செவ்வாய், 22 ஜூன், 2021

சிறுகதை : கண்ணழகி காஞ்சனா 2/2 - ஜீவி

 கண்ணழகி காஞ்சனா 2/2

ஜீவி 

 2

இதன் முந்தைய பகுதியைப் படிக்க...

 து என்னவோ தெரிலே,  இதுக்குன்னா  ஞாயிற்றுக் கிழமைதான் வந்து வாய்க்கிறது. சலூனில் இருந்தேன். ஒரு மணி நேரம் காத்திருந்து தலையைக் கொடுத்து பாதி வேலை தான் நடந்து முடிந்த நிலையில் பக்கத்தில் வைத்திருந்த செல் சிணுக்கிற்று.  பார்த்தால் சரஸா லைனில்.  முடி வெட்டுபவரிடம் ஒரு நிமிட அனுமதி வாங்கிக் கொண்டு செல்லை எடுத்தேன்.  "இன்னும் அரை மணி நேரத்தில் வர முடியுமா?" என்று சரஸா கேட்டாள்.

விஷயத்தைச் சொன்னேன்.  சிரித்துக் கொண்டே "கால் மணி கூட ஆனாலும் வந்திடுங்க..  டைரக்டரும் ஒன் அவர்லே வர்றதா சொல்லியிருக்கிறார்" என்றாள். கேட்க சந்தோஷமாக இருந்தது.  சீக்கிரம் முடிப்பா என்று முடி திருத்துபவரை விரட்டி, வீட்டுக்கு வந்து குளித்து ரெடி ஆவதற்குள் அரைமணி நேரம் இரக்கமில்லாமல் கடந்து விட்டது.   அவசரம் அவசரமாக  Kellogg's CORN Flakes-ல் கால் டம்ளர் பாலூற்றி குளிப்பாட்டிய அமிர்தத்தைச்  சாப்பிட்டு என் ஜாவாவில் ஆரோகணித்து கோடம்பாக்கத்திற்கு விரட்டினேன்.

நல்லவேளை டைரக்டர் இன்னும் வந்திருக்கவில்லை.  சரஸா மட்டும் இருந்தாள்.  நேவி ப்ளூ சுடிதாரில் சிட்டுக் குருவி போல கைக்கு அடக்கமாக உட்கார்ந்திருந்தாள். என்னைப் பார்த்ததும்  புன்னகைத்தாள்.  பக்கத்தில் கிடந்த நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு பட்டும் படாமலும் இயல்பாக இருக்கிற மாதிரி ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அமர்ந்தேன்.

"முழுசும் படிச்சிட்டேன்.  கதையை செமையானா எழுதியிருக்கீங்க!.." என்றாள்.  

"அப்படியா?.. அப்படினா நான் எழுதினதே ஓக்கே ஆயிடுத்தா? திருத்தம்லாம் தேவையில்லையா?" என்று மலர்ந்தேன்.

"அப்படி யார் சொன்னது?" என்று கொக்கி போட்டாள். 

"பின்னே?.. அந்த செமைக்கு என்ன அர்த்தம்ன்னேன்?" என்று பொய்க்கோபம் காட்டினேன்.

"சொல்றேன்.." என்றாள்.  "அந்த மாலதி மாமனார் மேல் கோபப்பட்டு பிரிந்து தனிக் குடித்தனம் போக முயற்சிப்பது தான் இடிக்கறது.  அதுவும் எட்டு வருஷ கூட்டுக் குடித்தனத்திற்குப் பிறகு புதுசாய் அவளுக்கு என்ன சங்கடம் வந்தது என்று யோசிக்கும் பொழுது புது வெளிச்சம் கிடைச்சது.  எல்லாம் சிக்மண்ட் பிராய்ட் தயவில் தான்.   ஆயிரம் பேர்  இந்த மாதிரி வீட்டுப் பெரியவர்கள் மேல் பழி போட்டு சொந்த காரணங்களை வெளிக்காட்டாம தப்பிச்சிருக்காங்க..  அதிலே நீங்க ஆயிரத்து ஒண்ணா?" என்றாள்.  அவள் முகம் லேசா சிவந்தது.  அப்படிச் சிவந்ததே அவள் அழகுக்கு மேலும் அழகூட்டியது.

"பின்னே என்ன தான் சொல்றீங்க..?" என்று நான் கேட்டுக் கொண்டே இருக்கையில் பக்கத்து ஜன்னல் வழியாக  டைரக்டரின் காரைப் பார்த்து விட்டாள் போலிருக்கு, 

"இதோ சாரும் வந்திட்டார்....  " என்று லேசா பரபரப்பு தொற்றிக் கொண்ட அவசரத்தில் சரஸா சுதாரிக்க நான் எழுந்து அமர்ந்திருந்த சேரை இன்னும் கொஞ்சம் பின்னுக்குத் தள்ளி விலகி அமர்ந்தேன்.

உள்ளே நுழைந்ததும், "அட! ரெண்டு பேரும் ரெடி போலிருக்கு..  எனக்குத் தான் கொஞ்சம் டிலே ஆயிட்டது.." என்று டைரக்டர் தன் ஸீட்டில் அமர்ந்தார்.

"சரஸா.. உன்னளவில் திரைக்கதை ரெடி தானே?.. ஸாரும் வந்திட்டார்..  நம்மளவில் டிஸ்கஷனை முடிச்சிடலாம். எல்லாம் ஓக்கே ஆயிடுத்துனா,  கதை இலாகா, வசனகர்த்தா எல்லாரையும் கூட்டி வைச்சிண்டு ரெண்டாவது ரவுண்ட் திருப்பி ஆராய்ந்து பைனலைஸ் பண்ணிடலாம்.  சரியா?" என்று எனக்கும் சேர்த்து சொல்ற மாதிரி பொதுவாகச் சொன்னார்.

ஏதோ இந்த மட்டும் நம்ம மூலக்கதை முதல் ரவுண்டிலேயே ஓரம் கட்டாமல் மூச்சு பிடிச்சிண்டு தொடர்கிறதே என்ற உற்சாகத்தில் "சரி ஸார்.."  என்றேன்.

"ஸாரோட கதைலே எட்டு வருஷம் அந்த மூத்த மருமகள் மாமனார்--மாமியார் அன்பில் நனைந்து கூட்டுக் குடித்தனம் நடத்தியிருக்கிறார் என்ற குறிப்பு கிடைத்தது. அது தான் இந்தக் கதைக்கு ஒரு புது வார்ப்பு கொடுக்க அடித்தளமா அமைஞ்சது.. நான் முழு திரைக்கதையையும் எழுதி முடிச்சிட்டேன்..  நம்ம செஷனை ஆரம்பிக்கலாமா?" என்றாள் சரஸா..  "பை த பை,  அந்த இளைய மருமகளுக்கு காஞ்சனான்னு பேர் கொடுத்து அட்டகாசமா அந்த பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறேன்.. காஞ்சனா.. சுட்டும் விழிச் சுடர் கண்ணம்மா பாரதியாருக்கு..  வட்டக் கருவிழி காஞ்சனா நமக்கு.." என்று சரஸா சொன்ன பொழுது கைதட்டி அதை ரசித்தார் டைரக்டர்.. 

"இதே ஜோரில் மூலக்கதைக்கான என் ட்ரீட்மெண்ட்டை சொல்லிடறேன்.. அங்கங்கே யாருக்கு என்ன சந்தேகம் என்றாலும் நடுநடுவே அதையும் சேர்த்து அலசிடலாம். ஓக்கேவா?.." என்று சரஸா சொன்ன பொழுது அவள் விவரிப்பு சாகஸத்தில் நான் சொக்கிப் போயிருந்தேன்.

"கறுப்பிலேயும் ஒரு தனி அழகு கூத்தாடும்ன்னு யாரோ ஒரு கவிஞர் சொல்லியிருக்கிறார் ஸார்.  அவர் பேர் சட்டுனு ஞாபகத்துக்கு வரலே.. பரவாயில்லை.. நம்ம காஞ்சனாவைப் பார்த்தா அவளோட மேனி நிறம் நமக்கு அதைத் தான் சொல்லும்.  அந்தக் கறுப்பில் அவள் வட்டக் கருவிழிகள் டாலடிக்கும்.  ஓவல் முகம். கருவண்டு விழிகள்.  களையான உடல் வாகு..  சுருக்கமா பத்மினி ஜாதின்னு அடிச்சுச் சொல்லலாம்.. இந்தக் காஞ்சனாவை  அந்த இளைய மகன் லஷ்மணன் எங்கே கண்டுபிடிச்சு லவட்டிண்டு வந்தானோ தெரிலே..  அந்த வீட்டில் அவள் நுழைந்ததும் அந்தக் குடும்பத்திற்கே இத்தனை நாளும் இல்லாத தனிக்களை வந்திட்டதுன்னு தான் சொல்லணும்..  காஞ்சனாவின் ஒருநாள் வாழ்க்கை நிரலைச் சொன்னாலே அவளுடன் நேரிடையா பழகின உணர்வே உங்களுக்கு ஏற்படும்..  சொல்றேன், கேளுங்க.." என்று தன் புதுக்கதையைத் தொடங்கினாள் சரஸா.

