செவ்வாய், 31 ஜனவரி, 2017

கேட்டு வாங்கிப்போடும் கதை :: நட்பு....


     மஞ்சுபாஷிணி சம்பத்குமார்.  இவர்தான் இந்த வார எங்களின் "கேட்டு வாங்கிப் போடும் கதை"யின் படைப்பாளி.


     அவருடைய தளம்  கதம்ப உணர்வுகள்.



     இருமுறை இந்தியா வந்திருந்தபோது இவரைச் சந்திக்கும் வாய்ப்பு மாறிப்போனது.  உற்சாக ஊற்று.  இவருடன் அலைபேசியில் உரையாடியிருக்கிறேன்.  செமையாய்க் கலாய்ப்பார்.  இவர் எனக்கு ஒரு உதவியும் செய்து தந்திருக்கிறார்.


     ஏனோ இப்போதெல்லாம் வலைத்தளம் பக்கம் வருவதில்லை. 

     அவருடைய உடல்நிலையும், பணி அழுத்தமும் அதற்கு நேரம் தரவில்லை என்று நினைக்கிறேன்.  நீள, நீளமான பின்னூட்டங்களுக்குப் பெயர் போனவர்.


     வீ  மிஸ் யூ மஞ்சு!


     உங்கள் முன்னுரையைக் கீழே வெளியிட்டிருக்கிறேன்.  தொடர்ந்து உங்கள் படைப்பு வழக்கம்போல...


===========================================================


ஒரு ஆணும் பெண்ணும் நட்பாய் இருந்தால் அது காதலாகவோ அல்லது கல்யாணமாகவோ தான் முடியவேன்டுமா? என்று ஒரு நாள் நான் சிந்தித்ததின் விளைவு தான் இந்த கதை.

காதலில் நட்பு இருக்கலாம். ஆனால் நட்பில் காதல் புகுந்துவிட்டால், அது கல்யாணத்தில் முடிந்தால் சிறப்பு. அதுவே இருவரில் ஒருவருக்கு இது இஷ்டமில்லையென்று ஆகிவிட்டால், இழப்பது காதல் மட்டுமல்லாது நட்பையும் சேர்ந்தே இழக்கவேண்டி வரலாம்.

நட்பில் காதல் அசௌகர்யம். நட்பு அற்புதமான விஷயம். பலம் தரும், ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் உறவுகளை விட உதவிட கை நீட்ட முன்னால் ஓடிவருவது நட்பாய் இருக்கும்.

இந்த கதையின் முடிவு நிறைய பேருக்கு இஷ்டமில்லாது போகலாம். ஆனால் ஸ்ரீ சொன்னது போல் இப்போது பார்க்கவிக்கு வலி கொடுப்பதாக இருந்தாலும், பின்னாளில் ஸ்ரீ செய்தது சரி தான் என்று உணர்ந்து ஆசுவாசம் கொள்வாள் பார்க்கவி.

அன்புடன்
மஞ்சு சம்பத்குமார்




======================================================================

நட்பு....
மஞ்சுபாஷிணி சம்பத்குமார்

” உன்னை தினமும் பாக்கணும் “

ம்ம்…

” உன்கிட்ட தினமும் பேசணும் “

சரி…

” எனக்காக ஒரு பாட்டு பாடணும் தினமும் “

சகிச்சுப்பியா?

உன்னை ரொம்ப பிடிச்சதால தானே கேட்கிறேன்.

சரி சரி.. அது ஏன் ஒரு பாட்டு?

சரி உன்னிஷ்டம்… என்னை தினமும் காலைல எழுப்பறச்சே பாட்டுப்பாடி எழுப்புவேன்னு சொன்னேன்.

அதுல எதுக்கு கஞ்சத்தனம்? நைட் தூங்கும்போது ஒரு தாலாட்டு?

” இதுவும் நல்லாத்தான் இருக்கு..”

ஸ்ரீ… என்னைப்பாரேன்…

” உன்னைப்பாக்கலன்னாலும் நீ சொல்றதை காதுக்கொடுத்து கேட்டுட்டு தானே இருக்கேன். இந்த கடல் அலைகளுக்கு மட்டும் ஓய்வே கிடையாதா? பாரேன் ஓய்வே இல்லாம அலை வந்து வந்து வந்து நம்பிக்கையோடு என் அழகைப்பார்னு நம்ம காலைத்தொட்டு கூப்பிட்டு கிச்சுக்கிச்சு மூட்டுதுல்ல? “

” நான் உன்கிட்ட பேசறதுக்கு தான் பீச்சுக்கு வரச்சொன்னேன். நீ கடல் அலைய ரசிச்சுக்கிட்டு இருக்கே.. என் மனசு உனக்கு புரியவே மாட்டேங்குது.. இந்த கடலும் அலையும் எப்பவும் இருக்கத்தான் செய்யும்… “

” அதேப் போல் நீயும் நானும் நம் நட்பும் எப்பவும் இருக்கும் பார்க்கவி..”

“ ஸ்ரீ எனக்கு வீட்ல மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. “

“ நல்ல விஷயம் தானே பார்க்கவி? இதை சந்தோஷமா தான் சொல்லேன்? “

” ஸ்ரீ நீ நிஜமா தான் சொல்றியா? இல்ல என் மனசு உனக்கு புரியலையா? “

பார்க்கவியின் கண்கள் கண்ணீர் கொட்ட தயாராக இருந்தது.. மூக்கு விடைத்து உதடு துடித்து.. வந்தே விட்டது கண்ணீர் கன்னத்தில் உருண்டு…

ஸ்ரீ முன் தான் இப்படி தலைக்குனிந்து காதலுக்கு யாசிப்பதை தன் ஈகோ விரும்பவில்லை என்பது அவள் தலையை அந்தப்பக்கம் திருப்பிக்கொண்டதில் உணரமுடிந்தது..

ஸ்ரீ அவள் முகத்தை தன் பக்கம் திருப்பி அவள் கண்களை சிமிட்டாமல் உற்று நோக்கினான்.

அவன் பார்வையின் தீக்ஷண்யம் தாங்காமல் தலை குனிந்துக்கொண்டாள் பார்க்கவி.

“ பார்க்கவி நாம எப்ப முதன் முதலா சந்திச்சோம்னு நினைவிருக்கா உனக்கு? “

“ ஏன் இல்ல? ரெண்டு பேரும் ஒன்னா இந்த கம்பனிக்கு இண்டர்வ்யூக்கு வந்திருந்தோம். ஒன்னாவே செலக்ட் ஆனோம்.. ஒன்னாவே ட்ரெயினிங் முடிச்சோம். சீட்டும் பக்கத்து பக்கத்துல… இன்னியோட 5 வருஷம் முடியப்போறது “

“ இந்த 5 வருஷத்துல உன்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் யார் பார்க்கவி? “

“ சொல்லனுமா? சிடுமூஞ்சியா இருந்த என்னை சிரிக்கவெச்சே.. சின்ன சின்ன பட்டாம்பூச்சிகள் பறக்கும்போது அதன் அழகை ரசிக்க வெச்சே… ரோட்டில் நடக்கும்போது யாராவது பிச்சை எடுத்து வந்தால் அவங்கக்கிட்ட கூட சிநேகமா தோளில் கைப்போட்டு பேசி என்னையே திகைக்க வெச்சே இப்படி நிறைய…  தினமும் ஒரு அற்புதம் நடத்துவே.. பார்க்கிறவங்களுக்கெல்லாம் அது சாதாரணமா இருந்தாலும் எனக்கு மட்டும் அது ஆச்சர்யமா இருக்கும் நீ நீயே தான்பா என் பெஸ்ட் ஃப்ரெண்ட் “

பார்க்கவி கண்களை மூடிக்கொண்டு எங்கோ சஞ்சரிப்பதை ஸ்ரீ உணர்ந்தான்.

