சனி, 26 ஜூன், 2021

தகப்பன்சாமி 

 பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மாற்றுத் திறன் உள்ள குழந்தைகளை தேடிச் சென்று தத்தெடுத்து வருகிறார்.  

ஐரோப்பாவின் பிரிட்டனில் ஹட்டர்ஸ்பீல்டு நகரில் வசிப்பவர் பென் கார்பென்டர் 37. இவர் 21 வயதில் மாற்றுத் திறன் குழந்தை ஒன்றை தத்தெடுத்தார்.இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஐந்து குழந்தைகளை தத்தெடுத்தார். இந்த ஐந்து குழந்தைகளும் மாற்றுத் திறனாளிகள்.பென் கார்பென்டருக்குப் பிறந்த டெடி என்ற ஆண் குழந்தைக்கு மரபணு கோளாறால் வளர்ச்சி பாதிப்பு இருந்தது. இரு ஆண்டுகளுக்கு முன் திடீரென அந்த குழந்தை இறந்தது..  இந்த சோகத்திற்கு இடையிலும் பார்வையற்ற லுாயிஸ் என்ற ஆறாவது குழந்தையை பென் கார்பென்டர் தத்தெடுத்தார். மூளை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள இக்குழந்தைக்கு தன்னிச்சையாக தசைகளை இயக்க முடியாது. இதுபோல பென் தத்தெடுத்த ஆறு குழந்தைகளும் 'ஆட்டிசம்' செவித் திறன் குறைபாடு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்.  இது குறித்து பென் கார்பென்டர் கூறியதாவது: அன்பும் ஆதரவும் தேவைப்படும் மாற்றுத் திறன் குழந்தைகளை விரும்பித் தத்தெடுத்து வளர்க்கிறேன். இத்தகைய குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கடினமான காரியம். எனினும் அவர்களைப் பராமரித்து அன்பு செலுத்துவதில் தனி மகிழ்ச்சி கிடைக்கிறது. பெரிய குடும்பம் அமைய வேண்டும் என்பது என் கனவு. இவ்வாறு அவர் கூறினார்.

================================================================================================================

சோலார் பேனல்கள் எனப்படும் சூரிய மின்சக்தி தகடுகளை தானாக சுத்தம் செய்யும் கருவியை கண்டுபிடித்துள்ளது பற்றி தமிழகத்தைச் சேர்ந்த சூரஜ்மோகன்: 