"வீரர்களுக்கு அழகு தொடை வரை நீண்ட தடங்கைகள் என்று புறநானூறு சொல்லும்.  நம்ம காஞ்சனாவுக்கோ தொடையைத் தொட்டு விடும் கருங்கூந்தல்.  மயில் போல அவள் ஒயிலாக நடந்து வரும் போது  அவள் பின்னிக் கட்டியிருக்கும் அந்தக் கூந்தலும்  முதுகுப் பிரதேசத்தில் அதுக்குக் கீழேன்னு அசைந்தாடி வரும்.  வெள்ளிக்கிழமை எண்ணைக் குளியல் நாட்களில் புஸூபுஸூவென்று அலைபாயும் கூந்தலை ரிப்பன் கட்டிக் கோடலி முடிச்சு போட்டிருக்கும் அழகே அவளுக்கு தனிக்களையைக் கொடுக்கும்.   தன் எலி வால் கூந்தலைப் பார்த்தாலே மாலதிக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வரும்.  நீல பிருங்காதியில் ஆரம்பித்து என்னன்னவோ கூந்தல் தைலங்களைத் தடவிப் பார்த்து விட்டாள்.  அதுவோ இதற்கு மேல் நீள மாட்டேனென்று அழிச்சாட்டியம் பண்ணியது.  தாயைப் போல பொம்பளைப் பிள்ளை என்பாங்க;  அந்த மாதிரி தான் அவரவர் கூந்தலும் என்று யாரோ அவளிடம் சொல்லி விட்டார்கள்.  அன்னிக்குப் பூராவும் அந்த சனியனுக்கு நான் ஏன் பிறந்தேனோ என்று தன் தாயைத் திட்டித் தீர்த்து விட்டாள் மாலதி.   தன் ஓரடிக் கூந்தலைப் பற்றி  அவள் நினைக்கும் பொழுதெல்லாம் அவள் தாய் தப்பாமல் நினைவுக்கு வந்து அவளிடம் வாங்கிக் கட்டிக் கொள்வாள்.

காஞ்சாவை நேரில் பார்க்கும் பொழுதெல்லாம் வெளிக்கு அவள் மேல் அன்பு இருக்கிற மாதிரி காட்டிக் கொள்வாள்.. உள்ளுக்கோ அவளைக் கண்டு மனம் வெகுண்டு எழும். அம்பிவாலென்ஸ் என்று ஒரு மனநோயைப் பற்றி உளவியல் சாத்திரம் குறிப்பிடும்.  அந்த மன நோய் வந்தவர்களைப் போலத் தான் மாலதி புழுங்கித் தவித்தாள்.

"காஞ்சனாக்கு அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் விழிப்பு வந்திடும்.  எழுந்து பல்விளக்கி உடனே குளிச்சு டிரஸ் மாத்தி அவள் ஹாலுக்கு வரப்போ மணி ஆறு...  டிகாஷன் போட்டு பால் காய்ச்சி ஆறரைக்கு ஒவ்வொருத்தரா எழுந்து வருவதற்குள் அத்தனை பேருக்கும் சுடச்சுட காப்பியை ரெடி பண்ணி விடுவாள்.  அந்த வேகத்திலேயே இன்னொரு பக்கம் காலை டிபனும் ஏறக்குறைய தயார் ஸ்டேஜ் அடைஞ்சு எட்டு மணிக்கு சுவாமி பூஜைக்கு தயாராயிடுவாள்.." என்று சரஸா சொல்வதை  திரையில் காண்பது  போல் ரசிப்பில் ஆழ்ந்திருந்தார் டைரக்டர்.

"அவங்க வீட்டுக்குப் பின் பக்கத்தில் சின்ன தோட்டம் இருந்தது.  செம்பருத்தி, அரளி, ரோஜாச் செடிகளில் பூக்கொய்து பூஜைக்கு தயார் நிலையில் வைத்திருப்பாள் காஞ்சனா..  கால் மணி நேரத்துக்கும் குறைவாத் தான்  அவள் பூஜை இருக்கும்..  சுருக்கமா 'ஓம் ஸூமுகாய நம :' ன்னு ஆரம்பிச்சு  விநாயகர் பூஜை. 'ஓம் ராஜாதி ராஜாய ப்ரஸ்ஹ்ய ஸாஹினே....... வைஸ்ரவணாய மஹாராஜாய நம:' ன்னு மந்திரம் சொல்லி தீபாராதனை காட்டும் பொழுது அந்த இடமே ஜ்வலித்து இறைவன் அருள் பாலித்த உணர்வு அங்கிருக்கிறவர்களுக்கு ஏற்படும்.   இதைப் பார்க்கும் பொழுது இந்த  மாதிரி மந்திர உச்சாடனமெல்லாம் இவளுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது, நமக்குத் தெரியாம போச்சே' என்ற எரிச்சல் மூத்த  மருமகள் மாலதிக்கு ஏற்படும்.  மாலதியும் இத்தனை நாளும் இதே மாதிரியான காலைப் பொழுதில் சுவாமிக்கு  விளக்கேற்றி வைத்து பூஜித்தவள் தான்.  ஆனால் தான் செய்வது ரெண்டு பழத்தை எடுத்து வைத்து தீபாராதனை காட்டுகிற சாதாரண பூஜை மாதிரியும் இவள் செய்வதில் விசேஷமாக ஏதோ  இருக்கிற மாதிரியும் மாலதிக்குத் தோன்றும்.  'இதையெல்லாம் தன் தாய் தனக்கு ஏன் சொல்லித் தரவில்லை? இவளெல்லாம் என்ன தாய்?..' என்ற ஆத்திரம் பெற்ற தாயின் மேல் வந்து முடியும்.

மாலதியின் வீக்னஸ் இதான்.   தன் குறைக்கு இன்னொருத்தரின் மேல் வாகாக பழியைப் போடுவாள்.  தந்தை தான் சொல்வது எதையாவது ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், இவரெல்லாம் என்ன தந்தை?-- என்ற ஆற்றாமையில் முடியும்.

மாமனார் ஹைஸ்கூல் ஹெட்மாஸ்டராய் இருந்தவர்.  ஹிஸ்ட்ரி அவர் ஸ்பெஷலைஸ்டு சப்ஜெக்ட்.  காஞ்சனாவும் வரலாறு பி.எச்டி.  என்பதினால் கேட்கவே வேண்டாம்.  ஞாயிற்றுக் கிழமை மாலை நேரங்களில் தினமும் ரெண்டு பேரும் ஹாலில் உட்கார்ந்து  பேசுவார்கள், பேசுவார்கள்.. அப்படிப் பேசுவார்கள்.  சில நேரங்களில் மற்றவர்களும் சூழ்ந்து உட்கார்ந்து சேர்ந்து அரட்டை அடிப்பார்கள், மாலதியின் பெண் வெகு சுவாரஸ்யமாக கதை கேட்பது போல அவர்கள் பேசும் சரித்திர சமாச்சாரங்களை சுவாரஸ்யத்தோடு கேட்டுக் கொண்டிருப்பாள்.  'சித்தி.. பல்லவர்கள் பற்றி சொல்லு.. அவங்க கட்டின கோயில்களைப் பார்க்க நாம காஞ்சிபுரம் போகலாமா?" என்று அவள் குழந்தை மன ஆசைகளைக் கேட்டுக் கொண்டிருப்பாள்.  அம்மாவைத் தாண்டிய ஒட்டுதல் அவளுக்கு சித்தியிடம். 'சித்தி ரொம்பப் படிச்சவங்க; அவங்க எது சொன்னாலும் சரியா இருக்கும்' என்ற எண்ணம் அந்தக் குழந்தை மனசில் பதிந்திருந்தது.

வழக்கமா அலுவலக ஜீப் வீட்டுக்கு வந்து தான் காஞ்சனாவைக் கூட்டிக் கொண்டு போகும்.  ஜீப் டிரைவர் வாசல் வராண்டாவிற்கு வந்து அவள் அலுவலக ஃபைல் கட்டுகளைத் தூக்கிக் கொண்டு போவான். மாதத்தில் இரண்டு தடவையாவது அவளுக்கு  வெளியூர்களில் கேம்ப் இருக்கும்.  அகழ்வாராய்ச்சி,  செப்பேடுகள்,  ஓலைச்சுவடிகள் என்று மாமனாரும் மருமகளும் இவள் கேம்ப் போய் விட்டு வந்தால் படு சுவாரஸ்யமாகப் பேசிக் கொள்வார்கள்.  ஒரு நாள் வீடு பூராவும் ஹாலில் உட்கார்ந்து பிராகிருத மொழிக் குடும்பம் பற்றியும் அவற்றின் வழிவந்த எழுத்துக்களை எப்படி வாசிப்பது என்றும் காஞ்சனா சொல்லிக் கொடுத்த பொழுது கண்கள் விரிய எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

மொத்தத்தில் காஞ்சனா ஒரு சகலகலாவல்லியாகத் தான் மாலதிக்குத் தோற்றமளித்தாள்.  அவள் மேல் உண்மையிலேயே ஒரு பிரமிப்பு அவளுக்கு இருந்தது வாஸ்தவம் தான்.  இருந்தாலும் அவளோடு தன்னை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது தான் ஒரு படி கீழே தான் என்ற உணர்வு அவளை சகல நேரமும் வாட்டிக் கொண்டிருந்தது.  காஞ்சனா அலுவலகம் போய் விட்ட பிறகு வழக்கம் போல தான்  சகஜமாக இருப்பது மாலதிக்கு நன்றாகவே தெரிந்தது.

