வார இதழ்களும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வார இதழ்களும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4.3.13

கண்ணே, மணியே, சனியே, வெள்ளியே....

                    
நான் ஒரு விகடன் பிரியன். இன்றைய காலகட்டத்தில் விகடனில் மட்டும் தான் சரியான விகிதத்தில் எல்லாம் தருகிறார்கள் என்று நினைக்கிறவன்.
 ஒவ்வொரு இதழுக்கும் (சிலேடை இல்லை) ஒவ்வொரு தனித்துவம் உண்டு. அமுதசுரபி நான் வாங்கும் மற்றொரு பத்திரிகை. அவர்களுடைய ஸ்பெஷாலிட்டி அந்தக் காலத்து பெரிய எழுத்தாளர், பெரிய கவிஞர், பெரிய தேச பக்தர் இப்படியான ஒருவரது வாரிசு அல்லது ரசிகர் என்ன எழுதினாலும் அதை ஆர்வத்துடன் பிரசுரிப்பது.  
             
             
குமுதம் வாங்கிக் கொண்டிருந்தேன்.  அதில் தலை தூக்கும் ஆபாசத்தை சகிக்க முடியாமல் அதை நிறுத்தி விட்டேன்.  எப்படியானாலும் விற்பனை என்பதே அவர்களது தாரக மந்திரம் போலும்.  வம்பு, கிசுகிசு தாக்கு கிளுகிளுப்பு என்று மசாலா மிக்சர் ஆக ஆக்கிவிட்டார்கள் நன்றாய் இருந்த குமுதத்தை.  எஸ். ஏ பி என்ற கெட்டிக்காரர் மசாலாவை அளவாகப் போட்டு (நம்ம சுஜாதா மாதிரி) குமுதத்தை எப்போதும் டாப்பில் வைத்திருந்த காலத்தை எண்ணி ஏக்கப் பெருமூச்சு விடுகிறேன்.
             
அடுத்தது கல்கி.  ரா.கி. மேலிருந்த பக்தி காரணமாக விடாப்பிடியாக கல்கி வாங்கிப் படித்தது ஒரு காலம்.  அது இப்போது முற்றிலும் நமக்குத் தெரியாதவர்களால் எழுதப் படுகிறது.  விகடன் அளவு, விகடன் உத்தி, விகடன் எழுத்துரூ என்று என்ன செய்வது எப்படிச் செய்வது என்று தெரியாமல் திண்டாடுவதாக எண்ணத் தோன்றுகிறது. 
            
என் அபிமான விகடனுக்கும் தோல் வியாதி, விக்கல், இருமல் வருவதுண்டு.  என்றாலும் ஒப்பிடும்போது அது முன்னணியில் இருப்பதாக எனக்குப் படுகிறது. சமூக ஆர்வம், தொண்டு இவற்றில் அதன் பணி பாராட்டத் தக்கது.  

இது விகடன் பாராட்டுக்கட்டுரை அல்ல. விகடனில் கவிதைகள் சொல்வனம் என்ற தலைப்பில் வெளியாகின்றன.  குரு சுஜாதா சொன்ன மாதிரி யாரும் ஐம்பது வருஷம் கவிதை எழுதக் கூடாது என்று ஒரு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று நமக்கும் தோன்றும்.

விகடன் கவிதைகளில் குழந்தைகளைக் கொண்டாடுவதும், காதலிக்கு ஆர்வச் செய்திகளை அனுப்புவதும் அடிக்கடி காணக் கிடைக்கிறது. "குழந்தை எடுத்துக் கொஞ்ச பொம்மையில் ஒளிந்திருந்தார் கடவுள்" என்ற பாணியில் நிறைய கவிதைகள்.  இவர்கள் எல்லாம் குழந்தைகளை அதட்டி, அடித்து, கண்டித்து வளர்க்கவே மாட்டார்களோ என்று நினைக்கத் தோன்றும். "ஏ சனியனே சோத்தை முழுங்கிட்டு பாடத்தை படிச்சுத் தொலையேன் " என்று கூவும் ரகம் அல்ல போலும்!   
 
காதலி ஸ்தோத்திரம் இதற்கும் ஒரு படி மேலே. " கார்பன் டை ஆக்சைட் இருந்தால்தான் என்ன கண்ணே, அதுதான் எனக்கு தென்றல் காற்று, உன் மூச்சை என் முகத்தருகில் விடு" என்று புலம்பும் கவிஞர் குழு மிகப் பெரியது. 
               
ஒரு பெண் வர்ணிக்கப் படுவதிலிருந்து அவள் ஸ்டேடஸ் என்ன என்று தெரிந்து கொள்ள முடியும்.
                                                                      
மென்மலர்
ஓவியம்\
காவியம்
தேவதை
என் நெருங்கிய சிநேகிதி.  
என் ஆதர்சத் துணை
என் துணை
என் பெட்டர் ஹால்ப் 
என் மனைவி
ஏய் உன்னைத் தானே
இந்த சனி 
இன்னும் பலப் பல. 
    
Age cannot wither, nor custom stale her infinite variety என்று ஷேக்ஸ்பியர் சிரஞ்சிவி வரி ஒன்றை எழுதினார். (அதை மதுரை மணி அய்யரின் இசைக்குப் பொருத்தி ஒரு ரசிகர் எழுதியிருந்தது வேறு விஷயம்). அது சராசரி வாழ்க்கைக்குப் பொருந்தாது என்றுதான் சொல்லவேண்டும். 
             
ஒரு ஆண் அழைக்கப் படுவது இறங்கு வரிசையில் இப்படி இருக்கும்.
           
இந்த சனி,
இவரு
உங்க மாப்பிள்ளை, (அல்லது மாமா அல்லது தம்பி .....இப்படியாக )
டியர்
டேய்
ஹல்லோ 
என் நலம் விரும்பி
என் நெருங்கிய நண்பர்
             
ஆனால் கவிஞர்களுக்கு ஸ்தாயி ஒரு இடத்திலிருந்து மாறுவதில்லை. ஜோக் எழுதுபவர்கள் இதற்கு நேர் மாறு. அது தனிக்கதை. 
                  
:: ராமன் ::   
                  
எங்கள் கமெண்ட்: இதுக்கு போட்டி பதிவு போடுவதற்கு கீதா மேடம் தயாரா?