1.9.25

"திங்க"க்கிழமை : வத்தரசம் - ஸ்ரீராம்

நிலைய வித்வான் அட்டகாசம் தொடர்கிறது... 

ஏற்கனவே சொன்னேன், சிறு மாற்றங்கள் சமையலில், சுவையில் நல்ல வித்தியாசம் காட்டும் என்று.  சரவணபவன் சாம்பார் - கீதா அக்கா பற்றி சொல்லி இருந்தேன்.

சென்ற வாரத்துக்கு முந்தைய வாரம் பகிர்ந்திருந்த  'இட்லி தோசை சாம்பாரை'  நெல்லை, பானு அக்கா செய்து பார்த்து பாராட்டி மெசேஜ் அனுப்பி இருந்தார்கள்.  ஏற்கனவே கீதா ரெங்கன் செய்து பார்த்து, அவர் தந்த புகைப்படங்களைதான் பதிவிலேயே நான் பகிர்ந்திருந்தேன்.  இதெல்லாம் ஒரு சிறு சந்தோஷம் தருகிறது தான்.

இன்றைய சமையலில் வத்தக்குழம்பு போல வத்தரசம்!  அதென்ன வத்தரசம்?  

சொல்கிறேன்.

சாம்பாரில் பூண்டா என்று கேட்ட நெல்லை, கீதா அக்கா உட்பட நீங்கள் 'ரசத்தில் வத்தலா?' என்று கேட்கக்கூடும்.

எனக்கும் முதலில் வியப்புதான்.

ஒரே மாதிரி சமைப்பதைவிட சம்பிரதாயங்களை மீறி வித்தியாசமாக செய்வதில் சிலசமயம் நல்ல சுவைகள் கிடைத்து விடும்!

செய்முறைக்கு வருகிறேன்.  சாதாரணமாக ரசத்துக்கு கடைசியில்தான் தாளிப்போம்.  இங்கு முதலிலேயே தாளித்து விடலாம்.

ஒரு கரண்டி அல்லது ஒன்றரை கரண்டி - உங்கள் வழக்கப்படி அளவில் - ரசத்துக்கு போட வேண்டிய துவரம்பருப்பை குக்கரில் நன்றாக வேகவைத்து எடுத்து மைய்ய மசித்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

வாணலியில் மூன்று டேபிள் ஸ்பூன் நெய் விட்டுக் கொள்ளவும். (வாணலியில் செய்ய வேண்டும் என்பதில்லை.  ரசம் என்பது என்னைப் பொறுத்தவரை எவர்சில்வர் பாத்திரத்தில் செய்வதுதான்.  அன்று என்னவோ பாஸ் வாணலியில் செய்து விட்டார்.  திருமதி லதா சேகர் வாணலி என்றுதான் சொன்னார்.  அதனால் இருக்கலாம்!)

அதில் கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும்.   ஒரு பெரிய தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கி அதில் போட்டு வதக்கவும்.  கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்.  இரண்டு வரமிளகாய் கிள்ளிப் போடவும்.  அரை டீஸ்பூன் மஞ்சள்பொடி சேர்க்கவும்.   பெருங்காயம் சேர்க்கவும்.  வேகவைத்து மசித்து வைத்திருக்கும் துவரம் பருப்பை அதில்  சேர்க்கவும்.  ஓரிரு பச்சை மிளகாயை கீறி போடவும். (பச்சை மிளகாய் நான் சேர்த்துக்கொண்டேன்! எனக்கு ரசத்தில் பச்சை மிளகாய் வாசனை இருக்கவேண்டும்!) அனைத்தையும் நன்றாகக் கலந்து விட்டு புரட்டவும்.    எல்லாம் கலந்து மசிந்து சேர்ந்து வரும்.  இப்போது அதில் பெரிய டம்ளரால் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.  உப்பு சேர்க்கவும்.   

ஒரு டேபிள்ஸ்பூன் சுண்ட வத்தல் எடுத்து அதில் மூன்று பெரிய பல் பூண்டு சேர்த்து சிறு உரலில் இடிக்கவும்.  

கொதித்துக் கொண்டிருக்கும் ரசத்தில் நெல்லிக்காய் அளவு புளி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்துச் சேர்க்கவும்.  

