அஞ்சலை 2
துரை செல்வராஜு
*****************
***********************
அன்று வெள்ளிக்கிழமை..
பழனியின் குடும்ப விசயம் தெரிஞ்ச ரெண்டாம் நாள்...
உள் முற்றத் திண்ணையில் ஆசுவாசமாக சாய்ந்திருந்த பெரியம்மா-
'பழனி மாதிரி நம்பிக்கையான ஆள் நம்ம தோட்டத்துக்குக் கிடைப்பது கஷ்டம்... '
உள்மனதுடன் பேசிக் கொண்டிருந்த வேளையில் -
சிலுசிலுக்கும் பாவாடை தாவணியும் கூடை நெறைய மருதாணியுமாக அஞ்சலை வந்தாள் ...
"மருதாணிய நான் அறைச்சுடறேன்.. சீக்கிரமா சாப்பிட்டு வாங்க
எல்லாரும்.. "
குறுக்கிட்ட அஞ்சலை -
"நான் அறைச்சுத் தர்றேம்மா!.. " - என்றாள்..
மெல்லச் சிரித்த பெரியம்மா,
"இல்லடா அஞ்சலை... மருதாணி அறைக்கிறப்போ கையெல்லாம் சிவப்பாயிடும்.. அதுக்கு மேல மருதாணி
வைச்சா எடுப்பா இருக்காது!.. " - என்றபடி,
அவளது கன்னத்தை வருடிய பெரியம்மாவின் மனம் ஏதேதோ பாச உணர்வின் அதிர்வுகளால்
தள்ளாடியது...
'தென்மலையின் சந்தனமே
தேன்வழியும் செண்பகமே
பொன்னி நதிப் பூங்காற்றே
வந்திடம்மா பூ முடிக்க..
பொன்னிறத்துப் பூவரும்பே
நன்னிலத்து செங்கரும்பே
தங்கநிறத் தாமரையே
வந்திடம்மா மை எழுத..
முத்து முத்துப் புன்னகையே
முத்தமிழின் இன்சுவையே
நெத்திச் சுட்டி சூடிடவே
வந்திடம்மா வான்மதியே...
மல்லிகையும் பூத்திருக்க
மங்கலங்கள் காத்திருக்க
மஞ்சள் முக நித்திலமே
மருதாணிச் சித்திரமே!.. '
மெலிதாகப் பாடிய படி பிள்ளைகளுக்கும் தனது தங்கைக்கும் மருதாணி வைத்து விட்ட பெரியம்மா
கடைசியாக தனக்கும் வைத்துக் கொண்டார்கள்...
கை விரல் சிவப்பைக் காட்டுவதற்காக பொழுது விடிவதற்கு முன் ஓடி வந்த அஞ்சலை
உறக்கத்தில் இருந்த பிள்ளைகளை எழுப்பி விட்டாள்...
கண் விழித்து கைகளைக் கண்ட பிள்ளைகளின் முகம் கீழ் வானச் சிவப்பாகியது..
பிள்ளைகளின் புன்னகையைக் கண்டு பெரியவர்களுக்குப் பூரிப்பு...
இதெல்லாம் இன்னும் சில நாட்கள் தான்.. பெரியம்மா ஊருக்குச் சென்று
விடுவார்கள்...
அன்று ஞாயிற்றுக் கிழமை..
மதியப் பொழுதுக்கு மேல் ஈரமான சாக்குச் சுருளுடன் வந்தாள் அஞ்சலை..
"என்னம்மா இது!.. " - என்றார்...
ஒன்றும் பேசாமல் புன்னகைத்த அஞ்சலை கையிலிருந்த சுருளை விரித்துப் போட்டாள்.. வெளிர் நிற
மஞ்சள் மடல்களுடன் தாழம்பூக்கள்...
"தாழங்காட்டுக்குள்ளே போய் யாரு பறிச்சது ?.. " -
பழனியின் கேள்விக்குப் பதிலாக - " அத்தான்!.. " - என்றாள் ஒற்றை வார்த்தையில் ..
