சனி, 14 நவம்பர், 2009

கத்தரிக்காய் பஜ்ஜி

 மழை நாட்களில் - சாப்பிட சரியான சமாச்சாரம் - என்னைக் கேட்டால் - பஜ்ஜிதான்.
அதுவும் சூடான பஜ்ஜி. - எவ்வளவு சூடு?
அந்த பஜ்ஜியை, வலது கை கட்டை விரலுக்கும், ஆட்காட்டி விரலுக்கும் நடுவே வைத்து, ஒரு சிறிய அளவு, அதாவது இருபத்தைந்து கிராம் - அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அப்போ - நடுவே உள்ள காய் தகடு விட்டு, பொன்னிற உறைகள் - பிரியும். அந்த நேரத்தில் ஒரு பொன்னிற உறையை நாவால் அகற்றி, பல்லால் கடித்தபடி - காய் தகட்டின் மேல் பகுதியை உற்று நோக்குங்கள் -- ஆவி தயங்கித் தயங்கி - மேலே செல்கிறதா?
இதுதான் சரியான உஷ்ண நிலை - பஜ்ஜியை கபளீகரம் செய்ய.
அந்தக் காலத்தில் எங்க அம்மா பஜ்ஜி செய்யும்போது - நாங்க எல்லோருமே - ஆளுக்கொரு தட்டு வெச்சிகிட்டு - ஆவலாக வெய்ட் செய்வோம்.
நாந்தான் - ஹோட்டல் பிருந்தாவன் என்பார் பெரிய அண்ணன்.
நாந்தான் - ஹோட்டல் தினகர விலாஸ் என்பார் சிறிய அண்ணன்.
நாந்தான் - சங்கர ஐயர் ஹோட்டல் என்பேன் நான் (அப்போ எனக்குத் தெரிஞ்ச ஒரே ஹோட்டல் அதுதான்)
நாந்தான் - நாந்தான் -- என்று யோசனை செய்துகொண்டே இருப்பாள் என் தங்கை.
நாந்தான் கடத்தெருவுல  இருக்கற கலியபெருமாள் கடை என்பான் தம்பி.
எங்க எல்லோருக்கும் அம்மா சரக்கு மாஸ்டர்; அக்கா சப்ளையர்.
ஒவ்வொரு ஈடு பஜ்ஜி தயாரிக்கும்போதும் அம்மா - எவ்வளவு தலைகள் இருக்கின்றனவோ அவை  இண்டு டூ + a constant என்கிற பார்முலா பயன்படுத்தி உற்பத்தி செய்வார்.
அது என்ன கான்ஸ்டன்ட்? - என்ன  வகை பஜ்ஜியோ - அது எங்களில் யார் யாருக்கு அதிகம் பிடிக்குமோ - அவர்களுக்காக - இரண்டிரண்டு  எக்ஸ்ட்ரா!
நாங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு தினுசா பஜ்ஜி சாப்பிடுவோம். - மத்தவங்க சாப்பிட்ட வகை ஞாபகம் இல்லை - நான் பஜ்ஜிகளை - கை பொறுக்கும் சூட்டில் கையில் எடுத்து, அவைகளை மேல் தட்டு - உள் தகடு, கீழ்த் தட்டு என்று மூன்று பகுதிகளாக்கி தட்டின் ஓரத்தில் ஆறப் போட்டுடுவேன். அப்புறம் உள்தகடுகளைத் தனியாகவும், பொன்னிற ஓடுகளைத் தனியாகவும் - மென்று, சுவைத்து சாப்பிடுவேன். 
பிடித்த பஜ்ஜி வகைகள் - வெங்காயம் - கத்தரிக்காய் - உருளைக்கிழங்கு. பிடிக்காத வாழைக்காய் பஜ்ஜிகளை, பெரிய அண்ணனுடன் பண்டமாற்று செய்துகொண்டதும் உண்டு. பின் நாட்களில் - அப்பள பஜ்ஜி புதுமையாக இருந்ததால் சாப்பிட்டது உண்டு. 
நெல்லூரில் ஒரு முறை உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த நேரத்தில் அறுபது ரூபாய்க்கு மிளகாய் பஜ்ஜி வாங்கி சாப்பிட்டோம். பஜ்ஜி பற்றி சுவையான தகவல்கள் தெரிந்தோர் சுடச் சுட இங்கே பின்னூட்டம் இடுங்க - எல்லோரும் ரசிச்சுச் சாப்பிடலாம்.
(எனக்கு வெங்காய பஜ்ஜி கொரியர் பண்ணுகிறேன் என்று 'நீரு', என்னுடைய facebook ல எழுதி உற்சாகப் படுத்தியதால், கொரியர் வந்து சேருவதற்குள் - இந்த சுவையான கட்டுரையை எழுதி முடித்துவிட்டேன்!)

