வெள்ளி, 1 செப்டம்பர், 2017

வெள்ளி வீடியோ 170901 :: குளிரெடுக்கும் சாரலுக்கு குடை பிடிக்க வா மயிலே...





காட்சியையும் ரசிக்கலாம்,  பாடலையும் ரசிக்கலாம். 


     நாட்டுப்புறப் பாடல் சாயலில் அமைந்த பாடல்.  தாகமுள்ள மச்சானுக்கு மேகத்தைத் தூதாக விட்டால் காற்றில் திசை மாறி விடும் என்று தண்ணீரைத் தூதாக விடும் காதலி.  தண்ணீருக்கு ( தண்ணீர் வழியாக) அவள் தந்து அனுப்பும் முத்தங்களை எண்ணிக்கைக் குறையாமல் திருப்பிக் கேட்கிறாள் அந்த அன்புக் கடன்காரி!    என்னவொரு கற்பனை....

     அந்த கிராமத்துக்கிளியை குளிரடிக்கும் சாரலுக்கு குடை பிடிக்க கூப்பிடுகிறான் காதலன்.  காதலி நனைத்த துணிகளை அவள் பிழிந்தால் நீர் வருமாம், அத்தை மகன் ( அயித்த மகன் ! ) இவன் பிழிந்தால் அத்தனையும் தேனாக வருமாம்.  ஆசையை தூது  விட அருவி ஒரு பாலம் என்று காதலி சொல்ல, அருவி போல அழுகிறேனே, அறிந்து கொள்ளக் கூடாதா, முந்தானையின் ஓரம் என்னை முடிந்து கொள்ளக் கூடாதா என்று பதிலுக்குக் கேட்கும் காதலன்..

     சுசீலாம்மாவின் குரலும் சரி, கிராமத்துப் பாடலுக்கு ஏற்றவாறு பாடி இருக்கும் மலேஷியா வாசுதேவன் குரலும் சரி....   இனிமை.  வைரமுத்துவின் வரிகளுக்கு வி எஸ் நரசிம்மன் இசை. 


     பல ஒலித் தொகுப்பிலும் இந்தப் பாடலுக்கு இசை இளையராஜா என்றே இருக்கும்.  இந்தப் பாடல் மட்டுமல்ல, தேவேந்திரன் இசையில் கண்ணுக்குள் நூறு நிலவா போன்ற பாடல்களும் இசை இளையராஜா என்றுதான் இருக்கும்.    அப்படி ஒரு தாக்கத்தை, மாற்றத்தை இளையராஜா ஏற்படுத்தியிருந்த நேரம்.  வாலி பாடல்கள் பலவற்றை கண்ணதாசன் பாடல்கள் என்றே நினைப்பார்களாம்.  அது போல.





     சரிதா நல்ல ஒரு ஆர்ட்டிஸ்ட்.  அவரின் வெட்க முகபாவங்களும், குறும்பு போஸ்களும் ரசிக்க வைக்கும்.  குறிப்பாக "பாதம் பட்ட மண்ணை எடுத்து  பல்லு விளக்கப் போறதெப்போ..." வரிகளைத் தொடர்ந்த அவரின் முகபாவம்.    ராஜேஷ்...... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....!



56 கருத்துகள்:

  1. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஓகே!

    பதிலளிநீக்கு
  2. அருமையான பாடல் இதே திரைப்படத்தில் ஆவாரம்பூவு ஆறேழு நாளா " பாடலில் வரும் ஹம்மிங்கோடு வரும் இசையை கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன் அதே இசையோடு பாடலும் முடியும் . பாடல் வரிகளும் முத்தானவை இருப்பினும் தேவேந்திரன் போன்ற சில இசையமைப்பாளர்கள் இளையராஜா எனும் காட்டாற்று வெள்ளத்தில் கரைந்து போனார்கள் மற்றொரு உதாரணம் ஹம்சலேகா , பால பாரதி

