புதன், 30 ஜூன், 2021

முதல் முறை நூடுல்ஸ், பீஸா, பர்கர், சூப் போன்றவை சாப்பிட்ட அனுபவம்

 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

WWF போன்ற வன்முறை நிகழ்சிகளை ஆண்கள் விரும்பி பார்க்க காரணம் என்ன?

$ அப்படி என்று நீங்கள் எப்படி சொல்கிறீர்கள்?

# பெரிய அளவில் ரசிக்கப் படுவதால்தான் இம்மாதிரி நிகழ்ச்சிகள் பிரபலமாக இருக்கின்றன என ஊகிப்பதும், அதிலும் ஆண்களே பிரதான ரசிகர்கள் என எண்ணுவதும்  சரியாக இருக்கலாம்.  நிஜ வாழ்வில் எதிரிகளை துவம்சம் செய்ய இயலாமை ஏற்படுத்தும் மனக்குறைக்கு இது போன்ற நிகழ்ச்சிகள் ஒரு நிவாரணியாகப் பார்க்கப் படலாம்.  அமானுஷ்ய, அபத்த ஸ்டண்ட் காட்சிகளில் நம் ஹீரோக்களின் சாகசங்கள் வரவேற்புப் பெறுவது போல.

& Unlike polls attract each other. - ஆண்கள் எப்போதுமே அமைதி விரும்பிகள். அதனால்தான் வன்முறை நிகழ்ச்சிகளை டி வி யில் மட்டும் பார்க்கின்றனர். 

முதல் முறை நூடுல்ஸ், பீஸா, பர்கர், சூப் போன்றவை சாப்பிட்ட  அனுபவத்தை பகிர முடியுமா?

$ சென்னை உரத்தொழிற்சாலையிலிருந்து கடற்கரை சாலையில் வரும்போது தண்டையார் பேட்டை மணிக்கூண்டு அருகே தமிழ் நாடு flour mills இல் ஆட்டா,மைதா,ரவை இவற்றுடன் சேமியா  எல்லாவற்றையும் ஒரு துணிப்பையில் போட்டு ரெடியாக வைத்திருப்பார்கள். நாம் சரியான தொகை கொடுத்தால் சீக்கிரம் வாங்கி செல்லலாம். ஒரு நாள் ஒரு நூடுல்ஸ் பாக்கெட் இலவசம்.

மற்றொரு நாள் spaghetty, இன்னொரு நாள் பாஸ்தா இப்படி இலவசங்களுடன் 30 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த எங்கள் நூடுல்ஸ் புராணம் மாக்கி,knor என்று தொடர்கிறது....

# முதல் முறை சாப்பிட சங்கடமாக இருந்தது என்பதே உண்மை. பின்பு சுவை  பழகின பிறகு சங்கடம் இல்லாது போனது.  இப்போதும் வழ வழ குழ குழ சைனீஸ் மஞ்சூரியன் அலர்ஜிதான்.

& முதன் முறையாக பீட்ஸா தரிசனம் + ஸ்பரிசம் + சாப்பிட்டது பெங்களூரில் மகள் அழைத்துச் சென்ற பீட்ஸா குடிசையில் (Pizza Hut). இந்தக் கண்றாவியை மக்கள் எப்படித்தான் இவ்வளவு விலை கொடுத்து வாங்கி சாப்பிடுகிறார்களோ என்ற எண்ணம்தான் வந்தது. வேகாத ஊத்தப்பத்தில் கண்ட கண்ட காய்களையும் போட்டு - ஊசிப்போன ஊத்தப்பத்தை பிய்க்கும்போது - ஊடே கொழ கொழ நூல் வருவது போல - - - தொடர்ந்து சொன்னால் பீட்ஸா ரசிகர்கள் ஓடிப்போய்விடுவார்கள்!  

அதே போன்று - ஏதோ ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் - ட்ரைனிங் புரோகிராம் ஒன்றின் லஞ்ச் நேரத்தில் - காளான் சூப் என்ற வஸ்துவை ஸபூனால் எடுத்து வாயாருகே கொண்டு சென்றபோது - மூக்கு அந்த சூப்பின் கரப்பான்பூச்சி வாசனையை மூளைக்கு அறிவிக்க -- அப்புறம் ?  

அந்தப் படம் முழுக்க கதாநாயகி அழகாக இருப்பார் என்று எந்தப்பட கதாநாயகியை குறிப்பிடுவீர்கள்?

# ஒரு மிகச்சில காட்சிகள் தவிர பத்மினி அப்படி இருந்ததாக நினைக்கிறேன். தற்கால அழகிகள் பலருக்கும் மக்குக் களை தட்டுவதாகத் தோன்றுவது என் பிரமையாக இருக்கலாம். 

& மீண்டும் கோகிலா - ஸ்ரீதேவி. (+ உன்னி மேரி) 

 ###

என்ன மாதிரியான புத்தகம் பிடிக்கும்? :: KGY ராமன் 

ரசனைகள் பலவிதம்.  அவற்றில் ஒவ்வொன்றும் ஒரு ரகம்.  அண்மையில் உங்களுக்கு என்ன மாதிரியான புத்தகம் பிடிக்கும் என்ற ஒரு கட்டுரை இங்கு வெளிவந்தது.  


பிரபல எழுத்தாளர் பெயரில் மோகம், கவர்ச்சியான தலைப்புகளில் ஆர்வம். பிடித்த விஷயங்கள் குறித்த நூல்கள், மகா பெரியவர் படம் போட்ட புத்தகம், பயங்கரமான எளிமையுடன் கூடிய சீரியஸ் புத்தகம், இப்படி பல விஷயங்கள் வாங்குபவரைக் கவர்கின்றன.  கவனிக்கவும், நான் வாங்குகிறவர் என்று சொல்வதில் ஒரு உள்நோக்கு இருக்கிறது.  அதாவது, படிப்பவர் அல்ல , வாங்குபவர்தான்.  காரணம், வாங்குபவர்கள் எல்லாரும் படிப்பதில்லை.  படிக்கத்  தொடங்குவார் சிலர் அல்லது பலர்.  விடாப்பிடியாக படித்து முடித்து விட்டுத்தான் மறுவேலை என்று ஏகாக்கிர சிந்தையுடன் படிப்பவர் சிலர்,  கட்டாயம் ஒரு நாள் படிப்பேன் என்று அலமாரியில் வைத்துவிட்டு மறந்துபோகிறவர்களோ அல்லது இரவல் கொடுத்து திரும்பக் கேட்காத பெரிய மனம் படைத்தவர்களோ நிறைய இருப்பார்கள்.  அவர்கள் என் கட்சி.

பிரம்ம சூத்திரம் முதல், ஜே கே தத்துவம், உபநிஷதங்கள், சகஸ்ர நாம விளக்கம் இப்படியாக பல புத்தகங்கள் என்னிடம் தூங்கிக்  கொண்டு இருக்கின்றன.  வயது முதிர்ந்து கண் காய ஆரம்பித்து விட்ட நிலையில் நான் வைத்துள்ள புத்தகங்கள் பெரும்பாலும் எதோ ஒரு நாள் பழைய புத்தக வியாபாரி அல்லது குப்பைக் கூடையை நோக்கிப் பயணிக்கும் என்று நான் திடமாக நம்புகிறேன்.

எனக்கு என்ன மாதிரியான புத்தகம் வாங்கப் பிடிக்கும் என்று யோசித்துப் பார்த்ததில், கதை நாவல் ஆகியவற்றில் நிறைய சம்பாஷணை இருக்கும் எழுத்து என்னைக் கவர்கிறது என்று அறிந்துகொண்டேன்.  ஆனால் நான் கதை நாவல் வாங்கி ரொம்ப நாள் ஆகிறது.  நூலகம் அல்லது இரவல் என்று எனக்குப் பிடித்த பல எழுத்தாளர்களின் படைப்புகளை ஆர்வமாகப் படித்து எளிதாக மறந்து போயாகிவிட்டது.

நகைச்சுவைக் கட்டுரைகள் கதைகள் ரொம்பப் பிடிக்கும் என்றாலும் தமிழில் நகைச்சுவை அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதை வருத்தத்துடன் சொல்ல வேண்டியிருக்கிறது.  அப்புசாமி , ரவா உப்புமா போன்ற தலைப்புகளைத் தாண்டி நம் நகைச்சுவை போக மாட்டேன் என்கிறது. அந்தக் காலத்தில் நாடோடி, துமிலன் போன்றோர் நகைச்சுவையாக எழுதினாலும், ஆங்கிலத்தில் காணப்படும் பரவலான நகைச்சுவை எழுத்து தமிழில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் . இதர இந்திய மொழிகளில் இருக்குமா என்பதும் தெரியவில்லை.  இருந்தால் கூட அதை சீரியஸ் ஆக மொழி பெயர்க்க யாரும் முன் வர மாட்டார்கள் என்பதே உண்மை.  காரணம் புத்தகம் விற்பதற்கான ஊக்கம் முற்றிலும் இல்லாத முயற்சி  என்பதால் இருக்கும்.

