செவ்வாய், 8 ஜூன், 2021

கேட்டு வாங்கிப் போடும் கதை : அந்தக்காலத்துல - துரை செல்வராஜூ 

அந்தக் காலத்துல...
துரை செல்வராஜூ 
************************

" அந்தக் காலத்துல இங்கே ஒரு மரம் இருந்தது!..." 

எதிர்ப் புறத்தில் தாத்தா சுட்டிக் காட்டிய இடத்தை வெறித்து நோக்கிக் கொண்டிருந்தார்கள் பேரப் பிள்ளைகள்...

எழுபது வருடங்கள் பின்னோக்கிச் சென்றது பெரியவரின் மனம்...

கிழக்கு மேற்காக நீண்டிருந்த கப்பிச் சாலையின் தெற்காக விரிந்து பரந்திருந்தது அந்த  மரம்..

எத்தனை எத்தனையோ பறவைகளுக்கும் அணில்களுக்கும் தாய் வீடாக அந்த மரம்...

அப்படியும் இப்படியுமாகச் சென்று வரும் சத்தி விலாஸ் பஸ்கள் சற்று ஓய்வெடுத்ததெல்லாம்  அந்த மரத்தின் நிழலில் ...

சுமையேற்றிச் செல்லும் வண்டிகள் அடைக்கலம் ஆனதுவும் அந்த மரத்தின் நிழலில் தான்..

உயரமான கிளைகளில் கட்டப்பட்டிருக்கும் கயிறுகளில் வாழைப் பழ சீப்புகளும் இளநீர்க் குலைகளும் ஊஞ்சலாடிக் கொண்டிருக்க மறுபுறம்
அவித்த சோளம் வறுத்த கடலை பணியாரம் சுழியம் என்று மக்களின் பசி தீர்ந்ததுவும் அந்த மரத்தின் நிழலில் தான்...

இவற்றுக்கிடையில் பெரிய பெரிய பானைகளில் தண்ணீரும் நீர் மோரும் வைத்து யாரோ ஒருவர் புண்ணியம் சேர்த்துக் கொண்டதுவும் அந்த மரத்தின் நிழலில் தான்...

ஆனால் இப்போது அந்த நிழலும் இல்லை.. மரமும் இல்லை..

இன்றைக்கு அந்த இடம் நசநச.. என்று கடைத்தெரு... 

வட்டார மேம்பாட்டிற்காக பல லட்சம் செலவு செய்து கட்டப்பட்டதாக எழுதப்பட்ட கணக்கு விவரத்துடன் முற்றிலும் பழுதடைந்த நிலையில் பேருந்து நிறுத்தம் நிழற்குடை...

இத்தனைக்கும் பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் தான் ஆகியிருந்தன..

காணச் சகிக்காத விளம்பரங்கள்.. தாம்பூல எச்சிற் கறைகள்... உடைத்து நொறுக்கப்பட்ட மது பாட்டில்கள்.. மனிதரும் மிருகங்களும் பறவைகளும் உண்டு கழித்த மிச்சங்கள்... 

ஒட்டு மொத்த குப்பை கூளங்களின் இருப்பிடமாக விளங்கிற்று... 

பைத்தியமும் ஒதுங்க விரும்பாத அந்த இடத்தில் - வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்த அந்த இடத்தில் தலைக்கேறிய போதையுடன் குப்புறக் கிடந்தான் ஒருவன்.. வேட்டி நிலை குலைந்த அலங்கோலம்.. 

ஊர் மானம் அவனால் போய்க் கொண்டிருந்தது...

" அது என்ன மரம் தாத்தா?... " - பிரசாத் ஆவலுடன் கேட்டான்...

" தூங்குமூஞ்சி மரம்... "


பசங்கள் சிரித்தார்கள்..

" தாத்தா - ஸ்லீப்பிங் ட்ரீ !?.. "

யெஸ் மா!..

" நாங்க பார்த்ததே இல்லை!... "

" இனியும் நீங்க பார்க்க முடியுமா தெரியலை.. பகல்..ல விரிஞ்சு இருக்கிற இலை எல்லாம் சாயங்காலம் ஆனதும் மூடிக்கிடும்...  குடை மாதிரி அகலமா நிழல் கொடுக்கிற மரங்கள்.. ல ஆல மரத்துக்கு அடுத்தது தூங்கு மூஞ்சி மரம் தான்... மண்ணையும் மனசையும் குளுமைப் படுத்துறது தூங்கு மூஞ்சி மரம்... இலையெல்லாம் கரும் பச்சை நிறத்துல.. பூவெல்லாம் மயில் கொண்டை மாதிரி இளஞ் சிவப்பு நிறத்துல.. பட்டை பட்டையா காய்கள்... காத்தடிக்கும் காலத்துல கலகல... ன்னு சத்தம்... பார்க்கவும் கேட்கவும் அவ்ளோ அழகு!... "

" சரி... புறப்படலாமா?... " - கேள்விக் கணையுடன் மகன் புறப்படுவதற்குத் தயாரானான்...

தாத்தாவும் பாட்டியும் வாழ்ந்த ஊர்..  அப்பா வளர்ந்த ஊர்..

