சனி, 14 மே, 2022

போதையின் பாதையில்... & நான் படிச்ச கதை

 





வெஸ்ட் பாம் பீச் :விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது உடல் நலக்குறைவால் பைலட் மயங்கியதால் எந்த அனுபவமும் இல்லாத பயணி விமானத்தை இயக்கி பத்திரமாக தரையிறக்கினார்.
வட அமெரிக்காவில் அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான பஹாமாவில் இருந்து இரண்டு பயணியருடன் சிறிய ரக விமானம் அமெரிக்காவின் புளோரிடாவுக்கு சென்றது. நடுவானில் சென்று கொண்டிருந்த போது பைலட்டுக்க திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கினார். இதைப் பார்த்த ஒரு பயணி விமானி அறையில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு பேசி விபரத்தை கூறினார்.
கட்டுப்பாட்டு அறையில் இருந்து பேசியவர் அந்தப் பயணிக்கு விமானத்தை இயக்கும் வழிமுறைகளை கூறி அவரை வைத்தே இயக்கினார். பயணியும் எந்தப் பயமும் இன்றி கட்டுப்பாட்டு அறை அதிகாரியின் அறிவுரைப்படி இயக்கி விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
அந்தப் பயணியையும் கட்டுப்பாட்டு அறை அதிகாரியையும் அனைவரும் பாராட்டினர்.
அந்தப் பயணி புளோரிடாவில் வசிக்கும் தன் கர்ப்பிணி மனைவியை பார்க்க இந்த சிறிய ரக விமானத்தில் பயணித்துள்ளார்.


தலசீமியா தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தலசீமியா என்பது ஒருவகை சிவப்பணுக்கள் குறைபாடாகும். அதாவது மனிதர்களில் அரிதாக சிலருக்கு அவர்களின் உடலில் ரத்தப்புரதம் (ஹீமோகுளோபின்) தேவையான அளவைவிடக் குறைவாக இருக்கும். இதற்குக் காரணம் சிவப்பணுக்கள் விரைவாக சிதைந்து போவதே. இந்நிகழ்வு சிவப்பணு சிதைதல் (hemolysis) எனப்படுகிறது. பெரும் தலசீமியா கொண்டவர்களுக்குக் கடுமையான ரத்தச்சோகை இருக்கும். இதனால் இதற்கு மருத்துவம் அளிக்கத் தொடர்ந்து ரத்தம் செலுத்தவேண்டும். தலசீமியா தினத்தையொட்டி அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எலும்பு மஜ்ஜை நன்கொடை வழங்கும் பிரசாரத்தை தீவிரமாக செய்து வரும் பெண்ணின் நம்பிக்கை கதையை பிபிசி தமிழ் 2019இல் பிரசுரித்திருந்தது. அதன் மீள்பகிர்வை இங்கே வழங்குகிறோம்.

(Be the Change என்றார் காந்தி. I am the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் 14வது அத்தியாயம் இது.)

தானத்தில் புதிய தானம், 'ஸ்டெம்செல் தானம்'. இன்றைய சூழலில் இதுவே மிக சிறந்த தானம் என்கிறார் கோவையை சேர்ந்த, இந்தியாவின் உறவின்முறை இல்லாத முதல் பெண் எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர் (Non-Related, First Female Bone Marrow Donor in India) மாசிலாமணி.  

கோவை புறநகர் பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் இந்த பெண் 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.தலசீமியா தினம்: ஜெயக்குமார் சந்திரக்கர் ஸார் சொல்லியிருக்கும்,  'ஸ்டெம்செல்' தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெண்ணைப் பற்றி படிக்க இங்கு சுட்டுங்கள்


======================================================================================================


 நான் படிச்ச கதை  தாத்தா சொன்ன கதை

 ஜெயகுமார் சந்திரசேகர்

******************

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க.

 பட்டாபி

 

என்னுரை 

கணினியின் சேமிப்புக்கிடங்கை ஆராய்ந்து கொண்டு இருந்தேன். பட்டாபி எழுதிய இந்த புத்தகம் கண்ணில் பட்டது. அதில் முதல் அத்தியாயம் மட்டும் இங்கே தட்டச்சு செய்து பகரப்படுகிறது. படங்கள் காப்பி பேஸ்ட் தான். 

