26.3.26

அபீட் எடுக்கலைன்னா ஆக்கர்.. ​

குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சிக்கு பதிலாக என்பது போல எழுத ஆரம்பித்த விஷயத்துக்கு பதிலாக இன்று வேறு விஷயம் பற்றி சொல்லப்போகிறேன்!

இரண்டு நாட்களுக்கு முன் ஆரண்யநிவாஸ் Seven O Clock க்ரூப்பில் அன்றைய டாபிக்காக இன்டோர் கேம்ஸ் பற்றியும், அதில் அசடு வழிந்தது பற்றியும் கேட்டார்.  முதல் பதில் கொஞ்சம் பொருத்தமாக சொல்லி விட்டாலும் இரண்டாவதில் சொதப்பி விட்டேன்.  முதலில் பல்லாங்குழி விளையாட்டில் காசி பொத்தும்போது எதிராக விளையாடிய பெண் கையைப் பிராண்டி விட்டார்   என்று எழுதியிருந்தேன். அப்புறம் எல்லோரும் அசடு வழிவது பற்றி சொல்லிக் கொண்டிருந்த போது எனக்கு பம்பர விளையாட்டில் வாங்கிய குத்துகள் நினைவுக்கு வந்தன.  அந்நாளைய என் பம்பர பிரதாபத்தை எடுத்து விட்டேன்.  அப்புறம் கேள்விக்கு பொருத்தமில்லாத பதில் என்பதை நானே உணர்ந்து நீக்கி விடவா என்று கேட்டதும், வேண்டாம், சுவாரஸ்யமாக இருக்கிறது இருக்கட்டும் என்று ஒரு நண்பரும், இன்டோர் கேம்ஸ் என்றதும் வேற எதையாவது எழுதாமல் இருந்தீரே என்று இன்னொரு எழுத்தாள உறுப்பினரும் சொன்னார்கள்.


அந்நாளில் நணபர்கள் ஆடும் ஆட்டம் பார்த்ததும் எனக்கும் அதில் கலந்து கொள்ள விருப்பம் இருக்கும்தானே..  நம்மால் முடிகிறதோ இல்லையோ..  நானும் கலந்து கொண்டு விடுவேன்.  ஸ்கூல் கேம்ஸ் பீரியடில் ஃபுட்பால் ஆடும்போது நம் கைக்கு, மன்னிக்கவும் காலுக்கு பந்து கிடைக்காவிட்டாலும், பந்து எங்கெல்லாம் செல்கிறதோ அதன் கூடவே பொறுப்பாக ஓடுவேன்.  எப்படியாவது தப்பித்தவறி காலில் பந்து படாதா என்ன..   அப்படியும் படுமே..  மேலும் சும்மா நின்றால் விளையாட்டு வாத்தி பக்கத்துக்கு கிரௌண்டில் பத்து சுற்று ஓடச் சொல்லுவார்.  அதற்கு இதுவே பெட்டர்.   பின்னாளிலோ என் (முதல்) காதலியின் பார்வையில் வீரமாக படுவதற்கு கபடி ஆடிய விவகாரம் கூட உண்டு.  ஒரு எவர்சில்வர் டம்ளர் பரிசு வாங்கினேன்.

எல்லோரும் பம்பரம் விளையாடுவது பார்த்து எனக்கும் ஆசை வந்தது.  மெடிக்கல் காலேஜ் மெயின் ரோடில் பம்பரம் கிடைக்காததால் அண்ணனோ அப்பாவோ ஐயங்கடைத் தெரு பக்கம் செல்லும்போது பளபளவென்று ஒரு புதிய பம்பரம் வாங்கி வந்து கொடுத்தார்.  அது என்ன பாடு படப்போகிறது என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை!

என் புதிய பளபள பம்பரத்துடன் பம்பரக் குழுவுக்கு நானும் சென்றேன்.  ராஜா தன் பம்பரத்தின் ஆணியால் தன்னைச் சுற்றி ஒரு வட்டம் வரைந்து நடுவில் தன் பம்பரத்தை ஒரு முத்தம் கொடுத்து விட்டு வட்டத்தின் நடுவில் வைத்தான்.  மற்றவர்களும் அதேபோல் நடுவில் வைத்தார்கள்.  நானும்!  ஆனால் முத்தமெல்லாம் கொடுக்கவில்லை.  ஒன் டூ த்ரீ சொன்னார்களா "சா பூ த்ரீ" போட்டார்களா நினைவில்லை, திடீரென எல்லோரும் பாய்ந்து அவரவர் பம்பரத்தை கையில் கவர்ந்து கரகரவென கயிறு சுற்றி முரட்டுக்குத்து, அரைக்குத்து என்று வீசி கீழே விழுந்து சுற்றும் பம்பரத்தை கயிறால் சுற்றி தூக்கி லபக்கென உள்ளங்கையில் விட்டுக் கொண்டு "அபீட்" என்று குரல் கொடுத்தனர்.  அதற்கு ஏன் அப்பீட் என்று பெயர் வந்தததோ?  சந்தானம் தனது காமெடிகளில் அப்பீட்டுக்கு வேறு பொருள் தந்து காமெடி செய்வார்!  சிலர் சுற்றும் பம்பரத்தை சும்மா கயிறால் சுற்றித் தூக்கி கேட்ச் பிடித்து அபீட்  என்றனர்.  எனக்கு குத்தும் வராது, ஸ்பின் பௌலிங் போல முழங்கையை ஒரு மாதிரி வளைத்து போடும் சாட்டையும் வராது.  'இழுப்பு' என்று சொல்லப்படும்  கல் வீசுவது போல வீசி அபீட் எடுப்பேன்.  சமயங்களில் அவசரமாக சுற்றியதில் கயிறு சரியாக சுற்றப்படாமல் கழன்று வீசி எறியப்பட்டு திரும்பி 'இழுப்பதற்குள்' தூரத்துக்கு ஓடிச்சென்று மானத்தை வாங்கும்.  தனியாக இருக்கும்போது 'குத்து' பழகி சபையில் குத்தினால் ஆணி தரையில் படாமல் மண்டை தரையில் பட்டு 'மொட்டை' அடித்து -அதற்கு அதுதான் பெயர் -  எங்காவது புதரில் போய் ஒளிந்து கொள்ளும்.

