சனி, 20 ஜூலை, 2024

பெண் போலீஸ் பார்த்த பிரசவம் மற்றும் நான் படிச்ச கதை

 




பெங்களூரில் இருந்து பெரம்பூர் வழியாக பீஹார் சென்ற விரைவு ரயிலில், இளம்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்தது. இருவரும் நலமுடன் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

=========================================================================================================


திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள, தேவந்தவாக்கம் கிராமத்தில் இயங்கி வரும், ஸ்ரீ கோகுல கிருஷ்ண கோசாலையை நடத்தி வரும் ஸ்ரீவித்யா:  நானும், என் கணவரும் தான் இதை நடத்தி வருகிறோம். இருவருமே பி.பார்ம்., முடித்துள்ளோம். ஆனால், எங்களுக்கு பாரம்பரிய நாட்டு மாடுகள் வளர்ப்பில் ஆர்வம் அதிகம். 2007ல் இந்த கோசாலையை துவங்கினோம்.
=================================================================================================

அவிநாசி:திருமுருகன்பூண்டி நகராட்சி, ராக்கியாபாளையம் பகுதியில் உள்ள பாலாஜி நகரில் வசித்து வருபவர் ரங்கசாமி, 81. முடி திருத்தும் தொழிலாளியான இவரது வீடு சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.  இதையறிந்த தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் சதீஷ்குமார் என்பவர், ஒரு லட்சம் ரூபாயை, நேற்று அப்பகுதிக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்ற நீலகிரிஎம்.பி., ராஜாவிடம் அளித்து ரங்கசாமிக்கு வழங்கினார்.  நிகழ்ச்சியில், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, பூண்டி நகரச் செயலாளர் கிருஷ்ணசாமி, நகராட்சி தலைவர் குமார், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


==============================================================================================




 நான் படிச்ச கதை (JKC)

மூன்று பெர்னார்கள் - பிரேம் - ரமேஷ்


ரமேஷ் பிரேதன் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர். தந்தை பெயர் மருதமுத்து, அவரது சொந்த ஊர் திருச்சி. தாயார் பாலசுந்தராம்பாள், அவரது சொந்த ஊர் புதுச்சேரி. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை புதுச்சேரி அரசு நடுநிலைப்பள்ளியிலும், பிறகு 9ம் மற்றும் 10ம் வகுப்பை வ.உ சிதம்பரம் உயர்நிலைப்பள்ளியிலும் படித்தார். கலவைக் கல்லூரியில் 12ம் வகுப்பு படித்தார். அலாயன்சு பிரான்சேவில் பிரெஞ்சு டிப்ளமோ முடித்தார். பின்னர் அண்ணாமலை பல்கலைகழகத்தில் முதுகலை வரலாறு படிப்பை முடித்தார். 1983 முதல் 1985 வரை அசீபா என்ற காந்திய சமூக இயக்கத்தில் ஆசிரியராக பணிபுரிந்தார். 1991 முதல் 1993 வரை பாண்டிச்சேரி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இல் கிளை மேலாளராகவும், 1998 முதல் 1999 வரை சென்னையில் ஆவணமாக்கல் பணியாளராகவும், 2000 முதல் 2004 வரை ஆரோவில் மைய நூலகத்தில், நூலகராகவும் பணியாற்றினார். தற்போது முழுநேர எழுத்தாளராக புதுச்சேரியில் வசித்து வருகிறார். பிரேமுடன் இணைந்து மொழிபெயர்ப்பு நீங்கலாக இருபத்தொரு நூல்களை ஆக்கியுள்ளார், இவர்கள் பள்ளிப் பருவத்திலிருந்தே இணைந்து எழுதி வந்தார்கள். 

முதல் போட்டோ ரமேஷ் மட்டும். இரண்டாவது போட்டோ ரமேஷ் மற்றும் பிரேம். 

கம்பன் புகழ் விருதுஇரண்டு முறை இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 முன்னுரை 

இரட்டை இசை அமைப்பாளர், இரட்டை இயக்குனர்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.  ஆனால்  இரட்டை  எழுத்தாளர்களை பற்றி அறிந்திருக்க மாட்டோம். ஆகவே அவ்வகையில் இந்தக்கதை ஒரு தனித்தன்மை பெறுகிறது. கதையின் போக்கில் யாருடைய கைவண்ணம் எங்கே உள்ளது என்று கண்டுபிடிக்க ஆர்வத்தைத் தூண்டினாலும் வேறுபாடு தெரியவில்லை. ரமேஷ் பிரேதன் இக்கதையின் முதன்மை ஆசிரியர். பிரேம் பின்னர் ரமேஷிடம் இருந்து விலகி விட்டார். 

கதை பின் நவீனத்துவத்தை சார்ந்தது என்று ஜே மோ கருதுகிறார். ‘உறைந்துவிட்ட கதையாடல்களை கலைத்தடுக்கிய பிரேம் ரமேஷின் மூன்று பெர்னார்கள் தமிழின் குறிப்பிடத்தக்க சிறுகதைஎன்கிறார் ஜெயமோகன் . புரியவில்லையா?

(This story is an example of  reformed modernism in story telling. Ramesh shuffles and re-arranges the frozen scenes of the story in an interesting manner)

மூன்று பெர்னார்கள் என்ற இக்கதை பெர்னார் என்ற ஒரே மனிதனின் மூன்று முகங்களைக் காட்டுவது. பிரெஞ்சு தந்தை, தமிழ் தாய் ஆகியோருக்குப் பிறந்த பிராங்கோ இந்தியன்என்ற முதல் முகம். கட்டிய வெள்ளைக்கார மனைவியையும், மகனையும் பிரான்சில் விட்டுவிட்டு புதுச்சேரியில் (பாண்டியில்), தான் பிறந்த இல்லத்தில் வாசம் செய்யும் பாண்டிச்சேரியை பிரிய மனமில்லாத மனைவி மக்களைத் துறந்தவன்”  என்ற இரண்டாம் முகம். வள்ளலாரின் (ராமலிங்க அடிகள்) கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு அவரைச் சித்தபுருஷராக  வழிபடும்  சன்மார்க்க வள்ளலார் பக்தர்என்ற மூன்றாம் முகம். 

கதை பெர்னாரின்  மரணத்தில் துவங்கி கடைசியில் வேறு ஒரு தகனத்தில் முடிகிறது.  இடையில் அவரைப் பற்றிய விவரங்கள், அவருக்கும் ஆசிரியருக்கும் இடையே உள்ள நட்பு, மற்றும் தொடர்பு போன்றவை காட்சிகளாக விரிந்து ஜே மோ சொன்னது போல் அலுப்பு தோன்றா வண்ணம் அடுக்கப் பட்டிருக்கின்றன.  கதையைப் பற்றி ஒரு வாசகர் எழுதிய பின்னூட்டம்.

imam on February 22, 2013 at 1:18 AM said...

