13.9.25

செவிலியர் கவிதா மற்றும் நான் படிச்ச கதை

 

ரயில் பயணி தவறவிட்ட 50 பவுன் நகை: பத்திரமாக ஒப்படைத்தார் போலீஸ் மணிகண்டன்!

சென்னை: சென்னையில் இருந்து கோவைக்கு ரயிலில் வந்த ரவிக்குமார் குடும்பத்தினர், ரயிலில் தவறவிட்ட 50 பவுன் நகை கொண்ட கைப்பையை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் மணிகண்டன், அதை உரியவர்களிடம் ஒப்படைத்தார். மணிகண்டனின் பணியை, உயர் அதிகாரிகள், ரயில் பயணிகள் அனைவரும் பாராட்டினர்.  சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு ரவிக்குமார், 53, என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் ரயிலில் வந்தார். கோவையில் வந்து இறங்கிய அவர், பைகள் அனைத்தையும் எடுத்து கொண்டு வீடு திரும்புவதில் கவனம் செலுத்தினர். அப்போது அவர் 50 பவுன் நகை, ரூ.11 ஆயிரம் பணம் ஆகியவற்றை பை உடன் தவறவிட்டு சென்றுவிட்டார்.  பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு ஒவ்வொரு பெட்டியாக சென்று ரயில்வே பாதுகாப்பு படையினர் பார்வையிடுவது வழக்கம். அவ்வாறு சென்ற ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் மணிகண்டன், கைப்பையை கவனித்து எடுத்தார். அதில் 50 பவுன் நகை, பணம் ஆகியவை இருப்பதைக் கண்டு போலீசில் ஒப்படைத்தார்.  வீட்டுக்குச் சென்றதும், கைப்பையை தவற விட்டதை உணர்ந்த ரவிக்குமார் குடும்பத்தினர், அவசரம் அவசரமாக ரயில் நிலையத்துக்கு ஓடோடி வந்தனர். கைப்பையை தவறவிட்டோம் என்று கூறிய அவர்களிடம், உரிய விசாரணைக்கு பிறகு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், நகை, பணம் இருந்த பையை ஒப்படைத்தனர்.  ரூ. 38 லட்சம் மதிப்புடைய நகை திரும்ப கிடைத்ததால், போலீஸ் மணிகண்டனுக்கு, ரவிக்குமார் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். நேர்மையாக செயல்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் மணிகண்டனை, உயர் அதிகாரிகள், சக போலீசார், ரயில் பயணிகள் அனைவரும் பாராட்டினர்.

============================================================================================

அரசு மருத்துவமனையின் புதிய முயற்சி  காய்கறி, உணவுக்கழிவு மூலம் எரிவாயு உற்பத்தி


பல்லடம்; காய்கறி, பழம் மற்றும் உணவுக்கழிவுகளைப் பயன்படுத்தி, இயற்கை எரிவாயு தயாரிக்கும் புதிய முயற்சியை, பல்லடம் அரசு மருத்துவமனை நிர்வாகம் மேற்கொள்கிறது. பல்லடம் அரசு மருத்துவமனைக்கு, தினமும், 700க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வருகின்றனர். புறநோயாளிகள், உள் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் பயன்படுத்திய காய்கறி, பழங்கள் மற்றும் உணவுக் கழிவுகளை சேகரித்து, இயற்கை எரிவாயு தயாரிக்கும் பணியை மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. செவிலியர் கவிதா, இதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டார்.

