வியாழன், 7 டிசம்பர், 2023

2015 டிஸம்பரும்  2023 டிஸம்பரும் 

 2023 வெள்ளம் புயலை அசட்டையாய் எதிர்கொண்டோம்.  செய்திருக்க வேண்டியவை ஆனால் செய்யாதவைகளை பட்டியலிடுகிறேன்.

டேங்க்கில் ஞாயிறு இரவு 'ஆட்டோமேட்டிக்'கை நீக்கி விட்டு மோட்டார் போட்டு டேங்க்கை Full செய்திருக்க வேண்டும்.

R O உட்கார்ந்து விடும் என்பதால் நான்கைந்து கேனாவது குடி தண்ணீர் வாங்கி ஸ்டாக் வைத்திருந்திருக்க வேண்டும்.

காஃபிப்பொடி வைப்பதற்காக ப்ரீஸரை ப்ரிஜ்ஜாக மாற்றியிருந்ததை ஒழுங்கு மரியாதையாய் மறுபடி ப்ரீஸராய் மாற்றியிருந்திருக்க வேண்டும்.  தவறியதால் ஞாயிறு மிச்சம் வைத்த இரண்டு பால் பாக்கெட்டுகள்,  பனீர் செய்யும் மூலப்பொருளாயின.  

பச்சைக் காய்கறிகளை செலவு செய்திருக்க வேண்டும்.  மோரை காலி செய்திருக்க வேண்டும்.  தோசை மாவைக் கூட அவ்வளவு மிச்சம் வைத்திருந்திருக்க கூடாது!  ஆனாலும் புளிப்பு தோசையும் சுவைதான்!

டேங்க்கில் தண்ணீர் காலி ஆகப் போகிறது என்று தெரிந்ததும் அல்லது முன்னரே வீட்டிருலிருந்த பேரல் மற்றும் டப் போன்ற பொருட்களை மொட்டை மாடியில் அல்லது ஓபன் டெர்ரசில் புயல் மழை சமயம் வைத்திருந்தால் விடாமல் பெய்த மழையில் தண்ணீர் கிடைத்திருக்கும்.  பாத்ரூம், டாய்லெட், பாத்திரம் கழுவ என்று உபயோகமாகி இருக்கும்.  அதில் ஒரு தயக்கம் என்னவென்றால் மணிக்கு 50 முதல் 80 கி மீ வரை வீசிய காற்று இவைகளை அடித்துக் கொண்டு போய்விடுமோ என்கிற பயம்.

செய்தவை :  ஸோலார் பேட்டரியில் இணைக்கப்பட்டிருந்த ஃபிரிஜ்ஜை திங்கள் காலையே அணைத்தது.  அதிலேயே இணைந்திருந்த டீவியை மற்றும் கணினியை கரண்ட் திரும்பும் வரை இயக்காதது.  அதனால் எங்கள் பேட்டரியை கரண்ட் வரும்வரை உயிர்ப்புடன் வைத்திருந்தோம்.  தேவைப்படும் போது விளக்குகளை எரிய விட்டு, இரவுகளில் மின் விசிறி போட்டுக் கொண்டு என்று இருந்தோம்.  ஸோலார் 1 கே வி.  இரண்டு பேட்டரி.

எந்த மழை, வெள்ளமாயினும் பழைய வீட்டில் எங்கள் குமார் எங்களுக்கு பால் கொண்டு வந்து கொடுத்தார்.  இங்கு கவாஸ்கர் கைவிட்டு விட்டார்.  நேற்று கூட இல்லையென்று சொல்லி விட்டார்!


திங்கள் அன்றும் செவ்வாய் அன்றும் நாங்கள் செல்வதற்குள் அருகிலிருந்த கடைகளில் வந்திருந்த ஆரோக்யா, திருமலா பால் பாக்கெட்டுகளை மக்கள் அள்ளிக்கொன்று சென்றிருக்க, மகன்கள் கிரேஸ் மார்க்கெட்டிலிருந்து நந்தினியின் Good Life 90 டேஸ் ஒரு லிட்டர் பால் பாக்கெட், இரண்டு பாக்கெட்டுகள் வாங்கி வந்தனர்.  ஒரு லிட்டர் பேக்குகள்.  ஒன்றை செவ்வாயன்றும் இன்னொன்றை நேற்றும் உபயோகபபடுத்திக் கொண்டோம்.  


இந்த பால் பிரிஜ்ஜில் வைக்கப்பட வேண்டும் என்பதில்லை.  வெளியிலேயே வைத்திருக்கலாம்.  90 நாட்கள் வரை கெடாது.  ஆனால் ஒருமுறை ஓபன் செய்து விட்டால் உடனே காலி செய்து விட வேண்டும்.  ஒரு பாக்கெட் 67 ரூபாய்.

