2.5.26

வாரம் ஒரு பாசுரம் தொடர் - பகுதி 18 -- நான் படிச்ச கதை

              

                நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்

நெல்லைத் தமிழன்

குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 18 

ஆளவந்தார், நமக்குப் பின்பு, இந்த தரிசனத்தின் அர்த்தங்களை விவரித்து பொருள் கூறி, பலரையும் நல்வழிப்படுத்தும் தலைவரை இன்னும் பெற்றிலனே என்று வருத்தப்பட்டு, இளையாழ்வாரை, யாதவப் பிரகாசருடனான உறவை அறுத்து நம் வைணவ குலத்தோடு சேர்ப்பார் உண்டோ என்று மனதில் விசனப்பட்டார். அப்படியே காஞ்சி பேரருளாளரை நினைத்துப் பிரார்த்தித்துக்கொண்டார் என்று சென்ற வாரம் முடித்திருந்தேன்.. 

இந்தச் சமயத்தில் காஞ்சீபுரத்தில் யாதவப்பிரகாசர், இளையாழ்வாருக்குப் பாடம் சொல்லிக்கொண்டு வரும்போது, அவர் வேத வாக்கியங்களுக்குப் பொருள் உரைக்கும்போது, இளையாழ்வார், அந்த வாக்கியங்களின் அர்த்தம் இதுவல்ல, விசிஷ்டாத்வைதமாக பொருள் கொள்ளவேண்டும் என்று விளக்கினார். யாதவப் பிரகாசருக்கு தன்னை மீறி இளையாழ்வார் பொருள் சொல்வது பிடித்தமாயில்லை. அதனால் நான் சொன்னபடி கேட்டுக்கொண்டிருந்தால் இங்கு என்னிடம் பாடம் கேட்கலாம், இல்லையென்றால் என்னைவிட்டு விலகிப்போய்விடும் என்று சொல்லிவிட்டார். 

இந்த இடத்தில் வேதாந்தத்தின் மூன்று முக்கியப் பிரிவுகளான அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் ஆகியவை சொல்வது என்ன? அதன் வித்தியாசம் என்ன என்பதைப் புரிந்துகொள்வோம். 

இந்த மூன்று தத்துவங்களும், ஜீவாத்மாவிற்கும் (உயிர் அல்லது ஆத்மா) பரமாத்வாவுக்கும் (இறைவன்) இடையேயான உறவு என்ன என்பதை விளக்குகின்றன.  அத்வைதம் ஆதிசங்கர ருடைய தத்துவம். விசிஷ்டாத்வைதம் இராமானுஜருடையது. த்வைதம் மத்துவாச்சார்யருடையது. 

த்வைதம் என்றால் இரண்டு என்று பொருள். ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இரண்டும் வேறுபட்டவை. இறைவன் வேறு. ஜீவாத்மா வேறு. அரசனுக்கும் அடிமைக்கும் உள்ள வேறுபாடு. பக்தி செய்வதன் மூலமாக மோட்சத்தை அடையலாம். 

அத்வைதம் என்றால் இரண்டு அல்ல என்று பொருள். அதாவது இறைவன் மாத்திரமே உண்மை. மற்ற எல்லாமே மாயை.  ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே. கடல் என்பது பரமாத்மா என்றால், கடலின் ஒரு துளி ஜீவாத்மா. சுருக்கமாக அஹம் ப்ரம்மாஸ்மி என்ற தத்துவம். 

விசிஷ்டாத்வைதம் என்பது சிறப்புடைய அத்வைதக் கொள்கை. அதாவது ஜீவாத்மாக்கள் பரமாத்மாவிடமிருந்து வேறு பட்டவர்கள், ஆனால் பிரிக்க முடியாதவர்கள். 

சுருக்கமாக, அத்வைதம்-நானே கடவுள். அதாவது எனக்கும் கடவுளுக்கும் வேறுபாடு கிடையாது. த்வைதம்-நான் வேறு கடவுள் வேறு. அவர் அரசன் என்றால் நான் அவருக்குக் கட்டுப்பட்ட வேலைக்காரன்.  விசிஷ்டாத்வைதம்-கடவுளின் ஒரு பகுதி நான். 

கொஞ்சம் தலையைச் சுத்துதா?  வேதாத்ரி மஹரிஷி இதனை விளக்கியிருக்கிறார். அதனை அப்படியே தருவது சரியாக இருக்கும். 

த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் : - மஹரிஷியின் விளக்கம். 

நீங்கள் வெளியூருக்கு செல்கிறீர்கள்; அங்கு பகல் உணவு கிடைக்காது என்பதால் ஒரு உணவுப் பெட்டியில் (Tiffen Box) உணவை எடுத்துச் செல்கிறீர்கள். இப்போது நீங்கள் வேறு உணவு வேறு. பிறகு பகல் ஒரு மணி அளவில் அந்த உணவை உண்ணுகிறீர்கள். இப்போது அந்த உணவு பெட்டியில் இல்லை உங்களுக்குள் சென்றுவிட்டது. 

இவ்வளவு நேரம் அந்த உணவும் நீங்களும் தனித்தனியே இருந்தாலும் இப்போது ஒன்றாகி விட்டீர்கள். இப்போது உங்களை நினைத்துப் பாருங்கள். நீங்கள் யார்? இதுவரையில் நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள மொத்த உணவின் சாரம் (essence) தானே? 

அணு நிலையில் உடலும் ஒன்றே. சிவம் என்ற இருப்பு நிலையிலிருந்து சக்தியெனும் விண் மலர்ந்தது. சில விண் துகள்கள் உடலாயின. சில விண் துகள்கள் உணவாயின. இதனால் உடலும் உணவும் தோன்றிய மூலப்பொருள் அணுவே. இங்கு அத்வைதம் துவைதமாயிற்று. 1 மணிக்கு நீங்கள் வேறு, அந்த உணவு வேறு. 5 மணிக்கு நீங்களும் அந்த உணவும் இரண்டறக் கலந்து ஒன்றாகி விட்டீர்கள். 1 மணியிலிருந்து 5 மணி வரை நடைபெற்ற வேலைக் கிரமம் (Process) இருக்கிறதே, அதுதான் விசிஷ்டாத்வைதம். 

மனிதன் அத்வைதம் என்பதையும், த்வைதம் என்பதையும் உணர்ந்து கொள்கிறான். த்வைதம் என்ற நிலையிலிருந்து, உண்மையைப் புரிந்து கொண்டு, இயற்கையின் ஒழுங்காற்றலைப் புரிந்து கொண்டு, தன்னை உயர்த்திக் கொண்டு அத்வைதம் என்ற நிலைக்கு சென்றடைகிறான். இந்த செயல் ஒழுங்கு (Process) தான் விசிஷ்டாத் வைதம். அதை தனித் தன்மையுள்ள அத்வைதம் (Special advaitha) என்பதும் பொருந்தும். 

இவ்வாறான உண்மைகளைத் தெளிவாக உணர்ந்து கொள்ளாமல், த்வைதம் ஒன்றுதான் கடவுளை அடையவழி என்றும், அத்வைதம் ஒன்றுதான் கடவுளை அடையவழி என்றும், சண்டையிட்டுக் கொண்டு மக்களில் பலர் தங்களைக் குழப்பத்திலாழ்த்திக் கொள்கிறார்கள். 

ஒவ்வொரு பொருளுக்கும், நிகழ்ச்சிக்கும் மூன்று அடிப்படைக் கொள்கைகள் (Principles) உண்டு. “எல்லாம் ஒன்று” என்பது அத்வைதம். ஒவ்வொன்றும் அதனதன் தனித்தன்மைக்கும் குணாதிசயங்களுக்கும் ஏற்ப ஒன்றுக்கொன்று ‘மாறுபடுகிறது’ என்பது த்வைதம். எல்லாமே பகுத்துக் கொண்டே வரப்படும்பொழுது (While disintegrating) அணுவாகி பின்னர் ரமாகிறது என்பது விசிஷ்டாத்வைதம். 

இப்படி வேதாத்ரி மஹரிஷி விளக்குகிறார். அவர் கருத்தைச் சுருக்கமாகப் புரிந்துகொள்ளணும்னா, 

நமக்கு முன் வைக்கப்பட்ட உணவு – நாம் வேறு உணவு வேறு – த்வைதம்

வயிற்றுக்குள் உணவு – அது நம்முடன் இரண்டரக் கலக்கும் செயலில் உள்ளது – விசிஷ்டாத்வைதம்

செரிக்கப்பட்ட, சத்தாக மாறிய உணவு – அத்வைதம் – இரண்டறக் கலந்துவிட்டது. 

சித், அசித், ஈஸ்வரன் என்ற  தத்துவங்களை உள்ளடக்கியது வேதாந்தம். நாம் இதனை விட்டுவிட்டு, நம்முடைய குலப் பெரியவர்கள் என்ன செய்தார்கள், எப்படி தங்கள் ஆன்மா முன்னேற்றத்திற்கான பாதையில் நடந்தார்கள் என்பதைத் தெரிந்து நாமும் அந்த வழியிலேயே சென்றால் நல்கதி அடையலாம் என்பது என் எண்ணம். 

சரி… நாம் யாதவப் பிரகாசர், இளையாழ்வாரை, தன் சொல்படி கேட்டுப் படிக்காவிட்டால் தன்னிடம் கற்க வேண்டாம் என்று சொன்னதும் என்ன நடந்தது என்று பார்ப்போம். 