சோழர் கால கலைப் பெட்டகமாய் அகத்தீசர் திருக்கோயில் விளங்கும் ஊர்.. - என்ற பெருமைகளில் நீந்தியதால் குடும்பத்தோடு வந்திருக்கிறார்கள்..

கோயில் தரிசனம் முடிந்து பழைய நண்பர்களோடு கலந்து பேசியாயிற்று..

அதுவரையில் சுதாகரனுக்குத் திருப்தி.. ஆனால் பெரியவருக்கோ வருத்தம் தான் மிச்சம்...

அவருடைய கூட்டாளிகள் பலரும் பூவுலகை விட்டுப் போயிருந்தார்கள்..
மீதமிருந்த ஒரு சிலரும் நினைவு தடுமாறியிருந்தார்கள்...

' நான் தான் சச்சிதானந்தம்!.. ' - என்று சொல்லிப் புரிய வைப்பதற்குள் இவர் களைத்துப் போனார்...

ஒருவழியாக அங்கிருந்து புறப்படும் போது தான் இந்தக் கதையின் ஆரம்பம்...

" தாத்தா... வேற ஒன்னும் ஸ்வீட் ஸ்டோரீஸ் இல்லையா?.. " - கழுத்தைக் கட்டிக் கொண்டாள் காயத்ரி...
" ஏன் இல்லை?.. உங்க ஆச்சிய கல்யாணம் கட்டிக்கிட்டு மாட்டு வண்டியில வந்தப்போ இங்க தான் இறங்குனோம்.. வாக்கப்பட்ட ஊர்ல உங்க ஆச்சியோட கால் பட்டது முதன் முதலா இங்கேதான்.. "

" ஈஸ்ஸி'ட் ஆச்சி!?... " - காயத்ரி முகத்தில் புன்னகை...

ஆச்சிக்கு இந்த வயதிலும் முகம் சிவந்து போனது...

" ஆச்சிய கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தப்போ  இங்கே ஏன் தாத்தா இறங்குனீங்க?.. " - பிரசாத்துக்கு சந்தேகம்...

" அப்போ மரத்துக்குப் பக்கத்துல அந்த வாய்க்கால் ஓரமா ஒரு பிள்ளையார்.. உறங்கா விழிப் பிள்ளையார்.. ந்னு பேரு.. அவருக்கு தேங்காய் உடைக்கிறதுக்காக இறங்கினோம்... "

" இப்போ அந்தப் பிள்ளையார் எங்கே தாத்தா?... "

" அந்தப் பிள்ளையாருக்குப் பூர்வீகம் நம்ம சிவன் கோயில்தான்.. அங்கேயிருந்த அவரை திருடனுங்க கிளப்பிக்கிட்டு போறப்ப இந்த இடம் வந்ததும் பயந்துட்டானுங்க... அப்படியே போட்டுட்டு ஓடிட்டானுங்க... ரொம்ப நாள் இங்கே தான் இருந்தார் பிள்ளையார்.. அப்புறமா திருப்பணி நடந்தப்போ மறுபடியும் கோயிலுக்கு உள்ளே போய்ட்டாரு.."

பிள்ளைகள் சிரித்தார்கள்...

" சரிப்பா... போகலாம்... " - சுதாகரன் காரை ஸ்டார்ட் செய்தான்...

அப்போது எதிரே வந்த ஒருவர் " கேட்டு போட்டுட்டாங்க... தெறக்குறதுக்கு  அரை மணி நேரம் ஆகும்!.. " -  என்றார்..

அவரை இடைமறித்துக் கேட்டதற்கு " இந்த லைனு கரண்டு கம்பியாகப் போவுதுங்க.. வேலை நடக்குது.. மெயில் கூட மெதுவாத்தான் வருது.. இடையில கிராசிங் வேற இருக்கு... " - என்றார்...

சுதாகரன் காரை நகர்த்தி ரயில்வே கேட்டுக்கு சற்று முன்பாக நிறுத்தினான்...

நுங்கு.. பனங்கிழங்கு... பலாச்சுளை...  - என, கூடைகளில்...

கூடவே கூல்ட்ரிங்க்ஸ்... ஐஸ்க்ரீம்... ஐஸ்வாட்டர்... வியாபாரம் சூடு பிடித்தது...

நுங்கும் பலாச்சுளைகளும் வாங்கிக் கொண்டார்கள்...

தாத்தா உற்சாகமாக கதையைத் தொடர்ந்தார்...

" மரத்துக்கு அந்தப் பக்கமா நீதிக் கல்லு ... ன்னு ஏழடி உயரத்துக்கு கருங்கல் தூண்... தப்பு செஞ்சவங்கள அதுல கட்டி வச்சித் தான் சாட்டையால அடிச்சி தண்டனை கொடுப்பாங்க... "

" போலீஸ் பீப்பிள்ஸ் வந்து அடிப்பாங்களா?... "

" அந்தக் காலத்துல போலீஸ் எல்லாம் ஊருக்குள்ளேயே வரமாட்டாங்க...  சின்ன தப்புக்கெல்லாம் ஊர் பஞ்சாயத்துக் காரங்களே தண்டனை கொடுத்துடுவாங்க... வாடா நீதிக் கல்லுக்கு... ன்னு சத்தம் போட்டாலே திருடுறவன், பொய் சொல்றவன்... ஏமாத்துறவன்..ன்னு எல்லாப் பயலுகளுக்கும் பேதியாயிடும்... இல்லேன்னா சவுக்கடிக்கும் கொலைப் பட்டினிக்கும் யார் ஆளாகுறது!... "

" சின்னச் சின்ன தப்புக்கெல்லாம் பெரிய பெரிய பனிஷ்மென்டா தாத்தா?.. "

" அப்படி இல்லேன்னா நாடும் வீடும் நாறிப் போய்டாதா... "

" சரி.. சரி.. நீங்க அரசியல் பேசாதீங்க!.. " - என்றாள் உடனிருந்த ஸ்ரீமதி சச்சிதானந்தம்...

