நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்
நெல்லைத் தமிழன்
குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 12
உனக்கு மோட்சம் வேண்டுமென்றால், தகுந்த ஆச்சார்யனை அடை என்று திருக்கச்சி நம்பிகளிடம் தேவப்பெருமாள் சொன்னார் என்பதைச் சென்ற வாரம் பார்த்தோம்.
உடனே திருக்கச்சி நம்பிகள் திருவரங்கம் சென்று அங்கு ஆச்சார்யராக இருந்த திருக்கோஷ்டியூர் நம்பியின் அபிமானத்தைப் பெற முயற்சித்தார். அதற்காக அவர் தன்னை மறைத்துக்கொண்டு, திருக்கோஷ்டியூர் நம்பிகளின் பசு மாட்டை மேய்ப்பவராக ஆனார். ஒரு நாள் மேய்ச்சலுக்காக மாட்டை ஓட்டிப் போனவர் வீடு திரும்பாததைக் கண்டு, திருக்கோஷ்டியூர் நம்பி மழையில் இவரைத் தேடிக்கொண்டு சென்றபோது, மாட்டின் மீது தன்னுடைய ஆடையை அணிவித்து அதன் கீழ் படுத்துக்கொண்டிருந்த திருக்கச்சி நம்பிகளைப் பார்த்தார். காரணம் கேட்க, மழையில் நனைந்தால் மாட்டிற்கு சீதளம் வந்துவிடும், அப்படி மாட்டிற்கு சீதளம் வந்தால், அதன் பாலை அருந்தும் தங்களுக்கு நோவு வந்துவிடக் கூடாதே என்பதற்காக இப்படிச் செய்தேன் என்றாராம். தன் மீது இத்தகைய அபிமானம் வைத்திருந்ததால், தன்னுடையவன் என்று எண்ணி அவரைத் தன் கோஷ்டியில் சேர்த்துக்கொண்டாராம். திருக்கச்சி நம்பியும் தன்னைப் பற்றி ஒளிவு மறைவில்லாமல் அவரிடம் சொன்னார். (இப்படி திருக்கச்சி நம்பி ஆளவந்தாரின் கோஷ்டியில் சேர்ந்தார்). பிறகு திருக்கச்சி நம்பி காஞ்சீபுரத்திற்குத் திரும்பினார். (ஒரு சில இடங்களில் திருக்கச்சி நம்பி, திருவரங்கத்தில் இருந்த பெரிய நம்பியைக் கொண்டு ஆளவந்தாரைத் தொழுது, அவரிடம் எல்லா ரஹஸ்ய அர்த்தங்களையும் கற்றுக்கொண்டார் என்று போட்டிருக்கிறார்கள். திருக்கோஷ்டியூர் நம்பி பெயர் இல்லை)
திருக்கச்சி நம்பி 1009ம் வருடம் பிறந்தவர். இராமானுஜருக்கு 8 வயது மூத்தவர். திருக்கச்சி நம்பி வைசிய குலத்தில் பிறந்தவர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இராமானுஜரின் அபிமான ஆச்சார்யராக இவர் பிறகு விளங்கினார். வைணவத்தில் குலபேதம் கிடையாது என்பதற்கு இவர் ஒரு உதாரணம். குலபேதம் பார்த்தால் அவர் வைணவரல்லர். (குலபேதம் என்பதை தவறாகப் பொருள் கொள்ள வேண்டாம். நாராயணனே நமக்கே பறை தருவான் என்று எண்ணி, நாராயணனையே முழுமுதற் கடவுளாக உடைய, அந்த ஸ்ரீமந் நாராயணனின் ஐந்து நிலைகளான பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை ஆகியவற்றையும் அவனுடைய பெருமைகளை அருளிச்செய்த அடியார்களையும் வணங்குபவர்கள் வைணவர்கள். அவர்களுக்கு வேதம் மற்றும் ஆழ்வார்களின் அருளிச்செயல்களும், ஆச்சார்யர்களின் கிரந்தங்களுமே நூல்கள். அத்தகைய வைணவர்களிடையே குலபேதம் கிடையாது என்பது பொருள். பெரியோர்கள், அத்தகைய வைணவரைக் கண்டதும் தெண்டனிட்டு வணங்கவேண்டும் என்பர். )
பரம்-பரமபதத்தில் இருக்கும் நிலை, வியூகம்-பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள நிலை, விபவம்-இராம கிருஷ்ண போன்ற அவதாரங்கள், அந்தர்யாமி-நமக்குள் உள்ளுறைந்து கிடக்கும் நிலை, அர்ச்சை-அர்ச்சாவதாரங்களாக கோயிலில் எழுந்தருளியிருக்கும் நிலை. வைணவர்களுக்கு அத்தகைய 106 கோயில்கள் திவ்யதேசங்கள்.
தெண்டனிட்டு-ஒரு உலக்கையை சம தளத்தில் வைத்தால் எப்படி பட் என்று கீழே விழுந்துவிடுகிறதோ அதுபோல, ஒரு வைணவன் இன்னொரு வைணவனைக் காணுங்கால், முழு உடலும் தரையில் படும்படி வணங்கும் முறை. இப்போல்லாம் வணங்குவதற்கு, பலருக்கு-என்னையும் சேர்த்து, குனிவது கஷ்டம், தரையில் விழுந்தால் உடை அழுக்காகிவிடுமே என்பது அடுத்த கவலை, அதைவிட, இவரை நாம் வணங்கலாமா? நம்மைவிடப் பெரியவரா? நமக்குத் தெரிந்தது இவருக்குத் தெரியுமா? என்றெல்லாம் பலரையும் அவர்கள் குறைகளை முன்னிறுத்தி ஆராயும் சிறிய மனது உடையவர்களாக இருக்கிறோம். ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இத்தகைய குணங்கள் வைணவப் பெரியோர்களிடம் இருந்ததையும், பிறகு அவர்கள் திருத்திக்கொண்டதையும் வரலாற்றுப் பக்கங்களில் காணலாம். இதுபற்றியும் அவ்வபோது தகுந்த இடங்களில் எழுதுகிறேன்.