வீனடிக்கப்படாத சொற்பிரயோகங்களும் கதைசொல்லலும் சலிப்பை சிறிதும் நெருங்கவிடாமல் செய்திருக்கிறது. செய்திக் குறிப்பு போன்ற சொல்லல், பின் காதின் பார்வையில் சலனக் காட்சிகளின் விபரிப்பு, முன்பின்னான நினைவு மீட்டல், ரகசியத்தை கவனமாகப் பேணி உடைத்தல் என்று பல அம்சங்கள்.... கதை நகர்வு குருந்திரைப்படம் ஒன்றை ரசித்த உணர்வை ஏற்படுத்துகிறது.

எஸ் ரா இக்கதையை சிறந்த 100 சிறுகதைகளில் ஒன்றாக தேர்ந்திருக்கிறார்.

கதையின் சுட்டி: =======>இங்கே<======

கதை முழுதும் தரப்பட்டுள்ளது. மேம்போக்காக படித்தால் பல செய்திகள் கவனத்தில் கொள்ளத்  தவறி விட வாய்ப்புண்டு. ஆக வாசிப்பில் நிதானம், மற்றும் ஆழ்ந்த கவனம் தேவைப்படும் கதைகளில் ஒன்று இது.   

மூன்று பெர்னார்கள் - பிரேம் - ரமேஷ்  

பகல் இரண்டு மணி பதினைந்து நிமிடங்கள் கடந்த நிலையில், புதுச்சேரி கடற்கரையோர மதுபான விடுதியான கடற்காகத்தில் மேல்மாடியில் பருகி முடிக்கப்படாத இறுதி மிடறு மேசை மீதிருக்க, கூடை வடிவ பிரம்பு நாற்காலியில் அமர்ந்த நிலையில் ழான் பெர்னாரின் உயிர் பிரிந்திருந்தது.

குழியில் பலகை மீது விழுந்த ஈர மண்ணின் முதல் பிடி ஒலியைத் தொடர்ந்து வெவ்வேறு கைப்பிடி அளவுகளில் ஓசைகள் எழுந்தன. இடையே மண் குவியலில் மண்வெட்டி உரசும் சப்தம். இடம் மாறும் காலடிகளின் ஓசை, கல்லறைத் தோட்டத்திற்கு வெளியே வாகனங்கள் எழுப்பும் இரைச்சல்களும் அடங்கிவிட, சற்றுமுன் மணியோசையில் அதிர்ந்து கோபுரத்தை விட்டுப் பறந்த புறாக்கள் மீண்டும் வந்தடையும் சிறகோசை. எல்லாம் முடிந்துவிட்டது. ஆம் அவரைப் பொறுத்தவரை எல்லாம் முடிந்துவிட்டது. அறுபது ஆண்டுகள் ஆறு மாதங்கள் பதினேழு நாட்கள் வாழ்ந்து முடித்தாகிவிட்டது. நீர் கலக்காத இறுதி மிடறு மது மெல்ல மெல்ல ஆவியாகிக் கொண்டிருந்தபோது ழான் பெர்னாரும் உடன் ஆவியாகி அற்றுப் போயிருந்தார்.

கொட்டும் மழையில் ஆளரவமற்ற புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நனைந்தபடி மெல்ல நடந்து செல்வது போன்ற சுகம் போகத்தில்கூட இல்லை எனச் சொல்லும் பெர்னாரை, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் நனைந்தபடி நடந்துகொண்டிருக்கும்போது முதன்முதலாக எதிர்கொண்டு ஒருவருக்கொருவர் அறிமுகமானோம்.

நெடிய உருவம். தமிழனா ஐரோப்பியனா என அறுதியிட இயலாதத் தோற்றம். கட்டுத் தளராத குரல். பிரெஞ்சு மொழி பேசிப் பழகிய வாய்க்கே உரித்தான கரகரப்போடு வெளிப்படும் தமிழ். எந்தவொரு அசைவிலும் அவசரங்காட்டாத ஒரே சீரான தாள கதி. பெர்னாரை இத்தனை சீக்கிரத்தில் இழந்துவிடுவேன் என நான் நினைத்ததில்லை.

கப்பித்தேன் மரியூஸ் ஸவியே தெருவில் வெளித்தோற்றத்தில் காரை பெயர்ந்து இடிந்து கிடக்கும் சுவர்களைக் கொண்ட அவருடைய வீட்டின் உள்தோற்றம் அத்தனை மோசமில்லை. வரவேற்பறைச் சுவரில் வெள்ளைக்காரத் தந்தையுடன் கம்மல் மூக்குத்தி அணிந்து குங்குமமிட்ட நெற்றியுடன் தமிழ்க் கிறித்துவ அன்னை. கருப்பு வெள்ளைப் புகைப்படம் தேக்குச் சட்டமிடப்பட்டு பெரிய அளவில் தொங்கிக் கொண்டிருக்க, எதிர் மூலையின் வலப்பக்கத்தில் இலைகளைக் கழித்துவிட்டு நட்ட சிறு மரம்போல தொப்பிகளை மாட்டிவைக்கப் பயன்படும் மரத்தாலான ஒரு பொருள். பெர்னார் குடும்பத்தினரின் பல்வேறு வடிவங்கள் கொண்ட தொப்பிகள். பல தொப்பிகள் தங்களுக்கானத் தலைகளை என்றோ இழந்துவிட்டதன் சோகத்தை என்னைக் கண்டதும் மீண்டும் பொருத்திக்கொண்டு அசைந்தன. உள்கட்டுக்குள் நுழைந்ததும் வடலூர் ராமலிங்க சுவாமிகளின் மிகப் பெரிய வண்ண ஓவியம்.

தரையிலிருந்து சுவரில் சாய்ந்த நிலையில் நின்ற வெள்ளாடையுருவத்தின் காலடியில் பணிப்பெண் வைத்துவிட்டுச் செல்லும் நான்கைந்து செம்பருத்திகள். அதற்கடுத்து சிறு நடையைத் தாண்டி வலப்பக்கமும் இடப்பக்கமும் இரண்டு அறைகள். இடப்பக்கம் படுக்கையறை. வலப்பக்கம் அவருடைய பூசையறை என்று சொன்னார். கதவிற்கும் நிலைச் சட்டத்திற்குமான ஒட்டடைகள் அடர்ந்திருந்த நிலையில், புழக்கமற்ற அந்த அறையை பூசையறை என்கிறாரே என அப்பொழுது நினைத்துக்கொண்டேன். ஒரு முறை பகலில் நான் அங்கிருந்தபோது பணிப்பெண்ணை அழைத்து வலப்பக்க அறைக் கதவைச் சுத்தம் செய்யச் சொன்னேன். அதற்கு அவள், ‘மெர்ஸ்யே திட்டுவாருஎனச் சொல்லிவிட்டுச் சென்றது எனக்கு விநோதமாக இருந்தது.