" இப்படிச் சொல்லி சொல்லித்தானே ஜெயில் கம்பிக்கு  அந்தப் பக்கமும் செல்போன் ஸ்மார்ட் போன்..ன்னு புழங்குது!.. "

சச்சிதானந்தம் சிரித்துக் கொண்டார்..

" இப்போ அந்த நீதிக் கல்லு எங்கே தாத்தா?.. "

" நீதிக் கல்லு இருந்தா தேசத்துல நிம்மதி இருக்க முடியாது.. ன்னு அதப் புடுங்கி வித்துட்டானுங்க போல இருக்கு... "

விரக்தியுடன் புன்னகைத்தார் தாத்தா..

தூரத்தில் ரயில் வருகிற சத்தம் கேட்டது.. பிள்ளைகள் ஆவலுடன் எட்டிப் பார்த்தார்கள்..

ஏதோ பாசஞ்சர் ரயில் வந்து ஓரமாக நின்று கொண்டது...

" தொண்ணூறு வருசத்துக்கு முன்னால மகான் ஒருத்தரோட நீராவி எஞ்ஜின் ரயில் ஒன்னு வந்து நின்னுதாம்... ஜனங்க எல்லாம் அந்த மகானப் பார்த்து வந்தேமாதரம்.. வந்தேமாதரம்.. ன்னு கோஷம் போட்டாங்களாம்... அவரோட பேச்சைக் கேட்டுட்டு தேசத்துக்கு நல்லது.. ன்னு காசும் பணமும் வாரிக் கொடுத்தாங்களாம்...  அப்போ தான் உங்களோட கொள்ளு தாத்தாவும் பெரிய ஆச்சியும் நூறு பவுன் நகைய அந்த மகான் கையில தந்தாங்களாம்!... "

பிள்ளைகளின் விழிகள் வியப்பால் விரிந்தன..

" யார் தாத்தா அந்த மகான்!?.. "

" அவர் தான் இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த காந்தி மகான்!.. "

எக்ஸ்பிரஸ் ரயில் தடார்.. தடார்.. என்ற சத்தத்துடன் ஸ்டேஷனைக் கடந்து சென்றது...

ரயில்வே கேட் திறக்கப்பட்டது..

சிறையை விட்டு விடுதலை ஆனது போல் மக்கள் இங்கும் அங்குமாக ஒரு ஒழுங்கின்றிப் பாய்ந்தார்கள்...

காரை மெல்ல நகர்த்தினான் சுதாகர்..

" அந்த மரம் இப்போ இல்லையே ஏன் தாத்தா?... "

" ஒரு மழை காலத்துல புயலும் சேர்ந்து வந்ததால காத்து வேகம் தாங்காம கிளை ஒன்னு முறிஞ்சு ரோட்டுல விழுந்திடுச்சி... மழை நின்னதும்  கும்பலா கிளம்புனானுங்க... இந்த மரத்தால ஜனங்களுக்கு இடைஞ்சல்.. ன்னு தீர்மானம் போட்டானுங்க..  கோடாலியும் கையுமா வந்து மரத்தை வெட்டிக் கொலை செஞ்சிட்டு புறம் போக்கு இடத்தை பட்டா போட்டுக் கிட்டானுங்க.. நீதி சொன்ன கல்லும் போச்சு.. நிழல் கொடுத்த மரமும் போச்சு... "

கண்களைத் துடைத்துக் கொண்டார் தாத்தா..

தார்ச் சாலையில் விரைந்து கொண்டிருந்தது கார்...

ஃஃஃ

61 கருத்துகள்:

 1. காலை வணக்கம் அனைவருக்கும்.

  கிராமத்தின் வ ள ர் ச் சி பற்றின கதை. நான் வளர்ந்த கிராமத்தையும் நினைவுக்குக் கொண்டுவந்தது.

  போன காலங்கள் போயின காலங்கள்தான். வேறு என்ன சொல்ல.

  நினைவுகளை மீட்ட துரை செல்வராஜு சாருக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லை..    வாங்க...

   நீக்கு
  2. நுங்கு,பலா - ஒரே சீசன்ல கிடைக்கும். பனங்கிழங்கு எப்படி அப்போ கிடைக்கும்?

   நீக்கு
 2. அன்பின் வனக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..

  பதிலளிநீக்கு
 3. இன்று எனது கதையினைப் பதிவு செய்த ண்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி...