    பதிலளிநீக்கு
  3. "தாகமுள்ள மச்சானுக்கு" என்பதைப் படிக்கும்போதே முழுப் பாடலும் நினைவுக்கு வந்துவிட்டது. நீங்கள் குறிப்பிட்டிருந்தபடி, இளையராஜா என்றுதான் தோன்றியிருக்கும். ராஜேஷ் சரிதா இருவரும் நல்ல ஆர்டிஸ்ட்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான பாடல். இதே போன்று பழைய பாடல் ஒன்றும் உள்ளது. ஆரம்ப வரிகள் மட்டும் ஒன்றுபோலிருக்கும். \\பாதம் பட்ட மண்ணை எடுத்து பல்லு விளக்கப் போறதெப்போ..\\ இந்த வரிகள் பற்றி முன்பு யாரோ எழுத வாசித்த நினைவு.. காலையில் எழுந்தவுடன் வீட்டைச் சுற்றியுள்ள இடத்திலிருந்துதான் மண்ணெடுத்து பல் விளக்கவேண்டும். காதலனின் பாதம் பட்ட மண்ணை எடுக்கவேண்டும் என்றால் அவனது வீட்டில் அவனது மனைவியாக வாழ்ந்தால்தான் முடியும் என்பதால் என்னை சீக்கிரம் மணந்துகொள் என்று அவனை மறைமுகமாகக் கேட்பதாக வாசித்த நினைவு.. ஒற்றை வரிக்குள் எவ்வளவு அர்த்தங்கள்..

    பதிலளிநீக்கு
  5. அருமையான பாடல் ஸ்ரீராம் ஜி
    கண்ணுக்குள் நூறு நிலவா இசை தேவேந்திரன் என்பது தெரிந்த விடயம்.

    இப்பாடலுக்கு இசை வி.எஸ்.நரசிம்மன் என்பது தெரியாத விடயம் நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அருமை, பாடலும் பகிர்வும்.

    /\பாதம் பட்ட மண்ணை/ கீதா தந்திருக்கும் தகவல் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  7. நடிகை சாவித்திரிக்குப் பின் வந்த நடிகைகளில் நடிப்பில் நான் அதிகம் ரசித்தது சரிதாவை.

    பதிலளிநீக்கு
  8. நல்லதொரு பாடல் .. அவ்வப்போது நினைவில் வந்து போகும்..

    அதிலும், ஆவாரம் பூவு.. ஆறேழு நாளா .. - என்ற பாடல் மிகவும் பிடித்தது..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  9. சிம்லா ஸ்பெஷல் என்ற படத்தின் பாடல் - உனக்கென்ன மேலே நின்றாய்.. ஓ நந்தலாலா!..

    மெல்லிசை மன்னர் இசையமைத்த இந்தப் பாடலை இளையராஜாவின் இசைத் தொகுப்புகள் பலவற்றில் கண்டிருக்கின்றேன்...

    அதேபோல நடிகர் திலகம் நடித்த (சிவாஜி என்று எழுதினால் ஜிவாஜி என்று படிக்கின்றார்கள்!..) தத்துவப் பாடல்கள் என்ற தொகுப்புகளில் வீடு வரை உறவு என்னும் பாடலையும் காணலாம்.. அது அசோகன் நடித்த பாடல்(படம் - பாதகாணிக்கை)...

    இன்னும் எத்தனையோ இவைகளைப் போல!..

    பதிலளிநீக்கு
  10. பாடலும் சரிதாவின் நடிப்பும் பிடிக்கும்.
    பாடல் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. அருமையான கிராமிய பாடல் பகிர்வுக்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  12. திரையிசைப் பாடல்களை வெகுவாக ரசிக்கிறீர்கள் போல

    பதிலளிநீக்கு
  13. ஆஹா... ஸ்ரீராம் பாட்டில் மயங்கி.. சொக்கிப் போயிட்டார்ர்ர்ர்ர்ர்... இனி வழமைக்குத் திரும்ப நாளாகும் என்பது.. பாட்டுக்காக அவர் கொடுத்த விளக்கத்திலிருந்து தெரியுது..

