நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்
நெல்லைத் தமிழன்
குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 44
இராமானுஜர் பதினெட்டாம் தடவை திருக்கோஷ்டியூர் சென்று, திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் சரம ஸ்லோகத்தின் அர்த்தத்தை மிகவும் விளக்கமாகக் கேட்டுக்கொண்டதைச் சென்ற வாரம் எழுதியிருந்தேன்.
இந்த ரகஸ்ய அர்த்தங்கள் மிகவும் ரகசியமாகவே வைத்துக்கொள்ள வேண்டும் என்று நம்பி, இராமானுஜரிடம் சொன்னார். இராமானுஜர், நாம் நம்முடைய கூரத்தாழ்வாருக்கு இந்த விசேஷ அர்த்தங்களைப் பகிர்ந்துகொள்ளலாமா என்று அனுமதி கேட்டதற்கு, கூரத்தாழ்வானுக்கு இந்த அர்த்தங்களைத் தெரிந்துகொள்வதற்கு அதிகாரம் உண்டு, ஆனால் ஒரு வருட காலம் அவர் கைங்கர்யங்களைச் சோதித்துப் பார்த்து பிறகு பகிர்ந்துகொள்ளலாம் என்று சொன்னார். (இதற்கு அர்த்தம் அவரிடம் ஆச்சார்ய கைங்கர்யங்களை ஒரு வருட காலம் பெற்றுக்கொண்டு பிறகு கற்றுக்கொடுங்கள்)
இராமானுஜர் திருக்கோஷ்டியூர் நம்பிகளின் திருமாளிகையை விட்டுப் புறப்பட்டு, நேரே திருக்கோஷ்டியூர் கோயிலுக்குச் சென்று, அங்கு தெற்கு நோக்கி அமைந்துள்ள நரசிம்மர் சன்னிதியில் (இதனை தெற்காழ்வான் சன்னிதி என்பர்) கூடியிருந்த வைணவர்களுக்கு சரம ஸ்லோக ரகஸ்ய அர்த்தங்களை விரிவாக எடுத்துரைத்தார். (பலர் திருக்கோஷ்டியூர் அஷ்டாங்க விமானத்தின் தென் திசையில் உள்ள நரசிம்மமூர்த்தியை தெற்காழ்வான் என்று குறிப்பிடுவது உண்டு. ஆனால் இராமானுஜர், கோயில் தரைத் தளத்தில் தெற்கு நோக்கி அமைந்திருந்த நரசிம்மமூர்த்தி சன்னிதியில்தான் ரகஸ்ய அர்த்தங்களை கூடியிருந்த வைணவர்களுக்கு வெளிப்படுத்தினார் என்றே அபிப்ராயப்படுகின்றனர்.)
குரு பரம்பரையைப் படிப்பதன் நோக்கம், அந்த அந்த ஊர்களுக்குச் சென்று கோயிலில் தரிசனம் செய்யும்போது, முக்கியமான இடங்களைத் தரிசனம்செய்ய மறந்துவிடக் கூடாது. ஒரு தடவை எதேச்சையாக கடலூரில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பணி புரிந்த ஒரு வைணவரிடம் வாட்சப் மூலம் தொடர்புகொண்டு பேசிக்கொண்டிருந்தபோது, அவர், கும்பகோணம் அருகில் பெரிய நம்பி திருவரசு இருப்பது தெரியுமா என்று கேட்டார். தெரியாது என்றதும், எப்படி அதற்குப் போக வேண்டும் என்று சொன்னார். அடுத்த சில நாட்களில் கும்பகோணம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மனைவியுடன் பெரிய நம்பி திருவரசுக்குப் போய்ச் சேவித்துவிட்டு வந்தோம். அவர் ஏன் அங்கு மறைந்தார் என்பதை இந்த இராமானுஜர் வரலாற்றிலேயே பார்ப்போம்.
இராமானுஜர், 'இவ்வளவு கஷ்டப்பட்டு ஒருவர் இந்த விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், எத்தனை பேரால் முடியும், இந்த அர்த்த விசேஷங்கள் அனைவருக்கும் பொதுவானது அல்லவா? ஆசையுடையோரெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டியது அல்லவா' என்று தன்னளவில் யோசித்தார். அவருக்குத்தானே தெரியும் பதினேழு முறை நடந்துவந்து பதினெட்டாவது முறையே தன்னால் தெரிந்துகொள்ள முடிந்தது, அது எவ்வளவு கடினம் என்று. அதனால் உடனேயே அதனை திருக்கோஷ்டியூர் கோயிலில் வெளிப்படுத்தினார்.
