திங்கள், 16 செப்டம்பர், 2024

"திங்க"க்கிழமை  :  அவகேடோ - கீதா ரெங்கன் ரெஸிப்பி 

 

Avocado Fruit / Butter Fruit - Guacamole (குவாக்கமோல்) அவகேடோ பழம் / பட்டர் ஃப்ரூட் - மெக்சிகோவில் செய்யப்படும் ஓர் எளிய செய்முறை

அடுப்பை பயன்படுத்தாமல் செய்யும் ஓர் எளிய செய்முறை

அவகேடோ பழம்- இதில் சில வகைகள் உண்டு. நான் பெயர் சொல்லி உங்களைக் குழப்பப் போவதில்லை. பழுத்த நிலையில் ஒரு வகை நல்ல கடும் சிவப்பும் ப்ரௌனும் கலந்திருக்கும். மற்றொரு வகை அடர் பச்சையும் ப்ரௌனும் கலந்த நிறத்தில் இருக்கும். சில அடர் பச்சையாக இருக்கும். வாங்கும் போது பழமாக இருந்தால் நல்லது. நல்ல பழுத்த பழம்னா வெளிப்புறத் தோல் அடர் பச்சை நிறம் அல்லது கறுப்பு நிறத்துல இருக்கும் (படத்தில் இருப்பது போல்). பழுத்து வரும் நிலையில் உள்ள பழங்கள் வீடியோல இருப்பது போல வெளிப்புறம் பச்சையா இருந்தாலும் கொஞ்சம் அமுக்கிப் பார்த்தா எல்லாப் பக்கமும் அமுங்கும். அப்படியானதும் தேர்ந்தெடுக்கலாம். கெட்டியா காயா இருந்தாலும் செய்யலாம்தான் ஆனால் கசக்கும். எனவே பழமாகவே தேர்ந்தெடுத்தால் நல்லாருக்கும்.

மற்றொன்றும் சொல்லிவிடுகிறேன். இந்தப் பழத்திற்கு பெரிதாகச் சுவை எதுவும் கிடையாது. வெண்ணை போன்ற ஒரு texture இருப்பதால் இது binding ஆகப் பயன்படும். நிஜமாகவே எதனோடு சேர்த்து செய்தாலும் வெண்ணை போன்ற அந்த texture நன்றாக இருக்கும்


அவகேடோ பழத்தை நெடுக்காகவோ குறுக்குவாட்டிலோ உள்ளே உள்ள பெரிய கொட்டை இடையில் சிறிதே தடுக்கினாலும் பழமாக இருந்தால் பழமே எளிதாக நகர்ந்து கொடுத்து இரண்டாக கையாலேயே பிளக்க வழி கொடுத்துவிடும்.

கொட்டையை எடுத்துவிட்டு, ஒரு ஸ்பூனால் பழத்தின் உட்பகுதியை வழித்து ஒரு பெரிய கிண்ணத்தில் போட்டு மத்தாலோ பருப்பு மசிக்கும் கரண்டியாலோ நன்றாக மசித்து வைத்துவிடலாம். அரைப்பானிலும் போட்டு அரைத்து எடுத்துவிடலாம் தான் ஆனால் அதை ப்ளேடின் அடியில் இருப்பதை எல்லாம் வழிக்க வேண்டும், கழுவ வேண்டும். மெனக்கெடல். என் வழக்கம் மத்தால் மசித்துக் கொள்வது. மற்றபடி உங்கள் விருப்பம்.

இந்தப் பதார்த்தத்திற்கு சேர்மானங்கள் அதிகம் வேண்டாம்.

இரண்டு பழத்தை வழித்து எடுத்து மசித்ததற்கு

வெங்காயம் பெரிதாக இருந்தால் - 1/2 போதும். சிறியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கொஞ்சம் சின்னதாக இருந்தால் 1

தக்காளியும் பெரிதாக இருந்தால் - 1/2. சின்னதாக இருந்தால் 1. சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம் தக்காளியை எவ்வளவுக்கெவ்வளவு சிறியதாக நறுக்குகிறோமோ நல்லாருக்கும்.

