சனி, 30 ஜனவரி, 2021

நல்ல செய்திகள்.

 

உலக சமுதாயத்தின் உண்மையான நண்பன்: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு. 

வாஷிங்டன்: அண்டை நாடுகளுக்கு லட்சக்கணக்கான டோஸ்கள் கொரோனா தடுப்பூசியை இந்தியா அனுப்பியிருப்பதற்கு அமெரிக்க அரசின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துறை பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் இயக்கம் கடந்த ஜன., 16-ம் தேதி தொடங்கியது. அது மட்டுமின்றி ஜன., 21 முதல் அண்டை நாடுகளுக்கும், நட்பு நாடுகளுக்கும் இந்தியா தடுப்பூசி அனுப்பி வைத்து வருகிறது. முதல்கட்டமாக நேபாளத்துக்கு 10 லட்சம் தடுப்பு மருந்துகளும், பூடானுக்கு, 1.50 லட்சம், மாலத்தீவுகளுக்கு 1 லட்சம் , வங்கதேசத்துக்கு, 20 லட்சம் டோஸ்கள் தடுப்பூசி அனுப்பப்பட்டன. பாகிஸ்தான் நாடு கோரிக்கை வைக்காததால் அந்நாட்டுக்கு அனுப்பப்படவில்லை. வியாழனன்று அந்நாட்டிற்கு சீனா 5 லட்சம் சினோபார்ம் மருந்துகளை அனுப்பியது.

இந்நிலையில் இந்தியாவின் இந்த முயற்சியை அமெரிக்கா பாராட்டியுள்ளது. அமெரிக்க அரசின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துறை தனது டுவிட்டர் பக்கத்தில் “தெற்காசியாவில் லட்சக்கணக்கான கொரோனா தடுப்பூசியைப் பகிர்ந்துள்ளீர்கள். உலக சுகாதாரத்தில் இந்தியாவின் பங்கை நாங்கள் பாராட்டுகிறோம். மாலத்தீவு, பூடான், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி அனுப்பியுள்ளது. மேலும் பல நாடுகளுக்கு இதனை விரிவுப்படுத்த உள்ளது. தனது மருந்தைப் பயன்படுத்தி உலகளாவிய சமூகத்திற்கு உதவும் இந்தியா, ஒரு உண்மையான நண்பர்.” என பாராட்டியுள்ளது.

= = = = 

வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது.


சென்னை: தமிழக அரசின், வீரதீர செயலுக்கான அண்ணா விருது, வைகை எக்ஸ்பிரஸ் ஓட்டுனருக்கு வழங்கப்படுகிறது.

மதுரையில் இருந்து, சென்னை எழும்பூருக்கு, 2020 நவ.,18ல், வைகை எக்ஸ்பிரஸ் சென்றது. மதுரை, திருமங்கலத்தை அடுத்த, திருப்பதி பாலாஜி நகரைச் சேர்ந்த சுரேஷ், 45, ரயிலை ஓட்டினார்.ரயில் கொடைக்கானல் ரோடு -- அம்பாத்துரை இடையே சென்றபோது, நிலச்சரிவால் பாறைகள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்தன.

இதைக் கவனித்த, ரயில் ஓட்டுனர் சாமார்த்தியமாக செயல்பட்டு, துரிதமாக, 'பிரேக்' போட்டு, ரயிலை நிறுத்தியதால், விபத்தில் இருந்து தப்பியது. பயணம் செய்த, 1,500 பேர் உயிர் தப்பினர்.ஓட்டுனரின் துரித செயல்பாட்டை பாராட்டி, அவருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா விருது வழங்க வேண்டும் என, தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரிந்துரை செய்தார்.

இதையடுத்து, ரயில் ஓட்டுனர் சுரேஷுக்கு,   சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில், வீரதீர செயலுக்கான அண்ணா விருதை வழங்கி, முதல்வர் இ.பி.எஸ்., பாராட்டினார். 

= = = = 

சத்தான உணவு, யோகா, மூச்சு பயிற்சி : நோய்களை விரட்ட இது போதும்!

‛‛ கொரோனா பாசிட்டிவ் ஆனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள் என, 3000 நோயாளிகளுக்கு மேல் வைத்தியம் பார்த்து இருக்கிறோம். எல்லோரும் முழுமையாக குணம் அஅடைந்து உள்ளனர், '' என்கிறார் கஸ்தூரிபா காந்தி மெமோரியல் சித்த மருத்துவமனை தலைமை மருத்துவர் சரவணன். 

கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து இருப்பதாக சொல்லப்படுகிறதே?

