9.5.26

வாரம் ஒரு பாசுரம் தொடர் - பகுதி 19 - நான் படிச்ச கதை

  

நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்

நெல்லைத் தமிழன்

குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 19 

 பெரிய பெருமாள் உயிர்நிலை அறிந்திருக்கும் விக்ரஹமே அடியேனுக்கு உபாயம் உபேயம் என்றார். அப்படி என்றால் என்ன அர்த்தம் என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம் என்று சென்ற வாரம் எழுதியிருந்தேன். 

உபாயம் என்பது ஒரு காரியத்தை அல்லது இலக்கை அல்லது பலனை அடைவதற்கான சாதனம், வழி அல்லது உத்தி. உபேயம் என்பது அந்த வழிமுறையின் மூலம் அடையப்படவேண்டிய இலக்கு, பயன் என்பது. 

ஒரு காரியத்தைச் சாதிப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன? நீங்கள் எல்லோரும் அறிந்ததுதான்.  சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கு முறைகள். 

சாம – நல்ல இனிய சொற்களால் சமாதானம் பேசி, நம் இலக்கை குறிக்கோளை அடைவது. 

தான – பணம், பொருள், இலவசம் போன்ற சலுகைகளினால் நம் குறிக்கோளை அடைவது. அதாவது ‘சாம’ வழிமுறையில் வெற்றி கிடைக்காவிட்டால். 

பேதம்-எதிரிகளைப் பிரித்தலின் மூலம் அவர்களை வெல்வது, சூழ்ச்சி, மிரட்டிப் பணியவைத்தல். இதன் மூலம் நம் குறிக்கோளை அடைவது. 

தண்டம்-தண்டித்தல் அல்லது போர் மூலம் வெற்றியடைதல். 

இந்த நான்கு வழிமுறைகளை சாணக்கியன் அரசர்களுக்கு உரிய நீதியாகச் சொல்கிறார்.  இவை ராஜதந்திர வழிமுறைகள். எதற்கெடுத்தாலும் நான்காவது வழிமுறையைப் பின்பற்றினால் அது கொடுங்கோல் ஆட்சிக்கு வழி வகுக்கும். மக்களின் வெறுப்பை சம்பாதித்துக்கொடுக்கும். பேதம் என்பதையே வழிமுறையாகக் கொண்டால் அரசனின் மீதான நம்பிக்கை குறையும். தானத்தை வழிமுறையாகக் கொண்டால், வேறு முறைகளால் குறிக்கோளை அடைய முடியாது, மக்கள் பேராசைக்காரர்களாக ஆகிவிடுவர். நல்ல மனிதர்கள் இருப்பின், இனிய சொற்கள் மூலமாகவே வெற்றியடைந்துவிடலாம். 

உபாயம் உபேயத்திற்கான உதாரணங்களை திவ்யப் பிரபந்தப் பாசுரங்களில் இரண்டை எடுத்துக்கொண்டு இந்த வாரம் பார்ப்போம். 

முதல் பாசுரம், ஆண்டாள் இயற்றிய திருப்பாவையில் வரும் ஐந்தாம் பாசுரம். 

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை 
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய் 

பொருள்: அற்புதச் செயல்களைச் செய்தவனை, நிலைத்த புகழ் பெற்ற வடமதுரையில் பிறந்தவனை, தூய்மையான யமுனை நதிக்கரையில் வசித்தவனை, தான் பிறந்த ஆயர் குலத்திற்குப் பெருமை சேர்க்கும் விளக்குப் போன்றவனை, பிறந்து தன் தாய்க்குப் பெருமை சேர்த்தவனை (அசோதையின் மகனாக ஆகி, அவளுக்குச் சிறப்புச் சேர்த்தவனை, தூய்மையான மனத்துடன் நாம் மலர் தூவி வணங்கி, நம் வாயினால் அவன் புகழைப் பாடி, நம் மனத்தை ஒருமுகப்படுத்தி அவனையே சிந்தித்தால், இதுவரை செய்த குற்றங்களும், இனி இந்தப் பிறவியில் நம் அறியாமையால் செய்யப்போகும் குற்றங்களும், கண்ணனால் மன்னிக்கப்படுவதால், தீயிலிட்ட தூசுக்கள் போல அழிந்துவிடும். அதனால் கண்ணனைப் போற்றிப் பாடி வணங்குவோம், எம்மைச் சேர்ந்த பெண்களே. 

இதில் உபேயம் என்பது, நம் குற்றங்களெல்லாம் அழிந்து கண்ணனை நாம் அடைவது. அதற்கான வழிமுறை, அவனையே எண்ணி நாம் எப்போதும் சிந்தித்திருப்பது. 

அடுத்து திருமங்கையாழ்வார், திருவேங்கடமுடையானைச் சரணாகதி செய்யும் பாசுரம் ஒன்று. (பெரிய திருமொழி முதலாம் பத்தில், ஒன்பதாம் பதிகத்தில் இரண்டாம் பாசுரம்) 

மானே கண்மடவார் மயக்கிற் பட்டு மானிலத்து
நானே நானாவித நரகம்புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம்பொழில் சூழ் திருவேங்கட மாமலை என்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டு அருளே 

இந்தப் பாசுரத்தில், உபேயம் என்பது, திருவேங்கடமுடையான் நம்மை ஆட்கொள்வது, அல்லது அவனுடைய நல்லெண்ணத்திற்குப் பாத்திரமாவது. இதனைச் செய்யும் வழிமுறை, உபாயம் என்ன? வேறு ஒன்றுமில்லை, அவனிடத்தில் சரணடைவது ஒன்றுதான் வழி. 