  வழக்கம் போல சித்திரங்களால் சிறப்பித்த அன்பின் கௌதம் அவர்களுக்கும் நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி துரை செல்வராஜூ ஸார்..  நீங்கள் கதை அனுப்பி கனாக்காலம் ஆச்சு!  ஒவ்வொன்றாக வெளியிட்டாச்சு..  இப்போது உங்கள் கதை ஸ்டாக் தீர்ந்து போச்சு!  அடுத்த கதை எப்போது அனுப்புவீர்கள்?  

   நீக்கு
  2. என்னது?.. சரக்கு தீர்ந்து போச்சா!..
   இதோ வருகின்றேன்...

   நீக்கு
 4. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அனைவருக்கும் அன்பின் நல்வரவு...

  பதிலளிநீக்கு
 5. அனைவருக்கும் காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்கி அமைதியும் மகிழ்ச்சியும் நிலவப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா அக்கா..   நன்றியும் வணக்கமும்.  இணைந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
  2. முல்லைப்பூ தொடுத்துட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரமா? காத்திருந்து காத்திருந்து கண் பூத்துப்போயிற்று.

   நீக்கு
  3. நேத்திக்குச் சாயங்காலமா வந்தேனே! நீங்க தான் சாப்பிட்டுட்டுத் தூங்கிட்டீங்க! :)

   நீக்கு
 7. வளர்ச்சி என்பது உண்மையில் நன்மை தருவதா/கெடுதல் தருவதா? யோசிக்க வைத்த பதிவு. இப்படி எத்தனை மரங்களை/நீதிக்கற்களை/சுமைதாங்கிக் கற்களை எடுத்திருக்கோம். சில ஊர்களில் நடுகற்கள் கூடப் பிடுங்கிப் போடப் பட்டிருக்கின்றன. அமைதியாக இருந்த ஊர்களில் எல்லாம் இப்போது சப்தம். ஒலிபெருக்கிகள், இரண்டு சக்கர வாகனங்கள், கார்கள் எனப் பறக்க ஆரம்பித்திருக்கின்றன. கிராமங்கள் தன் தனித்தன்மையை இழந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகின்றன.

  பதிலளிநீக்கு
 8. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  நம் எல்லோரின் எதிர்காலமும் வளமுடனும் ,
  மன அமைதியுடனும் இருக்க
  இறைவன் அருள் செய்ய வேண்டும்.

  பதிலளிநீக்கு
 9. அன்பின் கீதா, ஸ்ரீராம், நெல்லைத்தமிழன் அனைவருக்கும் இந்த நாள்
  நல்ல நாளாக வேண்டும்.
  அன்பு துரை செல்வராஜின் கதை
  சிறப்பு செவ்வாய்ப் பதிவு. என்றும் நலம் பெறுக.

  பதிலளிநீக்கு
 10. அருமையான கதைக்கு அழகாக ஓவியம் வரைந்து கொடுத்திருக்கிறார்
  கேஜிஜி . தாத்தாவின் சோகம் கண்ணில் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 11. அருமையான நினைவலைகதை.

  ஒவ்வொரு ஊரும் இப்படித்தான் தங்களது அடையாளத்தை இழந்து கொண்டு இருக்கிறது....

  பதிலளிநீக்கு
 12. கதை சொல்ல நல்ல தாத்தா இருப்பதால் குழந்தைகளும் சரித்திரத்தை
  அறிய முடிகிறது.
  கண்முன்னே செழிப்பு மெது மெதுவாக
  மறைந்து வருகிறது.
  கிராமங்களில் பசும் வயல்கள் சில ஊரில் மட்டுமே
  இருக்கின்றன.
  சென்னையே நீண்டு திண்டிவனம்,திருச்சி என்று
  விரிந்து விட்டது.
  கண்முன் ஏரிகள், மரங்கள், வயல் வெளிகள்
  அனைத்தும் மறைந்து
  வரிசை வரிசையாகக் கட்டிடங்கள் வாடகை சம்பாதித்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

  இந்தக் கதையை மனம் உணர்ந்து
  சொல்லி இருக்கிறார்.
  கண்முன்னே காட்சிகள் விரிந்து கதை சொல்கின்றன.

  பதிலளிநீக்கு
 13. தூங்குமூஞ்சி மரம் நம் வீட்டில் இப்போது வளர்ந்து கொண்டிருக்கிறது.

  துரையின் சொற்களில் வண்ணக் களஞ்சியமாகக்
  காட்சி தரும் இந்த மரங்களே
  முன் காலத்தில் சாலையோரம் நிறைந்திருந்தன.
  கூடவே புளிய மரங்களும்.
  சிறந்த அந்தக் காலமும் பொறுமை குறைந்த
  இந்த நிகழ் காலமும் கதையின் கரு.

  சிறப்பாக வடிவம் பெற்ற அந்த ரயில்வே கேட்,
  இடையில் ஆடும் காட்சிகள் அனைத்துமே
  சிறப்பு. அன்பின் துரை செல்வராஜுவுக்கும்
  பதிப்பித்த ஸ்ரீராமுக்கும், கௌதமன் ஜிக்கும்
  நன்றியும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 14. மிகவும் அருமையான கதை துரை அண்ணா. பல விஷயங்கள் நினைவில் நிழலாடியது. என் கிராமமும் நிறைய மாறிவிட்டதுதான். அதுவும் சுற்றுப் புறம் எல்லாம்.