    மிக அருமையான பாடல்.. காட்சிகள் அற்புதம்... அந்த நீர் ஓடை.. செயற்கையாக இருக்குமோ.. கொள்ளை அழகாக இருக்குது..


    ஆங்ங்ங்ங்ங் இருப்பினும் இன்று வெள்ளிக்கிழமை .. இன்று போய் இப்படி அசைவப் பாடலைப் போட்ட ஸ்ரீராமுக்கு என் கண்டனங்கள்:))... ஹையோ ஆராவது என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்ங்:)..

    பதிலளிநீக்கு
  14. அருமை யான பாடல். பாசம்,காதல், இன்னும்
    இசை நடிப்பு. கூடுதல் செய்திகள்.
    கீதமஞ்சரியின் மண் பற்றிய தகவல்
    அனைத்துமே நல்லது.
    எங்கள் வீட்டு மண்ணில் இப்போது உரமாக இருப்பவை அங்கே
    இருப்பவர்களின் உமிழ் நீர். சிரிப்புதான் வருகிறது.
    சரிதாவின் முகம் ஒரு காவியம்.

    பதிலளிநீக்கு
  15. சுசீலாவின் குரல், நரசிம்மனின் இசை நன்றாக இருக்கிறது. இப்போதுதான் நான் இதனைக் கேட்கிறேன்.சரிதா ஒரு அபாரத்திறனுள்ள நடிகை. அவரை இன்னும் நிறையப்படங்களில் நமது இயக்குனர்கள் பயன்படுத்தியிருக்கலாம். சமீபத்தில் பாரதிராஜாவின் வேதம் புதிது மீண்டும் பார்க்க நேர்ந்தது. அதில் பேச்சி ஆச்சியாக அவர் எப்படித்தான் நடித்திருக்கிறார். அவார்ட் ஏதும் இவருக்குக் கிடைத்ததா இல்லையா?

    சிவந்த மச்சான் என்று கேட்டுக்கொண்டே ராஜேஷைப் பார்ப்பதில் சிரமம் இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  16. கீதாக்கா.... அவ்வளவுதானா பின்னூட்டம்?

    பதிலளிநீக்கு
  17. வாங்க விமல்... முதல் வருகை? ஆவாரம்பூவு பாடல் கூட மிகவும் பிடிக்கும். நீங்க சொல்வது போல அந்த ஹம்மிங்! ஹம்சலேகா சரி, கொடிபறக்குது, பருவராகம் போன்ற படங்களின் இசை அமைப்பாளர்.

    பாலபாரதி? யாரென்று தெரியவில்லையே?

    பதிலளிநீக்கு
  18. வாங்க நெல்லைத்தமிழன்.. வரவர சுருக்கமாக பின்னூட்டம் அடிக்கிறீர்களா அல்லது அதிராவின் பின்னூட்டங்களுக்கு முன்னால் நம் எல்லார் பின்னூட்டங்களும் சிறிதாகத் தெரிகிறதா? முன்னர் மஞ்சுபாஷிணி சம்பத்குமார் இப்படி பெரிய பின்னூட்டங்களுக்கு உரிமையாளர்!

    பதிலளிநீக்கு
  19. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  20. வாங்க கீதமஞ்சரி.. அபூர்வ வருகை! வருக... வருக.. எனக்கு அந்த வரி கொஞ்சம் குமட்டினாலும், அன்பினால் ஏற்பட்ட கற்பனை என்று விட்டு விட்டேன்! அதீத அன்பாயிருக்கவேண்டும்!

