செவ்வாய், 7 மே, 2019

கேட்டு வாங்கிப் போடும் கதை - பரிமேலழகர் மெஸ் - பரிவை சே- குமார்


பரிமேலழகர் மெஸ்
பரிவை - சே.குமார்


நகரை விட்டு ஒதுக்குப் புறத்தில் இருந்தது பரிமேலழகர் மெஸ்...

அது மிகப்பெரிய ஹோட்டல் ஒன்றுமில்லை... சிறிய கடைதான்... வெளியில் புரோட்டா, தோசை போட ஒரு தார் டின்னை அடுப்பாக்கி வைத்திருந்தார்கள்.  அருகே இட்லி அடுப்பும்...

உள்ளே நான்கு நான்காய் மூன்று சாப்பாட்டு மேசைகள்...

மொத்தம் 12 பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட முடியும்.

காலை மற்றும் இரவு மட்டுமே இயங்கி வந்தது... மத்தியானச் சாப்பாடு
இல்லை.

ஒரு ஹோட்டலின் வெற்றி அதன் உரிமையாளரின் கையில்தான் இருக்கிறது என்பதை ஹோட்டல் தொழிலில் இருப்பவர்கள் நன்கு அறிவார்கள்.

பரிமேலழகர் உரிமையாளர் சாமிநாதன். நெற்றி நிறைய விபூதியை பட்டை அடித்திருப்பார். யாரையும் அதிர்ந்து பேசமாட்டார்... கோபம் என்றால் என்ன என்று கேட்கும் பக்குவம். வருபவர்களை உபசரிப்பதில் தனிக் கவனம் செலுத்துவார். அவரின் முகத்தில் எப்போதும் புன்னகை இழையோடும்.  புன்னகை முகமே ஒரு வசீகரம்தான் இல்லையா.

பில்லுக்குப் பணம் வாங்க என சிறியதொரு மேசை, அதில் சிரிக்கும்
சாய்பாபாவும் அழகுமலையானும்... ஏற்றி வைத்த ஊதுபத்தியின் வாசம்
கடைக்கும் நிறைந்திருக்கும் சிக்கன், மீன், மட்டன் வாசனைகளைத் தாண்டி வாசம் அடிக்கும்.

அவர் இளையராஜாவின் விசிறி என்பதை கடைச் சுவற்றில் ஒட்டியிருக்கும் ராஜாவின் படம் சொல்லும். மெல்லிய சப்தத்தில் ராஜாவின் பாடல்கள் எந்நேரமும் ஒலித்துக் கொண்டிருக்கும்.

சாப்பிட உட்கார்ந்ததும் இலை போட்டு தண்ணீர் தெளிப்பது அவராகத்தான் இருக்கும். ‘என்ன சாப்பிடுறீங்க...?’ என்று மலர்ந்த முகத்தோடு கேட்பார். சாதம் வைக்கும் பையனிடம் அவங்ககிட்ட கேட்டு வேணுங்கிறதை வைக்கணும்.  முகத்தில் அடிக்கிற மாதிரி அள்ளி வைக்கக் கூடாது என்று சொல்லி வைத்திருப்பார்.

அந்தக் கடையைப் பொறுத்தவரை வாடிக்கையாளருக்குப் பிடித்த விஷயம்... சோறு வைத்ததும் சிக்கன் இருக்கு...  மட்டன் இருக்கு....  மீன் இருக்கு... தலைக்கறி இருக்கு... என்ன வேணும் என தட்டைத் தூக்கிக் கொண்டு யாரும் வருவதில்லை என்பதுதான்...

இது இருக்கு... அது இருக்கு... எதாவது வாங்குங்கள் என்று வரும்போதே
சாப்பாட்டின் மீதான விருப்பம் ஓடிப்போய் விடுகிறது என்பது உண்மைதானே.