திண்ணையும் முன் வாசலும் தாழம்பூக்களின் நறுமணத்தால் நிறைந்தன...
பிள்ளைகளுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை...
கொல்லையில் அரும்பியிருந்த மல்லிகை மொட்டுகள் கூடத்தில் குவிந்தன.. கொஞ்ச
நேரத்தில் ஊசியும் பட்டு நூலும் ரிப்பன் நாடாக்களும் குஞ்சங்களும் வந்து சேர்ந்தன..
இதெல்லாம் சின்னவளுக்கு சடங்கு சுத்துனப்போ வர்றவங்களுக்கு மஞ்ச குங்குமம்
தாம்பூலத்தோட கையில் வச்சிக் கொடுக்கிறதுக்காக வாங்குனது...
தாழம்மடல்களைப் பிரித்து ஓரத்து முட்களை நறுக்கி விட்டு பிள்ளைகள்
அனைவருக்கும் ஜடை பின்ன ஆரம்பித்தார் பெரியம்மா..
முதலில் அமர்த்தப்பட்டவள் அஞ்சலை..
சூரியப் பிரபை ஜடைப் பில்லையுடன் மல்லிகை மொட்டுகளையும் பட்டு நூல் ஜரிகை இழைகளையும்
சேர்த்துச் சேர்த்து தைத்து முத்துக் குஞ்சத்துடன் ஜடையைப் பின்னி முடித்ததும்
தேவதைகள் நடமாடும் திருமாளிகை ஆனது வீடு..
வீட்டுப் பிள்ளைகள் மூவருடன் அஞ்சலையையும் நிற்க வைத்து ஆரத்தி எடுத்து
திருஷ்டி கழித்து நெற்றியில் பொட்டு வைத்த பெரியம்மா முகத்தைத் துடைத்தபடி
முற்றத்துத் தூணில் சாய்ந்த போது அருகில் வந்த அஞ்சலை,
"உங்க தோள்..ல சாஞ்சுக்கவா அம்மா!.. " என்றாள்...
சிறகுகள் படபடக்க தேவ கன்னியர் வானில் நின்று சந்தோஷப் பூக்களை வாரியிறைத்துக் கொண்டிருந்தனர்...
ஃஃஃ
கலங்கிய முகத்துடன் பிள்ளைகள்.. அஞ்சலையும் நிற்கின்றாள்...
எல்லாரையும் வாரியணைத்து முத்தமிட்ட பெரியம்மாவின் முகத்தைப் பார்த்தபடி
பழனி பேசினார்...
"யக்கா.. அரும்போட தம்பி கார்மேகம்... அஞ்சலைக்கு மாப்பிள்ளை.. நல்ல பையன்.. தோட்டத்து வேலை.. டவுன் வாசனை இதுகள் ல பிரியம் ஜாஸ்தி ... ஒரு வழி
காட்டுங்களேன்... "
" என்ன படிப்பு ... ? "
" பத்தாங் கிளாஸ்.. புத்திசாலி.. "
அன்றைக்கு -
சிறகுகள் படபடக்க தேவ கன்னியர் வானில் நின்று சந்தோஷப் பூக்களை வாரியிறைத்ததன் காரணம் இப்போது புரிந்தது
பெரியம்மாவிற்கு...
புன்னகைத்தார்...
தூரத்தே ரயில்வே ஸ்டேஷன்...
கழுத்து மணிகள் அசைய காளைகள் விரைந்து கொண்டிருந்தன..