இவ்வளவுக்கும் காஞ்சனாவுக்கு மாலதி மேல் மிகுந்த அன்பும் பாசமும் உண்டு.  வாய் சலிக்காமல்  'அக்கா, அக்கா' தான். இந்த அப்பழுக்கற்ற நெருக்கத்தை ஏன் தன்னால் இயல்பாகப் புரிந்து  கொள்ள முடியவில்லை என்று பல நேரங்களில் தனியே உட்கார்ந்து மாலதி யோசித்திருக்கிறாள்தான்.  அதற்கு அவளுக்கு விடை தான் கிடைக்கவில்லை.  அல்லது சரியான விடை கிடைப்பதற்கான மெச்சூரிட்டி அவளிடம் இல்லை என்பது தான் உண்மையான காரணமாயிற்று.

கொஞ்சம் கொஞ்சமாக இந்த கூட்டத்தை விட்டு தான், தன் புருஷன், மகள் விலகிப் போனால் தான் கொஞ்சமாவது தனக்கு வாழ்க்கையில் நிம்மதி ஏற்படும் என்ற நிலைக்கு வந்து விட்டாள் மாலதி.  அதற்காகவே தனி வீடு வாடகைக்குப்   பார்த்துக் கொண்டு  அல்லது வாங்கிக் கொண்டு போவாம் என்று புருஷனை தினம் தினம் அவன் அலுவலகத்திலிருந்து வந்ததும் நச்சரிக்க ஆரம்பித்தாள்.

வீடு வாங்க வேண்டுமானால் அது லேசுப்பட்ட காரியமில்லை. வீடுன்னாலே பெரிய  பட்ஜெட் தான். அதனால் மாலதி வற்புறுத்தல் ரொம்பவே பொறுக்க முடியாமல் அதிகமாகப் போனால்  வாடகைக்கு பெண்ணின் ஸ்கூலுக்கு அருகில் அமர்த்திக் கொள்ளலாம் என்பதே அவள் கணவன்  சீனிவாசனின் எண்ணமாக இருந்தது..

போகப் போக மாலதி வீடு மாற்றியே ஆக வேண்டும் என்று ரொம்பவே சீனிவாசனை நச்சரிக்க ஆரம்பித்தாள். ஒரு நாள் திடுதிப்பென்று  "எங்கப்பாவைப்  பார்க்கப் போறேன்.."  என்று ஆரம்பித்தாள்.

"எதுக்கு?" என்று கேட்டான் சீனிவாசன். கழுத்தில் போட்டிருந்த  ரெட்டை வடம் செயினைக் காட்டி "இதை அவரைக் கூட்டிண்டு நகைக்கடைக்குப் போய் வித்துடலாம்ன்னு இருக்கேன்.." என்றாள். 

"சரியாப் போச்சு..  செயின் எங்கேடீன்னு எங்கம்மா கேட்டா என்ன சொல்லுவே?" என்றான் சீனிவாசன்.

"இது எங்கப்பா எனக்குப் போட்டதுதானே?.. அதைப் பத்தி உங்கம்மா என்ன என்னைக் கேக்க வேண்டியிருக்கு?.. எங்க குடும்பம் எனக்குச் செஞ்சுப் போட்டதை நாங்க விக்கறோம்.. அவ்வளவு தானே?" என்று சுலபமாகச் சொன்னாள்.

சீனிவாசனுக்கு இவள் எந்த அளவுக்கு இந்தக் குடும்பத்தோடு விலகிப் போகிறாள் என்று எரிச்சலாக இருந்தது.  "விக்கப் போறாளாம்.. நீ என்ன தெரிஞ்சு தான் பேசறையா?.. பொல்லாத நகையைப் பத்தி பேச வந்துட்டா! நீயே இந்தக் குடும்பத்தின் ஆஸ்தி தான்.  என்றைக்கு இந்த வீட்டில் காலடி எடுத்து வைச்சு புகுந்தையோ, அன்னேலேந்து இதான் உன் வீடு.  இனிமே இப்படில்லாம் பேசாதே..  உங்கப்பாவுக்கு பாவம் புதுசா தலைவலி கொடுக்காதே.." என்றான்.

"அதுக்குச் சொல்லலே, நான்.  ஒரு தேவை அவசரம்ன்னா இந்த நகை உபயோகப்படட்டுமேன்னு தான்.." என்றாள்.

"அப்படி என்ன தேவை இப்போ வந்திட்டது?"

"ஏங்க.. உங்களுக்கு சொரணையே இல்லையா?.. உடனே வீடு மாத்தியாகணும்ன்னு நான் கிடந்து அல்லாடிண்டிருக்கேன்.. வாடகைக்குப் போனாலும் கையிலே காசா இருந்தா ஒரு  அட்வான்ஸாவது கொடுக்க உபயோகப்படும்லே?" என்றாள்.

"உங்கப்பா உனக்குப் போட்ட நகையை வித்துத் தான் வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்கணும்ங்கற நிலைக்கு இன்னும் நான்  வந்திடலே.. தெரிஞ்சிக்கோ.." என்று சீறி விழுந்தான்.

"அதையும் தான் நான் பாக்கறேனே.." என்று எகத்தாளமாய் மாலதி வக்கணை காட்டினாள்.

இன்னொரு நாளைக்கு திடுதிப்பென்று மாயவரம் போயே ஆக வேண்டும் என்று தீர்மானமாகச் சொல்லி விட்டாள். மாயவரம் அவள் அப்பா இருக்குமிடம்.

"சரி போயிட்டுவா.." என்றான் சீனிவாசன்.

'எதுக்கு'? - என்று இந்தத் தடவை கேட்கவில்லை.

"மாயவரம் போய் அப்பா கிட்டே இந்த நகையைக் கொடுத்து பணம் புரட்டச் சொல்லப்போறேன்.." என்று அவளாகவே சொன்னாள்.

"எனக்கு  உங்க வீட்லே இருக்கற மரியாதையை குழி தோண்டிப் புதைக்கப் போறையா?" என்று அமைதியாகக் கேட்டான் சீனிவாசன்.

அவள் பதிலே பேசவில்லை.  ஆக்ரோஷத்தோடு தான் கேட்டதிலேயே பிடிவாதமாக இருந்தாள்.

"நீ போயிட்டு வா.. ஆனா நீ இந்த நகை விஷயமா போறதுன்னா, இப்பவே போன் போட்டு விஷயத்தைச் சொல்லி உங்கப்பாவை தடுத்திடுவேன்..  அந்த அளவுக்கு இது சீரியஸான விஷயம்.  என் மானம் மரியாதை விஷயம்.." என்றான் சீனிவாசன்.

"நீங்க போன் போட்டு சொன்னா மட்டும் உங்க மரியாதை காத்துலே பறக்காதாக்கும்..?" என்று கேட்டாள் அவள்.

"நிச்சயம் பறக்காது.  உனக்குப் புரியாத என் நிலை உங்கப்பாவுக்குப் புரியும்.  கல்யாணத்திற்காக பெண்ணுக்குப் போட்ட நகையை தானே விக்க உங்கப்பா சம்மதிக்க மாட்டார்.  தங்கிட்டே இதைச் சொல்ற அளவுக்கு நீ,  நான் சொல்றதைக் கேக்காம அடம் பிடிக்கறேன்னு அவருக்கு புரியும்.. நீ போனாலும் நிச்சயம் உனக்கு புத்திமதி சொல்லி இங்கே அனுப்பக்கூட மாட்டார்.  தானே கொண்டு வந்து விட்டுட்டுப் போவார்.. தெரிஞ்சிக்கோ.." என்றான்.

அடுத்த வாரத்தில் எல்லா பிரச்னைகளையும் இறைவனே முன் நின்று  தீர்த்து வைத்தது தான் ஆச்சரியம். தான் சொன்னபடியே பிதுரார்ஜித வீட்டை இரண்டாகப் பிரித்து இரண்டு மகன்களுக்கும் எழுதி வைக்க மாமா மஹாலிங்கம் ஏற்பாடுகள் பண்ண ஆயத்த வேலைகளில் இறங்கினார்.  அப்படி எழுதி வைப்பதில் மாமிக்கும் முழு சம்மதம்.  இப்படி எல்லா பெற்றோர்களும் தங்கள் வாழ் நாளிலேயே முடிவுகள் எடுத்தால் பிள்ளைகளுக்கு எவ்வளவு செளகரியமாக இருக்கும் என்று  சொல்லிச் சொல்லி மகிழ்ந்தாள்.

ஆனால் இளையவன் லஷ்மணன் மட்டும் இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக் கொள்ளவே இல்லை.  என் பங்கு எனக்கு வேண்டாம் என்று அஃபிடவிட்டில் எழுதிக் கொடுத்து விட்டான்.  காஞ்சனா தான் இந்த விஷயத்தில் முன் நின்று அவனுக்கு பக்க பலமாய் இருந்தாள்.  பாவம், அக்காவுக்கு இந்த முழு வீடும் உரிமையானா ரொம்ப செளகரியமா இருக்கும்.. சினேகாவுக்கு இப்பவே சித்தப்பா கொடுத்த சீதனமா  இருக்கட்டும்.." என்று அவனுக்கு படித்துப் படித்துச் சொல்லியிருந்தாள்.

