திங்கள், 22 ஜூலை, 2024

'திங்க'க்கிழமை  :  கொடிப் பசலை பனீர்க் கூட்டு - துரை செல்வராஜூ ரெஸிப்பி 

 சிறப்பு மிகும் கீரை வகைகளில் பசலையும் ஒன்று.. 

கண்களுக்கும் நரம்பு மண்டல ஆரோக்கியத்திற்கும் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கும் கொடிப் பசலை நல்லது..

இரும்புச் சத்து மிக்க கொடிப் பசலையினால், ரத்தம் சுத்தமாகின்றது.. ரத்தம் விருத்தியாகி சிவப்பணுக்கள் குறைவு எனும் பிரச்னையும் தீர்கின்றது..

இப்படியான  கொடிப் பசலைக் கீரையுடன் வீட்டில் தயாரிக்கப்பட்ட பனீர் சேர்த்து பருப்புக் கூட்டு..

வளைகுடா நாட்டிற்கு சென்ற பிறகு தான் பனீர் பற்றி எனக்குத் தெரியும்.. 

கேரளத்து நண்பர் ஒருவர் சொன்னதன் பேரில்  இப்படியான பசலை பனீர்க் கூட்டு எனக்கு விருப்பமானதாகி விட்டது.. 

தினசரி சொந்தச் சமையல் என்றாலும் வாரம் இருமுறை கொடிப் பனீர்க் கூட்டு..  நானே செய்து கொள்வேன்..

அங்கே  செய்த பனீர்க் கூட்டு இன்றைய திங்கள் குறிப்பு..

இதனின்று மாறுபட்ட செய்முறைகளும் இருக்கின்றன..

வேறு கீரைகளுடன் பனீர் சேர்த்து செய்வது அவரவர் விருப்பம்..


                               




பசலை பனீர்க் கூட்டு

தேவையானவை: 
பசலைக் கீரை கைப்பிடி 
(கை நிறைந்த அளவு)
பயற்றம் (பாசிப்) பருப்பு 100 gr
பனீர் 100 gr
பெரிய வெங்காயம் ஒன்று 
பச்சை மிளகாய் 2
இஞ்சி சிறிது
பூண்டு 2 பல்
மஞ்சள் தூள் 1⁄2 tsp
சீரகம் 1⁄2 tsp
மிளகுத் தூள் 1 tsp
கல்உப்பு தேவையான அளவு

 தாளிப்பதற்கு

கடுகு, கறிவேப்பிலை,
கடலெண்ணெய்,   தேவையான அளவு

செய்முறை:  பயற்றம் பருப்பை சுத்தம் செய்து கொண்டு சரிக்கு சரி தண்ணீருடன் வேக வைக்கவும்.. 

பசலைக் கீரையை சுத்தம் செய்து நறுக்கி சிறிது நீருடன் வேக வைத்துக் கொள்ளவும்..

பூண்டு இஞ்சியை சுத்தம் செய்து விழுதாக்கவும்..

வெங்காயத்தை தோல் உரித்து மெல்லியதாகவும்  பச்சை மிளகாயை நீளவாக்கிலும் கீறி வதக்கிக் கொள்ளவும்..

இந்நேரம் பயற்றம் பருப்பு அரை வேக்காட்டில் இருக்கும்.. 
இதனுடன் கீரை,  இஞ்சி பூண்டு  விழுது மஞ்சள் தூள் மிளகுத் தூள் சீரகத்துடன் உப்பு போட்டு மேலும் சிறிது தண்ணீர் விட்டு மிதமான சூட்டில் வைக்கவும். 

கொதித்து வரும்போது  பனீரை துண்டுகளைச் சேர்க்கவும். முதல் கொதி வந்ததும் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்

44 கருத்துகள்:

  1. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
    சொல்லிற் பயனிலாச் சொல்.

    தமிழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. இன்று திங்கள் பதிவு காண்பதற்கு வருகை தரும் அனைவருக்கும் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  5. இன்றெனது குறிப்பினை ஏற்றுக் கொண்டு படங்களுடன் பதிவு செய்த ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

    பதிலளிநீக்கு
  6. கொடிப் பசலை பனீர்க் கூட்டு..