17 கருத்துகள்:

  1. இருபத்தைந்து கிராம் - அழுத்தம் கொடுக்க வேண்டும்.//////////////

    இதெல்லாம் அளந்து வெச்சுருக்காங்கய்யா.....செம வெவரம் தான் நீங்க....
    உங்கள வெச்சு எப்படித்தான் உங்க அம்மா மேச்சாங்களோ :) :)
    (சும்மா காமெடிக்கி தப்பா எடுத்துக்க வேணாம்)

    பதிலளிநீக்கு
  2. உடனடியாக பஜ்ஜி சாப்பிட வேண்டுமென்ற ஆசையை உருவாக்கி விட்டீர்கள்!

    :)

    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. பஜ்ஜியை சாப்பிட்ட திருப்தியில் நீங்க பதிவு போட்டாச்சு! எங்களுக்கும் கொஞ்சம் கிடைத்தால் அல்லவா, நாங்களும் சாப்பிட்டுப் பார்த்துவிட்டு,இருபத்தைந்து கிராம அழுத்தம் போதுமா கூட வேண்டுமா என்றெல்லாம் ஆராய்ச்சி பண்ண முடியும்?!

    கொஞ்சம் கத்தரிக்காய் பஜ்ஜி ப்ளீஸ்!

    பதிலளிநீக்கு
  4. பஜ்ஜின்னா எனக்கு என்னான்னு தெரில.இண்ணைக்குத்தான் இணையத்தில பாத்திருக்கேன்.செய்து சாப்பிட்டுப் பாக்கணும்.அப்பத்தான் நீங்க பண்ணின பஜ்ஜி அட்டகாசம் சரிதானான்னு பாக்கலாம்.

    பதிலளிநீக்கு
  5. பஜ்ஜியை இன்றைக்கு ஒரு கை பார்த்து விடுவது என்று நிறையப் பேர் கிளம்பி இருக்கிறார்கள்
    ஹர்பஜன் சிங், ஜாக்கிரதையாக இருங்கள்!

    பதிலளிநீக்கு
  6. பஜ்ஜி பாகவதரே! பொண்ணு பாக்க போகும் போதுபஜ்ஜிக்கு எவ்வளவு கிராம் அழுத்தம் கொடுத்திக?

    பதிலளிநீக்கு
  7. கிருத்திகா - தப்பா எடுத்துக்கலை - தமாஷ்தான் - நன்றி!

    மாக்சிமம் இந்தியா - ஆஹா வந்துடுச்சா! ஆசையில் ஓடிவாங்க!

    கிருஷ்ணமூர்த்தி சார் - வெங்காய பஜ்ஜிதான்; ஆனா வீடு தேடி - இன்னும் வரவில்லை - கல்கி அவர்கள் ஒருமுறை கூறியது போல், சம்பவத்தைவிட, அதைப் பற்றிய எதிர்பார்ப்பு இன்னும் சுவாரசியமானது!

    ஹேமா - பஜ்ஜி தயாரித்தவுடன், முதல் பிரதி எங்களுக்கு அனுப்புங்க - முன்னுரை எழுத!

    அனானி - ஐயோ நான் சொன்னது தாடி தலைப்பாகை அணியாத பஜ்ஜியை!

    மாலி - பெண் பார்க்கப் போனபோது - பெண்ணே பஜ்ஜியாட்டமா அழகா இருந்ததால - கொடுக்கப் பட்ட பஜ்ஜியை, ஆராயாமல், அப்படியே சாப்பிட்டுட்டேன்!

    பதிலளிநீக்கு
  8. ஆசிரியரின் மனைவியாரே! தங்களை
    'கத்திரிக்காய் பஜ்ஜி' என்று தங்கள் கணவர் சொல்லுகிறார். அடுத்த தடவை பஜ்ஜி போடும் போது கொஞ்சம் 'காரத்தில்'kaவுனியுங்க!

    பதிலளிநீக்கு
  9. மாலி அவர்களே - பஜ்ஜி போல அழகாக - என்று எழுதியதை, (உங்க வழக்கம்போல -) ஒரு வார்த்தை கத்தரிக்காய் - சாரி - கத்தரித்துவிட்டீர்களே!
    நல்ல வேளை - என் மனைவி எங்கள் பிளாக் படிப்பதில்லை. அதனால நான் எஸ்கேப்பு!

    பதிலளிநீக்கு
  10. பஜ்ஜி பாகவதர்15 நவம்பர், 2009 அன்று PM 2:35

    மதுரைப் பக்க மிளகாய் மீனாச்சி, இப்ப
    மாலியும் அத்தோட சேந்தாச்சி!!
    தீம் தரிகிட தீம் தரிகிட!!

    பதிலளிநீக்கு
  11. பஜ்ஜி பாகவதரின் பாட்டிற்கு ஒரு டசன்'மிளகாய் பஜ்ஜி' ரெடி!

