வெள்ளி, 18 ஜூன், 2021

வெள்ளி வீடியோ : மாலைசூடி வாழ்ந்த வேளை வனவாசம் போனாலும் பிரியாத சீதை

 1961 ல் கொட்டாரக்கரா சொன்ன கதையை படம் எடுக்க நினைத்த பீம்சிங் சிவாஜி கணேசன் குழுவினர், அந்தப் படம் தமிழ்ப்பட வரலாற்றில் அப்படி இடம்பெறும் என்று நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.  ஒரு ட்ரெண்ட் செட்டராக, ஒவ்வொரு தங்கை மனத்திலும் நீங்க இடம்பெற்ற அந்தப் படம் பாசமலர்.

இன்றைக்கு 60 வருடங்கள் ஆகின்றன படம் வெளிவந்து.

அதற்குப்பிறகு எத்தனையோ அண்ணன் தங்கைப் படங்கள் வரிசை கட்டின.  சிவாஜியே தங்கை, தங்கைக்காக என்றெல்லாம் படங்களில் நடித்தார்.  இதில் தங்கைக்காக படத்தின் டைட்டில் சாங்கும் டி எம் ஸ் பாடி பிரபலமடைந்தது.

ராஜாமணி புரொடக்ஷன்ஸ் என்று அதுவும் சிவாஜி சொந்தத் தயாரிப்புதான் போல.  K P கொட்டாக்கராவின் கதைக்கு, சாவித்ரி சஜஸ்ட் செய்த ஆரூர்தாஸ் வசனம் எழுதி இருக்கிறார்.

பாடல்களை கண்ணதாசன் எழுத, இசை மெல்லிசை இரட்டையர் எம் எஸ் வி-ராமூர்த்தி.  மிகைநடிப்பு என்று இப்போது சொல்லப்பட்டாலும் படம் தியேட்டர்கள் கண்ணீரால் நனைய நனைய 25 வாரங்களைத் தாண்டி ஓடி வெள்ளி விழா கண்டது.  கிளைமேக்ஸ் காட்சி எடுக்கப்பட்ட நாளில் சிவாஜி கணேசன் மதிய சாப்பாட்டைக் கூட எடுக்கவில்லையாம்.  

ஆனந்த விகடன் அன்று தனது விமர்சனத்தில் "எத்தனையோ படங்கள் வரலாம், போகலாம்.  இந்தப் படம் ஒரு முறை பார்த்த நெஞ்சங்களில் காலாகாலத்துக்கும் நிலைத்து நிற்கும்" என்று எழுதி இருந்ததாம்.

இந்தப் படத்தின் பாடல்களை பற்றி சொல்லவும் வேண்டுமோ...    அதிலிருந்து இன்று ஒரு பாடல் "மலர்களை போல் தங்கை உறங்குகிறாள்"

கலைந்திடும் கனவுகள் வரியை முதல்முறை மேல்ஸ்தாயியில் ஏற்றியும், மறுபடி முதல் வரியின் டியூனிலேயும் போட்டிருப்பார் எம் எஸ் வி.

மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள் - அண்ணன் 
வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்.
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன் 
கற்பனைத் தேரினில் பறந்து சென்றாள்...
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன் 
கற்பனைத் தேரினில் பறந்து சென்றாள்...

மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை 
மங்கலமேடையில் பொன்வண்ணம் கண்டான்
மாவிலைத் தோரணம் ஆடிடக் கண்டான்   
மணமகன் வந்து நின்று மாலை சூடக்கண்டான் 

ஆசையின் பாதையில் ஓடிய பெண்மயில் 
அன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான் 
வாழிய கண்மணி வாழிய என்றான் 
வான்மழைபோல் கண்கள் நீரில் ஆடக்கண்டான் 

பூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள் 
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள் 
மாமனைப்பாரடி கண்மணி என்றாள் 
மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டாள் 
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் - அண்ணன் 
கற்பனைத் தேரினில் பறந்து சென்றாள்...என்னதான் பல படங்கள் நடுவே வந்து சென்றாலும் சிவாஜி கணேசன் அண்ணனாக மறுபடி 'அண்ணன் ஒரு கோயில்' படத்தில் 1977 ல் தோன்றினார்.  இதுவும் சிவாஜி புரொடக்ஷன்ஸ் படம்தான்.  இந்த முறை தங்கையாக சுமித்ரா.  மாறுபட்ட கதைக்களம்.  26 வாரங்கள் ஓடி வெற்றி பெற்ற பாசமலருக்குப்பின் 26 வருடங்கள் கழித்து இந்தப் படம்!  இதுவும் வெற்றி பெற்றது!  பாசமலர் படத்தை தஞ்சாவூர் டூரிங் டாக்கீஸ் ராஜேந்திராவிலும், அண்ணன் ஒரு கோவில் படத்தை தஞ்சாவூர் அருள் தியேட்டரிலும் பார்த்தேன்!