பொருள்: மானைப் போன்ற அழகிய கண்களையுடைய பெண்களின்மீது மையல் கொண்டு, இந்தப் பெரிய உலகில் நான் பலவிதமான நரகங்களுக்கும் காரணமாகும் பெரும் பாவங்களைச் செய்தேன். பிறகு,  வண்டுகள் ரீங்காரமிடும் தேன் நிறைந்த பூக்களை உடைய சோலைகள் சூழ்ந்த திருவேங்கட மலையில் வீற்றிருக்கும் திருவேங்கடமுடையானே, எனக்கு எல்லாமாய் இருப்பவனே, உன்னைச் சரணடைந்தேன்.  இந்த அடியவனை நீ காத்தருள வேண்டும். 

இனி குருபரம்பரைச் சரித்திரம் தொடர்கிறது. 

ஆளவந்தார், சிறிது உடல்நலம் இல்லாது இருந்ததைக் கண்டு, திருக்கோஷ்டியூர் நம்பியும், பெரிய நம்பியும் திருவரங்கப் பெருமாள் அரையருடன் சென்று ஆளவந்தாரைப் பார்த்து வணங்கி, தங்களுக்கான உபதேசங்களைக் கேட்டபோது, 

நான் மறைந்துவிடுவேன் என்று கலங்க வேண்டாம், மாறாக சந்தோஷப்படுங்கள். நாம் அனுதினமும் வணங்கும் அந்த பரமபத நாதனின் திருவடியில் நான் சென்று சேர்ந்துவிடுவேன். 

திருவேங்கடமுடையான் உயிர்நிலை அறிந்திருக்கும் குறும்பறுத்த நம்பியையும் பேரருளாளப் பெருமாள் உயிர்நிலை அறிந்திருக்கும் திருக்கச்சி நம்பியையும் பெரிய பெருமாள் உயிர்நிலை அறிந்திருக்கும் திருப்பாணாழ்வாரையும் திருப்பாணாழ்வார் உயிர்நிலை அறிந்திருக்கும் திருவரங்கப் பெருமாள் அரையரையும் காட்டியருளி,  திருப்பாணாழ்வாரையே நம் உபாயம் மற்றும் உபேயமாகக் கொள்ளுங்கள் என்று சொன்னார். 

உயிர்நிலை என்பது ஒருவர் எதற்காக எதன் பொருட்டு வாழ்கிறார் என்ற பொருளைக் கொடுக்கும். இதில் திருவேங்கடமுடையானுக்கும் குறும்பறுத்த நம்பிக்கும் உள்ள பிணைக்கமுடியாத தொடர்பு, பேருளாளப் பெருமாளுக்கும் திருக்கச்சி நம்பிக்கும் உள்ள பிரிக்கமுடியாத தொடர்பு, அரங்கநாதனுக்கும் திருப்பாணாழ்வாருக்கும் உள்ள பிரிக்க முடியாத தொடர்பு மற்றும் திருவரங்கப் பெருமாள் அரையருக்கும் திருப்பாணாழ்வாருக்கும் உள்ள பிரிக்கமுடியாத தொடர்பைக் குறிப்பிடுகிறார்.  (அதாவது ஒருவர் இன்னொருவருக்கு உயிர் போன்றவர் என்று அர்த்தம்) 

யாரந்த குறும்பறுத்த நம்பி, அவருக்கும் திருவேங்கடமுடையானுக்கும் என்ன தொடர்பு என்பதைப் பார்ப்போமா? 

குறும்பறுத்த நம்பி என்பவர் திருமலையில் மண்பாண்டங்கள் செய்து பெருமாளுக்குத் தேவையான தளிகைகள் செய்வதற்காக திருமடப்பள்ளிக்கு அனுப்பி, அதன் மூலம் வாழ்ந்தவர். தினமும் அப்படி மண்பாண்டங்கள் செய்யும்போது, சிறிது மண்ணை எடுத்து அதில் சிறு புஷ்பங்களைச் செய்து மானசீகமாய் திருவேங்கடமுடையானுக்குச் சமர்ப்பித்து மனதில் ஆராதனை செய்துவந்தார். வரது காலத்தில் வாழ்ந்துவந்த தொண்டைமன்னனும், திருவேங்கடமுடையான் மேல் மிகுந்த பக்தி கொண்டு, தினமும் தங்கத்தினால் ஆன மலர்களைச் செய்து வேங்கடவனுக்கு சமர்ப்பித்து வந்தார். தொண்டைமான் சக்கரவர்த்தி, ஆலயத்துக்குச் சென்று வேங்கடமுடையானைத் தொழும்போது, அவனது காலடியில், தான் சமர்ப்பித்திருந்த தங்க மலர்கள் இருப்பதையும், இறைவன் திருமுடியில், மண்ணால் செய்யப்பட்ட மலர்களும் இருப்பதைக் கண்டு ஆச்சர்யப்பட்டான். பெருமாளையே அவன் வினவ, அவன் கனவில், குறும்பறுத்த நம்பி என்ற குயவன் தினமும் தனக்கு மிகுந்த பக்தியுடன் மானசீகமாக மண்ணால் செய்யப்பட்ட மலர்களைச் சமர்ப்பிப்பதாகவும், அவனது உள்ளார்ந்த பக்தி, தனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்ததாகவும் சொன்னார். எந்த அளவிற்கு? ராஜா சமர்ப்பித்த தங்க மலர்களைக் காட்டிலும் குயவன் சமர்ப்பித்த மண்ணால் ஆன மலர்களுக்கு மதிப்பு அதிகம். இந்த வரலாறு பூசலார் நாயனார் வரலாற்றை நினைவுபடுத்துகிறதா? 