    பதிலளிநீக்கு
  12. சொஜ்ஜி எப்படி சோபிக்கும் அதனோடு
    பஜ்ஜியும் சேர்ந்து பரிமளிக்காதே - அஜ்ஜி
    அன்று செய்த அருமைக் கத்திரிக்காய்
    இன்றுமுளதே இதயத் தில்.

    காரம் சரிசேர்த்து கவனமாய் உப்பிட்டு
    ஈரம் பதமாய் இணைத்து - வாரம்
    என்றோ ஒருநாள் ஏற்றமாய் அளித்திட
    நன்றி பாராட்டுமே நெஞ்சு.

    (அஜ்ஜி : அன்னையின் அழைப்புப் பெயர்.)

    பதிலளிநீக்கு
  13. ஆஹா - பஜ்ஜியைவிட - இந்தக் கவிதை பன்மடங்கு சுவையாக இருக்கிறதே!
    அந்த அஜ்ஜியை வணங்குகிறோம்!

    பதிலளிநீக்கு
  14. என்ன தான் இருக்கிறதோ இந்த பஜ்ஜியில், ஒரேயடியா புகழ்ந்து தள்ளுறாங்க ஆளாளுக்கு! ஏன் பக்கோடா ஓமப்பொடி மசால்வடை முறுக்கு இதெல்லாம் என்ன பாவம் செய்தனவோ? இதுக்கெல்லாம் மதிப்பே கிடையாதா?
    நெருப்புக் கோழி நெருப்பை விழுங்குமோ என்னவோ நமக்குத் தெரியாது, ஆனால் சூடான பஜ்ஜியை வாயில் கட கட வென்று உருட்டி சூடு அதிகம் பாதிக்காமல் சுவைத்து மகிழும் அனுபவத்துக்கு இந்த ஆசாமிங்க எல்லாம் அடிமை ஆயிட்டாங்க போல் இருக்கு.
    சூடான டீயோடு மசால்வடை சாப்பிட்டு பழக்கம் இருந்தால் இப்படி ஒரேயடியா பஜ்ஜிக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுப்பாங்களா? இளஞ்சூட்டில் ஜாங்கிரியை சாப்பிட்ட மனுஷாளுக்குத் தெரியும் அதோட அருமை. சூடு ஒரு ருசி என்ற பழமொழிக்கு உதாரணமாக சூடு மட்டுமே பெருமையா இருக்கிற இந்த பஜ்ஜி வடை எல்லாம் எக்காலத்துக்கும் சுவை தரும் ஓமப்பொடி காராபூந்தி முறுக்கு, தேன்குழல் போன்ற சமாச்சாரங்களின் கிட்டே நிற்க முடியுமா ன்னு சவால் விடறேன்.

    பதிலளிநீக்கு
  15. கொன்னுட்டீங்க அனானி, கொன்னுட்டீங்க! நம்ப அடுத்த சாட்டர்டே சமையல் பகுதிக்கு, நீங்க நிச்சயமா - மனதை மயக்கும் மசால் வடை பற்றி ஒரு பதிவு எழுதி அனுப்புங்க. நிச்சயம் வெளியிடுகின்றோம்..

    பதிலளிநீக்கு
  16. வாழைக்காய் பஜ்ஜி பிடிக்காதா? நல்லதா போச்சு, எங்களுக்கு மிச்சம்.
    ஹைதராபாதில் இருந்தபோது மிளகாய் பஜ்ஜி என்று ஒன்றை சாப்பிட்டு விட்டு மூன்று நாள் க்க்க்க்கும்.
    உடுப்பி நண்பர் வீட்டில் மூங்கில் பஜ்ஜி சாப்பிட்டது விசித்திரம் (மூங்கில்னதும் கொடிக்கம்பு நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லை - இது சாப்பிடும் வகை)
    உடுப்பி நண்பர் வீட்டில் சீனியுருளை பஜ்ஜி சாப்பிட்டதும் புதுமை தான். சீனியுருளையைச் சீவிப் புளி நீரில் ஊறவிட்டுப் பின் பஜ்ஜி செய்தார்கள். ஏனென்று கேட்காதீர்கள் - அடியேனுக்கு சாப்பிட மட்டும் தான் தெரியும்.
    காலிப்ளவர் பஜ்ஜி - காலியைக் குறுக்காக வெட்டி செய்தால் பஜ்ஜி. முழுசாக முக்கியெடுத்தால் பக்கோடா. டெல்லி நண்பர் வீட்டில் சாம்பார் சாதத்துடன் காலி ப்ளவர் பஜ்ஜியைக் கொடுத்தார்கள். நாட் பேட்.
    டெல்லியில் கேரட் பஜ்ஜியும் சாப்பிட்டிருக்கிறேன் (கஷ்டம்).

    பதிலளிநீக்கு
  17. பஜ்ஜியைப் போலவே சுவையான பதிவு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!