வியாழன், 28 மே, 2020

உண்மையான கனவு - போலிக்கனவு - கனவின் காலம் 

வியாசர் கனவுகளுக்கு பலன் எழுதி இருக்கிறாராம்.  அதைப் படித்ததும் பகிரலாம் என்று தோன்றியது. ....


சென்ற வாரம் புது வீட்டில் பழைய புத்தகங்களுக்கு நடுவே கண்டெடுத்த புத்தகம் பற்றிச் சொன்னேன்.  அதில் அதன் ஆசிரியர் எழுதி இருக்கும் முன்னுரை, அறிமுகத்தை இங்கு தருகிறேன்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் கனவுகளின் காலம் பொறுத்து அது பலிக்கும் காலம் பற்றி அவர் சொல்லி இருப்பது.

இதன் பகுதிகளை அப்புறம் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சம் வெளியிடுவதாகச் சொல்லி இருந்தேன்.  ஆனால் ஒரு சோகம், புத்தகத்தை மறுபடி தேடவேண்டும்!  ஏகப்பட்ட அமர்க்களங்களில் புத்தகத்தை எங்கே வைத்தேன் என்று நினைவில்லை!

சரி, இப்போது ஏற்கெனவே எழுதி வைத்த புத்தகத்தின் பக்கங்களுக்குச் செல்வோம்!



முன்னுரை :-  இரவில் நாம் தூங்கும்போது கனவு காண்பது ஏன்?  கனவில் காணும் சம்பவங்கள் முன்னுக்குப்பின் முரணாக இருப்பதன் காரணம் என்ன?  இக்கேள்விகளுக்கு சரியான விடை இதுவரை யாரும் கொடுத்ததில்லை(1963)  மேல்நாட்டார் இவ்விஷயத்தை விஞ்ஞான ரீதியாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.  அவர்கள் ஒருக்கால் இவ்விஷயங்களை சரியான காரணங்களைக் கண்டு பிடிக்கக் கூடும்.

நமது பாரத நாட்டில் முனிவர் வியாசர் தனது ஞான சக்தியால் இந்த அர்த்தமில்லாத கனவுகளுக்கு பொருள் எழுதி உள்ளார்.  அவைகள் எல்லாம் வடமொழியில் சுவடிகளில் எழுதப்பட்டுள்ளன.  நான் என் உத்தியோக விஷயமாக அலகாபாத்தில் 1944 - 46 ஆம் ஆண்டுகளில் இருக்க நேரிட்டது.  அச் சமயம் இச் சுவடிகளை ஒரு பண்டிதரின் உதவியால் தமிழில் மொழிபெயர்த்து இந்நூலை எழுதலானேன்.  கனவில் நம்பிக்கை உள்ள வாசகர்கள் அன்புடன் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

எம் கே சபாபதி B.A.A.S.,
(Retired Dy -controller of Mily, Accts, Burmaa) 

-------------------------

இவ்வுலகில் கனவு காணாமலிருப்பவர்கள் ஒருவருமில்லை என்றே சொல்லலாம்.   அப்படி சிலர் இருப்பதாக சிலர் நினைத்தாலும் அவர்கள் காணும் கனவுகள் அவர்களுக்கு முழுதுமாகவோ, அரைகுறையாகவோ நினைவிலிருந்து மறைந்து விடுகின்றன.

உண்மையான கனவுகள் :  

நாம் உறங்கும்போது நம் ஸ்தூல சரீரம் உணர்வற்றுக் கிடக்கிறது.  கண்கள் மூடப்பட்டிருக்கின்றன.  காதுகள் திறந்திருந்தாலும் சப்தத்தைக் கேட்பதில்லை.  ஆகையால் நாம் கனவு காணும்போது தொழிற்படுவது நம் ஸ்தூல சரீரமல்ல, அதற்குள்ளிருக்கும் சூக்ஷும சரீரம்தான்.  

இதை ஆவி உடலென்றும் சொல்வதுண்டு.  இந்த சூக்ஷும சரீரம் நம் கண்ணுக்குத் தெரியாது.  இந்த ஆவி உடலுக்கு அபார சக்தி உண்டென்றும், நாம் உறங்கும்போது எங்கு வேண்டுமானாலும் செல்லக்கூடியது என்றும், இதற்கு ஆவி உலகிலிருக்கும் இறந்துபோன நம் சுற்றத்தாருக்கும், நண்பர்களுக்கும் தொடர்பு உண்டென்றும், அவர்களுடன் கண்டு பேசுவதே நமக்கு கனவாகத் தோன்றுகிறது என்றும் அறிஞர்கள் எழுதியும், கூறியும் இருக்கிறார்கள்.    

இறந்துபோன நம் சுற்றத்தாருடைய ஆவி உடல், ஆவி உலகத்திற்குப் போனபிறகும் நம்மை மறப்பதில்லை என்றும், நம் நன்மையைக் கோரி அவர்கள் நம் கனவில் தோன்றி, நமக்குத் பின்னால் நடக்கப்போகிற காரியங்களை எச்சரிக்கத் தயாராயிருக்கிறார்கள் என்றும் தெரிகிறது.  ஆகையால் இறந்துபோன நம் சுற்றத்தார்களையும் நண்பர்களையும் நாம் நினைத்தும், தொழுதும் வந்தால்தான் அவர்கள் நம் கனவில் வந்து நமக்கு வரும் நன்மைகளையும் தீமைகளையும் பற்றி எச்சரிப்பார்கள்.  

இப்படி அவர்கள் நம் கனவில் வந்து எச்சரிப்பதுதான் உண்மையான கனவாகும்.  சில கனவுகள் மகிழ்ச்சியைத்தரும்.  சில கனவுகள் மனக்கவலையைக் கொடுக்கும்.  பயங்கரமான கனவுகளையும், மனக் கவலைகளைக் கொடுக்கும் கனவுகளையும் காணும்பொழுது உடனே எழுந்து ஆண்டவனைத் தொழுதால் சாந்தி உண்டாகக் கூடும்..

கனவு காணும் காலம் :-  

முதல் ஜாமத்தில் காணும் கனவுகள் ஒரு வருடத்துக்குள்ளும், இரண்டாவது ஜாமத்தில் காணும் கனவுகள் எட்டு மாதத்திற்குள்ளும்    மூன்றாவது ஜாமத்தில் காணும் கனவுகள் நான்கு மாதத்திற்குள்ளும் அதிகாலையில் காணும் கனவுகள் உடனேயும் பலிக்கும் என்றும் அறிஞர்கள் எழுதி இருக்கிறார்கள்.

போலி கனவுகள் :-  

சிலர் அதிகமாக சாப்பிடுவதால் அஜீரணம் காரணமாக பயங்கரமான கனவுகளைக் காணலாம்.  சிலர் வறுமையால் கஷ்டப்படும்பொழுது மனம் மிகவும் சிந்தனையில் ஈடுபட்டிருக்கலாம்.  இச் சிந்தனைகள் தூங்கும்பொழுது கனவுகளாக வரக்கூடும்.  இன்னும் சிலர் விழித்திருக்கும்பொழுது மனக்கோட்டைக் கட்டிக் கொண்டிருப்பார்கள்.  இவைகளும் நாம் தூங்கும்போது கனவில் தோன்றலாம்.

அர்த்தமில்லாத கனவுகள் :-  

உண்மையான கனவுகள் சிலருக்குத்தான் தோன்றும்.  அநேகமாய், காணும் கனவுகள் கனவு காண்பவருக்கும், கனவில் வரும் உருவங்களும் (ஆண்களும், பெண்களும், மிருகங்களும், பூச்சிகளும், பறவைகளும், பொருள்களும்) ஒருவித சம்பந்தமும் இல்லாமலிருக்கும்.  இவ் விதமான கனவுகளுக்கு நம் பகுத்தறிவைக் கொண்டு பலன் சொல்ல முடியாது.  ஆனால் இக்கனவுகளுக்கு முனிவர் வியாசர் தனது ஞான சக்தியால் பொருள் எழுதியுள்ளார்.  அவைகளை எடுத்து அகர வரிசைப்படுத்தி இங்கே எழுதியுள்ளேன்.

அவ்ளோதாங்க!


============================================================================================


போன வாரம் சரோஜ் நாராயணஸ்வாமி பற்றி பகிர்ந்திருந்தேனா?  இந்த வாரம் பாடகி வாணி ஜெயராம்.

இது மார்ச் 21 ம் தேதியிட்ட தினமலரில் வெளியானது.


கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, பல மொழிகளில், ஏராளமான பாடல்களை பாடி வரும் வாணி ஜெயராம்: 


"நான் பிறந்தது வேலுார். நான்காம் வகுப்பு வரை, அங்கு தான் படித்தேன். அதன் பின், சென்னை வந்து விட்டோம். ஐந்தாம் வகுப்பிலிருந்து, மயிலாப்பூர், லேடி சிவசாமி அய்யர் பள்ளியில் தான் படித்தேன். 

வேலுாரில் இருக்கும் போது, நானும், என் சகோதரிகளும், கடலுார் ஸ்ரீனிவாச அய்யங்காரிடம், கர்நாடக இசையை கற்றோம். சென்னை வந்ததும், இசைப் பயிற்சி தொடர்ந்தது. பள்ளியில் படிக்கும் போது, இசைப் போட்டிகளில் பல பரிசுகளை வென்றுள்ளேன். அதுபோல, கையெழுத்து போட்டி, பேச்சு போட்டி என, பிற போட்டிகளிலும் வெற்றி வாகை சூடிஉள்ளேன்.

கல்லுாரி படிப்பு முடிந்ததும், வங்கி ஒன்றில் வேலை கிடைத்தது. 1968ல் எனக்கும், ஜெயராமுக்கும் திருமணம் நடந்தது. அவர் அப்போது, மும்பையில் உயர் பதவியில் இருந்தார். அதனால், வங்கிப் பணியை, மும்பைக்கு மாற்றிக் கொண்டேன்.

என் குரல் வளத்தை அறிந்த அவர், ஹிந்துஸ்தானி இசையை அறிய, உஸ்தாத் அப்துல் ரகுமான் சாஹேப் இடம் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார். அவர் தான், முழு மூச்சாக இசைத் துறையில் இறங்க, அறிவுரை வழங்கினார். அதன்படி, வங்கிப் பணியை ராஜினாமா செய்து விட்டு, காலையிலிருந்து மாலை வரை, இசை பயின்றேன்.

நான், 1970ல் தான், முதலில் சினிமாவில் பாடினேன். ஹிந்திப் படம் ஒன்றில் நான் பாடிய பாடல் பதிவு செய்யப்பட்டது. அதன் பின், ஒரு நாள், சென்னை மியூசிக் அகாடமியில், என் இசை நிகழ்ச்சி நடந்தது. என் குரலை கேட்டவர்கள், 'நம் தமிழ் பொண்ணு, ஹிந்தியில் சிறப்பாக பாடுகிறார்; அவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லையே' என, ஆதங்கப் பட்டனர்.

