கார்த்திகை மாதம் நரசிம்மர் கண் திறந்து பார்க்கும் மாதமாம். எனவே வருடா வருடம் அந்த மாதத்தில் ஒருமுறையாவது நரசிம்மரை தரிசித்துவிட்டு வேண்டுமென்று சொல்கிறார்கள். வருடா வருடம் சோளிங்கர் சென்றுவர பாஸுக்கு ஆசைதான். சென்ற வருடத்துக்கு முந்தைய வருடம் சென்று வந்தோம். சென்ற வருடம் தவிர்க்க முடியாத காரணங்களால் செல்ல முடியாமல் போனது. இந்த வருடம் மறுபடி சென்று வந்தோம்.
"நீ போயிட்டு வாயேன்.. என்னை என்னை ஏன் இழுக்கறே?" என்று நான் கேட்ட கேள்விக்கு பாஸ் சொன்ன பதிலை நான் இங்கு எழுதப்போவதில்லை. இந்தமுறை இரண்டு மலையும் ஏறிப்பார்க்கும் ஆவலில் இருந்தார் பாஸ். என் இரண்டு முழங்கால்களும் கீச் கீச்சென்று முனகின.
அடுத்த சலுகையாக நான் "சரி.. போய்வருவோம். மலை ஏறணுமா என்ன?"
"கட்டாயம். நரசிம்மரைப் பார்த்து பதினோரு வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆஞ்சியையும் பார்க்கணும். அது சின்ன மலைதானே?"
சின்ன மலைக்கே 705 படிகள். ஏற, இறங்க 705+705=1540 படிகள். முதல்வர் கணக்கில் கணக்கு போட்டது மனம். சொன்னேன்.
"பெரியமலைக்கு ரோப்கார் இருக்கிறது. சென்று வந்து விடலாம். மது சொல்லி இருக்கான். சின்ன மலை மட்டும் ஏறணும். அது வேணா நான் மட்டும் போய்வந்து விடுகிறேன்" - என்ன பெருந்தன்மை!
எனக்கு சிபாரிசில் சென்று வருவது கூச்சம், சங்கடம். கூட்டம் என்றால் அலர்ஜி. பாஸுக்கு தெரியாதா என்ன! ஆனால் பெருமாளை பார்ப்பதில் உறுதியாய் இருந்தார். அதுவும் நானும் பெரியமலை ஏறவேண்டும் என்றும் சொல்லி விட்டார்.
பாஸ் தம்பிகள் - அதாவது சித்தி பெற்ற ரத்தினங்கள் - இருவரும் அதிசயப் பிறவிகள். பெருமாள் என்றால் உயிரை விடுவார்கள். சில பழைய கோவில்களை எடுத்து புனருத்தாரணம் செய்திருக்கிறார்கள். சோளிங்கரில் சின்ன மலை ஏறும் படிக்கட்டுகளின் தொடக்கத்தில் இடதுபுறமாக செங்கமலம் அன்னதானக் கூடம் இருக்கும். அது இவர்களுடையதுதான். வருடா வருடம் உறவுகளிடமும், நட்புகளிடமும் நன்கொடையும் வாங்குவார்கள். ஆனால் அதெல்லாம் தவிர அவர்கள் செய்யும் செலவும், சேவையும் மிக அதிகம். வருடம் முழுவதும் அங்கு அன்னதானம் நாள் முழுக்க தொடர்ந்து நடக்கும். அவர்கள் பெற்ற பிள்ளைகளும் அதே மார்க்கத்தில் தொடர்வது அவர்கள் செய்த பாக்கியம். ஏகாதசி விரதம் இருப்பதும், திரிகால ச.வந்தனங்களும் தினசரி பூஜையும் என்று அமர்க்களப்படுத்துகிறார்கள்.
"அவசியம் பெருமாளை பார்க்கணுமா? ஒரே கூட்டமா இருக்குமே...' என்று எண்ணம் ஓடினாலும் வெளியில் சொல்லவில்லை. பாஸ் திட்டுவார் என்பது மட்டுமில்லை, நரசிம்மருக்கும் கேட்டு, 2019 திருப்பதி போல ஆகிவிட்டால்..? 'டேய் முட்டாள்.. வெளியில் சொன்னால்தான் பெருமாளுக்கு கேட்குமா, தெரியுமா '
"அஸ்து பாடாதீங்க... கிளம்புவோம்" பாஸின் கட்டளை வந்துவிட்டது. அவர் கட்டளையே சாசனம்.
"அக்கா.. சனிக்கிழமைன்னா இன்னும் கூட்டமா இருக்கும். வெள்ளிக்கிழமை வாங்க.. குறைவாத்தான் இருக்கும். நான் லோக்கல் வி ஐ பி கிட்ட சொல்லி ரோப்கார் ரிசர்வ் பண்ணி வச்சுருக்கேன். காலைல சீக்கிரம் கிளம்பிடுங்க" மதுவின் யோசனை திட்டமாக இருந்தது.
டிசம்பர் ஐந்தாம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு காஃபி சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம். வழியில் எதுவும் சாப்பிடவில்லை என்பதற்கு காரணம் இரண்டு. ஏழரை மணிக்குள் சோளிங்கர் சென்றுவிடுவோம், இடையில் அவ்வளவு சீக்கிரம் சாப்பிடத் தோன்றாது என்பது ஒன்று. அங்கு சென்று விட்டால் அன்னதான கூடத்தில் ஏதாவது சாப்பிட்டுக் கொள்ளலாம் என்பது இரண்டு.
வாடகை ஓட்டுநர் எங்களுடன் முன்பு ஆலங்குடிக்கு வந்தவர். ஆலங்குடி பயணக்கட்டுரை எழுதி விட்டேனோ? கோவில் புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் செய்த நிகழ்வு..? இல்லையோ? அங்கும் இதே தம்பிகள்தான். அங்கு வந்த அதே டிரைவர் மோகன்தான் இப்போதும். அப்போது அவர் கோவில் பக்கமே வரவில்லை என்பதால் அவர் கன்வர்ட்டட் கிறிஸ்தவர் என்று எண்ணியிருந்தேன். இந்தமுறை பேசியபோது அவர் முதல்நாள்தான் திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் சென்று வந்திருந்தார் என்பதும், அவர் சோளிங்கர் இரண்டு மலையும் இதுவரை பார்த்ததில்லை என்றும், 'நடந்து ஏறினால் முடியாது, ரோப்கார்னா நானும் வரலாம்னா வரேன்' என்றார். நாங்களே சிபாரிசு. இவருமா? கேட்டுப் பார்த்தோம். பச்சை.
சென்று இறங்கும்போது மணி காலை 7.20 சுற்றிலும் குரங்குகள் பிஸியாக இயங்கி கொண்டிருக்க, சத்திரத்தை அடைந்தோம் . ஒரு குஞ்சுக் குரங்கு என்னுடனேயே சமமாக நடந்து வந்து என்னைப் பார்த்தபடி கூட வந்தது. இன்னொரு நடுத்தர வயதுக்கு குரங்கு ஸ்பைடர்மேன் போல மேற்கூரையில் கம்பிகளை பிடித்தபடி கைமாற்றித் தாவித்தாவி முகத்துக்கு அருகில் எங்களுடனேயே பயணம் செய்தது. ஒரு குரங்கு அங்கிருந்த பைக்கில் தாவி ஏறி.....
இருங்கள்.... ராமநாராயணன் படம் போல 'பைக்கை ஸ்டார்ட் செய்து பறந்தது' என்று எழுதப்போகிறேன் என்று நினைக்காதீர்கள். பெட்ரோல் டேங்கின் மேல் இருக்கும் லெதர் பையின் ஜிப்பைத் திறந்து, கையை உள்ளே விட்டுத் துழாவி எதுவும் இருக்கிறதா என்று பார்த்து, உள்ளே இருந்த சிறிய தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு, ஜிப்பை மூடி கீழே இறங்கி லாவகமாக பாட்டிலின் மூடியைத் திறந்து தண்ணீரைக் குடித்து விட்டு பாட்டிலை வீசி எறிந்தது! நடுக்கத்தை மறைத்தபடி நடந்தோம். எங்களை மட்டும் ஜாக்கிரதையாக உள்ளே அனுமதித்து கம்பியிட்டிருந்த கேட்டை சட்டென மூடினார் அங்கிருந்த சேவார்த்தி ஒருவர். உள்ளே குரங்குகள் வந்து விடக்கூடாது என்று எச்சரிக்கை.
எங்களை வரவேற்றார் தலைமை குக். அவர் எங்களுக்கு பரிச்சயமானவர்தான். கொரோனா காலத்தில் எங்கள் வீட்டுக்கு மூன்று வேளையும் வந்து உணவளித்துச் சென்ற அன்னதாதா.
"வாங்க.. மலை ஏறப்போறதா மது சொன்னார். காஃபி சாப்பிட்டு விட்டு மலைக்கு கிளம்பறீங்களா? அப்படியேவா?"
"லேட் ஆயிடாதில்ல? டைம் இருக்குன்னா காஃபி சாப்பிட்டுட்டே கிளம்பறோம்"
நரசிம்மர் புன்னகைத்தார்.
