செவ்வாய், 15 டிசம்பர், 2020

கேட்டு வாங்கிப்போடும் கதை : கொலுசு 2/2 - துரை செல்வராஜூ 

கொலுசு 2
துரை செல்வராஜூ 
************* 

நடராஜர் சபா மண்டபத்தில் அதுவரையிலும் கண்டிராத அற்புதத்தைக் கண்டான் கார்த்தி....

நான்கு வரிசைகளாக எட்டு..  ஆக முப்பத்திரண்டு தூண்கள்...

ஆனாலும் பதினாறு கால் மண்டபம் என்று பெயர்..

எதிர் எதிராக துதிக்கையுடன் கூடிய யாளிகள்.. பக்கவாட்டில் பதினாறு கரணங்களைக் காட்டும் நாட்டியத் தாரகைகள்...

உயிர் கொண்டு வந்தாற்போல் விளங்கும் சிற்பங்களைக் காண்பதற்கு அவ்வப்போது சுற்றுலாப் பயணிகளும் ஏராளமாய் வருவர்..

சபா மண்டபத்தின் தரைதளக் கருங்கற்கள் வெண்ணெய் கொண்டு இழைத்தாற்போல் இருக்கும்...


அத்தகைய மண்டபத்தின் நடுவில் நின்றிருந்தாள் - ஸ்வர்ணா...

சிலுங்... சிலு சிலுங்...
சிலுங்... சிலு சிலுங்...

பட்டுப் பாவாடையை சற்றே தூக்கி
இடுப்பில் செருகிக் கொண்டு
கொலுசுகளின் சன்னமான ஒலி
சபா மண்டபத்து சிற்பங்களில் மோதி
மென்மையாக எதிரொலிக்க -
பூம்பாதங்களைப் பதித்து 
ஆடத் தொடங்கினாள்...

இதுதான் பரத நாட்டியமா!...
விரல்களால் ஏதேதோ காட்டுகின்றாளே!..
இவைதான் அபிநயங்களா!...

சபா மண்டபத்தின் தூண்களில் 
சிலைகளாய் இருக்கும் நாட்டியத் தாரகைகளில் ஒருத்தி உயிர் கொண்டு வந்ததைப் போலிருந்தது..


திகைத்து நின்றான்...

வளையல்கள் கலகலக்கும் கைகளில் இருந்து அபிநயங்கள் மலர்ந்து கொண்டிருக்க ஸ்வர்ணாவின் செவ்விதழ்களும்  மலர்ந்தன..

செந்தமிழ்ப் பாடலொன்றைப் பாடினாள்...

இனிமை..  இனிமை.. என்கிறார்களே... அது இதுதானோ!..

எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம்
என்ன பொருத்தமோ!..
இந்தப் பொருத்தம் உலகில் பிறருக்கு
எய்தும் பொருத்தமோ - இறைவா!...

அலை அதிரும் தடாகமாகப் பொலிந்து
நீரோடு கிடந்து இலங்கும் இலைகளாக மொட்டுகளாக அசைந்து கொண்டிருந்தாள்...

அரசே உன்னை அணைக்க எனக்குள்
ஆசை பொங்குதே - தலைவா!..
அணைப்போம் என்னும் உண்மையால்
என் ஆவி தங்குதே!..

தாமரை மொட்டுகள் மலர்ந்தனவோ இல்லையோ ஸ்வர்ணாவின் கரங்களில் அபிநயங்கள் மலர்ந்து கொண்டிருந்தன...

ஆகா.. காணக் கண்கோடி வேண்டும்!...

உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொரு அங்குலத்திலும் அழகு ததும்பிக் கொண்டிருந்தது..

எனது உடலும் உயிரும் பொருளும்
நின்னதல்லவோ.. - அன்பே
எந்தாய் இதனைப் பெறுக என நான்
இன்னும் சொல்லவோ!...

மலர்ந்திருக்கும் தடாகத்துத் தாமரையைச் சுற்றி ரீங்காரத்துடன் ஒரு வண்டு...

கரங்கள் சிறகுகளாகிக்
காற்றில் துழாவி நிற்க
கருவிழிகள் இரண்டும்
ஒற்றை வண்டென உருமாறி
ஒருநூறு பாவங்களைப்
பொழிந்து கொண்டிருந்தன...

எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம்
என்ன பொருத்தமோ!..
இந்தப் பொருத்தம் உலகில் பிறருக்கு
எய்தும் பொருத்தமோ - இறைவா!..