எல்லோருக்கும் செவ்வாய் காலை முதலே கரண்ட் சப்ளை  வந்து கொண்டிருக்க, எங்கள் ராசி தாமதமாகிக் கொண்டே வந்ததது.  செல்போன் எல்லாம் சார்ஜ் full செய்து வைத்திருந்தும், நெட்ஒர்க் இலலாத காரணத்தால் பயனற்று போனது.  அந்த நெட் ஒர்க் செவ்வாய் மாலை நான்கு மணிக்கு மேல்தான் கொஞ்சம் கொஞ்சமாய் ரெஸ்டோர் ஆனது.  திங்கள் மாலை வரை வந்த வாட்ஸாப் தகவல்கள் ஒவ்வொன்றாய் வந்து விழத்தொடங்க, திடீரென வாட்ஸாப் 750 மெசேஜஸ் என்று காட்டி பயமுறுத்தியது.  


இந்த அமைதியை பயன்படுத்தி காலச்சக்கரம் நரசிம்மாவின் தேவரகசியம் நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.


அலுவலகத்தில் ஜெர்மனிலிருந்து ஒரு குழு வருவதாய் திங்கட்கிழமை அவசியம் வரச் சொல்லியிருந்தபோதே புன்னகை வந்தது.  புயலில் எங்கே வரப்போகிறார்கள் என்று.  திங்களும் செவ்வாயும் அலுவலகம் செல்ல முடியவில்லை.   வீட்டைச் சுற்றி முழங்கால் அளவு தண்ணீர்.  புதன் காலை அதுவும் சீரானது.  புதன் மாலை மின்சாரம் வந்தது.  உடனே வியாழன் பதிவு தயார் செய்யும் வேலையும் தொடங்கியது!

மொபைலில் விசாரித்திருந்த ராமலக்ஷ்மி, துரை செல்வராஜூ அண்ணா, கீதா ரெங்கன், ஆரோக்ய சமையல் ஹேமா கோமதி அக்கா ஆகியோருக்கு நன்றி.

=================================================================================================

ஏகாந்தமாய் 


ஆஃபிரிக்காவிலிருந்து வந்த அதிர்ச்சி
- ஏகாந்தன்

அன்று காலையில் வழக்கம்போல் ஆஃபீஸுக்கு வந்து வேலை செய்துகொண்டிருக்கையில், தகவல் மெல்லப் பரவியது. 11 மணிக்கு சௌத் ப்ளாக் வளாக மையத்தில் அமைச்சரக அதிகாரிகள், ஊழியர்களை சந்தித்துப் பேசுகிறார்.. யார்? அமைச்சரவையில், வெளியுறவு மந்திரிக்கு அடுத்த படியில் இருக்கும் ஃபாரின் செக்ரட்டரி. அப்போது அந்த உயர்பதவியில் இருந்தவர் எம்.கே. ரஸ்கோத்ரா என்பவர். சீனியர்-மோஸ்ட் டிப்ளொமாட். தனக்கு அடுத்த நிலைகளில் இருக்கும் சீனியர் ஆஃபீஸர்கள் சிலரையும், மந்திரியையும் தவிர வேறு எவரையும் அவர் சந்திப்பதில்லை.  அவசியமில்லை. இன்று எல்லோரையும் பார்த்துப் பேசப்போகிறாரா?

”என்ன விஷயமாம்?” எனக் கேட்டேன் தகவல் சொன்ன பக்கத்து
செக்‌ஷன்காரனிடம். 

”தெரியவில்லை. குச் தோ காஸ் பாத் ஹை!” (Kuch toh khaas baath hai - (ஏதோ, முக்கிய விஷயமாத்தான் இருக்கணும்)" என்று மர்மத்தை அதிகப்படுத்திவிட்டு அகன்றான் அவன்.

ஃபாரின் செக்ரட்டரியின் அபூர்வ அழைப்பென்பதால் பத்து நிமிஷம் முன்பே அரங்கம் ஆஜராகிவிட்டிருந்தது. கவாஸ்கரின் உயரத்தில், டிப்-டாப்பாக பழுப்புநிற சஃபாரி சூட்டில் வந்து நின்றார் எங்கள் முன் அவர். ”ஏதோ சீரியஸ் ப்ராப்ளம்”.. என்று அருகில் நின்றிருந்த அனுபம் கேர் கிசுகிசுக்க, ”ச்சுப்!” என்று வாயில் விரலுடன் அவரை பயமுறுத்தினார் இன்னொரு அதிகாரி. ஃபாரின் செக்ரட்டரி பேச ஆரம்பித்தார். கூட்டத்தில் rapt attention.. 