இதுக்குத் தான் காத்திருந்தது போல சீனிவாசனுக்கு அந்த வீட்டை முழு உரிமையாக்கியதும்  காஞ்சனாவுக்கு பதவி உயர்வு வந்து சாரநாத்திற்கு மாற்றல் உத்திரவு வந்தது.  இரண்டு மூன்று மாசத்தில் லஷ்மணனும்  சாரநாத்திற்கு தன் வங்கி வேலையை மாற்றிக்கொண்டு ஊர் போய்ச் சேர்ந்தான்.

இப்போ மாலதியைக் கேட்டால் இந்த வீடு மாதிரி இன்னொரு வீடு வருமா என்று கேட்கிறாள். அனாதைகள் மாதிரி  மாமனார் மாமியாரை இந்த பெரிய வீட்டில் தனியா விட்டுட்டு வேறு இடத்திற்கு போக நான் என்ன பைத்தியமா என்று கேட்கிறாள். 
 
சித்தி மடிலே சாஞ்சிண்டு சரித்திரக் கதைகள் கேட்க முடியாமல் போய்விட்டதே என்று சிநேகாவுக்கு மட்டும் ஈடு செய்ய முடியாத வருத்தம்.  

யார் கேட்டாலும் பெரியவர்கள் கடைசிக் காலம் வரை என்னுடன் தான் இருந்தார்கள் என்பாள் மாலதி. சின்னவன் பெற்றவர்களை விட்டு வடக்கே போனாலும் பெரியவனும் அவன் பெண்டாட்டியும் மாமானார் மாமியாருக்கு எந்தக் குறையும் வைக்காமல் கடைசி வரை பார்த்துக் கொண்டார்கள் என்று ஊர் உலகமே புகழ் மழையில் அவர்களை நனைத்தது.

பெரியவர்கள் காலத்திற்கு பிறகு மாளிகை மாதிரியான  அந்தப் பெரிய வீட்டை விற்று  2500 சதுர அடிகளில் ஒரு  பெரிய அப்பார்ட்மெண்ட்டுக்கு மாறி நகர்ப்புற கலாச்சாரத்திற்கு தங்களாலான பங்கை மாலதி குடும்பம் மன நிறைவோடு செய்தது.

அந்த புதுவீட்டு கிரகப்பிரவேசத்திற்கு காஞ்சனா தன் குடும்பத்தோடு வந்திருந்து ஒரு வாரம் சந்தோஷத்தோடு தங்கியிருந்து ஊர் திரும்ப ஆயத்தமானாள்.

"சிநேகாவிற்கு ஒரு பையனை பார்த்து வைத்திருக்கிறேன்.  படு ஸ்மார்ட்.  நல்ல குடும்பப் பின்னணி.. ஜாதகம் அனுப்பச் சொல்லட்டுமா?" என்று போகும் போது சொன்னாள்.

"காஞ்சனா.. நீ பார்த்து சரியா இருக்கும்ன்னா சரியாத் தான் இருக்கும்..  ஜாதகம்லாம் எதுக்கு?" என்று வாயெல்லாம் பல்லானாள் மாலதி. அடுத்த நொடியே, சீனிவாசன் இருந்த பக்கம் திரும்பி, "என்ன நான் சொல்றது?" என்றாள்.

சீனிவாசனும்  சந்தோஷத்தோடு "சரியாச் சொன்னே.." என்றான். 
 
டைரக்டர் முகத்தில் கோடி சூரிய பிரகாசம் ஜொலித்த மாதிரி இருந்தது..  "திரைக்கதை அமைப்பு  பிரமாதம்.. கங்கிராட்ஸ் சரஸா.." என்றார்.

சரஸா  என் பக்கம் திரும்பி என்னைப் பார்த்தாள். "நீங்க ஒண்ணும் சொல்லலையே?" என்றாள்.

"நீங்க என் கதைலே இருந்த ஓட்டை ஒடைசல்களையெல்லாம் அடைச்சிட்டீங்க.. அற்புதம், சரஸா.." என்றேன்.

இப்பொழுது தான் அவங்க பேரை டைரக்டர் முன்னாடி முதல் தடவையா சொல்றேன்.  அப்படிச் சொன்னதில் எனக்கு ஏதோ உரிமை வந்த மாதிரி இருந்தது.

"நீங்க கோடு போட்டுத் தந்ததினாலே தானே நான் அந்த வழிப்பாதைலேயே ரோடு போட முடிஞ்சது?" என்று என்னைப் பார்த்து கன்னம் சிவந்தாள் சரஸா.

"எல்லாம் சரி...  திரைப்படத்திற்கு பெயர் சூட்டல் என்ன?" என்று டைரக்டர் கேட்டார்.

சட்டென்று  'கண்ணழகி  காஞ்சனா'  என்றாள் சரஸா.


"ஓ..  ஒன்பது எழுத்துக்களா?..  ஓக்கே.. ஓக்கே...".என்றார் அவர்.

மெதுவாக கிசுகிசுத்த குரலில் சரஸாவுக்கு மட்டும் கேட்கிற மாதிரி,  'என்னங்க இது?..  கண்ணழகி, பொட்டழகி என்று.." என்றேன்.

"சினிமான்னா அப்படித்தாங்க..  கண்டுக்காதீங்க.." என்றாள் கள்ளி.

"நான் சொல்றது என்னன்னா, விஜி ஸார், இனி நீங்களும் நம்ம கதை இலாகாவிலே இணைஞ்சுடுங்க.. நிறைய வெற்றிப்படங்களில் உங்களோட பங்கும் இருக்கட்டும்.." என்றார் டைரக்டர்.

அவரைப் பார்த்து கைகூப்பி, "நன்றி, ஸார்.." என்றேன்.

                                   *******************

67 கருத்துகள்:

  1. காலை வணக்கம் எல்லோருக்கும்.

    கதையைக் கொஞ்சம் தான் வாசித்திருக்கிறேன். முழுவதும் வாசித்துவிட்டு வருகிறேன் பின்னர். கருத்து போட ப்ளாகர் அனுமதிக்கனுமே!! ஹிஹிஹி

    கூட்டுக்குடும்பம் என்றில்லை இரு மருமகள்கள் இருக்கும் குடும்பத்திலும் கூட ஒருவரின் திறமைகள் மற்றொருவருக்குப் பொறாமை ஏற்படுத்தும் அல்லது ஒரு தாழ்வுமனப்பாங்க்மையை ஏற்படுத்தும் என்பது பெரிய குடுமப்த்தில் புகுந்த எனக்குப் புரிந்து கொள்ள முடிகிறது. அதுவும் வீட்டுப் பெரியவர்களால் ஒப்பீடு வந்தால், கண்டிப்பாக மனதில் வருத்தம் மேலிடும். பொறாமையும் வர நேரிடும். ஓகே....அது சில பிளவுகளுக்கும் கூட வழிவகுக்கும் என்பதும் ஓகே...ஆனால்

    இங்கு ஒப்பீடுகள் இல்லை. அவளுக்காகவே ஒரு பொறாமை வருகிறது சரி....ஆனால்

    //இவள் செய்வதில் விசேஷமாக ஏதோ இருக்கிற மாதிரியும் மாலதிக்குத் தோன்றும். 'இதையெல்லாம் தன் தாய் தனக்கு ஏன் சொல்லித் தரவில்லை? இவளெல்லாம் என்ன தாய்?..' என்ற ஆத்திரம் பெற்ற தாயின் மேல் வந்து முடியும்.//

    இது கொஞ்சம் இடிக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்கு ஒரு கருத்துக் காலம்பரப் போட்டிருந்தேன். எல்லாம் இந்த இணையம் செய்த பிரச்னையால் காணாமல் போயிருக்கு! கருத்துப் போயிருக்கும்னு நினைச்சேன். :(

      நீக்கு
    2. தி. கீதா,

      நீங்கள் நினைக்கிற மாதிரி பொறாமை, தாழ்வு மனப்பான்மை எல்லாம் இல்லை.

      அம்பிவாலென்ஸ் என்பது ஒருவரிடத்தில் வெவ்வேறு நேரங்களில் விருப்பும் வெறுப்பும் கொள்கின்ற வித்தியாசமான குணம். அதையையும் வெளிப்படக் காட்டாமல் மனதிற்குள்ளேயே புதைத்து வைத்துக் கொள்வார்கள்.

      சிக்மெண்ட் பிராய்டின் கண்டுபிடிப்புகளில் உங்களுக்கு ஆர்வம் உண்டு என்பதினால் உங்களுக்கு இதை தெரிவிக்கத் தோன்றியது. மன ஆய்வுகளின் அடிபடையிலானவற்றை நமது தீவிர வாசிப்பிற்கு உட்படுத்த வேண்டும். தெரியாதவற்றை கூகுள் சர்ச்சில் தேடிப் பார்த்து தெரிந்து கொண்டிருக்கலாம். மேம்பட்ட வாசிப்பு நிலைகளுக்கு உங்களை உட்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். வாழ்த்துக்கள்.