திருக்கச்சி நம்பி தொடர்ந்து காஞ்சி தேவப்பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்துவந்தார். ஒரு நாள், பெருமாளுக்கு கண்டருளப் பண்ணும்போது, எப்போதும்போல திரையிட்டனர். தேவப்பெருமாள், அர்ச்சகரை வெளியில் போகச் சொல்லிவிட்டு திருக்கச்சி நம்பியை கண்டருளப் பண்ணச் சொன்னார். திரையை விலக்கியபின், அர்ச்சகர், பிரசாதம் எதுவும் மீதமில்லை என்பதைப் பார்த்து, இவற்றை நம்பி சாப்பிட்டிருப்பார் என்று ஐயப்பட்டு குற்றம் சாட்டினார். திருக்கச்சி நம்பியின் பெருமையை மற்றவர்கள் அனைவரும் அறியவேண்டும் என்று நினைத்த பேருளாளன், வடநாட்டைச் சேர்ந்த ஒருவரின் கனவில் தோன்றி, தனக்கு ஆயிரம் தடாக்கள் சர்க்கரைப் பொங்கல் தளிகை சமர்ப்பிக்கும்படி நியமித்தான். தளிகை சமர்ப்பிக்கப்பட்டதும், முன்பு போலவே திரையிடப்பட்டபிறகு அர்ச்சகரை வெளியில் போகச் சொல்லிவிட்டு திருக்கச்சி நம்பியை கண்டருளப்பண்ணச் செய்தான். திரையை விலக்கியதும் ஆயிரம் தடாக்களும் காலியாக இருந்த தைக் கண்ட அர்ச்சகர்களும் மற்றோரும் திருக்கச்சி நம்பியின் பெருமையை உணர்ந்து மன்னிப்புக் கோரினர். தேவப்பெருமாள் திரும்பவும் திரையிடச் சொல்லி ஆயிரம் தடாக்களிலும் சர்க்கரைப் பொங்கல் நிறைந்திருக்கும்படிச் செய்து திருக்கச்சி நம்பியின் பக்தியின் பெருமையை அனைவரையும் அறியும்படிச் செய்தான்.
தேவப்பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்துகொண்டிருந்த திருக்கச்சி நம்பி, ஒரு நாள் இரவு நெடுநேரம் ஆகிவிட்டதால், கோயிலை விட்டு வெளியில் வந்தபோது மழை பெய்துகொண்டிருந்ததைக் கண்டார். தன்னுடைய உதவியாளராக இருந்த வரதனை, குடையையும் செருப்பையும் எடுத்துவருவதற்காகக் குரல் கொடுக்கவும், வரதன் அங்கு இல்லாத தால் தேவப்பெருமாளே வரதனைப் போல வந்து அவருக்கு செருப்பை எடுத்துக்கொடுத்து, குடையையும் பிடித்து வீடு வரை கொண்டு விட்டான். பிறகு சிஷ்யன் வரதன் வந்து, தான் உறங்கிவிட்ட தால் இரவு வர முடியவில்லை, தன்னை மன்னிக்கச் சொல்லி வேண்டவும்தான் நடந்தது திருக்கச்சி நம்பிகளுக்குப் புரிந்தது. பெருமாளிடம் அபசாரப்பட்டுவிட்டோமே என்று அவருக்கு பெரும் வருத்தம் வந்துவிட்டது. பிறகு நடந்ததை அடுத்த வாரம் காணலாம்.
இப்போது இன்றைக்கான பாசுரம், தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய திருமாலை பிரபந்தத்தின் 42வது பாசுரம். திருமாலின் அடியார்கள், எந்தக் குலத்தில் சாதியில் பிறந்திருந்தாலும், அவர்களைப் போற்றி வணங்கவேண்டும் என்று சொல்லும் பாசுரம்.
பழுதிலா ஒழுகல் ஆற்றுப் * பல சதுப்பேதிமார்கள்,*
இழிகுலத்தவர்களேலும் * எம் அடியார்களாகில்,*
தொழுமினீர் கொடுமின் கொள்மின்!' * என்று நின்னோடு ஒக்க,*
வழிபட அருளினாய் போல் * மதிள் திருவரங்கத் தானே!
நீண்ட வேத அத்யயனப் பரம்பரையில், குற்றமில்லாதபடி வந்த, நான்கு வேதங்களையும் ஓதும், ‘பிராமணீயத்தைக்’ கடைப்பிடிப்பவர்களே, இத்தகைய வாய்ப்பு இல்லாமல் பிறப்பால் தாழ்ந்தவர்கள் ஆனாலும், அரங்கனின் அடியார்கள் என்றால், நீங்கள் அவர்களை சேவியுங்கள் (காலில் விழுங்கள்). எம்பெருமான் உவந்து ஏற்கும் அத்தகைய அரங்கனின் அடியார்கள் உங்களிடம் ஞானம் பெற வந்தால் அவர்களுக்கு அதைக் கொடுங்கள். எம்பெருமான் பற்றிய விஷயங்களை அவர்கள் சொல்ல வந்தால், அதனைக் கேட்டுப் பயன் பெறுங்கள். இந்த உபதேசம் அந்த அரங்கனே சொன்னது என்று ஆழ்வார் கூறுகிறார்.
சதுப்பேதிமார்கள்-நான்கு வேதங்களையும் ஓதுபவர்கள். நின்னொடு ஒக்க-உன் அடியார்கள் உனக்குச் சமம், பக்திதான் முக்கியம் பிறந்த குலம் கிடையாது. கொடுமின், கொள்மின் – எம்பெருமான் பற்றிய விஷயங்களை, ஞானத்தை
திருக்கச்சி நம்பிகளின் அவதாரஸ்தலம் (பூவிருந்தவல்லி) - முன்பு ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருந்தது. இரண்டாவது படம் திருக்கச்சி நம்பிகள், ஆலவட்டத்துடன்
பூவிருந்தவல்லியில் திருக்கச்சி நம்பிகளின் அவதாரஸ்தலத்தை மீட்டெடுத்து விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
தொடர்வோம்...
===============================================================================
நான் படிச்ச கதை - JKC
உடுக்கை விரல்
கதையாசிரியர்: என்.ஸ்ரீராம்
பிறப்பு 1972. சொந்த ஊர் தாராபுரம். தற்போது வசிப்பது சென்னை.