'தேவரக்கன்னு' என்கிற கன்னடப்படத்தைத் தழுவி தமிழில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் சிவாஜி கணேசன், சுமித்ரா, சுஜாதா நடித்திருந்தனர்.  ரிலீஸ் ஆன அன்றே நான் பார்த்த ஒரே படம்!  உபயம் சென்ற நவம்பரில் மறைந்த என் மாமா விசு.

கண்ணதாசன் பாடல்களுக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன்.  இதிலும் தங்கைக்காக ஒரு டி எம் எஸ் பாடல்.  இயக்கம் கே விஜயன்.  

மல்லிகை முல்லை பொன்மொழி கிள்ளை 
அன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை 
பொன் வண்ண ரதம் ஏறி இம்மண்ணில் எங்கும் ஓடி 
நல் அன்புத்துணை தேடி நான் தருவேன் 

சூடிக்கொடுத்தாள் பாவை படித்தாள் 
சுடராக எந்நாளும் தமிழ்வானில் ஜொலித்தாள் 
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள் 
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள் 
கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள் 
கன்னித்தமிழ் தேவி மைக்கண்ணன் அவள் ஆவி 
தன் காதல் மலர் தூவி மாலையிட்டாள் 

தோகை மீனாள் பூவையானாள் 
சொக்கேசன் துணையோடு ஊர்கோலம் போனாள் 
மாலை கண்டாள் கோவில் கொண்டாள் 
மாணிக்க மூக்குத்தி ஒளிவீச நின்றாள் 
தென்றல் தொட்டு ஆட கண் சங்கத்தமிழ் பாட 
தன் மக்கள் வெள்ளம் கூட காவல் கொண்டாள் 

மாலைசூடி வாழ்ந்த வேளை 
வனவாசம் போனாலும் பிரியாத சீதை 
ராமநாமம் தந்த ராகம் 
லவனாக குசனாக உருவான கீதம் 
மாமன் என்று சொல்ல ஓர் அண்ணன் இல்லை அங்கே 
அந்த அண்ணன் உண்டு இங்கே அள்ளி வழங்க 

78 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
  எல்லோரும் எப்போதும் நல் ஆரோக்கியத்துடன் இருக்க இறைவன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இறைவன் அருள பிரார்த்திப்போம்.  வாங்க வல்லிம்மா.  வணக்கம்.

   நீக்கு
 2. இரண்டுமே மிக அருமையான பாடல்கள்.
  பாசமலர் படத்தில் முடிவில் அழாதவர்கள்
  இருக்க முடியவே முடியாது.
  அது என்ன பாசம். உருக்கம். சாவித்ரி சிவாஜி
  முன்னால் யாரும் நிற்க முடியாது.
  தங்கையாவது இரு தலைக் கொள்ளி எறும்பாகத்
  தவிப்பாள்.அண்ணனுக்குத் தங்கை மட்டுமே உலகம்.
  அபார நடிப்பு.
  மலர்களைப் போல் ' பாடலில்
  முதல் டியூனிலிருந்து கடைசி அடிவரை
  இசை வெள்ளம் தான்.
  டி எம் எஸ்ஸின் குரலில் சிவாஜி சாரின் முக அசைவில்,
  முழுப்பாடலையும் மீண்டும் அனுபவிக்கிறேன்.
  கண்ணதாசன் கவிக்கு உரை சொல்லி முடியாது.
  இதே பாடல் கடைசியிலும் வரும் நேரம்
  நாங்கள் அனைவரும் எழுந்து நின்றது இன்னும் நினைவில்.
  இப்பொழுது வேண்டுமானால் மிகையாகத் தெரியலாம். ஆனால்
  அப்போது அது மனதை நிறைத்தது. நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் அம்மா.   அப்போது போடபப்ட்ட பாதை அது.  பின்னர் வந்தவர்கள் ட்ரெண்டை மாற்றி வேறு விதங்களில் நடிக்கலாம்.  தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் விரும்பியதைதான் சிவாஜி கொடுத்தார்.

   நீக்கு
  2. வல்லிம்மா சொல்வதைப் பார்த்தால், ஆண்கள்தான் பாசத்தில் சின்சியர், பெண்கள் சுயநலமிக்கவர்கள் என்று சொல்வது போலத் தெரிகிறதே

   நீக்கு
  3. அப்படியா நினைக்கிறீர்கள்?

