செவ்வாய், 5 செப்டம்பர், 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை :: மன்னிப்பு - ரிஷபன் - சீதை 18



     சீதை ராமனை மன்னிக்கும் இந்த வாரக்கதையில் பிரபல எழுத்தாளர் திரு ரிஷபன் அவர்களின் படைப்பு இடம்பெறுகிறது.
   

மன்னிப்பு

ரிஷபன்

தொலைவில் ஒரு காகம் கரைந்தது. கொஞ்சம் தீனமாய். கழுத்தை ஒரு 
பக்கம் சாய்த்து பார்த்தது.  ஜானகியை அது அந்த நேரத்தில் எதிர்பார்க்கவில்லை. தத்தித் தத்தி பின்னால் நகர்ந்தது. மீண்டும் திரும்பிப் பார்த்தது.

ஸீதையின் மனசில் எதுவுமில்லை. வழி தப்பிய பறவையைப் பார்க்கிற உணர்வே. மாடத்தில் நின்றவள் திரும்பிப் பார்த்தாள்.  யாரேனும் இருந்தால் உணவு கொண்டு வரச் சொல்லலாம் என்று. ஒரு சேடியும் கண்ணில் படவில்லை.

திரும்பினால் காகத்தைக் காணோம்.  அலுத்துப் போய் பறந்து விட்டது போலும். அல்லது இன்னொரு ராமசரத்தை எதிர் கொள்ளும் சக்தி இல்லை என்கிற பயமா.. அடுத்த கண்ணையும் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்கிற எச்சரிக்கை உணர்வா ..

இராமன் இன்று எப்போது வருவாரோ.. எனக்காகக் காத்திருக்காதே ..  சாப்பிட்டு விடு என்றுதான் சொல்லி விட்டுப் போயிருக்கிறார். பசி இல்லை.  ஒரு சமயம் யோசித்தால் நினைவுகளும் இல்லை.  துடைத்து வைத்த மாதிரி மனப் பலகை.

ஏனோ ஹனுமன் நினைவு வந்தது. அசோகவனத்தில்..  “தாயே உத்திரவிடுங்கள் .. இவர்கள் அனைவரையும் அழித்து விடுகிறேன் “ ஆஞ்சநேயர் குரலில் என்ன ஒரு கோபம்.

எதிரில் அரக்கிகள் .. மிரண்டு போய் இவளைப் பார்த்தனர்.  அசுர குலமானாலும் தன் இனம் ..

“வேண்டாம்”

கை கூப்பினான் ஹனுமன்.

“வாருங்கள்.. உங்களை இப்போதே இராமனிடம் கொண்டு சேர்க்கிறேன். “

ஸீதைக்கு சிரிப்புத்தான் வந்தது. பொறுமையாகச் சொன்னாள்.

“அது என் பிரபுவுக்கு அழகல்ல”

எவ்வளவு நடந்து விட்டது.. யுத்தம் முடிந்து அலங்கரிக்கப்பட்ட ஸீதை..  இராமனின் எதிரில்..

எவ்வளவு நாளாச்சு .. ஏன் திரும்பிக் கொண்டிருக்கிறாய் ராமா..   என்னைப் பாரேன்.

ம்ஹூம். அவன் ன் திரும்புகிறான்..  புறக் கண்கள் அந்தப் பக்கம் வைத்துக் கொண்டு.. அகத்தில் ஜானகியை கொண்டாடிக் கொண்டு.

“லக்ஷ்மணா .. அவளுக்கு எங்கே போக விருப்பம் .. கேட்டுச் சொல்”

பார்வையாளர்கள்தான் பதட்டப்பட வேண்டும்..  கதாநாயகனும் நாயகிக்கும் எவ்விதக் குழப்பமும் இல்லை. யுக யுகாந்திரமாய் மனிதப் பூச்சிகளைப் படைப்பதும் காப்பதும் அழிப்பதுமான விளையாட்டில் பரமபதம் எப்போதும் சலித்ததில்லை.