=======================================================================================
கார்த்திகைக்கு தீபம் வைக்க வீட்டில் பாஸ் ஸ்வாமி முன் அகல் விளக்குகள் எடுத்து வைத்துக் கொண்டிருக்க, அதை புகைப்படம் எடுத்து இன்ஸ்டராகிராமில் ரீல்ஸ் போட்டும், பேஸ்புக்கில் போட்டும் ஜென்ம சாபல்யமடைந்தேன்!
=================================================================================================
பூண்டு, வெங்காயம் பயன்படுத்துவதில் பிரச்னை; விவாகரத்தில் முடிந்த 11 ஆண்டு திருமண வாழ்க்கை
'நான் படிச்ச புத்தகம்' என்கிற தலைப்பில் 60 களின் ஆரம்பத்தில் விகடனில் ஒரு தொடர் வந்திருக்கிறது. அதில் ஆர்வி எழுதிய புத்தகம் ஒன்றுக்கான விமர்சனம். இதற்கான படம் எடுத்து வைத்திருந்தேன். ரொம்ப ரொம்ப நாட்கள் ஆனதால் படத்தைக் காணோம். எனவே கதையின் தலைப்பையும் காணோம்! என்ன கதை என்று ஜீவி ஸார் சொல்வாரா? படித்திருப்பாரா? படித்திருந்தாலும் நினைவிருக்குமா?
இதைப் படித்து விட்டு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். என்றாவது ஒருநாள் இதற்கான படம் கிடைக்கும்போது குறிப்புடன் பகிர்கிறேன்!
காட்டு மலரை ரோஜா மலராக மாற்ற முயலும் சுந்தரத்துக்கும், அந்த மலராகிய காவேரிக்கும் இடையே இருந்த அன்பை விவரிக்கும் நவீனம்தான் யுவதி. இளம் உள்ளத்துக் கற்பனைகள், துடி துடிப்பு, தான் நினைத்ததைச் செய்ய வேண்டும் என்ற முரட்டுப் பிடிவாதம், வயதுக்கு உரிய பலவீனங்கள் இவற்றை மையமாக வைத்துக் கொண்டு புனையப்பட்ட சிறந்த தொரு நாவல். மற்றும் பலதரப் பட்ட மனிதர்களின் மனோபாவங்களையும் தத்துவ ரீதியாக விளக்கி வெகு அழகாக எளிய நடையில் சித்திரிக்கிறார் ஆசிரியர் ஆர்வி.
சுந்தரத்திற்காக, பட்டணத்திலேயே ஒரு குடித்தனம் போடத் தீர்மானித்து தாயும் அவளுக்குத் துணையாகக் காவேரியும் பட்டணம் வருகிறார்கள். 'அவளை அழைத்துக் கொண்டு போய்த் துணிமணிகளை யெல்லாம் வாங்கிக் கொடுடா. உனக்கு ஒரு தங்கை யிருந்தால் செய்ய மாட்டாயா?' என்கிறாள் சுந்தரத்தின் தாயார். அவளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்க ஒரு வாத்தியாரம்மாவை ஏற்பாடு செய்கிறான். தினம் தினம் பார்த்துக்கொண்டே இருந்தபோதிலும் அவள் யுவதியாக மாறி விடும் சின்னங்கள் அவன் மன அமைதியைக் கெடுக்கின்றன. சுந்தரத்தின் நண்பன் கோபு ஒரு யதார்த்தவாதி. அவன் சுந்தரத்திற்கும், காவேரிக்கும் இடையே உள்ள தொடர்பு முடிவில் விபரீதத்தில் முடியும் என்று சுந்தரத்திடம் எச்சரிக்கின்றான்.
கோபுவின் பயம் வீணானது என்பதைச் சுந்தரம் நிரூபிக்க விரும்புகிறான். ஓர் இளம் பெண்ணிடம் மாசற்ற அன்பைச் செலுத்துவதில் தவறென்ன என்று தீர்மானித்து பின்னும் தீவிரமாக இருக்கிறான். சுந்தரத்தின் தாயாருக்கும் வரவர அவன் போக்கு பிடிபடவில்லை. கோபுவின் சந்தேகத்தில் அவளுக்கும் இப்பொழுதுதான் நம்பிக்கை அதிகமாகிறது. இந் நிலையில் சுந்தரத்திற்கும் சரஸ்வதற்கும் கல்யாணம் நடந்தேறுகிறது. கல்யாணத்திற்கு முன்பு சரஸ்வதியை காவேரியின் வாத்தியாரம்மா வீட்டில் சந்தித்து, காவேரியின் முன்னேற்றத்திற்கான தன் விருப்பங்களை தெரிவிக்கிறான். அவனுடைய உன்னத எண்ணங்களை அறிந்த சரஸ்வதி அதற்கு உடன்படுகிறாள்.
கல்யாணமானதும் சுந்தரத்தின் படிப்பு முடியும் வரை சரஸ்வதி பெற்றோர் வீட்டிலேயே இருக்கிறாள். காவேரியும் அவளுடனே இருந்து கொண்டு பழைய வாத்தியார் அம்மாவிடமே படிக்கிறாள். புதுப்புது பிரச்சனைகள் அன்றாடம் தோன்றி எப்படியோ சமாளிக்கப்பட்டு வருகின்றன. காவேரியை பற்றிய சகல பிரச்சனைகளையும் சரஸ்வதி அவன் நிமித்தம் திருப்திகரமாகவே ஏற்று முடிக்கிறாள். ஆனால் சரஸ்வதியின் சக்தியையும் மீறி இருக்கிறது ஊர்வாய். கோபுவை பலமுறை சுந்தரம் விலக்கினாலும் அவன் ஒவ்வொரு விஷயத்திலும் தலையிடுகிறான். சுந்தரம் தெரிந்தோ தெரியாமலோ தவறான வழியில் செல்வதோடு இல்லாமல் பிறரையும் அழைத்துச் செல்வதை அவனால் சகிக்க முடியவில்லை. இந்த அபவாதத்துக்கு இடையே காவேரி தன் கிராமத்திற்கு போக கூட மறுக்கிறாள். சரஸ்வதி தன் கணவனுக்கு வரும் அவமானத்தில் தனக்கும் பங்கு உண்டு என்று தைரியமாக இருக்கிறாள். சரஸ்வதி கணவனோடு தனி குடித்தனம் ஆரம்பித்தவுடன் காவேரியை வாத்தியாரம்மா வீட்டிலேயே தங்க ஏற்பாடு செய்கிறார்கள்.
தன் வீட்டு சமையல்காரருடைய பெண்ணின் கலியாணத்திற்காக சுந்தரமும் சரஸ் வதியும் ஊருக்குப் போகிறார்கள். ஊரில் எல்லோகும் இவனை ஒரு மாதிரியாகப் பார்ப்பதைக் கவனித்துவிட்டு, அங்கு இருக்கப் பிடிக்காமல் சரசுவதியை அங்கு விட்டு விட்டு, சென்னைக்கு வந்து விடுகிறான். காவேரியைச் சந்தித்து தன் நிலைமையை விரிவாக விளக்கி. 'நம்மைச் சுற்றியிருப்பவர்கள் பலங்கொண்ட மட்டும் தாக்கும் கடைசி அடி நம் மேல் விழுகிறது. ஒன்றும் தெரியாத ஒரு பெண் விணாகி விட்டாள் என்பதுதான் அவர்கள் முடிவு! இந்த அபவாதம் என் தலைமீது பெரிய பாரமாக விழுந்திருக்கிறது. அதைத் தூக்கி எறிந்து விட்டு, நிமிர்ந்து நிற்கவே போகிறேன். அப்படித் தூக்கி எறியும்போது, அது யார் மீது போய் விழும் என்று நான் கவலைப்பட முடியாது. அவர்கள் அதை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். சரசுவதி இதைத் தாங்க மாட்டாள் என் பதை யறிவேன். ஆனால் அவளைச் சேர்ந் தவர்கள் என் மீது பழி சுமத்தும்போது. பக்கத்திலே அவளும் இருக்கிறாளே என்று சிந்திக்க வில்லையே. அவர்கள் பெண் அவர்களோடு வாழட்டும். என்றைக்குப் பழியை என்னிடம் காணவில்லையோ அன்று அவள் வரட்டும்" என்கிறான். காவேரியின் உடல் பயத்தால் நடுங்குகிறது. 'காவேரி! பயப்படாதே. நான் உன்னைக் கைவிட மாட்டேன். களங்க மற்ற அன்புக்கு எப்பொழுதுமே அவமதிப்பு ஏற்படாது,' என்று தேற்றுகிறான்.
இவர்களது போக்கை தடுக்க, எல் லோரும் ஆலோசித்து காவேரிக்கும் அவளது மாமன் மகனுக்கும் கலியாணத்தை முடிக்க ஏற்பாடு செய்கிறார்கள். இது சுந்தரத்துக்குப் பிடிக்கவில்லை. காவேரிக்குப் பைத்தியம் பிடிக்கும் போலாகி விடுகிறது. எல்லோரும் ஊரிலிருந்து வருகிறார்கள். காவேரியை அழைத்துக் கொண்டு ஊரை விட்டே போய் விடுகிறான். எல்லா இடங்களிலும் அவர்களை தேடுகிறார்கள். மதுரையில் பிடிபட்டு விடுகிறார்கள். 'என் போக்கிலே என்னை விட்டு விடுங்கள். எல்லோரிட மிருந்தும் நான் விலகிச் செல்கிறேன்' என்று சொல்லி விட்டு, அங்குள்ளவர்களை வணங்கி விட்டுச் செல்லுகிறள், காவேரி, அப்படிச் செல்லும் காவேரியை நோக்கி ஓடிய கோபு அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டு 'உன் பிரயாணத் தில் என்னையும் சேர்த்து ஏற்றுக் கொள்' என்று கூறினான் அவன்.