பெர்னாரின் வினோதமான பழக்கவழக்கங்களையும், அவருடைய வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களையும் கேட்டு ரசிப்பதில் என் மனைவிக்கு அலாதியான விருப்பம் இருந்தது.

ஒருமுறை என் வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்த பெர்னார் ஒயினில் தனது சுருட்டுச் சாம்பலையிட்டுக் கலக்கி அருந்தியதைக் கண்ட நாங்கள் எல்லோருமே திடுக்கிட்டோம். மேலும் அவர் புகையிலை ஊறிய ஒயினை அருந்துவதற்கு ஈடான ருசியும் போதையும் வேறெவற்றிலும் இல்லை எனவும் சொல்வார்.

பெர்னாரை நான் அடிக்கடி சந்திப்பது போய் தினமும் ஒவ்வொரு மாலையும் அவருடன் கழிவதையும், அளவுக்கு அதிகமாகக் குடிப்பதையும் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்த என் மனைவிக்கு அவரின் மேல் சிறு கோபமும் வெறுப்பும் மெல்ல வளரத் தொடங்கியது.

பிரான்சிலிருக்கும் தன் வெள்ளைக்கார மனைவி குறித்தும் தன்னுடைய மகனைக் குறித்தும் பெர்னார் அடிக்கடி குறிப்பிடுவார். விவாகரத்து செய்துகொள்ளாமலேயே மிக இளம் வயதிலிருந்தே தாங்கள் பிரிந்து வாழ்வதாகவும் சொன்னார். மகன் ஆண்டுக்கு ஒரு முறை வந்து தன்னைப் பார்த்துவிட்டுச் செல்லும் பழக்கமும் நாளடைவில் குறைந்துவிட்டதாகவும் சொல்லியிருக்கிறார்.

எனக்கு எப்பொழுதுமே பிறருடைய வாழ்க்கை பற்றிய செய்திகளில் ஈடுபாடு இருந்ததில்லை. பெர்னாருடைய வாழ்க்கைக் கதையில் எனக்குத் தேவைப்படுவது எதுவுமே இல்லை என்றபோதும், என் மனைவிக்கு உதவுமே என அவர் சொல்வதைக் கேட்டுக் கொள்வேன்.

அப்படித்தான் ஒருமுறை அவர் சொன்னார்: தனது வெள்ளைக்காரத் தகப்பனான ஃப்ரான்சுவா பெர்னாருக்கும் வடலூர் வள்ளலாருக்கும் இடையே ஆழமான பக்திப் பிணைப்பு இருந்தது என்று. வள்ளலார் என்னுடைய சாதியைச் சார்ந்த மாபெரும் யோகி என்பதில் எனக்கு எப்போதும் பெருமை உண்டு. பெர்னாரின் அன்னையும் என் சாதியைச் சார்ந்த கிறித்துவர் என அறிய வந்தபோது, எங்களுக்குள் சாதிய நெருக்கமும் வளர்ந்துவிட்டதை தவிர்க்க முடியவில்லை.

வள்ளலாரைப் பற்றிய ஒரு பேச்சின்போது பெர்னார் சொன்ன தகவல் என்னை அதிர்ச்சியடைய வைத்தது. வள்ளலார், தான் நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் உயிர் வாழப் போவதாகச் சொன்னபடி அந்த நீண்ட ஆயுளை வாழ்ந்து முடித்தவர் எனச் சொன்னார். கிழம் போதையேறி உளறுகிறது என அசிரத்தையோடு கேட்டுக் கொண்டிருந்தேன். தனக்குப் பத்து வயது ஆகும்போதுதான் அதாவது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தியெட்டாம் ஆண்டில்தான் அந்தச் சுடர் அணைந்தது என அவர் சொன்னதை என் மனைவியிடம் சொல்ல; தயவு செய்து இனி குடித்துவிட்டு மகான்களைப் பற்றி பேசவேண்டாம் என கடுமையோடு முகத்தை வைத்துக்கொண்டு சொன்னாள்.

ஒருமுறை பெர்னாரிடம் நான் கேட்டேன், “உங்களுடைய வீட்டின் எல்லா இடத்திலும் நான் புழங்கி வருகிறேன். உங்களுடைய பூசையறையை மட்டும் இதுவரை எனக்குத் திறந்து காட்டவில்லையேஎன்று. அதற்கு அவர் நெடுநேரம் மௌனமாக இருந்தார். பிறகு நிதானமாக, “வாழ்க்கையில் வினோதமும் யதார்த்தமற்ற போக்கும் மிக அவசியம். ஒவ்வொரு மனிதனுக்கும் நிச்சயமான புனைவு எப்படி அவசியமோ அதுபோலவே நிச்சயமற்ற புனைவும் அவசியம்என்று பிரெஞ்சு மொழியில் சொன்னார். பிறகு அதையே தமிழிலும் சொல்ல எத்தனித்து சரியான சொற்கள் வந்து சேராமல் குழறினார்.

அவர் வீட்டில் குழல் விளக்குகளை பயன்படுத்துபவர் அல்லர். எல்லாயிடங்களிலும் குண்டு விளக்குகளையே பொருத்தியிருந்தார். வீட்டின் பழமையும் குண்டு விளக்கின் ஒளியும் நல்ல போதையில் ஒருவித மாயப் புதிரென மனசெல்லாம் படியும். அப்படித்தான் அன்றும் இருந்தது. மஞ்சள் மின்னொளியில் வள்ளலாரின் ஓவியம் உயிரும் சதையுமாக நிற்பதைப் போலவே இருந்தது. நான் பெர்னாரிடம் சொன்னேன், “வள்ளலார் இறக்கவில்லை. அவர் மறைந்துவிட்டார். சித்தர்கள் என்றைக்குமே அழிவற்றவர்கள். நம்மோடு என்றைக்கும் அலைந்து கொண்டிருப்பவர்கள்.”

பெர்னார் கடகடவென சிரித்து போதையில் உனது பிரெஞ்சு மொழி அப்படியொன்றும் மோசமில்லைஎன பகடி செய்தபடி என் பேச்சை மாற்ற அவர் எத்தனிப்பதாகத் தெரிந்தது.

நான் கடுப்பாகிப் போனேன். “வள்ளலாரை உமது குடும்பச் சொத்துப்போல பேசுகிறீரே உமது பொய்யுக்கும் ஒரு அளவு வேண்டாமோஎனக் கத்திவிட்டேன்.