அதே தொனியில் சொன்னாள்.

“லக்ஷ்மணா .. அக்னியை மூட்டு ..”

லக்ஷ்மணனிடம் கூட பதட்டம் இல்லை. ஆதிசேஷனுக்கு இதெல்லாம் பழகிப் போனதே. அப்பா சொன்னால் என்ன..  அம்மா சொன்னால் என்ன. 

சரணாகதி செய்தவனுக்கு சஞ்சலம் எப்படி வரும்.

அக்னிதேவன் தன்னைப் புதுப்பித்துக் கொண்டான். எத்தனை காலமாய் எதை எதையோ சுட்டெரித்து தன்னைத் தீட்டுப் படுத்திக் கொண்ட வருத்தம் அவனுக்கு. ஆயிரம் சமாதானங்கள் சொல்லிக் கொண்டாலும் தாயாரின் கிருபை போல வருமா..

ஒவ்வொரு கணக்காய் நேர் செய்து கொண்டாச்சு..  ஆனாலும் மனசுக்குள் ஒரு நெருடல். இன்னும் ஏதோ ஒன்று பாக்கி போல.  என்னவாக இருக்கும்.

ஸீதைக்கு இப்போது மனசுக்குள் பாற்கடல் அலையடித்தது. என்ன யோசித்தும் புலப்படவில்லை.

“ஸீதா..”

மிக மெல்லிய குரல். அரண்மனையே அமைதியில்.. துல்லியமாய்க் கேட்டது.

முழங்காலைத் தொட்டுக் கொண்டு கைகள். அகன்ற புஜம். பரந்த மார்பு.

விபவத்தில் இத்தனை அழகா நீர்..

“என்ன பார்க்கிறாய் வைதேஹி” மென்மையாய் வருடியது .. இராமனின் குரல்.

“உணவருந்த வாருங்கள் “

“போகலாம் இரு.. இப்போது எனக்குப் பசி இல்லை “

அவளைத் தொட்டு அமர்த்திக் கொண்டான் இராமன்.

“உன் மனசில் என்ன ஓடியது..  அதைச் சொல் முதலில் “

எந்த யுகமாய் இருந்தால் என்ன .. பெண் மனசில் என்ன என்று தவிப்பதுதான் ஆணின் இயல்போ .. அது பரமனாய் இருந்தாலும்.

“ஒன்றுமில்லை “

“பொய் சொல்லாதே மைதிலி “

அழகனின் கொஞ்சலில் இன்னும் எங்கியது மனம்.

“இல்லை “ என்றாள் தனக்கே உறுதி இல்லாத குரலில்.

“இப்போது நீ சொல்லித் தான் ஆகவேண்டும் “

“என்னைப் பிரிந்திருந்தது உங்களுக்கு உகப்பாயிருந்ததா பிரபு “

“ நாம் பிரிந்திருந்தோமா என்ன “

“என்னை மடக்க வேண்டாம் .. நிஜத்தைச் சொல்லுங்கள் “

“நான் கேட்டதற்கு பதில் இல்லை .. நீ என்னை மிரட்டுகிறாய் “

“எனக்கு பதில் சொல்லுங்கள் .. பிறகு நானும்.. “

தாமரைக் கண்கள் அவளையே பார்த்தன. பிரிந்து இருந்த காலத்திற்கும் சேர்த்து வைத்து விழுங்குவது போல.

“தேவி..அப்போது நான் உயிரோடு இல்லை. வல மார்பினில் வாழ்கின்ற மங்கை இல்லாத என்னைக் கேலி செய்தார்கள் எல்லோரும்..இவனா அவதார புருஷன் என்று “

ஸீதை அவன் மேல் சரிந்தாள்.

“நிஜமாகவா .. என்னை அவ்வளவு பிடிக்குமா “

“அதிலென்ன சந்தேகம் ஜானகி “

“உங்கள் அழகில் மயங்கி எத்தனை பேர் .. “

இராமன் சிரித்தான்.