இளையாழ்வாரும் யாதவப் பிரகாசர் வேதாந்தத்திற்குப் பொருள் சொல்வது தன் கருத்துக்கு மாறுபட்ட தாக இருக்கிறது, நம் கருத்தில் பிழை இருக்கிறதா என்று ஆராயாமல், தான் சொல்வதைத் தவிர வேறு அர்த்தம் இல்லை என்று பிடிவாதமாக இருப்பதால் இவரிடம் தனக்குக் கற்றுக்கொள்ள ஒன்றும் இல்லை என்ற நிச்சயத்தினால், அவரை விட்டு விலகினார். 

தன் தாயாரிடம் சென்று நடந்ததைத் தெரிவிக்க,  அவரும் இளையாழ்வாரைப் பார்த்து, தீய வழிகளில் சேர்ந்த யாதவப் பிரகாசரை விட்டு விலகியது நல்லதே, நீர் இதுவரை படித்தது போதும், திருக்கச்சி நம்பியைச் சேவித்து அவர் சொல்படி கேட்டு நடவும் என்று சொன்னார். 

இளையாழ்வாரும் அது கேட்டு, திருக்கச்சி நம்பிகளிடத்தில் சென்று, அடியேன் என்ன கைங்கர்யம் செய்யலாம் என்று நியமித்தருள வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டார். அதற்கு திருக்கச்சி நம்பி, மனமகிழ்ந்து, பெருமாளுக்கு தினப்படி திருவாராதனத்திற்கு சாலைக்கிணற்றிலிருந்து ஒரு குடம் நீர் எடுத்து சமர்ப்பியும் என்று சொன்னார். அவ்வண்ணமே தினமும் அந்தக் கைங்கர்யத்தை இளையாழ்வார் செய்யத் தொடங்கினார். 

இந்தச் சமயத்தில் திருவரங்கத்தில் ஆளவந்தார் சிறிது உடல் நலமில்லாமல் இருந்தார் (ஆச்சார்யர்களைப் பற்றிச் சொல்லும்போது திருமேனியில் நோவு சார்த்திக்கொண்டிருந்தார் என்றே சொல்வர்). 

திருவரங்கத்தில் அப்போது இருந்த ஆளவந்தாரின் முக்கியச் சீடர்கள் மூவர். ஆளவந்தாரின் குமாரர் திருவரங்கப் பெருமாள் அரையர். அவர் திருவரங்கப் பெருமாளுக்கு தினப்படி கைங்கர்யங்களைச் செய்துகொண்டிருந்தார். மற்ற இருவர் திருக்கோஷ்டியூர் நம்பி மற்றும் பெரிய நம்பி.  (பெரிய திருமலை நம்பி திருப்பதியில் கைங்கர்யங்கள் செய்துகொண்டிருந்தார். திருக்கச்சி நம்பி காஞ்சீபுரம் தேவப்பெருமாளுக்கு ஆலவட்ட மற்றும் புஷ்பக் கைங்கர்யங்கள் செய்துகொண்டிருந்தார்) 

திருக்கோஷ்டியூர் நம்பியும் பெரிய நம்பியும், திருவரங்கப் பெருமாள் அரையருடன் சென்று ஆளவந்தாரைக் கண்டு, அவரை வணங்கி, தங்களுக்கு நல்ல உபதேசங்களைச் சொல்லவேண்டும் என்று வேண்டினர். 

அதற்கு ஆளவந்தார், நான் மறைந்துவிடுவேன் என்று வருந்தவேண்டாம். நான் பெறப்போகும் பரமபதமாகிய பேற்றினை எண்ணி சந்தோஷப்படுங்கள். எப்போதும், 

திருவேங்கடமுடையான் உயிர்நிலை அறிந்திருக்கும் குறும்பறுத்த நம்பியையும் பேரருளாளப் பெருமாள் உயிர்நிலை அறிந்திருக்கும் திருக்கச்சி நம்பியையும் பெரிய பெருமாள் உயிர்நிலை அறிந்திருக்கும் திருப்பாணாழ்வாரையும் திருப்பாணாழ்வார் உயிர்நிலை அறிந்திருக்கும் திருவரங்கப் பெருமாள் அரையரையும் காட்டியருளி, 

பெரிய பெருமாள் உயிர்நிலை அறிந்திருக்கும் விக்ரஹமே அடியேனுக்கு உபாயம் உபேயம் என்றார். அப்படி என்றால் என்ன அர்த்தம் என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம். 

இனி இன்றைய பாசுரம். 

அமலன் ஆதிபிரான்* அடியார்க்கு என்னை ஆட்படுத்த

விமலன்* விண்ணவர்கோன்* விரையார் பொழில் வேங்கடவன்**

நிமலன் நின்மலன் நீதி வாணவன்* நீள் மதிள் அரங்கத்தம்மான்* திருக்

கமல பாதம் வந்து* என் கண்ணில் உள்ளன ஒக்கின்றதே 

இந்தப் பதிகத்தை இயற்றியது திருப்பாணாழ்வார். அவர் பாடிய ஒரே பிரபந்தம் இது. அவரது சுருக்கமான வரலாற்றை அடுத்த பதிவில் எழுதுகிறேன். திருப்பாணாழ்வார் குலங்களில் தாழ்ந்த குலம் என்று அறியப்பட்ட (அந்த காலகட்டத்தில்) பாணன் குலத்தில் பிறந்தவர். அந்தப் பதிகத்தில் உள்ள பத்துப் பாசுரங்களில் முதல் பாசுரம் இது. 

பொருள்: குற்றமற்ற, உலகத்தைப் படைத்த மூலவனான எம்பெருமான், தன்னுடைய அடியார்க்கு என்னை ஆட்படுத்திய தன்மை கொண்டவன். தேவர்களின் தலைவனானாவன், மணம் வீசும் சோலைகள் கொண்ட திருமலையில் வசிப்பவன். அவன் குற்றங்கள் இல்லாதவன், தூய்மையானவன், நீதிய வழங்குபவன். அப்படிப்பட்டன், நீண்ட மதில்களைக் கொண்ட திருவரங்கத்தில் உறைபவன். அவனுடைய அழகான தாமரை போன்ற திருவடிகள் என் கண்ணில் நிலைத்து நின்றுவிட்டன. (என்னுடைய பார்வை அந்தத் திருவடிகளில் பதிந்துவிட்டது என்கிறார். வேறு பக்கம் திரும்பும் எண்ணமே வரவில்லை என்று அர்த்தம்) 

விளக்கம்: 

இந்தப் பாசுரத்தில் அமலன், விமலன், நிமலன், நின்மலன் ஆகிய வார்த்தைகளுக்கு பொதுவான அர்த்தம் ஒன்றே. இருந்தாலும் இடத்தைப் பொறுத்து பொருள் சிறிது மாறும். 

எம்பெருமானாகிய அரங்கநாதன் மிக உயர்ந்தவன். குலத்தில் தாழ்ந்தவனாகிய தான் கோயிலுக்குள் நுழைந்தால் அந்த இறைவனுக்குக் குறை வந்துவிடும் என்று நினைத்திருந்தாராம் திருப்பாணாழ்வார். ஆனால் தான் கோயிலுக்குள் நுழைந்தபின்னும் அவனுக்கு ஒரு குறையும் வரவில்லை என்பதைக் கண்டு, அரங்கனை, ‘அமலன்’ என்று விளித்தாராம். 

லோகசாரங்க மாமுனிவரிடம், நம் பாணனை தோள்மேல் தூக்கிக்கொண்டு வாரும் என்று சொன்னதால், தன்னுடைய சிறுமையைப் பாராமல், எம்பெருமானின் அடியாருக்குத் தன்னை ஆட்படுத்திய தன்மையை விமலன் என்ற சொல்மூலம் கூறுகிறார். 

தன்னிடம் ஐஸ்வர்யம் மிகுந்திருந்தும், தன்னுடைய அடியார்க்கு எளியவனாக இருக்கும் தன்மையைக் கொண்டு அந்த இறைவனை ‘நிமலன்’ என்கிறார். 

தன்னுடைய அடியவர்களின் குற்றங்களைப் பாராத தன்மையை ‘நின்மலன்’ என்ற சொல்மூலம் கூறுகிறார்.


அடுத்த வாரம் தொடர்வோம்...
=========================================================================

நான் படிச்ச கதை - பானுமதி வெங்கடேஸ்வரன்

வழி மயக்கம்

பாலகுமாரன்

அப்ப… நான் வரட்டுமா பிந்து…

அவன் கைகளிரண்டையும் நாற்காலிப் பிடிகளில் ஊன்றிக் கொண்டான். கால்கள் செருப்பைத் துழாவின. கண்கள் அவளில் நிலைத்தன.

வலது கையிலுள்ள வளையல்களை ஏற்றி இறக்கிக் கொண்டிருந்தவள் இவனைப் பார்த்தாள். கண்களை ஒருதரம் அழுந்த மூடித் திறந்து மெலிதாக இவனைப் பார்த்துச் சிரித்தாள். மீண்டும் குனிந்து முழங்கையில் ஊன்றியிருந்த வளையல்களைத் தளர விட்டாள்.

முடிஞ்சா…நாளைக்கும் வரேன்… இவன் கால், இடது செருப்புக்குள் நுழைந்து கொண்டது.

இருங்கோளேன்… என்ன அவசரம்… ஏதாவது வேலையிருக்கா… தலையில் முடிந்திருந்த ரிப்பனைச் சொடுக்கி இழுத்தாள். ‘பம்’மென்று விடுதலையாகிச் சுருள் சுருளான கூந்தல் தோளில் படர்ந்தது.

