சனி, 27 ஜூலை, 2024

படுகர் பைலட்டும் 5 லட்ச ரூபாய் நெக்லெஸும்  மற்றும் 'நான் படிச்ச கதை'

 

மாற்றுத்திறனாளி மகனின் விதியை மதியால் வென்றெடுத்த தாயார்: ஐ.டி., இன்ஜியராக உருவாக்கி அசத்தல் :

தேனி ஸ்ரீராம் நகர் நந்தகோபாலன், சீத்தாலட்சுமி தம்பதியினரின் மூத்த மகன் பாலாஜி 25. பிறவியிலே காது கேளாமல், வாய் பேச இயலாது. ஆனால் இவர் தற்போது பெங்களூரு ஐ.டி., நிறுவனத்தில் பணி செய்து சம்பாதிக்கிறார். கிரிக்கெட், கபடி சிறப்பு போட்டிகளில் மாநில, மாவட்ட அளவில் வென்று பரிசுகளை குவித்து வருகிறார். இவரது ஒவ்வொரு வெற்றியிலும் தாயார் சீத்தாலட்சுமி ஊக்கப்படுத்தி வருகிறார். மாற்றுத்திறனாளி மகனை படிக்க வைத்து, இன்ஜினியராக்கியது எப்படி என சீத்தாலட்சுமி கூறியதாவது..


\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

படுகர் இனத்தின் சாதனையாகவே அமைந்துள்ளது!

நீலகிரி மண்ணின் மைந்தர்களான, 'படுகர்' சமூகத்தில் இருந்து, விமான ஓட்டும் முதல் பெண் பைலட்டாக உருவெடுத்துள்ள 27 வயதான எம்.எம். ஜெயஸ்ரீ...


/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

குப்பையில் ரூ.5 லட்சம் வைர நெக்லஸ்: கண்டெடுத்து கொடுத்த துாய்மை பணியாளர் :

கே.கே.நகர்: சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி, 35; துாய்மை பணியாளர். இவர், கோடம்பாக்கம் மண்டலம் 137வது வார்டில், வீடுகள்தோறும் குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனம் இயக்கி வருகிறார்.

நேற்று காலை, கே.கே.நகர், ராஜமன்னார் சாலையில் உள்ள வீடுகளில் குப்பை சேகரித்து கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள 'வின்ட்சர் பார்க்' அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இசையமைப்பாளர் ஆர்.தேவராஜ், 60, என்பவர், 'என் வீட்டில் உள்ள 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நெக்லஸ், குப்பை போடும்போது அதில் விழுந்ததாக நினைக்கிறோம். தேடி எடுத்து தர முடியுமா...' என, அந்தோணிசாமியிடம் உதவி கேட்டுள்ளார்....


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


 

நான் படிச்ச கதை (JKC)

மீண்டும் கோகிலா

கதையாசிரியர்: கவிஜி

இலக்கியச்சுடர் கவிஜி  ஒரு அறிமுகம்

***********************************

பெயர்: கவிஜி.

வசிப்பிடம்: கோவை

பணி: ஒரு தனியார் கம்பெனியில் மனிதவள மேலதிகாரி

படித்தது: B.com. MBA (finance), PGDip in ADvertising.

படித்துக் கொண்டிருப்பது:

பாரதி, அவன் தாசன், தாஸ்தாவெஸ்கி, காப்ரியேல், மார்க்ஸ், நகுலன், பிரமிள், கோணங்கி, புவியரசு, டால்ஸ்டாய், சார்த்தர், நீட்சே, சே, ஜி. நாகராஜன், தஞ்சை பிரகாஷ், காப்கா, தி ஜா. எம் வி வெங்கட்ராமன், ஓஷோ...என்று அது தொடரும்.

இலக்கு/முயற்சி/கனவு: திரைப்பட இயக்குனர்.

இயல்பு:

இலக்கல்ல வாழ்க்கை. இலக்கை நோக்கிய பயணமே வாழ்க்கை என்ற புத்தனின் தத்துவத்தில் சற்றே சித்தார்த்தனாகி சிதறுவது இயல்பின் திரிபு

எழுதத் தொடங்கியது: மூன்றாம் வகுப்பில் இருந்து.

பெருமிதம்:

தான் ஒரு எழுத்தாளனாக இருப்பதில் பெருமிதமாகவும், அதுவே கடமையாகவும் கருதுகிறார்.

அவரது படைப்புகள்:

4000 கவிதைகளுக்கு மேல்.

150 சிறுகதைகளுக்கு மேல்.

120 ஒரு பக்க கதைகளுக்கு மேல்.

300 கட்டுரைகளுக்கு மேல். (சினிமா கட்டுரைகள் உள்பட)

10 குறுநாவல்கள்.

400 குறுங்கதைகளுக்கு மேல்.

2 நாவல். (3 வது நாவல் எழுதிக் கொண்டிருக்கிறார்)

2 ஸ்க்ரிப்ட் (சினிமாவுக்கானது)

12 குறும்படங்கள் (எழுதி நடித்து இயக்கியது)

முன்னுரை.

இவரது இயற்பெயர் தெரியவில்லை. கல்யாண்ஜி என்றொரு கவிஞர் தமிழ் இலக்கிய உலகில் உண்டு. அவரைப் போன்று இவர் கவிஜி என்ற புனைபெயர் கொண்டிருக்கலாம் . siruathaigal.com தளத்தில் இவரது 52 கதைகள் உள்ளன. இந்தக் கதையும் அங்கிருந்தே எடுக்கப்பட்டது.

 

கதை ஒரு சினிமா பாணியில் திகில் கதையாக எழுதப்பட்டது. சினிமா என்றாலே லாஜிக் எல்லாம் அடிபட்டுப் போகும் அல்லவா ? அப்படி தடுக்கிய சில லாஜிக்குகளை பின்னுரையில் அலசலாம்.

கதையை படிக்கும் போது எனக்குள் எழுந்த சில எண்ணங்கள்.

 

● ஆசிரியரது எண்ண ஓட்டங்களும், எழுத்து ஓட்டமும் ஒன்றோடொன்று பொருந்தாமால் எண்ண  ஓட்டங்கள் வேகமாக ஓடுகின்றன. .அதன் காரணம் கதை சொல்லல்  தந்தி செய்தி போல் அமைந்துள்ளது. திக்கித்திக்கி பேசுபவர் கதை சொல்வது போல் உள்ளது.