குறும்பறுத்த நம்பியின் இயற்பெயர் குரவ நம்பி என்பது. திருப்பதி மலையேற்றப் பாதையி ஆரம்பத்தில் பாதாள மண்டபம் உண்டு. (திருவேங்கடமுடையான் பாதங்களுடன்). இந்த இடம் அலிபிரி என்று அழைக்கப்படுகிறது. இங்குதான் இராமானுஜருக்கு பெரிய திருமலை நம்பி ராமாயண ரகசியங்களை உபதேசித்தார் என்று சொல்கின்றனர். 

அதைத் தாண்டி நடந்தால் (மலை ஏறினால்) அடுத்து வருவது தலயேரு குண்டு. இங்கு பாறையில் செதுக்கப்பட்டுள்ள ஆஞ்சநேயரை வணங்கினால் மலையேறும்போது கால்வலி மற்றும் தலைவலி வராது என்று நம்பப்படுகிறது. 

அதைத் தாண்டியதும் காணப்படும் மிகவும் சிதிலமான மண்டபம் கும்மர மண்டபம். கும்மர என்ற வார்த்தைக்கு குயவன் என்று அர்த்தம். அவன் வசித்த இந்த இடம் கும்மர மண்டபம் என்று அவன் பெயராலேயே வழங்கப்படுகிறது. 

தொண்டைமான் சக்கரவர்த்தி என்பவர் தொண்டை மண்டலத்தை ஆண்ட சிற்றரசன் எனவும், அவன் தான் முதன் முதலில் திருவேங்கட மலையில் ஆலயம் எழுப்பினவன் என்றும் சொல்கின்றனர். பெருமாளுடன் பேசும் சக்தியை அவன் பெற்றிருந்தான் என்றும், திருமலையின் ஆலயத்துக்கு வருவதற்கு ஒரு சுரங்கம் அமைத்திருந்தான் என்றும் சொல்கின்றனர். தொண்டைமான்கள் பல்லவர்களா இல்லை வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவரா (கள்ளர் மரபினர்), அறந்தாங்கித் தொண்டைமான்களுக்கும் புதுக்கோட்டை தொண்டைமான்களுக்கும் திருப்பதியில் கோயில் சமைத்த தொண்டைமான் சக்கரவர்த்திக்கும் என்ன தொடர்பு என்றெல்லாம் ஆராய்ந்தால், நிறைய தகவல்கள் கிடையாது. ஆனால் தொண்டைமான்கள் வரலாறு, இணையத்தில் சில படங்களைக் காட்டியது. அவற்றை உங்களுக்காக இங்கு பகிர்கிறேன். 

ராஜா ரவிவர்மாவின் புதுக்கோட்டை தர்பார் ஓவியம் (இணையம்) 

புதுக்கோட்டை அரண்மனை, 1850ஐச் சேர்ந்த, புகைப்படம். தொண்டைமான் அரசர் தன் அமைச்சரவை சகாக்களுடன். 

ஒருவன் இறைவனைச் சரணாகதி அடைந்துவிட்டால், அவனுடைய ஆத்மாவின் நன்மை, இறைவனைச் சேர்ந்தது. அவனது இவ்வுலக வாழ்வு, அவனுடைய முன்வினையைப் பொறுத்தது. அதாவது கர்மங்களுக்குக் கட்டுப்பட்டது. அதனால் இரண்டைப் பற்றியும் சரணாகதி அடைந்தவன் கவலைப்படக் கூடாது. அப்படி கவலை கொள்வானாகில், இறைவனிடமே முழுப் பொறுப்பையும் விட்டுவிட்டு அவனிடம் சரணாகதி செய்ததற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். 

புரிந்துகொள்ள கடினமான பகுதிகளாக அமைகின்றனவா? 

இனி அடுத்த வாரம் தொடர்வோம்...

======================================================================================

நான் படிச்ச கதை - JKC

ஒரு செல்லகதை

 கதையாசிரியர்: ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

தஞ்சையை பிறப்பிடமாகக் கொண்டவர். கல்வி, மற்றும் தொழில், ஆகியவை பற்றி தெரியவில்லை. இந்து தமிழ் இவரது பேட்டி ஒன்றை பிரசுரித்துள்ளது. அதில் இருந்து ... 

‘இதுவரையில் 18 நூல்களை எழுதியுள்ளார்.  125-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 9 நாவல்கள், எழுதியுள்ளார். 'இந்து தமிழ்' நாளிதழின் 'இளமை புதுமை' இணைப்பிதழில் இவர் எழுதியிருந்த ‘வேலையற்றவனின் டைரி’ என்கிற தொடர் கட்டுரை வாரந்தோறும் ஏராளமான வாசகர்களின் பாராட்டுதலைப் பெற்றதுடன் தனி நூலாகவும் வெளிவந்துள்ளது.’ பேட்டியின் சுட்டி : 

சுரேந்தர்நாத்         e-mail grsnath71@gmail.com 

G.R. Surendarnath Interview | 90's Kids Love vs 2k Kids Love ! | 44 Chennai Book Fair  (ஸ்ரீராம் இதைக் கேட்டு ஒரு கட்டுரை எழுதலாம். அவரும் 90 களில் காதலித்தவர் தானே) 

நிறைய காதல் கதைகளை எழுதியுள்ளதாகத் தெரிகிறது. ஒரு திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இங்கு இருக்கும் இக்கதை விகடனில் வெளி வந்த ஒன்று. 

