திங்கள், 27 நவம்பர், 2017

"திங்க"க்கிழமை : புளிப்பொங்கல் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி

எங்க வீட்டில் புளிப் பொங்கல்னு தான் சொல்வோம். என்றாலும் அம்மா எப்போவானும் தான் செய்வார். ஏனெனில் அப்பாவுக்குப் பிடிக்காது. ஆனால் மாமியார் வீட்டில் அடிக்கடி செய்வாங்க. அவங்க நொய்யிலே செய்வதோடு இதைப் புளி உப்புமா என்றும் சொல்வார்கள். நாங்க புளி உப்புமா எனில் அரிசியை அரைச்சுப் புளிக்க வைச்சுச் செய்வோம். அல்லது அரிசியை ஊற வைச்சு மி.வத்தல், புளி, உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைச்சுக் கிளறுவோம். அல்லது அரிசி மாவில் புளி ஜலத்தை ஊற்றி உப்புப் போட்டுக் கலந்து வைச்சு கடுகு, மி.வத்தல், கருகப்பிலை, பெருங்காயம் தாளித்து உதிர்ப்போம். ஆனால் இது இவற்றில் சேராது. இதற்கும் அரிசியைக் கொஞ்ச நேரமாவது ஊற வைச்சுட்டுப் பின்னர் ஜலத்தை வடித்து வைத்து ரவையாக உடைச்சுக்கணும். 

ஏற்கெனவே அரிசி உப்புமாவுக்கு உடைச்சதைத் தான் மீண்டும் இங்கே பகிர்கிறேன். ஏன்னா இன்னிக்குப் படம் எடுக்கணும்ங்கற நினைப்பே இல்லை. தாளிதம் செய்து புளியைக் கரைச்சு ஊற்றினப்புறமாத் தான் நினைப்பே வந்தது. :) 

இதற்குத் தேவையான பொருட்கள்:

அரிசி இரண்டு கிண்ணம்

புளி ஒரு சின்ன எலுமிச்ச அளவுக்கு ஊற வைச்சுக் கரைச்சு இரண்டு கிண்ணம் நீர் எடுத்துத் தனியா வைக்கவும்.

உப்பு தேவையான அளவு

தாளிக்க நல்லெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன்

கடுகு, உபருப்பு, கடலைப்பருப்பு தலா ஒரு டீஸ்பூன், வேர்க்கடலை இரண்டு டீஸ்பூன் அல்லது ஒரு டேபிள் ஸ்பூன். மி.வத்தல் அவரவர் காரத்துக்கு ஏற்றாற்போல் ஒன்று அல்லது இரண்டு. கருகப்பிலை, பெருங்காயம், மஞ்சள் பொடி.

அடுப்பில் உருளியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் முதலில் பெருங்காயத்தையும் பின்னர்  மி.வத்தலைப் போட்டுக் கருப்பாக்கிக் கொள்ளவும். காரம் அதிகம் ஏறாது. பின்னர் கடுகு, உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலை என்ற வரிசையில் போட்டுக் கருகப்பிலை போடவும். கரைத்து வைத்திருக்கும் புளி ஜலத்தைச் சேர்க்கவும். உப்பு, மஞ்சள் பொடி சேர்க்கவும். கொதிக்கட்டும். 


கொதித்ததும் மிக்சியில் பொடிச்சு வைச்சிருக்கும் ரவையைப் போடவும். முன்னர் அரிசி உப்புமாவுக்குச் சொன்னது போல் மேலே ஒரு குழிவான தட்டில் நீர் வைத்து வைக்கவும். அடியில் பிடிச்சுக்காது. 


மேலே உள்ள படத்தில் புளி ஜலம் கொதிக்கிறது. கீழே ரவை போட்டதும் பாதி வெந்ததும் எடுத்த படம்.