● கருப்பொருள் சிறிதே காசா காதலியாஆனாலும் அதை வாசகர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக எழுதியிருப்பது சிறப்பு.

● ஆசிரியர் எழுத்து என்றில்லாமல் பல துறைகளிலும் வெற்றி பெற ஆசைப்படுவது கதை சொல்லலிலும் வெளிப்படுகிறது.

● கதை சொல்லலில் ஆசிரியர் கோணங்கியைப் பின்பற்றுவது போல் தெரிகிறது. அவரைப்போன்றே ஒவ்வொரு வாக்கியத்திலும் சில அடைமொழிகளை சேர்த்திருப்பதைக் காண முடிகிறது. ஒரு உதாரணம் :  //வந்த இடத்தில் வழக்கம் போல தேடுதல் வேட்டை தான். குளிர்கால இரவில் குரங்கு மனம் வாய்க்கும் போல//

இனி கதைக்குள் செல்லுங்கள். கதை முழுதும் தரப்படவில்லை. சுருக்கம் மட்டுமே. சில வரிகளை மாற்றி அமைத்திருக்கிறேன். கதையின் சுட்டி 

மீண்டும் கோகிலா (கதை சுருக்கம்)

“50 லட்சம் வேண்டுமாநீ படித்த பள்ளிக்கு இப்போதே செல்.”

இப்படி ஒரு குறுஞ்செய்தி மட்டும் வந்திருந்தால்வேலையற்றவர்களின் வலை என்று ஒதுக்கி இருப்பான். கூடவே உன் கோகிலா காத்திருக்கிறாள்என்றும் இருந்தது.

மீண்டும் கோகிலாவா…?!…”

ஏதோ நாடகம் போலவே இருந்தது. யார் இயக்க நடக்கிறது இதெல்லாம். சித்தார்த்தனுக்கு தலை சுற்றினாலும்தலை சுற்றலில் ஒரு கற்றல் இருப்பதாகவே இருந்தது.

 

கோத்தகிரி குளிர் வாட்டி வதக்கி கொண்டிருக்கிறது. உள்ளும் புறமும்வெளியும் உள்ளும் மாறிக் கொண்டே இருப்பதை இந்த இரவு எதையோ கடித்து கடித்து சொல்லிக் கொண்டிருக்கிறது. முகம் தெரியாத குறுஞ்செய்தி. அதை நம்பி இத்தனை தூரம்

கிட்டத்தட்ட இருபது வருடங்கள். மறந்தும் போகலாம் என்பதான கால கட்டம். மீண்டும் மீண்டும் குறுஞ்செய்தியை படித்தான். அது குறுஞ்செய்தி போல இல்லை. அதில் பெரும் செய்தி இருப்பதாக தோன்றியது. இந்த இரவில்யாருக்கு…. யாருக்கு கோகிலாவை தெரியும்…! யாரோவிளையாடுகிறார்கள். அல்லது வினை ஆற்றுகிறார்கள். கவனம் தலைக்குள் ஓரிடத்தில் குவிந்தது.

 கோத்தகிரிக்கு ஒரு திருமணத்துக்கு வந்த செய்தி யாருக்கும் தெரியாதே. பின்ன எப்படி. அதுவும் தான் படித்த பள்ளிக்குஅதுவும்கூட படித்த கோகிலா பற்றி தெரிந்திருக்கிறது என்றால்விஷயம் விளையாட்டல்ல. அதையும் தாண்டி யார் இந்த செய்தியை அனுப்பினது என கண்டுபிடிக்க தூண்டியகியூரியாசிட்டி.

நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருக்கிறது. கூட்டத்தில் இருந்து விலகி.. தனித்த நடை. தவித்த நடையும் தான். இனம் புரியாத இருளில் மனம் நெருடும் ஒளிவழி நடத்தியது.

கோகிலா என்ற பெயர். இவள் எப்படி இங்கு…. இருக்க முடியும். திருமணத்துக்கு பின் ஓசூரில் வாழ்வை தொடங்கியவள்.. என்ன கணக்கில் இங்கே இப்போது. முகவரி அற்ற கடிதம் போல அந்த பனி விழுந்த புல்வெளிகளின் வழியே நடந்தான்

 துப்பிக்கப்பட்ட பள்ளியாக இருந்தாலும்…  மனதுக்குள் நிற்கும் பால்ய பள்ளி வாசலில் ஒரு யாரோவாய் நிற்பது சற்று பயத்தைக் கொடுத்தது. பள்ளி வாட்ச்மேன்ஸ்வெட்டர் குல்லா சகிதம் நாற்காலியில் சரிந்திருக்கநியாயமான வழிவேலைக்கு ஆகாது. எகிறி குதிக்கையில்இதயம் நெற்றி முட்டியது. அதே உள் மைதானம். மரங்கள் சூழ்ந்த மௌன மொழி.

இங்க எப்படி கோகிலா…?” அனிச்சையாய் அலைபேசியை எடுத்தான். ஆல்ரெடி அடுத்த செய்தி வந்து குத்த வைத்திருந்தது.

நீ படித்த பதினொன்றாம் வகுப்புக்கு செல். கோகிலா காத்திருக்கிறாள்…” – திகில் அடித்த பெருமூச்சு தொண்டைக்குள் இறுக்கி கவ்வியது.

ஏனோ கைகள் நடுங்க தொடங்கி விட்டன. காதுக்குள் இரவின் சத்தம் எதையோ திருகியது. நண்பர்களை அழைத்து வந்திருக்கலாமோ.. ஒருவேளைகோகிலா செத்து போயிருப்பாளோஇது ஏதாவது ட்ராப்பாஇந்த இருட்டில் இந்த நேரத்தில்…. இருபது வருடங்களுக்கு முந்தைய காதலி தனக்காக காத்திருப்பதுஎன்னவாக இருக்கும்

கால்களில் கவன ஈர்ப்பு. நிலவில் நடப்பது போல நினைத்திருக்கலாம் ஒவ்வொரு விரலும். அழுந்த பதிந்து ஆழம் விடுத்துநடக்கையில்இதெல்லாம் எதற்குதிரும்பி விடலாம் என்று உள்ளே ஓர் எச்சரிக்கை குரல். ஆனாலும்இதன் பின்னால் இருப்பவர் பற்றி தெரிய வேண்டும். கண்டிப்பாக இங்கே ஆட்கள் மறைந்து இருக்கலாம். இது ஏதோ ஒரு விளையாட்டு மாதிரியாக கூட இருக்கலாம். விளையாடுவது யார் என்று தெரிய வேண்டுமானால்அவர்கள் போக்கில் போய் தான் பார்க்க வேண்டும். இயல்பாகவே தேடல் கொண்ட சித்தார்த்தனுக்கு இந்த விளையாட்டு உள்ளூர பிடித்தே இருந்தது.

