திங்கள், 3 அக்டோபர், 2022

"திங்க" க்கிழமை :  பாரம்பர்ய தஞ்சை அசோகா -  துரை செல்வராஜூ ரெஸிப்பி 

 பாரம்பர்ய தஞ்சாவூர் அசோகா


எபிக்கான சமையல் குறிப்புகள் கைவசம் இல்லை என்று ஸ்ரீராம் அவர்கள் சொன்னதற்காக அவசர கதியில் திரு ஆரூரில் தொடங்கி -  இடையில் பயணம்.. தஞ்சைக்கு வந்து சேர்ந்தாயிற்று..

இதோ பதிவு.. 

(இடையில் பச்சை மிளகாய் சர்பத் என்று யாரும் குறிப்புஅனுப்பி வைக்காதிருக்க வேண்டும் கடவுளே.. )

இதற்கான  படங்கள் ஏதும் இல்லை.. இருந்தாலும் இணையத்தில் இருந்து ஒன்றே ஒன்று..




அசோகம் என்றால்
மகிழ்ச்சி.. சந்தோஷம்..
இந்த இனிப்பு தஞ்சை மராட்டியர்களால் அறிமுகம் செய்யப்பட்டது என்பார்கள்..

செய்முறை:

பாசிப்பருப்பு - 200 கிராம்
 நாட்டுச் சர்க்கரை  - 400 கிராம்
பசு நெய் - 3/4 கப்
கோதுமை மாவு - 4 Tsp 
குங்குமப் பூ 2 சிட்டிகை
ஏலக்காய்த்தூள் - 1/2 tsp 

பாசிப் பயறை வாணலியில் இட்டு கருகி விடாமல் சிவக்க வறுத்தெடுத்து  வாயகன்ற உருளியில்  - 4 கப் தண்ணீருடன் குழையும் படிக்கு வேக வைக்கவும்.. 

முழுமையாக வெந்ததும் மத்து கொண்டு மேலும் கடைந்து கொள்ளவும் .. 
வேண்டுமென்றால் மிக்ஸியில் இட்டு ஒரு சுற்று சுறிக் கொள்ளலாம்.. 

பாசிப் பயறை வறுத்த - அதே வாணலியில் ஒரு ஸ்பூன்  நெய் விட்டு காய்ந்ததும் கோதுமை மாவை (4 டேபிள் ஸ்பூன்) இட்டு இளஞ் சூடாக வதக்கிக் கொள்ளவும்.. 

அதனுடன் வேக வைத்து அரைத்து வைத்துள்ள பாசிப் பருப்பை சேர்க்கவும். நன்றாக கிளறி விட்டு அதனுடன் 400 கி. சர்க்கரை சேர்த்து 4 டேபிள் ஸ்பூன் நெய்யை விடவும்.. 

பாசிப் பயறு கலவை நெகிழ்ந்து வரும் போது குங்குமப் பூவை சேர்த்து கிளறவும்.. அடுப்பு இளஞ் சூட்டில் இருக்கட்டும்.. குங்குமப் பூவின் நிறம் முழுக் கலவையுடன் கலந்து நிற்கும்.. 

இப்போது ஏலக்காய் பொடியை சேர்க்கவும்..

அசோகா இறுகி விடாமல் தளர்வாக இருத்தல் வேண்டும்.. எனவே அசோகாவின் தன்மையைத் தெரிந்து மேலும் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளலாம்..

அசோகாவை சுவைக்கும் போது எவ்விதமான நெருடலும் இருக்கக் கூடாது என்பதனால் இங்கு முந்திரி பாதாம் பருப்பு எதுவும் சொல்லப்படவில்லை.. 

விருப்பமானால் நெய்யில் வறுத்து சேர்த்துக் கொள்ளலாம்.. 

(அதற்காக யாரும் வழக்குத் தொடுக்கப் போவதில்லை..)

இதுவே தஞ்சாவூர் அசோகா என்பது.. 

இந்தியா, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், பர்மா, எங்கும் புகழ் பெற்றது..

பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி -

அப்புறம் என்ன.. 

வழக்கமான பல்லவி தான்!..