   நீக்கு
  4. இல்லம்மா. முரளி.
   பாசத்தில் குறைவில்லை. கணவனும் சகோதரனும்
   இருவேறு திசையில் நிற்கும் போது எந்தப் பெண்ணும் தவிப்பாள்.
   அண்ணன் விட்டுக் கொடுக்கிறார். தங்கை அவருடன் மரிக்கிறாள்.
   இதைவிடப் பாசம் எங்கே காண முடியும்?
   பெண்களுக்குக் கணவரிடமும் மதிப்பிருக்குமே.

   அதைச் சொன்னேன்.

   நீக்கு
  5. கணவனும் சகோதரனும்
   இருவேறு திசையில் நிற்கும் போது எந்தப் பெண்ணும் தவிப்பாள்.//

   அதே அதே.....படம் பார்த்ததில்லை. ஆனால் இது உண்மைதான் எத்தனைக் குடும்பங்களில் பார்க்கிறோம்.

   கீதா

   நீக்கு
  6. இப்போ சன் தொலைக்காட்சியில் கிட்டத்தட்டப் பாசமலர் அளவுக்கு/அல்லது அதை விட அதிகமான பாசமுள்ள அண்ணன்/தங்கை கதை தொடராக வந்துட்டு இருக்கு! எனக்கெல்லாம் அதைப் பார்த்தாலே சிப்புச் சிப்பா வருதே! உருக்கமாய் இருக்கேனு தோணுவதில்லை. என்ன பிறவியோனு என்னை நானே நினைச்சுக்கறேன். நம்மவருக்குக் கண் கலங்கிடும். ஆனால் அதைக் காட்டிக்க மாட்டார். நானும் ரொம்பவும் நாசூக்காகக் கண்டுக்காமல் இருந்துடுவேன். த்ரில்லிங்க், நகைச்சுவை, நகைச்சுவை கலந்த த்ரில்லிங்க் மாதிரி வருமானு நினைச்சுப்பேன். இந்தத் தொடரையும் ஏழரைக்கே வருவதால் உட்கார்ந்து பார்க்கிறமாதிரிதான் இருக்கு. பலசமயங்களிலும். அப்போவே எழுந்து போய்ப் படுக்க முடியாதே! ஒன்பதரைக்குப் படுத்தாலே தூக்கம் வரப் பதினோரு மணி ஆயிடும் சில நாட்கள். மற்றநாட்கள் "உள்ளத்தில் நல்ல உள்ளம் தான்" என்பதால் "உறங்காது!" இஃகி,இஃகி,இஃகி!

   நீக்கு
  7. சகோதரனும் இருவேறு திசையில்...    சிக்கலான நிலைமை.  இன்னலையில் அண்ணனுக்காக உயிர்விட்ட தங்கை!  விசு படம் ஒன்றின் கிளைமேக்ஸும் நினைவுக்கு வருகிறது!

   நீக்கு
 3. இரண்டாவது பாடலிலும் கண்ணதாசன் மெருகேற்றிய தமிழ்.
  இவரைப் பெற நாமெல்லாம் என்ன தவம் செய்தோமோ.

  சொற்கள் தான் எத்தனை அழகு.
  நான் இந்தப் படம் பார்க்கவில்லை.

  மீண்டும் மல்லிகைப் பாடல்!!!
  வாசனையோடு பாசமும் சேர்ந்தால் எந்தப் பாடல்தான் இனிக்காது!!

  மிகப் பிரபலமான பாடல்.
  கூடவே ஒலிக்கும் மங்கள இசையும் அருமை.
  மிக நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையில் இந்த இரண்டாவது பாடலை வாணிஜெயராமின் மல்லிகைப்  பாடல்களோடு இணைத்திருந்தேன்.  பின்னர் மாற்றி வேறுவகையில் தனியாக வெளியிட்டு விட்டேன்!

   நீக்கு
 4. பொதுவா ஶ்ரீராம் வணிரீதியா வெற்றி பெற்ற படங்களிலிருந்து காலத்தை மீறி நிற்கும் பாடல்களைத் தெரிவு செய்து வெள்ளிக்கிழமைகளில் பகிர மாட்டார். இன்று விதிவிலக்கு போலும்.

  இன்றைக்கு மிகை நடிப்பு என்று சிம்பிளாகச் சொல்லிக் கடந்துவிடலாம். ஆனால் அனைவரையும் உருக்கிய படம் பாசமலர். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுத்தான் ஸ்டார் பாடகி லதா குடும்பமே சிவாஜி குடும்பத்துடன் நட்பு பூண்டது, லதா சகோதரிகள் சிவாஜியைத் தங்கள் உடன் பிறவா சகோதரனாக ஏற்றுக்கொண்டனர் என்பதைப் படித்தபோது சிவாஜியின் நடிப்பின் வீர்யம் தெரியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல அவதானிப்பு நெல்லை.  தொடர்ந்து அறியாத பாடல்களையே அறிமுகப்படுத்தும்போது கேட்பவர்கள் சுவாரஸ்யம் காட்டவில்லையோ என்கிற சந்தேகமும், அப்புறம் எப்போது இது மாதிரி பாடல்களையும் பகிர்வது என்கிற சஞ்சலமும்தான் இப்படிப் பகிர வைத்தன.

