ஞாயிறு, 1 அக்டோபர், 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள்: நெல்லைத்தமிழன் : வைரமுடி யாத்திரை 15

 

வைரமுடி யாத்திரை ஹொசஹொலாலு, மாண்ட்யா பகுதி 15

 

ஹொசஹொலாலு கோவிலின் வெளிப்புற அழகில் மயங்கிக்கிடந்த நாம் இப்போது கோவிலின் உள்ளே செல்வோம். வெளிப்புறத்தில், நல்ல சூரிய வெளிச்சத்தில் கோபுரம் மற்றும் சுற்றுச் சுவர்களில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் நம் மனதைக் கொள்ளைகொள்ளும் அளவில் இருக்கின்றன. ஆனால் கோவிலின் உட்புறம் செல்லும்போது வெளிச்சமின்மை மற்றும் LED வெளிச்சத்தில் உட்புறச் சிற்பங்களின் அழகு அவ்வளவு தெளிவாகத் தெரிவதில்லை. புகைப்படம் எடுத்தாலும் மசமசவென்றே இருக்கிறது. இருந்தபோதும் முடிந்த அளவு நன்றாகப் படமெடுக்க முயன்றிருக்கிறேன்.

 

(இன்னொன்றுகோவிலின் உட்புறம் இப்படி இருப்பதுதான் பக்தியை வெளிக்கொணரும். கோவில் என்ன, சிற்பங்களை வெளிச்சம்போட்டுக் காண்பிப்பதற்கான இடமா?)ஸ்ரீவேணுகோபாலர் சந்நிதி. இதன் வெளியே மேற்புறம் சிறிய அளவில் வேணுகோபாலர் சிற்பம் உண்டு. அதை வைத்து, வேணுகோபாலர் மாத்திரம் 17ம் நூற்றாண்டில் பழைய சிலை இருந்த இடத்தில் பிரதிஷ்டை வைத்திருக்கிறார்கள் என்று அர்ச்சகர் சொன்னார்.மூலவர் நம்பிநாராயணர் சந்நிதிக்கு (இதுதான் கோவிலின் பிரதான தெய்வம்) வெளியே வலதுபுறம் கணபதி சந்நிதியும், இடது புறம் மஹிஷாசுர மர்த்தனி சந்நிதியும் இருக்கின்றன.மஹிஷாசுர மர்த்தனி. இந்தச் சிற்பம் (கடவுள் சந்நிதி) 1 ½ அடி உயரமுடையது. ஆச்சர்யகரமாக, கோவிலின் உள் உள்ள ஸ்வாமி சந்நிதியில் உள்ள சிற்பங்கள் எல்லாமே, கோவிலின் வெளிப்புறத்திலும் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது.லக்ஷ்மி நரசிம்மர். இதில் நரசிம்மரின் கால் பகுதியில் பிரகலாதன் சிற்பம் இருக்கிறது. நரசிம்மரின் மடியில் அமர்ந்திருக்கும் லக்ஷ்மி, பிரகலாதனை அன்போடு பார்ப்பதுபோலவே சிற்பம் அமைக்கப்பட்டிருக்கிறது.
லக்ஷ்மி நரசிம்மர் சந்நிதியின் வாயிலில் மேல் பகுதியில் சிறிய லக்ஷ்மி நரசிம்மர் சிற்பத்தைக் காணலாம்.விதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அழகிய வடிவமைப்பு. முதல் படத்தில் நடுவில் உள்ள இட த்தில் மிகச் சிறியதான சிற்பம் உள்ளது. அடுத்த படத்தில் தர்ப்பைக் கூர்ச்சம் போன்ற டிசைன்.

