9.8.14

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரத்தில்!



4) " வறுமை கண்டு கலங்க மாட்டேன். படிப்பை நிறுத்த மாட்டேன்" - விண்ணரசி 
 

 
 
5) நெகிழ வைக்கும் மனநல ஆலோசகர் ராஜா 
 
 
 
6) சோலார் ஸ்பிரேயர் தயாராயிடுச்சு. இதுக்கு மொத்தமே. வெறும் 4,600 ரூபாய்தான் செலவு. ஆனா வரவு... பல ஆயிரங்கள்''  குஷியோடு கார்த்திகேயன்,
 


 
7) "வீரர்கள் மற்றும் அவரது உணவு அடங்கிய, இரண்டு ராக்கெட் தனித்தனியாக செல்லும் வகையில், நாசா திட்டம் தயாரித்து உள்ளது. எங்களது திட்டத்தில், ஒற்றை ராக்கெட் மூலம், வீரர்களையும், உணவை எடுத்துச் செல்லும் திட்டம் தயாரித்துள்ளோம்" விருதுநகர் மாணவர் விஷ்ணுபிரசாத் ராம்
 

8) புளியந்தோப்பு ஹுமாயூன் 


7.8.14

அலேக் அனுபவங்கள் 140807 :: இளநீர் செய்த உதவி!

   
அசோக் லேலண்டு பற்றி ஓரளவு தெரிந்துகொள்ள இந்த சுட்டியில் சொடுக்கி, தெரிந்து கொள்ளுங்கள். தமிழ்தான்! 
ஆனால், அதுவல்ல நான் சொல்ல வந்தது. 
     

மெஷின்ஷாப்பில் வேலை பார்த்த, அசோக் லேலண்டின் ஆரம்ப நாட்களிலிருந்து   பணிபுரிந்து வந்த ஒருவர் கூறிய விவரங்கள் அவர் சொன்னது போல, இங்கே பதிகின்றேன். 
      
" நீ எப்போ பொறந்தே?" 
(சொன்னேன்.)
    
"அப்போவே நான் அசோக் லேலண்டு கம்பெனிலே சேந்துட்டேன், தெரியுமா?"  
   
"ஓ அப்படியா?"   
    
"ஆமாம் - அப்போ எல்லாம் நிரந்தர பணியாளர்கள் யாரும் இங்கே கிடையாது! தெரியுமா?"  

ஆச்சரியமாகப் பார்த்தேன்.  
    
"ஆமாம். ஒன்றிரண்டு துரைமாருங்க மட்டும் இருப்பாங்க. பீச் ரோடு (பின் நாட்களில் இராஜாஜி சாலை) வழியாக அசோக் லேலண்டு ஆள் பிடிக்கிற பஸ் ஒன்றிரண்டு வரும். பார்க்கிறதுக்கு தாட்டியா இருக்கறவங்களை எல்லாம் நீ வா / அல்லது வரியா வேலைக்கு - என்று கேட்டு பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு வந்து இங்கே விடுவார்கள். "
     
"துரை யாராவது ஒருவர் இங்கிலீசுல தஸ் புஸ்ஸுன்னு சொல்லுவாரு, கொஞ்சம் விவரம் தெரிந்த உதவியாளர், ஒவ்வொருவரும் அவரவர்கள் உடல்வாகுக்குத் தகுந்த மாதிரி, என்ன வேலை செய்யணும் - ஆஸ்டின் மோட்டார் பாகங்களை எப்படி இணைக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுப்பார். 
          
    

எல்லோரும் கேட்டுப்போம். அதன்படி மோட்டார் பாகங்களை இணைப்போம். 
              
டீ நேரத்துல டீ. பன்னு. ரொட்டி, பிஸ்கட் எல்லாம் செலவில்லாம கிடைக்கும். சாப்பாடு நேரத்துல நல்ல சாப்பாடு. எட்டு மணி நேரம் வேலை முடிந்து வீட்டுக்குப் போகும்பொழுது ஆளாளுக்கு அவங்கவங்க செஞ்ச வேலைக்குத் தகுந்தாற்போல் கையில் நாலணா /ஆறணா/எட்டணா பத்தணா ஏதாவது கொடுப்பார்கள்! 
             