கிழவர் ஆடிப்போய்விட்டார். தன்னிலைக் குலைந்த அவர் விருட்டென எழுந்துசென்று ஒரு பெரிய சாவியை எடுத்துவந்து பூசையறையைத் திறந்து விளக்கைப் போட்டுவிட்டு வந்து என் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு பூசையறைக்குள் சென்றார். பிறகு நடந்தவைகளெல்லாம் எனக்கு நிச்சயமற்றுத் தெரிகின்றன. என் மனைவியிடம் நான் அதைச் சொல்ல அவள் கலவரத்தோடு என் மனோநிலையைச் சோதித்தாள். அந்தக் கிழவரோடுச் சேர்ந்து நீங்களும் பயித்தியமாகிவிட்டீர்கள் எனக் கத்தினாள். இனி நான் அவரைச் சந்திக்கக்கூடாது என என் சட்டையைப் பிடித்து உலுக்கினாள். அதற்குப் பிறகு இரண்டு மாதம் கழித்து கிழவர் இறந்த செய்தியைக் கேட்டுத்தான் நான் அவர் வீட்டுக்குப் போனேன். ஒருவாரம் அவர் உடல் ஜிப்மர் சவக்கிடங்கில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது. மகன் பிரான்சிலிருந்து வந்த பிறகு ஈமக்கிரியையை முடித்தனர். பெர்னாரின் மனைவி வரவில்லை.

ழாக் பெர்னார் இளவயது கிழவரைப் போலவே இருந்தான். என்னை விட இரண்டு வயது இளையவன். என்னைத் தொட்டுத் தொட்டுப் பேசினான். தான் இந்த வீட்டை இடித்துவிட்டு பெரிய அடுக்குமாடி கட்ட இருப்பதாகவும் நான்தான்  அவனுக்கு உதவ வேண்டும் எனவும் கேட்டான். நான் கலவரப்படலானேன்.

கடைசி காலத்தில் அப்பாவுக்கு நெருங்கிய நண்பராக இருந்திருக்கிறீர்கள். அவருடைய பூசையறையின் மர்மம் பற்றியும் அறிந்திருப்பீர்கள்தானேஎன ஒருவிதக் கிண்டல் தொனிக்கும்படி கேட்டான்.

நான் மௌனமாக இருந்தேன்.

சுமார் ஐம்பது ஆண்டுகளாக ஒரு சாமியாரின் பிணத்தை வைத்துக் கொண்டு மாரடிக்கிறார். இதனால்தான் என் அம்மா இவரைப் பிரிந்து என்னை அழைத்துக் கொண்டு பிரான்சுக்கே போய்விட்டார். என் தாத்தா காலத்துப் பிணம். இன்னும் சவப்பெட்டிக்குள் கிடக்கிறது. இதை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும்.”

நான் கண்களை மூடிக்கொண்டு மௌனமாக இருந்தேன். பதப்படுத்தப்பட்ட அந்த உடலை பெட்டியோடு எடுத்துவந்து நாம் வைத்துக்கொள்ளலாமா என என் மனைவியிடம் கண்கள் கலங்கக் கேட்டேன்.

அவள் என்னைப் பச்சாதாபத்தோடுதான் பார்த்தாள் என்றாலும் அந்தப் பார்வையை என்னால் தாங்க முடியாமல் தவித்தேன்.

நான் உங்களுடன் வாழ்வதா வேண்டாமா?” என அமைதியாகக் கேட்டுவிட்டு விருட்டென எழுந்து சென்று படுக்கையறைக் கதவை அடைத்துக்கொண்டாள்.

மறுநாள் ழாக் பெர்னாரைச் சந்தித்தேன். என்னைப் பார்த்ததும் என்ன முடிவு செய்தீர்கள்எனப் பதறினான்.

அரசிடம் ஒப்படைப்பது சாத்தியமில்லை. அரசாங்கமும் பத்திரிகை மீடியாவும் நம்மை கேள்விகேட்டுத் தொலைத்துவிடும். அந்த உடம்பின் ரகசியத்தை வெளிப்படுத்தினால் அது சமயப் பிரச்சினையாகி அது என் உயிருக்கே ஆபத்தாகிவிடும். இந்தப் பிணம் ஒரு சாமியார் மட்டுமல்ல, இந்திய ஆன்மீகத்தின் ஒரு சிகரம். பிரெஞ்சுக்காரனான உனக்கு இதன் வெகுமானமோ, அற்புதமோ இதன் மூலம் உருவாகப்போகும் ஆபத்துக்களோ என்னவென்று தெரியாதுஎன நிதானமாகச் சொன்னேன். எனது நிதானம் அவனைக் கலவரப்படுத்தியது.

நீண்டநேரம் அமைதியாக ஒயினைப் பருகியபடி இருந்தோம். பிறகு எனது திட்டத்தை அவனிடம் சொன்னேன். மகிழ்ச்சியில் என்னைக் கட்டித் தழுவிக்கொண்டான்.

விடிந்தால் போகி. விடிய விடிய குடித்தபடி இருந்தோம். என் மனைவியோ தொலைபேசியில் பதறியபடியே இருந்தாள். அதிகாலை மூன்று மணிக்கு பூசையறைக்குள் சென்றோம். சவப்பெட்டி ஒரு காவித்துணியால் போர்த்தப்பட்டிருந்தது. துணியை விலக்கிவிட்டு ஆணியறையப்படாத பெட்டியைத் திறக்க முற்பட்டேன். ழாக் தடுத்தான். நான் அவனை ஏறிட்டுப் பார்த்தேன். பிறகு மூடியைத் திறந்து பார்த்தேன். காவித்துணியால் சுற்றப்பட்ட ஒரு பொட்டலம். பெட்டியோடு தூக்கி வந்து வாசலில் வைத்து பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினோம். சடசடவென தீ எழுந்தது.

ஆங்காங்கே வீட்டு வாசல்களில் எதையெதையோ போட்டுக் கொளுத்தத் தொடங்கிவிட்டனர். அரைமணி நேரத்தில் வாசலில் சாம்பல் புகைந்தது. சாம்பலில் ஒரு கை அள்ளி எனது கைக்குட்டையில் கட்டிக்கொண்டேன். வீட்டுக்குள் சென்று வள்ளலாரின் படத்தை எடுத்து வந்து எனது காரின் பின் இருக்கையில் வைத்துவிட்டு ழாக்கிடம் கை குலுக்கி விடைபெற்றேன். வழி நெடுகிலும் வாசல்கள்தோறும் பெருந்தீ வளர்ந்துகொண்டிருந்தது.

பின்னுரை

வாழ்க்கையில் வினோதமும் யதார்த்தமற்ற போக்கும் மிக அவசியம். ஒவ்வொரு மனிதனுக்கும் நிச்சயமான புனைவு எப்படி அவசியமோ அதுபோலவே நிச்சயமற்ற புனைவும் அவசியம்என்று பிரெஞ்சு மொழியில் சொன்னார் பெர்னார்.

ஆம் இக்கதையில் புனைவு என்பது ஒரு மம்மிபூஜை அறையில் பூஜிக்கப்படுவது. ஆசிரியர் ஒரு புனைவாய், ஒரு கற்பனை கதையாய் தொண்டை மண்டலத்தில் 19ஆம் நூற்றாண்டில் பிரபலம் ஆக இருந்த வள்ளலாரின் பூத உடல் பாதுகாக்கப்படுகிறது என்று கதையில் புகுத்தியிருக்கலாம். வள்ளலாரும்  ஜீவ சமாதியாக  ஜோதியில் கலந்தார் என்று கூறுவர்.

