செவ்வாய், 15 ஜூன், 2021

சிறுகதை : கண்ணழகி காஞ்சனா 1/2 - ஜீவி

 கண்ணழகி காஞ்சனா

ஜீவி 

காத்திருந்தது வீண் போகவில்லை.   


வழக்கமான புன்சிரிப்புடன் இடது கையைத் தூக்கி அசைத்தபடி டைரக்டர் அவர் அறைக்குள் நுழைந்ததும் சட்டென்று ஒரு மின் அதிர்வு ஏற்பட்ட மாதிரி இருந்தது.

தொலைக்காட்சி சேனல்களில் அப்பப்போ பார்த்திருக்கிறேன்.  ஒயிட் பேண்ட் அதில் இன் பண்ணிய பூப்போட்ட டீ ஷர்ட்.  பம்மிய கன்னக் கதுப்புகள்.  கொஞ்சம் கறுப்பு தான்.  இருந்தாலும் நெளிநெளியான கர்லிங் ஹேர்  அந்த கறுப்புக்கு இன்னும் அழகு சேர்த்திருந்தது.

'என்ன பெண்ணா பார்க்கப் போகிறார்கள், இப்படி வர்ணிக்கிறீர்களே' என்று கேட்காதீர்கள்.  தமிழின் சினிமா இயக்குனர் சிலருக்கு தனித்த ஒரு அடையாளம் உண்டு. அதில் இவருக்கான அடையாளம் இது.

நேர மேலாண்மையில் படு  கறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதை அனுபவ பூர்வமாகவே உணர்ந்த அனுபவம் அது.   அவர் உள்ளே நுழைந்த ஐந்தே நிமிடங்களில் எனக்கு அழைப்பு வந்து விட்டது.  கையில் ஒரு ஃபோல்டர் ஃபைலுடன் வந்திருந்தேன்.  அத்துடன் உள்ளே நுழைந்தேன்.

ஜிலுஜிலுப்பு அறையில் அவர் -- அவருக்கு எதிரே எதிர் சோபாவில் ஒரு பெண்.  இரண்டே பேர் தான்.  அந்தப் பெண் அந்த அறையில் டைரக்டர் வருவதற்கு முன்பே  இருந்திருப்பார் போலிருந்தது.

உள்ளே நுழைந்த என்னை தனக்கு பக்கத்து சோபா பக்கம் கை காட்டி உட்காரச் சொன்னார்.

உட்கார்ந்தேன்.  "ஜூஸ் வரவழைக்கட்டுமா, சார்?" என்று அந்தப் பெண் கேட்டாள்.  யாரைக் கேட்டாள் என்று தெரியவில்லை.  பொதுவானக் கேள்வியாய்  இருந்தது.

"சொல்லுங்க, சரஸா.. " என்றார் டைரக்டர்.   ஜூஸூக்காகச்  சொல்கிறார் என்று தெரிந்தது. அந்தப் பெண்ணின்  பெயரும் தெரிந்தது.  அந்த சரஸா இண்டர்காம் எடுத்து விஷயத்தைச் சொன்னாள்.

டைரக்டர் என் கை ஃபைலைப் பார்த்தபடி, "கதையை டைப் பண்ணிக் கொண்டு வந்திருக்கிறீர்கள் போலிருக்கு" என்றார்.

"ஆமாம், ஸார்.. " என்றேன் லேசான பதட்டத்துடன். "படிச்சிடட்டுமா?"

"அதை அப்புறம் கதை இலாகாலே படிச்சிப்பாங்க.. நீங்க வாய்மொழியாக் கதையைச் சொல்லுங்க.." என்றார்.

எங்கே ஆரம்பிப்பது என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, "ஒன்லைன் என்ன?"  என்று கேட்டார்..  இந்த ஒன்லைன் விஷயம் சினிமா பாஷை என்று தெரிந்திருந்தும் அதைப் பற்றி யோசித்து வைக்கவில்லையே என்று எனக்கு லேசான தடுமாற்றம் ஏற்பட்டது.

அது தவிர டைரக்டரே கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்க, நான் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லிக் கொண்டிருப்பது இன்னொரு பக்கம் உறைத்தது.  'இது கூடாது.. நிறையப் பேச வேண்டும்.. கிடைக்காத சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.  இதுக்காக பலர் தவமிருக்காங்க, தெரிஞ்சிக்கோ.. கிடைச்சதை சரியானபடி உபயோகித்துக் கொள்' என்று அறிவு உபதேசித்தது.  

கூர்மையானேன்.

"ஃபேமலி சப்ஜெக்ட் தான் ஸார்.." என்றேன்.  "கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் சொந்த நலன்கள் தலைத் தூக்கும் பொழுது என்னவாகும் என்கிறதை சொல்ல முயற்சித்திருக்கிறேன்.." என்றேன்.  
 
டிரேயில் கிளாஸ் டம்ளர்களில் ஜூஸ் வந்தது.  கொண்டு வந்தவர் வைத்து விட்டுப் போய் விட்டார்.

"அப்படியா?.." என்று டைரக்டர் இழுத்தார்.  "இது கூட நல்ல தீம் தான்.  ஒரு காலத்தில் குடும்பம் குடும்பமாக சேர்ந்து வாழும் பழக்கம் இருந்தது.  அது நாளாவட்டத்தில் நொறுங்கிப் போய்ட்டது இல்லையா?... அதுக்குக் காரணம் என்னன்னு ஆராயாட்டாலும் ஜனங்களை சுவாரஸ்யப்படுத்தலாம்.. கதாசிரியர்கள் அத்தனை பேரும் கையாண்டு கையாண்டு நைந்து போன சமாச்சாரம்.  அதுனாலே இது வரை யாரும் தொடாத கோணத்திலே யோசிக்கணும்... அது முக்கியம்.  இருக்கவே இருக்கு மசாலா விஷயங்கள்.  அதை அங்கங்கே தூவி லேடிஸ் அட்ராக்ஷனுக்கு வழி பண்ணிடலாம்.   நீங்க சொல்லுங்க.." என்று நிமிர்ந்து உட்கார்ந்தார்.  நான் சொல்லப் போகும் கதையில் அவர் கவனம் குவிந்திருந்தது வெளிப்பார்வைக்கே எனக்கு நன்றாகத் தெரிந்தது.

"அப்பா-- அம்மா..  அவங்களுக்கு இரண்டு பையன்கள். இரண்டு பையன்களுக்கும் அஞ்சு வயசு வித்தியாசம். மூத்தவனுக்கு  மட்டும் திருமணமாகியிருக்கிறது.  அவனுக்கு ஏழு வயதில் ஒரு பெண். பக்கத்துத் தெருலே தான் ஸ்கூல்.  தாத்தா தான் தினமும் கொண்டு போய் விட்டுக் கூட்டி வருவார். .  மருமகள் தான் இந்தக் கதையின் முக்கிய பாத்திரம். சும்மா சொல்லப்படாது, கிட்டத்தட்ட எட்டு வருஷம் கூட்டுக் குடும்பத்தில் கலந்து தன்மயமான பிறகு தான், அவளுக்குத் தன் குடும்பம், தன் சம்பந்தப்பட்டவங்க  தனிங்கற  எண்ணம் வர்றது. வீட்டை விட்டு தன் குடும்பத்தை மட்டும் பிரிச்சிண்டு தனியாப் போக தன்னால முடிஞ்ச அளவு பிரயாசைப் படறா.   இதுக்காக புருஷனை எப்பப் பார்த்தாலும் நச்சரித்துக் கொண்டே இருக்கிறாள்.."

"தனினா எப்படி?..  மாமனார் - மாமியார் மைத்துனன் இவங்க தனி.  மூத்த பையன் அவன் குடும்பம் தனி..  அப்படியா?"  என்றபடி டைரக்டர் தாடையை லேசாகத் தடவி விட்டுக் கொண்டார்.

"எக்ஸாட்லி.. அப்படியே தான்.. " என்று நானும் உற்சாகமானேன்.

 "என்ன விசு சப்ஜெக்ட்டா?" என்றார் டைரக்டர், படக்கென்று.  சட்டுனு அவரே "யார் சப்ஜெக்ட்டா இருந்தா என்ன?  நம்ம சப்ஜெக்ட்டாக்கிடலாம்..  நீங்க சொல்லுங்க.." என்றார்.

