நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
ஞாயிறு, 31 ஜூலை, 2011
வெள்ளி, 29 ஜூலை, 2011
எழுத்துப் புதிர் - விடைகள்..
பதிவாசிரியர் நினைத்தது:
வல்லிசிம்ஹன் குண்டு மல்லிகையையும், ஜீவி அசோகமித்திரனையும், ஜெகேயை எல்லோரும், எஸ்ரா, பாலகுமாரனையும் எல்லோரும் கண்டுபிடித்து விடுவார்கள் என்று நம்பினோம். சுஜாதா / சாரு நிவேதிதா குழப்பம் வரலாம் என்று நினைத்தோம். அசோகமித்திரன் கதைக்கு டல்பதடோ பெயர் உதவும் என்றும், மலையாள வாடை நீல பத்மநாபனையும், கண்டுபிடிக்க உதவும் என்று நினைத்தோம். குண்டுமல்லிகைக் கதை மணியனோடு குழப்பம் வரும் என்று எதிர்பார்த்தோம். ஜேகே எங்கள் ப்ளாக்கில் வந்ததால் மொழிபெயர்ப்பாக இருந்தாலும் அந்த சப்ஜெக்ட் காட்டிக் கொடுக்கும் என்று எதிர்பார்த்தோம். அப்பாதுரை அரு ரா தவிர மிச்ச எல்லாம் கண்டுபிடித்து விடுவார் என்று எதிர்பார்த்தோம். சில்வியா பெயர் சுஜாதாவின் சில்வியாவை நினைவுபடுத்தும் என்று எதிர்பார்த்தது வீண் போகவில்லை! இதெல்லாம் போக, ஒவ்வொரு பகுதியையும் முன் பின் அறியாமல் படித்ததில் சாரம் என்னவாக இருக்கும் என்று ஒரு ஆர்வம் வரவில்லை? இதைப் பற்றி யாரும் ஒன்றும் சொல்லவில்லை.
புதன், 27 ஜூலை, 2011
எழுத்துப் புதிர் - எழுத்தாளர்ப் புதிர்!
எல்லா எழுத்தாளர்களுமே ஏதோ ஒரு வார்த்தையில், பாணியில், ஏதோ ஒன்றில் தன்னை வெளிப் படுத்தி விடுகிறார்கள். கடற்கரையில் காலார நடக்கும்போது வீசும் காற்றில் பறந்து வரும் ஒரு பேப்பரில் பெயரில்லாத ஒரு படைப்பை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதா.... அதே பீச்சில் கடலை வாங்கித் தின்று விட்டு அதைத் தூக்கி எறியுமுன் கசங்கல்களை சரி செய்து அதில் என்ன எழுதியிருக்கிறது என்று படித்த அனுபவமுண்டா? மளிகைக் கடையிலிருந்து பருப்பு கட்டி வந்த (முன் காலத்தில்! இப்போது எல்லாம் பிளாஸ்டிக் பாக்கெட்தானே..!) அப்போது படித்ததை யார் எழுதியது என்று ஒரு நிமிடம் யோசிப்போம் இல்லையா... அது போல ஒரு விளையாட்டு.... எல்லாமே சுலபமாக எடுத்திருக்கிறேன். அதாவது நான் சுலபமாக புத்தகத்தைப் பார்த்து எடுத்திருக்கிறேன்! அதைப் படிக்கும்போது யார் எழுதியிருப்பார்கள் என்று யூகிக்க முடிகிறதா..... இதில் யார் யார் எதை எதை யூகிப்பார்கள் என்று எனக்கு ஒரு கற்பனை இருக்கிறது!
எல்லோரும் எல்லா புத்தகத்தையும் அல்லது எல்லா எழுத்துகளையும் படித்திருக்க முடியாது என்பது சரி. ஆனால் இவர்களின் மற்ற படைப்புகள் இவர்களின் இந்த வரிகள் அடையாளம் காட்டுகின்றனவா? கண்டு பிடிக்க முடிகிறதா என்று பார்க்கும் ஆவல்தான்.
சில சமயம் எழுத்துகள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட முடியாத நேரத்தில் கதாபாத்திரங்கள் உதவலாம்! சில புகழ்பெற்ற கதாபாத்திரங்களை மறக்க முடிவதில்லையே... அட, அது மட்டுமில்லை. இது போட்டி இல்லையே... எனவே அந்த ஒரு பகுதியைப் படிக்கும்போது மனதில் எழும் கற்பனை நம்மை பல புதிய சிந்தனைகளுக்கு இட்டுச் செல்லலாம். அந்த குறிப்பிட்ட பகுதி சொல்லும் சாரத்தை ரசிக்கலாம்!
இனி கண்டுபிடிக்க வேண்டியவை கீழே ஒவ்வொன்றாக...!
1) "எப்போதுமே ஊருக்குப் போகும் மகிழ்ச்சியை விடவும் வீடு திரும்பும்போது கிடைக்கும் சந்தோஷமே அளப்பரியது. வீட்டைப் புரிந்து கொள்ளவே வெளியே போகிறேனோ என்றும் தோன்றுகிறது. உலகம் எண்ணிக்கையற்ற சாலைகளால் ஆனது. அவை பாம்பின் நாக்கைப் போல சீற்றத்துடன் துடித்துக் கொண்டே இருக்கின்றன..."
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
2) "கொஞ்ச நேரம் வெளியே வெட்டத்திலே போயி, சுத்த வாயுவை சுவாசித்து விட்டு வர' அவள் விரும்பும்போது தான் குறுக்கே நிண்ணால் ஒரு வித ஆங்கார வெறியோடு குழந்தைகளின் இளம் முதுகுகளை அவள் பதம் பார்ப்பது போன்ற அன்றைய அனர்த்தங்களுக்கு அது காரணமாகி விடும் என்று பேசாமல் இருந்து விடும் நிலைமை.
தான்தான் வரவர மனசின் போராட்டங்களாலும், உடம்பின் வியாதியாலும் குறுகிக் கொண்டே இருந்தோம்! அவள் மேனியில் நாள் செல்லச் செல்ல ஒரு மதர்ப்பும் கொழுப்பும் ஏறிக் கொண்டே இருந்தன.
அதைக் காண்கையில் ஒரு பயம்..... "
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
3) "ராஜி உன்னை நான் நேசிக்கிறேன். என்னால வண்ணமா பேச முடியாது. பேசத் தெரியாது எனக்கு. ஆனா ஒரு பெண்ணை மதிச்சி கல்யாணம் பண்ணி குடித்தனம் பண்ணத் தெரியும். நான் ஐயர் இல்லை. ஆனா எல்லா ஐயரையும் விட நான் உசத்தி. எங்கிட்ட ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. இந்த வீட்ல நான் சேந்துட்ட பிறகு மறந்தும் மாமிசம் சாப்பிட்டது கிடையாது. என் மேல உனக்கு இஷ்டம் இருந்து நம்பிக்கை இருந்தா இந்த காப்பியை எனக்குக் கொடு. இல்லைன்னா தாராளமா அந்த ஐயரிடம் எடுத்துண்டு போ. நானும் பட்டை அடிச்சிகிட்டு காலைல எழுந்து படத்து முன்னாடி சுத்தலாம். எனக்கு இதுல நம்பிக்கை இல்லை. நான் மனுஷாளை நம்பறேன், மனுஷாளை மதிக்கிறேன். பிறகு உன் இஷ்டம்..." ராஜி தவித்தாள். கொல்லைக் கதவு பார்த்தாள். திரும்பி முற்றம் நோக்கினாள். வயிறு குழைந்தது. தொடை தசைகள் அசைந்தன. கால் கணுவின் வழியே நிற்கும் வலிவு கீழிறங்கியது...."