நடுவில் நேரத்துக்குள் அபீட் எடுக்க முடியாதவர்கள் பம்பரம் வட்டத்துக்குள் பலியாடு போல வைக்கப்படும்.  அவ்வளவுதான் அனைவரும் தங்கள் பம்பரங்களால் நடுவில் வைக்கப்பட்டிருக்கும் பம்பரங்களைத் தாக்குவார்கள்.  வட்டத்திலிருந்து வெளியே எடுத்து விடவேண்டும்.  அப்படி வெளியே வந்து விடும் பம்பரத்தை சொந்தக்காரன் மகிழ்ந்து தானும்  தாக்கும் செயலில் ஈடுபடுவான்.  இதில் வேண்டியவர்களுக்கு சட்டென அதிகம் காயப்படாமல் அவர்கள் பம்பரத்தை வெளியில் எடுத்துக் கொடுத்து விடும் திறமைசாலிகள் இருப்பார்கள்.   குத்துகிற குத்தில் சமயங்களில் பம்பரம் இரண்டாக பிளந்து விடுவதும் நடக்கும்.  ராஜாவுக்கு மணி என்றொரு அண்ணன் உண்டு.  கருப்பாக இருந்தாலும் கலையான முகம்.  ஒல்லியாக இருந்தாலும் உரமேறிய உடம்பு, கைகள்.  அக்கேஷனலாக எங்களுடன் சும்மா இரண்டு ஆட்டம் என்று விளையாட வரும்போது எங்கள் பம்பரங்கள் பதறும்.  கோலிகுண்டு விளையாட்டிலும் அவர் அப்படிதான்.  மோதி எனப்படும் அந்த பெரிய கோலியால் சின்ன கோலிகளை ஒரு அடியிலேயே நொறுக்கி விடுவார்! என்னுடைய பம்பரம் எப்போதுமே பெரிய பழுவேட்டரையர்தான்.  அதன் உடம்பில் ஆயிரம் விழுப்புண்கள் இருக்கும்.

தப்பித்தவறி அபீட் எடுத்து விட்டோ, அல்லது உள்ளே இருந்து நம் பம்பரம் வெளியே கொண்டு வரப்பட்டாலோ, மற்ற பம்பரங்கள் மீது தாக்குவதில் நாமும் ஈடுபட வேண்டும்.  நமக்கெங்கே பம்பரக்குத்து வரும்? ஆனால் அந்த சமயத்தில் பம்பரம் சுற்றா விட்டாலும் உள்ளே வட்டத்தில் இருக்கும் பம்பரம் மேல் நாம் குத்தும் நம் பம்பரம் பட்டால் போதும்.  படாவிட்டால் மறுபடி நம் பம்பரம் உள்ளேதான்!

பம்பரம் விளையாட்டின் முறைகளை இங்கே படிக்கலாம். (இங்கே என்னும் வார்த்தையில் க்ளிக் செய்யவும்)

=========================================================================================

கொத்தமங்கலம் சுப்பு தன் அனுபவங்கள் எழுதியது 1953 பேசும் படம் புத்தகத்தில்!  அதிலிருந்து கொஞ்சம்...



வருஷம் சுமார் 1935. பர்மாவிலே ஐராவதி நதிக் கரையிலே ஒரு அழகான ஊர். இயற்கை எழில் பொருந்திய ரமணீயமான சோலை. பாக்கு மரங்களும் நிழல்தரும் மா, பலா முதலிய பல மரங்களும் நிறைந்த குளுகுளுவென்றிருந்த அந்தச் சோலை, ஆற் றின் கரையிலே இருந்தது. அங்கே நானும் என் முதலாளியும் நின்றிருந்தோம். என் கையிலே ஒரு கடிதம்.

'எனக்கு இரண்டாவது குழந்தை ஆணாகப் பிறந்திருக்கிறதாம். செய்தி வந்திருக்கிறது.  நான் போய்வர உத்தரவு தரவேணும்' என்றேன்.
'சௌகரியப்படாது. நீ இல்லாமல் இங்கே என் வட்டிக் கடை வியாபாரமும் மற்ற வேலைகளும் என்ன ஆவது?' என்றார் முதலானி. புரட்டாசி மாதம் அது. சனிக்கிழமை உற்சவத்தையும் அங்கேயே செய்து விட்டு தீபாவளி சமயத்திலே ஊருக்குத் திரும்பினேன். அப்போது எனக்கு வயது இருபத்தி ஐந்து இருக்கும். 

வந்த இரண்டொரு மாதங்களில் என் ஆசை மனைவியை இழந்து விட் டேன்.
என் வாழ்வின் முதற் பகுதி அத்துடன் முடிவுற்றது.  என் இளம் பருவ வாழ்க்கை அத்துடன் முடிந்து எண்ணி விட்டதாகத்தான் நான் எண்ணினேண். நான் படித்தது மூன்றாம் பாரம் வரைதான். அப்போதே எனக்குத் தமிழ்ப்பற்று அதிகம்.  நிறைய கவிதைகளை எழுதிக் குவித்தேன்.  விழலுக்கு இறைத்த நீராகப்போய் விட்டன அவை.