    பதிலளிநீக்கு
  21. வாங்கி மிடில்க்ளாஸ்மாதவி..... உங்களுக்கும் பிடித்த பாடல், முணுமுணுக்கும் பாடல் என்பதில் பகிர்ந்த எனக்கு ஒரு சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  22. வாங்க கில்லர்ஜி. பாலச்சந்தருக்கும் இளையராஜாவுக்கும் ஏதோ மனத்தாங்கல் வந்த நேரம் என்று நினைக்கிறேன். இவரையும், பிறகு மரகதமணியையும், அதன்பின்னர் ஏ ஆர் ரஹ்மானை அறிமுகப்படுத்தியதும் நிகழ்ந்தது.

    பதிலளிநீக்கு
  23. வாங்க முனைவர் ஐயா... சந்தேகமில்லாமல் சரிதா நல்ல நடிகைதான். தப்புத்தாளங்கள், அக்னி சாட்சி, வேதம் புதிது போன்ற படங்கள் சாட்சி!

    பதிலளிநீக்கு
  24. வாங்க துரை செல்வராஜூ ஸார்... ஆவாரம்பூவு பாடல் எனக்கும் பிடிக்கும். மேலும் அதில் எஸ் பி பி வேறு!

    பதிலளிநீக்கு
  25. @துரை செல்வராஜூ ஸார்.. ஆமாம்... உனக்கென்ன மேலே நின்றாய் இளையராஜா லிஸ்ட்டில் இடம் பெற்றிருப்பதை நானும் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  26. "தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத....." இதுவும் உங்கள் பணியின் ஒரு அங்கமோ விஜய்?

    பதிலளிநீக்கு
  27. நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி.

    பதிலளிநீக்கு
  28. வாங்க ஜி எம் பி ஸார்...

    //திரையிசைப் பாடல்களை வெகுவாக ரசிக்கிறீர்கள் போல//

    தப்பா? :)))

    மனதை லேசாக்கும் இசை. திரை இசைப் பாடல்கள் என்று இல்லை, கர்னாடிக் இசை கூட இஷ்டம்தான். ஆனால் அதை பகிர்ந்தால் ரசிப்பவர்கள் குறைவு.

    பதிலளிநீக்கு
  29. வாங்க அதிரா...

    //ஸ்ரீராம் பாட்டில் மயங்கி.. சொக்கிப் போயிட்டார்ர்ர்ர்ர்ர்...//

    பாட்டிலில் மயங்காமல் இருந்தால் சரி... (சிலர் குடிப்பது போலே நடிப்பார்...)

    //அந்த நீர் ஓடை.. செயற்கையாக இருக்குமோ.. //

    நிஜமான இடம். ஆனால் எந்த இடம் என்று நினைவில்லை. பட டைட்டில் போடும்போது கதாபாத்திரங்கள் பெயரோடு அருவி பெயரும் வரும் என்று ஞாபகம்.

    /// இப்படி அசைவப் பாடலைப் போட்ட ஸ்ரீராமுக்கு///
    அசைவமா? அபுரி.

    பதிலளிநீக்கு
  30. வாங்க வல்லிம்மா... நீங்களும் ரசித்தீர்களா பாட்டை? நன்றி.. நன்றி.

    பதிலளிநீக்கு
  31. வாங்க ஏகாந்தன் ஸார்... இந்தப் பாடலை நீங்கள் முதன்முறை கேட்கிறீர்கள் என்பது ஆச்சர்யம். பெரும்பாலும் தமிழ்நாட்டுக்கு வெளியே வசித்தவர் என்பதால் இருக்கலாம் இல்லையா? "செவத்த மச்சான்" - சினிமாவில் செவத்தவராகக் காட்டுவதில் என்ன கஷ்டம்!

    :)))

    பதிலளிநீக்கு
  32. அஜித்தின் முதல் படமான அமராவதி , மற்றும் தலைவாசல் படத்தின் இசை அமைப்பாளர் .