இராமானுஜர் இப்படி, பரம ரகஸ்யமான சரம ச்லோக அர்த்தத்தை எல்லோருக்கும் தானமாகக் கொடுத்துவிட்டதை அறிந்து, திருக்கோஷ்டியூர் நம்பி அவரைக் கூப்பிட்டு, ஏன் இப்படிச் செய்தீர்? ஆச்சார்யன் கட்டளையை மீறினால் என்ன கிடைக்கும் என்று தெரியுமா எனக் கேட்டார். அதற்கு இராமானுஜர், அடியேனுக்கு அது தெரியும். ஆச்சார்யன் ஆஜ்ஞையை மீறி வெளிப்படுத்தியதால் அடியேனுக்கு நரகமே கிட்டும் என்று தெரியும் என்றார். நரகம் கிடைக்கும் என்று தெரிந்துமா வெளிப்படுத்தினீர் எனக் கேட்க, அதற்கு இராமானுஜர், நரகம் அடியேன் ஒருவனுக்கே கிடைக்கும் அன்றோ. ரகஸ்ய அர்த்தஙள் தெரிந்தவர்களெல்லாரும் உய்வடைவார்கள் அன்றோ. பலர் உஜ்ஜீவிக்க ஒருவன் நரகம் புகுவது தவறில்லையல்லவா என்றார்.
அதைக் கேட்ட திருக்கோஷ்டியூர் நம்பி, ஒரு சமயம் நம்பெருமாள் வெளிமண்டபத்தில் சிங்காதனத்தில் எழுந்தருளியிருந்தபோது, நமக்காவாரை நாமே தேடிக்கொள்கிறோம் என்று அருளிச்செய்தாரே, அவரோ நீர்? என்று வியந்து, இராமானுஜருக்கு எம்பெருமானார் என்ற திருநாமம் கொடுத்து, எப்போதும் நம் தரிசனத்தை ‘எம்பெருமானார் தரிசனம்’ என்றே பேரிட்டு அழைப்பீர் என்று எல்லோருக்கும் அருளிச்செய்தார்.
திருக்கோஷ்டியூர் சௌம்யநாராயணப் பெருமாள் கோயில். அடுத்த படம், திருக்கோஷ்டியூர் நம்பிகளின் திருமாளிகை அமைந்திருந்த தெற்கு திசையின் கோயில் வாசல். அதன் பின்புலத்தில் மேலே அஷ்டாங்க விமானம் தெரியும்.
இந்தப் பட த்தில் தெற்கு வாசலின் பின்புறத்தில் மேலே அஷ்டாங்க விமானம் தெரியும்.
அஷ்டாங்க விமானத்தின் தெற்குப் பகுதியில் இராமானுஜர் சரம ச்லோகப் பொருளை கூடியிருந்தவர்களுக்கு விளக்கினார் என்னும்படியாக வைக்கப்பட்டுள்ள சிலை. அங்கிருந்து திருக்கோஷ்டியூர் நம்பி மாளிகை தெரியும் (உயரமாக இருக்கும் திருமாளிகை)
அஷ்டாங்க விமானத்துக்குச் செல்லும் மிகக் குறுகலான படிகள்
எம்பெருமானாரும் திருவரங்கம் மீண்டு வந்து, பெரிய பெருமாளைச் சேவித்த பிறகு தன்னுடைய மடத்துக்குத் திரும்பினார். அப்போது கூரத்தாழ்வான் எழுந்திருந்து இராமானுஜரைச் சேவித்து நின்றார். இராமானுஜர், ஆளவந்தாரே நம்மை விசேஷமாக கடாட்சித்தது போல, திருக்கோஷ்டியூர் நம்பி நம்மை வாழ்வித்து அருளினார் என்றார். ரகஸ்ய அர்த்தங்களை உமக்குக் கொடுக்க, உம்மை ஒரு வருட காலம் ஆச்சார்யனுக்கு பணிவிடைகள் செய்து உமது உறுதிப்பாட்டை அறிந்துகொண்டு பிறகுதான் சரம ச்லோகார்த்தம் சொல்லும் என்று நியமித்தார் என்றார்.