 


கோவிலின் உள் உள்ள தூண்கள் வழ வழ என பாலிஷ் செய்யப்பட்டுள்ளன. இது எந்த வித அறிவியல் உபகரணங்கள் இல்லாத காலத்தில் செய்திருக்கிறார்கள். (இணையத்திலிருந்து எடுத்த படம். கோவிலின் முழுப் பரிமாணம்)சந்நிதி/கோயிலின் நுழைவாயிலில், அங்கு இருக்கும் தெய்வ உருவம் சிறிய அளவில் சிறப்பாக வடிக்கப்பட்டு உள்ளது. இதை வைத்துத்தான், ஸ்ரீவேணுகோபாலர் சந்நிதியில் உள்ள மூலவர், 17ம் நூற்றாண்டைச் சார்ந்ததுகோவிலில் ஆரம்பத்தில் வைத்திருந்த சிலை இல்லை என்று அர்ச்சகர் காண்பித்தார்.விட்டுப்போன ஒரு சில படங்கள் கீழே (தனிப் படங்களாகக் கொடுக்கணும் என்பதற்காக இணைத்துள்ளேன்)

மூன்று சந்நிதிகளில் உள்ள தெய்வங்கள். சென்றமுறை அர்ச்சகர் ஒரு புகைப்படம் கொடுத்தார். அதனை இங்கு பகிர்ந்துள்ளேன்


இந்தக் கோவிலில் 10 ரூபாய்க்கு ரவா லட்டு பிரசாதம் கிடைத்தது. (ரவா லட்டு, போளி, சொஜ்ஜியப்பம் போன்றவை கர்நாடகாவில் பிரசித்தம். கோவில்களில் கர்நாடக பாணி புளியோதரை பிரசாதமாகக் கொடுப்பார்கள்).  மதியம் நல்ல வெயில். பலரும் கோவிலுக்கு வெளியே சென்று அக்ரஹாரத் தெருவைத் தாண்டி, கடைகளில் ஜூஸ் மற்றும் மினரல் வாட்டர் வாங்கினார்கள். இப்படியாக ஹொசஹொலாலு கோவில் தரிசனம் முடிந்தது.   


அந்தக் கோவிலிலிருந்து எங்கு சென்றோம் என்பதை பிறகு  காண்போம்.


 

23 கருத்துகள்:

 1. வணக்கம் அனைவருக்கும். இன்று பிரயாணிப்பதால் (ஒரு நாள் ஊர் சுற்றல்) தாமதமாகத்தான் வருவேன் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. காக்க காக்க
  கனக வேல் காக்க..
  பார்க்க பார்க்க
  பாவம் பொடிபட..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 3. கலைப் படைப்புகளைக கண் முன்னே நிறுத்துகின்றது பதிவு..

  பதிலளிநீக்கு
 4. இது மாதிரி எல்லோருக்கும் கை கூடி வருவதில்லை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதெல்லாம், கிடைக்கும் வாய்ப்பைப் பொறுத்ததுதானே துரை செல்வராஜு சார்.

   நீக்கு
 5. விவரங்கள் சிறப்பு.
  கோயிலின் உட்புறங்கள் எடுத்து இருந்தாலும் படங்கள் தெளிவாக இருக்கிறது தமிழரே...

  பதிலளிநீக்கு
 6. அனைத்து படங்களும் மிக அருமை.
  வேணுகோபாலர் , லட்சுமி நரசிம்மர், மஹிஷாசுர மர்த்தனி தரிசனம் கிடைத்தது இன்று.
  உள்ளே சன்னதிக்கு குனிந்து போக வேண்டும் போல பட்டர்.
  உள்ளே உள்ள கலை அமசத்தோடு உள்ள தூண்கள் அருமை.

  //நரசிம்மரின் மடியில் அமர்ந்திருக்கும் லக்ஷ்மி, பிரகலாதனை அன்போடு பார்ப்பதுபோலவே சிற்பம் அமைக்கப்பட்டிருக்கிறது.//

  நீங்கள் சொன்னதால் பிரகலாதன் கூப்பிய கையுடன் நின்றதை தரிசனம் செய்ய முடிந்தது.

