திங்கள், 4 நவம்பர், 2019

"திங்க"க்கிழமை : பஞ்ச வர்ண மாலாடு - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி ​  பஞ்ச வர்ண மாலாடு


இதில் பஞ்ச (பாஞ்ச்) என்பதற்கு பொருள் இதிலுள்ளது ஐந்து பொருட்கள்.

வர்ணம் என்பது கலரைக் குறிப்பது. ஆனாலும் கலர் கலராக இதுவும்  இருக்குமென நினைக்க கூடாது. சற்று மாறுபட்ட ஒரே கலர்தான்.

மாலாடு என்பது இனிப்பின் ஒரு வகை பெயரை( லட்டு, பூந்தி மாதிரி) சார்ந்தது. மா+ லாடு.. மா-என்றால் மாவு, லாடு-என்றால் உருண்டைகள் எனவும் பொருள் கொள்ளலாம்.

அப்பாடா... ! பெயர் விளக்கம்  ஒரு மாதிரியாக தந்து விட்டேன்.

இனி ஒரு கப் அளவுபடி ரவை, உடைத்த கடலை, (பொட்டுகடலை எனவும் இதை சொல்வோம். ) பாசிப்பருப்பு, அவல், கடலைப் பருப்பு  இந்த ஐந்தையும் எடுத்துக் கொண்டேன்.
 தனித்தனியாக எடுத்து வைத்துள்ள பஞ்ச பொருட்கள். (இதனுடன் ஒரு "ம்"என்ற ஒரு எழுத்து சேர்ந்தால் அதன் அர்த்தமே மாறிப் போய் எதுவும் இல்லாதது என்று போகும். அர்த்தம் மட்டுமல்ல.! அந்த பொருட்களின் தலையெழுத்தும்....ஹா. ஹா.) கூடவே வறுத்துப் போட கொஞ்சம் முந்திரிபருப்பும். இந்த முந்திரி பருப்பு அவரவர் விருப்பபடி (கூடக் குறைய) போட்டுக் கொள்ளலாம்.

பொதுவாக இந்த முந்திரி பருப்பு நம்முடன் எந்த ரீதியிலாவது ஒத்து வர பிரியபட்டு விடும். ஆனால், நாம்தான் நமக்கு ஒத்து வராதது என நிறையவே பிகு செய்து அதை  ஒதுக்குவோம். "அதை மனதில் வைத்துக் கொண்டு,  எப்பவாவது நமக்கு  அதை சாப்பிடலாம் என்ற ஆசை மனதில் வரும் போது,  (அதுவும் எதிராளி வீட்டு விஷேடங்களிலேயோ, அல்லது திருமண வைபவங்களிலேயோ  ஒரு பாயாசத்திலேயோ, கேசரி போன்ற இனிப்புகளிலேயோ அதை நாம் பார்க்கும் போது ) நம் அதிர்ஷ்டத்தின் துணைக்கரம் பற்றிக் கொண்டு அது நம் கண்ணில் படாமலேயே நம்மை பதிலுக்கு ஒதுக்கி, ஒதுங்கியும் போகும்." அது வேறு  விஷயம்.   ஹா.... ஹா...... ஹா........


இனிப்புககு ஜினி இரண்டு டம்ளர் என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளவும். நான் முதலில் எடுத்த கப் இந்த டம்ளரில் பாதி அளவு. ஆகவே அனைத்துக்கும் சேர்த்து (ஐந்து பொருட்களுக்கும் சேர்த்து) இரண்டு டம்ளராக ஜீனி எடுத்துக் கொள்ளவும்.
பொட்டுக் கடலை, பாசிப்பருப்பு, அவல் இந்த மூன்றிலும் ஒரளவு இனிப்பு உள்ளதால் நான் இரண்டு டம்ளர் மட்டும் எடுத்தேன். இனிப்பு தேவைபடுகிறவர்கள் இன்னமும் ஒரு அரை கப் கூட எடுத்து இரண்டரை டம்ளராக சேர்த்துக் கொள்ளலாம்.
கொஞ்சம் ஏலக்காய் சூடான கடாயில் வறுத்து கடலைப்பருப்புடன் போட்டுக் கொள்ளவும். ஏனெனில், கடலைப் பருப்புடன் தோலுடன் சேர்ந்த ஏலக்காய் நன்றாக பொடியாகி விடும். பொதுவாக இந்த ஏலக்காய் வாங்கியவுடனேயே வெறும் சூடான கடாயில் கொஞ்சம் வறுத்து ஆறியவுடன் ஒரு ஸ்பூன் ஜீனியுடன் சேர்த்து பொடி செய்து வைத்துக் கொண்டால், அவ்வப்போது பாயாசம், கேசரி போன்ற இனிப்புகளுக்கு கடைசியில் போடுவதற்கு உபயோகமாக இருக்கும்.
வறுத்த ஏலக்காய் என் பேச்சுக்கு மதிப்பு தந்து க. பருப்புடன் சேர்ந்து அமர்ந்து கொள்கிறது.
தனித்தனியே வறுக்கப்பட்டு பொடியாகிட தயார் நிலையில் இருக்கும் சாமான்கள்.

முதலில் மிக்ஸியில் கடலைப்பருப்புடன் ஏலக்காய் சேர்த்ததை போட்டு பொடித்துக் கொள்ளுங்கள்.அதனுடன் அடுத்த கட்டமாக பாசிப்பருப்பு உடன் சேர்த்துப் பொடிக்கவும்.
அதன் பின் ரவையை சேர்க்கவும்.
அதனுடன் அவலும், நானும் ரெடி என்றபடி சேர்ந்து கொண்டது. 
ஐந்தாவதாக  பொட்டுக் கடலையையும் அந்த கலவையுடன் சேர்த்து பொடித்துக கொள்ளவும். நான் அவல், ரவைக்கு முன்னதாகவே மூன்றாவதாகவே பொ.க போட்டு விட்டதில் எனக்கு புகைப்பட சான்ஸ் கொடுக்கவில்லையே என வருத்தப்பட்டது. அதனால் பிரதியோகமாக அதைப்பற்றி எடுத்து எழுதுகிறேன்.
நான் எல்லாவறறையும் கலந்து பொடித்தவுடன், மிக்ஸியை கொஞ்ச நேரம் ஆற அமர செய்த பின் பொடியை இரண்டு பாகமாக பிரித்து ஒவ்வொன்றையும் கொஞ்சம் நேரம் நன்றாக பொடித்து எடுத்தேன். (ஒரளவு எல்லாமும் சேர்ந்து நைசாக வருமென்பதால்)
எல்லாம் கலந்து "அடுத்தது என்ன?" என விசாரிக்கும் மாவாகிய பஞ்ச ரத்தினங்கள்.கடைசியாக ஒரு ஸ்பூன் நெய்யில் முந்திரியை வறுத்துப் போட்டு அதையும் சேர்த்து மொத்தமாக அரைத்து விடலாம். நான் வறுக்க மறந்து அப்படியே போட்டு விட்டேன். விருப்பமுள்ளவர்கள் (அதிர்ஷ்டம், அதன் எதிர்பதம் இவைகளின் மீது நம்பிக்கையில்லாதவர்கள்)  உடைத்து வறுத்து உருண்டைகளுடன் சேர்த்துக் கொள்ளலாம்.பிறகு கொஞ்சம் மிக்ஸி "நான் சூடு ஆறி விட்டேன்" என்றதும், ஜீனியையும் அவ்விதம் பொடித்து, ஏற்கனவே மாவாக்கி இருக்கும் கலவையுடன் கலந்து கொள்ளவும்.கொஞ்சம் உலர்ந்த திராட்சையை கடாயில்  ஒரு ஸ்பூன் நெய்யில் பொரித்தெடுத்து. அதனுடன் ஜீனி கலந்த மாவையும் பாதியளவு எடுத்துக் கொண்டு, ஒரு நாலைந்து( இல்லை அதற்கு சற்று மேலாக கொஞ்சம்) பெரிய ஸ்பூனில் நெய்யை விட்டு சூடாக்கியதும்,  கலந்த மாவில் விட்டு சிறு உருண்டைகளாக பிடித்தால், பஞ்ச வர்ண உருண்டை ரெடி.
சூடு ஆறிவிட்டால் உருண்டைபிடிக்க வராது என்பதினால், கொஞ்ச கொஞ்சமாக இப்படி சேர்த்து பிடித்து வைத்துக் கொள்ளலாம்.