   நீக்கு
  2. அட!! நெல்லை நீங்க இப்படிச் சொல்ல நான் சமீபகாலமாக கீதாக்காவே கேட்டிருக்கேன்னு சொல்ற பாடல்கள் வருதேன்னு. அதுவும் இன்று சிவாஜி படப் பாடலள்!!! ஹாஹாஹா

   கணினியில் இந்தப் பதிவு ஸ்க்ரோல் ஆகும் கீதாக்காவின் கேட்டிருக்கிறேன்னு சொன்ன கருத்து வந்து நின்னுச்சு....அப்புறம் நகரவே இல்லை!!! ஹிஹிஹி...ஸோ அது பார்த்து அடன்னு அந்தக் கருத்து கீழ!!!

   கீதா

   நீக்கு
 5. இரண்டு பாடல்களுமே அருமைதான்.

  அண்ணன் ஒரு கோவில் இராமநாதபுரத்தில் பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் ராஜராஜ சோழன் படத்தை பரமக்குடி ரவி தியேட்டரில் 2ம் வகுப்பு படிக்கும்போது பார்த்தேன். நடிகர்கள்லாம் மாடிலேர்ந்து வந்து நடித்துவிட்டுச் செல்கிறார்கள் என நினைத்தேன். தியேட்டருக்குள் மேலே பெரிய வட்ட வடிவ டோம் லைட் அணைந்ததும் படம் ஆரம்பமாவதால், ரூமில் லைட்டு அணைத்துவிட்டு வந்து நடிக்கிறார்கள் என நினைத்தேன்.

   கில்லர்ஜியின் தேவகோட்டையில் தியேட்டர் இல்லையோ

   நீக்கு
  2. ஹா...  ஹா..  ஹா...   வந்து நடித்து விட்டு திரைக்குப்பின் சென்று நின்று கொள்வார்களா?

   நீக்கு
  3. நாங்க ராஜராஜசோழன் படத்தை அயனாவரம் "சயானி" தியேட்டரில் எங்களோட பொழுதுபோக்கு சபா மூலமாப் போய்ப் பார்த்தோம். அம்பத்தூரில் இருந்து போகவரப் பேருந்து ஏற்பாடு செய்து கூட்டிச் சென்றார்கள். அப்படிப் பார்த்ததில் ஜிவாஜியின் இன்னொரு படமான கௌரவமும் உண்டு.

   நீக்கு
  4. நெல்லை ஹாஹாஹாஹா நானும் அப்படித்தான் ஆனால் மாடியிலிருந்து இறங்கி என்று நினைத்ததில்லை. திரைக்குப் பின்னால் இருந்து நடிக்கறாங்க அது திரை போட்டு அதுல ஃபோட்டோ மாதிரி வருதுன்னு....ஹாஹஹாஅ சுசீந்திரம் கோயிலில் சின்ன வயதிலேயே ட்ராமா பார்த்திருக்கிறேனே! அதன் தாக்கம்.

   கீதா

   நீக்கு
  5. //கில்லர்ஜியின் தேவகோட்டையில் தியேட்டர் இல்லையோ ?//

   என்ன கேள்வி இது ? முப்பது தியேட்டருக்கு 27 குறைவாக இருக்கிறது.

   நீக்கு
 6. இரண்டு பாடல்களுமே அருமையானதே...

  அண்ணன் ஒரு கோவில் திரைப்படத்தை இராமநாதபுரத்தில் பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்கி அமைதி நிலை பெற்று மகிழ்வுடன் வாழப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 8. இந்தப் பாசமலர் படத்தின் அறுபதாம் ஆண்டுக் கொண்டாட்டங்கள் நடந்தப்போ இந்தப் பாடல்களை எல்லாம் மறுபடி போட்டுக் காட்டினாங்க, (ஏதோ ஒரு தொலைக்காட்சி சானலில்) அப்படிப் பார்த்திருக்கேனே தவிர்த்து இன்னமும் இந்தப் பாசமலர், பாலும் பழமும், பாகப்பிரிவினை எல்லாம் பார்த்ததே இல்லை. இவற்றைத் தொலைக்காட்சியில் போட்டப்போ எங்க வீட்டில் தொலைக்காட்சி வாங்கலையோ? நினைவில் இல்லை. பாவ மன்னிப்புப்படம் மதுரை சென்ட்ரல் தியேட்டரில் போய்ப் பார்த்தோம் நினைவு இருக்கு. இல்லாட்டிச் சிந்தாமணியா? ம்ம்ம்ம்ம்ம்ம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மற்ற இரண்டு படங்களும் நானும் பார்த்தது இல்லை!  ஆனால் பாடல்கள் கேட்டிருக்கிறேன், கேட்டுக்கொண்டே இருக்கிறேன்!