கூரத்தாழ்வானுக்கு வருத்தம் மேலிட்டது. தம்முடைய ஆச்சார்யரான இராமானுஜருக்குப் பணிவிடைகள் செய்வது விஷயமாக அல்ல. ஆக்கை நிலையில்லாததே, சரம ச்லோக அர்த்த விசேஷங்களை ஜீவித்திருக்கும்போதே கேட்டுக்கொள்ள வேண்டுமே என்பதனால். அதனால் சாஸ்திரங்களை ஆராய்ந்து, இராமானுஜரிடம், ஆச்சார்யன் திருமாளிகை வாசலில் ஒரு மாதம் உபவாசம் இருந்தால், அது ஒரு வருடம் பணிவிடை செய்ததற்குச் சமம் என்றிருப்பதால், உபவாசமிருக்கப் போகிறேன் என்று சொல்லி, அப்படி ஒரு மாத உபவாசத்திற்குப் பிறகு இராமானுஜரிடமிருந்து சரம ச்லோகார்த்தத்தை உபதேசமாகப் பெற்றார்.
கூரத்தாழ்வானும் முதலியாண்டானும் இராமானுஜரிடம் முதன் முதலில் சேர்ந்த சீடர்கள் என்பது உங்கள் நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன். இளையாழ்வாரின் சகோதரி மகனாக பூந்தமல்லிக்கும் திருமழிசைக்கும் இடையே புருஷமங்கலம் அல்லது வரதராஜபுரம் என்னும்பச்சைவாரணப் பெருமாள் கோயிலில் அவதரித்தவர் தாசரதி. (இப்போது நாசரத்பேட்டை). இவரது தந்தையார் ஆனந்த தீக்ஷிதர். தாயார் நாச்சியார் அம்மன். இளையாழ்வாரை விட பத்து வயது சிறியவர் தாசரதி.
இராமானுஜர் சன்னியாசியாக காஞ்சீபுரத்தில் ஆனபோது, தாசரதியைத் தவிர அனைத்தையும் விட்டேன் என்று சொன்ன பெருமையை உடையவர். இராமானுஜரை முதன் முதலில் சேர்ந்ததால், இவர் ‘முதலியாண்டான்’ என்று அழைக்கப்பட்டார். இராமானுஜர் காஞ்சீபுரத்தைவிட்டு ஸ்ரீரங்கம் சென்றபோது கூரத்தாழ்வானும் முதலியாண்டானும் அவரைப் பின்தொடர்ந்து திருவரங்கம் சென்றனர். இராமானுஜர் கட்டளையின் பேரில், திருக்கோயில் நிர்வாகத்தை முதலியாண்டான் கவனித்துக்கொண்டார்.
கூரத்தாழ்வாருக்கு சரம ச்லோகார்த்தம் இராமானுஜரால் கொடுக்கப்பட்ட பிறகு, முதலியாண்டானும் இராமானுஜரை வேண்டி நின்றார். அதற்கு இராமானுஜர், கூரத்தாழ்வான் ஒருவருக்கே சரம ச்லோகம் பிரஸாதிக்கலாம் என்று நம்பிகள் அனுமதி தந்திருக்கிறார். அதனால் உமக்கு வேண்டுமானால், நீரும் திருக்கோஷ்டியூர் சென்று நம்பிகளிடத்தில் கேட்டுக்கொள்ளும் என்று சொல்லிவிட்டார்.
முதலியாண்டானும் திருக்கோஷ்டியூர் சென்று நம்பிகளுக்கு ஆறு மாதங்கள் கைங்கர்யங்கள் பண்ணினார். நம்பி ஆறு மாதங்களுக்குப் பிறகும் ஒன்றும் அருளிச்செய்யா நிற்க, முதலியாண்டான் நம்பிகளைச் சேவித்து, அடியேன் வந்த காரியத்தை பூர்த்தி செய்தருளவேண்டும் என்றார். அதற்கு நம்பிகள், ஞானச் செருக்கு, செல்வச் செருக்கு, நற்குடிப்பிறப்புச் செருக்கு ஆகிய இந்த மூன்று ஆபத்துக்களையும் தவிர்த்தீராகில் எம்பெருமானார் தாமே உமக்கு உபதேசிப்பார் என்று சொல்லி, தம்முடைய திருவடி நிலைகளை முதலியாண்டான் தலைமீது வைத்து விடை கொடுத்து அனுப்பினார்.
