10.11.26

சிறுகதை - முத்து - ரஞ்சனி நாராயணன்

 

முத்து

ரஞ்சனி நாராயணன்

“அம்மா! இந்தாங்க, வீட்டுக்கு க்ருகப்ரவேசம் செய்ப்போறோம். நீங்க கண்டிப்பா பையன், மருமகளை அளைச்சுகிட்டு வந்துடுங்க! பாப்பாவையும் கூட்டுகிட்டு வாங்க!’

முத்து ரொம்பவும் அருமையாக எங்களையெல்லாம் அழைத்தார். ‘அந்த இனிவிடேசன் மொத பக்கத்துல படம் இருக்கு பாருங்க. அதுதான் நம்ம வீடு.’

அழைப்பிதழின் முதல் பக்கத்தைப் பார்த்தேன். நாலு பக்க அழைப்பிதழ். அடுக்கு மாடிக் கட்டிடம் தான் இருந்தது முதல் பக்கத்தில்.

“ஃபிளாட்டா.....?” என்றேன்.


“இல்லம்மா... மூணு மாடி கட்டியிருக்கேன். கீழ பேஸ்மென்டு கார் பார்க்கிங். முதல் மாடில நானும் என் பொஞ்சாதியும். இரண்டாவது மாடில முதல் பையன். மூணாவது மாடில இரண்டாவது பையன். அதுக்கும் மேல இப்போதைக்கு மொட்ட மாடிதான். அதுலேயும் ரெண்டு ரூம்பு போட்டுட்டுட்டா பொண்ணு மாப்ள வந்து போக சௌகரியமா இருக்கும்....” முத்து பேசப்பேச வியப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

முத்து எங்கள் வீட்டு ஆஸ்தான தச்சர். நாங்கள் முதல் முதலில் ஒரு தொழிற்சாலை ஆரம்பித்த போது அறிமுகம் ஆனவர். நீளச் செவ்வகமாக இருந்த அந்த இடத்தை கச்சிதமான தனது தச்சு வேலையால் ஒரு தொழிற்சாலையாக மாற்றியவர். என் கணவர் என்ன சொன்னாலும் ‘அப்படியே பண்ணிடலாம் சார்’ என்பார். அவருக்கு மாற்றுக் கருத்து இருந்தால் உடனே ‘அம்மாவ ஒரு வார்த்தை கேட்டுடலாங்க சார்!’ என்பார்.

முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ ஒரு மரியாதை என்று நினைத்தேன். ஒருநாள் அதற்கு விடையும் தெரிந்தது.

அன்று எங்கள் தொழிற்சாலையில் வேலை செய்வதற்காக வந்திருந்த பெண்களை நேர்முகம் பார்த்துக் கொண்டிருந்தேன். என் கணவரும் முத்துவும் இயந்திரங்களை வைக்க மேஜைகள், வேலை செய்பவர்கள் உட்கார நாற்காலிகள், அவர்களது உடைமைகளை வைக்க இடம், சாப்பிடுவதற்கு இடம், என் கணவர் உட்காருமிடம் இவற்றை எப்படி, எங்கு வைப்பது என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

‘அம்மாவ ஒரு வார்த்தை கேட்டுடலாங்க சார்!’ என்றவாறே முத்து என்னிடம் வந்து, ‘கொஞ்சம் இந்தப் பக்கம் வாங்கம்மா,’ என்று அந்தக் கூடத்தின் வாசல் பக்கம் அழைத்துக் கொண்டு போனார்.

‘ஏம்மா! இங்க சின்னதா ஒரு மரத் தடுப்பு போட்டு ஒரு டேபிள் சேர் போட்டுட்டா, நீங்களும் ஐயாவும் உட்கார்ந்து கொள்ள தோதாக இருக்கும். அங்கேயே மதியம் சாப்பிடலாம். என்ன சொல்றீங்க?’ என்றார்.

இதுவரை என் கணவரின் காதிலும் படும்படி பேசியவர் குரலைத் தழைத்துக் கொண்டு.

‘ஐயா தன்னோட கண் பார்வையிலேயே அந்த பொண்ணுங்க வேலை செய்யணும் தடுப்பு எதுவும் வேணாம்னு சொல்றாரும்மா. நல்லா இருக்காதும்மா அது. வாசல் பக்கமா ஒரு மரத்தடுப்பு போட்டு ஒரு ரூம்பு போட்டுட்டாக்க அதுங்க பாட்டுக்கு அங்க வேலை செய்யுங்க. ஐயா இங்க உக்காந்துக்கலாம். நீங்க வந்தீங்கன்னா, ஒங்களுக்கும் ஒரு ப்ரேவேசி இருக்கும்ல. என்ன சொல்றீங்க?’ பேசி முடித்துவிட்டு என் பதிலுக்குக் காத்திராமல்,

‘அம்மாவும் இங்க ஒரு தடுப்பு இருந்தா நல்லாருக்கும்னு சொல்றாங்க சார்’ என்று சொல்லிக் கொண்டே உள்ளே போய்விட்டார்.

முத்து அன்று என் மதிப்பில் மிகவும் உயர்ந்து போனார்.
அடுத்தபடியாக நாங்கள் பணஷங்கரியில் ஒரு வீடு வாங்கியபோது இன்டீரியர் முழுக்க முத்துதான். பார்த்துப் பார்த்து செய்தார். சாப்பாட்டு அறையில் இரண்டு பக்கங்களிலும் நான் உட்காருவதற்கு மரத்தில் திண்ணை கட்டிக் கொடுத்தார். எங்கள் பூஜை அலமாரி கண்ணாடிக் கதவில் இன்றும் திருவேங்கடமுடையான் முத்துவின் கைத்திறமையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். 20 வருடங்கள் ஆகிவிட்டது அந்த வீடு வாங்கி. இன்றுவரை அலமாரிகளும், கதவுகளும் ஜம்மென்று இருக்கின்றன.

முத்து போட்ட (beeding) இன் மகிமை. முத்துவின் பாஷையில் ‘பீடிங்(peeding)’

ஒருநாள் பரபரவென்று வந்தார் முத்து. ‘சார்! ரஜனிகாந்த்தோட அண்ணா வீட்டில வேலை வந்திருக்கிறது, சார்!’ என்றார் மிகுந்த சந்தோஷத்துடன்.

முத்து எங்கள் தொழிற்சாலை அருகில் தான் இருந்தார். போக வர என் கணவருடன் பேசிவிட்டுப் போவார்.

அவரைப் பார்க்கும் போதெல்லாம் என் கணவர், ‘முத்து, ரஜனிகாந்தை பாத்தீங்களா?’ என்று கேட்பார்.