மேலும் விவரங்கள் அறிய
முன்னுரை
கல்லூரிக்காலத்திலேயே எழுத்தாளராக வேண்டும் என்ற முனைப்புடன் தீவீர
முயற்சியில் கதைப்போட்டியில் முதல் பரிசு பெற்று மற்றவர்களின் வியப்பையும்
பாராட்டுகளையும் பெற்றவர். அவரைப்பற்றி அவர்
இந்து தமிழ் நாளிதழில் சொல்லியிருப்பதை இச்சுட்டியில் வாசிக்கலாம்
கதை எழுதுவது என்று தீர்மானித்து விட்டால் கதை சார்புள்ள பல விவரங்களையும் ஆராய்ந்து அவற்றை கதையில் புகுத்துகிறார். நாட்டார் இயல், கலை, கூத்து, இவற்றைப்பற்றி நன்கு ஆராய்ந்திருக்கிறார். இவருடைய மூன்று கதைகளை வாசித்தேன். ‘கல் சிலம்பம்’ பழந்தமிழரின் தற்காப்பு மற்றும் வர்மம்/மர்மம் கலையை சார்ந்தது. ‘தேர் தச்சர்’ சிற்பம் மற்றும் தேர் நிர்மாணம் என்ற ஆர்கிடெக்ச்சர் கலையை விவரிக்கிறது. ‘உடுக்கை விரல்’ என்ற இக்கதை உடுக்கை அடித்து பாடும் நாட்டார் பாடலையும் கூத்து என்ற ஆட்டத்தையும் இணைத்து தருகிறது. இவ்வாறு மூன்று வேறுபட்ட கருப்பொருட்களை ஆராய்ந்து அவற்றை உட்படுத்தி கதைகளை எழுதியிருக்கிறார்.
உடுக்கை விரல் என்ற இக்கதை அண்ணமார்சாமி கதை என்கிற பொன்னர் சங்கர்
சகோதரர்களின் வரலாற்றுக் கதைப் பாடல். இதை கூத்து கட்டி ஆடிப் பாடினால் மழை
பெய்யும் என்பது கூத்துக் கலைஞர்களின் நம்பிக்கை, முயற்சி. முயற்சி வீண் போகவில்லை.
கதை நீ……ளம் அதிகம். சுருக்கலாம், சுருக்கினால் ஆசிரியர் கதைக்கு செய்துள்ள
அலங்காரங்கள் யாவும் மறைந்துவிடும், விவரங்கள் அடிபடும். ஆகவே சுருக்கவில்லை.
இரன்டு பகுதிகளாக வெளியிடலாம் என்ற எண்ணம். பொறுமையுடன் படிப்பவர்களுக்கு மிக்க
நன்றி. கதையைப்பற்றி கூற நிறைய உள்ளது. அவற்றை என் கருத்துக்களாக கதை வெளியாகும்
போது தருகிறேன்.
கதை விகடனில் வெளி வந்த ஒன்று.
கதையின்
சுட்டி
இங்கு ============>உடுக்கை-விரல்
உடுக்கை விரல் ½
வெகுதான்ய வருடத்தின் கொடூரப் பஞ்சம். கிணறுகள், நெல்
காயப்போடுவதுபோல வறண்டுவிட்டன. குடியானவர்கள் ஆடு-மாடுகளை விற்றுக்கொண்டிருந்தனர்.
விதைத் தானியங்கள் அடுப்படிக்குப் போயின. கோடைக் காற்றுக்கு, தென்னைகளும் பனைகளும்
முறிந்து விழுந்துகொண்டிருந்தன.
கார்த்திகை மாதம் பிறந்தும், பூமியில் ஒரு பொட்டுத் துளி
இறங்கவில்லை. இரவில் ஆகாயத்தில் விண்மீன்கள் மினுங்கிக்கிடந்தன. பகலிலும்
முகில்கள் எடுப்பதே இல்லை.
முன்னிரவு. பனத்தம்பட்டி போய்விட்டு வந்த அய்யா, திண்ணையில்
ஆயாசமாக அமர்ந்தார். தோள் துண்டில் முடிந்திருந்த நிலயாவரைக் காய்களை முறத்தில்
கொட்டினார். நான் தண்ணீர் செம்பை நீட்டினேன். நிலவடியில் நின்றிருந்த அண்ணன்
கேட்டான்…
”பெரிய எசமாங்க என்ன சொன்னாங்க?”
”சனங்க பஞ்சத்துல இருக்கும்போது கூத்து எதுக்கு?’னு கேட்கிறாரு.”
”உடுக்கப் பாட்டு பாடினா மழை எறங்குமுன்னு சொன்னீங்களா?”
”அவருக்கு அதுல நம்பிக்கை இல்லை.”
”அப்ப, நிலயாவரைக் காயைத் தின்னுட்டு நாம சாவ வேண்டியதுதானா?”
அய்யா மேற்கொண்டு பேசவில்லை. நான்காம் சாமத்தில் என்னையும்
அண்ணனையும் எழுப்பினார். உடுக்கைகளையும் கூத்து உடைகளையும் மட்டும்
எடுத்துக்கொண்டு வீட்டைப் பூட்டினார். தென்கிழக்குத் திசை நோக்கிய பயணம்.
விடிந்தபோது பனங்காடைகள் கத்தின. மழையற்ற வெளி. கொக்குக் கூட்டங்கள் தரை இறங்காமல்
வேறு சீமை பார்த்துப் போய்க்கொண்டிருந்தன. பகல் முழுவதும் கானல் அனலோடிய வெயில்.
வழி நெடுக எந்த ஊரிலும் உடுக்கைக் கூத்துக்கட்ட சம்மதிக்கவில்லை.
‘கூத்துக்கட்டினா மழை எறங்கும்’ என அய்யாவும் அண்ணனும் கெஞ்சியபோது சனங்கள்
சிரித்தார்கள். பொழுது அந்தி சாய்ந்தது. நாங்கள் சண்முக நதியை அடைந்தோம். மணலில்
தோண்டியிருந்த ஊற்றுக்குழிகளில்கூட நீர் சுரக்கவில்லை. கடுமையான தாகம்; பசி.
நாங்கள் சோர்ந்துபோய் மணல்திட்டில் அமர்ந்தோம்.
இருள் சூழ்ந்ததும் பழநிமலை இருக்கும் திசையைக் காட்டி அய்யா
சொன்னார்…
”நான் பாலகனா இருக்கும்போது, ஒரு பஞ்சக் காலத்துல எங்க அய்யா என்னை
இங்கதான் கூட்டிவந்தாரு. அந்த ஆண்டவன் எங்களைக் கைவிடலை. அதுபோல இப்ப நான்
உங்களைக் கூட்டிவந்திருக்கேன்.”
அய்யா, வெண்கல உடுக்கையை எடுத்து வெறி மூண்டவர்போல இசைக்க
ஆரம்பித்தார்.
‘பம்… பம்… பம்…’
சிறிது நேரத்துக்குப் பின் உடுக்கடியை நிறுத்திவிட்டு, திடீரென
எழுந்தார்.
