செவ்வாய், 1 ஜூன், 2021

சிறுகதை : காக்கை! ஜாக்கிரதை!! - புதுக்கோட்டை வைத்தியநாதன்

 

காக்கை! ஜாக்கிரதை!!


                                   - புதுக்கோட்டை வைத்தியநாதன் -

சாதாரணமாக ஏகாம்பரத்திற்கும் இந்தக் கதையில் வரும் காக்காய்க்கும் எந்தவிதத் தொடர்பும் இருக்க முகாந்திரம் இல்லை. ஆனால் இது சாதாரணமான நேரம் இல்லையே !  இந்தக் கிருமிக்காய்ச்சல் பயத்தில் ஏகாம்பரமும் வீடே கதி என்று இருக்க வேண்டியிருந்த ,  அசாதாரணமான, இன்னும் அசாதாரணமாக ஆகப் போகும் காலம் .


கதை மேலே தொடரும் முன் , ஏகாம்பரத்தையும் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியிருக்கிறது. அவர் ஒரு  பெரிய கம்பெனியில் பர்ச்சேஸ் டிபார்ட்மெண்டில்  வேலை பார்த்து சமீபத்தில்தான் ரிடையர் ஆனவர் .பெரிய கம்பெனி என்பதால் பல பொருட்களை வெளியிலிருந்து வாங்குவார்கள் . அந்த சப்ளையர்களின் பொருட்கள் ஏற்கப்படுவதிலும் , அவர்களுக்குத் தாமதமில்லாமல்  பணம்  !கிடைக்கவும் , ஏகாம்பரத்தின் தயவு வேண்டியிருந்தது. . ஏகாம்பரமோ வசூல் ராஜா ! அந்தத் தயவைக் காசாக்குவதில் மன்னர் !

அவர் பேண்ட் போட்டுக்கொண்டு வருவதே , ஸ்பெஷலாக அதில் தைத்திருக்கும் இரண்டு பெரிய பாக்கெட்டுகளுக்காகத்தான் என்றும் , காலையில் அவர் எடை 65 கிலோவாகவும் , மாலையில் வீட்டுக்குத் திரும்பும்போது உள்ளே திணித்திருக்கும் கரன்சி நோட்டுகளால் 70 கிலோ ஆகிவிடும் என்று சில பொறாமைக்காரர்கள் பேசுவதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப் பட்டதே இல்லை. பணத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி என்றைக்கும் அவருக்குச் சந்தேகம் இருந்ததில்லை.

இல்லாவிட்டால், அவர் போன்ற ஒரு ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவரால் , நகரத்தின் நடுவில்  இப்படி ஒரு நல்ல ஹவுஸிங் சொசைட்டியில் , 30 லட்சம் ரூபாய்க்கு ஒரு  ஃபிளாட் வாங்கியிருக்க முடியுமா ? இப்போது கிராமத்தில் மனைவி பேரில் கிட்டத்தட்ட 40 லட்சம் பெறுமான விளை நிலம் இருந்திருக்குமா ? முடிந்த வழியிலெல்லாம் சம்பாதிக்க வேண்டும், ஒரு வழியிலும் செலவழிக்கக்கூடாது என்பது அவர் பாலிசி. அதை அவர் வீட்டில் யாரும் மீற முடியாது.

அப்படி அவரை எதிர்த்துப் பேசவும் வீட்டில் யாரும் கிடையாது. அவர் மனைவி ஒரு வாயில்லாப்  பூச்சி. ஒரே பையன், 30 வயதாகி பாங்க்கில்  வேலையில் இருந்தாலும் , கல்யாணமாகி ஒரு பெண் குழந்தையும் இருந்தாலும் , இன்னும் கூட அப்பாவைக்கண்டால் நடுங்குபவன். மருமகளோ மாமனார் எதிரிலேயே நின்று பேச மாட்டாள். ஏகாம்பரத்தின் அப்பா சின்ன வயதிலேயே இறந்தபின் ,  கஷ்டப்பட்டு இவரை வளர்த்த   அம்மாவும் ,சென்ற வருஷம் போய் விட்டாள் . எனவே அந்த வீட்டின் ஏகபோகச் சக்கரவர்த்தியாய் ஏகாம்பரம் இருந்தார்..

இந்தப் பின்னணியில்தான் , ஒரு நாள் அவர் மனைவி கொஞ்சம் தயக்கத்துடன் அவருக்கு ஞாபகப் படுத்தினாள் .

'உங்க அம்மாவோட திதி வெள்ளிக்கிழமையன்னிக்கு வருதுங்க .'

' அதுக்கென்ன இப்போ ? யார் செத்துப்போனாலும் , வருஷம் கழிஞ்சா   திதி வரத்தான் செய்யும் ! '

'இல்லைங்க , இதுதான் மொத வருஷம் . ஐயரைக் கூப்பிட்டு செய்ய வேண்டியதைச் செஞ்சிட்டு , ஏதாவது தானம் குடுத்தா நல்லதும்பாங்க , அதான்...'

'இருக்கற நிலமைல  கூப்பிட்டா எந்த  ஐயரும் வரமாட்டாங்க .  வந்தா அவருக்கே அடுத்த வருஷம் திதி பண்ண வேண்டியிருக்கும் . அதுவுமில்லாமே எடுத்ததுக்கெல்லாம் தானம், தருமமுன்னா ?  உங்கப்பன் பணத்தைக்கொட்டிக் குடுத்திருக்கானா ? ஒவ்வொரு காசும் நான் உழைச்சு சம்பாதிச்சது .'

அந்த அம்மாள் வாயை மூடிக்கொண்டு உள்ளே போய்விட்டாள்.

பணம் செலவழிப்பதைப் பற்றிய பேச்சால்  இருந்த கோபத்துடனேயே ஏகாம்பரம் டி .வி  யை ஆன் செய்தார். அதில் ஏதோ ஒரு ஜோதிடர், தொலைபேசி வழியே நேயர்களின் சந்தேகங்களுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.

சாதாரணமாக , இதையெல்லாம் ஏகாம்பரம் பார்க்கவே மாட்டார். இதிலெல்லாம் அப்படி நம்பிக்கையும் இல்லை. சேனலை மாற்றப் போனவர் காதில் திடீரென்று ஒரு நேயர் கேட்ட கேள்வி காதில் விழுந்தது. தன் அம்மாவின் திதியை முறைப்படி நடத்த முடியவில்லை , என்ன செய்யலாம் என்று அவர் கேட்டதற்கு, ஜோசியர் , பதில் சொன்னார் .

' இதைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம். உங்கள் அம்மாவிற்குப் பிடித்த சாப்பாட்டை , ஒரு பிடி அன்று காக்கைக்கு இடுங்கள். நம் முன்னோர்கள்தான் காக்கைகளாக வருகிறார்கள் என்று ஒரு ஐதீகம் .  அதுவும் இப்படியான ஒரு சோதனைக் காலத்தில் தினமுமே காக்கைக்கு உணவளிக்கலாம். அது நம் முன்னோர் ஆசியைப் பெற்றுத் தரும் . '

ஏகாம்பரத்திற்கு இது நல்ல யோசனையாகத் தோன்றியது. குறிப்பாக இந்த ஏற்பாட்டில் தனியாக ஒரு செலவும் கிடையாது. ஒரு காக்காய் எவ்வளவு சாப்பிடப் போகிறது ? அதையும் தவிர, வைத்தது அதற்குப் பற்றாமல் இருந்தாலும் அது என்ன கோர்ட்டுக்கா போக முடியும் ?

மனைவியைக் கூப்பிட்டார் .

'இதோ பாரு, கிழவிக்கு என்ன சாப்பாடு பிடிச்சிருந்ததோ அதை வெள்ளிக்கிழமை செய்து வை. அன்னைக்குக் காலையிலே நான் அதில ஒரு பிடி காக்காய்க்குப் போட்டுர்றேன். இந்த ஜோசியர்தான் சொன்னாரே, அதுவே திதி கொடுத்த மாதிரிதான் '.

வெள்ளிக்கிழமையும் வந்தது.

ஏகாம்பரத்தின் ஃபிளாட்டில் ஒரு ஹால் . அப்புறம் நடுவில் ஒரு நடையுடன் இரண்டு பெட் ரூம்கள். தாண்டி சமையலறை, அதற்கு நேராக ஒரு குளியலறை, கழிவறை , பின்புறம் கம்பி  க்ரில்  போட்ட வராண்டா . ஏகாம்பரம் ஒரு கிண்ணத்தில்  இரண்டு ஸ்பூன் குழம்புச் சோற்றை எடுத்துக்கொண்டு பின்வராண்டாவிற்கு வந்தார். க்ரில்லை மூடியிருந்த கண்ணாடிக்கதவை சற்றுத் தள்ளிவிட்டு , அந்தத்  திட்டின் மேல் கிண்ணத்தைக் கவிழ்த்தார். சரி, இப்போது காக்காயை எப்படிக் கூப்பிடுவது ? இது வரைக்கும் இதெல்லாம் செய்து புழக்கமில்லை .

'கா, கா ' வென்று சத்தம் எழுப்பிக் குடும்பத்தார் முன்னால்  கூப்பிடத் தயக்கமாய் இருந்தது.

'நீங்கள்ளாம் உள்ள  போய்ட்டு  வரண்டாக் கதவையும் சாத்தி வைங்க . இத்தனை பேர் இருந்தா காக்காய் வருமா, பயப்படாதா ? அது வந்து சாப்புட்டுப் போனதும் , நான் உள்ளே வர்றேன் . அப்புறம் நாம்ப சாப்பிடலாம்.'

வழக்கமான கீழ்ப்படிதலுடன் எல்லோரும் உள்ளே போனார்கள். ஏகாம்பரம் கொஞ்சம் கூச்சத்துடன் 'கா,கா 'என்று குரல் கொடுத்து முடிவதற்குள் ஒரு காக்காய் பட படவென்று சிறகுகளை அடித்துக்கொண்டு வந்து திட்டில் உட்கார்ந்தது. ஆனால்  அங்கே வைத்திருந்த சோற்றின் மேல் வாயையே வைக்கவில்லை. 'கா, கா ' வென்று யாரையோ கூப்பிடுவதுபோல் கத்தியது. ஒரு இரண்டு நிமிஷக் கூவலுக்குப் பின் மறுபடியும் பட படவென்று சத்தத்துடன் இன்னொரு பெரிய காக்காய் வந்து திட்டின்மேல் உட்கார்ந்தது.

அது வந்தவுடன் முதல் காக்காய் ஒன்றுமே சாப்பிடாமல் பறந்து சென்று விட்டது . இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஏகாம்பரத்திற்கு , இந்தக் காக்காய் ஏதோ தலைவன் போலவும் , முதல் காக்காய் அதற்கு வேலைக்காரன்போலப் பணிந்து  நடப்பதாகவும் தோன்றியது. உம்மணா மூஞ்சியான ஏகாம்பரத்திற்கும் சிரிப்பு வந்தது.  'காக்காயே காக்காயைக் காக்காய் பிடிக்கிறது 'என்று நினைத்துச் சிரித்துக்கொண்டார். வந்த காக்காய் ஒரே வாயில் , ஏகாம்பரம் வைத்திருந்த சோற்றை விழுங்கியது. ஏகாம்பரம் உள்ளே போகத்  திரும்பினார்.

'போய் இன்னும் கொஞ்சம் சாப்பிடக்  கொண்டு வா '

ஏகாம்பரம் திடுக்கிட்டார். யார் பேசியது ? சத்தம் அந்தக் காக்காயிடமிருந்துதான் வந்ததாகத் தோன்றியது. ஆனால் காக்காய்களால் பேச முடியுமா ? பகுத்தறிவிற்கே விரோதமான சங்கதியாய் இருக்கிறதே !

உள்ளிருந்து அவருடைய மனைவி குரல் கொடுத்தாள் .' ஏங்க , காக்காய் ஏன் இப்படிக் கத்துது ? சாப்ட்டுச்சா, இல்லையா ?'

'ஓஹோ', ஏகாம்பரத்திற்குப் புரிந்தது 'காக்காய் பேசவில்லை. அது வழக்கமாகக் கத்துவதுபோல்தான் கத்தியிருக்கிறது. நான்தான் ஏதோ கற்பனையாக நினைத்துக்கொண்டிருக்கிறேன்.'

' என்ன , நீ இப்படி முழித்துக்கொண்டே நின்றால் ? எனக்கு இன்னும் நாலு இடத்துக்குச் சாப்பிடப் போகணும் இல்ல ? நான்தான் பேசுகிறேன், ஆனால் உங்கள் மொழியில் இல்லை. நான் காக்காய் மொழியில் பேசுவதைப் புரிந்துகொள்ளும் சக்தியை உனக்கு கொடுத்திருக்கிறேன், அவ்வளவுதான்.  போய் இன்னும் கொஞ்சம் சாப்பாடு கொண்டு வா '

காக்காய் சொன்னதைக் கேட்டவுடனே  திகைப்பும், ஒரு ஒரத்தில் கொஞ்சம் பயமும் ஏகாம்பரத்திற்கு வந்தது .