சன்மானத் தொகையில் உருவான திட்டம் கவிதா கூறியதாவது: மத்திய அரசின் 'காயகல்பம்' திட்டம் வாயிலாக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு விருது மற்றும் சன்மானம் கிடைத்தது. அந்த தொகையை பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம். மருத்துவ மனையில் சேகரமாகும் உணவுக்கழிவுகளை பயன்படுத்தி, இயற்கை எரிவாயு தயாரிக்கலாம் என்பதை அறிந்து கொண்டேன். கோ பரதன்' திட்டம் கைகொடுத்தது மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்த போது அனுமதி அளித்தனர். மத்திய அரசின் 'கோ பரதன்' திட்டம் மூலம், இயற்கை எரிவாயு தயாரிக்கலாம் என்பதை அறிந்து, செயல்படுத்த விரும்பினோம். இதற்கான உபகரணங்களை தருவித்து, சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முதலில், மாட்டு சாணம் வாங்கி ஏழு நாட்கள் ஆய்வு செய்யப்பட்டது. காய்கறி கழிவுகள், உணவுகளைப் பயன்படுத்தி இயற்கை எரிவாயு தயாரிக்கப்பட்டது. தினமும், 5 கிலோ அளவுக்கு கழிவுகள் எங்களுக்கு கிடைக்கிறது. அவற்றை இந்த உபகரணத்தில் போட்ட பின், எட்டு மணி நேரம் கழித்து இயற்கை எரிவாயு கிடைக்கும். அதனை ஒன்றரை மணி நேரம் வரை எங்களால் பயன்படுத்த முடிகிறது. மீதம் ஆகும் உணவு கழிவுகளை உரமாகவும் பயன்படுத்தலாம். ஏற்கனவே இது போன்ற திட்டம் பயன்பாட்டில் இருந்த போதும், அரசு மருத்துவமனையில், நாங்கள்தான் முதன்முதலாக செயல்படுத்தி உள்ளோம் என்பது பெருமையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். செவிலியர் ஆர்வத்தால் சாத்தியமானது : செவிலியர் கவிதாவின் ஆர்வம் மற்றும் முயற்சியால் மட்டுமே இது சாத்தியமானது. மருத்துவமனைக்கு கிடைத்த விருது மற்றும் தன்னார்வலர்களின் உதவியால் இத்திட்டத்தை செயல்படுத்த முடிந்தது. இதன் வாயிலாக, இயற்கையான, பாதுகாப்பான எரிவாயு கிடைப்பதுடன், செலவும் குறைகிறது. முதல் கட்ட முயற்சி வெற்றியடைந்து உள்ளது. எதிர்வரும் நாட்களில், கூடுதல் எரிவாயு தயாரிக்க முயற்சி செய்வோம். - ராமசாமி, தலைமை மருத்துவர்,பல்லடம் அரசு மருத்துவமனை.

==========================================================================================


=================================================================================================

 

நான் படிச்ச கதை (JKC)

எமனுடன் சண்டையிட்ட பால்காரி!

கதையாசிரியர்சி.ஜெயபாரதன்

சி ஜெயபாரதன் | about.me

 

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. [Nuclear] Canada

(பிறப்பு : பிப்ரவரி 21, 1934)

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சினியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப்பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க, மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிகோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.

அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணினித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 500 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன.

இதுவரை பனிரெண்டு நூல்கள் வெளிவந்துள்ளன : ஆக்க வினைகளுக்கு அணுசக்தி [சென்னை பல்கலைக் கழக முதற் பரிசு பெற்றது], அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், தாகூரின் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, முக்கோணக் கிளிகள் படக்கதை, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க். இரண்டு நூல்கள் அச்சில் உள்ளன : அண்டவெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா.

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.

பின்வரும் யு டூப் பேட்டி யில் அவரது சமகாலத்திய தோற்றத்தைக் காணலாம் 

சி.ஜெயபாரதன் வாழ்க்கை அனுபவங்கள் | Atomic Scientist S.Jayabarathan Life Experiences

முன்னுரை

ஜெயபாரதன் அவர்களைப்பற்றி அவரே கூறியதை கேட்டீர்கள். கூடங்குளம் போராட்டத்தின் போது போராட்டக் காரர்களின் ஐயங்களுக்கும் வினாக்களுக்கும் ஆதார பூர்வமாக பதில் எழுதியவர் . https://puthu.thinnai.com/ தளத்தில் நிறைய எழுதியிருக்கிறார். இவரது நூல்கள் freetamilebooks.com தளத்தில் கிடைக்கும்.  

பெண்களிடம் வாதிட்டு வெல்வது கடினம் என்பதை சொல்லும் கதை. யம தர்மன் தோற்ற ஒரு கதை. கதை அப்பாதுரை சாரின் தைவாதர்சனம் என்று இப்பகுதியில் வெளியான கதையை நினைவூட்டியது. தைவாதர்சனம் கதையில் மனிதர்களின் கண்களுக்கு புலப்பட்டு கொண்டு இருந்த தேவர்கள் எப்படி ஒரு சாபத்தால் மானுடக் கண்களுக்கு காட்சி தராமல் மறைந்தார்கள் என்று விளக்கப்படும். அது போல  இக்கதை நிகழும் காலம் தேவர்கள் மனிதரின் கண்களுக்கு தோன்றும் காலத்தில் நடந்த ஒன்றாக கற்பனை செய்து கொள்ளலாம்.

கதை sirukathaigal.com தளத்தில் இருந்து பெறப்பட்டது.


எமனுடன் சண்டையிட்ட பால்காரி!