பார்க்கவியின் தோளைத்தட்டி…. “ உனக்கு இப்ப என்ன ப்ரச்சனை பார்க்கவி சொல்லு “ என்று கேட்டுக்கொண்டே மணலை அளைந்தான்.

மறுபடியும் ஆரம்பத்துல இருந்து ஆரம்பிக்க சொல்றியா ஸ்ரீ?  அதான் சொன்னேனே… தினமும் உன்னை பாக்கணும் உன்னிடம் பேசணும்.

இதைக்கேட்டதும் ஸ்ரீ சிரித்தான்.. “ லூசு தினமும் அதானே பண்றோம் ஆபிசுல? “ என்றான்.

“ நீ புரிஞ்சுக்கலையா ஸ்ரீ என் காதலை?  நான் இப்படி வெட்கத்தை விட்டு என் காதலை சொல்லனும்னு எதிர்ப்பார்க்கிறியா ஸ்ரீ ? சோகத்துடன் கேட்டாள் பார்க்கவி.

“ பார்க்கவி நான் உன்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்.. அந்த எல்லையை நான் என்னிக்குமே தாண்டினதில்லை… தாண்ட முயற்சித்ததும் இல்லை… அதைத்தாண்டி உன்னை வேறவிதமா என்னால நினைச்சுக்கூட பார்க்கமுடியலை உனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு எண்ணம் வந்தது பார்க்கவி?

” ஸ்ரீ உன்னோட ஒவ்வொரு பேச்சும் நடவடிக்கையும் என்னை உன்னிடம் ஈர்க்க வெச்சுட்டுது.. உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா என் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு தோணித்து. “

“ பார்க்கவி…. காதலுக்குள் நட்பு இருக்கணும்… அப்ப தான் இருவருக்குள் நல்ல புரிதல் இருக்கும்… ஆனால் நட்புக்குள் காதல் வந்தால்… காதலும் நிலைக்காது…. நட்பையும் இழக்கும் அபாயம் இருக்கு பார்க்கவி…சப்போஸ் நீ சொன்னது போல நாம கல்யாணம் பண்ணிக்கிறோம்னே வெச்சுக்கோ…. ஏதாவது நமக்குள் சின்ன சின்ன கருத்து வேறுபாடு வரலாம் இல்ல ப்ரச்சனை வரலாம். அப்ப உன்னால என்னை நண்பனாவும் பார்க்க முடியாது காதலனாவும் பார்க்க முடியாது கணவனா உன் கண்முன்னாடி நிப்பேன்   உன் ஈகோ என் மேல் ஈட்டி எறியும்… பதிலுக்கு என் ஈகோ தடுக்கவோ உன்னை சமாதானப்படுத்தவோ முயலாமல் உன்னை மட்டம் தட்ட முயலும்..  என் மேல் உனக்கு கோபம் வெறுப்பு ஆயாசம்… ச்சே இவனைப்போய் கட்டினோமே.. இப்படி எல்லாம் எண்ண வைக்கும்…” எனக்கு நட்பு ரொம்ப நல்லாருக்கு பார்க்கவி… நாம நட்புடனே இருப்போமே அவள் கண்களைப்பார்த்து சொன்னான் ஸ்ரீ.

” நான் அழகா இல்லையா ஸ்ரீ? என்னை பிடிக்கலையா உனக்கு?  நீ வேண்டாம்னு சொன்னா இப்பவே இந்த கடல்ல விழுந்து தற்கொலை பண்ணிப்பேன் “ மூக்கு சிவக்க உதடுகள் துடிக்க கண்ணீர் கண்களுடன் கெஞ்சினாள் பார்க்கவி.

ஸ்ரீக்கு தர்மசங்கடமானது…. நீ ஒரு தேவதை பார்க்கவி. என்று சொல்லும்போது ஒரு பந்து வந்து அவன் முகத்தை உரசி கீழே விழுந்தது. “ அங்கிள் பால் தாங்க “ என்று கேட்டபடி 5 வயது குழந்தை ஓடி வந்து பூவாய் சிரித்து பாலை ஸ்ரீயிடம் இருந்து வாங்கிக்கொண்டு சென்றது.

” பார்க்கவி…. எப்பவும் நாம நட்புடனே இருக்க முடியாதா? “

“ நாம ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சிருக்கோமே நண்பர்களா இருந்தோம் இதுவரை இனி காதலித்தால் என்னவாம்? முனகினாள் பார்க்கவி.

“ என் மனசுல உன்னை அப்படி ஒரு தடவை கூட நினைச்சு பார்க்கல பார்க்கவி.. இனியும் என்னால அப்படி முடியும்னு தோணலை… நட்பை நான் மதிப்பவன்… நட்புக்குள் ஆண் பெண் என்ற பேதம் வயசு அழகு நிறம் படிப்பு இதெல்லாம் அவசியமற்றது… நட்பு நட்பாகவே இருந்தால்... அது நிலைத்து இருக்கும் பார்க்கவி...  அதே நட்புக்குள் காதல் நுழைந்தால் இவள் எனக்கு மட்டும் தான். இவன் எனக்கு மட்டும் தான் என்ற பொசசிவ்நெஸ் வரும். அது கொஞ்சம் கொஞ்சமா சந்தேகத்துக்கு வழி விடும்.. இப்படியே பிரிவு வரைக்கும் கொண்டு போயிரும்… அப்படி ஆகும் நிலை வந்தால் காதலும் நிலைக்காது… நட்பும் நிலைக்காது…. “ அதை விட இப்படி நட்புடனே இருந்துப்பார் ..என்ன சிரமம் உனக்கு?

ஸ்ரீயின் எந்த பதிலும் பார்க்கவியை சமாதானப்படுத்தவில்லை.

ஸ்ரீயின் முதுகில் படார்னு ஒரு அறை விழுந்தது… அதோடு குரல் வேறு…”ஹே பாஸ் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று சொல்லிவிட்டு… அட பார்க்கவி.. என்ன ரெண்டு பேரும் இங்க வந்து உட்கார்ந்துக்கிட்டு கடலை விலைக்கு வாங்க பலமான யோசனை நடக்குது போல? என்று சொல்லிக்கொண்டே வந்து அமர்ந்தாள் மீனலோசனி இருவருடன் ஆபிசில் பணிபுரிபுவள்.