சொந்த செலவில் தம் "அரிய " படைப்புகளை அச்சிட்டு வைத்துக்கொண்டிருப்பவர்கள் அதை இலவசமாக யார் தலையில் கட்டலாம் என்று காத்திருப்பதாகவே எனக்குத் தோன்றும்.  இந்த புத்தகம் அச்சிட்டு ரசிக்கும் ஆர்வம் என்னிடம் கிடையாது.  ஏன் என்றால், வெகுஜன  வாசிப்புக்கு உகந்த வகையில் எனக்கு எழுத வராது. உண்மையைச் சொல்லப் போனால் என் எழுத்து எனக்கே பிடிக்காது. (எங்களுக்கும்தான்  பிடிக்காது என்று உரத்த குரல்கள் என் காதில் விழுகின்றன.)

ஜோசியம் , இளைய ராஜா இசை விசேஷம், கண்ணதாசன் பாடல் சிறப்புகள், சமையல் குறிப்புகள் , வீட்டு வைத்தியம், வெற்றி பெற நூறு குறிப்புகள் என்று வெற்றி பெறாத பேர்வழிகள் எழுதுபவை இப்படியாக எளிதில் விலை போகும் சிரஞ்சீவிகள் என்றும்  உண்டு.

அடுத்ததாக புத்தகங்களின் விலை.  நம் வயசுக் கோளாறு காரணமாக சுமார் 150 ரூபாய்தான் இந்தப் புத்தகத்துக்கும் நியாயமான விலை என்று எனக்குத் தோன்றும்.  இந்த விலை ஆயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ள தலைகாணிப் புத்தகங்களுக்குப் பொருந்தாது.  அதற்கு வேண்டுமானால் கிலோ 300 ரூ என்று வைத்துக் கொள்ளலாம்.  ஆனால் இப்போது 500 750 1200 என்று ஏகத்தாறுக்கு புத்தகங்களின் விலை வானளாவி நிற்கிறது.  இதையும் விலை கொடுத்து வாங்கி அலமாரியில் பத்திரப்படுத்துபவர்கள் இருக்கவே இருக்கிறார்கள். வாழ்க அவர்கள் நல்ல உள்ளம்! 

 = = = =


163 கருத்துகள்:

 1. காலை வணக்கம் அனைவருக்கும்.

  எடை அதிகமாகும் என்ற நினைப்பே... எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பிட்சாவைச் சாப்பிடாமல் இருக்க வைத்தது. த்தின் க்ரஸ்ட் பிட்சா எனக்குப் பிடிக்காது. வெளிநாட்டுப் பிரயாணத்தின்போது எப்போவாவது பிட்சா உற்ற துணைவன்.

  நான் வேலை பார்த்த கம்பெனியில் வருடத்துக்கு ஒரு மாதம் 500-600 (ஒரு தடவைக்கு) ரூபாய்க்கு எவ்வளவு வேண்டுமானாலும் எந்த பிட்சாவும் சாப்பிடலாம் என ஆஃபர் இருக்கும். அப்போது பல அராபியர்கள், பிட்சாவில் சீஸ் பகுதி இல்லாத ஓரங்களை வீணாக்கிவிட்டு மற்றவற்றை மட்டும் சாப்பிடுவதைக் காண, இப்படி வேஸ்ட் பண்ணுகிறார்களே என்று தோன்றும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லை..  வாங்க...   நானும் சமீப காலமாய் பீட்சாவை நிறுத்தி வைத்திருக்கிறேன்!

   நீக்கு
 2. //ஆண்கள் எப்போதுமே அமைதி விரும்பிகள்/ - இந்தப் பெண்களைப் பற்றி இப்படியா உங்கள் அபிப்ராயம்? ஐயோ.. பாவம்

  பதிலளிநீக்கு
 3. ஒரு சில படங்களைத் தவிர (உதாரணம் பட்டத்துயானை கதாநாயகி.. நடிகர் அர்ஜுன் மகள்) எல்லாப் படங்களிலும் கதாநாயகி ஓக்கேன்னுதான் எனக்குத் தோன்றும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேபி பாலுமகேந்திரா போன்றோர் தன் படங்களில் கதாநாயகியர் மற்ற படங்களில் தெரிவதைவிட கொஞ்சம் ஸ்பெஷல் அழகாகத் தெரிய மெனக்கெடுவார்கள் என்று தோன்றும்.

   நீக்கு
  2. இதை மட்டும் சொல்லிட்டு ஓடிப்போயிடறேன். சினிமா நடிகைகளில் உயரம், நிறம், அழகு என்று சொல்லப் போனால் மு.மு. மட்டுமே. பலமுறை நேரில் தொட்டுவிடும் தூரத்தில் பார்த்திருக்கேன். அவர் அழகு, கம்பீரம் யாருக்கும் வராது. ஆனால் தன்னைத் தானே கெடுத்துக் கொண்டவர்களில் அவரும் ஒருவர். ஶ்ரீவித்யாவின் கண்ணழகு எந்த நடிகையிடமும் இல்லை. அவரும் ஏமாந்து போய் அவசரப்பட்டு வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டார். :( அவர் நடனம் பிரமாதமாய் இருக்கும். வித்யா மூர்த்தி என்னும் பெயரில் ஆடிக் கொண்டிருந்தார்.

   நீக்கு
  3. மு மு என்றால், முன்பல்லு முத்தழகியா?

   நீக்கு
  4. முந்தானை முடிச்சு? ஊர்வசியா? நல்ல புதிர்!!!!:)))))))

   ஆஹா முன்னாள் முதல்வர் ஜெய லலிதா.
   யெஸ் டாப் க்ளாஸ்.

   நீக்கு
  5. கீதா அக்கா, கேள்வியை சரியாக புரிந்து கொள்ளுங்கள். எந்த கதாநாயகி அழகு என்று கேட்கவில்லை, யார் படம் முழுவதும் திரையில் அழகாக தெரிந்தார்கள்?

   நீக்கு
  6. பானுமதி, புரிந்து கொண்டே பதில் அளித்தேன். நேரிலும் சரி, திரையிலும் அழகுன்னா அது மு.மு. தான்! அவரை அடிச்சுக்க ஆள் இல்லை. சோகம் ததும்பும் அந்தக் கண்கள் மட்டுமே போதுமே!

   நீக்கு
  7. மு மு என்றால் யார் என்று கு கு வைத்தான் கேட்கணும் போலிருக்கு!

   நீக்கு
  8. ஹாஹா, கௌதமன் சார், ரேவதி தான் சொல்லிட்டாங்களேனு நான் சொல்லலை. மு.மு. என்றால் முன்னாள் முதல்வர். :))))

   நீக்கு
  9. //அவரும் ஏமாந்து போய் அவசரப்பட்டு வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டார். // என்னா சொல்றாங்க இந்த இணையதள பால்யூ? நான் இப்படீல்லாம் கேள்விப்பட்டதே இல்லையே

   நீக்கு
  10. // ஏமாந்து போய் அவசரப்பட்டு வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டார்.// Srividya has acted in many films including Annai Velankanni, Unarchigal and Apoorva Raagangal with Kamal Haasan. Srividya fell in love with Kamal Haasan, but he was courting Vani Ganapathy at that time, and was forced to abandon her love after she got to know about their marriage.[6][7]

   Later she fell in love with George Thomas, an assistant director in her Malayalam film Teekkanal. She married him on 19 January 1978 despite opposition from her family.[8] As George wished, she was baptised before the marriage. She wanted to stay as a housewife, but had to return to acting, when George forced her to, citing financial issues. She soon realised that she made a wrong decision in marrying him. Her life became miserable and the marriage ended in divorce in 1980.

   நீக்கு
  11. உண்மை. மிக மோசமாக உல(க்)கையாலும், கணவனாலும் ஏமாற்றப் பட்டார். அசாத்தியத் திறமைகள் நிறைந்த பெண். என்ன ஒரு வருத்தம்னால் அவர் சகோதரர் தவிர்த்துப் பெற்றோரின் ஆதரவு கூட அவருக்குக் கிடைக்கவே இல்லை.

   நீக்கு
 4. புத்தகங்கள் வாங்குவதினால் எழுத்தாளர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் (அவங்களுக்கு காசு வராட்டியும்). பதிப்பாளர்கள் கொழுக்கிறார்கள். அது போதாதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிப்பாளர்கள் கொழுக்கிறார்களா?  நன்றாய்த் தெரியுமா?

   நீக்கு
  2. அப்படித்தான் நம்புகிறேன். 200 பக்க புத்தகத்துக்கு கூசாமல் 300 ரூபாய் வைத்து விற்று, எழுதியவரிடம் கைவிரித்து... எத்தனை எழுத்தாளர்களுக்கு ராயல்டி கிடைத்திருக்கிறது?

   நீக்கு
  3. எத்தனை புதிய எழுத்தாளர்கள் புத்தகங்கள் விற்றிருக்கின்றன?  ஒப்பந்த அடிப்படையில் அச்சிடுவது என்று ஒன்று வேறு உண்டு!!