”மழை பெய்யவேண்டி, இப்ப நான் அண்ணமார்சாமி உடுக்கடிக்
கூத்துக்கட்டப்போறேன். மழை எறங்கினா, ஊர் திரும்புறோம். இல்லையின்னா பசி
மயக்கத்துல செத்து இப்படியே மயானத்துக்குப் போறோம்.”
நானும் அண்ணனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.
”இந்த மணல்ல நமக்கு முன்னால ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து கூத்து
பார்க்கிறதா பாவிச்சு, நான் இப்ப கதைத் தெய்வங்களை அழைக்கிறேன்.”
அய்யா, முதலில் பெண் தெய்வங்களை அழைத்தார்.
”திருக்கோயில்விட்டு மங்கே ஆடிவர வேணுமம்மா / தவசுமரம் சோலையிட்டு
/ தானிறங்கி வாருமம்மா… ”
அடுத்து ஆண் தெய்வங்களை அழைத்தார்.
”கண்ணு சிவக்கலையோ… கடும்கோபம் ஆகலையோ / மீசை துடிக்கலையோ… முன்
வீரம் ஆகலையோ/தூக்கி எறியலையோ… துள்ளிக் குதிக்கலையோ / இன்னும் என்ன தாமசமோ… ஆடிவர
வேணுமய்யா… ”
அய்யா உடுக்கடித்து, பாடி, வட்டமாக ஆடினார். அண்ணன் உடுக்கடித்து,
பின்பாட்டு பாடினான். அண்ணமார்சாமி கதை தொடங்கிவிட்டது. மணலில் குத்துக்காலிட்டு
உட்கார்ந்திருந்த எனக்கு, இது வீண்வேலை என்றே தோன்றியது. என் கனவு எல்லாம்
பொள்ளாச்சி சென்று மகாலிங்கம் பஸ் கம்பெனியில் கரிப்புகை பஸ் ஓட்ட வேண்டும்.
அதேபோல் பிரிட்டிஷ் துரைக்கு ஜீப் ஓட்ட வேண்டும் என்பதுதான். ஆனால், அய்யாவோ
உடுக்கடிக் கூத்துக்கு என்னை வாரிசாக உருவாக்க எவ்வளவோ பிரியப்பட்டார். நான்
உதாசீனப்படுத்திவிட்டேன்.
குன்றுடையானைத் திருமணம் செய்துகொண்ட தாமரை, குழந்தை வரம் வேண்டி
கயிலாயம் செல்லும் இடம். அய்யா, புலம்பலும் அழுகையுமாகக் கதை
கூறிக்கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் நீர்த்துறை பக்கம் இருந்து இருவர் வந்து
நின்றனர். அவர்கள் தலையில் பெரிய மண்மொடா இருந்தது.
அய்யாவும் அண்ணனும் கூத்திலேயே குறியாக இருந்தார்கள். நான் எழுந்து
இருளில் அவர்களை நோக்கி நடந்தேன். காய்ந்த கோரைகள் காலில் பட்டு நொறுங்கும் ஒலி
கேட்டது. நான் நெருங்க நெருங்க, இருவரில் ஒருவன் கத்தினான்.
”இலுப்பமரத்துப் பேயேதான்டா இது… ஓடு.”
மண்மொடாக்கள் நிலத்தில் விழுந்து உடைந்தன. இருவரும் திரும்பி, மேடு
ஏறி தலைதெறிக்க ஓடிப்போனார்கள். எனக்குச் சிரிப்பு வந்தது. திரும்பி வந்து பழையபடி
உட்கார்ந்துகொண்டேன். கூத்தில் பொன்னர், சங்கர், அருக்காணி, தங்காயி எல்லாம்
பிறந்து வளர்ந்துவிட்டனர்.
அந்தச் சமயத்தில், நீர்த்துறை மேட்டில் இருந்து தீவட்டிகள் கீழ்
இறங்கி வந்துகொண்டிருந்தன. பயந்து ஓடிய இருவரும் ஊருக்குள் சென்று, ஆட்களைத்
திரட்டி வருகிறார்கள் என்பது எனக்குப் புரிந்துபோயிற்று.
தீவட்டி ஆட்கள் மணற்பரப்புக்கு வந்து, எங்களைச் சூழ்ந்து
நின்றார்கள். அய்யா, கூத்தில் வீரமலைக் காட்டில் இருந்து கிளி பிடித்து வந்த பின்,
தலையூர் காளி வளநாட்டைக் கொள்ளையிட வரும் பகுதிக்கு மாறியிருந்தார்;
உடுக்கடியிலும் பாடுவதிலும் மனம் ஒன்றியிருந்தார். சுற்றி நிற்பவர்களைப்
பார்த்தபடியே மிரட்சியோடு பின்பாட்டு பாடிக்கொண்டிருந்தான் அண்ணன்.
வல்லயம், குத்தீட்டி எனப் பிடித்திருந்த ஆட்களை விலக்கி, பூசாரி
முன்னே வந்தார். பயந்து ஓடிய இருவரும் ஊர்த் தலைவரும் அவர் பின்னே வந்து நின்றனர்.
பூசாரி எங்களை உற்றுப் பார்த்துவிட்டுப் பேசினார்…
”சாமத்துல, ஆத்துக்கால்ல உடுக்கடிக் கூத்துக் கட்டுச்சுன்னா,
கண்டிப்பா அது இலுப்பமரப் பேயாத்தான் இருக்கும். ரொம்ப காலத்துக்கு முன்னால நம்ம
ஊர்ப்பக்கம் எவனாவது உடுக்கடிக் கூத்துக்காரக் குடும்பம் அகாலத்துல
செத்திருக்கும். இன்னிக்கு வெறிகொண்டு எந்திரிச்சு ஆடுது.”
அச்சம் எழுப்பும் சூழ்நிலை மூண்டுவிட்டதை உணராமல், அய்யா கூத்தே
கதியாக இருந்தார். பூசாரி தொடர்ந்து பேசினார்.
”அப்படியே ஆராவது ரெண்டு பேர் ஊருக்குள்ள ஓடி, எல்லா வூட்லேயும்
நெலவுல வேப்பங்கொலயைச் சொருகிவெச்சு, பொண்டு புள்ளைகளை எல்லாம் ஜாக்கிரதையா
இருக்கச் சொல்லுங்க. ஆரும் நடையை நீக்கி வெளியில வந்துர வேணாம். இந்தப் பேயுக இங்க
இருக்கிற மாதிரி இருக்கும். சடார்னு பாஞ்சு ஊருக்குள்ள போயி காவு வாங்கிரும்.”