அப்புறம் ரொம்பவும் பிசியாகிவிட்டார் முத்து. யாராவது அவரது கைத்திறமையைப் பார்க்க வேண்டும் என்று சொன்னால் எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து, தான் வடிவமைத்த சமையலறையை மிகவும் பெருமையுடன் காண்பிப்பார்.

என் கணவர் அவர்களிடம், ‘முத்து கொஞ்சம் அதிகமாகத்தான் ரேட் சொல்லுவார். ஆனால் வேலை பிரமாதமாக இருக்கும்.’ என்பார்.

‘சார்! நான் அதிகமால்லாம் கேட்கறதில்லை, சார்!’ என்று முத்து ஏகத்துக்கு நெளிவார். அடிக்கடி நடக்கும் இந்த நாடகத்தை நாங்கள் மிகவும் ரசிப்போம். நிறைய இடங்களுக்கு முத்துவை நாங்கள் சிபாரிசு செய்தோம்.

என் பெண்ணின் திருமணத்திற்கு இரண்டு பெரிய மணைகள் செய்து அதற்கு தன் மனைவி கையால் அழகான கோலமும் போட்டுக் கொடுத்தார்.

மிகுந்த திறமைசாலி முத்து. இரண்டு பையன்கள், ஒரு பெண். முதல் பையன். முத்துவின் தொழிலைச் செய்து வருகிறான். இன்னொருவன் வேறு வேலையில் சேர்ந்து விட்டான். பெண்ணுக்கும், முதல் பிள்ளைக்கும் கல்யாணம் செய்து வைத்து பேரன் பேத்திகள் எடுத்து முத்து தாத்தாவும் ஆகிவிட்டார்.

பலவருடங்களுக்குப் பிறகு என் பிள்ளை ஒரு வீடு வாங்கினான். முத்துவுக்குக் கொஞ்சம் வயதாகிவிட்டது; அவரால் இப்போதைய நாகரீகத்திற்குத் தகுந்தாற்போல செய்ய முடியாது; வேறு யாரையாவது கூப்பிடலாம் என்று மகன் சொன்னான். என் கணவர் பிடிவாதமாக மறுத்துவிட்டார். ‘உனக்குத் தெரியாது. உனக்கு இப்படி வேணும்னு சொல்லு அப்படிப் பண்ணித்தருவார்!’ என்றார்.

என் மருமகளின் தோழி ஒருத்தி இன்டீரியர் படித்துவிட்டு தனியாக வீடுகளுக்கு வடிவமைப்பு செய்து கொண்டிருந்தாள். அவளையே வடிவமைப்பு செய்யச் சொல்லலாம் என்றாள். கடைசியில் என்னவாயிற்று என்றால் அவளால் வர முடியவில்லை என்று தன்னிடம் உதவியாளாக இருக்கும் ஒரு சின்னப் பெண்ணை அனுப்பி வைத்தாள். ரொம்பவும் சின்னப்பெண் அப்போதுதான் படிப்பை முடித்துவிட்டு வந்திருந்தாள் அந்தப் பெண். அவளால் சரியாகச் செய்ய முடியுமா என்று எங்களுக்கு சற்று சந்தேகமாக இருந்தது.

கடைசியில் மருமகளின் முகம் கோணக்கூடாது என்று அந்தப் பெண்ணையே கூப்பிட்டு வடிவமைப்பை செய்யச் சொல்லிவிட்டு, முத்துவிடம் தச்சு வேலையை --என் கணவருக்காக - ஒப்படைத்தோம்.

முத்துவின் நிலையும் இப்போது மாறி இருந்தது. அவரது பெரிய பிள்ளை அப்பாவிடமே தச்சு வேலை கற்றுக் கொண்டு இப்போது மேஸ்திரி நிலைக்கு வந்திருந்தான். அப்பா தன் சொல்லை ஏற்றுக் கொண்டு வேலை பார்க்க வேண்டும் என்று நினைத்தான். அப்பாவிற்கும் பிள்ளைக்கும் எதிலும் ஒத்துப் போகவில்லை.  
. அந்தப் பெண்ணின் நாகரீக வடிவமைப்பை ஏற்ற முத்து அதில் தன் பழைமையை புகுத்த நினைத்தார். அந்தப் பெண் ஏற்க மறுத்தாள்.

எப்படியோ, நாங்கள் எதிர்பார்த்த மாதிரி எதுவும் அமையவில்லை. ‘அந்த வீட்டிற்கு நன்றாகப் பண்ணினீங்க. இந்த வீட்ட சரியாப் பண்ணல’ என்று என் பிள்ளை சொன்னவுடன் முத்துவின் முகம் வாடிப் போய்விட்டது. ‘அது ரொம்ப சின்னப் பொண்ணு சார். அதுக்கு அனுபவமே போதல. நாங்க சொன்னாலும் கேட்க மாட்டேங்குது. என்னவோ மாடர்ன் என்று சொல்லி அலமாரி கதவுக்கெல்லாம் ஹிஞ்சு போடலாம் என்று சொல்லிடிச்சு. அந்த வீட்ல பண்ணினா மாதிரி பீடிங் போட்டிருந்தா ஜம்முனு இருந்திருக்கும்.’ என்று தன் பிள்ளையை விட்டுக் கொடுக்காமல் சொன்னார் முத்து.

என் கணவரோ முத்துவை விட்டுக் கொடுக்காமல் ‘முத்துவோட அந்தப் பையன் சரியில்லை’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அதற்குப் பிறகு இப்போதுதான் முத்துவைப் பார்க்கிறேன்.

கையில் முத்து கொடுத்த அழைப்பிதழை வைத்துக் கொண்டு ஒரு நிமிடத்தில் பழைய காலத்திற்குப் போய் வந்துவிட்டேன்.

‘இரண்டாவது பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணிட்டீங்களா, முத்து?’ என்று கேட்டேன்.

‘இல்லம்மா! வீட்டுக்குக் கடன் வாங்கிட்டதால இப்போதைக்கு இல்லைம்மா. நான் அவன் கிட்டே கேட்டேன்: ‘ஏண்டா! கல்யாணம் கட்டிக்கிறையா? வீடு கட்டலாமா?னு. அவன், வீடு கட்டலாம்பா. இப்பல்லாம் பொண்ணுங்க சொந்த வீடு இருக்கற பையனைத்தா கட்டிப்பேன்னு சொல்றாங்களாம்!’ என்றான். சரி வீட்ட கட்டிடலாம்னு கட்டிட்டேன் மா’. என்றார் முத்து.