ஃஃஃ
========================================================================================================================================
1971ம் ஆண்டு மே1ந் தேதி, ஏறக்குறைய ஐந்தாண்டு காலம் வெறிச்சோடிக் கிடந்த சென்னை தேனாம்பேட்டை போயிஸ் ரோட் வீடு கலியாண வீடுபோல் 'கலகல' வென்று காட்சியளிக்கிறது. வெளியே பல கார்கள் நிற்கின்றன. சில கார்கள் வருவதும் போவதுமாயிருக்கின்றன. ஆணும் பெண்ணுமாக மக்கள் அங்கங்கே சிறு சிறு கூட்டமாக நின்று, மாடியைப் பார்ப்பதும், தங்களுக்குள் ஏதோ பேசிக் கொள்வதுமாக இருக்கிறார்கள். மேலேயும் கீழேயுமாகச் சிலர் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து நானும் போகிறேன். ராதாவின் குரல் ஒலிக்கிறது:
"என்னைப் பார்க்கவா இத்தனை பேரு? நான் என்ன, ராஜாஜியைப் போல, பெரியாரைப் போல, காமராஜைப் போல பெரிய மேதையா ? சாதாரண நடிகன்தானே? என்னைப் பார்க்க ஏன் இப்படி விழுந்தடிச்சிக்கினு வர்றீங்க?... சரி, பார்த்தாச்சா ?... போங்க மாலை வேறே கொண்டாந்து இருக்கீங்களா?... ஐயோ, ஐயோ சரிசரி, போடுங்க... போட்டாச்சா?... போயிட்டு வாங்க!" ... ...
ராதாவின் குரலா இது, இத்தனை யிருக்கிறதே'... சன்னமா
வியப்பு அடங்கு முன் இன்னொரு குரல் கேட்கிறது:
"உங்கள் குரல் முன்னைப் போல்..."
"அஞ்சி வருஷமாப் பேசாம இருந்த குரல் இல்லையா? அப்படித்தான் இருக்கும்; கொஞ்சம் கட்டினாச் சரியாயிடும்!" என்கிறார் ராதா.
ராதா சிரிக்கிறார். அப்போது அவர் மகன் வாசு வருகிறார். அவரைப் பார்த்ததும், "வாசு உங்களை விட நன்றாக நடிக்கிறார் என்று சினிமா ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்களே ?" என்கிறார் டாக்டர்.
"அதை நான் ஒத்துக்க முடியாது. டி.வி.எஸ்.ஸை எடுத்துக்குங்க; அவருடைய பையனுங்க அந்த ஸ்தாபனத்தை இப்ப பிரமாதமா முன்னுக்குக் கொண்டாந்திருக்காங்க. அதை வெச்சி ஆதியிலே அதுக்குக் காரணமாயிருந்த டி.வி.எஸ். திறமையிலே குறைஞ்சவருன்னு சொல்லி விட முடியுமா?" என்கிறார் ராதா.
"அது எப்படிச் சொல்ல முடியும்?" என்கிறேன் நான்.
சக பத்திரிகையாளர் ஒருவர், "உங்கள் மனைவியைக் கொஞ்சம் கூப்பிடுகிறீர்களா? அவரை ஒரு படம் எடுத்துக் கொள்கிறேன்", என்கிறார் வினயத்துடன்.
"என் மனைவியை எதுக்குக் கூப்பிடறது ? நான் மட்டும் பார்க்கத் தான் அவ இருக்கா; நீங்களும் உங்க பேப்பரைப் படிக்கிறவங்களும் பார்க்க அவ இல்லே!" என்று ராதா 'பட்'டென்று பதிலளிக்கிறார்.
சொன்னபடி அவர், 'கதிரு'க்காக வாரா வாரம் என்னிடம் சொல்லிக் கொண்டு வந்ததைத்தான் நீங்கள் இப்போது புத்தக வடிவில் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
சென்னை-30
15.3.72.
1971-ல் 'தினமணிகதிரி'ல் நடிகவேள். எம்.ஆர். இராதா வைப் பேட்டி கண்டு அமரர். விந்தனா'ல் தொடராக எழுதப் பட்ட இந்நூல், தற்போது உங்கள் கைகளில் தவழ்கிறது. இந்நூலின் சிறப்பம்சம் கலையுலக விற்பன்னரும், இலக்கிய விற்பன்னரும் இணைந்து தமிழ் மக்களுக்கு இதை வழங்கி யிருப்பது.
இச்சுயசரிதத்தை அமைத்திருக்கும் விதம் வாசகர்களைச் சட்டெனக் கவரும் என நம்புகிறோம்.