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
4) "நான் மண விழாக்களுக்கோ மரண வீடுகளுக்கோ செல்வதில்லை. இரண்டுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. மண விழா, உயிர் உற்பத்திக்காக நடைபெறும் சடங்கு; மரணம், உயிரின் விடுதலை. மண விழாக்களுக்குச் செல்லாததன் காரணம், தம்பதியர் எப்போது விவாகரத்து செய்யப் போகிறார்களோ என்று மனதுக்குள் எழும் அபத்த உணர்வு. மரண வீடுகளைத் தவிர்ப்பது, அங்கே கிடக்கும் பூத உடல் ஏற்படுத்தும் அச்சத்தினால். பிறந்தோர் யாவருக்கும் மரணம் நிச்சயம் என்பது தெரிந்ததே என்றாலும், அவ்வளவு கிட்டத்தில் மரணத்தைப் பார்க்கும் போது எழும் அச்ச உணர்வு அலாதியானது......."
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
5) "ஸில்வியாவின் பெயர் நினைவில் இருந்தது.அவளுடைய முகமும் நினைவில் இருந்தது. உண்மையில் அவள் பயன்படுத்திய பெர்ஃபியூம் கூட நினைவில் இருந்தது.இருபத்திரண்டு ஆண்டுகள் உருண்டு சென்றபோது கூட அவள் அன்று வந்த அழுகையை அடக்க மாட்டாமல் மூக்கை உறிஞ்சிய காட்சி இன்னும் பசுமையாக இருக்கிறது. 'இருக்கிறது' என்று சொல்வது தவறாகலாம். எங்கோ புதைந்து கிடந்தது, நேற்று டல்பதடோ முகத்தைப் பார்த்தவுடன், எங்கோ அதலபாதாளத்திலிருந்து கிளம்பி இப்போது மனது முழுதும் நிரம்பி இருக்கிறது. ஆனால் நான் விமான நிலையம் சென்றது இன்னொரு முகத்தை என் நினைவுக்குக் கொண்டு வருவதற்கு. இருபத்திரண்டு ஆண்டுகள் என் கண்முன் இருந்தும் என்னால் மனத்தில் உருவகப்படுத்திக் கொள்ள முடியாத என் மகளின் முகத்தை என் எண்ணங்களிடையே கொண்டு வருவதற்கு. இங்குதான் அவளை நான் கடைசியாக உயிருடன் பார்த்தது.இங்குதான் அவளுடைய பாதி கருகிய சடலத்தை நான் கடைசியாகவும் முதலாகவும் பார்த்திருக்கக் கூடியது."
6) "பிச்சுமணி! உன் தாத்தாவுக்கு இருப்பதெல்லாம் நீ ஒருவன்தான்.அவரைப் போல உன் மீது அன்போ உன் எதிர்கால நன்மைகளில் அக்கறையோ வேறு யாராலும் வைக்க முடியாது. அதனால் உன் அந்தஸ்துக்கும் வயசுக்கும் உன் எதிர்காலத்துக்கும் சரியான ஒரு பெண்ணைத்தான் நீ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், பொருத்தமில்லாத பெண்ணை நீ நாடக் கூடாது என்றும், அவர் (ராமதுரை) நினைப்பதும், அதற்காக உன்னோடு சண்டை பிடிப்பதும் இயற்கைதான். அது நியாயந்தான்! அவரைப் போலவே நானும் நினைக்கிறேன். ஆகவே என்னை முன்னிட்டு உங்களுக்குள் இப்படி ஒரு சண்டை மூன்டிருக்கவே வேண்டியதில்லை"
"சரி உமா! என் கல்யாணத்துக்கு உங்களுக்கு ஒரு இன்விடேஷன் அனுப்ப வேண்டும் என்றோ, என் தாத்தா நிச்சயித்த பெண்ணையே நான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்றோ நீங்கள் ஏன் சொல்லவில்லை?"
7) "பெரும்பாலான கதைகள் ஒரு பேசப் பட்ட வாக்கியத்தில் முடிகின்றன.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
வாழ்க்கையின் அபத்தத்தை சுட்டிக்காட்டி ஒரு அபத்தத்தில் முடிகின்றன. சிறுகதை ஒரு தனிப்பட்ட சுருக்கமான அனுபவத்தைப் பேசுகிறது. அன்றாட அலுப்பு வாழ்க்கையில் உயிரின் புதிர் சட்டென்று புரியும் கணம் ஒன்றை அது சொல்லும். அந்த கணத்தை ரெவேலேஷன் அல்லது வெளிப்பாடு அல்லது epiphany என்கிறார்கள். அவதாரம், அற்புதத் தோற்றம் என்று பலதும் சொல்கிறார்கள். இது zen தத்துவத்திலும் உண்டு. Satori என்பார்கள்"
8) "தெரியாததைப் பற்றி பயப்படுவதாக நீங்கள் கூறுகிறீர்கள். நாளைய தினத்தின் தெரியாததைப் பற்றி, அல்லது மெய்யாகவே தெரியாததைப் பற்றி உங்களுக்குத் தெரியாத ஏதோ ஒன்றைப் பற்றி நீங்கள் பயப்படுகிறீர்களா? அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒன்றின் மீது பற்று வைத்து அதைப் பற்றி நீங்கள் பயப்படுகிறீர்களா? ஆகையால் தெரிந்ததை விடுவதற்கு பயப்படுகிறீர்களா? நீங்கள் இறப்பைக் கண்டு பயப்படுகையில் தெரியாததைக் கண்டு பயப்படுகிறீர்களா? அல்லது உங்கள் இன்பங்கள், உங்கள் குடும்பம், உங்கள் சாதனைகள், உங்கள் வெற்றி, உங்கள் மேஜை, நாற்காலி போன்ற தெரிந்த விஷயங்கள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வருவதைக் கண்டு பயப்படுகிறீர்களா? தெரியாத ஒன்றைப் பற்றி ஒருவர் எப்படி பயப்பட முடியும்? தெரியாததைப் பற்றி பயப்படும் உங்கள் எண்ணம் தெரிந்த தளத்திற்கு அதை எடுத்துச் செல்ல விரும்புகிறது. அதனால் எண்ணம் கற்பனை செய்யத் தொடங்குகிறது. ஆகையால் உங்கள் தெய்வம் உங்கள் கற்பனையின் அல்லது பயத்தின் உற்பத்தி. ஆகையால் தெரியாததைப் பற்றி அனுமானிக்க வேண்டாம். தெரிந்ததைப் புரிந்து கொள்ளுங்கள். தெரிந்ததினின்றும் விடுபடுங்கள்."