    என்று இருக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  7. ஓ... பாலக் பனீரா? பசலை என்ற பெயரை இலக்கியங்களில்தான் தலைவன் தலைவி செய்யுள்களில் படித்திருக்கிறேன்.

    எனக்கு விருப்பமானது பாலக் பனீர். அழகிய செய்முறை. பஹ்ரைனில் இருந்தபோது இவற்றிலெல்லாம் (வட இந்திய உணவு) விருப்பம் இருந்ததில்லை. அப்போது ஆசை இருந்திருந்தால் சல்லிசாக்க் கிடைக்கும் புதிய ரோட்டி, நான் வகைகளை அருகிலிருக்கும் கடையில் வாங்கிவந்து, தொட்டுகைகளை மாத்திரம் வீட்டில் பண்ணச் சொல்லியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பாலக் வாங்கியதில்லை, உண்டதில்லை.  பசலைக்கீரை ரொம்பப் பிடிக்கும்.  இதுவரை அதை ஒரே செய்முறையில்தான் சாப்பிட்டிருக்கிறேன்.  சின்ன வெங்காயம் போட்டு பாசிப்பருப்பு சேர்த்து..

      நீக்கு
    2. பாலக் என்றால் வடநாட்டில் கீரை..

      இங்கே பாலைக் கீரை என்றே ஒன்று...

      நடு சென்டர் என்கிற மாதிரி - அறிவார்ந்த குழப்பங்கள் ..

      நீக்கு
    3. பாலக் என்றால் வடநாட்டில் கீரை..

      இங்கே பாலைக் கீரை என்றே ஒன்று...

      நடு சென்டர் என்கிற மாதிரி - அறிவார்ந்த குழப்பங்கள் ..

      நீக்கு
    4. //நான் பாலக் வாங்கியதில்லை, உண்டதில்லை.// ஸ்ரீராம்.... கீரையில் சுலபமாக ஆயணும்னா, பசலைக் கீரை, தண்டுக்கீரைதான். மத்ததெல்லாம் சல்லியம் பிடித்த வேலை. அதனாலேயே முடிந்த வரை அரைக்கீரையை வாங்கமாட்டேன்.

      நீக்கு
    5. நான் வாங்கிய, வாங்கும் பசலையிலும் இலைகள் பெரிதாகத்தான் இருக்கும். தண்டு, இலை இரண்டுமே பச்சை நிறம்.

      நீக்கு
  8. பசலைக் கீரை படம்தான் சந்தேகமாக இருக்கிறது. நல்ல செய்முறை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் பசலைக்கீரை என்றே இருந்தது.  பின்னர் இன்று செல்வாண்ணா கொடிப்பசலை என்று மாற்றச் சொன்னார்.  நான் சென்ற வாரமே நான் கண்ட பசலைக்கீரையைத் தேடி பதிவில் சேர்த்து விட்டேன்!

      நீக்கு
    2. ஆரம்பத்தில் இருந்தே குழப்பம்....

      பதிவு திசை மாறிப் போனது.. படங்களை இணைக்க முடியாமல் போனது...

      இடையில் சொல்லடிகள்...
      நானும் குழம்பித் தவித்தது...

      பதிவு வந்த வரைக்கும் சரி.. என்று ஆகி விட்டது..

      நீக்கு
    3. ஸ்ரீராம் நீங்க போட்டிருக்கும் படத்தில் இருப்பது பருப்புக் கீரைன்னு விற்பாங்க அது போலவும் இருக்கு.

      கீதா

      நீக்கு
    4. என் கண்ணுக்கு பசலைக்கீரை போலதான் தெரியுது பாஸ்! (மைக்கேல் மதன காமராஜன் பீம்பாய் போல படிக்கவும்)