பதினொன்றாம் வகுப்பின் வாசலில் நின்றான். தான் படிக்கும் போது இந்த வாசல் தான் பதினொன்றாம் வகுப்புக்கு வசந்தம் திறந்து விட்டது. இப்போது வேறு வகுப்பாக கூட இருக்கலாம். கணக்கிட்டுக் கொண்டிருப்பவன் அறியாமலா இருப்பான்.

வைப்ரேஷனில் பேண்ட் பாக்கெட் அதிர்ந்தது. தெரியும். இன்ஸ்ட்ரக்சன் ஆன் தி வே. வேகமாய் எடுத்துவிரலைத் தொடுத்து திரையை திறந்தான்.

எதிரே பெருங்கதவு இருக்கிறது.

ஆம் தெரிந்தது தானே. திறந்து இடது பக்கம் இருக்கும் 50 லட்சத்தை எடுத்துக் கொள். ஆனால் வலது பக்கம் சென்று கோகிலாவை கொன்று விட்டு செல்.

மீண்டும் செய்தியை தெளிவாக படித்தான்.

கோகிலாவை கொன்று விட்டு 50 லட்சம் எடுத்து செல். அல்லது 50 லட்சத்தை மறந்து விடு. கோகிலாவை கூட்டி செல்.

அலைபேசி திரையையே வெறித்து பார்த்தான். யார் இதெல்லாம் செய்வது. எதற்காக செய்கிறார்கள். கண்டிப்பாக கோகிலாவுடனான காதல் கதையை நன்கு அறிந்தவர் தான் இதை செய்ய முடியும்.

யார் இதை செய்வது. எப்படி நம்புவது…. உள்ளே கோகிலாவோ பணமோ இருப்பதை. கண்கள் சுற்றிலும் சுற்றியது. யாரோ வீடியோ எடுத்துக் கொண்டிருப்பது போல எண்ண சுழற்சி. வேகமாய் திசை விட்டு நடக்க ஆரம்பித்தான். உள் மைதானத்தில் நடக்க நடக்கவே ஓட வேண்டும் போல.. உள்ளே எதுவோ உந்தி தள்ளஓட ஆரம்பித்தான்.

இது தேவையா….? வந்தது கல்யாணத்துக்கு.!.. அட்டன் பண்ணிட்டு ஊரை பார்த்து போறத விட்டு…. கொலை கேஸ்ல சிக்குனா….என்னாகிறது….?

ஓடினான். ஓடினான். பள்ளி உள் மைதானம் முழுக்க ஓடினான். அவன் கால்கள் அவன் கட்டுப்பாட்டில் இல்லை. வெளியேறும் கேட் நோக்கி ஓடாமல் எதிர் திசையில் ஓடினான்.

வட்டம் பூமியில் இருக்க.. கால்களின் திரும்பல்கள் மீண்டும் மீண்டும் அதே புள்ளிக்கு திரும்புவது நிகழ்வது. நிகழ்ந்து முடிக்கையில் அவன் கை பதினொன்றாம் வகுப்புக்கு எதிரே நின்ற மரத்தில் மூச்சிரைக்க முட்டுக் கொடுத்து நின்றது. கையில் தழும்பு தட்டுப்பட்டது போல உணர்ந்தான். அத்தனை குளிரிலும் மனதுக்குள் ஒரு கம்பளி சூடு நொடியில் கொப்பளித்தது. என்ன இது என்பது போல அலைபேசியின் ஒற்றைக் கண் திறந்து கையில் தட்டுப்பட்ட கோட்டில் காட்டினான்.

இருள் மீறிய கண்களில் அதீத ஒளி போல கண்களை அழுந்த மூடி மீண்டும் திறந்தான். காம்பஸில் இதயம் வரைந்து உள்ளே சித்தார்த் கோகிலாஎன்று எழுதி அம்பிட்டிருந்தது தெரிந்தது.

எப்ப எழுதினது…? இப்பவும் புதுசா இருக்கிறது என்றால்புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

யார்ரா அதுஎன்ன வேணும்…” குரலை உயர்த்துவதாக நினைத்து தொண்டைக்குள்ளாகவே பொதுவாக கட்டடம் பார்த்து பிளிறினான்.

கோபமாய் வந்து விழுந்தது வைப்ரேஷன்.

யாரும் உன்னை கட்டாயப்படுத்தல. பணம் வேணும்னா அவளை கொன்னுட்டு எடுத்துட்டு போ.. இல்ல அவளை கூட்டிட்டு பணத்தை விட்டுட்டு போ. அதை விட்டு சீன் கிரியேட் பண்ணாத. கொன்னே போட்ருவோம்..”

மிரட்டல் மாதிரி எல்லாம் தெரியவில்லை. வலிமையானதீர்க்கமான குறுஞ்செய்தி.

யோசிக்க இயலவில்லை. வேகமாய் கிளம்பி விட எத்தனித்து திரும்புகையில் ஒரு இருமல் சத்தம் எதிரே இருந்த பதினொன்றாம் வகுப்பு அறைக்குள் இருந்து.

முதுகு பக்கம் யாரோ நிற்பது போல திகு திகுவென கழுத்தில் வியர்வை கொப்பளித்து ஒழுகியது. காதுக்குள் இனம் புரியாத இரைச்சல். பெருமூச்சு இழுத்துக் கொண்டான். முகத்தை விரித்து இயல்பாக்கினான். வேகமாய் திரும்பியவன் தம் கட்டிய மூச்சோடு அறைக்கு வெளியே கொஞ்சமாக திறந்திருந்த ஜன்னலை பட்டும் படாமல் தொட்டு இன்னும் கொஞ்சம் மெல்ல நகர்த்தினான்.