காவேரி, யுவதியாக மாறியதும் சுந்தரத்தின் மனோநிலையை மிக அழகாக விளக்குகிறார் ஆசிரியர் சுந்தரத்திற்கு தன்னால் உருவாக்கப்பட்ட பெண் காவேரி என்ற ஒரே எண்ணம் தான் நிலவி வந்தது கரை தெரியாத பாசம் முடிச்சு தெரியாத பிணைப்பு சரீர சம்பந்தமான கவர்ச்சியினால் எழும் உணர்ச்சியை விட சிறந்த அன்பின் துளி துடிப்பு என்று அழகாக சொல்கிறார் ஆசிரியர் இந்த நவீனம் இரண்டாம் பதிப்பில் காவிரி என்ற பெயரில் வெளியாகி உள்ளது
ஏ ஸி ஸ்ரீனிவாசன் .
விகடன் ஜோக்குக்கு அபராதம் புதுசு இல்லை!





















காலை வணக்கம்.
பதிலளிநீக்கு//என் இரண்டு முழங்கால்களும் கீச் கீச்சென்று முனகின. //
திருப்பாவை பாசுரம் 07 :
கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ?
முழங்கால்களுக்குள் வலியன் (ரெட்டைவால்) குருவி வைத்திருக்கிறீர்கள் போலும். என் ஜாய்ண்ட்களெல்லாம் கடக் முடக் ஓசை மட்டும்தான் எழுப்புகின்றன! ரொம்ப வித்தியாசம்தான் ;-)
வாங்க TVM.. வணக்கம். அதை எழுதும்போது அந்த நினைவுடனேயே எழுதினேன். நீங்கள் சொல்வது போல கடக் முடக் என்றுதான் சத்தம் கேட்கும். ஆனால் எண்ணெய் இடாத கதவின் கீல்கள் கீச் கீச்சென்று சத்தமெழுப்புவது நினைவுக்கு வந்தது. மருத்துவர் ஏதோ Faluid Therapy தரலாம் என்று சஜஸ்ட் செய்திருந்தார். முழங்கால் எலும்புகளுக்கிடையே பசையின்மையால் ஏற்படும் உராய்வினால் தானே வலி!
நீக்குஇன்றைய அனைத்துப் பகுதிகளும் அருமை.
பதிலளிநீக்குகவிதையில் மாத்திரம் குறை இருக்கிறது. கடைசி இரண்டு பத்தி, அட்ஜஸ்ட் பண்ணி வாழ்ந்துவிடலாம் என முடிகிறது. அதற்கு முந்தைய பத்தி பணமே இந்த முடிவுக்குப் பிரதானம் என்ற அர்த்தத்தில் வருகிறது. இரண்டும் ஒத்துப்போகவில்லை.
வாங்க நெல்லை.. கடைசி இரண்டு பத்தி யோசனை சொல்கிறது. பணம் இருந்தால் அதைக் கறக்கத்தான் ஜீவனாம்சம், விவாகரத்தில் கேட்கிறார்கள். எனவே இது பெரும்பாலும், கவனிக்கவும், பெரும்பாலும் பணம் இருப்பவர்களிடையேதான் சகஜம். குடிசையில் வாழ்பவர்களும், ஒண்டு குடித்தனத்தில் வாழ்பவர்களும் விவாகரத்தை நாடுவதில்லை. கொஞ்சநாள் முன்னர் ஒரு பெண்மணி கணக்கு போட்டு மாதம் இவ்வளவு என்று பைசா கணக்குடன் கோடிகளில் பணம் கேட்டிருந்தார். நீதிபதியும் அதைக் குறித்து சொல்லி இருந்தார். அந்நேரத்தில் எழுதியது. கடைசி பத்தி சினிமா பாடல் வரி.
நீக்குகல்கி மறைந்தபோது... ஒழுங்கா ஸ்கேன் பண்ணி வெளியிட்டால் என்ன? என நொந்துகொண்டே கஷ்டப்பட்டுப் படித்து முடித்தபோது கீழே தட்டச்சு செய்து வெளியிட்டிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஹா. ஹா.. ஹா...
நீக்குஅவசரம்... அவசரம்...
நான் எனக்குச் சொன்னேன்!
பாலகுமாரன் எழுத்து ஆச்சர்யம். அவனவன் தான் பிறவியிலேயே தமிழை மேம்படுத்துவதற்காக இலக்கியவாதியானேன் என்று சொல்லிக்கொள்ளும்போது, சிறுகதை எழுதும் முறையை சுஜாதாவிடம் கேட்டுத் தெளிந்துகொண்டேன் எனழுதியிருப்பது ஆச்சர்யம்.
பதிலளிநீக்குஅவர்களுக்குள் மனஸ்தாபமும் எழுந்திருந்திருக்கிறது. படித்திருக்கிறேன். பானு அக்கா சொல்வார் பாருங்கள்.
நீக்குசுஜாதா பாலுவை கலாய்த்து கணையாழியில் ஒரு முறை கவிதை எழுதியிருந்தார். ...மாயச்சுழல் இது மேலே முடிச்சவிழ்க்க ராயப்பேட்டை பாலு வா' என்று முடித்திருந்தார். பல பத்தாண்டுகளுக்குமுன் சிறு வயதில் படித்தது. இவ்வளவுதான் இப்போது நினைவுக்கு வருகிறது.
நீக்குஆம். அதுபற்றி வியாழன் பதிவுகளிலேயே முன்னர் வந்திருக்கிறது. அது தவிர வேறொரு பிரச்னையும் எழுந்த நினைவு.
நீக்குசுஜாதாவை கீழ்த்தரமாக தாக்கி பாலகுமாரன் கணையாழியில் தன் பெயரை குறிப்பிடாமல் எழுதியதற்கு, 'கணையாழியின் கடைசி பக்கங்கள்' பகுதியில், "அற்பசங்கைகளுக்காக ஒதுங்கும் சந்தின் சுவர்களில் எழுதும் பாஷையை பிரயோகித்து எழுதியிருப்பது யார் என்று எனக்குத் தெரியும், சிரிப்பு வருகிறது" என்று எழுதியிருந்தார்.
நீக்குஇதான்.. இதுதான்... இதற்குதான் பானு அக்கா வருவாங்கன்னு சொன்னேன்.
நீக்குஇதைத்தவிர, ஒரு முறை சாவி அவர்கள் வீட்டில் நடந்த தண்ணி பார்ட்டியில் சுஜாதா உட்பட பல எழுத்தாளர்கள் கலந்து கொண்டார்களாம். பாலகுமாரனுக்கு அன்று நிறைய அலைச்சல், காலையிலிருந்து எதுவும் சரியாக சாப்பிடவில்லையாம். சாவி வீட்டில் வெறும் வயிற்றில் மதுவை அருந்த, சுள்ளென்று போதை தலைக்கு ஏறி விட்டதாம். அப்போது அவர் ஏதோ ஒரு பெண்கள் பத்திரிகையில் சுஹாசினி பற்றி தொடர் எழுதிக் கொண்டிருந்தார்.
நீக்குஇவரைப் பார்த்த சுஜாதா, "என்னய்யா? நடிகையை பற்றி எழுதிக் கொண்டிருக்கிறாய்? உருப்படியாக ஏதாவது எழுது" என்றதும், பாலகுமாரன் அவரிடம், "எது உருப்படியான எழுத்து? உன் மனசுக்குள்ள நீ பெரிய ரைட்டர் என்ரு நினைப்பா? உன்னை விட பெரிசா வளர்ந்து, உன்னை அடிச்சுக் காட்டறேன் பார்" என்று சூளுரைத்தாராம். இவரை சுஜாதா கூர்மையாக பார்க்க,மற்றவர்கள் பா.கு.வை வெளியே இழுத்துச் சென்றிருக்கிறார்கள். சுஜாதா இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறி விட்டாராம்.
ஆனால் இவர் மீது கோபம் கொண்ட சாவி, இவரும்,சுப்பிரமண்ய ராஜுவும் சேர்ந்து வழங்கிக் கொண்டிருந்த 'இரட்டையர் பதில்கள்' பகுதிக்கு இவர் எழுதிய பதில்களை அடித்து விட்டு, சு.ராஜுவின் பதில்களை மட்டும் பிரிண்டிற்கு அனுப்பினாராம்.
இதை பாலகுமாரன் தன்னுடைய 'ஒரு முன்கதை சுருக்கம்' நூலில் எழுதியிருப்பார். அதில் தான் சுஜாதாவிடம் சூளுரைத்ததை 'நிர்மூடன் அல்லவோ சூளுரைப்பான்" என்று எழுதியிருப்பார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் அவர் மது அருந்துவதை நிறுத்தினாராம்.