“நான் உன் அழகில் மயங்கி அல்லவா கிடக்கிறேன் “

“இது சத்தியம் எனில் .. இனி வரும் நாளிலும் .. உங்கள் மனம் கோண மாட்டேன் .. “

சீதைக்கு ஏதோ ஒரு ஆவேசம் அந்த நிமிடம் ..

இராமனின் மானுடத் தோற்றத்தில் ஒரு நடுக்கம். பார்வை புலனாகாப் பெருவெளியில் சஞ்சரித்து மீண்டது.

“உனக்குப் பிடிக்காததைச் செய்தாலுமா “

“பிரபு .. நாம் குழந்தைகள் அல்லவே “

ஸீதையின் குரலில் ஒரு எள்ளல்.

“என்னை மன்னிப்பாயா சீதா “

ஆறடி உயர நாயகன் .. சின்னக் குழந்தை போல .. எதிரில் நின்று .. கை கட்டி .. செய்வதறியாது நின்றபோது ..

யாராய் இருந்தாலும் என்னை நம்பி வந்து சரணாகதி செய்தவனை நான் கை விடேன்.. என்று சொன்னவனுக்கு அடைக்கலம் தந்தாள் தன் மார்பில் சேர்த்து அணைத்துக் கொண்டு...

புரிந்து விட்டது இராமனுக்கு. 


ஸீதை ராமனை மன்னித்து விட்டாள்.



தமிழ்மணத்தில் வாக்களிக்க..........

54 கருத்துகள்:

  1. நாம் பிரிந்திருந்தோமா... என்ன!...

    தீபமும் அதன் ஒளியும் வேறு வேறா?.

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  2. ஆஹா, அருமை! அதிலும் அந்த எழுத்து நடை! அபாரம்.

    பதிலளிநீக்கு
  3. எழுத்து நடை நன்றாக இருந்தது. "பரம்பதம் எப்போதும் சலித்ததில்லை"-பிடித்த வரி.

    துரை செல்வராஜின், "தீபமும் அதன் ஒளியும் வேறு வேறா" என்பது சாரத்தைச் சொல்லிவிட்டது.

    பதிலளிநீக்கு
  4. சின்னஞ்சிறு கதையாயினும், ’சரணாகதி செய்தவனுக்கு சஞ்சலம் எப்படி வரும்’, ‘எந்த யுகமாய் இருந்தால் என்ன .. பெண் மனசில் என்ன என்று தவிப்பதுதான் ஆணின் இயல்போ ..’ போன்ற வரிகளில் அழகு கொஞ்சுகிறது.

    பதிலளிநீக்கு
  5. எழுத்து நடையை மிகவும் ரசித்தேன்...கட்டிப் போடும் எழுத்து நடை. அப்படிக் கட்டிப் போடும் வேளையில் மறு புறம் ஏதோ ஒரு தேடலில் எதைச் சொல்லுகிறார் என்று சிந்திக்கவும் வைத்த வரிகள். சிலாகிக்க வைத்த வரிகள். ரசிக்க வைத்த வரிகள் என்று முழுவதும் முடிந்த போது "ஆ முடிந்ததா கதை" என்று தோன்றியது உண்மை.

    //அசுர குலமானாலும் தன் இனம் ..// சீதையின் இரக்கக் குணம்! அதுவே சொல்லிவிட்டதே சீதை மன்னித்துவிடுவாள் என்று!அசுரர்களையே மன்னிக்கும் போது??!!

    //சரணாகதி செய்தவனுக்கு சஞ்சலம் எப்படி வரும்.// அதானே!!! உண்மை! இந்தச் சஞ்சலத்தில்தானே மனிதன் உழன்று வருகிறான்! சரணாகதி என்று சொல்லிக் கொண்டாலும் மனம் உழன்றுதானே வருகிறது! அந்த ஃபுல் ஃபெயித் சற்றுப் பின் வாங்கும் போவதால்தானே மனிதர்கள் படும் பாடு!