பார்த்த கணம் வாய் பொத்திதான் தன்னை அடக்க வேண்டியதாகி விட்டது. உள்ளே மல்லிகை பூ சூடி.. மணப்பெண் போல அமர்ந்திருக்கிறாள் கோகிலா. உடல் சற்று பருத்திருக்கிறது. கண்கள் அனிச்சையாய் அந்த அறையை சுழற்றஎதிரே திறந்திருக்கும் ஒரு பேக்கில் கட்டு கட்டாக பணம்.

அப்படி என்றால் இங்கே நடந்து கொண்டிருப்பது எதுவுமே விளையாட்டு அல்ல. நிஜம்தான். ஒருவேளை உள்ளே சென்று நான் என்ன செய்கிறேன் என்று கேமரா வைத்து லைவாக ஷூட் போய்க் கொண்டிருக்கிறதோ என்னவோஉலகமேதன் செயல்களை பார்த்துக் கொண்டிருக்கிறதோ என்னவோ….

பன்னெண்டாவது முடிந்ததுமேநாற்பதில் இருந்த ஒரு பணக்கார சாதி வெறியனுக்கு கோகிலா இரண்டாம் தாரமாக கட்டி வைக்கப்பட்டு ஓசூர் சென்றது வரை தான் தெரியும். பிரிகையில்என்னவோ செய்தது. அல்லது அழுது திரிந்த காலமும் தான் அது. எல்லாவற்றையும் மறக்கடிக்கும் சக்தி காலத்திற்கு உண்டு.

இரண்டாம் தாரம்அடுத்த நான்கைந்து வருடங்களில் கணவன் மரித்து போக விதிக்கப்பட்டிருக்கிறது. வீடு வாசல்.. சொத்து.. மூத்த தார பிள்ளைகள்.. ஆடு மாடு எருமைகள்வாய்க்கால் வரப்பு வயல்தோட்டம் தொரவு மரங்கள் என்று ஒரு எஜமானியின் வாழ்வு கோகிலாவுக்கு. தொடர் ஓட்டம் அவளை துவள செய்து விட்டது. காசு பணம் என்று அவள் ஒரு இயந்திரமாகி போனாள். வாரிசுகள்.. சொந்தங்கள்உறவுகள் என்று அவளை கடவுளாக்கி கும்பிட ஆரம்பித்து விட்டார்கள். அவளே நினைத்தால் கூட ஆசைக்கு ஒருவரோடு சேர்ந்து படுக்க முடியாது. போதும் போதும் என்றாகி விட்ட பொழுதில் செத்து விட தீர்மானித்தாள். உள்ளே பொங்கும் எண்ணங்களின் வழியே அவள் தன்னை சுமந்து திரிய விரும்பவில்லை. நீண்ட நெடிய தனிமையின் தகிப்புக்கு பிறகு கிணற்றில் குதிக்க நிற்கையில் தான்அந்த அழைப்பு.

எப்படியும் சாக தான போற. உன் காதலன் சித்தார்த்தன் கையால் சாகு. அவனுக்கு 50 லட்சம் கிடைக்கும். ஒருவேளை அவன் உன்னை கொல்லலன்னாஅவனோடு வாழும் வாழ்வின் இரண்டாம் கட்டம் திறக்கும்…” என்றார்கள்.

பெரிய கம்பெனி. பெயர் சொன்னார்கள். பணக்கார விளையாட்டு என்றார்கள். அவன் பணத்தை எடுப்பானா உன்னை கொல்வானா என்பது தான் இந்த கேமின் பர பர trp என்றார்கள். யாருக்கும் தெரியாது. இரண்டு பணக்கார முதலைகள் பெட் கட்டி விளையாடும் விளையாட்டு என்றார்கள். கோடிகளில் பணம் புழங்குகிறது என்றார்கள். “பிடித்தால் கலந்து கொள். அல்லது இந்த அழைப்பை மறந்து விட்டு கிணற்றில் குதித்துக் கொள். விஷயம் வெளியே போனால் குடும்பம் இருக்காது..”  என்று கட் ஆனது.

வித விதமான யோசனைகளின் வழியே அவள் ஆல மரத்தடியில் அமர்ந்து தீர்ந்து போகும் அளவுக்கு சிந்தித்தாள். பணம் பற்றிய பேச்சாக இருந்தால் விட்டிருப்பாள். சித்தார்த் பெயர் தெரிகிறது என்றால்அவனோடு கொண்ட உறவு தெரிகிறது என்றால்விஷயம் பெருசு. புரிந்து கொண்டாள்.

கொஞ்சம் கொஞ்சமாக காதல் எனும் பாச கயிறு அவளை இறுக்கியதை நினைத்துக் கொண்டாள். எந்த மரத்துக்கு அடியில் இருந்து வருவான் என்று தெரியாது. அப்போது தான் பூத்தது போல ஒரு இலையின் வடிவத்தில் மிதந்தபடியே வரும் அவனை காதலிக்காமல் விட்டால் தான் தவறு. அவன் நிஜமாக சொல்கிறானாகாதல் எனும் விளையாட்டாஅதெல்லாம் தெரியாது.

அந்த வயதுஅவனும் சிறுவன்ஒன்றும் இயலாத போது இரண்டாம் தாரம் சரி என்றே பட்டது. பெரிதாக பேச வாய்க்காத கோகிலாவுக்கு காலத்தின் போக்கில் தான் தன் போக்கும்.

நினைத்த எதுவும் கிடைக்காத நிலவில் வாழ்ந்து விடலாமா என்று வானம் பார்த்து கிடக்கும் அவள் இரவுக்குதுணை எப்போதும் இல்லை. ஒரு மூடாக்கு எப்போதும் அவளை சூழ்ந்திருப்பதை தான் அவளும் விரும்பினாள். இந்த அறைக்குள் செல்லும் நொடிகளில் அந்த மரத்தை தொட்டு தடவி கன்னம் தேய்த்து கண்கள் குளிர்ந்து தான் சென்றாள். காதலின் வலிமைக்குள் வார்த்தைகள் இல்லை. காதலின் ஆற்றாமைக்குள் அழுவது கூட அதிகம் தான். அவள் காத்திருந்தாள். இப்போது கதவைத் திறந்து கொண்டு வர போகிறான். மல்லிகை பூவில் மனத்தின் வாசம் மௌனத்தில் கசிந்து கொண்டிருந்தது.