ராமாயணம், ராமர், ராமர் பாலம், ராவணனுடைய புஷ்பக விமானம், என்று பல ராமாயண சர்ச்சைகளும் தற்போது புதிதாக உயிர்  பெற்றிருக்கின்றன. இந்த சர்ச்சை சம்பந்தமாக அவரவர் சான்றுகள் என்று பலவற்றையும் மேற்கோள் காட்டுகின்றனர். 

அது போன்றே இந்த தாத்தா கம்பராமாயணத்தை மேற்கோள் காட்டுகிறார். அவர் சொல்வதை ஏற்பதும் ஏற்காததும் வாசகர்களின் விருப்பம். 

ஆனாலும் சில கேள்விகள் எழுகின்றன. பல ராமாயணங்கள் உண்டு. வால்மீகி ராமாயணம், துளசி ராமாயணம், அத்யாத்ம ராமாயணம், கம்ப ராமாயணம் என்பவை சில. எல்லாம் ஒரே போல இல்லை ஏன்? 

ராமர் என்பது கற்பனையா, வாழ்ந்த அரசரா, அவதாரமா;  ராமாயணம் என்பது கதையா, வரலாறா, பக்தி இலக்கியமா; என்பது போன்ற ஐயங்களும் நிருபிக்கப்பட முடியாத பதில்களால் விவாதிக்கப் பட்டுள்ளன. 

இந்த தாத்தா சொல்வது கம்ப ராமாயணத்தில் உள்ளது என்றால் மற்ற ராமாயணங்களில் இது ஏன் கூறப்படவில்லை? அல்லது அவர் மேற்கோள் காட்டும் செய்யுள் 20 நூற்றாண்டில் கம்ப ராமாயணத்தில் இடைச்செருகலாக செய்யப்பட்டதா? போன்ற ஐயங்கள் எனக்கு தோன்றியது உண்மை. ஆனால் எனக்கு இது உண்மை அல்லது பொய் என்பது கட்டாயம் தெரிந்தே ஆகவேண்டும் என்பதில்லை. ஆகவே ஒதுங்கிவிட்டேன்.  

ஒன்று மட்டும் உறுதி. எ பி வாசகர்கள் எல்லோரும் அவரவர் நிலைப்பாடுகளில் உறுதியாய் இருப்பர். யாரும் அவர்களின் நம்பிக்கைகளை மாற்ற முடியாது. 

இந்த கதையைப் படித்து அவரவர் தத்தம் நம்பிக்கைகளை முன்வைத்து இந்த வார அரட்டையை நிறைவு செய்யலாம்.

துரு துரு தாத்தாவின் ஆச்சர்ய அனுபவங்கள்.


மாலை நேரம். வீட்டு வாயிலில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வீட்டின் உள்ளே முன் அறையில் தாத்தா ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். அதிலேயே மூழ்கிப் போயிருந்த அவரது கவனத்தை லொட்டு பட்டு என்று ஏதோ சத்தம் திசை திருப்பியது. நிமிர்ந்த தாத்தாவை முறைத்து பார்த்தபடி உள்ளே நுழைந்தான் பேரன். 

புத்தகத்தை மூடிவைத்த தாத்தா “காலை கழுவிட்டு உள்ளே வா” என்கிறார் சற்றுக் கறாராக. 

“செருப்பு போட்டுக்கிட்டுத்தான் போனேன். வெறும் காலோடயா  போனேன்?" என்று முணுமுணுத்தபடியே   கால்களைக் கழுவிக் கொண்டு தாத்தாவை நெருங்கினான் பேரன். வெளியில் சுற்றி விட்டு வந்ததால் உண்டான வியர்வையும் அடங்கவில்லை அவனுக்கு.

குளிர் சாதனப் பெட்டியில் இருந்து குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு  வந்து மகனிடம் நீட்டினாள் தாய்.  

“கொஞ்ச நேரம் கழித்துக் குடி” என்கிறார் தாத்தா. கோபம் பொத்துக் கொண்டு வந்தது பேரனுக்கு. 

“பிராணனை வாங்கறியே தாத்தா. உன் காலத்து சமாச்சாரத்தை எல்லாம் இந்தக் காலத்தில் யார் சீண்டுறா? விஞ்ஞானம் எங்கேயோ போய்கிட்டிருக்கு. இந்தக் காலத்தில் போய் உதவாததை  எல்லாம்  சொல்லிக்கிட்டு” என்று வெடித்தான் பேரன். 