இல்லை.. நெய்யும் முந்திரியும் இணை பிரியா தோழர்கள்தான்.! இந்த தோழமை நமக்கு இணையாத நட்பு என்பவர்கள் ஒரு ஸ்பூன் நெய்யோடு வாசனைக்காக நிறுத்தி "உருண்டை வேண்டாம்... அப்படியே சாப்பிடுவேன்.." என்ற விளம்பர பாணியிலும் சாப்பிடலாம்.


ஒரு மாறுதலுக்காக  இவை அனைத்தும் சத்து நிரம்பிய பொருள்கள் என நினைக்கிறேன். உங்களுக்கும் என் செய்முறைகள் பிடித்துள்ளதா என தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.  பொறுமையாக என் உரைகளை வாசித்த அனைவருக்கும் என் பணிவான நன்றிகள்.

🙏🙏🙏🙏🙏 🙏🙏. நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏

79 கருத்துகள்:

 1. நிறையப் படங்களோடு பெரிய பதிவாக இருக்கு. படிச்சுட்டுச்சொல்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெறும் ஒரு பொருளை (ரவை) போட்டு ரவா லாடு இடுகை போட்டாலே இதுல பாதி வரும். இவங்க 5 விதமான பொருட்கள் போட்டிருக்காங்க. இடுகை இன்னும் ஒரு மடங்கு பெரிதாக இல்லையேன்னு நான் நினைச்சுக்கிட்டிருக்கேன்.

   நீக்கு
  2. அதானே அதிரா சோட் அண்ட் சுவீட்டாக கொத்தவரை வத்தல் போட்டால் எல்லோரும் குட்டி எனச் சொல்லீனம்:))

   நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

   சரியாக புரிந்து கொண்டீர்கள். நன்றி.
   5 பொருளையும் தனித்தனியாக படமெடுக்கவில்லை. அதிசயமாய் சுருக்கம் கருதி ஐந்தையும் மொத்தமாக சேர்த்து எடுத்து விட்டேன். இல்லாவிட்டால்,பதிவின் நீளம் உலக புகழ் பெற்றிருக்கும்:). இன்னமும் ஜீனியை தனியே அரைத்து அதை காண்பிக்கவில்லை. இப்படி எத்தனையோ குறைகள். இவ்விதமான சமையல் பதிவுகளில்,நான் ஒரு கத்துக்குட்டிதான். உங்கள் அனைவரின் முறைகளைப் பார்த்து இனிதான் தேற வேண்டும். பதிவுக்கு வந்து தந்த கருத்துரைகளுக்கு நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  4. அதிரா சகோதரி

   தங்கள் செய்முறையான கொத்தவரங்காய் வற்றல் பதிவு தெளிவாக சூப்பராக இருந்தது. இம்முறைப்படி நானும் செய்து பார்க்க ஆவலை தூண்டியது. நன்றி.

   நீக்கு
 2. பஞ்ச வர்ண மா லாடு...

  ஆகா...

  உண்மையிலேயே
  மா - லாடு தான்!..

  அருமை.. அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் கண்ணுக்கு சின்ன சின்ன உருண்டைகளாகத் தெரிவது உங்கள் கண்ணுக்கு மா-பெரிய லாடாகத் தெரிகிறதா? இது என்ன அதிசயம் துரை செல்வராஜு சார்?

   நீக்கு
  2. மா - லாடு...
   சிறப்பான லாடு என்ற அர்த்தத்தில் சொன்னேன்...

   அஃதில்லை எனில்
   மா லாடு விஷயத்துக்குக்காக
   மை லாட் அளவுக்கெல்லாம் போகணுமே!..

   நீக்கு
  3. ஆழ்வாரே லட்டுவம் என்று கண்ணனுக்கு ஊட்டுகின்றார்...

   மா லாடு மா - லாடு பெருமை ஆனதே..
   கமலையின் கைவண்ணம் அருமையானதே..

   நீக்கு
  4. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

   இந்த பஞ்சவர்ண மா லாடு பதிவுக்கு தங்கள் வருகையும், வர்ணனையும் மகிழ்ச்சி தந்தது. கண்ணனுக்கு லட்டு ஊட்டும் ஆழ்வார்களுக்கு அடுத்ததாக இந்த லாடும் இடம் பெற்றதே மிகவும் பெருமைக்குரிய விஷயம். தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 3. கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை போட்டு உருண்டை பிடிச்சிருக்கேன். ரவை தனியாகப் போட்டுப் பிடிச்சிருக்கேன். அவல் தனியாக வறுத்துப் பொடித்து உருண்டை பிடிச்சிருக்கேன். ஆனால் எல்லாம் கலந்து போட்டுப் பிடிச்சது இல்லை. அதோடு சர்க்கரையும் எல்லாச் சாமான்களும் சேர்ந்து ஐந்து கிண்ணம் வரும்போது நான் 3 கிண்ணமாவது சர்க்கரை சேர்ப்பேன். இரண்டையும் கலந்ததும் முந்திரிப்பருப்பு, திராக்ஷை வறுத்துப் போட்டுக் கலந்ததும் நெய்யைச் சூடாகப் பொங்கப் பொங்கக் காய்ச்சி எல்லா மாவிலும் சூடாகவே ஊற்றிக் கலந்தது கொண்டு வைத்து விடலாம். நன்கு ஆறியதும் உருண்டை பிடிக்கலாம். உருண்டை கெட்டியாக உடையாமல் பல நாட்கள் இருக்கும். பிடிக்கவும் சுலபமாக இருக்கும். ஒரு முறை இப்படிச் செய்து பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாகக் கலக்க வேண்டாம். உருண்டை உருட்டத் தேவைப்படும் நெய்யை முழுதும் நன்கு ஆவி வரும்படி சூடு பண்ணிக் கொண்டு எல்லா மாவிலும் நன்கு படும்படி கலக்கணும். பின்னர் ஆற வைச்சு உருண்டை பிடிக்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் செய்முறை அற்புதமாக உள்ளது. மீன்குஞ்சுக்கு நீந்த கற்றுத் தர வேண்டுமா? அது போல் சமையலில் கலக்குபவர் நீங்கள். உங்களுக்கு நான் சொல்ல வேண்டுமா? ஹா. ஹா. ஹா. தங்கள் முறை கண்டு மனம் மகிழ்ந்தேன்.