தானே தாமரையாக தானே வண்டாக
சுழன்றாடிய ஸ்வர்ணா நாட்டியத்தை நிறைவு செய்து நடராசப் பெருமானின் திருமுன்பாக மண்டியிட்டு நெற்றியைத் தளத்தில் பதித்து வணங்கி எழுந்தாள்..

காந்தள் விரல்களால் பூக்கூடையை  எடுத்துக் கொண்டு துள்ளித் துள்ளி படிகளில் இறஙகியவள் கொடி மரத்தின் அருகில் மீண்டும் விழுந்து வணங்கினாள்..

திருக்கோயிலில் சற்று அமர வேண்டும் - என்பதையும் மறந்து விறுவிறு என நடந்தாள்...

அவளுடன் பேசிவிட வேண்டும் என்ற உத்வேகத்துடன் பின்தொடர்ந்து வந்த கார்த்தி விக்கித்து நின்றான்...

அடுத்து வந்த இரண்டு மாதத்தில் கோயில் கொடியேற்றம்...
வைகாசிப் பெருந் திருவிழா..

ஏழாம் திருநாள்... பெரிய ரிஷப வாகனம்..
பன்னிரண்டு ஜதை நாயனங்கள்...

உள்ளூர் மக்களுடன் வெளியூர் மக்களும்  மயங்கிக் கிடக்க விடிய விடிய கச்சேரி.. தவில்களின் முழக்கம் ஏழூர் கடந்தும் கோடை இடியெனக் கேட்டது..

அடுத்து தேர்த்திருவிழா... ஆயிரக் கணக்கில் ஜனங்கள்...

திருத்தேரை வடம் பிடித்து இழுத்துக் கொண்டிருந்த கார்த்திகேயன் சற்றே ஒதுங்கி நின்றான்...

ஆங்காங்கே அன்னதானம், நீர்மோர், பானகம் - என, ஏக அமர்க்களம்...

ஏதாவது பருக வேண்டும் போலிருந்த வேளையில் - ஒரு குவளை நீர் மோருடன் அவன்முன்  நீண்டது வளைக்கரம் ஒன்று..

ஆயிரம் மின்னல்கள் ஒர் உருக் கொண்டு வந்தது போல் நேருக்கு நேராக - ஸ்வர்ணலக்ஷ்மி..

கார்த்தி திக்கித் திணறிப் பேசினான்...

" அன்னைக்கு நீ ... நீ.. கோயில்ல ஒரு கொலுசை விட்டுட்டு வந்துட்டே.. அது எங்கிட்ட தான் இருக்கு... உன்னை இங்கே பார்ப்போம்..னு நினைக்கலை!... "

" அதாவது உங்களச் சேர்ந்து இருக்கட்டும்!... "

புன்னகையுடன் மொழிந்த ஸ்வர்ணா கூட்டத்தினுள் கலந்தாள்..  

[ நிறைவு ]

ஃஃஃ


53 கருத்துகள்:

  1. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொலுசு -
      இன்றைய பகுதியில் ஸ்வர்ணா பாடுவதாக இடம் பெற்றிருக்கும் - எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் - எனும் பாடல்
      அருட்திரு வள்ளலார் ஸ்வாமிகள் இயற்றிய திருப்பாடலாகும்...

      ஸ்வாமிகளின் திருவடிகளுக்கு வணக்கம்..

      நீக்கு
    2. இன்றைய பாடல் மிகப் பொருத்தமான பாடல். இதனை நான் நிறைய தடவை கேட்டிருக்கிறேன். ஆனால் பாடல் வரிகள் என் மனதில்,

      உனக்கும் எனக்கும் இசைந்த பொருத்தம்
      என்ன பொருத்தமோ

      என்றே நிழலாடியது. இன்று கூகுளிட்டு முழுவதும் படிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது

      பாடலை இங்கு கொணர்ந்ததற்குப் பாராட்டுகள்

      நீக்கு
  2. இன்று எனது ஆக்கத்தினை பதிவு செய்து அன்புடன் ஊக்கம் அளித்த ஸ்ரீராம் அவர்களுக்கும் அழகிய சித்திரங்களால் சிறப்பித்த KGG அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான கதைகளை அனுப்பி கௌரவிக்கும் உங்களுக்கும் எங்கள் அன்பார்ந்த நன்றி.