நேரம் ஓடிக் கொண்டே இருக்க.. மெல்ல நடந்து சுற்றி சுற்றி சுழன்ற பின்னிரவு காற்றை போல ஜில்லிட்டிருந்தான்சித்தார்த்.

கதவை திறந்தால்ஒரு பக்கம் காசு. ஒரு பக்கம் காதல். காதல் என்றால்இருபது வருடத்துக்கு முந்தைய காதல். கிட்டத்தட்ட எல்லாமே மறந்து போன தருணம் தான். அவள் வாழ்வோ தாழ்வோ தனக்கு எந்த விதத்திலும் பாதிக்க போவதில்லை. அதுவும் சிறு வயது பப்பி காதல். அதுக்காக அவளை கொலை பண்ணிட்டு 50 லட்சத்தை எடுத்துக்கலாமாஏன் எடுத்தா தான் என்ன.. இதுவரைக்கும் நம்ம வாழ்க்கையில் அவ இல்ல. இனி மேலும் இருக்க போறது இல்ல. அதுக்காக கொலை செய்யற அளவுக்கு நியாயம் கற்பிக்க முடியுமாவெறும் காசுக்காகவெறும் காசா.. காசு தான் கடவுள்…. சரி அது நியாயமா வரணும்சரி காசு எடுக்காம அவளை காப்பாத்தி கூட்டிட்டு போய்ட்டாஅதுக்கப்புறம்அவளை கூட வெச்சுக்க முடியுமாசரி கொலை செஞ்சுட்டு அது பிரச்சனை ஆனா…. அதை தான் தெளிவா சொல்றானுங்களேஇது பெரிய இடத்து கேம். துளி லீக் ஆகாதுன்னு. ஒருவேளை கேமரா வச்சு படம் புடிச்சிட்டு இருந்தாமுதல்ல காதலிச்ச மனுஷியை கொலை செய்யன்னு யோசிக்கறதே தப்பில்லையாகாதலியோ தெரியாத மனுஷியோ கொலை எப்பிடி சரியா வரும்வராதுதான்ஆனா அந்த பக்கம் 50 லட்சம்இருக்கேஅதுக்கு முன்னால ஒரே ஒரு கொலைஅதுவும் கேமில் நடக்கற கொலை தப்புன்னு தோணல. போகும் போதும் வரும் போதும் வெச்ச கண் எடுக்காம மேல் நோக்கி கள்ள பார்வை பார்ப்பாளேஅவளயாகொல்லனும்

தலையை பிடித்துக் கொண்டு அந்த மரத்தின் அடியே இருட்டை கலைத்து அமர்ந்தான். அவன் கண்களில் நடுக்கம்.

உள்ள வந்துட்டா ரெண்டுல ஒன்னும் பண்ணிடனும். இல்லன்னா இப்படியே வெளியே ஓடிடனும். அதை விட்டு உள்ள போய் ஆட்டத்தை மாத்தினாநாளைய கேமில் மொத்த குடும்பமும் இருக்கும்.. ஜாக்கிரதை.” – குறுஞ்செய்தியில் கூர் கத்தி நுனி நாக்கு நீட்டி மிரட்டியது.

சரி எது தவறு எதுஒன்றும் விளங்கவில்லை. 50 லட்சம் என்பது சாதாரணமா என்னஒவ்வொரு மாசமும் ஓடி ஓடி.. ஓய்ஞ்சு போகிற வாழ்வுஅவனை சுற்றி இருள் தின்னும் வண்டாக சுழன்றது. என்ன பெரிய காதல்இத்தனை வருஷம் தேடி வந்தாளா என்னஇப்போ வந்து உக்கார்ந்துருக்கான்னாஇந்த கேம்ல அவளுக்கும்தான தொடர்பு இருக்கும்.. அவ சம்பந்தம் இல்லாம இங்க எப்பிடி வர முடியும்அவனுக்கும் நன்றாகவே புரிந்தது. இது பிக்பாங்ஸ் மாதிரி ஒரு கேம். எல்லாமே அந்த கார்பொரேட் கனவான்கள் கண்டு கொண்டிருக்கிறார்கள். இது ஒரு ட்ரேப். உள்ளே வந்து மாட்டிக் கொண்டாயிற்று. இனி இரண்டில் ஒன்று நிகழ்ந்தே தீர வேண்டும்.

முன்னும் பின்னும் மூடாக்குமுகம் காண தவித்தது. மெல்ல எழுந்து ஜன்னலோரம் சென்றான். பை நிறைய காசுகட்டு கட்டாய்…. பந்தி விரிக்க காத்திருக்கிறது. வலது பக்கம் கண்களை உருட்டினான். மல்லிகை பூ வாசத்தில்.. ஊறிய உடலோடு கண்களில் வெறுமையோடு அமர்ந்திருந்தாள் கோகிலா. கண் மை அப்பிய காலத்தை மெல்ல மெல்ல சிமிட்டி எதை யோசிக்கிறாள் என்று தெரியவில்லை. என்ன கருமாந்திர காதல் இது. இருபது வருடங்களுக்கு பிறகு இப்படி வந்து தூண்டில் இட்டு இயலாமையை குத்தி காட்டுகிறது. வாழ்வா சாவா கேம் எனில்எல்லாவற்றுக்கும் தயாராகத்தான் இருப்பான்கள்கார்பொரேட் கழிசடைகள். மனித உயிரை பணயம் வைத்து விளையாடும் அவர்களின் அதிகார மையத்தின் முன்தான் ஒன்றுமில்லாத வயிறாக நிற்பது மயிறு போல இருந்தது

மீண்டும் கல்யாண மண்டபம் சென்று விட நினைத்தான். ஆனாலும் ஆதி ஆசை அவனை அபகரிக்க பார்த்தது. அதிலும் அங்கோர் காதல் மனம் அவனை கொத்தி தின்றது. கொக்கரிக்கும் இருட்டில் வெளிச்சம் ஊதி அணைத்து விடத்தான் ஆவல். ஆனாலும் இன்னொரு மெழுகுவர்த்தி எரிவதுதான் அபத்தம். ஆபத்தும். அழுகையே வந்து விட்டது. இதே வகுப்பில் அவள் ஜடையை பிடித்துக் கொண்டு எப்டி இவ்ளோ நீளமான கூந்தல் உனக்கு…!?” என்று கேட்டு ஆச்சரியத்தில் புன்னகைத்த காலம்புகை நடுவே நெளி வளையும் ஊதுபத்தி வாசமாய் அருகியது.

