புதன், 27 செப்டம்பர், 2017

பு பு த தி ன் ர் – பத்திரிகைகள் வாசிப்பு அனுபவம் பெற்றவரா நீங்கள்? சோதிக்கிறேன்... நெல்லைப் புதிர்!






அன்புள்ள ஸ்ரீராம்,

புதன் புதிர் பதிவு பார்ட் 1 ‘எங்கள் பிளாக்கிற்கு.   பார்ட் 2, அடுத்த வாரத்துக்கு, விரைவில் அனுப்பறேன்.

பொதுவா கௌதம் சார் புதிர்கள் போடுவார்.  நம்பர் வைத்து விளையாடுவது அவரோட ஏரியா என்பதால் நான் இலக்கியம், சினிமா, ஓவியம்னு எடுத்துக்கொண்டுள்ளேன். 

இதுல ஒரு பிரச்சனை. அதற்கு முந்தைய வாரப் புதிருக்கு கௌதமன் சார் விடை எங்க எழுதுவார்? அந்த இடுகையிலேயே எழுதிடலாமே. 

ஏனென்றால், அவர் போன முறை, ‘புதன் புதிர்’ என்னோடது வந்தபோது, அவரது முந்தைய ‘புதன் புதிர்’ விடைகளையே எழுதின மாதிரி ஞாபகம் இல்லை.

 ==========================&*&*&*=======================&*&*&*===================

புதன் புதிர் – பத்திரிகைகள் வாசிப்பு அனுபவம் பெற்றவரா நீங்கள்? சோதிக்கிறேன்-பார்ட் 1

மீண்டும் ‘புதன் புதிர்’ கேள்விகளோடு வந்திருக்கிறேன். 

கஷ்டமாயிருக்குமோ என்று எனக்கு ஒரு சந்தேகம். நான் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நிறைய புத்தகங்கள், அதிலும் ‘அனுபவங்கள்’, ‘கட்டுரைகள்’ படிப்பவன். நிறைய புதிய செய்திகள் தெரிந்துகொள்வேன் (நாவல் படிப்பதால், புதிதாக ஒன்றைத் தெரிந்துகொள்ள முடியாது, ஆனால் வாழ்க்கைக்கு உண்டான கருத்துக்களைத் தெரிந்துகொள்ளலாம். நாவல்கள் பெரும்பாலும் சமூகத்தைக் காட்டும் கண்ணாடி அல்லது சமூகம் போகும், போகவேண்டிய பாதையைச் சொல்லும்). அதில் பல செய்திகள் மிகவும் வியப்பாக இருக்கும். அதனைப் பகிர்ந்துகொள்ளும் விதமாகவும் இந்த ‘புதன் புதிர்’ பகுதியைப் பயன்படுத்துகிறேன். உங்களுக்கு, இதற்கான விடை தெரியும்போது, படித்திராத ஒன்றைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கலாம். இதற்கான விடைகள் நாளை மாலைக்குள் இங்கேயே சொல்லுகிறேன். வாழ்த்துக்கள்.



1.   இதை யார் எழுதியிருக்க/சொல்லியிருக்கக்கூடும்?

(அ) சென்ற மாதம், அவர்களுடைய பாஷையை கவனமாகப் படித்துவந்தேன். அதைப் படிக்கப் படிக்க அம் மொழியிலுள்ள அழகு அதிகமாகத் தெரிகிறது. நேர்த்தியான மொழி அது; அமுதம் போன்றது. தமிழர்களுக்கிடையே முன்னாளிலும் இன்நாளிலும் அநேக ஞானிகளும் நுண்ணறிவாளர்களும் இருந்திருக்கிறார்கள். இந்தியா முழுமையும் ஒரே ஜனாங்கமாக ஏற்படவேண்டுமானால், சென்னை மாகாணத்திற்கு வெளியில் உள்ளவர்களும் தமிழ் மொழியைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

(ஆ) எழுதுபவன் வேறு யாரையும்விட இந்தச் சமுதாயத்துக்குச் சம்பந்தப்பட்டவன். அப்படி சம்பந்தப்படாதவர்களாகத் தங்களைக் கருதுகிற எழுத்தாளர்கள் இந்தச் சமுதாயப் பிரச்சனைகளைத் தொடும்போதெல்லாம் தவறு செய்கிறார்கள். பல வருஷங்களுக்கு முன்னால் ஒரு கதை படித்தேன். அதில் தலைமறைவாகத் தன் வீட்டில் தங்கியிருக்கின்ற தொழிற் சங்கத் தலைவரைப் போலீஸ் கைது செய்ய வரும்போது தன் மடியிலிருந்து பால் குடித்துக்கொண்டிருகிற குழந்தையை, அந்தப் போலீஸ்காரர்களுக்கு முன்னால் தரையிலே அறைந்து கொன்றுவிடுகிறாள் ஒரு தாய். அதைக் கண்டு போலீஸ்காரர்கள் பயந்தும் திகைத்தும் நிற்கையில் அந்தத் தொழிற்சங்கத் தலைவர் தப்பி ஓடிவிடுகிறார். இந்தக் கதையைப் படித்து நான் மிகவும் வருத்தப்பட்டதுண்டு. கடமையைச் செய்யப் போன இடத்தில் ஒரு கொடுமையைக் கண்டு திகைத்து, கடமையை மறந்து நின்ற போலீஸ்காரர்களையே என் மனம் வாழ்த்தியது.

(இ) எனவே அடுத்த முறை, நடிகை மீனா புது வீடு மாற்றியதைப் பற்றிப் படிக்கும்போது அந்த அரிய மூளையை எத்தனை வேஸ்ட் பண்ணுகிறீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். இருபதிலிருந்து இழக்க ஆரம்பித்த மூளைத்திறன் ஐம்பதுக்குப் பின் அதிகமாகவே குறைகிறது. வேகமாகவே குறைகிறது. கிழவாடிகள் எல்லாம் நாட்டை பரிபாலனம் பண்ணுவது அனுபவத்தின் பலத்தினால்தான். அந்த அனுபவ வாய்ப்பைச் சின்னவர்களுக்கே கொடுத்தால் வயசானவர்களைவிட நன்றாகவே செயல்படுவார்கள்.  மேதை வேறு. மேதை என்பது சிறந்த வித்வான், செஸ் ஆட்டன், கவிதைக்காரன், பிலாசபிப்பவன் போன்றவர்கள். உயிர்வாழ நேரடியாகத் தேவையில்லாத சமாச்சாரங்களில் முழுத்திறம் பெற்று மலர்வதற்குக் கொஞ்சம் வருஷம் ஆகிறது. அவர்களில் கவிஞர்கள் 25-லிருந்து 29வரை மகத்தான காவியங்கள் செய்கிறார்கள். தத்துவஞானிகளுக்கு உலகம் புரிய 35 வயசாவது ஆகிறது. எழுத்தாளர்கள் 40 வயசானால்தான் அமர இலக்கியம் படைக்கிறார்கள். விதிவிலக்குகளும் உண்டு.



******



2.   படத்தில் உள்ளவர்கள் யார் என்று கண்டுபிடியுங்கள். ஆனால் இது கேள்வியில்லை. இந்தப் படம் எந்தச் சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்டது?



******



3.   நான் ‘………. ……..’யில் பாடுவதற்கு நிறைய எதிர்ப்பு இருந்தது. எதிர்ப்பு தெரிவித்தவர்களில் முக்கியமானவர் என் மதிப்புக்குரிய சிவாஜி கணேசன் அவர்கள் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். அவருக்குப் பின்னணி கொடுக்க அன்று அவருக்கு மிகவும் பிடித்தவர் ‘………………………….’தான். எனவே கிட்டத்தட்ட அனைவருமே நான் பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். கடைசியில் ஒரு முடிவு ஏற்பட்டது. எந்தவித ஒப்பந்தமும் இல்லாமல் மூன்று பாடல்களைப் பாடவேண்டும். எல்லோருக்கும் அந்தப் பாடல்கள் பிடித்திருந்தால் நான் அந்தப் படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்படலாம் என்ற முடிவுதான் அது.

இதில் குறிப்பிடப்படும் படம், பாடகர் (சிவாஜிக்குப் பிடித்தவர்), குறிப்பிடப்படும் மூன்று பாடல்கள் எவை?



******



4.   இந்தப் படத்தில் உள்ளவர் யார்? அவர் ஒரு சரித்திர புருஷர், உங்களுக்குத் தெரியும் அவர் உயிருடன் இல்லை என்பது. அவர் நடித்த படங்களில் வெள்ளிவிழா கண்ட படம் எது?