   நானும் வெறும் மாலாடு பண்ணும் போது அப்படித்தான் மொத்தமாக நெய் காய்ச்சி உருண்டை பண்ணி விடுவேன். இது முதலில் பாதி மாவில், அவசரத்துக்கு செய்து விட்டு, இரண்டொரு நாள் கழித்து மீதியைச் செய்தேன். இரண்டாவதாக நெய் குறைய விரும்புவோர்களுக்காக அவ்வாறு கூறினேன். இப்போதுதான் கொழுப்பு சக்தியை குறைப்பதற்காக நிறைய அறிவுரைகள் நம் இளைய தலைமுறைகளிடமிருந்தே வந்தபடி இருக்கின்றனவே..! அதற்குத்தான் சூடு இருக்கும் போதே சுலபமாக உடையாமல் பிடிப்பதற்காக அந்த வழி முறையைச் சொன்னேன்.மற்றபடி நெய் தேவையான அளவு விட்டால், உருண்டை பிடிக்க அழகாக சுலபமாக வரும். இறுக்கமாக கைபட்டாலும் உடையாமலும் இருக்கும். தங்கள் அறிவுரைகளுக்கும் மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 4. என்னோட செய்முறையை முதலிலேயே சொல்லிட்டேன். உங்கள் செய்முறை தான் எல்லோரும் பண்ணுவது. அதிலும் உருண்டைகள் நன்றாகவே இருக்கும். உங்களுடையதும் நன்றாக இருக்கின்றன. உங்கள் செய்முறையில் தான் என் அம்மா பண்ணுவார். குமுட்டி அடுப்பில் ஓர் சின்னச் சட்டியில் நெய்யை ஊற்றிக் காய வைத்துக் கொண்டு ஒரு கரண்டியைப் போட்டு மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக்கொண்டு அதில் நெய்யை ஊற்றிக் கலந்து உருண்டை பிடித்து வைப்பார். இது நானாகக் கண்டு பிடித்தேன். சரியா வரதாலே இப்படித் தான் பண்ணிட்டு இருக்கேன். உருண்டை நன்றாக இருக்கிறது. இந்த வருஷம் தீபாவளிக்கு உருண்டைகளே பிடிக்கலை. ஒரு முறை பண்ணிப் பார்க்கணும். அது சரி, ரவை மிக்சியில் நன்றாய் அரை படுகிறதா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி. இந்த வகை மாலாடு நன்றாக உள்ளதென்று கூறியமைக்கு நன்றி. நானும் தீபாவளிக்கு இனிப்பு பட்சணமாக மைசூர்பாகு, இல்லை லட்டுவுடன், உக்காரை, இந்த லாடு உருண்டைகள் என பண்ணுவேன். சமயத்தில் அல்வா இடம் பெறும். ஒவ்வொரு முறையும், இதை மாதிரி எல்லாம் சேர்த்து பண்ணாவிடினும், வெறும் உடைச்ச கடலை (பொட்டுக்கடலை) போட்டு வெறும் மாலாடு கண்டிப்பாக பண்ணுவேன். அது என் பெரிய பையருக்கு மிகவும் பிடிக்கும். அவருக்காக அவர் பிறந்த நாளிலும் இது இடம் பெறும். ரவை கொஞ்சம் (சன்ன ரவைதான்) மிக்ஸியில் கூட இரண்டு முறை திருக்கும் போது மாவாக்கி விடுகிறது. பொதுவாக இது எல்லோர் வீட்டிலும் இடம் பெறுவதுதானே ..! கருத்துக்கு நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 5. இப்போ நாங்க ஒரு மணி நேரம் பின்னாடி போயிருக்கோம். நேற்று இரவு பனிரண்டு மணியில் இருந்து. ஆகவே உங்கள் காலை ஆறு மணி எனில் எங்கள் மாலை ஆறரை மணி. இன்னிக்கு நேரம் வாய்ச்சதால் வந்தேன். நாளைக்கெல்லாம் வர முடியாது. எங்க நேரம் மாலை ஏழரைக்குத் தான் வர முடியும்.

  பதிலளிநீக்கு
 6. பஞ்ச வர்ண மாலாடு அருமையா இருக்கு. நெய் வாசனையோடு நன்றாக இருக்கு.

  1க்கு நாலு என்ற கணக்கில் ஜீனியா (நீங்கள் ஒன்றுக்கு ஐந்து என்ற கணக்கிலும் ஜீனி போடலாம் என்று சொல்கிறீர்கள்). ரொம்ப அதிகமில்லையா? நெய் அளவு சொல்லலை. உருண்டை பிடிக்கும்படியான அளவு என்று புரிந்துகொள்கிறேன்.

  ஐந்து விதமான மாலாடு பண்ண சோம்பல் பட்டுக்கொண்டு, எல்லாத்தையும் சேர்த்து பஞ்ச வர்ண லாடாக பண்ணிவிட்டீர்களோ என்ற சந்தேகம். அப்படீல்லாம் இருக்காது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.

   பொதுவாக எல்லா ஸ்வீட்ஸ்க்குமே 1 க்கு 2 என்ற கணக்கில்தான் இனிப்பு சேர்ப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். இனிப்பு தூக்கலாக வேணுங்கற பட்சத்தில் கூட அரை அளவு எடுத்துக் கொள்வார்கள்.அது அவரவர் விருப்பம். நெய்யும் அது மாதிரிதான். தேவையாக எடுத்துக் கொண்டால், லாடு உதிராமல் நல்ல இறுக்கமாக அமையும். கொஞ்சம் நெய் அளவு குறைத்த்க் கொண்டால் சூடாக உருண்டை பண்ணுவது மட்டும் நிலைத்து நிற்கும். தாங்கள் இனிப்புகள் செய்வதில் மன்னர. தங்களுக்கு தெரியாததா?

   /ஐந்து விதமான மாலாடு பண்ண சோம்பல் பட்டுக்கொண்டு, எல்லாத்தையும் சேர்த்து பஞ்ச வர்ண லாடாக பண்ணிவிட்டீர்களோ என்ற சந்தேகம்./

   ஹா. ஹா. ஹா. இதையே ஒவ்வொன்றையும் தனித்தனியாகவும் பண்ணுவோம்.இது ஒரு வித்தியாசமாக அமைந்தது. தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  2. //தாங்கள் இனிப்புகள் செய்வதில் மன்னர. தங்களுக்கு தெரியாததா?// - என் மனைவி இதைப் படித்தால் சத்தம்போட்டுச் சிரித்துவிடுவார். நான் டமாரமடிப்பதில் மன்னனே தவிர, நன்றாகச் செய்வதில் அல்ல. ஹா ஹா.

