்று சொல்லி விட்டீர்கள்...

      இனி கவனமாக இருக்க வேண்டும்.. ஹேமநாத பாகவதர் மாதிரி யாரும் வந்து விட்டால்!..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  16. //ஆரூரா.. தியாகேசா!... '' - சிங்காரவேலின் கண்களில் நீர் வழிந்தது...//


    தெய்வம் மஞ்ஷ ரூபத்தில் வந்து (குருமூர்த்தி வடிவில்) உதவி இருக்கிறார் சிங்காரவேலன் அவர்களுக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> ஆரூரா.. தியாகேசா!... '' - சிங்காரவேலின் கண்களில் நீர் வழிந்தது...<<<

      சிங்காரவேல் போன்ற நல்ல மனிதர்களுக்கு தெய்வம் நேரிலேயே வந்து உதவும்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  17. பதில்கள்
    1. நல்லோர்தம் கண்களுக்கு தெய்வம் மனுஷ ரூபத்தில்...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  18. எதை எழுதினாலும் லயித்த எழுத்து//

    ஆமோதிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜோசப் அவர்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  19. துரை சாரின் கதை, நன்றாக இருக்கிறது என்று தனியாக சொல்ல வேண்டுமா? straight from the heart, அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  20. //இப்படியான பாவம் எல்லாம் நான் செய்ததில்லை!.. அன்னலக்ஷ்மி சாதாரணமானவ இல்லை... இடம் பார்த்து ஏத்தி வைப்பா!.. தடம் பார்த்து எறக்கி விட்டுடுவா!.. ''//,பரிமாறப்பட்ட உணவை சதா குறை கூறிக்கொண்டும், முகத்தை சுளித்துக் கொண்டும் சாப்பிடுகிறவர்களைப் பார்த்தாலும் எனக்கு இப்படித்தான் தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> பரிமாறப்பட்ட உணவை சதா குறை கூறிக் கொண்டும், முகத்தை சுளித்துக் கொண்டும் சாப்பிடுகிறவர்களைப் பார்த்தாலும் எனக்கு இப்படித்தான் தோன்றும்.. <<<

      என்ன மனிதர்களோ... என்று எனக்கும் இப்படித்தான் தோன்றும்...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  21. கதை நல்லா இருக்கு. இரசித்துப் படித்தேன். ஏதோ ட்விஸ்ட் வரப்போகுது என்று நினைத்துக்கொண்டே படித்தேன். ட்விஸ்ட் எதுவும் இல்லை என்பதுதான் ட்விஸ்ட் போலிருக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> ட்விஸ்ட் எதுவும் இல்லை என்பதுதான் ட்விஸ்ட் போலிருக்கு..<<<

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  22. பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  23. கதைச் சம்பவம் நல்லா வந்திருக்கு.

    எத்தனை பேருக்கு இந்த மாதிரி உதவும் குணம் அமையும்னு தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிங்காரவேல், குருமூர்த்தி இவர்களைப் போல எத்தனையோ நல்லவர்கள்..

      ஒரு சிலர் தான் கண்களுக்குத் தென்படுகின்றார்கள்...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  24. வணக்கம் சகோதரரே

    சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் எழுதிய கதை தன்றாக உள்ளது. ஒருவருக்கு உதவும் மனப்பான்மை வந்து விட்டதெனில் உதவி பெறுபவருக்கு தெய்வ அனுகிரஹம் அருகில் வந்து விட்டதென அர்த்தம்.

    அன்னலக்ஷ்மியை குறை கூறினால் எனக்கும் சங்கடமாக இருக்கும். சிங்கார வேலர் அன்னலக்ஷ்மியை பற்றி கூறியது அனைத்தும் உண்மையே.. குருமூர்த்தியின் தக்க சமயத்தில் உதவி செய்யும் மனம் கதைக்கு நிறைவை தந்தது. அரபு நாட்டில் அந்த கதாபாத்திரம் படித்து வரும் போதே தங்களைத்தான் நினைவு படுத்தியது. உண்மை சம்பவம் மாதிரி கதை படிக்கும் போது மனதுக்கு திருப்தியாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் சிங்காரவேல் வாயிலாக உணவகங்களில் செய்யப்படும் தகிடுதத்தங்களைச் சொல்லலாம் என்று தான் நினைத்தேன்...

      கதை தானாக வேறு வழியில் பயணித்து விட்டது...

      >>> உண்மை சம்பவம் மாதிரி கதை படிக்கும் போது மனதுக்கு திருப்தியாக உள்ளது.. <<<

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  25. கதையைப் பாதி எழுதும் போதே போதும்ன்னு நிறுத்திடுவீங்களா?.. கதாபாத்திரங்களுக்குக் கூட அதிகம் கஷ்டம் கொடுக்கக் கூடாதுங்கற எண்ணமா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜு சார், தர்மனைப் போல.... கதையை ரொம்ப சாஃப்டா எழுதிடறார். அதுக்காகவே வில்லத்தனமுள்ள கதைகளை நான் எழுதணும்னு எனக்கு ஆர்வம் வருது.

      விரைவில் ஒரு வில்லத்தனமுள்ள கதை எழுத முயற்சிக்கப்போகிறேன்.

      நீக்கு
    2. எழுதுங்கள் நெல்லை... எழுதுங்கள்...

      ஆவலுடன் காத்திருக்கின்றோம்...

      அதற்குள் இருந்து ஏதாவது கிடைக்காமலா போகும்!....

      நீக்கு
  26. >>> கதையைப் பாதி எழுதும் போதே போதும்ன்னு நிறுத்திடுவீங்களா?..<<<

    சிங்காரவேலின் குணம் புரிந்து விட்டது.. அவருடைய கஷ்டமும் தெரிந்து விட்டது..
    அதற்கு மேல் உதவத்தானே வேண்டும்...

    >>> கதாபாத்திரங்களுக்குக் கூட அதிகம் கஷ்டம் கொடுக்கக் கூடாதுங்கற எண்ணமா?...<<<

    இது தான் உண்மையும்!...

    தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

    பதிலளிநீக்கு
  27. சிங்கார வேலன் எதுக்கு இருக்கான்?.. சிக்கல் எல்லாம் தீர்க்கிறதுக்குத் தானே!.. ''...உண்மை ....

    இதமான கதை ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபிரேம்..
      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!