உள்ளது உள்ளபடி, கிட்டத்தட்ட மகாத்மா காந்தியின் 'சத்திய சோதனை போன்று வெளிவந்திருக்கும் இந்நூலை வாசகர்கள் பெரிதும் வரவேற்பார்கள் என்பது எங்கள் நம்பிக்கை.






/சிறகுகள் படபடக்க தேவ கன்னியர் வானில் நின்று சந்தோஷப் பூக்களை வாரியிறைத்ததன் காரணம் இப்போது புரிந்தது பெரியம்மாவிற்கு/
பதிலளிநீக்குநல்ல சுபமான முடிவு...துரை செல்வராஜ் அவர்களின் ட்ரேட்மார்க். ...வெகு நன்று!
மகிழ்ச்சி..
நீக்குநன்றி..
/தென்மலையின் சந்தனமே
பதிலளிநீக்குதேன்வழியும் செண்பகமே/
அருமையான வரிகள். பாடலை வெகுவாக ரசித்தேன்
ஆகா!..
நீக்குதன்யனானேன்...
எம்.ஆர். ராதாவின் பற்றிய செய்தி படிப்பதற்கு சுவையாக இருந்தது. என்னதான் அவர் கருத்துகள் நமக்குப் பிடிக்காமல் இருந்தாலும், எம்ஜியாரை அவர் சுட்டிருந்தாலும், அவரை வெறுப்பது கஷ்டம். எம்.ஆர்.ஆர்.வாசு வேறு டைப். அவருடைய நடிப்பையும் ரசித்திருக்கின்றேன். என்னைக் கேட்டால் அவரால் எம்.ஆர்.ராதாவின் பக்கத்தில் கூட வர முடியாது.
பதிலளிநீக்குவாங்க சூர்யா.. சரியாக சொன்னீர்கள். 'அவரே அவருக்கு என்றும் இணையானவர்' என்று பாடலாம்!
நீக்குவிந்தனின் புத்தகத்திலிருந்து அவ்வப்போது ஏதாவது எடுத்து விடுங்களேன் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குகொஞ்சம் எடுத்து வைத்திருக்கிறேன். கண்டிப்பாக பகிர்கிறேன்.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா! வணக்கம்.
நீக்குஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி..
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபடங்கள் மனதில் நிறைகின்றன...
பதிலளிநீக்குநன்றி கீதா ரெங்கன்!
நீக்குதுரை அண்ணா, கதை. எல்லோரும் நல்லவர்களே என்று இனிய குணங்களுடன் சுப முடிவோடு நன்று,
பதிலளிநீக்குகீதா
எல்லோரும் நல்லவரே
நீக்குமகிழ்ச்சி
நன்றி சகோ..
ஓ எம் ஆர் ராதா! இவருடைய நக்கல் நையாண்டி வசன உச்சரிப்பு ஏற்ற இறக்கம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய தனிப்பட்ட விஷயங்களைத் தவிர்த்துப் பார்த்தால். பார்த்த சில காட்சிகளை வைத்துச் சொல்கிறேன்.
பதிலளிநீக்குநீயே உனக்கு என்றும் நிகரானவன்.....மா மா மாப்ளே!!!! அந்தப் பாடல் காட்சியையும் பாடலையும் மறக்க முடியுமா? நான் எப்பவும் ரொம்ப ரசிக்கும் காட்சி மற்றும் பாடல்.
கீதா
வாங்க கீதா... அதைதான் 'அவரே அவருக்கு என்றும்' என்று பதிலில் குறிப்பிட்டிருக்கிறேன்!
நீக்குமேலே சூர்யா அவர்களுக்கு உங்கள் பதில் பார்த்துவிட்டேன்! இப்ப
நீக்குகீதா
அதில் சிவாஜி பாடலைத் தொடங்கும் போது - நீயே உனக்கு என்றும் நிகரானவன் - என்று தொடங்கும் போது கையை, எம் ஆர் ஆரின் பக்கம் காட்டுவார்!! அது ரொம்பப் பொருத்தமாக இருப்பது போன்று எனக்குப் படும். ஒரு தனி பாணி எம் ஆர் ஆர்.
