செவ்வாய், 22 மார்ச், 2022

தாச்சித் தாத்தா ( 3 / 3 ) :: K G கௌதமன்


 முந்தைய பகுதிகள் : பகுதி 1   பகுதி 2  

மீண்டும் கோடை விடுமுறை.

ஆற்றங்கரையில் விளையாட வந்தார்கள், சிறுவர்கள். ஆனால் தாச்சித் தாத்தாவைக் காணோம். தாத்தா கொடுக்கும் மிட்டாய்களை நினைத்து வந்த சிறுவர்களுக்கு பெருத்த ஏமாற்றம்.

சற்று நேரம் கழித்து அக்கரை குமார் வந்தான்.

ரூல்ஸ் ராகவன், குமாரிடம், “ உனக்கு தாச்சித் தாத்தாவின் வீடு தெரியுமா? “ என்று கேட்டான்.

தெரியும்என்றான் குமார்.

அவர் ஏன் வரவில்லை? “ என்று கேட்டான் ராகவன்.

அவர் வரமாட்டார்

ஏன் ? “

அவர் மூணு மாசம் முன்னாடி செத்துப் போயிட்டார் என்றான் குமார். அவன் கண்களில் கண்ணீர்.

அடடா ! அப்படியா ! அதறகு நீ ஏன் அழுகிறாய் ?”

ஏனென்றால், - -- -   - - - -அவர் - - - - -என்னுடைய தாத்தா. அப்பாவோட அப்பா. “

மற்ற சிறுவர்களும் வந்து குமாரை சூழ்ந்துகொண்டனர்.

என்ன ? உன்னுடைய தாத்தாவா - அவர் கொடுத்த மிட்டாய்களை நீ ஏன் வாங்கிக்கொள்ளவில்லை? “

அவர் கொடுப்பது எதையும் வாங்கித் திங்கக் கூடாதுன்னு என் அம்மா சொன்னாங்க. அதனால அவர் எப்போ எதை எங்கே கொடுத்தாலும் நான் வாங்கிக்கமாட்டேன். “

சுற்றிலும் இருந்தவர்களுக்கு ஒன்றும் சரியாகப் புரியவில்லை.

குமாரும் அவனைச் சுற்றி மற்றவர்களும் ஆற்று மணலில் உட்கார்ந்தார்கள். 

தாச்சித் தாத்தாவின் பெயர் என்ன? “ ஒருவன் கேட்டான்.

தாத்தா பெயர் சரவணன். ஆனால் எங்க அம்மா அவரைப் பற்றி என்னிடம் சொல்லும்போதெல்லாம் செவுட்டுத் தாத்தா என்றுதான் சொல்லுவாங்க.”

உங்க தாத்தாவுக்கு காது கேட்காதா? “

கொஞ்சம் கொஞ்சம்தான் கேட்கும்.”

அவர் ஏன் நம் யாரிடமும் பேசவில்லை? “

அவருக்கு பேச்சு எல்லாம் வரும். ஆனால் என்னுடைய பாட்டி அஞ்சு வருஷத்துக்கு முந்தி செத்துப் போனதிலிருந்து  தாத்தா யாரிடமும் பேசாமல் இருந்தார். ஏன் என்று தெரியவில்லை. “

நீ உன் தாத்தாவைப் பார்த்துக்கொள்ளத்தான் சென்ற வருடம் அவருடனே வந்து போய்க்கொண்டு இருந்தாயா ?”