கதையாசிரியர்சி.ஜெயபாரதன்

பால்காரி பொன்னம்மா சோர்ந்து போய் கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மத்தியானம் சாப்பிடுவதைக் கூட மறந்து மரணப் படுக்கையில் கிடந்த புருசன் அருகே தலையில் கைவைத்த வண்ணம் பேயடித்தவள் போல தூணில் சாய்ந்திருந்தாள். பத்து நிமிஷத்துக்கு முன்புதான் புருசனின் மூச்சு நின்று போனது. இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறினாள். நீண்ட பெரு மூச்சை விட்டு பொன்னம்மா எழுந்தாள்! அவள் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விழவில்லை. புருசன் முகத்தைப் பார்க்காமல் சுவரில் தொங்கிய ஒரு குழந்தையின் படத்தைப் பார்த்தாள். புன்முறுவல் பூத்த அந்தப் பாசமலர் அவள் நெஞ்சில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது! மெதுவாக ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். உடனே திடுக்கிட்டு பரபரப்புடன் கதவைத் திறந்து கொண்டு வீதிக்கு ஓடினாள். 

“போகாதீங்க, நில்லுங்க! நில்லுங்க! என்று கூச்சலிட்டாள், பொன்னம்மா. எருமை மாட்டின் மீது ஏறிச் சவாரி செய்யப் போன எமதர்மன், உட்கார்ந்து கொண்டே பின்னால் திரும்பினான்.

 

“சரித்திரம் மீள்கிறதா? பின்னாலே வராதே பெண்ணே! உன் புருசன் உயிரைக் கொண்டு போறதுக்கு நான் மிகவும் வருந்துறேன்”.

“நானே வருந்தவில்லை! நீங்க ஏன் வருத்தப் படணும்? உங்க வேலைய நீங்க செய்றீங்க…. என்னை பெண்ணேன்னு சொல்லாம, பொன்னம்மான்னு கூப்பிடுங்க!”

“பொன்னம்மா, பேசாமல் போயிடு! என் பின்னாலே வராதே சாவித்திரி மாதிரி! நான் முதல் தரம்தான் ஏமாந்தேன். இரண்டாம் தடவை தப்பு பண்ணப் போறதில்லே! உன் புருஷன் உயிரை மட்டும் கேட்காதே”

“என் புருசன் உயிரைக் கேட்க நான் வரவில்ல. அது போறதுதான் நல்லது! எமராசா, நான் ஒன்னும் சாவித்திரி இல்லே!”

“அட ஆச்சரிய மாயிருக்கே! ஏம்மா! நீ கண்ணகி பிறந்த நாட்டுக்காரி! கல்லானானும் கணவன், புல்லானாலும் புருசன் என்று கும்பிட்ட குலமாச்சே! காலம் மாறிப் போச்சு! நீ பெண்ணல்ல என்று சொன்னது இப்போதான் ஞாபகம் வருது!”

“கண்ணகி குல தெய்வம் மாதிரி! ஆனா என் புருசன் குலத் துரோகி! நான் வாழ்றதிலே புண்ணியமில்ல, எம ராசா!”

“பொன்னம்மா! என்ன கவலை உனக்கு? பால் வியாபாரத்திலே உனக்கு பண நொடிப்பா?”

“எம ராசா! கையெடுத்துக் கும்பிடறேன். ஒரேதா என் உயிரையும் கொண்டு போயிருங்கோ!”

“நீ செத்துப் போக இன்னும் நாற்பது வருசஷமிருக்கே, நான் எப்படி உன் உயிரைக் கொண்டு போறது? அது பெரிய தப்பாச்சே”

“தனியா எப்படி நாப்பது வருசம் வாழ்றது, எம ராசா! புருசன் இல்லாம, பிள்ளை, குட்டி இல்லாம?”

“இந்தா வந்துட்டயே! இது பழைய சாவித்திரி உத்தி! முதல்லே பிள்ளை வேணும் என்பே! பிள்ளைக் கொடுத்தா, எப்படிப் பிள்ளை பிறக்கும், புருசன் இல்லாம என்னு, புருசன் உயிரையும் வாங்கத் தந்திரம் பண்ணுவே!”

“இத்தன நாளாய் என் புருசன்தான் என் உயிரை வாங்கிக்கிட்டிருந்தான்! எமலோகம் போற என் புருசன் உயிரை நீங்க தந்தாலும், நான் திரும்ப அங்கே அனுப்பிடுவேன்! அவனும் வேணாம்! அவன் கொடுக்கிற பிள்ளையும் வேணாம்!”

“கதை வேற மாதிரிலே போவுது! புரியலையே பொன்னம்மா! குழப்புறயே!”

“எம ராசா! பெண்ணுக்கு உத்தம புருசன் ஒருத்தன்தான் வேணும்! ஆனா ஆம்பிளைக்கு அப்படியில்லே. சில ஆம்பிளைக்கு மூனு பொம்பளை வேணுமின்னு ஆசையிருக்கு! கண்ணைக் கவரும் ஆடகியோ, காதில் இனிக்கும் பாடகியோ ஒருத்தி! கட்டில்லே ராத்திரி பக்கத்திலே படுக்க செதுக்கின சிலை போல இன்னொருத்தி! அப்புறம் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்னு, வீட்டுலே காத்து கிடக்க மூனாவது ஒருத்தி!”