மீனலோசனி ஸ்ரீயிடம் காட்டும் நெருக்கம் பார்க்கவிக்கு சந்தோஷம் தரவில்லை. முகத்தை திருப்பிக்கொண்டு அலைகளை வேடிக்கைப்பார்ப்பது போல் பார்த்தாள்.

“ என்ன பார்க்கவி என்ன விஷயம் உன் முகம் சோகமா இருக்கு?  ஐஸ்க்ரீம் கேட்டால் வாங்கித்தரமாட்டேன்னு சொல்லிட்டானா? கஞ்சன் என்று சொல்லி ஸ்ரீயின் தலையில் குட்டினாள் மீனலோசனி.

இவற்றுக்கெல்லாம் அமைதியாக சிரித்துக்கொண்டே இருந்தான் ஸ்ரீ.

பார்க்கவிக்கு கோபம் தலைக்கேறியது.  தன் கண்ணெதிரே தன் மனம் விரும்பியவனிடம் இத்தனை நெருக்கமாய் முதுகில் அடிப்பதும் தலையில் குட்டுவதும் அவளுக்கு பிடிக்கவில்லை.. இவன் இப்படித்தானோ? எல்லா பெண்களிடமும்..  மனம் முதல் முறையாக சந்தேகப்பட்டு அவனிடம் கொண்ட காதல் சரியா என்று யோசித்தது…. சடுதியில் மனித மனம் குரங்குப்போல் தாவுகிறதே என்று தலையில் அடித்துக்கொண்டாள் பார்க்கவி…

பார்க்கவின் எண்ண ஓட்டங்கள் அனைத்தும் அவள் முக குறிப்புகள் உணர்த்தியது.

ஸ்ரீ அமைதியாக பார்க்கவியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். பார்க்கவியின் கவனமோ மீனலோசனி இன்னும் ஸ்ரீயை என்னென்ன தொந்திரவு செய்வாளோ என்ற பதைப்புடன் பார்த்துக்கொண்டிருந்ததை ஸ்ரீ கவனித்துக்கொண்டிருந்தான்.

பார்க்கவியின் மனம் குழப்பத்தில் இருப்பதை உணர்ந்தான் ஸ்ரீ…

பார்க்கவின் மனம் இனி தன் வசப்படாமல் இருக்க என்ன செய்வது என்ற யோசனையுடன் உடையில் ஒட்டி இருந்த மணற்துகளை தட்டிவிட்டுக்கொண்டு எழுந்தான்.

“ இருட்டிடுத்து மீனலோசனி. நாளை ஆபிசில் பார்ப்போம்.

பார்க்கவி உன்னை வீட்டில் ட்ராப் பண்ணிடறேன் எழுந்து வா என்று பார்க்கவி எழ கைக்கொடுத்தான் ஸ்ரீ..

“ நான் டி நகர் ரூட்ல தான்பா போறேன்.  நானே ட்ராப் பண்ணிடவா?   நீ அவளை விட்டுட்டு திரும்ப தாம்பரம் போகணும் “ என்று சொன்ன மீனலோசனியை அனல் தெறிக்க பார்த்துவிட்டு ஸ்ரீயிடம் “வேண்டாம் ஆட்டோ பிடிச்சு நானே போய்க்கறேன் “ முறைப்பாய் சொல்லிவிட்டு மீனலோசனி பக்கம் திரும்பாமல் ஆட்டோ என்று அழைத்து ஏறி அமர்ந்து போய்விட்டாள் காற்றாய்.

“ என்னாச்சு பாஸ் எனிதிங் ராங்?  பார்க்கவி கொஞ்சம் கோபம் கொஞ்சம் சோகம் கலந்தமாதிரி இருப்பது போல தோணுதே? நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா? “ தர்மசங்கடத்துடன் மீனலோசனி கேட்க

“ ச்சே ச்சே அப்டி எல்லாம் ஒன்னுமில்லப்பா.. கொஞ்சம் டயர்ட் அவ்ளோ தான்.. நாளை சரியாயிருவா சரி நான் கிளம்பட்டுமா “ என்று சொல்லிக்கொண்டே செருப்பணிந்து நடக்க ஆரம்பித்தான் தன் வண்டி பார்க் செய்த இடம் நோக்கி ஸ்ரீ..

” பார்க்கவி மனதில் இப்படி ஒரு சலனம் ஏற்பட நான் காரணமா இருந்துட்டேனே.. இனியும் அவளுடன் பக்கத்தில் உட்கார்ந்து வேலை செய்வது இன்னும் அவளை துன்புறுத்துவதற்கு சமம்…

வேண்டாம். கொஞ்ச நாட்கள் மெடிக்கல் லீவ் எடுத்துக்கொள்ளவேண்டும்…

மும்பைக்கு ரொம்ப நாளா மாற்றல் கிடைத்தும் மறுத்துக்கொண்டிருந்தேன். நாளை போய் ஜி எம் கிட்ட பேசி மாற்றலுக்கு ஒப்புக்கொள்ளவேண்டும் என்றாவது ஒரு நாள் நான் சொன்னது சரி என்று பார்க்கவி புரிந்துக்கொள்வாள்… என்ற நம்பிக்கையுடன் வண்டியை ஸ்டார்ட் செய்தான் ஸ்ரீ

71 கருத்துகள்:

  1. காலம் அனைத்தையும் ஒருநாள் மாற்றும்... ஸ்ரீ செய்தது திடமான முடிவு...

    பதிலளிநீக்கு
  2. ம்ம்ம்ம், மஞ்சுபாஷிணியை முகநூலில் கூடப் பார்க்க முடியலை. இரண்டு முறை திருச்சிக்கு வந்திருந்தும் எனக்குத் தெரிவிக்கவில்லை! நல்ல கதை. நட்பையும், காதலையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டிய அவசியத்தை உணர்த்தி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  3. அது சரி, காமாட்சி அம்மா என்ன ஆனாங்க? அநேகமா ரஞ்சனிக்குத் தெரிஞ்சிருக்கும்!

    பதிலளிநீக்கு
  4. நல்ல கதை. நட்பும் காதலும் தனித்தனி பாதை.... சேர்ந்து விட்டால் குழப்பம் தான்.... பாராட்டுகள் மஞ்சுபாஷிணி....

    பதிலளிநீக்கு
  5. நட்புக்கும் காதலுக்கும் உள்ள வேறுபாட்டை அழகாக உணர்த்திணீர்கள் அருமை.

    அதேநேரம் இன்றைய வாழ்வில் நடைமுறையில் இது சாத்தியப்படுமா ? என்பது ஐயமே... காரணம் இன்று கண்டதும் காதல் என்பதே கோட்பாடாகி விட்டது.
    இதில் பெண் காதலுக்கு ஏங்குவதாக சித்தரித்து இருப்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கின்றது....