இல்லை. என்னுடைய அம்மா என்னிடம் - ‘ செவிட்டுத் தாத்தா தினமும் எங்கே போகிறார் - யாரோடு பேசுகிறார், யாருக்கு என்ன கொடுக்கிறார் என்று பார்த்து வந்து சொல்லுஎன்று சொன்னதால்தான் அவர் எங்கே போனாலும் பார்த்து, திரும்ப வீட்டுக்குப் போனதும் அம்மாவிடம் நடந்தது எல்லாவற்றையும் சொல்வேன். “

உங்க அம்மா ஏன் அப்படி சொன்னாங்க ? “

தாத்தாவின் சொத்துகள் எல்லாத்தையும் என்னுடைய அத்தைக்கும் பெரியப்பாவுக்கும் கொடுத்துவிட்டாராம். அத்தையும் பெரியப்பாவும் என் அப்பாவின் தலையில் தாத்தாவைக் கட்டிவிட்டு நாங்க இப்போ இருக்கின்ற வீடு, கொஞ்சம் நிலம் இதை மட்டும் விட்டுவிட்டு மீதி சொத்துக்களை விற்றுவிட்டு பாம்பே போயிட்டாங்களாம். இது பத்தி அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்டை வரும். அம்மா கோபத்தில் கத்தினால் - அப்பா ஒன்றும் சொல்லாமல் எங்க வயல் காட்டுக்குப் போய்விடுவார். திரும்ப வீட்டுக்கு வரும்போது தாத்தா வீட்டில் இல்லை என்றால், அவர் எங்கே என்று அம்மாவிடம் கேட்பார். அம்மா அதற்கு சரியா பதில் சொல்லவில்லை என்றால், திரும்பியும் சண்டை வரும். அதனால என் அம்மா என்னிடம் உன்னுடைய கர்ணப் பிரபு தாத்தா சாயந்திரம் எங்கே போகிறார், எங்கே இருக்கிறார், யாருக்கு என்ன கொடுக்கிறார் என்று பார்த்து வந்து என்னிடம் சொல்லு – இருக்கின்ற கொஞ்ச நஞ்சம் சொத்தாவது யாருக்கும் தானமாகப் போகாமல் நம்மிடமே இருக்கட்டும்’ என்று சொன்னாங்க”

“ அதனாலதான் நீ அவர் பின்னாடியே தினமும் வந்து பார்த்து – உங்க அம்மாகிட்ட சொன்னியா ?”

“ ஆமாம் “

“ அப்போ அவர் கொடுத்த மிட்டாய் எல்லாம் அவருடைய சொத்தா? நாம் அதை வாங்கித் தின்றுவிட்டோமா? “ என்று அப்பாவியாகக் கேட்டான் முரளி.

“ சீச்சீ – மிட்டாய் எல்லாம் சொத்து கிடையாது – யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நம்ம ஸ்கூல்ல கூட கொடி ஏற்றி, எல்லோருக்கும் மிட்டாய் கொடுப்பாங்களே – அப்போ என்ன ஸ்கூல் சொத்தையா நமக்கு தந்தாங்க? “ என்றான் வேலு.

ரூல்ஸ் ராகவனுக்கு எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு சந்தேகம் வந்தது. அவன் குமாரிடம் கேட்டான் – “ உன்னுடைய தாத்தா தந்த மிட்டாய் எதையும் நீ வாங்கிக்கல, அவர் பக்கம் கூட திரும்பி பார்க்காம – அவர் கிட்ட ஒண்ணும் பேசாம இருந்தியே – இன்றைக்கு ஏன் அழறே ? “

குமார் மேலும் கண் கலங்கியவாறு சொன்னான். “ நான் எப்பவுமே என் அப்பா அழுது பார்த்ததில்லை – ஆனால் தாத்தா செத்துப்போன அன்றைக்கு அவர் அழுததைப் பார்த்து எனக்கும் அழுகை வந்தது. அப்புறம் அப்பாவிடம், தாத்தா பத்தி கேட்டு,  எல்லாம் தெரிந்துகொண்டேன். தாத்தா ரொம்ப நல்லவர் என்று அப்போதான் தெரிஞ்சுகிட்டேன்”

சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் என்ன சொல்வது, எப்படி குமாரை சமாதானம் செய்வது என்று தெரியாமல் உட்காரந்திருந்தனர்.