சிரித்தார் தாத்தா. “உதவாததை  எதுவும் நம் முன்னோர்கள் சொல்லி விட்டுப் போகலை. என்ன சொன்னே? விஞ்ஞான வளர்ச்சியா? ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ. அணுவைப் பற்றி சிந்தனை கூட தோன்றாத அந்தக் காலத்திலேயே விஞ்ஞான உண்மைகளை சொன்னவங்க நம்ம பெரியவங்க. அதைப் பற்றி விளக்கமா சொன்னாதான் உனக்குப் புரியும்.  அதுக்கு முன்னாடி இந்த தண்ணியைக் குடி” என்றுநீட்டினார் தாத்தா. 

இந்த தாத்தா பொய் சொல்றாரா? அல்லது ஏதாவது உண்மை இருக்குமா? என்று தண்ணீரை வாங்கிக் குடித்த பேரன் “என்ன தாத்தா சொல்றே? இதெல்லாம் உண்மையா? என்றான். 

தாத்தா நிமிர்ந்து உட்கார்ந்தார். “நான் சொல்றேன். நீயே தீர்மானிச்சுக்கோ. அணுவைப் பத்தி மேல் நாட்டுக்காரங்க யாரும் யோசிக்காத அந்தக் காலத்திலேயே அது பத்தின விஷயங்களை நம்ம பெரியவங்க விளக்கமா சொல்லியிருக்காங்க தெரியுமா? கம்ப ராமாயணத்திலேயும் இது பற்றி ஒரு தகவல் உண்டு. யுத்த காண்டத்தில் ராவணனுக்கு விபீஷணன் யோசனை சொல்றான். அப்ப அவன் ஹிரண்யகசிபுவைப் பற்றி சொல்றதை படிக்கிறேன் கேளு …. “எங்கே இருக்கிறான் உன் இறைவன் என்று தன் மகனைப் பார்த்து சீறினான் ஹிரண்யகசிபு. பிரஹலாதன் பதில் சொன்னான். “சாணிலும் உளன் ஒரு தன்மை அணுவினைச் சத கூறிட்ட கோணிலும் உளன்!“ அணுவுக்குள் அணுவாக இறைவன் இருக்கிறான்” என்பதை சொல்ற இந்த இடத்துல “அணுவை நூறு(சத) கூறுகளாகச் செய்து அதில் ஒரு சதவிகித அணுவை ‘கோண்’ என்று கம்ப ராமாயணம் குறிப்பிடுது.” என்கிறார். தாத்தா சிறிது நிறுத்தினார். பேரன் ஆச்சரியப்பட்டான். 

ஓரக்கண்ணால் அவனது வியப்பை ரசித்தபடி தாத்தா தொடர்ந்து “பிளக்க முடியாதது என்று சொல்லப்பட்ட அணுவைப் பிளந்து ஒரு சதவீத அணுவுக்கும் தமிழ்ப் பெயர் வச்சுட்டாங்க அந்தக் காலத்திலேயே. ஆனால் எனக்குத் தெரிஞ்சு இன்னிக்கும் ஒரு சதவீத அணுவுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்படவில்லை. சரி. மேலே சொல்றேன். கம்பராமாயணமே அணுவின் செயல்பாட்டையும் சொல்றது. 

போர்க்களத்தில் இந்திரஜித் இறந்து கிடக்கிறான். அவன் தாயார் மண்டோதரி அழுகிறாள். தலை சிறந்த வீரனான உன்னை, இந்திரனையே வென்று இந்திரஜித் என்று பெயர் பெற்ற உன்னை கொன்று விட்டார்களே! அணு ஆயுதத்தை ஏவ அது ஓடி வந்து சிதறி நாசத்தை உண்டாக்கியது போல் இருக்கிறது என்கிறாள். அந்த வரி 

“உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா”.

எங்கோ ஓரிடத்தில் சுவிட்சை அழுத்தியதும் அணு ஆயுதம் சீறிக் கிளம்பும். குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் வெடித்துச் சிதறி நாசத்தை உண்டாக்கறது. இதைத்தான் கம்பராமாயணம் “உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா" ன்னு சொல்றது. தாத்தா சற்று நிறுத்தினார். பேரன் பெருமூச்சு விட்டான். 