    இன்னும் எழுத நினைக்கிறேன் இருந்தாலும் குவைத் பார்ட்டியை நினைத்தால் பயமாக இருக்கு ஆகவே நான் எஸ்கேப்

    பதிலளிநீக்கு
  6. அருமையான கதை! என்னென்னவோ எண்ணங்கள். வாழ்த்துகள் சகோதரிக்கு மற்றும் அருமையான ஒரு கதையை இங்குப் பகிர்ந்த எங்கள் ப்ளாகிற்கும் மிக்க நன்றி.

    கீதா: அட! மஞ்சுபாஷினி! உங்களுக்கு என்னை நினைவிருக்கிறதா? நாம் ஒரு முறை புலவர் ஐயா வீட்டில் ஆவி, கணேஷ் அண்ணா, சேட்டைக்காரன் அண்ணா, கார்த்திக் சரவணன் எல்லோரும் சந்தித்தோம்.

    செம கதை. நான் அடிக்கடி சொல்லும் டாப்பிக்! காதலில் நட்பு இருக்கலாம்.அது கல்யாணத்தில் முடிந்தால் சிறப்பு. இருக்கவும் வேண்டும் அப்போதுதான் திருமணத்தில் முடியும் போது நல்ல முறையில் வாழ்வு அமையும். அதே போன்று பார்த்துச் செய்யப்படும் திருமணத்திலும் நட்பு இருந்தால் நல்ல புரிதல் இருக்கும். நட்பில் காதல் புகுந்துவிட்டால், யெஸ் நீங்கள் சொல்லியிருப்பது போல் கல்யாணத்தில் முடிந்தால் வெகு சிறப்பு...இல்லை என்றால் ...அந்த நட்பை இழக்க நேரிடும்...

    அதனையே அருமையான கதை வடிவில் எழுதியமைக்குப் பாராட்டுகள்..பகிர்ந்த எங்கள்ப்ளாகிற்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  7. அருமையான கதை! ஸ்ரீயின் காரக்டர் சூப்பர்ப்!
    மிஸ்ஸிங் யூ மஞ்சு மேடம்!

    பதிலளிநீக்கு
  8. கதை நன்றாக இருக்கிறது.மஞ்சுக்கு வாழ்த்துக்கள்.
    உங்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  9. வித்தியாசமான கண்ணோட்டத்தில் நட்பு...அருமை

    பதிலளிநீக்கு
  10. யதார்த்தத்தை மிக அழகாக உரைக்கும் பாத்திரமாய் ஸ்ரீ.. கதை மிக அருமை.. பாராட்டுகள் மஞ்சு... பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. //நட்பு நட்பாகவே இருந்தால்... அது நிலைத்து இருக்கும் பார்க்கவி... அதே நட்புக்குள் காதல் நுழைந்தால் இவள் எனக்கு மட்டும் தான். இவன் எனக்கு மட்டும் தான் என்ற பொசசிவ்நெஸ் வரும். அது கொஞ்சம் கொஞ்சமா சந்தேகத்துக்கு வழி விடும்.. இப்படியே பிரிவு வரைக்கும் கொண்டு போயிரும்…// உண்மை. கதை அருமை.

    பதிலளிநீக்கு
  12. 1)

    //மஞ்சுபாஷிணி சம்பத்குமார். இவர்தான் இந்த வார எங்களின் "கேட்டு வாங்கிப் போடும் கதை"யின் படைப்பாளி.//

    எங்கேயோ கேள்விப்பட்டுள்ள பெயராக உள்ளதே என நீண்ட நேரமாக என் மண்டையை உடைத்துக்கொண்டு வருகிறேன்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  13. 2)

    //அவருடைய தளம் கதம்ப உணர்வுகள்.//

    இந்த கும்மென்ற வாஸனையையும் வைத்து யோசிக்கிறேன் .... யோசிக்கிறேன் .... இன்னும் யோசித்துக்கொண்டேதான் இருக்கிறேன்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  14. 3)

    //உற்சாக ஊற்று. இவருடன் அலைபேசியில் உரையாடியிருக்கிறேன். //

    இந்த வரிகளில் ஏதோ எனக்கும் ஏதோ கொஞ்சம் பொறி தட்டுகிறது.

    >>>>>

    பதிலளிநீக்கு
  15. 4)

    //ஏனோ இப்போதெல்லாம் வலைத்தளம் பக்கம் வருவதில்லை. அவருடைய உடல்நிலையும், பணி அழுத்தமும் அதற்கு நேரம் தரவில்லை என்று நினைக்கிறேன். நீள, நீளமான பின்னூட்டங்களுக்குப் பெயர் போனவர்.//

    ஆஹா, மேலும் கொடுத்துள்ள இந்த க்ளூக்கள் ஒருவேளை அவராகவே இருக்குமோ என என்னையும் நினைக்க வைக்கிறது.

    >>>>>

    பதிலளிநீக்கு
  16. 5)

    //வீ மிஸ் யூ மஞ்சு!//

    அடாடா, அப்போ எங்கட மஞ்சூஊஊஊஊஊஊஊ வே தானா? என் யூகம் ஓரளவு சரியே தான் போலிருக்குது.

    எதற்கும் என் இந்தப்பதிவுகளுக்கு ஓடிப்போய் இவள் அவள் தானா என, படத்தைப் பார்த்து ஆறு வித்யாசங்கள் கண்டு பிடித்துக்கொண்டு பிறகு வருகிறேன். :)

    http://gopu1949.blogspot.in/2015/02/3-of-6.html

    >>>>>

    பதிலளிநீக்கு
  17. நட்பும் காதலும் என்று இருந்திருக்கலாம் இரு பால்களுக்கிடையே வித்தியாசம் மயிரிழைதான் சொல்ல வந்ததை நன்கு சொலிச் சென்றிருக்கிறார் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  18. 6)

    11.06.2013 மற்றும் 29.07.2015 ஆகிய இரண்டு முறை என் இல்லம் தேடி என்னைக்காண ஓடிவந்த என் அன்புத் தங்கச்சி சாக்ஷாத் மஞ்சூஊஊஊஊஊஊ வே தான் ! வெரி குட்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  19. 7)

    நான் ஏற்கனவே மஞ்சுவின் பதிவினில், இந்தக்கதைக்குக் கொடுத்துள்ள பின்னூட்டத்தையே இங்கும் கொடுக்க நினைக்கிறேன் ..... அன்றொரு பேச்சு, இன்றொரு பேச்சு என இருக்கக்கூடாது என்பதால் மட்டுமே.

    -=-=-=-=-
    வை. கோபாலகிருஷ்ணன் 24.03.2014 - 3.37 PM

    நட்பைப்பற்றிய மிகவும் அழகான கதை மஞ்சு.
    பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    இருப்பினும் என் வோட்டு அந்த பார்க்கவி கட்சிக்கு மட்டுமே.

    பிரியமுள்ள கோபு அண்ணா
    -=-=-=-=-

    >>>>>

    பதிலளிநீக்கு
  20. 8)

    இன்றுவரை தினமும் என்னுடன் மஞ்சு வாட்ஸ்-அப் தொடர்புகள் மூலம் குட்-மார்னிங் சொல்லிக் கொண்டிருப்பினும், நீண்ண்ண்ண்ண்ட நாட்களுக்குப்பின் மஞ்சுவின் படைப்பினை இங்கு படித்ததும், அவளின் வித்யாசமான புகைப்படத்தினை இங்கு பார்த்ததும், மனதுக்கு ஏதோ இனம் புரியாததோர் மகிழ்ச்சியாக உள்ளது.