ஆட்கள் வல்லயத்தையும் குத்தீட்டியையும் நீட்டித் தயாரானார்கள்.
நான் என்ன செய்வது எனத் தெரியாமல் முழித்தேன். அந்த நேரம், கூத்தைத் திடீரென
நிறுத்தினார் அய்யா.
”சாமீ… நாங்க உடுக்கடிக் கூத்துக்காரங்க. மேக்கே பூளவாடி பக்கம்
இருந்து வர்றோமுங்க. மழை பெய்யணும், மக்கப் பஞ்சம் தீரணுமுன்னு என்னோட தெய்வத்து
மேல நம்பிக்கை வெச்சு இன்னிக்கு நாங்க கூத்துக்கட்டறோமுங்க. எங்க கூத்து பொய்க்காம
மழை எறங்குச்சுன்னா, நாங்க மனுஷங்கதான்னு எங்களை வுட்டுருங்க. மழை எறங்கலீன்னா இலுப்பப்
பேயுனு நெனைச்சு, இந்த ஆத்தங்கரையிலேயே தீவட்டியால கொளுத்திக் கொன்னுருங்க.”
உடனே, உடுக்கை இசைத்துப் பாட ஆரம்பித்தார் அய்யா. கூத்தில்,
பொன்னரும் சங்கரும் தலையூர் காளியுடன் சண்டையிட முடிவுசெய்தனர். தீவட்டி ஆட்கள்
ஆயுதங்களை மணலில் ஊன்றிவிட்டு, அதே இடத்தில் உட்கார்ந்து கூத்தைக் கவனித்தனர்.
நேரம் செல்லச் செல்ல அய்யாவின் உடுக்கடியும் பாடலின் தொனியும் மூர்க்கமாக மாறின.
அப்போது உச்சி வானில் இருந்து பளீரென ஒரு மின்னல். நிலம் அதிர்வதுபோல ஓர் இடி.
ஜலமூலையில் இருந்து தனித்த கருமுகில் கூட்டம் மேலேறி வந்துகொண்டிருந்தது.
நானும் தீவட்டி ஆட்களும், கூத்தையும் வானத்தையும் மாறி மாறிப்
பார்த்துக்கொண்டே இருந்தோம். அடுக்கடுக்காகக் கிளர்ந்து வந்த கருமுகில் கூட்டங்கள்
விரைந்து உச்சி வானை மூடின. மின்னலும் இடியும் நிற்கவில்லை. கூத்தில் பொன்னரும்
சங்கரும் போர்க்களம் புறப்படும் நேரம்… சடசடவென மழை இறங்கிற்று. கல்மாரிபோல
கனமானத் துளி.
தீவட்டிகள் அணைந்து விட்டன. அய்யா, கூத்தை நிறுத்தவில்லை.
பூசாரியும் ஊர்த் தலைவரும் தீவட்டி ஆட்களோடு வந்து அய்யாவின் காலில்
நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினர். அதன் பின் எங்களை அவர்களின் கல்துறை கிராமத்துக்கே
கூட்டிப் போனார்கள். வயிறார உணவு கொடுத்து ஊர் சாவடியில் தங்கவைத்தனர்.
மறுநாள் மழை ஓய்ந்து, ஏறுவெயில் வந்துவிட்டது. தலைவாசலில் இரட்டைச்
சாரட்டுக் குதிரைவண்டி ஒன்று வந்து நிற்பதைக் கண்டோம். அதன் பின்னே நூற்றுக்கும்
மேற்பட்ட காளைமாட்டு சவாரி வண்டிகள் வந்து நிற்கத் தொடங்கின.
தொடரும்...
கிராமத்துக் கூத்துக் கதை, நம்பிக்கை, நல்ல எழுத்து.
பதிலளிநீக்குஎழுத்தாளரின் எழுத்தில் கதையை வாசிப்பது தான் வாசித்த அந்த உணர்வை ஏற்படுத்தும்.
பதிலளிநீக்குஅந்த நோக்கத்தில் சுட்டியைத் தட்டினேன்..
ஏமாற்றமே. கதை சிக்கவில்லை.
அருள் கூர்ந்து ஆவன செய்யவும்.
கதையின் சுட்டி
நீக்குஉடுக்கை-விரல்
https://www.sirukathaigal.com/%e0%ae%89%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b2%e0%af%8d/
நீக்குவணக்கம் ஜீவி ஸார்... சுட்டி வேலை செய்கிறதே.. நீங்கள் எங்கு சூட்டினீர்கள் என்று தெரியவில்லை கதையின் சுட்டி என்கிற கருப்பு எழுத்துகளின் கீழே உள்ள இங்கு என்பதைத்தாண்டி அம்புக்குறிகளைத் தாண்டி உடுக்கை -விரல் என்று இருப்பதை க்ளிக்குங்கள். அதன் கீழே சிவப்பு நிறத்தில் கதையின் கீழே உள்ள தலைப்பு 1/2 என்பதில் க்ளிக்க்க வேண்டாம்.
நீக்குஜெஸி ஸார்!
நீக்குஸ்ரீராம்!
கிடைக்கப் பெற்றேன். தங்கள் வழிகாட்டலுக்கு நன்றி.
வாசித்து விட்டு பிறகு வருகிறேன்.
காஞ்சிபுரத்த்தில் திருக்கச்சி நம்பித் தெரு என்ற பெயரில் நீண்ட தெருவொன்று உண்டு
பதிலளிநீக்குஅது இப்போது டி.கே. நம்பித்தெருவாகியிருக்கிறது.
இப்படி பல திருத்தலங்களில் பல புகழ் வாய்ந்த பெயர்கள்.
ஆமாம் ஜீவி சார். போகப் போக பெயர்கள் சுருங்கி என்ன பெயர் என்பதே தெரியாது.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் சண்முகா..
நீக்குஅன்பின் நெல்லை அவரகளது
பதிலளிநீக்குபணி சிறக்கட்டும்...
ஹரி ஓம்..
வாங்க துரை செல்வராஜு சார். மிக்க நன்றி.
நீக்குவித்தியாசமான, சிறப்பான கதை. அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.
பதிலளிநீக்குதிருக்கச்சி நம்பிகள் குருவைத் தேடி, அவருக்கு தொண்டு செய்த விதம் ஆச்சர்யம். ஆச்சார்ய அனுகிரஹத்திற்காக எப்படியெல்லாம் சின்சியராக உழைத்திருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது பிரமிப்பாக இருக்கிறது.