“பொன்னம்மா நீ என்ன சொல்றே? புதிர் போடாமல் புரியும் படி பேசு”

“என் புருசன் ஊர்க் காளை மாடு மாதிரி! நாலாவது வீட்டு ரங்கம்மாவுக்கு ஒரு பிள்ளையை கொடுத்து, அது கழுதையாய் மண்ணுலே புரளுது! அவன் பிறந்த ஊர்லே குப்பம்மாவுக்கு இன்னோர் பிள்ளை கொடுத்து, அது கொண்டி மாடாய் ஊரைச் சுத்துது! இந்தா பாருங்கோ, என் புருசன் படுக்கிற கட்டிலிலே, நான் படுக்கிறதே இல்ல. அந்தப் பிள்ளைகளுக்கே அவன் அப்பனாக தொலையட்டும். என் பிள்ளைக்கு அவன் அப்பனா இருக்க வேணாம். அடுத்துப் பிறக்கிறது பன்றியாத்தான் இருக்கும்!”

“அப்ப பிள்ளை வரத்தை எப்படிக் கொடுக்கிறது, சொல்லு?”

“…. மூனாவது குடிசையிலே வாழ்ற …. கார் டிரைவர் கந்தசாமி மேலே …. எனக்கு ஒரு கண்ணு. கந்தசாமிக்கு என் மேலே …. இரண்டு கண்ணு”

“இது தப்புத் தாளமாச்சே! புருசன் இருக்கும் போது அடுத்தவனை பார்க்கிறது … அதர்மமாச்சே!”

“ஆமா! பொன்னம்மா வீட்டிலே இருக்கும் போது, என் புருசன் ரங்கம்மா கட்டில்லே ஒருநாளும், குப்பம்மா பாயிலே அடுத்த நாளும் படுக்கிறது என்னவாம்?”

“அதுவும் அதர்மம்தான்”

“அதைப் பெண்டாட்டி துரோகம் என்னு முதல்லே சொல்ல, ஆம்பிளை உங்க வாயிலே வரலையே!”

“இரண்டும் தவறுதான். சரி நீயே போய் கந்தசாமியை கட்டிக்க வேண்டியதுதானே. நான் என்ன செய்யணும்?”

“எம ராசா! நான் கேட்க வந்தது, கந்தசாமிக்கு எப்படி ஆயிசு? நீண்ட ஆயிசு தானே?'”

“என் கிட்டே கந்தசாமியின் ஜாதகம் இல்லே. ஆயுள் கையேடும் இல்லே. எப்படி ஆயிசுக் கணக்கிடறது?”

“ஏதோ காலன், தூதன், சித்திர குப்தன் என்னு சொல்றாங்க, எங்கே போயிட்டாங்க அவுங்க?”

“இரு காலனைக் கேட்கிறேன். அவன் கிட்ட போர்டபிள் கம்பியூட்டர் ஒன்னு இருக்கு. சீக்கிரம் பார்த்துச் சொல்லிருவான்”

“சீக்கிரம் சொல்லுங்க எம ராசா! என் நெஞ்சி பக்பக்கென்னு அடிக்குது”

எமதர்மன் பெரு மூச்சு விட்டு ஆயுளைச் சொல்லத் தடுமாறினார். இரு கைகளையும் பிசைந்து கொண்டு மேலே நோக்கினார்.

“என்னங்க எம ராசா, ஏன் வானத்தைப் பார்க்கிறீங்க? ஆயுசு எப்படின்னு சொல்லுங்க?”

“பொன்னம்மா! பார்த்ததுதான் பார்த்தையே, நீண்ட ஆயுசு ஆளாப் பார்த்துப் பிடிச்சிருக்கலாமே”

“என்ன சொல்றீங்க எம ராசா? கந்தசாமி அற்ப ஆயுசா? ”

“கண் கலங்காதே, பொன்னம்மா! கந்தசாமி வீட்டுக்கு …. நான் சீக்கிரம் …. வருகிறதாயிருக்கு”

“அட கடவுளே! …. இன்னும் எத்தனை வருசம் அவரு…..?”

“கந்தனுக்கு அற்ப ஆயசுன்னு … காலன் சொல்றான்”

“காலன் சரியாப் பார்த்துதான் சொன்னானா? சில கம்பியூட்டர் சரியா வேலை செய்யாதாமே? என் பிள்ளை கொஞ்ச நாள்தான் தகப்பனை பார்க்குமா? எமதர்மா, இது ஞாயமில்லே! அவருக்காவது நீண்ட ஆயுசைக் கொடு! உன் காலிலே விழுந்து கும்பிடுறேன்!”