”அமைச்சரகத்தின் அருமை அதிகாரிகளே.. ஊழியர்களே.. ஒரு அதிர்ச்சிகரமான, சோக சூழலில் இன்று நான் உங்களை எல்லாம் சந்திக்க நேர்ந்திருக்கிறது. (திடுக்கிட்டு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்) வெளியுறவுத்துறை என்பது மற்றவர்களுக்கு, அரசின் ஏனைய அங்கங்களில் பணிபுரிபவருக்கும் கூட, ஒரு கலர்ஃபுல்லான, ஆனந்தமாக உலகம் சுற்றிவரும் துறை என்பதுபோன்ற தோற்றத்தைத் தந்தாலும், அந்நிய மண்ணில் நமது அரசுப் பணிகளுக்கிடையே எத்தகைய சவால்களை, ஆபத்துகளை தொழில்ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் நாம் அவ்வப்போது சந்திக்கவேண்டியிருக்கிறது, அலட்சியங்களை, காயங்களை, இழப்புகளைத் தாண்டியும் தாய்நாட்டிற்காக சேவை செய்தபடி தடுமாறிவிடாமல் முன்னேறவேண்டியிருக்கிறது என்பதை நாம் ஒவ்வொருவரும், குறிப்பாக ஃபாரின் சர்வீஸில் சேர்ந்து ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் தெளிவாக அறிந்துகொள்ளவேண்டும்.." என ஆரம்பித்து உடனே விஷயத்திற்கு வந்தார் அவர்.

(அரசியல்வாதிபோல் மணிக்கணக்கில் பேசமுடியாதே..  தன் அலுவலகத்திற்கு உடனே திரும்பி அடுத்த கட்ட பணிகளில் ஈடுபட்டு, முடிவெடுக்கவேண்டியிருக்கும்.  அமைச்சரை மாலையில், இரவில் சந்தித்து நிலமையை விவரிக்கவேண்டியிருக்கும்..)

அந்தக் காலையில் அவர் எங்களுடன் பகிர்ந்துகொண்ட அதிர்ச்சி, ஆஃபிரிக்காவின் உகாண்டாவிலிருந்து வந்திருந்தது. அதற்கு முதல்நாள், தலைநகர் கம்பாலாவில் இயங்கிவந்த இந்திய ஹைகமிஷனின் (எம்பஸி) அக்கவுண்ட்ஸ் ஆஃபீஸர், இந்திய செக்யூரிட்டி கார்டின் துணையுடன், விசா/பாஸ்போர்ட் பணத்தை வங்கியில் ஹைகமிஷன் அக்கவுண்ட்டில் சேர்ப்பதற்காக வழக்கம்போல் மதியம் சென்றிருக்கிறார். நீலநிற ப்ளேட் கொண்ட ஹைகமிஷன்/எம்பஸி கார்களை லோக்கல் போலீஸோ, வேறு யாருமோ மறிப்பதில்லை, தொந்திரவு செய்வதில்லை.  ஆனால் ஆப்பிரிக்க நாடுகளில் கடத்தல்/கொள்ளைக்காரர்களின் அட்டகாசம் அதிகம். அவ்வப்போது அவர்கள் தாண்டவம் ஆடுகையில் தெரியவரும், அங்கே போலீஸ் வெறும் தண்டம் என்கிற நிதர்சனம்.  அத்தகைய போதுமான பாதுகாப்பற்ற ஒரு சூழலில் கம்பாலாவில், நமது காரை அன்று துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்திய நாலைந்து கருப்பர்கள், ட்ரங்க் (பணப்)பெட்டிகளைக் கொடுத்துவிட்டு சத்தம்போடாமல் போய்விடச்சொல்லி மிரட்டி இருக்கிறார்கள். 

இந்தியக் காரில் இருந்த ஹைகமிஷனின் செக்யூரிட்டியான BSF ஜவான் ராம்குமார் யாதவ் கோபத்துடன் உடனே வெளியே குதித்தான். “ஏய்! இது டிப்ளொமாட்டிக் கார். உங்க வேலய இங்கே வச்சுக்காதீங்க.. விவகாரம் பண்ணாம ஓடிடுங்க” என்று உருமிக் கருப்பர்களைத் தள்ளிவிட, உடனே கைகலப்பு. பக்கத்தில் நடந்துகொண்டிருந்தவர்கள் மிரண்டுபோய் கூச்சல்போட, போலீஸ் வருவதற்குள் காரியத்தை முடிக்க நினைத்த கருப்பர்களில் ஒரு முரடன், திடீரென பாக்கெட் ரிவால்வரை உருவி சுட்டுவிட்டான்.