முதலியாண்டான் திருவரங்கம் வந்தடைந்து எம்பெருமானார் திருவடிகளைச் சேவித்து பணிவுடன் நின்றார். திருக்கோஷ்டியூர் நம்பி சொன்ன வார்த்தைகளைக் கேட்டு, அவருக்கும் கூரத்தாழ்வானுக்கும் எல்லா மறைப் பொருள்களிலும் முக்கியமானதான் ரகஸ்யார்த்தத்தை மிகவும் விளக்கமாக பிரசாதித்து அருளினார்.
(2019 டிசம்பர்) முதலியாண்டான் திருமாளிகை, மேற்கு உத்தர வீதி
பிறகு ஒருநாள், திருக்கோஷ்டியூர் நம்பி, திருவரங்கத்திற்கு வந்தார். நம்பெருமாளைச் சேவித்துவிட்டு, திருமாலையாண்டானை அழைத்துக்கொண்டு, எம்பெருமானார் மடத்துக்கு எழுந்தருளினார். எம்பெருமானார் நம்பிகளின் திருவடியில் விழுந்து வணங்கினார். நம்பி, அவரை நோக்கி, நீர் திருமாலையாண்டானிடம் திருவாய்மொழிக்கு அர்த்தம் கேட்டருளவேண்டும் என்று சொல்லி, எம்பெருமானாரை, திருமாலையாண்டான் திருக்கையிலே ஒப்படைத்துவிட்டு மீண்டும் திருக்கோஷ்டியூர் போய்ச் சேர்ந்தார்.
இந்தத் திருமாலையாண்டான், ஆளவந்தாரின் சிஷ்யர். (திருக்கோஷ்டியூர் நம்பியும்தான்). இவருக்கு மாலாதாரர், ஸ்ரீ குணபூர்ணர் என்ற பெயர்களும் உண்டு. திருமாலிருஞ்சோலையில் பிறந்தவர். திருமாலையாண்டான் என்பது இவரது வம்சப் பெயர். இவருடைய முன்னோரான கண்ணுக்கினியான் ஸ்வாமி, திருமாலிருஞ்சோலை கோயிலில் பணிபுரிந்துகொண்டிருந்தார்.
ஒரு முறை, மலையாள மாந்திரீகர்கள், அழகர் கோயில் பெருமாளது தேஜஸை அபகரித்துச் செல்வதற்காக திருமாலிருஞ்சோலைக்கு வந்து கண்களில் அஞ்சன மை இட்டுக்கொண்டு (மாந்திரீக மை) மாயம் செய்பவராய் கோயிலுக்குள் யாரும் அறியாதவாறு மறைந்திருந்தனர். இதுபற்றி அறிந்த கண்ணுக்கினியான் ஸ்வாமி, இந்த மாந்த்ரீகர்கள் பலிபீட த்திற்குப் போடும் பிரசாதத்தை உண்டு வாழ்கிறார்கள் என்பதை அறிந்து, பலி பிரசாதத்தில் மிக அதிக அளவில் மிளகுப் பொடியைச் சேர்க்கச் சொன்னாராம். அதை உண்ட மாந்த்ரீகர்கள் கண்ணில் நீர் வர, அஞ்சன மை அழிந்து பிறர் கண்ணுக்குத் தென்பட்டனராம். பிறகு அவர்கள் திருமாலிருஞ்சோலையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனராம். அதிலிருந்து கண்ணுக்கினியான் ஸ்வாமி வம்சத்தினருக்கு அழகருக்கு புரோகிதராக இருக்கும் உரிமை வந்ததாம்.
திருக்கோஷ்டியூர் நம்பியின் நியமனப்படி, திருமாலையாண்டான், இராமானுஜருக்கு திருவாய்மொழி பாசுரங்களின் விசேஷ அர்த்தங்களைச் சொல்லிக்கொண்டு வந்தார். பல முறை, எம்பெருமானார், இப்படியும் பொருள் கொள்ளலாமே என்று தமக்குத் தோன்றிய அர்த்த த்தைச் சொல்லவும், திருமாலையாண்டானுக்கு, இது என்ன, நீர் புதிதாகச் சொல்லுகிறீர், இதை நம் ஆச்சார்யார் ஆளவந்தார் கூறக் கேட்டிலோம் என்று இராமானுஜரிடம் சொல்லிவிட்டார். இப்படி பல முறை நிகழ்ந்தது. இப்படி தாம் கூறும் பொருளுக்கு மாறுபாடான பொருள் இராமானுஜர் கூறுவது திருமாலையாண்டான் மனதிற்குப் பிடிக்கவில்லை.