எதுவும் வேண்டாம்... ஆம்லெட் மட்டும் போதுமென்றால் கவனிப்பில் மாறும் மாற்றத்தை பல ஹோட்டல்களில் பார்த்திருக்கலாம்... இங்கு அதெல்லாம் இல்லை... கடைக்கு வரும் எல்லாருமே நமக்கு ஒன்றுதான் என்று சொல்வார் சாமிநாதன்.

எனக்கு சாமிநாதனின் பரிமேலழகர் மீது பிடிப்பு வந்தது ஒரு இரவு நேர
பயணத்தின் போதுதான்.

ஒரு பதினோரு மணி இருக்கும் ராமநாதபுரத்துக்கு தொழில் விஷயமாகப்
போய்விட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தோம் நானும் செல்வாவும்.

எங்காவது சாப்பிடலாம் என ஒவ்வொரு ஊராகக் கடந்து வந்து
கொண்டேயிருந்தோம். இனி சாப்பிடாமல் முடியாது என்ற நிலையில் 'டேய் மாப்ள...  இப்பவே மணி பதினொன்னு ஆகப் போவுது...  இதுக்கு மேல நாம காரைக்குடி போய் சாப்பிடுறதுன்னா சரி வராது... இங்கிட்டுத்தானே ஏதாவது சாப்பிட்டுப் போகலாம்’ என்றேன்.

‘நல்ல ஓட்டல்லன்னா சிட்டிக்குள்ள போனாத்தான் உண்டு... நாம இப்படியே பைபாஸ் வழியாப் போயிடலாம்ன்னு பாத்தேன்... பை பாஸ்ல ராஜதர்பார்ன்னு ஒரு ஹோட்டல் இருக்கு... புரோட்டா அம்பது ரூபான்னு சொல்லுவான். அது பஸ்க்காரனுகளுக்காகவே ஆரம்பிச்சிருக்க, கொள்ளை அடிக்கிற ஓட்டல்... அங்க போயி திங்கிறதுக்கு கொஞ்சம் வேகமாப் போனா காரைக்குடி நடராஜா தியேட்டருக்குப் பக்கத்துல இருக்க புரோட்டாக் கடையில மட்டன் குருமாவோட கொத்துப் புரோட்டா சாப்பிடலாம்’ என்றான் செல்வா.

ஆசையாகத்தான் இருந்தது மட்டன் குருமா கொத்துப்புரோட்டா மீது
இருந்தாலும் நேரங்கெட்ட நேரத்தில் புரோட்டா இருக்குமான்னே சந்தேகம்.  இதில் மட்டன் குருமா எப்படி இருக்கும்.

‘அடேய்... நைட்டுப் பன்னென்டு மணிக்காக போயிச் சாப்பிட முடியும்...
இங்கிட்டு எதாச்சும் ஹோட்டல் இருக்கான்னு பாரு... இல்லேன்னா சிட்டிக்குள்ள போ... கிருத்திகா மெஸ்ல போயி சாப்பிட்டுட்டுப் போகலாம்...’ என்றேன்.

'கிருத்திகா மெஸ்ல இன்னேரம் எல்லாம் முடிஞ்சிருக்கும்.. எதாவது நைட்
கடைதான் பாக்கணும்...' என்றபடி வண்டியைச் செலுத்தினான்.

செக் போஸ்டில் போலீஸ் மறிக்க, பார்மாலிட்டீஸ் முடிச்சி கிளம்பும் போது  'சார்... இங்கன பக்கத்துல எதுனாச்சும் ஹோட்டல் இருக்குமா...?’ என்று அந்தப் போலீசிடமே கேட்டேன்.

'கொஞ்சத் தூரம் போங்க...  லெப்ட்ல கட் பண்ணினா பரிமேலழகர்ன்னு ஒரு ஓட்டல் இருக்கும்... இந்த நேரத்துக்கு எதுனாச்சும் வச்சிருப்பாரு... சாப்பாடு செமயா இருக்கும் சார்...' என்றவரின் நாவின் ருசி வார்த்தைகளில் தெரிந்தது.

அவர் சொன்ன ஓட்டலுக்குப் போனபோது ஒரிருவர் மட்டுமே சாப்பிட்டுக்
கொண்டிருந்தார்கள்.