      நீக்கு
  9. எனக்கு கீரை வகைகள் மிகவும் பிடித்தமானது ஜி

    பதிலளிநீக்கு
  10. மிகவும் வித்தியாசமான கூட்டு. நல்ல ருசியுடனிருக்குமென்று நினைக்கிறேன். பாலக் பனீரையும் விட சுவையாக இருக்குமென்று நினைக்கிறேன். ஒரு நாள் செய்து பார்க்க வேண்டும். நல்லதொரு குறிப்பிற்கு நன்றி!
    படத்தில் இருக்கும் கொடிப்பசலைக்கீரை சரியாக புரியவில்லை. பசலையில் கொடிப்பசலை, கொத்து பசலி என்றெல்லாம் இருக்கிறது. கொத்துப்பசலி மிகவும் சுவையாக இருக்கும். சிலர் இங்கே கிடைக்கும் பாலக் கீரையை பசலி என்று தவறாக சொல்லுகிறார்கள். பசலைக்கீரையின் குணமே வேறு. கேரளவின் கீரை ஒன்று இங்கே கிடைக்கிறது. பசலைக்கீரை போன்று, ஆனால் பெரிய இலைகளாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் குழப்பங்கள் எல்லாம் இல்லாமல் பெரிய இலைகளை உடைய பசலைதான் (அதைத்தான் படத்தில் இணைத்துள்ளேன்)  நான் சாப்பிட்டிருக்கிறேன் - நேற்று கூட!

      நீக்கு
    2. ஆம் மனோ அக்கா. இது மிக நன்றாக இருக்கும்.

      எனக்கும் பசலையில் குழப்பம் இல்லை. நீங்க சொல்லியிருக்கும் கொத்துப் பசலை சீமைப் பசலைன்னும் சொல்றாங்க. ஓவல் ஷேப்பில் இலைகள், வயலட் கலரில் பூக்கள் வரும்.

      ரொம்ப வேக வேகமாக அடர்ந்து வளர்ந்துவிடும். அதிலும் நான் பனீர் சேர்த்து செய்வதுண்டு பாலக் இல்லைனா. ரொம்ப நல்லா இருக்கும்.

      ஆமா ஸ்ரீராம், பெரிய இலைகளுடன் இங்கும் கொடிப்பசலை கிடைக்கும் என்றாலும் பாலக் தான் அதிகம் கிடைக்கும்.

      தமிழ்காரர்கள் கொடிப்பசலை, தரைப்பசலை எல்லாம் விற்கிறார்கள்.

      கீதா

      நீக்கு
    3. கொடிப்பசலையில் இரண்டு உண்டு. ஒன்றில் தண்டு நல்ல சிகப்பாக இலைகள் நல்ல பச்சை நிரத்தில் இருக்கும். இதை சிவப்பு பசலைன்னும் சொல்வதுண்டு. மற்றொரு வகை தண்டு பச்சைக் கலரில் இலைகள் டார்க் பச்சை இல்லாமல் நார்மல் பச்சை நிறத்தில் இருக்கும் இதில் கொடி வளர வளர அடியிலிருந்து நுனி வரை தண்டுகள் தடிமனிலிருந்து மெலிதாகும் அதாவது நுனிப் பகுதியும் நாம் பறிக்காமல் வளரும் போது தடிமனாகும். அடிப் பகுதி தண்டு நல்ல தடிமனாக சமையலுக்குப் பயன்படுத்தக் கடினமாக இருக்கும் சட்டென்று வேகாது.

      சீமைப் பசலை அலல்து செடிப் பசலை, இல்லைனா அதையும் பருப்புக் கீரைன்றாங்க. ஆனா பருப்புக் கீரை வேறொன்றும் உண்டு.

      தரைப் பசலை அல்லது சிறு பசலைன்றது தரையில குப்பை மேட்டுல இல்லைனா தோட்டத்தில் அப்படியே வளரும். புல்லோடு கூட மற்ற செடிகளோடு கூட வளரும். இதுல பூ மஞ்சள் கலர்ல இருக்கும். இலை சின்னதா ஓவல் ஷேப்ல கொஞ்சம் திக்கா இருக்கும். இது பலராலும் கவனிக்கப்படுவதில்லை. எனக்கு இதை அறிமுகப்படுத்தியது என் மாமியார். இதுவும் எளிதாக வளர்ந்துவிடும் சும்மா ஒன்றைக் கிள்ளி வைத்துவிட்டால். மாமியார் பசலை வாங்கி வந்து சமைக்கறப்ப அடுப்பில் வேக வைக்கும் முன் சுற்றி இருக்கும் தோட்டத்துக்குப் போய்டுவாங்க இல்லைனா அடுப்புல வேகப் போட்டுட்டும்....எனக்கு இவங்க என்ன பண்ணறாங்கன்னு கிட்ட போய் பார்த்துக் கேட்டப்ப இது தரைல படரும் பசலைன்னு சொல்லி அதைப் பறிச்சு வந்து வேக வைத்த கீரையோடு போட்டு பருப்பு போட்டு செய்வாங்க. சிலப்போ தரைப் பசலை நிறைய கண்ணுல தென்பட்டா அதை மட்டும் வைச்சு செய்வாங்க. தரைல வளரும் பொன்னாங்கண்ணியும் உண்டு.