ஜவான் யாதவ் திருப்பிச் சுட எத்தனித்தும் நெஞ்சில் பட்ட குண்டினால் நிலைகுலைந்தவாறு எம்பசி கார் மீது சரிந்தான். நிலமையின் தீவிரத்தில் தப்பி ஓடவும் வாய்ப்பின்றி அதிகாரி சுக்பீர் சிங் சீட்டுக்கடியில் தலையை அழுத்திப் பதுங்க, இன்னொரு கொள்ளையன் காருக்குள் குறிவைத்து சுட்டான். அதற்குள் ”போலீஸ்ஸ்..!” எனச் சத்தம் நாலாபுறமிருந்தும் பரபரக்க,

கொள்ளையர்கள் தங்கள் பிக்-அப்பில் பாய்ந்து வேகமாக சீனிலிருந்து மறைந்தனர். அடிபட்ட இந்தியர்கள் அங்கேயுள்ள சிறப்பான மருத்துவமனை ஒன்றிற்கு அனுப்பப்பட்டார்கள்.  தோள்பட்டைக் காயத்துடன் அதிகாரி சுக்பீர் சிங் தப்பித்துவிட்டார். லோகல் ஓட்டுநர் அடிபடவில்லை. அல்லது குறிவைக்கப்படவில்லை. சுக்பீர் சிங் மேற்கொண்டு சிகிச்சைக்காக இந்தியா அனுப்பப்படவிருக்கிறார்.  ஆனால், தன் கடமையைச் செய்கையில், கொடூரமாகத் தாக்கப்பட்டு, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஜவான் ராம்குமார் யாதவ் அன்றிரவு மருத்துவமனையில் உயிர்நீத்தான். அவனது பூத உடல் இன்று இந்தியா திரும்புகிறது. ஜவானின் குடும்பத்திற்கு வேண்டிய அரசு உதவிகளை உடனே செய்ய ஏற்பாடாகியிருக்கிறது என்ற ஃபாரின் செக்ரட்டரி ரஸ்கோத்ரா, “ நாட்டிற்காக சிறப்பாக சேவை செய்துகொண்டிருந்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக கொடூரர்களால் தாக்கப்பட்டு அந்நிய மண்ணில் உயிரிழந்த நமது ஜவான் யாதவின் ஆத்மா சாந்தியடைய, இப்போது இரண்டு நிமிடம் மௌனமாக நின்று பிரார்த்திப்போம்” என்று தாழ்ந்த குரலில் கூறுகையில் எங்களுக்குள் நடுக்கம் ஏற்பட்டது.

தன்னுடைய பணியிடமான உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவிலிருந்து, வெளியுறவு அமைச்சகத்துக்கு டெப்புடேஷனில் செல்ல செலக்ட் ஆகி, டெல்லியில் பணி சேர்ந்து, முதன்முறையாக, ஆசையாக இரண்டு வருட வெளிநாட்டு போஸ்ட்டிங்கில் உகாண்டா சென்ற BSF இளைஞனின் கதை சோகமாய் முடிந்தது. அவனது குடும்ப நிலை என்னவோ? இளம் மனைவி, குழந்தைகள் எல்லாம் எப்படியெல்லாம் தவித்தார்களோ?

ஆறேழு மாதங்கள் டெல்லியில் சிகிச்சையில் இருந்த சுக்பீர் சிங் தலைமையகத்தில் பணிக்குத் திரும்பியபோது, பணி இடைவேளைகளில் கம்பாலா கொடூரம்பற்றிப் பேசி மேலும் தெரிந்துகொண்டோம். சுக்பீரின் தோள்பட்டைக் காயம் நன்றாக குணமாகிவிட்டிருந்தது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு சுக்பீருக்கு (சர்தார்ஜி வேற!).  வெளியுறவு அமைச்சகத்தின் வெவ்வேறு துறைகளில் பணிபுரியும் பெரும்பாலானோர் ஆஃபிரிக்க போஸ்ட்டிங்குகளைத் தவிர்க்கவே விரும்பினர். எதுக்கு ரிஸ்க்கு!  என்னைப்போல சில ஜீவன்கள், சர்வீஸ்னா எல்லாம்தான் இருக்கும், அதற்காக ஒரேயடியாத் தவிர்க்க முடியுமா என்று சமாதானம் செய்துகொண்டு ஆஃபிரிக்க நாடுகளில் பணிபுரிந்தனர். புரிகின்றனர்.