பதிலளிநீக்குகீதா
சிவாஜி அவர்மேல் ஏகப்பட்ட மதிப்பு வைத்திருந்தார்.
நீக்குஓஹோ!
நீக்குகீதா
சிவாஜி எம்.ஆர்.ராதாவுடன் நடிக்கும் சீன்களில் எப்போதுமே டென்ஷனில் இருப்பாராம். "ராதா அண்ணன் ஒரு "ஸீன் ஸ்டீலர்". ஜாக்ரதையா இல்லேன்னா நம்பளை முழுங்கிடுவார்" என்று சிவாஜி சக ஆர்ட்டிஸ்ட்களிடம் சொல்வாராம்.
நீக்குஎவ்வளவு ஸ்டைலாக இங்கிலீஷ் டயலாக் பேசி நடித்திருக்கிறார் எத்தனை படங்களில் எம்.ஆர்.ராதா! ஆனால் அவருக்குத் தமிழ் கூட எழுதிப் படிக்கத் தெரியாது என்ற செய்தியை நம்புவது கடினம்தான். நாடக நாட்களிலேயே பிறர் படிக்க வசனங்களை மனப்பாடம் செய்து விடுவதுதான் அவர் ஸ்டைல்.
நீக்குஅவருடைய டயலாக் டெலிவரி ஸ்டைல் தனி ஸ்டைல். அனைவரும் ரசிப்பார்கள்.
நீக்குசிறுகதை மிகவும் நன்று.
பதிலளிநீக்குகிராமத்து மக்களின் வெள்ளந்தியான குணம், எல்லோரும் நல்லவரே என்ற எண்ணம்.
கதை மிகவும் பிடித்திருந்தது. இருந்தாலும் இன்னும் திருப்பங்களுடன் கொஞ்சம் நீட்டி ஒரு சில வாரங்கள் அதிகரித்திருக்கலாம்.
நெல்லை அவர்களுக்கு நன்றி...
நீக்குகதையின் ஊடாக வந்த கவிதை அருமை.
பதிலளிநீக்குபடங்கள் வெகு அழகு. நன்றாக முயற்சித்திருக்கிறார் அக்கா கீதா ரங்கன்.
செல்வாண்ணாவின் கவிதைகளும் எப்போதுமே நன்றாக இருக்கும்.
நீக்குகவிதையை ரசித்ததற்கு
நீக்குமகிழ்ச்சி
நன்றி நெல்லை...
எம் ஆர் ராதா... இந்தப் புத்தகம் படித்திருக்கிறேன். அவருடைய திறமை, கர்வம், சுய மரியாதை எல்லோரும் அறிந்ததுதான்.
பதிலளிநீக்குபலர் சேர்ந்து வளர்த்த மாமரத்தை ஒருவன் சொந்தம் கொண்டாடித் தள்ளிக்கொண்டுபோய் அனுபவிக்கிறார்கள். வளர்த்தவர்களுக்குப் பயனில்லாமல்.
இரண்டாவது வரியில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று சரியாய் புரியா விட்டாலும், பொதுவில் ராதா எல்லோராலும் ரசிக்கப்படுபவர்.
நீக்குதிராவிடக் கருத்துகள், மக்களை அந்தக் கருத்துகளை ஏற்றுக்கொள்ள வைத்தது, சுயமரியாதை... என்பதில் பெரும் பங்கு எம் ஆர் ராதாவிற்கு உண்டு. இது போல் பல தலைவர்கள் மக்களிடம் இந்தக் கருத்தை உருவாக்கியிருந்தாலும், கருநாகம் குடிகொண்டதுபோல கருணாநிதி தன் குடும்பத்திற்கு மாத்திரமே அதன் பயனைக் கொண்டுபோய்விட்டார்.