   நீக்கு
  4. ஹிஹிஹி, ஶ்ரீராம், புத்தகம் விற்கலைனா எழுத்தாளர்கள் நண்பர்களைத் தூண்டி விட்டு வாங்கச் செய்வாங்களே! வாங்கலைனா அந்த நண்பர் மேல் கடும் கோபமும் வரும் அவங்களுக்கு. இது என் அனுபவம். இன்னும் சிலர் புத்தகம் வாங்கிப் படித்த பின்னர் அதைப் பற்றிய விமரிசனமும் எழுதச் சொல்லி வேண்டுகோள் விடுப்பாங்க. நான் புத்தகக் கண்காட்சிக்கே போனதில்லை. புத்தகங்களும் வாங்கினது இல்லை. என்னிடம் உள்ள பெரும்பாலான புத்தகங்கள் சித்தப்பா கொடுத்தவை! அல்லது ஆன்மிகப் பொருட்காட்சியில் நான் வாங்கிய தெய்வத்தின் குரல் தொகுதிகள். ரா.கணபதி எழுதிய நூல்களை அநேகமா வாங்குவேன். எங்க குடும்பத்தினருக்குப் பரிசளிக்க மீனாக்ஷி அம்மாளின் சமைத்துப் பார் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்ததும் உண்டு.

   நீக்கு
  5. மீனாக்ஷி அம்மாளின் சமைத்துப் பார் புத்தகம் பல பதிப்புக்களைத் தாண்டி விட்டது. ஆனாலும் இப்போதும் அதிகம் விற்பது அது தான் எனச் சொல்கின்றனர்.

   நீக்கு
  6. 'சமைத்துப் பார்'க்க சொல்பவர்கள் - 'சமைத்துச் சாப்பிடு' புத்தகம் எப்போது எழுதுவார்கள்?

   நீக்கு
  7. "சமைத்துப் பார்" என்பதற்கு அர்த்தம், சமைத்து மற்றவர்கள் மகிழ்ச்சியோடு சாப்பிடுவதைப் பார் என்பது. நீங்க என்னடான்னா, சமைத்து லபக் லபக்னு சாப்பிடுங்கறீங்களே.

   நீக்கு
  8. //மீனாக்ஷி அம்மாளின் சமைத்துப் பார் புத்தகம் பல பதிப்புக்களைத் தாண்டி விட்டது. ஆனாலும் இப்போதும் அதிகம் விற்பது அது தான் எனச் சொல்கின்றனர்.//மல்லிகா பத்ரிநாத் அவரை ஓவர்டேக் பண்ணவில்லையா?

   நீக்கு
  9. மல்லிகா பத்ரிநாத் புத்தகங்கள் பற்றி அவ்வளவாத் தெரியாது. சமைத்துப் பார் புத்தகம் பற்றியும் அதன் பதிப்புகள் பல தாண்டி ஓடி விட்டதையும் குறித்துப் பலரும் சொல்லி/எழுதிக் கேட்டிருக்கேன். அதோடு பாரம்பரியத்துக்கு மீனாக்ஷி அம்மாளின் "சமைத்துப் பார்!" மல்லிகா பத்ரிநாத்தெல்லாம் இப்போத் தானே! மீனாக்ஷி அம்மாள் என்னைப் போல் மதுரையில் பிறந்து தஞ்சைப் பக்கம் வாழ்க்கைப் பட்டதால் இரு பக்கத்துப் பழக்க வழக்கங்களையும் ஒட்டி எழுதி இருப்பார். அந்தக் காலத்துப் பிரபலமான வக்கீல் சுப்ரமணிய ஐயரின் இரண்டாவது பெண் என்பார்கள்.

   நீக்கு
  10. ஹல்ல்ல்ல்ல்ல்லோ கீசா மேடம்... நானும் அந்த மீமீமீனாக்‌ஷி அம்மாளின் புத்தகங்கள் வாங்கினேன். அப்புறம் பலம் னா எவ்வளவு, வீசைனா எவ்வளவு என்று ஒன்றும் பிடிபடாமல், பேசாமல் மற்ற கதை புத்தகங்களைப்போலப் படித்தேன்.அவ்ளோதான். மல்லிகா பத்ரிநாத் அவர்களின் புத்தகங்கள் அருமை (ஆனால் எனக்கு அவ்வளவா ருசிக்கலை)

   நீக்கு
  11. நீங்க படிச்ச அழகு அம்புடுதேன். அதிலே தான் அளவெல்லாம் மெட்ரிக் அளவு, பழைய அளவுனு ஒரு பக்கம் முழுசும் கொடுத்திருக்காங்களே! என்ன படிக்கிறீங்க போங்க! ஒழுங்காவே படிக்கிறதில்லை. இப்படித் தான் ஸ்கூல் போறச்சேயும் படிச்சிருப்பீங்க போல! :)))))))))

   நீக்கு
 5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் மேலோங்க (பிட்சா சாப்பிடாமல்) பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 6. நாங்க முதல்முறை பிட்சா சாப்பிட்டதே அம்பேரிக்காவில் தான். இந்தியாவில் பிட்சா சாப்பிட்டதே இல்லை/வாங்கிப் பார்க்க மனம் துணியவும் இல்லை. இப்போத்தான் சென்ற லாக்டவுன் முடிந்து சகஜம் ஆரம்பித்த சமயம் கண்ணைக்காட்ட மருத்துவமனைக்குப் போயிட்டு நேரம் ஆனதால் வழியில் உள்ள "ஒயாலோ" பிட்சா கடையில் பிட்சா வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தோம். பிடிக்கவே இல்லை. :( அன்னிக்குச் செய்த தப்பை மறுபடி செய்ய மனசுவரலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரசகுல்லா சாப்பிட்டுப் பாருங்கள் என்று சொன்னால், கல்லிடைக்குறிச்சி நாகராஜன் ஐயர் மெஸ்ல சாப்பிட்டேன், பிடிக்கவே இல்லை, ரசகுல்லாவா ஐயே... என்று சொல்லுவீங் போலிருக்கே... டொமினோஸ், பிட்சா ஹட், பாபாஜோன்ஸ்னு நல்ல பிராண்டட் கடையில் போய் வாங்காமல்...

   நீக்கு
  2. ம்ஹூம், இங்கே பிட்சாவுக்கு ஏகமனதாக ஒப்புதல் கொடுப்பதில்லை என்பதால் எதுவும் முயற்சித்துப் பார்த்தது இல்லை. ஆனால் ஶ்ரீரங்கத்தில் இந்த ஒயாலோ பிட்சாவும் சரி, பக்கத்திலேயே இருக்கும் ஐபாகோ ஐஸ்க்ரீமும் சரி ரொம்பவே பிரபலம். எப்போவும் கூட்டம்.

   நீக்கு
  3. ஆனால் எனக்கு ரஸமலாய் பிடித்த அளவு ரசகுல்லா அத்தனை பிடிக்கலை. தம்பி கல்கத்தாவில் இருந்தப்போ நிறைய வாங்கி வந்திருக்கார். அவ்வளவு ஏன்? மாமா கல்கத்தா ராணுவ ஃபாக்டரி ஆடிட்டிங் சம்பந்தமாப் போனால் கட்டாயமாய் ரசகுல்லாவும் சந்தேஷும் இருக்கும். அதைத் தவிர்த்து மாவா லட்டு ஒண்ணு வாங்கி வருவார் பாருங்க! ஆஹா! ஓஹோ! பேஷ்! பேஷ்! தான். அது கல்கத்தாவில் மட்டுமே கிடைக்குதுனு நினைக்கிறேன்.

   நீக்கு
  4. ரசகுல்லா என்பதை, படித்த விவரங்களை எல்லாம் வைத்து கற்பனையில் வேறுமாதிரி சுவை எண்ணி வைத்திருந்தேன்.  அதனால் சாப்பிடும்போது அது வேறு மாதிரி இருக்கவே பெரிய விருப்பமில்லை!  பாஸந்தி ஓகே, ரசமலாயை விட.  ஏதோ ஒன்றில் மருந்து வாடை அடிக்கும்!~

   நீக்கு
  5. எதிலேயும் வராது. ஆனால் ரசமலாய் ஹூஸ்டனில் பாதாம் பாலில் மிதந்து கொண்டும் இருக்கும். ரோஸ்மில்க் மாதிரியான ஃப்ளேவரிலும் கிடைக்கும். வெறும் பால் சுண்டக்காய்ச்சி அதில் போட்டு ஏலக்காய், வாசனாதிச் சாமான்கள் சேர்த்த மாதிரியும் கிடைக்கும். எதுவானால் என்ன! நமக்கு ஆக்ஷேபமே இல்லை. இதை விடப் பிடிச்சது மால்புவா தான். சர்க்கரை போடாத ரபடியில் கொஞ்சம் போல் மைதா சேர்த்துப் பிசைந்து அதிரசம் மாதிரித் தட்டி நெய்யில் பொரித்து எடுத்துக் கொண்டு திக்கான சர்க்கரைப் பாகில் அவற்றை ஊற வைத்து ஜீரா சொட்டச் சொட்ட ராஜஸ்தானின் புஷ்கரில் கொடுப்பாங்க பாருங்க! அதுக்குஈடு இணை உண்டோ! கௌதமன் சார் வந்து இது என்ன "திங்க" பதிவானு கேட்கப் போறார். நான் ஓடியே போயிடறேன். முடிஞ்சா சாயங்காலமா/ மத்தியானமாப் பார்க்கலாம்.

   நீக்கு
  6. // ரபடி என்றால் என்ன?// அதிரா பாஷையில் டபரா ??

