Wednesday, May 19, 2010

லைலா விஜயம்

நேற்று லைலா வரப் போவதாகக் கேள்விப் பட்டதிலிருந்து வீடு வீடாகவே இல்லை.

விடுமுறைக்காக குழந்தைகளுடன் டெல்லி சென்றிருக்கும் திருமதி கூட செடிகளுக்கெல்லாம் தண்ணீர் ஊற்றினீர்களா என்று கேட்டதற்கு சாயந்திரம் லைலா வரப் போவதால் இன்னும் இல்லை என்று பதிலளிக்க, பிறகு தொடர்ந்த உரையாடல்கள்  பற்றி வேறொரு போஸ்டே போடலாம்.

வீடெல்லாம் ஒரே தூசியாக இருக்கிறதே என்றெண்ணிய உடனேயே லைலா நினைவு வந்து பெருக்குவதை ஒத்திப் போடுகிறது.

இன்று காலை முதல் லைலாவின் வருகையால் பாதிக்கப் படாதவற்றை ஒரு கை விரலில் எண்ணி விடலாம்;  காய் கறி, பால் பாக்கெட் இப்படி எல்லாவற்றிலும் எக்ஸ்ட்ரா - ஆனால் வீடு சுத்தம் செய்வது போன்றவைக்கு ஒத்திவைப்பு.

இதோ அதோ என்று காத்திருந்து அலுத்துப் போய் தூங்கியும் போனேன்,  சுமார் இரண்டரை மணிக்கு என்ன தான் தூக்கம் என்றாலும் மின் விசிறியின் ஓசை நின்று போனதும், "நான் அசைந்தால் அசையும்.. அகிலமெல்லாமே " என்று திருவிளையாடல் படத்தில் ஒரு காட்சி வருமே அந்த மாதிரி ஒரு நிசப்தம் - எழுந்து சுற்று முற்றும் பார்க்க, எல்லாமே ப்ளாக் & ப்ளாக்கில் தெரிய, மின்னல் ஒரு பளிச் வெளிச்சம் போட்டதும், லைலா வந்தாச்சு என்று எழுந்தால் காலில் ஈரம். எல்லாப் படங்களிலும் வரும் கிளைமாக்ஸ் காட்சி போல எல்லா ஜன்னல் கதவுகளும் அடித்துக் கொள்ள, பிறகு தான் நினைவுக்கு வந்தது கொக்கிகள் மாட்டும் தலையாய பணியை மறந்து போனது .

இந்திரன் தந்த ஃப்ளாஷ் வெளிச்சத்தில் எல்லா [55] கொக்கிகளையும் மாட்டி விட்டு எக்சாஸ்ட் ஃபான் வைத்தவர் அந்த டக்டுக்கு ஒரு புருவம் வைக்காமல் விட்டு விட்டாரே என்று நொந்து கொண்டு வந்து உட்காரவும் ஸ்ரீராம் நினைவு வந்தது. 

சரி, அவர் என்ன செய்கிறார் பார்ப்போம் என அவரைத் தொலை பேசியில் அழைத்து அவர் எடுக்கவும் அவருக்கும் மின்தடை ஏற்பட, அவரென்னவோ நான் செல் ஃபோன் மூலம் அவருக்கு ரிமோட் கண்ட்ரோலில் மின்தடை ஏற்படுத்திவிட்ட மாதிரி "போயிடுச்சு" என்றார்.  லைலா இன்னும் வரவில்லையா என்று கேட்டதும் 'லைலாவா, யார் .." என்று ஆரம்பித்தவர் "மழையும் இல்லை காற்றும் இல்லை வெளிச்சமும் இல்லை.  ஆனால் எதிர் வரிசையில் இருக்கும் குவார்ட்டர்சில் லைட்  இருக்கு" என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது ப்ரௌனியின் குரல் குறுக்கிட,  கீழே போய் ஏதோ இரண்டு வார்த்தை [அடுத்த முறை ஞாபகமாக அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ன சொன்னால் நாய் அவ்வளவு சீக்கிரம் சமாதானமாகும் என்று] சொல்ல அதுவும் ஒரு சிறிய முனகலுடன் ஓர் ஓரத்தில் ஒண்டிக் கொண்டது.  திரும்பி வந்தவர் குவார்ட்டர்சிலும் இப்பொழுது லைட் இல்லை என்றவர் குரலில் சற்று நிம்மதி.  அவர்களுக்கு வரும் பொழுது நமக்கும் வரும் என்ற நம்பிக்கையா அல்லது மின்சார வாரியத்தின் ஜனநாயக சோஷலிச கைங்கர்யத்தினாலா என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.   அமைதி நிலவும் இடத்தில் நமக்கென்ன வேலை என்று நானும் ஃ போனை ஆஃப செய்தேன் .