      நீக்கு
  3. இன்று கதைக் களம் காண வரும் அனைவருக்கும் அன்பின் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள். தொடர்ந்து மனதுக்கு ஆறுதல் அளிக்கும்படியான சூழ்நிலையே நிலவப் பிரார்த்திக்கிறோம். உலகெங்கிலும் மக்கள் மன அமைதியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  5. நல்ல கதை. எதிர்பாரா முடிவு. கார்த்தியும் ஸ்வர்ணாவும் இணைவார்கள் என எதிர்பார்த்தேன். அந்தக் காலத்துக் கதை போலும். ஸ்வர்ணாவின் நடனத்தைப் பற்றிய வர்ணனை நேரில் பார்க்கிறாப்போல் அமைந்திருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனதால் சேர்த்து விட்டாரே...

      நீக்கு
    2. ஆம், கவிதை போன்ற முடிவு.

      நீக்கு
    3. முதல் பகுதியில் சொல்லியிருக்கின்றேனே 1970 என்று...

      ஜமீந்தாரின் மகள் என்றாலும் அந்தக் கால சமுதாயம் சற்றே முரண்பாடு உடையதாயிற்றே!.. அவ்வளவு சீக்கிரம் அங்கீகரித்து விடாது!... தனது அன்புக்கு உரியவன் சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று ஸ்வர்ணாவே விலகிச் செல்கிறாள்..அதைத்தான் கோடிட்டுக் காட்டியிருக்கின்றேன்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    கதை நன்றாக இருந்தது. கொலுசோடு மட்டும் என்றும் அவள் நினைவுகளும் சேர்ந்திருக்கும் என்ற விதத்தில் கதை முடியுமென எதிர்பார்க்கவில்லை. சகோதரர் நினைத்தால், இன்னமும் இதை தொடராக்கலாம். வாழ்விலும் அவர்களை ஒன்று சேர்த்து வைக்கலாம்.

    சபா மண்டபத்தின் அழகு, ஸ்வர்ணாவின் ஆடல் வர்ணனைகள் இவைகளை நம் கண்முன்னே கொண்டு வந்த துரை செல்வராஜ் சகோவின் எழுத்து திறமைக்கு பாராட்டுக்கள். அதற்கு தகுந்த படங்களை சேர்த்து தந்த கெளதமன் சகோதரரின் ரசனையும் மனதை கவர்கிறது. அனைத்திற்கும் பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும்
      மகிழ்ச்சி...

      சக தோழியின் மீது இரக்கமும் அன்பும்... அது காதலா என்று அவனுக்கே புரிய வில்லை.. காலம் அவர்களைச் சேர்த்து வைத்திருக்கும் என்று நம்புவோம்...

      நன்றி.. மகிழ்ச்சி...

      நீக்கு
  8. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லோரும் எப்பொழுதும் ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனிடம் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  9. துரையின் கதை வடிவு மிக அற்புதம்.
    அதன் முடிவு ? பாவம் அந்தப் பெண்.

    நடனப்பாட்டும்,அதற்கான அபிநயத்தை துரை
    வர்ணித்திருக்கும் விதமும் மிக மிக சிறப்பு.
    தில்லை நடராஜருக்குத் தன்னை அர்ப்பணித்துக்
    கொண்டுவிட்டாளோ.

    இத்தனை ஆசையோடு இருந்த கார்த்திகேயன்
    எப்படித் தன்னை விடுவித்துக் கொள்வான்.

    ஆனாலும் மிக மிக இனிமையான யதார்த்தமான
    கதையைக் கவித்துவமாக பூர்த்தி செய்துள்ளார்.
    படமும் கச்சிதமாகப் பொருந்தி இருக்கிறது.

    மண்டபத்தின் அழகும் வர்ணனையும் கருத்தைக்
    கவர்ந்தன,.
    மனம் நிறை வாழ்த்துகளும் பாராட்டுகளும் அன்பு துரை.
    நன்றி கௌதமன் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியம்மா... எனக்கு கதை நகர்ந்த அழகை விட அதற்கான படங்கள் கச்சிதமாக அமைந்தனவே அதுதான் ஆச்சர்யம்... திரு கௌதமன் அவர்களுக்குத் தான் பாராட்டு...

      மகிழ்ச்சி.. நன்றியம்மா...

      நீக்கு
  10. அனைவருக்கும் காலை வணக்கம். துரை சாரின் வழக்கத்தை மாற்றி சோகமாக முடித்து விட்டார். கடைசி வரிகள் மனதில் பாரத்தை ஏற்றி விட்டன.  விவரிப்புக்கள் அற்புதம்!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா..  வணக்கமும் நல்வரவும்.