சென்னை கிண்டியில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரியில் படித்து, ஆஸ்திரேலியாவின் பல்கலைக்கழகம் ஒன்றில் முதுகலை பட்டம் வென்றேன். பின் பெங்களூரில் உள்ள டாடா பவர் சோலார் சிஸ்டம் நிறுவனத்தில், 2014ல் வேலைக்கு சேர்ந்து, சூரிய ஒளி தகடுகள் குறித்த அனைத்து தகவல்களையும் கற்றேன். சூரிய மின்சக்தியில் உள்ள பெரிய சிக்கல், சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யும் பேனல்கள் மீது படிந்திருக்கும் துாசுகளை அகற்றுவது தான். சிறிய அளவில் சோலார் பேனல்களை பயன்படுத்தி, மின்சாரம் தயாரிப்பவர்களுக்கு அது பெரிய பிரச்னையே இல்லை. ஆனால், மெகாவாட் கணக்கில் பிரமாண்டமாக சூரிய ஒளி தகடுகளை பொருத்தி, மின் உற்பத்தி செய்பவர்களுக்கு, அதை சுத்தப்படுத்துவது தான் மிகப் பெரிய பிரச்னை.ஏனெனில், சூரிய ஒளியை கிரகிக்கும் பேனல்கள் மீது துாசுகள் இருந்தால், அந்த பேனல்கள் வழியாக மின்சாரம் உற்பத்தி செய்வது சிரமமாக இருக்கும். அதனால், அதன் மேற்புறங்களை அவ்வப்போது சுத்தம் செய்வது அவசியம்.பிரமாண்ட சூரிய உற்பத்தி மையங்களில், பேனல்களை சுத்தப்படுத்த ஏராளமான தண்ணீர் தேவைப்படுகிறது அல்லது மனித உழைப்பு தேவைப்படுகிறது. இதனால், வேலைப்பளுவும் அதிகரிப்பதுடன், செலவும் அதிகரிக்கிறது.இதை தவிர்க்க என்ன செய்யலாம் என யோசித்த போது தான், தானியங்கி கருவியை தயாரிக்கலாமே என்ற எண்ணம் தோன்றியது. என்னுடன், நண்பர் பிரசாந்த் கோயல் என்பவரும் இணைந்து, 'சோலாவியா லேப்ஸ்' என்ற நிறுவனத்தை நிறுவி, சோலார் பேனல்களை சுத்தப்படுத்தும் கருவிகளை கண்டுபிடிக்கத் துவங்கினோம். எங்கள் முயற்சிக்கு மத்திய அரசு மற்றும் சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் லட்சக்கணக்கில் நிதியுதவி செய்துள்ளன. அதை வைத்து, சூரிய ஒளித்தகடுகளை சுத்தம் செய்யும் கருவியை கண்டுபிடித்தோம்.சூரிய ஒளி தகடுகள், அலுமினிய பேனல்களால் இணைக்கப்பட்டிருக்கும். அந்த பேனல்கள் மற்றும் தகடின் மீது, 200 கிலோ வரை எடை ஏற்ற முடியும். ஆனால், நாங்கள் தயாரித்துள்ள தானியங்கி கருவியின் எடை, 40 கிலோ மட்டும் தான். அந்த பேனல்கள் மீது படிந்திருக்கும் துாசுகளை தானாக இயங்கி துடைத்து சுத்தப்படுத்தி விடும். இதனால், சூரிய ஒளி தகடுகள் மீது அழுத்தம் ஏற்படாது; கீறல், விரிசல், உடைசல் என எந்தப் பிரச்னையும் ஏற்படாது.எங்களின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இன்னமும் இதில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, புது தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளோம்!

===================================================================================

என் குழந்தைகள் வளர்ந்து சாதிப்பர்! மூன்று பெண் பிள்ளைகளைப் பெற்றால் என்ன; யாரையும் எதிர்பார்க்காமல் சொந்தக் காலில் நிற்கலாம் என்று, தனி மனுஷியாக, அவர்களை வளர்த்து ஆளாக்கி வருவது பற்றி, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் ஆட்டோ ஓட்டி வரும் அமுதயாழினி: 