வட்டி கடை குமாஸ்தாவானேன். கற்பனைக் கோட்டை இடிந்தது. மனைவியின் பிரிவு இன்ப வாழ்வுக்கே உலை வைத்தது.

மகிழ்ச்சி வெறுப்பாகியது. எதிரே ஒரு பிரம்மாண்டமான பாலைவனமாகக் காட்சியளித்தது வருங்காலம்.   ஊரிலேயே இருக்கப் பிடிக்கவில்லை.  அப்போது கொத்தமல்கலம் சீனு லோடஸ் பிக்சர்ஸாரின் ஒரிஜினல் சாரங்கதராவில் நடித்து முடிது அடுத்தபடியாக பட்டணத்தாரில் நடிக்கவிருந்தார்.  எனக்கு அவர் கடிதமெழுதினார். நானும் அவரும் கொத்தமங்கலத்தில் பல வருஷம ஒன்றாகப் பழகியவர்கள். எங்களை கூடப்பிறந்தவார்கள் என்று இப்போ தும் கூடப் பலர் நினைக்கின்றனர். இருவரும் உயிர்த் தோழர்கள்.

பம்பாய்க்குப் போனேன் பட்ட ணத்தாரில் ஒரு லோபி செட்டி வேடம் எனக்குக் கிடைத்தது.  அந்த லோபி செட்டியின் கைகுட்டை தவறி கடலில் விழுந்து விடுகிறது. அதை எடுக்க அவன் கடலில் குதித்து விடுகிறான். இந்தக் காட்சி படமாககப்பட்டது.  எனக்கு நன்றாக நீந்தத் தெரியும்.  ஆகவே குதித்து முழுகி உள் நீச்சலில் கொஞ்ச தூரம் சென்று, காமிராவின் பிரேமுக்கு வெளியில் தலை தூக்கினேன்.  இடையே சுமார் நாற்பது செகண்டுகள்ன் ஆகியிருக்கும். காட்சி ரொம்பவும் இயற்கையாக அமைந்து விட்டது. நாங்கள் வீடு சென்றோம்.
ஆனால் இரண்டு தினங்களுக்கெல்லாம் எனக்கு ஊரிலிருந்து ஒரு தந்தி வந்ததுதான் ஆச்சரியமாயிருந்தது.  "உன் உடம்பு இப்போது எப்படியிருக்கிறது?" என்பதுதான அந்தத் தந்தியின் வாசகம்.  

எனக்கு உடம்பு சரியில்லை என்று உறவினருக்கு யார் சொன்னது? சிந்தித்தேன் மறுநாள் சென்னை தினசரிகளில் செய்தியைக் கண்டு ஆச்சரியப்பட்டோம்.
"கொத்தமங்கலம் சுப்பு கடலில் மூழகினார். போராடிக் கரை சேர்க்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தில்லை." இந்தச் செய்தி எங்களுக்கு வேடிக்கையாக இருந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு எனக்கு அனேகமாகச் செட்டியார் வேஷம்தான் கிடைத்தது.  

பட்டணத்தார் படம் முடிந்ததும் ஊர் திரும்பினேன். பழையபடி செட்டியார் கடையில் குமாஸ்தா வேலையில் அமர்ந்தேன். படங்களுக்கு நாம் ஏன் கதை எழுதக் கூடாது என்று தோன்றியது எனக்கு.  'சமூகத் தொண்டு'  என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் கல்கி" ஒரு கட்டுரை எழுதியிருந்தார். தலைப்பு, கருத்து இரண்டும் எனக்குப் பிடித்திருந்தன அதையே கருத்தாகக் "சமூகத்தொண்டு என்று ஒரு கதை எழுதினேன். இது சுமார் 36-37-ல இருக்கும். 

அந்தக் கதையை மதுரை மோஹன் மூவிடோன் கம்பெனியார் படமாகத் தயாரித்தனர்.  'மோகனா' என்ற அந்தப்படத்தில் எம் கே. ராதா - டி. என். மீனாக்ஷி இருவரும் பிரதம பாகத்தில நடித்தனர்.  இதிலே சமூகத் தொண்டு செய்யும் காட்சியில் ஜம்னாலால் பஜாஜ் குடும்பத்தினர் தாங்களே முன் வந்து தொண்டு செய்தனர். 

பம்பாயில் தயாரான இப்படத்திற்கு எனக்கும் நல்ல பெயர். ஆனால் இது பண விஷயத்தில் ஒரு வெற்றியாக அமையவில்லை. 

இதன் பிறகு ஜூபிடரிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அங்கே 'அனாதைப்பெண்' மைனர் ராஜாமணி' இரு படங்களிலும்  செட்டியார் வேஷத்தில் நடித்தேன். கதை, வசனம், பாடல் எல்லாவற்றிலும் எனக்கு ஈடுபாடு உண்டு.  அதற்கு 'சமூகத் தொண்டு' வெகுவாகப் பயன்பட்டது.  எனது வாழ்வே பாதி இலக்கியமும் பாதி பட உலகமுமாக அமைந்து விட்டது.   இயன்ற போதெல்லாம் தவறாது எழுதிக் கொண்டேயிருந்தேன்....

=====================================================================================

சுவாரஸ்ய செய்தி ஒன்று..

ஓடும் லாரியில் இருந்து தப்பிய நாய்க்கூட்டம்; 17 கி.மீ., தூரம் பயணித்து வீடு திரும்பிய புத்திசாலித்தனம்!

ஓடும் லாரியிலிருந்து தப்பித்த ஏழு நாய்கள் தங்கள் உரிமையாளர்களிடம் திரும்ப வந்து இணைவதற்காக, சீனாவில் 17 கி.மீ., தூரம் ஒன்றாக பயணித்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.