இப்போது இடித்து வைத்திருக்கும் பூண்டு, மிளகை  ஒரு ஸ்பூன் நெய்யில் இட்டு மிக லேசாக ஒரு திருப்பு திருப்பி ரசத்தில் சேர்க்கவும்.  அரை டம்ளர் தண்ணீர் விடவும்.  அதன்மேல் நிறைய கொத்துமல்லி தூவி முத்துக்கொதி வந்ததும் இறக்கி வைத்து விடவும்.  ரொம்ப ரசம் கொதிக்கக் கூடாது இல்லையா?

ரசத்தை இறக்கி வைக்கும்போது பாத்திரத்தில் மேலே பாதி நுரை, பாதி ரசம், கொத்துமல்லித் தழைகள் என்று பார்ப்பதற்கே ரம்யமாக கண்ணில் பட்டாலே நல்ல ரசம்தான் என்று தெரிந்து விடும்.

So, வத்தரசம் தயார்.  மிக மிக லேஸான கசப்போடு சுவையான ரசம் ரெடி.  குடிக்கலாம், சாதத்தில் கலந்து சாப்பிடலாம். நன்றாக இருந்தது.  

பின்குறிப்பு :  ட்ரையல் அண்ட் எரர்ஸ், கரெக்ஷன்ஸ் அண்ட் சஜஷன்ஸ் : 

இதை நான் ஒரு இன்ஸ்டாக்ராம் பதிவில் கேட்டேன்.  லதா சேகர் என்பவர் சொன்ன செய்முறை.  ஆனால் அவர் பெப்பர் என்று சொன்னது என் காதில் 'வெத்தல்' என்று விழுந்தது.  வெறுமனே வத்தல் என்கிறாரே, மணத்தக்காளி வத்தல் போடலாமா, சுண்டை வத்தல் போடலாமா என்று எண்ணமிட்டபடியே அவர் வீடியோ பார்த்தால் பார்பபதற்கு சுண்டை வத்தல் மாதிரி இருக்க அதையே சேர்த்தேன்.  என் குறிப்புகளின்படி ரசம் செய்தபிறகு பாஸ் வீடியோ பார்த்து / கேட்டு விட்டு 'அது வெத்தல் இல்லை, பெப்பர்' என்றார்

பெப்பர்தான்.    வெத்தல் - வத்தல் என்று நான் மனதில் போட்டுக்கொண்டதால் க்ளோசப் ஷாட்டில் மிளகு, சுண்ட வத்தல் போல தெரிந்திருக்கிறது..  அவர் பேச்சுவழக்கில் வத்தலை வெத்தல் என்று சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டேன்!  

அதனால் ஒன்றும் கெட்டுவிடவில்லை.  புதிய சுவையில் ரசம் கிடைத்தது.  மறுநாள் வத்தலோடு மிளகும் சேர்த்து இடித்து இதே முறையில் செய்தோம்.  சூப்பர்.  திருமதி லதா சேகர் பதிவில்போய் நான் பெப்பரை வெத்தல் என்று காதில் வாங்கி அதன்படி கலந்து செய்ததையும், ருசியாகவே இருந்தது என்பதையும் குறிப்பிட்டேன்.  மிக்க மகிழ்ச்சி என்று மட்டும் பதில் வந்தது!  

  1) மிளகும் பூண்டும் இடித்துச் சேர்த்து செய்யலாம்.  2) மிளகு, வத்தல், பூண்டு இடித்துச் சேர்த்து செய்யலாம்.  3)  வத்தலும் பூண்டும் இடித்துச் சேர்த்துச் செய்யலாம்.

ஒருமுறை மணத்தக்காளி வத்தல் போட்டு செய்து பார்க்க வேண்டும்!

68 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. வத்தலை வெத்தல் என நினைத்து நீங்கள் செய்த வத்தரசமும் நல்லாத்தான் இருக்கு.

    இன்னமும் வீட்டில் பூண்டு ரசமே ஓகேயாகலை. அதனால் வத்தரசமும் செய்வது சந்தேகம்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை... 

      // வத்தலை வெத்தல் என நினைத்து  //

       தவறு!  பெப்பரை வெத்தல் என்று காதில் வாங்கி...!

      // இன்னமும் வீட்டில் பூண்டு ரசமே ஓகேயாகலை.  

      ஹும்..  நீங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!  இத்தனைக்கும் பூண்டு அதிகமில்லை, மூன்றே பல்!