திங்கள், 25 ஜூலை, 2011
உள் பெட்டியிலிருந்து 7-2011
சவாரி? சமாளி!
"நீயும் உன் மனைவியும் ஒற்றுமையாக சண்டை போடாமல் இருக்கிறீர்களே... எப்படி?"
"அதுவா...இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் ஹனிமூன் சென்றபோது நானும் என் மனைவியும் குதிரையில் சவாரி சென்றோம். என் மனைவி சென்ற குதிரை சண்டித்தனம் செய்து குதித்ததில், அவள் கீழே விழுந்து விட்டாள். மண்ணைத் தட்டிக் கொண்டு எழுந்த அவள் குதிரையின் பின்பக்கத்தில் தட்டி "இது உனக்கு முதல் வார்னிங்" என்று ஏறி உட்கார்ந்தாள். இரண்டாம் முறையும் இதே நடந்து அவள் இரண்டாவது வார்னிங்கும் கொடுத்தாள். மூன்றாவது முறை இது நடந்ததும் ஒரு துப்பாக்கியை எடுத்து குதிரையை சுட்டு விட்டாள். "அடப் பாவி...உனக்கு இரக்கமே இல்லையா...குதிரையை சுட்டு விட்டாயே" என்றேன்..என்னை ஆழமாக உற்று நோக்கியவள் "இது உங்களுக்கு முதல் வார்னிங்" என்றாள். அப்போதிலிருந்து இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்..."
------------------------------ ---------------
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்!
"என்னம்மா நீ சொல்றே நாம் எல்லோரும் கடவுளால் படைக்கப் பட்டோம்னு...அப்பா சொல்றார், நாம் எல்லோரும் குரங்கிலிருந்து வந்தோம்னு.... எதும்மா உண்மை"
ரெண்டும்தாம்பா...நான் சொன்னது எங்க வீட்டுப் பக்கம் பற்றி... அவர் சொல்வது அவர் உறவுகள் பற்றி..."
------------------------------ -------------
ஸ்மைல் ப்ளீஸ்!
ஒரு இடி மின்னல் மழை நாளில் மகன் பயப்படப் போகிறானே என்று பள்ளிக்கு அழைத்து வரச் சென்ற தாய், அவன் ஒவ்வொரு மின்னலுக்கும் வானத்தைப் பார்த்து புன்னகைப்பது கண்டு காரணம் கேட்டாள்.
"கடவுள் என்னை போட்டோ எடுக்கறார்மா...நான் அழகாய் சிரித்து, போஸ் கொடுக்க வேண்டாமா?"
------------------------------ ------------
ஓடிய ஓட்டமென்ன?
வீட்டை விட்டு ஓடிப் போன மகளால் துவண்டிருந்தது குடும்பம். மூன்று நாட்களுக்குப் பின் திரும்பி வந்த மகளிடம் தந்தை கோபமாய் கேட்டார்,
"நோக்கியா சின்ன பின் சார்ஜர்"
------------------------------ --------------
"ஏண்டி... அந்த விஞ்ஞானியோட வீட்டை விட்டு ஓடிப்போனியே..., ஏண்டி திரும்பி வந்துட்டே...?"
"பாவிப் பய திரும்பி அழைச்சுட்டு வந்துட்டு 'சோதனை ஓட்டம்'னுட்டாண்டி"
------------------------------ ------------
அவள் எப்போதுமே அவனுக்கு 'ஐ லவ் யூ', 'ஐ மிஸ் யூ'ன்னுட்டெல்லாம் மெசேஜ் அனுப்பிகிட்டு இருப்பாள். நேரம் காலம் கிடையாது.
ஒரு நாள் அபபடி நள்ளிரவு அவளிடமிருந்து வந்த மெசேஜ். தூக்கத்தினால் இவன் படிக்காமல் விட்டு விட்டான்.
மறுநாள் காலை அவள் அம்மா கிட்டயிருந்து அவனுக்கு கால் வந்தது.
"என் பொண்ணு நேத்து நைட் ஒரு ஆக்சிடனட்ல செத்து போயிட்டாப்பா..."
இவன் பதறிப் போய் நைட் படிக்காம விட்ட மெசேஜை எடுத்துப் படிச்சான்.
"டியர்...நான் உங்க தெரு முனைல தான் இருக்கேன்...ஆக்சிடன்ட் ஆயிடுச்சி ...இனி பிழைக்க மாட்டேன். கடைசியா ஒரு தரம் உன்னைப் பார்க்கணும் போல இருக்குடா... வாடா ப்ளீஸ்... "
நீதி: அப்போ கூட கால் பண்ணாம மெசேஜ்தான் அனுப்பியிருக்கிறாள்!
------------------------------ ------------------
வடை போச்சே...!
என்ன பயன்? வடை போச்சே....
------------------------------ -------------------
ஞாயிறு, 24 ஜூலை, 2011
வெள்ளி, 22 ஜூலை, 2011
இருபத்தொன்று முதல், முப்பது வரை ...
இருபத்தொன்று முதல், முப்பது பாயிண்டுகள் வரை பெற்றவரா?
உங்கள் நண்பர்கள் உங்களை உடல் உழைப்புக்கு அஞ்சாதவராக, ஆனால் ஒரு குழப்பவாதியாக - ஒன்றும் இல்லாத விஷயங்களுக்கு அதிகம் அலட்டிக் கொள்பவராகப் பார்க்கின்றார்கள். முன்ஜாக்கிரதை முத்தண்ணா - ஆரஞ்சுப் பழத்தை உரிப்பதாக இருந்தால் கூட, அதற்கான செய்முறைப் பயிற்சிப் புத்தகம் ஏதாவது நூலகத்தில் இருக்கின்றதா என்று பார்ப்பீர்கள். நீங்கள் எந்த செயலையாவது உத்வேகத்தோடு தன்னிச்சையாக விரைவாகச் செய்துவிட்டீர்கள் என்றால் அதைக் கண்ணுறும் உங்கள் நண்பர்கள் மயக்கமாகிக் கீழே விழுந்து விடுவார்கள்! அவர்கள் பார்வையில், நீங்கள் எந்த ஒரு செயலையும் பல கோணங்களில் ஆ ஆ ஆ ரா ய் ய் ய் ந்து - கடைசியில் - அந்த செயலை செய்யாமல் இருப்பதே உத்தமம் என்று சும்மா இருந்து விடுபவர்! அவ்வாறு விடுவதற்கு - உங்கள் எச்சரிக்கை உணர்வே காரணம் என்று உங்கள் நண்பர்கள் நினைக்கின்றார்கள்.