தாத்தா தொடர்ந்தார். "இப்போ நான் கால் கழுவற விஷயத்தை சொல்றேன். கவனமா கேள். நின்றாலும் நடந்தாலும் உட்கார்ந்தாலும் நம் கால் மட்டும் தரையில் பட்டுக்கிட்டே இருக்கும். இப்படிக் கண்ட இடத்துலேயும் அலையுற கால்களிலே ஏராளமான கிருமிகள் ஒட்டிக்கிட்டிருக்கும். கால் கழுவாமல் இருந்தால் அவ்வளவு கிருமிகளும் கால்களில் உள்ள நகக்கண் வழியே உள்ளே புகுந்து வியாதியை உண்டாக்கும். அதனால தான் பெரியவங்க “காலைக் கழுவிட்டு உள்ளே வரச்  சொல்றாங்க. என்னதான் கழுவினாலும் ஒன்று இரண்டு கிருமிகள் கால்களில் ஒட்டிக்கிட்டிருந்தா என்ன செய்யறது. அதற்காகவே வீடு வாசப்படியில் மஞ்சள் பொடியை குழைத்து பூசி வைப்பாங்க. காலைக் கழுவிட்டு மஞ்சள் பூசின வாசப்படி வழியாக உள்ளே நுழைஞ்சா காலில் மிச்ச மீதி இருக்கும் கிருமிகளும் அழிந்து போயிடுமாம். தலை சிறந்த கிருமிநாசினி மஞ்சள் என்பது தெரிஞ்சதாலதான் நம்ம பெரியவங்க அப்படிச் சொன்னாங்க. 

இதே போல சாப்பிடறதுக்கு முன்னாடியும் சாப்பிட்ட பிறகும் கால் கழுவறதும் நல்லது. இதனால ஜீரண சக்தி அதிகரிக்கும் புரிஞ்சுதா”  என்றார் தாத்தா. 

பிரமிப்பில் இருந்த பேரன் வாயைத் திறந்தான். “புரிஞ்சுது தாத்தா, புரிஞ்சுது. இதை எல்லாம் உணர்ந்து பாலோ பண்றதாலதான் உங்களை மாதிரி பெரியவங்க வயசானாலும் கரும்பைக் கடித்து சாப்பிடுறீங்க. நாங்களோ" என்ற பேரனை இடைமறித்த தாத்தா “கரும்பையே ஜூஸாக கேட்கிறீங்க.” என்றார் சிரிப்புடன். 

“அது போகட்டும் தாத்தா” நான் வீட்டுக்குள் நுழைஞ்சதும் அம்மா தந்த தண்ணியை குடிக்க விடாம அப்புறமா குடிக்கலாம்னு சொன்னீங்க. அது ஏன்? சொல்லுங்க" என்றான் பேரன். 

இதற்கு உண்டான பதிலைப் பெரிய புராணம் சொல்றது.

“சேக்கிழார் எழுதியது தானே" என்றான், பேரன்.

ஆச்சரியப்பட்டார் தாத்தா. “அடடே சேக்கிழார் எழுதியதை எல்லாம் சரியாய் சொல்றியே, பரவாயில்லை எனப் பாராட்டினார்.

அரட்டையை ஆரம்பிக்கலாமா?

பல ராமாயணங்கள் உண்டு. வால்மீகி ராமாயணம், துளசி ராமாயணம், அத்யாத்ம ராமாயணம், கம்ப ராமாயணம் என்பவை சில. எல்லாம் ஒரே போல இல்லை. ஏன்?

ராமர் என்பது கற்பனையா, வாழ்ந்த அரசரா, அவதாரமா, ராமாயணம் என்பது கதையா, வரலாறா, பக்தி இலக்கியமா?

இந்தத் தாத்தா சொல்வது கம்ப ராமாயணத்தில் உள்ளது என்றால் மற்ற ராமாயணங்களில் இது ஏன் கூறப்படவில்லை? அல்லது அவர் மேற்கோள் காட்டும் செய்யுள் 20 ஆம் நூற்றாண்டில் கம்ப ராமாயணத்தில் இடைச்செருகலாகச் செய்யப்பட்டதா?

 ஒரு வேண்டுகோள்

அரட்டை தீவிரத்தில் தனி மனிதத் தாக்குதல், நாகரிகமற்ற சொற்பிரயோகம், போன்றவை ஏற்படாமல் கவனித்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.                                                      

30 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    ஆரோக்யம் நிறை வாழ்வு அனைவருக்கும் தொடர வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா.. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. அனுபவமின்றி விமானத்தை இயக்கியவர் பாராட்டுக்குரியவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீபத்தில் இது போன்றதொரு படம் கூட வந்தது. நன்றி ஜி.