ஆஹா.. இதுவும் படித்திருக்கிறேன். சமீபத்தில் நீங்கள் போனில் பேசியபோதும் சொன்னீர்கள். ஆமாம்.. சுஜாதாவுக்கு தண்ணியடிக்கும் பழக்கம் உண்டா?
நீக்குஉண்டு என்று அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார்.
நீக்குஆ...
நீக்குசோளிங்கர் தரிசனம் மூன்றுமுறை ஆகிவிட்டது. ஒரு நாழிகை நேரம் சன்னதி அருகிலுள்ள மண்டபத்தில் அமர்ந்திருந்தீர்களா? ஆஞ்சநேயர் மலை படிக்கட்டுகள் உயரம் அதிகம். ஒரு காலத்தில் படங்கள் பகிரணும்.
பதிலளிநீக்குஎனக்கும் மூன்று முறைதான்.
நீக்குஅப்பாடி..
இப்போ நானும் நெல்லை அளவுக்கு ஒரு ஆன்மீகவாதிதான்! நீங்களும் மூன்று, நானும் மூன்று!
என்ன சம்பளம் என்று தெரியாதாம்... ஒருவருக்கு கோடிக்கணக்கான சொத்து. அதில் பிச்சாத்துக் காசைப் பற்றி என்ன கவலை? இராஜாஜி ஒரு பிரின்சிபளுடன் வாழ்ந்தவர். அவருடைய பூர்வீக வீட்டையே, மருத்துவமனை அமைத்து உபயோகப்படுத்தணும், 30,000 ரூதான் பெற்றுக்கொள்வேன் என்ற கன்டிஷனுடன் அதிகப் பணத்துக்கு ஆசைப்படாமல் விற்றவர்
பதிலளிநீக்கு30,000 தான்...! ஆனால் எனக்கும் அதே கருத்துதான். அந்தக் காலத்தில் முப்பதாயிரம் என்பது எவ்வளவு பெரிய தொகை!
நீக்குஇப்பவும் ஒருவர் தனக்குப் பிறகு தன் வீட்டை மருத்துவமனைக்கு எழுதி வைப்பதாக சொல்லிச் சென்றார்.
"நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு...!"
உணவினால் விவாகரத்து அதிசயம்தான். இப்போல்லாம் கணவனுக்காக நான் வெஜ் சமைக்கிறேன் என்று சொல்வதுதான் ஃபேஷன். எந்தக் கணவனும் மனைவிக்காக என்று சொல்லிக் கேள்விப்பட்டதில்லை.
பதிலளிநீக்கும்ஹூம்... இந்த நியூஸைப் படித்தபின்தான் நான் எவ்வளவு பெரிய தியாகி என்று புரிகிறது! சகிப்புத்தன்மையும் அதிகம் எனக்கு என்றும் தெரிகிறது...
நீக்கு//எந்தக் கணவனும் மனைவிக்காக என்று சொல்லிக் கேள்விப்பட்டதில்லை.// ஆண் குலத்தை இப்படி ஒரு ஆணே குறைவாக சொல்லலாமா? அசைவம் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆண்கள், சைவமாக இருக்கும் பெண்ணை மணந்த பிறகு, சைவமாக மாறி விட்டதாக கேள்விப் பட்டிருக்கிறேன்.
நீக்குபரஸ்பர புரிதலும், காமம் தாண்டிய காதலும் இருந்தால் விட்டுக்கொடுத்துப் போவது சாத்தியம்.
நீக்குஒரு சைவ வேளாளப் பெண் (திருநெல்வேலி) லண்டனுக்கு, கணவனுக்குப் பிடிக்கும் என்பதால் கருவாடு சமைக்க ஆரம்பித்துவிட்டதாகச் சொல்லி, ஒரு பை நிறைய கருவாடு எடுத்துக்கோண்டு வந்திருந்தார். விமானத்தை விட்டு இறங்கும்போது என்னை அந்தப் பையைத் தூக்கி வர முடியுமா என்று கேட்டார். நம் சாரு நிவேதிதா, அவருடைய ஐயங்கார் மனைவி, மீன் இன்ன பிறவற்றை நல்லா சமைப்பார் என்று சொல்கிறார். யாரேனும் சைவமாக மாறிவிட்டேன் என்று சொல்லி நான் கேள்விப்படலை.
நீக்குமலையாள அசைவ குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட எங்கள் நண்பர் பெண் இன்னும் சைவமாகவே தொடர்கிறார் என்பது செய்தி!
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம். ஷோளிங்கர் பயணம் - சிறப்பு. எனக்கும் சென்று வர எண்ணம் உண்டு. பார்க்கலாம் எப்போது அழைப்பு வருகிறது என...
பதிலளிநீக்குமற்ற பகுதிகளும் நன்று.
வாங்க வெங்கட்... வணக்கமும் நன்றியும். சீக்கிரம் சோளிங்கர் தரிசனம் கிடைக்க வேண்டுகிறேன்.
நீக்குஓ! கண் திறந்து பாரய்யா இறைவான்னு பாடி, கார்த்திகை மாதம் கண் திறப்பாரா நரசிம்மர். இதெல்லாம் நேக்கு புச்சுங்கோ.
பதிலளிநீக்குமுதன் முதலில் போனது நான் 4/5 ஆம் வகுப்பு படித்த போது என் பாட்டி கூட்டிக் கொண்டு சென்றார். வெயில்! அப்போதெல்லாம் சுற்றிலும் மரங்கள்....கோவில் மட்டுமே இருக்கும் இப்ப நிறைய வந்துவிட்டன.
பாட்டி வெளியில் சாப்பிடமாட்டாரே ஸோ கோவில்ல பிரசாதமோ இல்லை கையில் கொண்டு வந்ததை எனக்குக் கொடுத்தாரோ தெரியலை அது மட்டும் நினைவில் இருக்கு!!!!!
அதன் பின் இரண்டு முறை படி ஏறி...அப்புறம் மாமா மகனின் கல்யாணம் அங்குதான் நடந்தது என்பதால் அப்ப போனது. அதன் பின் சென்னையில் இருந்தப்ப ஒரு முறை. அவ்வளவுதான். அதன் பின் போகலை. நான் கார்த்திகையில் போயிருக்கேனா? நினைவில்லை.
கீதா
// இதெல்லாம் நேக்கு புச்சுங்கோ. //
நீக்குஎனக்கு மட்டும்? நான் மட்டும் என்ன நெல்லையா, கீதா அக்காவா, இல்லை திருவாழிமார்பரா? இல்லை அனுராதாப்ரேமா?
பதிலளிநீக்குகோவிலில் கல்யாணம் என்றதும் இன்று கூகுள் செய்தி - இங்கு பெங்களூரில் கோவில்களில் கல்யாணங்கள் கூடாது என்று. காரணம், கல்யாணங்கள் நடந்து சில மாதங்களிலேயே நாட்களிலேயே விவாகரத்து என்று கோருவதால் கல்யாணம் நடந்தது என்ற சாட்சிக்கு அர்ச்சகர்களை கோர்ட் அழைப்பதால்....அவர்கள் தடை விதிக்கக் கோரிட....
நல்ல விஷயம் என்றே தோன்றியது.
கீதா
அடடே.. பாஸிட்டிவ் நியூஸிலேயே போடலாம் போலிருக்கே!
நீக்குநல்ல விஷயம்தான்.
நீக்கு//பாஸிட்டிவ் நியூஸிலேயே போடலாம்// - விவாகரத்து பாஸிடிவ் நியூசா இல்லை கோயிலில் திருமணம் தடை பாசிடிவ் நியூஸா?
நீக்குஎது பாஸிட்டிவ் செய்தியாக இருக்கும் என்று தோன்றுகிறது?!
நீக்கு"நீ போயிட்டு வாயேன்.. என்னை என்னை ஏன் இழுக்கறே?" என்று நான் கேட்ட கேள்விக்கு பாஸ் சொன்ன பதிலை நான் இங்கு எழுதப்போவதில்லை. இந்தமுறை இரண்டு மலையும் ஏறிப்பார்க்கும் ஆவலில் இருந்தார் பாஸ். என் இரண்டு முழங்கால்களும் கீச் கீச்சென்று முனகின. //
பதிலளிநீக்குஹாஹாஹா....காட் இட்!!!!! சரி அந்தக் கீலுக்கு எண்ணை போட வேண்டியதுதானே!!!! ஹிஹிஹிஹி
கதவை திறக்கும் போது ஒரு சவுன்ட் வருமே அப்படி வந்திச்சா!!!
சரி அப்ப நான் இன்னும் சின்னப் பொண்ணு!!!! ஹாஹாஹாஹா...
கீதா
ஆக்குபேஷனல் ஹஜார்ட்ஸ் என்பார்களே அது போல என் கால்களின் நிலை. என்னவோ போங்க...
நீக்குஎனக்கு அங்கு ஆஞ்சுதான் என் ஃபேவரிட்!!!!!
பதிலளிநீக்குஓ ரோப்கார்னதும் நான் நினைச்சேன் பெரிய மலைலருந்து சின்ன மலைக்கு விட்டிருப்பாங்களோன்னு. அதாவது பெரிய மலைக்கு ரோப் காரில் போய் அங்கிருந்து மீண்டும் ரோப் காரில் அப்படிஏ குறுக்கால சின்ன மலைக்கு வந்து அங்கிருந்து மீண்டும் ரோப் காரில் மலை இறங்கிடலாமோ என்று....