   நீக்கு
 7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன் !

  பதிலளிநீக்கு
 8. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான வணக்கங்களுடன் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்திக்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 9. எனக்கு பவுடராகச் செய்யும் இந்த மாலாடுகள் பிடிப்பதில்லை. எனக்கு மிகவும் பிடித்த ஒரே மாலாடு பயத்தமா லாடுதான். முன்பெல்லாம் ரொம்ப சாப்பிடுவேன். பிறகு (2010க்குப் பிறகு) அவ்வளவுக்கவ்வளவு ஜீனி, நெய் என்ற விவரம் புரிந்ததும் அதன் மீது ஆசை குறைந்துவிட்டது. இன்னொன்று லாடுகள் சாப்பிட்டபிறகு பல் துலக்கலைனா, பற்களைக் கெடுத்துவிடும் இந்த மாவுப்பொருட்கள் (இதுவும் கம்மர்கட் சாப்பிட்டு பல்லைக் கெடுத்துக்கொண்டபிறகு வந்த அனுபவ அறிவு).

  ரவா லட்டு பண்ணிச் சாப்பிடுவதை விட்டுவிட்டு, அதைப் பொடியாக்கி ஜீனி, நெய்யுடன் கலந்து ரவா லாடாக சாப்பிடுவதில் என்ன ஆனந்தம் இருக்கு என்று கேட்டால், எத்தனைபேர்கள் என்னிடம் சண்டைக்கு வரப்போகிறார்களோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அளவான சர்க்கரை போட்டு திகட்டாமல் செய்தால் மாலாடு எனக்குப் பிடிக்கும்.

   நீக்கு
  2. சர்க்கரையா!?...

   ஜீனியை சர்க்கரை என்று சொல்வதுதானே சென்னை வாசிகளின் வழக்கம்!...

   ஆ.வி..யின் அடுப்பங்கரை பக்கங்களில் கூட இப்படித்தான் எழுதுவார்கள்...

   அப்படியானால் நம்மிடையே புழங்கிய பழங்கால சர்க்கரைக்கு?..

   அதுதான் இளக்காரமாக
   நாட்டுச் சர்க்கரை என்று வைத்திருக்கிறோமே!....

   வெல்லத்திலிருந்து நேரடியாகப் பெறும் சர்க்கரையில் அயச் சத்து மிகுந்திருக்கிறதாம்...

   வெள்ளைச் சீனியில் என்ன சத்து இருக்கிறது?..

   சொல்லுங்கள் பார்ப்போம்!..

   ( காலையில் வந்த வேலை நல்லபடியாக ஆயிற்று...)

   நீக்கு
  3. துரை செல்வராஜு சார்.... சில சமயங்களில் இதனைப் படிக்கும்போது ஆத்திரம்தான் மிஞ்சுகிறது.

   பாருங்க..சீனியில் ஒரு மங்கல் நிற சீனி உண்டு. அதாவது கெமிக்கலை அள்ளிக்கொட்டாத சீனி.

   சரி..அது வேண்டாம். பேசாமல் இனி வெல்லம் மட்டுமே உபயோகிக்கலாம் என்று நினைத்தால், அநியாயத்துக்கு அதில் கெமிக்கல் கலந்து அனுஷ்காவை தமன்னா நிறத்துக்குக் கொண்டுவர முயல்வதுபோல நிறையச் சேர்த்து நமக்குக் கெடுதலை உண்டாக்குகிறார்கள்.

   இப்போ புது வியாபாரம்..ஆர்கானிக் நாட்டுச் சர்க்கரை என்ற பெயரில் கறுப்பாக தருகிறார்கள்.

   கெமிக்கல் சேர்க்காத தூய மண்டை வெல்லம் எங்கு கிடைக்கும்? உங்களுக்காவது தெரியுமா? (யூ டியூபில் பார்த்தால் எவ்வளவு கெமிக்கலை அள்ளித் தூவி, கரும்பஞ்சாற்றிலிருந்து வெல்லம் தயாரிக்கிறார்கள் என்று தெரியும்)

   நீக்கு
  4. ஹையோ எல்லோரும் குழப்புறீங்க, நாங்க இலங்கையர்கள் மிக தெளிவாக இருக்கிறோம்... சீனி என்றால் அது வெள்ளையோ கறுப்போ சுகரைச் சொல்வோம்.

   சக்கரை எனில் கறுப்பாக பிரவுணாக கட்டியாக தூளாக எல்லாம் கிடைக்கும்.

   வெல்லம் எனில் கொஞ்சம் ஹார்ட்டாக இருக்கும் அதன் அச்சு வடிவம், பாதி வட்டமாக இருக்கும்- அதாவது ஒரு கிண்ணத்தில் அச்சாக்கி அதில் பாகு ஊத்தியதைப்போல.

   மற்றது பனங்கட்டி/ பனை வெல்லம் அது எப்பவும் பனை ஓலையில் பின்னிய குட்டான்களில் கிடைக்கும்.

   நீக்கு
  5. வணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே

   /எனக்கு பவுடராகச் செய்யும் இந்த மாலாடுகள் பிடிப்பதில்லை. எனக்கு மிகவும் பிடித்த ஒரே மாலாடு பயத்தமா லாடுதான்/

   பயத்தமாவு என்னும் போது அதுவும் பவுடர்தானே..! ஒரு வேளை தாங்கள் சொல்வது சற்று கரகரப்பாக இருக்குமோ? இந்த பதிவாகிய லாடும் சற்று கரகரப்பாகத்தான் இருந்தது. ஏனெனில் நான் எப்போதும் சலித்து. சலித்து மீண்டும் மிக்ஸியில் போட்டு பொடிப்பேன். பொட்டுக்கடலை மாலாடேயே அப்படித்தான் வாயில் போட்டால் கரையும்படி மாவாக்குவேன்.
   இம்முறை இதை இரண்டு,மூன்று முறை திருகி பவுடர் ஆக்கி சலிக்காமல் விட்டு விட்டேன்.

   பொதுவாக நிறைய இனிப்பு சாப்பிட்டால் பற்களுக்கு பாதிப்புதான் என்று எச்சரிக்கிறார்கள். அதனால்தான் "இனிப்பும், புளிப்பும் சிறிதுள" என எங்கள் பாட்டி என் சின்ன வயதில் அடிக்கடிச் சொல்லி கேட்டுள்ளேன். ஆனாலும், உடல், மனது, ஆரோக்கியத்தின் அடிப்படையில்தான் பற்கள், உடம்பு, ஏன் தலை முதல் கால் வரை பாதிக்கிறது என நான் நினைக்கிறேன்.