   நீக்கு
  7. சர்க்கரை சேர்க்காத கோவாவை ரபடி என்பார்கள். சர்க்கரை சேர்த்தாலும் ரபடி தான். ஆனால் பொதுவாகக் கடைகளில் ரபடி எனக் கேட்டால் சர்க்கரை சேர்க்காத கோவாவே கிடைக்கும். மீடா ரபடி என்றால் தான் சர்க்கரை சேர்த்த கோவா! சிவந்த நிறத்தில் காட்ஃபரீஸ் மில்க் சாக்லேட் மாதிரியே சுத்தமான பாலில் பால் கேக் செய்து துண்டங்கள் போட்டு வைச்சிருப்பாங்க. வாயில் போட்டால் அப்படியே கரையும். நம்ம மில்க் சாக்லேட்டெல்லாம் அதுக்கு முன்னே தூசு!

   நீக்கு
 7. அம்பேரிக்காவில் பையர் பிட்சா பேஸ் வாங்கி வந்து வீட்டிலேயே அவனில் வைத்துச் சுடச் சுடக் கொடுப்பார். இப்போதெல்லாம் பிட்சா வாரம் ஒரு நாள் எனக் கட்டாயமாக ஆர்டர் பண்ணுகிறார்கள். சீஸ் பிட்சா தவிர்த்துப் பல்வேறு விதமான வெஜிடபுள் பிட்சாக்கள். பாலக் போட்டு ஒரு பிட்சா. நாங்க போனால் போகுது என சீஸ் பிட்சா மட்டும் சாப்பிட்டு வைப்போம். விமானப் பயணங்களில் கட்டாயமாய் ஏதேனும் ஒரு வேளை சீஸ் பிட்சா கொடுத்துடுவாங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அமெரிக்காவில் முட்டை கலவாத பீட்ஸா கிடையாது என்று சொல்கிறார்களே!

   நீக்கு
  2. இந்தியாவில் கூடத் தான். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். அதிலும் கேக்குகளில் கட்டாயமாய் முட்டை இருக்கும். எங்க மருமகள் முட்டையே தொட மாட்டாள் என்பதால் அவளுக்காகப் பையர் முட்டையில்லாக் கேக் தயாரிக்கும் ஜெயின் குடும்பத்திடமே கேக்/பிட்ஸா போன்றவை வாங்குவார். முட்டை இல்லாவிட்டாலும் கேக் நன்றாகவே இருக்கும். ஏனெனில் மாமியார்/மாமனார் சாப்பிடவென்று நானும் (கன்டென்ஸ்ட்) மில்க் மெயிட் மட்டும் பயன்படுத்திக் கேக் தயாரித்திருக்கேன்.

   நீக்கு
 8. பிட்சா உலகெங்கும் அறிமுகம் ஆன அந்தத் தொண்ணூறுகளில் ஜாம்நகரில் இருக்கையில் வீட்டிலேயே அவனில் பிட்சா செய்திருக்கேன். பிட்சா பேஸையும் தயாரித்துக் கொண்டு செய்தது உண்டு. பிட்சா பேஸை மட்டும் விலைக்கு வாங்கிக் கொண்டு செய்ததும் உண்டு. இப்போது சுமார் 2 வருடங்கள் முன்னர் பிட்சா வீட்டில் செய்ய முயற்சி பண்ணினேன். மைக்ரோவேவில் சரியா வரலை. அன்னிக்குத் தான் அவனைக் கொடுத்துட்டோமே என்று ரொம்ப வருந்தினேன். தோசைக்கல்லிலேயும் பண்ணலாம். வெஜிடபுள் ஊத்தப்பம் மாதிரி இருக்கும். :))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதனில் திங்க கிழமை கருத்துகளாக வருகின்றனவே!

   நீக்கு
  2. சரி..சரி.. இதுக்கு பதில் சொல்லி எதுக்கு கீசா மேடத்திடம் வம்பு வளர்ப்பானேன்.

   நீக்கு
  3. ஹெஹெஹெஹெஹெ, சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா தைரியமாச் சொல்லுங்க நெல்லை. கொஞ்சம் பொழுது போகுமே!

   நீக்கு
  4. பிஸாவில் நாம் சேர்க்கும் மேற்பொருட்களிலும் இருக்கிறது சூட்சுமம்.

   நீக்கு
  5. //வெஜிடபுள் ஊத்தப்பம் மாதிரி இருக்கும்// - இறைவா... மறந்தும்கூட இவங்க வீட்டில் பிட்சா பண்ணச்சொல்லிடக்கூடாது, சாப்பிட்டுவிடக்கூடாது. அப்புறம் பிட்சா சாப்பிடும் ஆசையே போயிடும் போலிருக்கே.

   எதையாவது படத்தைப் பார்க்கவேண்டியது. அப்புறம் காய்கறிகள் போட்ட ஊத்தாப்பத்தை பிட்சா என்று சொல்லவேண்டியது. ஹாஹா

   நீக்கு
  6. நீங்க வந்தால் பாரம்பரியச் சமையல் தான். நோ பிட்சா, நோவெங்காயம், நோ பூண்டு. நோ முருங்கைக்காய், முள்ளங்கி.

   நீக்கு
 9. நூடுல்ஸ் கிட்டே எல்லாம் போனதில்லை. கயிலை யாத்திரை முடிஞ்சு காட்மாண்டுவில் இருந்து ராயல் நேபாள் ஏர்லைன்ஸில் தில்லி திரும்புகையில் உணவில் நூடுல்ஸ் தான் கொடுத்தாங்க. அந்த விமானப் பயணிகளிலேயே நாங்க இரண்டு பேரும் தான் நூடுல்ஸைச் சாப்பிடாமல் அப்படியே திருப்பிக் கொடுத்திருப்போம். பிடிக்கலை. இப்போவும் சில உணவுப் பண்டங்களுடன் இலவசமாக வரும் நூடுல்ஸ் பாக்கெட்டை வேலை செய்யும் பெண்ணிடம் கொடுத்துவிடுவேன். ஒரே ஒரு முறை பதஞ்சலியில் கோதுமை நூடுல்ஸ் வாங்கிச் சமைத்தேன். அதே போல் ஒரே ஒரு முறை பாஸ்தாவும் சேமியா உப்புமா மாதிரிப் பண்ணிச் சாப்பிட்டோம். மேக்ரோனி எல்லாம் மருமகள் பண்ணுவாள். சூப்பில் பாஸ்தா, மேக்ரோனி போட்டுச் செய்வாள். டேஸ்ட் பார்க்கச் சொல்லிக் கெஞ்சுவாங்க. நாங்க எங்க வரைக்கும் ரசம் சாதம்/மோர் சாதம்/அப்பளம்/ஊறுகாயோடு நிறுத்திப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துபாய் சென்ற புதிதில், நம்ம ஊர் குழல் வறுவல் என்று நினைத்துக்கொண்டு, அடுப்பில் எண்ணையைக் கொதிக்கவைத்து மேக்ரோனியைப் போட்டு, அது ஏன் பொரியலை...இலுப்புச்சட்டி அடியில் போய் உட்கார்ந்துகொள்கிறதே என்று யோசித்து பிறகு அந்தப் பாக்கட்டைத் தூரப்போட்டதை இங்கு எழுதியிருக்கேன்னு நினைக்கிறேன்.

   நீக்கு
  2. ஹிஹிஹி, அதைப் பற்றித் தெரிஞ்சுக்கும் முன்னர் கடைகளில் தொங்கும்போது நானும் அப்படித் தான் நினைச்சேன். பின்னர் அது ஓர் முறை இலவசத்தில் வந்தப்போத் தான் படிச்சுத் தெரிந்து கொண்டேன். நல்லவேளையா எண்ணெய் வைச்சுப் பொரிக்கலை. பிழைச்சேன்.

   நீக்கு
 10. இங்கே யாருமே "தேவன்" அவர்களின் ரசிகர்கள் இல்லை போல. "கல்யாணி" ஓன்று போதுமே! எனக்கு மனசு சரியில்லைனால் நான் அதிகம் எடுத்துப் படிப்பது தேவனின் கதைகள் தான், அல்லது ஆர்க்கி/ஆர்ச்சி படிப்பேன். மனசு லேசாகும். எங்க குழந்தைங்களுக்கு தேவன் நாவல்கள் அனைத்துமே லக்ஷ்மி கடாக்ஷம் தவிர்த்துப் படிச்சுச் சொல்லி இருக்கேன். அதே போல் பொன்னியின் செல்வனும். பின்னர் பொன்னியின் செல்வன் ஆங்கில மொழிபெயர்ப்பு வந்ததும் இருவருக்கும் வாங்கியும் கொடுத்தோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துப்பறியும் சாம்புவையும், ஸ்ரீமான் சுதர்சனத்தையும் மறந்ததேனோ...   தேவனின் துப்பறியும் சாம்பு உட்பட சிலவற்றை இங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்.

   https://tamil-desiyam.com/devan-tamil-novels-free-download/

   நீக்கு
  2. ஜாவர் சீதாராமனின் உடல்பொருள் ஆனந்தி, மின்னல் மழை மோகினி வேண்டுமா?

   https://tamil-desiyam.com/javar-seetharaman-novels-pdf-free-download/

   நீக்கு
  3. மறக்கலை ஶ்ரீராம், ஶ்ரீமான் சுதர்சனம் கொஞ்சம் விறுவிறு குடும்பக் கதை! ஹாஸ்யம் இரண்டாம் பட்சம் தான். சாம்பு அநேகர் அறிந்தவையே! அதனால் சொல்லலை. தமிழ் தேசியம் சுட்டி என்னிடமும் உள்ளது. அங்கே இருந்தே பல நாவல்கள் தரவிறக்கிப் படிக்கிறேன்.