திருச்செங்கோடு தான் சொந்த ஊர். செங்கல் சூளையில், அம்மாவும், அப்பாவும் வேலை பார்த்தனர். கஷ்டப்பட்டு படித்து, பிளஸ் 2வில் நல்ல மார்க் எடுத்தேன். சென்னையில ஒரு காலேஜ்ல சேர்ந்தேன். காலேஜ்ல என்கூட படிச்ச வெங்கடேசனும், நானும் காதலிச்சு, கல்யாணம் செய்துகிட்டோம். அவருக்கு சென்னையிலேயே தனியார் கம்பெனியில வேலை கிடைச்சது. ஒரு வருஷத்துல, எங்களுக்கு ரெட்டை பொம்பளப் புள்ளங்க பொறந்தாங்க. எனக்கும், வீட்டுக்காரருக்கும் ரொம்ப சந்தோஷம்.வாழ்க்கையில குறைனு எதுவும் இல்லைன்னாலும், ஒரு ஆம்பளப் புள்ள இல்லையேனு எனக்கும், என் வீட்டுக்காரருக்கும் ஒரு வருத்தம் இருந்துச்சு. அடுத்து கர்ப்பமானேன்; ஆனா, அதுவும் பொண்ணா பொறந்ததாலே, அந்த எண்ணமெல்லாம் விலகிப் போயிடுச்சு. 'இனி இதுக தான் நம்ம புள்ளைகள், இதுகள எல்லாருக்கும் முன்னால ஆளாக்கிக் காட்டணும்'ங்கிறது மட்டும் தான் மனசுல வந்துச்சு. ஆனா, என் வீட்டுக்காரரு, மூணும் பொண்ணா போச்சேனு புலம்பிட்டே இருந்தாரு; குடிக்கவும் ஆரம்பிச்சுட்டாரு.என் வீட்டுக்காரர்கிட்ட எவ்வளவு மன்றாடியும் அவர் குடியை நிறுத்தல. 'ஆம்பளப் புள்ள, பொம்பளப் புள்ள வித்தியாசமெல்லாம் இனி இல்ல. நம்ம புள்ளைகள நாம நல்லா படிக்க வெப்போம்; அவங்க நம்ம பேர் சொல்ற மாதிரி வாழ்வாங்க'னு அவர்கிட்ட நான் எவ்ளோ சொல்லியும் பலனில்ல. ஒரு கட்டத்துல ஆபீசுக்கும் குடிச்சுட்டுப் போக, அவரை வேலையை விட்டு நிறுத்திட்டாங்க; வருமானம் இல்லாம வீடு இருண்டு போச்சு.என் கணவர்கிட்ட மன்றாடுறதைவிட, குடும்பத்தைக் காப்பாத்த நான் வேலைக்குப் போக ஆரம்பிக்கிறது தான் தீர்வுனு புரிஞ்சது. படிச்ச படிப்புக்கு வேலை எதுவும் கிடைக்கல; அது கிடைக்கிற வரை தேடுற நிலையில என் வீடும் இல்ல. 'டிரைவிங்' கத்துக்கிட்டு, ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்சேன். தினமும், 8 மணி நேரம் ஆட்டோ ஓட்டினா தான், குடும்பத்தை ஓட்ட முடியும். கடினமான வேல தான்; ஆனா, என் பொண்ணுங்களை நினைச்சா, எனக்கு முன்னால எந்தக் கஷ்டமும் பெருசா நிக்காது. என் வீட்டுக்காரர், நான் சம்பாதிக்கிற காசையும் வாங்கிட்டுப் போய், குடிச்சுட்டு வந்து என்னையே அடிப்பார்; இப்ப பிரிஞ்சுட்டோம். என் மூணு பொண்ணுங்களும் நாளைக்கு நல்ல நிலைமைக்கு வந்து, எல்லாத்துக்கும் பதில் சொல்லுவாங்க. அதுவரை நான் அவங்களுக்கு, அப்பாவாவும், அம்மாவாவும் ஓடிட்டே இருப்பேன்!

=====================================================================================================

அனைத்து வகை கொரோனாவையும் எதிர்க்கும் 'சூப்பர் வாக்சின்'. 

வாஷிங்டன்: டெல்டா வகை கொரோனா, டெல்டா பிளஸ் வகை கொரோனா உள்ளிட்ட அனைத்து வகை கொரோனா வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும் 'சூப்பர் வாக்சின்' தடுப்பு மருந்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ், பல நாடுகளில் டெல்டா, டெல்டா பிளஸ் உள்ளிட்ட பல வகைகளில் உருமாற்றம் அடைந்து 2வது, 3வது அலையாக மக்களை தாக்கியுள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள தடுப்பூசிகள் டெல்டா, டெல்டா பிளஸ் வகை கொரோனாவை எந்தளவிற்கு எதிர்க்கும் என விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள மருத்துவப் பல்கலையை சேர்ந்த விஞ்ஞானிகள், 'சூப்பர் வாக்சின்' என்னும் ஹைபிரிட் தடுப்பு மருந்து ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

கொரோனா வைரசின் ஆபத்தான அமைப்பான ஸ்பைக் புரதத்தின் பல்வேறு வகைகளுக்கு எதிராக, ஆன்ட்டிபாடிகளை இந்த தடுப்பு மருந்து உருவாக்குவது, எலிகள் மீதான பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதோடு, நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதையும் தடுப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய வாய்ப்புள்ள பிற கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும், இந்த மருந்து தடுப்பாற்றலை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இம்மருந்து அடுத்தாண்டு மனிதர்களுக்கு பரிசோதனை செய்யப்பட உள்ளது.