மிளகு - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் பெரிதாக இருந்தால் - 1/2 போதும். சிறிதாக இருந்தால் 1

பூண்டு இதழ் - 1

மிளகு, பச்சை மிளகாய், பூண்டை சின்ன இடி உரலில் போட்டு இடித்து எடுத்துக் கொள்ளவும்.

உப்பு - தேவையான அளவு

எலுமிச்சை - 1-2. சாறாக என்றால் 1 மேசைக்கரண்டி தாராளமாகச் சேர்க்கலாம். பழத்தில் இருக்கும் சாறு எவ்வளவு இருக்கோ அதைப் பொருத்து. நான் 1 1/2 பயன்படுத்திக் கொண்டேன். எலுமிச்சையின் புளிப்பு இதற்குச் சுவை சேர்க்கும்.

சிறிதாக நறுக்கிய கொத்தமல்லித் தழை ஒரு கைப்பிடி.

பழம் மசிப்பதை மேலே சொல்லிவிட்டதால்...மசித்த பழத்தோடு, உப்பு, தட்டிய கலவை, நறுக்கிய வெங்காயம், தக்காளி இவற்றை நன்றாகக் கலந்து எலுமிச்சை சாறு மற்றும் பொடியாக நறுக்கிய  கொத்தமல்லித் தழை சேர்த்துவிட்டால் Guacamole தயார்.

இது ப்ரெட், சப்பாத்தி இவற்றோடு சாப்பிடலாம்.

தக்காளி வெங்காயத்தைப் பொடியாக நறுக்குவதற்குப் பதில் அதோடு மிளகு, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றையும் சேர்த்து அரைத்து, மசித்த/அரைத்த பழத்தோடு கலந்துவிட்டால் Dip அதாவது Corn chips கார்ன் சிப்ஸ், Toasted/Grilled Bread - டோஸ்டட் பிரெட் - போன்றவற்றை Sauce தொட்டுக் கொண்டு சாப்பிடுவது போல Guacamole ல் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

காணொளி எடுக்கும் போது ஒரு கையில் மொபைல் மறுகையால் பழத்தை வழிப்பதும், மசிப்பதும், இடிப்பதும் என்று எடுத்ததால் சற்று சிரமமாக இருந்தது. காணொளியில் அந்த இடங்கள் வரும் போது உங்களுக்கே தெரிந்துவிடும். 

இப்பழத்தை வதக்காமல் நம்மூர் வகைகள் செய்யலாம் குறிப்பாகத் தேங்காய் இல்லாமல்! 

எச்சரிக்கை : எனவே அவகேடோ செய்முறைகள் இன்னும் இரண்டு தொடரும்.

41 கருத்துகள்:

  1. இந்தச் செய்முறைக்கு அவகேடோதான் வேணுமா? (பெட்ரோமாக்ஸே வேணுமா?) உருளை, சீனிக்கிழங்கு போன்றவை சரிப்பட்டு வராதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை, செய்யலாமே உருளை, சீனிக்கிழங்கிலும். செய்திருக்கிறேனே...ஆனால் இது எதுவும் வேக வைக்காமல் செய்வது...

      அவகேடோ பழம் சத்துகள் நிறைந்தது. ஆனால் அதை வேக வைத்து கெடுக்காமல்...

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  2. ஒரு முறை அவகேடோ ஒரு துளி சாப்பிட்டிருக்கேன். பெரிதாக விருப்பம் வரவில்லை.

    இந்தோநேஷியாவில் முதல் முறை அவகேடோ மரம் பார்த்தேன். ஆயிரத்துக்குமேல் பெரிது பெரிதாக்க் காய்த்துத் தொங்கின. இவ்வளவு விளைச்சல் உள்ள பழத்துக்கு இவ்வளவு விலையா என்று தோன்றியது.