   ரவா லட்டு என்றால் வேக வைத்து கேசரி மாதிரி செய்து லட்டாக பிடிப்பதா? புரியவில்லை.. விளக்கமாக சொல்லவும். இல்லையென்றால் ரவா லட்டு விரைவில் எ. பியில் எதிர்பார்க்கிறோம். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  6. வணக்கம் ஸ்ரீராம் சகோதரரே

   தாங்கள் தந்த கருத்தும் உண்மையானதே..! அளவான இனிப்புடன் மாலாடு அமைந்தால்தான் திட்டாமல் நன்றாக இருக்கும். இனிப்பு அதிகமாகும் போது, அதனுடன் சேரும் பொருளின் சுவையும், மணமும் சற்று அதன் தன்மை குறைந்து மங்கி விடும். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  7. /"இனிப்பும், புளிப்பும் சிறிதுள" // - எங்கம்மா எப்போதும் சொல்வது, 'சிரிப்பும் புளிப்பும் சில காலம்'. அதாவது வயதாகும்போது சிரிப்பது குறைந்துவிடும், புளிப்பு எடுத்துக்கொள்வதும் குறைந்துவிடும் என்று.

   பயத்தம லாடு, அதன் வாசனைக்காகப் பிடிக்கும். அதற்கும் மேலே எனக்குப் பிடித்தது பொரிவிளங்கா உருண்டை. ஹா ஹா. நீங்க யாரும் செய்முறை எழுதாட்டா, நானே விரைவில் செய்து எபிக்கு அனுப்புவேன் (ஆனால் வெளிவர லேட் ஆகும் ஹாஹா)

   நீக்கு
  8. //ரவா லட்டு என்றால் வேக வைத்து கேசரி மாதிரி செய்து லட்டாக பிடிப்பதா?// - ரவை, பால், ஜீனி, நெய்-உண்டா?, உலர் திராட்சை, முந்திரி போட்டு உருண்டையா பிடிப்பாங்க. அதுல ரவை, ரவையாகவே இருக்கும். பொடியா இருக்காது. இதுவும் எனக்குப் பிடிக்கும். நான் இதுவரை செய்துபார்த்ததில்லை. கடைகள்ல வாங்கிச் சாப்பிட்டிருக்கேன். (அனேக தடவை...பஹ்ரைன் உட்பட)

   நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

   ஆமாம்.. நான் மூன்றாவதாக அந்த வார்த்தையை விட்டு விட்டேன். "இனிப்பும், புளிப்பும், சிரிப்பும் சிறிதுள .." இப்படித்தான் எங்கள் பாட்டி சொல்லி வளர்த்தார்கள். வயது ஏற ஏற அளவோடு சிரிக்க (அதாவது வாய் விட்டு சத்தமாக சிரிக்காமல்) கற்றுக் கொள்ள வேண்டுமென்று கூறுவார்கள். அறிவுரைகளை கேட்கும் காலமது...

   பாசிப் பயிறை சுத்தப்படுத்தி கொண்டு தோலோடு வாசம் வரும் வரை வறுத்து பொடி செய்து கொண்டு (அந்த காலத்தில் கல் திருகையில் திரிக்கும் போதே ஒரு நல்ல வாசனை வரும்.) ஏலக்காய் பொடியும் சேர்த்த பின் வெல்லப்பாகு( உருண்டைப்பாகு) வைத்து அந்தப் பொடியுடன் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சூடு பொறுக்க அருகில் நெய், அல்லது அசிரி மாவை தொட்டுக் கொண்டு உருண்டை பிடிக்க வேண்டும். (அதுவும் அப்படித்தான்.. மொத்த மாவுடனும் வெல்லப்பாகை சேர்த்து விட்டால் போச்சு..! ஒரு சில உருண்டை கூட தேறாது... ) எனவே கொஞ்சம் கொஞ்சமாக மாவுடன் பாகு சேர்த்து பிடிக்க வேண்டும். நல்ல சுவையுடன் வாசகமாக இருக்கும்.

   அதன் பின் அதை உடைக்க ஏதாவது உறுதியான ஆயுதங்கள் வேண்டும்.நம் பற்கள் போறாது..நாங்கள் கதவிடுக்கில் வைத்து உடைப்போம். அந்த கால கதவுகளும் உறுதியாக இருந்தன. அந்த காலத்தில் வளைகாப்புக்கு இந்த இனிப்பு கண்டிப்பாக உண்டு. இந்த இனிப்பு பிறந்து வளர்ந்து வந்திருக்கிற பொருளை உணர முடியாததால் இதற்கு "பொருள் விளங்கா உருண்டை" எனவும் பெயர் வந்தது. ஹா. ஹா. ஹா.

   ஒரு வேளை தங்களது பயித்தம் மாவு உருண்டை வேறு ரகமோ.. என்னவோ..! ரவா உருண்டை பற்றி அறிந்து கொண்டேன். இதுவரை நிறைய முறைகள் சாப்பிட்டதாகத்தான் நினைவு. நானும் செய்து பார்க்கிறேன்.
   தகவல்களுக்கு நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  10. எங்கள் சிநேகிதர் ஒருவர் வீட்டில் ரவை லாடு/லட்டு என்பதை ரவையைச் சிவக்க வறுத்துக்கொண்டு மிக்சியில் பொடித்துக் கொண்டு அதில் நெய்யில் வறுத்த முந்திரி, திராக்ஷை சேர்த்து வைப்பார்கள். பின்னர் ஒன்றுக்கு இரண்டு சர்க்கரையைப் பாகு வைத்து உருட்டும் பதம் வரும்போது ரவையில் கொட்டிக் கிளறி உருண்டை பிடிப்பார்கள். சில சமயம் ரவையோடு தேங்காய்த் துருவலும் சேர்ப்பார்கள். ஒருவேளை நெல்லைத் தமிழர் இதைத் தான் சொல்கிறாரோனு நினைக்கிறேன்.

   நீக்கு
  11. பொருள் விளங்கா உருண்டைக்குப் பாசிப்பருப்பு அல்லது பயறுடன் எங்க வீட்டில் கொஞ்சம் புழுங்கல் அரிசி, முழு கோதுமை இரண்டையும் வறுத்துச் சேர்ப்பார்கள். வெல்லப்பாகு கெட்டியாக வைத்து அதிலேயே நறுக்கிய தேங்காய்க்கீற்றுகள், ஏலக்காய், சுக்குச் சேர்த்துப் பாகை மாவில் விட்டு உருண்டை உடனே பிடித்துவிடுவார்கள். பிடிக்கும்போது இளகினாற்போல் இருக்கும். பின்னர் உடைக்க முடியாதபடி ஆயிடும்..

   நீக்கு
  12. கம்பெனி சீக்கிரட்டை எல்லாம் வெளியிட்டு, எங்கள் பிளாக் திங்கப் பதிவுக்காக நான் செய்ய நினைத்திருந்த பொருள் விளங்கா உருண்டை செய்முறையைச் சொன்ன கமலா ஹரிஹரன் மற்றும் கீதா சாம்மசிவம் மேடத்துக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

   நாங்க திருநெவேலி ஆளுங்க. இதுக்கெல்லாம் அசந்துட மாட்டோம். பாசிப்பயறு வறுக்கும்போது ஒரு ஸ்பூன் தோசைப் பச்சரிசியையும் சேர்த்து வறுக்கணும், இதுதான் எங்கள் செய்முறைனு சொல்லிடுவேன். கபர்தார்.

   நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

   /கம்பெனி சீக்கிரட்டை எல்லாம் வெளியிட்டு, எங்கள் பிளாக் திங்கப் பதிவுக்காக நான் செய்ய நினைத்திருந்த பொருள் விளங்கா உருண்டை செய்முறையைச் சொன்ன கமலா ஹரிஹரன் மற்றும் கீதா சாம்மசிவம் மேடத்துக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்./

   ஹா. ஹா. ஹா. உண்மையிலேயே வருந்துகிறேன். நாங்கள் எங்க பழைய பாணியை சொன்னோம். நீங்கள் புதிதாக உங்கள் பாணிப்படி செய்து அசத்தி விடுங்கள். அதுவும் உடைப்பதற்கு கதவை தேடாத, கல்லுரலை தேடாத பாணியாக, விண்டால் டக்கென்று கையிலேயே உடைபடும் விதமாக பயத்தம்மா லாடு செய்து விடுங்கள். நாங்களும் கற்றுக் கொள்கிறோம். அவ்வளவுதானே..!

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 10. பஞ்ச வர்ண மாலாடு நன்றாக இருக்கிறது சொல்லியவிதம் நன்றாக இருக்கிறது. படி படியாக படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
  பெயர் விளக்கம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி. பஞ்ச வர்ண மாலாடு நன்றாக உள்ளதென்று சொன்னமைக்கு நன்றிகள். இந்த இனிப்பின் பெயர் விளக்கமும் தங்களுக்கு பிடித்துள்ளதா? தங்கள் அன்பான கருத்துக்களைக் கண்டு மகிழ்வடைந்தேன். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 11. வணக்கம் சகோதரரே

  ஆ..இன்று இந்த மாலாடு பதிவா? படித்து செய்து பார்க்கலாம் என எண்ணுபவர்கள் அனைவருக்கும் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்க இன்னமும் சிறப்பாக பிரார்த்தித்துக் கொள்கிறேன்..ஹா. ஹா. ஹா. (சும்மா வேடிக்கையாககத்தான் கூறுகிறேன்..பயந்து விட வேண்டாம்.)

  இன்று என் ரெசிபியை பதிவிட்டமைக்கு சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கும் எ. பியின் ஆசிரியர்கள் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

  இதுவரை அனைவரும் வந்து தந்த கருத்துக்களுக்கும், இனி வந்து தரப் போகும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த மகிழ்வுடன் கூடிய நன்றிகள். பதிலிலளிக்க கொஞ்ச நேரத்தில் சிறிது கடமைகளை ஆற்றி விட்டு வருகிறேன். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 12. பெயர் விளக்கம் அருமை
  சொல்லிய விதம் சுவாரஸ்யமாக இருந்தது வாழ்த்துகள் சகோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரரே

   பதிவுக்கு தங்கள் வருகையும், கருத்துக்களும் கண்டு மகிழ்வடைந்தேன். தங்களுக்கும் இந்த இனிப்பின் பெயர் விளக்கம் பிடித்துள்ளது சந்தோஷமளிக்கிறது. சொல்லிய விதம் சுவாரஸ்யமாக உள்ளதென்று பாராட்டியமைக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு

 13. என் மனைவி இதை சத்து உருண்டை என்ற பெயரில் பண்ணி மகளுக்கு கொடுப்பால் சில சமயங்களில் இதை வருத்து அரைத்து வைத்து கொண்டு சிறிது பாலும் நெய்யும் சேர்த்து உருண்டைகளாக பிடித்து காலை பிரேக்பாஸ்ட்டுக்கு சாப்பிடுவாள் எனக்கு இது அவ்வளவாக பிடிக்காது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகையும், பதிவை கண்டு கருத்துக்களும் தந்திருப்பது என்னை பெருமையடைய செய்கிறது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

   இதில் தாங்கள் சொல்வது போல் பால் விட்டு உருண்டைகள் செய்யலாம். ஆனால் அதை ஒரிரு தினங்களில் காலி செய்து விட வேண்டும். நெய் மட்டும் சேர்த்து செய்து பாருங்கள். அதன் சுவை ஒரு வேளை தங்களுக்கு பிடித்தமாகலாம். இதனுடன், கம்பு, ராகி சோளம் போன்றவற்றையும் வறுத்து சேர்த்து செய்தால் அதுவும் சுவையான சத்துருண்டைகள்தான். அருமையான கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 14. பஞ்ச வர்ண மாலாடு அருமை...

  செய்து பார்த்திடுவோம்... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   பஞ்ச வர்ண மாலாடு அருமை என்ற கருத்து என்னை மகிழ்வடையச் செய்கிறது. கண்டிப்பாக ஒரு நாள் செய்து பாருங்கள். சுவையாக இருந்தது. கருத்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 15. பஞ்ச வர்ண மாலாட்டு - குறிப்பு நன்று. சுவையும் நன்றாகவே இருக்கும் எனத் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த மகிழ்வுடன் கூடிய நன்றிகள்.

   இந்த இனிப்பான பதிவு நன்றாக உள்ளதென சொன்னமைக்கு மிக்க மகிழ்ச்சி. ஆம்..! சுவையும் நன்றாகவே இருக்கும். செய்து பாருங்கள். பதிவை குறித்த கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் சகோ.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 16. ஆஹா...நெய் வாசம் இழுத்து விட்டது. இந்த 5 தும் சேர்த்து செய்ததில்லை. செய்து பார்த்து சுவைக்க ஆவல் அதிகரிக்கிறது. தங்கள் பாணியில் சுவை இன்னும் கூடி விட்டது சகோ. நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரி

   ஆகா...! நெய் வாசம் தங்களை வந்தடைந்து விட்டதா? தாங்கள் பதிவுக்கு வந்து தந்த கருத்துக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் சகோதரி.

   இந்த ஐந்து சேர்த்து ஒரு தடவை செய்து பாருங்கள். சுவையாகத்தான் உள்ளது. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 17. இதென்ன இது பஞ்சவர்ணக் கிளியை இறக்கிட்டா போல கமலாக்கா எங்கள் புளொக்கில் என ஓடி வந்தா, லட்டூஊஊஊ செய்து போட்டிருக்கிறா:).. லட்டு.

  அஞ்சு மா-லட்டு என்பதை லாடு-லபக்குதாஸ் ரேஞ்சுக்குப்போய்ப் பேர் குடுத்திருக்கிறீங்க:) ஆனாலும் நல்ல பெயர்... ஹா ஹா ஹா.

  அழகாக வந்திருக்குது, சுவை சொல்லத்தேவை இல்லை என நினைக்கிறேன், நன்றாகவே இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அதிரா சகோதரி

   தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துக்களும் கண்டு மன மகிழ்ச்சியடைந்தேன்.