======>சுட்டி செல்லகதை<======= 

இது ஒரு Gen Z கதை. அவர்களுக்காக அவர்களது பாணியில் எழுதப்பட்டது. Boomer களாகிய எ பி வாசகர்கள் அனைவரும் Z கண்ணோட்டத்தில் வாசிக்கக் கோருகிறேன். 

படிப்பினை: பொய் சொல்லாதே. ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய் வேண்டி வரும். இளமையில் கல் …. அது தீய பழக்கங்களாயினும். களவும் கற்று மற… 

பல்பொருள் பல்பொருள் பல்பொருள் ஆய்ந்துமே

நல்பொருள் நல்பொருள் கல். 

தீயவற்றை எறிந்துவிட்டு நல்லவற்றை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

ஒரு செல்லகதை

செல்லதுரை மிகவும் தெளிவாக எந்தவித பதற்றமும் இல்லாமல், சந்தோஷமாக முகமலர்ச்சியுடன் இருப்பதைப் பார்த்தால் அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை எனத் தெரிந்துவிட்டது. இருப்பினும் அதை உறுதி செய்துகொள்ளலாம் என, ”உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா?’ எனக் கேட்டேன். ”இன்னும் இல்லங்க…” என வருத்தமாகச் சொன்ன செல்லதுரையை நாங்கள் பொறாமையுடன் பார்த்ததில் இருந்தே எங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். ‘நாங்கள்’ என்றால் மனோஜ் ஆகிய நான் மற்றும் திலீப்.

நானும் திலீப்பும் சென்னையில் சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றில் டீம் லீடராக இருக்கிறோம். இருவருக்கும் திருமணம் ஆகி ஐந்தாறு வருடங்கள்தான் ஆகின்றன. திருமண பந்தத்தைத் தொடர்ந்து காப்பாற்ற நிறையப் பொய்கள் சொல்லவேண்டியிருக்கிறது.

‘இன்னைக்கி சாம்பார் சூப்பரா இருந்துச்சு!’

‘உன் ஃப்ரெண்ட்ஸுங்க ஒருத்திகூட உன் அளவுக்கு அழகா இல்லை.’

‘எங்க அம்மாவுக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு.’

‘இப்ப நான் ஒரு மீட்டிங்ல இருக்கேன். அப்புறம் போன் பண்றேன்.’

‘இந்த டிரெஸ்ல நீ ரொம்ப அழகா இருக்க.’

‘தோ…. வீட்டுக்குக் கிளம்பிட்டே இருக்கேன்.’

எவ்வளவு பொய்கள்… எவ்வளவு பொய்கள்? இரண்டு நாட்கள், பொய்யில் இருந்து விடுபட நினைத்தோம். ‘ஆபீஸ் வேலையாக பெங்களூரு செல்கிறோம்’ எனக் கடைசியாக ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு பாண்டிச்சேரி வந்திருக்கிறோம்.

செல்லதுரையை நாங்கள் இப்போதுதான் முதன்முதலாகச் சந்திக்கிறோம். செல்லதுரை, எங்கள் கம்பெனி புராஜெக்ட் மேனேஜர் வினோத்தின் நண்பன். நாங்கள் பாண்டிச்சேரி செல்கிறோம் எனச் சொன்னவுடன் வினோத், ‘என் ஃப்ரெண்டு செல்லதுரை பாண்டியிலதான் சிவில் இன்ஜினீயரா இருக்கான். நான் அவன்கிட்ட சொல்றேன். உங்களை கூடவே இருந்து கவனிச்சுப்பான்’ என அனுப்பிவைத்தான். இதோ எங்கள் முன்னால் செல்லதுரை.

”பொண்ணு பார்த்துட்டு இருக்காங்களா?’ என்றேன் செல்லதுரையிடம்.

”ஆமாம். கூடிய சீக்கிரமே முடிஞ்சிடும்னு நினைக்கிறேன்.’

”ஓ.கே ஆல் தி பெஸ்ட். சீனியர்ங்ற முறையில ஒரு அட்வைஸ் சொல்லலாமா?’

”சொல்லுங்க.’

”கல்யாணமான புதுசுல உங்க வொய்ஃப் உங்கள்ட்ட கொஞ்சலா, ‘என்னங்க குக்கர்ல ஆவி வருதான்னு பார்த்து விசிலைப் போடுங்க’னு சொல்வாங்க. உடனே நீங்க புதுக் கல்யாண மோகத்துல குடுகுடுன்னு ஓடிப்போய் விசிலைப் போட்டீங்கனு வெச்சுக்குங்க… அவ்வளவுதான். அப்புறம் சாவுற வரைக்கும் நீங்கதான் அந்த விசிலைப் போடணும்’ என்றேன் திலீப்பைப் பார்த்தபடி.