    மீண்டும் நேரில் புறப்பட்டு என் வீட்டுக்கே என்னை சந்திக்க வந்து விட்டது போல ஓர் சந்தோஷத்தினை உணர முடிகிறது.

    >>>>>

    பதிலளிநீக்கு
  21. 9)

    பதிவின் அளவைவிடவும் மிக நீண்ட அளவில் பின்னூட்டமிட்டு வந்த மஞ்சு, இப்போது நம்மிடமிருந்தெல்லாம் விலகி இருப்பது தாங்க முடியாத வருத்தமாகத்தான் உள்ளது.

    உதாரணமாக இதோ என் ஒருசில பதிவுகள்:

    http://gopu1949.blogspot.in/2011/04/1-of-3.html

    http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_28.html

    >>>>>

    பதிலளிநீக்கு
  22. 10)

    நல்லதொரு தூய்மையான நட்புக்கு உதாரணமாகவும், பழகிட மிகவும் சாஃப்டான, இனிமையான, ருசியான ’பஞ்சு’ மிட்டாய் போன்றவருமான கதாசிரியர் ’மஞ்சு’வுக்கும், இங்கு இன்று இதை வெளியிட்டு மீண்டும் படிக்க வாய்ப்பளித்த எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் அவர்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    -oOo-

    பதிலளிநீக்கு
  23. More than the short story writers friends r more interesting and iam do proud of her friends

    பதிலளிநீக்கு
  24. கேட்டு வாங்கி போடும் கதையில் இன்று அன்பு மஞ்சுவா !! எப்படி இருக்கீங்க மஞ்சு ..
    ரொம்ப நாளாச்சு வலைப்பக்கம் பார்த்து ..
    டேக் கேர்ப்பா ..

    மஞ்சு வந்தா அங்கே அன்பு மழை பொழியும் ..மிக அன்பானவங்க ..பிளாக் பக்கம் இப்போல்லாம் காண முடிவதில்லை ..
    இங்கே அழைத்து வந்ததற்கு நன்றி எங்கள் பிளாக்

    பதிலளிநீக்கு
  25. நான் கொஞ்சம் வேறு விதமா முடிவை எதிர்பாத்தேன் ..மீனலோசனிக்கும் ஸ்ரீக்கும் லவ்னு நினைச்சிட்டேன் ..

    ஸ்ரீ உள்ளதால் குணத்தால் உயர்ந்து நிற்கிறார் ..இப்படிப்பட்ட நல்ல குணங்கள் அரிது ..ஏதாவது ஒரு நுனியில் காதல் நிற்கும் இப்படிப்பட்ட ஆண் பெண் நட்புகளில் ..சலனம் உருவாக கூடாதென மாறுதல் வாங்கி செல்வது நல்ல முடிவு ..பார்கவிக்கு காலம் உணர்த்தும் ,,நட்பு பெரிதென்பதை புரிந்து கொள்வார் அப்போது

    பதிலளிநீக்கு
  26. அருமையான கதை
    நட்பின் பெருந்தக்க யாவுள

    பதிலளிநீக்கு
  27. @ஸ்ரீராம் ////இருமுறை இந்தியா வந்திருந்தபோது இவரைச் சந்திக்கும் வாய்ப்பு மாறிப்போனது.////
    சே..சே.. ஜஸ்ட்டு மிஸ்ட்டூஊஊஊ.... “நான் முகம் காட்டாப் பதிவர்” என்பதை இங்கயும் நிரூபிச்சிட்டீங்களே...:)..


    /// இவர் எனக்கு ஒரு உதவியும் செய்து தந்திருக்கிறார்./// சொல்லவே இல்ல .. இப்பூடிப் பாதியில ஃபுல்ஸ்ரொப் போட்டால்ல் எனக்கும் அஞ்சுவுக்கும் எப்பூடி நித்திரை வரும்?:))... ஹையோ எனக்கு நித்திரை வராட்டிலும் பறவாயில்ல.. இப்போ அஞ்சுவுக்கு வராதே .... அதை நினைச்சே எனக்கும் வராது.. இப்பூடிப் பண்ணிட்டீங்களே...:))

    பதிலளிநீக்கு
  28. ///Angelin said...
    நான் கொஞ்சம் வேறு விதமா முடிவை எதிர்பாத்தேன் ..மீனலோசனிக்கும் ஸ்ரீக்கும் லவ்னு நினைச்சிட்டேன் .///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்க எப்பத்தான் கரீட்டா முடிவெடுத்திருக்கிறீங்க.. ஹையோ கலைக்கிறா... நாம ஆரு 1500 மீட்டர் ஓட்டப்போட்டியில 2 வதா வந்தேனாக்கும்:) ஓடியே தப்பிடுவேன்ன்ன்..:)

    பதிலளிநீக்கு
  29. மஞ்சுபாஷினிக்கு வாழ்த்துக்கள், மிக அருமையாக யதார்த்தமான கதை.. அழகாக பேச்சு நடையில் சொல்லிட்டீங்க...

    ///மும்பைக்கு ரொம்ப நாளா மாற்றல் கிடைத்தும் மறுத்துக்கொண்டிருந்தேன். நாளை போய் ஜி எம் கிட்ட பேசி மாற்றலுக்கு ஒப்புக்கொள்ளவேண்டும் என்றாவது ஒரு நாள் நான் சொன்னது சரி என்று பார்க்கவி புரிந்துக்கொள்வாள்… என்ற நம்பிக்கையுடன் வண்டியை ஸ்டார்ட் செய்தான் ஸ்ரீ////

    பழம் தானாகக் கனிய வேண்டும்... தடியால் அடித்துக் கனியவைக்கக் கூடாது..... ஸ்ரீ செய்தது சரிதான், மனதில் காதல் இருந்திருந்தால் தானாக வெளிப்பட்டிருக்கும், இரக்கம் பார்த்து ஓகே பண்ணினால் பின்னாளில் பிடிக்காமல் போகவும் வாய்ப்பிருக்கு... நல்ல முடிவு.