முத்துவின் பிள்ளையா, கொக்கா?

அப்பாவின் பணத்தில் குளிர் காயும் பிள்ளை! பாவம் முத்து என்று தோன்றியது.


===================================================================================

மனசாட்சியம் - ​3​9
KGY Raman

" கேமரா பைத்தியம் "

எல்லாருக்கும் எப்போதும் ஏதாவது ஒரு பொருளின் மேல் அதீத ஆசை இருக்கும் என்று நான் பல காலம் பலமாக நம்பி வந்தேன். தற்சமயம் அந்த எண்ணம் மாறிவிட்டது. மிக தீவிரமான ஆசை என்பது கொஞ்சம் வயதானதற்குப் பின் இருக்காது என்று இப்பொழுது தெரிகிறது. 

எப்படி வந்தது என்று தெரியாமல்  ஒரு மிகப்பெரிய ஆசை என் சிறுவயதில் என்னிடம் தொற்றிக் கொண்டது. அதுதான் கேமரா வாங்கும் ஆசை. நூலகங்கள் சென்று பத்திரிகைகளைப் படிக்கும் போது விதவிதமான கேமரா விளம்பரங்களைப் பார்த்ததுண்டு. அதனால் மட்டும் அப்படி ஒரு ஆசை வந்துவிடுமா என்பது எனக்கு இன்னும் சரியாகப் புரியவில்லை. ஆனால் ஒரு கேமரா வாங்க வேண்டும் என்கிற வெறி மிக பலமாக என்னை ஆட்கொண்டது. அந்த காலத்தில் அதாவது 1950-51 சமயத்தில் 30 ரூபாய்க்கு கீழே உங்களால் ஒரு கேமரா வாங்க முடியும். போட்டோ ஸ்டுடியோக்களில் ஒன்று இரண்டு கேமராக்கள் விற்பனைக்கு என்று வைத்திருப்பார்கள்.  அவற்றை வைத்த கண் வாங்காமல் நீண்ட நெடுநேரம் பார்த்திருந்து விட்டு ஒரு ஏக்கத்துடன் வீட்டுக்குத் திரும்பி வருவேன். அந்த நாட்களில் எங்களுக்கு 30 ரூபாய் 40 ரூபாய் எல்லாம் மிகப்பெரிய தொகை. 

 ஸ்டுடியோக்களில் இலவசமாக மாதம் இருமுறை ஒரு பிலிம் தயாரிப்பாளரிடமிருந்து ,  சிறந்த புகைப்படங்களை அச்சிட்டு, அது எடுப்பதில் உள்ள தொழில் நுணுக்கங்களையும் கொடுத்திருப்பார்கள். இதை ஒரு வெறியோடு காத்திருந்து வாங்கிப் பார்ப்பேன்.  படம் எடுப்பதில் உள்ள நெளிவு சுழிவுகள் அந்த காலத்திலேயே எனக்கு அத்துபடி. 

வேலைக்குப் போய் இரண்டு மூன்று வருடங்கள் ஆன பின் கேமரா வாங்கும் யோக்யதை எனக்கும் வந்தது. பல ஆண்டுகள் சென்ற பின் மிக நல்ல கேமரா கூட ஒன்று வாங்கினேன். 

டபுள் ஆக்ட் தந்திர படங்கள் எடுப்பது, பிலிம் ரோலை நாமே வீட்டில் டெவலப் செய்து பிரதிகள் அச்சிடுவது இதெல்லாம் கூட கற்றுக் கொண்டேன். 
அமெரிக்க பேனா நண்பி அனுப்பிய கேமரா பிலிம் பற்றியெல்லாம் முன்பே சொல்லியிருக்கிறேன்.

விரைவிலேயே கேமரா மோகம் தணிந்தது.  கேமராக்களை விற்றேனா அல்லது யாருக்காவது இலவசமாக கொடுத்தேனா என்று கூட இப்பொழுது நினைவில்லை. சரி அந்த படங்கள்தான் என்ன ஆயிற்று என்று கேட்கிறீர்களா ? எல்லாம் இருந்த ட்ரங்க் பெட்டியில் மழை நீர் புகுந்து சர்வ சகலமும் பாழாகிப் போனது. நான் எடுத்த சில படங்கள் இப்பொழுது என் உறவினர்களிடம் இருந்து வரும் போது அதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். 

இதையெல்லாம் இப்போது ஏன் சொல்கிறாய் என்று கேட்கிறீர்களா ? அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அண்மையில் நண்பர் நெல்லைத் தமிழன் பாலக்காடு சென்று வந்த படங்களைப் போட்டு  எழுதி இருந்தார் அல்லவா ? அதில் மலம்புழா டேம் படங்களைப் பார்த்தவுடன் எனக்கு இந்தப் பழைய நினைவுகள் பொங்கி எழுந்தன.  அதற்கு என்ன காரணம் என்பதைச் சொல்வதற்காகத்தான் இதை எழுதத் தொடங்கினேன்.

என் நண்பரின் தந்தையார் தனது அலுவலக வேலை விஷயமாக கல்கத்தா சென்று திரும்பி வரும்போது,  என்னிடம் ஒரு கலர் பிலிம் ரோல் ஒன்றைக் கொடுத்து,  " கல்கத்தாவில் பாதி விலைக்கு கொடுத்தான். உனக்காக வாங்கி வந்தேன் " என்று அன்பாகச் சொன்னார். பாதி விலையில் கலர் ஃபிலிம் என்ற ஆச்சரியத்துடன் அதைப்  பார்த்த போது அது சில வாரங்களுக்கு முன் காலாவதியான பிலிம் என்று தெரிந்தது. அதன்பின் என் ஸ்டுடியோ நண்பரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,  " இரண்டு மூன்று மாதங்கள் வரை காலாவதியான பிலிம் உபயோகித்துப் படம் எடுக்கலாம் . நன்றாகவே இருக்கும் " என்று எனக்கு தைரியம் அளித்தார்.

நானும் நண்பனுமாக ஊட்டி போய் பல இயற்கைக் காட்சிகளை நாங்களும்  நின்று கொண்டு படம் பிடித்துக் கொண்டு வந்தோம். கலர் பிலிம் என்பதால் அதை சென்னைக்கு டெவலப் செய்வதற்காக அனுப்பி வைத்தேன். தினம் தினம் ஆவலோடு காத்திருந்த போது ஒருநாள் சென்னை ஸ்டுடியோவில் இருந்து எனக்கு பதிவுத் தபால் வந்தது. பிரித்துப் பார்த்தால் சந்தோஷப்படுவதா வருத்தப்படுவதா என்றே தெரியவில்லை. 