   

அதை செலவு செய்ய ஒரு வாரம் ஆகும்! சில பேருங்க ஒரு வாரத்துக்கு ஒருமுறைதான் பீச்சு ரோடு பக்கம் வந்து, பயில்வான் போல நெஞ்சை நிமிர்த்தி, ஆள் பிடிக்கிற பஸ் வரும்பொழுது போஸ் கொடுப்பாங்க. ஒரு நாள் சம்பாதித்ததில் ஒரு வாரம் ஜாலியாக செலவழித்து, அடுத்த வாரம் ஒருநாள் வருவார்கள்! 
            
ஆள் பிடிக்கிற பஸ்ஸில் வருகின்ற காண்டிராக்டருக்கு சம்திங் கொடுத்து, அடிக்கடி வேலைக்கு வந்தவர்களும் உண்டு! 
            
இப்போ உங்க ட்ரைனிங் ஆபீசராக இருக்கானே --- (ஹி ஹி பெயர் எல்லாம் சொல்லக்கூடாது!!!) அவன் பொன்னேரியிலிருந்து ட்ரைன் பிடிச்சு வருவான். சும்மா வரமாட்டான், கையில ரெண்டு மூணு எளநீ வாங்கிகிட்டு வருவான். சும்மா சொல்லக்கூடாது தஸ் புஸ்ஸுனு இங்கிலீஷ் பேசுவான்! துரைமாருங்க கிட்ட அவன் இங்கிலீசுல பொளந்து கட்டுவான். 
    
துரைங்களுக்கு எல்லோருக்கும் இவனைப் பார்த்தா ஒரு இது! இப்போ பாரு அவன் ஆபீசர், நான் ஒரு சாதாரண தொழிலாளி! "
             
      

உண்மையோ, பொய்யோ - இது அவருடைய வார்த்தைகளில், அவருடைய பார்வையில், அந்தக் கால அசோக் லேலண்டு! 
               

6.8.14

பொன்னியின் செல்வனில் வந்த பொல்லாத சந்தேகம்!



ஆகஸ்ட் 11 இதழ் கல்கியிலிருந்து மீண்டும் 'பொன்னியின் செல்வன்' வெளியிடத் தொடங்கி இருக்கிறார்கள். ஏக விளம்பரம் இந்தமுறை.  எல்லாப் பத்திரிகைகளிலும் "2400 ரூபாய் சந்தா கட்டினால் நான்கு வருடங்களுக்கு கல்கி உங்கள் வீடுதேடி வரும். வந்தியத் தேவன் மூன்று வருடங்களுக்கு உங்கள் வீடு தேடி வருவார்" என்றெல்லாம் விளம்பரங்கள் தூள் பறந்தன. 

நான் ஏற்கெனவே கல்கி வாங்கிக் கொண்டிருப்பதால் பிரச்னை இல்லை. ஆனால் ஆகஸ்ட் 3 இதழிலிருந்து வழக்கம்போல அச்சுக் காகிதம் விலை உயர்வைக்  காரணம் காட்டி, கல்கி விலையை 3 ரூபாய் ஏற்றி விட்டார்கள். வாழ்க வந்தியத் தேவன். 

கல்கியில் 'கல்கி சிறுகதைப் போட்டி' யில் வெற்றி பெற்ற சிறுகதைகளை ஆர்வமுடன் படித்துப் பயின்று வருகிறேன். ஒருமுறை நானும் ஜெயிப்பேன்! நம்பிக்கைதான் வாழ்க்கை. ஆனால் கதை அனுப்பினால்தானே அவர்களும் பரிசீலிப்பார்கள்?  அடுத்த முறையாவது அனுப்ப முயற்சிக்க வேண்டும்!  ஹிஹிஹி...