      நீக்கு
    2. பூண்டுலாம் வாங்கிட்டேன். ஊருக்கு வந்த பிறகு பண்ணச்சொல்லணும். பிரச்சனை என்னன்னா சாதம் சாப்பிடுவதையே ரொம்ப ரொம்பக் குறைத்துவிட்டேன்

      நீக்கு
    3. ரசசாதம் மட்டுமாவது சாப்பிடலாமே. .! உணவிலேயே சிறந்தது ரசம். தினமும் அந்த மிளகு, சீரகம், இஞ்சி என உடலுக்குள் சேர்வது உடலுக்கு நாம் அன்றாடம் தரும் ஒரு மருந்து மாதிரிதானே..!

      நீக்கு
    4. // பூண்டுலாம் வாங்கிட்டேன். ஊருக்கு வந்த பிறகு பண்ணச்சொல்லணும். //

      என்னது...  மதுராவிலேயே பூண்டு வாங்கிட்டீங்களா?
      அடப்பாவமே..  அடுத்த பிரச்னை சாதமா?!!

      நீக்கு
    5. சரியாகச் சொன்னீர்கள் கமலா அக்கா.

      நீக்கு
    6. அது ஏன் வத்தலை வெத்தல் என்கிறார்கள்? தஞ்சைப் பக்கத்து ஸ்லாங் என நினைக்கிறேன். தப்பாகப் புரிஞ்சுண்டு செய்ததில் ஒரு புதிய செய்முறை கிடைச்சிருக்கே. அங்காயப் பொடி போட்டுச் சில சமயம் ரசம் வைச்சுப்பேன். ஆகவே இது ரொம்பப்புதுசுனும் சொல்ல முடியாது. அதே சமயம் வேப்பம்பூ கசக்கத் தான் செய்கிறது. அதைப் போட்டு ரசம் வைக்கிறோமே! ஆகவே சு:ண்டை வத்தல் போட்டும் ரசம் வைச்சுக்கலாம்.

      நீக்கு
    7. என் மாமனார் இருந்தவரைக்கும் பூண்டு ரசம், பூண்டு குழம்பு எல்லாம் வாரம் ஒரு நாளாவது இருக்கும். மாமியார் பயங்கரக் கோபத்துடன் அன்னிக்குக் குமுட்டி அடுப்பில் சாதம் வைத்துக் கொள்வார். துவையல் அரைச்சுத் தரச் சொல்லிச் சாப்பிடுவார். பூண்டு ரச செய்த அடுப்பில் ரசம் வைக்கும் முன்னரே காய்கறி பண்ணிட்டாலும் மேடையில் ஒண்ணாத்தான் வைச்சிருக்குனு அதைத் தொட மாட்டார். அப்பளம் தான். மாமனார் போனதும் அதெல்லாம் மெதுவாகக் குறைந்து பின்னர் நம்ம ரங்க்ஸுக்குப் பூண்டு சாப்பிட்டால் அசிடிடி ஜாஸ்தி ஆகப் பின்னர் மருத்துவர் சொன்னதின் பேரில் பூண்டே சேர்ப்பதில்லை. எனக்கும் நாளடைவில் பழகி விட்டது. ஆனால் எனக்கு இரிடபிள் பவுல் என்பதால் பூண்டெல்லாம் சாப்பிட்டால் அன்னிக்குப் பூரா அல்லது மறுநாள் வரைக்கும் கழிவறையில் தான் குடி இருக்கணும். :) இங்கே மருமகள் சப்பாத்திக் கூட்டுப் பண்ணினால் பூண்டு சேர்க்காமல் பண்ணுவதில்லை. எனக்குத் தனியே எடுத்து வைப்பாள்.

      நீக்கு
    8. வாங்க கீதா அக்கா...   தஞ்சாவூர்க்காரங்க மட்டுமில்லை, திருநெல்வேலிக் காரங்களும் சிலபேர் தமிழை வித்யாசமாக உச்சரிப்பார்கள்.  உதாரணம் என் மாமியார்.  அவர் உபயோகிக்கும் சில வார்த்தைகளை நான் கூட கிண்டல் செய்வேன்.  தற்சமயம் அந்த மாதிரி அவர் உபயோகிக்கும் வித்தியாச வார்த்தைகளை நினைத்துப் பார்க்கிறேன்.  ஒன்று கூட ஞாபகத்துக்கு வர மாட்டேன் என்கிறது.