நாங்கள் அனுப்பி வைத்த ஃபிலிம் டெவலப் செய்து அந்தப் பிரதிகளை அனுப்பாமல், பதிலாக யாரோ ஒருவர் மலம்புழா அணைப் பகுதியில் பிரமாதமாக எடுத்திருந்த அற்புதமான படங்களின் தொகுதி எனக்கு வந்திருந்தது. விலாசம் மாறி அனுப்பி வைத்து விட்டார்கள்.  அதை நன்றாக ரசித்துப் பார்த்த பின் , ஸ்டுடியோவுடன் தொடர்பு கொண்டு அதைத் திருப்பி அனுப்பி, எங்கள் படங்களை வாங்கிக் கொண்டோம். டிரங்குப் பெட்டியில் மழை நீர் அழித்த படங்களில் அவையும் இருந்தன. எல்லாவற்றுக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேண்டும்.

73 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இறைவன் அருளால்இந்த நாள் நல்ல நாளாகட்டும்.

    பதிலளிநீக்கு
  2. ரஞ்சனி நாராயணன் என்ற பெயரைப் பார்த்தவுடனேயே ஆவலுடன் கதையைப் படிக்க ஆரம்பித்தேன்.
    என்னாச்சு? மீதிக் கதைப் பகுதியை பிரசுரிக்க மறந்து விட்டீர்களா? .. , அடுத்த வாரத்திற்கு எடுத்து வைத்திருக்கிறீர்களா?..
    இல்லை, மரத்தடுப்பு விஷயம் தான் கதையில் ஒளிந்திருக்கிற சூட்சுமம் என்றால், மரத்தடுப்பு என்று கொட்டை எழுத்துக்களில் அதையே கதைக்கு தலைப்பாகக் கொடுத்திருக்கலாமே?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார்.. ரஞ்சனி அக்கா வந்து பதில் சொல்வார் என்று எதிர்பார்க்கிறேன்.

      நீக்கு
    2. எனக்கும் கதை இன்னும் வரக்காணோம் என்று தான் தோன்றிற்று. முத்து தன் கடின உழைப்பால் மகோன்னதமான உயர்வுக்கு வந்துவிட்டார் என்பது தான் கதை சொல்லும் செய்தி போல் இருக்கிறது. அல்லது அந்த மரத்தடுப்பாகவும் இருக்கலாம்.

      நீக்கு
    3. வணக்கம் ஸ்ரீராம். பாதிக்கதை தான் வந்திருக்கிறது. இன்னும் ஒரு பக்கம் இருக்கிறது. ஏன் உங்களுக்கு வரவில்லை என்று தெரியவில்லை. தாமதமாக வந்ததற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுகிறேன்.
      எங்கள் ஊரில் இன்றுதான் தீபாவளி. பேரனுக்கு தலை தீபாவளி. அதனால் கொஞ்சம் பிசி. உடனே அனுப்பி வைக்கிறேன். எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுகிறேன்.

      நீக்கு
    4. ஜீவியிடம் ஸ்பெஷல் மன்னிப்பு.

      நீக்கு
  3. அன்பு ரஞ்சனிக்கு வாழ்த்துகள். முன்பு சாவி அவர்கள் காரக்டர் என்று வித்தியாசமான மனிதர்களைப் பற்றி எழுதுவார்.ரஞ்சனி சொல்லி இருக்கும் முத்து அருமையான திறமை கொண்டவர் என்று தெரிகிறது. கதை போலத் தெரியவில்லை. இது போல வேலை செய்பவர்கள் நம் ஊரில்
    இருப்பது நமக்குப் பெருமை. மிக அற்புதமான வேலைப்பாடுகள். நல்ல பதவிசான ஜாக்கிரதையான மனிதர் என்று தெரிகிறது. அன்பு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு நன்றி வல்லி. அப்படித்தான் எழுத ஆரம்பித்தேன். பிறகு சற்று மாறி விட்டது. பாதிக் கதை தான் வந்திருக்கிறது. இப்படி என்று தெரியவில்லை. மீதிக்கதையை அனுப்புகிறேன். மன்னிக்கவும்.

      நீக்கு
    2. மீதியும் படித்து விட்டேம்மா ரஞ்சனி. காலங்கள் மாறுவது உண்மை என்றாலும் பழைய வல்லுனர்களின் ஈடுபாடு சிறிய வயதினரிடம் இல்லை என்றுதான் நினைக்கிறேன். தவறில்லை. ஊக்கமுடன் செய்தால் இன்னும் பரிமளிக்கும் என்று தோன்றுகிறது.

      நீக்கு
  4. ''தற்சமயம் அந்த எண்ணம் மாறிவிட்டது. மிக தீவிரமான ஆசை என்பது கொஞ்சம் வயதானதற்குப் பின் இருக்காது என்று இப்பொழுது தெரிகிறது. '' இந்த வாக்கியங்களின் உண்மை இப்போது தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே அதே. புள்ளி அடித்தது போல் சொல்கிறீர்கள்.

      நீக்கு
  5. காமிரா பற்றிய செய்தி மிக மிக அற்புதம். எல்லோர் வாழ்விலும் காமிரா ஆசை வராது. சில பேருக்கே போட்டோ எடுக்கும் ஆர்வம் ஒரு தீரா
    வெறியாக இருக்கும். அனுபவிக்க வேண்டிய ஆசை அது. திறமையும் கூடினால் மிக இனிமையும் ஆனந்தமும். என் தம்பி அப்படித்தான் இருந்தான். 70களில் ஏதோ ஒரு சின்னக் காமிராவை வைத்தே
    வித விதமாக கருப்பு வெள்ளைப் படங்கள் எடுப்பான்.

    பதிலளிநீக்கு
  6. ஊட்டி இந்துஸ்தான் ஃபோட்டோ பிலிம்ஸ் ஞாபகம் வந்தது, ராமன் ஸார்.
    தலைக்கு அவர்கள் கொடுத்த துணி தொப்பி போட்டுக் கொண்டு 'அ முதல் ஃ' வரை HPF முழுக்க இண்டு இடுக்கு விடாமல் பார்த்து வியந்து போனேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுத்து வைத்தவர்‌ நீங்கள். எனக்கும் அப்படி எல்லாம் பார்க்க வேண்டும் என்கிற ஆசை உண்டு. யார் அனுமதிக்கிறார்கள் ?