“என் காலிலே விழறேன்னு, எருமைக் காலைப் போய் கும்பிடறே! …. அற்ப ஆயிசு கந்தசாமியை விட்டு, வேற ஆளைப் பாரு, பொன்னம்மா! அது தான் புத்திசாலிப் பெண் செய்யுற காரியம்”

“உத்தம ஆம்பளை கந்தசாமி போல எத்தனை பேர் இருக்கான்? ஒழுக்கம் கெட்ட பயல்கள் தான் எங்க ஊரில அதிகம். ஆமா கந்தசாமிக்கு … எப்போ … ஆயுசு … முடியுது, அதைச் சொல்லுங்க முதல்லே”

“அடேடே கந்தசாமிக்கு தம்பி இருக்கானாமே! அவனுக்கு ஆயசு பலமா இருக்காம்! 80 வயசு வரை தெரியுதாம். காதிலே காலன் முணுமுணுக்கிறான்”.

“அந்த ஒற்றைக் குச்சி பொன்னுலிங்கம் ஒரு குடிகாரப் பயல்! அவனை வச்சி துடைக்க என் வீட்லே ஒட்டடை கூட இல்லே! ராத்திரி ராத்திரி குடிச்சிபிட்டு வந்து பெண்டாட்டியை போட்டு அடிப்பான். காலையிலே நடு வீதியிலே தூங்கிக் கொண்டு கிடப்பான்! குடிக்கப் பணமில்லேனா என் மாட்டைக் கொண்டு போய் சந்தையிலே வித்துட்டு, சாராயக் கடைக்கும் சர்க்காருக்கும் சம்பாரிச்சு கொடுப்பான்! எம ராசா! அயோக்கியப் பயலுக்கு அதிக வயசையும், உத்தம ஆம்பளைக்கு அற்ப ஆயுசையும் தலையிலே எழுதி வைக்கறீங்களே, இது என்ன ஞாயம்? சொல்லுங்கோ அவருக்கு …ஆயுசு எதுவரை?”

“பொன்னம்மா! அற்ப ஆயுசு ஆளுங்க பூமியிலே இல்லாம போனால், எங்கள் ராஜியத்திலே பலருக்கு வேலை யில்லாம போயிரும்! அப்புறம் என் பட்டாளங்கள் கொடியைத் தூக்கிட்டு அரண்மனைக்கு முன்னாலே ஆர்ப்பாட்டம் செய்து பட்டினி கிடப்பாங்க!”

“சொல்லுங்க கந்தசாமிக்கு ஆயுசை! என் மனசு துடிக்குது! சொல்லுங்க எம ராசா!”

“உன்னைப் படைச்ச கடவுளே அதை மறைச்சு வச்சிருக்கான். அதை முன்னாலே நான் சொன்னா நீ மயக்கம் போட்டு விழுந்திடுவே. இல்லே திடீரென்னு உன் நெஞ்சு நின்னுட்டா, பிறகு என் மேலே புகார் வந்திடும். உன் உயிரை நான் எடுத்து போகவும் முடியாது. இங்கே விட்டுட்டு போகவும் முடியாது. அது அப்புறம் அந்தரத்திலே பேயாய் அலையும்! உயிரை திருப்பி உடம்புல ஒட்ட வைக்கிற உத்தியும் எனக்கு தெரியாது! அது என் வேலை இல்லே. பிரம்மா படைப்பு வாரியத்தைச் சேர்ந்தது”

“சும்மா சொல்லுங்க எமராசா! நான் ஒன்னும் வெண்ணையில்ல, உருகிப் போக. என் மனம் தேக்கு மரம் போல. … என்ன கந்தசாமி இன்னும் … அஞ்சி வருசம் இருப்பாரா?”

“உம் …. அத்தன நீண்ட ஆயுள் இல்ல … கந்தனுக்கு”

“சரி அஞ்சில்லே. மூனு வருசமாவது அவர் …. உயிரோட இருப்பாரா?”

“அதுவும் …. இல்லே! … பொன்னம்மா! … ஏன் கண்ணிலே கண்ணீர் குபுகுபுன்னு பொங்குது?”

“அப்படீங்களா? …”. பொன்னம்மா கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். “சரி ஒரு வருடமாவது மனுசன் … உயிரோடிருப்பாரா?”

“அதை நான் சொல்ல முடியாது, பொன்னம்மா! உனக்குப் பிள்ளை பிறந்து, கந்தன் கொஞ்ச காலம் இருப்பான்”

“எனக்குப் பிள்ளை பிறந்து, கந்தசாமி ஒரு வருசமாவது உயிரோடு இருக்கணும். அதுக்கு வரம் தருவீங்களா, எம ராசா? உங்களைக் கெஞ்சி கேக்கிறேன்”

“அந்த வரத்தை நான் தர முடியும், பொன்னம்மா!”

“நிச்சயமா சொல்றீங்களா எம ராசா?”