**
(வளரும்)
==========================================================================================================

நியூஸ் ரூம் 

==================================================================================================

ஒரு துளி தண்ணீருக்காய் 
துடிக்கிறது 
கரையில் போட்ட மீன் 

புதுமனைப்புகு விழா 
வலையில் மீன் 

மூடிய இமைகளில் 
மோதி விழுகின்றன 
மனக்காட்சிகள் 

எங்கோ கவனம் 
எதிலோ மனம் 
கண்ணிருந்தும் குருடர்கள் 

===========================================================================================

பயமுறுத்திய 2015 வெள்ளத்தின்போது இதே அடையாறு ஆறு அளவை மீறி ஓடி வெளியே வழிந்து பீதியைக் கிளப்பியது.  அப்புறம் அடையாறு ஆறு அடக்கமோ அடக்கம்.  மௌனச்சாமி!  ஆறு என்று பெயர் இருந்தாலும் நாய் மூச்சா போனது போல கரைகளுக்கிடையேயான மணலுக்கு நடுவே கோடாய் மட்டுமே தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும்.  இப்படி தளும்ப நீரோடும் அடையாறு ஆறு ஒரு மன நிறைவான காட்சிதான்....  ரெட்டேரி கூட படம் பிடித்து போடவேண்டும் என்று நினைத்திருந்தேன்  முடியவில்லை .  குடை மூடியது போல ஆகாயத்தாமரைச் செடிகளுடன் இட்லிப்பானை மூடி போல ரெட்டேரியின் தண்ணீர் அளவு உயர்ந்திருக்கிறது!  இங்கே அடையாறு ஆற்றின் ஒரு சிறு காணொளியும், இரு புகைப்படங்களும்!