பதிலளிநீக்குவாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். இதையெல்லாம் படிக்கும்போது இப்படியும் இருந்திருக்கிறார்களா என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு பல வரலாற்று நிகழ்வுகள் இருக்கின்றன. பகிர்கிறேன்.
நீக்குவைணவத்தில் குலபேதம் கிடையாது.
பதிலளிநீக்குகுலபேதம் பார்த்தால் அவர் வைணவரல்லர்.
ஹி...ஹி...
வாங்க ஜீவி சார். உங்க ஹிஹி க்கு அர்த்தம் தெரிந்தால் பதில் சொல்ல ஏதுவாக இருக்கும். தவறான புரிதலில் பதில் சொல்லக்கூடாது இல்லையா?
நீக்குஜீ வி அண்ணா, அந்த வரிக்கு அடுத்தாப்லயே, நெல்லை ப்ராக்கெட்டில் விளக்கம் அழகாகக் கொடுத்திருக்கிறாரே. அதை வாசித்தாலே புரிந்துவிடுமே.
நீக்குகீதா
நெல்லை சரியாகவே எழுதி இருக்கார். புரிகிறது. என்றாலும் தற்காலத்தில் இது தவறாகவே கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை என்னோட திருவாலி----- திருநகரி சென்ற அனுபவங்கள் உணர்த்தும். மேலும் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியிலும் இந்த வேறுபாடுகள் கடைப்பிடிக்கப்படுவதைக் கண்கூடாகக் காணலாம். என்றாலும் என்னைப் பொறுத்தவரை "அரியும் சிவனும் ஒண்ணு: அறியாதோர் வாயில் மண்ணு."
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குகீதாக்கா உங்க கருத்துக்கு டிட்டோ!
நீக்குகீதா
பெரிதாக ஒன்றுமில்லை நெல்லை. உங்கள் குழந்தை மனம் எதை வாசித்து எப்படி நீங்கள் புரிந்து கொண்டிருக்கீறீர்களோ அதை அப்படியே சொல்லி விடுகிறீர்கள். அதான், இவர் தான் வைணவர் என்பதற்கு ஏதோ இலக்கணம் வகுத்தது போல 'இவர் வைணவரல்லர்'' என்று டிக்ளேர் பண்ணுகிற மாதிரி நீங்கள் எழுதியிருப்பதை வாசித்ததும் இயல்பாகவே அந்த ஹிஹி வெளிப்பட்டு விட்டது. அவ்வளவு தான்!
நீக்குதி. கீதா சகோ!
நீக்குவாசிக்கும் எதுவும் அப்படி அப்படியே மனதில் படியாமல் மாற்றி யோசிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும். எதையும் வெவ்வேறு கோணங்களில் அலசுவது கதைகள், கட்டுரைகள் எழுதுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். கல்கியின் ஆழ்வார்க்கடியானும், சேந்தன் அமுதனும் சாகாவரம் பெற்றது, இப்படித்தான்!
//இவர் தான் வைணவர் என்பதற்கு ஏதோ இலக்கணம் வகுத்தது போல// குருபரம்பரையில் எழுதியிருப்பதைத்தான் நான் இங்கு கொடுத்திருக்கிறேன் ஜீவி சார். ஒரு ஆச்சார்யரிடம், எனக்கு வைணவத்துவம் சித்தித்துவிட்டது என்பதை எப்படிப் புரிந்துகொள்வது என்று கேட்டதற்கு (அதாவது நான் வைணவன் என்பதை), பிறருக்கு ஒரு கெடுதல் நேர்ந்தால் அதைக்கண்டு மனம் வருந்துபவனே வைணவன். அவன் நல்லவனல்ல, அதனால் அவனுக்கு இந்தத் துன்பம் வேண்டியதுதான் என்று நினைத்தால் வைணவத்துவம் இன்னும் வரவில்லை என்று அர்த்தம்.
நீக்குஇவையெல்லாம் ஒருவன் எப்படி வாழவேண்டும் என்பதற்கான இலக்கணங்கள். அதை எல்லோரும் கடைபிடிக்கிறார்களா என்று பார்த்தால் அது அரிது.
பிராமணன் என்று சொல்லிக்கொண்டு, பிறர் துன்பப்படுவதைக் கண்டு மனம் வருத்தமடையவில்லை என்றால், அப்புறம் வெறும்ன 'பிராமணன்' லேபிள் மாத்திரம்தான் இருக்கிறது என்று அர்த்தம்.
//என்னோட திருவாலி----- திருநகரி சென்ற அனுபவங்கள் உணர்த்தும். மேலும் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியிலும் இந்த வேறுபாடுகள்// வாங்க கீதா சாம்பசிவம் மேடம். நீங்க ஏதோ ஒரு உதாரணம் கொடுத்திருக்கீங்க. என்னுடைய அனுபவத்தை எழுதுகிறேன். நான் திருச்சேறை கோயிலுக்குச் சென்றிருந்தேன். அப்போது காலை 11 மணி இருக்கலாம். உள்ளே சாத்துமுறை (அதாவது திருப்பல்லாண்டு போன்றவை சேவிப்பது) ஆரம்பித்தது. இருந்தது ஒருவரும், அவருடைய வயதான தகப்பனாரும். உடனே நானும் சேவிக்க ஆரம்பித்தபோது, உடனே கூடாது என்று சொல்லிவிட்டார். பிறகு சாத்துமுறை முடிந்ததும், அவரிடம் என்ன காரணம் என்று கேட்டேன். இது தென்கலையார் மாத்திரம் சேவிக்கும் கோயில். நீங்க வடகலை. அதனால பிரபந்தம் சேவிக்கக்கூடாது என்று சொன்னார். நான் சொன்னேன், இருக்கறது 100 ஐயங்கார், அதுல கோயிலுக்கு வருவது 10 பேர். அதிலயும் இப்படி தென்கலை, வடகலை பார்த்தால் சரியா என்று கேட்டேன். நீங்கள் சொல்வது சரி, ஆனால் பக்கத்தில் இருக்கும் ஒப்பிலியப்பன் கோயிலில் நாங்கள் சேவிக்க முடியாது. அங்கு வடகலையார் மாத்திரமே சேவிக்க முடியும் என்று சொன்னார். அவருடைய தகப்பனார், வயதானவர், மனதில் 'தவறு' என்று தோன்றியிருக்கும். என்னிடம் வந்து தன்னுடைய பிரசாதத்தையும் தந்தார்.