      நீக்கு
    3. ஜீவி அண்ணா ஆம்ப்வேலன்ஸ் பற்றி அறிவேன். அது பற்றி சொல்ல வேண்டும் என்றால் நிறைய இருக்கு. மனதில் புதைத்து வைத்துக் கொண்டால் அதன் விளைவுகள் அதிகம். இது ஆழமான விரிவான சப்ஜெக்ட்

      அது கொஞ்சம் பெரிய வார்த்தையோ இக்கதைக்கு என்று தோன்றியதால் சொன்னேன்.

      //மேம்பட்ட வாசிப்பு நிலைகளுக்கு உங்களை உட்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். வாழ்த்துக்கள்.//

      கண்டிப்பாக. மிக்க நன்றி ஜீவி அண்ணா.

      கீதா

      நீக்கு
  2. மாலதியின் வீக்னஸ் இதான். தன் குறைக்கு இன்னொருத்தரின் மேல் வாகாக பழியைப் போடுவாள். தந்தை தான் சொல்வது எதையாவது ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், இவரெல்லாம் என்ன தந்தை?-- என்ற ஆற்றாமையில் முடியும்.//

    அப்பாவின் மேல் கூட மனவருத்தம் ஏற்படலாம் ஆனால் அம்மாவின் மீது என்பது.....
    ஒரு வேளை என் மனம் வேறு விதமாக யோசிப்பதால் இப்படி எனக்குத் தோன்றியிருக்கலாம். பெற்றோர் மீது வருத்தம் இருக்கலாம். ஆனால்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த வரிகள் மட்டும் கதைக்கு வேண்டாமோ என்று தோன்றியது. மாலதிக்கு ஏற்படும் தாழ்வுமனப்பான்மை சொன்னதே போதும் என்றும் தோன்றியது. ஜீவி அண்ணா, தப்பா இருந்தா ஸாரி...நான் விமர்சிக்கும் அளவு பெரிய ஆளும் இல்லை...

      அடுத்தடுத்து டக்கென்று கதை டர்ன் ஆகிவிட்டது வீட்டைப் பிரிப்பதில் என்று... சினிமாவுக்கு என்பதாலோ?! 2 1/2 மணி நேரத்தில் என்பதால்!!

      கீதா

      நீக்கு
    2. ஹாஹாஹா, தி/கீதா, இந்தப் படத்தை அந்தத் தயாரிப்பாளர் எடுத்திருந்தால் நிச்சயம் ஒரே வாரத்தில் படச்சுருள் திரும்பப் பெட்டிக்கு வந்திருக்கும். பாவம் அந்தத் தயாரிப்பாளர்! :)))))))

      நீக்கு
    3. தி. கீதா,

      இந்தக் கதையை இன்னொரு தடவை 15 நாட்கள் இடைவெளி விட்டு வாசித்துப் பாருங்கள். வேறு விதமான பார்வை கிடைக்கலாம். கிடைக்க வேண்டும்.

      ஒரு கதையை படைத்து வாசிக்க வைக்க எழுத்தாளன் என்னன்ன உத்திகளை வடிவமைப்புகளை உருவாக்குகிறான் என்பது புரியும்.


      நீக்கு
  3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் அமைதியும் ஆரோக்கியமும் மேலோங்கி மன உளைச்சல் இல்லாமல் ஆனந்தமான சகஜமான வாழ்க்கைக்குப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  5. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    இறையருள் சூழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  6. இப்படி எல்லா பெற்றோர்களும் தங்கள் வாழ் நாளிலேயே முடிவுகள் எடுத்தால் பிள்ளைகளுக்கு எவ்வளவு செளகரியமாக இருக்கும் //

    இது மிகச் சரி. இது இல்லாததால் எத்தனையோ குடும்பங்களில் மனஸ்தாபங்கள், பிளவுகள்...என்று...அதுவும் பெற்றோரின் மறைவிற்குப் பின்....இல்லை என்றால் அவர்கள் சுயநினைவோடு இல்லாமல் தளர்ந்திருக்கும் வயதில்....அவர்களைப் பார்த்துக் கொள்வதில் இருந்து பிரிவினை வரை பிரச்சனைகள் முளைக்கிறது பெரும்பான்மையான குடும்பங்களில். சரியான புரிதல், வீட்டில் உள்ளவர்களிடம் வெளிப்படைத்தன்மை, கலந்து பேசுதல் இல்லாமையால்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கௌ அண்ணா? அந்தப் படம் கோர்த்தது? யார் இந்தப் பெண்? முன்ன பின்ன எபியில் பார்த்ததே இல்லையே!! ஹிஹிஹிஹி...நன்றாகத்தான் இருக்கிறாள்.

      கீதா

      நீக்கு
    2. பெண் அழகாகவே இருக்கிறாள். கதை பேசும் கண்கள்.

      நீக்கு
    3. தி/கீதா, உங்களோட இந்தக் கருத்தின் பொருள் இப்போத் தான் மனதில் பட்டது. இந்த மாதிரிப் பெற்றோர் பிரிப்பது அவர்கள் காலத்திலேயே பிரிப்பது அவ்வளவு நல்லதல்ல என்பதே என் கருத்து. பூர்விக சொத்தென்றால் எழுதி எல்லாம் வைக்க வேண்டாம். தானாகவே பிள்ளைகள்/பெண்களுக்கு எந்தவிதமான பிரச்னையும் இல்லாமல் பிரித்துக் கொள்ள முடியும். ஆனால் சுயமாகச் சம்பாதித்தது எனில் அவர்கள் காலம் வரைக்கும் அவர்கள் பொறுப்பிலேயே இருந்துவிட்டுப்பின்னர் அவரவருக்கு இத்தனை பங்கு எனப் பிரித்து (தாய்/தந்தை இருவரும் உயிருடன் இருக்கும்போதே) இருவரும் சம்மதித்துக்கையொப்பம் இட்டு உயில் எழுதி அதைப் பதிவும் செய்து வைக்கணும். ஒரு வக்கீல் சாட்சி இருந்தால் நல்லது. குடும்பப் பெரியவர்கள் இருவர் அல்லது உறவினர்களில் நல்ல பொறுப்புக்களில் இருப்பவர் இருவர் ஒரு வக்கீல், ஒரு மருத்துவர் என சாட்சிக் கையெழுத்துப் போட்டுப் பதிவு செய்தால் அது தான் நன்மை தரும். பெரியவங்க இருக்கும்போதே பிரித்து வைத்துவிட்டால் என்னதான் மகன்கள்/மருமகள்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றாலும் சொந்தச் செலவு என்னும்போது இருவருக்குமே தங்கள் கைகளில் சொந்தப் பணம் இல்லாமல் கஷ்டமாக இருக்கும். தர்ம சங்கடமாக உணர்வார்கள். எங்கள் மாமனார் நிலம், வீடு எல்லாம் விற்றதும் (பூர்வீகம் தான் நான்கைந்து தலைமுறைகளுக்கும் மேல்) அந்தப் பணத்தைப் பிரித்துக் கொடுக்க வந்தப்போக் குறுக்கே விழுந்து தடுத்தது நானும்/நம்ம ரங்க்ஸும் தான். அதை நல்ல வட்டிக்கு சுந்தரம் ஃபைனான்ஸில் போட்டு வைத்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வரும் வட்டியை அவங்க சொந்தச் செலவுக்குனு வைச்சுக்கச் சொல்லி ஆலோசனையும் கொடுத்தோம். அதில் அவர்கள் தங்களை ஓர் கௌரவமான இடத்தில் வைத்திருப்பதாக உணர்ந்ததோடு பெண்கள்/மருமகள்களுக்கு அவங்க விரும்பியதை விரும்பியதோடு வாங்கிக்கவும் சொல்லி அவர்கள் சார்பில் பணமோ/பொருளோ கொடுக்கவும் முடிந்தது. எங்காவது போய் வரவும் பேருந்துப் பயணங்களுக்கான செலவை எங்களிடம் எதிர்பார்க்காமல் அவர்களே செலவு செய்து கொள்ளும்படியும் இருந்தது. இது தான் பெரியவர்களுக்குக் கடைசிக்காலம் வரை நல்லது. மாமனார் போனதும் மாமியாருக்கு அப்படியே மாற்றினோம் எல்லாவற்றையும்.

      நீக்கு
    4. ஏதானும் வேண்டுமென்றாலும் வாங்கிச் சாப்பிட்டுக்கலாம். பெரியவங்க அவங்களை ஓர் சுமையாக நாம் நினைக்கிறோம் என்பதை உணர மாட்டார்கள். நம்மிடமும் பணம், காசு இருக்கிறது என்னும் மனோபலம் இருக்கும். எங்களுக்கு மருத்துவத்திற்கு ரீ இம்பர்ஸ்மென்ட் உண்டென்பதால் அவங்களுக்கு மருத்துவச் செலவு நாங்க தான் செய்வோம். ஆனாலும் மாமனார் கொடுத்துடறேன் என்பார். அதை வாங்கி அவருக்கே தேவையானதை வாங்கிக் கொடுத்துடுவோம். நமக்குத் தான் செலவு செய்த பணம் திரும்ப வருமே! ஆகவே வாங்கிக்க மாட்டோம்.