வைரஸ் கிருமிகளை பொறுத்தவரை, ஒரே மாதிரி தன்மையில் உருவாவதில்லை. பருவ கால மாற்றத்துக்கு ஏற்ப, அதன் தன்மை மாறுபடும். ஏற்கனவே வந்த சின்னம்மை, தட்டம்மை போன்றவையும் வைரஸ் நோய்தான்.வைரஸ் கிருமியை பொறுத்தவரை எப்படி உருவாகிறது, எப்படி மறைகிறது என்பது யாருக்கும் தெரியாது. அப்படி தெரிந்திருந்தால் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து இருக்கலாம். நம் மரபு மருத்துவத்தில் மஞ்சள், வேப்பிலை பற்று, சூரிய ஒளியில் தண்ணீரை காய வைத்து குளிக்க வைப்பது போன்ற எளிய வைத்தியங்களை செய்துதான், அம்மையை குணப்படுத்தினர். இப்போதும் அம்மைக்கு தடுப்பு ஊசிதான் போடுகிறோம். தனியாக மருந்து இல்லை. கொரோனா வைரசில் ஏற்பட்டுள்ள மாற்றமும் அப்படித்தான்.

அப்படியானால் இந்த நோய் வராமல் தடுக்க என்னதான் வழி?

சித்த மருத்துவத்தில் ஆறு காலங்களை பற்றி சொல்கிறோம். அதில் குளிர்காலம், முன் பனிக்காலம் மற்றும் பின் பனிக்காலம் ஆகிய மூன்று காலங்களில் வைரஸ், பாக்டீரியா போன்ற ஒரு செல் உயிரிகள் வளர்ச்சி அடையும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் இல்லாத போது, இந்த கிருமிகள் உடலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் பிரச்னை இல்லை. சித்த மருத்துவத்தை பொறுத்தவரை, இந்த நோயை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவு அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். சூரிய ஒளி உடலில் பட வேண்டும். யோகா மற்றும் மூச்சு பயிற்சி செய்து வந்தால், எந்த நோயும் நெருங்காது.

சித்த மருத்துவத்தில் கொரோனாவுக்கு நீங்கள் அளிக்கும் மருந்துகள், நோயை குணமாக்குவதா அல்லது எதிர்ப்பு சக்தி தருவதா?

உடலில் பல மில்லியன் செல்கள் உள்ளன. அதில் மைட்டோகாண்ட்ரியாவை, செல்களின் ஆற்றல் சாலை என்று சொல்வார்கள். இது நமது உடலில், 100 நாட்கள் வரை இருந்து செல்களை பாதுகாக்கிறது. கொரோனா நோயாளிகளுக்கு, பிற மருந்துகளுடன் 'மிராக்கிள் டிரிங்க்' எனும் பானம் கொடுக்கிறோம். எலுமிச்சை, நார்த்தங்காய், நெல்லி போன்ற புளிப்பு சுவை உள்ள பொருட்களில் விட்டமின் சி அதிகம் உள்ளது. இதன் மூலக்கூறுகள், இந்த பானத்தில் சேர்க்கப்படுகிறது. இந்த விட்டமின் சி மைட்டோகாண்டிரியாவை பாதுகாப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இந்த பானம், நோய்க்கு மருந்து என்று சொல்ல முடியாது. எல்லா நோயையும் எதிர்க்க கூடிய சக்தியை இது தரும். இந்த பானத்தை சாப்பிடும் போது, 80 சதவீதம் சத்து உடலில் சேர்கிறது. அதனால் நோயில் இருந்து விரைவாக குணமாக முடியும்.

கொரோனா நோயாளிகள் முக்கியமாக சளி பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு தீர்வு என்ன?

சளி, தலைவலிக்கு எளிய வைத்தியம் இருக்கிறது. சட்டியில் தண்ணீர் எடுத்து, நொச்சி இலை, மஞ்சள் துாள், கல் உப்பு போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால், உடம்பில் உள்ள கெட்ட வியர்வை எல்லாம் வெளியேறி விடும். சளியும் இருக்காது, தலைவலியும் இருக்காது. தொண்டையில் வலி, கரகரப்பு இருந்தால் வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் கல் உப்பு போட்டு வாய் கொப்பளித்தால் சரியாகி விடும். வயிறு பொருமல் என்றால், நான்கு மிளகு, ஒரு வெற்றிலை, இரண்டு உப்புக்கல் மென்று தின்றால் சரியாகி விடும். இதை வீட்டில் செய்து கொண்டால் நல்லதுதான்.