'நீ எனக்கு உன் பேச்சைப் புரிந்துகொள்ளும் வரம் கொடுத்தாயா  ? காக்காய்களால் வரமெல்லாம் கொடுக்க முடியுமா ? '

'எல்லாக் காக்காய்களாலும் முடியாது. ஆனால் என்னால் முடியும் . நீ இப்படி நான் கேட்டதைக் கொடுக்காமல் நேரம் கழித்தால் , சாபமும் கொடுக்க முடியும் . சீக்கிரம் ! '

ஏகாம்பரம் இன்னும் தீராத குழப்பத்துடன் உள்ளே வந்தார். 'என்னங்க , இந்தக் காக்காய் இந்தக் கத்து கத்துது , இன்னும் சாப்பாடு
கேக்குதோ ? '  மனைவி கேட்டதற்கு ஆமாம் என்று  தலையை ஆட்டி விட்டு, ஏகாம்பரம் இன்னொரு கிண்ணத்தில் சோற்றைக் கொண்டு போய்ப் போட்டார். காக்காய் நிமிஷத்தில் காலி செய்தது. ' நாளைக்குப் பேசலாம் 'என்று சொல்லிவிட்டுப் பறந்து போய் விட்டது .

ஏகாம்பரத்துக்கு அன்று இரவு தூக்கமே வரவில்லை. நடப்பதெல்லாம் கனவா, நிஜமா ? கையைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டார் . வலித்தது . 'சரி, நாளைக்கு அந்தக் காக்காய் வந்தால் தெரிகிறது.'    அடுத்த நாள் காலை , மனைவியிடம்  சொன்னார் .

'நான் காக்காய்க்கு இந்த மாசம் முழுக்கவே சாப்பாடு வைக்கலாம்னு இருக்கேன் .'.

' அப்படியெல்லாம் ஒண்ணும் அவசியமில்லீங்க . இந்த ஒரு நாள் வச்சாப் போதும்னுதானே அந்த ஜோசியர் சொன்னாரு ?.'

' இதையெல்லாம் பத்தி யோசிக்க வேண்டியவன் நான். நீ சொன்னதைச் செய், போதும்.'

வழக்கம் போல வாயை மூடிக்கொண்டு அவர் மனைவி நகர்ந்தாள். காலை வந்தது. ஏகாம்பரம் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு பின்புறம் வந்தார். 'அதற்கு முன் இந்தக் காக்காயுடன் பேசுவது வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியக் கூடாதே '  ஒரு முடிவுக்கு வந்தார். 'இதோ பாரு, நான் இதுக்குச் சோறு வச்சுட்டுக் கொஞ்ச நேரம்தியானம் பண்ணலாம்னு இருக்கேன் . யாரும் இங்க வந்து தொந்தரவு பண்ண வேணாம் . இந்தக்கதவை நான் தாப்பா போட்டுக்கறேன். என்னோட தியானம் முடிஞ்சதும் கதவைத் திறந்துகிட்டு உள்ளே வந்துருவேன் .'

' தியானமா , இவரா ? ' எல்லாரும் ஆச்சரியத்துடன் இவரைப் பார்த்தவர்கள் , வழக்கமான பயத்தில் கண்களைத் தாழ்த்திக்கொண்டு , மற்ற வேலைகளைப்  பார்க்கப் போனார்கள்.

ஏகாம்பரம் கதவைத் தாளிட்டுவிட்டுக் கிண்ணத்தை அந்தத் திட்டில் கொண்டுபோய்க் கவிழ்த்தார். அடுத்த நிமிடமே அந்தக் காக்காய் ஆஜராகிவிட்டது . முதலில் சோற்றை ஒரு பருக்கை விடாமல் தின்றுவிட்டு அப்புறம்தான் ஏகாம்பரத்தையே கவனித்தது

'வணக்கம் ஏகாம்பரம் .'    இப்போது ஏகாம்பரம் தெளிவாகக் கவனித்தார். காக்காய் என்னமோ 'கா, கா'என்றுதான் ஒலியெழுப்பியது. ஆனால் அது வார்த்தைகளாய்  ஏகாம்பரத்துக்குத் தெளிவான தமிழில் புரிந்தது. இதற்குள் இன்னொரு குழப்பம். இந்தக் காக்காய்க்கெல்லாம் பதில் வணக்கம் சொல்லலாமா ? ஆனாலும் இது தான் பேசுவதைப் புரிந்துகொள்ளும் சக்தியையே கொடுக்கும் அளவுக்கு ஏதோ ஒரு அசாதாரணமான , தனி மரியாதைக்குரிய  காக்காய்.  அதனால் சொல்லலாம் . அரை மனதாய் ஏகாம்பரம் முடிவுக்கு வந்தார் .

' வணக்கம் .'

' இதற்கே இத்தனை யோசிக்கிறாயே, நான் சொல்லப் போவதைக்கேட்டால் இன்னும் விடாமல் யோசித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்குமே உனக்கு  ? '

ஏகாம்பரத்திற்கு, இந்தக் ( கேவலம் ) காக்காய் தன்னை ஒருமையில் கூப்பிட்டுப் பேசுவது கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. ஆனாலும், இது ஏதோ மந்திர சக்தி வாய்ந்த காக்காயாயிருக்கிறதே , அதன்  பேச்சு தனக்குப் புரியும்படி செய்ய முடிகிறதே , அதனால் பொறுத்துக்கொண்டு , ஆனாலும் கொஞ்சம் சூடாகவே கேட்டார் .