அன்புடன்

நெல்லைத்தமிழன்



===========================================================================


தமிழ்மணத்தில் இங்கு தொட்டு வாக்களிக்கலாம்.

59 கருத்துகள்:

  1. ஏதோ விழாவில் எடுத்தது போல் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. 1) அ) பாரதியார், ஆ) ஜெயமோகன் இ) சுஜாதா, 2) கண்ணதாசன் பிறந்த தினமோ என்று கெஸ்ஸிங், 3) தூக்குத்தூக்கி, சி.எஸ்.ஜெயராமன் (பேட்டி தந்தது டிஎம்எஸ்), முன்று பாடல்கள் / ஏறாத மலைதனிலே, சுந்தரி சௌந்தரி, குரங்கிலிருந்து. 4) ஆளே தெரியலை. ஙே....

    பதிலளிநீக்கு
  3. போட்டியில் கலந்துகொள்வதில்லை. ஆனால் ரசிப்பதுண்டு.

    பதிலளிநீக்கு
  4. 4. Image search says it is Rosa Parks, activist in Civil Rights movement, US. ??

    பதிலளிநீக்கு
  5. 1. இ : தலைவர் சுஜாதா!!! இதனை நான் அடிக்கடி சொல்வதுண்டு. இது அவர் மூளை நியூரான் என்றெல்லாம் எழுதிய போது சொல்லியிருப்பது....

    மற்றவை வருகிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  6. முதல்படம் கண்ணதாசன்..(அவரைத் தெரியாதா என்ன என்று கேட்பது தெரிகிறது...ஹிஹிஹி).மற்றவர்கள் தெரியவில்லையே...நிகழ்வெல்லாம் தெரியவில்லை...

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
  7. 1.ஆ. ஜெயகாந்தன்
    இ. சுஜாதா
    2. நடுவில் இருப்பது கண்ணதாசன், அவருக்கு இடதுபுறம் ஏதோவொரு சுப்பு
    3. மலேஷியா வாசுதேவன். பட்ம் மதல் மரியாதை?

    பதிலளிநீக்கு
  8. ஹையோ ஒண்ணுமே தெரியல எனக்கு :)
    வோட் மட்டும் போட்டுட்டு போறேன் அந்த தமிழ் மொழி பற்றி சிலாகித்தவர் மட்டும் ஜெமோ என்று நினைக்கிறேன் .

    பதிலளிநீக்கு
  9. கண்ணதாசன் அங்கிளை மட்டும் தெரியும்.... அந்தப் பெண் படம் நல்லாத் தெரிந்த முகமாக இருக்கே என யோசிச்சேன் ... கீழே சொல்லிட்டாங்க எல்லோரும் சுஜாதா என...:) ...

    பதிலளிநீக்கு
  10. //... அந்தப் பெண் படம் நல்லாத் தெரிந்த முகமாக இருக்கே என யோசிச்சேன் ... கீழே சொல்லிட்டாங்க எல்லோரும் சுஜாதா என...//

    புதிரைப் பார்த்து விதிர் விதிர்த்து நின்றேன் - ஒன்னு ரெண்டைத்தவிர ஒரு மண்ணும் புரியலையேன்னு. அதிராவின் பின்னூட்டத்தைக் கண்டதும் மனம் தெளிந்த நீரோடையாகிவிட்டது..

    பதிலளிநீக்கு
  11. Before going to this week puzzle what abt the answers for previous week's puzzle?
    For your kind information 'Engalblog' didn't provide 'answers to previous puzzles' at least 2 times, earlier.

    பதிலளிநீக்கு
  12. ///ஏகாந்தன் Aekaanthan ! said...
    //... அந்தப் பெண் படம் நல்லாத் தெரிந்த முகமாக இருக்கே என யோசிச்சேன் ... கீழே சொல்லிட்டாங்க எல்லோரும் சுஜாதா என...//

    புதிரைப் பார்த்து விதிர் விதிர்த்து நின்றேன் - ஒன்னு ரெண்டைத்தவிர ஒரு மண்ணும் புரியலையேன்னு. அதிராவின் பின்னூட்டத்தைக் கண்டதும் மனம் தெளிந்த நீரோடையாகிவிட்டது.. ///

    ஹா ஹா ஹா.. என்னால முடியல்ல முருகா:).. ஹா ஹா ஹா:)

    பதிலளிநீக்கு
  13. அச்சச்சோஓ இப்போ நான் குழம்பிட்டனே:) இவங்க எல்லோரும் சொன்ன சுஜாதா எழுத்தாளரோ?:).. ஹையோ முருகா.. அப்போ 4ம் நம்பரில் இருப்பது... ந்கேஙேஙேஙே.... இதுக்குத்தான் எதுவுமே சொல்லாமல் இருப்பது மேல் என அம்மம்மா அடிக்கடி சொல்லுவா:).. சே..சே..சே.. இப்போத்தான் ஏகாந்தன் அண்ணனின் தெளிந்த நீரோடைக்கான அர்த்தமே புரிஞ்சுது:)... ஹா ஹா ஹா ஹையோ வைரவா.. இப்பூடியான நேரங்களில் குறுக்கே நின்று என்னைக் காப்பாத்தக்கூடாதோ:)..

    பதிலளிநீக்கு
  14. ///Madhavan Srinivasagopalan said...//

    இதை நான் படு பயங்கரமாக ஆமோதிக்கிறேன்ன்.. என்னோடு கோபிச்சாலும் பறவாயில்லை... நானும் முன்பு மாய்ஞ்சூஊ மாய்ஞ்சூஊஊஊஊஊஊ.. நம்ப மாட்டீங்கள் கையில கொப்பி பென் எல்லாம் எடுத்து எழுதிக் கணக்குகள் பார்த்து ஓடி ஓடிப் பதில்கள் சொன்னேன்.. ஆனா அதுபற்றி எதுவும் விடைகள் வெளிவரவில்லை... அத்தோடு என் கிட்னியைப் போட்டுக் கசக்கிப் பதில் சொல்வதை நிறுத்தியிருந்தேன்:).

    பதிலளிநீக்கு
  15. ////... அந்தப் பெண் படம் நல்லாத் தெரிந்த முகமாக இருக்கே என யோசிச்சேன் ... கீழே சொல்லிட்டாங்க எல்லோரும் சுஜாதா என...////

    ஏகாந்தன் ஸார்.. என்ன நடக்கிறது? அதிரா நடிகை சுஜாதாவைப் பார்த்ததில்லையா? எழுத்தாளர் சுஜாதா ஆண் என்று தெரியாமல் இருக்குமோ? எனக்கும் புரியவில்லையே... தேம்ஸில் தண்ணீர் வற்றி விடும்!!!!

    பதிலளிநீக்கு
  16. athira said...
    கண்ணதாசன் அங்கிளை மட்டும் தெரியும்.... அந்தப் பெண் படம் நல்லாத் தெரிந்த முகமாக இருக்கே என யோசிச்சேன் ... கீழே சொல்லிட்டாங்க எல்லோரும் சுஜாதா என...:)



    அதிரா நீங்க சொல்றது அன்னக்கிளி அந்தமான் காதலி சுஜாதாவைத்தானே ??

    பதிலளிநீக்கு
  17. ஹையோ ஹையோ இந்தக் கொடுமையைக் கேட்க இங்கின ஆருமே இல்லையோ:).. நான் அர்ச்சுனன் மாதிரி:) எனக்கு குருவித்தலை மட்டும்தான் தெரியுமாக்கும்:) ஹா ஹா ஹா.. மேலிருந்து கீழே புதரை வெரி சோரி புதிரைப் படிச்சு வந்தேனா.. கண்ணதாசன் அங்கிளுக்குக் கீழே இருக்கும் படத்தில அந்தச் சொண்டைப்பார்க்க.. ஹையோ கொஞ்சம் நடிகை சுஜாத்தா அக்காவைப்போலவே இருக்கே என மனதில பிக்ஸ்ட் பண்ணிட்டு.. கொமெண்ட்ஸ் க்குள் கண்ணை மேலால மேய விட்டனா.. சுஜாதா.. சுஜாதா.. என கண்ணில பட்டுதா... ஹா ஹா ஹா அப்போ நாம நினைச்சது கரீட்டுத்தேன்ன்ன்ன் எனக் கன்ஃபோம் ஆச்ச்ச்ச்ச்ச்ச்:))..