நீக்குபெருமாள், சிவன்..இந்தப் பிரச்சனையை விரைவில் எழுதறேன். இதை பின்னூட்ட வடிவில் எழுதினால் பெரிதாகும். என்ன சொல்லியிருக்கிறது, தாத்பர்யம் என்ன? என்பதைப் புரிந்துகொள்ளாமல், கண்ணைமூடிக்கொண்டு எதனையோ கடைபிடித்து தன்னைப் பற்றி உயர்வாக எண்ணிக்கொள்ளும் சிறுமைத்தனம் பலரிடமிருக்கிறது என்று எனக்குத் தோன்றும். என்னைப் பொறுத்தவரையில் சமயங்கள் சொல்வது 'பலமரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்' என்பது போல, ஒரே நோக்கில் இல்லையென்றால் ஆன்மீகத்தில் முன்னேற முடியாது என்பதைத்தான். இதுதான் என் புரிதல்.
நெல்லை, இன்றைய பகுதி நல்லாருக்கு. திருக்கச்சி நம்பி அவர், இராமானுஜர் அவரின் வரலாற்றில் மிக மிக முக்கியமாச்சே. திருக்கோஷ்டியூர் நம்பியிடம் மந்திரம் கற்க இராமானுஜர் சென்று சென்று வந்ததும்....ஏன் அப்படி அனுப்பப்பட்டார் என்பதற்கான அர்த்தமும் அடுத்து வரும் என்று நினைக்கிறேன். 'நான்' என்பதை விட்டால்தான் சிஷ்யர்..என்பதைச் சொல்லும் பகுதி....அதனால்தானே "அடியேன்" என்று சொல்வாங்க பேசும் போது.
பதிலளிநீக்குதிருக்கச்சி நம்பி மற்றும் வரதராஜப் பெருமாள் அந்த "பாண்ட்" அசாத்தியமான ஒன்று.
பூவிருந்தவல்லி கோவிலுக்குப் போன நினைவு இருக்கு. எப்பவோ....
கீதா
//'நான்' என்பதை விட்டால்தான் சிஷ்யர்..// இதுதான் உண்மையான காரணமா என்பதைப் பார்க்கப்போகிறோம் கீதா ரங்கன்.
நீக்குநான் விரைவில் பூவிருந்தவல்லி கோயிலுக்குப் போகணும். இறைவன் நேரடியாகப் பேசுவது பல இடங்களில் நடந்திருக்கிறது. நமக்கு நம்பிக்கையும் விசுவாசமும் இருக்கணும் இல்லையா?
ஜெ கே அண்ணா, கதை மிக நல்ல வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுக்கு இதுவரை வாசிக்காத ஆசிரியர் பற்றியும் கொடுத்திருக்கீங்க.
பதிலளிநீக்குகதை நல்லாருக்கு. எவ்வளவு தூரம் இக்கதைக்கான தகவல்களுக்காக அலைந்திருப்பார் ஆசிரியர் என்றும் தெரிகிறது. கிராமத்து நம்பிக்கைகளைச் சார்ந்த கதைகளெ ழுதும் போது இது மிகவும் முக்கியமாச்சே.
நம்ம பரிவை சே குமார், கூத்துக் கலை கலைஞன் பற்றி ஒரு நாவலே எழுதியிருக்கிறார்.
கீதா
//நம்ம பரிவை சே குமார், கூத்துக் கலை கலைஞன் பற்றி ஒரு நாவலே எழுதியிருக்கிறார்.//
நீக்குஅப்படியா!!
Jayakumar
மிக அருமை. என்றாலும் முடிவை ஏற்க முடியவில்லை. ஓர் உன்னதமான கலையும் கலைஞனும் இப்படியா தோற்றுப் போக வேண்டும்? வாரிசு யாரையும் உருவாக்கமலேயே இந்தக் கலை அழிந்து விட்டதோ? மனதைக் கனக்கச் செய்த முடிவு. அனுபவித்துப் படித்தேன். எழுத்து நடை அபாரம். கேள்விப்படாத ஆசிரியர் திரு என்.ஸ்ரீராம் அவர்கள். கதையின் மையக்கருவைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார் என்பதோடு அண்ணனுக்கு தெய்வம் இறங்காமல் போனதும் ஆழ்ந்த நம்பிக்கையோடு கதாநாயகன் களம் இறங்கி படுகளம் வீழ்ந்தவர்களைப் பிழைக்க வைத்தது நிஜமாகவே ஓர் அற்புதம்.
பதிலளிநீக்குஹையோ ஹையோ இப்படியா அடுத்தவாரம் போட வேண்டிய கமெண்ட்ஸ் களை இப்போதே போட்டு சஸ்பென்ஸை உடைப்பது.
நீக்குமன்னிச்சுக்கோங்க ஜேகேசி சார். நான் பதிவை முழுசும் படிக்காமல் சுட்டியை மட்டும் க்ளிக் செய்து படிக்க ஆரம்பிச்சேன். அதான் உடனே கருத்தை வெளியிட்டேன். :( ___/\____
நீக்குபூவிருந்தவல்லிக்கு அடிக்கடி சென்றிருந்தாலும் இந்தக் கோயிலுக்குச் சென்றதில்லை. அருகே ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜரின் கோயிலுக்குப் பல முறை சென்றிருக்கோம். சொல்லப் போனால் அம்பத்தூரில் இருந்தவரை நினைச்சால் காஞ்சிபுரம் சென்று எல்லாக் கோயில்களுக்கும் போயிட்டு வருவோம்.
பதிலளிநீக்குபாசுரம் பாடல் பகிர்வும் விளக்கமும் நன்று. நெல்லை தொடரக் காத்திருக்கேன்.
உங்களில் கருத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சி. காஞ்சி கோயில்களுக்குப் பலமுறை செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்கிறது. ஒரு சில மாதங்கள் முன்பும் சென்றுவந்தோம். அப்போது திருப்புட்குழி கோயிலைத் திரும்பவும் சேவித்தோம். கூரத்திற்கும் சென்றுவந்தோம் முதல் முறையாக.
நீக்குநாலாயிர திவ்யபிரபந்தத்தில் திருக்கச்சி நம்பிகளின் குருவைத் தேடிச் சென்ற பகுதிகள் அறிந்தோம். நன்றாக தந்துள்ளீர்கள் படிக்க நன்றாக உள்ளது.
பதிலளிநீக்குஇன்றைய கதை நன்றாக உள்ளது .
வாங்க மாதேவி அவர்கள். மிக்க நன்றி
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாழ்க வளமுடன் கோமதி அரசு மேடம்.