“ஆமாம்! உனக்கு பிள்ளை பிறந்து, கந்தன் ஒரு வருசம் உயிர் வாழறது உறுதி. அதுக்கு வரம் தருவதிலே எனக்கு எந்த ஆட்சேபணையு மில்லே! ….. ஏன் பொன்னம்மா! … நயாகரா மாதிரி கொட்டின கண்ணீரெல்லாம் … சினிமாவில் திருப்பி ஏறுற மாதிரி உன் கண்ணு மேலே ஏறுதே”

“என் வயிற்றுலே பசும் பாலை வார்த்திட்டீங்க எம ராசா! அந்த உத்தரவாதம் போதும் எனக்கு!” ஆனந்த கண்ணீர் இப்போது கொட்டி வடிய, பொன்னம்மா வீட்டை நோக்கி ஓடினாள்.

“இப்போ எனக்கு பிள்ளை வேணாம் எம ராசா! … நீங்க நீண்ட நாள் வாழணும்” என்று சிரித்துக் கொண்டு கதவை மூடினாள், பொன்னம்மா. எமனுக்கு மண்டையில் ஏறிப் புரிபட சற்று நேரம் பிடித்தது!

“அடி பாதகி! இரண்டாம் தடவையும் ஏமாந்துட்டேன்!”….. கீரிடத்தைத் தூக்கி விட்டெரிந்து தலையில் நாலடி அடித்துக் கொண்டு எருமை வாகனத்தை முடுக்கினான், எம ராஜன்.

“போகாதீங்க! நில்லுங்க! நில்லுங்க!” என்று அலறிக் கொண்டு மறுபடியும் பொன்னம்மா ஓடி வந்தாள். பின்னால் திரும்பிய எமனுக்குக் கண்கள் சிவந்து கோபக் கனல் பறந்தது. பற்களை நறநற வென்று கடித்தான். கைகளைத் தூக்கி ஆங்காரம் கொண்டான்.

“இன்னும் ஏன் பின்னாலே வர்றே! போதும் உன் உபத்திரம்! போ! போ! போ! ஒழிஞ்சு போ!”

“என் வயிற்றிலே மண்ணைப் போட்டு போறீங்களே, எம ராசா! நான் முக்கியமானதை விட்டிட்டேனே!”

“புரியும்படி சொல்லித் தொலை!”

“நீங்க ஏறிப் போறது, என் எருமை மாடு! தினம் எனக்குப் பால் கறக்கிற எருமை! பால் எருமைக்கும் ஆண் எருமைக்கும் வித்தியாசம் தெரியாம, என் மாட்டை பத்திட்டு போறது சரியா? மாட்டைப் பிடிக்க வந்தவ, புருசன் கிடைச்ச சந்தோசத்திலே அதை மறந்துட்டேன்!”

எம ராஜனின் சினம் பட்டெனத் தணிந்தது!

“அட ஆமா, உன் எருமைதான் இது! …முதல்லே அதை சொல்லியிருக்கலாமே! .. அதானே பார்த்தேன்! தெற்கு நோக்கிப் போறதுக்கு பதிலா வடக்கிலே போவுதே, ஏன் என்னு எனக்கு தெரிய வில்ல! ….. எங்கே என் மாட்டைக் காணோமே?” .. எருமையை விட்டு மெதுவாக கீழே எமன் இறங்கினான்.

“புல்லுத் தின்ன போயிருக்கும், எம ராசா! .. இன்னைக்கு காலையிலே அது வயித்துக்கு ஏதாவது போட்டீங்களா? … எருமை மாட்டிலே வித்தியாசம் கண்டு பிடிக்க முடியலையே, நீங்க எடுத்துட்டுப் போற உயிர்கள் எல்லாம் சரியானதா? …ஆட ஆண்டவா! .. எம ராசனுக்கும் வயசாகுதில்லே! கண்ணு மிரளுது! … எம ராசா! மாடு தேடிறதுக்கு முந்தி முதல்லே ஒரு கண்ணாடி வாங்கி மாட்டிக்கங்க…! எருமை மாறாட்டம் மாதிரி, ஆள் மாறாட்டம் ஆனா என்ன ஆகுறது?”

பொன்னம்மா மாட்டை தட்டிக் கொண்டு கொட்டத்துக்குள் நுழைந்தாள். திருதிரு வென்று விழித்த எமன், விழிகளை மூட மறந்து, கீழே கிடந்த கிரீடத்தை தலையில் வைத்துக் கொண்டு, வேகமாக வாகனத்தை தேடிப் போனான்.

– நவம்பர் 2003

எனக்கு ஒரு சந்தேகம்.

