செவ்வாய், 10 நவம்பர், 2009

அதான் அடி வாங்கலை இல்லே...விடுங்க..

ஏமாந்த அனுபவங்களில் இன்னும் ஒன்று! எண்பதுகளின் பிற்பகுதி. அப்போது நான் வத்திராயிருப்பு என்ற ஊரில் பணி புரிந்து கொண்டிருந்தேன் . தினமும் மதுரையிலிருந்து காலை பஸ்ஸில் சென்று வருவது வழக்கம். ஒன்றரை மணி நேரப் பயணம் அது. காலை ஏழு மணிக்கு பணியில் இருக்க வேண்டும் என்பதால் காலை ஐந்து முதல் ஐந்தரைக்குள் நான் பஸ் ஏறி விடுவது வழக்கம். ஜெயவிலாஸ் பஸ் 'கூமாப்பட்டி' என்று போட்டுக் கொண்டு நிற்கும். அதில் போனால் தாமதவருகைதான். அதற்குமுன் கிளம்பும் பாண்டியன் பஸ் ஒன்றில் பெரும்பாலும் செல்வேன். வார ஓய்வு தவிர எல்லா நாளும் செல்வதால் அந்த நேர ஓட்டுனர், நடத்துனர்களுக்கு நான் ரொம்பப் பரிச்சயம். என்ன பயன்?

அந்த நேரங்களில் மெதுவாகத்தான் கூட்டம் நிரம்பும். எப்படி இருந்தாலும் முழு பஸ் நிரம்பாது. பாண்டியன் அரசுப் போக்குவரத்துக் கழகம் என்பதால் நேரத்துக்கு எப்படியும் எடுத்து விடுவார்கள். சில சமயம் அந்த ஒன்றரை மணி நேரம் புத்தகம் படித்துக் கொண்டே போவேன். சில சமயம் லேசான தூக்கம். பெரும்பாலும் 'சில்'லென்ற காலைக் காற்று முகத்தில் வீச பேருந்தில் பயணம் செய்யும்போது அதற்கிணையாக ஏதாவது எண்ணங்களோ அல்லது பஸ்ஸில் போடும் பாடல்களோ மனதை ஆக்ரமித்துக் கொள்ளும். கட்டபொம்மன் சிலை அருகே இருந்த பஸ் நிலையம் பெரியார் நிலையம் என்று அழைக்கப் பட்டது. இப்போது மாட்டுத் தாவணி என்ற விநோதப் பெயருடைய ஊருக்கு வெளியே உள்ள இடத்திலிருந்து பஸ்கள் கிளம்புகின்றன. நான் செல்லும் வெளியூர்ப் பேருந்துகள் அந்த பெரியார் பேருந்து நிலையம் எதிரே இருந்தது. இப்போதும் அங்கு பஸ் நிலையம் உள்ளது. ஆனால் வெளியூர் அல்ல என்று நினைக்கிறேன். அந்த நேரத்தில் பஸ் நிலையத்தில் டீக் கடை வியாபாரம்தான் பெரிதாக இருக்கும்.

ஒருநாள் பஸ் கிளம்பக் காத்துக் கொண்டிருந்தேன். ஓட்டுனரும் நடத்துனரும் பேசிக் கொண்டிருந்தனர். ஒரு நபர் என் அருகில் உள்ள நபரிடம் வந்தார். "சார்! நான் வெளியூரு...நேத்து நைட் மதுரை வந்தேன். ஒரு விசேஷத்துக்கு துணிமணி, சாமான்செட்டு எடுக்க வந்தோம். காசு அதுலேயே செலவு ஆய்டிச்சி...ஊர் திரும்ப காசு வேணும். அதனாலதான் இதை விற்கிறேன்..." என்று ஒரு துணி Bit டை நீட்டினார். இதில் ஏதோ ஏமாற்று இருக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். எனவே நான் சற்று தள்ளி நின்று கொண்டேன். "நல்ல பிட் சார், வாங்கிக்குங்க...வேற யார்ட்டயாவது காட்டினால் அள்ளிக்குவாங்க...என் தேவைக்குதான்..." என்று அவர் என் பக்கத்து நபரை நொழப்பிக் கொண்டிருந்தார். அவர் முதலில் மறுத்தார். சரி, விவரமான ஆள்தான் என்று நினைத்துக் கொண்டேன். அப்புறம் இவர் வற்புறுத்தல் அதிகமானது. அவர் மெல்ல தன் கையில் திணிக்கப் பட்ட அந்த பார்சலை கையில் பிடித்தார். 'ஆஹா...' என்று எண்ணிக் கொண்டேன். அவர் என் முகத்தைப் பார்த்தால், 'வேண்டாம்' என்பது போல் தலை அசைத்துக் காப்பாற்றலாம் என்பது என் எண்ணம். அவர் என்னை, என் முகத்தை கவனிப்பதாயில்லை.