    //“என்னைப் பிரிந்திருந்தது உங்களுக்கு உகப்பாயிருந்ததா பிரபு “// என்னதான் //பார்வையாளர்கள்தான் பதட்டப்பட வேண்டும்.. கதாநாயகனும் நாயகிக்கும் எவ்விதக் குழப்பமும் இல்லை.// இப்படிச் சொன்னாலும் சீதைக்குள்ளும் இந்தக் கேள்வி எழுகிறதே!
    //“உன் மனசில் என்ன ஓடியது.. அதைச் சொல் முதலில் “

    எந்த யுகமாய் இருந்தால் என்ன .. பெண் மனசில் என்ன என்று தவிப்பதுதான் ஆணின் இயல்போ .. அது பரமனாய் இருந்தாலும்.// சீதைக்கும் இதே வரிகள் தான் அதனால் தான் அந்தக் கேள்வி போலும்!

    //“ நாம் பிரிந்திருந்தோமா என்ன “// அதானே! ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றோடொன்று ஐக்கியமாகி இருக்கும் போது என்ன பிரிவு??!! இது மனிதனுக்கும் பொருந்தும்தான் இல்லையா...ஒவ்வொரு மனிதனுள்ளும் இறைவன்/இறைவி இருக்கிறானே/ளே! கலந்துதான் இருக்கிறான்/ள்! ஆனால் அதை மனிதர்கள் நாம் உணர்வதில்லை.!! அதனால்தான் இந்த உலக உழல் என்றும் அர்த்தம் கொள்ளலாமோ...இந்தப் பின்னூடமே நீண்டதால் அடுத்து வருகிறேன்...

    கீதா








    பதிலளிநீக்கு
  6. //“தேவி..அப்போது நான் உயிரோடு இல்லை. வல மார்பினில் வாழ்கின்ற மங்கை இல்லாத என்னைக் கேலி செய்தார்கள் எல்லோரும்..இவனா அவதார புருஷன் என்று “// இதை மனித மனத்திற்கும் பொருத்து ஒரு பதிவே போடலாம்....பானுக்கா தன் பதிவில் சொல்லியிருந்தது போல ஒரு குறியீடு??!!!

    //“உனக்குப் பிடிக்காததைச் செய்தாலுமா “

    “பிரபு .. நாம் குழந்தைகள் அல்லவே “

    ஸீதையின் குரலில் ஒரு எள்ளல்.

    “என்னை மன்னிப்பாயா சீதா “// சீதை மன்னித்தாள்...

    என்றாலும் இதன் பிறகு தொடரும் அத்யாந்த ராமாயணத்தில், // /“உனக்குப் பிடிக்காததைச் செய்தாலுமா “// ராமன் கேட்கும் இந்தக் கேள்விக்கு வேறு விதமான விடையோ சீதையிடமிருந்து??!!

    ரிஷபன் சார் மிக மிக ரசித்தேன் சார் உங்கள் வரிகளை!! எழுத்தின் நடையை! உங்களுக்கு வாழ்த்துகள் என்றோ பாராட்டுகள் என்றோ சொல்லும் அளவிற்குப் புலமையோ அறிவோ எனக்குக் கிடையாது என்பதால் உங்களுக்கு மனமார்ந்த நன்றி சொல்லிக் கொள்கிறேன். உங்களின் எழுத்தை வாசிக்கக் கிடைத்த வாய்ப்பிற்கு! இப்படியான ஓர் எழுத்தை வாசிக்கத் தந்த எங்கள் ப்ளாகிற்கும் மனமார்ந்த நன்றி!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. அடடா! அற்புதம்! லா.ச.ரா.வை படித்தது போல இருக்கிறது.