' அப்படி என்ன சொல்லப் போகிறாய் ? எதற்காக எனக்கு நீ பேசுவதைப் புரிந்துகொள்ளும் சக்தியைக் கொடுத்திருக்கிறாய் ?  '

' நான் சொல்லப் போவது   ரகசியம்.  அதை உனக்குச் சொல்வதற்காகத்தான் என்னைப்  புரிந்து கொள்ளும் சக்தியை உனக்குக் கொடுத்தேன். அப்படி உன்மேல் என்ன கரிசனம் என்கிறாயா ? காக்காய்கள் மிகுந்த நன்றி உள்ள பிராணிகள் என்று நீ கேள்விப்பட்டிருப்பாயே ? '

' இல்லையே , இது வரை யாரும் அப்படிச் சொன்னதில்லையே ? '

' இல்லையா? ' காக்காய் ஆச்சரியமாய்க் கேட்டது. பெரு மூச்சு விட்டது. 'சரி, விடு, இப்போதாவது கேள்விப்படு .   நீ ஒரு கவளம் எனக்குச் சாப்பிடக்கொடுத்ததற்காக அளவிடமுடியாத நன்றியால் இதைச் சொல்கிறேன். உன் வீட்டில் யாருக்கும் உன் மேல் பிரியமில்லை. உனக்கு எதிராகச் சதி செய்கிறார்கள் ! '

ஏகாம்பரத்திற்கு கோபம் வந்தது. 'அப்படியெல்லாம் இருக்கவே வழியில்லை . என்  பேத்திக்கு என் மேல் உயிர். என் மகனுக்கும் மருமகளுக்கும் என்மேல் மிகுந்த மரியாதை .  என் மனைவியையோ கேட்கவே வேண்டாம். நீ எப்படி இப்படிச் சொல்லலாம் ? '

காக்காய் அதன் குரலில் சிரித்தது ' நான் எத்தனையோ நாளாக, நீ வீட்டில் இல்லாதிருந்த போது , இவர்கள் பேசுவதையெல்லாம், ஜன்னலில் உட்கார்ந்து கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். சரி, நீயே பார்த்தால்தான் உனக்கு நம்பிக்கை வரும். தினமும் உன் பேத்திக்கு ஒரு கேட்பரிஸ் சாக்கலேட் கொடுத்துக் கொஞ்சுகிறாய் அல்லவா, இரண்டு நாள் கொடுக்காமலிருந்து பார் ! '

காக்காய் பறந்து போய்விட்டது. வராண்டா கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்த ஏகாம்பரத்திற்கு , மனதில் ஒரே யோசனை. ' இந்தக் காக்காய் சொல்வது உண்மையா ? ' அதற்குள் பேத்தி தளர் நடையாய் 'தாத்தா, தாத்தா 'என்று கத்திக்கொண்டு வந்து இவரைக் கட்டிக்கொண்டு, ஒரே எச்சில் முத்தமாய்க் கொடுத்தது. மருமகள் அதைச் சிரித்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தாள் .ஏகாம்பரம் குழந்தையைக் கொஞ்சினார். 'சரி, பால்குடிச்சிட்டுத் தூங்குவியாம் , வா ' என்று அதன் அம்மா கூப்பிட்டவுடன், பாப்பா ஏகாம்பரத்திடம் வழக்கம்போல் கேட்டது.

 ' தாத்தா , சாக்கேட் '

இவளுக்காகவே , ஏகாம்பரம் நிறைய சாக்கலேட் வாங்கித் தன்  அறையில் ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு அலமாரியில் வைத்திருந்தார்.  ஒன்றை எடுக்கப் போனவருக்கு காக்காய் சொன்னது நினைவுக்கு வந்தது.' இதைக்கொடுக்காமல் இருந்து பார்க்கலாமே ' இன்னைக்கு வேணாம், நாளைக்குத்தரேன் 'என்றார். பாப்பாவோ பிடிவாதமாய் அழ ஆரம்பித்தது. அதன் அம்மா வலுக்கட்டாயமாகத் தூக்கிக்கொண்டு போனாள் . அன்று  மாலையும் இதே தொடர்ந்தது.

அடுத்தநாளும் காக்காய் சாப்பிட வந்தது. ' என்ன ஏகாம்பரம் , நான் சொன்னதை சோதித்துப் பார்த்து விட்டாயா ?'

' ஆனாலும் குழந்தை அழும்போது கஷ்டமாக இருக்கிறது .'

'கஷ்டமாகத்தான் இருக்கும். சாக்கலேட் சம்பந்தப்பட்டவையாய் இருந்தாலும் , உண்மைகள் கசக்கத்தான் செய்யும். கொஞ்சம் பொறுமையாய் இருந்து பார் .'

அடுத்த நாள் காலை குழந்தை கொஞ்சம் சந்தேகத்துடனேயே இவர் கூப்பிட்டவுடன் பக்கத்தில் வந்தது  .  இவர் 'சாக்கேட் ' தரவில்லை என்றவுடன் , ஆக்ரோஷமாக  அடிக்க வந்தது. ஏகாம்பரம் பேத்தியின் கைகளை பிடித்துக்கொண்டு சமாதானப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் அடங்காமல், இவர் மடியிலிருந்த  டி .வி .ரிமோட்டைத் தூக்கி எறிந்தது. ஏகாம்பரம் கோபத்தில் கையை ஓங்கினார் .  மருமகள் ஓடி வந்து குழந்தையைத் தூக்கிக்கொண்டாள் .

ஏகாம்பரத்தை மருமகள் பார்த்த பார்வையில் மரியாதை இல்லை.  சமையலறைக்குள் போய் ' ஜாடி நிறைய சாக்கலேட்டை வச்சிக்கிட்டு , பேத்திக்கு ஒண்ணு குடுக்க மனசு வரல . சின்னப் புள்ளையை அடிக்க வேற வர்றாரு , தூ ' என்று சத்தமாகவே சொன்னது ஏகாம்பரத்திற்குத் தெளிவாகக் கேட்டது . 'இவளா இப்படி மரியாதை இல்லாமல் பேசுகிறாள் ? '  ஏகாம்பரத்திற்கு அவளைப்  போய் ஒரு அறை விடலாம் போல இருந்தது. அதற்குள் பின் வராண்டாவிலிருந்து  'சீக்கிரம் சாப்பாடு வை 'என்று ஏகாம்பரத்துக்கு மட்டும் புரிந்த'கா, கா ' பாஷையில் காக்காய் கூப்பிட்டது. குமுறிக்கொண்டே , கையில் சோற்றை எடுத்துக்கொண்டு போய் அதற்குப் போட்டுவிட்டு, வராண்டா கதவை உள்பக்கமாய் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு வந்தார்.

' நீ சொன்னது சரிதான், இந்த வீட்டில் இவர்களுக்கு என்னிடம் மரியாதை இல்லை . இத்தனை நாட்களாக என் முன் நடித்தார்கள் என்றுதான் தோன்றுகிறது  '

காக்காய் தன் ஏற்கனேவே கரகரப்பான குரலை இன்னும் கரகரப்பாக்கி ரகசியமாக்கிக் கொண்டது. 'அது கிடக்கட்டும். மரியாதையையெல்லாம் விடு . உனக்கு தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமாய் சாப்பாட்டில் விஷம் வைத்து உன்னைக் கொல்லப்பார்க்கிறார்கள் . அந்தக் கிராமத்து நிலம் உன் மனைவியின் பெயரில் இருக்கிறது. இந்த வீடோ உங்கள் இருவர் பேரிலும்.   இன்ஷூரன்ஸ் பணமும்  , உன் பையனுக்குத்தான்கிடைக்கும். அதனால் உன்னைத் தீர்த்துக்கட்டிவிட்டு , நிம்மதியாய் இருக்கலாம் என்று பார்க்கிறார்கள்.'