   நீக்கு
  4. உடல்,பொருள், ஆனந்தி இரண்டாம் முறை வந்தப்போக் குமுதத்தில் இருந்து எடுத்து வைச்சிருந்தேன். காணாமல் போய்விட்டது. மின்னல், மழை, மோகினியோ பணம், பெண், பாசமோ தொலைக்காட்சித் தொடராக வந்து பார்த்திருக்கேன்.

   நீக்கு
  5. //இங்கே யாருமே "தேவன்" அவர்களின் ரசிகர்கள் இல்லை போல.// நாங்களெல்லாம் குழந்தைப்புள்ளங்க.. ஹி ஹி..

   நீக்கு
  6. நான் தேவனின் துப்பறியும் சாம்புவை, 7வது படித்தபோது, தாளவாடி லைப்ரரியில் இரண்டு பகுதிகளையும் படித்தேன். என்னிடமும் அந்தப் புத்தகம் இருந்தது. தேவன் எழுத்து நல்லா இருக்கும்...இருந்தாலும் ஜெனெரேஷன் கேப்பினால் பிறகு ரசிக்க முடிவதில்லை.

   நீக்கு
  7. துப்பறியும் சாம்பு ஐந்து பாகங்கள் நெல்லை. அது முதலில் விகடனில் கதையாக வந்து கொண்டிருந்திருக்கிறது. சித்தப்பா வீட்டில் ஓவியர் "ராஜூ"வின் படங்களோடு படித்தேன். ஆனால் முதல் முதல் சாம்புவின் அறிமுகம் "தேவன்" அவர்கள் இறந்த பின்னர் அவர் ஞாபகார்த்தமாகத் துப்பறியும் சாம்புவைச் சித்திரத் தொடராக விகடனில் வெளியிட்டார்கள். ஐம்பதுகளின் கடைசியில் இருக்கலாம். நினைவில்லை. அப்போதெல்லாம் எங்க வீட்டில் விகடன் வாங்கினாங்க. அப்போது படித்தது தான் துப்பறியும் சாம்பு முதல் முதலாக. பின்னர் தான் அது தொடராக வந்தது பற்றித் தெரியும். சித்திரத் தொடரில் தொடரில் உள்ள ஒரு சில அத்தியாயங்கள் இடம்பெறவில்லை.

   நீக்கு
  8. தேவனுக்கெல்லாம் ஜெனரேஷன் கேப்பெல்லாம் கிடையாது. எப்போ வேணா ரசிக்கலாம்.

   நீக்கு
 11. அன்பின் கீதாமா, முரளி, ஸ்ரீராம் மற்றும் வரப் போகும்
  அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  தொற்று மீண்டும் தலை எடுக்காமல்
  இறைவன் காக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 12. தேவன், லக்ஷ்மி, சாவி ,ஜெயகாந்தன் எல்லோரையும் பிடிக்கும்.டென்ஷன் இல்லாமல் படிக்க எஸ்விவி, தேவன், கி.ராஜ நாராயணன் அவர்களின் எழுத்தைப் படித்தால் போதும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எஸ்விவியின் ஹாஸ்யம் நுணுக்கமானது. குபீர் சிரிப்பை உடனடியாக வரவழைக்காது! குபீர் சிரிப்புக்கு தேவன், ஒரு சில கல்கியின் நகைச்சுவைக்கட்டுரைகள், சாவியின் எழுத்துக்கள், வால்கள் தொடர் எழுதின ராஜேந்திர குமார், கடுகு, பாக்கியம் ராமசாமி ஆகியோர் தான். துமிலன் ஹாஸ்யம் என்று சொன்னாலும் நடு நடுவே கொஞ்சம் ஆழமான கருத்துக்களுக்குள் போயிடுவார். துமிலன் எழுதினதில் நான் ரசித்தது ஓர் கிண்டி குதிரைப் பந்தயத்தில் கதாநாயகன்/கதாநாயகி இருவரும் சந்தித்துக் காதலை வளர்த்துக் கொண்டது பற்றி. அதில் கதாநாயகி ரொம்பவே ஆசாரம் என நினைத்துக் கொண்டு கதாநாயகன் அவளைப் பார்க்க வரும்போது வேஷ்டி கட்டிக் கொண்டு வருவதும், தம்பளரைத் தூக்கிக் குடிப்பதும், இன்று திருதினஸ்பிருக் விரதம் ஆகையால் சாப்பிட மாட்டேன் என்பதும் நினைத்து நினைத்துச் சிரிக்க வைத்த கதைகளில் ஒன்று.

   நீக்கு
  2. சமீபத்தில் பேஸ்புக்கில் நல்ல சிரிப்பை வரவழைத்த பதிவொன்று படித்தேன்.  அதை இங்கே கடத்திவர அதை எழுதியவரிடம் அனுமதி கேட்டேன்.  அவர் என் மெஸேஜை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.  அப்படியே போச்!

   நீக்கு
  3. மத்யமர் எனில் நாமெல்லாம் அவங்களுக்கு லட்சியமே இல்லை! :(

   நீக்கு
  4. மத்யமரில் சில பெண்கள் நல்ல நகைச்சுவையாக எழுதி பெண்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி கிடையாது என்னும் அவப்பெயரை நீக்கி இருக்கிறார்கள். சமீபத்தில் சஹானா என்னும் மின்னிதழில் அனன்யா மகாதேவன் எழுதியிருந்த நகைச்சுவை கதை மிகவும் சிறப்பாக இருந்தது.

   நீக்கு
  5. அனன்யா ஒரு காலத்தில் வலைப்பக்கங்களில் கொடி கட்டிப் பறந்தார். எல்லாவற்றையும் இந்த முகநூல் வந்து மாற்றி விட்டது. முகநூலிலும் ஒரு சில/பல நகைச்சுவைக் கட்டுரை எழுதினார் தான். ஆனாலும் வலைப்பக்கங்களில் அவரும் ஏடிஎம்மும் போட்டி போட்டுக் கொண்டு எழுதிய அந்த நாட்கள் மீண்டும் வராது! இப்போது மத்யமரில் "அமராவதி" என்பவர் நன்றாக எழுதுகிறார்.

   நீக்கு
  6. அமராவதி எழுத்தைதான் நான் சொன்னேன்.

   நீக்கு
  7. ஓ, அமராவதி கலக்கறாங்க! நானும் அவங்க ரசிகை. அதே போல் ஜீவியும். பிரமாதமாக எழுதுகிறார். அனன்யா எழுதுவது எல்லாம் குபீர்ச் சிரிப்போடு மட்டுமில்லாமல் நினைத்து நினைத்தும் சிரிக்கலாம். பருப்புசிலி பற்றி அவர் எழுதினது எனக்குப் பருப்புசிலி பண்ணும்போதெல்லாம் நினைவுக்கு வந்துடும். :)))) அதே போல் ஏடிஎம், அம்பி ஆகியோரின் எழுத்தும்.அம்பிக்கு ஈடு, இணை இல்லை.

   நீக்கு
 13. இங்கேயும் பீட்சா பேஸ் வைத்து நிறைய
  தக்காளி சீஸ் போட்டு பசங்களே செய்து கொள்கிறார்கள்.
  நான் கண்ணாலும் பார்ப்பதில்லை.

  முன்பெல்லாம் சப்வே போய் சாப்பிடுவோம் இப்போது
  அதுவும் கிடையாது. எல்லாம் வீட்டில் தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீட்டு சமையல் தேவாம்ருதம்.

   நீக்கு
  2. தேவாம்ருதம்... பிறர் செய்து கொடுத்தால்... நாமே செய்து சாப்பிடுவது அவ்வளவு சிலாக்கியமாக இருப்பதில்லை.

   நீக்கு
  3. அது ஏன்? என்று கேள்வியாக வைத்துக்கொண்டு புதன் கிழமை பதிலளியுங்கள்

   நீக்கு
 14. அனைவருக்கும் காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 15. ..நான் புத்தகக் கண்காட்சிக்கே போனதில்லை. புத்தகங்களும் வாங்கினது இல்லை.//

  இது சாதனையா? இதனால் பெருமையா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டும் இல்லை ஏகாந்தன். இயலாமையினால் வரும் வருத்தம். எத்தனையோ புத்தகக் கண்காட்சிகள் சென்னையில் நடந்திருக்கின்றன. போனதே இல்லை! :( புத்தகங்கள் வாங்கிச் சேர்ப்பதில் அவருக்கு ஈடுபாடு இல்லை. ஆகவே ஒத்துழைப்புக் கிடைக்காது. நூலகத்தில் வாங்கிப் படிச்சுக்கோ என்பார். மேலும் நான் பைன்டிங்கில் வைத்திருக்கும் புத்தகங்களே நிறைய இருந்தன. அவற்றில் பலவற்றை அண்ணாவிடம்/தம்பியிடம் கொடுத்து விட்டேன். இப்போது இருப்பவை ரொம்ப முக்கியமானவையும் எனக்கு நண்பர்கள் பரிசாக அளித்தவையும் தான்! :)))))

   நீக்கு
 16. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..