வள்ளல் பெருமான் எனப்படும் வள்ளலார் அவர்கள் 1874 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி தைப்பூச திருநாள் அன்று வடலூரில் உள்ள சித்தி வளாகத்தில் ஒரு தனி அறைக்குள்ளாக சென்று தாழிட்டுக் கொண்டார். தான் தாளிட்டுக்கொண்ட அறையை யாரும் ஒரு வருட காலத்திற்குள்ளாக திறக்க கூடாது என தன் சீடர்களுக்கு கட்டளை இட்டார்.

அதன்படியே ஒரு வருட காலம் கழித்து வள்ளலார் தாளிட்ட அறையை திறந்து பார்த்த பொழுது அங்கு வள்ளலார் இருந்ததற்கான அடையாளம் ஏதுமே இல்லை என்பதை கண்டு அவரது சீடர்கள் வியப்புற்றனர். ஈடுயிணையில்லா தவ யோகியாக திகழ்ந்த வள்ளலார் ஒளியுடல் பெற்றவர் என்றும், எனவே ஜோதி வடிவான இறைவனுடன் தன்னுடைய தேகத்தை ஒளி வடிவாகி கலந்துவிட்டார் என அவரது சீடர்கள் நம்புகின்றனர். அதன்படியே இன்றும் தைப்பூசத் திருநாள் அன்று சித்தி வளாகத்தில் வள்ளலார் ஜோதி நிலை அடைந்த அறையில் ஜோதி தரிசனம் பக்தர்களுக்கு காட்டப்படுகிறது.’

  நன்றி  https://dheivegam.com/vallalar-history-tamil/

48 கருத்துகள்:

  1. வெங்கட் கதவைத் தட்டிய பேய் என்று ஒரு ஸ்கிட் அவருடைய தளத்தில் எழுதியுள்ளார். நீங்கள் பேய் அறையில் உறங்கிய ஆசிரியர் என்று செய்தி போடுகிறீர்கள். தற்செயல்?
    Jaya​kumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் தற்செயல்தான்.  இன்னொரு தற்செயல் கூட உண்டு.  அதைப் பற்றி அங்கே பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளேன்!

      நீக்கு
  2. ஒரு கோப்பை வொயின் அருந்தியது மாதிரி இருந்தது படிக்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாண்டிச்சேரி என்று சொல்லிவிட்டு வைன் இல்லாமலா? பிரெஞ்சுக்காரர்கள் வைன் உண்டாக்குவதில் பிரபலமானவர்கள் ஆயிற்றே!

      நீக்கு
  3. பேய் இங்கும் வெங்கட்ஜி தளத்திலும்....அது பழைய பேய் இங்கு புது பேய்!!!

    ஆசிரியரை பாராட்ட வேண்டும்!!! நல்ல செயல்

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ரயில்வேயும் பெண்காவலரும் பிரசவத்துக்கு உதவினார்கள் என்பதை விட மனதிற்குப் பட்டது, பிரசவகாலத்தில் பயணம் செய்யும் அளவு என்ன நிர்பந்தமோ அப்பெண்மணிக்கு? இது தேவையா என்றும்

    //இதற்கிடையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மேத்தா காத்துன், நான்காவது குழந்தையின் பிரசவத்துக்காக, தன் மூன்று குழந்தைகளுடன் தனியாகவே சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தார்.//

    கடவுளே! இந்தியாவின் ஜனத்தொகை இப்படிக் கூடினால் அதுவும் சாதாரண குடும்பங்களில்....குழந்தைகளின் எதிர்காலம் என்ன என்ற கவலை வருகிறது.

    கீதா



    காவலருக்குப் பாராட்டுகள்!
    1

    பதிலளிநீக்கு
  5. கோசாலை செய்தி மிக்வும் பாராட்டிற்குரியது! வெட்டுக்குப் போகும் மாடுகளையும் காப்பாற்றி அதே சமயம் நல்ல மாடுகளையும் பராமரித்து அதில் வருமானமும் எனும் போது நல்ல ஆக்கபூர்வமான செயல்

    கீதா

    பதிலளிநீக்கு
  6. கதையில் குழம்பும் அளவு விஷயம் எதுவும் இல்லை. நிகழ்விலிலுருந்து ஃப்ளாஷ் பேக்கில் செல்லும் கதை. அப்புறம் நிகழ்விற்கு வருது. கதையில் பெரிதாகச் சொல்லப்படும் அளவு எதுவும் இல்லை என்பது என் தனிப்பட்டக் கருத்து. புனைவு பற்றி சொல்லியிருப்பது ஓகே. ஆனால் அதில் சுவாரசியம் இல்லை.

    எழுத்து நடை ஓகே அவ்வளவுதான். சீன் பை சீன் குடி வாசனை!

    பாண்டிச்சேரி, கேரளா, மேற்கு வங்களாம் என்றாலே குடி என்று மனதில் பதிந்து போன விஷயம் ஊர்ஜிதமாகிறது.

    அந்தப் பெரியவர் பெர்னாருக்கு மூன்று முகம்? கதையில் சொல்லப்பட்டாலும் அது ஏன் மூன்று முகம் இதெல்லாம் வழக்கமான நாம் உலகில் பார்ப்பதுதானே! அப்படி என்றால் அது இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சொல்லப்பட்டிருக்கலாமோ? இருந்திருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. மூன்று முகம் என்று வாசித்ததும் ஆஹா ஏதோ அந்நியன் போன்று வருமோ என்று எதிர்பார்ப்பு வேறு எனக்கு!!!!

    கதை மனதைக் கவரவில்லை. ஒரு வேளை எனக்கு ஒன்றும் புரியவில்லையோ என்னவோ! ஆனா பெரியவங்க எல்லாம் ரொம்பவே பாராட்டியிருக்காங்க!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரியவில்லை//

      இதைச் சொல்லி ஒரு கருத்து இங்கு போட்டிருந்தேன்ன்னு நினைக்கிறேன் ஸ்ரீராம். ஒளிஞ்சிருக்கான்னு பாருங்க..

      இல்லைனா மீண்டும் எழுதணும்.

      கீதா

      நீக்கு
    2. மூன்று பெர்னார்கள் என்பது தாத்தா, அப்பா, மகன், என்ற மூன்று பெர்னார்களையும் கூடச குறிக்கும்.
      Jayakumar

      நீக்கு
    3. அது புரிந்தது ஜெ கே அண்ணா.

      புரியலைன்னு நான் சொன்னது - கதை அல்ல. அதாவது in between lines அல்லது ஆழமான ஏதேனும் சொல்லப்பட்டிருக்கா மறைமுகமாக ஏதேனும் வெளிப்படுதா என்பது எனக்குத் தெரியலை என்பதைத்தான் தெரியாம புரியலைன்னு சொல்லிட்டேன் என்று.