ஏகாம்பரத்துக்குத் தலை சுற்றியது .

'என் பெண்டாட்டி கூடவா ! '

காக்காய் சிரித்தது . 'பணமென்று வரும்போது புருஷனாவது, பெண்டாட்டியாவது ?  நீ ஜாக்கிரதையாய் இருந்துகொள் . அவ்வளவுதான் சொல்லுவேன்.'

ஏகாம்பரத்தின் மனதில் சந்தேகம் வந்து விட்டது. ஏதோ சாப்பிட்டதாகப் பேர் பண்ணிவிட்டு , மற்றவர்களைக் கவனித்தார். பையன் எங்கோ வெளியில் போயிருந்ததனால், அவருடைய மனைவியும் மருமகளும்  மட்டும்  இவருக்குப் போட்ட பாத்திரத்திலிருந்து எடுக்காமல் , வேறு எதையோ தட்டில் போட்டுக்கொள்வதைப் பார்த்தார். சந்தேகம் வலுத்தது .

'என்ன இது , எனக்கு இதைப் போடவே இல்லயே '

'இது நேத்தைக்கு மீந்த பழைய சோறுங்க . வீணாக்காமே நானும் இவளும் சாப்பிட்டுருவோம். உங்களுக்குத் தினம் புதுசா வடிச்சுத்தான் போடுவோம்.'

ஏகாம்பரம் கண்டிப்பாகச் சொன்னார் .

'நாளைலேருந்து நானும் இதைத்தான் சாப்பிடுவேன். எனக்கும் இதையே குடு '

'எப்படிங்க, எல்லாருக்கும் போதற  மாதிரி அவ்வளவு பழைய சோறு இருக்காதே '

 'அதெல்லாம் எனக்குத் தெரியாது 'ஏகாம்பரம் கத்தினார் ' நாளையிலிருந்து எனக்குப் பழைய சோறு வேணும் . அவ்வளவுதான் '

மனைவியும், மருமகளும் அவரை விசித்திரமாகப் பார்த்தார்கள். ஏகாம்பரம் அவர்களை சட்டை செய்யாமல்  ஹாலில் டி .வி.க்கு முன்னால் போய் உட்கார்ந்துகொண்டார். மனம் கொந்தளித்துக்கொண்டிருந்தது  .பகல் முழுதும் யோசனை. இரவிலும்  தூக்கம் வரவில்லை . காலையில் அந்தக் காக்காயிடம் , வேறு என்ன சதி நடக்கிறது என்று கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் .

ஆனால் காக்காய் வந்தால்தானே ! அன்றும் வரவில்லை. அடுத்தடுத்து அந்த வாரம் முழுவதும் வரவில்லை.

ஏகாம்பரமோ  சரியாகச் சாப்பிடுவதில்லை. தூங்குவதில்லை. ஒரே வாரத்தில் பத்து வயது கூடினாற்போல ஆகிவிட்டார். அவருடைய மனைவி  மகனிடம் அழுதாள் .

'என்ன, ஒங்கப்பாவுக்கு என்ன ஒடம்புன்னே தெரியலையே. இப்படி ஒரே வாரத்துல எப்படியோ ஆயிட்டாரே , எதுக்கெடுத்தாலும் கோபம், அதுலே தியானம் வேற பண்றேன்னுட்டுக்  கதவை சாத்திக்கிட்டு  தெனமும் அரை மணி நேரம் ,  பயமாயிருக்குதே  ! '

பையனுக்கும் கவலையாய்த்தான் இருந்தது. ஆசுபத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போகலாம் என்றால் ,வைரஸை விட்டு இதையெல்லாம் இப்போது கவனிப்பதே இல்லை என்கிறார்கள். திடீரென்று, அவனுடன் சிறு வயதில் படித்த, இப்போது பெரிய டாக்டராயிருக்கிற  நண்பனின் நினைவு வந்தது .

' ஷண்முகம் , நீ கொஞ்சம் வீட்டுக்கு வந்து அப்பாவைப் பாக்க முடியுமா ?  ரொம்ப ஏதோ மாதிரி இருக்காரு.எங்களுக்குப் பயமா இருக்கு ! '

டாக்டர் ஷண்முகம் வீட்டுக்கு வந்தார். அவரை அறைக்குள் கட்டிலில் படுத்திருந்த ஏகாம்பரத்திடம் அழைத்துப் போனார்கள்.

ஏகாம்பரம் டாக்டரைச்சந்தேகத்துடன் பார்த்தார். ' நீ எதுக்கு வந்திருக்கிறே ? உன்னை யார் கூப்பிட்டுட்டு வந்தாங்க ? '

'இல்ல அங்கிள், இந்தப் பக்கம் வந்தேன். சரி, அப்படியே உங்க வீட்டுக்கு வந்து எல்லாரும் எப்படி இருக்கீங்கன்னு பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன் . உங்க கையைக் கொஞ்சம் குடுங்க '

ஏகாம்பரம் வேண்டா வெறுப்பாய்க் கையை நீட்டினார். ஷண்முகம் அவருடைய மணிக்கட்டில் கை  வைத்துப் பல்ஸ் பார்த்தார் . ஒன்றும் சொல்லாமல் எழுந்து வெளியே நண்பனிடம் வந்தார் .

' காய்ச்சல்  இல்ல. ஆனா பல்ஸ் ரேட் ரொம்ப அதிகமா இருக்கு. சரியான தூக்கம் இல்லாததனாலேயும் இருக்கலாம் . ஒரு டிரான்க்விலைசர் இன்ஜெக்க்ஷன் போடுகிறேன். கொஞ்சம் தூங்கினால் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்.'

பையைத் திறந்து மருந்தை எடுத்து ஊசியில் ஏற்றினார். ஏகாம்பரத்தின் அறைக்குள் போனார் .