ஆளுக்கொரு கிளாஸை எடுத்துக் கொண்டோம். சிலீர் திரவம் உள்ளே போனதில் படபடப்பெல்லாம் போன இடம் தெரியவில்லை.  

நான் உற்சாகத்தோடு தொடர்ந்தேன்.. "கூடம், ரெண்டு ரூம்ன்னு கீழ்த்தளமும் மேல் மாடிலே விசாலமா ரெண்டு ரூம்,  கீழே மேலே  ரெண்டு பாத் அட்டாச்சிடுன்னு நிறையவே வசதியான வீடு தான் அவங்க இருந்தது.  பிதுரார்ஜித சொத்து." என்றேன்.

"ஸீ.. எட்டு வருஷம் ஒண்ணா இருந்த ஃபேமலி.. திடீர்ன்னு வீட்டுப் பெரியவங்களை ஒதுக்கிட்டு குடும்ப சொத்து பெரிய விட்டையும் விட்டுட்டு பிரிஞ்சு போறதுன்னா அந்த மூத்த மருமகள் அப்படி முடிவு எடுக்கறதுக்கு ஒரு வலுவான காரணம் சொல்லணும்.." என்று எதிர்பார்ப்போடு டைரக்டர் இழுத்தார்.

"எஸ்.. அதுக்குத் தான் வர்றேன்.. ஆக்சுவலி அந்த இளைய பையனுக்கு கல்யாணம் ஆயிடறது..  சும்மா சொல்லக் கூடாது,  இத்தனை நாள் தன்னோட பெரிய பையன் போல அவனைப் பார்த்திண்ட அந்த மருமகள்-- அவன் அண்ணி-- அவனுக்குக் கல்யாணம் ஆனதும் வித்தியாசமா அன்னியமா பார்க்கத் தொடங்கறா.."

"நேச்சுரலி.. அவனுக்குக் கல்யாணம் ஆனதும் அவனைக் கவனிச்சிக்கன்னு இன்னொரு பெண் வந்ததும் இயல்பாகவே இது நடக்கும் தான்.   அந்த மருமகள் குடும்பம் பிரியறதுக்கு அடிபோடறதுக்கு வேறே ஸ்ட்ராங்கான காரணம் வேணும்.  யோசிங்க.. " என்ற  டைரக்டர் சட்டுனு  சரஸா பக்கம் திரும்பி, "பெண்கள் விஷயத்தை பெண்கள்கிட்டே கேட்டாத்தான் ஒரு ரியாலிட்டி உண்மை தெரியும்..  சரஸா.. நீ சொல்லு..  இத்தனை காலம் ஒண்ணா இருந்த அந்த மூத்த மருமகள்  பிரிஞ்சி தனியாப் போறதுக்கு என்ன காரணத்தைக் கதைலே வைக்கலாம்?"  என்றார்.


சரஸாவின் நிலைகுத்திய பார்வை ஆழ்ந்து யோசிக்கிற மாதிரி இருந்தது..  திடீரென்று தலையைக் குலுக்கிக் கொண்டவள், "கதாபாத்திரங்களுக்கு பெயர் வைத்து விட்டால் எனக்கு யோசிக்க கொஞ்சம் செளகரியமாக இருக்கும்.." என்றாள்.

"அதுவும் சரி தான்.." என்றார் டைரக்டர்.  என்னைப் பார்த்து
"கேரக்டர்களுக்கு என்ன பேர் வைச்சிருக்கீங்க?.. இப்போதைக்கு சொல்லுங்க..  சினிமாக்கு வேணும்ன்னா அதுக்கேத்தபடி பின்னாடி மாத்திக்கலாம்.." என்றார்.

"எஸ். ஸார்.." என்றேன். பெரிய  மருமகள் பேர்  மாலதி. அவ பொண்ணு அந்தக் குழந்தை பேர் சினேகா.  மூத்த பையன் சீனிவாசன்,   இளையவன் லட்சுமணன்.  மாமனார் பெரியவர் பேர்  மஹாலிங்கம்.  மாமியார் மீனாட்சி அம்மாள்..  வரிசையா சொல்லிட்டேன்..  உங்களாலே ஞாபகம் வைச்சிக்க முடியுமா?" என்று சரஸா பக்கம் திரும்பினேன். குத்து மதிப்பா இருபத்திரண்டு வயது  இருக்கலாம் என்று நினைக்கிற மாதிரியான வாளிப்பான இளமைத் தோற்றம்.  அவள்  புன்னகைத்ததே  வசீகரமா அதற்க்காகவே இறைவன் அவளைப் பூவுலகில் உலா வர அருளிய மாதிரி அம்சமாக இருந்தது.

"நம்ம யூனிட்லே ஸ்டோரி டிஸ்கஷன்னா சரஸா இல்லாம இல்லே விஜி ஸார்.  பாருங்க, இனிமே அவங்க பாத்துப்பாங்க.  கதையை அக்கு வேறா ஆணி வேறா கழட்டி பொருத்தமா பூட்டறாங்களான்னு இல்லையான்னு நீங்களே பாருங்க.." என்றார் டைரக்டர்.

சினிமாக் கதைகள்னா ஸ்கூட்டர் அஸெம்பிளிங் போல என்று நினைத்துக் கொண்டேன்.   சொல்லவில்லை. எப்படியோ கதை நம்மதுன்னு டைட்டில்லே வந்தாப் போதும்.  அதை வைச்சு இன்னும் நாலு படங்களைத் தேத்தலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

நான் சொன்ன கதாபாத்திரங்களின் எல்லா பெயர்களையும் மனசில் பதியற மாதிரி தனக்குள் ஓடவிட்டிருப்பாள் போலிருக்கு.  "எல்லாம் சரி.. ஒண்ணு குறையறதே?.. அந்த இளைய மருமகள் பேரைச் சொல்லலேயே நீங்கள்?" என்று சரஸா என்னைப் பார்த்தாள்.

"அட.. ஆமாம்லே.." என்று அசட்டுச் சிரிப்பில் சமாளித்தேன்.   "அவ பேரு.." என்று நான் சொல்வதற்கு முன்னாலேயே கையமர்த்தினாள் சரஸா.   "அவங்க பேரை பின்னாடி ஆப்ட்டா செலக்ட் பண்ணிக்கலாம்.." என்றாள். "இப்போதைக்கு இளையவள்ன்னு வைச்சிக்கலாம்.."  

நானும் தலையாட்டினேன்.  

"அந்த வீட்டை குடும்ப சொத்துன்னுட்டீங்க..  ஆக, அந்த இரண்டு மகன்களுக்கு தான் சொந்தமாகப் போறது.. க்ளியர் பத்திரம். இல்லையா?"  என்று சரஸா சொல்லும் பொழுதே நான் இடைமறித்தேன்.    "சட்டப்படி அப்படித்தான்.  இருந்தாலும் தன் காலத்திலேயே தன்  இரண்டு மகன்களுக்கும் உரிமையாகிற மாதிரி அந்த வீட்டை எழுதி வைச்சிடலாம்ன்னு பெரியவருக்கு எண்ணம் இருக்கு.  இதை தன் மூத்த மருமகள் கிட்டே ஒரு நாளைக்குச் சொல்லவும் சொல்றார்.."

"அந்தக் காலத்து பெரியவங்களே அப்படித்தான்.  தனக்குன்னு சொத்து இருந்தாலும் சரி, இல்லாட்டாலும் சரி, வளர்த்த மகன்கள் தங்களைக் காப்பாத்துவாங்கன்னு அதீத நம்பிக்கை அவங்களுக்கு.." என்றார் டைரக்டர்.

"ஆனால் அந்த பெரிய மருமகள் மாலதிக்கு மட்டும் இதிலே இஷ்டம் இல்லை.  எல்லாரும் ஒண்ணாச் சேர்ந்து இருப்பது அவளுக்குப் பிடிக்கலே.  இத்தனை நாள் இருந்ததே பெரிசுங்கற எண்ணம் அவளுக்கு. தன் குடும்பம் மட்டும் தங்கள் பாட்டைக் கவனித்துக் கொண்டு தனியா இருக்கணும்ன்னு முடிவா நினைக்கறாள்... அவள்  புருஷனுக்கு இதில் இஷ்டமில்லை என்றாலும் அவனையும் இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக்கற மாதிரி சரி பண்ணி வைத்திருக்கிறாள்".