”அந்த விசில் பார்ட்டி நான்தான்’ என்றபடி மொட்டைமாடி தரையில் திலீப் டாஸ்மாக்கை விரித்தான்; ஊற்றிக் கொடுத்தான். முதல் ரவுண்டில் ”ஊத்துங்க சார்…” என்ற செல்லதுரை, இரண்டாவது ரவுண்டிலேயே, ”ஊத்து மச்சி… இப்ப நான் பரவச நிலையை அடைஞ்சுக்கிட்டிருக்கேன்’ என்றான்.

அரைப்பரவச நிலையில் இருந்த திலீப் செல்லதுரையை நோக்கி, ” ‘முதல் சந்திப்பிலேயே தண்ணியடிக்கிற ஃப்ரெண்ட்ஸ் முன் ஜென்மத்துல அண்ணன், தம்பியா பிறந்திருப்பாங்க’னு சொல்வாங்க. இனிமே நீ செல்லதுரை கிடையாது… என் செல்லம் நீ’ என்றான்.

”உனக்கும் ஏறிடுச்சாடா? இன்னைக்கு நான் செத்தேன்’ என்றபடி எழுந்தேன். மொட்டைமாடியில் இருந்து அரை நிலா வெளிச்சத்தில் மெல்லிய போதையில் தெரிந்த கடற்கரை மகா அற்புதமாக இருந்தது. மனைவி, பிள்ளைகளை விட்டுவிட்டு நாம் மட்டும் சந்தோஷமாக இருக்கிறோம் என மனதில் ஒரு குற்றவுணர்ச்சி. எனவே, என் மனைவி கவிதாவுக்கு, ‘ஐ லவ் யூ’ என ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு நிமிர்ந்தபோது, என் கையில் இருந்து மொபைல் பிடுங்கப்பட்டது. திலீப்தான் பிடுங்கியிருந்தான்.

”எங்களைத் தனியா விட்டுட்டு, நீ என்னா மொபைல நோண்டிக்கிட்டு…’ என மொபைலைப் பார்த்தான். அதில், ‘மெசேஜ் சென்ட்…’ என வந்தது.

”யாருக்கு இந்த நேரத்துல மெசேஜ் அனுப்புற?” என்றபடி மெசேஜைப் பார்த்தான். அடுத்த விநாடி, ”உனக்கு வெக்கமா இல்லை?’ என்றான்.

”என்ன திலீப்?’ என எழுந்து வந்தான் செல்லதுரை.

” ‘ஐ லவ் யூ’னு மெசேஜ் அனுப்பிட்டு இருக்கான் செல்லம்.’

”அநியாயமா இருக்கே. கல்யாணம் பண்ணிட்டு, இன்னொரு பெண்ணுக்கு ‘ஐ லவ் யூ’னுஎஸ்.எம்.எஸ் அனுப்பலாமா?’ என்றான்.

”இன்னொரு பொண்ணுக்கு இல்லை செல்லம். வெளியே சொல்லவே அசிங்கமா இருக்கு. தாலி கட்டின பொண்டாட்டிக்குப் போய் ‘ஐ லவ் யூ’னு மெசேஜ் அனுப்பியிருக்கான்’ என்ற திலீப்பின் குரலில் நிறைபோதை ததும்பி வழிந்தது.

”வொய்ஃபுக்குத்தானே… விடு மச்சி’ என்றான் செல்லம்.

”அதெப்படி விட முடியும். உனக்குக் கல்யாணமாகி எத்தனை வருஷம்டா ஆவுது?’ என்றான் திலீப் என்னிடம்.

”ஆறு…’ என்றேன்.

”கல்யாணமாகி ஆறு வருஷம் ஆன பொண்டாட்டிக்குப் போய் யாராச்சும் ‘ஐ லவ் யூ’னு மெசேஜ் அனுப்புவாங்களா?’

”ஆபீஸ் வேலைனு பொய் சொல்லிட்டு வந்திருக்கோம். ரொம்ப அழகான இடம். வொய்ஃபை மிஸ்பண்ற மாதிரி ஒரு ஃபீலிங்… அதான்.’

”ஏன்… எனக்கு பொண்டாட்டி இல்லையா?’ என அடுத்த ரவுண்டைக் கடகடவென அடித்து முடித்த திலீப்பின் முகத்தில் போதை தாண்டவம் ஆடியது.

”செல்லம்… நீதான் இதைக் கேக்கணும். கல்யாணமாகி இப்ப வந்தவளுக்கு ‘ஐ லவ் யூ’னு எஸ்.எம்.எஸ் அனுப்புறான். நானும் இவனும் பத்து வருஷமா ஃப்ரெண்ட்ஸ். இன்னைக்கு வரைக்கும் எனக்கு ‘ஐ லவ் யூ’னு ஒரு மெசேஜ் அனுப்பியிருக்கானான்னு நீயே கேளு..!”

திலீப்புக்கு மேல் போதையில் இருந்த செல்லம், ”என்ன மச்சி… அனுப்பியிருக்கியா?’ என்றான்.

”டேய்… லூஸு மாதிரி பேசாதடா…’

”இவ்ளோ நாள் அனுப்பலைனா பரவாயில்லை. இப்ப திலீப்புக்கு ‘ஐ லவ் யூ’னு எஸ்.எம்.எஸ் அனுப்பு.’

”சீ… போடா.’

”சரி… எனக்கு வேண்டாம். நம்ம செல்லத்துக்கு அனுப்பு…’ என்றான் திலீப்.

செல்லம் என் தோளை அணைத்தபடி, ”குறைந்த காலத்தில் நெருங்கிப் பழகிய நண்பா, திலீப் சொன்ன மாதிரி நீ எனக்கு ‘ஐ லவ் யூ’னு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பு…’ என்றான்.