காலையில் மீண்டும் ஒரு சர்வே.  பேப்பர் பையன் பழக்க தோஷத்தில் வீசிய தினசரி, தேங்கிய தண்ணீரில் விழுந்து அப்படியே பேப்பர் மாஷ் பொம்மை செய்யும் பதத்தில்.   கொய்யா மரத்தில் இருந்த இல்லை, பிஞ்சு, பூ எல்லாம் கொட்டி விட்டது, எலுமிச்சை பக்கத்து வீட்டு சமையலறை ஜன்னலுக்குள் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது கூட துணைக்கு ஒரு வாழை மரம்.  
தாழ்வாரம் முழுக்க ஒரு பெயர் தெரியாத பூ. படம் பார்த்து தெரிந்து கொள்பவர்கள் எங்களுக்கும் சொல்லுங்கள்.  என்ன தான் மல்லிகையாக இருந்தாலும் லைலா விஜயத்துக்குப் பின் எல்லாமே குப்பை தான். 


விசிறியின்றி எனக்கும் வியர்க்குது - ஒ லைலா நீ சீக்கிரம் போய் என் தென்றலை மீட்டுக் கொடு.  

16 comments:

அநன்யா மஹாதேவன் said...

//திரும்பி வந்தவர் குவார்ட்டர்சிலும் இப்பொழுது லைட் இல்லை என்றவர் குரலில் சற்று நிம்மதி.// :)) ரசித்தேன்.

இதை இட்லிப்பூன்னு சொல்லுவாங்க. வழக்கமா சிவப்பாத்தான் இருக்கும். அதென்ன வாடாமல்லிக்கலர் இட்லிப்பூ.. லெவெண்டர் இட்லியா இருக்குமோ என்னமோ?

soundar said...

சூப்பர் லைலா லைலா சொல்லுரிங்க புயல்

வல்லிசிம்ஹன் said...

lailaa vanthuttup poyaacchaa?

eppavume namakku power illainnaalum pakkaththu
veetilum
illainnalthaan
namakku nimmathi:)

Chitra said...

லைலாவுக்கு பின் அமைதி தவழும் தென்றல், விரைவில் வரும். :-)

padma said...

நாங்க வருஷத்துக்கு இந்த மாதிரி நாலு லைலா பார்க்கிறோம் .ஆனால் இத்தனை அழகாய் எழுத தெரில பாருங்க ..
என்ஜாய்

தமிழ் உதயம் said...

இன்று லைலா...
நாளை ?

ஹேமா said...

லைலா தென்றல் எங்களுக்கும் தந்தீங்க.நன்றி.

meenakshi said...

'பாமா விஜயம்' மாதிரி 'லைலா விஜயம்' நகைச்சுவையா இருந்துது.

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////இந்திரன் தந்த ஃப்ளாஷ் வெளிச்சத்தில் எல்லா [55] கொக்கிகளையும் மாட்டி விட்டு எக்சாஸ்ட் ஃபான் வைத்தவர் அந்த டக்டுக்கு ஒரு புருவம் வைக்காமல் விட்டு விட்டாரே என்று நொந்து கொண்டு வந்து உட்காரவும் ஸ்ரீராம் நினைவு வந்தது./////////


இந்த நிலையிலும் வார்த்தைகளுக்கு ஆடை போர்த்தி இருக்கிறீர்கள் . பலே . சிறப்பு !

குரோம்பேட்டைக் குறும்பன் said...

தலைப்பையும் படத்தையும் பார்த்தவுடன் அவசரம் அவசரமாக, " அழகிய லைலா, அது இவளது பெயரா? அடடா பூவின் மாநாடா? " இந்தப் பாட்டு சம்பந்தமாக ஏதோ படைப்பாற்றல் கேள்வி இருக்கப்போகுது என்று தேடித் தேடி ஏமாந்து போனேன்!

Ananthi said...

லைலா விஜயம் சொன்ன விதம் நல்லா இருந்தது..

இப்ப பவர் இருக்கா? :D

பக்கத்து வீட்ல செக் பண்ணிட்டு, அங்கயும் இல்லையாம்..னு சொல்லும் போதே ஒரு நிம்மதி இருப்பது உண்மை தான்.. :)

LK said...

there was no power for last 24 hours in my home.

Madhavan said...

லைலா.. "வரும்.. ஆனா வராது.."
ஆமாம் சார்..
1 ) வரும்..
2 ) ஆனால் வராது..
==>
1 ) எங்க பக்க திரும்பிடுச்சே..
2 ) எனவே உங்களுக்கு..

ஹுஸைனம்மா said...

ஆக, லைலா விஜயத்தை நல்லா ரசிச்சிருக்கீங்க!! அதுவும் தனியா!!

//எல்லா ஜன்னல் கதவுகளும் அடித்துக் கொள்ள.... எல்லா [55] கொக்கிகளையும் //

அம்பத்தஞ்சா?? அடப்பாவமே!!

ஜெகநாதன் said...

லைலாவை லைவ்வா சொல்லியிருக்கீங்க!
ஆனா இது எந்த ஊர் லைலா என்று தெரியவில்லை?
சென்னையா, ஹைதராபாத்தா??

Anonymous said...

@jegan

அயோத்தி! [ஸ்ரீராமன் இருக்கும் இடம் ]

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!