சற்று நேரம் பொறுத்து 'விற்பனையாளர்' விலகிச் செல்ல, இவர் என் அருகே வந்து நின்றார். அவரைப் பார்த்து 'தப்பித்தாய்' என்பது போல ஒரு ஸ்மைல் அடித்தேன். விதியும் சிரித்தது. "வாங்கி இருக்கலாம்... விட்டு விட்டேன்..ச்சே.."என்றார். "இல்லைங்க... வாங்காம இருந்ததுதான் நல்லது" என்றேன். "ஏன்" - அவர். "இதில் எல்லாம் ஏமாற்று வேலை இருக்கு... துணி மட்டமாய் இருக்கும் அல்லது அளவு குறைச்சலாய் இருக்கும்.." என்றேன்... "இல்லை, துணி நல்ல துணிதான்...பார்த்தேனே..." என்றார். நடத்துனரும் ஓட்டுனரும் என்னை/எங்களைப் பார்த்துக் கொண்டே பஸ் முன்னால் சென்று டிக்கெட் போட ஆரம்பித்தார். "விட்டு விட்டேனே " என்று மீண்டும் புலம்பியவர் அவரைத் தேட ஆரம்பித்தார். அடுத்த பஸ் அருகில் வேறொரு ஆளை மடக்கிக் கொண்டிருந்த மேற்படி விற்பனையாளர் இவர் முகக் குறிப்பை பார்த்து மீண்டும் இவர் அருகில் வந்தார். "கடைசியா என்ன விலை சொல்றேப்பா?" என்றார் என் அருகு. "கடைசி விலை நூற்றைம்பது ரூபாய்"என்றார் வெளியூர். நிகழ்ச்சியில் எதிர்பாராத் திருப்பம்!

'சக பயணி' என்னிடம், "சார்! நூற்றைம்பது ரூபாய்தான்... வாங்கிக்குங்க...நல்ல Stuff.. " என்றார்! நான் அதிர்ந்து, "வேண்டாம்...நான் கேட்கவே இல்லையே.." என்றேன். "இல்லை சார், நல்ல துணிதான், எப்படி சொல்கிறேன் என்றால் நானே டெய்லர்தான்..தைரியமா (!) வாங்கிக்குங்க" என்று சொல்ல, நான், "அட, நான் உங்களையே வாங்க வேண்டாம்னு சொல்றேன்.. என்னைப் போய்...எனக்கு வேணாங்க..." என்றேன். இந்த எதிர்பாராத் திருப்பத்தை யூகிக்க முடியாததால் அதிர்ச்சியில் என்னிடம் பேச்சில் தயக்கம் தலை காட்டி இருக்க வேண்டும். இது வரை மௌனமாய் இருந்த 'விற்பனையாளர்' இப்போது வாய் திறந்தார்.."சரி விடு குரு...வேற ஆள் பார்க்கலாம்..." என்றவர் என்னைப் பார்த்து, "சார், வயசுப் பிள்ளையா இருக்கீங்க...உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? நீங்க வாங்கலைன்னா வுடுங்க...அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணி எங்க பொழைப்பை ஏன் கெடுக்கறீங்க..." என்று 'அன்புடன்' தோளில் அணைத்து "வாங்க டீ சாப்பிடலாம்" என்று எதிர்க் கடையை காட்டினார். நான் "வேண்டாம்" என்றேன். "பயப்படாதீங்க...வேற ஒண்ணும் பண்ண மாட்டோம்..சின்ன வயசு உங்களுக்குப் புரியலை...நாம எல்லாம் தோஸ்துதான்...கண்டக்டர், டிரைவர் லாம் இருக்காங்க..பயப்படாம வாங்க..தினமும் உங்களைப் பார்க்கறோமே...ஒண்ணும் பண்ண மாட்டோம்..ஆனா ஒண்ணு, இனிமே இப்படிப் பண்ணாதீங்க..."என்றார். அவர்களுடன் ஐந்தடி தூரத்தில் இருந்த டீக் கடைக்கு சென்று அவர்களுடன் டீ அருந்தினோம். நான் காசு எடுத்தும் என்னைக் கொடுக்க விடவில்லை அவர்கள்!