50 லட்சம் மீசை முளைத்து ஆசை காட்டியது. நிரவி பரவி கிடக்கும் இருட்டுக்குள் ஒரே உருவத்தில் கடவுளும் சாத்தானும்.

அவன் மெல்ல எழுந்தான். மௌனத்தில் அழுவது ஒரு மாதிரி பழகி விட்டிருந்தது. அறை கதவை நோக்கி நடுங்கும் கால்களைப் பதித்தான். நகக்கண்கள் பத்திலும் நங்கூரம். என்ன முடிவு எடுத்திருக்கிறான் என்று அவன் முக பாவனைகள் காட்டிக் கொடுக்கவில்லை. காலத்தின் கழுத்தில் இறுகி கொள்ள தவிப்பவன் போல கண்கள் சிமிட்டவும் மறந்த இயந்திரம் அவனுள். நடந்தான். ஓர் ஊமை ஆமையின் நகர்வு அது.

சட்டென ஓடிக் கொண்டிருந்த லைவ் டிவி அணைந்தது.

எதிர் எதிரே அமர்ந்து குடித்துக் கொண்டிருந்த போட்டியாளர்கள்பணக்கார கோபத்தில் ஆளுக்கொரு ஷிட்டை கத்தினார்கள்.

என்னாச்சுஎன்னாச்சு…”

சார் கேமரால என்னவோ பிரச்னை…. டூ மினிட்ஸ்….” என்று கூலியாட்கள் ஓடோடி கேமரா அறையில் என்னென்னவோ செய்ய….

பெட் கட்டிய பணக்கார பங்காளிகள்ஒருவரை ஒருவர் தீர்க்கமாக பார்த்துக் கொண்டார்கள்.

இப்போது அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியாதுஎன்பதால் ஆர்வம் இன்னும் மேலோங்கபெட் தொகை அதிகமானது.

அவன் கண்டிப்பாக கொன்னருப்பான்….. இந்தா இவ்ளோ…”

இல்ல காதல் கண்ண மறைச்சிருக்கும்காப்பாத்தி இருப்பான்…. இந்தா இவ்ளோ…”

இரண்டே நிமிடங்களில் அவர்கள் சொன்னது போல லைவ் மீண்டும் தெரிய ஆரம்பித்தது.

எஸ்நினைச்ச மாதிரியே காசு தான் ஜெயிச்சிருக்குகாதலாவது கறிக்கடையாவதுவெச்சு அமுத்தினான் பாரு…” கொலை செய்வான் என்று பந்தயம் கட்டிய முதலை கொண்டாட்டத்தில் குதித்தது. எஸ் எஸ் என்று கத்தியது.

அவள் கழுத்தில் மடங்கி இருந்து கையை நடுக்கத்தோடு எடுத்த சித்தார்த் உடல் உதற எழுந்தான். நிற்கவும் முடியாத தலை சுற்றல். மெல்ல நகர்ந்து சுற்றும் முற்றும் தன்னையே பார்ப்பது போல பார்த்தான். இன்னும் மெல்ல நகர்ந்து பணப்பையை பார்த்தான். தொட்டான். தூக்க முடியாமல் தூக்கினான். அவன் முகம் வியர்த்து கொப்பளித்திருந்தது. நா வறண்டிருந்தது. ஏதேதோ யோசனை. தலை குனிந்தே நின்றான். அவளையே வெறித்து பார்த்தான். பெருமூச்சு இழுத்தபடி வகுப்பை விட்டு வேகமாய் நடந்தான். தன் பலத்தை எல்லாம் திரட்டி வெளியேறுவது போல இருந்தது. நடக்க நடக்கவே அவன் கண்கள் பொங்க ஆரம்பித்தது. அவனையும் அறியாமல் விசும்ப தொடங்கி இருந்தான்.

சற்று முன் நிகழ்ந்த எதுவும் நிகழ்ந்த அதுவல்லஎன்று தான் நம்பினான். என்ன நடந்தது ஏன் நடந்தது எதுவும் மூளையில் ஒட்டவில்லை.

கொல்ல வேண்டும் என்று தொட்டானாவா போகலாம் என்று தொட்டானா என்று அவனே யோசிப்பதற்குள்தான் அவன் அதை அறிந்தான்.

சுவரோரம் சாய்ந்தமர்ந்திருந்த கோகிலாவின் உடல்சூடு அடங்க தொடங்கிசில்லிட ஆரம்பித்திருந்ததை கைகள் அறியும் போதே கணங்களில் உணர்ந்தான். உடலில் மூச்சு இல்லை. துடிப்பு இல்லை. காதலால் கன்னம் தொடுபவன் போல தொட்டு மீண்டும் உறுதி படுத்தினான். கோகிலா இறந்து விட்டிருக்கிறாள்.

தொட்ட கை தொட்டபடி இருக்கஉள்ளே கம்பியூட்டர் இதயம் யோசிக்க ஆரம்பித்திருந்தது. காதுகண்களில் தன்னை மறைந்திருந்து கவனிக்கும் கேமராக்களை உணர்ந்தான். சமகால மூளை சடுதியில் வேலை செய்தது. வலது கையை கோகிலாவின் கழுத்தில் போட்டான். காதலனின் கை பிடியில் மெய்ம்மறந்து அமைதியாய் இருக்கலாம் என்று தோன்றலாம் தானே காட்சி. அதன் நீட்சியில் கையை கழுத்தோடு அழுத்தம் கொடுத்து இறுக்க ஆரம்பித்தான். வேகமாய் முன்னேறி கால்களோடு கால்களை பின்னி அழுத்தி கொண்டான். அவனே அவள் உடலை அவள் அசைப்பது போலவே அப்படியும் இப்படியும் அசைத்தான். கழுத்தை நடுங்குவது போன்ற பாவித்து துள்ளினான். ஒரு கொலையை வெகு நுட்பமாக ஒரு மரணத்தில் நிகழ்த்தினான்.

வெளியே திடும்மென அடித்து சுழன்ற காற்றில் இரண்டு நிமிடங்கள் அவனுக்கானது என்பது இயற்கை விதி. கட்டான லைவில் ஒரு டெத்.