ஆச்சா? இப்போப் புளிப் பொங்கல் நல்லா வேகட்டும். அதுக்குத் தொட்டுக்க வேண்டிய சாமக்கிரியைகளைப் பார்ப்போம். பொதுவாத் தயிர் அல்லது தயிர்ப் பச்சடி, மோர்க்குழம்புனு தொட்டுப்பாங்க. மோர்க்குழம்பு பண்ணுவது பற்றிஅப்புறமாப் பார்க்கலாம். தயிர்ப்பச்சடியில் தேங்காய் போட்டு அல்லது வெண்டைக்காய் வதக்கிச் சேர்த்து அல்லது காரட் துருவிச் சேர்த்து அல்லது வெள்ளரிக்காய் துருவிச் சேர்த்து அல்லது தக்காளி வதக்கிச் சேர்த்துனு பல முறைகள் இருக்கின்றன. வெங்காயம் சேர்த்த ராய்தா முறை இதுக்குச் சரிப்பட்டு வராது. இது பாரம்பரிய உணவு. ஆகவே நான் எப்போவும் எனக்குச் சரினு தோணும் பாரம்பரிய முறையிலேயே கத்திரிக்காயைச் சுட்டுத் தயிரில் கலந்து பச்சடியாக்கி அதைத் தொட்டுக்க வைப்பேன். நம்ம ரங்க்ஸ் நேற்று வரை இதைச் சாப்பிட்டுப் பார்த்ததில்லை. பயம் தான் வேறே என்ன? பல விதங்களில் எடுத்துச் சொல்லி தைரியம் உண்டாக்கிச் சாப்பிட வைத்தேன்.  என்ன அவநம்பிக்கை பாருங்க! ::) அப்படியும் இரண்டு கரண்டி தான் விட்டுண்டார். போனால் போகட்டும் போடா!

இப்போ கத்திரிக்காய்த் தயிர்ப்பச்சடி செய்முறை. கத்திரிக்காய்க்கே உயிரைக் கொடுக்கும் நான் இதுக்கு முன்னால் காணாமயே போயிடுவேன். :)

நல்ல பெரிய கத்திரிக்காய் எனில் ஒன்று. நடுத்தரக் கத்திரிக்காய் எனில் இரண்டு. சுட்டு வைத்துக் கொள்ளவும்.

சுட்டு வைத்திருக்கும் கத்திரிக்காய்கள். இவற்றைத் தோலுரித்து வைத்திருக்கேன். இதை மிக்சி ஜாரில் போட்டு ஒரே சுற்றுச் சுற்றிவிட்டு எடுக்கணும். ரொம்பவே சுற்றக் கூடாது. கொஞ்சம் இப்படியும், அப்படியுமா மசிஞ்சாப் போதும். எடுத்து ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் உப்புச் சேர்க்கவும். கடுகு, பச்சைமிளகாய், கருகப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும்.

தாளிதம் செய்தது மேலே. பின்னர் அதில் தயிரைச் சேர்த்துக் கலக்கவும். நன்கு கலக்கிய பின்னர் பிடித்தால் கொத்துமல்லி பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். புளிப் பொங்கலுடன் பரிமாறவும். தயிர் சேர்த்துக் கலக்கியது கீழே!
தயிரை மேலே ஊற்றி இருக்கேன். கலக்கி வைத்த படம் கீழே!கத்திரிக்காய்த் தயிர்ப்பச்சடி தயார். புளிப்பொங்கலுடன் சேர்த்துச் சாப்பிட்டுப் பார்த்துட்டுச் சொல்லுங்க! 


[ கீதாக்கா...  புளிப்பொங்கல் எனக்கு மிகவும் பிடிக்கும்.  ஆனால் இந்தக் கத்தரிக்காயத் தயிர்ப்பச்சடி எல்லாம் செய்ததில்லை! - ஸ்ரீராம்  ]================================================================29 கருத்துகள்:

 1. புத்தம் புதிய காலை
  புளிப் பொங்கலுடன்!...

  பதிலளிநீக்கு
 2. புளிப் பொங்கலுக்கு தயிர்ப் பச்சடி..
  சரி... புதுத் தயிர் தானே!..

  எதுவென்று சொல்லவில்லையே!..

  பதிலளிநீக்கு
 3. ஏனென்றால்
  புளித்த தயிரா.. என்று கேட்கப்படாது!..

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 5. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜு சகோ அண்ட் ஸ்ரீராம்!! அப்புறம் எல்லாருக்கும் தான்..இது அட்டெண்டன்ஸ்!!

  அப்பால வரேன்!!!

  கீதானு போட விட்டுப் போச்சு அதான் டெலிட் பண்ணிட்டு போடறென்

  கீதா

  பதிலளிநீக்கு
 6. நம்முடைய தளத்தில் கார்த்திகை தரிசனம்..
  எல்லாரும் வந்துடுங்கோ!....