    பதிலளிநீக்கு
  33. ஓ... நன்றி விமல். நினைவுக்கு வருகிறது. இரண்டு படங்களிலுமே பாடல்கள் நன்றாகத்தான் இருந்தன. குறிப்பாக எஸ் பி பி குரலில் "வாசல்... இது வாசல்... தலைவாசல்.."

    பதிலளிநீக்கு
  34. உடனடி பதிலுக்கு நன்றி ஸ்ரீராம் அவர்களே

    பதிலளிநீக்கு
  35. பாடல் வரிகள், இசையமைப்பு மற்றும் காட்சிபடுத்தல் எல்லாம் ஒருசேர நன்றாக அமைந்த பாடல்...பகிர்வுக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  36. இந்தப் பாடலை நான் பல முறை கேட்டதுண்டு. அருமையான பாடல் மிகவும் ரசித்துக் கேட்ட பாடல். கேரளத்திற்குச் சென்றபின் கேட்டதே இல்லை. இப்போது மீண்டும் கேட்கக் கிடைத்தமைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.

    கீதா: மிக மிக அருமையான பாடல்!! ரசித்த பாடல். பல வருஷங்களுக்குப் பிறகு கேட்கிறேன்....பாலசந்தரின் படம் அச்சமில்லை அச்சமில்லை...ரசித்த படம் கதைக்காக. கல்லூரிக்காலம் அப்போது... சரிதா பின்னி பெடலெடுத்திருப்பார். ராஜேஷ் ஸ்ரீராம் சொல்லியிருப்பது போல் ம்ம்ம்ம்ம்ம்ம்....ஸோ ஸோ தான்...

    சுசீலா, மலேஷியா ரெண்டுபேரும் கலக்கல்!! இப்படத்தில் பாடல்கள் எல்லாம் நல்லாருக்கும். ஆவாரம் பூவு ஆறேழு நாளா பாடலும் செமையா இருக்கும்...வி எஸ் நரசிம்மன் வயலினிஸ்டட்டும் கூட..அவர் ஒரு சில படங்களுக்குத்தான் பாடல்கள் இசையமைத்துள்ளார். அவர் அதன் பின் என்ன ஆனார் என்று தெரியவில்லை...
    இது நரசிம்மன் என்பதும் தெரியும். ஆனால் கண்ணுக்குள் நூறு நிலவா இளையராஜா என்று நினைத்திருந்தேன் அது தேவேந்திரன் என்பது நீங்க சொல்லித்தான் தெரியும்.

    பகிர்விற்கு மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  37. ஸ்ரீராம் அதிரா அந்த அருவி நிஜ அருவி....எங்க ஊராக்கும் தின்னவேலி!!!!! பாபநாசம் பாண தீர்த்தம், குற்றாலம் பக்கம் தான் எல்லாம்... இந்தப் படம் முழுவதுமே அந்த சைடில்தான் எடுத்திருந்தார் பாலச்சந்தர். பேச்சுவழக்கும் தின்னவேலி பேச்சுவழக்கு....

    ரோஜா படத்தில் கூட சின்ன சின்ன ஆசையில் வருவது வானதீர்த்தம் அருவியாக்கும்!! அங்கு ஒரு பிள்ளையார் உண்டு..மதுபாலா கூட அந்தப் பிள்ளையாரிடம் வேண்டுவாரே...ரோஜாவிற்குப் பிறகு ரோஜா பிள்ளையார் ஆகிவிட்டார்!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  38. நெல்லை ஏன் சொல்லவில்லை? அவர் ஊரும் ஆச்சே!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  39. ஸ்ரீராம் சினிமாவில் அசைவம் என்றால் கொஞ்சம் அப்படியும் இப்படியுமான பாடல்!! ஆனால் இந்தப் பாடலில் அப்படி என்ன காட்சி வந்துவிட்டது??!! அதிரா? ஓ ஒருவேளை ராஜேஷ் குளிப்பதைச் சொல்லுகின்றீர்களோ?!!! ஹாஹாஹாஹாஹா....சரிதா சும்மாத்தானே தண்ணியில படுத்து விளையாடறாங்க...ஹிஹிஹி...