புஸ்மாஸூரி, புஸ்மாஸூரி என்று இவன் மனது கூவிற்று. ஏதாவது ப்ரோக்ராம்னா சரி. ஒன்னுமில்லேங்கறபோது… கொஞ்சம் இருந்து பேசிட்டு போகலாமில்லையா…நான் வற்புறுத்தலே…உங்களாலே…

OK… அவள் வார்த்தைக்குத் தேடும்முன் இவன் நாற்காலியில் அழுந்திச் சரிந்தான். இடது கால் செருப்புக்குள்ளேயே இருந்தது. வலது காலை விரைத்துத் தளர்த்தினான். பின் பக்கம் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான். கழுத்துப் பட்டையில் வியர்வை கசகசத்தது, வெளி வெய்யிலின் பளீரைக் கண்களை மூடிக் கொண்ட பின்னரும் உணர முடிந்தது. கூந்தல் பம்மி அவள் தோளில் படர்ந்த மாதிரி தன் மேலும் குப்பென்று ஒரு குளிர் காற்று சரிய ஆசைப்பட்டான். ஹாலின் நடுவில் சுற்றிக் கொண்டிருந்த பாஃனிலிருந்து லேசான காற்று வெப்பத்தோடு காலை மட்டும் நக்கிக் கொண்டிருந்தது.

இவன் கண்களைத் திறந்தான். இத்தனை நேரம் அவளோடு பேசிய பேச்சுக்களின் சாரம் மண்டைக்குள் கனத்தது. அதிகம் காட்டிக் கொண்டு விட்டோமோ என்ற கேள்வி நெஞ்சைக் குடைந்தது. அடிக்கடி இந்தத் தப்பைப்பண்ணி விடுவதற்காக இவன் வெட்கப்பட்டான். அப்படிச் செய்துவிட்டு வெட்கப்படுவதற்காகவும் வெட்கப்பட்டான். அந்த வெட்கத்தைப்போக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

இவளுடைய அனுதாபம் எனக்குத் தேவையாய் இருக்கு. சுகமாய் இருக்கு. இவளுடைய அனுதாபம் எனக்குத் தேவைப்படறதினாலே, இவநட்பு தேவைபடறதினாலே இவ அனுதாபத்துக்கு முயற்சிக்கிறேன். முடிவில்லாம என் மேல் இவ அனுதாபப்படனும்னு என்னைப்பத்தி முழுசும் சொல்லிடறேன். முடிவில்லாம அனுதாபம் கிடைக்குமோ. முடிவில்லாத பொருள் தான் எது இந்த ஒலகத்தில? எனக்குத் தெரிஞ்சு எதுவுமில்லே. இன்னும் கேட்டா, என்னைப் பொறுத்தவரையில் எல்லாம் முதலாகிறப் போவே முடிஞ்சு போறது. இவ நட்பும்… இப்படித்தான் போயிடுமோ… நோ. விடப்படாது. திரும்பி அதே தப்பைப் பண்ணப்படாது. இவ நட்பு எனக்கு வேணும். இல்லேன்னா முறிஞ்சு போய்டுவேன். இவ நட்பு எனக்கு வேணும்னா இவ கிட்டேயிருந்து நான் ஒரு அடி தள்ளியே நிக்கணும். என் மனசின் ஒரு ஓரத்தை ஒளிச்சே வச்சுக்கணம். என்னிக்குத் தான் கத்துக்கப்போறே அம்பி, இதையெல்லாம் என்னிக்குத்தான் கத்துக்கப்போறே. Come on Get up, விலக்கிண்டு வெளியே போடா, மனசுக்குள் உரக்கச் சொல்லிக் கொண்டான்.

கழுத்தைத் திருப்பி இவளைப் பார்க்கையில், அவள் இவனையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

முதுகை உந்தி நேராய் உட்கார்ந்து கொண்டான்.

அப்புறம்… வேறென்ன… ஒரு பெரு மூச்சுடன் வார்த்தைகள் புரண்டு வந்தன. தன்னைப் பற்றிய பரிதாபம் முகத்தில் படர, கிராப்பை ஒதுக்கிக் கொண்டு, வேறென்ன இருக்கு…சொல்லுங்கோ.

அவள் கண்களின் ஓரம் ஈரம் பளபளத்துக் கொண்டிருந்தது. இமைகளின் பட படப்பை அடக்கி நிறுத்துவதன் மூலம் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சிப்பது தெரிந்தது.

உங்களெ ஒண்ணு கேக்கறேன்… தப்பா நினைச்சுக்காதீங்கோ… உங்க எல்லா எழுத்திலேயும் நீங்க இருக்கேளா… நீங்க எழுதறதெல்லாம் உங்களைப் பத்திதானா- கடைசியா சொன்னேளே, அந்தக் கவிதை கண்ணைப் பிடுங்கும் ரத்தப் பூவே, உனக்குத் தந்தை நானடா மகனேன்னு…அதுலகூட நீங்க இருக்கேளா.

இந்தத் தடவை அவள் அனுதாபம் அவனுக்கு அன்னியமாய்ப்பட்டது… இல்லை, என்று சொல்ல வேண்டும் என்கிற முடிவு மனதுக்குள் ஏற்பட்டுவிட்டாலும், ஒருகணம் கண்ணைச் சுருக்கி யோசிப்பதுபோல் பாவனை செய்தான். பிறகு வெகு இயல்பாய் தோளை குலுசுகிக் கொண்டு சிரித்தான்.

நோ…யூ ஆர் ராங்… முழுக்க முழுக்க எல்லாமே தானாய் தன் எழுத்தில் எவனும் இருக்கிறதில்லே. பிறத்தியார் விஷயத்தெ தன்னுதா பாவிச்சிண்டு எழுதறதும் உண்டு, நீங்கக் கூடத்தான் ஒரு கதை ஆரம்பிச்சிருக்கேள்.. மதன் மாலாவை அணைத்துக் கொண்டான்னு…யாரந்த மதன் உங்களுக்குத் தெரியுமா…அந்த மாலா நீங்கதானேன்னு நான் கேட்டா…

சே… நா ஒண்ணும் அந்த மாலா இல்லே, அது முழுக்கதை. அசல் கதை, வெறும் கதை. அவள் வெட்கத்துடன் சிணுங்கினாள்.

இவனுக்குச் சந்தோஷமாய் இருந்தது.

என்னுதும் அப்படித்தான் பாதி கதை, பாதி நிஜம். அதுல எது நிஜம், எது கதைன்னே, நிஜமா எனக்குத் தெரியலே. எல்லாமே எல்லாமே கதையா இருக்கு. வரட்டுமா … I am tired…போய் கொஞ்சம் உடம்பச் சாய்க்கணும். நாளைக்குப் பாக்கலாம். வலது காலை மடக்க செருப்பை நாற்காலிக்கடியிலிருந்து இழுத்துக் காலில் மாட்டிக் கொண்டான். விரைப்பாய் எழுந்துச் சட்டையை உதறிக் கொண்டான். அவளும் எழுந்தாள்.

சிகெரெட் பெட்டி இங்கே இருக்கு. நாற்காலியின் பின்பக்கம் விழுந்து விட்டிருந்த பெட்டியைக் குனிந்து எடுத்தாள்.

‘தீர்க்க சுமங்கிலி பவ’… இவன் மனசுச்குள் சொல்லிக் கொண்டான். வரட்டுமா. அவள் கண்களைச் சந்திக்காமல் சிகரெட்டை வாங்கிக் கொண்டான். சிகரெட்டைக் குறைச்சுக்கோங்கோ… பேசிண்டிருந்த ஒரு மணி நேரத்திலெ அஞ்சு பிடிச்சுட்டேள். இது எதுல கொண்டுபோய் விடும் தெரியுமா? அவள் குரலின் தழதழப்பு அவனுக்கு வேதனையாய் இருந்தது. கொஞ்ச கொஞ்சமா நிறுத்திடுங்கோளேன்…

ப்ச்ச்… அவள் சொல்லியே நான் நிறுத்தலே நீங்க சொல்லித்தானா நிறுத்தப் போறேன். இது இல்லாம என்னால் முடியாது. நாளைக்கு வரேன். புத்தகங்களை எடுத்துக் கொண்டு வாசலைத் தாண்டி வெய்யிலில் இறங்கினான். அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

பை…

பை… சிரித்தபடி கையசைத்தாள். தோட்டத்தைக் கடந்து, கம்பிக் கதவைத் திறந்து தெருவில் நின்று மீண்டும் கதவை மூடுகையில் அவள் அங்கேயே நின்று மீண்டும் கதவை மூடுகையில் அவள் அங்கேயே நிற்பது தெரிந்தது. கதவின் கொக்கியைப் பொருத்தியபடி மீண்டும் கையை அசைத்தான். பதிலுக்கு அவளும் வீசினாள்.

வேஷ்டியின் நுனியைப் பிடித்துக் கொண்டு தெருவில் இறங்கி நடக்கையில் இவர்களைக் கவனித்தபடி கடந்த இரண்டு பையன்கள் தங்களுக்குள் பேசிச் சிரிப்பதைப் பார்த்தான்.

