சனி, 1 மே, 2010

ஜே கே 08 உடனுக்குடனான செயல்பாடு.


உங்கள் மனைவி, மக்கள், நீலவானம், மேகக்கூட்டம் எதனுடனானாலும் நீங்கள் தொடர்புடன் இருக்கும்போது எண்ணம் குறுக்கிடுமானால் தொடர்பு அறுந்து போகிறது.  எண்ணம் என்பது நினைவின் வெளிப்பாடு.   நினைவு என்பது ஒரு பிம்பம். பதிவு செய்யப்பட்ட உருவம். அங்கிருந்து நீங்கள் பார்க்கிறீர்கள். எனவே காண்பவருக்கும் காணப்படுவதற்கும் இடையில் ஒரு பிரிவு உண்டாகிறது. 

இதை நீங்கள் வெகு ஆழமாகப் பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். காண்பவரை காட்சியினின்றும் தனிமைப் படுத்துவதுதான் ஒருவர் இன்னும் அதிகமாக வேண்டும், அதிக நுகர்ச்சி வேண்டும், என்று இடைவிடாத தேடுதல் ஏங்குவதற்குக் காரணமாக இருக்கிறது.  இப்படியான ‘காண்பவர்’- அதாவது, அனுபவங்களை நாடும் ஒருவர், சரி தவறு என்று தணிக்கை செய்யும் ஒருவர், மதிப்பீடு செய்பவர், நியாயமா அல்லவா என்று சீர்தூக்கிப் பார்ப்பவர், கண்டிப்பவர் இருக்கும் வரை, அந்தந்தக் கணம் என்ன இருக்கிறதோ அதனுடன் உண்மையான தொடர்பு அற்றுப் போகிறது. 

உங்களுக்கு உடலில் வலி உண்மையான வலி உண்டாகும் போது, வலி நேரடியாக உங்களுக்கு இருக்கிறது.  வலி இருக்கிறது என்று கண்டு சொல்லிக் கொள்பவர் இல்லை.  காண்பவர் தனியே இல்லாததால் வலிக்கான நடவடிக்கை நேரடியாகவும் உடனுக்குடனும் இருக்கிறது.  கருத்தும் அதன் பின் செயலும் இல்லை.  நேரடியான செயல் மட்டும் தான் இருக்கிறது. வலி நேரடியாக உடல் அளவில் உணரப் பட்டது.  அதற்கான நடவடிக்கை உடன் தொடர்ந்தது.  நீங்கள்தான் வலி. வலிதான் நீங்கள்.  காண்பவரும் காணப்படுவதும் வேறு வேறு அல்ல என்பதை உணராத வரை, தெரிந்து கொள்ளாதவரை, புரிந்து கொண்டு ஆழமாக அறியப்படாதவரை, முழுதும் பிடிபடாதவரை, அறிவு பூர்வமாகவோ, தர்க்க ரீதியிலோ இல்லாமல் நேரடியாக உணரப் படாதவரையிலும் வாழ்க்கை ஒரு போராட்டமாக, எதிரெதிர் ஆசைகளினிடையே நடக்கும் முரண்பாடுகளாக, ‘எது வேண்டும்’ ‘எது இருக்கிறது’ இவற்றிடையே மோதலாகத்தான் இருக்கும்.  

ஒரு பூவையோ, ஒரு மேகக் கூட்டத்தையோ, எதையுமோ பார்க்கும்போது ஒரு ‘காண்பவராக’ இருக்கிறீர்களா என்பதைக் குறித்து நீங்கள் தெளிவாக உணர்ந்திருக்கவேண்டும்.  அப்போது உங்களுக்கு இது சாத்தியமாகும்.    

10 கருத்துகள்:

  1. படித்ததை முழுமையாக உணர்ந்து கொள்வதில் சற்றே கஷ்டமுள்ளது. அதற்கும் தீர்வை ஜே.கே அவர்களே சொல்லிவிட்டார்.






    காண்பவரும் காணப்படுவதும் வேறு வேறு அல்ல என்பதை உணராத வரை, ஒரு ‘காண்பவராக’ இருக்கிறீர்களா என்பதைக் குறித்து நீங்கள் தெளிவாக உணர்ந்திருக்கவேண்டும். அப்போது உங்களுக்கு இது சாத்தியமாகும்.

    பதிலளிநீக்கு
  2. /////காண்பவரும் காணப்படுவதும் வேறு வேறு அல்ல என்பதை உணராத வரை, ஒரு ‘காண்பவராக’ இருக்கிறீர்களா என்பதைக் குறித்து நீங்கள் தெளிவாக உணர்ந்திருக்கவேண்டும். அப்போது உங்களுக்கு இது சாத்தியமாகும்.////



    ....... நீங்கள் சொன்னா சரியா இருக்கும். நீங்கள் சொன்னது புரிந்த மாதிரியும் இருக்குது, புரியாத மாதிரியும் இருக்குது.
    ஓகே, கண்டு கொண்டேன்........... கவித்துவமான பதிவு. Are you talking about being an observer and observation?

    பதிலளிநீக்கு
  3. கொஞ்சம் குழ்ப்பமாதான் இருக்கு.. இன்னொரு தபா படிக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  4. நான்கு முறை வாசித்து ஓரளவு புரிந்து கொண்டேன்.