பொன்னம்மா

//“எம ராசா! கையெடுத்துக் கும்பிடறேன். ஒரேதா என் உயிரையும் கொண்டு போயிருங்கோ!”//

எமதர்ம ராசா

//“நீ செத்துப் போக இன்னும் நாற்பது வருசஷமிருக்கே, நான் எப்படி உன் உயிரைக் கொண்டு போறது? அது பெரிய தப்பாச்சே”//

பொன்னம்மா 

//“எனக்குப் பிள்ளை பிறந்து, கந்தசாமி ஒரு வருசமாவது உயிரோடு இருக்கணும். அதுக்கு வரம் தருவீங்களா, எம ராசா? உங்களைக் கெஞ்சி கேக்கிறேன்”//

பொன்னம்மாவுக்கும் கந்தசாமிக்கும் என்ன தொடர்பு. புரியவில்லை.

எமனின் வாக்கும் நிறைவேற வேண்டும். ஆகையால் தற்காலம் பொன்னம்மாவின் வயறில் குழந்தை இருக்கிறது என்று அனுமானம் கொள்ளலாமோ? அது வேறு யாருடையதோ ஆகட்டும்.

11 கருத்துகள்:

  1. இன்றைய கதை ரசிக்கும்படி இருந்தது. குமுதம் டைப் கதை.

    பதிலளிநீக்கு
  2. இரயில்வே கடந்த பத்து வருடங்களில் நிறைய முன்னேற்றம் கண்டிருக்கிறது. நிறைய வசதிகள் இருந்தாலும், பயனாளர்களின் தன்மையால் பாத்ரூம் மோசமாகிறது. இருந்தாலும் கம்ப்ளெயின்ட் கொடுத்தால் உடனே சரி செய்கிறார்கள்.

    வடக்குப் பகுதியில் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் பயணிகள் அதிகம். டிடிஆர் கண்டுகொள்வதில்லை.

    பதிலளிநீக்கு
  3. முதல் பாசிட்டிவ் செய்தி பார்த்ததும், இங்கு பெங்களூர் பயணி ஒருவர் கூட எழுதியிருந்த செய்தி நினைவுக்கு வந்தது. அவருடைய மடிக்கணினி பேட் ரயிலில் விட்டுவிட்டதை, மனு கொடுக்க, அதற்கிடையில் அந்த பேகை துப்புரவு ஊழியர் எடுத்து ரயில் போலீஸிடம் ஒப்படைக்க, அப்படியாக ஒரு வாரத்தில் எந்தவிதச் சேதமும் இல்லாமல் கிடைத்ததாகச் சொல்லி நன்றி தெரிவித்திருந்தார்.

    இப்படி ரயில்வேயில் நிறைய நல்ல சம்பவங்களும் நடக்கின்றன.

    ரயில்வே நல்ல முன்னேறி வந்தாலும், நம் பொதுமக்களின் நடவடிக்கைகள்தான் எரிச்சலூட்டும். குறிப்பாகச் சுத்தம் குப்பையை ரயிலிலேயே போடுவது, பாத்ரூமை சரியாகப் பயன்படுத்தாமல் என்று.

    பொதுமக்கள் இன்னும் பொறுப்புடன் இருக்க வேண்டும் சுத்தம் கற்பிக்கப்பட வேண்டும்

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இந்த அரசு மருத்துவமனையின் முயற்சி சூப்பர். நல்ல விஷயம். நிறைய நல்ல விஷயங்கள் நடந்தாலும் அவை தொடர வேண்டும்.

    அட மற்றொரு ரயில் செய்தி. எங்க ஊர் டிடிஆர் ஆஹா!!! எங்க ஊரு நல்ல மனசுன்னு உதாரணம்!! ஹாஹாஹா.

    அவர் பணி சிறக்கட்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இன்றைய கதை நன்றாக இருக்கிறது. நல்ல கற்பனை

    “என் வயிற்றுலே பசும் பாலை வார்த்திட்டீங்க எம ராசா! அந்த உத்தரவாதம் போதும் எனக்கு!” ஆனந்த கண்ணீர் இப்போது கொட்டி வடிய, பொன்னம்மா வீட்டை நோக்கி ஓடினாள்.

    “இப்போ எனக்கு பிள்ளை வேணாம் எம ராசா! … நீங்க நீண்ட நாள் வாழணும்”//



    ஆனா இது லிங்க் ஆகலையே, அண்ணா. இப்போ எனக்கு பிள்ளை வேணாம்னு சொல்றா....அப்புறம் ஏன் கந்தசாமிக்கு உயிர் ஒரு வருஷம் இருக்கணும்னு கேக்கறா? ஏதோ சம்திங்க் இடையில் மிஸ்ஸிங்கோ? இந்தக் கதை வேறு எங்காச்சும் இருக்கா?

    சிறுகதைகள்.காமில் பல சமயம் தட்டச்சு செய்வதால் இடையில் ஏதாச்சும் நேர்ந்ததா? அதானல் வரும் சந்தேகம்.