 "அப்புறம்?.. " என்று டைரக்டர் சுவாரஸ்யமானார்.

"அந்த இளைய மகன் லஷ்மணன் இருக்கானே -- அவனும் தன் அண்ணி மாதிரியே நினைக்கிறான். புத்தம் புதுசா ஒரு வீடு வாங்கிக் கொண்டு மனைவியோடு தனிக் குடித்தனமாய் குஷாலாய் வாழ வேண்டும் என்பது அவன் திட்டம்.."

"சரியாப் போச்சு.." என்றார் டைரக்டர்.  "கதைன்னு ஒண்ணு இருந்தா அது தன்னைத் தானே எழுதிக்கறது பாருங்க.. கஷ்டப்பட்டு நாம எழுதணும்ன்னு  இல்லே.. வாழ்க்கையே கதை தாங்க..." என்றார்.  அந்த அளவுக்கு என் கதையோடு ஒன்றிப் போய் விட்டார் அவர் என்று தெரிந்தது.

நான் உற்சாகமானேன்.. மீதிக் கதையைத் தொடர்ந்தேன்.

"இளையவன் லஷ்மணன் பெண்டாட்டி நல்லா படிச்சவ. வரலாறு பி.எச்டி.. அரசாங்க வேலை. தொல்பொருள் இலாகாலே பெரிய அதிகாரி.  கை நிறைய சம்பளம்.  லஷ்மணனும் பேங்க் ஆபிஸர்.  விறுவிறுன்னு பொருளாதார வசதியில் திக்கு முக்காடறாங்க..  பெரியவனுக்கும் சின்னவனுக்கும் இருக்கற இந்த வித்தியாசம் பெரியவருக்கு பெரிய உறுத்தலா இருக்கு. பெரியவனுக்கு தான் இருக்கற போதே பெரிசா ஏதானும் செய்யணும்ன்னு நினைக்கிறார்.."

டைரக்டர் ஒண்ணும் சொல்லாமல் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

" ஒரு நாளைக்கு பெரிய மருமகள் மாலதியைக் கூட்பிட்டு, 'அம்மாடி.. புது வீடு  ஒண்ணு கட்டிண்டு போகலாம்ன்னு நீ நினைக்கற மாதிரி இருக்கு.  சீனிவாசன் தான் நீ ஆசைப்படறதைச் சொன்னான்.  ஒண்ணு சொன்னா கேப்பியா' என்கிறார்".

மாமனார் என்ன பெரிசா சொல்லிடப்போறார்ன்னு அவரை  அலட்சியமாகப் பார்க்கிறாள் மாலதி.  

"புது வீட்டுக்குப் போக அவசரப்பட வேண்டாம்.  எங்கிட்டே ஆறு லட்சத்திற்கு கொஞ்சம் மேலே  சேமிப்பா  பாங்க்லே இருக்கு.   பென்ஷனும் நிறையவே வர்றது. அதனாலே யாரும் கஷ்டப்பட வேண்டாம்.  எங்கிட்டே இருக்கற பணத்தை வைச்சு வேணுங்கற செளகரியங்களை ஏற்படுத்திக்க இந்த வீட்டையே புதுப்பிச்சிடலாம்.  வீட்டையும் மேல் பகுதி அவனுக்கு, கீழ்ப்பகுதி உங்களுக்குன்னு நான் இருக்கும் போதே பத்திரம் எழுதிடலாம்..  இதை சீனிவாசன் கிட்டே சொன்னேன்.  உங்க இஷ்டம்ப்பான்னு சொல்லிட்டான்.  நீ என்ன சொல்றேம்மா?" என்று கேட்டார்.

ரொம்ப சாதாரணமாத் தான் இதை அந்தப் பெரியவர் சொன்னார்.  இருந்தாலும் மாலதிக்குப் பிடிக்கலே.  அவள் முகம் அஷ்ட கோணலாகி பெரியவரை ஒரு நிஷ்டூரப் பார்வை பார்த்தாள்.  "எத்தனை காலத்துக்கு இப்படி இங்கே வடிச்சு கொட்டிண்டு நா ஏமாளியா இருக்கணும்ன்னு நீங்கள்லாம் எதிர்பார்க்கிறீங்க?.." என்று பதில் கேள்வி போட்டாள். 

பெரியவர் திடுக்கிட்டுப் போனார்.  இப்படியெல்லாம் மாலதி தூக்கி எறிஞ்சு இதுகாறும் பேசினதே இல்லை.  'அதுவும் தன்கிட்டேயா' என்று பெரியவர் துடித்துப் போகிறார்.

"என்னம்மா சொல்றே?"ன்னு வார்த்தை வராமல் தடுமாறுகிறார்.

"இனிமே அந்தப் பேச்சே எடுக்காதீங்க..  புது வீடு கட்டிண்டு நாங்க தனியாப் போறது தீர்மானமான ஒண்ணு" ன்னு அவர் முகத்தில் அறைந்த மாதிரி சொல்லிவிட்டு மூத்த மருமகள் போய் விட்டாள். பெரியவருக்கு ஏன் இப்படிச் சொல்கிறாள் என்று ஒரு மாதிரியாகப் போய்விட்டது.

அவள் எங்க வீடுன்னு இதுவரை இப்படிப் பிரித்தெல்லாம் சொன்னதில்லை. இப்படி அவள் மனம் நொந்து சொல்ற அளவுக்கு இந்த வீட்டில் அவளுக்கு என்ன நேர்ந்தது என்று அலமந்து போகிறார்.  
 
திடுதிப்பென்று ஒரு நாள் "கொஞ்சம் காசு புரட்டணும். எங்க வீட்லே போட்ட இந்த இரட்டை வட செயினை விக்க எங்க அப்பாகிட்டே நாளைக்கு போயிட்டு வரப் போறேன்" என்று மாமியாரிடம் சொல்கிறாள்.

"அது ராசி வந்த செயின் டீ..  எதுக்கு அதை விக்கணும்..  உனக்கு காசு வேணும்னா அப்பா கிட்டே கேளு.. இல்லேனா நீ கூட அவரோட பேங்குக்கு போய்ட்டு வா. எடுத்துக் கொடுப்பார்.." என்கிறாள் மாமியார்.

"அது  கல்யாணத்துக்கு எங்கப்பா எனக்கு போட்ட செயின். முழுசா என்னோடது.  என்ன வேணாலும் செய்வேன்.  இதைப் பத்தி உங்ககிட்டே சொல்லியிருக்கவே கூடாது.. ஏதோ மனசு கேக்காம சொல்லிட்டேன்.. ஆளை விடுங்கோ.." என்கிறாள் மாலதி.

மாமியாருக்கு ஒண்ணுமே புரியலே. 'பெத்த பொண் மாதிரி தன்கிட்டே ஒட்டிண்டு இருக்கற இவளுக்கு என்ன  பைத்தியம் கியித்தியம் பிடிச்சுடுத்தா?' என்று கண் கலங்குகிறார்.

"குட்..." என்ற டைரக்டர் "வெல் ரிட்டர்ன் ஸ்டோரி..  ஆனா இன்னும் இதை ஷேப் பண்ணறதில்லே தான் இருக்கு. முரட்டுத்தனமா கொண்டு போகாம மென்மையா மேற்கொண்டு உருவாக்கணும்.  சரியா?" என்று எதற்காகவோ அனுமதி கேட்கிற மாதிரி என்னைப் பார்த்தார்.

"சொல்லுங்க, ஸார்.." என்றேன்.

"எனக்கு ஒண்ணு தோண்றது.  இதுக்கு மேலே இந்தக் கதையை எப்படி நீங்க கொண்டு போயிருக்கீங்கங்கறது ஒரு பக்கம் இருக்கட்டும்.  அடுத்த மீட்லே நாம சந்திக்கறக்கறச்சே அதைப் பாத்துக்கலாம். நீங்க எழுதியிருக்கிற கதையையும்  கொடுத்திட்டுப் போங்க... இதுக்கு நடுவே இது வரை நீங்க சொல்லியிருக்கற கதையோட  உங்கக் கதையையும் படிச்சிட்டு சினிமா பண்ணறதுக்கு ஏத்த மாதிரி சரஸா யோசிக்கட்டும்.  நம்ம அடுத்த மீட்லே நமக்கெல்லாம் சரஸா இந்தக் கதையோட நீட்சியை  சொல்லுவாங்க..  உங்க கதைத் தொடர்ச்சியையும் ஒருபக்கம் வைச்சிண்டு  அலசலாம்.  எது நல்லா சினிமாக்கு ஏத்த மாதிரி இருக்கோ, அதைத் தேர்ந்தெடுத்துக்கலாம்..." என்று சொன்ன போது எனக்கு லேசா ஏமாற்றமாக இருந்தது.   எவ்வளவு ஈஸியா கதை எழுதறவனை இவங்கள்லாம் ஏமாத்தறாங்கன்னு ஒரு பக்கம் எரிச்சலாகவும் இருந்தது.