      நீக்கு
    9. பூண்டின் மீதான இந்தக் கோபம் பாஸுக்கும் இருக்கிறது. பூண்டு மட்டுமல்ல, வெங்காயமும்,. எனக்கா, இவை இல்லாமல் ரொம்ப தாக்குப் பிடிக்க முடியாது. மகாளயபட்ச கவலை எனக்கு முன்னாடியே வந்துடும்! பாஸின் வெங்காயக் கோபம் பற்றி முட்டைகோஸ் பதிவில் கூட சொல்லி இருந்தேன்!

      நீக்கு
    10. அது என்ன முட்டைக்கோஸ் பதிவு?

      நீக்கு
    11. https://engalblog.blogspot.com/2025/07/blog-post_28.html

      நீக்கு
    12. //நெல்லைத் தமிழன்1/9/25 7:35 AM
      பூண்டுலாம் வாங்கிட்டேன். ஊருக்கு வந்த பிறகு பண்ணச்சொல்லணும்.////
      ஓ இவர் இப்போ ராத்ஹையை:) ப் பார்க்கப் போயிட்டாரோ:))) நமக்கெதுக்கு ஊர் வம்பு வந்ததும் வராததுமா:)))

      //பிரச்சனை என்னன்னா சாதம் சாப்பிடுவதையே ரொம்ப ரொம்பக் குறைத்துவிட்டேன்///
      இதெல்லாம் நம்பிறமாதிரியோ இருக்குது:)))))

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவில் தங்களது செய்முறையான வத்தரசம் நன்றாக உள்ளது. செய்முறைகள், படங்கள் அனைத்தையும் ரசித்தேன். பெப்பருக்கும், வத்தலுக்கும் உச்சரிப்பு வேறு மாதிரி இருக்குமே..! நீங்கள் எப்படி வத்தல் என கேட்டீர்கள்.? எனக்கானால் அது வேறு மாதிரியெல்லாம் கேட்டிருக்கும். பெப்பரை அவர் சொல்லிய விதத்தில் பேரீட்சை எனக் கேட்டு அதை வைத்து ரசம் செய்திருப்பேன். :))) (என் காது இப்போது அவ்வளவு சுத்தம்.:))) ) முதலில் வத்தரசம் எனப்படித்ததும், நான் கூட ரசத்தை கொஞ்சம் நேரம் கூடுதலாக கொதிக்க விட்டு "வத்தவைக்க" வேண்டுமென நினைத்துக் கொண்டேன். ஹா ஹா ஹா.

    நீங்கள் செய்த சுண்டைக்காய் ரசம் குறிப்புக்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. மணம் இங்கு வரை மனதுக்குள் வீசுகிறது. இப்படி ஒரு முறை நானும் செய்து பார்க்கிறேன். நானும் ரசங்களில் காய்கறிகளை வைத்து புதிது புதிதாக முயற்சிப்பேன்.இதற்கு தொட்டுகையாக சுட்ட அப்பளமே போதுமா? இல்லை காய்கறிகள் வேணுமா? அன்று என்ன செய்தீர்கள்.? பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைச் செய்தபிறகு உங்களுக்கு வீட்டில் பாராட்டு கிடைத்ததா இல்லை, எப்போவும் பண்ணற ரசம் பண்ணாம இதை ஏன் பண்ணுனீங்கன்னு சொல்றாங்களா என்று எழுதுங்க

      நீக்கு
    2. சில சமயம் கிடைக்கும். சில சமயம் அவரவர்கள் சாப்பிடும் உணவுகளில் (அதாவது காலை டிபனின் கவனத்தைப் பொறுத்து) வித்தியாசத்தைக் பொறுத்து மதிய உணவில் நாட்டமில்லாமல் போகும். நானும் பாராட்டை வேண்டி பண்ணுவதில்லை. தக்காளி வீட்டில் இல்லாதிருந்தால், குடைமிளகாய், முள்ளங்கி, முருங்கைகாய் என சேர்ப்பேன். அவ்வளவுதான். மற்றபடி ரசத்திற்கான பார்முலா எப்போதும் போல்தான்.நன்றி.

      நீக்கு
    3. சில பாடல்களைக் கேட்கும்போதும் எனக்கு இதே பிரச்னை வரும் கமலா அக்கா.