'என்னமோ ஆசைகள்...
நெஞ்சத்தின் ஓசைகள்...
மாலை சூடி.. மஞ்சம் தேடி..
காதல் தேவன் சந்நிதி..
காண... காணக் காண...’

என சின்னச் சின்ன வண்ணக்குயிலை குழைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார் ஜானகியம்மா.

'வாங்க தம்பி...  தோசை வேணுமின்னா ஊத்தலாம்...  முட்டைத் தோசை போடச் சொல்லவா... எல்லாந் தீர்ந்து போச்சு... மணியாச்சில்ல...’ என்றார்
புன்னகையோடு.

'சரித்தான்... இதைத்தான் நல்ல கடையின்னு சொன்னாங்களா... பேசாம
காரைக்குடி போயி புரோட்டா சாப்பிட்டிருக்கலாம்...' என்றபடி செல்வாவைப் பார்க்க, அவன் 'அப்பவே சொன்னேனுல்ல கேட்டியா' என்பதைப் போல் என்னைப் பார்த்தான்.

‘பத்து மணிக்குள்ள வந்தா எல்லாம் இருக்கும் தம்பி... அதுக்கப்புறம் ரெகுலரா வர்றவங்கதான் வருவாங்க... அவங்களுக்கு கொஞ்சம் எடுத்து வைப்பேன்...  மற்றபடி எல்லாம் சீக்கிரமெ முடிஞ்சிரும்... தோசை போடச் சொல்றேன் சாப்பிட்டுப் பாருங்க...  பிடிச்சிருந்தா இன்னொரு தோசை சாப்பிடுங்க... இல்லேன்னா அத்தோட முடிச்சிக்கங்க... இந்த நேரத்துல எந்தக் கடைக்குப் போனாலும் நீங்க விரும்புறது இருக்காது... நைட் கடைகள்ல இருக்கும்... ஆனா இங்க நைட் கடை அதிகமில்லை... ரொம்பத் தூரத்துல இருந்து வாறீக போல கொஞ்சம் பசி ஆத்திக்கிட்டுப் போங்க....’ என்றார் மாறாத புன்னகையுடன்.

சரியென அமர, இலை போட்டு தண்ணி வைத்தவர், ‘சூப்பும் இல்லை... இருந்தா சூடா அதைக் குடிச்சீங்கன்னா கொஞ்சம் ஆசுவாசமா இருக்கும்... ராகவா....  ரெண்டு வெஜிடபிள் சூப் போட முடியுமா...' அடுப்பில் நின்ற பையனைக் கேட்டார்.

'இல்லங்க  சூப்பெல்லாம் வேண்டாம்... தோசை போடச் சொல்லுங்க...'  என்றதும் 'சரிங்க தம்பி'  என்றவர் ரெண்டு முட்டை தோசை போடச் சொல்லிவிட்டு வெளியில் போய் நின்று கொண்டார்.

எனக்கு அவரைப் பார்த்த போது காரைக்குடி அழகு மெஸ் உரிமையாளர்தான் ஞாபகத்தில் வந்தார். வருபவர்களை உபசரிப்பதில் அவரைப் போல பார்ப்பது அரிது. முதலில் சூப் சாப்பிடச் சொல்வார். அப்புறம் சாப்பாட்டில் ஒவ்வொன்றாக, மெல்லச் சாப்பிடுங்கள் என்பார். ரசம் வேண்டாம் என்றால் 'ரசம் சாப்பிடலைன்னா எப்படி... கொஞ்சம் சாப்பிட்டுப் பாருங்க... நம்ம மிளகு ரசத்தை' என்று வம்படியாக சாப்பிட வைப்பார்.

நான் படிக்கும் காலத்தில் அழகு மெஸ்ஸில்தான் ரெகுலராகச் சாப்பிடுவேன்.  'ஏன் அவசரம்... மெல்லச் சாப்பிடுங்க... சாப்பிடும் போது எந்தக் கோட்டையைப் பிடிக்க இம்புட்டு அவசரம்' என்பார்.