                                                           
இந்த இதழில் பொன்னியின் செல்வன் தொடங்கி இருக்கிறது என்றதும் (மீண்டும்) படிக்கத் தொடங்கினேன். கதைக்கான வேதா ஓவியங்களை இரா முருகன் உட்பட எல்லோருமே பாராட்டுகிறார்கள்.   இது சம்பந்தமாக சமீபத்தில் ஏதோ ஒரு பத்திரிகையில் ஓவியர் வேதா அவர்கள் பேட்டியும் படித்தேன்.

திருமதி பக்கங்களிலிருந்து  
கீழே உள்ள படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன் - அனுமதி இல்லாமலேயே!  மன்னிக்கவும் கோமதி மேடம்!   நன்றிகள்!



பொன்னியின் செல்வன் இப்படித் தொடங்குகிறது. "ஆதி அந்தமில்லாத காலவெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம்.  வினாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்குத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டு * ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் செல்வோமாக..."


தொள்ளாயிரத்து எண்பத்திரண்டு என்பதற்கு அருகில் நட்சத்திரக் குறியிட்டு கீழே அடிக்குறிப்பாக " *1950ல் எழுதியது " என்ற குறிப்பும் காணப் படுகிறது.

முன்னர் எல்லாம் படித்தபோது வராத சந்தேகம் இப்போது வந்தது. ஏனென்றால் இது பற்றிய விழிப்புணர்வு இப்போது சமீப காலங்களில் வந்திருப்பதால்!


என்ன சந்தேகம் என்கிறீர்களா.... நான் மேலே குறிப்பிட்டிருப்பது பொன்னியின் செல்வனின் மிக ஆரம்ப வரிகளை. 


நாம் இங்கு கற்பனை ஓடம் ஏறி யுகங்களைக் கடக்காமல் ஜஸ்ட் ஒரு ஐந்து பாராக்களைத் தாண்டிச் செல்வோம்!  வீரநாராயண ஏரியின் தென்கோடிக்கு வரும் வந்தியத்தேவன் ஏரியைப் பார்க்கிறான்.  அந்த (வீராணம்) ஏறி பற்றிய வர்ணனை இந்தப் பாராவில் வருகிறது. 

                                                               
"இப்படி எல்லாம் எண்ணிக்கொண்டு வீர நாராயண ஏரிக் கரையின் தென்கோடிக்கு வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான். அங்கே  வடகாவேரியிலிருந்து பிரிந்துவந்த வடவாறு. ஏரியில் வந்து சேரும் காட்சியைக் கண்டான். ஏரிக்கரையிலிருந்து சிறிது தூரம் வரையில் ஏரியின் உட்புறம் படுகையாக அமைந்திருந்தது.  வெள்ளம் வந்து மோதும்போது கரைக்குச் சேதம் உண்டாகாமலிருக்கும் பொருட்டு அந்தப் படுகையில் கருவேல மரங்களையும் விளா மரங்களையும் நட்டு வைத்திருந்தார்கள்....."
இங்கேதான்.... இங்கேதான் படித்துக் கொண்டே வரும்போதே அந்தக் கேள்வி மனதுக்குள் தோன்றியது. கருவேல மரங்களின் கருங்காலித் தனம் பற்றி சமீபத்தில்தானே படித்து வருகிறோம்... யூகலிப்டஸ் மரங்கள் போல இவையும் இந்தியாவுக்கு வேறு நோக்கில் கொண்டு வரப்பட்டு தீங்கிழைத்துக் கொண்டிருக்கும் மரங்கள் என்று படித்தோமே... சோழர்கள் காலத்திலேயே இருந்திருக்கிறதா? என்று சந்தேகம் தோன்றியது.

இணையத்தின் உதவியை நாடினேன். கீழ்க்கண்ட விவரங்கள் கிடைத்தன. எனவே ஆராய்ச்சி முடிவின் படி சோழர்கள் காலத்தில் கருவேல மரங்கள் இருந்திருக்காது என்று தோன்றுகிறது!

முதலில் இது.