நீக்குஎம் ஆர் ராதா, வாசு, ஏன் ராதா ரவி... அந்தக் குடும்பமே நல்லா நடிக்கும். ராதா பகுதிரை ரசித்தேன், மீண்டும் நினைவுக்குக் கொண்டுவர முடிந்தது. மனதில் அறம் இருந்த கலைஞன் எம் ஆர் ராதா.
பதிலளிநீக்குராதிகா, நிரோஷா, விக்ரம் வாசுவை விட்டுட்டீங்களே
நீக்குகதாநாயகனை மாத்திரம் சிறந்தவனாக்க் காட்டும் உத்தி, தன் திறமையைச் சிறிது குறைப்பதாக எண்ணியவர் ராதா.
பதிலளிநீக்குஅவர் வரலாறு படிக்க இனிமை. அவரது திரைப்படக் காட்சிகள் இப்போதும் பார்க்க நன்றாக இருக்கும். திறமைக்கு அறிவுக்கு குலம் கிடையாது என்பதை இவர், என் எஸ் கே, எம் கேடி போன்ற பலர் நிரூபித்திருக்கிறார்கள்.
தமிழ் என்றில்லாமல் எல்லா மொழிகளிலும் கதாநாயகனை அப்படிதானே காட்டுவார்கள்! ரத்தக்கண்ணீர் ஒரு விதிவிலக்கு!
நீக்கு"என் மனைவியை எதுக்குக் கூப்பிடறது ? நான் மட்டும் பார்க்கத் தான் அவ இருக்கா; நீங்களும் உங்க பேப்பரைப் படிக்கிறவங்களும் பார்க்க அவ இல்லே!"//
பதிலளிநீக்குசூப்பர் பதில். ரொம்ப ரசித்தேன்.
இந்த வரிக்கு முன் அவர் பேசுவது, நான் சாதாரண ஆக்டர்....நீங்க பேசுவதை நான் பாலிஷ் பண்ணி...என்று பேசுவது அட! எளியமனிதர் என்று தோன்றுகிறது. டிவிஎஸ் பற்றிச் சொன்ன கருத்தையும் ஒப்பிட்டதையும் ரசித்தேன்...இவரைப் பற்றி இருக்கும் எதிர்மறைப்பக்கங்களில் இப்படி நல்ல எண்ணங்களும் இருப்ப்பதும் தெரிந்து கொள்ள முடிகிறது. நல்லதும் கெட்டதும் கலந்தவைதானே மனிதன்!
கீதா
:))
நீக்குதுரை அண்ணா, கதையின் இடையில் உங்கள் பாடல் சூப்பர். ரொம்ப ரசித்தேன். முன்னரே இக்கருத்து போட்டு வரவே இல்லை....என் பெயர் ஐடிக்கு ப்ளாகர் படுத்தும் பாடு!
பதிலளிநீக்குகீதா
கதையின் இடையில் பாடல் சூப்பர்.
நீக்குரொம்ப ரசித்தேன். ///
மகிழ்ச்சி...
நன்றி சகோ..
ஏதோ விந்தன் தன் வறுமை வாட்டத்திற்கு வடிகாலாய் எழுதினார் என்றால்..
பதிலளிநீக்குநிகழ்கால விஷயங்களுக்கு முக்கியத்வம் கொடுங்கள்.
உதாரணத்திற்கு தோழர் நல்லக்கண்ணு வாழ்க்கை நிகழ்வுகள்...
அல்லது இந்த வருட சாகித்ய அகாதமியின் தேர்வும் அது பற்றிய பார்வைகளும்
இந்த மாதிரி..
அந்த விவகாரம் வேண்டாம் என்றுதான் விட்டு விட்டேன் ஜீவி ஸார். நல்லகண்ணு வாழ்க்கை நிகழ்வுகள் நான் அறியாதவை.
நீக்குநல்ல வேளை ஸ்ரீராம் பிழைத்தார். ஜீவி சார் இந்த வருட ஞானபீட விருது பற்றி ஸ்ரீராமை எழுதச் சொல்லவில்லை 😆
நீக்குபின் குறிப்பு: கவிப்பேரரசர் வைரமுத்துவின் அபிமானிகள் மன்னிக்கவும்.