= = = =


28 கருத்துகள்:

  1. காலை வணக்கம் அனைவருக்கும்.

    நல்ல செய்திகள் இன்று. அதிலும் பெண் குழந்தைகளைத் தானே வளர்க்க உழைப்பவரும், ஆட்டிசம் குழந்தைகளை வளர்ப்பவரும் பாராட்டுக்கு உரியவர்கள்.

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் எல்லா நாட்களிலும்
    ஆரோக்கியத்துடனும் ,அமைதியுடனும் இருக்க இறைவன் அருள் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. மனமுருக வைக்கும் நற் செய்திகள். நம் குழந்தையையே வளர்த்து ஆளாக்குவது பெரிய விஷயம்.
    இதில் ஆட்டிஸ்டிக் குழந்தைகளை வளர்ப்பது மிகப்
    பெரிய செய்தி. எத்தனை தாராள பெருந்தன்மையான
    மன்சுக்காரர்.!!! பென் அவர்களும் அவரது குழந்தைகளும் நல்ல ஆரோக்கியத்துடனும்
    இருந்து
    வளமான வாழ்வைப் பெற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. ஆட்டோ ஓட்டிக் குழந்தைகளை வளர்க்கும்
    பெண் ,, அவரின் தைரியத்தையும் விடாமுயற்சியையையும் மனதாரப் பாராட்டுகிறேன்.
    ஒரு அசட்டுக் கணவனிடமிருந்து விலகினதற்கே
    வாழ்த்துகள் சொல்ல வேண்டும்.

    சிரமமான வாழ்க்கையில் பெருமை அடைந்து அவரது பெண் குழந்தைகளும்
    நல் வளர்ச்சி அடைய வேண்டும்.
    மிக உண்மையான பாசிட்டிவ் செய்திகளைக் கொடுத்ததற்கு
    மிக நன்றி கௌதமன் ஜி.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கடைசிச் செய்தி மட்டும் படித்தேன்/தொலைக்காட்சிச் செய்திகளிலும் வந்தது. மற்றவை புதியன. அனைத்துக்கும் நன்றி. உடல்/மனக் குறைபாடுள்ள குழந்தைகளை வளர்க்கும் சவாலை எதிர்கொண்டிருக்கும் இளைஞருக்கு அவர் மனைவியின் துணையும் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். ஆட்டோ ஓட்டும் பெண்ணின் மனோதிடம் வியக்க வைக்கிறது. விரைவில் வாழ்க்கையில் நல்ல நிலையை அடையப் பிரார்த்தனைகள். புதிய மருந்து முற்றிலும் வெற்றி அடைந்து உலகில் இருந்து கொரோனா அடியோடு ஒழிந்து போகவும் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா..  வணக்கம்.  ஆம்.  எல்லாம் நல்லபடி நடக்கவேண்டும்.  நன்றி.

      நீக்கு
  7. பென் கார்பென்டருக்கும, அமுதயாழினிக்கும் எமது இராயல் சல்யூட்.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. மாற்றுத் திறன் உள்ள குழந்தைகளை தேடிச் சென்று தத்தெடுத்து வளர்க்கும் பென் கார்பென்டருக்கு வாழ்த்துக்கள்! இவர் சேவை மகத்தான சேவை.

    ஆட்டோ ஓட்டி தன் மூன்று பெண் குழந்தைகளை வளர்க்கும் அமுதயாழினியின் மனதைரியத்திற்கு வாழ்த்துக்கள். அவர் ஆசைப்படி மூன்று குழந்தைகளும் நன்கு படித்து தன் அம்மாவின் ஆசையை பூர்த்தி செய்ய வேண்டும்.





    பதிலளிநீக்கு
  10. சூப்பர் வாக்சின் விரைவில் வரட்டும்

    பதிலளிநீக்கு
  11. அணைவருக்கும் காலை வணக்கம்.
    அணைத்து செய்திகளும் அருமை, நம்பிக்கையூட்டுபவை.