'அங்கிள், கொஞ்சம் கையைக் காட்டுங்க. ஒரு ஊசி போட்டுறறேன் , நீங்க நல்லாத் தூங்குவீங்க '

ஏகாம்பரத்தின் முகம் விகாரமாக மாறியது .  கட்டிலிலிருந்து எழுந்தார். கழுத்து நரம்புகள் புடைக்கக் கத்த ஆரம்பித்தார்.

'ஓஹோ , சாப்பாட்டுல  முடியலைன்னு இப்ப நேரா ஊசியிலேயே விஷம் ஏத்திக் கொல்லலாம்னு பாக்குறீங்களா, விட மாட்டேண்டா '     டாக்டரைப் பிடித்துத் தள்ளினார்.  மடக்கும் நாற்காலியைத் தூக்கிப் பையனை அடிக்கப் போனார். சரியாகச் சாப்பிடாமல் , தூங்காமல் இருந்த பலஹீனத்தில் அப்படியே மயக்கம் போட்டுக் கீழே விழுந்து விட்டார். மனைவி பதறி அழ ஆரம்பித்தாள். டாக்டரும் , பையனுமாய்த் தூக்கிக் கட்டிலில் படுக்க வைத்தார்கள். தரையில்  விரித்திருந்த மொத்தமான ஜமக்காளத்தால், நல்ல வேளையாக பெரிதாக அடியொன்றும் படவில்லை. முகத்தில் இரண்டு மூன்று இடங்களில் கொஞ்சம் சிராய்த்திருந்ததைத் தவிர வேறொன்றும் சேதமில்லை.

ஏகாம்பரத்தின் மனைவி, டாக்டரின் கையைப் பிடித்துக்கொண்டு அழுதாள்.

'மன்னிச்சிரு தம்பி,  ஏதோ உடம்புக்குச் சரியில்லாததனாலேதானே இப்படிப் பண்ணுறாரு '

'அம்மா, அதெல்லாம் ஒண்ணுமில்ல , ஆனா இவரை இந்த நிலைல வீட்டில வச்சிருக்கிறது சரியில்ல. மனநிலை கெட்டுப் போயிருக்கிறதனாலே மத்தவங்களுக்கு ஆபத்து ஏற்படலாம். அரசாங்க ஆஸ்பத்திரி இருக்கு. அதைவிட  நல்ல  பிரைவேட் மனநிலை ஆஸ்பத்திரிஎல்லாமும் இப்போ  இருக்கு.  வீட்டிலேயே  வந்து பாத்து இவருக்கு என்ன ட்ரீட்மெண்ட்  கொடுக்கணும்னு சொல்லுவாங்க. கொஞ்சம் செலவுதான் ஜாஸ்தியாகும். உங்களுக்கு வேணும்னா நான் ஃபோன் போட்டு எனக்குத் தெரிஞ்ச  டாக்டர் கிட்டப் பேசறேன் '

ஏகாபரத்தின் பையன் குறுக்கிட்டார்   '  செலவையெல்லாம் பத்திக் கவலையில்லை. நீ கூப்பிடு '

டாக்டர் ஷண்முகம் ஃபோன் செய்தார். 'இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளே வந்துருவாங்க. நீங்க தைரியமா இருங்க. அவர் ரொம்ப நல்ல டாக்டர். சரி, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு , வரட்டுமா ? '

சரியாக ஒரு மணி நேரத்தில் ஒரு வேன் வந்தது. அதிலிருந்து மூன்று பேர் இறங்கினார்கள். மாடிப்படியேறி ஏகாம்பரத்தின் வீட்டு அழைப்பு மணியை அடித்தார்கள். மருமகள் கதவைத் திறந்தாள்.

' நான் டாக்டர் கதிர். டாக்டர் ஷண்முகம் ஃபோன் பண்ணியிருந்தாரே , பேஷண்ட் எங்கே ? '

ஏகாம்பரத்தின் அறைக்குள் கூட்டிக்கொண்டு போனார்கள். ஏகாம்பரம் மயக்கம் தெளிந்து படுக்கையில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். அருகில் இருந்த மனைவியையும் , மகனையும் முகத்தையே பார்க்காமல் , விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். புதிதாக வந்தவர்களைக் கவனித்ததும் மறுபடியும் முகம் மாறியது. கத்தினார்.

'என்ன, இப்போ கொலை பண்ண ரௌடிகளைக் கூட்டிட்டு வந்திருக்கீங்களா ? போலீசுக்கு ஃபோன் போட்டு வரவச்சு உங்களை என்ன பண்றேன் பாருங்க ! '

டாக்டர் கதிர் கொஞ்சம்கூட அதிராமல், அமைதியாகக் கேட்டார்.

'நாங்க ரௌடியெல்லாம் இல்ல. அது இருக்கட்டும் , உங்களைக் கொலை பண்ணப் பாக்கறதா யார் சொன்னாங்க ? '

ஏகாம்பரம் ஒரு நிமிஷம் கதிரை நிமிர்ந்து பார்த்தார். 'ஏன், நீங்க பண்றதெல்லாம் யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்கீங்களோ ? அந்தக் காக்காய்க்கு எல்லாம் தெரியும் . என்னிடம் சொல்லியிருக்கிறது உங்கள் தில்லு முல்லையெல்லாம் ! '

' காக்காய் சொல்லியதா ? அதற்குப் பேசத்தெரியுமா ?'

'அது அதன் பாஷையில்தான் பேசும் , ஆனால் அதைப் புரிந்துகொள்ளும் சக்தியை எனக்கு கொடுத்திருக்கிறது . இதெல்லாம் உனக்கு எதுக்கு ? வெளியே போறயா, உன் கழுத்தை நெறிச்சிக் கொன்னுடவா ? '

ஏகாம்பரம் மூர்க்கமாகக் கைகளை டாக்டர் கதிரின் கழுத்துப் பக்கம் கொண்டு வந்தார். கதிர் லாகவமாக ஒதுங்கிக்கொண்டார். கண்ணால் கூட வந்திருந்த இருவர்க்கும் சைகை செய்தார். அவர்கள் நொடியில் ஏகாம்பரத்தை இரும்புப்பிடியாகப் பிடித்து நாற்காலியில் உட்கார வைத்தார்கள். அதற்குள் கதிர் தயாராக வைத்திருந்த ஊசியை , ஏகாம்பரத்தின் கையில், அவர் திமிறத்  திமிற ஏற்றினார் .  ஐந்தே நிமிடங்களில் ஏகாம்பரம் கண்களை மூடிக்கொண்டு அமைதியானார்.

டாக்டர் கதிர் , ஏகாம்பரத்தின் மனைவியிடமும் மகனிடமும் சொன்னார்.