அதன் பின், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், 'மல்லிகை என் மன்னன் மயங்கும்' பாடலை பாடினேன். ஹிந்தி மட்டுமின்றி, மராத்தி, குஜராத்தி, போஜ்பூரி, மார்வாரி, பெங்காலி, ஒடியா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என, 19 மொழிகளில், பல ஆயிரம் பாடல்களை பாடியுள்ளேன். ஒரிசா மாநிலத்தின் ஒடியா மொழியில், 11 ஆண்டுகள், நம்பர் - 1 பாடகியாக இருந்திருக்கிறேன். 

ஏராளமான விருதுகள், தேசிய விருதுகள், பட்டங்களை வாங்கிக் குவித்து உள்ளேன். தமிழில், எம்.எஸ்.வி., துவங்கி, கே.வி.மகாதேவன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என, பிரபல இசையமைப்பாளர்களின் பாடல்களுக்கு பாடிஉள்ளேன்.பெரிய சாதனை செய்து விட்டதாக என்றுமே நான் நினைத்தது கிடையாது. ஒவ்வொரு நாளும் நமக்கு கிடைக்கும் அனுபவங்கள் தான் நமக்கு குரு. அவ்வப்போது, ஏழைகளுக்கு சின்னச் சின்ன உதவிகள் செய்து வருகிறேன். அது, மனநிறைவை அளிக்கிறது!  


===============================================================================

2014 இல் சென்னை, பெரம்பூரில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் பற்றி...  படிப்பவர்களுக்குதான் சுவாரஸ்யம்!  அனுபவித்த அந்தப் பெண்ணுக்கு உயிர்ப் போராட்டம்!  ஆனால் அந்நிலைக்கு அவளின் பொறுப்பின்மையே காரணம்.


====================================================================================


ஐந்து வருடங்களுக்கு முன்னர் பேஸ்புக்கில் எழுதிய ஒரு குட்டிக்கவிதை.  இப்போது கொரோனா வடிவில் இதற்கு வந்த பேராபத்து....  

ம்ம்ம்...



=========================================================================

ஐந்து வருடங்களுக்கு முன் பகிர்ந்ததுதான் கீழே இருப்பதுவும்!  பெற்றோர்களின் பாசத்தைக் கண்டு 'மெய்சிலிர்த்தது'!

இதற்கு "வெளங்கிடும்" என்று கமெண்ட் போடுவதைத் தவிர்க்கவும்!!!




==========================================================================================

ரொம்ப நாட்களாய் பகிர நினைத்து மறந்து கொண்டே போகிறது ; விட்டுப்போகிறது!  

புது வீட்டுக்கு வந்த புதிதில் பொருள்களை தவணை முறையில் அடுக்கிக் கொண்டிருந்தோம்.  (இன்னும் தவணை முடியவில்லை!)  

அப்போது ஹாலில் இருந்து ரூமுக்குள் பார்த்தபோது கிடைத்த காட்சி.  

காலை வெயிலில் நிழல் போல அமைந்து காணக் கிடைத்தது.  அது உண்மையில் என்னவோ, எதுவோ தெரியாது.  ஆனால் பார்ப்பதற்கு ராமர் போல, வசிஷ்டர் போல, ஆஞ்சநேயர் போல, ஒவ்வொரு சாயலில் தோன்றியது!  

அதுவும் ஆடும் நிழலில் ஏதோ 'அவர் 'அசைந்து கொண்டே இருப்பது போலவும் தோன்றியது!  தலையை அங்கும் இங்கும் திருப்பிப் பார்ப்பது போல....!  

அப்போது பிடித்த  எடுத்த புகைப்படங்களைக் கீழே தருகிறேன்!  கோபுரம் போல தோற்றம் தரும் வெள்ளைப் பின்னணியின் உள்ளே தெரியும் ஜடாமுடி நிழலை கவனியுங்கள்!





============================================= 

158 கருத்துகள்:

  1. அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  3. வாணிஜெயராம் அவர்களின் குரல் எனக்கு மிகவும் பிடித்தமானது.
    தமிழச்சியாய் பிறந்து இவ்வளவு இந்திய மொழிகளில் பாடியிருப்பது பெருமையான விசயம்.

    இந்த வளர்ச்சிக்கு அவரது கணவரே காரணம்.

    தமிழில் பாடியது குறைவான பாடல்களே காரணம் தமிழச்சி என்பதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு ஸ்ரீராம், இனிய காலை வணக்கம்.
      வியாச பகவான் , கனவுகள் பற்றி எழுதி இருக்கிறாரா.
      என்ன ஒரு அதிசயம்.!
      நானும் இந்தப் பலங்களைப் பற்றிப் படித்திருக்கிறேன்.

      உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்து
      விட்டுப் போனது.

      பித்ருக்களை நாம் எத்தனைக் கெத்தனை நினைக்கிறோமோ
      அத்தனைக்கத்தனை சந்ததிகளுக்கு நன்மை.

      நீக்கு
    2. வாங்க வல்லிம்மா...  வணக்கம்.  வியாச பகவான் சொல்லி இருப்பதாக நூலாசிரியரும், கீதா அக்காவும் சொல்றாங்க...!  சரியாத்தான் இருக்கும்.

      நீக்கு
    3. தேவகோட்டையாரே! பொதுவாக தமிழச்சி என்ற வார்த்தையை நான் தவிர்ப்பது வழக்கம்.
      தமிழ் அணங்கு, தமிழ்ப் பெண், தமிழாய்ந்த நங்கை நல்லாள், தமிழ்ச் செல்வி
      போன்ற வார்த்தைகளை சமயத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்துவது வழக்கம்.

      நீக்கு
    4. வியாசர் இப்படி எல்லாம் எழுதி இருக்கார் என்பதே எனக்கு இன்னிக்குத் தான் தெரியும்! :))))

      நீக்கு
    5. அப்புறம் உடனேயே சரியாய்ப் படித்து விட்டேன்!

      நீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். நேற்று கௌதமன் சொன்ன அறிவுரையைக்/ஆலோசனையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் இன்று உலக க்ஷேமத்துக்கான பிரார்த்தனைகளை மட்டுமே பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. கனவைப் பற்றி நான் என்ன சொல்வதுனு புரியலை. கனவு கண்டு கத்துவதாய்ச் சொல்லப்பட்டாலும் என்ன கனவு கண்டேன் என்பதே நினைவில் இருப்பதில்லை! நல்லதா? இல்லையா? எதானாலும் நான் கவலைப்படுவது இல்லை. :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாக்கியத்தை முழுவதுமாக முடிக்க வேண்டாமா கீசா மேடம்..

      //எதுனாலும் நான் கவலைப்படுவதில்லை. அருகிலுள்ள கணவரோ மற்ற உறவினர்களோ தூக்கம் கலைந்து திடுக்கிட்டாலும்//. ஹா ஹா ஹா

      நீக்கு
    2. ஹா...ஹா...ஹா...  கனவைப்பற்றி ரொம்பவே பேசி விட்டோமோ!

      நீக்கு
    3. அருகிலுள்ளவர்கள் மட்டுமில்லை நெல்லையாரே, வேறே அறையில் படுத்திருக்கும் பையர், மாட்டுப் பெண், மற்றும் பெண் வீட்டில் எல்லோரும் மாடியில் படுத்துப்பாங்க! கீழே இறங்கி வந்துடுவாங்க. இதை எல்லாம் சொல்லணுமே என்பதால் தான் சுருக்கமாய் முடிச்சேன். நீங்க சொல்ல வைச்சுட்டீங்க! இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
  6. வியாசர் கனவுகள் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் எழுதி இருக்கிறார் என்பது எனக்குப் புதிய செய்தி! அதைப் படித்துத் தமிழாக்கம் செய்திருக்கும் நபர் சபாபதி நம்ம ரங்க்ஸ் இருந்த துறையில் இருந்திருக்கிறார். அப்போல்லாம் மிலிடரி அக்கவுன்ட்ஸ் என்றே சொல்வார்களாம். என் கல்யாணத்தின்போது கூடப் பலருக்கும் மிலிடரி அக்கவுன்ட்ஸ் என்றால் தான் புரியும். அப்போல்லாம் வேலை மாறுதல் பாகிஸ்தானின் கராச்சி, லஹோர், ராவல்பிண்டி, நேபாளம், பர்மா என்றெல்லாம் வருமாம். சுதந்திரம் ஆன பின்னர் தான் இந்தியாவுக்குள் என்றாகி இருக்கிறது. உலக யுத்த சமயத்தில் வெளிநாடுகள் கூடப் போயிருக்காங்க. ஆங்கில ஆட்சி நடந்த நாடுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...   திரு நடனசபாபதி மாமாவுக்குத் தெரிந்தவரோ...  ஆக, உங்களுக்கும் வியாசர் கனவு பற்றி சொல்லி இருக்கிறார் என்பது தெரியாது.

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சபாபதி பர்மாவில் இருந்தப்போ மாமா பிறந்திருக்கவே மாட்டார். இரண்டாம் உலக மஹா யுத்தம் சமயம் ஒருவேளை இந்த சபாபதி பர்மாவில் இருந்திருக்கலாம். :))))) மாமா இந்திய -- சீன யுத்தத்தின் போது தான் வேலையில் சேர்ந்தார். பதினேழு வயது என்பதாலோ என்னமோ வேலையில் உடனே சேரணும் என்பதற்காக வயது கூடக் கொடுத்து எஸ் எஸ் எல்சி எழுதிவிட்டு உடனே ஒருவருஷம் ஹிகின்பாதம்ஸில் இருந்துட்டு அதன் பின்னர் இந்த வேலை.

      நீக்கு
    3. நான் காலையிலேயே எழுத நினைத்தேன். வருடம்லாம் கவனிக்காம இப்படி ஸ்ரீராம் எழுதியிருக்கிறாரோ இல்லை கலாய்க்கிறாரா என்று.

      நீக்கு
    4. ஆனால் மாமாவும் Deputy Controller பதவியில் தான் பணி ஓய்வு பெற்றார். கன்ட்ரோலர் வந்திருக்கணும். பணி உயர்வு ராஜீவ் காந்தி ஆட்சியின்போது யாருக்கும் கொடுப்பதில்லை என்று கொள்கை ரீதியான முடிவு. அதில் இரண்டு பணி உயர்வு தாமதம்.

      நீக்கு
  7. கனவுலகம் ஒரு ஆச்சர்யமான உலகம்.
    இந்த மாதம் திருமண நாட்களும் நிறைய.
    மற்றவையும் நிறைய.
    வேறு யாரிடமும் சொல்ல முடியாது நானே
    புழுங்கிக் கொண்டிருந்த போது,
    சிங்கம் மூன்று தடவை கனவில் வந்துவிட்டார்.

    முன்னைவிட ஆரோக்கியமாக,கம்பீரமாக.
    ஏன் வருத்தப் படுகிறே. நான் இருக்கிறேன் என்று சொன்னபடி.
    எத்தனை ஆதரவாய் நான் உணர்ந்தேன் என்று சொல்லி முடியாது.