  பாலிமர் தொலைக்காட்சியில் ஒரு காலத்தில் ஒரு சாபத்தால் மண்ணில் புதைந்த கோவிலை, மீட்டு இருந்த கோவிலை காட்டினார்கள்.
  கர்நாடகா உள்ள "தலகாட்டில் உள்ள" கோவில். .ஹோய்சாளர்கள் கட்டிய கோவில். உடையார் ஆட்சி செய்த காலத்தில் புதைந்தது.

  அதில் நட்சத்திர வடிவ பீடத்தின் மீது கோவில் இருந்தது.
  நீங்கள் இணையத்தில் இருந்து எடுத்து போட்ட கோவில் படம் போல இருந்தது. நட்சத்திர வடிவ மீடத்தின் மேல் கோவில்.சுற்றி வர மணல் குன்று. நீங்கள் பார்த்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

  அருமையான பகிர்வு. ஹொசஹொலாலு கோவில் தரிசனம் பல வாரங்கள் தரிசனம் செய்தோம், நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கோமதி அரசு மேடம். சன்னிதிக்குக் குனிந்துதான் செல்லவேண்டும்.

   இன்னும் தலைக்காட்டிற்குச் செல்லவில்லை.

   இன்று பேளூர் மற்றும் ஹளபேடுக்குச் சென்றிருந்தேன். ஹொசஹொசாலுவைவிட அருமையான சிற்பங்களைக் கொண்ட பெரிய, அருமையான கோவில்கள். மிகப் பெரிய நந்திகள். சிற்பங்களும் இதைப் போன்றது என்றாலும் நிறைய நகாசு வேலைகள். பின்பு எபி ஞாயிறுகளில் தொடராக வரும்.

   நீக்கு
 7. ஆஹா, சிற்பங்கள் அழகை வர்ணீக்க வார்த்தைகள் இல்லை. மிகவும் நுட்பமாகக் கவனித்துப் படங்கள் எடுத்திருக்கும் நெல்லைக்கும் வாழ்த்துகள். எத்தனையோ ஜென்மத்துப் புண்ணீயம் இதெல்லாம் பார்க்கக் கொடுத்து வைச்சிருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரியவங்க உங்கள் வாழ்த்து பெற பேறு பெற்றிருக்கவேண்டும் கீதா சாம்பசிவம் மேடம்.

   சிற்பங்களை நுட்பமாகக் கவனிக்கும் ஆவல் எனக்குச் சில வருடங்களாக இருக்கிறது.

   நீக்கு
 8. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

  நலமா? இன்றும் கலைச் சிற்பங்கள் நிறைந்த
  கோவில்களுக்கு பயணித்து வந்திருக்கிறீர்கள் போலும்...! உங்கள் கோவில் சுற்றுலா ஆர்வத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

  இன்றைய பதிவும் அருமையான பதிவு. அழகான நுணுக்கமான கலைச் சிற்பங்கள். நீங்களும் ஒவ்வொன்றையும் சிறந்த முறையில் படமெடுத்திருக்கிறீர்கள். உங்களால் ஒரு அருமையான கோவிலின் அழகான சிற்பங்களை கண்டு களிக்க முடிந்தது. ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீ வேணுகோபாலர்,ஸ்ரீ மஹிஷாசூரமர்த்தினி அனைவரையும் கண்டு வழிபட்டு கொண்டேன். ஹொசஹொலாலு கோவிலின் அமைப்பையும், சிறப்பையும் ஒவ்வொரு ஞாயறும் மிக அருமையான பதிவாக்கி தந்திருப்பதற்கு மிக்க நன்றி. அடுத்து சென்றவிடங்களை பற்றிய பதிவுகளை தொடர்கிறேன். இங்கெல்லாம் என்னால் நேரில் சென்று பார்க்க சந்தர்ப்பங்கள் அமையாவிடினும், உங்கள் பதிவின் வாயிலாக கண்டு களிக்கும் சந்தர்ப்பம் அமைந்த மைக்கு இறைவனுக்கு நன்றி கூறி கொள்கிறேன். உங்களுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்ப நாட்கள் கழித்து வந்திருக்கீங்க கமலா ஹரிஹரன் மேடம். எல்லோருக்கும் விரைவில் உடல்நிலை சரியாகப் போய் உங்கள் மன அமைதி திரும்பி, நீங்களும் எப்போதும்போல் சு ரு க் க மா க பதிவுகள் போடணும் என்று விரும்புகிறேன். நடக்கும்.