சீனாவின் ஜிலின் மாகாணத்தின் சாங்சுன் நகரில் உள்ள ஒரு பரபரப்பான நெடுஞ்சாலையில் ஓடும் லாரியிலிருந்து தப்பித்த ஏழு வெவ்வேறு இனங்களை சார்ந்த நாய்கள் கூட்டமாக நடந்து செல்லும் வீடியோ பேசும் பொருளாகியது. நாய் இறைச்சிக் கடை ஒன்றில் வேலை பார்க்கும் திருடர்கள் நாயை கடத்தி ஒரு லாரியில் அடைத்து கொண்டு சென்றுள்ளனர். அப்போது தான் ஏழு நாய்களும் லாரியில் இருந்து தப்பித்துள்ளன.

இரண்டு நாட்களில் 17 கி.மீ தூரம் பயணித்த அந்த நாய்கள் மீண்டும் தங்கள் உரிமையாளர்களிடம் வந்து சேர்ந்துள்ளன. சாலையில் வரும்போது அந்த நாய்களை கோர்கி (Corgi) நாய் வழி நடத்தியது, வீடியோக்களின் மூலம் தெரியவந்துள்ளது. வரும் வழியில் காயமடைந்த ஜெர்மன் ஷெப்பர்டைப் பாதுகாப்பாக நாய்கள் சேர்ந்து நடத்தி கொண்டு வந்த அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன. இந்த நாய்கள் குழுவில் காயம் அடைந்த ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட், ஒரு கோர்கி, கோல்டன் ரெட்ரீவர்ஸ், லாப்ரடார்ஸ் மற்றும் பெக்கினீஸ் நாய்கள் ஆகியவை இருந்தன. இந்த சம்பவம், ஆபத்து நேரத்தில் விலங்குகள் தங்களுக்குள் பேணும் ஒற்றுமை மற்றும் புத்திசாலித்தனத்திற்குச் சிறந்த உதாரணமாக அமைந்திருந்தது.

இந்த நாய்கள் கூட்டத்தை பார்த்த சமூக வலைதள பயனர் ஒருவர் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.  

அவர் கூறியிருப்பதாவது: அவை ஆபத்தில் சிக்கிய சிறு சகோதரர்கள் கூட்டத்தை போல ஒற்றுமையாக சாலையில் வலம் வந்தன. நான் அந்த நாய்களுக்கு பலமுறை உதவ முயன்றேன். அவற்றை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்ல முயன்றேன். ஆனால் அதையெல்லாம் புறக்கணித்துவிட்டு ஒற்றுமையாக சாலைகளில் புத்திசாலிதனமாக நாய்கள் ஒற்றுமையாக செயல்பட்டன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

https://x.com/Yoda4ever/status/2036105694357897479?s=20

=======================================================================================

நாம் அந்தப் பாடல்களை கேட்டிருப்போம்.  ஆனால் அதன் நுணுக்கங்கள் நமக்குத் தெரியாமலே ரசித்திருப்போம்.  தெரிந்தால் இன்னமும் ரசிக்கலாமே...



===========================================================================================


ஒவ்வொரு
வளர்பிறையிலும்
வானம் பார்த்தபடி
காத்திருக்கிறேன்
நிலவு
வளர்ந்து
ஒருநாள்
வானத்தையே நிறைக்குமென... 2013

=====================================================================================

நைலான் கயிறு  -  சுஜாதா


சுநந்தாவின் டயரியிலிருந்து
18-9-65

எனக்கு இன்று பதினெட்டு வயசாகிறது. எத்தனை மாறியிருக்கிறேன்! போன வருஷம் தைத்த ப்ளௌஸ் எல்லாம் பிடிக்கிறது. உயரமாக வளர்ந்திருக்கிறேன். கண்ணாடிக்கு முன்னாலே விதவிதமா டிரஸ் லயும் அன்டிரஸ்லேயும் நின்று என்னையே பார்த்துக்கிற மோது வெட்கமாகவும் இருக்கிறது. தொடர்ந்து பார்த்துக் கொள்ள ஆசையாகயும் இருக்கிறது. ரேடியோ  சிலோன் கேட்டு அலுத்துப்போய் விட்டது.  வராந்தாவில் உட்கார்த்து ஆண்களைப் பார்த்து ஒவ்வொருவருக்கும் மார்க்' போட்டுக் கொண்டிருக்கிறேன்.  எல்லாரையும் 'அவ'ரோடு ஒப்பிட்டும் பார்க்கிறேன். இந்த ஒரு வாரத்திலே என் உடம்பிலே புதுசா ரத்தம் ஓடுகிறாற்  போலத் தெரிகிறது!  எதுக்கோ விதம் விதமாக அலங்காரம் செய்துகொள்கிறேன்.

என் அகுமை சுநந்தா. நீ ஒரு பைத்தியம். எப்படிப்பட்ட பைத்தியம்? எழுதாதே! அந்த வார்த்தையை உபயோகிக்காதே!

அவர் கொடுத்த புஸ்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டேன்..  ரகசியமாக!

=======================================================================

சென்ற வாரம் JKC நான் பெரிதாகத்தான் கவிதை எழுதுவேன் என்று குறிப்பிட்டிருந்ததால் வேறு ஏதோ தேடும் கிடைத்த இதை உடனே பகிர்கிறேன்!




==========================================================================================








=============================================================================================

60 கருத்துகள்:

  1. இன்றைய கதம்பம் ரொம்ப சுருக்கமாக இருப்பதாக ஒரு எண்ணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை..  ஆமாம்.  சும்மா ஒரு மாறுதலுக்குதான்...