நினைத்து நினைத்து புலம்பும் கணத்தோடு வேகமாய் ஓடியும் நடந்தும் சென்று கொண்டிருந்த சித்தார்த்க்குள் கொம்பு முளைத்த புத்தன் கத்தினான். அலறினான். கர்ஜித்தான். கோகிலா எதற்காக இறந்தாளோதெரியாது. ஆனால் தனக்காகவும் இறந்தாள் என்று நினைக்க நினைக்க பண சுமையை விட மன சுமை கூட ஆரம்பித்திருந்தது.

பின்னுரை.

கதையில் லாஜிக் பல இடங்களிலும் இடிக்கிறது என்று முன்னுரையில் கூறியிருந்தேன். ஒவ்வொன்றாக காண்போம்.

1. சித்தார்த்துக்கு செய்தி அனுப்பியர் யாரென்று  தெரியாது என்பது சரியில்லை., குறும்செய்தி காணும் போது அது அனுப்பியவர் எண் அல்லது  பெயரையோ காட்டும். அதில் இருந்து விளையாடுபவர் யார் என அறிய முடியும். மேலும் சித்தார்த் பற்றிய விவரங்கள், அவன் செய்த குறும்புகள் பற்றி  அறிந்திருக்க வாய்ப்பு  பள்ளித்தோழர்களுக்கு மட்டுமே உள்ளது.,

2. பள்ளிப்படிப்பு முடிந்து இருபது வருடங்கள் முடிந்த பின் பப்பி காதலி கோகிலாவை; வேறு ஒருவனின் விதவையைக் கூட்டிக் கொண்டு செல்ல விருப்பம் என்பது சரியில்லை.

3. டி வி கண்கள் நோக்குகின்றன என்பதை உணர்ந்தவன், பதியும் காட்சிகள் அவனை குற்றவாளியாக சித்தரிக்கும் என்பதை அறிந்தவன், ஏன் அறைக்குள் நுழைய  வேண்டும்.

4. கோகிலாவை கூட்டி செல்லும் நோக்கத்துடன் அவளை அணுகியவன் அவள் இறந்துவிட்டதாய் அறிந்தும் கொலை செய்வது போல் நடித்தது சரியில்லை.

சித்தார்த் பள்ளிக்குச் செல்வது வரை சிறிது சஸ்பென்ஸ் நிலை நாட்டிய ஆசிரியர் வாசகர்கள் அனுமானித்த முடிவை மாற்றி எழுத வேண்டி பணக்காரர்களின் விளையாட்டு என்றெல்லாம் பூ சுற்றி, பிக் பாஸ் சவால்களையும் உள்ளிழுத்து தற்போதைய தமிழ் டி வி தொடர்கள் போல அமைத்திருக்கிறார். உண்மையில் இக்கதையை வாசித்து புரிந்து கொள்ள மிகவும் சிரமப்பட்டேன்

28 கருத்துகள்:

  1. முன்னுரையில்:

    /.கல்யாண்ஜி என்றொரு கவிஞர் தமிழ் இலக்கிய உலகில் உண்டு. //

    ஹி..ஹி.. யாரும் அவர்?..

    பதிலளிநீக்கு
  2. யாராம் அவர்? -- திருத்தி வாசிக்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியாதா என்ன? வண்ணதாசன் ஐயா...

      நீக்கு
    2. கூண்டுக் கிளிகள்
      காதலில் பிறந்த
      குஞ்சுக் கிளிக்கு
      எப்படி எதற்கு
      வந்தன சிறகுகள் ?

      நீக்கு
    3. பிரமாதம், ஸ்ரீராம்.
      கல்யாண்ஜி யாரென்று
      கவிதையிலேயே பதிலா?..

      விரல் நுனியிலேயே வாசிப்பு நேர்த்திகளை வெளிப்படுத்தும் உங்களையெல்லாம் நினைத்தால் பெருமையாக இருக்கிறது!

      என்ன தவம் செய்ததோ, எபி!!

      நீக்கு
    4. கவிதை அட்டகாசம்! ஆழ்ந்த அர்த்தமுள்ளது.

      எனக்கு வெங்கட்ஜி கல்யாண்ஜியின் கவிதைகள், கதைகள் தந்திருந்தார். அன்பளிப்பாக. சென்னையில் இருந்தப்ப. ஆனா பாருங்க அதை ஆட்டைய போட்டுட்டாங்க வீட்டுக்கு வந்தவங்க! வாசித்துவிட்டுத் தருகிறேன்னு எடுத்துட்டுப் போய்ட்டு கொண்டு தரவே இல்லை

      கீதா

      நீக்கு
  3. வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், சி.கல்யாணசுந்தரம் (S. Kalayanasundaram). இவர் தமிழ்நாடு, திருநெல்வேலியில் பிறந்தவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதோடு அவர் பழைய எழுத்தாளர் தி க சிவசங்காரன் (திகசி) அவர்களின் மகன்.

      நீக்கு
    2. என் நண்பர் தி.க.சி. அறந்தை நாராயணன், தொடர்ந்து
      ஜீவா, ஜெயகாந்தன்,
      ஜனசக்தி -- தாமரை இதழ்கள், பிராட்வே அலுவலக பழமையான கட்டிடம்,
      தரைத்தளத்திலிருக்கும் தண்ணீர் அடி பம்ப் தெருவோர ஜனங்களுக்கு காவிரியாய் நீர் வழங்கிய அருள் -- எத்தனை எத்தனை மறக்க முடியாத நினைவுகள்?.

      நீக்கு
  4. எண்ண ஓட்டம், எழுத்து ஓட்டம், லாஜிக், சினிமா பாணி, சினிமா vs லாஜிக்,
    கதை சொல்லல், கருப்பொருள் --- ஹப்பா! ஒரு கதை என்றால் எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள், ஜெஸி ஸார்?..

    செவ்வாய்க்கு ஒரு கதை எபிக்கு எழுதலாம் என்றாலே பயமா இருக்கே, ஸார்!..

    பதிலளிநீக்கு
  5. பாலாஜியின் பெற்றோருக்குப் பாராட்டுகள்! பொக்கேயுடன்! நல்ல parenting! முன்னுதாரணம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. படுகர் பெண் ஜெயஸ்ரீக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! படுகர் இன பெண்கள் இப்போது நன்றாக முன்னேறி வருகிறார்கள்.

    நகையை மீட்டெடுத்துக் கொடுத்த அந்தோணி அவர்களுக்குப் பாராட்டுகள்!