ராஜுகிட்டே சொல்லணும், இவளெப் பத்தி. அவன் கவிதையைக் கூட இவ படிச்சிருக்கேன்னு சொன்னா. ஏன், மூர்த்திக்கு லெட்டர் எழுதலாம். எனக்கு புதுசா ஒரு friend கிடைச்சிருக்காண்ணு. அவளுக்கு இலக்கியம் தெரியும்ன்னு அவன் சந்தோஷப்படுவான். உண்மையிலே சந்தோஷப்படுவான். பதினாறு மாசமா நான் தவிச்ச தவிப்பெல்லாம் அவனுக்குத் தெரியும், சீதாலக்ஷ்மி எனக்கு இல்லேன்னு ஆனப்பறம் நான் பட்ட ஹிம்ஸையெல்லாம் தெரியும். எத்தனை தைரியம் சொல்லியிருக்கான்; எனக்கு வரிஞ்சு வரிஞ்சு பக்கம் பக்கமா லெட்டர். எத்தனை எழுதித் தேத்தியிருக்கான் என்னை. ஆத்துக்கு போனதுமே எழுத ஆரம்பிச்சுடலாம். இவ கிட்ட பேசினதெல்லாம் எழுதணும். சிகரெட்டை நிறுத்துங்கோன்னு சொன்னதைக் கூட எழுதணும், ஆனா, அவ friend தாங்கிறதை நிச்சயம் எழுதிடணும், வெறும் Friend தான்னு சொன்ன மூர்த்தி நம்புவான்… நம்பும்படியா எழுதணும். திருப்பித் திருப்பி அவ சினேகிதி தான்கிறதைத் சொல்லி அவளை வேறே எதுபத்தியும் யோசிக்க முடியாதபடி எழுதணும், எழுதறது நம்மகிட்டதானே இருக்கு.

ஆனா இவ எனக்கு friend தானோ… நிச்சயம் friend தான். ராஜு மாதிரி, மூர்த்தி மாதிரி என்னைத் தட்டிக் கொடுக்கறா. என் மீது அனுதாபப்படுகிற friend, குரல் கம்ம… இது எதுல கொண்டு போய் விடும் தெரியுமான்னு கேட்டாளே. அவனுக்கு சீதாவின் மூக்குத்தி நினைவுக்குவந்தது. பிந்து மூக்குத்தி போட்டுக்கலே. ஆனா சீதாகண் மாதிரியே பெரியகண்… இவ பூசின மாதிரி இருக்கா; சீதா ஓடிசல். இவளைவிட ஒரு பிடி உயரம் கூட, சாட்டைமாதிரின்னா இருக்கும் பின்னல். பம்மென்று தோளில் படர்ந்த இவள் கூந்தலை நினைத்துக் கொண்டான். நெத்திலேந்து விரல்விட்டு அளைஞ்சா, கொறைஞ்சது நாலு இடத்திலியாவது சிக்கிக்கும். புஸ்மாஸுரி, புஸ்மாஸுரி, கூந்தலுக்குள் சொருகுவதாய் விரல்களைப் பிரித்துக் கொண்டு வலதுகையை காற்றில் வீசினான். பட்டென்று புறங்கை எதன் மீதோ மோதிற்று. வலி தாங்காமல் கையை இழுத்துக் கொண்டு பின்னால் பார்த்தான். இவனுக்கு வெகு அருகில் ரிக்க்ஷா ஒன்று வந்து கொண்டிருந்தது. ரிக்க்ஷா காரன் குனிந்த தலையை நிமிர்த்தினான், ஏர் காலைப் பார்த்தான். திரும்பி இவனைப் பார்த்தான். பிறகு ரிக்க்ஷாவை விலக்கிச் சாலையின் மையத்திற்கு ஓட்டிப் போனான். ரிக்க்ஷாவில் ஆறு ஏழு வாழைத்தார்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. உட்காரும் இடத்தில் கூட வாழைத்தார்கள் வைக்கப்பட்டிருந்தன. எல்லாம் காய் வெட்டாக, பச்சை நிறமாக உள்ள பழங்கள், ஒரு பழம் கூட மஞ்சள் இல்லை. கடையில கொண்டு போய் தொங்கவிட்டால் பழுத்துவிடும். இந்த வெய்யில் காற்றுக்கே கனிந்து போய்விடும். வைக்கோலை மூடி புழுங்கவிட்டால் சீக்கிரமே கனிந்து விடலாம். கடைக்காரன் சீக்கிரம் கனிய விடமாட்டான், விற்க வேண்டாமா. ரிக்ஷாவின் சக்கரம் இவனுக்கிணையாக உருண்டு கொண்டிருந்ததைக் கவனித்தான். சட்டம் தெளிவாகாத சுழற்சி இருந்தாலும் வேகம் என்னவோ இவன் நடை வேகம்தான். ஒரு வேளை நம் காலும் நம்முடைய வீச்சில் உருவமில்லாது மறையுமோ. இவன் வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டான். பாதங்களின் வடிவு தெளிவாய்த் தெரிந்தது.

சீதாவுக்குக் குறுகல் பாதங்கள். பிந்துவுக்கு இவன் அவள் பாதங்களை நினைவுபடுத்திப் பார்த்தான். நினைவுக்கு வரவில்லை. நாளைக்கு பார்க்கணும், உடம்பின் வெளுப்பு கண்டிப்பாய் அவள் பாதங்களிலும் இருக்கும். தன் பாதங்களையே பார்த்து வந்ததில் ரிக்க்ஷாவின் அருகில் போய்விட, சட்டென்று ஏர்காலில் கையை ஊன்றித் தன்னை விலக்கிக் கொண்டான். அந்தச் சின்ன அசைவில் ரிக்ஷாவின் ஓட்டம் தடைப்படவில்லை. ரிக்க்ஷாக்காரன் இவனைப் பார்த்துச் சிரித்தான்.

என்னாசார் உனுக்குள்ளேயே பேசிகினு வரே…

இவன் வேஷ்டியை இறுக்கிக் கொண்டு பதிலுக்குச் சிரித்தான். ஹாங். என்று ஆமோதிப்பதுமாதிரி குரலெழுப்பினான். ரிக்க்ஷாகாரன் சிரிப்பு இவனுக்கு இதமாக இருந்தது. அவனும் நம்மைப்போல் அதிகம் யோசிக்கிறவனாக இருக்க வேண்டும். உட்கார்ந்து யோசிப்பதைவிட இப்படி ரிக்க்ஷாவை ஓட்டிக் கொண்டே யோசிப்பது அவனுக்கு அனுபவமாக இருக்க வேண்டும்.

இவன் ரிக்க்ஷாவின் கூடவே நடந்தான். ரிக்ஷாக்காரனின் ஈரமுதுகில் ஒரு இலை ஒட்டிக் கொண்டிருந்தது. அதைச் சுண்டி எறிந்து விடலாம், ஆனால் ஏர்காலில் போய் முட்ட வேண்டியிருக்கும். மீண்டும் ரிக்ஷஷாக்காரன் சிரிப்பான் என்பது என்ன நிச்சயம். இவன் வேஷ்டியை ஒருதரம் பிரித்துச் சொருகிக் கொண்டு காலை வீசி நடந்தான்.

எந்தா சாரே…வாழைத்தார் வாங்கிட்டு போதோ, எந்தா விலை? பெட்டிக் கடை நாயரின் குரல் தெருவில் எல்லோரையும் திருப்பிற்று, இவனுக்கு முன்னே நடந்து கொண்டிருந்த ஒரு அம்மாள் ஒதுங்கி நின்று அவனுக்கும் ரிக்ஷாவுக்கும் வழி விட்டாள்.

என்னுதில்லேப்பா…அது ஏதோ வண்டி. இவன் நடப்பதை நிறுத்தவில்லை. அநாகரிகமானவன். பித்துவைப் போல் இவனுக்கு மெல்லப் பேசத் தெரியாது என நினைத்துக் கொண்டான். அதிக சந்தோஷம் ஏற்பட்டால் கூடப் பிந்து கத்தமாட்டாள். அப்பா…என்று நெஞ்சில் கைவைத்துக் கொண்டு லேசாய்க் கூவுவாள், அவ்வளவு தான். ஒரு வேளை கோபம் வந்தால் கத்துவாளோ..இருக்காது…பிந்து மாதிரி பெண்கள் கோபம் கொண்டால் உம்மென்று உட்கார்ந்து கொள்வார்கள். இல்லை, அறைக்குள் புகுந்து கதவைத் தாழிட்டு கட்டிலில் படுத்து விம்மி விம்மி அழுவார்கள். கட்டில் விளிம்பில் உட்கார்ந்து தலையை வருடி அவர்களைச் சமாதானப் படுத்திவிடலாம். பிந்துவின் கூந்தல் வருடுவதற்கும் இதமாய் இருக்கும்.

தெருவின் வளைவில், திருப்பத்திற்காக ரிக்க்ஷாவின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டது. ரிக்ஷாக்காரன் இப்போது இவனுக்கு இணையாக வந்து கொண்டிருந்தான். எதிர்ப்பக்கம் சைக்கிள் மணி கிணு கிணுத்தது.. இவனுடைய ஆபீஸ் சிநேகிதன் கையசைத்தான் ஹய் ராஜாராம எங்கே போய்க்கிட்டிருக்கே இதென்ன. வாழைப்பழம்… தார்தாரா…

போடா fool…நான் வீட்டுக்குப் போய்ண்டிருக்கேன். வாழைத்தார் எங்கயோ கடைக்குப் போறது. அவனுக்கு நிற்க இஷ்டமில்லை, கிட்டே இந்த மடையன் பேசறதைவிட வீட்டுக்கே போகலாம். போய் லெட்டர் எழுதலாம் மூர்த்திக்கு. பிந்துவைப் பத்தி…

இவன் வெகு விரைவாக ரிக்க்ஷாவைக் கடந்து நடக்க ஆரம்பித்தான், வெய்யில் பிடரியைக் கடித்து ஹிம்ஸித்தது. இந்தத் தெரு முழுக்கப் போய் திரும்பினாத்தான் வீடு வரும். பேசாம இருந்துட்டே வந்திருக்கலாமோ… வெய்யில் தாழறவரைக்குமாவது பேசிக்கொண்டிருந்திருக்கலாம்… என்ன பேசறது.. உங்களைப் பத்தி ஒன்னும் சொல்லவேல்லியே பிந்து… சொல்லுங்களேன். நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை… சமீபத்தில் ஏதாவது கல்யாணம் பண்ணிக்கறதா ஐடியா உண்டா…

சை… இவன் ரிக்க்ஷாவைப் பார்த்தான். இரைக்க இரைக்க துரத்திக்கொண்டிருந்தது. பாவம். இன்னும் எவ்வளவு தூரம் போகணுமோ. திரும்பிப் பார்த்தபடி நடந்ததில் வேகம் குறைந்தது. ரிக்க்ஷா நெருங்கியது. இவன் நடையை துரிதப்படுத்தினான்.