      நீக்கு
  3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா, வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  4. அனைத்து நற்செய்திகள் பகிர்வுக்கும். திரு ஜேகே அவர்களின் ராமாயணப் பகிர்வுக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. பெண்போலீஸின் தீர சமயோசிதமாக நடந்தது மனதைத் தொடுகிறது.

    சட்டென்று நடவடிக்கை எடுத்தாரே .அதை மிகவும் பாராட்ட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. விமானத்தை இயக்கியவரைப் பற்றிப்
    படித்தேன்.
    இதே போல வந்த படமும் நினைவில்.
    தம்பதிகள் ஓட்டிய விமானத்தில்
    கணவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடும்,
    மனைவி விமானத்தை ஓட்டிக் கணவரையும் காப்பாற்றி இருக்கிறார்.

    இறைவன் அந்தந்த நேரத்தில் காப்பாற்றுகிறார்.

    பதிலளிநீக்கு
  7. வேலூர் மருத்துவமனையின் அற்புத சேவையை
    நிறைய அறிந்தே வருகிறோம்.

    73 வயது விவசாயியைக் காப்பாற்றியது
    மிக மிக அருமையான சிறப்பான சாதனை.
    செய்திக்கு மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
  8. ஜெயக்குமார் சந்த்ர சேகர் சாரின் புது ராமாயண அணுகல்
    படிக்க மிக வியப்பாக இருக்கிறது.

    அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி

    படித்திருக்கிறோமே.

    நன்மையை எடுத்துக் கொள்ளலாம்..

    பதிலளிநீக்கு
  9. அன்பின் வணக்கம்
    அனைவருக்கும்...

    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. அண்டப் பகுதியின்
    உண்டைப் பிறக்கம்
    அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
    ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
    நூற்றொரு கோடியின்
    மேற்பட விரிந்தன
    இன்னுழை கதிரில் துன்அணுப் புரையச்
    சிறிய வாகப் பெரியோன் தெரியின்...

    - என்று தொடங்குவது திருவாசகத்தின் திரு அண்டப் பகுதி..

    இறைவனின் தன்மையைக் கூறும் போது -
    இல்லத்துள் புழை வழியாகப் புகும் ஞாயிற்றின் ஒளியில் நெருங்கித் தோன்றும் நுண் துகள்களிலும்
    சிறியனவாகத் தோன்றும்
    பெரியோனாய் நிற்பவன்.. - என்று அண்டத் தொகுதியையும் ஆய்ந்து
    - நூற்றொரு கோடியின்
    மேற்பட விரிந்தன என்று, அண்டத்தின் தன்மையையும்
    கூறுகின்றார் மாணிக்கவாசகர்..

    பதிலளிநீக்கு
  12. நுண்ணிய, துன்னிய - எனும் சொல்லாடல்கள் சிந்திக்கத் தக்கன..

    பதிலளிநீக்கு
  13. வேகா மட்டைகள் இன்று சத்தம் போட்டுக் கொண்டிருக்கின்றன - அரேபியனும் ஐரோப்பியனும் வந்ததுக்கு அப்புறம் தான் இங்கே கல்வியறிவு வந்தது என்று..

    குதிரை வாங்கச் சென்ற மாணிக்கவாசகருக்கு அவற்றின் இலக்கணமும் அவற்றை நோயின்றிப் பராமரிக்கவும் தெரியும்.. குதிரைகள் என்ன யானைகளைக கட்டிக் காத்தவர்கள் இப் பாரத நாட்டினர்..

    யானைக்கு வயிற்று வலி என்றால் அது சொல்லுமா?.. அதையும் உற்று உணர்ந்து அவற்றோடு வாழ்ந்தவர்கள்..

    சான்றுகள் கொடுத்தால் - இல்லை.. இல்லை.. இடைச் செருகல்!.. - என்று ராக்கோழி மாதிரி சத்தம்...

    பதிலளிநீக்கு
  14. அனைத்து செயல் வீரர்களையும் பாராட்டுவோம்.
    கம்பராமாயணம், பாரதம் இரண்டுமே வியப்புதான் விவாதங்கள் பல இருந்தாலும்.

    பதிலளிநீக்கு
  15. 'ஸ்டெம்செல்' தானம் பற்றி இன்னும் அறிய வேண்டும்...