  கிராமங்களும் வளர்கின்றன!!!! தொழில்நுட்ப வளர்ச்சி, அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சிகள், பொருளாதார வளர்ச்சி என்று தவிர்க்க இயலாத ஒன்று. வளர்ச்சி என்பது வேண்டிய ஒன்று. இல்லை என்றால் உலகத்தின் பிற நாடுகளோடு அல்லது அவற்றிற்கு நிகராக நாமும் நிற்க வேண்டிய அவசியம்...ஒன்று வளரும் போது மற்றொன்று தளரும், ஒன்றிருந்தால் மற்றொன்றில்லை என்பதுதான் நியதியாகிப் போனது. ஆனால் அதில் இப்படிக் கிராமங்களும், இயற்கையும் நீர் வளமும் தன் பொலிவை தனித்தன்மையை இழக்க நேரிட்டதுதான் மிகவும் வருத்தமான விஷயம். அவற்றை சீர்குலைக்காமல் வளர்ச்சியைச் செய்ய முடியாதா என்று எனக்குத் தோன்றியதுண்டு. முடியும் சரியான திட்டமிடம் இருந்தால் வின் வின் சிச்சுவேஷனுக்கு யோசித்தால் கண்டிப்பாக விடை கிடைக்கலாம்.

  ஆனால் ஊழலும் அதில் எத்தனை நாம் அடிக்கலாம் என்று யோசிக்கும் மனிதர்கள் இருக்கும் வரை மற்றொருவனை கீழெ தள்ளி மிதித்து தான் முன்னேறும் நிலைக்கு ஒத்ததுதான் இந்த வளர்ச்சியும்.

  கீதா

  பதிலளிநீக்கு
 15. கடந்து வந்து விட்டோம், இனி திரும்பிச் செல்ல முடியாது. திருச்சிக்கு செல்லும் பொழுதெல்லாம் நான் பிறந்து வளர்ந்த திருச்சி இதுவல்ல என்று தோன்றும். பெங்களூர்,பூனா போன்ற நகரங்களும் மாறித்தான் போய் விட்டன.

  பதிலளிநீக்கு
 16. //அவருடைய கூட்டாளிகள் பலரும் பூவுலகை விட்டுப் போயிருந்தார்கள்..
  மீதமிருந்த ஒரு சிலரும் நினைவு தடுமாறியிருந்தார்கள்...

  ' நான் தான் சச்சிதானந்தம்!.. ' - என்று சொல்லிப் புரிய வைப்பதற்குள் இவர் களைத்துப் போனார்...// கதையின் ஜீவன் இந்த வரிகள்.

  பதிலளிநீக்கு
 17. தாத்தாவிற்கும் புஜம் இறுக்கிய நவ நாகரிக சட்டை மாட்டி, கதையின் கருத்தாழத்தை சித்திரத்திலும் கொண்டு வந்த ஜேஜிஜிக்கு பாராட்டுகள். ஆழ்ந்த அவதானிப்பு அவர் ஓவியங்களில் வெளிப்படுவதை சொல்லியே ஆக வேண்டும்.

  தம்பியின் கதை அவரது ரசனைகளுக்கு உகந்த இனிமையான தாலாட்டு.

  பின்னால் வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 18. //" சின்னச் சின்ன தப்புக்கெல்லாம் பெரிய பெரிய பனிஷ்மென்டா தாத்தா?.. "

  " அப்படி இல்லேன்னா நாடும் வீடும் நாறிப் போய்டாதா... "

  " இப்படிச் சொல்லி சொல்லித்தானே ஜெயில் கம்பிக்கு அந்தப் பக்கமும் செல்போன் ஸ்மார்ட் போன்..ன்னு புழங்குது!.. "

  " இப்போ அந்த நீதிக் கல்லு எங்கே தாத்தா?.. "

  " நீதிக் கல்லு இருந்தா தேசத்துல நிம்மதி இருக்க முடியாது.. ன்னு அதப் புடுங்கி வித்துட்டானுங்க போல இருக்கு... "//

  நல்ல வசனங்கள் ரசித்தேன்....

  தாத்தா அருமையான தாத்தா...பேரக் குழந்தைகள், நல்ல தாத்தா பாட்டி என்று வளரும் போது அந்த வளர்ப்பு தனிதான். இங்கு நல்ல என்ற சொல் மிக மிக முக்கியம். ஏனென்றால் நான் சில தாத்தா பாட்டிகளைக் கவனித்து வருகிறேன். கையில் ரிமோட்டுடன் முழு நேரமும்...பேரக் குழந்தைகள் ஏதாவது கேட்டால் எரிச்சல் வரும் அளவிற்கு...

  என் தாத்தாவை நினைவுக்குக் கொண்டு வந்தது.. என் தாத்தா என்னோடுதான் அதிகம் பேசுவார். நல்ல கதைகள் பல சொல்லுவார். மடியில் அமர்த்தி...பாசமிக்க தாத்த்தா பேரக் குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். ஆனால் எனக்கு மட்டுமே அவரிடம் மடியில் அமர்ந்து கதை கேட்டு வளர்ந்த பாக்கியம், எங்கு சென்றாலும் என்னை அழைத்துச் சென்றது எல்லாம் கிடைத்தது. மற்றவர்கள் வேறு இடங்களில் இருந்ததால்...