   /இது பஞ்சவர்ணக் கிளியை இறக்கிட்டா போல கமலாக்கா எங்கள் புளொக்கில் என ஓடி வந்தா, லட்டூஊஊஊ செய்து போட்டிருக்கிறா:).. லட்டு./

   ஹா. ஹா. ஹா. கிளியை இங்கு இறக்கிட்டால் அனைவருக்கும் கிலியாகி விடும் எனபதால்தான் அதனிடமிருக்கும் பஞ்ச வர்ணம் என்ற பெயரை மட்டும் எடுத்து இனிப்பான லாடாக தந்துள்ளேன். இந்தப் பெயர் நன்றாக இருப்பதால்தான் நீங்களும் கிளி போல் பறந்து வந்து அருமையான கருத்துக்களை தந்துள்ளீர்கள்:)..
   இனிப்பு நன்றாகவே இருக்கும் என்ற தங்களது நம்பிக்கைக்கு என்ன கைமாறு செய்வது என யோசிக்கிறேன்

   /அழகாக வந்திருக்குது, சுவை சொல்லத்தேவை இல்லை/

   பொதுவாகவே அழகுக்குத்தானே அழகின் அருமை தெரியும். (ஐயோ.. அங்கு குளிர் வேறு..! மேலும் யாருக்கும் தெரியாமல் எழுதியிருந்ததும், யாராவது இதை பார்த்து பின் ஊ(ட்ட) கங்களிட வந்து விட போகிறார்கள். ஹா. ஹா. ஹா. அத்தனை பாராட்டிற்கும் மகிழ்வுடன் நன்றிகளும்..

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 18. இலங்கையில் திரிபோசா.. எனும் சிங்களப்பெயரில் கிடைக்கும் பக்கட்டுக்களில் இப்படி மா. நானும் இங்கு வாங்கி வைத்திருக்கிறேன், தேவைப்படும்போது தேங்காய்ப்பூவும் சீனியும் சேர்த்துக் குழைச்சுச் சாப்பிடுவோம்.

  உங்களோடதும் கொஞ்ச நாட்கள் வைத்திருந்து சாப்பிட முடியும் என நினைக்கிறேன். உருண்டைகள் அழகாக பிடிச்சிருக்கிறீங்க சூரியன் உலகம் புதன் சுக்கிரன் சந்திரன் எல்லாம்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //சூரியன் உலகம் புதன் சுக்கிரன் சந்திரன் எல்லாம்://

   இந்தப் பின்னூட்டத்துக்கு நான் எதுவும் எழுதப்போவதில்லை. நேற்றுத்தான் அதிரசம் படங்கள் பார்த்தேன். எனக்கு எதற்கு வம்பு. கமலா ஹரிஹரன் மேடமாச்சு ஸ்கட்லேண்ட் மேடமாச்சு.

   நீக்கு
  2. ஹா ஹா ஹா நெ தமிழன் மீ மேடம் இல்லையாக்கும்... நான் ராசியைச் சொன்னேன்:)

   உங்களுக்காகவே ஒரு இனிப்பு ஐட்டம் செய்ய என தமிழ்க்கடையில் வாங்கி வந்தேன், செய்ததும் போடுகிறேன் ஆனா அதை வீட்டில் விரும்புவார்களோ தெரியாது:) இனிப்பெல்லோ:)..

   நீக்கு
  3. வணக்கம் அதிரா

   /இலங்கையில் திரிபோசா.. எனும் சிங்களப்பெயரில் கிடைக்கும் பக்கட்டுக்களில் இப்படி மா. நானும் இங்கு வாங்கி வைத்திருக்கிறேன், தேவைப்படும்போது தேங்காய்ப்பூவும் சீனியும் சேர்த்துக் குழைச்சுச் சாப்பிடுவோம்./

   தாங்கள் தந்த தகவல்களுக்கு நன்றி. கண்டிப்பாக இந்த முறையில் செய்தால் கொஞ்ச நாட்கள் வைத்திருந்து சாப்பிடலாம்.

   /உருண்டைகள் அழகாக பிடிச்சிருக்கிறீங்க சூரியன் உலகம் புதன் சுக்கிரன் சந்திரன் எல்லாம்:))/

   ஹா. ஹா. ஹா. ஐந்துவகை என்பதால் 5 கோள்களையும் இணைத்து இதற்கு பெயரிட்டு இருக்கிறீர்களோ? இல்லை செய்து காண்பித்த (உருண்டை படங்கள்) கணக்கை குறிக்கிறதா? புரியவில்லை. நான் கொஞ்சம் பழைய ரக டியூப் லைட் என பெருமையுடன் ஒத்துக் கொள்கிறேன். சகோதரர் நெ. தமிழரும் இதற்கு விளக்கம் சொல்லுவார் என்று பார்த்தால் அவரும் "நீங்களாச்சு" என்று வம்பிலிருத்து விலகி விட்டார். மொத்தத்தில் என் டியூப் ப்யூஸே ஆகி விட்டது:)..

   தங்கள் இனிப்புகளையும் விரைவில் செய்து போடுங்கள்.அதுதான் இப்போது நமக்குள் "ராசியாகி" விட்டதே..! அடுத்தடுத்து இனிப்புகளை செய்யலாம். சகோ நெல்லை தமிழருக்கும் இனிப்பென்றால் மிகவும் பிடிக்கும். ஹா. ஹா. ஹா. நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 19. என்ன இக்கிழமை நெல்லைத்தமிழன் வாரமோ?:) ஒரே இனிப்பாக இருக்கு எங்கும்:)).

  அதுசரி உடைத்தகடலையையை பொட்டுக்கடலை என ஆர் சொன்னதாம் கர்ர்ர்:)).. உடைத்தகடலைதானே கடலைப்பருப்பு இல்லையோ?:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முழு கொண்டைக் கடலையை பதம் கட்டிவைத்து. உடைத்தால் கடலைப் பருப்பு தான்!...

   பொரித்து உடைத்தால் தான் பொட்டுக் கடலை....

   நீக்கு
  2. அதே அதே துரை அண்ணன் ... பாருங்கோ சமையல் வித்தகர் நெ தமிழன் கண்ணாடி போடாமல் போஸ்ட் படிச்சிருக்கிறார்கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)
   அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமெல்லோ:)...

   நீக்கு
  3. வணக்கம் அதிரா சகோதரி

   /அதுசரி உடைத்தகடலையையை பொட்டுக்கடலை என ஆர் சொன்னதாம் கர்ர்ர்:)).. உடைத்தகடலைதானே கடலைப்பருப்பு இல்லையோ?:)./

   இந்த கடலையை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக சொல்வார்கள். சென்னையில் உடைச்ச கடலை என்றும், நான் பிறந்த தி. லி யில் பொட்டுக்கடலை என்று சொல்வார்கள். நான் படத்தில் காட்டியிருப்பது இரண்டும்தான்..!

   பொதுவாக தேங்காய் சட்னிக்கு இந்த பொட்டுக்கடலை யை பயன்படுத்துவோம். இதை வைத்துதான் தனியாக மாலாடு செய்வோம். ஹோட்டல்களில் சட்னிக்கு இந்த பொட்டுக்கடலைக்குப் பதிலாக மாட்டுத் தீவனமாகிய புண்ணாக்கு பயன்படுத்துவதாக கேள்வி..