தெரு மரத்தடியில் வெற்றிலைக் குதப்பிக் கொண்டிருந்த கூடைக்காரி இவன் வழியில் எச்சில் துப்பினாள். எச்சிலைத் தாண்டி விட்டு அவளை முறைத்தான்.

என்னா ஐயரே என்னா விலைக்குப் புடிச்சே. பழத்தே… அவளுடைய காவிப்பற்கள் இவனை பார்த்துச் சிரித்தன.

ஒரு கணம் பளீரென்று தலையில் வெடி வெடிக்கிறமாதிரி ஒரு வலி மின்னிற்று. அழுந்தத் தலையைப்பிடித்துக் கொண்டு மரத்தடியில் நின்று விட்டான். தொண்டை வரண்டது…டசன் பதிமூன் ரூபாம்மா.. என்று பதில் சொன்னான். என்னாது டசன் பதிமூனா இரண்டு மூன்று குரல்கள் காதில் ஒலித்தன. இவனுக்கு கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது…

*********************************************************************************

1972 ஆம் ஆண்டு 'கசடதபற' என்னும் இலக்கிய இதழில் பாலகுமாரன் எழுதிய சிறுகதை. ஒரு ஆணும், பெண்ணும் நட்போடு இருக்க முடியாது என்று கருதப்பட்ட காலம் அது. அப்பொழுது ஒரு இளைஞனுக்கு ஒரு பெண் தோழியாகிறாள். அவளை அவள் வீட்டில் சந்தித்து விட்டு அவன் வீடு திரும்பும் பொழுது அவனுக்கு ஏற்பட்ட அனுபவத்தை விவரிக்கிறது. சம்பந்தமே இல்லாத இரண்டு விஷயங்கள் எப்படி சம்பந்தப் படுத்தப்படுகின்றன என்பதை அழகாக உணர்த்துகிறார். தனக்கும் அந்த பெண்ணிற்குமிடையே நிலவும் நட்பும் இதே விதமாக தவறாக புரிந்து கொள்ளப்படுமோ என்ற அச்சம் அவனுக்கு இருக்கிறதோ என்ற கேள்வியும் எழுகிறது. பனை மரத்தின் கீழ் நின்று கொண்டு பாலைக் குடித்தாலும் கள்தான் என்றுதான் நினைத்துக் கொள்வார்கள் என்னும் பழமொழி நினைவுக்கு வரலாம். 

இந்தக் கதையை நான் காணொளியில் பகிர்ந்திருக்கிறேன். 


54 கருத்துகள்:

  1. மூன்று தத்துவங்களுக்கும் விளக்கம் நன்றாக இருக்கிறது நெல்லை அதுவும் வேதாத்ரி மகரிஷியின் விளக்கத்தோடு ரொம்ப சிறப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அதனைப் படிக்கும்போது, சுருக்காமல் ஓரளவு அப்படியே தரணும் என்ற எண்ணம் வந்தது.

      நீக்கு
  2. ஒரு குருவிற்கு - ஆசிரியருக்கு நல்ல எண்ணங்கள் இல்லை என்றால், ஆணவம், பொறாமை இருந்தால் நல்ல குருவாக, ஆசிரியராக இருக்க முடியாது. எனவே இளையாழ்வார் அவர் அன்னை சொன்னது போல், அவரை விட்டு விலகியதால்தான் விசிஷ்டாத்வைத தத்துவம் பிறந்தது.

    ஒரு மாணவன் தன் குருவின் சிந்தனைகளில் இருந்து வித்தியாசப்பட்டுச் சிந்திக்கும் போதுதான் நல்ல சிந்தனைகள் உருவாகும் அது போல குருவின் சிந்தனைகளோடு வேறுபாடு வந்தாலும் சரி அல்லது ஒத்துப் போனாலும் சரி அதன் நீட்சியாக சிந்தித்து ஆராயும் போதுதான் அடுத்த லெவலுக்கும் போக முடிகிறது. இல்லை என்றால் தேக்கம்.

    சாதாரண மனிதர்கள் இந்தத் தேக்கத்சில் சிக்கிக் கொள்கிறோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக நல்ல பொருள் பொதிந்த கருத்து.

      மாற்றி யோசிக்கிறவர்களால்தான் மனித குலம் பயன்பெற்றிருக்கிறது. ஆன்மீகமாகட்டும் அறிவியலாகட்டும்.

      சமீபத்தில் கலாஷ்னிகோவின் (ஏகே 47) டாக்குமென்டரி பார்த்தேன். (பென்சிலின், ரேடியம் எனப் பலவற்றிர்க்கும், ஏன் சேஃப்டி பின்னுக்கும் அடிப்படை மாற்றி யோசிப்பது)

      நீக்கு
    2. எலலத்துக்குமே பொருந்தும் தான் நெல்லை.

      ஓ! டாக்குமென்ட்ரிதானே அப்ப யுடுயூபில் கிடைக்கும்.

      அப்படி மாற்றி யோசித்துதானே நிறைய அறிவியல் கண்டுபிடிப்புகள்

      கீதா

      நீக்கு
    3. எலலத்துக்குமே பொருந்தும் தான் நெல்லை.

      ஓ! டாக்குமென்ட்ரிதானே அப்ப யுடுயூபில் கிடைக்கும்.

      அப்படி மாற்றி யோசித்துதானே நிறைய அறிவியல் கண்டுபிடிப்புகள்

      கீதா

      நீக்கு
  3. (ஆச்சார்யர்களைப் பற்றிச் சொல்லும்போது திருமேனியில் நோவு சார்த்திக்கொண்டிருந்தார் என்றே சொல்வர்). //

    தமிழ் மொழியின், ஒரு விஷயத்தைச் சொல்லும் வகையில் எத்தனை மேன்மை இல்லையா, நெல்லை?

    ஒரு வருத்தமான விஷயத்தைச் சொல்லும் விதத்தில் கூட ஒரு நேர்மறைத்தன்மை!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இடக்கரடக்கல் போன்று தமிழில் பல்வேறு இலக்கணங்கள் உண்டே. நல்லது அல்லாத்தையும் நல்ல முறையில் பேசுவது.

      நீக்கு
    2. ஆமாம் நிறைய அப்படி இருக்கிறது. நாம மனுஷங்க இருக்கோம் பாருங்க...

      கீதா

      நீக்கு
  4. என் அப்பாவின் குடும்பத்தில், திருமலை நம்பி, நம்பி, திருமலை போன்ற பெயர்கள் பரவலாக இருந்தது அவருக்கும் முந்தைய தலைமுறையில் அவர் தலைமுறையில்.

    அதன் பின்னரும் வைத்தாலும், பெயர் வைக்கப்படுமே அல்லாமல் வெளியில் வேறு பெயர்கள்தான்

    கீதா

    பதிலளிநீக்கு
  5. பெரிய பெருமாள் உயிர்நிலை அறிந்திருக்கும் விக்ரஹமே அடியேனுக்கு உபாயம் உபேயம் என்றார்.

    வெறும் விக்ரஹம் என்றால் அது ஜஸ்ட் ஒரு உருவச்சிலை. ஆனால் அதற்குள் பல பூஜைகள் வழிகள் மூலம் அதற்குள் இறையின் சைதன்யத்தை divine energy யை உட்புகுத்துவது -பிராணப் பிரதிஷ்டை என்று சொல்லப்படுவது இல்லையா? அதனால்தானே ஜஸ்ட் சிலைகளுக்கும் கோயிலில் கர்பக்கிரகத்துள் இருப்பதற்கும் வித்தியாசம் இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வரி மிகவும் ஆழ்ந்த அர்த்தம் உடையது இல்லையா? நெல்லை. என் புரிதல் சரியா தெரிந்து கொள்ளத்தான்...

      பெரிய பெருமாளே நான் இவ்வுலகில் ஜீவித்திருப்பதற்கு உபாயம்....அவரை அடைந்து அந்த உன்னத நிலையை அனுபவிப்பதே உபேயம்...?

      கீதா



      நீக்கு
    2. முந்திரிக்கொட்டை மாதிரி நீங்க அடுத்த பதிவில் சொல்வதற்கு முன் ஹிஹிஹி..

      அடுத்த பதிவில் வந்துவிடும் அறிந்து கொள்ளலாம்

      கீதா

      நீக்கு
    3. வாங்க கீதா ரங்கன். ஒரு சிலை, விக்ரஹத்துக்கு ப்ராணப்பிரதிஷ்டை நடந்துவிட்டால் சிலைக்கு உயிர் வந்துவிடுகிறது என்பது த்த்துவம். அப்போது அதற்கும் இறைவனுக்கும் வித்தியாசம் கிடையாது.

      மூலவரையும் உத்சவரையும் வெறும் உலோகம், கல்லால் ஆன சிற்பம் என நினைப்பதே பாபம் என்கின்றனர். இறைவன் சன்னிதியில் அவனிடம் நம் குறைகளையும், வேண்டுதல்களையும் சொல்லும்போது, உயிருள்ள ஜீவனாகத்தான் கருதுகிறோம். பக்தியின் மேன்மை அது.