      பாண்டிச் சேரில இருந்தப்ப தோட்டதுலருந்து ஒரு பாட்டி கீரை வீட்டுக்குக் கொண்டு வந்து பல பல பெயர் சொல்லிக் கொடுப்பாங்க நல்லா ஆஞ்சு சுத்தமா.

      இப்ப பல வருடங்கள் கழித்து இங்கு எனக்குக் கிடைத்தன. தமிழ்க்கார பாட்டி ஒருவர் இந்தத் தரைப்பசலையை வித்தாங்க. அது போல தரைல படரும் பொன்னாங்கண்ணியும் வித்தாங்க.

      கீதா

      நீக்கு
  11. இப்படி குழப்பங்கள் இருக்கும் பெயரை உடைய இன்னொரு காய் சேனைக்கிழங்கு. இதை சிலர் கருணைக்கிழங்கு என்பார்கள். ஆனால் அது வேறு.. சேப்பங்கிழங்கின் தம்பி மாதிரி இருக்கும்! சிலர் காரா கருணை என்பார்கள். சிலர் மண்ணு கிழங்கு என்பார்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். அதே தான். சென்னைல கூட அதை கருணைக்கிழங்குன்றாங்க. நான் சென்னை வந்த புதிதில் குழம்பித் தவித்ததுண்டு.

      கருணைக் கிழங்கு பிடி கருணைன்னும் சொல்வதுண்டு.

      அது போல சிறு கிழங்கு வேறு மண் வேர் எல்லாம் அப்பிக் கொண்டு கிடைக்கும் இதுவும் பொங்கல் சமயத்தில் மட்டுமே கிடைக்கும். ஆனால் ரொம்ப டேஸ்ட்.

      கீதா

      நீக்கு
    2. சென்னைக்காரங்க முன்ன பின்ன சேனையைப் பார்த்திருந்தால்தானே.... சேனை என்பது பெரியது. கருணைக்கிழங்கு சிறியது, கொஞ்சம் கருப்பு நிறம், ஆரோக்கியத்துக்கு மிக நல்லது, சேப்பங்கிழங்கு ருசி, சிறுகிழங்கு வாசனை மற்றும் ருசி. பொங்கல் சமயம்தான் இந்தக் கிழங்குகள் கொஞ்சம் சல்லிசான விலையில் கிடைக்கும். இப்போ சேனை கிலோ 100 ஐத் தாண்டிவிட்டது. நான் 30 ரூ, 40 ரூபாயில்தான் பொதுவா வாங்குவேன். பிடிகருணை இங்கு வரும் காலத்தில் கிலோ 60 ரூ

      நீக்கு
    3. மேலதிக விவரங்கள் அருமை..

      மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  12. துரை அண்ணா, கொடிப்பசலை ரொம்பப் பிடிக்கும். இப்படிச் செய்வதுண்டு. அருமையான செய்முறைக் குறிப்பு!

    பாலக் கிடைக்காத சமயத்தில் பசலையிலும் பனீர் போட்டுச் செய்வதுண்டு.

    பனீர் இல்லாமல் பருப்புக் கூட்டும் செய்வதுண்டு. பசலை எந்தவகை கிடைத்தாலும் செய்வதுண்டு

    எல்லாப் பசலை வகைக்கும் ஒரு சிறிய கொழ கொழப்பு உண்டு.