    பார்கவியிலும் தப்பில்லை, மனதில் தோன்றியதை நேரே கேட்டுத் தெளிவாகிட்டார்ர்... இல்லையெனில் கதவைத் தட்டாத காரணத்தால் எத்தனையோ சந்தர்ப்பங்கள் இழக்கப்பட்டிருக்கின்றன.... என்பதுபோல.. சந்தர்ப்பத்தை இழந்திட்டேனோ கேட்டிருக்கலாமோ என வாழ்நாள் முழுவதும் மனதில் ஒரு குறை இருந்துகொண்டே இருந்திருக்கும்... இது குறைக்கு இடமில்லை...
    வாழ்த்துக்கள் மஞ்சு.. முடியும்போதெல்லாம் வாங்கோ. கோபு அண்ணனின் புளொக்கில்தான் உங்களை பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  30. ///ஸ்ரீ… என்னைப்பாரேன்…///

    ////“ ஸ்ரீ எனக்கு வீட்ல மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. “///

    ஹையோ ஆண்டவா... ஆபத் பாண்டவா... ஸ்ரீவல்லிப்புத்தூரில் எழுந்தருளியிருக்கும் வரவா... எங்கட “எங்கள் புளொக்” ஓனர்.. சகோதரர் “ஸ்ரீ”ராமை காப்பாத்திடப்பாஆஆஆஆஆஆ... ஹையோ இப்பூடி மாட்டி விட்டிட்டாவே மஞ்சு.. :) இத்த்தனை ஆயிரம் பெயர்கள் இருக்க... :) ஸ்ரீ.. எனும் பெயரை செலக்ட் பண்ணி.. சகோ ஸ்ரீராம் வீட்டில் இன்று டின்னர் கிடைக்காமல் கிச்சின் அடைப்பு செய்ய வச்சிட்டீங்களே.. ஹையோ ஹையோஓஓ.. சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்.. மீ ரொம்ப நல்ல பொண்ணு:).

    பதிலளிநீக்கு
  31. /////வை.கோபாலகிருஷ்ணன் said...
    8)

    இன்றுவரை தினமும் என்னுடன் மஞ்சு வாட்ஸ்-அப் தொடர்புகள் மூலம் குட்-மார்னிங் சொல்லிக் கொண்டிருப்பினும்,/////
    ஹையோஓஓஓஒ நாங்க கேட்டமா? கேட்டமா? குட்மோனிங் சொன்னாவா எனக் கேட்டமா?:)) ஆண்டவா என்னைக் காப்பத்துங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்.. என் வாய்தேன் நேக்கு எதிரி... விடுங்கோ விடுங்கோ என்னைத் தடுக்காதீங்கோ.. நான் தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்ன்ன்ன்ன்:))..

    பதிலளிநீக்கு
  32. @ athiraav ..//சந்தர்ப்பத்தை இழந்திட்டேனோ கேட்டிருக்கலாமோ என வாழ்நாள் முழுவதும் மனதில் ஒரு குறை இருந்துகொண்டே இருந்திருக்கும்.//

    yes opportunity knocks once :) soooo எனக்கு £1000 அப்புறம் ஸ்ரீராமுக்கு 90,000 இந்தியன் கரன்சி .உடனே தருமாறு கேட்கிறோம் அனுப்பிடுங்க .

    பதிலளிநீக்கு
  33. @ஸ்ரீராம் ஹையோ பாவம் ..அவர் மொட்டை மாடில காகங்களுக்கு நொறுக்ஸ் தந்திட்டிருக்கற நேரம் பார்த்து இந்த பூனை உங்களுக்கு இப்படி வம்புல மாட்டி விட்ருச்சே :))

    பதிலளிநீக்கு
  34. @ ஸ்ரீராம் ..பார்கவி என்ற பெயர் நல்லா இருக்காம் @அதிரா சொல்ல சொன்னாங்க

    பதிலளிநீக்கு
  35. பாவம் ஒருவருக்கு டின்னர் இல்லை சாப்பாடே ஒன் வீக்குக்கு கட் :)

    பதிலளிநீக்கு
  36. ///yes opportunity knocks once :) soooo எனக்கு £1000 அப்புறம் ஸ்ரீராமுக்கு 90,000 இந்தியன் கரன்சி .உடனே தருமாறு கேட்கிறோம் அனுப்பிடுங்க .///

    காவிரி ஆத்தில கட்டுக்கட்டா 1000, 500 ரூபா நோட்டுக்கள் குவிந்து கிடக்குதாம்ம் அப்பூடியே அள்ளித்தாறேன்ன்ன்:) நாம ஆரு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ணன் பரம்பறை:) ஆக்கும்...க்கும்..க்கும்..:)

    பதிலளிநீக்கு
  37. ///Angelin said...
    @ ஸ்ரீராம் ..பார்கவி என்ற பெயர் நல்லா இருக்காம் @அதிரா சொல்ல சொன்னாங்க///

    ஹா ஹா ஹா நான் வரப்புயர .. என மட்டும்தானே சொன்னேன்ன்:)... இதென்ன புது வம்பாக்கிடக்கே வைரவா.. நா வள்ள இந்த வெளாட்டுக்கு:)) ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  38. நட்பின் மகிமை புரிந்தது பின்னூட்டங்களால்:)

    பதிலளிநீக்கு
  39. அதிரா... //ங்கட “எங்கள் புளொக்” ஓனர்.. சகோதரர் “ஸ்ரீ”ராமை காப்பாத்திடப்பாஆஆஆஆஆஆ...//

    அவன் நான் இல்லை!!!

    //இன்று டின்னர் கிடைக்காமல் கிச்சின் அடைப்பு செய்ய வச்சிட்டீங்களே..//

    அப்படிச் செய்தாலும் எனக்குக் கவலை இல்லையாக்கும்!

    பதிலளிநீக்கு
  40. நட்பையும் காதலையும் எதிர் எதிராக நிறுத்திப் பார்க்கத் தெரிந்தவனுக்கும், அப்படிப் பார்க்கத் தெரியாது
    ஆழ்ந்த நட்பில் விரிந்த காதல், அடுத்துக் கல்யாணம் என்று ஒவ்வொரு ஸ்டேஜையும் கடக்க ஆசைப்படுவளையும் முடிச்சுப் போட்ட கதை.

    நட்பையும் காதலையும் வித்தியாசப்படுத்தத் தெரிந்த ஸ்ரீ, காதல் வேறு கல்யாணம் வேறு என்று வித்தியாசப்படுத்தாமல் இருக்க வேண்டும். நட்பை பலிகொடுத்து ஒரு காதலுக்குத் தயாரில்லாதவன், காதலை பலி கொடுத்து திருமணமா என்று யோசிக்கவும் செய்யலாம்.

    நட்பு, காதல், திருமணம் என்று ஒழுங்காக பாதை போட்டு எதையும் பிரச்னைக்குள்ளாக்கி குழம்பாமல் நியாயமான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கும் பார்க்கவி மனத்தில் நிற்கிறாள்.

    இருவரின் மாறுபட்ட எண்ணங்களை கதையாக்கி அதைச் சொன்ன விதம் அழகாக இருக்கிறது.