====================================================================================================சிவாஜிகணேசனும் நானும்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடன் பல தடவை பேசி இருக்கிறேன். ரேடியோவிற்காகப் பேட்டி எடுத்திருக்கிறேன். படப் பிடிப்பில் பார்த்து இருக்கிறேன். ஆனால் நெருங்கிய தொடர்பு இருந்தது என்று கூற மாட்டேன்.
ஸ்ரீதர் என் நண்பர் என்பதால் ஸ்ரீதரின் படப்பிடிப்பிற்கு நிறைய தடவை போய் இருக்கிறேன். அப்போது சிவாஜியைப் பார்த்திருக்கிறேன் .
பேசும் படம் பத்திரிகை உதவி ஆசிரியருடன் சென்று அவரைச் சந்தித்து இருக்கிறேன். அவருடைய படத்தை வரைந்து அவர் வீட்டிற்குச் சென்று அதில் கையெழுத்து வாங்கி இருக்கிறேன். தமிழ் மொழியின் அழகை அவர் பேசும் போது தான் முழுமையாக ரசிக்க முடியும்.
அவர் முதன் முதலாகக் கட்டபொம்மன் நாடகத்தை தேனாம்பேட்டை காங்கிரஸ் கண்காட்சியில் அரங்கேற்றினார். நாடகத்திற்கு அனுமதி இலவசம்.
கட்டபொம்மன் நாடகம் நடிப்பது , சிவாஜிகணேசன், அனுமதி இலவசம் - இந்த மூன்றும் என் ஆர்வத்தைத் தூண்டி விட்டன. நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு மாலை 5 மணி வாக்கில் கண்காட்சிக்குப் போய் திறந்தவெளி அரங்கை அடைந்தோம். கூட்டம் நீக்கமற நிறைந்திருந்தது.
எல்லாரும் ஒரு புல் தரையில் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். நடுநடுவே பாத்தி கட்டிய மாதிரி இடைவெளி விட்டு உட்கார வைத்திருந்தார்கள். அந்த பாத்தி பாதையில் வேகமாக நடந்தோம். எங்கேயும் இடம் இல்லை. டவல், கைக்குட்டை, பை என்று பலர் துண்டைப் போட்டு வைத்திருந்தார்கள்.
”கொஞ்சம் இடம் கொடுங்கள்” என்று சொல்லியபடி உட்கார்ந்தால் உடனே ”எழுந்திரு... எழுந்திரி... தம்பி வரான், அத்தை வராங்க” என்று எல்லா உறவினரையும் குறிப்பிட்டு விரட்டினார்கள். (முதல் முறையாக பல உறவுப் பெயர்களைக் கேள்விப்பட்டேன் என்பது தொடர்பில்லாத தகவல்) போதாதற்கு எங்கோ நின்று கொண்டிருந்த போலீஸ்காரரை உதவிக்கு அழைத்தார்கள். இப்படி இடத்திற்கு இடத்திற்குத் தாவிக் கொண்டிருந்தோம். ஒட்டிக் கொள்ள இடம் கிடைக்கவில்லை. ஒரு மூலையில் காலே அரைக்கால் அங்குல இடம் இருந்தது. அசடு வழியும் சிரிப்புடன் அங்கு உட்கார்ந்தேன். பெரிய குங்குமப் பொட்டுடன் மகாலட்சுமி மாதிரி இருந்த பெண்மணி அடுத்த கணம் காளியாக மாறினார். குங்குமப் பொட்டு இருந்த இடத்தில் மூன்றாவது கண் திறந்தது. ”அய்யா டாணாக்காரரே... இங்க பாருங்க..”. என்று குரல் கொடுத்தார். 1950களில் ரவுசு, அலம்பல், லொள்ளு என்பதெல்லாம் செம்மொழியில் வரவில்லை. ஆகவே அவைகளை அந்தப் பெண்மணி உபயோகிக்கவில்லை!
போலீஸ்காரர் வந்தார். ”தம்பி... எழுந்திரு. இடம்தானே வேண்டும்? பின்னாலே போ... இருக்குது” என்றார். பின்னால் என்பது கிட்டத்தட்ட கண்காட்சி மைதானத்துக்கு வெளியே.
அப்போதுதான் டேல் கார்னகியின் ”ஹௌ டு வின் ஃப்ரண்ட்ஸ் அண்ட் இன்ஃப்ளூயன்ஸ் பீபிள்” என்ற புத்தகத்தைப் படித்து முடித்திருந்தேன்.. அதில் கற்ற பாடத்தை சோதித்துப் பார்க்கலாம் என்று எண்ணி “ சார்... இதப் பாருங்க... இந்த நாடகத்தைப் பார்க்க செங்கல்பட்டிலிருந்து வந்திருக்கிறோம். எப்படியாவது எங்கள் இரண்டு பேருக்கும் துளியூண்டு இடம் பிடித்துக் கொடுத்திங்கன்னா, ஆயுளுக்கும் மறக்க மாட்டோம்..உஙகளாலே உதவி செய்ய முடியும்..கடவுள் உங்களுக்குக் கொடுத்துள்ள வாய்ப்பு” என்று அடித்து விட்டேன்! அவருக்கு . என்ன தோன்றியதோ, முகத்தை கடுமையாக்கிக் கொண்டு, ”சொன்னா கேக்க மாட்டீங்க.. இப்படி வாங்க./ உம்.. வாங்க இப்படி... என்னோட... வாங்கன்னு சொல்றேன்.”.. என்று இரைந்தார்.