சித்த வைத்திய முறையில், கொரோனாவுக்கு வைத்தியம் பார்த்ததில், மக்களிடம் என்ன 'பீட்பேக்' கிடைத்துள்ளது?

எங்கள் மருத்துவமனையை பொறுத்தவரை, கொரோனா பாசிட்டிவ் ஆனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள் என, 3000 நோயாளிகளுக்கு மேல் வைத்தியம் பார்த்து இருக்கிறோம். எல்லோரும் முழுமையாக குணம் அடைந்து உள்ளனர். அவர்களுக்கு மீண்டும் எந்த பாதிப்பும் வரவில்லை.

டாக்டர் சரவணன்

sidhasaravanan@gmail.com

தொடர்புக்கு:9043212789

= = = = 

பத்ம விருதுகள். 

புதுடில்லி: 2021-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று மத்திய அரசு அறிவித்தது. புதுடில்லி: 2021-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று மத்திய அரசு அறிவித்தது. குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 102 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது

பத்ம விபூஷண். 

1. ஷின்சோ அபே , ஜப்பான் முன்னாள் பிரதமர்
2. மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.
3. பெல்லி மொனப்பா ஹெக்டே - மருத்துவம்
4.ஸ்ரீ நரேந்திர சிங் கப்பானி - விஞ்ஞானம் -பொறியியல்.
5. மெளாலான வஹிதுன் கான்
6. ஸ்ரீ பி.பி.லால்
7. ஸ்ரீ சுதர்சன் சாகூ.. 

பத்மபூஷண். 

1. கிருஷ்ணன் நாயர் சாந்தா குமாரி சித்ரா
2. ஸ்ரீதருண் கோகெய்
3.ஸ்ரீ சந்திரசேகர் கம்பாரா
4.சுமித்ரா மகாஜன்
5. நிருபேந்திரா மிஸ்ரா
6. ராம் விலாஸ் பஸ்வான்.
7. கேசுபாய் பட்டேல்.
8. கல்பே சாதிக்.
9. ரஜினிகாந்த் தேவதாஸ் ஷெ ராப்.
10. தர்லோக் சென்சிங்.

பத்மஸ்ரீ . 

தமிழகத்தை சேர்ந்த வில்லுப்பாட்டு கலைஞர், சுப்பு ஆறுமுகம், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, வேளாண்துறை பாப்பம்மாள், சமூக சேகர் சுப்புராமன், ஸ்ரீதர் வேம்பு, மருத்துவர் மறைந்த திருவேங்கட வீரராகவன் உள்ளிட்ட 40 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்டபல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, 102 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 
= = = = 
ஊக்கமது கைவிடேல்.



கால் ஊனமுற்றவர்கள் முப்பது பேர் காஷ்மீரில் ஆரம்பித்து தங்கள் சைக்கிள் பயணத்தை 45 நாட்களுக்கு பிறகு கன்னியாகுமரியில் நிறைவு செய்து சாதித்துள்ளனர்.

‛இன்ஃபினிட்டி ரைட்' என்ற தலைப்பிட்டு கொடூரமான பனியில்,சவாலான ரோட்டில் 43 நாட்கள்,3,842 கிலோ மீட்டர் துாரம் பயணம் செய்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர், இந்த சாதனையாளர்களில் தான்யா என்ற பெண் சைக்கிள் ஒட்டுனரும் உண்டு.

ஆதித்தியா மேத்தா என்ற தொழிலதிபர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு விபத்தில் கால் துண்டிக்கப்பட்டார் இதனால் ஆரம்பத்தில் துவண்டு போனாலும் பின் தனது கவனத்தை சைக்கிள் ஒட்டுவதில் செலுத்தனார்.ஒற்றைக்காலுடன் ஒரு முறை இவுர் நீண்ட சைக்கிள் பயணம் மேற்கொண்ட போது கிடைத்த ஆதரவையும் அன்பையும் உணர்ந்தவர் தன்னைப் போலவே ஊனமுற்ற வீரர்களை சைக்கிள் ஒட்டுவதில் உற்சாகப்படுத்துவதற்காக ஆதித்தியா மேத்தா அறக்கட்டளை துவக்கி நடத்திவருகிறார்.இவர்களுக்கு பயிற்சி வழங்கி உலகில் எங்கு ஊனமுற்றவர்களுக்கான சைக்கிள் போட்டி நடந்தாலும் அதில் பங்கேற்கவும் செய்து வருகிறார்.இதன் மூலம் கால் ஊனமுற்றவர்கள் உற்சாகம் பெற்று வருகின்றனர்.