      நீக்கு
    5. "சுமையாக நாம் நினைக்கிறோமோ என்று உணர மாட்டார்கள்!"

      மேலே தப்பான பொருளில் வந்திருக்கு.

      :(

      நீக்கு
    6. கீசா மேடம்...உங்கள் கருத்துகள் அர்த்தம் பொதிந்தவை. என் அப்பாவும் என்னிடம் இதனைத்தான் தான் கேள்விப்பட்ட பிறரின் அனுபவங்களோடு பொருத்தி என்னிடம் சொல்லியிருக்கிறார். வீடு வாங்கவோ காடு வாங்கவோ..பசங்க அவங்களுக்கான தேவைகளை அவங்கதான் பார்த்துக்கணும். பெற்றோரிடமிருந்து அவங்க காலத்துக்கு அப்புறம்தான் என்ன இருக்கோ அது வரும். அதிலும் குழப்பம் இல்லாமல் முதலிலேயே சொல்லிவிட்டால் நல்லதுதான்.

      நீக்கு
    7. நன்றி நெல்லை. தினசரிகளில் எத்தனை படிக்கிறோம். நிலம் வீடு எல்லாவற்றையும் குழந்தைகள் பின்னால் செய்வார்கள் என்னும் எண்ணத்தில் பிரித்துக் கொடுத்துவிட்டு அவங்க பார்த்துக்காமல் திண்டாட விட்ட பெற்றோர் இப்போது கலெக்டர் மூலமாக நீதி மன்றத்தை அணுகித் தான் எழுதிக் கொடுத்த சொத்தைத் திரும்பத் தன் பெயரிலேயே வாங்கினார். ஆகவே பூர்விகமாக இருந்தாலும் கூடப் பின்னால் குழந்தைகளுக்குத் தான் என்பதால் பெற்றோர் இருவரும் இருக்கும் வரையிலும் அவர்கள் பொறுப்பில் இருப்பதே நல்லது.

      நீக்கு
    8. வரேன், தோசை வார்க்கப் போகணும். உட்கார்ந்தால் கால் வீங்குகிறது. ரொம்ப உட்காரவும் முடியலை. படுக்கவும் முடியாது! பத்து நாட்களாகப் படுத்தல் தாங்கலை! :))))))

      நீக்கு
    9. கீதாக்கா உங்கள் கருத்து அப்சொல்யூட்லி ரைட்..

      பெற்றோர் தங்களுக்கும் வைத்துக் கொண்டு செய்வதைத்தான் சொன்னேன். அது அங்கு விட்டுப் பொச்சு....ஆனால் தங்களுக்கு வைத்துக் கொள்ளாமல் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள் கடைசியில் அவஸ்தைப்பட்டுக் கொண்டு.

      என் தனிப்பட்ட கருத்து குழந்தைகள் அவர்கள் தங்கள் காலில் நின்று சம்பாதித்து அவர்களுக்குத் தேவையானதை வாங்கிக்கலாம். படிக்க வைத்துவிட வேண்டும். பெற்றோர் அவர்களுக்கு இருந்தால் பின்னால் கொடுக்கலாம். இல்லை தானாகவே போகும்/.

      என் நெருங்கிய உறவுகள் தங்கள் குழந்தைகளுக்கு ஆளுக்கு ஒரு வீடு என்று இப்பவே வாங்கி வைத்துவிட்டாங்க அது போல நகை எல்லாம் தங்களுக்கும் ஒரு வீடு என்று...சேவிங்க்ஸ் என்று.

      அவர்கள் பூர்வீகச் சொத்து =அது எழுதிவைக்கப்படாததால் பிரச்சனையில் இருக்கிறது...உறவுக்குள் சில வருத்தங்கள்....அது போல்

      பூர்வீகச் சொத்தும் கூட பிரித்தலில் பல மனவருத்தங்கள் உரசல்கள் ஏற்படுவதைப் பார்த்துவருகிறேன் அதனால்தான்சொன்னேன்...

      கீதா

      நீக்கு
  7. சுபம்..
    எப்படியோ கதை நல்லவிதமாக முடிந்திருக்கின்றது... அடிப்படை புரிதல் எல்லாருக்கும் வேண்டும்...

    பதிலளிநீக்கு
  8. எல்லாம் சரி...
    சரஸாவிற்கு என்ன வயதென்று ஜொல்லவில்லையே!...

    கள்ளி என்று வர்ணிக்கப்பட்டிருப்பதால்
    நாமாகக் கணக்கிட்டுக் கொள்ள வேண்டியது தான்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரஸாவிற்கு 22, காஞ்சனாவிற்கு 24, மாலதிக்கு 27னு வச்சுக்கிட்டா என்ன குறைந்துபோயிடும்?

      நீக்கு
    2. தம்பி துரை, சரசாவிற்கு 22 வயதிற்குள்ளாக எனப் போன வாரமே சொல்லப்பட்டிருந்தது. மறந்துட்டீங்க போல! :))))) நாம நெல்லை சொன்னாப்போல் வைச்சுக்கலாமே! என்ன ஆச்சு அதனால்! :)))))

      நீக்கு
  9. காஞ்சனாவின் ஓவல் முகத்தையும் அந்த வட்டக் கருவிழிகளையும் கனக் கச்சிதமாக ஓவியத்தில் கொண்டு வந்திருக்கும் கேஜிஜியின் தனித்திறமைக்கு ஒரு ராயல் சல்யூட் !!

    பதிலளிநீக்கு
  10. பதில்கள்
    1. நன்றி நண்பரே!

      உங்கள் வாசிப்பு அனுபவம் மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை போலும்.

      பா.வெ. எத்தனை கதைகள் படிப்பவர்? அவருக்கே இந்தக் கதை சரிவர புதியாதது ஆச்சரியம் தான். அவர்கள் பின்னூட்டத்திற்கு விளக்கிச் சொல்ல வேண்டும்.

      நீக்கு
    2. 'அக்காவுக்கு முழு வீடும் உரிமையானால் வசதியாக இருக்கும்' என்பதை விட, :சினேகாவுக்கு கொடுத்த சீதனமா இருக்கட்டும்' என்பது தான் சிறப்பு...

      மனக்கண் அழகி...


      "கண்டுக்காதீங்க..." என்ற கள்ளியிடம், கதை சொன்னவர் மனதில் பாடிய பாடல் :-

      சரச ராணி கல்யாணி...
      சுக சரச ராணி கல்யாணி...
      சங்கீத ஞான வாணி மதி வதனி...
      சரச ராணி கல்யாணி...

      நீக்கு
    3. மனக்கண் அழகி....

      திண்டுக்கல்லார் வந்தால்
      தமிழும் கூடவே வரும்...

      தங்கள் மனதிற்கிசைந்த பாடல் கண்டு
      அசந்தே போனேன்..