கவலைப்படாதீங்க ஏஐ உலகமாக மாறிக்கிட்டே வருது, திம்மலால சுஜாதா எழுதியிருபப்து போல் உங்க வீட்டுக்கே நீங்க அப்பாயின்ட்மென்ட் ஃபிக்ஸ் பண்ணிட்டீங்கனா நேரே வந்திடும் இரண்டு நிமிடம் நரசிம்மர், 2 நிமிடம் ஆஞ்சு என்று நேரம் குறிக்கப்பட்டு அதுவும் வந்திடும்!!!!!
அதுக்கும் மீறி வெர்ச்சுவலாகவும் வந்திடலாம் அந்த அளவு கூடப் போகாம வயசானவங்க வீட்டிலேயே அப்படியே வெர்ச்சுவலா பார்க்கும் படி! டீவில்யில் பார்ப்போது போலல்ல...நிஜமாகவே நாமே அங்கிருப்பது போல
கீதா
மெய்நிகர் நிலையில் ஹிஹிஹிஹி மெய்நிகர்நிலையில் தரிசிப்பதில் இன்பம் கிடையாதே... புளியோதரை, சர்க்கரைப் பொங்கலும் கிடைக்காதே...
நீக்குஅது சரி.. இரண்டு மலைகளுக்கும் குறுக்கே ரோப்காரா? சரிதான்!
@கீதா: திம்மலா இல்லை, திமலா.
நீக்குஅது டைப்போ அல்லது டைபோ !!
நீக்குஎனக்கு சிபாரிசில் சென்று வருவது கூச்சம், சங்கடம். கூட்டம் என்றால் அலர்ஜி. //
பதிலளிநீக்குஹைஃபைவ்! அப்படியே, ஸ்ரீராம். மீக்கும்.
சித்தியின் பிள்ளைகள் செய்வது மிகவும் சிறப்பான ஒன்று,
கீதா
ஆம். சித்தியின் பிள்ளைகள் போல வராது. என்னால் முடியாது. சிலருக்கு சில பிறவிகளில் அந்தப் பக்குவம் வந்து விடுகிறது. புண்ணியாத்மாக்கள்.
நீக்கு'டேய் முட்டாள்.. வெளியில் சொன்னால்தான் பெருமாளுக்கு கேட்குமா, தெரியுமா '//
பதிலளிநீக்குஹாஹாஹாஹா அதானே!!!
ஆலங்குடி பயணக்கட்டுரை எழுதி விட்டேனோ? கோவில் புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் செய்த நிகழ்வு..? இல்லையோ? //
ஹிஹிஹிஹி நஹி! ஸ்ரீராம், நாம ரெண்டு பேரும் same boat!!!!
நெல்லை வந்து இதை கேச் பண்ணிப்பார் பாருங்க,
கீதா
நெல்லை எப்பவோ எஸ்கேப் ஆகிவிட்டார் போல.. ஆளையே காணோம்!
நீக்குமுருகா சரணம்...
பதிலளிநீக்குமுருகா.. வாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குகோலம் அழகாக இருக்கு .
பதிலளிநீக்குபார்த்ததும், எனக்கு என் ஊர் நினைவு. பாட்டி என்னை காலையில் கோவிலுக்குக் கூட்டிக் கொண்டு போய் கோலம் போட வைத்துவிடுவார்! அவருக்குப் பிறகும் நான் தொடர்ந்தேன். வாசலிலும் கொடிமரத்தின் கீழும்...என்று பெரிய கோலமாகப் போடுவேன். இரண்டு பாட்டிகளுமே இப்படித்தான்.
கோலமாவு கோகிலா நான்!!!!! ஹிஹிஹிஹி
கீதா
பெரிய திறமை அது. கண்ணும், மனசும், கைகளும் ஒரே நேர்க்கோட்டில் குவியவேண்டும். விரல்களில் நேர்த்தி இருக்க வேண்டும்.
நீக்குஆலங்குடி பயணக் கட்டுரை
பதிலளிநீக்குகும்பாபிஷேகம் பற்றி எழுத வேண்டும்
ஓ.. நீங்களும் எழுத இருக்கிறீர்களா?
நீக்குஎனக்கு என்ன வேலை?...
நீக்குநீங்கள் தான் எழுத வேண்டும்...
ஓ.. சரி.. சரி...
நீக்குபாருங்க குரங்குகளுக்கு என்ன புத்தி கரெக்டா ஜிப்பைத் திறந்து எடுத்துட்டு மீண்டும் மூடுது பாருங்க நாம கூட இப்படிச் செய்வோமா!!!!!!!!!!!!!
பதிலளிநீக்கு//"லேட் ஆயிடாதில்ல? டைம் இருக்குன்னா காஃபி சாப்பிட்டுட்டே கிளம்பறோம்"
நரசிம்மர் புன்னகைத்தார்.//
ரொம்ப ரசித்தேன் இந்த வரிகளை!!!!
கீதா
ஹிஹிஹி... வரவழைப்பவனும் அவனே.. அனுபவங்களைக் கொடுப்பவனும் அவனே...
நீக்கு//நரசிம்மர் புன்னகைத்தார்// அண்டம் கீறிச் சிரித்தது செங்கட் சீயம்; மேட்டு அழகிய சிங்கர்!! Wow!! பின்னிட்டீங்க வாத்யாரே
நீக்குஆ.... அந்த அளவு எல்லாம் தெரியாது. விதி சிரித்தது என்பது போல எழுதினேன். கம்பன் பாடலை அறியேன் நான்.
நீக்கு///எந்தக் கணவனும் மனைவிக்காக
பதிலளிநீக்குஎன்று சொல்லிக் கேள்விப்பட்டதில்லை...///
யாருடைய?... என்ற கேள்வி முக்கியமாகின்றது இக்கால நாகரிகத்தில்!...
திரைப்படம் எடுத்து வெளியில் விட்டார்களே!...
பூண்டு வெங்காயம் மேட்டரா? எதைப்பற்றி என்று புரியாமல் விழிக்கிறேன்! என்ன திரைபபடம்?
நீக்குபளிச் பளிச் கார்த்திகை தீபங்கள்!
பதிலளிநீக்குரொம்ப நேர்த்தியாகச் செய்திருக்காங்க, பாஸ்! அவங்க ஈடுபாடு தெரியுமே நமக்குதான்!
கீதா
ஆமாமாமாமாமாமாமாம். அதேதான்!
நீக்குமுகநூலிலேயே பார்த்தேன். நீங்கள் படமெடுத்திருந்த விதமா, அல்லது அதை பகிர்ந்திருந்த விதமா தெரியவில்லை, கோனார்க் சக்கரத்தின் மினியேச்சர் போல தோன்றியது.
நீக்குஆமாம். "மகாராஜன் உலகை ஆளலாம்..." என்று பாடல் மனதில் ஓடியதா?
நீக்குஜீவி அண்ணாவின் கதையை நினைவுபடுத்துகிறது....அதில் ராணி.....சென்ற முறை செல்லப்பா சார் நடத்திய போட்டியில் வென்ற கதை.
நீக்குகீதா
நானே சொல்லாமல் வேறு யாராவது சொல்கிறார்களா என்று பார்த்தேன். நீங்கள் சொல்வீர்கள் என்றும் எதிர்பார்த்தேன்.
நீக்கு//// பாரதியார் பிறந்த தினம்
பதிலளிநீக்குஸ்பெஷல்.////
மகாகவியை மறந்து விட்டேன் போல் இருக்கின்றது...
அடடா... ரொம்ப லேட் ஆகவில்லை போலவே...
நீக்குஒரு சாதாரண காரணம் எல்லாம் விவாகரத்திற்குக் காரணமாகிறதே என்று தெரிந்தாலும், இதுவும் காரணமாகியது ஒரு விவாகரத்திற்கு என்பது இப்ப இல்லை சில பல வருடங்களுக்கு முன்னரே. அதே சமயம் விட்டுக் கொடுத்து பழகிக் கொண்டு நல்லதனமாகத் தொடர்ந்தவையும் என் நெருங்கிய வட்டத்தில் உண்டு.
பதிலளிநீக்குஎன் தனிப்பட்ட கருத்து இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.
கீதா
சகிப்புத்தன்மை என்பது சமூகத்துக்கே மறந்து விட்டது. எலலவற்றுக்கும் கோபம், கொடிபிடிப்பது...
நீக்கு//இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.// விவாகரத்தெல்லாம் ஒரு விஷயமே இல்லையா? இல்லை பூண்டு வெங்காயமா? எழுதுவதைச் சரியாக எழுதினால்தான் என்ன?
நீக்கு//சகிப்புத்தன்மை என்பது சமூகத்துக்கே மறந்து விட்டது. // ஸ்ரீராம் தமிழகத்தில்தான் இருக்கிறாரா? தமிழர்களுக்குத்தான் அதிக அளவு சகிப்புத்தன்மை உண்டு. நீ என்ன வேணும்னாலும் திருடிக்கோ. அது என் பணம் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் தேர்தலின்போது 1000 ரூ கொடுத்துவிடு. எனக்கு பக்தி உண்டு. ஆனால் நீ என் கடவுளை அவமதிப்பாகப் பேசினாலும், கோயிலை என்ன செய்தாலும், கோயில் நடைமுறையை மாற்றினாலும் எனக்குக் கோபமே வராது என்று எவ்வளவு சகிப்புத் தன்மையோடு இருக்காங்க.