  பதிலளிநீக்கு
 17. ..இங்கே யாருமே "தேவன்" அவர்களின் ரசிகர்கள் இல்லை போல. "கல்யாணி" ஓன்று போதுமே!//

  நல்ல ஹாஸ்யத்தை மனம் நாடுகிறது! சாவி மட்டும்தான் தமிழில் நான் படித்த ஹாஸ்யம். இன்னும் தேவன் படிக்கவில்லை. வாங்கவேண்டியதுதான். சென்னை புத்தகக்காட்சிகளை மிஸ் பண்ணுகிறேன், அவ்வப்போதுதான் வந்திருக்கிறேன், வாங்கியிருக்கிறேன் என்றாலும்.

  2018-ல் டெல்லியில் டைம்ஸ்லிட் எக்ஸ்பிஷனுக்குப் போயிருந்தேன். நிறையப் புத்தகங்கள். தமிழ் புத்தகம் ஏதாவது இருக்கா எனத் தேடுகையில் சாகித்ய அகாடமி பிரிவில் இந்திய இலக்கிய எழுத்தாளர் வரிசையில் ஜெயகாந்தன், அசோகமித்திரன் போன்றோரின் கதைகளைப் பார்த்த ஞாபகம் - ஆங்கிலத்தில். மேலும் குடைகையில் கிடைத்தது பெருமாள் முருகனின் மாதொரு பாகன் - One Part Woman - ஆங்கிலத்தில் Penguin பதிப்பாக! தமிழ் இலக்கியத்தை இங்கிலீஷில் படிக்கும் மூடில் நானில்லை! சில ஆங்கிலக் கவிதைத் தொகுதிகளை லேசாக மேய்ந்தேன். இறுதியில் ஒரு ஆங்கிலக் கவிதைப் புத்தகம் வாங்கினேன். காஃபி குடித்து, கொஞ்சம் வேடிக்கைபார்த்துவிட்டுக் கிளம்பிவிட்டேன்.

  பதிலளிநீக்கு
 18. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க சொன்னீங்களேன்னு போன வாரம் ப்ரார்த்தித்துவிட்டு கண்ணைத் திறந்தால் இரவு வந்முவிட்டது. அந்த நாளும் ஒரு பிரச்சனையுமில்லாமல் இனிமையாகிவிட்டது கமலா ஹரிஹரன் மேடம்

   நீக்கு
  2. ஹா.ஹா.ஹா. பிரச்சனை ஏதுமின்றி நாள் நகர்ந்தது சந்தோஷந்தானே...! இவ்வாறே ஒரு நாள் என்பது அனைவருக்கும் இனிமையாக இருக்க எப்போதும் என் வாழ்த்துகள்.

   ஆமாம்.. நீங்கள் இறைவனிடம் பிராத்தனை செய்யும் நேரம் அதிகமாகி விட்டதா? இல்லை, ஒரு நாளின் நேரம் நான் நினைப்பது போல் சுருங்கி விட்டதா? எப்படியோ நாள் இனிமையாக நகர்ந்தால் சரிதான். இப்போதெல்லாம் பிரச்சனைகளை சந்திக்க மனதிலும், உடம்பிலும் தெம்பில்லை. உங்கள் பதிலுக்கு நன்றி.

   நீக்கு
 19. புதன் கேள்விகள்.

  1. தமிழில் புத்தகங்கள் நாவல்கள் படிப்பது குறைந்துவிட்டது என்று புலம்பும் எழுத்தாளர்கள், ஏன் சக எழுத்தாளர்களையோ அல்லது அவர்களின் படைப்புகளையோ எள்ளி நகையாடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்?
  2. புத்தகம் மட்டும், வாங்கிப் படித்தபிறகு பிறருக்குக் கொடுக்கும் மனம் நமக்கு இல்லாத்தன் காரணம் என்ன?
  3. கவிதைப் புத்தகங்கள் ஏராளமாக வெளிவருவதன் காரணம், அவற்றை எழுதுவது, அதிலும் வசன கவிதையாக, மிகச் சுலபம் என்பதாலா?
  4. உணவுப் புத்தகங்கள் ஏராளமாக விற்பதன் காரணம், சமைக்கச் சொல்லிக்கொடுக்கும் உறவினர்கள் (மூத்தவர்கள்) நம்முடன் இல்லாத்தாலா?
  5. சென்ற நூற்றாண்டில் (18) இல்லாதிருந்த காபி டீக்கு தபிழர்கள் அடிமையானது எவ்வாறு?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சக எழுத்தாளர்களின் படைப்பை உள்ளுக்குள் கேலி செய்து சிரிக்காத எழுத்தாளரே இல்லைனு நினைக்கிறேன். நிறைய எழுத்தாளர்களைத் தெரியும் என்பதால் இதை நேரிடையாகவே பார்த்திருக்கேன். புத்தகம் ஓரு பொக்கிஷம். திரும்பத் திரும்பப் படிக்கும் ஆவல் மனிதனுக்கு ஏற்படும். உடை எனில் ஓரிரு முறை போடுவோம். பின்னர் சில மாதங்களாவது எடுக்க மாட்டோம். புத்தகம் அப்படி இல்லை. நினைத்தால் எடுத்துப் புரட்டிப் பார்க்கத் தூண்டும். மனிதன் நாக்குக்கு அடிமை என்பதால் உணவுப் புத்தகங்கள் விற்கின்றனவோ? இந்தக் காஃபி, தேநீர் எப்படி வந்தது என்பதை ஓர் பதிவாக எழுதின நினைவு. தேடிப் பார்க்கணும்.

   நீக்கு
  2. படிக்கவேண்டும் என்று நினைத்தாலும் சில புத்தகங்கள் படிக்கவே ஓடமாட்டேன் என்கிறது..  அழகிய மரம் ஒரு உதாரணம்!

   நீக்கு
  3. கூடவே இந்திய வரலாறு என்று கோசாம்பி எழுதிய ஒரு புத்தகத்தையும் வைத்துக் கொண்டு பரீட்சைக்குப் படிக்கும் மாணவன் போல அவ்வப்போது உட்காருகிறேன்!

   நீக்கு
 20. வணக்கம் சகோதரரே

  இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. பீட்சாவை பற்றிய பதில்கள் ரசித்தேன்.

  இந்த நவீன கால உணவுகள் எல்லோருக்கும், ஏதோ ஒரு கட்டாயத்தின்/விருப்பத்தின் பேரில் பழக்கமாகி போனதுதான். ஆனாலும், பருப்பு பொடி/துவையலுடன் நெய் சேர்த்த கலந்த சாதத்திற்கு ஒரு வத்தக் குழம்பை தொட்டுக் கொண்டு, ஒரு சுட்ட உளுந்து அப்பளத்தை இடையில் ருசிக்காக கடித்தபடி சாப்பிடும் ஒரு வாய் உணவுக்கு இந்த நவீனங்கள் எடுபடாது எனத் தோன்றும். அரிசி உணவு எடை போடுமென அதை ஒதுக்கி விட்டு நூறுகணக்கில் பணம் செலவழித்து இப்படி சாப்பிடுவது, பிறகு உடல் இளைக்க ஆயிரக்கணக்கில் உடற்பயிற்சி நிலையங்களுக்கு செலவழிப்பது இன்றைய நாகரீகமாகி விட்டது. சமயத்தில் கால மாற்றத்தை நாம் விரும்பும் மாற்றமாக்கிக் கொள்கிறோம்.

  புத்தகங்களை குறித்த கட்டுரை நன்றாக இருந்தது. முன்பு நூலகத்தில் நிறைய எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் எடுத்துப் விடாமல் (அப்போது கூட நேரம் கிடைத்தது) படித்துள்ளேன். இப்போதெல்லாம் நமக்கென்று புத்தகங்களை வீட்டிலேயே வாங்கினாலும் படிக்க இயலவில்லை. வேலைகள் (கடமைகள்) பெருகி விட்டதா? இல்லை நம் சோம்பேறித்தனம் அதிகமாகி விட்டதா? என யோசிக்க வைக்கிறது. நேரமும் முன்பை விட குறுகிப் போய் விட்டதாக தோன்றுகிறது. இதில் அறிந்த/அறியாத புத்தகங்களின் ஏகப்பட்ட விலையை பார்த்ததும், இப்படிப்பட்ட சூழ்நிலைகளை வைத்துக் கொண்டு ஏன் வாங்க வேண்டுமெனவும் உள் மனசு வந்து எச்சரிக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விளக்கமான, விரிவான கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
  2. //முன்பு நூலகத்தில் நிறைய எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் எடுத்துப் விடாமல் (அப்போது கூட நேரம் கிடைத்தது) படித்துள்ளேன். இப்போதெல்லாம் நமக்கென்று புத்தகங்களை வீட்டிலேயே வாங்கினாலும் படிக்க இயலவில்லை. வேலைகள் (கடமைகள்) பெருகி விட்டதா? இல்லை நம் சோம்பேறித்தனம் அதிகமாகி விட்டதா? என யோசிக்க வைக்கிறது. நேரமும் முன்பை விட குறுகிப் போய் விட்டதாக தோன்றுகிறது.//

   Same Feeling!