    ஹா ஹா ஹா ஹையோ ஒரு விடை சொல்ல, ஒன்பது பக்கத்தில விளக்கம் சொல்ல வைக்கிறியே வைரவா:)..
    இப்போ எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீஈஈஈஈஈஈ கடேசிப்படத்தில இருப்பது அக்காவோ அண்ணாவோ:))..

    பதிலளிநீக்கு
  18. @ ஸ்ரீராம்: //எழுத்தாளர் சுஜாதா ஆண் என்று தெரியாமல் இருக்குமோ? எனக்கும் புரியவில்லையே...//

    லேட்டஸ்ட் ரிப்போர்ட்படி நெலமை ரொம்ப மோசமாயிடுச்சுன்னு கேள்வி..

    @ அதிரா: //இப்போ எனக்கொரு உண்மை .. கடேசிப்படத்தில இருப்பது அக்காவோ அண்ணாவோ://

    பதிலளிநீக்கு
  19. முதல் புதிர் பாரதி சொன்னது.
    படத்தில் இருப்பவர்கள் கண்ணதாசனோடு சங்கர், கணேஷ்?
    முதல் மரியாதை படத்தில் மலேஷியா வாசுதேவன் சிவாஜிக்காகப் பாடும்போது சொன்னதா மூணாவது?

    சரித்திர புருஷர்? யாருனு தெரியலை! பெண் வேடம் போட்ட ஆண் மாதிரித் தெரியறார். பாகவதரோ? ம்ம்ம்ம்ம் சினிமாவெல்லாம் ஒழுங்காப் பார்த்தாத் தானே தெரியறதுக்கு! இனிமேலே புதன்கிழமை எட்டிப் பார்க்கறதோடு நிறுத்திக்கணும்! :))))

    பதிலளிநீக்கு
  20. வானிலை மிக மிக மோசமானதால் மற்றும் சட்டென்று மாறியதாலும் :) அந்த நாலுகால் வால் பதிவர் ஸ்கொட்டிஷ் சீக்ரெட் பங்க்கரில் ஒளிந்துள்ளார் :) அவரை வெளியே வரவைக்க ஒரே ஒரு வேக வைத்த கோழி முட்டையை பங்கருக்கு 10 அடி தொலைவில் உருட்டினால் ஆவலுடன் வெளிவருவார் :)

    பதிலளிநீக்கு
  21. ஏஞ்சலின் - அதிரா நீங்க சொல்றது அன்னக்கிளி அந்தமான் காதலி சுஜாதாவைத்தானே ??

    அவருக்கு இதில் ஏதேனும் உள்குத்து இருக்குன்னு பயம். அதனால ரெண்டு படத்தையும் தேடி, முழுப் படத்தையும் பார்த்துட்டு ஆராய்ச்சி பண்ணித்தான் எழுதுவாங்க. ஏதேனும் அப்பாவிமாதிரி சொல்லி, எல்லோரும், 'புதிரை' விட்டுவிட்டு, அவரைக் கலாய்க்க ஆரம்பிக்கக்கூடாதே.

    பதிலளிநீக்கு
  22. 1.அ. தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர்
    2. MY God! கண்ணதாசனோடு இருப்பது சங்கர் கணேஷ் போல தெரிகிறதே..??

    பதிலளிநீக்கு
  23. தெளிவாய் புகைப்படத்தில் இருப்பவர் கண்ணதாசன். மற்றவர்கள் தெளிவாய் தெரியாத தால், தெளி்வாய் பதிலளிக்க இயலா ததற்கு, நீங்கள் தெளிவாய் புரிந்து கொள்ள வேண்டுகிறேன். தெளிவாய் த.ம. வாக்களித்தால், ஏற்கனவே வாக்களித்து விட்டதாக தெளிவாய் தெரிவிப்பதில், எனக்கு தமிழ்மணத்தில் ஏதோ கோளாறு என தெளிவாய் தென்பட்டது

    பதிலளிநீக்கு
  24. வெளியிட்டமைக்கு எங்கள் பிளாக் ஸ்ரீராமுக்கு நன்றி. புதிர் கஷ்டமாக இருக்கா? சுலபமா இருக்குமோன்னு நினைச்சேன். அடுத்த தடவை மிக சுலபமாகக் கண்டுபிடிக்கும்படி அனுப்பப்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  25. ஹாஅ ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர் நெ. தமிழன் .... நாட்டு நிலைமை இன்னும் மோசமாவதுக்குள் பதிலைச் சொல்லிடுங்கோ:)...

    ஆஆஆஆவ்வ்வ்வ்வ் இதுக்குத்தான்., இன்று உங்களுக்கு எப்படி? கேட்டிட்டுக் களமிறங்கு குழந்தாய் என தேம்ஸ்ஸானந்தா அடிகள் ஜொன்னார் :) மீ ஆர்வக் கோளாறில களமிறங்கிட்டேன்ன்ன் .... அப்படியிருந்தும் நல்ல தெளிவாத்தான் பாருங்கோ இருந்தனான்...

    ஆனா அஞ்சுதான் சொன்னா கடசிப் படம் 'புருஷர்' என இருக்கே அப்போ ஆண்தானே என..... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)...

    ஸ்ஸ்ஸ்ஸ் மீ சைவம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நோஓஒ அ. மு

    பதிலளிநீக்கு
  26. கடசிப் படம் 'புருஷர்' என இருக்கே அப்போ ஆண்தானே என..... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... - அப்படிக் கிடையாது. அது இருபாலாருக்கும் பொதுவான வார்த்தை.

    பதில் விரைவில் வரும் 'குழந்தாய்'

    பதிலளிநீக்கு
  27. ஹா ஹா ஹா....

    துரை அண்ணனைக் காணம் இண்டைக்கு , அவர் வந்திருந்தால் எனக்கு குளூக் கொடுத்திருப்பார் கண்டுபிடிக்க:)..

    பதிலளிநீக்கு
  28. @நெல்லைத்தமிழன் நானே இப்போ பயத்தில் இருக்கேன் சிலவேளை ரசிகர்களின் கோரிக்கைக்கிணங்க அன்னக்கிளி மற்றும் அந்தமான் காதலி பட விமரிசனங்கள் அங்கே வருமோன்னு :)

    பதிலளிநீக்கு
  29. முதல் கேள்வியில் ,முதல் பாராவைச் சொன்னவர், தமிழர் இல்லை. கர் நாடகா ஸ்ரீனிவாசமூர்த்தியாக இருக்குமோ

    பதிலளிநீக்கு
  30. ////அன்னக்கிளி மற்றும் அந்தமான் காதலி பட விமரிசனங்கள் அங்கே வருமோன்னு :)///
    சே சே பயப்பூடாதீங்க, நான் எழுத நினைச்சுக்கொண்டிருப்பது... சரத்பாபு அங்கிளின்... நான் உன்னை நினைச்சேன்... நீ என்ன நினைச்சே... பாடல் படம்... ஏதோ கண்கள் என வரும்.... கில்லர்ஜி பக்கம் பார்த்து, படம் பார்த்து முடிச்சிட்டனே:)...

    யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என நினைப்பது டப்பா அஞ்சூ?:)

    பதிலளிநீக்கு
  31. (அ) மகாத்மா காந்தி
    (ஆ) ஜெயகாந்தன்
    (இ) எழுத்தாளர் சுஜாதா

    (2) படத்தில் உள்ளவர்கள்

    (இடமிருந்து வலம்) சின்னப்பா தேவர், கண்ணதாசன், சங்கர் (கணேஷ்)

    சந்தர்ப்பம்: ஏதாவது தேவர் பட ஷூட்டிங் போது

    (3) அவருக்கு மிகவும் பிடித்தவர் செளந்திர ராஜன் தான்.

    (4) யாரோ இந்தி நடிகரின் களை இருக்கிறது.. ராஜ்கபூர்?.. (மேக் அப் மறைக்கிறது.)

    கேள்வியிலேயே ஏதோ தவறு இருக்கிற மாதிரியும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  32. ஆர்வத்தோடு கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி. இந்த வாரம் புதிர்கள் கஷ்டம் என்று என் ஹஸ்பண்டும் சொன்னா. நான் ஒரு கேள்வி மட்டும்தான் கஷ்டம் என்று நினைத்தேன். அதைக்கூட உடனே கண்டுபிடித்துவிடக்கூடாது என்று குழப்பும் வரிகளைச் சேர்த்தேன். பாலகணேஷ் அவர்கள் அனேகமாக 3 கேள்விகளுக்காவது உடனே பதில் எழுதிவிடுவார் என நினைத்தேன். ஜீவி சார் குறைந்தபட்சம் பின்னூட்டம் இட்டபின்புதான் நான் பதிலெழுதவேண்டும் என்றும் நினைத்தேன். முயற்சி செய்யவேண்டும் என்று முனைந்த அனைவருக்கும் நன்றி. அடுத்தமுறை நிச்சயமாக சுலபமான கேள்விகள்தான்.