      நீக்கு
  2. பம்பரம் விளையாட்டில் ஏதும் சாகசம் பண்ணிய நினைவு இல்லை.

    நைலான் கயிறு... படமுள்ள பகுதியாகப் போடவில்லையே என்று தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிலிருந்த படங்களில் சுவாரஸ்யம் இல்லை!  மேலும் சுநந்தாவின் டைரிக்காக பகிர்ந்தேன்!

      நீக்கு
  3. நாய்கள் பற்றி படிக்கும்போது எனக்கு ஒன்று தோன்றியது. மோத் எனப்படும் பூச்சிகள் வீட்டில் பறக்க ஆரம்பித்தன. கொசு மட்டையை வைத்துத் தாக்கிய சில நாட்களிலேயே புதிய பூச்சிகள் தப்பிக்க மேற்கூரையில் ஒட்டியிருக்க ஆரம்பித்தன.

    ஒவ்வொரு உயிருக்கும் தப்பிக்க மூளை செயல்பட்டு புது வழிகளைக் கண்டுபிடிக்கிறது எனத் தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதானே அது?  ஏதோ ஒரு தீவில் குரங்குகள் பழங்களை ஆற்று நீரில் கழுவி உண்டனவாம்.  தொடர்ச்சியாக எல்லா நாட்டிலும் அதேபோன்ற செயல்கள் நடந்தனவாம் என்று படித்திருக்கிறேன்.

      நீக்கு
  4. பாடல் நுணுக்கங்கள்... அதுவாகவே அமைந்துவிடுகிறதா இல்லை போஸ்ட்மார்டம் பண்ணுபவர்கள் அதீதமாக யோசிக்கிறார்களா என்று தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடகர்களும் அவர் எப்படி சில இடங்களை பாடச்சொல்லுவார் என்று சொல்லி இருப்பதைப் பார்த்திருக்கிறேன் / படித்திருக்கிறேன்.  உதாரணமாக வளையோசை கலகலவென பாடலில் அந்த ஆரம்ப இசையில் நேர்ந்த மாற்றம் பற்றி நெப்போலியன் சொன்னது...  இளையராஜாவின் திறமை பற்றியும் நுணுக்கம் பற்றியும் SPB மிக அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார்.

      நீக்கு
  5. பழைய ஜோக்குகள், நகைச்சுவையை எப்படி எழுதுவது என்பதற்குப் பயிற்சிக்கூடமாய், அதாவது evolveஆகியிருக்கிறது. அவற்றையே மேம்படுத்தி பல ஜோக்குகளைத் தயாரித்திருக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எம் எஸ் விஸ்வநாதன் இசைக்கு சொன்னது போல புதிதாக என்று எதுவுமே இல்லை.  ஒன்றிலிருந்து ஒன்று... அதிலிருந்து இன்னொன்று...

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம்!
    பம்பரம் விளையாடுவதில் நாந்தான் மோசம் என்ரு நினைத்தேன், நீங்களுமா? நான் பம்பரத்தில் கய்றை சுற்றுவதற்குள் மற்றவர்கள் இரண்டு மூன்று முறை அபீட் எடுத்து விடுவார்கள். எனக்கு சாட்டை போல் விடுவதுதான் வரும். கோலி கொஞ்சம் பரவாயில்லை. என் அக்கா இதிலெல்லாம் கில்லாடி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா... வணக்கம்.

      ஆ...  நீங்களும் இதெல்லாம்....?  இதெல்லாம் ஆண்கள் விளையாட்டு இல்லையோ?  நாங்கள் எப்போதாவது பாண்டி ஆடுவதில் குறுக்கிட்டிருக்கிறோமா..!

      நீக்கு
    2. யாராவது கேட்பர்கள் என்று எதிர்பார்த்தேன்.. பல்லாங்குழி ஆடியிருக்கிறீர்களே? அது ஆண்கள் விளையாடும் விளையாட்டா?

      நீக்கு
    3. பட்டம் கூட விட்டிருக்கிறோம். கிட்டிப் புள்ளையும் விட்டு வைத்ததில்லை. நான் சுமார்தான், என்னுடைய கடைசி அக்கா தூள் கிளப்புவாள்.

      நீக்கு
    4. // ல்லாங்குழி ஆடியிருக்கிறீர்களே? அது ஆண்கள் விளையாடும் விளையாட்டா? //

      ஹிஹிஹி... காத்திருந்தீர்கள் போல... ஆனால் இதை நான் எதிர்பார்த்தேன்! வீட்டின் உள்ளே ஆடும் விளையாட்டில் ஆணென்ன
      பெண்ணென்ன...

      நீக்கு
    5. கிட்டிப்புள்ளில் கேட்ச் பிடிக்க ஒரு துண்டை இரு கைகளிலும் ஏந்தி காத்திருப்போம்!

      நீக்கு
    6. பட்டம் விட, மாஞ்சா நூல் தயாரிப்பது ஒரு வேலை.  வீட்டில் எல்லாம் கண்ணாடித்துண்டு, பிசுக்கப்பட்ட சாதம் என்று தூள் பறக்கும்.  ஜன்னலுக்கு ஜன்னல் நூல் கட்டி...