    உண்டென்றால் அது உண்டு...
    இல்லை என்றால் அது இல்லை...
    இல்லை என்றால் அது இல்லை..

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. அனைவரையும் பாராட்டுவோம். இராமாயணம் பற்றிய அலசல் பகிர்வுகள் நன்றாக உள்ளது. அடுத்து சேக்கிழார் என்ன சொன்னார் எனத் தெரியவில்லை. அதைப்பற்றி விபரங்கள் அறிய என கைப்பேசியில் எனக்குத் தெரியவில்லை.அதையும் குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். தாத்தாவிடம் விளக்கமறியும் பேரனாக நானும் அறிந்திருப்பேன் கதைப் பற்றிய பகிர்வுக்கு சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கும், தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது அடுத்த அத்தியாயம். பெரிதாக ஒன்றுமில்லை.

      நீக்கு
  17. அனைத்தும் நல்ல செய்திகள். உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. ஜெயக்குமார் சந்திரசேகர் சார் , பகிர்ந்த ராமாயண பகிர்வும் அருமை.

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துக்கள் கூறி ஊக்கம் தருவதற்கு நன்றி. வணக்கம்.

    பதிலளிநீக்கு
  20. ஜெகே அண்ணா பகிர்ந்திருக்கும் பாசிட்டிவ் செய்திதான் வியக்க வைத்த பிரமிக்க வைத்த செய்தி. பாராட்டுகள் மாசிலாமணிக்கு. அங்கு அச்செய்தியை பிபிசி தமிழ் - அவரும் ஜெயக்குமார்!!!! என்னப் பொருத்தம் பொருத்தம்!!!

    அடுத்து வியக்க வைத்தவர் விமானம் ஓட்டும் பயிற்சி பெறாதவர் கட்டுப்பாட்டு அறையிலிருந்து வரும் கட்டளைகளைக் கேட்டு ஓட்டி பாதுகாப்பாகத் தரை இறங்கியது.

    மற்ற செய்திகளும் இதய சிகிச்சை எல்லாமே அருமை.

    தமிழிலிருந்து ஆங்கில மொழிபெயர்ப்புத் தேவைப்படும் போல!! ஹாஹாஹாஹா குறிப்பாக அந்த இதயசிகிச்சை செய்தியில் பல மருத்துவச் சொற்கள் புரியவில்லை.

    காலையிலிருந்து முயற்சி...கருத்து போகவே இல்லை..இப்போதாவது போகிறதோ?!! ப்ளாகர் கடவுளே உமக்கு என்ன வேண்டிக் கொண்டால் பரிகாரம் செய்தால் கருத்தை அனுப்புவீர் சொல்லும்!

    கீதா

    பதிலளிநீக்கு
  21. ஹப்பா ஒரு வழியா கருத்து வந்துவிட்டது!!

    கீதா

    பதிலளிநீக்கு
  22. ஜெகெ அண்ணா பகிர்ந்திருக்கும் இந்தக் கதை மிக வித்தியாசமான கதை. சிறுவர்களுக்கான கதை என்பது மட்டுமல்ல, தாத்தா பேரன் உரையாடல் இடையே கம்பராமாயணம் அதுவும் இதுவரை இந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்த்திராத கோணம் என்று மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. கம்பராமாயணம் முழுவதும் எல்லாம் படித்ததில்லை என்பதால் இப்படியான பாடல்களும் அதில் உள்ளன என்பது இது வரை அறியாதது.

    தேடித் தேடிப் பகிர்கிறார். மிக்க நன்றி ஜெகே அண்ணா.

    பட்டாபி எனும் எழுத்தாளர் பற்றி அறிய முடிந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
  23. எல்லா செய்திகளும் சிறப்பு. கதை பகிர்வும் விளக்கங்களும் நன்று.

    பதிலளிநீக்கு
  24. ஸ்டெம் செல் தானம் புதிய விஷயம். நல்ல விஷயம். இதைக் குறித்த விழிப்புணர்வு மக்களுக்குத் தேவை. முதலில் இரத்த தானமும் மக்களிடையே விழிப்புணர்வு பெற நாட்களானது. அது போல் இதுவும் ஆகலாம்.

    மற்ற பாசிட்டிவ் செய்திகளும் அருமை.

    ஜெயக்குமார் சாரின் நான் படித்த கதை மிக வித்தியாசமான கதை என்று தெரிகிறது. கருத்துகள் மிக நன்று.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!