    பதிலளிநீக்கு
  33. கில்லர்ஜி-பயண அவசரத்திலும் எட்டிப்பார்த்து கருத்திட்டமைக்கு நன்றி.

    நன்றி பாலகணேஷ்

    நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்

    நன்றி முனைவர் ஜம்புலிங்கம் சார்

    நன்றி மிடில் கிளாஸ் மாதவி.

    நன்றி துளசிதரன் தில்லையகத்து கீதா ரங்கன்

    நன்றி புலவர் இராமானுசம் ஐயா

    நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம்

    நன்றி ஏஞ்சலின்

    நன்றி அதிரா

    நன்றி ஏகாந்தன்

    நன்றி மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன் (அப்பா.... பெயரை சரியாக எழுதிவிட்டேன். எங்கே பாடல்களைக் காணோம்?)

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி கீதா சாம்பசிவம் மேடம்

    நன்றி அசோகன் குப்புசாமி

    நன்றி வல்லி சிம்ஹன் அம்மா

    நன்றி ஜீவி சார்.

    பதிலளிநீக்கு
  34. எங்கள் பிளாக் ஸ்ரீராம் - அதிரடி அதிராவை Blog Monitor ஆகப் போட்டீங்கன்னா, மை வைக்காதவங்களைக் கண்டுபிடிச்சு உலுக்கி எடுத்துடுவாங்க. 16ம் பெற்று பெருவாழ்வு வாழவேண்டிய நீங்க இப்போ 11தான் பெற்றிருக்கீங்க. (என்னையும் உங்களையும் சேர்த்தா 18ஆகியிருக்கணும்). பிக் பாஸுல (அந்தக் காலத்துல. இப்பல்லாம் எபிசோடைப் பார்க்கிறவங்களுக்கு வேற வேலையில்லைன்னு நினைக்கிறேன்) காலைல எழுந்துக்க பாட்டு போட்டாலும், மதியம் அந்த 'அலாரம் சத்தத்துக்குப்' பயந்து வேற வழியில்லாம எழுந்திருக்கறவங்களைப் பார்த்திருக்கீங்கதானே...

    பதிலளிநீக்கு
  35. முதல் கேள்வியின் (அ) வுக்கு விடை சுலபமல்ல என்பதால்தான் அதனைக் கேட்டேன். மற்ற இரண்டும் சுலபம். இப்போது முதல் கேள்விக்கான விடைகள்.

    அ. மாடர்ன் ரெவ்யூ என்ற மாதப் பத்திரிகை, கல்கத்தாவில் 1907ல் ஆரம்பிக்கப்பட்டது. அந்தப் பத்திரிகையில் மகாத்மா காந்தி அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அதே கட்டுரையில், 'ட்ரான்ஸ்வால்-தென் ஆப்பிரிக்கா-1906 கிளர்ச்சியில் தமிழர்கள் செய்த காரியத்தைப்போல் வேறு எந்த இந்திய ஜாதியும் செய்யவில்லை. ஆதலால் வேறு காரணம் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு என் திருப்தியை நன்கு உணர்த்தவாவது நான் அவர்களுடைய புத்தகங்களை ஊன்றிப் படிக்கவேண்டும். .சென்ற மாதம் அவர்களுடைய பாஷையைக் கவனமாகப் படித்துவந்தேன். அதைப் படிக்கப் படிக்க அம் மொழியிலுள்ள அழகு அதிகமாகத் தெரிகிறது. ......." என்று எழுதியுள்ளார். காந்திக்கு தமிழில் கையெழுத்திடத் தெரியும் என்பதும், அவர் தமிழகத்தின் சம்பந்தி (ராஜாஜியின் பெண்ணைத் தன் மகனுக்குத் திருமணம் செய்ததன்மூலம்) என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதில் இன்னொரு அரசியல் செய்தியும் உண்டு. இந்தியப் பிரிவினையின்போது, இந்தியாவுக்கான மொழி என்ன என்று பிரச்சனை வந்தபோது, காந்தி, 'ஏன் தமிழை இந்தியாவின் பொது மொழி' என்று அறிவிக்கக்கூடாது என்று அந்தக் குழுவிடம் (நேரு, வல்லப்பாய் படேல் போன்ற பலர்) கேள்வி எழுப்பினார். இதனால் கலக்கமுற்ற சக்திகள், ஹிந்தி நிறைய மக்களால், அதுவும் வட'நாட்டில் பலரால் பேசப்படுவதால் ஹிந்தியே இந்தியாவின் பொதுமொழியாக இருக்கவேண்டும் என்று அழுத்தம் கொடுத்து, இந்தி பேசாதவர்களுக்காக ஆங்கிலம் என்று இந்த இருமொழிகளும் இந்தியாவின் பொதுமொழி என்று தீர்மானம் ஆயிற்று.

    ஆ. இது ஜெயகாந்தன் சொன்னது. பாட்டாளிகளைப் பற்றி வேறு யார் அதிகமாக எழுதியிருக்கின்றனர்? அவர் மேலும் சொல்கிறார். இந்தக் கதை கொலையை சிபாரிசு செய்கிறமாதிரி அமைந்துவிட்டது. கொலையை நியாயப்படுத்திய இன்னொரு கம்யூனிஸ்ட் கதையைப் படித்துள்ளேன். .வியட்னாமோ கொரியக் கதையோ. எதிரிகளின் ராணுவம் கிராமத்தையே வளைத்துக்கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்டுகளுக்கு அடைக்கலம் தந்த ஒரு தாய், அவர்களுடன், தன் குழந்தையோடு தப்பிப்போய் ஒரு பாலத்திற்கு அடியில் ஒளிந்திருக்கிறாள். தலைக்குமேல் ஆயுதம் ஏந்திய ராணுவ அணி. அப்போது அவள் கைக்குழந்தை அழ ஆரம்பிக்கிறது. தாய், கம்யூனிஸ்டுகள் தப்பிப்பதற்காக அழும் குழந்தையின் வாயை அழுத்தமாகக் கையால் பொத்துகிறாள். மூக்கால் சிணுங்குகிறது என்று மூக்கை அழுத்துகிறாள். எதிரி அணிவகுப்பு முடியும்போது குழந்தையின் உயிரும் அடங்குகிறது. தாய் தன்னை அறியாமல் வீறிடப்பாக்கும்போது அவள் கணவன் அவள் வாயை அழுத்தப் பொத்துகிறான். இதில் கட்சிப் பார்வையோடு சமுதாய மற்றும் ஆன்மீகப் பார்வையும் இருக்கிறது என்று சொல்கிறார்.

    இ. இதனை எழுதியது எழுத்தாளர் சுஜாதா. அவர் மனித மூளையைப் பற்றி எழுதும்போது இதனைக் குறிப்பிடுகிறார்.

    முயற்சி செய்த பாலகணேஷ், கீதா ரங்கன், பானுமதி வெங்கடேஸ்வரன், கீதா சாம்பசிவம், வல்லிசிம்ஹன், ஜீவி அவர்கள் ஆகியோர் பாராட்டுக்குறியவர்கள். பானுமதி, பாலகணேஷ், கீதா ரங்கன் ஆகியோர் ஓரிரண்டு சரியான விடைகளைச் சொல்லியுள்ளார்கள். மூன்றையும் சரியாகச் சொல்லி பாராட்டைப் பெறுபவர் எழுத்தாளர் ஜீவி அவர்கள்.

    பதிலளிநீக்கு
  36. இரண்டாவது கேள்விக்கான பதில்.

    படத்தில் உள்ளவர்கள், திருவாளர்கள் இராமமூர்த்தி, கண்ணதாசன், விஸ்வனாதன் ஆகியோர். இது கேள்வியல்ல என்றபோதிலும் சரியாகச் சொன்னவர் கரந்தை ஜெயக்குமார் சார் அவர்கள். பாராட்டுகள்.