   நீக்கு
 9. அடுத்த படமும் கேள்வி ஞானம் உண்டே தவிர்த்துப் பார்க்கவெல்லாம் இல்லை. ஆனால் பாடல்கள் எல்லாமும் பல முறைகள் கேட்டவை! இம்மாதிரி ராகங்களோ, பாடல்களின் வரிகளோ இப்போது எங்கே அமைகின்றன? பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி, கண்ணதாசன், வாலி போன்றவர்களுக்குப் பிறகு திரைப்படப் பாடல்கள் எதுவும் கேட்கும்படி இல்லை. நேற்று ஒரு தொலைக்காட்சித் தொடரில் "இந்தப் பச்சைக்கிளிக்கு ஒரு செவ்வந்திப்பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன்" பாடலை வேறே யாரோ பாடுவது போல் ஒளிபரப்பினார்கள். என்ன இனிமையான தமிழ் வார்த்தைகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.  மிக நல்ல பாடல் அது.  கே ஜே யேசுதாஸ் குரலில்...

   நீக்கு
  2. இவர்களில் உடுமலை நாராயண கவியை விட்டு விட்டேன். ஆரம்பத்தில் சுதந்திரப் போரில் ஈடுபாட்டுடன் இருந்தவர். பாரதியாரிடம் நட்புடன் இருந்ததாகச் சொல்வார்கள். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மூலம் திராவிட இயக்கத் தொடர்பு ஏற்பட்டுப் பல படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர். முக்கியமாய்ப் பராசக்தி, ரத்தக்கண்ணீர்!

   நீக்கு
 10. உங்க பதிவு இன்னமும் என்னோட டாஷ்போர்டுக்கு வரலை! :(

  பதிலளிநீக்கு
 11. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  இறையருள் சூழ்க எங்கெங்கும்...

  பதிலளிநீக்கு
 12. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 13. இரண்டு பாடல்களும் பிடித்த பாடல் அடிக்கடி கேட்ட பாடல்.
  மீண்டும் கேட்டேன். வெகு நாட்கள் கழித்து . மகிழ்ச்சி, நன்றி.
  இரண்டு படங்களும் பார்த்து இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 14. வாசித்தேன். பாசமலர் பார்த்த அன்று அடைந்த உணர்வுகள் மனசோடு மனசாகக் கலந்து ஒன்றியவை. அதை இங்கு பகிர்ந்து கொண்டு மற்றவர்கள் பார்வையில் சாதாரணமாக்க விரும்பவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் ஜீவி ஸார்..   தனித்துவமானவை.  நமக்கே நமக்கானவை.

   நீக்கு
 15. ..தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் விரும்பியதைத்தான் சிவாஜி கொடுத்தார்.//

  ரசிகர்கள் விரும்பியதையும் சேர்த்தே கொடுத்தார். காலத்திற்கேற்ற கலைஞன். கொஞ்சம் மிகைப்படுத்தியதாகத் தோன்றினாலும் அவரிடம் கலை இருந்தது. தரமுடிந்தது.

  கலையா? அப்படீன்னா...?- கேட்பவர்கள் இப்போது தமிழ்நாட்டில் நிரம்பி வழிகிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதை எல்லாம் சொல்லியோ, வாதிட்டோ பயனில்லை!

   நீக்கு
  2. சொன்னேன்.

   வாதிடவில்லை. வாதிட, எதிராளியிடம், எதிர்த்தரப்பில் சரக்கு கொஞ்சமாவது இருக்கவேண்டும். இங்கே அப்படியெல்லாம் ஏதுமில்லை!

   நீக்கு
 16. முதல் பாட்டு ஒரு காலத்திய தமிழ் மக்களின் வாழ்வியல் கூறுகளை ப்ரதிபலிக்கிறது. என்றும் கேட்கப்படும் பாடல். இசை. பேசப்படும் எழுத்து..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஊடங்கங்கள் வளரா காலம்.  ஆங்காங்கே உலகில்  நடப்பவை வெளிவராத காலம்.  வேறு பொழுதுபோக்குகள் அதிகம் இலலாத காலம்...

   நீக்கு
 17. இரண்டு பாடல்களும் அருமையான பாடல்கள்...

  ஆனால் முதல் பாடல் கண்கள் கண்ணீரில் மிதக்கும்...