    இன்று பார்த்தால் நீங்கள் எழுதி இருக்கிறீர்கள்.மிக நன்றி.
    அசட்டுப் பிசட்டுக் கனவுகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை.
    முடிந்தால் என் வலைப்பதிவில் கதையாக்கி விடலாம்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிங்கம் மூன்று முறை கனவில் வந்ததோடு  உங்களுக்கு தைரியமும் தந்திருப்பது ஆச்சர்யம் அம்மா...  தைரியமாக இருங்கள்.  அவர் உங்களுடன் இருக்கிறார்.  அவர் பார்த்துக்கொள்வார்.  இன்று இங்கு இதேபோல பதிவு வந்திருப்பதும் உங்களுக்கு தைரியத்தையும் நம்பிக்கையையும் தந்திருக்கும்.

      நீக்கு
    2. //சிங்கம் மூன்று தடவை கனவில் வந்துவிட்டார். முன்னைவிட
      ஆரோக்கியமாக,கம்பீரமாக.// கனவில் வரும் இறந்த என் முன்னோர்களும் கூட அழகாகவும், ஆரோக்கியமாகவும்தான் இருக்கிறார்கள்.

      நீக்கு
    3. அபூர்வ சந்தர்ப்பங்களைத் தவிர மற்ற நேரங்களில் நம் ஆண்டு காலத்துக்கு 300-400 வருடங்கள் உயிர், அடுத்த பிறப்பிற்காகக் காத்திருக்கும் என்று படித்திருக்கிறேன் (ஆவிகள் உலகம்)

      விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களுக்கு முன்பு, ஆழ்நிலை தூக்கத்திற்குக் கொண்டுபோய் ஒருவரின் முந்தைய பிறப்புகளை அறியும் தொடர் வந்தது. அதில் ஒரு நடிகை (பெயர் மறந்துவிட்டது முகம் மனதில் நிழலாடுகிறது) முந்தைய ஜென்மத்தில் தான் 'தாழ்ந்த' தொழில் செய்பவராக இருந்தார் என்று சொன்னார். (ஆழ்நிலைத் தூக்கத்தில்). சிலர் 'பறவைகளாக' இருந்ததையும் சொல்லியிருந்தனர். அதில் ஒருவர், தான் முந்தைய ஜென்மத்தில் ஜோதாபாய் அக்பர் என்றெல்லாம் சொல்லியிருந்தார். அவரை அந்த இடங்களுக்கே அழைத்துச் சென்று அதையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள்.

      நீக்கு
    4. இதெல்லாம் எப்போப் போட்டாங்க? பார்க்க நேரம் எப்படிக் கிடைச்சது? நமக்கு நேரத்தை எப்படிச் செலவழிக்கிறது என்பதே தகராறு.

      நீக்கு
    5. பஹ்ரைன்ல இருக்கும்போது, இரவு 7 1/2 (இல்லை 8 மணியா) மணிக்கு வந்ததுன்னு நினைவு (இங்க 10 மணி). ரொம்ப இண்டெரெஸ்டிங் ஆக இருந்ததால் ஹாலிலேயே படுக்கையைப் போட்டு படுத்துக்கொண்டே தொலைக்காட்சி பார்ப்போம். அங்க எல்லாத்துக்கும் நிறைய நேரம் இருந்தது.

      நீக்கு
  8. உலகின் இன்றைய சூழ்நிலையைக் குறிக்கும் உங்கள் கவிதை நன்றாக உள்ளது. வாணி ஜெயராம் ஹிந்திப்படச் சூழ்நிலையில் வெற்றி பெற்றதே பெரிய விஷயம். பெரம்பூரில் தப்பித்த பெண்ணைப் பற்றி முன்னரும் படித்திருக்கேன். சூரிய ஒளிக்கதிர்கள் விதவிதமான அமைப்பில் பூமியில் விழுவது எப்போதுமே அழகு. இம்மாதிரியான காட்சிகளை மேகங்களிலும் காண முடியுமே! பிஹார் செய்தி தெரிந்தது தான். இப்போ மாறி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உலகின் இன்றைய சூழ்நிலையைக் குறிக்கும் உங்கள் கவிதை நன்றாக உள்ளது.//

      நன்றி.

      கலந்து கருத்து சொல்லி இருப்பதற்கும் நன்றி.

      நீக்கு
  9. நிழலுருவங்கள் வால்மீகி, ராமன் ,அனுமன் என்று தோன்றுவது போலவே நிழலின்
    அவுட்லைன் தவழும் கிருஷ்ணன் போல இருப்பதைக் கவனித்தீர்களா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா...   கிருஷ்ணர் உருவமும் தெரிகிறது.

      நீக்கு
  10. வாணி ஜெயராம் மிகப் பிடித்த பாடகர் .ஆழ்வார்பேட்டையில் தான் வீடும் ஸ்டுடியோவும் என்று நினைக்கிறேன்.
    கிட்டத்தட்ட ஷோபனா ரவி ஜாடை.
    எங்கள் கம்பெனி விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தார்.
    நிறையப் பேசவே இல்லை.
    குரல் மஹா இனிமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஷோபனா ரவிதான் கொஞ்சம் வாணி ஜெயராம் ஜாடை என்று சொல்லவேண்டுமோ!  இனிமையான குரல் வளம் கொண்டவர்.

      நீக்கு
  11. பிட் நோட் கொடுத்துப் பிள்ளைகளைக் காக்கும் பெற்றோர் பெருமை சொல்லவும் கூடுமோ.!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா... என் எஸ் எஸ் எல் சி கணித பேப்பர் எங்க அப்பா தலைவராக இருந்த திருத்தும் சென்னருக்கு வந்ததாம். எதேச்சையாக வெரிஃபை பண்ணும்போது (இவ்வளவு விடைத்தாள்களுக்கு இத்தனை விடைத்தாள்கள் சென்டர் ஹெட் வெரிஃபை பண்ணணும்னு இருந்ததாம்) கூட்டல் தவறில் 87 க்குப் பதில் 84 மார்க் போடப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தாராம். அந்த விடைத்தாள் மூட்டைகள் பின்னால் எங்கள் வீட்டில் இருந்தது.

      இதை எழுதும்போது எங்க அப்பா ஹெட்மாஸ்டராக இருந்த பள்ளியில் 6ம் வகுப்பு படித்தது நினைவுக்கு வருது. தவறு செய்தால் முதல் அடி எனக்குத்தான்.

      ஒழுக்க விஷயத்தில் ரொம்பவே ஸ்ட்ரிக்ட். ஆனா பரீட்சை எழுதும் வரைல படிக்கணும்னு ஸ்ட்ரிக்டா இருப்பவர் பரீட்சை எழுதிய பிறகு அதைப்பற்றிப் பேசமாட்டார். 8ம் வகுப்பில் மாவட்ட தேர்வு உண்டு. எங்கப்பாவீட்டில் எனக்கு கணக்குப்பாடம் சொல்லித்தரும்போது ஒவ்வொரு தவறுக்கும் தொடையில் கிள்ளு விழும். அம்மா கொஞ்சம் தூரத்தில் நின்றுகொண்டு, ராத்திரி லேட்டாயிடுச்சே.. நாளைக்கு மீதியைப் பார்க்கலாம் என்று அவ்வப்போது குரல் கொடுப்பார்.

      பரீட்சை எழுதி முடித்து மார்க் வந்தபிறகு அதைப்பற்றிம் பேசுவது அர்த்தமில்லை என்பார். ஆனால் ஒழுக்கத்தில் தவறு நேர்ந்தால் ஸ்கேலால வெளுத்து வாங்கிடுவார் (8ம் வகுப்பு வரை. பிறகு அடித்ததே இல்லை. பெரிய பையனாகிவிட்டான் என்பார்)

      பிறகு வாய்ப்பு கிடைக்கும்போது எழுதுகிறேன்.

      நீக்கு
    2. நன்றாகச் சொன்னீர்கள் வல்லிம்மா...

      நீக்கு
    3. உங்கள் அனுபவங்கள் சுவாரஸ்யம் நெல்லை.  என் அப்பா கூட பின்னி எடுத்து விடுவார் - மார்க் சீட் காட்டும்போது.  ஆனால் சொல்லிக் கொடுக்க எல்லாம் வந்ததில்லை!  அம்மாவும் சொல்லிக் கொடுத்ததில்லை.  எல்லாம் ஸ்கூல்தான்!

      நீக்கு
    4. ஆசிரியராக இருந்த எங்கள் அப்பா கூட பரீட்சை எழுதிய பிறகு அதைப் பற்றி டிஸ்கஸ் பண்ணக் கூடாது என்பார்.

      நீக்கு
    5. எண்ணித் துணிக கருமம்...!

      நீக்கு
    6. என் அப்பாவுக்கும் எஸ்.எஸ்.எல்.சி. பரிக்ஷைப் பேப்பர்கள் திருத்த வந்திருக்கின்றன. தொடர்ந்து 3 வருடங்கள் வந்தன. ஆனால் வீட்டிற்குத் தான். தபால் அலுவலகம் போய்க் கையெழுத்துப் போட்டு வாங்கி வருவார். எங்க அப்பா எங்க 3 பேருக்குமே பாடம் ஏதும் சொல்லித் தந்ததில்லை. அண்ணாவும், தம்பியும் அப்பா வேலை பார்த்த பள்ளியிலேதான் படிச்சாங்க. ஆனாலும் அவங்களுக்கோ எனக்கோ சொல்லிக் கொடுத்ததே இல்லை. பள்ளியிலேயே எல்லாமும் முடிச்சுட்டு வீட்டுக்கு வரும் நான் வீட்டில் அதிகம் படித்தது ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள், மஞ்சரி, கல்கண்டு, கண்ணன் போன்றவை. இதை அப்பாப் பள்ளிவரை வந்து சொல்லி இருக்கார். ஆனால் தொடர்ந்து முதல் 3 இடங்களுக்குள் இருந்து வந்ததால் யாரும் எதுவும் சொல்ல முடிந்ததில்லை. குறைந்தால் கணக்கில் தான் மதிப்பெண்கள் குறையும். அந்த ஆசிரியைக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம்.

      நீக்கு
    7. ஹிஹிஹி...   எனக்கும் என் ஆசிரியர்களுக்கும் எப்பவுமே ஏழரையாம் பொருத்தம்!

      நீக்கு
    8. எனக்கு பத்தாம் வகுப்பிற்கு கிரகோரி என்ற தமிழ் ஆசிரியர் இருந்தார். ரொம்ப நல்லா தமிழ்ப்பாடம் சொல்லித்தருவார், ஆனால் டெரரான ஆசிரியர். இலக்கணம்லாம் சொல்லித்தரும்போது இருவரிசை பெஞ்சுகளின் நடுவே நடந்துவரும்போதே ஸ்கேல் பேசும். தமிழ் பரீட்சை விடைகளில், பாடலையும் சேர்த்து எழுதியிருந்தால் 1/2 மதிப்பெண் அதிகமாகப் போடுவார்.