மிஸ்டர் எக்ஸ் பற்றி சொல்கிறேன். இவருடைய ஸ்கோர் என்ன என்று உங்களால் யூகிக்க முடிகிறதா?
உங்களுடன் கை குலுக்கினால், தனியாக அறையின் ஒரு மூலைக்குச் சென்று தன்னுடைய ஐந்து விரல்களும் சரியாக உள்ளதா என்று எண்ணிப் பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு 'செக்'கைக் கிராஸ் செய்வதாக இருந்தால் கூட ஜாக்கிரதையாக, இரண்டு பக்கங்களும் பார்த்துக் கொண்டே இருப்பார். ஒரு டி வி வாங்க வேண்டும் என்று கடைக்குப் போனார். அப்பொழுது காலை மணி பதினொன்று. ஒவ்வொரு மாடலாக அலசி ஆராய்ந்து, எதை எடுப்பது, எதை விடுப்பது என்று குழம்பி, கடைசியில் இரவு பதினொரு மணிக்கு, கடையை மூட வேண்டிய நேரம் வரும்பொழுது, விற்பனையாளரிடம், 'நாளைக்குக் கடை எப்போ திறப்பீங்க?' என்று கேட்டார்...
வியாழன், 21 ஜூலை, 2011
இருபத்தொரு புள்ளிகளுக்குக் கீழே என்றால் ...
வாசகர்கள், எங்கள் ப்ளாக் வெளியிட்ட, முந்தைய பதிவுகள்
ஆகிய இரண்டு பதிவுகளை படித்து, பாயிண்டுகளைக் கணக்கிட்டு வைத்திருப்பீர்கள் என்று நினைக்கின்றோம்.
இப்போ படிப் படியாக - பெற்ற பாயிண்டுகளும், அவர்களை மற்றவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதையும் பார்ப்போம்.
மறுபடியும் நாங்க சொல்வது என்னவென்றால் - இதில் உயர்வோ தாழ்வோ எதுவும் கிடையாது. இது, மற்றவர்கள் பார்வையில், நீங்கள் எப்படிப் பட்டவராகக் கானப்படுகிறீர்கள் என்ற ஒரு மதிப்பீடு. அவ்வளவுதான்.
நீங்கள் இருபத்தொரு புள்ளிகளுக்குக் கீழே பெற்றவராக இருந்தால் .....
மற்றவர்கள் உங்களை, வெட்கமுறுகிற, தயக்க இயல்புடையவராகவும், கூச்ச சுபாவம் உள்ளவராகவும் பார்க்கின்றார்கள். எளிதில் எந்த முடிவுக்கும் வர இயலாதவர் என்று உங்களை நினைப்பார்கள். நீங்க தனித்து செயல்படுவது மிகவும் கடினம் என்றும் உங்கள் தேவையறிந்து உங்களுக்கு உதவுவதற்கு யாரேனும் வேண்டும் என்று எதிர்பார்க்கும் குணம் உள்ளவராகவும் தோற்றமளிக்கின்றீர்கள். நான் எதிலும் பட்டுக் கொள்ளமாட்டேன், என்னை யாரும் எதற்கும் தொந்தரவு செய்யாதீர்கள் என்பது நீங்கள் மற்றவர்களுக்கு உணர்த்தும் செய்தி. இல்லாத பிரச்னைகளை பெரிதாக்கி எப்பொழுதும் கவலைப் படுபவராக காணப்படுகின்றீர்கள். சிலர் உங்களை ஒரு அறுவை மன்னனாகக் காணக் கூடும். ஆனால், உங்களை நன்கு அறிந்து வைத்திருப்பவர்களுக்கு மட்டும் நீங்கள் அப்படிப்பட்டவர் இல்லை என்பது தெரியும்.
திங்கள், 18 ஜூலை, 2011
காதல் மீடியா கேஸ் நித்யா நடனம் பொதுஜனம் -வெட்டி அரட்டை
தினமலரில் சமீபத்தில் ரசித்த ஜோக். ராகுல் காந்தி திடீர் திடீரென உத்தரப் பிரதேசத்தில் நுழைந்து ஏர் பிடிக்கிறேன், கூழ் குடிக்கிறேன், ஏழைகளுடன் குடிசையில் தங்குகிறேன் என்று ஃபிலிம் காட்டிக் கொண்டிருப்பதை கிண்டலடிக்கும் ஜோக். "சீக்கிரம் கூழைக் குடிச்சித் தொலை.. ராகுல் அடுத்த தெரு கிட்ட பாத யாத்திரை வந்துட்டாராம்.." நியூஸ் சானல்களுக்கு ராகுல் ஃபாலோ அப் நல்ல தீனி.
தயாநிதி ராஜினாமா செய்த நாளில் மற்ற அனைத்து சேனல்களும் அதைச் சொல்ல கலைஞர் டிவியில் மட்டும் 'பிரபுதேவா ரமலத் விவாகரத்துக்கு முக்கியத்துவம் தந்த அளவு இதைப் பற்றி ஒரு வரி கூட கிடையாது! தி மு கவுக்கு இரண்டு இடம் நிறுத்தப் பட்டுள்ளது என்கிறது காங்கிரஸ். பிரச்னை இல்லாமல் இருக்க வேண்டுமானால் அவர்களுக்குக் கொடுக்க புதிய துறைகள் உருவாக்கலாம். அறிக்கைத்துறை, சமாளிப்புத்துறை, இப்படி...
"மீடியாக்கள் ராஜ்ஜியம் இந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில் நடக்கிறது... யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்தலாம்...தயாநிதி விதிவிலக்கல்ல" என்பது கலைஞரின் கருத்து. கலைஞர் டிவி, சன் டிவி மீடியாக்கள் இல்லையா... இவர்கள் செய்யாததா... இது ஒருபுறமிருக்க இதில் ஓரளவு நியாயம் இருக்கிறது.
சமீபத்தில் அன்னா ஹசாரே பாபா ராம்தேவ் ஆகியோருக்கு மீடியாக்கள் தந்த முக்கியத்துவம் ஒரு யோக்கியமான காரணத்துக்காக (கங்கையைக் காப்பாற்றுங்கள்) இந்த வருடம் பிப்ரவரி முதல் உண்ணாவிரதம் இருந்து யாராலும் கவனிக்கப் படாமல் உயிர் நீத்த சுவாமி நிகமானந்தா பற்றி செய்தி எங்காவது வெளியில் வந்ததா... துக்ளக்கிலும் கல்கியில் ஞானியும் சொல்லியிருக்கிறார்கள். சம்பவம் நடந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் பா ஜ க வும் கண்டு கொள்ளவில்லை, காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை, மீடியாக்களும் கண்டு கொள்ளவில்லை.