...........53 மீட்டர் வரை வளரும் இதன் வேர், ஆழமாகச் சென்று, நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. வறட்சி காலத்தில், பிற தாவரங்களுக்குத் தேவையான நீர் முழுவதையும், இவை உறிஞ்சி விடுவதால், மற்ற தாவரங்கள் வாடி வதங்கி விடுகின்றன.

இனி வரும் காலத்தில், விவசாய நிலங்கள் அனைத்தும், தரிசு நிலங்களாக மாறினாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை.


இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி இருக்கும் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது.காற்றில் ஈரப்பதம் இருந்தால் கூட உறிஞ்சி விடுகிற இம்மரம், மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை. தன்னை சுற்றி இருக்கிற மனிதர்களின் உடலில் இருக்கிற ஈரப்பசையையும்,எண்ணெய்ப்பசையையு
ம் கூட உறிஞ்சி விடுவதால் இந்த மரத்தின் அருகமையில் வசிக்கிறவர்களின் உடல் தோல்கள் வறண்டு போய் விடுகிறது..........
 
அடுத்தது இது.

கருவேல மரம் வந்த கதை.


வேலிகாத்தான் என அழைக்கப்படும் "கருவேல மரங்கள்', மண்ணின் வில்லன்கள். இதன் தாவரவியல் பெயர் "ப்ரோசோபி
ஸ் சூலிப்ளோரா'. (Prosopis juliflora)  இது வேளாண் நிலங்கள், வாழ்வாதாரங்களை நாசப்படுத்தும் தாவரம். மெக்சிகோ, கரீபியன் தீவுகள் மற்றும் தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இவை, பயிர்களுக்கு வேலியாகவும், விறகாகவும் பயன்படும் எனக் கருதி, 1950ல் ஆஸ்திரேலியாவிலிருந்து, இந்தியாவுக்கு விதையாக கொண்டுவரப்பட்டது. நலம் பயக்கும் என கருதி, விதைக்கப்பட்ட இவை, நிலத்திற்கு எதிரியாகி, இன்று இந்தியா முழுவதும் ஆக்கிரமித்து விட்டது.
இது வேறு கருவேல மரம்,  கதையில் வருவது வேறு கருவேல மரமோ!

4.8.14

திங்க கிழமை 140804:: நாக்கு நாலு முழம் : தோசையாயணம் பகுதி 1

             
எப்பவோ தோசை பற்றிச் சொல்லி, 'தொடர்கிறேன்' என்று சொல்லியிருந்தேன். இப்போதுதான் நேரம் வந்தது!

தோசை சாப்பிடற அனுபவம் இருக்கே... ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி சாப்பிடுவாங்க.  நான் எப்படி ரசித்துச் சாப்பிடுவேன் என்று சொன்னால் நீங்கள் எப்படி ரசித்துச் சாப்பிடுவீர்கள் என்று சொல்ல மாட்டீர்களா என்ன! 

     
மதுரை ஹோட்டல் ஒன்றில் - பிரேம் நிவாஸ் என்று நினைக்கிறேன். சரியாக பெயர் நினைவில்லை.பகவான்ஜி,  ரமணி ஸார் போன்றோர் இதைப் படித்தால் அவர்கள் ஒருவேளை எந்த ஹோட்டல் என்று சொல்லலாம் - வருடா வருடம் தோசைத் திருவிழா நடத்துகிறார்கள். எத்தனை வகையான தோசைகள்? அதில் ஸ்பெஷல் மெகா தோசை என ஒன்றின் படம்  போட்டிருப்பார்கள். (நான் படம்தான் பார்த்திருக்கிறேன்!   

ஒருமுறை கூட நேரில் சென்றதில்லை, பார்த்ததில்லை, சுவைத்ததில்லை) நான்கைந்து மேசைகள் வரிசையாகப் போட்டு அதில் அந்த ஒரு தோசையை அலங்கரித்து வைத்திருப்பார்கள்.  