    சென்னை என்.கே.டி திருமண மண்டபத்தில் ஒரு பாராட்டுக்கூட்டம் நடத்தவிருந்த முதல் நாள் இரவு, கண்ணதாசன் அவர்கள் எம்.எஸ்.விஸ்வனாதன் அவர்களை போனில் கூப்பிட்டு, 'மெல்லிசை மன்னர் இருக்காங்களா' என்று கேட்க, 'அப்படியெல்லாம் யாருமில்லை. நீங்க யாருங்க' என்று விஸ்வனாதன் கேட்டார். 'ஏன் டென்ஷன் ஆகறீங்க. நான் உங்களைத்தான் கேட்டேன்' என்று கண்ணதாசன் அவர்கள் சொன்னார். 'நாளைக் காலையில் உங்களுக்கு நான் கொடுக்கப்போகிற பட்டம்தான் மெல்லிசை மன்னர்கள். எப்படி இருக்கு' என்றார் கண்ணதாசன். 'பட்டமும் வேண்டாம், பதக்கமும் வேண்டாம். முடிஞ்சா ஏதாவது படம் வாங்கித்தரப் பாருங்கள்' என்றார் விஸ்வனாதன்.

    இல்லப்பா, இந்த டைட்டிலை நான் மட்டும் தரலை. சிவாஜிகணேசன், ஜெமினி, டி.எம்.எஸ், சாவித்திரி, சந்திரபாபு மாதிரி முக்கியமான ஆட்கள்லாம் கூடிப் பேசித்தான் தர்றோம். இது கலை உலகம் அன்போடு தர்ற பரிசு'னு வற்புறுத்திச் சொன்னார் கண்ணதாசன்.

    விழாவுக்கு வராம இருந்துடுவரோ என்று வீட்டுக்கே போய் அழைத்துக்கொண்டுவந்த கவிஞர், விஸ்வனாதன், ராமமூர்த்திக்குப் பட்டம் தர்ற விஷயத்தை நிருபர்களுக்குச் சொன்னபோது எடுத்த படம்தான் இது.

    இந்த நிகழ்வைச் சொன்னவர் எம்.எஸ். விஸ்வனாதன் அவர்கள்.

    இதனை யாரும் சரியாகச் சொல்லவில்லை.

    பதிலளிநீக்கு
  37. வெறும் விடையைச் சொன்னோம் என்று போகாமல் அந்தந்த நிகழ்வுகளை விவரித்துச் சொன்ன நெல்லை பாணி வெகு சுவாரஸ்யம்.

    நீங்க சொன்னவுடன் தான் மெல்லிசை மன்னர்கள் அடையாளம் தெரிகிறார்கள். விஸ்வநாதனின் அடையாளத்தையாவது நினைவுகளைத் திரட்டி புரிந்து கொள்ள முடிகிறது.. இராமமூர்த்தி?.. நோ சான்ஸ். அவர் அடிக்கடி புகைப்படங்களில் தலை காட்டாமலிருந்ததால் சின்னப்பா தேவரென்று ஆள்மாறாட்டம் கொண்டிருக்கிறேன். தேவரின் சாயல் இருந்தாலும் தப்பு தப்பு தான்.

    பதிலளிநீக்கு
  38. மூன்றாவது கேள்வி - குறிப்பிடப்படும் படம், பாடகர் (சிவாஜிக்குப் பிடித்தவர்), குறிப்பிடப்படும் மூன்று பாடல்கள் எவை?

    இந்தக் கேள்விக்கு பாலகணேஷ், பானுமதி வெங்கடேஸ்வரன், கீதா சாம்பசிவம், ஜீவி அவர்கள் ஆகியோர் பதில் சொல்ல முயன்றிருக்கின்றனர்.

    குறிப்பிடப்படும் படம் - தூக்குத் தூக்கி
    சிவாஜிகணேசனுக்குப் பிடித்த பாடகர் - சி.எஸ். ஜெயராமன்
    மூன்று பாடல்கள் - 'பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே', 'சுந்தரி சௌந்தரி', 'ஏறாத மலைதனிலே'

    சி.எஸ்.ஜெயராமன் அவர்கள் கருணானிதி அவர்களின் முதல் மனைவியின் அண்ணன். முக முத்து அவர்களின் தாய்மாமன். அவர் சிவாஜிக்காக, 'ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே', 'விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே' போன்ற பாடல்களைப் பாடியவர்.

    சிவாஜி அவர்கள், டி.எம்.சௌந்திரராஜன் அவர்கள் பாடிய இந்த மூன்று பாடல்களைக் கேட்டுவிட்டு பாராட்டி முதுகில் தட்டினார். அதற்குப் பின்புதான் டி.எம்.சௌந்திரராஜன் அவர்கள் சிவாஜிக்கான எல்லாப் பாடல்களையும் பாட ஆரம்பித்தது. டி.எம்.எஸ் அவர்கள், அதற்குப் பிறகு 2000 பாடல்களை சிவாஜிக்காகப் பாடிய பிறகுதான் மீண்டும் சிவாஜி அவர்களைச் சந்தித்தாராம். டி.எம்.எஸ் குரல் இல்லாமல் நம்மால் சிவாஜி பாடல்களைக் கற்பனை செய்ய முடியுமா? மாபெரும் கலைஞன் டி.எம்.எஸ். அவர்கள்.

    டி.எம்.சௌந்திரராஜன், எம்.எஸ்.விஸ்வனாதன் போன்றோர், சிறந்த கலைஞர்கள் என்பதால், தங்கள் தொழிலையே முக்கியமாக நினைத்தார்களே தவிர, தங்கள் பாபுலாரிட்டியை வைத்து அதிக காசு சம்பாதிக்கவேண்டும் என்று நினைக்கவில்லை. அதனால்தான் அவர்கள் அளவுக்கதிகமான பணம் ஈட்டும் வாய்ப்பு இருந்தும் அதனைச் செய்யவில்லை.

    இந்த நிகழ்ச்சியை டி.எம்.எஸ் அவர்களே தனது பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

    நான் நினைத்திருந்ததுபோல் பாலகணேஷ் அவர்கள் சரியான விடையைச் சொல்லிவிட்டார் (பாடலில் ஒரு தவறு இருந்தபோதிலும்). பாராட்டுகள் பாலகணேஷ்.

    இளையராஜா அவர்கள் தான் இசையமைக்க ஆரம்பித்ததும், பழைய பாணியிலிருந்து முற்றிலும் புதிய இளையராஜா பாணியாக இருக்கவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார். அதனால்தான் அவர் எஸ்.பி.பி, ஜானகி என்று டிராக் மாறினார். முதல் மரியாதை படத்தின்போதும் அவர் மலேஷியா வாசுதேவனைத்தான் சிவாஜிகணேசனுக்காகப் பாட வைத்தார். அது படத்துக்கு 'புதிய' பார்வையைத் தந்தது. முதல் மரியாதை எடுக்கும்போது, சிவாஜியின் திரையுலக ஆளுமை முடிந்து பல வருடங்களாகியிருந்தன. முதல் மரியாதை படத்துக்கு, பாரதிராஜா, முதலில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தைத்தான் மனதில் வைத்திருந்ததாகவும் பிறகு சிவாஜி அந்தப் பாத்திரத்தைச் செய்தார் என்றும் படித்திருக்கிறேன். சிவாஜி, பத்து வகையான நடை நடந்தும் பாரதிராஜா திருப்தியுறாமல் மீண்டும் மீண்டும் நடக்கச் சொன்னாராம். சிவாஜி, 'இந்த மாதிரி நடந்தால்தான் என் ரசிகர்களுக்குப் பிடிக்கும்' என்றபோதும், கடைசியில் பாரதிராஜா, சிவாஜியிடம், வேற எதுவும் செய்யாமல் 'வெறுமன் இப்படி நடங்கண்ணே', 'அப்படித் திரும்புங்கண்ணே' என்று சொல்லி படம் எடுத்தாராம். சிவாஜிக்கு பெரும்பாலும் திருப்தி இல்லையாம். 'என்ன இவன் அப்படி நட, இப்படி நடன்னு எடுக்கறான். படம் எப்படி வரப்போகுது' என்று சந்தேகமாம். அப்புறம் இது சிவாஜியின் குறிப்பிடத்தக்க படமானதும், எடுத்த படத்தை வேறு லெவலுக்கு சர்வ சாதாரணமாக எடுத்துச்சென்ற இளையராஜாவின் இசையும் வரலாறு.

    பதிலளிநீக்கு
  39. இதே முதல் மரியாதை படத்தைப் பற்றி நான் வேறு விதமாகக் கேள்விப்பட்டேன். சிவாஜி எப்போதுமே டைரக்டர்களின் நடிகர். அவர்கள் சொல்வது போலச் செய்பவர். பாரதிராஜாவிடம் "நீ எப்படி சொல்கிறாயோ அப்படியே .செய்கிறேன்.. தயங்காமல் சொல்" என்று சொன்னதாகத்தான் படித்திருக்கிறேன். நெல்லை! உடனே நீங்கள் படித்த புத்தகத்தைச் சொல்வீர்கள். ஆனாலும் நான் எங்கோ படித்தத்தைச் சொன்னேன். அவ்வளவுதான்!