நீக்குநான் மக்களை சொல்லவில்லை. ஆள்பவர்களை சொல்கிறேன்! மக்களையும் சொல்லலாம். பாவமன்னிப்பு போன்ற படங்கள் இந்நாளில் வந்தால் எவ்வளவு எதிர்ப்பு வரும்? அது கூட இஸ்லாமிய சகோதரர்கள் செய்ய மாட்டார்கள். இவர்கள்தான் செய்வார்கள்.
நீக்கு'நான் படிச்ச புத்தகம்' என்கிற தலைப்பில் 60 களின் ஆரம்பத்தில் விகடனில் ஒரு தொடர் வந்திருக்கிறது. //
பதிலளிநீக்குஇந்தத் தகவலை மட்டும் முன்னரே நீங்க குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வருகிறது.
ஆர் வி ?
கீதா
ஆமாம், அவ்வப்போது பகிர்ந்துமிருக்கிறேன். லா ச ரா கதை இன்னும் ஒரு கதை மறந்து விட்டது!
நீக்கு// ஆர் வி ? //
நீக்குஇது பழைய ஆர்வி.
ஆர்.வெங்கட்ராமன் என்று பெயர், கலைமகளில் நிறைய எழுதுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவருடைய மகன் என் கணவரின் பள்ளித் தோழர்.
நீக்குNews.
நீக்குஆமாம் ஸ்ரீராம் நினைவு இருக்கு நீங்க பகிர்ந்தது.
நீக்குஉங்கள் அக்கா கூட லா ச ரா பற்றிச் சொல்லியதைப் பகிர்ந்திருக்கீங்க
கீதா
இவன் பெண்டாட்டியுடன் அவனும்
பதிலளிநீக்குஅவள் புருசனோடு இவனும் வாழ்வது என்கிற
நாகரிகத்தில் சமைத்தலும் மாறுகின்றது.
இதற்கு மேல் விளக்கம் எதுக்கு..
இருங்கள் அப்புறம் யோசித்து புரிந்து கொள்கிறேன்!
நீக்குஆனால் இது வேறொரு கவிதையை நினைவு படுத்துகிறது.
உன் குழந்தையும்
என் குழந்தையும்
நம் குழந்தையோடு
விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு/அப்போது அவர் கோவில் பக்கமே வரவில்லை என்பதால் அவர் கன்வர்ட்டட் கிறிஸ்தவர் என்று எண்ணியிருந்தேன். /
பதிலளிநீக்குசில பங்குத் தந்தைகள் நிறைய மூளைச் சலவை செய்கிறார்கள். ஒரு க்ஷேத்ராடனத்துக்கு எனக்கு வண்டி ஓட்டிய டிரைவரை (அவர் ஒரு கிருத்துவர் என்று பெயரிலிருந்தே தெரிந்து விட்டது) ரொம்பப் பிடித்துப்போய் அவரையே கூப்பிட ஆரம்பித்தேன். திருச்செந்தூர் கோயில் தரிசனத்துக்குப் பிறகு மதுரைக்குப் பயணம். நல்ல பசி. குருக்கள் கொடுத்த பிரஸாதம் நிறைய இருந்தது. வழியில் வண்டியை நிறுத்தி டிரைவருக்கும் ஒரு தட்டில் கொடுத்தேன். மறுத்தார். "நல்லா இருக்கு சாப்பிடுங்க" என்றேன். "சாத்தானுக்குப் படைத்த உணவை உண்ண மாட்டேன்" என்றார் ஆக்ரோஷமாக. எனக்கு என்னவோ போல் ஆகி விட்டது. அப்புறம் அவரை வற்புறுத்தவுமில்லை....அவரைக் கூப்பிடுவதுமில்லை இந்தச் சம்பவத்துக்குப் பிறகு.
அட கஷ்டகாலமே... அவருக்காவது பிழைப்பு நேரத்தில் அப்படி பேசியிருக்கவேண்டாம் என்று தெரிந்திருக்க வேண்டும். நானாயிருந்தால், அல்லது என் தங்கையாயிருந்தால் அந்த ஓட்டுநரை அப்படியே, அப்போதே அனுப்பி இருப்பாள். செய்தும் இருக்கிறாள்!
நீக்குஒரு இந்து நாடார் பையனை, கிறுத்துவ நாடார் திருமணம் செய்துகொண்டு, பிறகு அவரையும் பசங்களையும் கிறித்துவராக்கிவிட்டார். கோயில் பிரசாதம் சாத்தான் உணவு என்றுதான் சொல்வாளாம். இது நாகர்கோயில் கூத்து
நீக்குஅந்தக் கால செய்திகள் சுவையாக இருந்தன. சபாஷ்!
பதிலளிநீக்குதேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ..
நீக்குடிவியில் படையப்பா டிரெய்லர் ஓடிக்கொண்டிருப்பதன் பாதிப்பு!
ஸ்ரீ க்ருஷ்ணவிலாஸ் விளம்பரத்தில் வருகின்ற "கை பாகம், செய் பாகம்" என்றால் என்ன? கை பாகத்திற்கும் செய் பாகத்திற்கும் என்ன வித்தியாசம்? ஒரு பொருட் பன்மொழியோ?
பதிலளிநீக்குகைமணம் என்பார்களே அதுவும், செயல் நேர்த்தியும்..
நீக்குஇதெதில் இதது இவ்வளவு இடவேண்டும் என்கிற அளவு தெரிந்த திறமையாயிருக்கும் என்று நினைக்கிறேன்.
செய்பாகம்-செய்முறை அளவு. கை பாகம் - அவர் கைக்குள்ள திறமை. ஒன்று தெரியுமா? செய்பாகம் தெரிந்து இருவர் செய்தாலும், கைபாகம் இருப்பவருடைய உணவுதான் ருசியாக இருக்கும்.
நீக்குஆர் வியி எழுதிய கதை ரொம்ப சுவாரசியம். அப்போதே இப்படியான கதைகளை எழுதியிருப்பதும் ஆச்சரியம். கடைசி வரி சூப்பர். முழுக்கதையையும் அவர் எழுத்தில் வாசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இணையத்தில் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குகீதா
கதைத்தலைப்பை அப்புறம் மாற்றி இருப்பதாகச் சொல்லி தலைப்பையும் சொல்லி இருக்கிறார்களே.. அதை வைத்து தேடிப்பார்க்கலாம்.
நீக்குதேடினேன், கிடைக்கவில்லை.
நீக்குஅப்புறம் இன்னும் தேடலாம் இப்போதைக்கு ஹால்ட். நிறைய வேலைகள்.
கீதா
இந்த வாரம் பொக்கிஷ ஸ்பெஷலா? நிறைய பழைய செய்திகள்.
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா... அப்படி அமைந்து விட்டது!
நீக்குசண்டையிட்டாலும்
பதிலளிநீக்குசண்டையில்
மண்டையே உடைந்தாலும்
சாதா ஜனம் நாடுவதில்லை
எந்நாளும்
சட்ட உதவிகளை//
அவங்களால அது முடியாதே ஸ்ரீராம். ஆனால் சட்டத்திற்கு அப்பாற்பட்டு அவங்க பிரிவதும் நடக்குது....ஊர்ப்பஞ்சாயத்து!
அனால் நீங்க சொல்லியிருப்பது போல் பெரும்பாலும் சமாதானம். அந்த சமாதானம் சில சமயம் பெண்ணின் சுய மரியாதையை (அவளுக்குத் தெரியாதுதான்) இழக்கச் செய்யலாம். அதே போல ஆணின் சுயமரியாதையையும் இழக்க நேரிடலாம். ஏதோ நடத்துகிறார்கள் குடும்பம் என்பது போல்...அவர்களுக்கு அதீத கனவுகள் இருக்காது, குழந்தைகள் நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும் என்று இல்லை இதோ என் பழைய வீட்டருகில் இருந்த குடும்பத்தில், அப்பா குடி, அம்மா இங்கிருந்த வரை வீட்டு வேலை இப்ப ஊரில் ரெய்ச்சூரில் அங்கு வயலில் வேலை, பஞ்சு பிரித்தல் வேலை. வீட்டில்5 பெண்கள், ஒரே ஒரு பையன். 5 பெண்களில் முதலாமவள் படித்தாள் இங்கு கல்லூரியில் தான் விரும்பியவனைக் கல்யாணம் செய்து கொண்டுவிட குடும்பமே இங்கிருந்து ரெய்ச்சூர் போய் 17 வயதுப் பெண் (இங்கும் வீட்டுவேலைதான் செய்தாள் என்பது வேறு விஷயம்) மற்றும் 15 வயதுப் பெண்ணிற்கு ஒரே சமயத்தில் கல்யாணம் செய்து இதோ இரண்டு பேரும் இரு குழந்தைகளுடன்...
அடுத்து இப்ப 13 வயசுப் பெண்ணுக்குக் கல்யாணம்.