வாடிக்கை நடத்துனரிடம் வந்து "உங்களுக்குத் தெரியுமில்லே...சொல்லி இருக்கலாம் இல்லே..." என்றேன் ஆதங்கத்துடன். அவர், "அதான் ஒண்ணும் பண்ணலையே.. விடுங்க...நீங்க இப்போ போய்டுவீங்க... நாங்க தினமும் ஏழெட்டு ட்ரிப் அடிக்கணும் இல்லே...தவிர, விபரீதம் ஆனா வந்திருப்போம்..இதெல்லாம் சாதாரணம் சார்..." என்றார். எங்க மதுரைக்காரய்ங்க எப்பவுமே நியாயமானவயிங்கதேன் இல்லே...

18 கருத்துகள்:

  1. திக்..திக்..எப்படித்தான் தைரியமா போய் டீ குடிச்சீங்களோ தெரியலை.

    பதிலளிநீக்கு
  2. 'பின்னோக்கி'ப் பார்க்கும்போது இப்போ புன்னகை வந்தாலும் அப்போ திக் திக் தாங்க....

    பதிலளிநீக்கு
  3. அதான் அடி வாங்கலை இல்லே - விடுங்க! இதுல ஏமாந்த அனுபவம் இல்லீங்கோ! ஏமாறவிருந்த அனுபவம்தான் தெரிகிறது. இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் - நடிப்புக் கலை நமக்குத் தெரிந்திருந்தால் - தப்பிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  4. ஆகா...
    நல்ல டெர்ரராத்தான்யா இருக்கிங்க...வடிவேலு அடுத்த படத்துல இந்த பிட்ட யூஸ் பண்ணினாலும் பண்ணுவார்...ஜாக்கிரதை...
    எப்புடிங்க...
    சேம் டே 2 போஸ்ட்....ஹவ் இஷ் இட் பாஸ் ஸிபுல்???

    பதிலளிநீக்கு
  5. அட, உண்மை சம்பவம் கிருத்திகா... வடிவேல் ஊர்தானே....அதான் அதே காமெடி ஆய்டிச்சி...ரெண்டு போஸ்ட் என்ன, மனமிருந்தால் நாலு கூடப் போடலாம் இல்லே...

    பதிலளிநீக்கு
  6. ஆமா.. ஆமா.. ரொமம்ம்்ம்ம்ப நல்லவைங்க!!

    பதிலளிநீக்கு
  7. கலையரசன், யாரைச் சொல்லுறீங்க - நல்லவங்கன்னு? -- அடிக்காம விட்ட அவங்களைதானே?
    ஹி ஹி தமாஷு சார் நீங்க!

    பதிலளிநீக்கு
  8. ஸ்ரீராம் - இன்னமே யாராவது வத்திராயிருப்பு அப்பிடீன்னு சொன்னா - எனக்கு, வஸ்த்ர ஏய்ப்பு தான் ஞாபகம் வரும்!

    பதிலளிநீக்கு
  9. ரொம்பத்தான் தைரியம் உங்களுக்கு.அதுசரி இருக்கிறபடியாத்தானே எங்க மண்டையைப் போட்டு உடைக்கிறாப்போல பதிவெல்லாம் போடுறீங்க.எதுக்கும் கவனமா இருங்க.

    பதிலளிநீக்கு
  10. நன்றி ஹேமா... ஆனால் இது எப்பவோ நடந்த சம்பவம்தானே....அதனால் பயமில்லை. !

    பதிலளிநீக்கு
  11. என்னதான் நான் தமிழ் நாட்டிலேயே வருஷக்கணக்குல இருந்திருந்தாலும் இந்த மாதிரி ஊர்பக்கம் எல்லாம் போனதே இல்ல. அதனால எனக்கு நீங்க எழுதி இருக்கற ஊர் பெயரை படிக்கும்போதே விசித்திரமா, கொஞ்சம் 'ஐய்யோன்னு' ஆகி, இதுல இந்த மாதிரி ஏமாத்து வேலை வேற இருக்குன்னும்போது இன்னும் 'ஐயையோன்னு' ஆகி, இதெல்லாத்தையும் விட, அவங்களோட நீங்க போய் டீ குடிச்சத படிச்சபோது 'ஐயையையையோ' ஆயிடுச்சுங்க. எனக்கு எப்படி இருந்தாலும், உங்க அந்த 'கன்னா பின்னா' தைரியத்தை பாராட்டியே ஆகணுங்க!