என்ன இது… இளையாழ்வாராக இருந்தபோது யாதவப் பிரகாசர் என்ற அத்வைத குரு சொன்ன வேத வாக்கியங்களுக்கான அர்த்தத்தை மறுத்து இளையாழ்வார் வேறு வகையில் அர்த்தம் சொன்னபோது யாதவப் பிரகாசர் கோபமுற்றதுபோல இங்கும் ஆகின்றதே என்று நினைக்கிறீர்களா?
அடுத்த வாரம் என்ன ஆனது என்று பார்ப்போம். இனி இந்த வாரத்திற்கான பாசுரம், பெரிய திருமொழி (திருமங்கையாழ்வார் அருளிச் செய்தது) 8ம் பத்தில், பத்தாம் திருமொழி (வண்டார் பூ மாமலர் மங்கை என்று தொடங்கும் திருக்கண்ணபுரம் பற்றிய திருமொழி) மூன்றாம் பாசுரம்.
இந்தப் பாசுரத்தை திருமந்திரத்தின் கருத்தைக் கூறும் பாசுரம் என்பார்கள்.
மற்றும் ஓர்தெய்வம் உளதென்று* இருப்பாரோடு-
உற்றிலேன்* உற்றதும்* உன்னடியார்க்கு அடிமை*
மற்றெல்லாம் பேசிலும்* நின்திரு எட்டெழுத்தும்-
கற்று* நான் கண்ணபுரத்து உறை அம்மானே!
பொருள்: திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உன்னைத் தவிர வேறு வேறு ஒரு தெய்வம் இருக்கிறதென்று எண்ணியிருப்பார்களுடன் நான் சேர மாட்டேன். நான் உன்னுடைய அடியவர்களுக்கு அடிமைப்பட்டவனாக இருக்கிறேன் என்பதே நான் பெற்ற பேறு. உலகியல் சார்ந்த விஷயாந்தரங்களில் என் மனத்தைச் செலுத்தாமல், உன்னுடைய திருவஷ்டாக்ஷர மந்திரத்தைக் கற்றுக்கொண்டு அதையே எப்போதும் ஜெபித்துக்கொண்டிருப்பேன்.
விளக்கம்: அம்மான் – என் தலைவன், உற்றிலேன் – சேரமாட்டேன். எனக்கு அவர்களுடன் உறவில்லை. உற்றது – அடைந்த உன்னதமான உறவு, அடியார்க்கு அடிமை – உன்னுடைய அடியவர்களுக்கு நான் அடிமைப்பட்டவன், மற்றெல்லாம் பேசிலும்- உலகியல் விஷயத்தில் கவனம் வைக்க வேண்டியிருந்தாலும் அதை விடுத்து, திரு எட்டெழுத்து – ஓம் நமோ நாராயணாய என்ற புனிதமான எட்டெழுத்து மந்திரம்.
அஷ்டாக்ஷரத்தின் பொருள்: எல்லா உயிர்களுக்கும் ஆதாரமான பரம்பொருளான நாராயணனை வணங்குகிறேன்.
இந்தப் பாசுரத்தில் இறைவனை சரண் அடைவதையும், அவன் அடியவர்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் பாகவத கைங்கர்யத்தின் சிறப்பையும் திருமங்கையாழ்வார் கூறுகிறார்.
திருக்கோஷ்டியூர் அஷ்டாங்க விமானம்
திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள்
இனி அடுத்த வாரம் தொடர்வோம்...
=======================================================================================







அனைவரும் நலமாக இருக்க பிரார்த்தனைகள். இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குவாங்க வல்லிம்மா. இனிய காலை வணக்கம்.
நீக்குந்தியில் நீராடினால் எல்லாப் பாவங்களும் தொலையும், இதைச் செய்தால் புண்ணியம் கிடைக்கும், இவை பாவமான செயல்கள், எந் நன்றி கொண்டார்க்கும்..... செய்நன்றி கொன்ற மகர்க்கு உய்வில்லை... எனப் பல நீதிகள் சொல்லப்பட்டிருப்பதன் காரணமே, ஒரு மனிதன் வாழ்க்கையில் நன்னெறி கடைபிடிக்கணும், தவறுகள் செய்துவிட்டாயா? இதைச் செய், இனி நல்லவனாக இரு... என மனிதனை மேம்படுத்தவேஇத்தகைய நெறிகளை உண்டாக்கி வைத்திருக்கிறார்கள்.