      நீக்கு
  7. பிற்பாடு எங்கள் பிள்ளைகளும் மருமகனும் வித வித காமிராக்கள் வீடியோ காமிராக்கள் என்று வாங்கித் தள்ளினார்கள். இப்போது எல்லாமே நல்ல உறைகள் போட்டுக்கொண்டு பத்திரமாக இருக்கின்றன:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் வைத்திருக்கிறேன் இரண்டு மூன்று கேமிராக்கள்.  அதில் கடைசியாக வாங்கியது டிஜிட்டல்.  ஆனால் இப்போதெல்லாம் எடுப்பதுமில்லை, உபயோகிப்பதுமில்லை.  என் இளைத்தவனுக்கு மூத்தவன் இப்போது ஒரு கேமிரா பரிசளித்திருக்கிறான்.

      நீக்கு
    2. அன்பின் ஶ்ரீராம். எப்போதுமே பழையனவற்றுக்கு உலகத்தில் புது மதிப்பு வரும் காலம் இது. பத்திரமாக வைத்திருங்கள்.

      நீக்கு
    3. எங்கம்மா...  நாம நினைக்கறதுல்லாம் எங்க நடக்குது!

      நீக்கு
    4. நடக்கும் அப்பா. கவலை வேண்டாம். எத்தனையோ ஆதங்கம் வரத்தான் செய்கிறது. அதையும் மீறிதான் அடுத்த நாளுக்குப் பயணிக்கிறோம். நேற்றைய வருத்தம் இன்று காலை மாறுவதுதான் இயற்கை.

      நீக்கு
  8. இப்போதுகையளவு அலைபேசியில் பத்து வருடங்களாக நான் கூடப் படம் எடுத்து விடுகிறேன்.:)

    பதிலளிநீக்கு
  9. உங்கள் டிரங்குப் பெட்டிக்கு வாயிருந்தால் படங்களின் கதையைச் சொல்லி இருக்கும். படிக்க ரொம்ப சோகமாக இருந்தது. ஆசை ஆசையாக எடுத்த படங்கள். படங்கள் நம் உணர்ச்சிகளின் ஒரு வெளிப்பாடு. ஒவ்வொரு படத்துக்கும் ஒரு கதை இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். சில சமயம் அந்த வருத்தம் என்னைப் பாடாகப்படுத்தும் என்ன செய்யட்டும்.

      நீக்கு
  10. பிலிம் கேமரா பற்றியும் உங்கள் கேமரா ஆசை பற்றியும் ரசனையுடன் எழுதியிருக்கிறீர்கள்.

    எனக்கும் கேமரா ஆசை இருந்தது. பிறகு எழுதுகிறேன். இப்போது காலை வேலைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

      நீக்கு
  11. எபியும். ஏஐ-யும் அண்ணன்-- தங்கச்சியா என்ன? அனுதினமும் தவறாமல் தங்கச்சி தயவில் படங்களா போட்டு ரொப்புவதற்கு?....

    இப்போ AI உதவியுடன் கொட்டமடிப்பதற்கு 'போலி' என்று நாஸூக்காக பெயர் சூட்டி விட்டார்கள், தெரியுமோ ஸ்ரீராம்?..

    சில நவீன எழுத்தாளர்கள் மாதத்திற்கு முப்பது (இப்போதெல்லாம் பள்ளி ஆசிரியையிலிருந்து தொலைக்காட்சி செய்தி வாசிப்பவர் வரை நுப்பது)
    கதைகளுக்குக் குறையாமல் எழுதிக்குவிக்கிறார்களே என்று எனக்கும் தான் ஆச்சரியமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வரவு , ஜீவி சார் ! ஏஐ சொல்வதெல்லாம் சரி அல்ல என்பது அண்மையில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் வெளியாகி இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் இருக்கும் வசதியை உபயோகித்து படங்களை இணைப்பதில் தவறு ஒன்றும் இல்லை - அதுவும் ரசிக்க வேண்டிய ஒன்றுதான் என்று தான் நான் நினைக்கிறேன்.

      நீக்கு
    2. சில சமயங்களில் பொறுப்பை கீதா ரெங்கனிடம் ஒப்படைத்து விடுகிறேன்.  அவர் இதையெல்லாம் பொறுமையாக செய்து கொடுக்கிறார்!

      நீக்கு
  12. மதிப்புக்குரிய ரஞ்சனி நாராயணன் அவர்கள் திறமையானவர்...
    மனதார பாராட்டி மகிழ்பவர்...

    பதிலளிநீக்கு
  13. பதில்கள்
    1. இப்போது முழு கதையும் வந்துவிட்டது. படித்துப் பாருங்கள். உண்மையிலேயே முத்து தான்.

      நீக்கு
  14. எனக்கும் கேமரா மீது காதல். நான் இந்தியாவில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது என் அண்ணன் எனக்கு ஒரு நிகான் கேமரா வாங்கித் தந்தான். பல படங்களை எடுத்தேன். பிறகு பஹ்ரைன் சென்ற பிறகுதான் வீடியோ கேமரா, பிறகு டிஜிடல் கேமரா என வாங்கிக் குவித்தேன்.இது பற்றி நினைவுகள் என்ற பகுதியில் எழுதறேன், காரணம் நெடியது.

    அப்போ பிலிம் டெவலப் பண்ணக் கொடுத்தால் ஒவ்வொரு பிலிமுக்கும் இன்னொரு பிலிம் இலவசம் மற்றும் சில சமயங்களில் ஒரு பெரிய பிரின்ட் இலவசம் என்று இருந்தது. ஒவ்வொரு ரோலுக்கும் ஒரு படத்தை பெரிதாக பிரின்ட் செய்து வைத்துக்கொண்டோம்.

    பெரும்பாலானவை பத்திரமாக இருக்கின்றன. டிஜிடல் கேமரா காலத்திற்குப் பிறகு அலைபேசியில் எடுக்க ஆரம்பித்தபின், டிஜிடல் கேமரா மீதான ஆசை போய்விட்டது.

    இப்போதும் உறவினர்கள், என்னிடம்தான் பல occassinகளில் எடுத்த மற்றும் வித்தியாசமான படங்கள் இருக்கும் என்பார்கள். உறவினர் ஒருவரின் தவறான அட்வைசால், என் அப்பாவின் சரம உடலைப் படமெடுத்துக்கொள்ளும் வாய்ப்பு போய்விட்டதே என்ற வருத்தம் எனக்கு உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறந்தவர் உடலைப் படம் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை வேண்டாம். அதில் பயன் ஏதும் இல்லை. மாறாக நம்மிடம் இல்லாமல் விட்டுச் சென்றவர்களின் நல்ல குணாதிசயங்களை பற்றி அடிக்கடி நினைத்துப் பார்ப்பது, அவர்களை நன்றியோடு நினைவு வைத்துக் கொள்வது இவை மட்டுமே நாம் அவர்களுக்கு செய்யும் மரியாதை என்பது என் திடமான நம்பிக்கை.