ஆனால் எல்லோரும் கண்டு கொண்ட ஆட்டம் ஒன்று உண்டு! ராம்தேவின் நள்ளிரவு போராட்டக் கலைப்புக்கு கண்டனம் தெரிவித்த நிகழ்வில் பி ஜே பியின் சுஷ்மா ஸ்வராஜ் நடனமாடியது செய்தியாகியதாம். தேசபக்திப் பாடல்களுக்குத்தானே ஆடினேன் என்ன தவறு என்றாராம் அவர்! ஆனால் நடுத்தர மக்கள் உண்மையிலேயே ஆடிப் போய்விட்டார்கள் கேஸ் சிலிண்டர் அநியாய விலை ஏற்ற விவரம் கேட்டு.
பத்மநாப சுவாமியின் நகைப் பொக்கிஷத்தை உலகுக்கு காட்டிக் கொடுத்த சுந்தரராஜன் காலமாகி விட்டாராம். 70+ வயது. இயற்கை மரணமாகத்தான் இருக்கும். இவர் இந்திராகாந்திக்கு ஆலோசகராக இருந்தவராம். கோவிலுக்கு வெகு அருகிலேயே அமைந்துள்ள இவர் வீடு நோக்கி தினமும் ஒரு எதிர்ப்பு ஊர்வலம் நடந்ததாம். தெருவில் எதிர்ப்படுவோர் எல்லாம் இவரைத் திட்டிக் கொண்டே இருந்தார்களாம். இனி அதற்கெல்லாம் தேவை இல்லை. அவரை எதிர்த்து குதித்துக் கொண்டு இருந்தவர்கள் அடங்கி விட்டாலும் ....
பிடதி ஆஸ்ரமத்தில் குருபூர்ணிமா அன்று நடந்த நித்யானந்தரின் புவி ஈர்ப்பு விசையை எதிர்க்கும் நிகழ்ச்சி அல்லது நடனம் எல்லா சேனல்களிலும் ஒளி பரப்பப் பட்டது. உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் 'நம்பி' தலையை உயர்த்தி யோகாவின் அரைமண்டியிட்ட போஸில் அப்படியே எழும்பிக் குதிக்கத் தொடங்கியது கண் கொள்ளாக் காட்சி! ரஞ்சியும் இருந்தார். சும்மா இருந்தவர் நித்தியானந்தா சைகை காட்டியதும் அவரும் ஒரு முறை முயற்சித்தார். ஒரு நிருபர் எதிர்த்ததையும் பார்க்க முடிந்தது. உச்சகட்ட பரவச நிலைக்குப் போன ஒரு பெண்மணி அந்தக் கால பாம்பு டான்ஸ் போல ஆடத் தொடங்கி தரையில் விழுந்து நெளிய அருகில் சேரில் அமர்ந்திருந்த ஒரு வயதான பெண்மணி அதைப் பார்த்த பார்வையில் அவர் கேலியாகப் பார்க்கிறார் என்று நம்பத் தொடங்கிய கணத்தில் அவர் உடம்பிலும் அதிர்வுகள் தொடங்கி, பாம்பு டான்சுக்கு ரெடியானதைப் பார்க்க முடிந்தது. தெய்வீகப் பரவச நிலை என்று இதை ஏற்றுக் கொண்டால் கூட - மனிதம் என்பதே சற்றும் இல்லாத சில நிகழ்வுகளையும் வருத்தத்துடன் சொல்லவேண்டி உள்ளது.
ஓரிரு வருடங்களுக்கு முன்னால் அமைச்சர்கள் தலைமைச் செயலர் எதிரிலேயே ஒரு போலீஸ் ஆபீசர் வெட்டிக் கொல்லப் பட்டதைப் பார்த்தோம். உதவி கேட்டு அவர் எழுந்து எழுந்து அலறியும் யாரும் பக்கத்திலேயே போகவில்லை அப்போது. அதே போல ஒரு காட்சி சென்ற வாரம் கோவையில் அரங்கேறியது. 'குடிமகன்கள்' இடையே நடந்த சண்டையில் பைக்கில் மோதி கீழே தளளி அடித்துத் துவைத்து, தலையில் கல்லைப் போட்டு கொல்லுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பெரிய கூட்டமான பொது ஜனம்...! cctv யில் ரெகார்ட் ஆனதை சேனல்களில் தமிழ்பட காட்சி போல காட்டிக் கொண்டிருந்தார்கள். பக்கத்திலேயே போலீஸ் ஸ்டேஷன் வேறு இருந்ததாம். ஏன் இந்தக் கொடுமையை பார்த்துக் கொண்டிருந்த பொது ஜனத்தில் ஒருவர் கூட தட்டிக் கேட்கவோ தடுக்கவோ முன் வரவில்லை? சிக்னல் விழுந்ததும் ஏதோ ரோடில் பிச்சை எடுப்பவர்களைத் தாண்டிச் செல்வது போல வாகனங்கள் தங்கள் வேலையைப் பார்க்க விரைந்தது ஏன்? கலிகாலம்.
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால் ...
ஞாயிறு, 17 ஜூலை, 2011
சனி, 16 ஜூலை, 2011
K J Y - M S V -M G R
நேற்று, 'நாளை நமதே' படம் ஏதோ ஒரு சேனலில் போட்டார்கள். ஹிந்தி யாதோங்கி பாராத்தைத் தழுவி எடுக்கப் பட்ட படம். யாதோங்கி பாராத் பார்த்து விட்டு இதைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது. குறிப்பாக எம் ஜி ஆர் சொல்லும் 'ஓ ஐ ஸீ..' காட்சிகளிலும், கடைசிக் காட்சியில் எம் ஜி ஆர் ஓடும் ஸ்டைல் மற்றும் நடந்து கொண்டே 'ஓடு...ஓடு...உலகத்தின் எந்த மூலைக்கு வேணும்னாலும் ஓடு...' வசன உச்சரிப்பிலும்...!
முதலில் பிராண நாதா பிரேமா ஈஸ்வரி வசன காலம். 'இனி ஒரு பெண்ணை நான் மனதாலும் நினையேன்...' டி ஆர் எம் குரல் கூட மனதில் கேட்கிறது! பிறகு 'ஓ ஐ அம ஸாரி...' போன்ற ஆங்கில வசனங்கள்...(இதற்கு கல்யாணப் பரிசு தங்கவேலு குரல் கேட்கிறது) அப்புறம் நாயகனோ நாயகியோ ஒரு கோபமான காட்சியில் 'கெட் அவுட்' என்று முதலில் மெதுவாகவும், அடுத்து எதிர் பார்ட்டி இன்னும் என்னவோ பேச முற்பட, குரலை உயர்த்தி கையை நீட்டி' ஐ ஸே யூ கெட் அவுட்..' என்று கத்துவதும் பல படங்களில் இடம் பெறும் வழக்க சீன்கள்! அப்புறம் கதாநாயகன்கள் திடீரென ஆங்கிலம் பேசி புல்லரிக்க வைக்கும் காட்சிகள். ஆனால் இதில் எம் ஜி ஆர் அவப்போது நடுவில் ஐ ஸீ சொல்வார். எங்கள் கேசெட் கடைக் காரர் வசனத்துடன் பாடலை பதிந்து தருகிறேன் என்று இந்த மூன்று பாடல்களையும் பதிந்து தந்த போது இடத்தை வேஸ்ட் செய்து விட்டாரே என்று கோபப் பட்டேன். 'அந்த இடத்தில் இன்னும் ஒரு பாடல் பதிந்திருக்கலாமே மாதவராவ்...'