அவரின் கனிவான முகம், இவரிடமும் இருந்தது.

ஆவி பறக்க முட்டைத் தோசை வந்தது...  பச்சைச் சட்னி என தக்காளிச் சட்னி வைத்தார். 'நண்டுக் கிரேவி, நிறையல்லாம் இல்ல... கொஞ்சம் இருக்கு... ஆளுக்குக் கொஞ்சம் சாப்பிட்டு பாருங்க' என சிறிய கிண்ணத்தில் கொடுத்தார்.

நண்டுக் கிரேவியும் முட்டை தோசையும் சுவையில் அள்ளிக் கொள்ள பச்சைச் சட்னியும் நான் என்ன குறைச்சலா என்றது. தோசை பதில் சொல்லாமல் உள்ளுக்குள் போனது. எனக்கு முன்னே 'அண்ணே இன்னும் ரெண்டு முட்டை தோசை' என்றான் செல்வம்.

‘இனிமே சீக்கிரம் வாங்க தம்பி... மத்தியானத்துல வராதீங்க... மத்தியான
சாப்பாடெல்லாம் இல்லை... காலையிலயும் ராத்திரியிலயும்தான்’ என்றார்.

அதன் பின் அந்த வழியாகச் செல்லும் போதெல்லாம் இரவுச் சாப்பாடு
பரிமேலழகரில்தான் என்பதை வாடிக்கையாக வைத்திருந்தேன்.

தேவகோட்டைப் பக்கம் செல்லும் வேலை அவ்வளவாக இல்லை... 

சிவகங்கைப் பக்கமே அதிகம் செல்ல வேண்டியிருந்ததால் கல்லல் வழியில் போய்த் திரும்பிக் கொண்டிருந்தேன்.

பல மாதங்களுக்குப் பிறகு மானாமதுரை, இளையான்குடி, காளையார் கோவில் என சுற்றிவிட்டு திரும்பிய மாலையில் சாமிநாதண்ணன் கடையில் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு...  இன்னைக்கு சாப்பிட்டே ஆகவேண்டும் என மற்ற பாதைகள் தவிர்ந்து தேவகோட்டைப் பாதையை தேர்ந்தெடுத்தேன்.

கடை இருந்த சந்தில் திரும்பினால் கடை இருந்த அடையாளமே இல்லை...

புதிதாக கட்டிடம் ஒன்று எழும்பிக் கொண்டிருந்தது. வேறெங்கும்
மாற்றியிருப்பாரோ என்ற எண்ணத்தில் அந்தச் சந்தில் இருந்த ஒரு
மளிகைக்கடையில் வண்டியை நிறுத்தி  'அண்ணே பரிமேலழகர்...' என மெல்ல இழுத்தேன்.

'என்ன தம்பி ஆறு மாசமாச்சு... கடையை மூடி... இன்னைக்கி வந்து கேக்குறிய...  இங்கிட்டு வரவேயில்லையா...?' என்றார் கணக்குப் பார்த்தபடி.

'இல்ல... நல்லாத்தானே ஓடுச்சு... அப்புறம் ஏன்...?'

'நல்லாத்தான் ஓடுச்சு... நல்ல மனுசந்தான்... என்ன செய்ய... சோதனை
நல்லவனுக்குத்தானே வருந்தம்பி...’  கணக்கை வைத்துவிட்டு என்னைப்
பார்த்துப் பேசினார்.

‘என்னண்ணே... என்ன விஷயம்... என்ன சோதனை...’ என வினவினேன்.

‘ஒரே நாள்ல ராமேஸ்வரம் போன பொண்டாட்டியையும் ரெண்டு மகனையும் ஆக்ஸிடெண்ட்ல அள்ளிக் கொடுத்துட்டாரு தம்பி...  இனி யாருக்காக நான் சம்பாதிக்கணும்ன்னு கடையைக் கொடுத்துட்டு பொயிட்டாரு... இப்ப அந்த இடத்துச் செட்டியாரு காம்ப்ளெக்ஸ் கட்டுறாரு...'