      நீக்கு
    2. உண்மைதான். ஆனால் அதுவும் வாழ்க்கையின் நிகழ்வில், நினைவில் ஒரு அங்கம் அல்லவா? இப்போதும் என் பையனிடம், என் அப்பா என்ன செய்வாரோ அதைத் தான் நான் செய்ய முயல்கிறேன், காலதேச வர்த்தமானத்தால் கொஞ்சம் பெட்டராக இருக்க முயல்கிறேன், ஆனால் எங்கப்பா செய்யமாட்டார் என நான் நினைப்பதை நானும் செய்யமாட்டேன் என்று சொல்லுவேன்.

      நீக்கு
  15. புகைப்படம் என்பது இன்னொரு படமல்ல. அது ஒரு நினைவு. ஆனால் அதை எடுத்தவருக்கு மாத்திரம்தான் அந்த நினைவைகள் வரும். வரும் வாரத்தோடு பாலக்காடு தொடர் முடிகிறது. நெடும் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அதனால் அதற்கடுத்த வாரம் புகைப் படங்கள் பற்றி எழுதுகிறேன, ஒரு வாரப் பகுதியாக

    பதிலளிநீக்கு
  16. ஒரு ஆறுதல் என்னவென்றால் நான் எடுத்த பல படங்கள் பலவேறு இடங்களில் பத்திரமாக இருக்கின்றன . என்னிடம் இல்லை என்பது மட்டுமே குறை. ஆனால் ஆண்டுகள் பல ஆன பின், அது எந்தப் பொருளாக இருக்கட்டும், அதன் மேல் பிடிப்பு சற்று விட்டுப் போகிறது என்பது உண்மைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதன்மேல் பிடிப்பு விட்டுப்போகிறது.... இதுவே புதிய மனசாட்சியம் சிந்தனையாக வந்திருக்கலாம். நேற்றுதான் இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன், பஹ்ரைனில் வீட்டைக் காலி செய்தபோது பசங்க யூனிஃபார்ம், சிறு வயது உடைகளை பிறருக்குக் கொடுக்கும் பெட்டியில் போட எவ்வளவு கஷ்டமாக இருந்தது என்று. அப்பா நமக்கு எழுதிய சாதாரண கடிதமோ இல்லை கொடுத்த சிறு காயினோ நமக்கு பொக்கிஷம். மற்றவர்களுக்கு அது இன்னுமொரு குப்பை.

      நீக்கு
    2. முதல் பேத்தி போட்டுக் கொண்டிருந்த சின்ன உடையில் இருந்து பால் பாட்டில், பொம்மைகள்னு ஒவ்வொரு பேத்தியுடையதும் தூக்கிப் போடாமல் இன்னமும் வைச்சிருக்கேன். அது போல் எங்க குழந்தைகள் எனக்குக் கொடுத்தப் பிறந்த நாள் வாழ்த்து அட்டைகள், திருமண நாள் வாழ்த்து அட்டைகள் ஆகியவையும் இருக்கின்றன.

      நீக்கு
  17. ரஞ்சனி எழுதின கதை மாதிரி இல்லையே? இங்கே அவர் சொல்ல நினைப்பது உழைத்துச் சம்பாதித்து மூன்று மாடிகள் கொண்ட வீட்டைக் கட்டினார் என்பதையா? புரியலை. வந்து பதில் சொல்லுவார் என எதிர்பார்ப்போம்.

    இந்தக் காமிராவெல்லாம் ரொம்பச் சின்ன வயசில் எங்க மாமாக்கள் பயன்படுத்தியே பார்த்திருக்கேன். அப்போல்லாம் தாத்தா வீட்டில் பெண் வயிற்றுப் பேரன், பேத்திகளான நான், அண்ணா, பெரியம்மாபிள்ளை அண்ணா, பெண் அக்கா ஆகியோர் தான். கடைசிச் சித்தி என்னை விட நான்கு வயதே பெரியவங்க. பெயர் சொல்லித் தான் கூப்பிட்டிருக்கோம். ஆகவே மாமாக்களுக்குக் குட்டித் தங்கையையும் எங்கள் நால்வரையும் படம் பிடிப்பதே பொழுது போக்கு. சின்னக் காமிரானு நினைக்கிறேன்.

    பின்னர் விபரம் தெரிந்து சென்னை சித்தப்பா வீட்டுக்குப் போகத் தொடங்கியதில் அங்கே சித்தப்பா எல்லோரையும் படம் பிடிப்பார். அவ்வளவு ஆர்வம். பின்னர் கல்யாணத்தில் ஃபோட்டோகிராஃபர் வைத்துப் படம் எடுத்தாலும் அப்பா அதுக்கான செலவைக் குடுக்க மறுத்ததால் இன்னி வரைக்கும் அது நெகடிவ்களாகவே இருக்கின்றன. ஒன்றிரண்டு காப்பி எடுத்துப் பதிவுகளில் பகிர்ந்திருக்கேன். நம்ம ரங்க்ஸுக்கும் இந்தப் பைத்தியம் உண்டு. சின்னக் காமிரா 30 ஃபில்ம் உள்ள ரோல்னு நினைக்கிறேன். அது தான் வைச்சிருந்தார். நாங்க கயிலை யாத்திரை போறச்சே கூட டிஜிடல் காமிரா வாங்க மாட்டேன்னு சொல்லிட்டு அந்தச் சின்னக் காமிராவைத் தான் எடுத்துட்டு வந்தார். ஃபில்ம் எல்லாம் போட்டிருந்தாலும் அவை கயிலை யாத்திரையில் மானசரோவர் போறதுக்குள்ளே தீர்ந்து விட்டது. நாங்க மேலே போகப் போக இப்படி அத்வானமாக இருக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை. இரவுகளில் தங்குமிடம் ஏதானும் ஊராக வரும்னு நினைச்சிருந்தோம். அப்படி வந்த இடங்களிலும் காமிராவுக்கு ஃபில்ம் வாங்கும் அளவுக்குக் கடைகள் இல்லை. :( என்றாலும் விடாமல் வைச்சிருந்தார். அஹோபிலம் போறச்சேப் பெண் தங்களுடைய காமிராவைக் கொடுத்தாள். அவங்க டிஜிடல் காமிரா வாங்கிட்டாங்க என்பதால் அதைக் கொடுத்தாள். கொஞ்ச நாட்கள் அது ஓடியது. பின்னர் டிஜிடல் காமிரா பையர் வாங்கிக் கொடுத்து இன்னமும் வீட்டில் இருக்கு. கைபேசி வாங்கியதும் அதில் எடுக்க ஆரம்பிச்சதும் டிஜிடல் காமிராவுக்கு வேலையே இல்லாமல் போனது. இப்போ எப்போவானும் சமையல் குறிப்புக்களைப் படம் எடுப்பதோடு சரி. கைபேசியில் தான். மற்றபடி வெளியே போவதில்லை என்பதால் படங்களெல்லாம் எடுக்கவே இல்லை.