அவர் முன்னே போக, நாங்கள் பின்னே உதறிக் கொண்டே போனோம். மேடையை நோக்கி அழைத்துப் போனார். மேடைக்கு முன்னே முதல் வரிசையில், கிட்டத்தட்ட மேடையிலிருந்து 4, 5 அடி தூரத்திற்கு அழைத்துச் சென்று கடுமையான் குரலில் “உம்... இங்கே உட்காருங்க. இந்த இடத்தை விட்டு நகரக் கூடாது.. ஆமாம்.” : என்று கடுமையாகச் சொன்னார், மற்றவர்கள் எங்களைக் கிளப்பிவிடக்கூடாது என்பதற்காக் அப்படி சிம்மக்குரலில் முழங்கினார் என்று அப்போது நாங்கள் நினைக்கவில்லை. . நாங்கள் சட்டென்று உட்கார்ந்தோம். அவர் பூட்ஸ் காலை கையாக நினைத்து மனதிற்குள் குலுக்கினோம்.
ஆக, முதல் வரிசையில் சிவாஜியின் கட்டபொம்மன் நாடகத்தைப் பார்த்த சிலருள் நானும் ஒருவன். (நான் வார்த்தை காப்பாற்றுபவன் பாருங்கள், 50 வருஷம் ஆனாலும் கூட அந்த போலீஸ்காரர் செய்த உதவியை மறக்காமல் சொல்லி இருக்கிறேன்.)
நல்ல இடம் கிடைத்ததனாலும் சிவாஜியை மிக நெருக்கமாகப் பார்க்க முடிந்ததாலும் நாடகத்தை கண் கொட்டாமல் பார்த்தேன். அடாடா! முதல் நாள் நாடகமாக. இருந்தும் (எனக்குத் தெரிந்த வரையில்) பிசிறோ குழப்பமோ இல்லாமல் நாடகம் நடந்தது, நாடகம் முடிந்ததும் எழுந்து நின்று பின்பக்கம் திரும்பிப் பார்த்தேன். மொத்த கூட்டமே பொறாமையுடன் என்னைப் பார்ப்பது போல் தோன்றியது!
(டேல் கார்னகியின் உத்தியை அதன் பிறகு பல சமயங்களில் உபயோகித்தேன். பலன் பெரிய பூஜ்யம்தான்.)
• • •
சிவாஜி அவர்கள் ராஜ்ய சபை உறுப்பினராக நியமனம் ஆனதும் டில்லிக்கு வந்தார். அப்போது நான் டில்லிவாசி. ஆல் இந்தியா ரேடியோவின் வெளிநாட்டுத் தமிழ் ஒலிபரப்புக்காக அவரை பேட்டி காண நிலைய டைரக்டர் நேரம் கேட்டிருந்தார். இன்னும் அரை மணியில் இங்கே தமிழ்நாடு ஹவுசிலேயே ரிகார்ட் பண்ணிக் கொள்ளுங்கள் என்றார்.
பேட்டி காண்பதற்கு யாரைக் கூப்பிடுவது என்று புரியவில்லை. என் அலுவலகம் வானொலி நிலையத்திற்கு நேர் எதிர் கட்டடம் என்பதால் புரோகிராம் எக்ஸ்க்யூட்டிவ் திருமதி லீலா என் ஆபீசுக்கு வந்து, கிளம்புங்கள். சிவாஜியைப் பேட்டி காண்பதற்கு என்று அவசரப்படுத்தினார். உடனே கிளம்பினோம். என் ஆபீஸ் அருகிலேயே இருந்ததாலும் ’இவன் அரசு ஊழியன்; ஆகவே எப்போது வேண்டுமானாலும் பையை மாட்டி விட்டு வெளியே போகலாம்’ என்பதாலும் என்னைக் கூப்பிட்டிருப்பார் என்று நினைக்கிறேன். (’அதென்ன பையை மாட்டிவிட்டு’ என்று தானே கேட்கிறீர்கள்? டில்லி ஆபீசில் நீங்கள் சீட்டில் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை; உங்கள் டிபன் பாக்ஸ் அல்லது பை இருந்தால் போதும். நீங்கள் சீட்டில் இருப்பது மாதிரி கணக்கு!)
தமிழ்நாடு ஹவுஸ் போனோம். சிவாஜி வந்தார். வணக்கம் சொன்னோம். ஒரு சின்ன கேள்விக்குறியுடன் தலையை லேசாகச் சாய்த்து என்னைப் பார்த்தார். சான்ஸை விடுவேனா?.. ஸ்ரீதரின் நண்பன் என்று ஆரம்பித்துப் பழைய சந்திப்புகளைச் சுருக்கமாகச் சொன்னேன்.
”வெரிகுட். ஆரம்பிக்கலாமா?” என்றார். பேட்டி ஆரம்பித்து விறுவிறு என்று போயிற்று. சிவாஜி மிகுந்த சினேக பாவத்துடன் மிகவும் சகஜமாகப் பேசினார். அதனால் என் மனதினடியில் ஒரு குறும்பு எண்ணம் தோன்றியது.
”சார், உங்கள் ஞாபகசக்தித் திறனைப் பற்றி எழுதாத பத்திரிகைகளே கிடையாது, இப்போ உங்களை ஒன்று கேட்கப் போகிறேன். பராசக்தி படம் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்பு வந்தது. அதில் நீங்கள் பேசிய வசனங்கள் எல்லாரையும் கட்டிப் போட்டவை. இப்போது அந்த வசனத்தைச் சொல்ல முடியுமா? என்று கேட்டேன்.
”ஓஹோ... உங்களுக்கு ....என்.... நினைவுத்திறன் மேல் நம்பிக்கை இல்லையோ? ஆகவே டெஸ்ட் பண்ணிப் பார்க்க விரும்புகிறீர்களோ?” என்று நாடக பாணியில் தோளைக் குலுக்கிக் கேட்டார். நான் மையமாகத் தலையாட்டினேன்.
”ரெடி, ஸ்டார்ட்” என்று சொல்லிவிட்டு வசனத்தைச் சொல்ல ஆரம்பித்தார் பாருங்கள்... என்ன குரல் வளம், என்ன உச்சரிப்பு, என்ன உணர்ச்சிக் கலவை... அடாடா! பேசி முடித்து விட்டு, ”என்ன சரியாகச் சொல்லி விட்டேனா/” என்று குறும்புடன் கேட்டார்!