  இப்படிப் பலதையும் நினைவுபடுத்திய கதை துரை அண்ணா...பாராட்டுகள், வாழ்த்துகள் துரை அண்ணா.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோதரி தி.கீதாவின் பின்னூட்டம் மிகச் சிறப்பு. இவர் பார்வை மிக தீர்க்கமானது.

   கிராம நகர வாழ்க்கைகளுக்கு இடையேயாக நாம் பாலமிட வேண்டும். அமெரிக்காவில் இதைச் செய்திருக்கிறார்கள். நம்மால் முடியாததற்கு காரணங்கள் உண்டு.

   இது ஒரு கட்டுரைக்கான சப்ஜெக்ட்.
   தம்பியின் கதை போக்கு ஒரு பாதி ஏக்கத்தோடு முடிந்து விடுகிறது. இருப்பினும் மறுபாதியை எப்படி நிறைவேற்றுவது என்ற சிந்தனையை நம்மில் விதைப்பதற்காகவே இந்த கதை உருவாக்கம் கொண்டிரும்கிறது என்பதே என் எண்ணம்.

   நீக்கு
  2. சகோதரி தி.கீதாவின் பின்னூட்டம் மிகச் சிறப்பு. இவர் பார்வை மிக தீர்க்கமானது.//

   ஆ ஆ ஆ!! மெய்யாலுமா? ஜீவி அண்ணா மிக்க நன்றி. எதிர்பாரா கருத்து உக்கப்படுத்துகிறது!

   கீதா

   நீக்கு
 19. // மரத்தை வெட்டிக் கொலை செஞ்சிட்டு //

  மனம் வெம்பியது...

  பதிலளிநீக்கு
 20. தூங்குமூஞ்சி மரங்கள், கிராமத்து மனிதர்கள் என மனதை அப்படியே நினைவுகளுக்குள் இழுத்துச் சென்றது பதிவு. வழமை போலவே கதாசிரியரின் கதைகள் நம்மை நினைவுகளுக்குள் மூழ்கடித்து விடுகிறது. சிறப்பான கதை சொன்ன ஆசிரியருக்கு நன்றி.

  பதிவினை வெளியிட்ட எங்கள் பிளாக் நண்பர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  ஓவியம் - சிறப்பு!

  பதிலளிநீக்கு
 21. அனைவருக்கும் முகம் மலர அன்பான காலை வணக்கங்கள். தொற்று நீங்கி மக்கள் நலமாய் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 22. அருமையான கதை! நான் பிறந்து வளர்ந்த ஊரான ராசிபுரத்தை (சேலம் -நாமக்கல் இடையில் வரும் கிராமம்) ஞாபகப்படுத்தியது கதை. வழிநெடுக வயல்களும், தூங்கு மூஞ்சி மரங்கள் மற்றும் சவுக்கு மரங்கள் என பசுமையாக காட்சியளிக்கும். எங்கள் வீடு அமைந்த சாலையில் இருபுறமும் குல்மொஹர் மரங்கள் இருக்கும். கோடைக்காலத்தில் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு நிறங்களில் பூத்துக்குலுங்கும். வாசலில் புங்கை மரமும் இருந்தது. கிராமத்தில் வளர்ந்த பழைய நினைவுகளுக்கு சென்றுவிட்டேன். எங்கள் அப்பா, அம்மா, குழந்தைகளுடன் 12 வருடங்கள் கழித்து அங்கு சென்று பார்த்தால் ஊரே மாறிவிட்டிருந்தது. பேருந்து நிறுத்தத்தின் அருகே அழகாக நிற்கும் தேரைக் காணவில்லை. அதற்கு பதிலாக ஆடம்பரமான நகைக்கடை. குழந்தைகளுக்கு காட்ட வேண்டும் என்று நினைத்திருந்த நிறைய ஞாபக சின்னங்கள் காண கிடைக்கவில்லை. எங்கு பார்த்தாலும் பெரிய கட்டடங்களும், பேனர்களும். கைலாசநாதரையும், நித்யசுமங்கலி அம்மனையும் வணங்கி, இக்கதையில் வருவது போலவே, மனபாரத்துடன் வீடு திரும்பினோம்.நல்லதொரு கதைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 23. கௌ அண்ணா அப்ப கருத்து போடும் போது சொல்ல விட்டுப் போனது. உங்கள் ஒவியம் நல்லாருக்கு! நல்ல திறமை உங்களுக்கு இருக்கு கௌ அண்ணா!

  கீதா

  பதிலளிநீக்கு
 24. அவருடைய கூட்டாளிகள் பலரும் பூவுலகை விட்டுப் போயிருந்தார்கள்..
  மீதமிருந்த ஒரு சிலரும் நினைவு தடுமாறியிருந்தார்கள்...
  ' நான் தான் சச்சிதானந்தம்!.. ' - என்று சொல்லிப் புரிய வைப்பதற்குள் இவர் களைத்துப் போனார்...//

  இதையும் ரசித்தேன் ஏனென்றால் குழந்தைகளுககுக இப்படிச் சொல்ல தாத்தா பாட்டிகளுக்கு இது முக்கியமாச்சே!!! கதையில் இதுவும் முக்கிய அம்சம் பெறுகிறது. கதையில் வரும் தாத்தா ப்ளெஸ்ட் தாத்தா!