      அவருடைய 6-7ம் வகுப்பு படித்த பையன், பசங்களோடு விளையாடும்போது செருப்பை ஒருவனின் மீது வீசிவிட்டான் போலிருக்கிறது. 2 மணிக்கு எங்கள் கிளாஸ். அப்போ அவர் பையன் கிளாஸ் உள்ளே வந்தான். பெல்ட்டால் அடித்துத் துவைத்துவிட்டார் (எங்கள் கிளாஸில் எங்கள் முன்னால்). பிறகுதான் காரணம் தெரிந்தது. பள்ளி ஆண்டுவிழாவில் நாடகம்லாம் நடிப்பார். எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர், ஆனால் கண்டிப்பானவர்.

      நீக்கு
    9. இப்படியும் சில ஆசிரியர்கள்.

      எங்கள் கெமிஸ்ட்ரி வாத்தியார் ராஜமாணிக்கம் சிவாஜி ஸ்டைலில் இருப்பார்.  பாடல்கள் நன்றாய்ப் பாடுவார்.  மேடைகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்துவார்.  ஹரிஹரன் என்றொரு வாத்தியார் பள்ளி மேடை நாடகத்தில்  ஆங்கில மன்னனாக நடித்திருக்கிறார்.   கவுனுடன் அவரைப் பார்த்தபோது நாங்கள் சிரித்த சிரிப்பு!  சங்கரன் என்றொரு தமிழ்ப்பண்டிட்...  இலக்கிய மன்றங்களில் வெளுத்து வாங்குவார்.

      நீக்கு
  12. செல்ஃபோன் உயிரைப் பறிக்க இருந்ததே!!. இவர் பிழைத்துவிட்டார்.
    பலியான பல பேரும் நினைவுக்கு வருகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  ஆரம்பத்தில் நிறையவே நடந்து கொண்டிருந்த விஷயம் இது!

      நீக்கு
  13. கனவைப் பற்றி இன்னும் விவரங்கள் தெரிந்தால் மகிழ்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு அப்புறம் பெரிய விவரங்கள் எதுவும் இல்லை அம்மா...   பொதுவான பலன்கள்தான்.

      நீக்கு
  14. எல்லாமே கனவு தான்...

    வாணிஜெயராம் அவர்களின் குரல் வித்தியாசமானது...

    அலாவுதீன் விளக்கு அநேகமாக உங்களிடம் தான் இருக்கும் என்று நம்புகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அலாவுதீன் விளக்கு அநேகமாக உங்களிடம் தான் இருக்கும் என்று நம்புகிறேன்...//

      அபுரி!  பொக்கிஷப்பகுதிக்காகச் சொல்கிறீர்களோ!

      நீக்கு
    2. இல்லை அந்த நிழல்...

      ஒரு வேளை பட்டணத்தில் பூதம் குடுவையில் வருவது போல்...

      ஜீபூம்பா...?

      நீக்கு
    3. ஓஹோ...     அப்படிச் சொல்கிறீர்களா?  ஓகே ஓகே...

      நீக்கு
  15. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...  இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.  வணக்கம்.

      நீக்கு
  16. முதல் முதல்ல எனக்கு செல்ஃபோன் 99ல் கிடைத்தது. அது பாதி செங்கல் சைசுக்கு இருக்கும். ஆபீஸிலிருந்து கார் எடுத்தவன் போன் வந்ததும் பாசிக்கொண்டே டக் என ரெட் சிக்னல் வந்ததும் ப்ரேக் போட தோதுவாக செல்போனை பதட்டத்தில் காரினுள்ளே போட்டுவிட்டேன். அதன் பிறகு கார் ஓட்டும்போது செல்ஃபோன் பேசுவது அபூர்வமாகிவிட்டது.

    செல்போன் பேசும்போது பார்க்கும் கவனிக்கும் திறன் 60% பாதிக்கப்படுகிறது என எங்கோ படித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பாதி செங்கல் செல்போன் என்னிடமும் இருந்தது.  பொதுவில் இருக்கும்போது அதை வெளியே எடுத்துக் பேசவே ரொம்ப காலம் கூச்சப்பட்டுக்கொண்டிருந்தேன்!

      நீக்கு
    2. என்னிடமும் ஒரு செங்கல் போன்ற alcatel ஃபோன் இருந்தது.

      நீக்கு
    3. செல்ஃபோன் நான் முதல் முதல் வாங்கியதே 2015 ஆம் ஆண்டில் தான். அது சரி நெல்லைத்தமிழரே, ஃபோனைக் காருக்குள் தானே போட்டீங்க? கிடைச்சது இல்லையா? அந்தச் செங்கல் மாதிரியான செல்ஃபோன் பத்தி ராஜ் தொலைக்காட்சியில் வந்த கே.பாலச்சந்தரின் "ப்ரேமி"தொடரில் பார்த்தேன். முன்னெல்லாம் ராஜ் தான் பார்த்துக் கொண்டிருந்தோம். மர்மதேசம், சிதம்பர ரகசியம், ருத்ரவீணை, விஸ்வரூபம் எல்லாம் அதில் தான் வந்து கொண்டிருந்தது. அப்போத் தான் செல்ஃபோன் வந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதும் தெரிந்தது. எல்லாம் ரொம்பவே லேட்! :))))))

      நீக்கு
    4. //செல்ஃபோன் நான் முதல் முதல் வாங்கியதே 2015 ஆம் ஆண்டில் தான்//

      அடேங்கப்பா...    பரவாயில்லையே...

      இரண்டு நாட்களுக்கு முன்னர் எங்கள் பக்கத்துக்கு வீட்டுக்காரர் தன் லேப்டாப் பையைத் தொலைத்து விட்டார்.  லேப்டாப், வங்கி கார்டுகள், 2500 ரூபாய் பணம்  எல்லாம் உள்ளே.  இரண்டு நாட்களில் மிக அதிசயமாக கிடைத்து விட்டது.  2500 ரூபாய் மட்டும் மிஸ்ஸிங்!  மற்றபடி லேப்டாப், கார்ட் எல்லாம் சேஃப்.

      நீக்கு
    5. எனக்கு 95ல் கம்பெனி பேஜர் கொடுத்திருந்தாங்க. அப்போ செல்ஃபோன் அதிகம் புழக்கத்தில் இல்லை. 99ல் புது கம்பெனியில் சேர்ந்தபோது அவர்கள் இந்த செங்கலைக் கொடுத்தார்கள். பிறகு ஜெனெரல் மேனேஜர் தான் வைத்திருந்த விலை உயர்ந்த சிறிய போனை எனக்குக் கொடுத்துவிட்டு அவர் வேறு ஒரு போன் வாங்கிக்கொண்டார். அதன் பிறகு கம்பெனி இன்னொரு நோக்கியா செல்ஃபோன் கொடுத்தது. 2001க்குப் பிறகு, போன் அலவன்ஸுக்கு எலிஜிபிள் உள்ளவர்களெல்லாம் அவரவர்களே செல்ஃபோன் வாங்கிக்கணும், கம்பெனி மாதா மாதம் ஒரு தொகை கொடுக்கும் என்று சொல்லிவிட்டார்கள்.

      நீக்கு
    6. /எங்கள் பக்கத்துக்கு வீட்டுக்காரர் தன் லேப்டாப் பையைத் தொலைத்து விட்டார்// - 2004ல் என்று நினைவு. அப்போ பெங்களூரில் மாமனார் வீட்டிற்கு (ஆபீஸ் வேலையின்போது சில நாட்கள் வந்திருந்தேன்) வந்திருந்தேன். அவர், குக்கே சுப்ரமண்யா கோவிலுக்குப் போகலாம் என்று சொன்னபோது நாங்கள் எல்லோரும் (பையன் சிறியவன்) சென்றோம். செல்வதற்கு முன், அறைக்குள் இருந்த என் லேப்டாப் பேகை, சேஃப்டி என்று நானே நினைத்துக்கொண்டு, ஹால் ஜன்னலுக்குக் கீழ் இருந்த டேபிளின் கீழ் வைத்துவிட்டுச் சென்றேன். திரும்ப மறுநாள் வரும்போது, லேப்டாப், ஹார்ட் டிஸ்க் மற்றும் பலவற்றை ஜன்னல் வழியாக திருடன் லவட்டிக்கொண்டு சென்றுவிட்டான். என் பாஸ்போர்ட்டை ஜன்னலில் வைத்துவிட்டுச் சென்றிருந்தான். அதையும் எடுத்துச் சென்றிருந்தால் எனக்கு ஏகப்பட்ட கஷ்டங்கள் வந்திருக்கும் (விசா, மற்ற தேசங்களுக்கான விசா என்று அந்த பாஸ்போர்ட்டில் இருந்தது).

      திருடங்களும் நியாயவான்களாக இருக்கின்றார்கள். ஹா ஹா

      நீக்கு
    7. ஒருவேளை அதனால் அவர்களுக்கு பெரிய பயன் இல்லை என்பதும் காரணமாய் இருக்கலாம்.  ஆனாலும் அவர்களை பாராட்டணும்னுதான்!

      நீக்கு
  17. கனவு என்பது ரொம்ப ஆச்சர்யமானது.

    என் அப்பா கனவில் வந்து பேசியிருக்கிறார், பெரியப்பாவும். சத்யசாய் பாபாவும்.

    நான் பறப்பது போன்ற கனவும், எனக்கு இப்போதும் பறக்க முடியும், பறக்கிறேன் என்பது போன்றும் கனவு வரும்.்


    எனக்கு சில மாதங்கள், வருடங்களுக்கு ஒருமுறை பரீட்சை கனவு வரும். எதிலும் உருப்படியாக படிக்காமல் எக்சாம் மிக மோசமாக எழுதுவதைப்போல்தான் கனவு வரும். சமீபத்தில்கூட அந்தக் கனவு வந்தது. காலேஜில் எக்சாம் அன்று என் வகுப்பில் புரட்டிக்கொண்டிருந்தபோது தூங்கிவிட்டேன். எக்சாம் முடிந்து மாலைதான் எழுந்தேன். மறுநாள் பேப்பருக்கு ஒன்றுமே படித்திருக்கவில்லை என்பதுபோல. ஆனா கனவு கலைந்து எழுந்துகொள்ளும்போது வரும் நிம்மதி... அட்டா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆச்சர்யமான கனவுகள்.  இந்தக் கனவுகள் பற்றி முன்பே சொல்லி இருக்கிறீர்கள்.

      நீக்கு
    2. எனக்கு மிகச் சமீபம்வரை பி.யூ.சி.யில் கெமிஸ்ட்ரி பரீட்சை எழுதுவது போல கனவு வந்து கொண்டிருந்தது. பி.யூ.ஸியில் என்னை மிரட்டிய சப்ஜெக்ட் கெமிஸ்ட்ரி. இதில் வேடிக்கை என்னவென்றால் கனவில் நினைவுக்கு வரும் விடைகள் விழித்துக் கொண்டதும் மறந்து விடும்.