40 கருத்துகள்:

  1. செய்முறை சுலபமாக இருக்கிறது நானே செய்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன் நன்றி ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்து பாருங்கள் ஜி.. கைக்குக் கிடைக்கின்றது என்பதற்காக ஊரில் உள்ள பருப்பை எல்லாம் நெய்யில் வறுத்துப் போட்டு கிண்டிக் கொண்டிருக்கின்றார்கள் குழாயடியில் (யூடியூப்பில்)..

      தங்கள் கருத்திற்கு நன்றி ஜி..

      நீக்கு
    2. குழாயில், இட்லி பொடிக்கு துவரம்பருப்பைக் கூட வறுத்துக்கொண்டிருக்கிறார்கள், பருப்புப் பொடிக்கும், இட்லிப் பொடிக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்.

      நீக்கு
    3. சரியாகச் சொன்னீர்கள்.. தயிர் எடுப்பதற்காக ஏந்தலாக சிறு கரண்டி ஒன்று எங்கள் பக்கத்தில்..

      அதை டேபிள் ஸ்பூன் என்று நிலை நாட்டுகின்றார்கள்..

      தூரக் கிழக்கு நாடு ஒன்று.. அங்கிருந்து ஒரு பெண்.. அவளுக்கும் ஹிந்து சமயத்துக்கும் சம்பந்தமே இல்லை..

      அந்தப் பெண் ஒரு சமயம் கோயில் சர்க்கரைப் பொங்கல் என்று செய்முறை காட்டியதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும்..

      கொடுமை..

      நீக்கு
  2. அவசரமாக எழுதி அனுப்பியதையும் ஏற்றுக் கொண்டு பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  3. செய்முறை நன்று.

    அசோகா அல்வா சுவையைவிட அதனைப்பற்றிய விளம்பரங்கள் அதிகம் என்பது என் எண்ணம்.

    திருவையாறு ஆண்டவர் கடை என்று அனேகமாக எல்லாரும் சொல்வார்கள். எனக்கு என,னவோ அங்கே சாப்பிட்ட அல்ஒஆத் துண்டங்கள் தந்த ருசியை அசோகா அல்வா தரவில்லை என்று எண்ணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடையின் பெயரையும் நினைவில் வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்.. அந்தக் கடையில் அசோகா வாங்கித் தின்று 40 வருடங்களுக்கு மேல் ஆகின்றன..

      குழாயடியில் அசோகா கிளறுபவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு தஞ்சாவூரைப் பற்றியே தெரியாது..

      நெல்லை அவர்களுக்கு நன்றி..

      நீக்கு
    2. சரியான முறையில் தயாரிக்கப்பட்ட அசோகா அல்வாவுக்கு குஜராத்துக்குப் போகணும்.

      நீக்கு
    3. ஓ.. அவ்ளோ தூரம் போறதுக்கு நம்மால ஆகாதுங்க...

      நீக்கு
  4. பாரம்பர்யம் என்பது எவ்வளவு வருடங்களாயிருக்கும்? ஜீனியே ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன் இருந்திருக்குமா? கற்கண்டு இலக்கியக் குறிப்புகளில் இருக்கிறது. அதனை எப்படிச் செய்திருப்பார்கள்? எவ்வளவோ கேள்விகள் எழுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // கற்கண்டு இலக்கியக் குறிப்புகளில் இருக்கிறது.. //

      கரும்பின் கட்டி என்று சமய இலக்கியங்களில் வருகின்றது...

      தனித்து எந்தப் பாடல் என்று சொன்னால் தெரிந்து கொள்வேன்..

      நன்றி..

      நீக்கு
  5. அசோகா முன்னெல்லாம் தீபாவளி இனிப்புக்களில் இடம் பெறும். இப்போத் தான் இனிப்பே இடம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா அவர்களுக்கு நல்வரவு.. இங்கேயும் அப்படித்தான்.. ஆறு மாதங்களாகி விட்டன..

      எப்போதாவது பெருமாள் கோயிலிலும் வயிரவர் கோயிலில் இருந்தும் சர்க்கரைப் பொங்கல் கிடைக்கும் ..

      அந்த அளவிற்கு மகிழ்ச்சி..