      கீதா

      நீக்கு
  7. எழுத்தாளர்கள் சிட்டியும், தி.ஜானகிராமனும் சேர்ந்து 'நடந்தாய், வாழி காவிரி' என்று காவிரி நதியைப் பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிறார்கள். வாசித்திருக்கிறோம்.

    குமுதம் போன்ற வாரப்பத்திரிகைகளில் வாராவாரம் ஒவ்வொருத்தர் எழுதுகிற மாதிரி தொடர்கள் கூட வந்திருக்கின்றன். அறிந்திருக்கிறோம்.

    ஏன், எபியில் கூட நம் நண்பர்கள் ஆளுக்கு ஒர் அத்தியாயம் என்று பிரித்துக் கொண்டு எழுதிய கதை ஒன்று வெளிவந்திருக்கிறது. படித்திருக்கிறோம்.

    ஆனால் இரண்டு பேர் சேர்ந்து எல்லா படைப்புகளையும் எழுதுவது என்பது அசாத்தியமான விஷயம் தான்.

    தங்கள் 'சுதந்திர பாணியில்' தங்கள் பெயர்களின் முதல் எழுத்துக்களைச் சேர்த்துக் கொண்டு எழுதிய இரு தமிழ் எழுத்தாளர்களையும் நாம் அறிவோம். அவர்களில் ஒருவர் காலமாகி இன்னொருவர் தனித்து விடப்பட்டு எழுதுவதையே நிறுத்திக் கொண்ட சோகத்தையும் அறிவோம்

    இரட்டை எழுத்தாளர்கள் என்றால் எப்படி அவர்கள் தங்கள் படைப்புகளை சமைப்பார்கள்?

    ஜெஸி ஸார்! , உங்கள் கற்பனையைக் கொஞ்சம் ஓட விடுங்கள், பார்க்கலாம்..

    பதிலளிநீக்கு
  8. அந்தப் பெரியவர் புனைவில் கற்பனையில் அதாவது வள்ளலாரின் உயிர்/பிணம் அந்த ரகசிய அறையில் இருப்பதாக ஒரு விதமான மனநிலையில் வாழ்கிறார். அந்த முகம் புரிகிறது இருந்தாலும் அந்த முகம் மனதில் ஒட்ட மறுக்கிறது. இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக்கியிருக்கலாமோ? குடியைச் சொல்லாமல் அந்த முகத்தை இன்னும் சொல்லியிருக்கலாம்....

    கடைசியில் வெளியில் தெரியாமல் அது போகியோடு போனது அந்த முடிவு நல்ல முடிவு. இருந்தாலும் ஏனோ கதை மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி ஒட்டவில்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கருத்தோடு மற்றொரு கருத்தும் போட்டேன் அது ஒளிஞ்சிருக்கா இல்லை போகலையானு தெரியலை. வள்ளலார் காவித்துணியா அணிந்திருந்தார்? வெள்ளை அல்லவா? நான் அந்த ரகசிய அறையில் என்னவெல்லாமோ எதிர்பார்த்தேன் ஆனா கடைசில சும்மா ஒரு பொட்டலம் ஒன்றைச் சொல்லிவிட்டார்.

      கீதா

      நீக்கு
  9. இரட்டையர்கள் என்று முன்பும் வந்திருக்கிறது, பத்திரிகைகளும் தொடர்கள் இருவர் மூவர் எழுதியவை வந்திருக்கின்றன என்று நினைக்கிறேன். ஒரு நாவல் கூட 9 எழுத்தாளர்கள் ஒவ்வொரு அத்தியாத்தையும் எழுதிய நாவல் உள்ளது. பெயர் டக்கென்று நினைவிற்குச் சிக்கவில்லை. கதை உலகில் சுபா! இரட்டையர்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சொன்னதைத் தான் துண்டு துண்டாக சொல்லியிருக்கிறீர்கள். நான் கேட்டதே வேறே.

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. செய்திகள் அருமை.
    இரயில் பிரசவம் பார்த்த இரயில்வே பெண் போலீஸாருக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  12. டி.சுரேஷ் மற்றும் ஏ.என். பாலகிருஷ்ணன் இருவரும் சுபா என்ற பெயரில் நிறைய கதை எழுதினார்கள். சினிமாக்களுக்கு வசனமும் எழுதினார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுபா என்ற புனைப்பெயரைத் தான், 'சுதந்திர பாணியில்' என்று ஒளித்துச் சொல்லியிருந்தேன்.

      நீக்கு
  13. இப்பொழுது நடைப் பயிற்சியில். கதை பற்றிய என் பார்வையை பின்னால் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. “//சுமார் ஐம்பது ஆண்டுகளாக ஒரு சாமியாரின் பிணத்தை வைத்துக் கொண்டு மாரடிக்கிறார். இதனால்தான் என் அம்மா இவரைப் பிரிந்து என்னை அழைத்துக் கொண்டு பிரான்சுக்கே போய்விட்டார். என் தாத்தா காலத்துப் பிணம். இன்னும் சவப்பெட்டிக்குள் கிடக்கிறது. இதை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும்.”//

    அப்படி ஒப்படைத்து இருந்தால் பின் விளைவுகள் !


    //ஆம் இக்கதையில் புனைவு என்பது ஒரு ‘மம்மி’ பூஜை அறையில் பூஜிக்கப்படுவது. ஆசிரியர் ஒரு புனைவாய், ஒரு கற்பனை கதையாய் தொண்டை மண்டலத்தில் 19ஆம் நூற்றாண்டில் பிரபலம் ஆக இருந்த வள்ளலாரின் பூத உடல் பாதுகாக்கப்படுகிறது என்று கதையில் புகுத்தியிருக்கலாம். வள்ளலாரும் ஜீவ சமாதியாக ஜோதியில் கலந்தார் என்று கூறுவர்.//

    வள்ளலார் காவி துணி கட்ட மாட்டார், கதையில் காவி துணி கட்டிய பொட்டலம் என்று சொல்லி விட்டாரே ! மம்மி போல உடல் இருப்பதை அவர் பார்ப்பார் என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  15. போற்றுதலுக்கு உரியவர்கள். போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  16. ஆசிரியரும் பெட்டியில் இருப்பது வள்ளலாரின் சவம் தான் என்று தீர்மானமாக சொல்லவில்லை.வள்ளலாரைப் பூஜிக்கிறார் என்பதால் இப்படி முடிவை நோக்கிச் கதையை செலுத்துகிறார்.