படம் சிரிப்பை வரவழைத்தாலும் ஜேசு அண்ணாவும் எம் எஸ் வீயும்
ஏமாற்றவில்லை. அந்தப் படத்தில் இந்த மூன்று பாடல்களும் ரசிக்க வைத்தன.
ஜேசு அண்ணா அங்குதான் சிரிக்க வைக்கவில்லையே தவிர, இங்கு அபபடி அல்ல. பாடல் நல்ல பாடல்தான். ஆனால் பிள்ளைத் தமிழ் என்பதை 'பில்லைத் தமிழ்' என்று பாடி புன்னகையுடன் ரசிக்கவைத்தார். அது தப்பு என்று தெரிந்தாலும் நண்பர்கள் பாடும் போது பில்லைத் தமிழ் என்றே பாடினார்கள்! இன்னொரு பாடலில் திருக்கோவிலை தெருக்கோவிலாக பாடியிருப்பார். இங்கு வரும் பாடல் ஊருக்கு உழைப்பவன் படத்தில் வரும் பாடல். எம் ஜி ஆர் படம். அதே எம் எஸ் வி. இது கூட 'ஹம்சக்கல்' என்ற ஹிந்திப் படத்தின் தமிழ் வடிவம்.
அதே படத்தில் குழந்தையை தூங்க வைக்க இன்னொரு ஜேசு பாடல்.
வியாழன், 14 ஜூலை, 2011
என்ன பதில்? எவ்வளவு பாயிண்டுகள்?
ஏற்கெனவே விடை அளித்தவர்கள், உங்கள் விடைகளுக்கான மதிப்பீடு சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ளவும்.
விடைகளைக் குறித்து வைத்துக் கொண்டு இன்னும் எங்களுக்கு அனுப்பாமல் இருப்பவர்கள், உங்களுக்கு வருகின்ற மொத்த மதிப்பெண் என்ன என்பதை (மட்டுமாவது) பின்னூட்டத்தில் பதியவும்.
உங்கள் விடைகளுக்கு நீங்கள் பெற்ற மொத்த மதிப்பெண்களை வைத்து, மற்றவர்கள் பார்வையில் நீங்கள் என்னவாகத் தெரிகின்றீர்கள் என்பதை விரைவில் ஒரு பதிவாக போடுகிறோம்.
செவ்வாய், 12 ஜூலை, 2011
நீங்கள் எப்படிப்பட்டவர்?
உன் நண்பர்களைக் காட்டு, நீ யார் என்று சொல்கிறேன் என்று ஓர் அறிஞர் கூறியதாகப் படித்திருக்கின்றோம்.
நீ படிக்கும் புத்தகங்கள் என்ன, அவற்றைக் கூறு, நான் உன்னைப் பற்றிக் கூறுகின்றேன் என்று கூட யாரோ கூறியிருக்கிறார்கள்.
நண்பர்கள் இல்லை, புத்தகங்கள் படிப்பதில்லை என்றெல்லாம் கூறி நீங்கள் எங்களிடமிருந்து தப்பிக்க முடியாது.
அன்றாட வாழ்க்கையில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம், எப்படி உணர்கிறோம் ஆகியவற்றை வைத்துக் கொண்டே, நம்மைச் சுற்றி இருப்பவர்கள், நம்மை எந்த வகை மனிதராகப் பார்க்கிறார்கள் என்பதை துல்லியமாகச் சொல்லிவிடலாம்.
இங்கே, பத்துக் கேள்விகள் கேட்டு, அவற்றிற்கு தேர்ந்தெடுக்க, சில பதில்களையும் கொடுத்துள்ளோம். இவற்றுக்கு, இந்த இரண்டாயிரத்துப் பதினொன்றாம் ஆண்டில், இதுவரை உங்கள் அனுபவப்படி, உண்மையான பதில்களைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் முன்காலத்தில் எப்படி இருந்தீர்கள் - அல்லது எதிர்காலத்தில் எப்படி இருக்க விரும்புகிறீர்கள் என்பதை எல்லாம் உங்கள் பதிலில் கூற முற்படவேண்டாம். இப்பொழுது என்னவாக இருக்கின்றீர்கள் என்பதை மட்டும் வைத்து பதில்களைத் தேர்ந்தெடுங்கள். இது பல தனியார் துறை கம்பெனிகளுக்கு ஆட்களை வேலைக்கு எடுக்கும்பொழுது வேலைக்கு சேருகின்ற ஆள் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்துகொள்ள சமீபகாலமாக மிகவும் பயன்படுத்தப்படும் படிவம் / கேள்விகள்.
முக்கியமான விஷயம்: இதில் சரியான விடை / தவறான விடை என்று எதுவும் கிடையாது. எவ்வளவுக்கெவ்வளவு உண்மையான பதில்களை தேர்ந்தெடுக்கின்றீர்களோ, அவ்வளவுக்களவு உங்களைப் பற்றி நீங்கள் துல்லியமாக அறிந்து கொள்ள இயலும்.
நேரம்: எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்! ஆனால், எங்கள் கணக்குப் படி, பத்துக் கேள்விகளுக்கும் சேர்த்து, ஐந்து நிமிடங்கள் போதும்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
பரீட்சை ஹாலுக்குள் நுழையுமுன்.....,
ஒரு சிறிய வெள்ளைத் தாளை எடுத்துக்கொள்ளுங்கள்.
அதில் மேலிருந்து கீழாக, ஒன்று முதல் பத்து வரையிலும் எண்களை எழுதிக் கொள்ளுங்கள்.
இதோ கேள்விகளும் - பலதரப்பட்ட பதில்களும். உங்களின் தெரிவுகள் என்ன என்று, ஒவ்வொரு கேள்வி எண்ணுக்கும் எதிராக எழுதிக் கொள்ளுங்கள்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
1) நான், பெரும்பாலும், இந்த நேரத்தில், என்னுடைய எல்லா வேலைகளையும், சிறப்பாக, வேகமாக செய்து முடித்து விடுவேன்.
a) காலை நேரத்தில்.
b) மதிய நேரத்தில் / மாலை நேரத்தில்.
c) இரவு நேரத்தில் - ஊரோசை அடங்கியதும்.
-----------------------------
2) நான், நடந்து செல்லும்பொழுது ...
a) வேகமாக, கால்களை எட்டி வைத்து நடப்பேன்.
b) வேகமாக - ஆனால் கால்களை அருகருகே சுலப அடிகள் வைத்து, நடப்பேன்.
c) மெதுவாக, முகத்தை அண்ணார்ந்து பார்த்து, உலகை இரசித்தவாறு நடப்பேன்.
d) மெதுவாக, தலை குனிந்து நடப்பேன்.
e) நத்தை /ஆமை வேகத்தில் நடப்பேன்.