      நீக்கு
    4. //முந்திரிக்கொட்டை//- இந்தப் பகுதிக்கு வரும் கருத்து, கேள்விகள் எல்லாமே சிந்திக்காமல் அல்லது படிக்காமல் பொருள் சொல்வது கடினம். அதனால் இத்தகைய கருத்துகளை வரவேற்கிறேன்.

      நீக்கு
    5. அதில் மாபெரும் சக்தி அடங்கியிருக்கிறது. அந்த சக்தி பிராண சக்தி, மூல சக்தி என்றே நான் நினைத்து நம்புவது. வழிபடுவது

      கீதா

      நீக்கு
    6. ஆமாம் கீதா ரங்கன் அக்கா... (இப்படிச் சொல்லலைனா, பெண்களுக்கு இயல்பாக இருக்கும் குணத்தில் வயதை ரொம்ப குறைத்துச் சொல்லிடுவாரே)

      மூல சக்தி, பரமன், பரம்பிதா, ஆதிமூலம் என எல்லாமே அந்த பர சக்தியைத் தான் குறிக்கின்றன.

      நீக்கு
    7. ஹாஹாஹாஹா....இல்லைனாலும் நான் இன்னும் பாப்பாதான்.

      இரண்டாவதுக்கு - அதே

      கீதா

      நீக்கு
  6. அமலனான் ஆதிபிரான் - மனப்பாடமான ஒன்று. விளக்கம் அருமை, நெல்லை. எனக்கு ஸ்ரீநிவாசசேஷன் மாமா நினைவுக்கு வருகிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாசுரத்துக்குப் பொருள் தெரிந்து பாசுரம் சேவிக்கும்போது அதன் அனுபவம் தனி. பல பெரியவர்களுக்கு உள்ளுறை பொருள்கள் விரிவுரை தெரியும்போது அவர்களுக்கு பாசுரம் மனதில் எழும்போதே மனது அவற்றில் ஆழ்ந்துவிடும்.

      நீக்கு
    2. எதுவுமே எந்த மொழிப் பிரார்த்தனையுமே அர்த்தம் புரிந்து வணங்கும் போது அது தனிதான் நெல்லை இல்லையா.

      கீதா

      நீக்கு
    3. பக்திப்பாடல்கள், கீர்த்தனைகள் கூட புரிந்து பாடும் போது லயிப்பு வந்துவிடும் அனுபவித்துப் பாடுவோம். சிலதுகண்ணில் நீர் வரவழைக்கும்

      கீதா

      நீக்கு
  7. பானுக்கா பகிர்ந்திருக்கும் கதை வழி மயக்கம் உட்பொருளைக் கொண்டிருக்கிறது.

    பாலகுமாரன் அவர் தன் நட்பைப் பற்றியே கதை செல்கிறது போலத் தோன்றுகிறது. இந்துமதி - பிந்து. சுப்ரமண்யராஜு - ராஜு வருகிறாரே. அப்படி இருக்குமோ?

    1972 காலகட்டத்தில் ஒரு ஆணும் பெண்ணும் நட்போடு இருப்பது என்பது பெரிய சவால்.

    கதை, நீங்கள் சொல்லி இருப்பது போல் இரு வேறு சம்பந்தம் இல்லாத விஷயத்தை ரொம்ப அழகாகப் பொருத்திச் சொல்லியிருக்கிறார்

    கீதா

    பதிலளிநீக்கு
  8. வழியில், கதாநாயகன் சும்மா அந்தத் வாழைத்தார் வண்டியோடு நடக்கும் போது கதாநாயகன் தான் அதன் உரிமையாளர் என்று நினைத்துக் கேட்கப்படும் கேள்விகள்.....அப்படித்தான் ஒரு ஆணும் பெண்ணும் பேசினாலே அது என்னவோ என்று இச்சமூகத்தின் பார்வை.

    அப்பன்னு இல்லை அக்கா, இப்பவுமே அப்படிக் கதை கட்டுதல் நடக்கிறதே இந்த விஷயத்தில் என்றில்லை பல்வேறு விஷயங்களிலும் மக்களாக ஊகம் பண்ணிக் கொண்டு என்னென்னவோ பேசித் தள்ளுகிறார்கள் அரசியலில் இருந்து ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை வரை.

    வழி மயக்கம் என்பது சமூக மயக்கம் என்று இப்ப சொல்லலாம்!!!

    இந்த சமூக மயக்கம் நன்றாகக் காசு கொடுக்கிறது பலருக்கும். வியாபாரம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. த்வைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் இவைகளுக்கு வேதாத்திரி மகரிஷி கூறியிறுக்கும் விளக்கம் மிகவும் சிறப்பு.
    அமலன், விமலன், நிமலன் பெயர்களுக்கு நுணுக்கமான வித்தியாசத்தை சிறப்பாக விளக்கியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  10. திருவேங்கடமுடையான் உயிர்நிலை, பேரறுளாளப் பெருமாள் உயிர் நிலை, பெரிய பெருமாள் உயிர் நிலை.. என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவை உயிர் நிலைதானா? அல்லது உயர் நிலையா? இங்கே உயிர் நிலை என்பது எதைக் குறிக்கிறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். உயிர் நிலை, உபாயம் உபேயத்தைக் குறிக்கிறது. அடையும் வழி, அடையப்படும் பொருள்.

      நீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். ப்ரார்த்தனைக்கு நன்றி.

      நீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. பதில்கள்
    1. சரணம் சண்முகா.... நலமா துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  14. பாலகுமாரனா உரையாடல் குறிகள் ('....") இல்லாமல் இப்படி ஒரு எழுதியிருக்கிறார்?... ஆச்சரியமாக இருக்கிறது.

    இல்லை, ஓரளவுக்கு மேல் புகழ் போதை ஏறிவிட்டால் இந்த அலட்சிய மனோபாவங்கள் வந்து விடுமோ?.. தெரிலே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருத்தம்: இப்படி ஒரு கதை -- என்று வாசிக்கவும்.

      நீக்கு

  15. அமலன், விமலன், நிமலன், நின்மலன் ஆகிய
    பெயர்களுக்கான விளக்கம் சிறப்பு...

    பதிலளிநீக்கு
  16. இன்றைய பதிவு சிறப்பாக இருக்கிறது. வாரா வாரம் சிறப்புதான்.
    இந்த வாரம் குரு வேதாத்ரி மஹரிஷியின் விளக்கத்தோடு வந்து இருப்பது மகிழ்ச்சி.

    அத்வைதம், துவைதம்:-
    -----------------------------------------
    கற்கண்டு என்ற ஒரு வார்த்தை சொன்னால்
    கரும்பு ரசப்பக்குவத்தின் சரித்திரமாகும்
    கற்கண்டைக் கரும்பு ரசம் என்றால் அஃது
    கருத்துக்கு அத்துவித தத்துவம்போல்
    கற்கண்டு கரும்புரசம் வேறு வேறாய்க்
    காட்டுவது துவித நிலை விளக்கம்
    கற்கண்டு கரும்புரசம் இரண்டும் போலாம்
    கடவுளும் மற்றனைத்துருவும் கருத்துணர்ந்தால்.
    - வேதாத்திரி மகரிஷி

    தத்துவம், வேதாந்தம், விஞ்ஞானம்

    தத்துவம், வேதாந்தம், விஞ்ஞானம் மூன்றும்
    தனித்தனியாம் வெவ்வேறு பிரிவென்போர்கள்
    தத்துவமோ இயற்கை யதன் உண்மை கூறும்
    தரம் பலவாய் அதன் நிலையைப் பிரித்துப் பேசி
    தத்துவத்தைத் தெளிவாக்கும் கலை வேதாந்தம்
    தாரணியில் பல பொருளாய் உள இயற்கைத்
    தத்துவத்தை அறிந்து , வாழ்வை வலப் படுத்தும்
    சகல் வழிமுறைகளும் விஞ்ஞானமாகும்.

    வேதாந்தம்

    பண்டைய நாளில் மனிதர் தங்கள் வாழ்வில்
    பசிதீர்க்கும் உணவை "இறை" என மதித்துக்
    கொண்டார்கள், பின் ஆய்ந்து ஆகாரத்தைக்
    கொடுக்கின்ற பூமியையே இறைவன் என்றார்
    கண்டார்கள் நீர், அனல், காற்று, அணு இவற்ரைக்
    கருத்தூன்றி ஒவ்வொன்றாய் மேலும் மேலும்
    விண்டார்கள் வெட்டவெளி முடிவு என்று,
    விரிந்துரைத்த தொகுப்பே வேதாந்தமாகும்.

    - வேதாத்திரி மகரிஷி.


    //சித், அசித், ஈஸ்வரன் என்ற தத்துவங்களை உள்ளடக்கியது வேதாந்தம். நாம் இதனை விட்டுவிட்டு, நம்முடைய குலப் பெரியவர்கள் என்ன செய்தார்கள், எப்படி தங்கள் ஆன்மா முன்னேற்றத்திற்கான பாதையில் நடந்தார்கள் என்பதைத் தெரிந்து நாமும் அந்த வழியிலேயே சென்றால் நல்கதி அடையலாம் என்பது என் எண்ணம். //

    நீங்கள் சொல்வதும் சரிதான் .


    பதிலளிநீக்கு
  17. //பெருமாளுக்கு தினப்படி திருவாராதனத்திற்கு சாலைக்கிணற்றிலிருந்து ஒரு குடம் நீர் எடுத்து சமர்ப்பியும் என்று சொன்னார். அவ்வண்ணமே தினமும் அந்தக் கைங்கர்யத்தை இளையாழ்வார் செய்யத் தொடங்கினார். //
    முன்பு ஒரு பதிவில் இளையாழ்வார் சாலை கிணறு நீர் சமர்ப்பிக்கும் படம் போட்டீர்கள் அந்த படம் நினைவுக்கு வந்தது.