    கொடிப்பசலை, தரைப் பசலை, சீமைப்பசலை, பாலக் (பசலை வகைதான் ஆனால் அதை பசலை என்று நம்மூரில் தப்பா சொல்வதுண்டு!!)

    கீதா

    பதிலளிநீக்கு
  13. செய்முறை நன்றாக உள்ளது.

    பன்னீர் சேர்த்து பாலக் கீரை செய்வேன்.இந்த கீரை பாசிப்பருப்பு பன்னீர் கலந்து செய்ததில்லை. செய்து பார்கிறேன்.
    பருப்புகளில் கீரை கலந்து மசியல் செய்வதுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கே இருந்த போது அடிக்கடி கீரை தான்..


      தற்போது மருந்திற்காக சேர்த்துக் கொள்ளவதில்லை..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி மாதேவி..

      நீக்கு
  14. நல்லதொரு செய்முறை. வடக்கில் பனீர் நன்றாக கிடைக்கும் என்பதால் இங்கே அவ்வப்போது பனீர் பயன்பாடு உண்டு. நம் ஊரில் கடையில் கிடைப்பவை அத்தனை நன்றாக இருப்பதில்லை. வீட்டிலேயே பனீர் தயாரித்து செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி வெங்கட்..

      நீக்கு
  15. ஆமாம் ஸ்ரீராம்! சேனையை காராகருனை என்றும் சொல்வதுண்டு. அதுவும் பல ரகங்களில் கிடைக்கிறது. வெட்டினால் உள்ளே வெளிர் மஞ்சள், ரோஸ் கலர் என்றெல்லாம் கிடைக்கிறது. மிகப்பெரிய கிழங்காகவும் சிறிய கிழங்காகவும் கிடைக்கும். கருனைக்கிழங்கு மேல் தோல் அடர்த்தியாகவும் உளே க்ரீம் கலராகவும் இருக்கும். இரண்டுமே சில நாட்கள் போட்டு வைத்திருந்து தான் சமைக்க வேண்டும். உடனே சமைத்தால் நாக்கில் அரிப்பு அதிகமாக இருக்கும். கருணைக்கிழங்கில் மட்டும் மருத்துவப்பயன் அதிகமுண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலதிக விவரங்கள் சிறப்பு..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. ஆம் மனோ அக்கா..  வாங்கிய உடனே சமைக்க மாட்டோம்.  கருணைக்கிழங்கு போட்டு மசியல் செய்வோம்.  எ.பழச்சாறு பிழிந்து...  பைல்ஸுக்கு நல்லது என்பார்கள்.

      நீக்கு
  16. மேலே கருணைக்கிழங்கு, காராகருணை ' எழுத்துப்பிழை' ஆகி விட்டன!!

    பதிலளிநீக்கு
  17. பசலை கீரை கூட்டு அருமை. கீரை கூட்டு செய்முறையும் படங்களும் அருமை.
    பனீர் போட்டு கீரை கூட்டு சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

    கொடி பசலையில் பச்சை கலர், கொஞ்சம் வைலட் கலர் கலந்த கீரையும் கிடைக்கும். பாலக் கீரை என்பது கொஞ்சம் நீட்டமாக பெரிய இலையாக இருக்கும். படத்தில் உள்ளது வெந்தய கீரை போல் இருக்கிறது.

    குத்து செடி போல ஒரு பசலை உண்டு வைலட் கலர் பூக்கும் அது எங்கள் வீட்டில் இருந்தது. கொடி பசலைதான் உடம்புக்கு நல்லது.
    கடையில் கிடைக்காது, வீடுகளில் வளர்க்கும் கொடி. கொடி பசலை கீரை நிறைய மருத்துவ குணங்கள் உள்ள கீரை.

    //தற்போது மருந்திற்காக சேர்த்துக் கொள்ளவதில்லை..//

    கீரை சேர்த்து கொள்ள கூடாதா?

    மருமகள், மகள் இருவரும் வீட்டிலேயே பனீர் செய்து கொள்வார்கள் சப்பத்திக்கு தொட்டுக் கொள்ள செய்யபடும் அனைத்திலும் சேர்த்து கொள்வார்கள்.
    பனீர் சப்பாத்தி எனக்கு பிடிக்கும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!