      நீக்கு
    3. ஒருவிதமான பாதுகாப்பற்ற மனநிலையில் இருபப்வர்களுக்குதான் தேர்வு எழுத்துவதுபோல கனவு வரும் என்று தமிழ்வாணன் சொல்லி இருக்கிறார்!

      நீக்கு
  18. மோடி மஸ்தான் வித்தை காட்டுவது போல எந்தெந்த கனவுகளுக்கு என்னென்ன பலன் என்று சொல்லாமலேயே முடித்து விட்டீர்களே? :((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதில் கனவுகளுக்கான பலன் என்று பொதுவான வகையில் போட்டிருப்பதால் - அதுவும் அகர வரிசைப்படி - அதைச் சொல்லவில்லை!  ஓரிரு வார்த்தைகளில் பலன் போட்டிருக்கிறார்!

      நீக்கு
  19. நிழலில் எனக்கு தவழும் கிருஷ்ணர்தான் தெரிகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு ராமரும் வசிஷ்டரும்தான் தெரிந்தனர்!

      நீக்கு
    2. எனக்குத் தலைக்கிழாகத் தெரியும் ரிஷி தான் தெரிகிறார். சில சமயங்களில் புகை போல் உருவம் தெரிகிறது.

      நீக்கு
    3. வெள்ளை நிறத்தை விட்டு விட்டு கருப்பு நிறத்தைப் பாருங்கள்.

      நீக்கு
    4. ஆமாம், ஜடாமுடியுடன் கூடிய ரிஷி தெரிகிறார். வசிஷ்டர் தான் என எப்படிச் சொல்ல முடியும்? விஸ்வாமித்ரராகக் கூட இருக்குமோ? இஃகி,இஃகி,இஃகி! :)))))))

      நீக்கு
    5. வெள்ளை நிறம் கிருஷ்ணர் தவழ்ந்தார்போலவும் ரிஷி தலைகீழாய்த் தொங்குவது போலவும் இருக்கு!

      நீக்கு
    6. தலைகீழாய்த் தொங்கும் ரிஷி ஒருவர் இருந்தார் இல்லை?  அவர் பெயர் என்ன?

      நீக்கு
    7. மாண்டவ்ய மகரிஷி...
      இவர் தட்டாரப் பூச்சியை ஹிம்சை செய்ததற்காக துன்பம் அனுபவித்தவர்...

      இவரது சாபத்தினால் தான் அறக்கடவுள் விதுரராகப் பிறக்க நேரிட்டது...

      நீக்கு
    8. கழுவில் தொங்கினார் மாண்டவ்யர்.

      நீக்கு
  20. கனவு பலன்கள் - ஸ்வாரஸ்யம். புத்தகத்தினை முழுவதும் படிக்க ஆவல்!

    நிழல்கள் - வித்தியாச உருவங்கள். அக்னியில் கூட இப்படி உருவங்கள் தோன்றுவதுண்டு - நம் கற்பனைக்கு ஏற்ப அவற்றை உருவகப்படுத்துவதுண்டு!

    வாணி ஜெயராம் - நல்ல குரல்! பல மொழிகளில் பாடிய அவருக்கு தமிழில் அத்தனை அதிகம் வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. ஹிந்தியில் லதா மங்கேஷ்கர் ஓரங்கட்டிய பல பாடகிகளில் இவரும் உண்டு.

    ஸ்வாரஸ்யமான கதம்பம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தகம் ரொம்பச் சின்ன புத்தகம் வெங்கட்.  ஆரம்ப பில்டப்தான் பெரிசு!

      ஆம்...  நிழல்கள் வித்தியாசமாய் காட்சி டேர்ம் என்றாலும், புதிய வீட்டில்  ரூம் ஒன்றில் இருப்பது போல காட்சி வந்த உடன் மகிழ்வாக இருந்தது!

      ஆம்...   லதாவுக்கும் இந்த குணம் இருந்தது!

      நீக்கு
  21. எனக்கு ஸ்ரீராம் போட்டுள்ள படங்களைப் பார்த்தவுடன், கிருஸ்துமஸ் தாத்தாதான் நினைவுக்கு வந்தார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் மேலே உள்ள வெள்ளைப் பகுதியை மட்டும் பார்க்கிறீர்கள் கேஜிஜி!

      நீக்கு
    2. வெள்ளையைப் பார்த்தவர் சிலர்
      கருத்தில்அதனைக் கொள்ளாது
      கருப்பைக் கவனித்தவர் சிலர்
      முழுதாகக் கண்டவரோ ஆருமிலர்..

      நீக்கு
    3. ஹா...   ஹா...  ஹா...    கவிதை பிறந்தது கருப்பு வெள்ளையை வைத்து!

      நீக்கு
    4. கி.தா.. வுக்கு இப்படியான சம்பிரதாயங்கள் கிடையாது...

      யாரும் ஏற்றி விடப் போகிறார்கள்-
      மெழுகுத் திரிக்குள் இருந்து வந்தார்!.. - என்று..

      நீக்கு
  22. பீகாரில் தேர்வுகள் நடக்கும் லட்சணம் பார்த்தால் --

    அவர்கள் பெற்றோர்களாய்த் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதிப்பெண்களால் மட்டுமே திறமை அறியப்படும் நம் கல்விமுறையின் அவலம் அது!

      நீக்கு
    2. 96ல், நான் வேலை பார்த்த கம்பெனிக்கு ஒரு வங்கிக்கு அவுட்சோர்ஸ் செய்ய IBM AS 400ல் வேலை செய்ய ஆட்கள் தேவையாக இருந்தது. அப்போல்லாம் டெலெஃபோன் மூலம்தான் கம்பெனியின் சேல்ஸ் மேனேஜர் இண்டர்வியு செய்து ஆட்களைத் தேர்ந்தெடுப்பார் (அதற்கு முன்பு ரெஸ்யூம்லாம் செக் பண்ணிடுவாங்க). வங்கி மாதம் 2000-3000 தினார்கள் கம்பெனிக்கு ஒருத்தருக்குக் கொடுக்கும். கம்பெனி, ஆட்களின் தரத்தைப் பொறுத்து (சீனியாரிட்டிலாம்) 500-850 வரை கொடுக்கும். தமிழ் ஆள் ஒருத்தர் இண்டெர்வியூவில் 90% டெக்னிகல் கேள்விகளுக்கு சரியா பதில் சொல்லி தேர்வாயிட்டார். கொஞ்சம் அனுபவம் குறைவு என்பதால் 500 தினார் சம்பளம்னு சொல்லி, அவரை பஹ்ரைனுக்கு கூட்டிவந்தாங்க.

      இரண்டே வாரத்தில் வங்கி, இவரைப் பற்றிக் குறை சொன்னது (சரியா வேலை பார்க்கலை, சொன்ன வேலை தெரியலைனு). என்னடான்னு செக் பண்ணினா, அவன் அந்த கோர்ஸ் படிச்சிருக்கான். போலி எக்ஸ்பீரியன்ஸ் சர்டிஃபிகேட். இன்ஸ்டிடியூட்டிலேயே, நல்ல வேலை கிடைக்கணும்னு, இந்த சப்ஜெக்ட்ல 100 கேள்விகள், அதற்கு விடைகளும் கொடுத்து மனப்பாடம் பண்ணச் சொல்லியிருக்காங்க. அதனாலதான் டக் டக்னு பதில் சொன்னேன் என்று அப்புறம் ஒத்துக்கொண்டான்.

      அவனை வேலையை விட்டு அனுப்ப முடிவு செஞ்சாங்க. நான், தமிழ்க்காரன் என்று பாவம் பார்த்து, என் டீமில் சேர்த்துக்கறேன், 350 தினார் சம்பளம் கொடுக்கலாம் என்று ரெக்கமெண்ட் செய்தேன். எங்க எம்.டி., அவன் செஞ்சது தவறு, ஏமாத்தி வேலைல சேர்ந்தான், அந்த ஆட்டிடியூட் இருப்பவனை திரும்ப அனுப்புவதுதான் சரி என்று சொல்லி, கம்பெனியை விட்டு அனுப்பிவிட்டார்.

      'மதிப்பெண்களால் மட்டுமே' என்பதைப் பார்த்து எனக்குத் தோன்றிய சம்பவம் இது.

      நீக்கு
    3. எம் டி செய்ததே சரி என்று தோன்றுகிறது.  உங்கள் டீமில் சேர்த்துக் கொண்டிருந்தாள் உங்களுக்கும் கெட்டபெயர் வாங்கித் தந்திருப்பார் அவர்!

      நீக்கு
  23. வெங்கட் சொல்லியிருக்கும் அக்னி பின்னணியில் உருவங்கள் ரொம்பவும் சிரேஷ்டமானது.

    ஹோமங்கள் செய்யும் பொழுது அப்படியான அனுபவம் கிடைத்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். செய்யும் காரியத்தில் அவர்களுக்கிருக்கும் ஆழ்ந்த ஈடுபாட்டைப் புலப்படுத்தும் அறிகுறிகள் இவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், 2011 ஆம் வருடம் மஹா சங்கடஹர சதுர்த்தியின் போது எங்க வீட்டில் செய்த கணபதி ஹோமத்தில் பிள்ளையார் வந்தார். அதைப் படம் பிடித்தும் போட்டேன். ஒரு மாதத்திற்கெல்லாம் பிள்ளையார் சதுர்த்திக்கு சொந்த வீட்டை விட்டு வாடகை வீட்டுக்குத் தவிர்க்க முடியாமல் மாறினோம். தொடர்ந்த மாதங்களில் இங்கே ஸ்ரீரங்கம் வந்தாச்சு! பிள்ளையார் வந்து எச்சரிக்கை செய்து எங்களைக் காப்பாற்றினாரோ என நாங்கள் நினைப்போம்.

      நீக்கு
    2. எங்கள் வீட்டு ஹோமங்களிலும் படம் எடுக்கும்போது இபப்டி நிறைய உருவங்கள் (மனதில்) தோன்றி இருக்கின்றன.

      நீக்கு
  24. இந்திய துணைக்கண்டம், பூமிப் பந்து போன்ற வார்த்தைகள் சென்ற காலத்தில் ஒரு அரசியல் கட்சி உருவாக்கிய சொற்கள்.

    பூமிப் பந்து என்பது அறிவியல் உண்மைகளுக்கு அவ்வளவு பொருத்தமில்லாத சொல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கேயோ, யாராவது சொல்லி இருந்தால் சரி...!!!   நான் ஏதாவது எழுத ஒரு பிடி வேண்டுமே!