      நீக்கு
  11. போன வாரமே தயாரிப்பாளர் முதல் மருமகளின் மனமாற்றத்திற்கு வலுவான காரணம் கேட்டிருந்தார். கதாசிரியர் தரப்பில் போன வாரமும் அதற்கு பதில் இல்லை. இந்த வாரமும் இல்லை. அந்த சரஸா வலுவில் மாலதியின் மேல் கற்பனையைப் பறக்கவிட்டுச் செய்த வர்ணனைகள் மாலதியின் மனமாற்றத்திற்கு ஏற்ற வலுவான காரணமாக அமையவில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. அதோடு காஞ்சனாவுக்கு இத்தனை பெரிய உத்தியோகம், அவள் அழகு இதெல்லாம் முன் கூட்டியே கோடி காட்டி இருந்தால் ஓரளவுக்கு ஒத்துக் கொண்டிருக்கலாம். எல்லா நல்ல குணங்கள், சாமர்த்தியம், படிப்பு, வேலை, என எல்லாவற்றையும் வலுவில் காஞ்சனாவின் மேல் திணித்து மாலதியைப் பொறாமைக்காரி, போட்டி போடுபவள், அப்பா, அம்மாவை மதிக்காதவள் என்றெல்லாம் சொல்வதோடு கணவனோடு சண்டை போடுவதாகவும் காட்டி இருப்பதால் இதுவும் வலிந்து திணிக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள வெகு நேரம் ஆகவில்லை. ஒரு கதைக்குக் கற்பனை தேவை தான். ஆனால் அவை ஏற்கப்படக்கூடியதாக இருக்க வேண்டும். மாமியார்/மாமனார் நல்லவர்கள் என நிரூபிப்பதற்காக மருமகளைப் பொல்லாதவளாகக் காட்ட வேண்டுமா என்ன? நல்ல மாமனார்/மாமியார் நிறையவே இருக்காங்க. அவங்களோடு ஒத்துப் போகும் மருமகள்களும் ஒத்துப் போகாத மருமகள்களும் நிறையவே உண்டு. அதே போல் நல்ல மருமகளானாலும் அலட்சியம் செய்யும் மாமனார்/மாமியார்களும் உண்டு. இதைத் தான் என்னோட கதையின் கருவாக எடுத்துக்கொண்டு சுட்டியும் காட்டினேன். அதைத் தவறு என நிரூபிப்பதற்காக வேறே கோணம் என நினைத்துக் கொண்டு ஒருத்தரை ரொம்ப நல்லவராகவும் இன்னொருத்தரை மோசமானவராகவும் சித்திரிக்க வேண்டுமா என்ன? காஞ்சனா மாற்றலாகிப் போனதும் வீடு முழுதும் தனக்குக் கிடைத்ததும் மாலதியும் மனசு மாறினாள் என்பதும் அசிங்கமாக இருக்கிறது. தன்மானம் உள்ள எந்தப் பெண்ணிற்கும் இதை ஏற்க முடியாது! முதலிலேயே மாமனார்/மாமியார் கருத்துத் தெரிந்திருந்தால் அவங்க அந்த அளவுக்கு வசதியானவங்க என்பதும் உண்மையானால் எந்தப் பெண்ணும் அவசரப் பட்டிருக்க மாட்டாள். பொறுமை காத்திருப்பாள். இங்கேயோ இரு பிள்ளைகளுக்கும் பாகம் என்றதும் ஒத்துக்கொள்ளாத மருமகள் தனக்கே எல்லாம் கிடைப்பதால் ஒத்துக் கொள்கிறாளாம். மனசாட்சி வேண்டாமா? என்னதான் இரண்டாவது பிள்ளை வேண்டாம் என்றாலும் பூர்விகம் வீடு என்றால் அவன் பாகத்தை மறுப்பதோ/மறுக்கவோ முடியாது/கூடாது. அதைத் தனியாக வைத்து வாடகைக்கு விட்டு அந்த வாடகையை இரண்டாவது மகன்/மருமகள் வங்கிக் கணக்கில் பணத்தைப் போட்டோம் என்றால் ஒத்துக் கொண்டிருக்கலாம். இது முழுக்க முழுக்க மாலதியை சுயநல நோக்கில் காண்பிக்க எழுதப் பட்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. அதோடு இருவரின் உடல் நிறம்/அழகு/தலை மயிர் என அத்தனையும் வர்ணனைக்கு உள்ளாகி இருப்பது ஏதோ செந்தில்/கவுண்டமணியின் நகைச்சுவைக் காட்சிகளில் அவங்க பேசிக்கும் நகைச்சுவைப் பேச்சுப் போல் இருக்கிறது. இப்படி ஒருவரின் நிறம்/அழகு/குணம் என விமரிசிப்பது அவ்வளவு ரசிக்கக் கூடியதாயும் இல்லை. இதனால் மாலதிக்குப் பொறாமை என்பதும் ஏற்க முடியாதது. போன பதிவில் அவள் திறமை பற்றி எதுவுமே வராமல் இந்தப் பதிவில் சரசா சொல்வது போல் மாலதி திறமைக்குறைவானவள் என்று காட்டியதில் என்ன கிடைத்தது என்பதும் புரியலை! போதும்னு நினைக்கிறேன். யாரானும் அடிக்க வருவதற்குள் நான் ஓட்டமாய் ஓடி விடுகிறேன். கொஞ்ச நாளைக்கு நான் ஊரிலேயே இல்லை. :))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாம்மா, நீங்கள் கூறிய கருத்துக்களே என் மனதிலும் பட்டது.

      நீக்கு
    2. நான் முதலிலேயே ஓடிவிட்டேன் மா.:)

      நீக்கு
    3. ஏன் வல்லிம்மா? உங்களிடமிருந்து இப்படி ஒரு பின்னூட்டமா?

      ஒரே நபர் மாய்ந்து மாய்ந்து இதை தவிர எனக்கு இன்று வேறு வேலை இல்லை என்கிற மாதிரி மற்றவர்களின் பிந்னூட்டங்களுக்கு தான் பின்னூட்டம் போட்டு கதைப் போக்கை திரித்துக் கூற எவ்வளவு முயன்றிருக்கிறார்? எனக்கே நான் எழுதிய கதைக்கு இவர் ஏன் இவ்வளவு அக்கறை கொள்கிறார் என்று வியப்பாகப் போயிற்று.

      ஒடி விட்டேன் என்பதற்கு என்ன காரணம் சொல்லுங்கள். முடிந்தால்
      விளக்கிச் சொல்ல முயற்சிக்கிறேன்.

      நீக்கு
  13. அனைவருக்கும் முகம் மலர அன்பான காலை வணக்கங்கள். தொற்று நீங்கி மக்கள் நலமாய் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. @ கீதா..

    // கௌ அண்ணா?.. அந்தப் படம் கோர்த்தது?.. யார் இந்தப் பெண்?.. முன்ன பின்ன எபியில் பார்த்தது இல்லை!.. ஹிஹி நன்றாகத் தான் இருக்கிறாள்!.. //

    @ கீதாக்கா...

    // பெண் அழகாகவே இருக்கிறாள். கதை பேசும் கண்கள்.. //

    கதை பேசும் கண்கள்!..
    ஆகா!.. பதிலுக்குப் பேசி விட்டால் போகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! துரை, அருமை! என்னைக் கேட்டால் நீங்களே இந்தக் கருவில் ஒரு கதை எழுதிவிடுங்களேன்! :))) கிராமத்து மணத்தோடு மிளிரட்டும்.

      நீக்கு
    2. நன்றியக்கா..

      இந்த வாரத்தின் அழகுக்கு அழகு அந்தப் படம் தான்...

      ஒரு வருத்தத்தின் பேரில் சும்மா இருக்கின்றேன்.. எட்டு மாதங்கள் ஆகின்றன கதை எழுதி!..

      நீக்கு
    3. என்ன வருத்தம்? எதுவாக இருந்தாலும் இம்மாதிரியான எழுத்துகள் மனதை மாற்றும் வல்லமை கொண்டவை. ஆரம்பியுங்கள்.

      நீக்கு
    4. துரை அண்ணா அந்தப் பெண் நல்ல பொருத்தமா இருக்கிறாள் இல்லையா கதைக்கு....
      துரை அண்ணா நானும் இந்தப் படத்தைப் பார்த்ததுமே தலைப்பு மனதில் தோன்றிவிட்டது!!!! படக்காரங்க எலலம் தலைப்பை ஏதோ ரெஜிஸ்டர் பண்ணுவாங்களாமே அப்படி இங்கு ரெஜிஸ்டர் பண்ணலாமாஹிஹிஹிஹி...

      அண்ணா நீங்க டக்கு புக்குன்னு எழுதிடுவீங்க..அதுவும் சூப்பரா கிராமிய்ய மணம் கமழ....அழகான தமிழில்!!!

      .ஆனா நான் இருக்கேனே ஹூம் என்னத்த சொல்ல...சொல்லிட்டு எழுத ரொம்ப டைம் எடுத்துக்குவேன்...ஹாஹாஹா கீதா உள்ளருந்து குரல் ...இன்னும் ஏற்கனவெ உள்ளதை எழுதி முடிக்கலை..இதுல வேற புதுசா...என்று என்னை கேலி செய்கிறது!!!!!..

      பார்ப்போம் எப்படி வருகிறது என்று..


      கீதா

      நீக்கு
  15. சென்ற வாரம் கதை துவங்கிய ஜோரில் தொடர்ச்சியை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தேன். கொஞ்சம் ஏமாற்றம்தான். கண்ணழகி காஞ்சனா என்று ஒரு கேரக்டரை வலிந்து புகுத்தியதில் கதை இயல்பு தன்மையை இழந்து விட்டது. கதை வேறு தேவையில்லாமல்  மாலதியின் பெண்ணின் திருமணம் வரை நீள்கிறது.  பால்+டிகாஷன்= காபி என்று சொல்லியிருந்தார். தண்ணி டிகாஷனாகி விட்டதால் காபியில் அரோமா,சுவை இரண்டுமே மிஸ்ஸிங். இது என் கருத்து. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், பானுமதி, நானும் தான். என்னவோ பெரிதாகச் சொல்லப் போகிறார்னு எதிர்பார்ப்பு! நீங்க சுருங்கச் சொல்லி விளங்க வைச்சுட்டீங்க. நான் பாருங்க, பக்கம் பக்கமா எழுதித் தள்ளி இருக்கேன். சிக்கனம் அதிகம் உங்களிடம். ஹிஹிஹி, வார்த்தைகளில்! :)))))

      நீக்கு
    2. இந்த வாரத்தையும்/ வாசகப் பெருமக்களையும் சும்மா விடக்கூடாது (!) என்று எப்படியோ தாளித்து பரிமாறி இருக்கின்றார்கள்..

      இதுவும் ஒரு சுவை தான்!..

      வாழ்க வளமுடன்...

      நீக்கு
    3. வாங்க, பா.வெ.

      எழுதும் கதைகளுக்கு அதை எழுதிய எழுதிய எழுத்தாளனே விளக்கக் கூடாது. அந்த கதைகளே வாசகர்களுடன் பேசிக் கொள்ளட்டும் என்று விட்டு விட வேண்டும் என்பார் என் குருதேவர் ஜெயகாந்தன்

      இருந்தாலும் வாசிப்போரின் சரியான புரிதலுக்கு சில விளக்கங்களும் தேவைப்படுவதால் தங்கள் பின்னூட்டத்திற்கு பதிலளிக்க முயற்சிக்கிறேன்.