'என்னண்ணே சொல்றீங்க...?' என்னில் பதட்டம் படர்ந்தது.

'ஆமா தம்பி...  அன்பா...  அனுசரணையா வர்றவங்களுக்கு எல்லாம் புன்னகை மாறாம சோறு போட்ட மனுசன்...  அடுத்தவங்கள அதிர்ந்து கூட பேச மாட்டாரு...  காசு குறைச்சிருந்தாலும் அடுத்த தடவை தாங்கன்னு இருக்கறதை வாங்கிப்பாரு... என்ன செய்ய... அவர் தலையில இப்படி எழுதியிருக்கு...  இன்னொன்னு தெரியுமா தம்பி... இப்ப அவரு புத்தி சுவாதீனமில்லாம வீட்டுல இருக்கதாச் சொல்றாக...  செவி வழிச் செய்திதான்... எது உண்மையின்னு தெரியல... பாவம்...'

அதற்கு மேல் அங்கிருக்கப் பிடிக்காமல் வண்டியை எடுத்து அந்தச் சந்திலிருந்து மெயின் ரோட்டில் திரும்பிய போது ரோட்டோரத்தில் பரிமேலழகருக்கு வழிகாட்டிய போர்டு சிதலமடைந்து தொங்கிக் கொண்டிருந்தது. மனசு வலித்தது,

'அடடே தம்பி... வாங்க... எங்க கொஞ்ச நாளக்காணாமேன்னு பார்த்தேன்...
முட்டைத் தோசை போடவா' என்று கேட்கும் சாமிநாதன் அண்ணனின்
புன்னகை முகம் மெல்ல மேலெழும்பியது.

கண்ணில் நீர் கோர்த்தது.




- பரிவை - சே.குமார்.

43 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்
    இன்று யாருடைய கதையாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே வந்தால்…குமாரின் கதை வாவ் வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம்..
    கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜூ ஸார்.. உங்களுக்கும் இனி வரப்போகும் மற்றும் நம் நட்புறவுகள் அனைவருக்கும் நல்வரவு.

      நீக்கு
    2. வரவேற்ற துரைக்கும் இனி வரவேற்கப் போகும் அனைவருக்கும், வந்திருக்கும் நண்பர்களுக்கும் நல்வரவு, வணக்கம். இனிய அக்ஷய த்ரிதியை வாழ்த்துகள். இயன்ற வரை தயிர் சாதம் தானம் செய்யுங்கள். உப்பு வாங்குங்கள். வெள்ளைப் பண்டம் வாங்கணும், வெள்ளைப் பண்டம் விநியோகம் செய்யணும். யாரேனும் ஒருத்தருக்கானும் தயிர் சாதம் நிவேதனம் செய்து கொடுங்கள்.

      நீக்கு
    3. அன்பின் அக்ஷய த்ரிதியை நல்வாழ்த்துகள்...

      நல்லோர் இல்லங்கள் எங்கும் நன்மைகள் பெருகட்டும்!.. பெருகி வழியட்டும்!..

      நீக்கு
    4. "வெள்ளைப் பண்டம் வாங்கணும்"- இதைப் பார்த்து அடுத்த வருடத்திலிருந்து வைரம் கண்டிப்பா வாங்கணும்னு விளம்பரம் செய்துடப் போறாங்க....பார்த்து...

      நீக்கு
    5. பிளாட்டினத்தை விட்டுட்டியளே சாமீய்!....

      நீக்கு
    6. துரை செல்வராஜு சார்.... உங்க கமெண்ட் பார்த்தால், நீங்க இந்தியா வந்த உடனேயே பிளாட்டினம் நகைக் கடை ஆரம்பிக்கப்போறீங்க போலிருக்கே.... சரி சரி... Buy 1 Get 1 ஆஃபர் கொடுங்க. ஒரு பிளாட்டினம் மோதிரம் வாங்கினா, 1 கிலோ எடையுள்ள பிளாட்டினம் சாப்பாட்டுத் தட்டு ஃப்ரீ என்பது போல...