நான் அடுத்த ரவுண்டை அடித்தபடி, ”இல்ல செல்லம்… அது வந்து… வொஃய்புக்கு மட்டும்தான் ஐ லவ் யூ சொல்வேன். ஸாரி…’ என்றேன்.

செல்லதுரை, ”சரி… நீ ஐ லவ் யூ சொல்லலைன்னாலும் பரவாயில்லை. நான் தண்ணியடிச்சேன்னா ஃப்ரெண்ட்ஸ்களுக்குக் கன்னத்துல முத்தம் கொடுப்பேன். அதையாச்சும் வாங்கிக்குவியா?” எனக் கேட்டான்.

நான் சிரித்தபடி, ‘சரி கொடு…’ என்றேன்.

கொடுத்தான்.

”திலீப்…’ என திலீப்பை அழைத்து அவனுக்கும் முத்தம் கொடுத்தான். என் மடியில் படுத்துக்கொண்டு, ”உன்னோடு இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்காதடா மனோஜ்…’ என செல்லம் கவிதை வாசிக்க… நான் சத்தமாகச் சிரித்தேன்.

”இன்னும் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா?’ என செல்லம் வானத்தை நோக்கி வணங்க, நான் ”டேய்… இவன் அலம்பல் தாங்கலைடா” என்றேன்.

”செமயா கம்பெனி கொடுக்கிறான்ல’ எனச் சிரித்தான் திலீப்.

மறுநாள் இரவு நாங்கள் பாண்டிச்சேரியில் பஸ் ஏறும் வரையிலும் நன்கு கம்பெனி கொடுத்தான் செல்லதுரை. செல்லத்தின் அலம்பலால் நாள் முழுவதும் சிரிப்பு. பஸ் புறப்பட்டவுடன் செல்லம் கை அசைத்தபடி பின்னால் நகர… சட்டென மனதில் ஒரு பாரம். பஸ் ஏறுவதற்கு முன்பும் தண்ணி அடித்துவிட்டுத்தான் ஏறியிருந்தோம். எனவே, போதையில் செல்லதுரை மீது பாசம் பெருக்கெடுத்தது. அவ்வளவு கேட்டும் அவனுக்குக் கடைசி வரையிலும் ‘ஐ லவ் யூ’ என மெசேஜ் அனுப்பாமலே வந்தது வருத்தமாக இருந்தது. மொபைலை எடுத்து, எஸ்.எம்.எஸ்-ஸைத் தமிழில் தட்ட ஆரம்பித்தேன்.

‘பாண்டிச்சேரியில் உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்காதடா செல்லமே… ஐ லவ் யூ அண்ட் ஐ மிஸ்டு யூ’ என டைப்படித்து செல்லத்துக்கு அனுப்பிவிட்டு, அதிர்ச்சியுடன் ‘ஆ…’ எனக் கத்திவிட்டேன்.

”என்னாச்சுடா?’ என்றான் திலீப்.

”செல்லத்துக்கு ‘ஐ லவ் யூ’னு மெசேஜ் அனுப்பினேன்.’

”அதுக்கு என்ன? அவன்தான் கேட்டுக்கிட்டிருந்தானே…’

”அய்யோ… அது இல்லடா. எஸ்.எம்.எஸ்-ஸை அவனுக்கு அனுப்புறதுக்குப் பதில் என் வொய்ஃபுக்கு அனுப்பிட்டேன்.’

”எப்டிரா?’

”என் வொய்ஃப் நம்பரை ‘செல்லம்’னுதான் சேவ் பண்ணி வெச்சிருக்கேன். இவன் நம்பரை ‘செல்லம் 2’-னு சேவ் பண்ணி வெச்சிருந்தேன். போதையில செல்லம் 2-க்கு அனுப்புறதுக்குப் பதிலா என் வொய்ஃபுக்கு அனுப்பிட்டேன்.’

”பரவாயில்லை விடு… ‘ஐ லவ் யூ’னுதானே அனுப்பின?’

”அது மட்டும் இருந்தா பரவாயில்லைடா…’ என்ற நான் அனுப்பிய எஸ்.எம்.எஸ்-ஸை திலீப்பிடம் காட்டினேன். ‘பாண்டிச்சேரியில் உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்காதடா செல்லமே… ஐ லவ் யூ அண்ட் ஐ மிஸ்டு யூ செல்லம்…’ என வாய்விட்டுப் படித்த திலீப் என்னைத் திகிலுடன் பார்த்தான்.

”வாய்ல இருந்து வந்த சொல்லையும், செல்லுல இருந்து அனுப்பின எஸ்.எம்.எஸ்-ஸையும் திருப்பி வாபஸ் வாங்கவே முடியாது. நீ செத்தடி…’ என்றான் திலீப். அப்போது என் மனைவியிடம் இருந்து கால் வர… நான் பீதியுடன் மொபைலை நோக்கினேன். அடித்த அத்தனை போதையும் இறங்கிவிட்டது.

”என்ன மச்சி பண்றது?’

”எதுவும் பண்ண முடியாது. பேசுடா…’ என்றான்.

நான் போனை எடுத்தவுடனேயே எனது மனைவி அழும் சத்தம் கேட்டது. ”கவி…’ என நான் ஆரம்பிக்க, ”உண்மையைச் சொல்லுங்க. இப்ப எந்த ஊர்ல இருந்து வர்றீங்க?’ என்றாள்.