      நீக்கு
  25. காலை வணக்கங்கள்.
    முதலில் ஸ்‌ரீராமின் கவிதையும் நிழல் படமும் அருமை. எனக்கு வஷிஷ்டர் மட்டும்தான் தெரிகிறார்.
    கனவுகள் பற்றி எனக்கு நிறைய அனுபவங்கள் உள்ளன. என் மாமனார் 2010ல் இறந்தார். என் கணவர் ஒரே மகன். அப்பாவிற்கும் பிள்ளைக்கும் அப்படி ஒரு இணைப்பான ஈர்ப்பு. மாமனார் சிறிது ஸீரியஸ் ஆகிய உடனே, எப்படி என் கணவரை சமாளிப்பது என்று குழம்ப ஆரம்பித்தேன். மாமனார் தவறி போகும் முதல் நாள் மாலை, அப்போலோ மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னால், எங்கள் பேட்டையில் இருக்கும் சங்கர மடத்திற்கு சென்று மனமுருகி வேண்டி விபூதி ப்ரசாதத்தை எடுத்துக் கொண்டு சென்றேன். என் கணவர் ப்ரசாதத்தைக் கண்டவுடன் எடுத்து அப்பா நெற்றியில் இட்டு விட்டார். மாமனார் பேச்சு மூச்சில்லாமல் கிடந்தார். வெகு நேரம் இருந்து விட்டு என் கணவரையும் அவரது நண்பரையும் விட்டு விட்டு வீடு திரும்பினேன். அன்று இரவு என் கணவர் கனவில் மஹா பெரியவர் தோன்றி, "நீ ஒன்றும் கவலைப் படாதே. நான் உன் அப்பாவைப் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறுவது போல் கனவு கண்டிருக்கின்றார். விடிக் காலை இரண்டு மணிக்கு மாமனார் உயிர் பிரிந்தது. என் மாமனாரைக் கூட்டிச் செல்லவே வந்தது போல் அந்த ப்ரசாதம் அவர் நெற்றியில் ஏரியது மிகவும் ஆச்சரியத்தை தந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரமா...    படத்தை சரியான இடத்தில் பார்த்திருக்கிறீர்கள்!

      உங்கள் மாமனார் மறைவு சமயம் நடந்திருப்பது மிக ஆச்சர்யமாக இருக்கிறது.

      நீக்கு
    2. @ Rama Srinivasan: என் மாமனாரைக் கூட்டிச் செல்லவே வந்தது போல் அந்த ப்ரசாதம் அவர் நெற்றியில் ஏரியது மிகவும் ஆச்சரியத்தை தந்தது..//

      உருக்கமான விஷயம்.
      இப்படி வேறு சிலரின் வாழ்விலும் நடந்திருக்கலாம். அவரவர்கள் அனுபவங்களைப் பகிர்ந்தால்தான் தெரியும்.

      நீக்கு
  26. ///அவ்ளோதாங்க!//
    ஹா ஹா ஹா சொல்லுறதை எல்லாம் சொல்லிப்போட்டு அவ்வளவுதானோ:)) கர்ர்ர்ர்:)).. போனகிழமைக் கனவு இன்னமும் தொடருதே..

    காலைக் கனவுகள் என்னைப்பொறுத்து 99 வீதமும் பலிக்குது... என் வாழ்வில் இப்படி நிறையக் கண்டிருக்கிறேன்..

    ஒருவர் இறந்திருப்பதுபோலக் கண்டால் நல்லதாம், ஆனா ஆளைக் காணாமல், பெட்டியையோ அல்லது மரண ஊர்வலமோ கண்டால் கூடாதாம்.. அதேபோல ஐயரைக் கனவில் கண்டாலும் ஏதோ கெடுதி வரப்போகிறது என்பினம், இதேபோல திருமணம் கண்டாலும் கூடாதாம்.. கனவில் பெரிதாக ஐயோ ஐயோ எனக் கத்தி அழுவதைப்பொலக் கண்டாலும் கூடாது.. எங்காவது, கூரை எரிவது கண்டாலும் கூடாதாம்..

    கடல், தண்ணி, ஆறு இப்படிக் கண்டால் நல்லதாம்.. இப்படி முன்பு பலபல பலன்கள் அம்மம்மா ஆட்கள் சொல்லுவினம்...

    முன்பு எனக்கு ஒரு திருமணம் பேசி 90 வீதமும் பொருந்தி வந்து விட்டது, மாப்பிள்ளை வீட்டினருக்கு நன்கு பிடித்திருந்தது, ஆனா அப்பா அம்மாவுக்கு ஒரு சலனம் இருந்தது, குழப்பமாக இருந்த வேளையில்... நான் ஒரு கனவு கண்டு அம்மாவிடம் சொன்னேன், உடனேயே இது வேண்டாம் என அம்மா சொல்லி அதை நிறுத்தி விட்டார்கள் ஹா ஹா ஹா.. என் கனவில் எங்கள் வீட்டில் அவ்ளோ நம்பிக்கை:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காலைக் கனவுகள் என்னைப்பொறுத்து// - மேடம்.. காலைக் கனவு என்பது அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் வரும் கனவு. 4-5 1/2 மணிக்கு. எனெக்கன்னவோ 'காலைக் கனவு' என்று நீங்க சொல்றது, காலை 9 மணிக்கு மேல் நீங்கள் காணும் கனவுன்னு தோணுது. அதுக்குப் பேர் பகல் கனவு.

      நீக்கு
    2. வாங்க அதிரா...    கனவுகளுக்கு இப்படி உல்டா பலன்கள்தான் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்!  
      அப்படி என்ன கனவு வந்தது என்று சொல்லாமல் சஸ்பென்ஸ் வைத்து விட்டீர்களே!

      நீக்கு
    3. //'காலைக் கனவு' என்று நீங்க சொல்றது, காலை 9 மணிக்கு மேல் நீங்கள் காணும் கனவுன்னு தோணுது. அதுக்குப் பேர் பகல் கனவு.//

      ஹா...  ஹா...  ஹா....   சாத்தியம்!

      நீக்கு
    4. //அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் வரும் கனவு. 4-5 1/2 மணிக்கு.//

      அதே அதே நெல்லைத்தமிழன்... எனக்கு அப்பூடி நேரம் வரும் கனவுதான் பலிக்குது.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. 9 மணிக்கு இங்கு வெள்ளைகள்தான் கனவு காண்கிறார்களாக்கும்:)).. நான் எல்லாம் பின்ன்ன்ன்ன்ன் டூஊஊஊஊஊங்கி முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் எழும் பற:)ம்பறை:)) ஆக்கும்ம்ம்ம்ம்ம்:))....

      அந்தக் கனவோ. ஸ்ரீராம்... ஹா ஹா ஹா அதைச் சொன்னால் சிரிப்பீங்க அதனால வாணாம்ம்ம்ம்

      நீக்கு
  27. வாணி ஜெயராம் அவர்களின் வரலாறு தெரிஞ்சுகொண்டேன்.. அவரின் பாடல்கள் எனக்கும் பிடிக்கும், இதுக்கு மேல அவரைப்பற்றி எதுவும் சொல்லத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒண்ணும் சொல்ல வேண்டாம். அவரின் அருமையான பாடலைப் பகிருங்கள்.

      நீக்கு
    2. //ஒண்ணும் சொல்ல வேண்டாம். அவரின் அருமையான பாடலைப் பகிருங்கள்//
      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
  28. தண்டவாளத்தில் பெண் பற்றி நீங்கள் எழுதிய ஸ்கிரீன் ஷொட் பாதியில் நிற்கிறதே மிகுதி எங்கே.... அங்கு ரெயின் விபத்தில் காலமாவோர்தானே அதிகம் என்கின்றனர், பாதுகாப்புக்கள் போதாமல் இருக்கிறதோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...    அந்தப்பெண் அப்படியே ரயிலின் அடியில் நெடுங்கிடையாகப் படுத்து சிறு காயத்துடன் உயிர் தப்பி விட்டார்.

      நீக்கு
  29. ///ஐந்து வருடங்களுக்கு முன்னர் பேஸ்புக்கில் எழுதிய ஒரு குட்டிக்கவிதை. இப்போது கொரோனா வடிவில் இதற்கு வந்த பேராபத்து....

    ம்ம்ம்...///

    இதுவும் கடந்து போகும்.... தலைக்கு மேலே வெள்ளம் சாண் ஏறி என்ன முழம் ஏறி என்ன... எனும் நிலைமையாக இருக்கு.... ஒருவித ஞானத்தன்மை உண்மையில் எனக்கு வந்திருக்குது... மனம் விறைத்ததுபோல, எந்தச் செயலும் இப்போ பெரும் அதிர்ச்சியைத்தருவதில்லை:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்...   ஆரம்பத்திலிருந்த பதட்டமும் பயமும் குறைந்திருக்கிறது.  என்னதான் நடக்கும் நடக்கட்டுமே மனநிலை!  போகப்போக இன்னும் பழகி விடலாம்!

      நீக்கு
  30. பெற்றோரின் பாசம்... ஹா ஹா ஹா :).

    எனக்கு அந்த நிழலைப் பார்க்க, கொக்கு ஒன்று தலையை கீழே நீட்டித், தண்ணி குடிக்க வருவதைப்போல இருக்குது.. அந்தக் கொக்கு கண்ணாடி போட்டிருக்குது.. உங்கள் குடும்பத்தில் முந்தின ஆரோ உங்கள் புது வீட்டிற்கு உங்களை ஆசீர்வதிக்க வந்திருப்பதைப்போல இருக்குது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உருவம் தெரிகிறது போல...   எங்கள் வீட்டில் எல்லோருக்கும் வசிஷ்டர் மாதிரி, ராமன் மாதிரிதான் தெரிந்தது!

      நீக்கு
  31. நான் நம் முன்னோர்கள் கனவு பற்றி சொல்லியதை எங்கு வாசித்தேன் அல்லது யார் சொல்லிக் கேட்டேன் என்று நினைவில்லை ஆனால் நீங்கள் இங்கு போட்டிருக்கும் கருத்துகளேதான், ஸ்ரீராம்ஜி.

    வாணி ஜெயராம் பற்றிய தகவல்கள் அறிந்தேன். நல்ல குரல்வளம் கொண்டவர்கள்.

    அந்தப் பெண் மொபைலில் பாட்டு கேட்டுக் கொண்டே ரயில்வே லைனை க்ராஸ் செய்தது அதிர்ச்சியாக இருந்தது. பல சிறியவர்கள் காதில் மாட்டிக் கொண்டு சிட்டி ரோட்டில் நடப்பதைப் பார்த்திருக்கிறேன். அபாயகரம்

    கவிதை அருமை.

    பீஹார் விஷயம் வாசித்த நினைவு.

    புது வீட்டு நிழல் சுவற்ரில் இருப்பது ஏதோ ஒரு முனிவர் போலத் தெரிகிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துளஸிஜி...    கனவு பற்றிய விஷயங்கள் நாம் பல இடத்தில வாசித்திருப்போம்.  வெவ்வேறு நபர்கள் எழுதியவையாய் இருக்கும்.

      கவிதை ரசித்ததற்கும் நன்றி.