      நீக்கு
    2. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  11. விடிய விடிய நாதஸ்வர கச்சேரி.. ஆஹா! இப்போதும் தொடர்கிறதா? நாதஸ்வர கச்சேரியின் இடத்தை இப்போது மெல்லிசை கச்சேரிகள் பிடித்து விட்டதாமே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சாவூரில் - வைகாசி மூல நட்சத்திரத்தை அனுசரித்து நடத்தப்படும் முத்துப் பல்லக்கு திருவிழாவில் விடிய விடிய ராஜவீதிகளில் நாகஸ்வரக் கச்சேரிகள் நடைபெறுகின்றன... இந்த ஆண்டு விழா நடத்தப்படவில்லை... சென்ற ஆணும் அதற்கு முன்பும் பதிவில் வந்திருக்கிறது...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. கதையின் முடிவு என்னைக் கவர்ந்தது

    பொதுவா காதல் என்பது நிறைவேறாமல், இருவர் மனதிலும் பசுமையாக, இந்தப் பிறவியில் இணைய கொடுத்து வைக்கலை, இருக்கும் இடத்தில் இந்தப் பிறவியில் சந்தோஷமாக இருப்போம், வரும் ஜென்மம் முடிவு செய்யட்டும் என இருப்பதும் ஒரு சந்தோஷ முடிவுதானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. நாதஸ்வரக் கச்சேரி பற்றிப் படித்து, என் ஆறாம் வயதில் பரமக்குடியில் ஒரு கோவிலில் நடந்த தவில் கச்சேரியைப் பார்த்த நினைவு வந்துவிட்டது. தவல்கார்ரின் உடலெங்கும் வேர்வை வெள்ளம் மனதில் பதிந்துவிட்டது.

    ஓரிரு வருடத்திற்கு முன், நாச்சியார் கோவில் கல்கருட சேவைக்குச் சற்று முன்பு கோவில் முன் மண்டபத்தில் நாதஸ்வரக் கச்சேரி கூடவே தவிலுடன் நடந்தது (6 நாதஸ்வரங்கள்). தவில் வித்துவான் ரசனை, பாடலில் உயிர் கலந்ததுபோல வாசித்தவை நெஞ்சில் பதிந்தது, காணொளியாவும் எடுத்தேன். முடிந்தால் இன்று எபி வாட்சப்பில் பகிர்கிறேன்

    பதிலளிநீக்கு
  14. நல்லதொரு கதை. பாராட்டுகள்.

    கடைசி வரி - மனதைத் தொட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  15. சோகமும் இனிமையும் அடங்திய ஆழமான கதை! அருமை!
    ' சிவகாமியின் சபதம் ' நாவலின் இறுதிக்காட்சி நினைவுக்கு வந்தது.
    இணைப்பாக ' எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் ' பாடலை உள்ளே புகுத்தியதும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  16. ஆமாம், சபாமண்டபம் என்னும் வர்ணனை என்னைச் சிதம்பரத்திற்கு அழைத்துச் சென்றது. பாடல் பாடி ஆடியது எனக்கும் சிவகாமியின் சபதமும் அதில் சிவகாமி பாடும், "முன்னம் அவன் திருநாமம்" பதிகமும் நினைவில் வந்தது. திரு கௌதமன் படங்களைப் பொருத்தமாக்த் தேர்ந்தெடுத்துப் போட்டிருப்பதையும் கவனித்தேன். அதிலும் அந்தப் பெண்ணின் உடை நிறத்தை நினைவில் கொண்டு மறக்காமல் அந்த நிற உடைகளுடனே நடனம் ஆடும் பெண்ணும் அமைந்து விட்டாள். காலை நேரத்தில் இதை எல்லாம் கவனித்தாலும் சொல்ல நேரமிருப்பதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சிவகாமியின் சபதம் நாவல் படித்ததில்லை.. படங்களை சிறப்பாக அமைத்த நேர்த்திக்கு திரு கௌதம் அவர்களுக்குத் தான் பாராட்டு...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. அன்பு கீதாமா, நானும் நினைத்தேன். என்ன பொருத்தம்.!!!

      நீக்கு
  17. கதை அருமை... மனம் ஏனோ ஒட்டவில்லை...
    காரணம் :
    வள்ளலார் வழி ஐயனின் வழி என்பதால் இருக்கலாம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  18. இருமனமும் இணையும் என்று நினைத்திருந்தேன். வர்ணனை அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  19. கொவிலில் நடனம்இந்த காலத்துக்கு பொருந்துகிறதா அதுதான் சென்ற பகுதியில் நித்ய கல்யாணிகளைபற்றிய கோடி காட்டலொ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      கோயிலில் நடனமாடுவது கலையின் அர்ப்பணிப்பு... இந்தக் கதையின் காலம் 1970... தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி ஐயா..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!