      நீக்கு
  3. என்ன ஒரு எழுத்து நடை...

    மண்வாசனையுடன் அன்பின் வாசனையும் வீசுகிறது..

    என்ன செய்ய?...

    நல்லவர்க்குத் தானே சோதனையும் வேதனையும்....

    பதிலளிநீக்கு
  4. கடைசியில் மனம் கனத்துப் போனது. கதை அருமை குமார். குமாரின் வித்தியாசமான கதை

    இன்னும் வருகிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  5. குமாரின் கதையா? அழகான தென்பாண்டித் தமிழ் நடையோடு கூடிய கதை! முடிவு மனதை வருத்தியது! காலம் சாமிநாதன் அண்ணனின் துக்கத்தைப் போக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  6. எதிர்பாராத முடிவைத் தருவதுதான் நல்ல கதைக்கு இலக்கணம் என்றாலும்... மனதைக் கட்டுப் படுத்த முடியவில்லை. சாமிநாதனை ஒரு எட்டு, பார்த்துவிட்டு வந்துடறேன்...

    பதிலளிநீக்கு
  7. கதைபோல இதை கருத இயலவில்லை பல நல்ல மனிதர்களின் வாழ்வு இப்படித்தான் இருக்கிறது.

    மனதை கனக்க வைத்த முடிவு.
    நண்பருக்கு வாழ்த்துகளும் கூடி...

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. குமார் கதை என்றால் அதில், அன்பு, பாசம் இழையோடும்.
    ஊர் மக்களின் மனம், ஊரின் மண்வாசனை அனைத்தும் இருக்கும்.

    கதை படித்து முடித்த போது கண்ணில் கண்ணீர் துளிர்த்துவிட்டது, மனம் பாரம் ஆகி விட்டது.ஏன் இப்படி?
    கடவுளே என்று இறைவனை கேட்க வைத்து விட்டது.

    அடுத்தவர்களுக்கு கஷ்டம் கொடுக்க கூடாது, மனம் நோககூடாது என்று அமைதியாக வாழ விரும்புவர்களுக்கு இறைவன் ஏன் பெரிய அடி கொடுக்கிறார்? முன்வினை என்று சொல்லி எளிதாக கடக்க முடியவில்லை.

    அன்பு குடும்பத்தை பிரிந்த சாமினாதன் அண்ணாச்சிக்கு இறைவன் மன ஆறுதலையும், தேறுதலையும் தர வேண்டும்.


    பதிலளிநீக்கு
  10. //தோசை போடச் சொல்றேன் சாப்பிட்டுப் பாருங்க... பிடிச்சிருந்தா இன்னொரு தோசை சாப்பிடுங்க... இல்லேன்னா அத்தோட முடிச்சிக்கங்க... இந்த நேரத்துல எந்தக் கடைக்குப் போனாலும் நீங்க விரும்புறது இருக்காது நைட் கடைகள்ல இருக்கும்... ஆனா இங்க நைட் கடை அதிகமில்லை... ரொம்பத் தூரத்துல இருந்து வாறீக போல கொஞ்சம் பசி ஆத்திக்கிட்டுப் போங்க....’ என்றார் மாறாத புன்னகையுடன்.//

    முதலில் அவர்களின் பசியை உணர்ந்து கொண்ட தாயின் பரிவு தெரிகிறது. அவர் வார்த்தைகளில் அன்பு, பரிவு பணிவு எல்லாம் சாப்பிட வந்தவர்களை கட்டிப்போட்டு இருக்கும் உண்மையாக.