      நீக்கு
  8. விருகம்பாக்கத்தில் சந்த்ராமாலுக்கு அருகில் இருக்கும் அலாக்ரிடி அபார்ட்மென்ட்டுக்கு மோகனா அபார்ட்மென்ட் என்று பெயர். தில்லானா மோகனாம்பாள் படத்திற்கு கொத்தமங்கலம் சுப்பு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தில் அவர் ஒரு மாந்தோப்பை வாங்கினாராம். அதை விற்று அபார்ட்மென்ட் ஆக கட்டியபொழுது அவர் குடும்பத்தினர் மோகனா அபார்ட்மென்ட் என்று பெயர் வைக்கும்படி கேட்டுக் கொண்டார்களாம். கொ.சு.வின் மருமகள் என் அக்காவின் தோழி. என் அக்கா மோகனாவில் சில வருடங்கள் வசித்தார்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ.. இது புதிய செய்தி. நான் படித்தது அவரின் ஆரம்ப காலங்கள். இன்னும் இருக்கிறது.

      நீக்கு
  9. ஜோக்குகளை ஏற்கனவே படித்த மாதிரி இருக்கிறதே?
    நைலான் கயிறு சுஜாதாவின் முதல் நாவல். அதில் அவர் படிகளில் ஏறினான் என்னும் வாக்கியத்தில் ஏறினான் என்பதை படிப்படியாகவும், குழந்தைகள் ஸ்கிப்பிங் ஆடிக் கொண்டிருந்தனர் என்பதை ஸ்க்ப்பிங் கயிறு போல வளைவாகவும் எழுதியிருப்பார். நிறைய தடவைகள் படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெவ்வேறு புத்தகங்கள் இடங்களிலிருந்து எடுக்கும்போது சில ஜோக்ஸ் ரிப்பீட் ஆகி விடுகின்றன.  மே பீ...

      ஏறினான் அல்ல....  இறங்கினான் என்பதை அப்படி கொடுத்திருப்பார்.

      நீக்கு
  10. அப்பா பாரதி அம்மா மாலதி
    ---- இந்த நான்கு வார்த்தைகளையும் தனித்தனியாகப் பிரித்தால் எத்தபை தனி வார்த்தைகள் உருவாகும்?
    ஹப்பாடி! தாவு தீர்ந்து போச்சுப்பா! ('தாவு' இன்னுமா ஞாபகத்தில் பதிஞ்சிருக்கு?..)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி ஸார்...   அதை தனியாகவே கொடுக்கணும்னு நினச்சு எடுத்தும் வச்சிருந்தேன்.  அப்புறம் இதுவே போதும்னு விட்டுட்டேன்.    அப் க்கு அப்புறம் ஒரு கோடு கிழித்தால் போதும்!

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. பல்லாங்குழி, தாயகட்டை போல பம்பரம் விளையாட்டு சிறு வயதில் வீட்டில் நானும் ஆசையாக விளையாடியிருக்கிறேன் .வெளியில் சென்று விளையாட தடை. அதனால் நீங்கள் சொல்லும் அதன் நுணுக்கங்களை அவ்வளவாக அறிந்ததில்லை. வீட்டில் நானும் அண்ணாவும் யார் பம்பரம் நீண்ட நேரம் நிற்காமல் சுற்றுகிறது என்ற போட்டி வரும். அண்ணாவும் எனக்காகவும், எங்கள் அம்மாவிற்காகவும் அந்த நேரங்களில் விட்டுத்தந்து ஆடியிருக்கிறார். (வேறு வழி) நீங்கள் மறந்து போன அந்த விளையாட்டு விபரங்களை நன்றாக கூறியுள்ளீர்கள். இப்போதும் இந்த மாதிரி விளையாட்டுகளை கிராமபகுதிகளில் காணலாம். எல்லாவிடத்திலும், இப்போது கிரிக்கெட், இல(ற)கு பந்து விளையாட்டு என காலம் மாறி விட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா.. இது போல கோலிகுண்டு விளையாட்டைப் பற்றி மறுபடி விளக்கமாக எழுத ஆசை!

      நீக்கு
  12. வெய்யில் தொடங்கி விட்டதா? சம்மர் ஜோக்குகள் போட ஆரம்பித்து விட்டீர்களே? இங்கே இப்போதுதான் பாசிடிவ்விற்கு வரலாமா என்று யோசிக்கிறது. குளிர் விடவில்லை. :((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி எல்லாம் பார்த்து போடுவதில்லை.  கைக்கு கிடைப்பதுதான்...  

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    இன்றைய மற்றைய பகுதிகளும் நன்று. சுருக்கமான கவிதையில் இரண்டாவது கண்களுக்கு பதில் விழிகள் வரக்கூடாதா? முதல் கவிதையை படித்ததும் "நிலவு வந்து வானத்தையே திருடி கொண்டது" என்ற பாடல் நினைவுக்கு வந்தது. இரண்டு கவிதைகளும் அருமை. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுருக்கமான கவிதைகள் என்பது நான் ஏற்கனவே இங்கு ஷேர் செய்தது.  சென்ற வாரம் நான் சுருக்கமான கவிதைகள் எழுதுவதில்லை என்று JKC சொல்லி இருந்தார்.  அதற்காக அவரே பதில் சொல்லி இருக்கும் பழைய பதிவிலிருந்து இதை எடுத்துக் போட்டிருக்கிறேன்!

      நீக்கு
    2. நீங்கள் இரண்டு முறை கண்கள் வராமல் எழுத நினைத்ததால்,

      மறுநாள் விடியலில்
      மலரும் விழிகள்

      என்று வரக்கூடாதா என கேட்டிருந்தேன். வேறு ஒன்றுமில்லை. ஒரு சந்தேகம்தான். நன்றி.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இரு கோடு தத்துவம் மாதிரி ஒரு கோட்டையும் போட்டு ரசித்தேன். கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் பகுதியும் சுவாரஸ்யமாக இருந்தது பாடல்கள் விபரம் கேட்கிறேன். "ஓ. வசந்த ராஜா" பாடல் அடிக்கடி கேட்டு ரசித்துள்ளேன். சுஜாதா அவர்களின் நைலான் கயிறு படித்தாக நினைவு

    அந்த நாய் செல்லங்களின் புத்திசாலித்தனம் பிரமிக்க வைக்கிறது . எவ்வளவு நினைவாற்றல், தன் இனமான மற்றவர்களுக்கு உதவும் பண்பு., மனிதன் இதுபோல் இவைகளிடமிருந்து கற்றுக் கொள்ளுவது ஏராளமாக உள்ளது.