  பதிலளிநீக்கு
 18. அருமையான பாடல்கள்
  மிகவும் பிடித்த பாடல்கள்

  பதிலளிநீக்கு
 19. இரு பாடல்களும் கேட்டதுண்டு ரசித்ததுண்டு. இலங்கை வானொலி உபயத்தில் ஸ்ரீராம். படங்கள் பார்த்ததில்லை.

  அருமையான வரிகள் பாடல்கள்...

  கீதா

  பதிலளிநீக்கு
 20. ஸ்ரீராம் அதிகம் கேட்டிராத பாடல்கள் அதுவும் என்னைப் போல உள்ளவங்க கேட்டிராத பாப்புலர் ஆகாத பாடல்கள் வெள்ளி அன்று வரும்...இப்ப கீதாக்காவே கேட்டிருக்கேன்னு சொல்ற பாடல்கள் வருதே சமீபமாக!!!! ஹாஹாஹா...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், வானொலி உபயத்தில் அக்கம்பக்கம் வீடுகளில் வைக்கும் ரேடியோ நிகழ்ச்சியைக் கொஞ்சம் பெரிசாக வைக்கச் சொல்லி (அப்பாவுக்குத் தெரியாமல் தான்) கேட்டிருக்கிறோம். அதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிச்சித்திரம் வரும் அன்றைக்கு நாங்க மூணு பேரும் பெரியப்பா வீட்டில் ஆஜராகிடுவோம். ஆனால் மூணு பேரும் தனித்தனியாகப் போவோம். அல்லது தம்பி யாரானும் நண்பர் வீட்டுக்குப் போவார். அண்ணாவும் நானும் பெரியப்பா வீட்டுக்குப் போவோம். தாத்தா வீட்டில் (அம்மாவோட அப்பா) இருந்தால் கேள்வியே இல்லை. மாமாக்களைத் துளைத்து எடுத்து ரேடியோ போடச் சொல்லிக் கேட்போம். அப்படிக் கேட்ட பாடல்கள். திரைப்பட ஒலிச்சித்திரங்கள், நாடகங்கள். அறுபதுகளில் அண்ணா வேலைக்குப் போனதும் வாங்கிய ட்ரான்சிஸ்டரை (அப்போல்லாம் அது அபூர்வம்) ஃபிலிப்ஸ் கம்பெனி ட்ரான்சிஸ்டர். என்னிடம் கொடுத்தார். நான் கல்யாணம் ஆகிப் போகும் வரை அதில் காலை சென்னை ஏ போட்டுவிடுவேன். மங்கள இசையில் இருந்து ஆரம்பித்து ஒன்பதரைக்கு வானொலி நிலையம் மூடும் வரை. பின்னர் மதியம் ஒரு மணிக்கச்சேரி. விவித் பாரதியின் ஹிந்தி நிகழ்ச்சிகள். அதிகம் இலங்கை வானொலி கேட்டதில்லை. எப்போவானும் போடுவேன். இரவில் ஒன்பதரைமணிக்குத் தேசிய நிகழ்ச்சியில் வரும் கச்சேரிகள் (மெதுவாச் சின்னதா வைச்சுக் கேட்பேன்.) என் படுக்கையில் தலையணைக்கு அருகே வைத்துக் கொண்டு கேட்பேன்.

   நீக்கு
  2. @கீதா ரங்கன்... அதான் கீசா மேடம், வகுப்பில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்தால் போதும், முதலாவதாக வரத் தேவையில்லை என்று சின்ன வயசிலேயே தீர்மானித்திருந்தார்களே... அப்புறம் எல்லா சினிமாப் பாடலும் கேட்டிருப்பாங்க.

   எனக்கென்னவோ பாடல்கள் கோர்ப்பதற்கு முன்னால், கீசா மேடத்திடம், பாடல் கேட்டிருக்கீங்களான்னு கன்ஃபர்ம் பண்ணிட்டுத்தான் இப்போல்லாம் ஸ்ரீராம் பத்வை வெளியிடறாரோன்னு சம்சயம். ஹாஹா

   நீக்கு
  3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அதான் ஏற்கெனவே பலதரம் சொல்லி இருக்கேன். கணக்கு எனக்கு வராது என்பதை. கணக்கில் மதிப்பெண்கள் 75 ஐத் தாண்டவே தாண்டாது. சில சமயங்கள் குறையும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். அதனால் மூன்று இடங்களுக்குள்ளாக. மொத்த மதிப்பெண்களில் பார்த்தால் ஐந்து, ஆறுக்குள் தான் வித்தியாசம் இருக்கும். கணக்குக் கீழே தள்ளி இருக்கும். :(

   நீக்கு
  4. ஹா...  ஹா..  ஹா...   இஃகி...  இஃகி...   இஃகி....

   நீக்கு
 21. அது ஒரு பொற்காலம்...வீடுகளுக்குள் பாசமழை பொழிந்ததற்கெல்லாம் அப்படியான பாடல்களே முதற்காரணம்..