'இவருக்கு மன நிலை முற்றுமாகப் பிறழ்ந்திருக்கிறது . ஒரு இரண்டு வாரம் ஹாஸ்பிடலில் வைத்து எலெக்ட்ரிக் ஷாக் ட்ரீட்மெண்டும் , மற்ற சில சிகிச்சைகளும் தரவேண்டும். ஆனால், நான் உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்லியாக வேண்டும். சிகிச்சைக்குப் பிறகும் , இது கட்டுப் பாட்டில் இருக்குமே தவிர முற்றும் சரியாகாது. தினமும் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். யாருடைய கவனிப்பிலாவது எப்போதும் இருக்க வேண்டும். இந்த இரண்டு வார சிகிச்சைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகலாம் . '

ஏகாம்பரத்தின் மனைவி கதறினாள் . பையன் கதிரிடம் சொன்னார். 'எப்படியோ , அவரு அப்பான்னு வீட்டிலே இருந்தாப் போதும் . செலவைப் பத்திக் கவலையில்லை .'

ஏகாம்பரத்தைக் கைத்தாங்கலாகப் பிடித்து வேனில் ஏற்றினார்கள். அவரோ 'காக்காய் ஏன் வரல' என்று தனக்குத்தானே முனகிக்கொண்டிருந்தார் . வேன் கிளம்புவதை ஒரு திருப்தியுடன் , எதிர் கட்டிட மாடியிலிருந்து காக்காய் பார்த்துக்கொண்டிருந்தது.

அதன்கூடப் பணிவாக அமர்ந்திருந்த இன்னொரு காக்காய் , கேட்டது .

'உங்களை ஒன்று கேட்கலாமா ?'

 ' கேள். '

உங்களை முதல் தடவையாகப் பார்த்தபோதே, நீங்கள் எங்களைப் போல் சாதாரணமான காக்காய் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டேன் . ஆனால் நீங்கள் இந்த ஆளுடன் பேசுவதையெல்லாம் நான் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். பாவம், ஏன் இப்படி அவன் மனதைக் கெடுத்தீர்கள் ? '

'பாவமா, இவனா? ' பெரிய காக்காய் சிரித்தது . ' இவன் எப்பேர்ப்பட்ட அயோக்கியன் தெரியுமா?  இவனுடைய அம்மா தன்  சாப்பாட்டை இவனுக்குப் போட்டு வளர்த்தாள் . அப்பேர்ப்பட்ட அம்மாவை இவன் எப்படிப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்? ஆனால் இவன் , வீட்டுக்குள் இடமில்லை என்று இந்த வராண்டாவில், ஒரு கயிற்றுக்கட்டிலில் அம்மாவைப் படுக்க வைத்திருந்தான். எத்தனை நாள் 'எனக்குப் பசிக்கிறது , இன்னும் கொஞ்சம் சாப்பிடக்கொடு' என்று அவள் கெஞ்சியபோது , 'ஆமா , சாப்பிடுவே, அப்புறம் ராத்திரி கக்கூசுக்குப் போகணும்னு துணைக்கு கூப்பிட்டு எங்க தூக்கத்தைக் கெடுப்பே . அரை வயிறு சாப்பிட்டாலே போதும் . சும்மாக்  கிட' என்று அவள் அழ அழக் கதவைச் சார்த்திக்கொண்டு தூங்கப் போயிருப்பான்? இவனைத் தண்டிக்காமல் விடலாமா? '

'அப்படியா, உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்? ஒரு வேளை நீங்கள்தான் போன பிறவியில் அவன் அம்மாவோ ?  ' 

பெரிய காக்காய் , மற்ற காக்காயை ஏளனமாகப் பார்த்தது. ' உனக்கு மனிதர்களை பற்றி ஒன்றுமே தெரியவில்லை. சென்ற பிறவியில், நான் இவனுடைய அம்மாவாக இருந்திருந்தால், இவன் எத்தனை அயோக்கியனாய் இருந்திருந்தாலும் , இவனுக்குஒரு கஷ்டம் வருவதைத் தாய் மனது பொறுக்குமா? எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அந்தத் தாயன்பு மாறுமா? இல்லை. நான் சென்ற பிறவியில் இவன் அம்மா இல்லை.  இந்தப் பிறவியில் காக்காயும் இல்லை. நான்தான் நீதி தேவதை.'  பளீரென்று ஒரு வெளிச்சத்தில் பெரிய காக்காய் மறைந்து போயிற்று.= = = = 

37 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  எதிர்காலம் நோய் அற்று ஆரோக்கியமாக
  இருக்க இறைவன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா...   வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
 2. மிக இயல்பான நீதிக் கதை.
  இப்படியே மனித விரோதமாக நடப்பவர்களுக்குப்
  பதில் கிடைத்தால் நன்மைதான்.

  அனீதி இழைத்தவர் வருந்த வேண்டுமே.!
  தான் செய்த தீமைகளால் வந்த
  வினை இது என்று தெரியவேண்டுமே.

  திரு புதுக்கோட்டை வைத்திய நாதனின்
  கதை நல்ல அமைப்பு.
  அவருக்கு வாழ்த்துகள்.
  கதையைப் பதிவிட்ட ஸ்ரீராமுக்கும்
  பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 3. அனைவருக்கும் காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் நிம்மதியும்/அமைதியும் மேலோங்கி மருந்துகளோ/அச்சமோ/மாஸ்க்கோ இல்லாமல் இருக்கும் சகஜ நிலைமை வரப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 5. இந்தக் கதையை "மத்யமரில்" படித்த நினைவு இல்லை. கவனிச்சிருக்க மாட்டேன். அல்லது எபிக்கு என எழுதி இருக்காரா? நல்ல கதை! நல்ல கருத்துள்ள கதை. ஆரம்பத்தில் சிரிப்பாய் ஆரம்பித்துவிட்டுக் கடைசியில் யதார்த்தத்துக்குக் கொண்டு வந்துட்டார். தொய்வே இல்லை. அதிகம் சம்பாஷணைகள் இல்லாவிட்டாலும் வர்ணனையில் அலுப்புத் தெரியாமல் கொண்டு போயிருக்கார். வாழ்த்துகள் வைத்தியநாதன். இந்தக் காலத்துக்குத் தேவையான கதை.