"இந்தக் கதை இறுதி ஷேப்பை அடையற வரை உங்க ஒத்துழைப்பு தேவை.. நீங்க புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கிறேன்.." என்று என்னைப் பார்த்துச் சொன்னார் டைரக்டர்.  "இது கோடிக்கணக்கிலே முதலீடு பண்ற ஒரு தொழில்..  எல்லாக் கஷ்டத்தையும் சுமந்திண்டு நாம படம் பண்றோம்.  ஸ்கீரின்லே ப்ளே பண்ணும் பொழுது போறவன், வர்றவன் எதையாவது சொல்லி படத்தைக் கவுத்துடக் கூடாது.  முக்கியமா, இந்தப் பத்திரிக்கைகாரனுங்க..  அவங்களுக்கு ஸ்பெஷல் ஷோ போட்டுக் காட்டி உபசாரம்லாம் பண்றோம் தான்.  இருந்தாலும் அவங்களுக்குன்னே இருக்கற பத்திரிகை விற்பனைக்காகன்னு எதையாவது எழுதி உசுப்பேத்துவானுங்க..  அதையெல்லாம் சமாளிக்கணும்.. ம்.. என்ன தெரிஞ்சுதா?" என்று என் முகபாவத்தைக் கவனிக்கற  தோரணைலே உன்னிப்பா என்னைப் பார்த்தார் டைரக்டர்.

"புரியறது ஸார்.." என்றேன் ஈனஸ்வரத்தில்.

"சரஸா சின்னப் பொண்ணா இருக்காளேன்னு பாக்காதீங்க.  ஸ்கிரீன் ப்ளேலே கில்லாடி. இது புதுசு இல்லே..  வழக்கமா ஒவ்வொரு படத்துக்கும் நாங்க செய்யறது தான்..  மூலக்கதை உங்களது தான். அதைப் பத்திக் கவலையே படாதீங்க..   இதான் கதைன்னு தீர்மானிச்சிட்டோம்னா படத்தோட டைட்டில்லே உங்க பேரைத் தான் போடுவோம்.  சரியா?"  என்றார்.

இப்போத்தான் லேசா தெம்பு வந்தது எனக்கு.. "சரி ஸார்.." என்றேன், மனசு பூராவும் சந்தோஷம் பூத்துக் குலுங்க.

"இந்த ஃபைலைக் குடுத்துட்டுப் போங்க..  உங்க அட்ரஸ், ஃபோன் நம்பர் எல்லாம் குறிச்சித் தந்திடுங்க.." என்றவர் பார்வை சரஸா பக்கம் திரும்பியது..  "சரஸா.. ஸார் கிட்டே நமக்கு வேணுங்கறதெல்லாம் வாங்கிக்கோங்க்க..  மீதிக் கதையை ஸ்கிரீனுக்கு ஏத்த மாதிரி தயார் பண்ணிட்டீங்கன்னா,   ஸாரை வைச்சிண்டு நாம எல்லாத்தையும் முடிச்சிடலாம்..  சரியா?"  என்று எழுந்திருந்தார்.,

"சரி ஸார்.." என்றோம் சரஸாவும் நானும் கோரஸாக.

"அப்போ நான் வரட்டுமா?" என்று வழக்கமான இடது கையசைப்போட டைரக்டர் கிளம்பி  விட்டார்.

"நீங்க கொஞ்சம் இருங்க, ஸார்.." என்று சரஸா என்னைப் பார்த்து புன்னகைத்தாள்.   மனசுக்கு ஒத்தடம் கொடுக்கிற மாதிரி வெகு இதமாக இருந்தது அது.

(தொடரும்)                                                   
                     

60 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம். அனைவருக்கும் நல் ஆரோக்கியத்துக்கான
  வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இணைந்து பிரார்த்திப்போம்.  வாங்க வல்லிம்மா...    வணக்கம்.

   நீக்கு
 2. காலை வணக்கம் அனைவருக்கும்.

  பாதிக்கதை ஏற்கனவே படித்த மாதிரி இருக்கே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நெல்லை..  வணக்கம்.  பாதிக்கதை படித்த மாதிரி இருக்கா?  தமிழக எழுத்தாளர்களின் பொதுக்கதை என்பதாலா?!!

   நீக்கு
  2. நெல்லை, நீங்க ஏற்கெனவே படித்த கதையை விரிவாக்கம் செய்து எழுதப் போவதாக ஜீவி சார் ஏற்கெனவே சொல்லி இருந்தாரே! இது அவர் கோணம். எல்லோரும் நல்லவர்களே! மூத்த மருமகள் தான் தப்பாய்ப் புரிந்து கொள்கிறாள். என்னும்படியான கோணம். அவள் பிறந்த வீட்டிற்குப் போகையில் அவள் அப்பா எடுத்துச் சொல்லித் திருத்துவதாக எழுதணும் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். இதிலே எப்படி வரப் போகிறது என்பது அடுத்த வாரம் புரியும்/தெரிய வரும்.

   நீக்கு
 3. சரஸா படம் என்று கேஜிஜி சார் போட்டிருக்கிறாரே.... கண்களில் வில்லத்தனமா, அப்பாவித்தனமா இல்லை ஆத்திரமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெயரில் இருப்பதால் படத்தில் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டாரோ!

   நீக்கு
  2. அது சரசாவா அல்லது மாலதியா அல்லது காஞ்சனாவா ??

   நீக்கு
  3. மாலதி/காஞ்சனா இல்லை. நவநாகரிகமாக சின்னப் பெண்ணாக இருப்பதால் டைரக்டரோட செக்ரடரி சரஸா தான் அது. மாலதியோ/காஞ்சனாவோ இப்படித் தலையை விரிச்சுப் போட்டுக்கொண்டு இருக்க வாய்ப்பில்லை.

   நீக்கு
  4. இளைய மருமகளுக்குப் பெயர் இன்னமும் சூட்டவில்லை. ஆகையால் அவள் பெயர் காஞ்சனா என எடுத்துக்க முடியாது. மேலும் கண்ணழகி காஞ்சனா என்னும் தலைப்பு வேறே! ஆகவே யோசிக்கணும். மேல் கருத்தில் காஞ்சனா தான் இளைய மருமகள் என்னும் அர்த்தத்தில் எழுதிட்டேன். :(

   நீக்கு
  5. கண்களில் வில்லத்தனமா, அப்பாவித்தனமா இல்லை ஆத்திரமா?//

   ஹாஹாஹா நெல்லை அந்த சரஸா 22 வயசு...என்னடா இது இந்தக் கதைல ஒரு லவ் கூட இல்லையேனு..லவ் டூயட் இல்லாத கதையான்னு!!!!.டூயட் எங்க வைக்கலாம்னு அதாவது லவ் டூயட்..

   அதனால ஒரு வேளை இந்த சரஸா கதையை மாத்திடுவாளோன்னும் தோணுது..!!!