    ஆனால் இது உடலுக்கு ரொம்ப நல்லதுன்னு எல்லோரும் சொல்றாங்க. (அடுத்த அபத்தம் டிராகன் ஃப்ரூட்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதில் சுவை இருக்காது. அதை பதிவிலும் சொல்லியிருக்கேனே.

      அழகாக இருப்பது ஆபத்து என்பது போலத்தான், சுவையாக இருப்பவையும் சில. ஸ்வீட் போன்றவை.

      டிராகன் ஃப்ரூட்டும் நல்லது பிபிக்கு என்று சொல்வதுண்டு. நாக்குக்கு நாம அடிமையானால் வரும் கஷ்டங்கள் இப்படியான நல்லது என்று சொல்லப்படுவதை நாம் எடுத்துக் கொள்ளாமல் போவது!!

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  3. படங்களோடு செய்முறை மிக அழகாகச் சொல்லியிருக்கீங்க.

    ப்ரௌன் பிரட் உபயோகித்திருக்கீங்க. எல்லாமே உடலுக்கு நல்லது.

    மஹாளய பக்ஷம் இதோ வந்துவிட்டதால் அவசர அவசரமாக வெங்காயம் சேர்த்து நிறைய உணவு வகைகள் செய்கிறீர்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ரௌன் ப்ரெட்டும் கூட எப்போவாவதுதான். கூடியவரை ப்ரெட் தவிர்க்கிறோம்.

      மகன் சொல்வதைச் செய்வது.

      கீதா

      நீக்கு
  4. மெக்சிகோன்னு சும்மாதானே போட்டிருக்கீங்க. நம்ம ஊர் செய்முறை, உருளைக்குப் பதிலா பட்டர் ஃப்ரூட். ஹிஹிஹி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா....உருளைக்கிழங்கை வேக வைக்காமல் சாப்பிட முடியாதுங்கோ!!

      பார்த்தீங்கனா மெக்ஸிகன் உணவுக்கும் நம்ம ஊர் உணவுக்கும் கொஞ்சம் ஒற்றுமைகள் உண்டு.

      //படங்களோடு செய்முறை மிக அழகாகச் சொல்லியிருக்கீங்க.//

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  5. முருகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  6. விடியற் காலையில் வந்தேன்... யாரும் இல்லை...

    பயமாக இருந்தது
    ஓடி வந்து விட்டேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா நீங்க காலைல வந்து கருத்து போடுவீங்களே நல்வரவு சொல்லி!

      கீதா

      நீக்கு
  7. குவைத்தில் இருந்த போது அவகேடோ பழக்கமானது...

    இதில் மில்க் ஷேக் செய்வதுண்டு...

    மற்றபடி
    அவகேடோ பொரிச்ச குழம்பு
    அவகேடோ புளிக்கறி இந்தப் பக்கம் எல்லாம் போனது இல்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அவகேடோ பால் கலந்து ஷேக் செய்வதுண்டு.

      நானும் பொரிச்ச குழம்பு என்றெல்லாம் செய்வதில்லை துரை அண்ணா. அதன் சத்து போய்விடும் என்று சொல்வதுண்டு.

      மிக்க நன்றி துரை அண்ணா

      கீதா

      நீக்கு
  8. அடுத்தடுத்த படங்களுடன் விவரமான செய்முறைக் குறிப்பு..

    இருந்தச்லும் இதற்கும் நமக்கும் வெகு தூரம்..

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. அவகேடோ போட்டு சப்பத்தி செய்வேன்.
    நீங்கள் சொன்னது போல செய்து பார்க்கிறேன்.
    இங்கு மருமகள் நிறைய சேர்த்து கொள்வாள்.
    செய்முறை விளக்க படங்கள் அருமை.
    காணொளியும் நன்றாக இருக்கிறது கீதா.