      அவர்கள் செய்முறையை செய்துகொண்டே வேகமாக பேசும்போது நம் காதில் அப்படிக் கேட்பதுண்டு. உதாரணத்துக்கு ஒரு பாடல் சொல்கிறேன். 'அருவிமகள் வளையோசை' பாடலில் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி குரலில் சில வரிகள் புரியவே புரியாது!

      பேரீச்சை வைத்து ரசம் செய்து பார்க்கிறேன்! அல்லது நீங்கள் செய்து படங்களுடன் எனக்கு அனுப்புங்கள். அடுத்த திங்களே போட்டு விடுகிறேன்.

      நீக்கு
    4. // இதைச் செய்தபிறகு உங்களுக்கு வீட்டில் பாராட்டு கிடைத்ததா இல்லை, எப்போவும் பண்ணற ரசம் பண்ணாம இதை ஏன் பண்ணுனீங்கன்னு சொல்றாங்களா//

      செய்யும்போது புலம்பல்ஸ் இருக்கும்.

      நானே செய்தால் கம்முனு இருப்பாங்க... அவங்களை இல்ல செய்யச் சொல்லிட்டேன்!

      புலம்பல்ஸ்!

      ஆனால் செய்து பார்த்துச் சுவைத்ததும் எதையும் குறை சொல்லும் பாஸே பாராட்டினார்.

      பெரியவனுக்கு ரசம் என்றாலே வேப்பங்காய்! இளையவன் அவ்வப்போது போட்டுக் கொள்வான்.

      நீக்கு
    5. கமலாக்கா உண்மையிலேயே முருங்கைக்காய் ரசம் ரொம்ப நலலருக்கும். அட!!! அடுத்த முறை செய்யும் போது எபிக்கு அனுப்பறேன் படம் எடுத்து.

      முருங்கை இலை கிடைச்சா நெய்யில் வதக்கிப் போட்டும் செய்யலாம். நான் செய்வதுண்டு.

      அக்கா நானும் உங்களைப் போல இப்படிக் குடைமிளகாய் எல்லாம் சேர்த்தும் செய்வதுண்டு. நல்லாருக்கும்.

      ஆப்பிள் ரசம், மாதுளை ரசம், பைனாப்பிள்,.............

      கீதா

      நீக்கு
    6. /பெரியவனுக்கு ரசம் என்றாலே வேப்பங்காய்! இளையவன் அவ்வப்போது போட்டுக் கொள்வான். /

      உண்மைதான். சிலருக்கு ரசமே பிடிக்காது. சிலருக்கு ரசம் தேவாமிர்தம். என் மகன்கள் இருவருமே முன்பு ரசம் மட்டும் அன்றைய தினம் வைத்தால், "போச்சு போ..! ரசமா? இன்னிக்கெல்லாம் ஜுரம் வந்த மாதிரியே உணர்வு இருக்கும்." என்பார்கள். மருமகள்களுக்கு ரசம் எப்போதுமே அருமை. அதிலும் பெரியவர் வாரத்தில் இரண்டு நாட்கள் ரசம் கேட்பார். இப்போது மகன்களும் கொஞ்சம் மன மாற்றம் கொண்டு ரசத்தில் விருப்பம் கொண்டுள்ளனர்.. :)) இளையவரும், அவர் மனைவியும் (இளைய மருமகள்)சாதமே அளவாகத்தான் எடுத்துக் கொள்வார்கள். ஒவ்வொருத்தரும் ஒரு ரகம். இதையெல்லாம் பார்க்கும் போது நமக்கே ஒரு ரசமாகத்தான் உள்ளது. எதுவும் அவர்களிடம் அன்றாடம் கேட்டுத்தான் பண்ணுவேன். நன்றி.

      நீக்கு
    7. // ஆப்பிள் ரசம், மாதுளை ரசம், பைனாப்பிள், //

      நானும் இவற்றையும் இன்னும் சிலவற்றையும் முயற்சித்திருக்கிறேன். எப்போதும் வைக்கும் ரசம் நிரந்தரம். இதெல்லாம் அவ்வப்போது மாற்று ருசி!

      நீக்கு
    8. நானும் முன்னர் ரசம் ஜுரம் வந்தால்தான் சாப்பிடுவது என்று மனதில் போட்டுக்கொண்டு விலக்கி வைத்ததுண்டு.  இப்போதெல்லாம் ரசமின்றி அமைவதில்லை மதியங்கள்! 