    ஜோக்ஸ் அனைத்தும் அருமை. இரண்டு ஜோக்ஸ் ஏற்கனவே இங்கு வந்து படித்துள்ளேன். அருமையான கதம்ப பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா.. சட்டென படித்து முடிக்கும் அளவுதான் இன்று பகிர்ந்துள்ளேன் என்பது எனக்கே பெருமையா இருக்கு!!!

      நீக்கு
    2. உண்மை. இன்று பதிவு அளவாக சிறிய(சிறப்பான)தாகத்தான் உள்ளது. அடுத்த வியாழனை ( என் வியாழன் பெயர்ச்சிக்குப்பிறகு) பிறகு வந்துதான் படிக்க இயலும். அதனால் இன்று கிடைத்த காலைப்பொழுதில் இன்றைய வியாழனை இடம் விட்டு பெயரால் ஒரே மூச்சாக படித்து விட்டேன். நன்றி.

      நீக்கு
    3. அடடே... ஆமாம்ல... உங்கள் பிரார்த்தனையை அடுத்த வாரம் மிஸ் செய்வோம்!

      நீக்கு
  15. ஒன்றைப் படித்தால் அதன் தொடர்ச்சியாய் மனம் வெவ்வேறு விஷயங்களோடு
    முடிச்சுப் போட்டுக் கொள்வது கற்பனையின் அதி உன்னதம்.
    சுநந்தாவுக்கு '65 வருடத்தில் 18 வயதாகிறது.
    எனக்கு? 22. தொலைபேசி இலாகாவில் பணியில் சேர்ந்து இரண்டு வருடம் கழிந்தது.
    1965-ல் பவானியில்.
    ஆஹா! பவானியின் கூடுதுறையும் சங்கமேஸ்வரர் கோயிலும் எவ்வளவு அழகு.
    பவானியையும் குமாரபாளையத்தையும் பிரிப்பது காவிர் ஆறு.
    அந்தப்பக்ஜ குமாரபாளையம் சேலம் மாவட்டம் சேர்ந்தது என்றால் இந்தப் பக்க பவானி கோவை மாவட்டம் சார்ந்தது.
    --- இப்படியான மன ஊர்வல சாத்தியம் வாய்ந்தவர்கள் பாக்யசாலிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இது மாதிரி நினைவுகள் ஊர்வலமாக வரும்.  இனிய நினைவுகள்தான்.

      நீக்கு
  16. ​பம்பரம் 'அழியாத கோலங்களை' திரையிட்டது. அது ஒரு பொற்காலம். விளையாட்டில் பலவிதங்கள். தற்போது செல் போன், செல் போன் மட்டுமே.
    அதே போல் பள்ளியில் விளையாட்டு பீரியடில் ஒரு முறை பந்தை தடுக்கிறேன் என்று நெஞ்சில் பந்தை வாங்கி பிளாட் (மயக்கம்) ஆகிவிட்டேன். கண் முழித்தபோது ஆசிரியர் டபராவில் காபியை வைத்துக்கொண்டு குடிக்கச் சொல்கிறார். அதற்க்கு பிறகு எனக்கு மட்டும் விளையாட்டில் இருந்து விலக்கு.

    இரவில் உறங்கும்
    விடியலில் மலரும்
    கண்கள்

    ஒன்று கலந்திடும் நெஞ்சம்
    உறவை நாடி கெஞ்சும்
    கண்கள் உறங்கிடுமா
    காதல் கண்கள் உறங்கிடுமா
    காதல் கண்கள் உறங்கிடுமா

    ஜோக்குகள் இரண்டு ரிப்பீட்.
    கொண்டைப்பூ மலர்ந்தது கொஞ்சம் யோசிக்க வைத்த ஜோக்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயக்குமார் ஸார்...   நீங்கள் திருத்தம் சொல்லி இருப்பது பழைய கவிதையில்..  புரிந்திருக்கும் என்றே நம்புகிறேன்.  

      உங்கள் நினைவுகளையும் கிளறி விட்டதில் சின்ன சந்தோஷம்...  நான் அப்போதெல்லாம் துடியாய் இருப்பேன்.  ஆனால் பந்துதான் என் காலுக்கு சிக்காது!  அதற்கு என்னைக் கண்டால் பயம்!  அழியாத கோலங்கள்..  நல்ல உவமை.  நான் எண்ணும்பொழுது பாடலை நினைவுபடுத்தி விட்டீர்கள்.

      நீக்கு
  17. இன்று நந்தி ஜனனம்
    திரு ஐயாற்றுக்குப் பயணம்...

    வாழ்க உலகெலாம்...

    பதிலளிநீக்கு
  18. கொத்தமங்கலம் சுப்பு! வாசிக்க வாசிக்க
    வழுக்கிக் கொண்டு செல்லும் எழுத்தின் அழகு!
    தில்லானா மோகனாம்பாளும் ராவ் பகதூர் சிங்காரமும்!
    அம்மாடி;! நினைத்தாலே சந்தோஷம் தான்!
    மனதுக்குள்ளேயே முனகிக்கிறேன்
    அலங்கீலத்தையெல்லாம் அழகு என்று போற்றும் காலமிது!
    வெளிப்படச் சொன்னால் யாரேனும் குப்பை என்று தூஷனை செய்து விடுவார்களோ என்று நெஞ்சம் பதறுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீ வி அண்ணா விசாரிச்சீங்களாமே என்னை! காணலைனு. ஸ்ரீராம் சொன்னார்.