    //அக்னிதேவன் தன்னைப் புதுப்பித்துக் கொண்டான். எத்தனை காலமாய் எதை எதையோ சுட்டெரித்து தன்னைத் தீட்டுப் படுத்திக் கொண்ட வருத்தம் அவனுக்கு. ஆயிரம் சமாதானங்கள் சொல்லிக் கொண்டாலும் தாயாரின் கிருபை போல வருமா..//

    சீதையின் அக்னி பிரவேசம் அவள் அக்னிக்கு செய்த க்ருபையா? எங்கேயோ அழைத்துச் விட்டீர்கள்.. வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. எங்கேயோ அழைத்துச் சென்று விட்டீர்கள்.. என்று வந்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. நாம் பிரிந்திருந்தோமா... என்ன!...

    தீபமும் அதன் ஒளியும் வேறு வேறா?.// வாவ்! அட்டகாசமான வரிகள்! துரை செல்வராஜு சகோ!!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. என்னாதூஊஊஊஊஉ சீதையைப் பார்த்து.. ராமன்.. “வைதேகி.. மைதிலி” எண்டெல்லாம் கண்ட நிண்ட பெண்களின் பெயர்களைச் சொல்லி அழைக்கிறாரே:).. ஹையோ இக்காலத்தில எந்த ராமனாவது இப்படி ஆரும் பெண்களின் பெயர்களைச் சொல்லி மனைவியை அழைக்கட்டும் பார்ப்போம்ம்.. ஹா ஹா ஹா உடனேயே டிவோஸ்தேன்ன்ன்ன்ன்ன்:)..

    பதிலளிநீக்கு
  11. //எந்த யுகமாய் இருந்தால் என்ன .. பெண் மனசில் என்ன என்று தவிப்பதுதான் ஆணின் இயல்போ .. அது பரமனாய் இருந்தாலும்.//

    இதையே காலம் காலமாகச் சொல்லி என்ன பண்ணப்போறீங்க.. இது தப்பான எண்ணம்..

    பெண்கள் எப்பவும் கலந்து பேச விரும்புபவர்கள்.. 24 மணிநேரம் கதைச்சாலும் அவர்கள் கதைக்க ரெடி... ஆனா முக்கால்வாசி ஆண்களுக்கு அதிகம் பேசுவது பிடிப்பதில்லை.. இதனாலேயே மனைவியுடனான உரையாடலைக் குறைத்துக் கொள்ளும்போது... பெண்களின் மனதைப் புரிந்துகொள்ள முடியவில்லையே எனப் புலம்புகிறார்கள்.

    மனைவியோடு தொடர்ந்து அன்பாகப் பேசிப் பாருங்கள்.. மனதில் உள்ள அத்தனையையும் கொட்டி விடுவார்கள்.. இதைப் புரிந்துகொண்டிருக்கும் குடும்பங்களில் இன்பம் பூத்துக் குலுங்குது.

    பெண்கள் மற்றவரோடு பேசினால் மட்டுமே..மன நிம்மதி அடைந்துவிடுகிறார்களாம்.. ஒரு நாளைக்கு ஒரு பெண் குறைந்தது 3000 சொற்கள் பேசினால்தான் அப்பெண் திருப்தி அடைவாவாம்.. இப்படிப் பேச துணை கிடைக்காதபோது எரிச்சல் கோபம் அடைகிறார்களாம்.. அதே நேரம் சில பெண்கள் தப்பான தொடர்பில் ஈடிபடுவதற்கும் இதுவும் ஒரு காரணமாம்.. அதாவது கணவரோடு பேசும் சந்தர்ப்பம் குறையும்போது, வெளியே ஒரு ஆண் நல்ல நட்பாக நீண்ட நேரம் மனதுக்கு ஆறுதலாகப் பேசும்போது.. அந்த ஆணுடனேயே அதிகம் ஒட்டி விடுகிறார்களாம்...

    ஆனா ஆண்கள் அப்படி இல்லை.. ஒரு தடவை வெளியே சுற்றி வந்தாலே அவர்களுக்கு அது போதுமாம்.. பேச வேண்டும் எனும் கட்டாயமில்லையாம்.