    குமார் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம். அன்ன தாதாவுக்கு இப்படியும கஷ்டமா அன்புடன்

      நீக்கு
    2. தங்கள் கருத்துக்கு நன்றி அம்மா

      நீக்கு
  11. வந்தவர்களுக்கும் வரப்போகிறவர்களுக்கும் இனிய காலை வணக்கம்.
    குமார் அவர்களின் கதை ருசியுடன் சென்று வருத்த முடிவாகக் கனக்க வைத்துவிட்டது.
    இது கதை போலத் தெரியவில்லை.
    கண்முன்னேஏ நடப்பது போலக் காரைக்குடி,காளையார் கோவில் என்று ராமனாதபுர மண் வாசனையுடன்
    சாமினாத ஐயாவைப் பார்த்த மகிழ்ச்சி.
    பரிவை குமாருக்கு நல்ல எழுத்தோட்டம் இயல்பாகச் செல்லுகிறது.
    நடக்கக் கூடிய சம்பவம் தான்.மனம் ஏற்க முடியவில்லை.

    அன்பு வாழ்த்துகள் குமார்.வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  12. இன்று அக்ஷய த்ரிதியை அன்பும், அமைதியும் எங்கும் திகழ வேண்டும்.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    வாழ்க வையகம் ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  13. மண்வாசனையுடன்கூடிய கதை. மிக நன்றாக இருந்தது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  14. இங்கு நேற்று முதல் ரமதான் நோன்பு ஆரம்பம்...
    வேலை நேரம் குறைவு. பணி அதிகம்... அதனால் ஓய்வில் வருகிறேன்...

    கருத்துச் சொல்லிய... சொல்ல இருக்கிற அனைவருக்கும் நன்றி...

    எப்பவும் கதையைக் கேட்டு வாங்கி போடும் ஸ்ரீராம் அண்ணனுக்கு நன்றி.

    எங்கள் ப்ளாக்கில் தொடர்ந்து எழுத கிடைக்கும் வாய்ப்புக்கு நன்றியும் மகிழ்ச்சியும்.

    பதிலளிநீக்கு
  15. சாமிநாதன் அண்ணன் எத்தனையோ பேருக்கு அன்புடன் புன்னகையுடன் அன்னம் இட்ட அந்த உள்ளம் இப்போது சித்த ஸ்வாதீனமும் இல்லாமல் இருக்கும் நிலை செவி வழி வந்ததாகக் காற்றில் கரைந்து போகட்டும் இல்லையே அது உண்மையாக இருந்தால் அன்னமிட்ட கைக்கு யார் இப்போது அன்னம் இட்டுப் பார்த்துக் கொள்கிறார்கள் என்ற கவலையும் கூடவே எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. உண்மையான நிகழ்வு போல இருக்கிறது. எழுத்து.

    குமார் வாழ்த்துகள்! பாராட்டுகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  16. அடடா.. வலிக்கச் செய்து விட்டதே

    பதிலளிநீக்கு
  17. வணக்கம்
    கருத்து தெரிவித்திருக்கும் அனைவருக்கும் தனித்தனியே கருத்துக் சொல்ல முடியாத சூழல். மன்னிக்கவும்.

    எல்லாக் கதையும் போல் தான் இதுவும் எழுத ஆரம்பித்து முடிவை நோக்கி நகர்ந்தது. இதுதான் முடிவு என எப்பவும் எழுதுவதில்லை. முடிவை கதையின் போக்கே தீர்மானிக்கும்.

    என்ன பிரச்சினையின்னா... எழுதியதில் பெரும்பாலான கதைகளின் முடிவு சோகமாய்த்தான் இருக்கிறது. இதைக் கொண்டாட நாமிருந்தாலும் சிலர் இதென்ன எப்பவும் அழுகாச்சிக் கதை எழுதிக்கிட்டு எனச் சொல்லி கொண்டுதான் இருக்கிறார்கள்.

    சந்தோசமா எழுத வந்தா எழுத மாட்டோமா என்ன... வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்ணுறோம்...