    பதிலளிநீக்கு
  18. அன்புள்ள கீதா முழு கதையும் வந்திருக்கிறது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு எழுதுகிறேன். எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  19. கடைசியில கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்று இருந்த நிலை மாறி இப்போது முழுக்கதையும் வெளியிடப்பட்டுள்ளது.  சிரமத்துக்கு மன்னிக்கவும்.  விட்ட இடத்திலிருந்தோ, மறுபடி முதலிலிருந்தோ கதையை வாசித்து கருத்து சொல்லவும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் ரொம்பவும் சாரி. ஏன் முழுகதையும் உங்களுக்கு வந்து சேரவில்லை என்று புரியவில்லை. மிகவும் பொறுமையாக காத்திருந்து வெளியிட்டதற்கு நன்றி.

      நீக்கு
  20. திரு ராமன் எழுதிய கேமரா பைத்தியம் எனக்குள்ளும் நிறைய பழைய நினைவுகளை மலரச் செய்தது. எங்கள் மாமா ஒருவரும் கேமரா பைத்தியம் என்றே அழைக்கப்பட்டார். எனது ப்ளாகிலும் அவரைப் பற்றி எழுதியிருக்கிறேன்.
    என் கணவரும் முதல் முறை வெளிநாட்டிற்குப் போய்வந்தபோது ஒரு கேமரா வாங்கி வந்தார். எங்கள் இஷ்டத்திற்கு எல்லோரும் படம் எடுப்போம். முழு பிலிமும் எடுத்து முடிந்தால் தான் பிரிண்ட் போட முடியும். அதற்காகவே கண்ணில் பட்டதையெல்லாம் எடுத்துக் கொண்டிருப்போம்.
    டபிள் ரோல் எடுப்பதில் எங்கள் மாமா மிகவும் திறமைசாலி. ஒரு புகைப்படம் எடுக்க பலமணி நேரம் செலவழிப்பார். மாமாவின் மாஸ்டர்பீஸ் திருவாலி திருநகரி திருமங்கையாழ்வார். அவரது திருமுகமண்டலத்தை மட்டும் மிகவும் க்ளோஸ் அப்பில் எடுத்திருப்பார். ஆழ்வாரின் திரு அதரங்கள் ( உதடுகள்) நம்மிடம் பேசிவிடும் போல இருக்கும். மிகவும் சமீபத்தில் இந்தப் புகைப்படத்தை ஒரு இணையதளத்தில் பார்த்தேன். அன்று முழுவதும் மாமாவின் நினைவுகள் தான்.
    நல்ல அருமையான மலரும் நினைவுகள், ராமன் சார். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மாமா பெயரைச் சொல்லவில்லையே அம்மா. எங்களுக்குத் தெரிந்தவரா.பெருமாளின் படம் மீண்டும் பார்க்கக் கிடைத்தால் பதிவிடுங்கள்.

      நீக்கு
  21. எல்லாராலும் தொடர்பு படுத்திக் கொண்டு மகிழ முடிந்தது. அதுதான் திரு ராமன் அவர்களின் கட்டுரையின் வெற்றி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  22. அன்பு ரஞ்சனி வாழ்த்துகள். கார்பெண்டர் முத்து ஆரோக்கியத்துடன் நலமாக இருக்கட்டும். புதிதாக இந்தத் தொழில் செய்பவர்களுக்கு ,பழைய தச்சர்களைப் போல நெளிவு சுளிவு தெரிவதில்லை. எங்கள் வீட்டிலும் இது போல் நடந்திருக்கிறது. திரு முத்துவின் கதையை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வல்லிமா. மறுபடியும் வந்து படித்து கருத்து சொன்னதற்கு இன்னொரு நன்றி.

      நீக்கு
  23. @Ranjani, Thanks for giving the full story.
    பாசம் கண்ணை மறைச்சிருக்குத் தச்சர் முத்துவுக்கு. இரண்டாவது பிள்ளையும் பிழைக்கத்தெரிந்த பிள்ளை. இனி வரும் காலங்களில் முத்துவின் திறமை வெளிப்படும்படியான வேலைகள் கிடைக்கட்டும். எங்களுக்கும் இந்தக் கார்பென்டர்களிடம் நிறையவே அனுபவங்கள் உண்டு என்றாலும் எல்லாம் மோசமான அனுபவங்களே! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா. நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய தோழிகளுடன் பேசும் வாய்ப்பை முத்து கொடுத்திருக்கிறார்.

      இதைக் கதை என்று குறிப்பிடுவதைவிட மலரும் நினைவுகள் என்றே சொல்லியிருக்க வேண்டும். தீபாவளியன்று பிள்ளைக்கும் மாட்டுப்பெண்ணிற்கும் நலங்கு இட மணை போட்ட போது ஒரு மணை மட்டும் ஜோடி இல்லாமல் இருந்தது. அதுவும் முத்து செய்து கொடுத்தது தான். மகளுக்கு இரண்டு பண்ணிக் கொடுத்துவிட்டு மரம் இருந்தது என்று சொல்லி மூன்றாவதாக ஒன்று பண்ணிக் கொடுத்தார். அதைப் பார்த்தவுடன் தான் இந்தப் பதிவை எழுதும் ஐடியா வந்தது. முத்து மிகவும் நல்ல மாதிரி.