எனக்கு வைரமுத்துவைப் பிடிக்காது என்றாலும் அவர் வரிகள் சிலபல பிடிக்கும்.
நீக்குநானுறங்கும் நாள் வேண்டும்
சாய்ந்துகொள்ள தோள் வேண்டும்
என் கண்ணில் நீர் வேண்டும்
சுகமாக அழவேண்டும்...
ராகம் ஜீவனாகும்
நெஞ்சின் ஓசை தாளமாகும்
கீதம் வானம் போகும்
அந்த மேகம் பாலமாகும்
வானம் என் விதானம்
இந்த பூமி சன்னிதானம்
பாதம் மீது மோதும்
ஆறு பாடும் சுப்ரபாதம்
ராகம் மீது தாகம் கொண்டு
ஆறும் நின்று போகும்
காற்றின் தேசம் எங்கும்
எந்தன் கானம் சென்று தங்கும்
நீ இல்லாமல் நடந்து
போக கால்கள் இல்லையே
கனவிலேனும் கடிதம்
போடு காதல் முல்லையே
மூடி வைத்த காதல் இன்று மோசம் போகுமோ
மூடி வைத்ததாழம்பூவில் வாசம் போகுமோ
ஆகா! சாகித்ய பீடமும் ஞான்பீடமும் ஒன்றுதானா? நான் வேறு வேறு என்றல்லவா நினைத்திருந்தேன்? இந்த வருட ஞானபீட விருது பற்றி ஜீவி சாரின் கருத்துகள் என்னவோ? அகிலனுக்கும் ஜெயகாந்தனுக்கும் பிறகு வைரமுத்துவிற்குக் கொடுத்திருக்கிறார்கள். ஒரு நண்பர் தமிழகத் தேர்தலுடன் இந்த விருதை முடிச்சுப் போட்டார். எனக்கென்னவோ அந்தக் கருத்தில் உடன்பாடில்லை. இவருக்கு விருது கொடுத்தார்களென்று தமிழக வாக்காளர்கள் பாஜகவிற்கு வாக்களிக்கப் போவதில்லை.
நீக்கு@ஸ்ரீராம் /எனக்கு வைரமுத்துவைப் பிடிக்காது என்றாலும் அவர் வரிகள் சிலபல பிடிக்கும்./
நீக்குஎனக்கும் அவருடைய பாடல்கள் பல பிடிக்கும்.ஆனால் அவரைப் பிடிக்காது.
குறிப்பாகக் "கவிப்பேரரசு" என்று ஒரு பட்டத்தைப் போட்டுக்கொண்டு "கண்ணதாசனுக்கு மேலே நான்" என்று ஸீன் போட்டதிலிருந்தே அவரைப் பிடிக்காமல் போய்விட்டது. அதற்கப்புறம் அவரைப் பற்றி வந்த எந்த செய்தியும் நல்ல செய்தியில்லாமல் போய் விட்டது.
எதிர்ப்புப் பிரச்சாரத்தில் காரம் சற்று குறையலாம் என்று எதிர்பார்த்திருக்கலாம்!
நீக்கு// னக்கும் அவருடைய பாடல்கள் பல பிடிக்கும்.ஆனால் அவரைப் பிடிக்காது. //
நீக்குஅதேதான். கமலும் அப்படிதான். அவர் நடிப்புத் திறமை, திரைத் திறமை பிடிக்கும். அரசியல் வாந்தி வரும்.
// சாகித்திய அகாதமியும் ஞானபீடமும் ஒன்றா?
நீக்குசூரி ஸார்.. முதலில் வேண்டுமென்றே செய்த அந்தக் கொனஷ்டையைக் கண்டுபிடித்தது நீங்கள் தான்.
வாழ்த்துக்கள்.