அப்போது முரளி – “ ஆ – அங்கே எல்லோரும் பாருங்க – ஒரு காத்தாடிக்காய் சுத்திக்கிட்டே கீழே விழறது “ என்று மேலே கை காட்டினான்.

உடனே எலலோரும் எழுந்து நின்று அந்தக் காத்தாடிக் காயைப் பார்த்து சந்தோஷமாக கை தட்டி சிரித்தனர்.

குமாரும் தான் கண்ணீரைத் துடைத்தபடி  எழுந்து நின்றான்.

அந்தச் சிறுவர்களைப் பொருத்தவரை – தாச்சித் தாத்தாவும் ஒரு காத்தாடிக் காய்தான். சில நொடிகள் மட்டும் சந்தோஷம் அளிக்காமல், சில வாரங்கள் சந்தோஷம் கொடுத்த காத்தாடிக்காய்.

ஆனால் குமாருக்கு ??  

 (முற்றும்) 

45 கருத்துகள்:

  1. முடிவு மனதை கனக்க வைத்து விட்டது.

    சொத்துதான் பலரது வீட்டில் பிரச்சனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பணமே பிரதானம் என்பதைவிட, நம் வாழ்க்கை முறை மிகவும் மாறிவிட்டது. அதுதான் காரணம். நான் சின்ன வயசுல இருந்தபோது, பலர் வீட்டில் பழைய சாதம், ஒரு வேளை புதிய சாதம், அடுத்த வேளை மோர் சாதம், மீந்த குழம்பு போன்றவை. (இது சென்ற நூற்றாண்டிலும் இருந்திருக்கலாம்). பிறகு இட்லி தோசை வர ஆரம்பித்தது. அப்புறம் ஒருவேளை டிஃபன், ஒரு வேளை சாதம், இரவு திரும்பவும் சமையல் (அல்லது திப்பிசம்). இப்படி மெது மெதுவாக நம் வாழ்க்கைமுறை மிகவும் மாறிவிட்டது. அதனால் பணம் வாழ்க்கையின் பிரதானமாகிவிட்டது. நம் தாத்தா என்பதைவிட, அவரால், நமக்கு எவ்வளவு எக்ஸ்ட்ரா செலவு என்ற எண்ணம் வந்துவிட்டது. இதையும் மீறி சில குடும்பங்களில் நான் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைக் காண்கிறேன்.

      நீக்கு
    2. நல்ல கருத்துரை. நன்றி.

      நீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  3. கதையின் முடிவு நெகிழ்த்தி விட்டது. தாத்தா ரொம்ப நல்லவர் என்று ஒரு வாக்கியத்தில் அதுவும் அப்பா சொன்னதாக வந்திருப்பதை விட குமாரே உணர்ந்து கொண்டதாக எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அப்படித் தோன்றியது.

      நீக்கு
    2. தாத்தா உயிருடன் இருக்கும் வரை குமாருக்கு அந்த உண்மை தெரிய வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. குழந்தைகளுக்கு அம்மா சொல்வதுதான் வேதம் - என்ன செய்வது?

      நீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    என்றும் ஆரோக்கியத்தோடு வாழ இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. தாத்தா தனிமையில் இல்லாமல் குழந்தைகளோடு இருந்தாரே.
    அதுவே பெரிய நன்மை தான். அந்த நேரம் மகிழ்ந்திருப்பார்,.

    சொத்து தகறாரால் எத்தனையோ குடும்பங்கள் பிரிகின்றன.
    இன்று கூட இந்தியாவில் சகோதரர்கள்
    சொத்து தகராறினால் பேச்சு கூட இல்லாமல்
    இருக்கிறார்களாம்.


    பாவம் அந்த தாத்தா, மகன், பேரன்.

    பதிலளிநீக்கு
  6. பணம் எனும் மாயப் பிசாசு படுத்தும் பாடு.... சிறுவன் தாத்தாவின் பேரனாக இருக்க வேண்டும் என்று சென்ற வாரம் யூகித்தேன். அது சரிதான்.