  பதிலளிநீக்கு
 6. காக்கையாக இருந்தாலும் அம்மாவின் மறுபிறவி என்றாலும் அம்மா தன் குழந்தைகளைக் கஷ்டப்படுத்தியே பார்க்க மாட்டாள் என்பதையும் அந்த நீதிக்காக்கையின் வாயால் உணர்த்தி இருக்கார். அம்மாக்கள் யாராக இருந்தாலும்/எந்த நிலையில் இருந்தாலும் அன்பு சொரூபம்.

  பதிலளிநீக்கு
 7. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..

  பதிலளிநீக்கு
 8. எங்கும் நலம் பெருக வேண்டிக் கொள்வோம்..

  பதிலளிநீக்கு
 9. கதை இறுதிவரை பரபரப்பு.

  //இருக்கற நிலமைல கூப்பிட்டா எந்த ஐயரும் வரமாட்டாங்க . வந்தா அவருக்கே அடுத்த வருஷம் திதி பண்ண வேண்டியிருக்கும்//

  யதார்த்தமான காமெடி.
  ரசித்து படித்தேன்.

  பதிலளிநீக்கு
 10. நல்ல கதை. கதையின் மெஸேஜும் சரி, அது சொல்லப்பட்டிருக்கும் விதமும் சரி மிகச் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 11. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 12. கதை நன்றாக இருக்கிறது.
  நல்ல நீதியை உணர்த்தும் கதை.
  சொல்லிய விதம் அருமை.

  //நான் இவனுடைய அம்மாவாக இருந்திருந்தால், இவன் எத்தனை அயோக்கியனாய் இருந்திருந்தாலும் , இவனுக்குஒரு கஷ்டம் வருவதைத் தாய் மனது பொறுக்குமா? எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அந்தத் தாயன்பு மாறுமா? இல்லை. நான் சென்ற பிறவியில் இவன் அம்மா இல்லை. இந்தப் பிறவியில் காக்காயும் இல்லை. நான்தான் நீதி தேவதை.'//

  தாயால் தண்டிக்க முடியாது , சாபம் கொடுக்க முடியாது என்பது உண்மை.

  பதிலளிநீக்கு
 13. கதை அருமை...
  நல்லதோ கெட்டதோ நடந்தே தீரும் -
  பூர்வ கர்ம வினைகளால்!..

  அதற்கு நாம் பொறுப்பல்ல...
  ஆனாலும் நாமே பொறுப்பு!..

  பதிலளிநீக்கு
 14. தன் வாசல் காத்தோனைத் தானே வந்து வகிர்ந்து எறிய வில்லையா நாரணன்!...

  பதிலளிநீக்கு
 15. தேவகுமாரன் மண்ணுலகிற்காக இரத்தம் சிந்த வேண்டும் எனில் யூதாஸ் மறுதலித்தே ஆகவேண்டும்...

  பதிலளிநீக்கு
 16. மகனால் சோறு மறுக்கப்படுகின்றதெனில்
  அந்தத் தாய் வாங்கி வந்த வரம் தான் என்ன்வோ?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுவும் சரியான கேள்வி. அந்தத் தாய் யாரை மறுதளித்தாள்.
   கர்மா அதுதானே. வினை ஒரு சங்கிலி.

   நீக்கு
 17. கதை மிக அருமை. நல்ல கருத்துள்ள கதை. கதையை ரசித்தேன் சொன்ன விதமும் அட்டகாசம். காக்கை நீதி தேவதையாக!!! பாராட்டுகள் வாழ்த்துகள்

  கீதா

  பதிலளிநீக்கு
 18. இப்பிறவியிலேயே செய்த வினையின் பலன். நீதி தேவதை வருவதெல்லாம் ஒரு சிலருக்குத்தானோ. இப்பிறவியிலேயே ஒரு சிலருக்குத்தான் வினைப்பயன்? பலருக்கும் அவர்கள் மனசாட்சி கூட எழுவதில்லை வயதாகும் போதும்...

  மனம் எப்படி பிறழ்கிறது என்ற பகுதி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதுதான் யதார்த்தம். அதாவது இங்கு காக்கை என்பது குறியீடாகக் காண்கிறேன் மனநலம் என்ற நோக்கில் பார்க்கும் போது. கண்டிப்பாக அவர் தன் அன்னைக்குச் செய்ததை அவர் உள் மனம் சுட்டிக் காட்டியிருக்கும் ஆனால் அதன் பவர் அப்போது கம்மியாக இருந்து அவர் உணரும் நிலைக்கு உந்தித் தள்ளவில்லை. அது தற்போது வேறு விதத்தில் அதன் ரூபம்.

  இது பற்றி நிறைய பேசலாம் அத்தனை ஆழமான ஒன்று. மனம் என்பதே விசித்திரமானது.

  அழகான கதை. வினை மற்றும் மனம் இரண்டையும் அழகாக இணைத்துக் கொண்டுவந்த விதம் சிறப்பு. ரசித்தேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
 19. அடாதது செஞ்சா, படாததைப் பட்டுத்தான் ஆகணும் -ங்கிறதைப் புரியவைக்கத்தான் காக்கா வந்துச்சு.. பேசுச்சு! ஆனா, உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணிட்டுப் போயிருச்சே.. யாரும் கேப்பாரில்லயா?

  பதிலளிநீக்கு
 20. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என சொல்லக் கேட்டதுண்டு. கர்ம வினையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என மீண்டும் நிரூபித்த அருமையான கதை. சனீஸ்வரரின் வாகனமாதலால், நீதி தேவதை ஸ்வரூபம் பொருந்துகிறது காக்கைக்கு. நல்லதொரு கதைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 21. கதை சுவாரசியம். தெலுங்கு மற்றும் தமிழில் ஈ என்றொரு திரைப்படம் இப்படித்தான் பழிவாங்கும் கதையாக வந்தது நினைவுக்கு வந்தது. ஒரு T V சீரியல் ஆக எடுக்க தோதான கதை.

  Jayakumar

  பதிலளிநீக்கு
 22. கதை காக்கையின் அறிமுகம் ஆவதன் மூலம் அதன் வழி பயணிப்பது சுவாரசியம். அருமையான ஒரு வாழ்வியல் கருத்தைக் காக்கை இல்லையில்லை நீதி தேவதையின் மூலம் சொல்லியிருக்கிறார். தன் வினை தன்னைச் சுடும்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 23. நல்லதொரு கதை. சிறப்பாகச் சொல்லி இருக்கிறார்.

  நீதி நன்றாக இருக்கிறது - பல வீடுகளில் முதியவர்களின் நிலை கதையில் சொன்ன படி தான். நீதி தேவதை இப்படி வந்து விட்டால் நன்றாகத் தான் இருக்கும்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!