   கீதா

   நீக்கு
  6. கீதா ரங்கன்...உங்க கற்பனையை நான் அனுமானித்தால், சரஸா, கதாசிரியர் மீது காதலாகி, அந்தப் படத்தை வேறு ஒரு டைரக்டர், டைரக்ட் பண்ணும்படி ஆக்கி, இந்த டைரக்டருக்கு கல்தா கொடுப்பாருன்னு நினைக்கிறீங்களா? ஹாஹா

   நீக்கு
 4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையும் ஆரோக்கியம் மேலோங்கித் தொற்றைக் குறித்த அச்சம் நீங்கி சுகமான வாழ்வு வாழப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 5. இரட்டை வடம் சங்கிலியை விற்பதாக வந்ததுமே கதை புரிந்து விட்டது. ஆனால் ஜீவி சார் சொல்லி இருக்கிறாப்போல் வசதியான மாமனார்/மாமியாரோ, இரண்டாவது பிள்ளை/மருமகளோ இல்லை. மொத்தக் குடும்பத்தையும் தாங்கியது கடைசிவரை மூத்த பிள்ளையும் மருமகளுமே! ஜீவி சாரால் முடிந்தால் இப்படி ஒரு கோணத்தில் சிந்திக்கட்டும். மூத்த பிள்ளை என்றால் குடும்பப் பொறுப்பை அவன் தான் ஏற்கணும், மற்றவங்களுக்கும் சேர்த்து அவன் தான் செய்யணும் என்னும் நினைப்புப் பெற்றோரிடம் இருந்த கால கட்டம். இப்போல்லாம் வாய்ப்பே இல்லை. ஒரே பிள்ளை/ஒரே பெண் தானே! அல்லது இரண்டு பெண்கள்/இரண்டு ஆண்கள். இப்படித்தான்.

  பதிலளிநீக்கு
 6. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 8. கீதாசாம்பசிவம் எழுதிய கதை மாதிரி இருக்கே! என்று நினைத்தேன். கீதாவும் சொல்லி விட்டார்.
  சினிமாவுக்கு கதை சொல்வதாக அழகாய் கதை சொல்லி வருகிறார் ஜீவி சார்.
  சரஸா எப்படி கதையை கொண்டு போகிறார் என்று படிக்க ஆவல்.

  //சரஸாவின் நிலைகுத்திய பார்வை ஆழ்ந்து யோசிக்கிற மாதிரி இருந்தது.. திடீரென்று தலையைக் குலுக்கிக் கொண்டவள், "கதாபாத்திரங்களுக்கு பெயர் வைத்து விட்டால் எனக்கு யோசிக்க கொஞ்சம் செளகரியமாக இருக்கும்.." என்றாள்.//

  சரஸாவின் உண்மைகதையும் இந்த கதை போல் இருக்குமோ!

  பதிலளிநீக்கு
 9. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 10. பாதி கதையை படிக்கும் போது நினைவு வந்தது.கீதாமா கதையாச்சே என்று.
  ஜீவி சார் அதைத் திரைக்கதையாகச் செய்கிறாரா.
  கீதா சொல்வதைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது.

  நல்ல திரைக்கதை உருவாகிறதோ. இல்லை
  சரஸா மேடம் கதையில் புதிய கதையே வருகிறதோ.

  இதில் காஞ்சனா பாத்திரம் வேறு.
  வெறித்த பார்வையுடன் படம் அழகாக இருக்கிறது.
  உணர்ச்சிகள் அழகாகச் சித்தரிக்கப் படுகின்றன.
  அது வல்லமை கொண்ட எழுத்தாளர் திறன் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் சகோதரரே

  சகோதரர் ஜீவி அவர்கள் எழுதிய கதை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது ஒரு மூத்த மருமகளின் நிலைப்பாட்டை அழகாக விவரித்துள்ளார்.சினிமாவுக்கென்று கதை எழுதுபவர்களின் நிலையும் புரிந்து கொண்டேன். சரஸாவின் வாழ்க்கை கதையும் சற்று இதில் இணையுமோ என்ற சந்தேகம் வருகிறது. பார்க்கலாம்... அடுத்த வாரம் இன்னமும் விறுவிறுப்பாக முடியும் என நினைக்கிறேன். காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 12. டைரக்டர் சரசா என்ன சொல்லப் போகிறார்...? ஆவலுடன்...

  பதிலளிநீக்கு
 13. புதிய களம். கொஞ்சம் யூகிக்க முடிந்தாலும் என் யூகத்தை ஒதுக்கி விட்டு கதாசிரியர் சொல்லப் போவதற்காக காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 14. கனமான கதைக் களம்..
  ஜீவி அண்ணா அவர்களுக்கே இதெல்லாம் வச்ச்மாகும்.. பார்க்கலாம் அடுத்த வாரம்...

  பதிலளிநீக்கு
 15. ஜீவி அண்ணா கதை நன்றாகச் செல்கிறது. கீதாக்காவின் கதையை வேறுகோணத்தில் சினிமாவுக்க்குக் கதை சொல்வது போல் எழுதியிருக்கீங்களோ? இப்பத்தான் கதை அவுட்லைனே ஆரம்பிச்சிருக்கு சரஸா என்ன சொல்லப் போகிறாள் என்று பார்ப்போம்.

  //இந்த ஒன்லைன் விஷயம் சினிமா பாஷை//

  அதே அதே. இதை வைத்துக் கொண்டு இப்படி ஒன்லைனை எங்கிருந்தேனும் அபேஸ் செய்து அதில் காது மூக்கு எல்லாம் ஒட்டி தங்கள் கதை என்று சொல்லிக்கொண்டு சில டைரக்டர்கள் படம் பண்ணுகிறார்கள் என்றும் கேட்டதுண்டு. பாவம் எழுத்தாளர்கள். இதைப் பற்றி கே எஸ் ரவிக்குமார் என்ன சொல்லியிருந்தார் என்பதையும் சொல்கிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
 16. "கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் சொந்த நலன்கள் தலைத் தூக்கும் பொழுது என்னவாகும் என்கிறதை சொல்ல முயற்சித்திருக்கிறேன்.."//

  இது நல்ல தீம். குடும்பம் பிரிவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. நிறைய கோணங்களில் எழுதலாம். அதுவும் இப்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்பவும் கூட, பல தளங்களில். இங்கு டைரக்டர் வலுவான காரணம் வேண்டும் நு கேட்கிறார்.

  வலுவான காரணம் என்றில்லாமல்....பார்வையாளர்களுக்கோ அல்லது வாசகர்களூக்கோ கூடத் தோன்றும், சில்லி இப்படியான காரணத்திற்கா பிரியறாங்க என்று....இதுக்கெல்லாம் கூடப் பிரிவாங்களான்னு ஆனால் அந்த முடிவை எடுக்கும் கேரக்டர் அதுதான் அங்கு முக்கியம்...சில்லியான காரணம் கூட அந்தக் கேரக்டருக்கு வலுவாகத் தோன்றலாம் அதுவும் அந்த நிமிடத்தில் அல்லது அந்தச் சூழலில், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அப்புறம் அதுவே கூட தப்பு செய்துவிட்டோமோ என்றும் வருந்த வைக்கலாம் பின்னாடி...பேசித் தீர்த்திருக்கலாமோ என்றும் தோன்றும் வாசகர்களுக்கும் கூட..

  எனவே இதை ஒட்டி பல கோணங்களில் எழுதலாம் இல்லையா?

  கீதா

  பதிலளிநீக்கு
 17. விசு குடும்பக் கதைகள் எடுத்திருக்கிறார் அது போல கஜேந்திரன் எனும் டைரக்டர், வி சேகர் என்பவர் நிறைய எடுத்திருக்கிறார் அவர் அப்படியானவைதான் எடுப்பார் என்றும் எங்கோ வாசித்த நினைவு. படங்கள் பார்க்காததால் டக்கென்று நினைவுக்கு வரலை பெயர் எல்லாம்.

  கீதா

  பதிலளிநீக்கு
 18. //மூலக்கதை உங்களது தான். அதைப் பத்திக் கவலையே படாதீங்க.. இதான் கதைன்னு தீர்மானிச்சிட்டோம்னா படத்தோட டைட்டில்லே உங்க பேரைத் தான் போடுவோம். சரியா?" //

  கண்டிப்பாக இது எழுத்தாளர்களுக்கு மனம் நொந்து போக வைக்கும் ஒன்று. சுஜாதாவும் வருத்தப்பட்டிருக்கிறார். அட்லீஸ்ட் திரைக்கதை எழுத்தாளர்களே எழுதிவிட்டால் நல்லது சுஜாதா திரைக்கதையும் எழுதியிருக்கிறார். இல்லை கதை மட்டும் என்றால் கே எஸ் ரவிக்குமார் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.