    நல்லதொரு குறுங்கதை. ஓவியங்களும் சிறப்பாக அமைந்தன. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் காலை/மாலை/மதிய வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடர்ந்து உலகெங்கும் அமைதி நிலவவும் மக்கள் மகிழ்வுடனும் அச்சமின்றியும் வாழப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  8. போன வாரமே இப்படித்தான் ஏதோ இருக்கும் தாத்தா பற்றி என நினைத்தேன். அதே தான்! ம்ம்ம்ம், இந்தச் சொத்துத் தான் எல்லோரையும் எப்படி எல்லாம் ஆட்டி வைக்கிறது! கடைசியில் கிடைத்த பணத்தில் அதைப் பெற்றுக்கொண்டவர்கள் சந்தோஷமாக வாழலாம். அதுவும் இல்லை. எப்போதும் குறை தான்! என்னவோ போங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கதை..
      அருமையாக நகர்ந்து சோகமாக முடிந்து விட்டது.. பெருமாளிடம் சேர்ந்து விட்டார் தாத்தா..

      மனித வாழ்க்கை
      கதையா.. கவிதையா..
      கட்டுரையா.. புரட்டுரையா?..

      நீக்கு
    2. நல்ல கேள்விகள். ஆனால் விடைதான் தெரியவில்லை.

      நீக்கு
  9. ஒருவரின் சொத்தை மிக ஜாக்கிரதையாக ஹேண்டில் செய்யணும். அதைச் செய்யாதபோது மனவருத்தங்கள் தவிர்க்கமுடியாது.

    கதை நன்றாக வந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் முகம் மலர இனிய காலை வணக்கங்கள்! வயோதிகத்தின் வலியை உணர்த்தும் நெகிழ்ச்சியான கதை. மனம் உடைந்து வலி மிகும் பொழுது, வார்த்தைகள் வருவதில்லை. தாத்தா பேசாமல் இருப்பதில் ஏதோ ஒரு சோகம் இருப்பதை உணர்ந்தேன். குமார் அவரின் பேரனாக இருக்க வேண்டும் எனவும் யூகித்தேன். நல்லதொரு கதைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  11. ஓவியங்கள் நல்ல முயற்சி. பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  12. எங்கப்பா நல்லவர் என்று அப்பா சொன்னவுடன் அப்பாவிற்கும் சொத்தில் சரியாகத்தான் பங்கு கிடைத்திருக்கும் அம்மாவிற்கு தான் போதும் என்ற மனம் இல்லை இல்லாவிட்டால் அப்பா நல்லவர் என்று அவரை எப்படி சொல்லி இருப்பார் சில சமயம் பெரியவ ரை பார்த்துக் கொள்ள வேண்டுமே என்ற ஆதங்கத்தில் பலவிதமாய் நினைத்திருக்கிறார் பேரனுக்கு அதெல்லாம் தெரிந்து கொள்ள வயதில்லை வயதானவர்களும் சொத்துக்களும் இப்படி சிரிப்பாய் சிரிக்கிறது நல்ல கதை

    பதிலளிநீக்கு
  13. போனவாரப் பகுதியிலேயே சொல்ல நினைத்து விட்டுப் போனது என் ஊகம். குமாரின் தாத்தாவாகத்தான் இருப்பார் தாச்சித்தாத்தா என்றும் அவன் வீட்டில் சொல்லியிருப்பாங்க அதனாலதான் அவன் மிட்டாய் வாங்கியிருக்க மாட்டான்னு.

    இதெல்லாம் நம்ம மண்டைக்கு சீக்கிரம் தெரிந்துவிடும். ஏனென்றால் கண்ணால் காண்பது! கண்டது.

    பணம் ...பணம்...பணம்....பணம் வேண்டும்தான் ஆனால் அதற்காக உறவுகளைக் கூட...ம்ம்ம் வீட்டுக்கு வீடு வாசப்படி!!