      நீக்கு
    4. 1. கண்ணழகி காஞ்சனா என்ற கேரக்டர் வலிந்து புகுத்தப் பட்டதால் --

      ஏற்கனவே மூலக்கதையில் இருந்த இரண்டாவது மருமகள் தான் இந்த காஞ்சனா. இந்தக் கதையை மேலும் தொடர்ந்து எழுதுவதற்கு கவனப்படுத்தாமல் விட்ட இந்த கேரக்ட்டரை கவனப்படுத்த துணிந்தேன்.

      நீக்கு
  16. மன்னிச்சிகங்க. எழுதத் தெரியாதவனின் கிறுக்கலை வாசிக்க வைத்து தொந்தரவு கொடுத்திருந்தால் மன்னிச்சிங்கங்க.

    பதிலளிநீக்கு
  17. நடந்த கதை - வேறு பார்வையில் மாற்றங்களுடன்... ம்ம்ம்! நடத்துங்க! பின்னூட்டங்கள் வழி வந்த கருத்துகளும் படித்தேன். அவரவர் கருத்து அவரவர்களுக்கு! இதில் வருத்தப்பட ஒன்றும் இல்லை என்று தோன்றுகிறது.

    தொடரட்டும் கதைகள்.

    பதிலளிநீக்கு
  18. நன்றி, நண்பரே!

    'எழுதுவதினால் ஆய பயன் என் கொல்?' என்று ஒன்று இருக்கிறதல்லவா? இந்தக் கதையை வேறு தளங்களுக்கு நான் கொண்டு போயிருக்கலாம்.

    பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  19. 2. மூலக்கதைப்படி 10 வருடங்கள் (என் கதைப்படி 8 வருடங்கள்) மாமனார் - மாமியாரோடு ஒன்றாக குடித்தனம் நடத்திய மூத்த மருமகள்
    10 வருடங்கள் கழித்து தனிக் குடித்தனம் நடத்த தீவிரமாகிறாள். இதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்து எழுத வேண்டியது தான் கதையின் முக்கிய பகுதி.

    பதிலளிநீக்கு
  20. 3. இப்படி கூட்டுக் குடும்ப வாழ்க்கையை விட்டு தனித்துப் போக மூலக்கதையில் என்ன காரணம் சொல்லப் பட்டிருக்கு என்பது அடுத்த கேள்வி.
    மாமனாரின் மாமியாரின் சில குணங்கள் இந்த முடிவுக்குக் காரணம் போல காட்டப்பட்டிருக்கே ஸ்பெஸிக்காக இதான் முக்கிய காரணம் என்று காட்டபட வில்லை.

    பதிலளிநீக்கு
  21. 4. மூத்த மருமகளுக்குப் பிடிக்காத பெரியவர்களின் சில குணங்கள் தான்
    இப்படி அந்த மருமகள் தனிக்குடித்தனம் போகக் காரணம் என்றால் கடந்த 10 வருடங்களாக பெரியவர்களுக்கும் இந்த மருமகளுக்கும் அடிக்கடி பெரியளவில் சண்டைகளே அந்த வீட்டில் வெடித்துக் கொண்டிருந்திருக்கும்.

    இந்த அவலத்தை குறைந்த பட்சம் நம் கதையிலாவது தவிர்ப்போமே என்று தான் இளைய மகனுக்கு திருமணம் ஆனவுடன் மூத்த மருமகளுக்கு தனிக்குடித்தனம் போக தீவிரம் ஏற்பட்டது போல என் கதையில் காட்டியிருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  22. 4. அதற்காகத்தான் இரண்டாவது மருமகள் காஞ்சனாவின் தனிப்ப்ட்ட சில மூத்த மருமகளிடமிருந்து வேறு பட்ட குணாம்சங்களை விவரித்தேன்.
    சிக்மண்ட் பிராய்ட் சொன்ன அம்பிவாலன்ஸ் என்ற மன நோய் பற்றி தி.கீதாவுக்கான பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். பார்த்துக் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  23. 5. இரண்டாவது மருமகள் அலுவலகம் போயிருக்கும் நேரங்களில் மூத்த
    மருமகள் சகஜமாக இருப்பதாகவும் காட்டியிருக்கிறேன்.

    கொஞ்ச நேரம் வெயிட் ப்ளீஸ். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  24. 6. அலுவலக இடைவெளி நேரத்து பிரிந்து இருப்பதே மூத்த மருமகளுக்கு இந்தளவிற்கு மன சந்துஷ்டியை ஏற்படுத்தும் என்றால் ஒரு இட மாற்றலின் அடிப்படையில் இளைய மருமகள் பிரிந்திருக்க நேரிட்டால் ---

    அந்த இடைவெளி வேலைசெய்து மாலதியின் மனசில் காஞ்சனாவின் மீதான அதீத ப்ரீதியாக வடிவம் கொள்கிறது.

    திண்டுக்கல் தனபாலானைப் பாருங்கள், சந்தோஷத்தில் பாட்டாகவே பாடி விட்டார்!

    ஒரு துயரக் கதையை தனிமனித வெறுப்புக் கதையாடலை சந்தோஷக் கதையாக்கிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

    உங்கள் அளவில் இது போதும் என்று நினைக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  25. பா.வெ. இத்தனை விஷயங்களையும் வேண்டுமென்றே வெகு சகஜமாக மற்றவர்களுக்கு மறக்கடித்து யார் பின்னூட்டம் போட்டாலும் அவர்கள் பின்னூட்டத்தை தனக்கு சாதகமாக சகஜமாக மாற்றி...

    'ஆமாம், பானுமதி.. நானும் ஏதோ பெரிதாகச் சொல்லப் போகிறாராக்கும் என்று எதிர்பார்த்தேன். ' என்று வெகு சகஜமாக முழுக்கதையையும் திரை போட்டு மறைக்கிறார்..

    தினமணிக் கதிர், ஆனந்த விகடன், குமுதம், வான்மதி, சாவி, இதயம் பேசிகிறது, காதல் என்று ஏகபட்ட பத்திரிகைகளில் கதைகள் எழுதியவன் நான். இன்றும் எண்பதை நெருங்கும் விட்டு விட முடியாத ஆசையில் எழுதிக் கொண்டிருப்பவன்.

    நண்பர் வெங்கட் போன்றவர்களின் ஆறுதலான வார்த்தைக்கள் துணையாக இருக்கும் வரை எழுதுவதில் தளர்ச்சியே ஏற்படாது தான். நண்பர்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி சார்.... கதையை அன்றே படித்துவிட்டேன். சிறுகதைக்குள் அதற்குரிய நியாயத்தோடு கதையைக் கொண்டுசென்றிருக்கிறீர்கள்.

      சினிமாக் கதையாக திரிக்கும்போதே (சரசாவின் கதையாக்கம்) லாஜிக் ஓட்டைகள் வந்துவிடும். இருந்தாலும் புதிய மருமகள், அவளுடைய சகஜமான நடத்தை எல்லாம் பழைய மருமகளைப் பாதிக்கிறது என்பது ஏற்கக்கூடியதுதான். சின்னச் சின்ன விஷயங்களும், அவை எத்தனை அர்த்தமில்லாமல் இருந்தாலும், பிரச்சனையை உண்டாக்கும்.

      கதை நன்றாக வந்துள்ளது, திருப்பங்கள் நெருடலாக இருந்தாலும்.

      மற்றவர்களின் அனுபவத்தை, கேள்விப்பட்ட தகவலை ஒட்டிய கதையை எடுத்துக்கொண்டு அதனைப் புதிய துணியாகத் தைப்பது, ஒரிஜினல் கதையாசிரியருக்குச் செய்யும் அநீதி, unless prior permission was taken. கதை என்ற அளவில் ரசித்தேன்.

      நீக்கு
    2. பதிப்பாசிரியர் விரும்பினால் உங்கள் சந்தேகங்களுக்கு
      பதில் சொல்லலாம்.

      நீக்கு
  26. ** எண்பதை நெருங்கும் வயதிலும் விட்டு விட முடியாத ஆசையில்

    பதிலளிநீக்கு
  27. தாமதமாக வந்திருக்கிறேன்..
    கதையின் பின்னாலிருக்கும் உழைப்பு புரிகிறது...
    ப்ராய்டு பெயரளவில் நின்னுடுச்சே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பொழுது தான் பார்த்தேன்.

      தங்களின் உணர்ந்த புரிதலுக்கு நன்றிஜி.

      நீக்கு
  28. ப்ராய்டு பெயரளவில் நின்னுடுச்சே..
    கதையின் பின்னாலிருக்கு உழைப்புக்கு ஒரு ஜே.

    பதிலளிநீக்கு
  29. ப்ராய்டு பெயரளவில் நின்னுடுச்சே..
    கதையின் பின்னாலிருக்கு உழைப்புக்கு ஒரு ஜே.

    பதிலளிநீக்கு
  30. ப்ராய்டு பெயரளவில் நின்னுடுச்சே..
    கதையின் பின்னாலிருக்கு உழைப்புக்கு ஒரு ஜே.

    பதிலளிநீக்கு
  31. ஒரு தடவை சொன்னா நாலு தடவை சொன்ன மாதிரி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!