  பதிலளிநீக்கு
 7. ஓ இதை புளிப்பொங்கல் நு சொல்லுவாங்களா...எங்க மாமியாரிடம் கற்றுக் கொண்டது. சுட்டக் கத்தரிக்காய்த் தயிர் பச்சடி நான் பெரிய கத்தரிக்காய் கிடைக்கும் போதெல்லாம் செய்வதுண்டு. இதை புளி உப்புமானு சொல்லுவாங்க. எங்க மாமியார் இதே உப்புமாவுல கத்தரிக்காய் வதக்கிப் போட்டும் செய்வாங்க. அப்படிச் செய்யும் போது தனியா, க.பருப்பு, பெருங்காயம் மி வ வறுத்துப் போட்டுப் பொடி செய்து போட்டு தேங்காய் பூவும் சேர்ப்பாங்க. இல்லைனா ப்ளெய்ன் தான்..நீங்க சொல்லிருக்காப்ல

  எங்க பிறந்த வீட்டுல புளி உப்புமானா அரிசி மாவை புளித்தண்ணீர்ல போட்டு கலந்து ரொம்ப நீர்க்க இல்லாம கொஞ்சம் கெட்டியா, எண்ணெய்ல மோர் மிளகாய் கடுகு, உ ப. க வே தாளித்து உசிலிக்கு உதிர்ப்பது போல் உதிர்த்துச் செய்வாங்க..நானும் செய்வேன்...அதற்கும் இப்படியான பச்சடிகள் நல்லாருக்கும்....

  கீதா

  பதிலளிநீக்கு
 8. சுவையோ சுவை. புளி உப்புமாவோ புளிப் பொங்கலோ உதிராக இருக்கும் போது சூடாகச் சாப்பிட வேண்டும். கத்திரிக்காய் தயிர்ப் பச்சடி இன்னும் சூப்பர்.
  குறித்து வைத்துக் கொள்கிறேன் .மிக நன்றி கீதா.

  பதிலளிநீக்கு
 9. அரிசி உப்புமா புளி உப்புமாவை நீங்கள் புளிப் பொங்கல்னு சொல்றீங்களா? அரிசி மாவுல பண்சுணறதை நீங்க புளிஉப்மானு சொல்வீங்களோ? கத்தரி தயிர்பச்சிடி இதுவரை பண்ணியதில்லை. பண்ணிப்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 10. இரண்டுமே புதுசு எனக்கு....

  ஆன கத்திரிக்காய் தயிர்ப் பச்சடி தான் ரொம்ப பிடிச்சு இருக்கு...

  பதிலளிநீக்கு
 11. கத்திரிக்கா பச்சடி புதுசா இருக்கு..

  புளிப்பொங்கல் செய்முறை வித்தியாசமா இருக்கு

  பதிலளிநீக்கு
 12. ரசித்தோம் ருசித்து பார்க்கிறோம்

  பதிலளிநீக்கு
 13. பொங்கல் !சரி! பளிப் பொங்கல் கேள்விப்பட்தே இல்லை!

  பதிலளிநீக்கு
 14. என் பாட்டி திருகையில் உடைத்து செய்வார்.. எனக்கு மிகவும் பிடிக்கும்.. என் மாமியாரும் செய்வார். இரண்டு வீட்டிலயுமே இதை புளிப்பொங்கல் என்று தான் சொல்வோம்.

  பிறந்த வீட்டில் அரிசிமாவில் புளிஜலம் சேர்த்தும், புகுந்த வீட்டில் மோர் சேர்த்தும் செய்வார்கள். நாங்கள் அதை புளி உப்புமா என்றும், மோர் சேர்த்திருப்பதால் கொழமா உப்புமா என்றும் இங்கு சொல்வார்கள்..

  மாமி இன்று நான் புளிப்பொங்கல் தான் செய்யப் போறேன்.. பார்த்தவுடனே ஆசை வந்துவிட்டது.

  பதிலளிநீக்கு
 15. புளிச்சாதம் கீதாக்காவை கடசியில் கை விட்டிடுச்சா??? ஏனெனில் சாதப் படம் போடவே இல்லையே:)...

  கத்தரிக்காய் தயிர்ப் பச்சடி சூப்பர், ஆனா அதையும் சொதிபோல ஆக்கிட்டீங்களோ என எனக்கொரு டவுட்டூ:)... எல்லாப் புகழும் கீதாக்காவின் ஆத்துக்காரருக்கே.....:).