கால் ஊனம் என்று இல்லை எப்படிப்பட்ட ஊனமாக இருந்தாலும் அவர்களுக்குள் விளையாட்டு திறமை இருந்தால் அவர்களை உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கடந்த நவம்பர் 19 ம்தேதி ஆரம்பித்த சைக்கிள் பயணம் குறிப்பிட்டபடி டிசம்பர் 31 ந்தேதி கன்னியாகுமரியில் நிறைவடைந்தது.

முப்பது சைக்கிள் வீரர்களும் 36 நகரங்களை கடந்து வந்துள்ளனர் பல இடங்களில் சமூக ஆர்வலர்களையும்,உடல் ஊனமுற்ற பள்ளி மாணவர்களையும் சந்தித்து ஊனமுற்றவர்களுக்கான விளையாட்டு வாய்ப்பு பற்றி பேசியுள்ளனர்.இவர்களின் பயணத்திற்கு எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்) மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படை (சிஏபிஎஃப்) ஆகியவை உதவியுள்ளன.

"எங்களின் இந்த விழிப்புணர்வு சவாரி இந்தியாவின் சிறந்த பாரா விளையாட்டு திறனுள்ளவர்களை கண்டுபிடித்து உற்சாகம் தந்து வழிகாட்டவும் செய்தது. இந்த நீண்ட பயணத்தில் எங்களிடம் நிபந்தனையற்ற அன்பைக் காட்டிய மக்களுக்கு நன்றி ,இதன் மூலம் இன்னும் சில உடல் ஊனமுற்ற சைக்கிள் சாம்பியன்களை உருவாக்கி அவர்களை இந்தியாவிற்காக விளையாடச் செய்து ஹீரோக்களாக்குவதே எங்கள் லட்சியம் என்றார் என்று ஆதித்யா மேத்தா கூறினார்.

ஆதித்யா மேத்தா அறக்கட்டளை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கிழே உள்ள இணையம் மூலம் தொடர்பு கொள்ளவும்.
https://adityamehtafoundation.org/
-எல்.முருகராஜ். தினமலர். 
= = = = 
மரம் வளர்ப்பில் அசத்தும் மாணவி. 



மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரவீன்குமார், 40, செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திர வேர்ல்டு சிட்டியில், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவருடன் மனைவி ஸ்துதி, மகள் பிரசித்தி சிங், 7, வசிக்கின்றனர். மகேந்திரா வேர்ல்டு சி.பி.எஸ்.இ., பள்ளியில், சிறுமி பிரசித்தி சிங், 3ம் வகுப்பு படித்து வருகிறார். மரம் வளர்ப்பில், சிறுவயதில் இருந்தே அதிகம் ஆர்வம் இருந்ததால், 2014ல், தான் வசிக்கும் பகுதியில், மரக்கன்றுகள் நட துவங்கினார்.

இவரது ஆர்வத்தை பார்த்த பெற்றோர், அவருக்கு உறுதுணையாக இருப்பதால், பழ மர வனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு வனம் ஆகியவற்றை, பல இடங்களில் உருவாக்கினார்.செங்கல்பட்டு மாவட்டம், அஞ்சூர் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில், பழ வகை மரக்கன்றுகள், காட்டாங்கொளத்துார் சிவானந்த குருகுலம் பள்ளியில், பல வகை செடிகளை நட்டுள்ளார். மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில், அரசு பள்ளிகள் மற்றும் புதுச்சேரி மாநிலம், தனியார் அறக்கட்டளை பகுதியில், செடிகள் மற்றும் பழ வகை கன்றுகளை நட்டுள்ளார்.

இந்நிலையில், சிறுமியின் நற்செயல்பாட்டை அறிந்த, பிரதமர் மோடி, சமூக வலைதளமான, 'டுவிட்டர்' பக்கத்தில், சிறுமியை பாராட்டியதோடு, மத்திய அரசின் பால சக்தி புரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.செங்கல்பட்டில், நேற்று நடந்த குடியரசு தின விழாவில், கலெக்டர் ஜான்லுாயிஸ், சிறுமிக்கு நினைவு பரிசு வழங்கி கவுரப்படுத்தினார். மாணவிக்கு, பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து, மாணவி பிரசித்தி சிங் கூறியதாவது:செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநில பகுதிகளில், மரச்செடிகள் நட்டு உள்ளேன். 13 பழ வகை காடுகளை உருவாக்கி உள்ளேன். இந்த ஆண்டில், ஒரு லட்சம் பழ மரக்கன்றுகள் நட்டு வளர்க்க உள்ளேன். தற்போது, 13 ஆயிரத்து, 500 மரக்கன்றுகளை நட்டுள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