நீக்கு//தேவப்பெருமாள் திரும்பவும் திரையிடச் சொல்லி ஆயிரம் தடாக்களிலும் சர்க்கரைப் பொங்கல் நிறைந்திருக்கும்படிச் செய்து திருக்கச்சி நம்பியின் பக்தியின் பெருமையை அனைவரையும் அறியும்படிச் செய்தான். //
பதிலளிநீக்கு//வரதன் அங்கு இல்லாத தால் தேவப்பெருமாளே வரதனைப் போல வந்து அவருக்கு செருப்பை எடுத்துக்கொடுத்து, குடையையும் பிடித்து வீடு வரை கொண்டு விட்டான். //
திருக்கச்சி நம்பியின் பெருமையைபடிக்க படிக்க மெய்சிலிர்க்கிறது, இறைவன் பக்தனுக்கு வேண்டி எப்படி இறங்கி வருகிறார் . குருபக்தியும், இறை பக்தியும் அப்போது நிறைந்து இருந்தது.
42 வது பாசுரம் பகிர்வை படித்து அரங்கனை வணங்கி கொண்டேன்.
பூவிருந்தவல்லியில் திருக்கச்சி நம்பிகளின் அவதாரஸ்தலம் படங்கள் அருமை.
குருபக்தியும் இறை பக்தியும் அப்போது நிறைந்து இருந்தது உண்மை. காரணம் மனதை வேறு பக்கம் திருப்ப மார்க்கங்கள் இல்லை. இப்போது எல்லோருக்கும் மார்க்கங்கள் இருப்பதால், செய்யும் தொழிலில் concentration கிடையாது. அது எந்த கைங்கர்யங்கள் செய்பவராகட்டும் இல்லை பக்தர்கள் ஆகட்டும்.
நீக்குஇப்போதும் இறைபக்தி உள்ளவர்களைக் கண்டு மனம் மகிழ்ந்திருக்கிறது. மிகச் சமீபத்தில் நான் தேரழுந்தூர் சென்றிருந்தேன். அங்கு அருகில், பள்ளிகொண்ட பெருமாளுக்கு ஒரு கோயில் (கொஞ்சம் படிகள் ஏறிச் செல்லவேண்டும்) இருக்கிறது. முதல் முறை பார்த்ததால் மனைவியும் நானும் ஏறிச் சென்றோம். யாருமே இல்லை. ஆனால் ஒரு இளைஞர் (அர்ச்சகர்) ரொம்ப சின்சியராக பெருமாளுக்கு அர்ச்சனை பண்ணிக்கொண்டிருந்தார். நாங்கள் வந்ததுகூட அவருக்குத் தெரியலை. மெய்சிலிர்த்தது. பக்தியுள்ளோர் நிறைய இருக்கிறார்கள். நம் கண்ணுக்குத் தெரிவதில்லை.
கதை பகிர்வு நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்கு”மழை பெய்யவேண்டி, இப்ப நான் அண்ணமார்சாமி உடுக்கடிக் கூத்துக்கட்டப்போறேன். மழை எறங்கினா, ஊர் திரும்புறோம். இல்லையின்னா பசி மயக்கத்துல செத்து இப்படியே மயானத்துக்குப் போறோம்.”//
நம்பிக்கை அது பொய்க்காமல் வெற்றி பெறுவார்கள்.
கிராமங்களில் விழாக்கள் நின்று போனால் கடும் பஞ்சம் நிலவும். இறைவனுக்கு செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்று சொல்வார்கள்.
வாரம் ஒரு பாசுரம் - தகவல்கள் சிறப்பு. தெண்டனிடும் பழக்கம் குறித்த கருத்துக்கள் நன்று. தொடர்கிறேன்.
பதிலளிநீக்குவாங்க வெங்கட் நாகராஜ். மிக்க நன்றி.
நீக்கு@ நெல்லை /ஸ்ரீமந் நாராயணனின் ஐந்து நிலைகளான பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை/
பதிலளிநீக்குஇந்த ஐந்து நிலைகளைப் பற்றி விளக்க முடியுமா?
உருவம், அருவம், அருவுருவம் என்று சிவனுக்கு மூன்று நிலைகளைச் சைவர்கள் சொல்கிறார்களே, அது போலவா இது?
வாங்க சூர்யா சார்.. காணோமே என்று பார்த்தேன்.
நீக்குஸ்ரீமந் நாராயணன், பரமபதத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற திருக்கோலம். பரமபதத்தை வைகுண்டம் என்பர் (நெல்லையில் நவதிருப்பதியில் ஸ்ரீவைகுண்டம் திவ்யதேசத்தில் அதே மாதிரி நிலையில் தரிசனம் தருகிறார்). இது பரம்.
வியூகம் என்பது, பாற்கடலில் ஆதிசேஷனில் பள்ளிகொண்டிருக்கும் நிலை. (இது பரமபதத்திலிருந்து வேறுபட்ட ஒரு இடம்).
இந்த இரண்டும் 107,108வது திவ்யதேசங்கள். நாம் நிலவுலகில் காணமுடியாது.
விபவம் என்பது ஸ்ரீமந் நாராயணன் எடுத்த அவதாரங்கள். நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண...
அர்ச்சை-அர்ச்சாவதாரம். திவ்யதேசங்களில் அர்ச்சாமூர்த்தியாக எழுந்தருளும் நிலை. இவற்றில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டவைகள் வைணவ திவ்யதேசங்கள்.
அந்தர்யாமி-அந்த எம்பெருமான், ஒவ்வொரு ஜீவாத்மாக்குள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறான். இதன் காரணமாகத்தான், உடலிலிருந்து ஆத்மா கிளம்பியபிறகு, சரம உடலை, நன்றாக சுத்தப்படுத்தி, புது உடை அணிவித்து, அக்னி பகவானுக்கு இறையாக்கிவிடுவது.
சிவனுக்கு உள்ள மூன்று நிலைகள் வேறு. இது எல்லா இறைவனுக்கும் பொருந்தும். அதற்குரிய பாசுரத்தை ஒரு நாள் எடுத்துக்கொள்கிறேன்.
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமையொடு ஒழிவிலன் பரந்தே
இது இறைவனைப் பற்றி நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழியில் முதல் பதிகத்தில் வருகிறது.
இதனை ஒட்டியே,
தெய்வம் என்றால் அது தெய்வம், வெறும் சிலை என்றால் அது சிலைதான், உண்டு என்றால் அது உண்டு இல்லை என்றால் அது இல்லை என்ற கண்ணதாசன் பாடல்.
இரையாக்கிவிடுவது
நீக்கு