--------------------------------------
3) நான் மற்றவர்களுடன் பேசும் பொழுது ...
a) கைகளைக் கட்டிக் கொண்டு பேசுவேன்.
b) என்னுடைய கைகள் / விரல்கள் ஒன்றையொன்று இறுகப் பற்றியபடி இருக்கும்.
c) இரண்டு கைகளுமோ அல்லது ஏதேனும் ஒன்றோ - (என்) இடுப்பின் மீது அல்லது பைகளுக்குள் ...
d) யாரிடம் பேசிக்கொண்டு இருக்கின்றேனோ அவரைத் தொட்டு அல்லது கைகளால் தள்ளியவாறு ..
e) என் கைகள் என்னுடைய காதையோ அல்லது முகத்தின் மீது அல்லது தலை முடியைத் துழாவியபடி இருக்கும்.
-----------------------------------------------
4) ஓய்வாக உட்கார்ந்திருக்கும் பொழுது கால்களை ...
a)ஒழுங்காக ஒன்றாக பக்கத்திற்கு ஒன்றாக மடித்து வைத்து ஓய்வெடுப்பேன்.
b) கால்களை ஒன்றின் மீது ஒன்று போட்டுக் கொண்டு - அல்லது கால்களை X வடிவில் வைத்துக் கொண்டு ...
c) கால்களை நேராக எவ்வளவு தூரம் நீட்ட முடியுமோ அவ்வளவு தூரம் நீட்டி வைத்துக்கொண்டு..
d) ஒரு கால் மடக்கி - என்னுடைய இருக்கைக்குக் கீழ்...
--------------------------------------------
5) ஒரு ஜோக் படிக்கும் பொழுது அல்லது சினிமா / தொலைக்காட்சியில் மனதுக்குப் பிடித்த காமெடி வரும்பொழுது ..
a) பெரிதாக வாய்விட்டுச் சிரிப்பேன்.
b) சிரிப்பேன், ஆனால் சத்தமில்லாமல்
c) கேலிப் புன்னகை மட்டும்
d) நாணிய வெட்கச் சிரிப்பு
---------------------------------------------------
6) ஒரு விருந்துக்கு / கொண்டாட்ட விழாவிற்குச் சென்றால் ...
a) மண்டபத்தில் நுழையும் பொழுதே எல்லோர் பார்வையும் கவனமும் என் மீது படும்படி சத்தமாக - பகட்டாக - பந்தாவாக நுழைவேன்
b) சத்தமில்லாமல் நுழைந்து, தெரிந்தவர்கள் யாருடனாவது பேசிக் கொண்டிருப்பேன்.
c) சத்தமில்லாமல் நுழைந்து அமைதியாக இருந்து, நான் வந்தது போனது யார்க்கும் தெரியாமல் திரும்பி விடுவேன்.
-------------------------------------------------
7) மும்முரமாக, முனைப்பாக ஒரு வேலையில் ஈடுபட்டிருக்கின்றீர்கள். அப்போ யாரோ ஒருவர் வேலையைத் தொடர தடங்கலாக அமைகிறார்.
a) சரி நல்லது - வேலையை சிறிது நேர ஓய்வுக்குப் பின் (தடங்கல் அகன்ற பின்) தொடரலாம் என்று செயல் படுவேன்.
b) கன்னா பின்னாவென்று கோபப் படுவேன்.
c) சில சந்தர்ப்பங்களில் கோபம - சில சந்தர்ப்பங்களில் சந்தோஷ ஓய்வு - இப்படித்தான் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாது.
-------------------------------------------------------------
8) உங்களுக்கு மிகவும் பிடித்த நிறம் எது?
a) சிவப்பு அல்லது ஆரஞ்சு
b) கருப்பு
c) மஞ்சள் அல்லது இளம் நீலம்
d) பச்சை
e) அடர் நீலம் அல்லது ஊதா
f) வெள்ளை
g) பழுப்பு அல்லது சாம்பல்
---------------------------------------------------------------
9) இரவில், உறங்குவதற்காகப் படுக்கிறீர்கள். உறக்கம் உங்களை ஆட்கொள்ளும் முன்பாக,
a) மல்லாந்து நேராகப் படுத்திருப்பீர்கள்.
b) குப்புறப் படுத்து, வயிற்றின் மீது எல்லா பளுவும் இருக்கும்படி படுத்திருப்பீர்கள்
c) பக்கவாட்டில் படுத்து, சற்றே உடலை வளைத்து ..
d) தலைக்குக் கீழே ஒரு கை மடிந்திருக்கும்படி ...
e) தலையை நன்றாகப் போர்த்தியபடி ...
------------------------------------------------------------
10) அடிக்கடி உங்களுக்கு வருகின்ற கனவு:
a) திடீர் திடீர் என்று மரத்திலிருந்தோ அல்லது உயரத்திலிருந்தோ கீழே விழுகின்ற கனவு.
b) சண்டை இடுதல் / மூச்சுத் திணறுதல்
c) யாரையோ அல்லது ஏதாவதொன்றை தேடுதல்
d) இலகுவாகப் பறப்பது அல்லது காற்றில் மிதத்தல்
e) கனவுகள் எதுவும் காண்பதில்லை - எப்பவாவது வரும் - ஞாபகம் இல்லை.
f) நிறையக் கனவுகள் வரும். எல்லாமே பெரும்பாலும் இனிய இன்பமயமான கனவுகள்தான்.
a
|
b
|
c
|
d
|
e
|
f
|
g
|
|
1
|
|||||||
2
|
|||||||
3
|
|||||||
4
|
|||||||
5
|
|||||||
6
|
|||||||
7
|
|||||||
8
|
|||||||
9
|
|||||||
10
|
(நீங்கள் தேர்ந்தெடுத்த பதில்களை, சரியான வரிசையில் - கருத்துப் பிரிவில் பதிவு செய்யுங்கள். உதாரணம் : a c e d b a c f e f )
(விடைத் தாளுக்கு எப்படி மார்க் போட்டுக் கொள்வது என்று அடுத்த பதிவில் சொல்கிறோம்.)
திங்கள், 11 ஜூலை, 2011
அவன் இவன், அவர்.
ஏகாம்பரம், பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தார். அவர், தமிழும், ஆங்கிலமும், எழுத, பேச, படிக்கத் தெரிந்தவர். அவருக்கு, காலை நேரத்தில், எல்லோரும் அரக்கப் பரக்க - அலுவலகம் செல்ல டென்ஷனாக அல்லாடிக் கொண்டிருக்கும் வேளையில், எல்லோரையும் வேடிக்கை பார்ப்பது பிடிக்கும். வாக்கிங் வந்து, பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு, அல்லது சிமிண்ட் பெஞ்சு கிடைத்தால், அங்கே அமர்ந்தோ கொஞ்ச நேரம் வேடிக்கை பார்ப்பார். கண்ணையும் காதையும் மனதையும் திறந்து வைத்துக் கொண்டு அரை மணி அல்லது ஒரு மணி நேரம் பார்த்துக் கொண்டிருப்பார்.