    மெக்ஸிகன், தாய் உணவுகளில் அவகேடோ நிறைய சேர்த்து கொள்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவகேடோ போட்டு சப்பத்தி செய்வேன்.//

      ஓஹோ!!! அக்கா புதுசா ஒரு செய்முறை சொல்லிட்டீங்க!

      ஆமாம் அங்கு பலரும் இதைச் சேர்த்துக் கொள்கிறார்கள். உங்கள் மருமகளும் செய்வது மகிழ்ச்சி.

      இங்கு விலை அதிகமாக இருப்பதால் நான் சில சமயம் வாங்கிச் செய்கிறேன்...ஆமாம் மெக்ஸிகன் தாய் உணவுகளில் இது சேர்த்துக் கொள்கிறார்கள்.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  11. படங்களோடு விளக்கம் அருமை காணொளி கண்டேன் நன்று.

    பதிலளிநீக்கு
  12. உடல் நலம் சரியில்லாமல் கடந்த வாரம் முழுவதும் மருத்துவமனை வாசம்.

    ஆகவே வலையுலக வரவு குறைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் அதிசயமான செய்தி கில்லர்ஜி. வெயிட் போடாமல் கொஞ்சம் ஆக்டிவ்வா இருப்பீங்க. இப்போ சரியாயிடுச்சா? இப்போ ஆகஸ்ட் கொளுத்தும் வெயிலிருந்து க்ளைமேட் மாறும் நேரமல்லவா? அதனாலா?

      நீக்கு
    2. கில்லர்ஜி உண்மையா இதை எதிர்பார்க்கவில்லை. இப்போ எப்படி இருக்கீங்க. நீங்க அங்குஇருப்பதால் வேலை பிசி என்று நினைத்தேன்.

      இப்போ உடல் நலம் ஓகெவா? மருத்துவமனையில் சேரும்படி என்னாச்சு?

      கீதா

      நீக்கு
    3. தற்போது பூரண நலம் மிக்க நன்றி.

      நீக்கு
    4. நெல்லையாருக்கு....
      நான் இந்த மாதிரி வாழ்வில் நிலை குலைந்ததில்லை சற்று தடுமாறி விட்டேன்.

      அடிக்கடி பெயர்த்திகளை காணொளி அழைப்பில் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

      மனதில் ஏதேதோ எண்ணங்கள் தற்போது நலம்.

      நீக்கு
  13. வணக்கம் சகோதரி

    இன்றைய திங்கள் பதிவில் தங்கள் செய்முறையாக அவகேடோ பழத்தை பயன்படுத்தி செய்த செய்முறைகள், படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. நன்கு விபரமாக சொல்லியுள்ளீர்கள். காணொளியும் நன்றாக உள்ளது.

    இந்த பழத்தை பற்றி நான் கேள்விபட்டதில்லை என்றுதான் நினைக்கிறேன். ஏனெனில் நாங்கள் வாங்கியதில்லை. ஒரு வேளை மருமகள்கள் வாங்கி இதுபோல் செய்து சாப்பிட்டுள்ளார்களா என்பதும் தெரியாது. (அதைப்பற்றியெல்லாம் விசாரித்து கேட்டு எந்த சில "அவகேடான" பிரச்சனைகள் வருவதை தவிர்த்து விடலாம் என்ற நல்லெண்ணந்தான்...! ஹா ஹா ஹா.)

    தங்கள் செய்முறை விளக்கம் நன்றாக உள்ளது. ஒரு வகையில் விளாம்பழம் மாதிரி உள்ளது. அது அனேக முறை சாப்பிட்டிருக்கிறோம். இந்தப்பழமும் இனி வாங்கினால், இதுபோல் செய்து பார்க்கிறேன். சுவையாக இருக்குமென்று தோன்றுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலா ஹரிஹரன் மேடம்... சென்னையில் இருந்தபோது எனக்குப் பிடித்த விளாம்பழம் அபூர்வமாகத்தான் வரும். முதன் முறை கயா சென்றிருந்தபோது விட்டுவிட்டேன். அதற்கப்புறம் நான் அடிக்கடி மிக சல்லிசான விலையில் விளாம்பழத்தை எங்கும் பார்க்கிறேன். இதுபோல சர்க்கரைவள்ளிக் கிழங்கை விட்டுவிட்டேன். அதன்பிறகுதான் அது உடலுக்கு மிகவும் நல்லது என்று சொல்லும் பல காணொளிகளைப் பார்த்தேன்.