மாணவியின் தாய் ஸ்துதி கூறியதாவது: என் மகள் பிரசித்தி சிங், மரக்கன்றுகள் வளர்ப்பதில் ஆர்வமாக உள்ளார். இதேபோல, மரக்கன்றுகளை வளர்க்க, பெற்றோர், குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும். பால சக்தி புரஸ்கார் விருதுக்கு, பிரசித்தி தேர்வு செய்யப்பட்டிருப்பது, மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
= = = = 

மனநிலையை காட்டும் புரதங்கள்!

மனச் சுமை, மனச் சிதைவு போன்ற உளவியல் குறைபாடுகளை உறுதி செய்ய, உளவியல் மருத்துவர்களால் தான் முடியும். ஆனால், இவற்ரை, உடலியல் அறிகுறிகளால் கண்டறிய முடியுமா என, ஒருபக்கம் ஆய்வு நடக்கிறது. அண்மையில், தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள், உலகின் முதல் உடலியல் அடிப்படையிலான உளவியல் சோதனையை வடிவமைத்துஉள்ளனர்.

மனச் சுமை போன்ற குறைபாடுகள் உள்ளோருக்கு, மூளையில் உற்பத்தியாகும், பி.டி.என்.எப்., எனப்படும் நியூரோட்ரோபிக் காரணி புரதங்களின் அளவுகள் மாறுபடுவதுண்டு. புரத அளவு மாறுபாட்டை வைத்து, ஒருவருக்கு இருப்பது மனச் சிதைவா, அல்சைமர்ஸ் நோயா என்பது முதல் தற்கொலை செய்து, கொள்ளும் மனநிலை கொண்டவரா என்பது வரை அறிய முடியும்.

இந்த மாறுபாட்டை வைத்து ஆஸ்திரேலிய மருத்துவர்கள் நம்பகமான சோதனை முறையை கண்டறிந்துள்ளனர்.ஜர்னல் ஆப் சைக்கியாட்ரிக் ரிசர்ச் இதழில் வெளியாகியுள்ள இப் புதிய சோதணை முறை நடமுறைக்கு வந்தால், உளவியல் குறைபாடு உள்ளோரை துல்லியமாக கண்டறிய முடியும்.

= = = =
மாணவர்கள் வடிவமைத்த செயற்கைகோள்; பிப்., 28ல் செலுத்துகிறது 'இஸ்ரோ'

கோவை: கோவை கல்லுாரி மாணவர்கள் தயாரித்த செயற்கைகோள்கள், பிப்., 28ல், ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து, விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

கோவை, நீலாம்பூர், ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்கள் சொந்தமாக வடிவமைத்த செயற்கைகோளை விண்ணில் செலுத்த உள்ளனர். கல்லுாரி வளாகத்தில் செயற்கைகோள் தரைதள கண்காணிப்பு நிலையம் துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.
'வீடியோ கான்பரன்சிங்' முறையில் பங்கேற்ற, 'இஸ்ரோ' தலைவர் சிவன், தரைதள கண்காணிப்பு நிலையத்தை துவக்கி வைத்து பேசுகையில், ''கல்லுாரி மாணவர்கள் வடிவமைத்துள்ள செயற்கைகோள், 'இஸ்ரோ' தளத்தில் இருந்து ஏவப்படுவது மிகவும் பாராட்டத்தக்கது. விண்வெளி ஆராய்ச்சிகளில் வரும் நாட்களில் நம் நாட்டில் அதிகளவு மாணவர்களின் பங்களிப்பு இருக்கும்.

கோவை, சென்னை மற்றும் நாக்பூர் பகுதிகளை சேர்ந்த, மூன்று கல்லுாரிகளின் மாணவர்கள் தயாரித்துள்ள செயற்கைகோள்கள், பிப்., 28ல், ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட உள்ளது. இவை அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்பதால் கூடுதல் சிறப்பு,'' என்றார். ஸ்ரீ சக்தி இன்ஜி., கல்லுாரி தலைவர் டாக்டர் தங்கவேலு கூறுகையில், ''2010ம் ஆண்டு எங்கள் கல்லுாரியிலேயே, ஒரு செயற்கைகோள் ஆய்வகத்தை அமைத்தோம். இதன் பலனாக, 'ஸ்ரீசக்தி சாட்' என்ற செயற்கைகோளை வடிவமைத்துள்ளோம்.