  அவர் படத்திற்கான கதைகள் எல்லாமே வெளியில்தான் வாங்குவாராம். அவர் எழுதுவதில்லை என்றும். ஆனால் அப்படிக் கதை வாங்கி அதில் ஒன் லைன் மட்டும் எடுத்துக் கொண்டு மீதி எல்லாம் இவர்/இவர் டீம் வடிவமைக்கும் கதையாகத்தான் இருக்குமாம். ஆனால் திரையில் கண்டிப்பாக எழுத்தாளரின் பெயர் போட்டுவிடுவேன் என்று...

  ஆனால் இதுவும் எழுத்தாளருக்கு கஷ்டமாக இருக்காதோ? ஒரு வேளை பணம் கிடைப்பதால் இருக்கலாம் இருந்தாலும் அப்படத்தின் கதையைத் தன் கதை என்று மகிழ்வுடன் சொல்லி கொள்ள கஷ்டமாக இருக்குமிலையா..

  நான் என்னை அப்படி சும்மா (பெரிய எழுத்தாளரா என்ன?!!!) கற்பனையில் அந்த எழுத்தாளரின் இடத்திலிருந்து யோசித்தேன். கண்டிப்பாகக் கற்பனையில் கூட மனம் உடன்படவில்லை.

  கீதா

  பதிலளிநீக்கு
 19. கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் சுயநலம் வந்துவிட்டால் கண்டிப்பாகப் பிளவுதான்.

  வீடு பூர்வீக வீடாக இருக்கும் பட்சத்தில், அல்லது மாமனார் மாமியார் வீடாக இருக்கும் பட்சத்தில், பிள்ளைகள் தனி தனியாகப் போவதற்குப் பதில் அந்த வீட்டையே கொஞ்சம் கூடுதல் கட்டி - எப்படியும் வெளியில் தனியாக வீடு கட்ட பணம் கொடுத்துதானே ஆகணும். இது அதைவிடக் கம்மியாகத்தான் செலவாகும்.... ஒரு போர்ஷனில் பெரியவர்கள், மற்ற போர்ஷன்களில் பிள்ளைகள்...என்று இருந்தால் அவரவர் குடும்பம், அதே சமயம் பெரிவர்களையும் ட்ர்ன் போட்டு பார்த்துக் கொள்ளலாம் (இதற்கும் புரிதல் வேண்டும்) இவர்களுக்குமே ஏதேனும் ஒத்தாசை வேண்டுமென்றால் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளலாம்....இதில் பல சௌகரியங்கள் உண்டு. ஆனால் எல்லாமே மனித மனங்களின் புரிதலில்தான் இருக்கிறது.

  இது எனக்கு அடிக்கடி தோன்றும் ஒன்று.

  முடிவு கொஞ்சம் யூகிக்க முடிகிறது என்றாலும் ஜீவி அண்ணா எப்படி முடிக்கப் போகிறார் என்று ஆவல்...எதிர்பார்ப்பு. வழக்கமானதாக இல்லாமல் வித்தியாசமாக என்ற எதிர்பார்ப்புடன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தி/கீதா, வட மாநிலங்களில் நீங்கள் சொன்ன மாதிரித் தான். பூர்விக வீடு இருக்கும். பெற்றோர் ஓர் அறையில் இருப்பார்கள். பிள்ளைகளுக்கு அந்த வீடு அவரவர் குடும்பத்திற்கு ஏற்பப் பிரித்துக் கொடுத்திருப்பார்கள். தனிச் சமையலறையும் இருக்கும். பொதுவான சமையலறையும் உண்டு. இது விசேஷ நாட்களில் அனைவரும் கூடிச் சமைக்கவென ஏற்படுத்தப்பட்டிருக்கும். மொத்த வருமானத்தையும் குடும்பத்தின் மூத்த சகோதரர்/அல்லது தந்தை வாங்கி அவரவர் குடும்பத்திற்கு ஏற்பச் செலவுத் தொகையைக் கொடுப்பார். வாரம் ஒரு பிள்ளை வீட்டில் பெற்றோர் சாப்பிடுவார்கள். சிலர் தனியாகச் சமைத்துக் கொள்வதும் உண்டு. திருமணம் போன்ற விசேஷங்களுக்குப் பொதுச் செலவு. கணக்கெல்லாம் துல்லியமாக இருக்கும். அவரவர் திறமைக்கு ஏற்ப வேலையோ/வியாபாரமோ செய்யலாம். வியாபாரம் எனில் மொத்த லாபம் பிரித்துக் கொடுப்பாங்க. இப்போவும் அங்கே கூட்டுக் குடும்பங்கள் அதிகம் காண முடியும்.

   நீக்கு
  2. பூர்விக வீடு அதைக் கட்டிக் கொடுத்து இரு பிள்ளைகளுக்கும் பங்கு என்னும் பட்சத்தில் எந்த மருமகளும் தன் கைக்காசைப் போட்டுச் சின்னதாய் வீடு கட்டிக் கொண்டு போகச் சம்மதிக்கவே மாட்டாள். அதுவும் நகையை எல்லாம் விற்றுக் கட்டிக் கொண்டு போவது எனில் யோசிப்பாள். நான் எழுதிய கோணமே வேறு. பல பெற்றோர்கள் சுயநலமாக மூத்த பிள்ளையை/மருமகளை மட்டும் தனிமைப்படுத்திப் பொறுப்பை எல்லாம் சுமத்திவிட்டுச் சின்னவர்களைப் போற்றுவது பற்றி. அதிலும் சில பெற்றோர்களுக்கு மூத்த மருமகள் எப்படியோ சமாளித்து விடுகிறாள் என்றால் கோபமே வந்திருக்கு! காரணமே இல்லாமல் தூற்றுவார்கள். உலகில் மனிதர்கள் பல விதம்! பல குடும்பங்களிலும் மூத்த பிள்ளையைப் படிக்க வைக்காமல் கிடைத்த வேலையில் சேரச் சொல்லி அவர் சம்பாத்தியம் மூலம் மற்றப் பிள்ளை/பெண்களை முன்னுக்கு வர வைப்பார்கள். மூத்த பிள்ளை திருமணம் ஆனாலும் மனைவியோடு சேர்ந்து குடும்பத்துக்காக உழைக்க வேண்டும். அவங்க குழந்தைகள் சாதாரணப் பள்ளியில் படிக்க மற்றப் பிள்ளைகளின் குழந்தைகளுக்கு நல்ல படிப்புக் கிடைக்கும். வசதி வந்ததும் அண்ணனையும்/அண்ணன் மனைவியையும் மறந்து விடுவார்கள். இங்கே இந்த வளாகத்தில் கூட அப்படியான ஒரு குடும்பம் வாழ்கிறது. அவங்க சொல்லுவதை எல்லாம் எழுதினால் ரத்தக்கண்ணீர் வரும்! :(

   நீக்கு
  3. ஆமாம் கீதாக்கா முதல் கருத்து ஆம் வட இந்தியாவில் நிறைய கூட்டுக் குடும்பங்கள் இப்பவும் பார்க்கலாம்.

   கீதாக்கா, இரண்டாவது கருத்தில் ஆம் பெரும்பாலும் மூத்த பிள்ளைகள் தான் கடைசி வரை பொறுப்புகளை சுமக்க வேண்டி வரும் அதிலும் அவர்களின் உழைப்பில் வாழ்ந்த சிறியவர்கள் கடைசியில் அவர்களைக் கொஞ்சம் கூட அட்லீஸ்ட் ஒரு வார்த்தை கூட அவர்களால் தான் தாங்கள் முன்னுக்கு வந்தோம் என்ற அந்த ஒரு வரி கூடச் சொல்ல மாட்டாங்க. அதிலும் குறைகள் தான்...

   மனித மனம் எப்பவுமே பாராட்டை விட குற்றம் சொல்லுவதைத்தான் விரும்பும் நெகட்டிவ் எண்ணங்கள் டக்கென்று பற்றிக் கொள்ளும்.

   கீதா

   நீக்கு
 20. கண்ணழகி என்பதைப் பார்த்ததும் என் செல்லம் நினைவுக்கு வந்துவிட்டாள்!!! ஹாஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி

   எனக்கும் கண்ணழகி என்று படித்ததும் உங்கள் செல்லத்தின் நினைவு வந்தது. உங்கள் செல்லம் எப்படி இருக்கிறாள்.? நலமா? கொஞ்ச நாட்களாக அவளை உங்கள் பதிவுகளில்/கருத்துகளில் எங்கும் நீங்கள் கூறவில்லையே என நினைத்தேன்.