    ஆர் தேவராஜ் என்று இசையமைப்பாளரா? செய்தியில் விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் னு ஒரு படத்துக்குஇசை போட்டிருப்பதாகத் தெரிகிறது. படம் பெயரே புதுசா இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  7. உணர்வு பூர்வமான கதைகள் பிடிக்கும் கூடவே திரில்லர் கதைகள் என் favourite! த்ரில்லர் கதையின் எழுத்து நடை திரில்லருக்கான அம்சம் இல்லை.
    Classic Thriller ருக்கான அழகான கரு. ஆனா எழுதப்பட்ட விதம் செம Boring! சொல்றதுக்கு ஒன்னுமில்ல.

    1. கோகிலாவை கூட்டி செல்லும் நோக்கத்துடன் அவளை அணுகியவன் அவள் இறந்துவிட்டதாய் அறிந்தும் கொலை செய்வது போல் நடித்தது சரியில்லை.

    இப்படி யோசித்துப் பார்க்கலாம், கேம் விளையாடும் பெரும் புள்ளிகள் ரெண்டுபேரும் வீடியோல பாத்திட்டிருக்காங்க. அவங்களுக்கு இவன் ப்ரூவ் பண்ண நினைக்கிறான். பண்ணனுமே அப்பத்தானே பணம் கிடைக்கும்.

    இதை நல்ல த்ரில்லராகக் கொண்டு போயிருந்தால்

    ...."ஆனால் அவனுக்குத் தெரியாது அவங்க ஏற்கனவே கொன்னுட்டுத்தான் கோகிலாவை வைச்சிருக்காங்கன்னு! Trap! அவங்க கோகிலாவை எதுக்கோ..சரி கோகிலாவின் பணத்துக்குன்னே வைச்சுக்கலாம்.....போட்டுட்டு, இப்படி ஒரு கேம் விளையாடி அவனை மாட்டிவிடுவது! "

    என்று கூட எழுதியிருக்கலாம். கதை சப்புன்னு இருக்கு. மனதைக் கவரவில்லை

    கீதா

    பதிலளிநீக்கு
  8. //கூண்டுக் கிளிகள்
    காதலில் பிறந்த
    குஞ்சுக் கிளிக்கு
    எப்படி எதற்கு
    வந்தன சிறகுகள்?//

    கல்யாண்ஜியின் இந்த
    கவிதைக்கு ஏற்றவாறு
    ஒரு கதை எழுத எபியில்
    அழைப்பு விடலாமே என்று தோன்றுகிறது,
    ஸ்ரீராம். (ஆசிரியர் குழு)

    நாம் நினைத்தால் ஆர்வமுள்ள சிலர் சேர்ந்து பரிசுத் தொகை கூட அளிக்கலாம்.

    ஆசிரியர் குழுவுடன் கலந்து சொல்லுங்களேன்.

    பதிலளிநீக்கு
  9. கதையின் தலைப்பைப் பார்த்து அதே பெயரில் வெளிவந்த கமலஹாசன், ஸ்ரீதேவி நடித்த திரைப்படம் சிலர் நினைவுக்கு வரலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராமைக் கேட்டால்,
      ஜெயகாந்தனின் 'கோகிலா என்ன செய்து விட்டாள்?'
      கதை நினைவுக்கு வந்ததாக சொன்னாலும் சொல்வார்.

      நீக்கு
  10. பாலாஜியின் குடும்பத்தினருக்கு வாழ்த்துகள்.

    படுகர் இனப் பெண்விமானி பாராட்டுகள்.

    நகையை மீட்டுக் குடுத்தவருக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை.

    கதை திரிலிங் என நினைத்து நீண்டு போராகவே செல்கிறது.

    பதிலளிநீக்கு
  11. மீண்டும் கோகிலா எனும் தலைப்பே ஒரு கவர்ச்சிக்காக, வாசகர்களை இழுக்க என்றே தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. பாலாஜியின் வெற்றிக்குக் காரணமாக இருந்த தாய்/ பெற்றோர்கள் முக்கியமாக அவர்களின் தியாகம் மனமிருந்தால் மார்கமுண்டு, என்பதைத் தெளிவாகச் சொல்லும் செய்தி.

    மற்ற இரு செய்திகளும் நன்று .

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  13. ஓ 12 குறும்படங்கள் இயக்கியவர் இல்லையா கதைகளும் எழுதியிருக்கிறாரே படங்களுக்குக் கொடுப்பது போல் அதனால் திரைக்கதை போல கதையைக் கொண்டு சென்றிருக்கிறார் ஆரம்பக்கட்டத்தில். இறுதியில் தான் பந்தயம் அது இது என்று சொல்லி சுவாரசியத்தை இல்லாமல் செய்துவிட்டார்!

    நீங்கள் முன்னுரையில் சொன்னவை எல்லாம் பொருந்தும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  14. நானும் தலைப்பைப் பார்த்துதான் கதையைப் படிக்க ஆரம்பித்தேன். ரொம்ப போர் தான். சிறப்பான கதைகளை மட்டுமே விமரிசனம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதால் இக்கதையை இங்கு உட்படுத்தினேன்.
    பொறுமையுடன் கதையை படித்து கருத்து சொன்ன யாவர்க்கும் நன்றி.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறப்பான கதைகளை மட்டுமே விமரிசனம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதால் இக்கதையை இங்கு உட்படுத்தினேன்.//

      இதை அப்படியே டிட்டோ செய்கிறேன் அண்ணா.
      எல்லா வகையான கதைகளையும் உட்படுத்துவதுதான் நீங்கள் செய்வது போல் பல விதமான கதைகளைத் தேர்ந்தெடுத்து கொடுக்கறீங்க. இப்படியும் கதைகள் இருக்கின்றன என்றும் தெரியவரும். இவற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கத்தான் செய்யும். இதுவும் நம் கற்பனைகளுக்கு வழிவகுக்கும் தான். நீங்க இத்தனை பொறுமையாகச் செய்வது ரொம்பவே பாராட்ட வேண்டிய விஷயம் அண்ணா.

      கீதா

      நீக்கு
  15. செய்திகள் அனைத்தும் நல்ல செய்திகள்.
    அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. கதை படித்தேன், இப்படி எல்லாம் கூட உயிருடன் விளையாடுவார்களா?

    பதிலளிநீக்கு
  17. செய்திகள் அனைத்தும் நன்று. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!