    பதிலளிநீக்கு
  17. ​//இரட்டை எழுத்தாளர்கள் என்றால் எப்படி அவர்கள் தங்கள் படைப்புகளை சமைப்பார்கள்?//
    சமைப்பார்கள் என்ற ஒரு வார்த்தையே உங்கள் கேள்விக்கு பதிலாக அமைந்து விட்டது என்று நினைக்கிறேன்.
    கல்யாண விருந்து சமைக்கும் போது சில முக்கியமான சேர்க்கைகளை தலைமை சமையல்காறார் மட்டும் தான் செய்வார். மேலும் பதார்த்தத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி அவற்றை சரி செய்யும் முறையையும் சொல்லி நேராக்குவார்.
    இந்த மாதிரி செயலைத்தான் பத்திரிகை ஆசிரியர்களும் எழுதுபவரின் சம்மதத்தோடு செய்கிறார்கள்.
    இது என்னுடைய புரிதல்.!!!
    வேறு விதமாகவும் இருக்கலாம். எ பி போல.
    ஒரு தளத்திற்கு 5 ஆசிரியர்கள் + சில கவுரவ ஆசிரியர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் இரண்டு விதங்கள் இருக்கின்றன, ஜெஸி ஸார்.

      1. இரண்டு பேரும் கலந்து ஆலோசித்துக் கொண்டு கதையின் போக்கைத் தீர்மானித்துக் கொண்டு 'நான் இப்படி ஒரு பகுதி எழுதுகிறேன், அடுத்த பகுதியை நீ இப்படி எழுது. அதற்கடுத்த பகுதியை நான் இப்படி எழுதினால் அதைத் தொடர்ந்து நீ இப்படி' என்று முன்கூட்டியோ, அப்பப்பவோ தீர்மானித்துக் கொண்டு எழுதி இரண்டு பேர்கள் எழுதுவதாக நம்மை ஏமாற்றுவது.

      2.ஒருத்தொருக்கொருத்தர் கலந்து கொள்ளாமல் சவால் மாதிரி 'நான் இப்படி எழுதினால் அதைத் தொடர்ந்து நீ எப்படி எழுதுவே, பார்க்கலாம்' என்கிற மாதிரி ஒருத்தொருக்கொருத்தர் விட்டுக் கொடுக்காமல் போட்டி மனப்பான்மையுடன் எழுதி முடிப்பது.

      இதில் இரண்டாவது வகை உண்மையிலேயே பிரமாதமாக அமைந்து வாசகரை அசர வைக்கும்.

      எப்படியிருந்தாலும் இந்த இரண்டு பேர் எழுதும் வித்தை எல்லாம் தொடர்கதைகளுக்குத் தான் பொருத்தமாக இருக்கும்.

      மேலே சொன்னதில் இரண்டாவது வகையில் உண்மையிலேயே இரண்டு பேர் வித்தியாசமாக கதையை நடத்திச் செல்லும் போக்கு அமைந்து எழுத்து நடையிலும் வித்தியாசப்பட்டு பிரமாதமாக அமைந்து விடும்.

      நீக்கு
    2. ஜீவி அண்ணா, முதல் பாயின்டில் கூட ஜஸ்ட் கதையின் அவுட்லைன் மட்டும் கலந்தாலோசித்துவிட்டு, மற்ற்றவற்றில் ஒருவருக்கொருவர் அதிகம் இஇடையில் நுழையாமல், ஃப்ரீய்யாக விட்டு இருவரும் எழுதலாம் என்றாலும், உங்களின் இரண்டாவது பாயின்டை 100 பெர்சன்ட் மேலேயே ஆமோதிக்கிறேன்!

      முதல் பாயின்டில் எழுத்தாளர்களின் ஃப்ரீடம் கொஞ்சம் சங்கடத்துக்கு உள்ளாகலாம் ஆனால் இரண்டாவது பாயின்டில் முழு சுதந்திரம்.

      நானும் பானுக்காவும் சேர்ந்து எழுதிய போது உங்களின் முதல் பாயின்ட் படிதான் எழுதினோம் என்றாலும் எங்கள் இருவரின் எழுத்தும் வெவ்வேறு என்பதாலும் அவுட்லைன் கதைப் போக்கு மட்டும் பேசிக் கொண்டாலும் எழுதும் போது அது போகும் போக்கில்தான் எழுதினோம். இடையில் சில இடங்களில் பேசிக் கொள்ள வேண்டிய சூழலும் ஏற்பட்டது என்றாலும் சீனியர் எனக்கு என் பகுதிக்கு ஃப்ரீடம் கொடுத்தார்.
      ம்உ
      முடிவுப் பகுதியில் நான் முடித்திருந்தது கொஞ்சம் வேறாக இருந்தது. அக்கா எழுதிய முடிவு சேர்க்கப்பட்டது. அடுத்த 2 அம் பகுதிக்கு வழி வகுப்பது போல டித்திருந்தார். ஆனால் அதன் பின் சேர்ந்து எழுதவில்லை.

      உங்களின் இரண்டாவது பாயின்ட் நான் 100 பெர்சென்ட். அப்படி கூட எழுதப் பார்க்கலாம் தான். ஆனால் அந்த இருவர் யாராக இருந்தாலும் எழுதும் இருவரின் மனப்போக்கும் ஈகோவும் க்ளாஷ் ஆகாமல் இருக்க வேண்டும்.

      கீதா

      நீக்கு
    3. இரண்டாவது பாயின்ட், கச்சேரியில் இருவர் சேர்ந்து பாடும் போது கற்பனை ஆலாபனையும், கற்பனா ஸ்வரப் பிரஸ்தாரமும் செய்யறப்ப - அது பேசிக் கொண்டு செய்வது கடினம் ஆன் த ஸ்பாட் செய்வது என்பதால் அசாத்தியமான ஒரு ஆரோக்கியமான போட்டி நிலவும். ஒருவருக்கொருவர் சபாஷ் போட்டுக் கொண்டு நீ அப்படி பாடினியா நான் இப்படி போடுகிறேன் பார் நீ போடு பார்க்கலாம்னு போட்டி போட்டுக் கொண்டு பாடும் போது சபையோர்க்கு பெரிய ராஜ விருந்தே கிடைத்துவிடும் அது போல் தான் நீங்கள் சொல்லியிருப்பதும்! எனக்கும் ரொம்பப் பிடித்த ஒன்று

      நான் அப்படியே அதை வழி மொழிகிறேன்.

      கீதா

      நீக்கு
  18. கதை, வித்தியாசமான தளம் என்பதைத் தவிர, கதையில் புதுமை இல்லை. ஆஹா ஓஹோ என்று சொல்ல எதுவுமில்லை.

    சிறந்த நூறு சிறுகதைகள் என்று பல்வேறு மனிதர்களின் படைப்புகளையும் சேர்த்துக்கொண்டால் தனக்கான ஆதரவுத்தளம் அதிகமாகும் என எஸ் ரா நினைத்திருக்கலாம்.