      நீக்கு
  32. அவ்ளோதாங்க!//

    ஹா ஹா ஹா இது அந்த ஆசிரியரின் வரிகள் தானே!!! ஸ்ரீராம் என்றால்...ஆ போனவாரத்துக் கனவு இன்று வரை தொடர்ந்துள்ளது அப்ப அடுத்த வாரமும் தொடர வேண்டுமே!!!

    என்னவோ தெரியவில்லை எனக்கு கனவுகள் மனதில் நிற்பதில்லை ரொம்ப அபூர்வமாகத்தான் கனவுகளே வருகின்றன. அங்கு சொல்லியிருப்பது போல கனவுகளே இல்லை என்று சொல்ல முடியாது போல நினைவில் இருக்காமல் போகுமென சொல்லப்பட்டிருக்கே. ஒரு வேளை கனவு வருவதும் கூட எனக்கு நினைவில் இருப்பதில்லை போலும் !!!!!! ஹா ஹா ஹா. கனவுகள் வரக் கூடாதா ஒரு பதிவு எழுதவோ அல்லது கதை பிறக்கவோ தேறுமே என்று நினைப்பதுண்டு!! ஹா ஹா

    இதுவரை கனவையும் நிகழ்வையும் இணைத்துப் பார்த்ததில்லை. ஏன் இந்தக் கனவு என்று யோசித்ததும் இல்லை. ஆனால் வீட்டில் சொல்லிக் கேள்விப்பட்டது., யாரேனும் இறப்பதாகக் கனவு கண்டால் நல்லது நடக்கும் என்றும் யாருக்கேனும் க்ல்யாணம் என்று கனவு கண்டால் நல்லதில்லை என்றும். பொருத்திப் பார்த்திராததால் சொல்லத் தெரியவில்லை.

    ஆனால் ஒரே ஒரு முறை மட்டும் என்னவோ ஒரு மரணம் கனவு வந்தது போல் இருக்க இரண்டு நாளில் ஒரு மரணச் செய்தி வந்தது. ஆனால் அந்த ந்பர் உறவினர் என்றாலும் எனக்கு மனதில் நிற்கும் அளவு நெருங்கிய உறவினர் இல்லை. நான் அதனாலோ என்று எல்லாம் பொருத்திப் பார்க்கவில்லை. இங்கு கனவு பற்றி பேசியிருப்பதால் நினைவு வந்தது. பொருத்திப் பார்த்தால் மனசு பல சமயங்களில் சஞ்சலப்படும். இல்லை அதுவே மனதை ஆக்ரமித்து வேறு விளைவுகளை ஏற்படுத்தவும் கூடும் என்றும் தோன்றும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா...    அந்த ஆசிரியர் அவ்ளோதாங்கலாம் சொல்லவில்லை!    கனவையும் நிகழ்வையும் இணைத்துப் பார்க்காமல் இருப்பதே நல்லது.  சில கனவுகள் உண்மையாகி நம்மைக் குழப்பி விட்டு விடும்.  அப்புறம் ஒவ்வொரு கனவையும் யோசிப்போம்!

      நீக்கு
  33. ..ஒருவித ஞானத்தன்மை உண்மையில் எனக்கு வந்திருக்குது... //

    பிஞ்சு ஞானமோ !

    பதிலளிநீக்கு
  34. ஸ்ரீராம் உங்கள் கவிதை அசத்தல்! அழகா எழுதறீங்க ஸ்ரீராம். நீங்கள் பிஞ்சு மடந்தையின் (உண்மையான வயதைச் சொல்லும் அட்ஜெக்ட்டிவ்!!!ஏஞ்சல் நோட் திஸ்)) பக்கத்தில் கூட அவர் போட்டிருந்த படத்துக்கு எழுதியிருந்தீங்களே வாவ்!! எப்படி இப்படி டக்குடக்குனு எழுதறீங்க!! அதை எடுத்து வைத்துக் கொண்டேன்!!

    பழகிவிட்டது! இப்போது. இதுவும் போயிடும் ஸ்ரீராம். பாருங்க அது ஒரு நாள் சட்டென்று டா டா பைபைனு போயிடும். நாமதான் அதை நினைப்போம். ..ச்சே அந்த தொற்று இருந்த காலம் நல்லாருந்துச்சு எல்லாரும் கொஞ்சமேனும் சுத்த பத்தமா இருந்தாங்கன்னு!! உலகமும் நல்லாருந்துச்சுன்னு. அந்த அளவுக்கு நிறைய பாடங்களைக் கற்றுத் தந்திருக்குது. நிஜமாகவே நிறைய...மனம் நிறைய தத்துப்பித்துவமாகியிருக்கு...ஹா ஹா ஹா ஹா

    அடக்கி ஒடுக்கி வைச்சது போகும் வேளையில் எல்லாரும் விடுதலை அடைந்தது போல படுத்தி எடுக்கத் தொடங்குவாங்க பாருங்க. அதுதான் கலவரப்படுத்துது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதையை ரசித்ததற்கு நன்றி.  என் கவிதையை ரசிப்பதற்கு நீங்கள் ஒருவர் இருக்கிறீர்கள்.  நீங்கள் கவிதை என்று சொல்வதாலேயே நானும் அதை அப்படியே நம்புகிறேன்!!!

      நீங்கள் சொல்லி இருப்பது போல இதிலிருந்து விடுபடும் நாளை எதிர்பார்க்கிறோம் நாம் அனைவரும்.  அப்போது அந்த ஒழுங்கீனம் கூட ஒரு மகிழ்ச்சியாய் இருக்கும்...

      நீக்கு
    2. ஸ்ரீராம்... நீங்க சொல்ற மாதிரி இல்லை.

      நான் இங்கு முனிசிபாலிட்டி ஆபீஸுக்கு நேற்று போயிருந்தேன். மனைவியையும் கூடக் கூட்டிச் சென்றிருந்தேன். அங்க யாரும் பக்கத்துல வந்தாலே, தள்ளி நில்லுங்க (கொரோனா), முக மூடி அணியலைனா, உடனே அங்க இருக்கும் அலுவலர் கிட்ட சொல்லி, அனுமதிக்காதீங்க என்றெல்லாம் சொன்னேன்.

      லூசா பொருட்கள் வாங்குவது (பாக்கெட்டில் இல்லாமல், அரிசி 2 கிலோ என்று எடைபோட்டு வாங்குவது) என்பது குறைந்திருக்கிறது.

      சிலரைப் பார்த்தாலே, கூட கொஞ்சம் இடைவெளிவிட்டு நடப்பது என்ற புதுப் பழக்கமும் வந்திருக்கிறது.

      குளித்து, கடமையை முடிக்குமட்டும் யார் மீதும் படக்கூடாது என்று நினைப்பது போல, வெளியில் செல்லும்போது ஒவ்வொருவரும் ஒழுங்கா முகமூடியோட வந்திருக்காங்களா என்று செக் பண்ணுவது, கொஞ்சம் இருமினாலே ஏதோ எதிரியைக் கண்டதுபோல அலர்ட் ஆவது, குறைந்தது 2 அடி இடைவெளியாவது இருக்குமாறு பார்த்துக்கொள்வது என்று நம்ம ஆட்டிடியூட் மாறி விட்டது. அது சட் என்று மாறுமா எனத் தெரியவில்லை.

      நீக்கு
  35. புது வீட்டுச் சுவற்றில் தோன்றிய அந்த வெள்ளை நிழல்...எனக்குத் தோன்றிய உருவங்கள்

    ஒரு பெண் தன் ஜடை ஆட இரண்டு காலும் சேர்ந்து ஒரே கால் போலத் தெரிய கையை உடம்போடு ஒட்டி வைத்துத் துள்ளுவது போல...

    ஒரு முகம் மேலே நீண்ட ஜடையுடன், கீழே மறுபுறம் முகம் நோக்கி உச்சந்தலையில் முடியை எல்லாம் சேர்த்து நிற்க வைத்துக் அந்தக் கருப்பு ரிங்க் போல இருக்கே அதை வைத்துக் கட்டியிருப்பது போல...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசமாக யோசித்தால் இன்னும் வித்தியாச உருவங்கள் கிடைக்கலாம்.

      நீக்கு
  36. வாணி ஜெயராம் பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டே ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  37. கனவுகள் எனக்கு நிறைய வரும் . என்னுடன் என் அப்பா, அக்கா எல்லாம் கனவில் வந்து எச்சரிக்கை, ஆறுதல். நல்லவார்த்தைகள் எல்லாம் சொல்லி இருக்கிறார்கள். அம்மா வருவார்கள் அவருகளும் நிறைய பேசுவார்கள். கனவில் யாரிடமாவது உரையாடி கொண்டுதான் இருக்கிறேன். காலை எழுந்ததும் சில நினைவு இருக்கும், பல நினைவு இருக்காது.

    அப்பா ஊரில் இரவு இறக்கிறார்கள், காலை விரதம் சோமவாரம் மாலை கோவில் போய் வந்து, வீட்டில் மாவிளக்குப் பார்த்து இருக்கிறேன். அன்று சாப்பிட மனம் வரவில்லை, சமைத்த உணவு அப்படியே இருந்தது, அப்படியும் சாப்பிடவில்லை. இரவு படுத்தால் கனவில் அப்பா அவர்களின் அன்புகுரல் இன்னும் நினைவு இருக்கிறது அழைத்தார்கள், ஆசீர்வாதம் செய்தார்கள் அம்மாவைப் பார்த்துக் கொள் என்றார்கள்.

    ஒவ்வொரு கார்த்திகை சோமவாரமும் அந்த கனவு நினைவில் வரும்.

    முன்பும் இங்கு பகிர்ந்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா...

      //முன்பும் இங்கு பகிர்ந்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.//

      ஆமாம் சொல்லி இருக்கிறீர்கள். என் அம்மாவுக்கு கூட அவரின் பிரியத்துக்கு உரிய பாட்டி மறைந்தபோது கனவு வந்தது என்று சொல்வார்கள்.  என் பாட்டிக்கும் அதுபோலவே ஒரு அனுபவம் இருந்தது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன் 

      நீக்கு
  38. பதிவில் இடாலிக் (I) ஸ்டைல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளதோ ??? படிக்க கஷ்டமா இருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...   அப்படியா எல்கே..    தினமலரில் வந்திருந்ததை போடும்போது மட்டும் அப்படி போட்டிருந்தேன்.

      நீக்கு
  39. வாணிஜெயராம் பற்றி நிறைய படித்து இருக்கிறேன். இப்போது நீங்கள் பகிர்ந்ததிலிருந்து சிலது தெரிந்து கொண்டேன்.
    ஆயுசு கெட்டிதான் அந்த பெண்ணுக்கு .
    கவிதை உள்ள புன்னகையும் ஜீவனும் நிலைத்து இருக்கட்டும்.

    //மதிப்பெண்களால் மட்டுமே திறமை அறியப்படும் நம் கல்விமுறையின் அவலம் அது!//

    பீஹார் செய்திக்கு நீங்கள் கொடுத்த பதில் அருமை.