    நம்மகிட்ட இருக்க சரக்கு இதுதான்... :)

    மேலும் நான் பார்த்து வளந்த கிராமத்து வாழ்க்கை மன நிறைவானது என்றாலும் வலி நிறைந்ததுதான்.அதுதான் எதார்த்தம்... அந்த வாழ்க்கை எப்போதும் ஜிகினா பூசி விளக்கொளியில் சிரிப்பதில்லை... மகிழ்வின் பக்கங்கள் கம்மி... அதைச் சொல்லி எழுத எப்பவும் நினைப்பதில்லை... எதார்த்த வாழ்க்கையை... அதன் வலியை... எனக்குத் தெரிந்த எழுத்து நடையில் அப்படியே பகிரத்தான் நினைக்கிறேன்... உங்களின் அன்பு அதைத்தான் செய்ய சொல்கிறது... எனக்கு தொடர்ந்து ஊக்கம் கொடுக்கும் உங்கள் அன்புக்கு நன்றி...

    சில நேரங்களில் முழுக்க முழுக்க நகைச்சுவையாய் எழுதிப் பார்ப்பதும் உண்டு... அப்படி ஒரு கதை ஸ்ரீராம் அண்ணனுக்கு கொடுக்கலாம் என்றால் ஏனோ மனம் இடம் கொடுப்பதில்லை...

    இந்தக் கதையில் காரைக்குடி அழகு மெஸ் நிஜம்... அவரின் உபசரிப்பும் நிஜம்... காரைக்குடியில் படித்துவிட்டு கணிப்பொறி மையத்தில் வேலை பார்த்த பொழுது பெரும்பாலான மதிய சாப்பாடு இங்குதான். எல்லாத்தையும் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் என நிற்பார். என்ன அவசரம் மெதுவா சாப்பிடுங்க... சாப்பிடும் போது வேலை பற்றி யோசிக்க கூடாது... ரசிச்சு ருசிச்சு சாப்பிடணும் என்பார்.

    திருமணம் முடிந்து மனைவியுடன் சென்ற போது ஞாபகம் வைத்துப் பேசினார். எப்பவும் அவசரம்தான் தம்பிக்கு... ஏம்ப்பா நீ சொல்லக்கூடாதா... எல்லாத்தையும் வாங்கி ருசி பார்க்க வேண்டாமா எனச் சொன்னார்.

    அவரை கதைக்குள் கொண்டுவர வேண்டும் என்பதால் உள் நுழைத்தேன்... கீர்த்திகா மெஸ் தவிர மற்றவை எல்லாமே கற்பனைதான்.

    என் கதைகள் புத்தகம் ஆகுதோ இல்லையோ... நண்பர்களின் புத்தகத்துக்கு அணிந்துரை எழுதுதல் தொடர்கிறது... முதலில் குடந்தை சரவண அண்ணனின் திருமண ஒத்திகைக்கு எழுதினேன்... இப்போது நௌஷாத்தின் சிறுகதை தொகுப்புக்கு எழுதி இருக்கிறேன்.

    ஷார்ஜா புத்தக கண்காட்சிக்கு ஒரு பிரசுரம் இங்கிருக்கும் தமிழ் அமைப்பு மூலமாக 19 நூல்கள் கொண்டுவர முயற்சிக்கிறார்கள்... என்னிடமும் சிறுகதை தொகுப்பு போடுங்கள் என கேட்டிருக்கிறார்கள்... பார்க்கலாம்... இன்னும் முடிவு இல்லை...

    மீண்டும் கருத்து சொன்ன எல்லாருக்கும் நன்றியும் அன்பும்.

    கேட்டு வாங்கி கதை போடும் ஸ்ரீராம் அண்ணனுக்கு நன்றியும் அன்பும்..

    தொடரட்டும் நம் பாசமும் நேசமும்.

    நேசத்துடன்...
    -'பரிவை' சே.குமார்.




    பதிலளிநீக்கு
  18. எனக்கும் கதை எழுத எழுத அதுவே தன்னை நகர்த்திக் கொண்டு போகும் சிலர் சிறுகதைக்கு என்று தனி இலக்கணம் இருப்பதுபோல் நினைக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  19. துயரைப் பகிர்ந்தாலும்
    சிறப்பான கதை.
    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!