    தேர்ந்த கதை சொல்லலுக்கு கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  41. ம்ம்ம்ம், எனக்கும் பார்கவியின் பாத்திரப் படைப்புப் பிடித்திருந்தது. ஆனால் சொல்ல யோசனையாக இருந்தது. இங்கே இரண்டு பேர் அதிலும் ஜீவி சாரே சொன்னபிறகு நானும் சொல்லலாம்னு சொல்கிறேன். பார்கவி தெளிவாக முடிவெடுத்திருக்கிறாள். எல்லாப் பெண்களுடனும் நெருக்கமாகப் பழகும் ஶ்ரீக்கு அந்தத் தெளிவு இல்லை. ஒருவேளை மீனலோசனியைக் காதலிக்கிறானோ என அதிரா மாதிரி நானும் நினைச்சேன். ஆனால் வெறும் பழக்கம்/நட்பு (?) என்ற வட்டத்துக்குள்ளேயே ஶ்ரீ சுற்றுவதால் முடிவெடுப்பதில் குழப்பம் அடைகிறார் என்றே நினைக்கிறேன். ஒருவேளை பார்கவிக்குத் திருமணம் ஆன பின்னால் ஶ்ரீ வருந்தலாம். சில சமயம் நம் கையில் இருக்கும் எதுவும் அருகே தானே இருக்குனு நாம் அலட்சியமாக இருப்போம். கையை விட்டுப் போன பின்னர் வருந்துவோம். அந்த மாதிரி ஶ்ரீக்கும் தோன்றலாம்.

    பதிலளிநீக்கு
  42. ஆனால் மஞ்சுபாஷிணி அப்படி ஒரு யோசனையில் இந்தக் கதையை எழுதி இருப்பார் என்றும் தோன்றவில்லை. பொதுவாக ஆண், பெண் இருவர் பழகுவதில் உள்ள சிக்கல்களையும் அதில் யாரேனும் ஒருவர் காதலாக மாற்ற ஆசைப்படுவதையும் குறிப்பிடவே எழுதி இருக்கிறார் என நம்புகிறேன். காதல் என்பது நட்பின் மூலம் மலராது என்றும் சொல்ல ஆசைப்படுகிறாரோ எனவும் எண்ணுகிறேன். இந்தக் கதை எனக்குக் "கண்ட நாள் முதல்" என்னும் திரைப்படத்தை நினைவூட்டியது. கதாநாயகிக்குக் கடைசி வரை தன் காதல் புரியாமலேயே போனதும் அதை மற்றவர்கள் புரிந்து கொண்டதும்! இதே படம் முதலில் ஹிந்தியில் வந்தது. பெயர் தான் வழக்கம் போல் மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! :)

    பதிலளிநீக்கு
  43. பார்கவியிடம் நெருங்கிப் பழகும் ஶ்ரீ மீனலோசனியிடம் அதைவிட அதிகமாக நெருங்கிப் பழகுவது கொஞ்சம் இல்லை எனக்கு நிறையவே இடிக்கிறது. மீனலோசனியின் சுபாவம் அது என வைத்துக் கொண்டாலும் ஶ்ரீ அதை அனுமதித்திருப்பது???????

    பதிலளிநீக்கு
  44. ஹிஹிஹி, எல்லோரும் தூங்குங்க! காலம்பர வந்து பதில் சொன்னால் போதும்! :)))

    பதிலளிநீக்கு
  45. நட்பை அப்படியே தொடர விரும்பும் ஒருவர், அதை காதலாக மாற்ற விரும்பும் மற்றொருவர், இந்த இருவரின் உறவை அழகாக சித்தரித்துள்ளார் கதாசிரியர். பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  46. நன்றாக எழுதியிருக்கிறீர்கள் மஞ்சுபாஷிணி! ஸ்ரீராம் அவர்களின் உபயத்தால் காணாமல் போனவர்கள் எல்லாம் இங்கு வந்து பார்த்தால் கிடைக்கிறார்கள்!

    எப்படி இருக்கிறீர்கள் மஞ்சுபாஷிணி சம்பத்குமார்?

    பதிலளிநீக்கு
  47. அன்பு வணக்கங்கள் எல்லோருக்கும்.... உண்மையேப்பா... பணி பளு, அதோடு உடல்நலம் ஒத்துழைப்பது இல்லை.. அதான் கல் தேய்ந்து எறும்பாய், எறும்பும் தேய்ந்து இல்லாமல் காணாமல் போயே விட்டேன்.. வலைபூவிலிருந்தும் முகநூலில் இருந்தும். ஸ்ரீராம் எப்போதோ எனக்கு எழுதிய முகநூலில் மெசேஜ் நான் அதை விட ரொம்ப நாட்கள் கழித்து பார்த்து அதன் பின் பலமுறை மன்னிப்பு கேட்டு கதை அனுப்பி வைத்தேன். ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு.. இத்தனை காலம் இல்லை இல்லை எத்தனை காலம் கடந்து வந்தாலும் அணைத்துக்கொள்ள அன்பின் உறவுகள் இங்கே கிடைக்க எத்தனை நான் அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும்... என் அன்பு உறவுகள் நிறைய பேர்களை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. கதை வந்தாச்சு போய் பார் என்று ஸ்ரீராம் சொல்லி அதன்பின்னர் கோபு அண்ணாவும் வாட்சப்பில் மஞ்சு உன் கதை வந்திருக்கு போய் பார் என்று சொல்லி.... இதோ இப்ப தான் வந்து பார்க்க முடிந்தது. அனைவருக்குமே மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா... இனி ஒவ்வொருவரின் கமெண்ட்டும் வாசித்து பதிகிறேன் என் நன்றிகளை. வாய்ப்பு தந்த ஸ்ரீராமுக்கும் அழைத்து சொன்ன கோபு அண்ணாவுக்கும் , இங்கே அன்பு தூவலாய் விமர்சனத்தின் ஊடே என் நலனையும் கேட்டு அன்பையும் விதைத்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நிறைந்த அன்பு நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  48. //மனோ சாமிநாதன் said...
    நன்றாக எழுதியிருக்கிறீர்கள் மஞ்சுபாஷிணி! ஸ்ரீராம் அவர்களின் உபயத்தால் காணாமல் போனவர்கள் எல்லாம் இங்கு வந்து பார்த்தால் கிடைக்கிறார்கள்!

    எப்படி இருக்கிறீர்கள் மஞ்சுபாஷிணி சம்பத்குமார்?// அன்பு வணக்கங்கள் அம்மா, நலமே தாங்கள் சௌக்கியமா? ரொம்ப சந்தோஷமா இருக்கு. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  49. //Bhanumathy Venkateswaran said...
    நட்பை அப்படியே தொடர விரும்பும் ஒருவர், அதை காதலாக மாற்ற விரும்பும் மற்றொருவர், இந்த இருவரின் உறவை அழகாக சித்தரித்துள்ளார் கதாசிரியர். பாராட்டுக்கள்!// மனம் நிறைந்த அன்பு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  50. //Geetha Sambasivam said...
    ஹிஹிஹி, எல்லோரும் தூங்குங்க! காலம்பர வந்து பதில் சொன்னால் போதும்! :)))// அன்பின் கீதா சௌக்கியமாப்பா? ரொம்ப சந்தோஷம் உங்களை சந்தித்தது.. சரி சரி திட்டாதேங்கோ... இம்முறை ஊருக்கு வந்தால் சமர்த்தா உங்களை பார்க்க வரேன். :) மீனலோசனி இன்னொரு ஸ்ரீன்னு நான் நினைக்கிறேன் :) எல்லார்ட்டையும் அன்பா இருப்பதால் பார்க்கவிக்கு அப்படி தோணித்தோ என்னவோ.. :).. ஆனா ஸ்ரீக்கு துளி கூட அப்படி ஒரு எண்ணம் இல்ல...