      நீக்கு
    2. நான் இனிப்பு பக்கமே போகக்கூடாதுன்னு ஒவ்வொரு நாளும் நினைக்கிறேன். என்னை இனிப்பு சூழ்கிறது. நேற்று காலை, பையன் நவராத்ருக்காக ஆபீஸிலிருந்து கொண்டுவந்த பிகானீர்வாலா ஸ்வீட் பாக்ஸ், வீட்டில் செய்த பாதுஷா.. அதற்கு முந்தைய தினம், மாவிளக்கு, பாயசம். அதற்கு முந்தைய தினம் புட்டு. (பசங்க அனேகமா சாப்பிடமாட்டார்கள். பையன், ஆசையை அடக்க கிச்சன் பக்கமே வரமாட்டான். மனைவி ஒரு மைசூர்பாக்கை நாலு நாள் சாப்பிடும் ரகம், இனிப்பில் ஆசையிருப்பினும்). இப்படி இருந்தால் என் ஹெல்த் என்னாகப்போகிறதோ

      நீக்கு
    3. எதிலும் கவனமாக இருங்கள்.. இன்று சர்க்கரை என்று சொல்லப்படும் white sugar முற்றாக விலக்கப்பட வேண்டியதே..

      தங்கள் கருத்திற்கு நன்றி..

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நல்ல நாளாக மலர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். //

      நானும் இவ்வண்ணம் வேண்டிக் கொள்கிறேன்..

      நீக்கு
  7. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே.

    தாங்கள் இன்றைய திங்களில் அவசரமாக அசோகாவை நிலைநாட்டியிருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி.

    செய்முறை விளக்கம் நன்றாக உள்ளது. மிகச் சுலபமாக செய்து விடும் வண்ணம் சுருக்கமான முறையில் அழகாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    இனிப்புதான் சாப்பிட கூடாது என்ற நிலை இப்போது பொதுவாக அனைவருக்கும் ஏற்பட்டு விட்டாலும், (என்னையும் சேர்த்து) அசோகா அல்வாவின் செய்முறையும், படமும் ஆர்வமாக கவர்ந்திழுக்கிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை.? அதனால் தங்கள் பக்குவப்படி கண்டிப்பாக செய்து அதில் சிறிதாவது எடுத்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எவ்வித இரசாயனக் கலப்பும் இல்லை இதில் .. பசு நெய் தான் சொல்லியிருக்கின்றேன்..சுத்தமான கரும்புச் சர்க்கரை உடலுக்கு நல்லது.. எதற்கும் ஒரு அளவு தான்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. ஒரிஜினல் திருவையாறு அசோகா அல்வா என்ற பெயரிலேயே திருவையாறிலும் தஞ்சாவூரிலும் அல்வா கடைகள் இருக்கின்றன. எது ஒரிஜினல் என்பது தான் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அசோகா எனும் இனிப்பு பாரம்பரியமாக தஞ்சை அரண்மனைக்கு உரியது..

      இன்றைக்கு எந்த ஊரில் செய்யப்பட்டதாக இருந்தாலும் ஜீனி சேர்க்கப்படுகின்றது.. சுத்தமான நெய்க்கு இடமில்லை.. டப்பாக்களில் விற்கப்படுவதும் பசு நெய் அல்ல..

      அப்புறம் அதற்கு அசல் அசோகா என்ற பெயர் எதற்கு?..

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  10. அசோகா அல்வா செய்முறை குறிப்பு அருமை.

    எளிதாக இருப்பதால் செய்ய ஆவல் ஏற்படுத்தும் குறிப்பு.

    அகோகா அல்வா அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சியை தரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // எளிதாக இருப்பதால் செய்ய ஆவல் ஏற்படுத்தும் குறிப்பு..//

      அவசியம் செய்து பாருங்கள்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. தஞ்சை அசோகா அல்வா செய்முறை விளக்கம் நன்றாக இருக்கிறது. தித்திக்கும் அல்வா சுவைத்திடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தஞ்சை அசோகா அல்வா செய்முறை விளக்கம் நன்றாக இருக்கிறது..//

      அவசியம் செய்து பாருங்கள்..

      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு
  12. நாவில் நீர் ஊற வைக்கும் அசோகா! நான் இனிப்பூட்டப்படாத பால் கோவாவும் சேர்ப்பேன். 

    பதிலளிநீக்கு
  13. அருமையாக எழுதி இருக்கிறீர்கள் செய்து பார்த்து தான் சாப்பிட வேண்டும் அன்புடன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!