பதிலளிநீக்குபல வருடங்களுக்கு முன், பையனுக்கு பூநூல் வைபவம் பண்ணணும் எனத் தோன்றிய வருடங்களில் முதலில் நான் சந்தியாவந்தனம் மந்திரங்களின் பொருளை முழுவதும் அறிய முயற்சி எடுத்துக்கொண்டேன். அதிலும், ஒவ்வொரு வேளையிலும், நான் இன்ன இன்ன உறுப்புகளால் செய்த பாவத்தை மன்னிக்கணும் என்ற மந்திரங்கள் வரும். இவை எல்லாமே ஆன்மாவை உயர்நிலைக்கு எடுத்துச் செல்ல உண்டானவையே
மனசாட்சியம் வித்தியாசமான தலைப்புகளை அலசுகிறது
நெல்லைத் தமிழனின் அற்புத பதிவு மனதுக்கு நிறைவு. நன்றி. அடுத்து வந்த மனசாட்சியம் அறம் என்பதை விளக்குவது இன்னும் நிறைவு. திரு துஷ்யந்த் ஶ்ரீதர் அவர்களின் வர்ணாஸ்ரமம் பற்றிய கருத்துகளைக் கேட்டு நல்ல தெளிவு கிடைக்கிறது. அவரவர் தொழில்கள் வரையறுக்கப் பட்டதே அல்லாமல் யாரும் இழிவு படுத்தப் படவில்லை என்று தெரிய வருகிறது.
பதிலளிநீக்குநன்றி. அவரவர் தொழில்கள் வரையறுக்கப்பட்டதும், அதற்கேற்ப பிரிவுகள் தோன்றியதும் உண்மை. மனிதனின் இயல்பான தவறான குணம் (அடுத்தவனைவிட நான் பெரியவன் என்ற அகங்காரம்) வரையறையின் காரணத்தையே மாற்றிவிட்டது. பிராமணர்களிலும், அனைவரும், தங்கள் பிறந்த குலத்தினால் கோயிலில் பூஜை செய்ய முடியாது என்றும், கடவுளர்களைத் தொட முடியாது என்றும் எத்தனை பேருக்குத் தெரியும்? ஏன், துஷ்யந்த் ஶ்ரீதர் அவர்களே ஒரு கோயிலுக்குச் சென்றாலும் கருவறைக்கு வெளியேதான் நிற்க இயலும், பெருமாளுக்கு திருவாராதனம் முடிந்ததும் தீர்த்த சடாரி பிரசாதங்கள் ஸ்தலத்தாருக்குப் பிறகே கொடுக்கப்படும் என்ற நியதிபலருக்கும் தெரியாது.
நீக்குஎத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம். பிரம்மாண்டமான ஒரு பணியை சிறப்பாக செய்து வருகிறீர்கள் நெல்லை.
பதிலளிநீக்குஎத்தனை விவரங்கள்.. எத்தனை ஆராயச்சி... எனக்கு பெயர்களை நினைவு வைத்துக் கொள்வதும், ஆட்களை அடையாளம் வைத்துக் கொள்வதுமே சிரமமாக இருக்கிறது.
உண்மை. நானும் இக்கருத்தை ஆமோதிக்கிறேன். வாரந்தோறும் சகோதரர் நெல்லைத்தமிழரின் இப்பணி சிறப்பாக உள்ளது. குரு பரம்பரை பற்றி தெளிவாக சொல்லி வருகிறார். தெரியாத பல விபரங்களை படித்து தெரிந்து கொள்கிறோம். பாசுரங்களின் பொருள் பிரித்து அவர் சொல்லும் விளக்கமே, மனதில் தெய்வீகத்தை அமர வைத்துப் பார்க்கிறது. தவிர ஒவ்வொரு கோவில்களின் இறைதரிசனங்களும் பெற்று மகிழ்வடைகிறோம். மிக்க நன்றி நெல்லைத்தமிழர் சகோதரரே.
நீக்குவாங்க ஶ்ரீராம். இதற்கான விதை நீங்க போட்டது. எழுத்து நன்றாக கைவரவில்லை என்றாலும், இந்தப் பகுதிக்கான தேடல்களுக்கு நீங்கதான் காரணம். நன்றி. ஆரம்ப சில வாரங்களுக்கும் தற்போதைய பதிவுகளுக்குமே எனக்கு நிறைய வித்தியாசம் தெரிகிறது.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.