என்னால் ஜீரணிக்க முடியாத விஷயங்கள். அந்த 13 வயசுப் பெண் என்னைக் கூப்பிட்டு அழுதாள் அவள் அப்பா இல்லாத போது அவர் ஃபோனிலிருந்து அழைத்து. நான் என்ன செய்ய முடியும்?
கொரோனா சமயத்தில் நடந்த ஒரு நிகழ்வின் அடிப்படையில்தான் ஒரு கதை எழுதியிருந்தேன் மின்நிலாவில் வந்த நினைவு.
கீதா
அலசிட்டீங்க... ஆமாம். நிறைய கணவன் மனைவிகள் சகித்துக் கொண்டுதான் வாழ்கிறார்கள்!
நீக்கு13 வயதிலும், 15 வயதிலும் திருமணம், குழந்தை என்பது கொடுமை.
பரஸ்பரம்
பதிலளிநீக்குஅடிநாதமாய் இருக்கும்
ஆழமான அன்பைப்
உள்ளபடி
புரிந்து கொண்டால்
தற்காலிகமாய் வரும்
சண்டைகளில்
கசப்பெதெற்கு? பிரிவெதெற்கு?//
டிட்டோ! கொஞ்சம் கொஞ்சமாய் புரிதல் வந்துவிட்டால் பிரச்சனைகள் இல்லாமல் போய்விடலாம்.
கவிதை நல்லாருக்கு ஸ்ரீராம். பொ. கொ.
கீதா
// கவிதை நல்லாருக்கு ஸ்ரீராம். //
நீக்குநன்றி கீதா. நெல்லையின் கருத்து வேறாயிருக்கு,
சகித்துக் கொண்டு, இல்லை வேற வழியில்லைன்னு சகித்துக் கொண்டு வாழ்வதற்கும், புரிதலினால் வரும் சகிப்பிற்கும் வித்தியாசம் இருக்கு இல்லையா? ஸ்ரீராம்.
நீக்குகீதா
கண்டிப்பாக. புரிதலில் அதிருப்தி இருக்காது. சுய நிம்மதி.
நீக்கு1937 அத்திவரதரும் அனுபவமும்... 1987ல் எதிர்பார்ப்பு..//
பதிலளிநீக்குசுவாரசியம். அதானே அவர் 87ல் அந்தக் கடைசி வரி... அவர் முன்பு எழுதியதை கோட் செய்து சொல்லியிருக்காங்க பாருங்க. ஆச்சரியம். 37ல் என்ன வயசோ குமாரசாமிக்கு? 87ல் எதிர்பார்க்க. வயசாகியிருந்தா போகப் பயந்திருப்பார் இல்லையா...அப்போவே ஜனநெருக்கத்தில் மூச்சுத் திணறி உயிர் மீண்டென்னு வேற சொல்லியிருக்கிறாரே.
கீதா
அத்திக்கு எப்பவுமே டிமாண்ட்தான். ஆமாம், காலச்சக்கரம் நரசிம்மாவின் அத்திவரதர் படித்திருக்கிறீர்களோ?
நீக்குபடித்திருக்கிறேனே....எல்லாம் உங்க உபயத்தினால்தான். இருக்கு ஃபோல்டரில் என்ற நினைவு
நீக்குகீதா
கச்சேரி - நாடக சம்பவம் அக்கால எழுத்தை வாசித்ததில் ஒரு சுகம். அடிக்கடி இங்கு நாம் சொல்வதுதான். தமிழ்நாடே துக்கித்தது அழுதது என்று சொல்வது மிகைப்படுத்தல் இல்லையா என்று இங்கு பேசப்பட்ட விஷயம். ஆனால் எழுத்தில் அதைக் கொண்டுவந்தால்தானே அது சுவாரசியப்படும்!
பதிலளிநீக்குகீதா
மறைந்த மாமேதைகள் பற்றிய அவ்வப்போதையான விவரிப்புகள் ரொம்பவே சுவாரஸ்யம்.
நீக்கும்ஹூக்கும் எங்க ஊர் ஸ்பெஷல்தானுங்கோ! எங்க புகுந்த வீட்டில் அதைப் பற்றி ரொம்பச் சொன்னது இல்லை. நான் புகுந்த பிறகு வீட்டில் இருந்த எமி செடி இலைகளைப் பறித்துச் செய்து வைத்து அவங்களுக்குப் பிடித்துப் போச்சு.
பதிலளிநீக்குஆனால் எல்லாருக்கும் அது தெரியும்தான்...
கீதா
கீதா
எல்லோருக்கும் அவங்கவங்க ஊர் ஸ்பெஷல்தான்.
நீக்கு//எங்க ஊர் ஸ்பெஷல்தானுங்கோ!// எந்த ஊர்? திருவனந்தபுரம் பாலக்காடு ஸ்பெஷல்தான் இந்த வேப்பிலைக்கட்டி. எனக்குத் தெரிந்த ஒருவரை வேப்பிலைக்கட்டி மாமி என்றுதான் பலரும் அழைப்பர். எதனால் என்று தெரியாது
நீக்குஅவர் அவருடைய வீட்டுக்காரருக்கு வேப்பிலை அடித்துக் கொண்டேயிருப்பாராயிருக்கும்!
நீக்குசோளிஙகர் பயணக்கட்டுரை உள்ளது உள்ளபடி எழுதப்பட்ட யதார்த்தம். உ-ம் பாஸ் எப்படி 'பாஸ்' ஆக முடிவெடுக்கிறார் என்பது.
பதிலளிநீக்குமுழங்கால் வலிக்கு knee cap உபயோகியுங்கள். வலி தெரியாது. ரத்த ஓட்டத்தை சரிப்படுத்த கற்பூரம், மென்தால், யூகலிப்டஸ் ஆயில் இவற்றை கலந்து தேங்காய் எண்ணையில் குழைத்து குப்பியில் வைத்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது எந்த வலிக்கும் புரட்டலாம்.
விளக்குகள் போட்டோ அருமை.
இந்த ஏ ஸி ஸ்ரீநிவாசன் தான் திருவாழியா?
கருத்து கந்தசாமி மீள்வரவு
கவிதை கடைசி பத்தி மட்டும் தான் சிந்திக்க தூண்டியது. யாரிடமும் குறை இல்லை தான் அவரவர் கண்ணோட்டத்தில்.
பாரதியார் கையெழுத்து படிக்க முடியவில்லை. அந்தக்காலத்திலே போட்டோ பிடித்து லினோ டைப் ஆக்க முடிந்ததா?
1930களின் பொக்கிஷம் ....கிட்டத்தட்ட 90 வருடங்கள். அப்படியும் காகிதம் பொடியாமல் இருப்பது ஆச்சர்யம். எங்கே இருந்து இப்பொக்கிஷங்களை தோண்டி எடுத்தீர்கள்?
Jayakumar
வாங்க ஜெயக்குமார் ஸார்... காணோமேன்னு தேடினாலும் 'வந்துட்டேன்'னு வந்துடுவீங்கன்னு எதிர்பார்த்தேன்.
நீக்குபயணக்கட்டுரையின் நேர்மையை உணர்ந்ததற்கு நன்றி. knee cap போட்டிருக்கிறேன். எழுவாய் என்று எழுந்தும், நடந்தும் பயனிலை! எண்ணெய்கள் விதம் விதமாக உபயோகிக்கிறேன். விளக்கு போட்டோ பாராட்டைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது..
// இந்த ஏ ஸி ஸ்ரீநிவாசன் தான் திருவாழியா? //
புடிசீங்களே ஒரு புடி... அடிச்சீங்களே ஒரு அடி!! ஹா ஹா ஹா
கவிதையின் கடைசி பத்தி கண்ணதாசன்!
பாரதியாரே நேரில் வந்தாலும் அதைப் படிக்க முடியாது என்றுதான் எனக்கும் தோன்றியது. பொக்கிஷம் தேடுவதில் நான் தொல்பொருள் நிபுணன்!!
// இந்த ஏ ஸி ஸ்ரீநிவாசன் தான் திருவாழியா? //
நீக்குபுடிசீங்களே ஒரு புடி... அடிச்சீங்களே ஒரு அடி!! ஹா ஹா ஹா //
ஸ்ரீராம். இதுதான் ஜெ கே அண்ணாவிற்கே உரித்தான ப்ரான்டெட் கமென்ட்!!!!!! டக்குனு இப்படித் தோன்றுவது சிந்திப்பது ....
கீதா
இதைப் படித்து விட்டு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். என்றாவது ஒருநாள் இதற்கான படம் கிடைக்கும்போது குறிப்புடன் பகிர்கிறேன்!//
பதிலளிநீக்குகண்டிப்பாக நினைவில் இருக்கும், ஸ்ரீராம்.
கீதா
ஓகே. எனக்கும் நினைவு இருக்கணு ம். இருக்கும்!
நீக்குசுஜாதா வைப் பற்றிய அந்தப் பகுதிக்கு விட்டுப் போன கருத்தொன்று - சுஜாதாவைப் பற்றி பாலகுமாரன் சொன்ன அந்தச் சிறப்பான குணங்கள்தான் சுஜாதா அவர்களை அவர் எழுத்தோடு சேர்த்து உச்சத்துக்குக் கொண்டு வந்தது எனலாம். நிறைய ப்ளஸ்! அவர் மீதான மதிப்பைக் கூட்டியதும் இவைதான்.
பதிலளிநீக்குகீதா
உண்மை.