    சில காட்சிகள் குற்றாலம் நீர்வீழ்ச்சியில் எடுத்திருப்பது போல் உள்ளது....இறுதிக் காட்சிகள்...

    கீதா

    பதிலளிநீக்கு
  40. /// ஸ்ரீராம். said...
    இப்படி அசைவப் பாடலைப் போட்ட ஸ்ரீராமுக்கு///
    அசைவமா? அபுரி.///
    ஹையோ வரவர புதுசு புதுசா பாசை பேசுறாரே.:) அபுரி:) க்கு விளக்கம் சொன்னா.. நான் பொறுக்கி வச்சிருப்பேனெல்லோ:)..

    ஓ நிஜ அருவியோ? நான் கேட்டது ஆரம்பம் சரிதா குடத்தோடு இறங்கி 3 தரம் குடிப்பாவே அந்த தண்ணி படு நீலமாக இருக்கே.. அதுதான் என்னால் நிஜமா என நம்ப முடியவில்லை... என்னா ஒரு அழகூஊஊஊஊஊஊ..

    கீதா.. பக்திப் பாடல்களைத் தவிர.. இருகுரல் பாடல்கள் அனைத்தும் அசைவம்தான்.. :) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  41. அருமையான பாடல்! இசை! காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது! த ம 15

    பதிலளிநீக்கு
  42. ஆஹா துளஸிஜி... நீங்கள் ரசித்த, உங்களுக்குத் பிடித்த ஒரு பாடலை மறுபடி உங்களுக்குக் கேட்கக் கொடுத்திருக்கிறேன். சந்தோஷமாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  43. வாங்க கீதா ரெங்கன்... உங்களுக்கும் அதே அனுபவம்! நரசிம்மன் வயலனிஸ்ட். ஆமாம், இந்த விவரம் நான் சொல்ல மறந்து விட்டேன்!

    பதிலளிநீக்கு
  44. @கீதா ரெங்கன்... ஆ... உங்கள் ஊரா? ஆமாம், நீங்கள் சொன்னதும் நினைவுக்கு வருகிறது! ஆமாம், 'நெல்லை' ஏன் சொல்ல 'வில்லை'?

    அப்புறம் இதில் என்ன அசைவம்? இதைவிட அசைவம் எல்லாம் இருக்கே... அசைவம் என்றால் இதுதான் அர்த்தமா?

    பதிலளிநீக்கு
  45. வாங்க அதிரா...

    //ஹையோ வரவர புதுசு புதுசா பாசை பேசுறாரே.:) அபுரி:) க்கு விளக்கம் சொன்னா.//
    அபுரி என்றால் புரிவதற்கு ஆப்போசிட்! புரியலை என்று அர்த்தம்!!!

    பதிலளிநீக்கு
  46. நன்றி ராமலக்ஷ்மி..

    :)))

    எப்படியோ விட்டுப்போயிருக்கிறது!

    ///\பாதம் பட்ட மண்ணை/ கீதா தந்திருக்கும் தகவல் சுவாரஸ்யம். //

    ஆமாம். ஒரு தகவல் பகிர்ந்தால் அதிலிருந்து மேலும் சில தகவல்கள் வாசகர்கள் மூலம் கிடைப்பது ஒரு சுவாரஸ்யம்! படிப்பவர்கள் தங்களை பதிவுடன் இணைத்துக் கொள்வதால் வரும் விளைவு. அதே போல காக்கைக் கவிதை பற்றி சிலாகித்திருக்கும் திரு ஏகாந்தன் ஸாரின் பதில் செயல்பாடு வரும் வியாழன் வெளிவரும்!

    பதிலளிநீக்கு
  47. /பதில் செயல்பாடு வரும் வியாழன் வெளிவரும் /

    காத்திருக்கிறோம்:)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!