   நீக்கு
 21. என் மகன் சிறுவனாக இருந்த பொழுது அவனுடைய வகுப்புத் தோழன் அடிக்கடி பீஸா சாப்பிடுவானாம். அதை நண்பர்களிடமும் பெருமையாக சொல்லிக் கொள்வான் போலிருக்கிறது. பியர் பிரஷரினால் பாதிக்கப்பட்ட எங்கள் மகன் எங்களை நச்சரிக்க, ஒரு வீக் எண்ட் பிஸா ஹட்டிற்கு கிளம்பினோம். என் மகன் சந்தோஷத்தில்,"நிஞ்சா டர்டில்(அவனுடைய அப்போதய ஃஃபேவரிட் கார்டூன் காரக்டர்)பீஸாதான் சாப்பிடும்" "என்னடா இது டர்டில் சாப்பிடுவதையெல்லம் எங்களை சாப்பிட வைக்கிறாய்?" என்று அலுத்துக் கொண்டேன். ஆனால் அதை சுவைத்ததும் ரொம்ப பிடித்தது. அதன் பிறகு அடிக்கடி செல்ல ஆரம்பிதோம். 241பீஸா என்னும் கடை விளம்பரத்திலும் வந்தோம்(அதைப் பற்றி என் தளத்தில் எழுதியிருகிறேன்).

  மஸ்கட்டில் புதன் கிழமைகளில் பீஸா ஹட்டில் வீக் எண்ட் ஆஃபர் இருக்கும் என்பதால் அதிக நேரம் காத்திருக்க நேரிடும். ஒரிரு தடவைகள் அந்த கும்பலை பார்த்து மிரண்டு வேறு ஹோட்டலுக்குச் சென்றிருக்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து விட்டோம்.

  பதிலளிநீக்கு
 22. ..நகைச்சுவைக் கட்டுரைகள் கதைகள் ரொம்பப் பிடிக்கும் என்றாலும் தமிழில் நகைச்சுவை அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதை வருத்தத்துடன் சொல்ல வேண்டியிருக்கிறது.//

  ஹாஸ்யமாக எழுதுவது ஒரு கலை. எல்லோருக்கும் வருவதில்லை. எழுத்தில் ‘ஹாஸ்யம்’ என்றொரு வகைமை உண்டு: அது ஒரு சீரியஸான literary category என்கிற பிரக்ஞையே பலருக்கு இல்லை. தமிழ் எழுத்தாள, இலக்கிய விமர்சன அசடுகளையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

  என்னிடமும் சில புத்தகங்கள் நான் திறப்பதற்காகக் காத்திருக்கின்றன. ஒன்றிரண்டை சில நாட்களுக்கு முன்பு ஆரம்பித்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நகைச்சுவையாக எழுதுவது ரொம்ப கஷ்டம். அது இயல்பாக வரவேண்டும். சுஜாதாஒரு முறை,"எந்த பத்திரிகை ஆசிரியராவது நகைச்சுவை தொடர்கதை வேண்டும் என்று கேட்டால் லொக் லொக் என்று இருமி விட்டு, எழுந்து வந்து விடுவேன்" என்று கூறியிருந்தார்.

   நீக்கு
  2. சுஜாதாவின் 'ஆதலினால் காதல் செய்வீர்' கதையையும், ஸ்ரீரங்கத்து தேவதைகளில் 'ஜீனியஸ்' கதையையும் தனியாக பயணிக்கும் பொழுது நினைவுகூற மாட்டேன்,சிரிப்பை அடக்க முடியாது, பார்க்கிறவர்கள் என்ன இவங்க தனியா சிரித்துக் கொள்கிறார்கள்? என்று என்னிடம் இருந்து ஒதுங்கி செல்லக் கூடாதல்லவா?

   நீக்கு
  3. கீதா அக்கா சொன்ன ராஜேந்திரகுமார் எழுதிய வால்கள்(வால்தான் பாக்கி) மற்றும் யார் எழுதியது என்று நினைவில்லாத 'சிரிக்காவிட்டால் விடமாட்டேன்' படித்து விட்டு சிரித்திருக்கிறேன் - அப்போது...

   மலையாள வார்டன்  "கடை உள்ளே நீதான் காப்பியாத்தணும்" என்பார் மூக்கடைப்போடு..   மத்லப் "கடவுளே நீதான் காப்பாத்தணும்"

   நீக்கு
 23. "பீஸா ஹட், பீஸா இன், டாமினோஸ் போன்றவைகளில் உலகின் எந்த மூலையில் சாப்பிட்டாலும் அதே ருசி கிடைக்க வேண்டும் என்பதற்காக பேஸ் செய்ய பயன்படுத்தும் மைதா மாவு, சீஸ் போன்றவை உலகம் முழுவதும் ஒரே ப்ராண்ட்தான் பயன்படுதுவார்கள், அதையும் அதன் தலைமை நிறுவனம் அனுப்பி வைக்கும். அது எப்போது அனுப்பி வைக்குமோ?இங்கே எப்போது செய்வார்களோ? உங்களுக்கு ஃப்ரெஷ்,ஒரிஜினல் பீஸா சாப்பிட வேண்டுமென்றால் லிட்டில் இட்டாலிக்குச் செல்லுங்கள். அங்குதான் பீஸா ஆரம்பத்தில் இத்தாலியில் எப்படி தயாரித்தார்களோ அதே முறையில் செய்வார்கள்" என்று எங்கள் அண்ணாவின் மாப்பிள்ளை கூற, இரண்டு தடவை சென்றோம். டாமினோஸ், பீஸா ஹட் போன்றவைகளில் சாப்பிடும் பொழுது வயிறு ஹெவியாகி விடும். லிட்டில் இட்டாலியில் அந்த தொல்லை கிடையாது. பீஸா சற்று மெலிதாக, சீஸ் குறைவாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுவையான தகவல்களுக்கு நன்றி.

   நீக்கு
  2. பீட்சாவில் உருப்படியே அந்த சீஸும் வெஜ்ஜும்தான் (காளான் இல்லை). அப்பளாம் மாதிரி பீட்சா சாப்பிட்டுவிட்டு, ஒரிஜினல் பீட்சா சாப்பிட்டேன் என்று சொல்லிக்கொள்வதில் என்ன பெருமையோ... நான் லண்டனில் அதுபோல ஒன்று சாப்பிட்டு நொந்துபோனேன்.

   நீக்கு
 24. என்னுடைய மேற்படி பின்னூட்டத்தை படித்து விட்டு, பானுமதி என்ன லிட்டில் இட்டாலியின் ப்ராண்ட் அம்பாசிடரா? என்ற கேள்வியை எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 25. பீட்சாவிற்கான பதில்கள் - ரசித்தேன். மற்றவையும் நன்று.

  பதிலளிநீக்கு
 26. நான் எட்டாம் வகுப்பு படிதுக் கொண்டிருந்த பொழுது நூடுல்ஸ் சந்தைக்கு வந்த புதிது, எங்கள் பள்ளியில் எல்லோருக்கும் ஒரு பாக்கெட் இலவசமாக தந்தார்கள். வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் ஒரே பள்ளியில் படித்ததால் நிறைய பாக்கெடுகள் கிடைத்து விட்டன. அதில் குறிப்பிட்டிருந்த செய்முறைப்படி செய்ததில் யாருக்கும் பிடிக்கவில்லை. தூக்கி கொட்டியாச்சு. குழந்தைகளுக்காக செய்ய ஆரம்பித்து இப்போது வெள்ளி இரவு உணவு நூடுல்ஸ் அல்லது பாஸ்தா என்றாகி விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நூடுல்ஸ் கூட கொடுக்கப்படும் டேஸ்ட் மேக்கரை உபயோகப்படுத்தாமல் தூக்கி எறிந்துவிட்டால் போதும். மீதி நூ சாப்பிட நன்றாக இருக்கும்.

   நீக்கு
  2. ஹாஹாஹா கேஜிஜி சார், நாங்க நூடுல்ஸ் பாக்கெட்டைப் பிரித்துக் கூடப் பார்த்தடு இல்லை. பதஞ்சலி நூடுல்ஸில் ஒரு மசாலாப் பாக்கெட் சின்னதாக இருக்கும். அதைத் தேவைனாப் போடலாம். போடாமலும் இருக்கலாம். கோதுமை சேவை போல இருக்கும். இப்போல்லாம் அதுவும் வாங்குவது இல்லை.

   நீக்கு
  3. நாங்கள் ஆகாதது எல்லாம்தான் செய்வோம்!  அந்த மசாலா பாக்கெட் இல்லாமல் நூடுல்ஸ் இல்லை.  மேலும் அந்த நூடுல்ஸ் மசாலா மட்டும் தனியாக வாங்கியும் அவ்வப்போது வேறு செய்முறைகளிலும் கலப்போம் - உப்புமா உட்பட!

   நீக்கு
  4. தனியா வேறே கிடைக்குமா! ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

   நீக்கு
 27. நான் பார்த்தவரையில் ஆலயமணி திரைப்படத்தில் சரோஜாதேவி படம் முழுவதும் அழகாக இருப்பார்.
  காவல்காரனில் ஜெயலலிதா
  உன்னால் முடியும் தம்பியில் சீதா வெகு அழகாக இருப்பார். இதை ஆ.வி. விமர்சனதில் கூட குறிப்பிட்டிருந்தார்கள்.
  நேற்று முன் தினம் ராஜ் டி.வி.யில் உதயகீதம் படம் போட்டார்கள்.பார்த்து பல
  வருடங்கள் ஆயிற்றே என்று பார்த்தேன். ரேவதி ஒவ்வொரு ஃப்ரேமிலும் அழகாக இருந்தார்.
  ரிதம் படத்தில் மீனா அழகாக இருப்பார்.
  சிகரம் படத்தில் ராதா அழகாக இருப்பார். சிகரம் நினைவுகு வந்ததும், அதில் வரும்,'இதோ இதோ என் பல்லவி..' பாடல் நினைவுக்கு வந்து, மூன்று நாட்களாக அதையே முணுமுணுத்துக் கொண்டிருக்கிறேன் ஸ்ரீராம் எப்போது போடுவாரோ?
  வைஜெயந்தி மாலா, ஹேமமாலினி, ஸ்ரீதேவி,ஜெயபிரதா(தசாவதரத்தை விட்டு விடலாம்) போன்ற phenomenal beauties எல்லாப் படங்களிலும் அழகுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு பெண் இன்னொரு பெண்ணின் அழகைப் பாராட்டுவதா? என்னாச்சு இன்று? ஒருவேளை பனி மழை பெய்யப்போகிறதா?