   நீக்கு
  2. இந்தப் பதிவு வைரமுடி யாத்திரையுடன் முடியும் (அதுக்கு இன்னும் 6 வாரங்களாவது ஆகும்). அதற்குப் பிறகு எந்த யாத்திரையை எழுதலாம் இல்லை வேறு பயணங்களைப் பற்றி எழுதலாமா இல்லை ஒவ்வொரு வாரம் வரும்படியான வேறு பயணத்தை எழுதலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

   எதேச்சயாக நேற்று பேளூர் மற்றும் ஹளபேடு பிரயாணம் அமைந்தது.

   நீக்கு
 9. ஆஹா, நெல்லை வெளிப்புறம் தான் அப்படி ஒரு அழகுனா அதை மிஞ்சும் வகையில் உட்புறம்...உட்புறம் கறுப்பு நிறத்தில் இருப்பது இன்னும் அழகு கூட்டுகிறது . அட்டகாசமா இருக்கு உட்புறம். ரசித்துப் பார்க்கிறேன்...விதானத்தில் வாழைப்பூ....செம அழகு டிசைன்,

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா ரங்கன். இதைவிட நேற்று சென்ற கோவில்களின் சிற்பங்கள் மிகவும் பிரமாதமாக இருந்தன. அதுபற்றி ஒரு நீண்ண்ண்ட தொடர் எழுதணும். எப்போது என்று தெரியவில்லை

   நீக்கு
 10. சன்னதி வாசல் ரொம்பச் சின்னது. எனக்குக் கவலை இல்ல!! ஹாஹாஹாஹா....உயரமானவங்க எல்லாம் வளைஞ்சு போகணும் போல. உள்ளே செல்லும் வாயிலும் கூட அப்படித்தான் இருக்கு. சன்னதி ரொம்பச் சின்னதாக உயரம் குறைவாக இருக்கு இல்லையா? குகை போல!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நுழைவாயில் மாத்திரம்தான் சிறியது. (அதுவும் தவிர, மூன்று சந்நிதிகள்தாம். மூலவர் சந்நிதிக்கு இருபுறம் இருப்பது சிறிய சந்நிதிகள், கையை மாத்திரம் நுழைத்து அலங்காரம் செய்யும் நிலையில் இருப்பவை)

   நீக்கு
 11. தூண் சிற்பம் செம. நுண்ணிய கலை, கைவண்ணம் வியக்க வைக்கிறது.

  உட்புறம் அந்த நாலு தூண்கள் இருக்கும் படம்....அப்பகுதிய பார்க்கறப்ப கோயில் என்பதை விட ஏதோ சிற்பக்கலைக் கூடத்தை, ம்யூசியத்தை பார்ப்பது போல அத்தனை அழகு. எங்கு நோக்கினும் கல்லிலே கலைவண்ணம்!

  அத்தனை படங்களும் அசாத்தியமாக இருக்கின்றன நெல்லை. அழகா எடுத்திருக்கீங்க

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கீதா ரங்கன். ஹொய்சாளர்கள் காலத்தில் (சுமார் 300 வருடங்கள்தாம், அதிலும் சில வருடங்கள் போர், அதனால் ஏற்பட்ட கோவில் சேதங்கள் என்று போய்விட்டன) சுமார் 100 கோவில்களைக் கட்டமைத்திருக்கிறார்கள். அதில் பலவும் இல்லை. கோவில்களின் உட்புறத் தூண்கள் கடைந்து எடுக்கப்பட்டன போன்று வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!