இதற்கு, இஸ்ரோ விஞ்ஞானிகள் தேவையான உதவிகளை செய்தனர். இந்த செயற்கைகோள், 460 கிராம் எடையுள்ளது. பூமியில் இருந்து, 500-575 கி.மீ., துாரத்தில் சுற்ற உள்ளதால், குறைந்த சுற்றுப்பாதை கொண்ட (லியோ) செயற்கைகோளாக இருக்கும். 300 செயற்கைகோள்களுக்கு இடையில், இது தகவல் தொடர்பு தொழில்நுட்பமாக செயல்படும்,'' என்றார்.

என்ன பயன்கள்? 

'ஸ்ரீசக்தி சாட்' பி.எஸ்.எல்.வி., சி-51 செயற்கைகோள் பிப்., 28 ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. இது, ஆறு மாதங்கள் விண்ணில்சுற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின், மூன்று ஆண்டுகள் சற்று குறைந்த அளவிலான துாரத்தில் சுற்றும். மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஏற்படும் தண்ணீர் கசிவு, எண்ணெய் அல்லது எரிவாயு கசிவு கண்டறிய பயன்படுத்தலாம். காட்டுத்தீ, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் ஏற்படும் தீ விபத்து, வங்கிகள் மற்றும் பிற பாதுகாப்பு பகுதிகளில் நடக்கும் திருட்டு சம்பவங்களை தடுக்க பயனுள்ளதாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டது.

= = = = 
ஆட்டோ டிரைவரின் நேர்மை. 

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் பால் பிரைட். வியாபாரி. இவரது மகள் திருமணம் குரோம்பேட்டடையில் உள்ள தேவாலயத்தில் நேற்று நடந்தது. தேவாலயத்தில் இருந்து வீ ட்டிற்கு அவசரமாக செல்ல ஆட்டோ ஒன்றை பிடித்தார். மணப்பெண்ணின் 50 சவரன் நகைகளை ஒரு பையில் வைத்திருந்தார். கடையில் சில பொருட்களை வாங்க நினைத்த பிரைட், தெருமுனையிலேயே இறங்கிக் கொண்டார். ஆட்டோவும் கிளம்பியது. சிறிது நேரத்தில் வீடு போய் சேர்ந்த பிறகுதான் கையில் நகைப்பை இல்லை என்பதை உணர்ந்தார். உடனே குரோம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தார். 

நகைகள் தொலைந்துவிட்டது என எப்படி மகளிடம் கூறுவேன்? மகளை எப்படி மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைப்பேன்? என மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தார் பிரைட். ஆட்டோ சென்ற தெருக்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிக்களில் பதிவான காட்சிகளை போலீசார் அலசி ஆராயத் தொடங்கினர். 

இதனிடையே, ஆட்டோ டிரைவர் சரவணக்குமார், பின் சீட்டில் பேக் கிடப்பதை பார்த்தார். அதனுள் 50 சவரன் நகைகள் இருந்தது. ஆட்டோவில் வந்தவரின் பேரும் தெரியாது; வீடும் தெரியாது; போன் நம்பரும் இல்லை? என்ன செய்வது என யோசித்த சரவணக்குமார் குரோம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்றார். ஆட்டோவில் பயணி தவறவிட்ட நகைகளை ஒப்படைக்க வந்ததாக போலீசாரிடம் கூறினார். நகைகளை பெற்றுக் கொண்டு, டிரைவருக்கு நன்றி சொன்னார் வியாபாரி பிரைட். நேர்மையாக நடந்து கொண்ட ஆட்டோ டிரைவர் சரவணக்குமாருக்கு பூங்கொத்து கொடுத்து போலீசார் பாராட்டினர். நேர்மையா இருந்தா அதுவே நம்மை கடைசி வரை காப்பாத்துங்க; ஆட்டோல வர்றவங்ககிட்ட அதிக கட்டணம் வாங்குற பழக்கம்கூட எனக்கு இல்லீங்க என்றார், சரவணக்குமார்.
= = = = 

42 கருத்துகள்:

  1. காலை வணக்கம் அனைவருக்கும்.

    இன்றைய நல்ல செய்திகள் சிலவற்றைப் படித்திருக்கிறேன்.

    இரண்டாம் செய்தியில், நாளை நடைபெறும் விழாவில் ...பரிசளித்தார் என்பதுதான் குழப்புது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ,// நாளை நடைபெறும் விழாவில் ...பரிசளித்தார் என்பதுதான் குழப்புது// அதே, அதே, ஆனால் இது தினசரியில் வந்த தவறுனு நினைக்கிறேன்.