ஏகாம்பரம், தன்னிடம் நேரம் கேட்பவர்களுக்கு நேரத்தையும், சுற்றுப் புற இடங்களுக்கு வழி கேட்பவர்களுக்கு, வழியையும் சொல்லுவார். அவர்கள் நன்றி சொன்னால், புன்னகையுடன் ஏற்றுக் கொள்வார்.
கடந்த இரண்டு வாரங்களாக, ஓர் இளைஞனை கவனித்துக் கொண்டிருந்தார். அந்த இளைஞன் ஒரு குறிப்பிட்ட பேருந்துக்காக காத்திருக்கின்றான் என்பதும், அவன் செல்ல வேண்டிய பேருந்து வருவதற்கு பத்து நிமிடங்கள் முன்பாக அவன் வருகிறான் என்பதையும், தெரிந்துகொண்டார். அவன் வந்தவுடன், சுற்றுப் புறம உள்ளவர்களை ஆர்வமாக நோக்குவதையும், தன்னைப் பார்த்து அடிக்கடி புன்னகை சிந்துவதையும், இவர் தெரிந்து வைத்திருந்தார்.
மேலும், அடிக்கடி நிகழும் ஒரு சம்பவம் அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இளைஞன் அந்தப் பேருந்து நிறுத்தத்திற்கு வந்த ஐந்து நிமிடங்களுக்குள், மற்றொரு இளைஞன் (பார்ப்பதற்கு வட நாட்டுப் பக்கத்தைச் சேர்ந்த இளைஞனோ என்று தோன்றும்) வருவான். அவன், இவனைப் பார்த்ததும், சின்னதாகச் சிரித்து, அருகே வந்து, "ஹலோ ஹவ் ஆர் யு?" என்று கேட்பான். இவன் உடனே, "ரா ... மு ... சா ........மி" என்பான். அவன் உடனே சிரித்த வண்ணம், சென்று, அவன் செல்ல வேண்டிய பேருந்தில் ஏறிச் சென்றுவிடுவான்.
பிறகு, இவன் செல்ல வேண்டிய பேருந்தில் இவன் ஏறிச் சென்று விடுவான். இதில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாமல் போகின்ற நாட்களில் அல்லது இரண்டு பேரில் ஒருவர் வராத நாட்களில் இந்த நாடகம் நடக்காது!
இன்றைக்கும், இதே சந்திப்பு, விசாரணை, பதில், சிரிப்பு, எல்லாம் நடந்தது. அவன் பேருந்து ஏறிச் செல்வது வரை, எல்லாம் வழக்கத்திற்குக் கொஞ்சம் முன்பாகவே நடந்தது. ராமுசாமி செல்லவேண்டிய பேருந்து வருவதற்கு, இன்று இன்னும் ஏழ்ட்டு நிமிடங்கள் இருந்தன.
ஏகாம்பரம், மெல்ல ராமுசாமிக்கு அருகே சென்று, "தம்பி - நீங்க சரியாக, தினமும் இந்த நேரத்திற்கு இந்த பஸ் ஸ்டாண்டிற்கு வந்து விடுகின்றீர்கள். உங்க நண்பர் கூட இதே நேரத்திற்கு இங்கு வருகிறார். அவர் தினமும், 'ஹலோ ஹவ் ஆர் யு?' என்று கேட்கிறார். நீங்க அதற்கு 'ராமுசாமி' என்கிறீர்கள். அவர் சிரித்துக் கொண்டே செல்கிறார். நீங்க 'இங்க்லீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ்' புத்தகம் ஏதாவது வாங்கிப் படித்து, தெரிந்துகொண்டு, ஆங்கிலத்தில் பேச முயன்று வருகின்றீர்களா?" என்று கேட்டார்.
ராமுசாமி, மிகவும் தயக்கமாக "ஆமாம்" என்றார்.
ஏகா: "நீங்க முயன்றால் இன்னும் கொஞ்சம் சரியாக ஆங்கிலத்தில் பேசலாம். அவர் உங்களிடம், உங்கள் பெயரைக் கேட்கவில்லை. நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள் என்றுதான் தினமும் கேட்கிறார். நீங்க அதற்கு, 'நான் நன்றாக இருக்கின்றேன், தாங்கள் எப்படி இருக்கின்றீர்கள்?' என்று கேட்பதுதான் சரியாக இருக்கும். நாளையிலிருந்து அவர் வந்து, 'ஹலோ ஹவ் ஆர் யு?' என்று கேட்டால், 'அயம் வெரி வெல். தாங்க் யு! ஹவ் ஆர் யு?' என்று கேட்கவேண்டும். அதுதான் சரியான முறை."
ராமு: "சரிங்க அப்படியே செய்கிறேன். என்ன சொல்லணும்? இன்னும் ஒருமுறை சொல்லுங்க?"
ஏகா : "அயம் வெரி வெல்! தாங்க் யு! ஹவ் ஆர் யு?"
*************************************
மறுநாள். ஏகாம்பரம் வந்தார். ராமுசாமி வந்தார். அந்த மூன்றாவது நபரும் வந்தார்.
ராமுசாமிக்கு அதற்குள், ஏகாம்பரம் சொல்லித் தந்திருந்த வாக்கியங்கள் மறந்து போய்விட்டது. சரி, எப்படியும் சமாளிக்கலாம், அவர் அருகில் வந்ததும், தான் முந்திக் கொண்டு, 'ஹலோ ஹவ் ஆர் யு?' என்று கேட்டுவிடுவோம். அப்போ தான் சொல்லவேண்டிய பதிலை, அவரே சொல்லுவார், கொஞ்சம் அதைக் கேட்டுப் பழக்கப் படுத்திக் கொண்டு, அவ்வப்போது, அவர் கேட்டால் அதே போல நாம் பதில் சொல்லலாம் என்று முடிவு செய்துகொண்டார். மூன்றாமவர் அருகே வந்து புன்னகையுடன் வாய் திறக்க முற்படுகையில், ராமுசாமி, தான் முந்திக் கொண்டு கேட்டார், "ஹலோ ஹவ் ஆர் யு?"
அதைக் கேட்ட மூன்றாமவர், புன்னகையுடன், "ரா ...மு சா ......மி" என்று பெருமிதமாகச் சொல்லி விட்டு, பேருந்தில் ஏறிச் சென்றுவிட்டார்.
ராமுசாமி, திகைத்து நின்றார்; ஏகாம்பரம் (துணியைக் கிழித்துக் கொள்ளாமல்) தெருவில் இறங்கி ஓடிவிட்டார்.
(இரண்டு வருடங்களுக்கு முன்பு காலமான, 'தென்கச்சி கோ சுவாமிநாதன்' அவர்கள், ஒரு முறை ரேடியோவில், 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சியில் கூறிய நகைச்சுவைத் துணுக்கை அடிப்படையாக வைத்துப் புனையப்பட்ட கதை)