      நீக்கு
  24. படங்கள் அத்தனையும் அருமை மா. ரஞ்சனி இதுதான் உங்க வீடா.மிகப் பாந்தமாக இருக்கிறது. பங்களூர் வந்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது எங்கள் வீடு அல்ல. எங்கள் வீட்டை விட அழகாக AI மூலம் வீட்டைப் போட்ட கீதா (ரங்கன்) விற்கு நன்றி. திண்ணை அதைவிட அழகாக இருக்கிறது. மணைகள் இரண்டும் சூப்பரோ சூப்பர்,

      நீக்கு
    2. ஓ. அப்ப கீதா ரங்கனுக்கு வாழ்த்துகள். அபார கற்பனை. திண்ணையைப் பற்றி முன்பு ஒரு லின்க் போய்க் கொண்டிருந்தது அது வீட்டுக்கு வெளியே இருக்கும் திண்ணை. ஆஹா அந்த நாட்கள். செம்மைத் திண்ணை . வழுக்கும் தரை. வாகாகத் திண்டு. இவை எங்கள் ஶ்ரீவில்லிபுத்தூர் வீட்டில் இருந்தது.அது எத்தனையோ மத்தாப்புகளையும் தரைச் சக்கிரங்களையும் கண்டது. நன்றி ரஞ்சனி.நான் எழுதிக் கொண்டே போனால் அடுத்த பதிவு கூட வந்து விடும்.:)

      நீக்கு
  25. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  26. நீங்கள் எழுதிக் கொண்டே வரும் பொழுது எதிர்பாராமல் கற்பனையில் வந்து குந்திக் கொண்டது அந்த மரத்தடுப்பு. அந்த இடத்திலேயே வாசிப்பை நிறுத்தி லேசா யோசனை ஓடிய போது தி.ஜா. என் நினைவில் சிரித்தார். அடுத்த வினாடியே ஒரு கிளாஸிக் கதைத் தொடர்ச்சி அவர் பாணியில் கிடைத்த சந்தோஷம் ரஞ்சனிம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகப்பெரிய பாராட்டு ஜீவி சார். நன்றி.

      நீக்கு
  27. ரஞ்சனி நாராயணன் கதை நன்றாக இருக்கிறது.
    பேரனுக்கு தலைத்தீபாவளி வாழ்த்துகள்.

    திறமையானவர் உழைப்பால் உயர்ந்தவர் முத்து.
    அவர் செய்து கொடுத்த மனைபலகைகள் நன்றாக இருக்கிறது.
    வயதான பின்னும் உழைக்க வேண்டி இருக்கிறதே!

    //இப்பல்லாம் பொண்ணுங்க சொந்த வீடு இருக்கற பையனைத்தா கட்டிப்பேன்னு சொல்றாங்களாம்!//

    முத்துவின் இளைய மகன் புத்திசாலிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களது வாழ்த்துகளை பேரனிடம் சொல்லுகிறேன், கோமதி. நன்றி.

      நீக்கு
  28. கேமரா ஆசைகள் , படம் எடுத்த அனுபவங்களை நன்றாக சொன்னீர்கள்.
    எடுத்து வைத்து இருந்த படங்களை மழை நீர் பாழ் செய்ததை கேட்டு வருத்தமாய் இருக்கிறது.

    //மிக தீவிரமான ஆசை என்பது கொஞ்சம் வயதானதற்குப் பின் இருக்காது என்று இப்பொழுது தெரிகிறது. //

    உண்மைதான்.

    நீங்கள் சொல்வது போல தீவிரமான ஆசை இல்லையென்றாலும் புகைபடம் எடுத்த கை இயற்கை காட்சிகளை கண்டால் படம் எடுக்க சொல்கிறது அலைபேசியில் எடுத்து கொண்டு இருக்கிறேன்.

    காமிராவில் எடுத்த நிறைய படங்கள் நிறைய கணினியில் ஏற்றி அவை கணினி கெட்டுப்போனதும் மீட்டு எடுக்கமுடியாமல் போன சோகமும் இருக்கிறது.

    பெட்டி நிறைய ஆல்பங்களும், நெகட்விகளும் நிறைய இருக்கிறது.
    என் காலத்துக்கு பின் அவை பிலிம் நெகடிவ்களை டிஜிட்டல் வடிவமாக மாற்றி வைத்து கொள்வார்கள் பிள்ளைகள் வேண்டுமென்றால்.

    பதிலளிநீக்கு
  29. ''காமிராவில் எடுத்த நிறைய படங்கள் நிறைய கணினியில் ஏற்றி அவை கணினி கெட்டுப்போனதும் மீட்டு எடுக்கமுடியாமல் போன சோகமும் இருக்கிறது'''.

    மிக மிக உண்மை..அன்பின் தங்கச்சியின் வார்த்தைகள் அத்தனையும் உண்மை. அனுபவ பூர்வமான வெளிப்பாடு. இடங்கள் மாறி, வாழ்வு மாறி
    முழுவதும் மனதில் சேமிக்கப் படுகின்றன. உங்கள் காலம் ஆரோக்கியத்துடனும் சுகமாகவும் இருக்கப் பிரார்த்தனைகள்.அனைவருக்கும் நன்னாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா, வாழ்க வளமுடன்.
      உங்கள் வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி அக்கா

      நீக்கு
  30. வாழ்க வளமுடன் அன்பு தங்கச்சி.

    பதிலளிநீக்கு
  31. ரஞ்சனி நாராயணன் என்ற பெயரைப் பார்த்ததும் ஆசையாக படித்தேன்.(லேட்டாக படித்து விட்டு, ஆசையாக படித்தாளாம் என்று யாராவது நினைக்கலாம்). நான் ரஞ்சனி நாராயணன் எழுத்திற்க்கும் ரசிகை. அவர் கொஞ்ச நாட்களாக எழுதாமல் இருப்பது எனக்கு ரொம்ப வருத்தம். இப்போது எழுதியிருப்பது சந்தோஷம்!
    ரஞ்சனி அக்கா ஏமாற்றவில்லை. அந்த கடைசி வரி பல விஷயங்களை சொல்லி விட்டது.

    பதிலளிநீக்கு
  32. என் அப்பா மிக நன்றாக புகைப்படம் எடுப்பார். வீட்டில் இரண்டு காமிராக்கள் வைத்திருந்தாராம். அவற்றில் ஒன்று ஏரிஃப்ளெக்ஸ்!. அவருக்கு வீட்டிலேயே பிரிண்ட் போடவும் தெரியும்.
    என் கணவர் வாங்கிய யாஷிகா கேமரா இன்னும் இருக்கிறது. இரண்டு டிஜிட்டல் கேமராக்களிலிருந்து மெமரி கார்டை மட்டும் எடுத்துக் கொண்டு கேராக்களை வீட்டு வாசலில் வைத்து விட்டேன். மகன் ஒரு professional camera வைத்திருக்கிறான், ஆனால் பயன்படுத்துவது அரிது.
    நான் முன்பெல்லாம் எந்த விசேஷங்களுக்குச் சென்றாலும் செல்ஃபோனில் படம் பிடிப்பேன். இப்போது ஆர்வம் இல்லை.

    பதிலளிநீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!