      நீக்கு
    2. செய்தித்தாளில் future tense செய்திதான் வந்திருந்தது. அதை past tense ஆக மாற்றியவர் (வேறு யாரு! நான்தான் !!) அரைகுறையாக மாற்றியதால் வந்த வினை! (ஆக - நல்ல செய்திகளை கவனமாக படிப்பவர்களும் உள்ளனர் என்பதை அறிந்து மகிழ்ச்சி!! )

      நீக்கு
    3. :))))) கண்ணில் வி.எ. விட்டுக்கொண்டு இல்ல படிப்போம்!

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.

    நம் நாட்டுக்கு கிடைத்த பாராட்டு மகிழ்ச்சியளிக்கிறது.

    வைகை ரயில் ஓட்டுனரின் வீரச் செயல் மகத்தானது. பல உயிர்களை தன் சாமர்த்தியத்தால் காப்பாற்றிய அவரை மனதாற பாராட்டுவோம்.

    கொரோனாவிற்கு சித்த மருத்துவ பயன்பாடு குறித்து அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் காலை வணக்கம். தினமும் கீதா அக்கா தனியாக இருக்க பயமாக இருக்கிறது என்பாரே என்று வந்தால், அவரில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா. ஹா. ஆமாம்.. தினமும் முதலிலேயே வந்து விடும் அவரை என்னமோ இன்று காணவில்லை. நெல்லை வாசிகள்தான் இன்றைய ந.செய்திகளை ஒருவரையும் காணவில்லையே என நினைத்தபடி வாசித்துக் கொண்டிருக்கிறோம்.

      நீக்கு
    2. இஃகி,இஃகி,இஃகி, நானும் காலம்பரவே வந்துட்டேன் இணையத்துக்கு. ஆனால் வேறு சில சொந்த வேலைகளைச் செய்து முடிக்க வேண்டி இருந்ததால் பதிவுகள் பக்கம் வரலை. இப்போத் தான் வந்தேன்.

      நீக்கு
    3. நான்தான் இன்றைக்கு ரொம்ப லேட்டு !!

      நீக்கு
    4. சிசிமவுக்கு நேற்று அனுப்பியதை இன்னமும் பார்க்கலை போல! அநேகமாக இன்னிக்கு அனுப்பினா முடிஞ்சுடும்னு நம்பறேன்.

      நீக்கு
    5. @கௌதமன் சார், சொன்னபடி இன்னிக்கு அனுப்பினதோட முடிச்சாச்சு. மெயிலில் சப்ஜெக்டில் தலைப்பைச் சேர்க்க மறந்திருக்கேன். இரண்டு மெயில்கள் நீங்க பார்க்கக் காத்திருக்கின்றன.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    சென்ற வருட பத்ம விருதுகளில் நம் மகத்தான, அபிமான பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு கிடைத்த பத்ம விபூஷன் விருது கிடைத்திருப்பது சந்தோஷத்துக்குரியது.

    திரு ஆதித்தியா அவர்களின் மன உறுதி பாராட்டத்தக்கது. அவரின் முயற்சி கால்கள் இயல்பாக நடக்க முடியாத பலருக்கும் அருமருந்தாக இருந்து வரும். சிறந்த தொண்டாற்றி வரும் அவருக்கு வாழ்த்துகள்.

    மரங்கள் வளர்ப்பில் சாதனைகள் செய்து விருது பெற்ற மாணவிக்கும், தன் ஆட்டோவில் தவற விட்ட திருமணத்திற்கான நகைகளை பத்திரமாக காவல் துறையினரிடம் சென்று நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். எல்லோர் வாழ்க்கையும் இனிமையும், அமைதியும், ஆரோக்கியமும் நிறைந்ததாக இருக்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  7. அனைத்துச் செய்திகளுமே நல்லனவே நடக்கும் என்னும் நம்பிக்கையை ஊட்டுகின்றன. மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் சுற்றவேண்டிப் பிரார்த்தனைகளும், வாழ்த்துகளும். நினைக்கவே மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையும் பாராட்டத்தக்கது. குழந்தை நடும் மரக்கன்றுகள் செழிப்புடன் வளர்ந்து காடுகள் உருவாகவும் வேண்டுகிறோம். சைகிள் வீரர்கள் சாதனை பிரமிப்பை உண்டாக்குகிறது. சித்த மருத்துவம் எக்காலத்துக்கும் ஏற்கக் கூடியது.பக்கவிளைவுகள் கொடுக்காதது. கொரோனா மூலம் மக்கள் சித்த மருத்துவத்துக்கு மாறிக் கொள்வதும் பாராட்டுக்கு உரியது. அப்புறமா வரேன்.