   கடலைப் பருப்பை சில பேர் அது பாலீஷ் செய்து வருவதால் பயன்படுத்தவே மாட்டோம் என்கிறார்கள். ஆனால் அதே சமயம் கொண்டைக்கடலையை வைத்து
   விதவிதமாக சமைத்து சாப்பிடுவர். பொதுவாக இந்த எல்லா கடலை வகைகளும், வாயு தொந்தரவு உள்ளவர்களை குறி வைக்கும். ஹா.ஹா.ஹா. ஆனாலும் சில சமையலுக்கு இந்த கடலைப் பருப்பின்றி ருசி எடுபடாது என்பது என் கருத்து.
   கருத்துக்கு மிக்க நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  4. ஓட்டல்களில் புண்ணாக்கு எல்லாம் வைத்துச் சட்னி அரைக்கும்படி புண்ணாக்கின் விலை ஒன்றும் குறைவில்லை. அப்படியே அரைத்திருந்தாலும் ருசியில் தெரிந்துஅ விடும். அப்புறம் ஓட்டலுக்கு யாரும் வர மாட்டார்கள். அங்கே பட்டாணிப்பருப்பு என்னும் சிறு கடலைப்பருப்புப் போன்றதைப் பொரிகடலை மாதிரி வறுத்து விற்பார்கள். அதைப் பயன்படுத்துவார்கள். விலை குறைவு என்பதால். இந்தப் பட்டாணிப்பருப்பில் தான் நாகர்கோயில், கன்யாகுமரி மாவட்டங்களில் ரச வடைக்குச் செய்யும் வடையில் சேர்ப்பார்கள்.

   நீக்கு
  5. ஆ... ஆமாம் ஆமாம்.. இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. பட்டாணிப்பருப்பென்று ஒன்று உண்டு. அதை சேர்த்து ஆமைவடை பண்ணியிருக்கிறோம். (கடலை பருப்புக்கு பதிலாக.. அதுவும் கரகரவென்று இருக்கும் என்பதற்காக..)

   தாங்கள் புண்ணாக்கு விலை அதிகம் என்றதும், புண்ணாக்கு என்ன லேசுபட்ட பண்டமா, என்கிற மாதிரி கேட்டதும், "அன்பே வா" படம் நினைவுக்கு வருகிறது. ஹா. ஹா. ஹா. ஏதோ முன்பு சொல்வார்கள். அதனால் சொன்னேன். விளையாட்டுகாகவோ.. என்னமோ..! அப்படி அதை தொடர்ந்திருந்தால் கூட நல்லதுதான். . இப்போ எதிலெல்லாம் நல்ல சக்தி உள்ளதென்று ஆராய்ச்சிகள் வந்த வண்ணம் இருக்கிறதே...! கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 20. மிகவும் சத்தான, சுவையான லாடு. செய்முறையை படங்களோடு அழகாக விளக்கியிருக்கிறீர்கள். பஞ்சவர்ண லாடு என்பதற்கு பதிலாக பஞ்சரத்ன லாடு என்று பெயரிட்டிருக்கலாம். மதிப்பு கூடியிருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரி

   தங்களது வருகையும், பதிவை குறித்த கருத்துக்களும் கண்டு மிகவும் மன மகிழ்ச்சி அடைந்தேன்.

   /பஞ்சவர்ண லாடு என்பதற்கு பதிலாக பஞ்சரத்ன லாடு என்று பெயரிட்டிருக்கலாம். மதிப்பு கூடியிருக்கும்/

   உண்மைதான் சகோதரி. நீங்கள் சொல்வதும் நல்ல பெயர்தான். அப்போது அப்படித் தோன்றவில்லை. பதிவுக்கு நல்லதொரு பெயரிட்டிருப்பதற்கும், படங்களோடு செய்முறை அழகாக உள்ளதென பாராட்டியமைக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  2. வணக்கம் பானுமதி சகோதரி

   இப்போதுதான் கவனித்தேன்.. ஒரு இடத்தில் உங்கள் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் பஞ்ச ரத்ன மாவாகிய என்று எழுதியுள்ளேன். ஆக தாங்கள் கொடுத்த தலைப்பு பெயரும் இடம் பெற்று விட்டது.

   தலைப்பில் அவ்விதம் கொடுத்தால், ரத்தினங்கள் உள்ள வீடு இதுவென யாராவது விலாசம் தெரிந்து கொண்டு வீடு புகுந்து வந்து விட்டால் என்ன செய்வது? என்ற யோசனையும் ஒரு காரணம்....! ஹா. ஹா. ஹா.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 21. செய்முறையும் விளக்கமும் நன்று எங்கள் வீட்டில் கடலை மாவில் பேசன் லட்டு என்று செய்வோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரரே

   தங்களது வருகையும், கருத்துக்களும் கண்டு மிகவும் மனம் மகிழ்வடைந்தேன். தங்களைப்போன்ற பதிவர்கள் என்னை பாராட்டியதற்கு நான் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

   உங்கள் வீட்டில் செய்யும் லாடும் மிகவும் சுவையாக இருக்கும். இந்தப் பெயர் கேள்விப்பட்டதில்லை. ஆனால் கடலை மாவை வறுத்து இவ்விதம் செய்தால் சுவையுடன் இருக்கும். கருத்துக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 22. பதில்கள்
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   /சுவைக்கத் தூண்டும் ரெசிபி/

   தங்களைப் போன்றவர்கள் வந்து என் ரெசிபியை பாராட்டியதற்கு மிகவும் மகிழ்வடைகிறேன். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 23. இந்த மாலாடு பதிவுக்கு வந்து கருத்துக்கள் அளித்த அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். எனக்குத்தான் கைப்பேசி மூலமாக பதில்கள் அளிப்பதால் சற்று தாமதம் ஆகிவிட்டன. மன்னிக்கவும்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 24. இதற்கு சங்கமித்திர லாடு என்று பெயர் சூட்டியிருக்கலாம் :) 5 பொருட்கள் சேர்ந்து சங்கமம் ஆனதால் தான் சொல்றேன் :)உடனே இப்போதைக்கு அப்பாவியா மாறினவங்க ஓடி குதிச்சுச்சு விழவேண்டாம் 

  பதிலளிநீக்கு
 25. செய்முறையில் உள்ள பொருட்களில் ரவை தவிர அனைத்தும் சேர்ப்பேன் :) இனிப்பென்றால் பின்னங்கால் பிடரியில் பட ஓடுவேன் :) இதில் பஞ்சவர்ணத்தில் லட்டுவா என்று நிறத்தைத்தேடி அதற்குபதிலா கலர்புல்லான வர்ணனையுடன் உங்கள் பதிவை கண்டேன் .மிகவும் அருமை 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் சகோதரி

   தங்கள் அன்பான வருகையும், பதிவைப் பற்றிய கருத்தும் கண்டு மிகவும் மன மகிழ்ச்சி அடைந்தேன்.

   தாங்களும் இதுபோல் செய்வதறிந்து மிகவும் சந்தோஷம். ஆனால் இனிப்பு க்கு அப்படி ஒரு ஓட்டமா?ஹா ஹா. ஒருசில நேரத்தில் ஒரளவு இனிப்புச்சுவையையும் எடுத்துக் கொள்வதில் தவறில்லையே..!

   தங்களுடைய வருகைக்கும், மனமார்ந்த பாராட்டுக்கும் என் அன்பான நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!