  பதிலளிநீக்கு
 16. கீதாவின் மாமியார் வீட்டிற்கும், எங்கள் வளவனூருக்கும் ஏதாவது ஸம்பந்தம் இருக்குமோ என்னவோ.அரிசி நொய்யில்தான் இதைச் செய்வார்கள். புளி உப்புமா என்றும், புளிப் பொங்கல் என்றும் சொல்வார்கள். அரிசி உடைசலில் செய்வது அபூர்வம்தான். காரணம் வீட்டில் நெல்லை மிஷினில் கொடுத்து அரிசியாக்குவதில், ஏராளமாக நொய் எனப்படும் குருணை ஸ்டாக் ஆகிவிடும். அதையும் பல விதங்களிஸ் சிலவு செய்தாக வேண்டுமே! சுடச்சுட நல்ல ருசிதான். இதையும் மனதில் குறித்துக் கொண்டேன். நான் இப்போதெல்லாம் மைக்ரோ அவனில் வைத்தே கத்தரிக்காயைச் சுட்டு விடுகிறேன். பச்சடி,துவையல்,கொத்ஸு,பர்த்தா எல்லாம். செய்ய உபயோகமாகிறது. அரிசி நொய்யில் செய்யும்போது வெங்காயம்,இஞ்சி,பச்சமிளகாய்னு எல்லாம் சேர்த்து, ரைஸ் குக்கரில் போட்டெடுத்து சென்னையில் வீட்டில் வேலைசெய்தவர்களுக்கெல்லாம் காலையிலேயே டிபனாகக் கொடுத்தது. அவ்வளவு குஷி அவர்களுக்கு. உடைத்தரவையில் செய்யும் போது இன்னும் ஸாஃப்டாக இருக்கும் என்று நினைக்கிறேன். எங்கள் ப்ளாகில் ருசித்து சாப்பிடக் கொடுத்து விட்டீர்கள். எல்லோர் வீட்டிலும் கமகமக்க வேண்டியதுதான். நொய்யில் செய்யும்போது தண்ணீர் அரிசிக்கு வைக்கும் அளவில் வைக்க வேண்டி இருக்கும். இதையும் மனதில் வைத்துக் கொள்ளட்டும். அன்புடன்

  பதிலளிநீக்கு
 17. புதுசாக இருக்கிறதே..... பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 18. மீந்து போகும் சாதத்திலும் இதே சாமக்கிரியைகளுடன்புளி சாதம் செய்வதுண்டு

  பதிலளிநீக்கு
 19. நாங்களூம் புளி உப்புமா என இப்படித்தான் செய்வோம்.ஆதி வெங்கட் கூரியது போல் திருவையில் உடைத்து செய்வது வழக்கம்.நானும் கத்திரிக்காய் என்ரால் உயிரை விடுவேன்.ஆனால் பெண்ணிர்க்கு பிடிக்காது.நானும் அவரும் சாப்பிட வேண்டியதுதான்..

  பதிலளிநீக்கு
 20. புளிப்பொங்கல்இதுவரைக்கும் ருசித்தது கூட இல்லையே !! எனக்கு தட்டில் ஒரு பார்சல் ப்ளீஸ் :)
  அரிசி வகை எதுனாலும் நான் ட்ரை செஞ்சிடுவேன் ..

  ஹை பைங்கன் ரைத்தா !!
  இங்கே ப்ரண்டு கத்திரிக்காயை ரவுண்டா பொரிச்சி யோகார்டில் ஊறவைச்சி தந்தாங்க ..அதைவிட நீங்க சொன்ன முறை நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் .நான்லாம் கிரீக் யோகர்ட்டை எப்படியாவது சாப்பிடுவேன் தினமும்.
  நாளைக்கு கத்திரிக்காயை சுட்டு சேர்க்கிறேன் :)

  பதிலளிநீக்கு
 21. புளி பொங்கல் கேள்விதான் பட்டு இருக்கிறேன் இன்று படத்துடன் குறிப்புடன் பார்த்துவிட்டேன் தெரிந்து கொண்டேன் அதுவும் கத்திரிக்காய் பச்சிடியுடன் நல்ல இருக்கு சிஸ்

  பதிலளிநீக்கு
 22. இன்னிக்குத் தான் இந்தப் பக்கம் வர முடிஞ்சது! நேத்திக்கு ஃபேஸ்புக்கிலும் லிங்க் கிடைக்கலை! இன்னிக்கு எனக்கு வந்த அப்டேட் மூலமா இங்கே வந்தேன். அதிசயமா உடனே திறந்துடுச்சு! புளிப்பொங்கலுக்குக் கூட்டம் அதிகம் இல்லை போல! ஹிஹிஹி, அப்புறமா வரேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!