    பதிலளிநீக்கு
  9. ஆட்டோ டிரைவர் சரவணக்குமாரின் நேர்மை பாராட்டுக்குறியது.

    நிறைய செய்திகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. இனிய காலை வணக்கம். அனைவரும் நலமே வாழப் பிரார்த்தனைகள்.

    அத்தனை செய்திகளும் அற்புதம்.
    பத்ம விபூஷன் மறைந்த எஸ் பி பி சாருக்குக் கிடைத்தது
    மகிழ்ச்சி.
    ஸ்ரீதர் வேம்புவுக்கும் காலத்தே கிடைத்திருக்கிறது.
    சுப்பு ஆறுமுகம் ஐயாவுக்கு நிறைய வயதாகி இருக்குமே.
    அனைவருக்கும் பெருமை கொடுத்தத் தானும்
    பெருமை அடையும் இந்த விருதுகள்.
    நன்றி.


    சமயத்தில் ரயில் வண்டியை நிறுத்திய ஓட்டுனருக்கு
    மனம் நிறை வந்தனங்கள்.
    எத்தனை தீரமான செயல். இத்தனை உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறாரே!!

    உடல் குறையைத் தடையாக நினைக்காமல்
    இத்தனை பெரிய சாதனையைச் செய்திருக்கும்
    வீரர்களுக்கு மனம் நெகிழ்ந்த பாராட்டுகள்.

    8 வயதுச் சிறுமி இத்தனை சாதனைகளைச் செய்திருப்பது
    பிரமிப்பாக இருக்கிறது.
    வரப்போகும் தலைமுறைக்கு பழ வனங்களைக்
    காத்துக் கொடுக்கப் போகிறார்.
    பிரசித்திக்கும் அவள் பெற்றோருக்கும்
    எத்தனை நன்றி சொன்னாலும் போதாது.

    அத்தனி நல்ல செய்திகளுக்கும் மிக நன்றி
    ஜி.

    பதிலளிநீக்கு
  11. ஆட்டோ ஓட்டுனர் சரவணக்குமாரின் உதவியும் நேர்மையும்

    நினைக்கவே மகிழ்ச்சி.
    மனம் நிறை பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  12. நிரைய,நிறைவான நல்ல செய்திகள். 50 சவரன் தங்க நகையை திருபிக் கொடுத்த ஆட்டோ ஓட்டுனரை கடவுள் ஆசிவதிப்பார்.
    உடல் ஊனத்தை பொருட்படுத்தாமல், சைக்கிளில் சாதனை புரிந்தவர்களுக்கும், அதற்கு ஊக்கம் கொடுக்கும் ஆதித்யா மேத்தா அறக்கட்டளையும் போற்றத்தகுந்தவை.
    முளைத்து மூணு இலைகூட விடாத சிறுமி பிரசித்தி சிங்கின் சாதனை பிரமிக்க வைக்கிறது.
    பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள ஸ்ரீதர் வேம்புவைப் பற்றி வாட்சாப்பில் அவ்வப்பொழுது வரும். நம் ஊடகங்கள் அவரை கண்டு கொள்ளாது,அவர் சங்கியாயிற்றே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஶ்ரீதர் வேம்புவைப் பற்றி முகநூலிலும் நிறையச் செய்திகள். சங்கினு ஒதுக்காமல் பார்த்தால் அவருடைய சேவையின் அருமை புரியும். மனைவி, இணைவி, துணைவினு குறைந்த பட்சம் 3 பேராவது இருந்தால் தானே தமிழக மக்கள் கண்களுக்குத் தலைவராகத் தெரியும்! அவங்க பேரன், பேத்தி, எனக் குறைந்தது பத்துத் தலைமுறைக்காவது சொத்தும் சேர்த்திருக்கணும். அப்போத் தான் மதிப்பு. சம்பாதித்த பணத்தை எல்லாம் இப்படிச் செலவு செய்தால் மதிப்பாங்களா என்ன? :(

      நீக்கு
  13. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    நலம் எங்கும் வாழ்க..

    பதிலளிநீக்கு
  14. நல்ல செய்திகள் - நல்ல செய்திகள்

    பதிலளிநீக்கு
  15. அனைத்தும் அருமை. மரம் நடும் செய்தி மிகவும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  16. நல்ல செய்திகள்... சிறுமியின் ஆர்வம் தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
  17. நல்ல செய்திகள் - நன்று.

    அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!