  அண்ணன் அக்கா, தம்பி தங்கை என்று பாசம் கொண்டாடுவதற்கான காலம் இதுவல்ல..

  இன்றைக்கு பாசம், நேசம் என்றால் கேலி செய்யப்பட வேண்டிய விஷயம் ஆயிற்று...

  பதிலளிநீக்கு
 22. மோகம் என்று வந்து விட்டால்
  முகவரியே தேவையில்லை..

  என்பது மாதிரியும்

  டாடி மம்மி வீட்டில் இல்லை
  தடை போட யாரும் இல்லை...

  என்பது மாதிரியும்
  மிக உயர்ந்த சமூக சிந்தனைகளுடன் எழுதப்பட்டவற்றைப் பதிவு செய்தாலாவது
  கருமமே.. என்று கடந்து போய் விடலாம்...

  இப்படியான பாடல்களைப் போட்டு இதயத்தைக் கனக்கச் செய்து விடுகின்றார் - ஸ்ரீராம்..

  திரையிசைப் பாடல்களும் காட்சிகளும் இரும்புச் சங்கிலிகளாகக் கனக்கின்றன...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படி எழுதினால் தான் முன்னேற்றம் என்று சொல்பவர்கள் உண்டே! நான் சொல்லிட்டு நிறையவே வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கேன். பழைய பாடல்கள் இன்றளவும் நம் மனங்களில் பதிந்திருப்பது அதை எழுதியவரால் மட்டும் அல்ல, அந்தப் பாடலைப் பாடியவர்கள் அந்தச் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு குரலிலே உணர்வுகளைக் கொண்டு வந்தவர்கள், ராகங்கள் அமைத்த இசை அமைப்பாளர்கள், நடித்த நடிக, நடிகையர், படம் பிடித்தவர்கள் எல்லோருமே காரணம்.

   நீக்கு
  2. ..இப்படியான பாடல்களைப் போட்டு இதயத்தைக் கனக்கச் செய்து விடுகின்றார்..//

   எப்போதாவதுதானே வாய்க்கிறது அவருக்கு. அதற்குள் கனம் என்றால் எப்படி!

   ..மோகம் என்று வந்து விட்டால்
   முகவரியே தேவையில்லை..

   என்பது மாதிரியும்

   டாடி மம்மி வீட்டில் இல்லை
   தடை போட யாரும் இல்லை...//

   கொஞ்சம் பொறுங்கள். ‘மாமணி’ விருதுகள் இத்தகையோரைக் கௌரவிக்கக்கூடும்..

   பழையபாடல்கள் பற்றி ஸ்ரீமதி கீதாவின் கருத்தை அப்படியே எனதாக உணர்கிறேன்.

   நீக்கு
  3. உணர்வுகள் மதிப்பிழந்து விட்டன.  வேற்றுத் துள்ளாட்டங்கள் ஆட்டம் போடுகின்றன.

   நீக்கு
 23. // சூடிக்கொடுத்தாள் பாவை படித்தாள்
  சுடராக எந்நாளும் தமிழ்வானில் ஜொலித்தாள்
  கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்
  கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்
  கன்னித்தமிழ் தேவி மைக்கண்ணன் அவள் ஆவி
  தன் காதல் மலர் தூவி மாலையிட்டாள்... //

  - சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாளை தமிழ் வானின் சுடர்.. என்கின்றார் கண்ணதாசன்..
  கவியரசர் அல்லவா!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தம்பி, துரை! பிரமாதம்..

   தான், தன் சம்பந்தப்பட்ட விஷயங்களிலேயே முடங்கிப் போய் விடாமல் இப்படி சமூகம் சார்ந்த பொது விஷயங்களில் அக்கறையும் மனமும் படியும் பொழுது உங்கள் உற்சாகம் எங்களுக்குமல்லவா தொற்றிக் கொள்கிறது?

   நீக்கு
  2. கவியரசர் பல பாடல்களில் இலக்கியத்தை நுழைத்து அசத்தி விடுகிறார்.