நீக்குவிகடனுக்கு, வாசகர்களிடம் இருந்த மதிப்பைப் பாருங்க! ஸ்ரீராம். எவ்வளவு தரமாக இருந்திருக்கிறது.
பதிலளிநீக்குஇப்ப அப்படி இருக்கா?
அப்போதைய தமிழும் மனதை வசீகரிக்கிறது.
கீதா
வித்தியாசமாய் இருக்கும். எவ்வளவு பெரிய நிறுவனம் விகடன்...
நீக்குநிஜமாகவே தலைவர்கள் தலைவர்கள்தான். ராஜாஜி தன் கொள்கைகளில் பிடிப்பாக நின்றவரும் கூட.
பதிலளிநீக்குகீதா
உண்மை.
நீக்குவிகடன் வாசன் மற்றும் கல்கியின் நட்பு எல்லாம் மனதை மிகவும் கவரும் பாசிட்டிவ் விஷயங்கள். எவ்வளவு நல்ல மனங்கள் ஒற்றுமையுடன் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், ஒருவருக்கொருவர் வளர்ச்சியைப் பாராட்டிக் கொண்டு, ஆரோக்கியமான பத்திரிகைகள் காலமாக இருந்திருக்கிறது என்பதற்குச் சான்று.
பதிலளிநீக்குகீதா
இப்போது ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்கிறார்கள். இணையம் செய்யும் மாயம்!
நீக்குசோழர் பற்றிய கல்வெட்டு, தகவல்கள் ...
பதிலளிநீக்குஅதற்கு அடுத்த கீதைப் பேருரைகள் பாரதியின் கையெழுத்துப் பிரதி நகல் வாசிக்க முடியலை. பெரிசு படுத்தவும் முடியலை. ஆனால் இன்று அவர் தினம் இல்லையோ? பொருத்தம்!
மனதைக் கவர்ந்த விளம்பரம். இரண்டு முறை வாசித்தேன்! சுத்தமான நெய்யில், கலப்பற்ற நல்லெண்ணை யில் செய்த பட்ஷணங்கள்....கலப்பற்ற நல்ல எண்ணையிலா இல்லை நல்லெண்ணையா? ஹிஹிஹி நல்லெண்ணையில் பொரிக்கமாட்டாங்களே அதனால் எழுந்த கேள்வி.
கீதா
நல்ல தரமான சுத்தமான எண்ணெய் என்று கொள்ளவும்!
நீக்கு//கலப்பற்ற நல்லெண்ணை// அவர்கள் sesame/gingelly oil தான் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். கலப்பற்ற என்று ஏற்கெனவே க்வாலிட்டி சொல்லப்பட்டு விட்டது. மணிலாவிலிருந்து நிலக்கடலை இறக்குமதி ஆகுமுன், தமிழர்கள் gingelly oil மட்டும்தானே உபயோகித்திருப்பார்கள் (நெய் தவிர்த்து) ?
பதிலளிநீக்குஇருக்கலாம்.
நீக்குநல்லெண்ணை sales pitch (more expensive than peanut oil)
பதிலளிநீக்குadvantage of peanut oil is its higher smoking point. Even submarines use peanut oil for cooking to reduce the risk of kitchen fire.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.
இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. சோளிங்கர் நரசிம்மர் தரிசனம் நல்லபடியாக கிடைத்தது. தாங்கள் பார்த்த அனுபவங்கள் நன்றாக உள்ளது.
இன்று காலையிலிருந்தே சில வேலைகளின் காரணமாக வெளியில்தான் உள்ளோம். அதனால் காலை எப்போதும் போல் வர இயலவில்லை. பின்னர் வீட்டுக்கு வந்ததும் அனைத்தையும் படிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. மெதுவா வாங்க... வெளியில் சென்று வரும் சந்தர்ப்பத்தை உபயோகப் படுத்திக் கொள்ளுங்கள். மனதில் உற்சாகம் பிறக்கும்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குசோளிங்கர் நரசிம்மன் கோயில் தரிசனம், விவரங்கள் மற்றும் அங்கு எடுத்த படங்கள் எல்லாம் அருமை.
பதிலளிநீக்குநான் சோளிங்கர் நரசிம்மனை தரினம் செய்தது இல்லை. உங்கள் பதிவின் மூலம் தரிசனம் செய்து கொண்டேன்.
ஆச்சர்யம் கோமதி அக்கா.. நீங்கள் தரிசித்தது இல்லையா?
நீக்குகார்த்திகை தீப படங்கள் அழகு. துளசி மாட விளக்குகள் மகன் இந்த தீபாவளிக்கு உறவினர்களுக்கு அனுப்பினான். எல்லோருக்கும் பிடித்தது.
பதிலளிநீக்குபூண்டு , வெங்காயத்தால் பிரிவு வேதனையான விஷயம். இரண்டு சமையல் சமைத்து கொண்டு இருக்கலாம் . சகிப்பி தனமை, விடுக்கொடுக்கும் மனபான்மை குறைந்து வருவது ஒரு காரணம்.
நன்றி அக்கா. ஆமாம். உலகமே பொறுமையில்லாமல் இயங்கி கொண்டிருக்கிறது.
நீக்குஆர்வி எழுதிய புத்தகம் பகிர்வு கதை படித்த நினைவு இருக்கிறது ஆனால் கதை பேர் எனக்கு தெரியவில்லை. ஜீவி சார் சொல்வதை கேட்டுக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குஉங்கள் கவிதை நன்றாக இருக்கிறது. குறை நிறைகளை ஏற்றுக் கொண்டு வாழ்வது ஒரு கலை.
நன்றி கோமதி அக்கா. ஜீவி ஸார் இந்தியா வந்து விட்டார். ஆனால் பதிவு பக்கம் காணோம்!
நீக்கு//1937 அத்திவரதரும் அனுபவமும்... 1987ல் எதிர்பார்ப்பு..//
பதிலளிநீக்குஅத்திவரதர் வரலாறு சொல்லபட்டு இருக்கிறது.
டிசம்பர் இசை சீஸன் வந்து விட்டது. சுந்தராம்பாள் பற்றிய செய்தி படித்தேன்.வேப்பிலைக்கட்டி படித்தேன்.
நிறைய செய்திகள் படிக்க நிறைய விஷ்யங்கள் இருக்கிறது. இன்னும் படித்து விட்டு வருகிறேன்.
நன்றி கோமதி அக்கா.
நீக்குபாரதியார் பிறந்த தினம் ஸ்பெஷல் பகிர்வு அருமை.
பதிலளிநீக்குநாங்கல் எட்டையபுரம் போய் அவர் வீட்டில் வைத்து இருந்த வர் கையெழுந்து பிரதிகளை படம் எடுத்து வைத்து இருந்தேன். அந்த படங்கள் எல்லாம் கிடைக்கவில்லை தேடவேண்டும் கிடைத்தால் பகிர வேண்டும் ஒரு பதிவில்.
இங்கு பகிரப்பட்டிருக்கும் படமும் அங்கு இருந்ததா?
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇப்போதுதான் வீட்டுக்கு வந்தோம்.குளிர் காரணமாக நிரந்தரமாக இருக்கும் ஜலதோஷத்தோடு அலைச்சலும் சேர்ந்து விட்டது.
தங்களின். சோளிங்கர் கோவில் பிரயாணம் நல்லபடியாக நிறைவேறியது குறித்து மிக சந்தோஷம். ஆனாலும் மலை ஏறுவதற்குள் காப்பி குடித்ததற்கே நரசிம்மர் ஏன் புன்னகைத்தாரோ..!.! அந்த இடம் கொஞ்சம் நெருடுகிறது. இருப்பினும் அவரின் புன்னகை நன்மையைத்தான் தந்திருக்கும்.அதுபற்றி அடுத்த வாரம் அறிய ஆவலாக உள்ளேன்.
வெங்காயம், பூண்டிற்காக பிரிந்த தம்பதியரை படிக்க மனது கஸ்டமாக உள்ளது அதை ஒட்டிய நீங்கள் எழுதிய கவிதை நன்றாக உள்ளது. கவிதையில் எழுதியது போல மனிதர்களுக்கு விட்டுக் கொடுத்து வாழ தெரியாது போயிற்றே என்ற வருத்தம் வருகிறது.
தங்கள் வீட்டு கார்த்திகை தீப அலங்காரங்களை ரசித்தேன். காவேரி கதை பகிர்வு நன்றாக உள்ளது. எழுத்தாளர் சுஜாதா பற்றிய நல்ல செய்திகளை படித்தறிந்து கொண்டேன்.பாரதியாரின் பிறந்தநாளை மறவாமல் அவரின் செய்திகளை கதம்பத்தில் சேர்த்தது சிறப்பு. இன்று அத்தனையும் நன்றாக உள்ளது. பொடி எழுத்துக்களில் உள்ளதை நாளை காலையில் படித்து விடுவேன். இப்போது கைப்பேசியில் பெரிதாக்கினாலும், படிக்க சிரமமாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே. .
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பிரயாணம் செய்து வந்தும் கூட களைப்பைப் பொருட்படுத்தாமல் படித்து கருத்து தந்தமைக்கு நன்றி கமலா அக்கா. அடுத்த வாரம் மிச்ச கதையை தொடர்கிறேன்!
பதிலளிநீக்கு