    பதிலளிநீக்கு
  12. நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துகள்...

    "சூப்பர் வாக்சின்" சூப்பர்...!

    பதிலளிநீக்கு
  13. சிறப்பு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் பிரிட்டானிய இளைஞர் மலைக்க வைக்கிறார். அப்படிப்பட்ட குழந்தை ஒன்று இருந்தாலே கவனித்து வளர்ப்பது ரொம்ப கஷ்டம். இவர் செய்வது மாபெரும் சேவை.

    பதிலளிநீக்கு
  14. மூன்று பெண்களுக்காக ஆட்டோ ஓட்டும் அமுதயாழினியின் கனவு மெய்ப்பட வேண்டும்.

    இவரைப் போலவே குழந்தைகளை படிக்க வைப்பதற்காக ஆட்டோ ஓட்டும் ஒரு பெண்ணை சென்னை சென்ட்ரலில் சந்தித்தேன். சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் ஒருவரை இறக்கி விட்டு விட்டு, அங்கிருந்து என்னை ராமாபுரத்தில் ட்ராப் பண்ண மீட்டர் காட்டிய தொகைதான் வாங்கினார். மகள் நர்ஸிங் கோர்ஸும், மகன் இன்ஜினீயரிங்கும் படிப்பதாக சொன்னார்.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.
    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.

    தன் சொந்த குழந்தையின் இழப்பையும் தாங்கிக் கொண்டு, மாற்றுத்திறனுடைய பிற குழந்தைகளை தேடி எடுத்து தன் குழந்தைகள் போல் வளர்க்கும் பிரித்தானிய இளைஞர் பென் கார்பென்டர் அவர்களின் செயல் வியக்க வைக்கிறது. அவரை மனமாற பாராட்ட கூட நமக்கு தகுதி இல்லையோ என்ற எண்ணம் வருகிறது. அவரும் அந்த குழந்தைகளும் நன்றாக வாழ வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    ஆட்டோ ஓட்டி தன் குழந்தைகளின் வருங்காலத்திற்காக கஸ்டபட்டு உழைக்கும் பெண்மணி மற்றவர்களுக்கு நல்ல உதாரணம். அவரும் அவர் குழந்தைகளும் நன்றாக சிறப்பாக வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.

    ஊசி மருந்து விரைவில் வரட்டும். இந்த தொற்றிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கும் காலத்திற்காக பிராத்தனைகள் செய்வோம். நல்ல செய்திகளை தந்தமைக்கு நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. பாராட்டுக்குரியவர்களைப் பற்றிய பகிர்வு. சூப்பர் தடுப்பூசி நல்ல விஷயம்தான் என்றாலும் அடுத்தடுத்த அலைகள், வைரஸ் உருமாற்றங்கள் இத்தோடு நிற்குமா என்பது புதிராகவே உள்ளது. நல்லது நடக்கப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  17. பென் கார்பெண்டர்!!! என்ன சொல்ல வார்த்தைகள் இல்லை. கண்ணில் நீர் வந்துவிட்டது. சிரம் தாழ்ந்த வணக்கங்கள்! ஏனென்றால் இந்த நட்சத்திரக் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பது என்பது அத்தனை எளிதானதல்ல. ஆகச்சிறந்த ஒரு செர்வீசை செய்கிறார். பாராட்டுகளும் வணக்கங்களும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. அமுதயாழினி நிஜமாகவே அமுதயாழினி!!!! சல்யூட்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  19. சூப்பர் வேக்சின்! ஆஹா சூப்பரா இருக்கு கண்டுபிடிப்பு. வரட்டும் சூப்பரா வரட்டும். உலகிற்கு நன்மை விளையட்டும்

    கீதா

    பதிலளிநீக்கு
  20. பென்,அமுத யாழினி இருவருக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  21. சிறப்பான செய்திகள்.

    அமுத யாழினி - வலிமையுடன் வெற்றிபெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!