    பதிலளிநீக்கு
  40. //வியாசர் கனவுகளுக்கு பலன் எழுதி இருக்கிறாராம். அதைப் படித்ததும் பகிரலாம் என்று தோன்றியது. ....//

    வியாசர் தான் எழுதிய கனவுகளின் பலன் பற்றி நீங்கள் பகிர போவதை அறிந்து உங்களை ஆசீர்வாதம் செய்ய ஓளி வடிவில் வந்து விட்டார் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   இது நல்லா இருக்கு கோமதி அக்கா!

      நீக்கு
  41. என் தந்தை எனது கனவில் வந்து தனது மரணத்தை மூன்று நாட்களுக்கு முன் கூறிச் சென்றார்..

    என் சித்தப்பா மரண தருவாயில் மீண்டும் வந்த வாழ்க்கையைத் துறந்து ஈசனுடன் சென்றதையும் பின்னாளில் கனவில் வந்து கூறியிருக்கிறார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையிலேயே சிலிர்க்கிறது துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. துரை சார், உங்கள் அனுபவங்கள் அபூர்வமானவை.

      நீக்கு
  42. எனது உறவினர் ஒருவர் குலதெய்வம் அறியாமல் தடுமாறிய வேளையில் உடுக்கையடி பூசாரியார் தெற்கே திருச்செந்தூருக்கு அருகில் என்று சொல்லி விட்டார்...

    உடன் ஒருவரை அழைத்துக் கொண்டு இரவு தஞ்சைக்கு வந்து விட்டார் அவர் விடியலில் திருச்செந்தூர் செல்லலாம் என்று...

    அவருக்கு ஒரே கவலை.. எப்படிக் கண்டு பிடிப்பது என்று..

    நள்ளிரவில் எனக்கு கனவு..
    கோயிலின் அடையாளங்கள் காட்டப்படுகின்றன..

    இதைச் சொல்லி திருச்செந்தூரில் வழி கேட்டால் வந்து சேரலாம் என்று உத்தரவு ..

    ஊரின் பெயர் சொல்லப்படவில்லை...

    விடியலில் எழுந்து அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி திருச்செந்தூருக்குப் போய் விசாரித்தால் அருகில் இருந்தவர்கள் வழி காட்டியிருக்கிறார்கள்...

    அவர்கள் கண்டடைந்த கோயில்-
    தேரிக்குடியிருப்பு ஸ்ரீ கற்குவேல் ஐயனார் கோயில்..

    எனது கதைகளில் ஸ்வாமி வந்திருக்கிறார்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலிர்க்கவைக்கும் அனுபவங்கள்.

      நீக்கு
    2. சிலருக்கு அந்த பாக்கியம் வாய்க்கிறது.  உங்களுக்கு அது வாய்த்திருக்கிறது.  அதுதான் நீங்கள் பதிகங்களும் பாசுரங்களும் பகிர்ந்து வருகிறீர்கள்.

      நீக்கு
    3. இறை அனுபவங்கள் நமக்குள் செல்பவை. தேடுவோரை, நம்புவோரை நாடி வருபவை எனத் தோன்றுகிறது.
      எபி-யில் இத்தகைய விஷயங்களின் மீதான கட்டுரைகளை வாசககோடிகளிடமிருந்து வாங்கி பதிப்பிக்கலாமே. வரவிருக்கும் e-book களும் களைதட்டும்.

      நீக்கு
  43. வணக்கம் சகோதரரே

    கனவுகள் பற்றிய விபரங்கள தெரிந்து கொண்டேன். படிக்க ஸ்வாரஸ்யமாக இருந்தது. இன்னமும் விரிவாக கனவுகள் பற்றி அறிந்து கொள்ளும் எதிர்பார்ப்பில் இருக்கிறேன்.

    வாணி ஜெயராம் அவர்களின் குரல் மிகவும் இனிமையானது மட்டுமின்றி மறக்க இயலாதது. அவரைப் பற்றிய செய்திகளையும் அறிந்து கொண்டேன்.

    கவிதை அருமை. இறைவன் இப்போதும் உருட்டி விளையாடும் பந்தில் நீங்கள் கூறியது நிலைத்திருக்க எப்போதும் அவரை வேண்டிக் கொள்வோம்.
    கதம்பம் அருமை..

    எல்லாவற்றிக்கும் சேர்ந்து அடித்த கமெண்ட் வெளியிடும் முன் மாயமாகி விட்டது. மறுபடியும் அடித்திருக்கிறேன். வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...   புத்தகத்தில் இதற்குமேல் பெரிய விஷயங்கள் எதுவும் இல்லை.  அதோடு அந்தப் புத்தகம் இப்போது எங்கிருக்கிறது என்றும் தேடவேண்டும்!  நடுவில் கொரோனா குழப்பி இருக்கிறது!

      கவிதை பற்றிய பாராட்டுக்கு நன்றி.  முன்னர் போட்ட கமெண்ட் மாயமாகி விட்டதா?  எப்படி?  இங்கு ஒன்றும் வரவில்லையே...

      நீக்கு
  44. வணக்கம் சகோதரரே

    செல்போனினால் எவ்வளவு பெரிய கஸ்டம். அந்த பெண் செய்தியை ஏற்கனவே கேள்விபட்ட மாதிரி உள்ளது. உண்மையிலேயே அந்தப் பெண்ணுக்கு ஆயுள் கெட்டிதான். இல்லையென்றால் அந்த முன் யோசனை உதித்திருக்காதே..! ஆனாலும், ரயில் கடக்கும் அந்த நிமிடங்களில் அந்தப் பெண் எத்தனை முறை செத்துப் பிழைத்திருக்கிறாளோ? கடவுளே யாருக்கும் இந்த மாதிரி வரக்கூடாது.

    பெற்றோர்கள் பாசமானவர்கள்தான்.. அதற்காக இப்படியா? நீங்கள் சொல்லக் கூடாது என்ற கருத்துரைதான் முன்னாடி வந்து நின்று என்னை "போடு" என்கிறது. ஆனால் அதற்கு நீங்கள் தடை விதித்து விட்டீர்கள். ஹா. ஹா. இதுபோல் அங்கு பணி புரியும் ஆசிரியர்கள் தடையேதும் சொல்லவில்லை போலும்...

    சுவற்றில் தெரிந்த நிழல் படம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கற்பனையாக காட்சி தருகிறது. நீங்கள் சொன்ன உருவங்களும் அதில் தெரிகிறது. நான் கொஞ்சம் தலைகீழாக வைத்துப் பார்க்கும் போது இலங்கையை தன் வாலில் நெருப்பு மூலம் எரித்து விட்டு பறக்கும் ஆஞ்சநேயர் தெரிகிறார். கற்பனைகள் பலவிதம். எங்கிருந்து அந்த நிழல் வந்தது.?
    சூரிய ஒளியா? கதம்பம் அருமை. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைகீழாக பார்க்காமல் நேராகப் பார்த்தாலே சில கோணங்களில் ஆஞ்சநேயரும் தெரிகிறார்!   செல்போனில் பேசியபடியே செல்வது, பாட்டுக்கேட்டபடியே செல்வது...   எவ்வளவு எவ்வளவு தவறுகள் செய்கிறார்கள் மக்கள்...  

      நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  45. வியாசர் கனவுகளுக்குபலன் எழுதி இருப்பது சுவாரசியம்.
    வாணி ஜெயராம் குரல் அவ்வளவு இனிமை. 'மல்லிகை என் மன்னன் மயங்கும் ....'ஒரு காலத்தில் தூள் கிளப்பிய பாடல்.

    பதிலளிநீக்கு
  46. ஆஆ கனவுகளா :))  எனக்கு வாழ்க்கையில் இன்னின்ன நேரத்தில் இவை நடக்கும்னு கனவுகள் முன்கூட்டியே சொல்லியிருக்கு .கொஞ்சம் உள்ளுணர்வும் அதிகம் அதனால் என் கணவர் என்னை ட்ரீம் கேர்ள் என்றே கிண்டலடிப்பார் 
    அப்பா அம்மா இருவரும் மறைந்த புதிதில் அடிக்கடி கனவில் வருவாங்க .ரீசன்ட்டா ஒரு விஷயத்தில் நான் தலையிட வேண்டாம்னு அறிவுரை சொன்னார் அப்பா இது கனவில் வந்தது ..எனக்கு அப்படியே அதிர்ச்சி நான் விலகி நின்னுட்டேன் குடும்ப உறவு ஒருவரின் விஷயத்தில் .
    உணவும் கனவுகளும் தொடர்புள்ளவை ..மால்ட் ட்ரிங்க்ஸ் கனவுகளை உண்டாக்கும் .அஜீரணமும் கனவு உற்பத்தியாளர் தான் gut effect  உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் .
    எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் கடவுளேத்துணை :)தூங்கபோகுமுன் ப்ரே செஞ்சுட்டு தூங்குவது சிறு  வயது முதல் இன்னும் தொடர்கிறது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏஞ்சல்...  உங்கள் கணவர் சொல்வதுபோல நீங்கள் கனவு ராணிதான் போல...   நினைத்த கனவுகளைக் காணமுடியும் போல!

      நீக்கு
  47. வாணி ஜெயராம் ஆஹா 7 ஸ்வரங்களுக்குள் // இன்னும் காதில் தேனாய் பாயும் குரல் அந்த போன் பெண்ணுக்கு உயிர் போய் மீண்டு வந்திருக்கும் :( என்னவொரு இரெஸ்பான்சிபிள் குணம் ..பொதுவா காதில் ஹெட்ப்போன் போடுவது எனக்கு பிடிக்காது வேறொரு உலகில் இருப்பதுபோலிருக்கும் அவர்கள் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாணி ஜெயராம் குரலில் இந்தப் பாடல் உட்பட நிறைய நல்ல பாடல்கள் உள்ளன.  
      //என்னவொரு இரெஸ்பான்சிபிள் குணம் ..பொதுவா காதில் ஹெட்ப்போன் போடுவது எனக்கு பிடிக்காது//

      ஆமாம் இப்படிப் பொறுப்பில்லாதவர்கள் நிறையவே இருக்கிறார்கள்!

      நீக்கு
  48. பீஹார் பெற்றோர்  மோசம் :( 
    அந்த வெயில் நிழல் எனக்கு  GORILLA ஒன்று நின்று பார்ப்பது போலிருக்கு :))
    Genie அலாவுதீனின் ஜீனி மாதிரியும் இருக்கு :) 

    பதிலளிநீக்கு
  49. கனவுகளின் பலன்கள், காணும் காலம் குறித்த குறிப்புகள் சுவாரஸ்யம்.

    சிறந்த பாடகி வாணி ஜெயராம்.

    இயர் ஃபோன் உபயோகிப்பவர்களுக்கான விழிப்புணர்வு நீங்கள் பகிர்ந்திருக்கும் சம்பவம்.

    மேகங்களில் தேடுவதைப் போல சூரிய ஒளியில் வடிவங்கள்.. நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!