   
வெறும் தோசை ருசி தருமா?  ஒரு தோசை சுவையாயிருப்பது எப்போது?  அதன் கூட அணிவகுக்கும் சாம்பார், சட்னிகள் சுவையைப் பொறுத்துதான். வெறும் தோசை கூட ருசிக்கும் சந்தர்ப்பங்கள் உண்டு. அதை வரிசையாக சொல்லிக் கொண்டு வரும்போதே சொல்கிறேன்.
           
  
சாதா தோசை, ரவா தோசை, ஆனியன் தோசை, ஆனியன் ரவா தோசை, மசால் தோசை, பொடி தோசை, நெய் தோசை.. எத்தனை வகைகள் தோசையில்? 'ஸ்பெஷல் சாதா' என்று ஆர்டர் தரும்போது கொஞ்சம் சிரிப்பாய் இருக்கும்!
     

    
ரவா தோசை எனக்கு எப்படி இருக்க வேண்டும் என்றால் ஓரங்கள் மொறுமொறு என்றும், நடுவை நெருங்க நெருங்க சாதாரணமாகவும் இருக்க வேண்டும். மிகச் சில சமயங்களில் நடுவிலும் மொறுமொறு என்று இருந்தால் ரசிக்க முடியும். மொத்தமும் மொத மொத என்று இருந்தால் ரசிக்க முடியாது.
     
இதற்கு கொத்துமல்லி சட்னி,  புதினா சட்னியுடன் தேங்காய் சட்னி மற்றும்  வெங்காய காரச் சட்னி.  அப்புறம் கட்டாயம் சாம்பார்.  
    
    

அதென்னவோ ஹோட்டல்களில் சாம்பார் தர என்று ஒரு கிண்ணம் வைத்திருக்கிறார்கள் பாருங்கள்...  எப்படித்தான் போதும் என்று நினைக்கிறார்களோ.. இரண்டாம் முறை சாம்பார் கேட்க நீங்கள் சர்வரைத் தேட வேண்டும்.  அவர் நம் காட்சியில் அகப் பட்டதும், அல்லது கூப்பிடு தூரத்தில் வந்ததும், "ஹலோ... சாம்பார்" என்று குரல் கொடுப்போம்.  அவர் ஒரு பொருள் விளங்காப் பார்வை ஒன்றை நம் மீது வீசி விட்டு சாம்பார் எடுக்கச் செல்வார். அப்போதாவது வாளியில் சாம்பார் வருமா என்றால் ஊ...ஹூம்.... இன்னொரு மினிக் கிண்ணத்தில்தான்  சாம்பார் வரும்!  
 
    
முன்பெல்லாம் - முன்பெல்லாம் என்றால் மிகச் சமீபத்தில். ரொம்ப முன்பு என்றால் விலை விவரமே வேறு - ரவா தோசை 45 ரூபாய்,  இப்போது இன்னும் 15 ரூபாய் விலை ஏறியது மட்டும் கடுப்பு இல்லை, தட்டில் ரவா தோசையைப் பார்க்கும்போதே மனம் நிறைய வேண்டாம்?  இத்தனூண்டு ப்ளேட்டில் சிறியதாய் மடங்கி அமர்ந்திருக்கும் ரவா தோசையைக் கண்டால் உள்ளம் குமுறுகிறது.
  
இருவேறு இடங்களில் இருக்கும் 'சங்கீதா'க்களிலேயே ஆனியன் ரவா இருவேறு விலைகள்.  ஆனால் பாருங்கள் இரண்டு இடத்திலும் ரவா தோசையின் சைஸ் என்னமோ சிறிசுதான்! 
   
சரவணபவனுக்கும் மற்ற ஓட்டல்களுக்கும் வேண்டுமானால் சாம்பார் சுவையில் வித்தியாசம் கண்டு பிடிக்கலாம். ஆனால் மற்ற ஹோட்டல்களுக்குள் பெரும்பாலும் ஒரே சுவை. குறிப்பிடத்தக்க சில ஹோட்டல்கள் தவிர மற்ற ஹோட்டல்களில் சட்னிக்களின் சுவை திராபைதான்.  
       