    கதை நல்ல கற்பனை. ஆனால் என்னவோ ஒரு குறை. முழுமையாக இல்லாதது போன்ற ஒரு குறை

    ஒரு வேளை எனக்குதான் அப்படித் தோன்றுகிறதோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அண்ணா உங்க சந்தேகத்துக்கு விடை கதையிலேயே இருக்கே

    //“…. மூனாவது குடிசையிலே வாழ்ற …. கார் டிரைவர் கந்தசாமி மேலே …. எனக்கு ஒரு கண்ணு. கந்தசாமிக்கு என் மேலே …. இரண்டு கண்ணு”//

    பொன்னாமாக்கும் கந்தசாமிக்கும் இதான்....அவன் குழந்தைதான் அது என்றே கதை சொல்வது போல் இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. /பொன்னம்மாவுக்கும் கந்தசாமிக்கும் என்ன தொடர்பு. புரியவில்லை.

    எமனின் வாக்கும் நிறைவேற வேண்டும். ஆகையால் தற்காலம் பொன்னம்மாவின் வயறில் குழந்தை இருக்கிறது என்று அனுமானம் கொள்ளலாமோ? அது வேறு யாருடையதோ ஆகட்டும்./
    எனக்கு என்ன தோன்றுகின்றதென்றால், பொன்னம்மாவின் வயற்றில் குழந்தை இல்லை....எப்போதும் குழந்தை பெறப்போவதில்லை என்பதுதான் பொன்னம்மாவின் ப்ளான்.....மனதுக்குப் பிடித்த கந்தசாமியின் ஆயுளை நீட்டிப்பதற்கான ப்ளான்தான் இது....சாவித்ரியிடம் ஏமாந்த எமதர்மன் மறுபடியும் ஏமாந்து விட்டாரே!

    பதிலளிநீக்கு
  8. பாசிட்டிவ் செய்திகள் அருமை.
    கதை நன்றாக இருக்கிறது நகைச்சுவையாக .
    எமனை ஏமாற்றி விட்டாள் பொன்னம்மா.

    பதிலளிநீக்கு
  9. டிடிஆர் செய்தி மனதுக்கு மகிழ்வைத் தருகிறது.
    28 வருடங்களுக்கு முன் நான் சந்தித்த டிடிஆர் நினைக்கையிலேயே கர்ர்ர்ர்ர்ர்......
    வாடகைக் காரில் மூன்று வயது மகளுடன் திருச்சி டூ சென்னை பயணம். லால்குடி தாண்டியது வண்டி மக்கர் பண்ண ஆரம்பித்தது. ஒரு சிற்றூரில் பொட்டிக்கடை முன் நிறுத்தியதும் "இனிமே வண்டி போகாது சார்" என்று ஓட்டுனர் சொல்லி விட்டார். பொட்டிக்கடை அண்ணாச்சி அவர் வேனில் சென்னை கொண்டு விடுவதாகச் சொன்னார். இரவு நேரம் ஒரு பழைய வேனில் அவ்வளவு தூரம் பயணிக்க விருப்பமில்லாமல் அவர் வேனில் திருச்சி வரை போக ஒரு டீல் போட்டேன். மறு நாள் சென்னையில் இருக்க வேண்டிய கட்டாயம். தங்கிய ஹோட்டல் மேனஜர் திருச்சி - சென்னை ராக்ஃபோர்ட் எக்ஸ்ப்ரஸில் ஏசி கோச் டிக்கட் (லஞ்சம்தான்) ஏற்பாடு செய்தார். ஏசி வேலை செய்ய வில்லை....டிடிஆர் லக்ஷியம் செய்யவில்லை...கூடப் பயணித்த ஒரு ரயில்வே ஊழியர் சொன்னார் "இந்த டிடிஆர் ஒரு வம்பு புடிச்ச ஆள். தகவல் அனுப்பி விழுப்புரத்தில் மெக்கானிக் வந்து ரிப்பேர் செய்யச் சொன்னேன்...வள்ளுனு என் பேர்ல விழுந்தான்". ஏசி கோச் ஆனதால் ஜன்னலும் தொறக்க முடியாது. கோச் கதவு திறந்திருந்ததால், அதன் அருகே குழந்தையுடன் நின்று கொண்டே பயணித்தேன். அச்சமயத்தில் வந்த டிடிஆர் "சார், நீங்க அந்த ஹோட்டல் மேனஜருக்கு எவ்வளவு (டிக்கட்டுக்கு லஞ்சம்) கொடுத்தீங்க? ஏன் கேக்கறேன்னா, எங்களுக்கு ஃபுல் அமவுண்ட் வர மாட்டேங்குது....ஹோட்டல் ஆட்கள் கமிஷன் அடிச்சிடுறாங்க". எனக்கு வந்த கடுப்புக்கு...அப்படியே அந்த டிடிஆரை தூக்கி வெளியே வீசலாம் போல இருந்தது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!