    //காண்பவரும் காணப்படுவதும் வேறு வேறு அல்ல என்பதை உணராத வரை, தெரிந்து கொள்ளாதவரை, புரிந்து கொண்டு ஆழமாக அறியப்படாதவரை, முழுதும் பிடிபடாதவரை, அறிவு பூர்வமாகவோ, தர்க்க ரீதியிலோ இல்லாமல் நேரடியாக உணரப் படாதவரையிலும் வாழ்க்கை ஒரு போராட்டமாக, எதிரெதிர் ஆசைகளினிடையே நடக்கும் முரண்பாடுகளாக, ‘எது வேண்டும்’ ‘எது இருக்கிறது’ இவற்றிடையே மோதலாகத்தான் இருக்கும். //

    இது சரியாகத்தான் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  5. சொல்லியிருக்கும் விஷயம் ஆழமானது.வலி உடம்பிலானாலும் மனதில் பட்டுத் தெறிப்பதால் உணர்தல் எம்மிடமே.எனவே நாங்கள்தான் வலி !
    வாழ்வும் இதுவழியே !

    சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறேனா ஜே.கே ?

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. பொதுவாக இது போன்ற சிந்தனைகள் ricochet off my average intellect (ricochet என்பதற்கு வளர்மதி கணேசன் அருமையான தமிழ்ச்சொல் கையாண்டிருந்தார், மறந்தே விட்டது).

    காட்சிக்கும் காண்பவருக்குமிடையிலான தொடர்புக்கும் வலியின் மேற்கோளுக்கும் பொதுவெதென்பது சுலபமாகப் புரிய மறுக்கிறது. ஜேகே என்ன சொல்லியிருப்பார்? காட்சிக்கும் காண்பவருக்கும் வேறுபாடு உள்ளது என்கிறாரா? இல்லை என்கிறாரா? வேறுபாடு இருப்பதை உணர வேண்டுமென்கிறாரா? இல்லாததை உணர வேண்டும் என்கிறாரா?

    இது என் கருத்து: காட்சிக்கும் காண்பவருக்குமிடையிலான தொடர்பு, ஐம்புலன்களில் ஒன்றுக்கு மேற்பட்டவை ஒரே நேரத்தில் பாதிப்பதால்/பாதிக்கப்படுவதால் ஏற்படுவது. அதனால் குழப்பத்துக்கும் துண்டிப்புக்கும் இயற்கையிலேயே ஏதுவாகிறது. காட்சி, காணப்படும் போதே தன்னிச்சையாகக் கூட மாறலாம். இது துண்டிப்பானாலும், காட்சி-காண்பவருக்கிடையே ஏற்பட்ட அந்தக்கண நேர ஒருமை மாறுவதேயில்லை. ஏற்பட்ட ஒருமை நிரந்தரம். மாறாக, வலிக்கும் அறிவு/மனதிற்குமிடையிலான தொடர்பு ஒரே ஒரு புலனால் ஏற்படுவடுவது. புறசக்தி புறத்தாக்கம் பற்புலன் என்றெதுவுமில்லை. அதனால் காட்சி-காண்பவர் வேறுபாடு இருப்பதாகத் தோன்றுவதில்லை. காட்சி என்று தனிப்படுத்த எதுவுமேயில்லை வலியைப் பொறுத்தவரை. வலியை மேற்கோள் காட்டி காட்சி-காண்பவரின் வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது பொருத்தமாக இல்லை.

    பெர்ட்ரேன்ட் ரசல் இதை இன்னொரு விதமாகச் சொல்கிறார். (ப்ளேடோவின் கருத்தை ரசல் இறக்குமதி செய்ததாகச் சொல்கிறார்கள்). மரணத்தை உதாரணமாக எடுத்துக்காட்டி காட்சி-காண்பவர் வேறுபாட்டைச் சொல்லியிருக்கிறார். செய்தியென்னவோ அதே தான். வேறுபாட்டை உணர்ந்தால் நடத்தையை செம்மைப்படுத்தலாமென்பது தான்.

    இன்னொரு அறிஞரின் இதைப் பற்றியச் சிந்தனையையும் ரசிக்க முடிகிறது. "நம் அகத்தேயிருக்கும் விருப்பு வெறுப்புகளை வைத்துப் புறத்தை எடை போடுகிறோம். நம்மை நாமே ரசமட்டமாக்கிக் கொள்வது இயல்பாக நடக்கிறது. ரசமட்டம் யோசிப்பதில்லை." ரசமட்டத்துக்கு விருப்பு வெறுப்பு உண்டோ? நம் அறிவு/மனம் ரசமட்டமாகும் பக்குவம் கிடைக்க வழியுண்டோ? பயிற்சியுண்டோ?

    ஹ்ம்ம்ம்..இலவச ஏஸ்ப்ரின் எங்கே கிடைக்கும்?

    பதிலளிநீக்கு
  8. //புகைப்படப் புதிர். யார் இவர்?//

    sent answer ..

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா2 மே, 2010 அன்று AM 6:47

    ஒன்றில் ஈடுபட்டு லயித்துப் பார்த்து பரவசப் படும் சமயம், “ நான் பார்த்து மகிழ்கிறேன், பரவசமாக இருக்கிறது “ என்று நாம் சொல்லிக்கொள்வதில்லை. அப்படிச் சொல்ல மனம் நாடும் கணமே அங்கு இரண்டறக் காணுதல் ஒழிந்து தான் பெற்ற இன்பத்தை வகைப் படுத்தி அறிவிக்கும் மனப் பாங்கு செயல் பட ஆரம்பிக்கிறது. எனவேதான் ஜேகே காண்பவர் காணுதல் வேறுபடும்போது அல்லது இடைவெளி உண்டாகும்போது உண்மையான காணுதல் அற்றுப் போகிறது என்கிறார். எடை போடுகிற, விருப்பு வெறுப்புகளுடன் ஒன்று சேர்த்து வைக்கிற மனம் தனக்குத் தானே அமைதி கொள்ளும்போது காண்பவர் வேறு காணப்படுவது வேறல்ல, காண்பவரே காணப்படுவதும். சற்றுப் புரிகிறாற்போல் இல்லை?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!