பொய் சொல்ல முடியாது. நானே எஸ்.எம்.எஸ்-ஸில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறேன். ”அது வந்து கவி… நான் நேர்ல வந்து சொல்றேன்…’ என்றேன்.

”எங்கேருந்து வர்றீங்கனு மட்டும் சொல்லுங்க…’

”பாண்டிச்சேரி…’ என்றவுடன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நான் அவளை அழைக்க முயற்சிக்க, போன் ஸ்விட்ச் ஆஃப்.

”மத்த விவரம் எல்லாம் தெரியலைன்னாலும், இதை மட்டும் வேற யாருக்கோ அனுப்பவேண்டிய மெசேஜை நமக்கு அனுப்பிட்டான்னு கண்டுபிடிச்சுட்டா. இப்ப என்னடா பண்றது?’

”ஆளையும் மூஞ்சியும் பாரு. அனுப்புறதுதான் அனுப்பினே சும்மா ‘ஐ லவ் யூ’னு அனுப்பாம… டயலாக் வேற.’

”பாவம்டா. கிராமத்து அப்பாவிப் பொண்ணு. ரொம்ப டென்ஷன் ஆகிடுவா…’

”அவங்களை விடு. உன் வொய்ஃபோட அண்ணனுங்க உன்ன டின்னு கட்டப்போறானுங்க’ என்றவுடன் நான் பேய் முழி முழித்தேன்.

கவிதாவுக்கு இரண்டு அண்ணன்கள். ஒருத்தன் ‘பாசமலர்’ சிவாஜி என்றால், இன்னொருத்தன் ‘என் தங்கை கல்யாணி’ டி.ராஜேந்தர். அதுவும் பெரிய அண்ணன் காவல் துறையில் அதிகாரி ரேஞ்சில் இருக்கிறான். ‘சாப்புடுங்க மாப்ள…’ என்பதையே, ‘ஓங்கி ஒரு அறைவிட்டன்னா…’ என்பதுபோல் விறைப்பாகத்தான் பேசுவான். இன்னோர் அண்ணன் சும்மா சும்மா, ‘என் தங்கச்சி…’ என சென்டிமென்ட்டாகப் பேசிக் கண்ணீர் வடிப்பான்.

திருமணம் முடிந்து கவிதாவை நான் அழைத்துக்கொண்டு கிளம்பியபோது, இருவரும் அழுது தீர்த்துவிட்டனர். அதுவும் சின்ன அண்ணன், எங்கள் கார் கிளம்பியப் பிறகும் கார் ஜன்னலில் தலையை நீட்டி அழுதபடி, சிறிது தூரம் தொங்கிக்கொண்டே வந்து அவன் வேட்டி அவிழ்ந்த பிறகுதான் இறங்கினான். எனக்கு இப்போது கவிதாவைவிட, அவள் அண்ணன்களை நினைத்தால்தான் திகிலாக இருந்தது.

விடியற்காலையில் நான் வீட்டை அடைந்து காலிங்பெல்லை அடித்தேன். கதவு திறக்கப்பட… நான் அதிர்ந்தேன். கதவைத் திறந்தது… கவிதாவின் போலீஸ் அண்ணன் கணேஷ். ‘இன்ட்ரோகேஷன் ஸ்பெஷலிஸ்ட்’ என்பது துறை வட்டாரத்தில் அவருக்கான பெயர். தீவிரவாதிகள், ரௌடிகள் என அனைவரையும் விசாரிக்க இவரைத்தான் அழைப்பார்கள்.

நான் உள்ளே நுழைய மேலும் அதிர்ச்சி.

வீட்டில் கவிதாவின் அப்பா, அம்மா, சின்ன அண்ணன், அண்ணிகள், சித்தப்பா, சித்தி, கவிதாவின் பாட்டி… என ஒரு படையே உட்கார்ந்திருந்தது. நடுவில் கவிதா தலைமுடியை விரித்துப்போட்டுக்கொண்டு, அழுதழுது வீங்கிய கண்களுடன் அமர்ந்திருந்தாள். நல்லவேளையாக என் இரண்டு மகள்களும் ஓரமாகப் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.

என்னைப் பார்த்தவுடன் கவிதா, இழவு வீட்டில் முக்கிய உறவினர்கள் வந்தவுடன் திடீரெனக் குரல் உயர்த்தி அழுவார்களே… அதுபோல சத்தமாக அழுதபடி, ”இவ்ளோ பெரிய துரோகத்தைப் பண்ணிட்டு எப்படி அண்ணே வீட்டுக்கு வர மனசு வந்துச்சு?’ என்றாள், தன் சின்ன அண்ணன் குமாரை நோக்கி.

குமார் தன் கண்களில் உலகிலுள்ள அத்தனை அண்ணன்களின் சோகங்களையும் சுமந்தபடி, ”அய்யோ… ரோஜாப் பூவை வளர்த்து ஆசிட்ல போட்டுட்டோமே அம்மா…’ என்றான். திருதிருவென முழித்த கவி, ”யாரு ரோஜா… என்ன ரோஜா?” என்றாள்.

”அடிப்பாவி மவளே… இப்படி ஒரு விவரமும் தெரியாம, சிரிச்சுக்கிட்டே புருஷனைச் சக்களத்தி வீட்டுக்கு அனுப்பிவெச்சிருக்கியே…” என்றாள் கவிதாவின் அம்மா.