    பதிலளிநீக்கு
  40. நான்காவது கேள்வி, கடினமாகக் கேட்கவேண்டும் என்று நினைத்துக் கேட்கப்பட்டது. நான் பத்திரிகையைப் புரட்டும்போது இந்தப் படத்தைப் பார்த்து 'ஜெயலலிதாவோ' என்று நினைத்துத்தான் கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தேன் (படம் சிறியதாக இருந்தது. அதனால் ஜெ.வோ என்று நினைத்தேன்). அப்புறம் இதற்கு மதுரைத் தமிழன் போன்றவர்கள் சட்டென்று பதில் சொல்லிவிடக்கூடாதே என்று, 'இவர் நடித்த வெள்ளிவிழாப்படம்' என்றெல்லாம் குழப்பியிருந்தேன். ஆனால் கேள்வி, 'புகைப்படத்தில் இருப்பவர் யார்'.

    இதற்கு விடை ரோசா பார்க்ஸ், அமெரிக்காவைச் சேர்ந்தவர். இவரைப் பற்றி நாம் கண்டிப்பாகத் தெரிந்துவைத்திருக்கவேண்டும்.

    ஐம்பதுகளில், அமெரிக்காவில் புரட்சி ஏற்படுத்தி தனக்கான நியாயம் மட்டுமல்ல, அமெரிக்கக் கறுப்பர் இனத்தாருடைய உரிமைகளையும் பெற்றுத்தந்தவர். மிகச் சுருக்கமாக அந்த நிகழ்ச்சி.

    50களில், கறுப்பர்கள் என்றால் தனி இருக்கை, ஓட்டல்களில் தனி அறைகள், காபி கொடுப்பது தனி டம்ளரில், ரேஷனில் தனி கியூ, சினிமாவுக்கு தனி தியேட்டர் என்று இருந்தது. பேருந்தில் பயணம் செய்த ரோசாவை, வெள்ளைக்காரர், 'எழுந்திரு, எனக்கு இடம் கொடு' என்று கேட்டார். ரோசா எழுந்திருக்காததால், பேருந்திலிருந்த வெள்ளைக்கார போலீசிடம் முறையிட, ரோசா கைது செய்யப்பட்டார். கைதுக்குக் காரணம், போலீஸ்காரர் நினைத்தது, வெள்ளையர்கள் வந்தால் கருப்பர்கள் இடம் கொடுக்கவேண்டும் என்று சட்டம் என நினைத்ததால். அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டதால், அலபாமா முழுவதும் கொந்தளித்தது. அப்போது பேருந்தை உபயோகப்படுத்தியவர்கள் பெரும்பான்மை கறுப்பர்கள். ரோசாவுக்கு நீதி கிடைக்கும்வரை, அவர்கள் பேருந்தில் செல்வதில்லை என்று முடிவு செய்தனர். கறுப்பர்கள் பஸ்களில் ஏற மறுத்துவிட்டதால், அவர்கள் தங்கள் பணிகளுக்குப் போகவில்லை. மானிலம் முழுவதும் எந்த அடிப்படைப் பணிகளும் நடக்கவில்லை, உற்பத்தி நஷ்டம், தனியாருக்கு பெரிய நஷ்டம். 381 நாட்கள் இந்தப் போராட்டம் நடந்தது. நடத்தியவர் மார்டின் லூதர் கிங். அவர் ரோசாவுடன் ஆலோசித்து இதனை நடத்தினார். கடைசியில் அமெரிக்க உச்ச நீதிமன்றம், 'ரோசா பார்க்ஸ்'க்கு இழைக்கப்பட்டது அநீதி என்று தீர்ப்பளித்து, அதன் பின்பு சிவில் உரிமைச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ரோசா பார்க்ஸ் அவர்கள்தான் 'சிவில் உரிமைச் சட்டங்களின் தாய்' என்று அழைக்கப்படுகிறார்.

    அவரைப் பற்றி ஒட்டுமொத்த அமெரிக்க கறுப்பர் இனத்தவரும் சொன்னது, 'அன்றைக்கு அவர் எழுந்திருக்க மறுத்ததால்தான், இன்றைக்கு நாங்கள் எழுந்து நிற்கவும் தலை நிமிர்ந்து நடக்கவும் முடிகிறது'

    இதற்கான பதிலை மிடில் கிளாஸ் மாதவி சொன்னபோதும், கூகிளார் துணையோடு Image Search செய்ததால், 'பிட் அடித்தார்' என்ற காரணத்தால் வெற்றி இல்லை. இருந்தும் முயன்றதற்கு மிகுந்த பாராட்டுகள் மி.கி.மாதவி.

    பதிலளிநீக்கு
  41. இந்த வார 'புதன் புதிர்' - கடினமாக இருந்தது, சுவாரசியமாக இல்லை, பிடித்தது, பிடிக்கவில்லை என்று ஒரு வரியில் சொன்னால், எங்கள் பிளாக்குக்கு அது உபயோகமாக இருக்கும் (எந்த மாதிரி புதிர் இருந்தால் சுவாரசியம் என்பதை முடிவு செய்ய).

    பதிலளிநீக்கு
  42. ஸ்ரீராம் - உங்கள் கருத்துக்கு நன்றி. இதைப் பற்றி எழுதலாம். அது கொஞ்சம் கான்டிரவர்ஷியலாக ஆகிவிடும். அதனால்தான் எழுதவில்லை. சிவாஜி விரும்புக் கேட்டுக்கொண்டு இந்த வேடம் பெற்றார். பாரதிராஜா, வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டார். (எஸ்.பி.பி என்று தான் நினைத்திருந்தபோதும்) பாரதிராஜா எதிர்பார்த்த மாதிரி முதல் ஷெட்யூலில் நடிப்பு வரவில்லை (பா.ராஜாவுக்கு நடிப்பு வேண்டாம், யதார்த்தம்தான் அந்தக் கேரக்டருக்கு வேண்டும்). அவரின் அதிருப்தியை முகத்திலேயே கணித்துவிட்ட சிவாஜி அவர்கள் (பல டேக்குகளை எடுத்ததனால், அதுவும் ஒரே நடை நடப்பதற்கு), 'உனக்கு என்ன வேணும்னு சொல்லு அப்படியே பண்ணறேன்' என்று சொல்லி நடிக்க ஆரம்பித்தார் சிவாஜி. படம் முடியும்வரை, சிவாஜிக்கு கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லை. என்னடா இவன், அதைப் பண்ணு இதப் பண்ணுன்னு சொல்றான். படம் ஒழுங்கா வருமா என்று சிவாஜிக்கு சந்தேகம். படம் முடிந்தபிறகு, ரீரெக்கார்டிங்குக்காக இளையராஜா பார்த்தபோது, 'அடப்பாவி இப்படி எடுத்திருக்கயே எப்படி ஓடும்'னு சொல்லி, சரி, மூணு நாள் கழித்து வா என்று சொல்லி இளையராஜா சிந்தித்து ரீரெக்கார்டிங்கில் படத்தை வேறு தளத்துக்கு எடுத்துச்சென்றார் (அதற்கேற்றபடி சில திருத்தங்கள் பாரதிராஜா செய்தார் என்று படித்த ஞாபகம்). படத்தைப் பார்த்த சிவாஜி, 'மிரட்டிட்டானப்பா இந்தப் பையன் பாரதிராஜா' என்று பெருமிதம் கொண்டாராம்.

    பதிலளிநீக்கு
  43. நெறைய புதிய தகவல்கள் கிடைத்தன. நன்றி.

    சிவாஜி--பாரதிராஜா பற்றிச் சொல்லியிருந்ததைப் போன்றதான தகவல்களைப் பற்றியும் ஒன்று சொல்ல வேண்டும்.

    பத்திரிகைகள் தகவல்களை 'இப்படித்தான் நடந்தது' என்று அறுதியிட்டு நம்புவதற்கில்லை. சில நிர்பந்தங்களினாலும், அந்த நேரத்து தேவைகளின் அடிப்படையிலும் 'இது தான் நடந்த உண்மை' என்று நாம் நம்புவது போல எழுதுவதற்கு பழக்கப்பட்டவை. அங்கேங்கே எடுக்கப்படும் பேட்டிகளை, மற்றும் துண்டு துண்டான வாய்மொழிச் செய்திகளைக் கூட உண்மை போல எழுதப் பழக்கப்பட்டவை அவை. சினிமா குறித்த செய்திகள் என்றால் கேட்கவே வேண்டாம்.