    பாவம் குமார். தாத்தா இருக்கும் போது அவருடைய அன்பை அனுபவிக்க முடியாமல் போய்விட்டதே. பெரியவர்களிடம் இருக்கும் கருத்து வேறுபாட்டை பல வீடுகளில் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளிடம் சொல்லி இப்படி வளர்த்துவிடுகிறார்கள்.

    கதை அருமை. தாத்தா நல்லவர் என்பதை அப்பா சொல்லுவது போன்று வரும் வரியை எப்படி என்பதைக் கொஞ்சம் ஒரு சின்னதாகக் கொடுத்திருக்கலாமோ குமாருக்கு அவன் அப்பா சொல்லும் போது.

    கதை நன்றாக இருக்கிறது கௌ அண்ணா. கடைசி முடிவும். படங்களும் நல்லாருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  14. செவிட்டுத் தாத்தா//

    இது பல வீடுகளில் இப்படி கருத்து வேறுபாடு இருக்கும் போது குழந்தைகளுக்கு அம்மாக்கள்/அப்பாக்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். பார்க்கிறேன். அவர்களுக்கு இந்தப் பிரச்சனை வரும் போது குழந்தைகள் அவர்களைப் பேசும் போது தெரியும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  15. அருமையான கதை.
    //அந்தச் சிறுவர்களைப் பொருத்தவரை – தாச்சித் தாத்தாவும் ஒரு காத்தாடிக் காய்தான். சில நொடிகள் மட்டும் சந்தோஷம் அளிக்காமல், சில வாரங்கள் சந்தோஷம் கொடுத்த காத்தாடிக்காய்.//

    படித்து முடித்ததும் மனம் கனத்து போனது.
    இன்று ஒருவரிடம் பேசி கொண்டு இருந்த போது சொன்னேன் சொத்தே இருக்ககூடாது என்று.
    ஜெயா தொலைக்காட்சியில் "குரு அருள்" என்ற ஒரு நிகழ்ச்சியில் சித்தர்கள் பற்றி சொல்லுவார்கள். அதில் இன்றும், நேற்றும் பட்டினத்தாரிடம் கண்க்குபிள்ளையாக இருந்த சேந்தனாரைப்பற்றி சொன்னார்கள். அதில் பட்டினத்தார் சொத்தை எல்லாம் தானமாக கொடுத்து விட்டு வீட்டை துறந்து போனதற்கு கணக்குபிள்ளையை உறவினர்கள் ஏன் எடுத்து சொல்லவில்லை சொத்தை எங்களுக்கு கொடுக்க சொல்லி என்று அவரைபற்றி அரசரிடம் இல்லாது பொல்லாது சொல்லி படுத்தியதை சிறையில் அடைத்த கதை .

    பணம் படுத்தும் பாடு அதிகம் தான்.

    குமாரும் அவனைச் சுற்றி மற்றவர்களும் ஆற்று மணலில் உட்கார்ந்தார்கள்.



    அருமையான படம்

    பதிலளிநீக்கு
  16. //“ சீச்சீ – மிட்டாய் எல்லாம் சொத்து கிடையாது – யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். நம்ம ஸ்கூல்ல கூட கொடி ஏற்றி, எல்லோருக்கும் மிட்டாய் கொடுப்பாங்களே – அப்போ என்ன ஸ்கூல் சொத்தையா நமக்கு தந்தாங்க? “ என்றான் வேலு.//

    அப்பாவி முரளியின் கேள்விக்கு வேலுவின் பதில் அருமை.
    குழந்தைகள் உலகம் கள்ளமில்லா உலகம்.

    பதிலளிநீக்கு
  17. பணம் மனித மனங்களை எவ்வாறெல்லாம் மாற்றுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு இக் கதை.
    அந்த மருமகள் சற்று தாத்தாவை அன்பாக நடத்தி இருக்கலாம் வீடு கொஞ்சம் நிலமாவது அவர்கள் வழியில் கிடைத்திருக்கிறதே .

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!