தாம்பரம் தாண்டி செங்கல்பட்டு செல்லும் வழியில் ஒரு சாலையோர ஹோட்டல் இருக்கிறது. பெயர் நினைவில்லை.  மோட்டல் (தலை)விதிகளுக்கு மாறாக இங்கு விலையும் சுவையும் நன்றாய் இருக்கின்றன. இந்த இடத்தில் மிளகாய்பொடி நல்லெண்ணெய் மேஜையில் தயாராய் வைத்திருக்கிறார்கள். இதே போல சென்னை-ஹோசூர் சாலையில் கூட நல்ல (மோ)ஹோட்டல் ஒன்று இருக்கிறது. இரண்டு இடங்களிலும் சுற்றுப்புறமும் கௌரவமாக இருக்கும். 
      
ரவா தோசை தரமாகவும், பொன் நிறமாகவும் நாக்கு கேட்கும் சுவையில் சாம்பாரும் தந்தால் அது நல்ல ஹோட்டலாக இருக்க வாய்ப்புகள் அதிகம்! 
  
"ரவா தோசை முறுகலா" என்றும் "ரவா தோசை பதமா" என்றும் நேயர்கள் விருப்பம் தெரிவித்து ஆர்டர் தருவார்கள்.  ஆனால் பாருங்கள்,  பெரும்பாலான ஹோட்டல்களில் சர்வர்கள் கொண்டு வரும் ரவா தோசை பதமாகத்தான் இருக்கும். "முறுகலா" என்று கேட்ட பாவத்துக்கு கறுப்பாகக் கொண்டு வரும் ஹோட்டல்களும் உண்டு!
             
இப்போதைய வழக்கத்தில் பாராட்டக்கூடிய  ஒன்று சாம்பார் தனிக் கிண்ணத்தில் தருவது. முன்னர் அழகான பொன்னிற தோசையைக் கொண்டுவந்து வைத்து விட்டு, அதன் மொறுமொறு பகுதிகளைக் கொஞ்சம் எடுத்துச் சுவைக்குமுன் வாளியில் சாம்பார் கொண்டு வந்து அதன்மேல் ஊற்றி மொறுமொறுப்பைக் கலைத்து சொதசொத என்று ஆக்கி விடுவார்கள். இப்போது கிண்ணத்தில் வருவதால் நமக்கு மொறுமொறு சுவைக்க வாய்ப்பு கூடுகிறது!
      
தோசையின் மொறுமொறு பகுதியை தொட்டுக்கொள்ள ஏதுமின்றி தனியாகச் சுவைக்கவேண்டும். ஓரிரு விள்ளல்களை சாம்பாரிலோ சட்னியிலோ தொட்டுச் சாப்பிடலாம். ஆனால் அப்படித் தொட்டுக் கொள்ளும்போதும் அதன் மொறுமொறுப்புக்கு எந்த பங்கமும் வந்துவிடக் கூடாது!
     
தோசையின் நடுப்பகுதி இருக்கிறது பாருங்கள், அதற்குக் கட்டாயம் சாம்பார் வேண்டும். முதலில் கிண்ணத்தில் வைத்தே சாம்பாரைத் தொட்டுக்கொள்ள வேண்டும்.  மொறுமொறு பகுதிகள் தீர்ந்தபிறகு சாம்பாரை தோசையின்மேல் கவிழ்த்துக் கொள்ளவேண்டும்.  தோசை சாம்பாரில் ஊறி, அதை எடுத்து காரச் சட்னியுடனும், தே.சட்னியுடனும் தொட்டுக் கொண்டு சாப்பிடும் ருசி இருக்கிறதே.... ..ஆஹா.. இரு சட்னிகளும் கலந்து சாம்பார் இணைந்த தோசையுடன் கலந்து ஒரு சுவை இருக்கிறது பாருங்கள்.... படிக்கும்போதே சாம்பாரின் மணம் மனத்தில் வரவில்லை?  
       