    புரிஞ்சுக்கோங்க.. உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்:)) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  12. //“என்னைப் பிரிந்திருந்தது உங்களுக்கு உகப்பாயிருந்ததா பிரபு “

    “ நாம் பிரிந்திருந்தோமா என்ன “//

    ஹா ஹா ஹா இப்பூடி ஏதாவது வார்த்தைகளில் “தெக்கினிக்கி” குகளைப் பாவித்துப், பெண்களைக் கவிழ்ப்பதே ஆண்களுக்கு வேலை.. பெண்களும்.. அதை ஆராட்சி எல்லாம் செய்ய மாட்டார்கள்.. அந்த பேச்சில் மயங்கி உடனேயே சரண்டர்தேன்ன்.. இப்போ புரியுதா.. பெண்கள் எவ்ளோ பெலவீனமானவர்கள் என... இப்பூடிப்பட்ட பெண்களைப் போய்ப் புரிஞ்சுக்க்க்க்க்க முடியல்லியே எனப் புலம்பலாமோ கர்ர்ர்:).

    10 வீதம் பெண்களை விடுங்கள்.. 90 வீதம் பெண்களும் இப்படித்தான்:).. இதனால்தான் இலகுவில் ஏமாற்றப்பட்டும் விடுகிறார்கள்..

    பதிலளிநீக்கு
  13. ஹா ஹா ஹா கதாசிரியர் ரிஷபனுக்கு வாழ்த்துக்கள்.

    இக்கதை முழுவதிலும் காட்டப்பட்டிருக்கும் ஒரு விசயம் என்னவெனில்.. செய்வதை எல்லாம் செய்து போட்டு.. சாமர்த்தியமாகப் பேசியும்.. காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டு மொத்தத்தில் சீதையைக் கவிட்டுப்போட்டார்ர்ர்:)...

    இப்போதாவது புரிகிறதா பெண் மனம் எப்படிப் பட்டதென:).. ராமனைப்போல பேச நடிக்க.. அந்த தெக்கினிக்குகளைக் கற்றுக்கோங்க:).. ஹையோ இதை எல்லாம் ஒரு சுவீட் 16 ஐச் சொல்ல வைக்கிறியே முருகா.. அதாரது கல்லெடுக்கிறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. அதெல்லாம் வாணாம்ம் மீ ஓடிடுறேன்ன்:).

    பதிலளிநீக்கு
  14. அழகான நடையில் ஆண்களின் வார்த்தை ஜாலத்தை கணித்து கதையாக்கி விட்டீர்கள் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  15. எத்தனை முறை படிப்பது? திகட்டாத எழுத்தோட்டம். பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  16. அத்தனை உள்மனதறிந்து ஒருமுனைப்பாய் வாழ்பவன் 'பிடிக்காத காரியம் செய்தாலுமா?' என்று கெட்பது நெருடலாக இல்லையோ?

    பதிலளிநீக்கு
  17. சரண் தருபவன் சரண் பெறும் காட்சி நிறைவாகவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  18. ரிஷபன் சார் எழுத்து - வழக்கம் போல் சூப்பர்! யுக யுகமாய் தொடரும் மன்னித்தல்கள்!! :-))

    பதிலளிநீக்கு
  19. கம்பனின் இராம காதையில் ராமனை அவ்வளவு நல்லவராகக் காட்டவில்லையே சரண் கொடுப்பவர் சரண் கேட்பதுபோல் எங்காவது இருக்கிறதா இருந்தாலும் சீதை ராமனை மன்னிப்பது இயல்பாகவே வந்திருக்கிறது பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  20. //கம்பனின் இராம காதையில் ராமனை அவ்வளவு நல்லவராகக் காட்டவில்லையே// இது என்ன புதுசா இருக்கு? கம்பன் தான் ராமனைக் கடவுளாகக் காட்டியவன்!

    பதிலளிநீக்கு
  21. //கம்பனின் இராம காதையில் ராமனை அவ்வளவு நல்லவராகக் காட்டவில்லையே// இது என்ன புதுசா இருக்கே! கம்பன் தான் ராமனைக் கடவுளாகக் காடியவன்!