    பதிலளிநீக்கு
  12. ஐயோ
    ஐயையோ
    ஐயையையோ!
    ஆஹா
    ஆஹா ஹா
    ஆஹா ஹா ஹா!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  13. நான் எதிர்பார்த்தது, அது நிஜமாகவே நல்ல துணியாக இருந்து வாங்காமல் விட்டு ஏமாந்திருப்பீர்கள் என்று. கடைசியில் ஜுனூன் சீரியல் மாதிரி ஏமாற்றுக்காரர்களின் நற்குணத்துக்கு ஒரு பதிவா!

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  14. //ஸ்ரீராம் - இன்னமே யாராவது வத்திராயிருப்பு அப்பிடீன்னு சொன்னா - எனக்கு, வஸ்த்ர ஏய்ப்பு தான் ஞாபகம் வரும்!//

    சுவாரஸ்யமான காமெண்ட்

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  15. ஜவஹர்,
    எங்கள் நன்றி.
    மீண்டும் எங்கள் நன்றி!

    பதிலளிநீக்கு
  16. சென்னை 11H பஸ்ஸில் நான் பயணம் செய்யும்
    போது என் பர்சை அயோத்தியா மண்டபத்திற்கு முன்பு
    பிக் பாக்கெட் அடித்து விட்டார்கள். எனக்கு என் பக்கத்தில் வந்த
    சபரிமலைக்கு செல்வதுபோல் உடை அணிந்த முரட்டு ஆசாமி
    மேல் சந்தேகம். நான் பஸ் ஸ்டாப்பில் இறங்கும் வழியில் இறங்கி
    உடனே ஏறும் வழியில் ஏறி அந்த ஆசாமியை பின் தொடர்ந்தேன்.
    அவன் உதயம் theatre பஸ் ஸ்டாப்பில் இறங்கினான் நானும் தெரியாமல் இறங்கி அவனை பின் தொடர்ந்தேன் அவன் தபால் ஆபீஸ்சில் நுழைந்து
    மறைவாக என் பர்சை கையில் எடுத்தான் நான் தைரியமாக அவன் முன்பு போய் நின்று" நீதானே பர்சை எடுத்தாய் கொடு" என்று பிடுங்குவதுபோல் முன்னேறினேன்
    என்னை சற்றும் எதிர்பார்க்காத அவன் பர்சைப்போட்டு விட்டு ஓடிவிட்டான்.
    என்னுடைய id கிரெடிட் கார்டுகள் driving லைசென்ஸ் ஆயிரம் ரூ எல்லாம் பிழைத்தது.


    சென்னை 11H பஸ்ஸில் நான் பயணம் செய்யும்
    போது என் பர்சை அயோத்தியா மண்டபத்திற்கு முன்பு
    பிக் பாக்கெட் அடித்து விட்டார்கள். எனக்கு என் பக்கத்தில் வந்த
    சபரிமலைக்கு செல்வதுபோல் உடை அணிந்த முரட்டு ஆசாமி
    மேல் சந்தேகம். நான் பஸ் ஸ்டாப்பில் இறங்கும் வழியில் இறங்கி
    உடனே ஏறும் வழியில் ஏறி அந்த ஆசாமியை பின் தொடர்ந்தேன்.
    அவன் உதயம் theatre பஸ் ஸ்டாப்பில் இறங்கினான் நானும் தெரியாமல்
    இறங்கி அவனை பின் தொடர்ந்தேன் அவன் தபால் ஆபீஸ்சில் நுழைந்து
    மறைவாக என் பர்சை கையில் எடுத்தான் நான் தைரியமாக அவன் முன்பு போய் நின்று" நீதானே பர்சை எடுத்தாய் கொடு" என்று பிடுங்குவதுபோல் முன்னேறினேன்
    என்னை சற்றும் எதிர்பார்க்காத அவன் பர்சைப்போட்டு விட்டு ஓடிவிட்டான்.
    என்னுடைய id கிரெடிட் கார்டுகள் driving லைசென்ஸ் ஆயிரம் ரூ எல்லாம் பிழைத்தது.

    பதிலளிநீக்கு
  17. மாலி - நீங்க ஒரு தரம் சொன்னா இரண்டு தரம் சொன்ன மாதிரியா?- அல்லது இரண்டு தரம் சொன்னா ....?

    பதிலளிநீக்கு
  18. நான் இரண்டு தடவை சொன்னது என் ஒரு வயது
    பேத்தியின் கை வண்ணத்தால் நடந்தது. Editor இன்
    கத்தரிக்கோலுக்கு வேலை வேண்டாமா?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!