அதை ஒரு வாரம் அனுபவியுங்கள்! 
    
அடுத்த வாரம் தொடர்வோம்! 
   

3.8.14

ஞாயிறு 265 : நட்"பூ"


நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பர்களே...








கனிந்த

நம் நட்பு

பூவாய்

 மலரட்டும்!
 

2.8.14

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரத்தில்!




1) ‘ஓய்வு பெற்றவர்கள் பெரும்பாலும் பகல் நேரத்தில் தனிமையில் விடப்படுகிறார்கள். அவர்களுக்கு பொழுது போக்குக்கும் வாய்ப்பிருப் பதில்லை. எங்களது ‘பகல் வீடு’ காலை பத்து மணியிலிருந்து மாலை நான்கு மணிவரை திறந்திருக்கும். அந்த நேரத்தில், தனிமையை தொலைத்து மனதை லேசாக்கி கொள்ள விரும்பும் மூத்த குடிமக்கள் இங்கு வருகிறார்கள். தாங்களாக வரமுடியாதவர்களை நாங்களே வாகனம் வைத்து அழைத்து வருகிறோம்.." என்கிறார் அதன் இணைப்பாளர் ஜெபி விக்டோரியா.
 
 
 
2) சினேகாவின் அறச்சீற்றம். 
 


 
3) ஃபேஸ்புக் மூலமாக ஊரை சீரமைக்கிறார்கள் தென்காசி இளைஞர்கள்... ( படம் இல்லை)
 
 


 
5) "வேறு எந்த பெரிய ஆசையும் எனக்கு இல்லை." கடந்த, 22 ஆண்டு களாக, வாகனங்களுக்கு, 'பஞ்சர்' ஒட்டும் தொழிலை செய்து வரும் லதா:
 


 
6)  அரசு பள்ளி மாணவியர், சவுமியா மற்றும் லதா
 


 
7) எல்லாவற்றுக்கும் அரசையே எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் நல்ல நிலையில் இருப்பவர்கள் தங்கள் தகுதிக்கேற்ப தங்களால் ஆன உதவிகளை இயலாத வர்களுக்குச் செய்ய வேண்டும். எங்களிடம் படித்து பணியில் சேர்ந்திருக்கும் இளைஞர்கள் அத்தகைய உதவிகளை செய்ய ஆரம்பித்திருப்பதை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்’’ என்றார் ராமநாதன் (தொடர்புக்கு -9442564078).
 



 
8) நெகிழ வைக்கும் ரெங்கராஜ தேசிக அறக்கட்டளை
 



 
9) திருச்சியைச் சேர்ந்த பிரபல கண் மருத்துவர் ஜோசப் ஞானாதிக்கம். பார்வைத்திறன் இல்லாதவர்களுக்கு முறையான பயிற்சியளித்தால் பல பணிகளை சிறப்பாக செய்யவைக்க முடியும் என நம்பிய அவர், அரசுக்குச் சொந்தமான இடத்தை நீண்டகால குத்தகைக்கு வாங்கி ஆர்பிட் என்ற சிறு தொழிற்சாலையை உருவாக்கினார். ஆர்பிட்டின் சாதனை.
 


 
10) சென்னை செம்மஞ் சேரியில் 6,850 குடும்பங்கள் பாதிக் கப்பட்டு நின்றபோது, நாங்கள் அங்கு சென்று அந்த மக்களுக்கான அடிப்படை உதவிகளை செய்து கொடுத்தோம். எங்களது முயற்சியில், அங்கிருந்த நடுநிலைப் பள்ளி இப்போது மேல்நிலைப் பள்ளியாக வளர்ந்திருக்கிறது. கடந்த மூன்று வருடங்களில் 15 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தி இருக்கிறோம்.'தோழமை'யும் தேவநேயனும்
 
 

11) விளைநிலம் இல்லாமல் விசாயமாம். எதிர்காலத்தில் இப்படித்தான் ஆகப் போகிறது! சூலூர் ஒன்றியம்