பை த பை. எழுத்தாளர் கொனஷ்டையைப் பற்றி எழுத வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளாக தாமதப்பட்டுக் கொண்டிருக்கிறது
நீக்குஅந்த விருதே பம்மாத்து. பரிசை வாங்கிய பலர் பதர்கள். இந்தத் தடவை தமிழுக்கு என்பதால் கிறித்துவர் தேர்வுக்குழுக்குள் புகுந்து பெண்களுக்கான குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவரான, ரகுமான் சகோதரியிடமே தன் வேலையைக் காட்டியவரான இன்னொரு கிறித்துவருக்கு, ஏதோ காரணத்தால் விருதைக் கொடுத்திருக்கிறார். பேசாமல் இந்த விருதுகள் அனைத்தையும், கலைமாமாமணி உட்பட, ஒழித்துக்கட்டினால் அரசுக்கு பணம் மிஞ்சும்.
நீக்குதிரு எம் ஆர் ராதா பற்றிய
பதிலளிநீக்குகுறிப்புகள் அருமை..
நன்றி செல்வாண்ணா... நீண்ட நாட்களுக்குப்பின் உங்கள் கதை இங்கு தந்ததற்கு நன்றி.
நீக்குஇப்புத்தகம் பிடிஎஃப் வடிவில் எடுத்து வைத்திருந்தது நினைவுக்கு வந்தது. வாசிக்கத் தொடங்காமல் இருந்தது. அதன் சுட்டி இதோ
பதிலளிநீக்குhttps://www.tamilvu.org/library/nationalized/pdf/86-vindhan/natikavelmrradhaavinsiraichchaalaisindhanaikal.pdf
கீதா
🙏🙏🙏
நீக்குநன்றி கீதா. அப்போ மேற்கொண்டு இங்கே பகிர வேண்டாமே...
நீக்குஎனது குறிப்பேட்டில் தளரக் காட்சி தருகின்ற கதையின்
பதிலளிநீக்குஒழுங்கமைப்பு இங்கு எப்படி இத்தனை நெருக்கடிக்கு
உள்ளாயிற்று?...
நெருக்கடியா? நீங்கள் எனக்கு அனுப்பிய மெயிலில் இருந்ததைவிட நிறைய இடைவெளி கொடுத்து ஜஸ்டிபை செய்து வெளியிடப்பட்டு அப்படி இடைவெளிகளுடன் தான் காட்சிக்கு வருகிறது.
நீக்குநன்றி ஸ்ரீராம்....
பதிலளிநீக்குஏன் இப்படி என்று
எனக்குப் புரியவில்லை...
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இன்றைய படங்களில் மருதாணியை வரவேற்கின்ற காட்சி
பதிலளிநீக்குஅழக்கோ அழகு...
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கதைப்பகிர்வும் அருமை. அஞ்சலை, பழனி சுபமான கதை முடிவு அற்புதமாக இருந்தது. மருதாணியும், மணமணக்கும் மல்லிகையும், தாழம்பூவும், தகதகக்கும் நல்ல பொருத்தமான படங்களும் கதைக்கு சுவையூட்டி அழைத்துச் சென்றன. கதையைப் படித்ததும் நல்ல மனிதர்களை சந்தித்த நிறைவு மனதை நிறைக்கவும் வைத்தது.
சகோதரரின் கவிதையின் வரிகளின் நன்றாக உள்ளது. இசையோடு பாடவும் வைத்தது. அருமையான கதையை மட்டுமில்லாது இடையே கவிதைப்பூக்களையும் மணம் வீச தொடுத்துத் தந்த சகோதரர் துரை செல்வராஜ் அவர்களுக்கு மனம் கனிந்த நன்றி.
மங்கலமான செவ்வாயில், நல்லதொரு கதையை தந்த சகோதரர் துரை செல்வராஜ் அவர்களுக்கும், அதற்குப் பொருத்தமான அழகிய படங்களை தேர்ந்தெடுத்து தந்த சகோதரி கீதாரெங்கன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அன்பான கருத்துரைக்கு மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா..
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஅஞ்சலையை தாயில்லாப் பிள்ளையாகக் காட்டுவதற்கே
பதிலளிநீக்குஎன் மனது கஷ்டப்பட்டது...