      நன்றி ஜீவி அண்ணா.

      கீதா

      நீக்கு
    2. ரசித்தால் சரி... ரசித்ததற்கு நன்றி. பகிர்வு வீணாகவில்லை!

      நீக்கு
  19. இன்டோர் கேம்ஸ் என்றதும் வேற எதையாவது எழுதாமல் இருந்தீரே என்று இன்னொரு எழுத்தாள உறுப்பினரும் சொன்னார்கள்.//

    இந்தக் கருத்துக்கெல்லாம் தடா இல்லையா?!!!!!! அங்கு?

    கீதா

    பதிலளிநீக்கு
  20. பம்பரம் உங்க அனுபவங்கள் சிரிக்க வைத்தன, ஸ்ரீராம்.

    அதென்னவோ தெரியவில்லை, நான் பெரும்பாலும் பசங்க கூடதான் விளையாடியிருக்கிறேன் பம்பரம், கிட்டிம்புல் என்று.

    அப்ப பசங்க என்னை எப்படி சேர்த்துக்குவாங்கன்னா, ரெண்டு டெஸ்ட். ஒன்று ஒரு வட்டம் வரைவாங்க சின்னதா. அந்த வட்டத்துக்குள்ள நான் பம்பரத்தை விடணும் அது அங்க சுத்தனும். இன்னொன்று குத்து. ஃபெயிலாகி ஃபெயிலாகி, பெண்பிள்ளைகள் இந்தாட்டத்துக்கு வரக் கூடாதுன்னு சொல்லி கேலி பண்ணி ரோஷம் வந்து பாரு நானாச்சு வுட்டு காட்டறேனா இல்லையான்னு வுட்டு சேர்ந்தேன் கூட்டத்துல.

    இதெல்லாம் 5, 6 ஆப்பு படிக்கையிலே. அப்புறம் நாரோயில்ல வந்தப்புறம் ம்ஹூம் வாசப்படி கூடத் தாண்டக் கூடாது!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளையாட்டின் முறை பற்றி நான் கொடுத்திருந்த 'லிங்க்'குக்கு யார் யாரெல்லாம் போனீங்க...  கை தூக்குங்க...

      நீக்கு
  21. இண்டோர் கேம்ஸ் கூட ரொம்ப அரிது. யாரும் இல்லைனாதான்.....அந்தக் கதை எல்லாம் வேண்டாம்...இப்ப

    கீதா

    பதிலளிநீக்கு
  22. கீதாக்கா, நீங்களும் என்னைக் காணலைன்னு தேடினீங்க போல. ஸ்ரீராம் சொன்னார். நன்றிக்கா. உங்களுக்குத் தெரியுமேன்னு நினைச்சேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறந்திருப்பார்.  அவர் இன்று இன்னும் வரலையே..

      நீக்கு
    2. நான் தினமும் என்னோட் நேரம் ஏழரைக்கு இணையத்தில் படிக்கவோ, எழுதவோ வருவேன். அதே போல் இன்னிக்கும். ஆனால் உங்களுக்கெல்லாம் பத்து மணிக்கு மேல் ஆகி இருக்கும். காலை சீக்கிரமே எழுந்தாலும் உடனே எல்லாம் கணினியைத் திறந்து கொண்டு உட்காருவதில்லை.முக்கியமாக் கண்கள் பிரச்னை. அடுத்து ரொம்ப நேரம் உட்கார முடியாத பிரச்னை.

      நீக்கு
    3. தி/கீதா சொல்லி இருந்தீங்க தான். நான் தான் மறந்திருக்கேன். :))

      நீக்கு
  23. பம்பர விளையாட்டெல்லாம் எனக்கு ஜுஜுபி என ஏற்கெனவே சொல்லி இருக்கேன். தம்பிக்காக நான் உட்புகுந்து விளையாடி அபீட் எடுத்த கதைகளை எல்லாம் பகிர்ந்தாச்சு. ஆகவே நோ ரிப்பீட்! பம்பரம் மட்டும் இல்லை, கோலிக்குண்டுகளைப் பெரிது பெரிதாக வாங்கித் தெருவில் ஓர் இடத்தில் கொஞ்சம் நீள் சதுரத்தில் சுத்திக்கரை கட்டிப் பள்ளம் போல் சின்னதாகத் தோண்டி அதில் எல்லோருடைய கோலிகளையும் போட்டுவிட்டு மற்றொருவரின் மிகப் பெரிய கோலிக்குண்டால் அடித்துத் தகர்க்கணும். இதுக்குப் பயன்படுவது சிகரெட் அட்டைகள். இதுக்காகவே தெருத்தெருவாப் பொறுக்குவோம். ஒவ்வொரு சிகரெட் அட்டைக்கும் அதன் ப்ரான்டைப் பொறுத்துத் தனி மதிப்பு. இதையும் தம்பிக்காகவே நான் விளையாடி ஜெயிப்பேன். ஹிஹிஹி, எல்லாம் அப்பாவுக்குத் தெரியாமல் தான். தம்பியின் நண்பர் படை எனக்காக ஒற்றுவேலைகள் எல்லாம் செய்து அப்பா வரும்போது சிக்னல் கொடுக்கும். உடனே வீட்டுக்குள் வந்து மாடிக்குப் போய்ப் புத்தகத்தை வைத்துக் கொண்டு ரொம்பவே தீவிரமான படிப்பில் ஆழ்ந்து விடுவேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!