      நீக்கு
    2. கமலாக்கா, விளாம்பழம் போல என்றும் சொல்ல முடியலை. விளாம்பழம் தனி சுவை. அதுவும் உடலுக்கு ரொம்ப நல்லது. நாங்கள் விளாம்பழம் பார்த்தால் வாங்கிவிடுவோம். இங்கு இப்ப நிறைய கண்ணில் படுகின்றன. ஆனால் பார்த்து வாங்க வேண்டும். உள்ளே பழுத்திருந்தால் நல்லாருக்கும்.

      வாய்ப்பு கிடைக்கும் போது அவகேடோ விலை கம்மியா இருக்கும் போது வாங்குங்க...காயா இருந்தா வாங்காதீங்க கமலாக்கா

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      கீத

      நீக்கு
  14. /// அண்ணா நீங்க காலைல வந்து கருத்து போடுவீங்களே நல்வரவு சொல்லி!///

    அதுவும் கொடுமையாகி விட்டது..

    நல்லதற்கு காலம் நஹி பெஹென் நஹி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா....துரை அண்ணா....

      ஓ கண் பிரச்சனை பண்ணுகிறதோ...சிரமப்படாதீங்க.
      சீக்கிரம் விழி நலம் பெற ஒரு வழி பாருங்க துரை அண்ணா.

      கீதா

      நீக்கு
  15. எல்லா நாட்களிலும் விடியற் காலையில் விழிப்பு வந்து விடும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல விஷயம். நானும் சீக்கிரம் எழுந்துவிடுவேன்.

      கீதா

      நீக்கு
  16. அவகேடோ என்பதை எப்படியெல்லாம் பதம் பிரித்து அர்த்தம் கொள்ளலாம்.
    அவள்+கேடு+ஓ =அவக்கேடோ
    அவக்கேடு + ஓ =அவக்கேடோ?
    அவக்கேடோ எல்லாம் என்ன விலை தெரியுமா? அமெரிக்காவிலேயே ஒரு டாலர். இறக்குமதி செய்யும் இந்தியாவில்?
    அவக்கேடு ஆயிற்று. அடுத்து ஆப்பிள் பச்சடியா?
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா ஜெ கே அண்ணா.....நான் இந்த ரெசிப்பி அனுப்பி இதைப் பற்றி சொன்னப்ப ஸ்ரீராமும் அவக்கேடோ என்று சும்மா ஜாலி பண்ண...அதை ஆங்கிலத்தில் உச்சரிப்பதை தமிழில் எழுதும் போது இப்படியான அர்த்தங்கள் வந்துவிடுகின்றன!

      ஆப்பிள் பச்சடி!! செய்யலாமே! செய்ததுண்டு. நாங்க தான் எதையும் விட்டு வைக்கறதில்லையே!!!!! ஹிஹிஹிஹி என் மகனும் என்னைப் போல வித்தியாசமாகவும் விதம் விதமாகவும் செய்து பார்ப்பதில் ஆர்வம் உள்ளவன். பாட்டு சினிமா சுற்றிப் பார்த்தல் என்று என் விருப்பங்கள் அவனுக்கும் உண்டு. ஆனா அவனுக்கு நேரமில்லை இப்ப.

      கீதா

      நீக்கு
  17. அவகாடோ நல்ல செய்முறை.நீங்கள்கூறியது.போல டிப்புக்கு சிறந்ததுதான்.