  பேரக் குழந்தைகளைத் தாத்தா பாட்டியிடம் (குறிப்பாக அப்பாவைப் பெற்றவர்களிடம்) அணுகவே விடாதவர்களையும் பார்க்கிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பேரக் குழம்தைகளைத... பார்க்கிறேன். //

   (குறிப்பாக அப்பாவைப் பெற்றவர்களிடம்) ஹஹ்.ஹா..ஹா.!

   இதற்குக் காரணம் என்ன, சகோ..?

   பாசவலை பின்னப்பட்டு விடும் என்று
   மருமகள்மார்கள் மனரீதியாக அஞ்சுகிறார்களோ?..

   நீக்கு
 25. இங்கு நான் அறிந்த நல்ல பாட்டிகள் வல்லிம்மா, கீதாக்கா, கோமதிக்கா, பானுக்கா,மனோ அக்கா வேறு யாரையும் விட்டிருக்கேனா?!!!

  பேரக் குழந்தைகளிடம் அன்பும் நல்ல விஷயங்கள் கற்றுக் கொடுக்கவும் செய்யும் பாட்டிகள். எல்லாருக்கும் நான் பிரார்த்திக்கிறேன் இன்னும் நிறைய வருஷம் நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று.

  பானுக்கா நீங்கள் நிறைய நல்ல விஷயங்களை இன்னும் நிறைய வீடியோவாகப் போடுங்க ப்ளீஸ். பேரக் குழந்தைகளுக்குப் பின்னாளில் உதவும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அன்பு சின்ன கீதாமா. நன்மையைச் சொல்லுவோம்.
   நேரம் இருக்கும் போது கேட்பார்கள்.

   நீக்கு
  2. கீதா இங்கு ஏகப்பட்ட பாட்டிகள் இருக்கிறார்கள் போலிருக்கிறதே. பா.மு.க.?

   நீக்கு
  3. கீதா இங்கு ஏகப்பட்ட பாட்டிகள் இருக்கிறார்கள் போலிருக்கிறதே. பா.மு.க.?

   நீக்கு
  4. கீதா இந்த பாட்டியை சொன்னதற்கு நன்றி.
   உங்கள் அன்புக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி.

   நீக்கு
 26. கதை மிக மிக அருமை. துரை செல்வராஜு சாரின் களம். சொல்லிச் சென்ற விதம் அந்தத் தாத்தா சொல்லும் கிராமத்தைப் போன்று அழகுடன் இருக்கிறது. உரையாடல்கள் சிறப்பு.

  பாராட்டுகள் சார்.

  நான் பிறந்து வளர்ந்த ராசிங்கபுரம் கிராமத்திற்கு மூன்று வருடங்களுக்கு முன் சென்றிருந்த போது அதிர்ச்சியாகிப் போனேன், இந்த தாத்தாவைப் போல் மனதுள் ஆதங்கம். தாத்தா பேரன் பேத்திக்குச் சொல்கிறார். நான் என் குழந்தைகளுக்குத் தட்டு தடுமாறி நான் இருந்த இடம், விளையாடிய இடங்கள் என்று காட்டினேன் அவை சரிதானா என்று கூடத் தெரியவில்லை.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் 7வது, 8வது படித்த பள்ளி இருந்த மலை கிராமத்துக்கு சில மாதங்களுக்கு முன் சென்றேன். நாங்கள் இருந்த வீட்டையே அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. மனக்கண்ணில் பெரிய பாலமாக இருந்தது, சிறிய பாலமாக இருப்பதையும், பெரிய இடங்களாக நினைவில் இருந்தவை சிறியதாகவும் இருக்கக் கண்டேன். நான் படித்த பள்ளி (பெரியது) அதே போலத்தான் இருந்தது. வாசல் மட்டும் பின்பக்கம் வைத்துவிட்டார்கள். கொரோனா சமயம் என்பதால் யாருமே இல்லை. நிறைய படங்கள் எடுத்துக்கொண்டேன்.

   நான் இருந்த வீட்டின் முன்பு பெரிய மைதானமாக இருந்ததில், உண்டு உறைவிட கிறிஸ்துவப் பள்ளி மிகப் பெரிதாகக் கட்டப்பட்டிருந்தது. ஊரும் எங்கெங்கோ வளர்ந்துவிட்டது. வளர்ச்சியா இல்லை வீக்கமா என்று தெரியவில்லை.

   நடிகர் ராஜ்குமாருக்குச் சொந்தமாக மிகப் பெரும் பண்ணை, பாலத்தை ஒட்டி இருந்தது. பலப் பல ஏக்கர். நல்ல செம்மண் பூமி. அப்போது டிராக்டர் வைத்து சோளம் பயிரிட்டிருந்தார்கள் என்பது என் நினைவு. ஆனால் இப்போ அந்த இடமே ஏதோ ஒரு 'நகர்' என்ற பெயரில் வீடுகள்.

   நீக்கு
  2. //ஊரும் எங்கெங்கோ வளர்ந்துவிட்டது. வளர்ச்சியா இல்லை வீக்கமா என்று தெரியவில்லை.//எனக்கும் இப்படித் தோன்றும்.