    அடிப்படைப் புரிதல் இல்லாமல் வள்ளலாரின் படத்தைப் போட்டது மிகுந்த அதிருப்தி. வள்ளலார், திருவள்ளுவர் போன்றவர்களின் பாரம்பர்யத்தைக் கெடுத்து தங்கள் மதம் அல்லது இந்து அல்ல என்று காண்பிக்கும் அறிவிலிக் கூட்டம் நல்ல தாக்கத்தை எபி ஆசிரியர்களிடத்திலும் உண்டாக்கியிருக்கிறதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உள்கட்டுக்குள் நுழைந்ததும் வடலூர் ராமலிங்க சுவாமிகளின் மிகப் பெரிய வண்ண ஓவியம்.//
      வள்ளலாரின் படம் என்னால் சேர்க்கப்பட்டது.

      நீக்கு
    2. // வள்ளலார், திருவள்ளுவர் போன்றவர்களின் பாரம்பர்யத்தைக் கெடுத்து தங்கள் மதம் அல்லது இந்து அல்ல என்று காண்பிக்கும் அறிவிலிக் கூட்டம் நல்ல தாக்கத்தை எபி ஆசிரியர்களிடத்திலும் உண்டாக்கியிருக்கிறதோ? //

      :((

      நீக்கு
  19. ஒரு வரிக் கதையை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒருவர் எழுதி, சிறிது திருத்தத்துணன் அனுப்புவதுதான் இரட்டை எழுத்தாளர்களால் சாத்தியம். நடை வேறுபடாமல் இருக்க இந்த நகாசு வேலை. அல்லது கதை முழுவதும் இருவரும் டஸ்கஸ் செய்து, அந்த அத்தியாயம் ஒருவர் எழுதி மற்றவர் சரிபார்த்து அனுப்புவது.

    நல்லவேளை... இரட்டைப் புலவர்களைப் போல, இரட்டை ஓவியர்கள் வரவில்லை.

    பெரும்பாலான பாடல்கள் ஒரு கவிஞரால் எழுதப்பட்டதில்லை என்பது தெரிந்திருக்கும். பல்லவி, இசையமைப்பாளரோ, டைரக்டரோ இல்லை கதாசிரியரோ கொடுத்திருப்பார். பாடல் கடைசி நேரத்தில் சில வரிகள் மாற்றப்பட்டு படமாக்கப்படுவதும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நல்லவேளை... இரட்டைப் புலவர்களைப் போல, இரட்டை ஓவியர்கள் வரவில்லை. //

      ஒரு கதைக்கு மாருதியும், ஜெ...யும் ஓவியம் வரைந்திருக்கிறார்கள்.   நானே பகிர்ந்திருக்கிறேன்.  இங்கா, பேஸ்புக்கிலா, நினைவில்லை.

      நீக்கு
    2. // பெரும்பாலான பாடல்கள் ஒரு கவிஞரால் எழுதப்பட்டதில்லை என்பது தெரிந்திருக்கும். //

      அதே போல இரண்டு கவிஞர்கள் ஒரே பாடலில் எழுதி இருந்த விஷயம் பற்றி சமீபத்தில்தான் படித்தேன்,.  பானு அக்கா மாதிரி ஒருமுறை படிப்பதை அப்படியே எனக்கு நினைவு வைத்துக் கொள்ள முடிவதில்லை. 

      நீக்கு
  20. B Pharm படித்த இருவரும் நடத்தும் கோசாலை செய்தி அருமையான செய்தி. வருமானம் என்பது பணம் மட்டுமல்ல அது மனதிற்குத் தரும் இன்பம் எனும் போது அவர்கள் அதை அனுபவித்து சம்பாதிக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மற்ற செய்திகளும் நன்று

    துளசிதரன்



    பதிலளிநீக்கு
  21. கதை வித்தியாசமான கதைத்தளத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இப்படியான கதைகள் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் ஜெயகுமார் சந்திரசேகர்ன் சாருக்கு மிக்க நன்றி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  22. கோசாலை விஷயத்தில் இன்றைய வருமான வரி
    யுக்திகள் தாம் நினைவில் படிந்து இவர்களது அரிய பணிகளுக்கு மத்திய அரசு என்ன உதவிகள் செய்தது என்று தான் கேட்கத் தோன்றியது.

    பதிலளிநீக்கு
  23. உதவும் கரங்கள்,உழைக்கும் கரங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    சிறப்பான கதை என செல்வதற்கு இல்லை. இரு எழுத்தாளர்களின் வித்தியாசமான கதை. கதைப் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. உங்கள் கருத்தை வெளியிடும் பொழுது பிழை ஏற்பட்டது என்றால் என்னவென்று தெரியவில்லை.

    எழுதியதெல்லாம் விழலுக்கு இறைத்த நீராயிற்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு தான் நான் வேறு இடத்தில் (கூகிள் மெயில் கம்போஸ்) டைப்பி காப்பி பேஸ்ட் செய்கிறேன். தளத்தில் காணாமல் போனாலும் மெயில் ட்ராப்ட்டில் இருக்கும். மீண்டும் காப்பி பேஸ்ட் செய்யலாம்.
      Jayakumar

      நீக்கு
    2. நான் வேர்டில் டைப் செய்துவிட்டு காப்பி பேஸ்ட் இங்கு செய்வது வழக்கம். பெரும்பாலும். சில சமயங்களில் மட்டும் தான் இன்று அப்படி ஒரு கருத்து இங்கு நேரடியாகச் செய்து போச்....ஆனால் இதற்கென்று வேர்ட் டாக்குமென்ட் ஒன்று பெயருடன் சேமிப்பில் உண்டு. அதை திறந்து வைத்துக் கொண்டு விடுவேன். ஏன் என்றால் நெட் டவுன் ஆகும் போது மெயிலும் சேவ் செய்யாது ட்ராஃப்ட் மோட் என்றால் சிலப்போ இருக்கும்.

      கீதா

      நீக்கு
    3. நான் எப்பவும் கூகுள் மெயில் டிராஃப்ட்தான்..  அழகி இருந்தாலும் உபயோகிப்பதில்லை.

      நீக்கு
  25. நேரடியாக டைப் பண்ணுவதே சிரமமாக இருக்கிறது, ஜேஸி ஸார்.
    எதை எழுதினாலும் சாங்கோபாங்கமாக எழுத நினைப்பது என்னிடம் இருக்கும் குறை.

    அந்த 'நிச்சயமற்ற புனைவு' சமாச்சாரம் ஏற்படுத்திய எரிச்சலில்
    எழுதியதெல்லாம் அந்தோ பரிதாபம், வீணாயிற்று.

    பதிலளிநீக்கு
  26. 42 பின்னூட்டங்கள். நன்றி ஜீவி சார் மற்றும் கீதா ரங்கன் அவர்களுக்கு. இவர்களின் அலசல்கள் பின்னூட்டங்களின் எண்ணிக்கையை கூட்டி வைத்ததில் மகிழ்ச்சி. சென்ற வாரம் இவர்கள் இருவரும் இல்லாமல் 10 பின்னூட்டங்கள் கிடைத்தன.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  27. பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!