    பதிலளிநீக்கு
  22. யுக யுகமாக ஆண்கள்,யுகமாக மனைவிகள்...
    ஒரு சோகத்தையும் மிக அழகாக எழுத்துகளால்
    சுந்தரமாக்கிவிட்டீர்கள் மிக அருமை. .
    மீண்டும் தயா சதகம் படித்த நிறைவு.
    ராமனுக்கே அன்னையானாள் சீதா பிராட்டி.
    மிக நிறைவு.

    பதிலளிநீக்கு
  23. ஆஹா... இந்த வாரம் ரிஷபன்ஜி கதையா.... அவருடைய வழியில் மிகச் சிறப்பாக ஒரு பகிர்வு. பாராட்டுகள் ரிஷபன்ஜி!

    பதிலளிநீக்கு
  24. உங்கள் அழகில் மயங்கி எத்தனைபேர்? இராமன் சிரித்தார்.நான் உன் அழகில்மயங்கிக் கிடக்கிறேன்.
    சீதைக்குத்தான் எத்தனை ஸந்தோஷம்?
    கணவனின் இந்தமாதிரி வார்த்தைகள்தான் மனைவிகளின் ஸொர்கம். ஒவ்வொரு வரியும்பிரமிக்க வைக்கும் பொருள் சொரிந்த அழகு. அசத்தலான கதை. அன்புடன்

    பதிலளிநீக்கு
  25. ராமனை ஒரு சாதாரண மனிதனாகவே காட்டப்படுகிறது நான் சீதை ராமனை மன்னித்தாள் என்று எழுதிய கதையில் சீதையை ராமன் நடத்தும் முறையை கம்பனின் வரிகளிலேயே கூறி இருக்கிறேன் மேலும் பல நிகழ்வுகள் எல்லாம் அப்படியே எண்ண வைக்கிறது ராமனுக்கு கடவுள் அந்தஸ்து கொடுத்து வழிபடுபவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது என் சுதந்திரம் ஐயா.
      ராமனே தான் மனிதன்.. தசரத மைந்தன் என்றே சொல்லிக் கொள்கிறார்.
      உங்கள் கருத்திற்கு நன்றி

      நீக்கு
  26. //இராமனின் மானுடத் தோற்றத்தில் ஒரு நடுக்கம். பார்வை புலனாகாப் பெருவெளியில் சஞ்சரித்து மீண்டது.

    “உனக்குப் பிடிக்காததைச் செய்தாலுமா “//

    மீண்டும் சீதையை பிரிய போவதை (அடுத்து வனத்தில் கொண்டுவிட்டுவிட போவதை) சூசகமாய் சொல்லிவிட்டார் ராமன்.

    அருமையாக இருக்கிறது கதை.

    பதிலளிநீக்கு
  27. ரிஷபன் சார் அருமை . உண்மையில் இப்படித்தான் உரையாடி இருப்பார்களோ என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது

    பதிலளிநீக்கு
  28. ஸ்ரீராம் சார், அனைத்துக் கதைகளின் இணைப்பையும் பதிவின் இறுதியில் கொடுக்கவும்

    பதிலளிநீக்கு
  29. கதையைப் படிக்கும்போது எனக்கு ஏற்பட்ட எண்ணத்தை முரளிதரன் அப்படியே சொல்லிவிட்டார்.

    நாங்கள் எல்லோரும் கற்பனையாக ஒரு ராமனையும், சீதையையும் உருவாக்கி அவர்களுக்குள் ஒரு முரண்பாட்டையும் கற்பித்து ..... இப்படியாக ஏதேதோ செய்து சீதை ராமனை மன்னிக்கும்படி செய்தோம். நீங்கள் உண்மை ராமனையும் சீதையையுமே வைத்து அன்று இப்படித்தான் நடந்திருக்கும் என்று வெகு சிறப்பாக எழுத்தில் வடித்து விட்டீர்கள், ரிஷபன். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!