    இன்றைய பாசுரம் அதன் விளக்கம் அருமை.
    மாணிக்க வாசகர் சிவபுராணத்தில் "நேயத்தே நின்ற நிமலனடி போற்றி "என்று பாடுகிறார்.விமலா என்றும் விளித்து பாடுகிறார்.

    //தன்னுடைய அடியவர்களின் குற்றங்களைப் பாராத தன்மையை ‘நின்மலன்’ என்ற சொல்மூலம் கூறுகிறார்.//

    தாய் தன் குழந்தை செய்யும் குற்றங்களை பாராது அன்பு செய்வாள் அது போல இறைவனும் நாம் செய்யும் குற்றங்களை பாராது அன்பு செய்கிறார்
    நின்மலனை தொழுவோம்.


    பதிலளிநீக்கு
  18. பானுமதி வெங்கடேஷ்வரன் பகிர்ந்து இருக்கும் பால்குமரன் கதை நன்றாக இருக்கிறது.

    பெண்ணும் நட்போடு இருக்க முடியாது என்று கருதப்பட்ட காலம் அது. //

    இப்போது காலம் ஆண் , பெண் நட்பு தப்பாக கருதபடவில்லை.

    வழி மயக்கம் அதற்கு பொருத்தமான படம்.

    பார்ப்பவர்கள் எண்ணம் வாழைத்தார் அவனோடது என்று அந்த எண்ணம் அவனில் தாக்கம் செய்து வாழையின் விலையை சொல்கிறான்.

    மகரிஷி எண்ணம் ஆராய்தல் பகுதியில் இப்படி சொல்வார் பிறர் எண்ணம் நம்மிடம் பிரிதிபலிக்கும் என்று.
    பழ வியாபாரி பாதையில் செல்பவர்களை பார்த்து இவர் வாங்கமாட்டாரா என்று நினைத்து கொண்டே இருப்பார் அது நம்மிடம் மோதி நாம்வாங்குவோம் என்பார்.

    //சிகரெட்டைக் குறைச்சுக்கோங்கோ… பேசிண்டிருந்த ஒரு மணி நேரத்திலெ அஞ்சு பிடிச்சுட்டேள். //

    நட்பு உடல் நலத்தை பாத்து கொள்ள சொல்வது அருமை. உண்மையான நட்புஇருந்தால் தான் இப்படி சொல்ல முடியும்.

    காணொளியும் அருமை. நன்றாக கதை சொல்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  19. ​வணக்கம். இந்து மதத்தின் அடிப்படை தத்துவங்களை புரியும்படி விளக்கியதற்கு நன்றி. விளக்கங்கள் முன்பே அறிந்தது தான். உதாரணங்களும் வேதாத்ரி மகரிஷியின் வியாக்யானங்களும் தெளிவு படுத்தின. நன்று.

    திருப்பாணாழ்வாரின் முழு சரிதத்தையும் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன். காரணம் பிறப்பால் நானும் "பாணர்" குலத்தைச் சார்ந்தவன் என்று என் மூதாதையர் கூறுவர். போதாதற்கு தந்தையின் ஊர் திருச்சி.
    ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் நான் வேறுபடுகிறேன்.
    குரு சிஷ்ய பாரம்பரியத்தில் சிஷ்யன் குருவிடம் பூர்ண சரணாகதி அடைய வேண்டும் என்பது தாத்பர்யம். இக்கொள்கை நான் படிக்கும் காலத்திலும் இருந்தது. அப்படி இருக்க
    //சரி… நாம் யாதவப் பிரகாசர், இளையாழ்வாரை, தன் சொல்படி கேட்டுப் படிக்காவிட்டால் தன்னிடம் கற்க வேண்டாம் என்று சொன்னது//
    இளையாழ்வார் செய்த கற்றல் நிற்றல் என்பது சரியில்லை என்று தோன்றுகிறது. குருவிடம் ஆசிபெற்று தனியே ஆராய்ந்து பாடம் கற்றார் எனினும் "விஷிஷ்டாத்வைதம்" பாப்புலர் ஆகவில்லை. சைவம் என்றால் அத்வைதம், வைணவம் என்றால் த்வைதம், இரண்டையும் பின் போற்றுவர் விஷிட்டாத்வைதம் என்றாகி விட்டது. காரணம் வர்ணபேதம் சரியில்லை என்ற கருத்தை மறுப்பதனால் இருக்கலாம்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். பாணர் குலம் பற்றி மிக்க மகிழ்ச்சி. திருச்சி உறையூரா உங்கள் மூதாதையர்கள்? திருப்பாணாழ்வார் வரலாறும் வரும்.

      பிறகு வருகிறேன்.

      நீக்கு

  20. ​இந்த வாரம் நான் படிச்ச கதைக்கு தேர்ந்திருந்தது ஜெயகாந்தனின் "தரக்குறைவு". இதன் தரம் மிகவும் குறைவு ஆகியதால் ஆழ்வார் பாசுரங்களின் நடுவில் பிரசுரிக்க தயங்குகிறேன். சுட்டி கீழே. ஆகவே இச்சனியில் விலகுவதாக ஸ்ரீராமிடம் சொல்லி மாற்று ஏற்பாடு செய்து கொள்ள சொல்லவும்.

    https://www.sirukathaigal.com/%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81/
    மேலே இருப்பது தங்கை கீதா ரெங்கனுக்கு அனுப்பிய மின் அஞ்சல்.
    அக்கதை சென்னை தமிழில் எழுதப்பட்டது. ஒரு ரிக்ஸாக்காரனுடைய பெண்டாட்டி வேறு ஒருத்தன் கூட ஓடிப்போய் திரும்பி வந்த கதை.
    இப்படி இருக்க இன்று ஒரு ரிக்ஸாக்கதை. இதுதான் "நாம் ஒன்று நினைக்க..... " என்று சொல்லப்படுவதோ?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா, நானும் நினைச்சேன். பாருங்க....நான் அந்தக் கதையை வாசித்தேன் ஜெ கெ அண்ணா. ஆனா பாருங்க அப்படி ஒன்றும் அது மோசமாகத் தெரியலை எனக்கு. கதை என்பதே மனிதர்களின் உள்ளுணர்வுகளை வெளிம் கொணர்ந்து சொல்வதுதானே.

      மேலே இருப்பது தங்கை கீதா ரெங்கனுக்கு //

      ஆஹா நன்னி நன்னி அண்ணா.

      கீதா

      நீக்கு
  21. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    இன்றைய வாரம் ஒரு பாசுர பகுதியில் இன்றைய பாசுரம் மிக எளிதாக பொருள் கொள்ளும்படி அருமையாக உள்ளது. அதன் விளக்கமும் தெளிவாக உள்ளது. அமலன் விமலன் நிமலன் நின்மலன் போன்ற இறைவனை குறித்த சொற்களுக்கு பொருள் விளக்கம் அருமை.

    பிறப்பால் குலத்தில் தாழ்ந்தோர் என மற்றவர்கள் இழிவுறச் செய்தும் இறைவன் தன் அன்பினால் அவரை ஏற்றுக் கொள்வது எவ்வளவு சிறப்பானது. நந்தனாரையும் எவ்வளவு இளப்பமாக நடத்தி மனதை வருத்தமுற செய்தார்கள். இறைவன் கருணையால் அவர் இறைவனின் பரிபூரண அருளைப் பெற்றவர் என்பது ஊர்ஜிதமாயிற்று. இறைவனின் அருளைப் பெற எத்தனைப் பிறவி எடுக்க வேண்டும். அத்தனையிலும் "அவர்" அருகாமையை உணரும் பேரருளைப் பெற வேண்டும். 🙏. நீங்கள் ஒவ்வொரு வாரமும் நன்றாக சொல்லி வருகிறீர்கள். இதுவே தங்களுக்கு கிடைத்துள்ள இறையருளின் அடையாளம். தங்களின் அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்.

      பிறப்பால் தாழ்ந்தவர் என்பது ஒருபுறம் இருக்க, அவர் நமக்குப் பார்த்துக்கொண்டிருக்கும் வேலைக்கு குறைவு வந்துவிடக் கூடாது என்பதும் ஒரு காரணம்.

      நானே பலமுறை நினைப்பேன். மனைவி மிகுந்த பக்திமானாக இருந்து, இறை தரிசனப் பிரயாணங்கள், வீட்டில் இறை பக்தியுடன் இருந்து, அதனால் எனக்குக் கிடைக்கும் வேளாவேளை உணவுக்கு பாதகம் நேர்ந்தாலோ, இல்லை வீட்டு வேலைகளுக்குக் குந்தகம் நேர்ந்தாலோ, அப்படிப்பட்ட பக்தியை நாம் விரும்புவோமா எனத் தோன்றும். அது போலவே கணவன், வீட்டிற்கான கடமைகளைச் செய்யவில்லை என்றால் யாரும் விரும்ப மாட்டார்கள்.

      பலருக்கும் குலப் பெருமை, அதனால் பிற குலத்தை மதியாமை, அக்குலத்தில் பிறந்தவர்கள் நம்மைப் போன்று உயர்ந்து இருக்க இயலாது என்ற எண்ணம் வரும்.

      நமக்கு அனுபவம் ஏற்பட ஏற்பட நமக்கே நாம் செய்யும் தவறுகள் புரிந்து திருத்திக்கொள்வோம். அனுபவத்திற்காக்க் காத்திருக்காதே, இதுதான் சரியான வழி என்பதைக் காட்டவே ந்ந்தனார், திருப்பாணாழ்வார் போன்ற பலரின் சரித்திரம் கூறும் உண்மை.