19 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம். நெல்லையின் குரு பரம்பரைத் தொடர் வழ்க்கம் போல் சிறப்பாக வந்துள்ளது. JKC சார் பகிர்ந்துள்ள கதை இனிமேல்தான் படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். நன்றி.

      நீக்கு
  2. நேற்றய குறுக்கெழுத்து புதிரில் சூர்யா சில சந்தேகங்களை கேட்டிருந்தார். நேற்று மாலை(இங்கே வியாழன் மாலை) நாங்கள் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய பொழுது இரவு 11:30 ஆகி விட்டது. அதனால் முதல் தவறை மட்டும் திருத்தச் சொன்னேன். ஸ்ரீராமுக்கும், சூர்யாவுக்கும் நன்றி. தவறுகளுக்கு வருந்துகிறேன், மன்னிக்கவும்.
    சூர்யாவின் மற்ற சந்தேகங்கள்:
    // 1) இடமிருந்து வலம் 10. குடியிருப்பு(2)....10க்கு வலது பக்கக் கட்டம் காலி இல்லையே!
    2) மேலிருந்து கீழ் ..... கடற்கரை நகரம்(5). எங்கு ஆரம்பம்? 1 மேலிருந்து கீழா?
    3)மேலிருந்து கீழ் .... இருக்கிறதா இல்லையா (4). எங்கு ஆரம்பம்? 2 மேலிருந்து கீழா?
    4) கீழிருந்து மேல்...இரண்டு க்ளூக்களுக்கும் எத்தனை எழுத்துகள் என்று கொடுக்கவில்லையே!//
    1. 11 என்பத்ற்கு பதிலாக 10 என்று குறிப்பிட்டு விட்டேன்
    2&3. ஆமாம்,ஆமாம்
    4. இரண்டுமே நாலு எழுத்து வார்த்தைகள்தான்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி சூர்யா. உங்கள் விடைகளை banuvenky60@gmail.com என்னும் என்னுடைய மெயிலுக்கு அனுப்பி வைக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடையை அனுப்பி விட்டேன். ஒரு க்ளூ கண்டு பிடிக்க முடியவில்லை. நல்ல interesting க்ளூக்கள் கொடுத்திருந்தீர்கள்

      நீக்கு
  4. கதை முழுமையாக பிரசுரிக்கவில்லை. கடைசி பக்கத்தை காணோம். மெயில் அனுப்பியிருக்கிறேன் பார்க்கவும். அல்லது நான் உங்களுக்கு நேரடியாக அனுப்பியதைப்பார்ர்ர்க்கவும்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகர் சகோதரரே

      நானும் முதலில் கதையை படித்தேன்.கதை பாக்கி பிரசுரிக்கப்படாமல் விடுப்பட்டிருப்பது தெரிந்தது.உடனே நீங்கள் தந்த சுட்டிக்குச் சென்று முழு கதையையும் படித்தேன். கதையை நல்ல நகைச்சுவையாக உள்ளது. சில இடங்களில் வாய் விட்டு சிரிக்கும் அளவிற்கு கதை ஸ்வாரஸ்யமாக இருந்தது. கதாசிரியர் நன்றாக எழுதியுள்ளார். நல்லதொரு கதையை இங்கு தந்த தங்களுக்கு மிக்க நன்றி .

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. ​பிழை பொறுத்தமைக்கு நன்றி. இப்படித்தான் சில சமயங்களில் ஆகும்,

      Jayakumar

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    கோடை விடுமுறையில் விருந்துகள், உறவினர்கள் என நேரம் பறக்கிறது. தொடர்ச்சியாக என்னால் வலைத்தளத்திற்கு வர இயலவில்லை. அனைவரும் மன்னிக்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இன்று சனிக்கிழமை என்பதால் காலையில் கிடைத்த நேரத்தில் வந்தேன். விடுபட்ட பதிவுகளை பிறகு நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன். அனைவருக்கும் என் அன்பான நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். வேலைகள் அதிகம் அல்லது உடம்புக்கு ஓய்வு என்று நினைத்தேன். பெண்களுக்குத்தான் எத்தனை வேலைகள்...

      நீக்கு
  7. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    வாரம் ஒரு பாசுரம் தொடர் நன்றாக உள்ளது. இறை பக்தியை முழுவதுமாக உணர்ந்து அதை மென்மேலும் வளரச் செய்யும் தங்களுக்கு என் பணிவான நன்றி. இன்றைய பகுதியை இன்னமும் முழுவதுமாக ஆழ்ந்து படிக்கவில்லை. படித்து விட்டு வருகிறேன். ஆஞ்சநேயர் தரிசனம் பெற்றுக் கொண்டேன். திறமையாகச் கூறி வரும் தங்களுக்கு என் அன்பான வாழ்த்துகள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. இன்றைய பாசுரம் வெகு சிறப்பு..

    பதிலளிநீக்கு
  9. திருவேங்கட மாமலை என் ஆனாய்
    வந்தடைந்தேன் அடியேனை
    ஆட்கொண்டு அருளே ...

    கோவிந்தோ கோவிந்த...

    பதிலளிநீக்கு
  10. உபாயம் : experiment, formula, method
    உபேயம் : inference, result. proof.
    குரு பரம்பரை தொண்டைமான்களின் கதைக்கு திசை திரும்பி பாதியில் தொங்கி உபேயத்திற்கு சம்பந்தம் இல்லாமல் நிற்கிறது. மூலக்கதைக்கு திரும்பவில்லை

    Jayakumar

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!