    பல்லும் நோகக்கூடாது, கரும்பும் சாப்பிட்டாக வேண்டும் என்று எழுதுவதில் வல்லவர்கள் அவர்கள். இந்தச் செய்தியில் கூடப் பாருங்கள். சிவாஜி பற்றியும் உயர்வாகச் சொல்ல வேண்டும், அவரையும் வேலை வாங்கற ஆள் பாரதிராஜா என்றும் காட்ட வேண்டும், அதையும் சிவாஜி பாராட்ட வேண்டும் என்ற அசகாய சாமர்த்தியத்துடன் எழுதப்பட்டிருக்கிறது, பாருங்கள்.

    படத்திற்குத் தேவையான ஸ்டார் வேல்யூக்காகவும், இளம் பெண்-- கொஞ்சம் வயது முதிர்ந்த ஆண்-- இவர்களுக்கிடையான காதலைப் பற்றி சொல்ல சரியான ஆள் சிவாஜியே என்று பாரதிராஜா உறுதியாக நினைத்து அவரே சிவாஜியை அணுகியிருக்கலாம். சிவாஜியைத் தவிர வேறு ஒருவரைப் போட்டால் அந்த வயது வித்தியாசத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் போய் விட்டால் என்ன செய்வது? என்ற அச்சமும் பாரதிராஜாவுக்கு இருந்திருக்கலாம். பாரதிராஜாவாலும் திரையுலகப் போக்கை கணிக்க முடியாத ஒரு நேரம் அது என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். (ஆனால் இங்கு நமக்குச் சொல்லப்படும் சேதி என்னவோ சிவாஜி விரும்பி கேட்டுக் கொண்டு இந்த வேடம் பெற்றார் என்பது.)

    இவ்வளவும் சொல்லி விட்டு இளையராஜாவையும் ஒரு தூக்கு தூக்கி சிவாஜியின் செல்லமான (மிரட்டிட்டானப்பா) ஷொட்டையும் பாரதிராஜாவுக்கு கொடுத்து... எமகாதக வேலையை எவ்வளவு சாமர்த்தியமாக எழுத்தில் செய்திருக்கிறார்கள் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

    இதனால் அறியப்படுவது யாதெனில் இந்த மாதிரியான 'உண்டாக்கப்படும்' செய்திகளை ஆத்மார்த்தமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பது தான்.

    அதெல்லாம் அவர்களின் வியாபார நேக் என்று போய் விட வேண்டும்.



    பதிலளிநீக்கு
  44. ஜீவி சார்... உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. இதை எழுதியது நான். பாலிஷ்டாக எழுதியிருக்கிறேன். பல புத்தகங்களைப் படித்ததனால் (பலரும் அந்த நிகழ்வைச் சொல்லும்போது, exaggeration, தன் ஆளை உயர்த்துதல் என்ற அம்சங்களை விட்டுவிட்டு) ஓரளவு பாலிஷ்டா சொல்லியிருக்கேன். இதைப் பற்றி, படித்ததன் அடிப்படையில் (சில உண்மைக்கு வெகு அருகாமையில் இருப்பதால்) சொன்னால், நன்றாக இருக்காது. இந்தத் தளத்துக்கு கான்டிரவர்ஷியல் செய்திகள் சரிப்படாது. இதில் குறிப்பிடவேண்டியவை, பாரதிராஜாவின் திறன், சிவாஜி எவ்வளவு பெரிய ஆளுமையாக இருந்தபோதிலும், கடைசி 10+ வருடங்களுக்குமேல் அவருக்கு தொழில் இல்லை, அதனால் அவர் பட்ட வேதனைகள்-வேலைபார்த்துக்கொண்டே லைம் லைட்டில் இருந்தவர்கள், அந்தப் புகழ்/சுற்றிவர கூட்டம் இல்லாமல் இருப்பதன் வேதனை புரியும் என்று நினைக்கிறேன்-அவர் அடைந்த மனக் குமுறல்கள் இவற்றைப்பற்றி சிவக்குமார் அவர்கள் எழுதியிருக்கிறார். அவர் சிவாஜியை சாந்தப்படுத்தியிருக்கிறார், தான் அவர் வீட்டுக்குச் சென்றிருந்த சமயத்தில்), இளையராஜாவின் ஆச்சர்யகரமான திறமை. இவற்றை வெளிப்படையாக எழுதினால் சிவாஜி ரசிகர்களுக்கு மன வருத்தம் உண்டாகும். (என்னைப் பொறுத்தவரை அப்படி மனவருத்தம் அடையத் தேவையில்லை. மலை உச்சிவரை ஏறுபவர்களுக்கு இறக்கம் வந்துதான் தீரும். எந்தப் பகலுக்கும் ஒரு இரவு உண்டு. எந்த இரவுக்கும் ஒரு சூரிய ஒளி உண்டு. இளையராஜா எழுதும்போது, எம்.எஸ்.வியை தேனீக்கள் மாதிரி மொய்த்துக்கொண்டிருந்த தயாரிப்பாளர்கள் திடீரென அவரைக் கைவிட்டு, என்னைத் தேனீ மாதிரி மொய்க்கத்தொடங்கினார்கள். அப்போதே எனக்குத் தெரியும், இசை இமயமாக நினைத்துக்கொண்டிருந்த எம்.எஸ்.விக்கு ஒரு இறக்க காலம் இருந்ததைப் போல தனக்கும் அப்படி ஒரு காலம் வரத்தான் செய்யும் என்ற பொருள்பட எழுதியிருந்தார்.). நன்றி உங்கள் கருத்துக்கு.

    பதிலளிநீக்கு
  45. @நெல்லைத்தமிழன்

    //இந்த வார 'புதன் புதிர்' - கடினமாக இருந்தது, சுவாரசியமாக இல்லை, பிடித்தது, பிடிக்கவில்லை என்று ஒரு வரியில் சொன்னால், எங்கள் பிளாக்குக்கு அது உபயோகமாக இருக்கும் (எந்த மாதிரி புதிர் இருந்தால் சுவாரசியம் என்பதை முடிவு செய்ய).//

    இதே மாதிரியே போடுங்க எதுக்குன்னா :) ஈஸியா இருந்தா அதில் சுவையில்லை ..அடுத்தது படிச்சிட்டு அன்னக்கிளி சுஜாதா /எழுத்தாளர் சுஜாதா அப்புறம் பாடகி சுஜாதான்னு வித விதமா கற்பனை புரவியை ஓட்டறாங்கன்னு தெரிஞ்சு அவங்களையும் நாம ஓட்டலாம் அப்போதான் ஜாலியா இருக்கும் :)

    பதிலளிநீக்கு
  46. /50களில், கறுப்பர்கள் என்றால் தனி இருக்கை, ஓட்டல்களில் தனி அறைகள், காபி கொடுப்பது தனி டம்ளரில், ரேஷனில் தனி கியூ, சினிமாவுக்கு தனி தியேட்டர் என்று இருந்தது. //

    இங்கிலாந்திலும் 1950 களில் வந்தவங்க இந்த கஷ்டங்களை பட்டிருக்காங்களாம் .
    ஒரு jamaikan பெரியவர் அடிக்கடி சொல்வார் இங்கே pub போக உள்ளே விட மாட்டார்களாம் அப்புறம் எங்க ஏரியாவில் ஒரு உக்ரேனிய கத்தோலிக்க சர்ச் இருக்கு அங்கும் சொன்னார்களாம் //இது உங்க சர்ச் இல்லை உங்க சர்ச் அந்த அடுத்த தெருவில் இருக்குன்னு // அவர்களுக்கு கறுப்பினத்தவரை சேர்க்க விருப்பமில்லைன்னு நேரேவெ சொன்னார்களாம் :(
    அந்த சர்ச் இன்னும் இருக்கு நான் பார்ப்பது வெள்ளை முகம் தங்க நிற தலைகள் மட்டுமே இன்னும் அங்கே

    பதிலளிநீக்கு
  47. எனக்கும் கூகிள் சர்ச்சில் ரோசா பார்க்ஸ் னு காட்டுச்சே :)
    ஆனா நான் கூகிள் விளையாட்டு காட்டுது இந்த முகம் டி ஆர் ராஜகுமாரி ஆண் வேஷம் போட்ட மாதிரி இருக்குன்னு நினைச்சிட்டேன் :)

    பதிலளிநீக்கு
  48. Sorry I do not participate in the Wednesday puzzles since the week I was told not to answer. I just pointed out some discrepancy in the question.
    But how would u know somebody used or not used Google search unless they told u?