    பதிலளிநீக்கு
  51. //இருவரின் மாறுபட்ட எண்ணங்களை கதையாக்கி அதைச் சொன்ன விதம் அழகாக இருக்கிறது.

    தேர்ந்த கதை சொல்லலுக்கு கதாசிரியருக்கு வாழ்த்துக்கள்.// அன்பு நமஸ்காரங்கள் ஜீவி சார்... ரொம்ப சந்தோஷம் உங்களை சந்தித்தது. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  52. அதிரா ஆஞ்சலின் ரெண்டு பேரையும் ரொம்ப வருஷங்கள் கழிச்சு பார்த்தது ரொம்ப சந்தோஷம்.. என்ன இப்படி கலாட்டா ரெண்டு பேரும் :) பாவம் ஸ்ரீராம்... :) எப்படி இருக்கீங்க ரெண்டு பேரும்... மனம் நிறைந்த அன்பு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  53. //Bagawanjee KA said...
    நட்பின் மகிமை புரிந்தது பின்னூட்டங்களால்:)// உண்மையே.... மனம் நிறைந்த அன்பு நன்றிகள்..:)

    பதிலளிநீக்கு
  54. //கரந்தை ஜெயக்குமார் said...
    அருமையான கதை
    நட்பின் பெருந்தக்க யாவுள // மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சார்.

    பதிலளிநீக்கு
  55. //Puthiyamaadhavi Sankaran said...
    More than the short story writers friends r more interesting and iam do proud of her friends// me too.. i should thank Mr Sriram really for this.

    பதிலளிநீக்கு
  56. //வை.கோபாலகிருஷ்ணன் said...
    7)

    நான் ஏற்கனவே மஞ்சுவின் பதிவினில், இந்தக்கதைக்குக் கொடுத்துள்ள பின்னூட்டத்தையே இங்கும் கொடுக்க நினைக்கிறேன் ..... அன்றொரு பேச்சு, இன்றொரு பேச்சு என இருக்கக்கூடாது என்பதால் மட்டுமே. // சரி தான் அண்ணா... மனம் நிறைந்த அன்பு நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  57. //விஸ்வநாத் said...
    உண்மை. கதை அருமை.// மனம் நிறைந்த அன்பு நன்றிகள் !

    பதிலளிநீக்கு
  58. //G.M Balasubramaniam said...
    நட்பும் காதலும் என்று இருந்திருக்கலாம் இரு பால்களுக்கிடையே வித்தியாசம் மயிரிழைதான் சொல்ல வந்ததை நன்கு சொலிச் சென்றிருக்கிறார் வாழ்த்துகள்// அன்பு நமஸ்காரமும் நன்றிகளும் சார்..

    பதிலளிநீக்கு
  59. //கீத மஞ்சரி said...
    யதார்த்தத்தை மிக அழகாக உரைக்கும் பாத்திரமாய் ஸ்ரீ.. கதை மிக அருமை.. பாராட்டுகள் மஞ்சு... பகிர்வுக்கு நன்றி.// ஹேஏஏஏஏஏஏ கீதமஞ்சரி எப்படி இருக்கீங்க? ரொம்ம்ம்ம்ம்ப சந்தோஷம் உங்களை பார்த்தது. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  60. //Asokan Kuppusamy said...
    வித்தியாசமானகதை// மனம் நிறைந்த அன்பு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  61. //Anuradha Premkumar said...
    வித்தியாசமான கண்ணோட்டத்தில் நட்பு...அருமை// மனம் நிறைந்த அன்பு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  62. //கோமதி அரசு said...
    கதை நன்றாக இருக்கிறது.மஞ்சுக்கு வாழ்த்துக்கள்.
    உங்களுக்கு நன்றி ஸ்ரீராம். // மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா..

    பதிலளிநீக்கு
  63. //middleclassmadhavi said...
    அருமையான கதை! ஸ்ரீயின் காரக்டர் சூப்பர்ப்!
    மிஸ்ஸிங் யூ மஞ்சு மேடம்!//நானும்பா... சௌக்கியமாப்பா? வலம் வரும்போது எல்லோர் வீட்டுக்கும் வருவது போன்று ஒரு உணர்வு இருக்கும். மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா...

    பதிலளிநீக்கு
  64. //Thulasidharan V Thillaiakathu said...

    கீதா: அட! மஞ்சுபாஷினி! உங்களுக்கு என்னை நினைவிருக்கிறதா? நாம் ஒரு முறை புலவர் ஐயா வீட்டில் ஆவி, கணேஷ் அண்ணா, சேட்டைக்காரன் அண்ணா, கார்த்திக் சரவணன் எல்லோரும் சந்தித்தோம். // அட கீதா.. நல்லா நினைவிருக்குப்பா.. :) எப்படி இருக்கீங்க? மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா..

    பதிலளிநீக்கு
  65. //KILLERGEE Devakottai said...

    இன்னும் எழுத நினைக்கிறேன் இருந்தாலும் குவைத் பார்ட்டியை நினைத்தால் பயமாக இருக்கு ஆகவே நான் எஸ்கேப் // எப்படி இருக்கீங்க? :) ஆரோக்கியமான விவாதம் உடலுக்கு நல்லதோ இல்லையோ தெரியாது? ஆனால் எழுதற நமக்கு இது அவசியமாகுது. ஐயோ என்னை பார்த்து நீங்க பயப்படறீங்களா? உங்களை பார்த்து தான் நான் பயப்படுவேன். எனக்கு தோணினதை நான் எழுதினேன். அவ்வளவேப்பா.. ஜீவி சார், கீதா சாம்பசிவம் எழுதி இருக்காங்க பாருங்க. எப்படி இருக்கீங்க? சௌக்கியமா? மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா..

    பதிலளிநீக்கு
  66. //வெங்கட் நாகராஜ் said...
    நல்ல கதை. நட்பும் காதலும் தனித்தனி பாதை.... சேர்ந்து விட்டால் குழப்பம் தான்.... பாராட்டுகள் மஞ்சுபாஷிணி.... // ஆஹா வெங்கட் :) எப்படி இருக்கீங்க? ஆதி, குழந்தை சௌக்கியமா? மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா..

    பதிலளிநீக்கு
  67. //Geetha Sambasivam said...
    அது சரி, காமாட்சி அம்மா என்ன ஆனாங்க? அநேகமா ரஞ்சனிக்குத் தெரிஞ்சிருக்கும்!// எனக்கு தெரியலையேப்பா.. ரஞ்சனி அவங்க கிட்ட கேட்டு பார்த்தீங்களா?

    பதிலளிநீக்கு
  68. //நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    ம்...// :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  69. //திண்டுக்கல் தனபாலன் said...
    காலம் அனைத்தையும் ஒருநாள் மாற்றும்... ஸ்ரீ செய்தது திடமான முடிவு...// அன்பு வணக்கஙகள் தனபாலன் சார். சௌக்கியமா நீங்க? மனம் நிறைந்த அன்பு நன்றிகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!