   நேற்று உங்கள் வெள்ளரி தோசை பதிவில், என் கருத்துரைக்கு பதில் தந்தமைக்கு நன்றி. அதில் உங்கள் கருத்துரைக்கு பதில் கருத்தாக நானும் ஒன்று எழுதியிருந்தேன். நீங்கள் கவனிக்கவில்லை. நேரம் கிடைக்கும் போது பாருங்கள். நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  2. காலையில் கீதா ரங்கன்(க்கா) நினைவுதான் தலைப்பைப் படித்ததும் நினைவுக்கு வந்தது.

   நீக்கு
  3. நானும் கண்ணழகி என்றதும் உங்கள் செல்லத்தைத் தான் நினைத்தேன் தி/கீதா. காலையில் அதைச் சொல்வதற்குள் நேரம் ஆகிவிட்டது.

   நீக்கு
  4. ஹாஹாஹா பாத்தீங்களா எல்லாருக்கும் நினைவு வ்னதிருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். நெல்லையும் கீதாக்காவும் கண்ணழகி என்றதும் கீதாவின் கதையாக இருக்குமோன்னு நினைச்சுடப் போறாங்களேன்னும் தோன்றியது ஹாஹாஹா

   ஹூம் சைக்கிள் காப்ல கூட (க்கா) வ விட மாட்டார் போல இந்த நெல்லை!!! டாம்!!

   கீதா

   நீக்கு
  5. கமலாக்கா உங்கள் கருத்தை பார்த்துவிட்டேன்

   வெள்ளரிக்காய் தோசை செய்து பார்த்ததற்கு மிக்க நன்றி. நன்றாக இருந்ததா? பிடித்திருந்ததா?

   ஸ்வீட் தோசையும் அப்புறம் செஞ்சு பார்த்து சொல்லுங்க...மிக்க நன்றி கமலாக்கா.

   கருத்து போகவே இல்லை அங்கு இங்கும் போகவில்லை மீண்டும் மீண்டும் முயன்றும். இப்ப போகிறதா என்று பார்க்கிறென்..

   மிக்க நன்றி கமலாக்கா

   கீதா

   நீக்கு
 21. எத்தனை கோணங்கள் எத்தனை பார்வைகள்?
  கண்ணழகியின் கதையை வாசித்து தங்கள் மன எண்ண ஓட்டங்களைப் பதிந்த அன்பர்களுக்கு நன்றி.

  கதையின் அடுத்த பகுதியை கிட்டத் தட்ட கொஞ்சமானும் நெருக்கமாக யார் யூகிக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 22. சரஸாவின் படம் என்று கேஜிஜி சார் போட்டிருக்கிறாரே என்ற கேள்விக்கு ---

  அது சரஸாவா அல்லது மாலதியா அல்லது காஞ்சனாவா --

  என்ற கேஜிஜியின் பதில் எனக்குப் பிடித்துப் போனது.

  ஒரு கலைஞனின் சமத்காரமான வெளிப்பாடு இது.

  இணைய எழுத்துக்கள் பல்வேறு சிறப்புகளில் பத்திரிகை பிரசுரங்களை விட சிறப்பு பெறுகின்றன.

  ஜெயராஜிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு உடனே பதில் பெற வாய்ப்பிருந்திருந்திருக்கிறதச்?

  சரியான படி உபயோகித்துக் கொண்டால் சந்தேகமில்லாமல் இணைய காலம் எழுத்துத் துறைக்கு ஒரு பொற்காலம் தான்..

  பதிலளிநீக்கு
 23. அனைவருக்கும் முகம் மலர அன்பான காலை வணக்கங்கள். தொற்று நீங்கி மக்கள் நலமாய் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 24. இந்த கதை படிக்கும் பொழுதே கீதாம்மாவின் கதை என்று தோன்றியது. கீதாம்மாவின் கதையில் வருவது போல நிஜத்திலும் பார்த்துள்ளேன். இங்கு நம்மிடையே நல்ல மருமகள்களும் உண்டு...மாறாகவும் உண்டு. கீதாம்மாவின் கதையை தழுவி வேறு கோணத்தில் எழுதும் பொழுது , அந்த இயக்குனர் எழுத்தாளரின் கதையை தான் நினைத்தது போல மாற்றியமைப்பது போல இல்லையா? ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கிறது. Individuality பறி போகிறது அல்லவா? இன்று படித்த கதை எந்த வகையிலோ தனது தனித்துவத்தை சிறிது இழந்ததாகவே தோன்றுகிறது.
  மதிப்பிற்குரிய ஜீ.வி அவர்கள் தன்னுடைய கோணத்தில் தன் கதையை கொடுத்திருக்கிறார் என்று நினைத்துக்கொள்ளலாம். மருமகள் தன் ரெட்டை வட சங்கிலியை விற்கும் அந்த காட்சிகளில் கீதாம்மாவின் கதையில் வந்த காட்சிகளை அப்படியே இங்கு கொண்டு வந்து திணித்திருப்பது போல தோன்றியது. தன் கதைக்கு ஏதுவாக , அந்த கதாபாத்திரத்தினை வேறு காட்சிகளில் வெளிக்கொண்டு வந்திருக்கலாம் அல்லவா? இந்த கதை மூலம் அவர் சொல்ல வருவதென்ன? இப்படித்தான் வேறொருவர் கதையை தான் நினைத்தது போல மாற்றுகின்றனர் என்பதா?
  ஒரு கதை எழுத்தாளரின் படைப்பு. அது கதையாகவே இருப்பினும் படிப்பவர்க்கு அது நிஜம். பல கோணங்களில் சிந்திப்பது தவறில்லை. அங்கு நிஜம் செத்துவிடவேண்டாம் அல்லவா? இதையே "Post Modernism " நமக்கு "center is not center but corner is center" என்கிறது. இதன் அடிப்படையில் தான் ராமாயணத்தில் வரும் ராவணனை , அவனது கோணத்தில் நல்லவன் என சொல்கிறது . அப்படி சொல்வதோடல்லாமல் ராமனை நெகடிவாக சித்தரிக்கிறது. பூர்வ கதையை சிதைக்காமல் நல்ல பல புதிய ஆரோக்கிய கதைகள் வரவேண்டும் என்பது என் கருத்து. இக்கதையில் வரும் காட்சிகள் அப்படியே கீதாம்மாவின் கதையை பிரதிபலிக்காமல் இருந்திருந்தால் இக்கதையும் தனித்துவம் பெற்றிருக்கும். நான் கூறிய கருத்தில் பிழையிருப்பின் மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிழை எல்லாம் இல்லை. சரியான கோணத்தில் அலசல். இங்கே எல்லோருமே உண்மைக்கதையைத் தான் அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம்னு சேர்த்து எழுதுகிறார்கள். நம்ம தம்பி துரை கூட எழுதுவார். ரேவதி எழுதுவாங்க. அவங்க எழுதுவது பலவும் நமக்குள் திகைப்பை ஏற்படுத்தும். ஆனால் நான் எழுதினது மட்டுமே ஏன் இப்படி எனக் கேட்கப் படுகிறது. :))))

   நீக்கு
  2. எந்த உண்மை நிகழ்வின் பாதிப்பும் இல்லாமல் கதை ஏதும் இல்லை. ஆனால் அந்த உண்மையை வைத்து கதை பின்னும் அழகே வேறே.
   உண்மையை அப்படியே எழுதினால் அதற்கு பெயர் கதை அல்ல. கதை என்பதற்கு அடையாளம் அதோடு சொந்த கற்பனை கல்ச்க வேண்டும்

   பாலும் டிகாஷனும் கலந்தால் தான் காப்பி. அது போலத் தான்.

   நீக்கு
 25. வானம்பாடி அவர்களே,

  கீதாம்மா எழ்திய பாசவலை என்ற நேரேஷன் அவர் எழுயிய கதை அல்ல. அவருக்குத் தெரிய வந்த ஒரு நிகழ்வைப் பற்றி எழுதி அதற்கு உண்மைக் கதை என்று பெயரிட்டிருக்கிறார்.