   நீக்கு
 27. ..நீதி சொன்ன கல்லும் போச்சு.. நிழல் கொடுத்த மரமும் போச்சு... "//

  நீதி கல்லாயிடுச்சு. மரம், மனசுலதான் நிழலாடுது.
  காலம் எக்ஸ்ப்ரெஸ் ரெயிலாத் தடதடத்துப் பறக்குது.

  சே.. செல்லில சார்ஜ் போயிடுச்சே. பவர் பேங்க விட்டுட்டு வந்தது தப்பாப் போச்சு.

  பதிலளிநீக்கு
 28. அருமையான கதை.
  //தாத்தாவும் பாட்டியும் வாழ்ந்த ஊர்.. அப்பா வளர்ந்த ஊர்..//

  பழைய கிராமத்தின் நினைவலைகள் மிக அருமை.

  //" ஏன் இல்லை?.. உங்க ஆச்சிய கல்யாணம் கட்டிக்கிட்டு மாட்டு வண்டியில வந்தப்போ இங்க தான் இறங்குனோம்.. வாக்கப்பட்ட ஊர்ல உங்க ஆச்சியோட கால் பட்டது முதன் முதலா இங்கேதான்.. "//

  தாத்தா பேத்திக்கு சொல்லும் பழைய நிகழ்வுகள் உரையாடல் மிக அருமை.


  // பெரியவருக்கோ வருத்தம் தான் மிச்சம்...

  அவருடைய கூட்டாளிகள் பலரும் பூவுலகை விட்டுப் போயிருந்தார்கள்..
  மீதமிருந்த ஒரு சிலரும் நினைவு தடுமாறியிருந்தார்கள்...

  ' நான் தான் சச்சிதானந்தம்!.. ' - என்று சொல்லிப் புரிய வைப்பதற்குள் இவர் களைத்துப் போனார்...//

  என் மாமனார் 105 வயது வரை வாழ்ந்தார்கள் . அவர்கள் அடிக்கடி இப்படி கவலை படுவார்கள். என் நண்பர்கள் பலரும் போய் விட்டார்கள், சிலர் வீட்டோடு முடங்கி விட்டார்கள். சிலருக்கு நினைவுகள் தப்பி விட்டது, காது கேட்கவில்லை இப்படி எங்களிடம் சொல்வார்கள் வாசலில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் போது.

  // நீதி சொன்ன கல்லும் போச்சு.. நிழல் கொடுத்த மரமும் போச்சு... "//

  ஆமாம் , உண்மை. வழி நடந்து செல்வோர் தங்கள் சுமையை இறக்கி வைத்து பின் மரத்தின் நிழலில் இளைப்பாறி செல்லும் சுமைதாங்கி கல்லும் இப்போது இல்லை.

  காலம் மாறியதை தாத்தா வருத்தமாக பதிவு செய்கிறார் தன் பேத்திக்கு.

  //இளநீர்க் குலைகளும் ஊஞ்சலாடிக் கொண்டிருக்க மறுபுறம்//
  மாயவரத்திலிருந்து வைத்தீஸ்வரன் கோவில் செல்லும் பாதையில் மரக்கிளைகளில் இப்படி ஊஞ்சல் ஆடும் இளநீர்க் குலைகள்.

  கிராமத்து காட்சிகள் கண்ணில் விரிந்தது. அருமையான கதைக்கு நன்றி, வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 29. கதைக்கு சாரின் ஓவியம் அருமை.

  பதிலளிநீக்கு
 30. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

  அருமையான கதையை தந்துள்ளீர்கள். தான் வாழ்ந்த நினைவுகளை தன் பேரன், பேத்திகளுடன் பகிர்ந்து கொள்ளும் தாத்தாவின் உரையாடல் நன்றாக உள்ளது. கதை கேட்கும் ஆர்வத்தில் குழந்தைகள் அறியாத வார்த்தைகளுக்கு சிரிப்பதும், அறிந்த பின் உணர்ந்து கொண்ட நிலைகளும் கதையோடு ஒன்றிப் போகிறது. வார்த்தைகளை அழகாக அமைத்து கதை படைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  அந்தக்காலம் உண்மையிலேயே வராது. காலம் மாற்றுவதில் அதிலிருக்கும் உண்மைகளும் இப்போதுள்ளவர்களுக்கு புரியாது. நல்ல கதை. பகிர்வுக்கு மிக்க நன்றி. தாமதமான வருகையாய் வந்துள்ளேன். நேற்று என்னால் வர இயலவில்லை. மன்னிக்கவும்.

  சகோதரர் கெளதமன் அவர்கள் வரைந்த ஓவியம் கதைக்குப் பொருத்தமாக உள்ளது. அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 31. என் கிராமக் கதை போலவே இருக்கிறது. சிறு மாற்றம் என்ன எனில் யாரும் ரயில் வண்டியில் வரவில்லை. ஆகவே நகை கொடுப்பது என்பது எழவில்லை. மற்றொரு மாற்றம் என்ன எனில் ஒன்றுக்குப் பதில் 5/6 மரங்கள்.
  கிராம்ம் இப்போது சிறு நகரம். ஆனால் எனக்கென்னவோ,அப்போதைய கிராமச் செழிப்பு இப்போது இல்லை

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!