   இவங்களுக்கு 'புலி' படத்தில் நடித்த ஸ்ரீதேவியைப் பார்க்கச் சொல்லிடவேண்டியதுதான். மூக்கு எவ்வளவு உருகியிருந்தது என்பதையும் கணக்கெடுத்துச் சொல்லணும்

   நீக்கு
  2. லிஸ்ட்டில் அனுஷ் இல்லையா?  :((

   நீக்கு
  3. அதானே? எப்படி மறந்தேன்!!??

   நீக்கு
 28. புத்தகங்கள் வாங்குவது பற்றிய அலசல் சிறப்பு. நான் ஒரு காலத்தில் நிரைய புத்தகங்கள் வாங்கினேன். எனக்குப் பிறகு அவைகள் என்னாகுமோ என்னும் நினைப்பு புத்தகங்கள் வாங்குவதை குறைத்து விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யார் வீட்டிலும் உள்ள புத்தக அலமாரியில் இருக்கும் புத்தகங்களை வீட்டில் உள்ள யாரும் முழுவதுமாகப் படித்திருக்கமாட்டார்கள்.

   நீக்கு
  2. ​உண்மை. முற்றிலும் உண்மை.

   நீக்கு
 29. கேள்வி/பதில்களை விட பிட்சாவுக்கு ரசிகர்கள் அதிகம் போல் தெரியுதே! :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாரத்துக்கு ஒரு பிசா சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.  வெயிட் எறியதற்கு அதுதான் காரணம் என்றான் மகன்.  மூன்று வாரங்களாக நிறுத்தி இருக்கிறேன்.  இந்த வாரம் சாப்பிட்டு விடவேண்டும்..  சே..  இந்த வாரமும் கடந்து விடவேண்டும்!

   நீக்கு
  2. ஹையோ! ஶ்ரீராம், பிட்சா ஒரு துண்டு சாப்பிடுவதே அதிகம். ஆனால் இங்கெல்லாம் அதன் அளவு எப்படினு தெரியலை. பையர்/பெண் வாங்குவதை எல்லாம் 2 நாட்கள் வைத்துக் கொள்வோம். நீங்க என்னடான்னா ஒரு பிட்சா என்கிறீர்கள்! சும்மாவானும் தானே! உடம்புக்குக் கெடுதல் ஶ்ரீராம். கூடியவரை குறைத்துக் கொள்ளுங்கள். தப்பாய் எடுத்துக்க வேண்டாம்.

   நீக்கு
  3. இந்த கீசா மேடத்தை நம்பி அவங்க வீட்டுக்குப் போக முடியாது போலிருக்கு. ரொம்பச் சாப்பிட்டால் வெயிட் போட்டுடும் உங்களுக்கு என்று சொல்லி, எனக்கு 1/4 தோசை மட்டும் தருவாரோ?

   நீக்கு
  4. மீதி 3/4 தோசையை என்ன செய்வார்?

   நீக்கு
  5. தப்பாய் எடுத்துக்க என்ன இருக்கு?  நான் நீங்கள் சொன்னதைக் கேட்காமல் நாக்குக்கு கட்டுப்பட்டு சாப்பிட்டா நீங்க தப்பா எடுத்துப்பீங்களா?!!

   நீக்கு
  6. கௌதமன் சார், நெல்லை நீங்க இருவரும் அம்பேரிக்காவில் பிட்சாவின் சைசைப் பார்க்காததால் சொல்றீங்க. இந்தியப் பிட்சாவின் சைஸ் எனக்குத் தெரியாது என்றாலும் நாங்க வாங்கின ஒயாலோ பிட்சா சின்னதுனால் ரொம்பச் சின்னது. அதுவே 300 ரூபாய். நாலு துண்டுகள் போட்டுக் கொடுத்தாங்க. சின்னச் சின்னது தான். அதுவே வயிறு நிறைந்து விட்டது, சீஸ் இருந்ததால். அம்பேரிக்கப் பிட்சா 2 துண்டுகள் சாப்பிட்டாலே அதிகம். ரேவதி, மதுரைத் தமிழர், கோமதி அரசு ஆகியோரைக் கேட்டுப் பாருங்கள்.
   @கௌதமன் சார், மிச்சம் 3/4 தோசையை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்துடுவேன். :)))))

   நீக்கு
 30. சுஜாதாவின் எழுத்தில் இயல்பான அங்கதம் உண்டு. அது அந்தந்த பாத்திர விசேஷத்தோடு ஒட்டிச் செல்லும். படிக்க சுவாரஸ்யம் தரும். அவர் ஒரு ஆள்தான். சாகித்ய அகாடமிக்கு இவர் மேல் என்ன கோபம் எனத் தெரியவில்லை. இவரே மலையாளத்தில், வங்க மொழியில் எழுதியிருந்தால் சாகித்ய அகாடமி விருதோடு ஓடி வந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாஹித்திய அகாடமியில், தமிழகம் சார்பாக யார் யார் இருந்தார்கள் என்று ஒரு கணக்கெடுங்கள். உடனேயே விடை கிடைத்துவிடும்.

   நீக்கு
 31. பர்கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக்கு பிடிக்காத ஒன்று

  பதிலளிநீக்கு
 32. நூடில்ஸ் பிசா பர்கர் பாஸ்ரா எப்பொழுதாவது சாப்பிடப் பிடிக்கும்.
  கணவருக்கு நிறைய புத்தகங்கள் வாங்கப் பிடிக்கும் வீட்டில் ஒரு லைப்ரரியே உண்டு.இப்பொழுது வாங்குவதைக் குறைத்துள்ளோம்.

  பதிலளிநீக்கு
 33. பீஸா, பர்கர், பிள்ளைகள், வாங்கி தந்து முதன் முதலில் சாப்பிட்டோம். வேறு வழி இல்லாமல் அது மட்டுமே உணவு எங்கிற போது மட்டுமே! விரும்பி சாப்பிடுவது இல்லை.
  பிள்ளைகள் , பேர [பிள்ளைகள் வரும் போது ஆர்டர் செய்து வாங்குவோம், பர்கர் பிடிக்காது அவர்களுக்கும் பீஸா மட்டுமே வாங்குவார்கள்.

  நூடில்ஸ்,மேக்ரோனி, நான்தான் முதன் முதலில் மாமியார் குடும்பத்திற்கும், விருந்தினர்களுக்கும் செய்து கொடுத்து இருக்கிறேன் . விடுமுறைக்கு ஊருக்கு வந்தால் இரண்டு மூன்று அயிட்டங்கள் செய்யும் போது இதுவும் கொஞ்சம் இருக்கும். மெயின் அயிட்டம் இட்லி, பொங்கல் என்று உடன் இருக்கும். திடீர், குபீர் செய்யும் டப்பக்களை என் கணவர் வாங்கி வருவார்கள். திடீர் சாம்பார், உடனே செய்யும் புட்டு, இடியாப்பம் என்று பலதும் ரெடி மிக்ஸ் வாங்கி வைத்து இருப்போம்.

  புத்தகங்கள் பரிசு கொடுக்க வாங்குவது மட்டுமே இப்போது எங்களுக்கு என்று வாங்குவதை குறைத்து விட்டோம் பல ஆண்டு முன்பே. கடைசியாக" நாலயிர திவ்ய பிரபந்தம்" பழசு ஆகி கிழிய ஆரம்பித்து விட்டது என்று புதிதாக வாங்கினார்கள்.
  வீட்டில் உள்ள புத்த்கம் என்றால் மெதுவாக படித்து கொள்ளலாம் என்று மெதுவாக படிப்பேன். யாரிடமாவது வாங்கிய இரவல் புத்த்கம் என்றால் விரைவில் படித்து விட்டு பத்திரமாக திருப்பி கொடுத்து விடுவேன்.

  பதிலளிநீக்கு
 34. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 35. Unlike polls attract each other. - ///ஆண்கள் எப்போதுமே அமைதி விரும்பிகள். அதனால்தான் வன்முறை நிகழ்ச்சிகளை டி வி யில் மட்டும் பார்க்கின்றனர்.// ஏ அப்பா! அப்படியா? திரைப்படங்களில் விஜயலலிதா, ஜோதி லட்சுமி, சிலுக்கு, ஜெயமாலினி போன்ற நடிகைகளின் கவர்ச்சி நடனத்தை அதிகம் ரசித்தது யார்? பலான படங்கள் யாருக்காக?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்களைக் கேட்டால்? நாங்க அந்த ஆட்டங்களை எல்லாம் பார்த்தது இல்லை.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!