      நீக்கு
  22. த்வைதம், அத்வைதம் மற்றும் விசிஷ்டாத்வைதம் - மூன்றுக்குமான விளக்கம் நன்று. மக்ரிஷியின் விளக்கம் சிறப்பு. தொடரட்டும் பாசுர அமுதம்.

    பாலகுமாரன் கதை - இந்தக் கதை படித்த நினைவில்லை. படிக்க வேண்டும் - கிண்டிலில் இருக்கிறதா என்று பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  23. பானுக்கா. வீடியோல நல்லா சொல்லியிருக்கீங்கக்கா.

    சிறு விஷயம்தான் ஆனால் எப்படி உன்னிப்பாக அவருக்குத் தோன்றி எழுதியிருக்கிறார்ல?

    கீதா

    பதிலளிநீக்கு
  24. நந்தனாரை யாரும் அவமானப் படுத்தவில்லை. வேதியர் தொந்திரவு கொடுத்தார் என்பதெல்லாம் முழுக்க முழுக்கக் கற்பனையே. கோபாலகிருஷ்ண பாரதியார் நந்தனார் சரித்திரம் எழுதும் போது அதற்குச் சுவை கூட்ட இப்படி ஒரு நிகழ்வு நடந்ததாக எழுதி அதை வெளியிடும் நேரம் மஹாவித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அவர்களிடம், (உ.வே.சா. அவர்களின் குருநாதர்) தன்னுடைய நந்தனார் சரித்திரத்துக்குச் சிறப்புப் பாயிரம் (இந்நாள் முன்னுரை போல) எழுதித் தரும்படி கேட்டபோது உண்மை அல்லாத விஷயங்களை எழுதி இருப்பதால் இந்த நந்தனார் சரித்திரம் பொய்யானதொரு தகவலைக் கொண்டு வெளிவர நான் சம்மதிக்க மாட்டேன் எனப் பிள்ளை அவர்கள் சொல்லி மறுத்துவிட்டார். தினம் தினம் அவர் வீட்டிற்குப் போய்க் கெஞ்சிய கோபாலகிருஷ்ண பாகவதர் ஒரு நாள் அவர் வீட்டுத் திண்ணையிலேயே உட்கார்ந்து தன்னுடைய நந்தனார் சரித்திரத்தைப் பண்ணில் அமைத்துத் தானே பாடத் தொடங்கினார். நேரம் ஆக ஆக பாகவதர் அதிலேயே மூழ்கித் தன்னை மறந்து பாட உள்ளே அமர்ந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்த பிள்ளை அவர்கல் கேட்கக்கேட்க பக்தி மேலீட்டால் கண்களில் கண்ணீர் பெருக அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். பின்னர் முழுவதும் பாடி முடித்ததும் தன்னையும் அறியாமல் வெளியே வந்து பாகவதரைப் பாராட்டிப் பேசிய பிள்ளை அவர்கள் இத்தகையதொரு அருமையான தமிழில் பாடிய நந்தனார் சரித்திரத்துக்குத் தான் சிறப்புப் பாயிரம் எழுதித் தருவதாக ஒப்புக் கொண்டு எழுதியும் தந்தார் என்பது வரலாறு.

    பி.கு. அந்த நாட்களில் தமிழோ, சம்ஸ்கிருதமோ படிப்பவர்கள் அவற்றைப் பாட்டாகப் பாடும் வல்லமையும் பெற்றிருக்க வேண்டும். சம்ஸ்கிருதத்தில் உச்சரிப்பு, த்வனி, ஷப்தம் முக்கியம் என்பதாலும் தமிழிலும் இலக்கண இலக்கியங்களுக்கும் உச்சரிப்புக்கள் முக்கியம் என்பதாலும் இப்படிப் பாடும் திறமை இருப்பவரே தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் கற்றுத் தேர்ந்தனர். இம்மாதிரியானதொரு கட்டுப்பாடு தமிழ் மொழிக்கு என் அப்பா படிக்கையில் கூட இருந்தது எனச் சொல்லிக் கேட்டிருக்கேன். அவருக்கும் பாட்டுக்கும் வெகு தூரம் என்பதால் அவர் தமிழில் ஆர்வம் கொண்டிருந்தும் ஹிந்தி படித்து ஆசிரியர் ஆனார். :)

    பதிலளிநீக்கு
  25. இதைப் பற்றி முன்னர் தமிழ்மணத்தில் சிலர் பார்ப்பன துரோகம் என்னும் கருத்தில் எழுதியபோது நான் அதை மறுத்துத் தமிழ் மணத்தில் என்னுடைய கட்டுரைகளைப் பகிர்ந்திருக்கேன். இவை எல்லாம் அநேகமாக 2006 அல்லது 2007 காலகட்டத்தில் எழுதியவை. தேடி எடுத்துப் போடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  26. சநாதனத்தின் மூன்று முக்கிய தத்துவங்களையும் நேல்லை அருமையாகவும் தெளிவாகவும் எளிமையான தமிழிலும் விளக்கி இருக்கார்/ ஆனாலும் த்வைதம் கடைப்பிடிப்பவர்களும் சரி, விசிஷ்டாத்வைதம் கடைப்பிடிப்பவர்களும் சரி தங்கள் கோட்பாடுகளைக்கொஞ்சம் இல்லை அதிகமாகவே கடுமையாக வைத்திருக்கின்றனர். எல்லாமும் கடைசியில் போகும் இடம் ஒன்றே என்பதை யாரும் புரிஞ்சுண்டிருப்பதாகத் தெரியவில்லை.

    மற்றபடி பாசுர விளக்கமும் திருப்பாணாழ்வார் பற்றிய குறிப்பும் சிறப்பு. அடுத்தவாரம் அவர் குறித்த விரிவான தகவல் வரும் எனச் சொல்லி இருக்கார். எதிர்பார்க்கிறேன். சாலைக்கிணறெல்லாம் முன்னரே சொல்லிட்டார் நெல்லை. என்ன ஒரு யோசனைன்னா இதுவரையிலும் நெல்லை இளையாழ்வார் திருமணம் செய்து கொண்டதாகவோ மனைவி தஞ்சம்மாள் பற்றியோ சொல்லவே இல்லை. ஏனெனில் தஞ்சம்மாளைத் திருமணம் செய்து கொள்ளும் முன்னரே ராமானுஜருக்கு அவரைத் தெரியும் எனச் சொல்லிக் கேள்வி. இருவருமே பால்ய சிநேகிதர்கள் எனவும் என் சிநேகிதி ஒருத்தி ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் என்னுடன் வேலை செய்தவர் சொல்லி இருக்கார். ராமானுஜருக்குப் பதினாறு வயதா இல்லை தஞ்சம்மாளுக்கா எனத் தெரியலை. ஆனால் பதினாறு வயதில் திருமணம் நடந்ததாகப் படிச்சிருக்கேன். ராமானுஜர் தஞ்சம்மாளைப் பிரிந்தது அவரோட 35 அல்லது 38 வயதில் என நினைக்கிறேன். இவரைப் பின்பற்றியே வைணவ ஆசாரியர்கள் திருமண பந்தம் முடிந்த பின்னரே சந்நியாச ஆசிரமம் ஏற்கிறார்கள் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  27. பானுமதி கதையை முழுவதும் படிக்கக் கொடுக்கலை. எனக்கு என்னமோ ஆடியோவில் கதை கேட்பது அவ்வளவாய்ப் பிடிக்கவில்லை. பொருந்தியும் வரவில்லை. ஆனால் இங்கே வேறே வழி இல்லை. ஆனாலும் இந்தக்கதை நான் படிச்சிருக்கேன். இது இந்துமதி ஆரம்பகாலத்தில் சுப்ரமண்யராஜூ மற்றும் பாலகுமாரனோடு நட்பில் இருக்கும்போது எழுதப்பட்டது என சுலபமாக ஊகிக்கலாம். அதிலும் அந்தத் தலைமுடி பம்மென இருப்பது மற்றும் அவர் நிறம் இரண்டும் இந்துமதிக்கு அப்படியே பொருந்தும். ஓரளவு படிச்சிருந்தாலும் மறுபடி நினைவூட்டிக்க பானுமதி கொடுத்திருக்கும் ஆடியோவையும் கேட்கிறேன். பாலகுமாரனின் எழுத்தில் எனக்குப் பிடித்தவை சுப்ரமண்யராஜூ திடீரென விபத்தில் இறந்ததும் பாலகுமாரன் எழுதியவை மட்டும். மற்றபடி அவர் கதைகளைப் படித்தாலும் ஒரு காலத்துக்குப் பின்னர் பிடிக்காமல் போனது. நிறுத்திட்டேன். பின்னர் அவர் ஆன்மிகத்தில் புகுந்து சக்தி விகடனில் எல்லாம் எழுதினார். வாராந்தரி, மாதாந்தரி வாங்குவதை நிறுத்தியதுமே இவை எல்லாமும் படிப்பதும் நின்னு போயாச்சு. :))))

    பதிலளிநீக்கு
  28. https://sivamgss.blogspot.com/2007/02/212.html நந்தனாரை வேதியர் தடுத்தாரா?

    பதிலளிநீக்கு
  29. https://sivamgss.blogspot.com/2009/07/1.html நந்தன் சரித்திரம் பற்றிய சில உண்மைகள் 1 https://sivamgss.blogspot.com/2009/07/2_16.html நந்தன் சரித்திரம் பற்றிய சில உண்மைகள் 2

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!