    எமது நாட்டிலும் நன்கு விளையும்.பழம். நாங்களும் பலவாறு பயன்படுத்துவோம்.

    அப்படியே சிறிது சீனி சேர்த்தும் உண்பார்கள்.ஸ்மூத்தி, சலட்,களில் கலந்தும்,பச்சடியாகவும் செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மாதேவி. ஆமாம் உங்கள் நாட்டிலும் விளைகிறது என்பதும் இப்பழத்தைப் பற்றித் தெரிந்து கொண்ட போது அறிந்தேன். நீங்களும் பலவாறு பயன்படுத்துவது மகிழ்ச்ஹ்கி.

      ஸ்மூதி, சாலட் மற்றும் சீனி சேர்த்தும் சாப்பிடுவதுண்டுதான் நாமதான் சீனி பக்கமே போவதில்லையே அதான் காரம் மட்டுமே செய்கிறேன் இங்கும் சொல்கிறேன்!

      நான் உப்பு காரம் போட்ட பச்சடி செய்வதுண்டு நீங்கள் சொல்வது இனிப்பா காரமா?

      மிக்க நன்றி மாதேவி.

      கீதா

      நீக்கு
  18. மிகவும் புகழ் பெற்ற குறிப்பு இது! அதை அருமையாக எழுதியிருக்கிறீர்கள் கீதா!! வழக்கம் போல விவரிப்பும் அருமை!! எந்த ருசியும் இல்லாத இந்தப் பழத்தில் எனக்கு அத்தனை ஈர்ப்பு வந்ததில்லை! சாண்விட்சில் உபயோகித்து பார்க்க வேண்டும்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மனோ அக்கா. மிகவும் புகழ்பெற்ற ஒரு செய்முறை. ஆனால் நான் ஒரிஜினல் சாப்பிட்டதில்லை. தெரிந்து கொண்டதைத்தான் செய்தேன் செய்கிறேன்.

      ருசி இல்லாததால் இது ஈர்ப்பதில்லை ஆனால் சத்துள்ளது என்பதால் நான் வாங்க முடிந்த சமயங்களில் ஒவ்வொன்றும் செய்கிறேன். விலை கூடுதல். இங்கு விளைவதால் சில சமயம் விலை கம்மியாகக் கிடைக்கும்.

      அதை அருமையாக எழுதியிருக்கிறீர்கள் கீதா!! வழக்கம் போல விவரிப்பும் அருமை!! //

      மிக்க நன்றி மனோ அக்கா. சான்ட்விச்சிற்குச் செய்து பாருங்க. நல்லாருக்கும்

      படத்தில் இரு வடிவங்களில் இருக்கு. ஒன்று பந்து போன்று மற்றொன்று பெங்களூர் கத்தரி பெரிய கத்தரி போன்று இருக்கு இல்லையா இரண்டும் அவகேடோ தான் ஆனால் இரு வேறு வகைகள்.

      மிக்க நன்றி மனோ அக்கா

      கீதா

      நீக்கு
  19. வித்தியாசமான சமையல் - முயற்சித்துப் பார்க்கத் தோன்றவில்லை… :)

    பதிலளிநீக்கு
  20. ஓ! கீதாவின் இந்த ரெசிப்பி வந்துவிட்டதா? காணொளியோடு. அவகேடோ பழம் கடைகளில் பார்த்ததுண்டு ஆனால் வாங்கியதில்லை.

    யுட்யூபில் போடும் முன் எனக்கு அனுப்பிக் கேட்பார். இருவரும் சேர்ந்துதானே ப்ளாகும், யுட்யூபும். நான் குரல் கொடுக்கச் சொன்னேன். அவர் ஏதோ ஒரு சைட்டில் லூப்ஸ் வைத்து உருவாக்கிய இசை சேர்த்திருந்தார். மாற்றவில்லை போலும். அடுத்த செய்முறையில் கொடுத்திருக்கிறார். அது அப்படியே வரும் என்று நினைக்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!