      ரசனைகள், சுவைகள் அவ்வப்போது மாறி விடுகின்றன கமலா அக்கா.   கிட்டத்தட்ட நானும் உங்கள் இளைய மகன் போலதான்!

      நீக்கு
    9. ஆப்பிள் ரசம், மாதுளை ரசம், பைனாப்பிள் ரசமெல்லாம் பழகிப் போச்சு. அதிலும் ஆப்பிளில் ஊறுகாய், சாதம் போன்றவை எல்லாம் செய்து பார்த்துட்டேன். பஜ்ஜி கூடப் போடலாம். துருவிக் கொண்டு தக்காளி, வெங்காயம் சேர்த்து சாலட் பண்ணலாம். மாதுளையும் தயிர்சாதம், ரசத்தில் மேலாகப் போடுவது எனப் பண்ணுவேன். பைனாப்பிளில் ரசம் மட்டுமில்லாது ரவா கேசரியைப் பைனாப்பிள் சேர்த்துப் பண்ணினாலும் நல்ல ருசியாக இருக்கும்.

      நீக்கு
    10. ஆமாம். நீங்கள் சொல்லும் அத்தனையும் உண்மை. நானும் செய்திருக்கிறேன்.

      நீக்கு
    11. நானும் ரசம் மாற்றி மாற்றித் தான் செய்வேன். வித்தியாசமாக. ஒரு நாள் மைசூர் ரசம், உடுப்பி ரசம், ஜீரகம், மிளகு அரைச்சு விட்ட ரஸம். மிளகு ரசம், தக்காளி மட்டும் போட்டு ரசம், ஜீரகம் மட்டும் அரைச்சு விட்ட ரசம், பருப்பு ரசம், எலுமிச்சை ரசம், கொட்டு ரசம், பருப்பு அரைத்ததை நீர்க்கக் கரைத்து விளாவிய ரசம், என வைப்பேன். ஆனால் குடை மிளகாய், பேரிச்சை எல்லாம் போட்டு ரசம் வைச்சால் நானே விட்டுப்பேனா சந்தேகம் தான். :)

      நீக்கு
    12. ரசத்தில் நாங்கள் அந்த அளவு தினசரி வித்தியாசமெல்லாம் காட்டுவதில்லை. காரணம் 99 % வீட்டில் ரசம் நான் மட்டும்தான் சாப்பிடுவேன்! அதற்கும் ஓரு காரணம் இருக்கிறது!

      நீக்கு
    13. அடடா எல்லோரும் அப்பூடியே இருக்கினம் அதேமாதிரிப் பேசிக்கொண்டு எல்லோரும் நலம் எனத் தெரிகிறது... பெயர் கூப்பிட்டு விசாரிக்கப் பயம்ம்ம்ம்ம்மாக்கிடக்கூ:))) ஆரையாவது மிஸ் பண்ணிட்டால் என...

      நீக்கு
    14. இது நமக்குத் தெரிந்த அதிரா அல்ல. அவங்களுக்கு ஒரே பெயரை இரண்டு வாரங்களுக்கு மேல் வைத்துக்கொள்ளப் பிடிக்காது

      நீக்கு
    15. ஹா ஹா ஹா ராதையைப் பார்த்ததும் கொயம்பிட்டார்:)… இது மதுராவைப் பார்த்த அதிராவாக்கும்🤣🤣

      நீக்கு
    16. நீங்கள்தான் பெயர் சொல்லக்கூடாது. நான் சொல்லலாம்!!! வாங்க அதிரா... நலமா?

      நீக்கு
  4. பதில்கள்
    1. வாங்க செல்வாண்ணா... வணக்கம். முருகனைப் பணிவோம்.

      நீக்கு
  5. புதிய செய்முறை...

    தற்போது எனக்கும் புளிக்கும் வெகு தூரம் ஆயிற்று... புளிப்புச் சுவை ஒத்துக் கொள்வதில்லை... நானும் விட்டு விட்டேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனாலென்ன..  இதில் புளியை மைனஸ் செய்து இன்னொரு தக்காளியைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.  இல்லை, இருக்கும் தக்காளியே போதும்னு அப்படியே செய்யுங்கள்!