   நீக்கு
 24. ஒரு அற்புதமான படத்தைப்பற்றியும் [ பாச மலர்] அந்த படத்தில் வந்த ஒரு அருமையான பாடல் பற்றியும் குறிப்பிட்டு என்னை பழைய நினைவலைகளில் மூழ்க வைத்து விட்டீர்கள்! எப்படிப்பட்ட படம் அது! இந்தப் படத்தின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வரியும் எனக்கு மனப்பாடம்! இந்தப்படத்தின் இன்னொரு அற்புதமான பாடலான ' மலர்ந்தும் மலராத' என்ற கண்ணதாசனின் பாடல் மிக மிக புகழ்பெற்றது! இப்போது கூட பேச்சு வழக்குகளில் ' பெரிய பாச மலர் அண்ணன் தங்கச்சி' என்று கிண்டலாகப் பேசுவதைக் கேட்கிறேன்! அந்த அளவிற்கு காலத்தால் அழியாத படம் இது! அன்பையும் பாசத்தையும் உணராதவர்கள்கூட இந்தப்படத்தைப்பார்த்து அன்பென்பதையும் பாசம் என்பதையும் என்னவென்று உணர்வார்கள் என்றெல்லாம் அப்போது சொல்லக் கேட்டிருக்கிறேன்!
  ' பாகப்பிரிவினை' படத்தில் ' தாழையாம் பூ முடித்து' பாடல் காட்சியை மட்டும் பாருங்கள் ஸ்ரீராம்! சிவாஜியும் சரோஜாதேவியும் அசத்தியிருப்பார்கள்! 'பாவ மன்னிப்பு' படத்திலும் ' பாலிருக்கும் பழமிருக்கும்' பாடலும் காட்சியும் அத்தனை இனிமை இன்றைக்கும்!!
  எழுபதுகளில் தான் சிவாஜியின் நடிப்பு யதார்த்ததிலிருந்து மிகை நடிப்பிற்கு மாறியது. சிவாஜியின் ரசிகை என்றாலும் அந்த மிகை நடிப்பாலும் விரசமான பாடல், காட்சிகளாலும் நான் எழுபதுகளில் வந்த படங்களில் நிறைய பார்க்கவில்லை. அதில் அண்னன் ஒரு கோயிலும் ஒன்று! அதற்கப்புறம் 'முதல் மரியாதை' தான் பல முறை பார்க்கத்தூண்டிய படம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனோ சுவாமிநாதன், அருமையான விமரிசனம். நீங்கள் எழுதி இருப்பது எல்லாமே உண்மை. மனதின் ஆழத்திலிருந்து வந்தவை. தாழையாம் பூ முடித்துப் பாடல் எனக்கும் ரொம்பப் பிடிக்கும். படம் பார்க்கலை என்றாலும் அந்தப் பாடல் காட்சியை நிறையப் பார்த்திருக்கேன். ஜிவாஜி நடிச்ச படங்களிலே எனக்கும் முதல் மரியாதை தான் ரொம்பப் பிடித்த படம். அந்தப் படத்தில் தான் அவர் ஈடுபாட்டுடன் வாழ்ந்திருக்கிறார். நடிக்கவே இல்லை.

   நீக்கு
  2. வாங்க மனோ அக்கா..   தாழையாம் பூ முடிச்சு பாடல் எனக்கும் பிடிக்கும்.  படம் நான் பார்க்கவில்லை.  ஆனால் பாடல் மிகவும் பிடிக்கும்.  பாடல்களை மனமார ரசித்து எழுதப்பட்டிருக்கும் உங்கள் பின்னூட்டம் அருமை.

   நீக்கு
  3. பாகபிரிவினை படம் பார்க்கப் போயிருந்த கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் 'தாழையாம் பூ முடிச்சு பாடல் காட்சி திரையில் போய்க் கொண்டிருந்த பொழுது தன்னை மீறி உணர்ச்சி வசப்பட்டு உரத்த குரலில் "டேய், கண்ணதாசா! உன்னை அடிச்சிக்க ஆளில்லைடா!" கத்தினாராம்.

   அந்தக் காலத்தில் பத்திரிகையில் வெளி வந்த துணுக்குச் செய்தி இது.

   நீக்கு
  4. * என்று கத்தினாராம்.

   நீக்கு
 25. இரண்டுமே நல்ல பாடல்கள் - கேட்க! :)

  பதிலளிநீக்கு
 26. இரண்டு பாடல்களும் அருமை கேட்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 27. வணக்கம் சகோதரரே

  இன்றைய இரண்டு பாடல்களும் அழகான ஆழமான வரிகள் நிறைந்த பாடல்கள். மிகவும் ரசித்து கண்களில் கண்ணீரோடு கூடவே உருகி பாடிய பாடல்கள். இன்று மதியந்தான் தங்கள் பகிர்வை பார்த்தேன். காலை எப்போதும் போல் வர இயலவில்லை. உடன் கருத்த தரவும் முடியவில்லை. ஏதேதோ வேலைகள், பையனுடன் கைப்பேசி உரையாடல்கள் என வந்து விட்டன. தவிரவும் என் மனதை வருத்தும், அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்தும் இந்தப் படத்தின் பாடல் காட்சிகளை இப்போதுள்ள நிலையில் என்னால் காணவே இயலவில்லை. மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிழை வந்து விட்டது... உடன் கருத்தை தரவும்..என வாசிக்கவும். நன்றி.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!