    பதிலளிநீக்கு
  49. மி.கி.மாதவி - அப்படியில்லை. நீங்க சொன்னதுனால கூகுள் தேடுதல் என்று தெரிந்தது. இல்லைனா தெரிந்திருக்காது. சொல்லாமல் கூகுள்ல தேடியும் பதில் பலர் சொல்லலாம். உங்கள் பாயின்ட் சரிதான்.

    ஆமாம் யார் சொன்னாங்க நீங்க பதில் எழுதக்கூடாதுன்னு? நான் எப்பவாச்சும் அந்தமாதிரி பொருள்படச் சொல்லியிருக்கேனா?

    வருகைக்கு நன்றி. கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  50. @ நெல்லைத் தமிழன் - தாமதமான பதிலுக்கு ஸாரி! எழுதலாமா வேண்டாமா என்று யோசித்ததே காரணம்!
    ஏப்ரல் 19 2017 புதன் புதிரில் நான் முதலாவதாக விடையளித்திருந்தேன். அடுத்து நீங்கள் //மி.கி.மா மட்டும் ஒரு நாள் கழித்துத்தான் 'புதன் புதிர்' பார்க்கவேண்டிவருவதாக. // என்று சொல்லியிருந்தீர்கள். நான் வலைத்தளங்களை அடிக்கடி பார்க்காத நேரங்கள் என் வாழ்வின் துக்கமும் வருத்தமும் அளித்த சந்தர்ப்பங்களாயிருந்தன. அதனால் அப்போது உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கு ஒரு சாபத்தைப் போலத் தான் தென்பட்டன. //இனி புதன் புதிருக்கு கமென்ட் மாடரேஷன் போடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் - இன்னும் அதிக பதில்கள் வரக் கூடும். எனக்கு சாபமும் விலகும்!! :-))// என்று கேட்டுக் கொண்டேன். ஆனால் கருத்து பரிசீலிக்கப்படவில்லை.
    மேலும் 03.05.2017 புதிர் பதிவில் // மிடில் கிளாஸ் மாதவி இனிமே புதிர் கேள்விகளுக்கு, தனக்கு பதில் தெரியும் என்று மட்டும் கூறிவிட்டு, மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கவேண்டும். // என்று எங்கள் ப்ளாக் தலைமை ஆசிரியர் அறிவுறுத்தியிருந்தார்.... அதனால் பின்னர் புதன் கிழமைப் பதிவை படித்துப் பார்ப்பேன் - ஞாபகம் இருந்தால் வோட்டுப் போடுவேன்!!
    ஆனாலும் உங்கள் அறிவுத் திறனை மெச்சுகிறேன் – 4வது கேள்வியில் கொடுக்க நினைத்த படம் ஜெயலலிதாவுடையது தான் என நினைக்கிறேன். //உங்களுக்குத் தெரியும் அவர் உயிருடன் இல்லை என்பது. // என்பதை வேண்டுமானால் குழப்புவதற்கு என்று வைத்துக் கொள்ளலாம் - கேள்வி ‘அவர் யார்’ மட்டுமல்ல - // அவர் நடித்த படங்களில் வெள்ளிவிழா கண்ட படம் எது?// இதுவும் தான். இல்லையெனில் வெள்ளிவிழா கண்ட படங்களில் நடித்தவர்; ஆனால் இது கேள்வியில்லை என்று 2வது கேள்வியைப் போல் சொல்லியிருப்பீர்கள் அல்லவா? ஆனால் Rose Parks பற்றித் தான் கேள்வி என்று சொல்லி அவரைப் பற்றிய தகவல்களைக் கொடுத்து விட்டீர்கள்! சூப்பர்!!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  51. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. நான் காலை எழுந்தவுடன் புதன் புதிர் பார்த்து முதலில் விடையளிக்கவேண்டும் என்று எண்ணிய நாட்கள். அன்றைக்கு எதேச்சையாக அலுவலகத்திலும் பார்த்தேன். Then I realized you had answered first. "அடன் பாவீ எனக்கு முன்னால எடுத்துட்டயே" என்று சிரித்துக்கொண்டு சொல்வதைப் போன்றது என்னுடைய அந்த பின்னூட்டம். எதிர்மறையா சொல்வதைப் பற்றின விளைவுகளை நான் அறிந்தவன், but it was a slip. Moderation இல்லாதபோது, நாமாக விடையளித்தாலும், முன்னமே அதே விடைகளை மற்றவர்கள் அளித்திருக்கும்போது நமக்கு விடையளித்தோம் என்ற திருப்தி இருக்காது. இன்னொன்று, இடுகைகளைப் படிக்கும்போது கண் automaticஆக சிலரின் விடைகளைப் படித்துவிடுவதனாலும் enthu குறைந்துவிடும். நானும் எங்கள் பிளாக் ஆசிரியர்களுக்கு இதுபற்றி எழுதியிருக்கிறேன். அவர்களுக்கு அதில் நடைமுறைச் சிக்கல் இருக்கு என்று பதிலளித்திருந்த ஞாபகம்.

    உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    ஒரு வாழ்த்தோடு முடிக்க நினைக்கிறேன். நான் இந்த வாக்கியத்தை, தூக்குத் தண்டனைக் கைதி எழுதிய புத்தகத்தில் படித்தேன். என் மனதில் அப்போதே பதிந்துவிட்டது.

    "ஒவ்வொரு இரவும், விடியும்." - இதுதான் கஷ்டப்படுகிற எல்லோரின் நம்பிக்கையும்.

    இதோடு தான் நினைத்துக்கொள்வது, "ஒவ்வொரு பகலைத் தொடர்ந்து இரவு வரும்" (அதாவது, நல்ல காலத்தில் இருக்கோம், சிலரைவிட பணம் இருக்கிறது போன்ற இறுமாப்பு கொள்ளாதே.. வாழ்க்கை ஒரு சக்கரம்"

    I appreciate your feedback and I thank you for the same மிடில் கிளாஸ் மாதவி. இது உங்களோட நீண்ட தமிழ் பின்னூட்டம். தங்கள் வாழ்க்கை வளம் பெறட்டும்.

    பதிலளிநீக்கு
  52. On a separate note: ரோசா பார்க்ஸ் செய்தி சொல்வதை - சக மனிதர்களை நாம் மனிதர்களாக நடத்தவில்லையென்றால் சமூகத்தில் ரோசா பார்க்ஸ்கள் உருவாவதைத் தவிர்க்க முடியாது. அவர்கள் எழுச்சி பெற்று சமூகத்தின் தவறுகளைக் களைய வைப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  53. மி கி மா என்னை மன்னிக்கவேண்டுகின்றேன். நான் எழுதியது மி கி மா வைப் புகழ்வதற்காக மட்டுமே! புதன் புதிர் என்பது ஒரு போட்டியல்ல; சும்மா கும்மியடிக்க + நம் அறிவுத்திறன் எப்படி இருக்கு என்று நமக்கு நாமே பரிசோதித்துக்கொள்ள ஓர் உரைகல். முதல் சரியான பதிலும் அதற்கான விளக்கமும் கொடுப்பவரைப் பாராட்டுவோம். அவ்வளவுதான். நீங்க தொடர்ந்து பதில்கள் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  54. புரிதலுக்கும் அன்பான கருத்துக்களுக்கும் நன்றி!!

    பதிலளிநீக்கு
  55. ஆ.விற்கான விடை ஜெயகாந்தன் என்று நான் சரியாக குறிப்பிட்டிருக்கிறேன். முயற்சி செய்திருக்கிறேன் என்று கூறி விட்டீர்கள்.....ஹூ..ம்ம்ம்!😢

    பதிலளிநீக்கு
  56. பானுமதி மேடம் - இப்போதுதான் உங்கள் பின்னூட்டத்தைப் பார்க்கிறேன். ஒரு கேள்விக்கு எல்லாம் சரியாக விடை சொன்னால்தான் சரி. மற்றவர்கள் முயற்சித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லியிருக்கிறேன். இருந்தாலும் 'ஜெயகாந்தன்' என்று கண்டுபிடித்ததே உங்கள் வாசிப்பு அனுபவத்தைச் சொல்கிறது. பாராட்டுக்கள். எங்கே உங்களை இன்று காணவில்லை?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!