      நீக்கு
    2. என மாமியார் பல வருஷம ரசத்தில் தக்காளியே சேர்க்க மாட்டாராம். நான் வந்து தக்காளி சட்னி, துவையல் எனப் பண்ணும் போதெல்லாம் சிரிப்பார்

      நீக்கு
    3. ஆச்சர்யம்.  நாங்கள் திவசத்துக்கு மட்டும்தான் தக்காளி இல்லாத ரசம் வைக்கிறோம்!!

      நீக்கு
  6. அட! ஸ்ரீராம், பெப்பரை வத்தல் என்று உள்வாங்கி செய்த ரசம் கூட அட!!! சூப்பர் ரசம். செய்து பார்த்துவிட்டால் போச்சு. இதே சுண்டைக்காயைக் கொஞ்சம் நெய்யில் வறுத்துதட்டிப் போட்டும் பார்க்கலாம்னு தோணுது.

    ஆனா சுண்டைக்காயைப் போடறப்ப, நம்ம வீட்டுல பார்த்து போடணும். அதைப் போட்ட பிறகு ரசத்துக்கு உப்பு தேவையான்னு பார்த்து போட்டா போதும். அந்த அளவுக்கு சுண்டைக்காய் உப்போ உப்புன்னு கடலில் ஊற வைச்சு செஞ்சாப்ல இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா..    வறுத்துப் போட்டா சாப்பிடத் தோணாதுங்கறது என் அபிப்ராயம்.  ஆப்பிள் ரசம் என்று அரைத்து விட்டு ஒரு தரம், பத்தையாக ஒரு தரம் என்று சிறு துண்டுகளாக நறுக்கிச் சேர்த்தேன்.  ரசம் என்கிற Feel லே வரவில்லை என்று சொன்னார்கள்!!

      நீக்கு
    2. கடையில் வாங்கற சுண்டைக்காய் உப்பு இருக்காது. வீட்டில் போட்டு காய வைப்பது உப்பு இருக்கும். உப்பு சேர்த்த சுண்டைக்காய் ஆசாரக்காரர்கள் சாப்பிட மாட்டாங்க

      நீக்கு
    3. ​வாழ்க ஆச்சாரம்!

      நீக்கு
  7. சுண்டைக்காய் இல்லாம மத்தபடி ஒரிஜினலான மிளகு பூண்டு தட்டிப் போடும் ரசம் இப்படி இந்த முறையில் செய்வதுண்டு ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. @ ஸ்ரீராம்

    //.அதனாலென்ன.. இதில் புளியை மைனஸ் செய்து இன்னொரு தக்காளியைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லை, இருக்கும் தக்காளியே போதும்னு அப்படியே செய்யுங்கள்!///

    தக்காளியையும் தள்ளி வைத்தாயிற்றே...

    இப்ப என்னா செய்வீங்கோ!
    இப்ப என்னா சொல்வீங்கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்பார்த்தேன்...

      தக்காளி இல்லாத ரசம் (ம்ஹூம்.. ரசமா அது?!) செய்து சாப்பிட வேண்டியதுதான்!

      நீக்கு
    2. நாங்கள் எங்கட பரம்பரையில…. சரித்திரத்தில ரசத்துக்கு தக்களி சேர்த்ததில்லை… பழப்புளிதான்😻😻

      நீக்கு
    3. தக்காளி ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்காக ஸ்பெஷலாகக் கொண்டுவந்தது. கொழும்புக்கே வந்திருக்காது. இதுல நல்லூருக்கு எங்க வந்திருக்கும்?

      அங்க புளியுமே புதுப்புளிகிடைக்காது. ரொம்பப் பழைய புளிதான் கிடைக்கும் (பழம்புளி-பழைய புளி) னுவேற அதிரா சொல்றாங்க

      நீக்கு
    4. நெல்லைத் தமிழன்1/9/25 6:25 PM//////
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 😅😅 நாங்கள் அடிச்சுப்பிடிச்சு விளையாடினதெல்லாம் புளிய மரத்துக்குக் கீழதான் தெரியுமோ 😀 ஆனா இப்போ மரமெல்லாம் தறிச்சுப் போட்டினம்….
      ஊ கு:): தக்காளி எதுக்கு நல்லூருக் வருது… நல்லூக்கந்தனைக் கும்பிடவோ ஹா ஹா ஹா 😆

      நீக்கு
    5. நிஜமா அதிரா?  தக்காளி போடாமதான் இத்தனை வருடங்களும் நீங்கள் ரசம் செய்கிறீர்களா?  ரெஸிப்பி எழுதி அனுப்புங்களேன்..