  தெருவில் பார்த்த ஒரு விபத்தை ஒருவர் இந்த விபத்திற்குக் காரணம் இந்தக் கார்க்காரன் என்பது மாதிரி இது. பொதுவாக இந்த மாதிரி விபத்துகளைப் பற்றி தெரிந்த நான்
  "விபத்தைப் பார்த்தால் அந்த ஸ்கூட்டர் காரனும் காரணமாய் இருப்பான் என்று தெரிகிறது" என்கிறேன். இவ்வளவு தான் இரண்டு பேருக்கும் இருக்கும் வித்தியாசம்.

  அந்த விபத்து பற்றிய வேறுமாதிரியான பார்வை எனக்குண்டு. அதைப் பற்றி கதையாக எழ்துகிறேன் என்று அவரிடம் சொல்லி விட்டுத் தான் இந்தக் கதையை எழுதியிருக்கிறேன்.
  இரட்டை வடம் செயின் எல்லாம் இந்தக் கதையில் வருவதற்குக் காரணம், அவர் எழுதிய உண்மை நிகழ்வின் தத்ரூபம் இந்தக் கதையில் வருவதற்கான தேவை இருபதால் தான்.

  அவர் எழுதியிருப்பது அவருக்குத் தெரிந்த உண்மை நிகழ்வு என்றால்
  நான் எழுதிதிருப்பது அதற்கு பொருத்தமான வேறுபட்ட கற்பனை என்ற தெளிவு உங்களுக்கு இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை நிகழ்வைக் கதையாக்கியவர்கள் பலர் இருக்கிறார்கள். நான் எழுதியது மட்டும் ஏன் உங்களுக்கு உறுத்தலாக இருக்கிறது என்பது புரியவில்லை. அந்த மாமனார்/மாமியாரைப் பொல்லாதவர்களாகக் காட்டியதா? அவர்களை நீங்கள் நல்லவர்களாகக் காட்டிக் கொள்வது பற்றி எனக்கு ஒன்றும் ஆக்ஷேபணையே இல்லை. ஆனால் உண்மையை மறைக்க முடியாது. மறுக்கவும் முடியாது. தெருவில் விபத்து பற்றிச் சொல்வதற்கும் இதற்கும் எத்தனையோ வேறுபாடுகள் உண்டு. உங்கள் பார்வை வேறாகவே இருக்கட்டும். ஆனால் உண்மை அதுவல்ல என்பது அனைவருக்கும் புரியுமே! எழுத்தாளர் சுஜாதாவின் கதைகளில் தங்கை பற்றி உணர்வு பூர்வமாகப் பாசத்துடன் வரும் வார்த்தைகளைப் படிக்கையில் ஆச்சரியமாக இருக்கும். இத்தனை மென்மையான உள்ளம் கொண்டவரா என்பது! பின்னாட்களில் அவரே ஒரு பேட்டியில் இறந்து போன தன் ஒரே தங்கை பற்றியும் அவரை மறக்க முடியாதது பற்றியும் குறிப்பிட்டிருப்பார். எல்லாக் கதைகளிலும் ஓர் தங்கை இடம் பெறுவாள். அது போல் தான் இங்கேயும். உண்மை உண்மையாகவே அப்படியே மாறுதல் இல்லாமல் சொல்லப்பட்டது. கதைக்காக வேண்டி நடக்காத ஒன்றைக் கற்பனையாகக் கூற முடியுமா என்ன? அது அந்த மருமகளுக்குச் செய்யும் அநீதி!

   நீக்கு
 26. மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை அப்படியே எழுதி விட்டு அதற்கு உண்மைக் கதை என்று பெயரிடக் கூடடாது. இது அடிபடையிலேயே தவறான விஷ்யம்.

  இப்போ கூட எத்தனை பேர் அது கீதாம்மா கதைன்னு தானே சொல்கிறார்கள்?

  ஒருத்தருக்கானும், 'இது கதை அல்ல:
  நிஜமாலுமே நடந்த ஒண்ணு' என்று சொல்றீங்களா?

  நான் என் கதைக்காக இளைய மருமகள் பாத்திரத்ததை உருவாக்கி உங்கள் நிகழ்விலிருந்து வித்தியாசப் படுத்தும் பொழுது உண்மையில் ஒரு
  மருமகள் தான் என்று திருத்துகிறீர்கள்.

  கற்பனைக் கதைகள் எழுதுவது பற்றி என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கற்பனையோ , நிஜமோ, அது ஒரு தனி கதை. உண்மையில் நடந்த கதை என்று அவர் சொன்னதனால் தெரியும். அப்படி இல்லை என்றாலும் அது அவர் கதை. நான் மட்டும் சொல்லவில்லை. எங்கள் Blog வாசகர்கள் அனைவருக்கும் , கீதாம்மாவின் கதை ஞாபகம் வந்ததேன்? உங்கள் கதையில் இதனால் ஒன்ற முடியவில்லை. நாம் ஒரு நல்ல பாடல் கேட்கும் பொழுது இது எப்பொழுதோ கேட்ட வேறு பாடலின் சாயல் போல தோன்றும். இப்படி தோன்றினால் பரவாயில்லை. முன்பு கேட்ட அதே பாடலின் மெட்டு இப்பொழுது கேட்பதில் பிரதிபலித்தால் எப்படியிருக்குமோ அப்படியுள்ளது. பாடலின் தனித்துவம் இருக்காதல்லவா? அதையே நானும் சொல்கிறேன்.

   நீக்கு
  2. //உண்மையில் ஒரு
   மருமகள் தான் என்று திருத்துகிறீர்கள்.// யாரும் ஒரு மருமகள் எனத் திருத்தவே இல்லை. மீண்டும் என்னோட கதையைப் போய்ப் பாருங்கள். இளைய மருமகள் அதிலும் உண்டு. அவள் பெயரை நானும் அதில் சொல்லவில்லை. ஏனெனில் அவளுடைய பாத்திரம் மறைந்திருந்து தூண்டுவதோடு முடிந்து விடும். அதை விவரித்திருந்தால்! நல்ல கற்பனை என்றே சொல்லி இருப்பீங்க1 :))))) கற்பனைக் கதைகள் என்பதே உண்மையின் அடிப்படை தான்! இப்போக் கூட ஒரு திரைப்படம் வந்தது. "சூரரைப் போற்று!" உண்மையில் நடந்தது ஒன்று. திரைக்கதைக்காகக் கற்பனையான சம்பவங்களைச் சேர்த்தார்கள். படம் ஓடவே இல்லை. அது மாதிரித்தான் நீங்க எழுதுவதும்.

   நீக்கு
  3. மஹாத்மா காந்தியின் வாழ்க்கை தான் உண்மைக்கதைகளாகப் பலரால் எழுதப்பட்டு உள்ளது. பலருடைய உண்மையான வாழ்க்கையும் கதையாக வரும்போது மாறினால் உண்மையின் ஜீவன் அங்கே இல்லாமல் போய்விடும்.

   நீக்கு
  4. வானம்பாடி, மிக அழகாய் உங்கள் கருத்தைச் சொல்லி இருக்கீங்க! இதை விட அழகாய் என்னால் சொல்லி இருக்கமுடியுமா சந்தேகமே! ரொம்ப நன்றிம்மா. நன்கு ஆழ்ந்து படித்து விமரிசனங்கள் எல்லோராலாலும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

   நீக்கு
 27. ஏதோ ஒரு கோணத்தில் சொல்லப்பட்ட விஷயம் வேறு ஏதோ ஒரு கோணத்தில் பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை துரை! என்னோட கருத்தே, நான் சொல்லவந்ததே வேறே! அதைச் சரியாய் சொல்லலையோனு சந்தேகம் வந்தப்போ இங்கே வந்திருக்கும் பலரும் அதைப் புரிந்து கொண்டிருப்பது தெரிகிறது. தி/கீதா, கோமதி அரசு, வானம்பாடி, உங்களுக்கு எல்லோருக்கும் நன்றி.

   நீக்கு
  2. 'சும்மா சொல்லக் கூடாது" அடிக்கடி வந்த வாக்கியம்.

   நீக்கு
 28. அடுத்தப் பகுதிக்காகக் காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 29. அவரது வழியில் எழுதி இருக்கும் கதையின் முதல் பகுதி படித்தேன். அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 30. நன்றி,நண்பர்களே! அடுத்த பகுதியை மிகவும் ரசிப்பீர்கள். தவறாது வந்து வாசித்து விடுங்கள்.

  அன்புடன்,
  ஜீவி

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!