      நீக்கு
  9. அட..... பெப்பர் வத்தலானது அதுவும் நல்லதுக்கே வத்தல் ரசம் வந்துவிட்டதே.

    நாங்களும் எல்லா விதமான ரசமும் வைப்போம் . சுண்டை வத்தல் ரசம் செய்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த ரசமும் ஒரு தரம் வச்சுடுங்கோ மாதேவி.

      நீக்கு
  10. ​வத்தல் குழம்பு, வத்தல் ரசம், அடுத்து வத்தல் குருமாவா? அல்லது வத்தல் கூட்டா?

    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல ஐடியாவா இருக்கே...   பரிசீலிக்கிறேன் JKC Sir..

      நீக்கு
    2. மாங்காய் வற்றல், உப்பு நாரத்தங்காய் போன்றவற்றைக் கொதிக்கும் வெந்நீரில் ஊற வைச்சுப் பின்னர் மிளகாய்ப்பொடி, பெருங்காயம் சேர்த்து எண்ணெய் காய்ச்சி ஊற்றி (நீரை வடிகட்டிவிட்டு ) திடீர் ஊறுகாய் போடுவது உண்டு. நன்றாகவே இருக்கும். அது மாதிரி வற்றல் குருமாவும் பண்ணிடுங்க. :))))

      நீக்கு
  11. ஆஆஆஆ மிக நீ.......ஈஈஈஈஈண்ட இடைவெளி எடுத்துக்கொண்டு வந்திருப்பதால்.. கை எங்கின வைக்கிறது கால் எங்கின வைக்கிறதென்றே தெரியேல்லை.... சரி போனாப்போகுதென வெத்தலில் வச்சிட்டேன்...

    ரசம் சுவையாக இருக்கோ இல்லையோ, பதிவு பெப்பர் வெத்தல் வத்தல் என சுவை கட்டுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்து பார்த்துட்டு சொல்லுங்கோ அதிரா...  தேம்ஸ் நதிலேருந்து தண்ணீர் எடுத்து கொதிக்க வச்சு ஆறவச்சு யூஸ் பண்ணுங்கோ...

      நீக்கு
  12. புதிய முயற்சிகள் தொடரட்டும். பெப்பர் என்பது வெத்தெல் என்று கேட்டு அப்படி ஒரு ரசமும் செய்தாயிற்று....... :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  ருசித்து ரசித்தும் ஆச்சு!  நன்றி வெங்கட்.

      நீக்கு
  13. எனக்கு இன்னொரு டவுட்டும் வந்துது… பெப்பர் என்றால்… ரப்பர்….. சுப்பர் இப்படித்தானே மாறிக் கேட்கும், அதெப்பூடி வத்தல்வெத்தல் எனக் கேட்கும்😂😂. எங்கேயோ இடிக்குதே😂😂

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவங்க ப்ரொநௌன்ஸியேஷன் அப்படி..   நான் என்ன செய்ய!

      நீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. வத்த ரசம் செய்முறை , அருமை. பெப்பர் வெத்தல் என கேட்டு சுண்டை வத்தலை தேர்வு செய்து ரசம் வைத்தது அருமை. உடலுக்கு நல்லது.
    மஞ்சள் பொடி போட்டீர்களா ரசத்திற்கு வித்தியாசமான கலரில் ரசம் படம் அழகாய் இருக்கிறது. ரசம் தெரியாமல் கொதித்து விட்டால் சிறு தண்ணீர் சேர்த்து இறக்கி விடுவார்கள், சுவை குறையாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஞ்சள்பொடி போட்டேன் கோமதி அக்கா..  பதிவில் சொல்ல விட்டு விட்டேனா?   சிறு தண்ணீர் சேர்க்கலாம் ஆனால் ஒரிஜினல் சுவை மாறிவிடுமே...  நேரத்துக்கு பார்த்து இறக்கி விடுவதே மேல்!

      நீக்கு
  16. என்னுடைய கருத்தை காணோமே???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Spam ல் இல்லை.  நீங்கள் போட மறந்து விட்டிருப்பீர்கள் அல்லது பப்ளிஷ் க்ளிக் செய்து விட்டதாய் நினைத்து சென்றிருப்பீர்கள்.   ப்ளீஸ்..  மறுபடி எழுதுங்களேன்...

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!