சந்தேகமில்லாமல் அவர் நடிகர் திலகம் தான்!

- கடுகு -

இணையத்திலிருந்து எடுத்துப் பகிர்ந்து உதவியவர் திரு கந்தசாமி R 

========================================================================================
கடைசி கணங்கள்..  


--------------------------------------------------------------------------


============================================================================================

பொக்கிஷம் :-

எந்தக் காலத்திலும் அரசியல் (செய்வோர்) உண்டு!

பொக்கிஷம் 

அப்பவே அப்படி!  இவருக்கு தன் நாடகங்கள்தான் உசத்தி போல!

கடிகார முறையும், அத்தை கடிகார முறையும்!

அப்பவே அப்படித்தானா ஆண்டவரே...!

அவரைப் பார்த்தால் பாலச்சந்தர் மாதிரியா இருக்கு?!

கடுப்பின் கடுப்பு!

காதா?  ஓலை விசிறியா?!

102 கருத்துகள்:

 1. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
  வைத்தூறு போலக் கெடும்.

  !?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருமுன்னர் காக்க மாட்டார்கள். வந்தபின் சம்பாதிப்பார்கள்.

   நீக்கு
  2. செலவழித்த நாலாயிரம் எங்க போச்சுன்னு தெரியலை. இன்னும் ஐயாயிரம் வேணுமாமே

   நீக்கு
  3. வெள்ளமில்லையா?  அப்படிதான் அடிச்சுட்டு போகும்!

   நீக்கு
 2. கற்பக கணபதி
  கனிவுடன் காக்க..
  முத்துக்குமரன்
  முன்னின்று காக்க..
  தையல் நாயகி
  தயவுடன் காக்க..
  வைத்திய நாதன்
  வந்தெதிர் காக்க..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 3. விடியலில் விடியலை நோக்கிப் பயணம்..

  இது வேறு விதமான விடியல்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுதானே பார்த்தேன்.  அந்த வார்த்தையே அலர்ஜியாகி விட்டதே!

   நீக்கு
 4. உங்களுக்குத் தான் 'கல்கி' பாஷையெல்லாம் அத்துபடி. தொடர் சித்திரம் எழுதுகிறார் என்றால் என்ன? தெரிலேனா கேஜிஜி மாதிரி படம் வரையற யாரையானும் கேட்டுச் சொல்லுங்களேன். அதுக்காக நெல்லை மாதிரி புதன் கிழமை கேள்வியாக்க வேண்டாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சித்திரம் என்பது இங்கு வியாசம் என்றும் பொருள்படும் போல!

   நீக்கு
 5. புயலுக்கு தேவையான முன்னேற்பாடுகள் பற்றி எழுதியது நன்று. ஆனால் இப்படி ஏற்பாடுகளை செய்து இருந்தால் புயல் கோவித்துக்கொண்டு வேறு திசையில் போய் விடும். அதுவும் நல்லது தான்.

  அடையாறு பெயருக்கு ஏற்ப ஆறாய் ஓடியது காண மகிழ்ச்சி.

  கர்நாடகா தண்ணீர் தரவில்லை. பால் தந்ததோ? வடிவேலு மீம் போல மழைத்தண்ணியை கர்நாடகாவுக்கு அனுப்பியிருக்கலாமா?

  முதலை வந்தது. மீனுமா வந்தது. கவிதைகள் மீன் பற்றியே உள்ளனவே.
  புதுமனைப்புகு விழா
  வலையில் மீன்
  என்ன சொல்ல வருகிறீர்கள். புரியவில்லையே.

  தண்ணீருக்கு தவிக்கிறது
  தரையில் மீன்.

  நடிகர் ஜெயன் மலையாளத்து ஜெய்சங்கர் எனலாம். அவர் நடிக்க வரும் முன் ஏர் போரஸில் பணியாற்றியவர்.
  கடிகாரத்திற்கு சாவி கொடுக்கும் முறையை விவரிக்கும் விதம் சிரிப்பை வரவழைக்கிறது.

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறிப்புகளில் எதெது விட்டுப்போனது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்!  பாராட்டுக்கு நன்றி.

   வலையில் மீன் புதிய இடம் என்று உள்ளே வந்து மாட்டிக்கொண்டது மீன்.  புதுமனைப்புகுவிழா!

   ஆம்.  ஜெயன் பற்றி படித்திருக்கிறேன்.

   ஒரு ஜோக்காவது சிரிக்க வைத்ததே...!  நன்றி JKC ஸார்.

   நீக்கு
  2. 'அத்தை' (நத்தை?) கடிகார முறை ஜோக்குக்கு மட்டும் என்ன குறைச்சல்?..

   நீக்கு
  3. அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை!

   நீக்கு
 6. இறப்பிற்குச் சற்றுமுன்... வித்தியாசமான பதிவு. ஏனோ ராஜீவ் காந்தி ஶ்ரீபெரும்புதூர் படங்கள் மனதில் வந்துபோயின

  பதிலளிநீக்கு
 7. நீங்கள் (சென்னைவாசிகள்) என்னவோ பெரிய வெள்ளம், சாலைகளில் ஆறாய் நீர், கரன்ட் இல்லை, தண்ணீர் இல்லை, பால் கிடைக்கவில்லை என்று புலம்புகிறீர்கள்.

  பத்திரிகைச் செய்திகள், சென்னை மேயர் இடுப்பளவு தண்ணீரில் நின்று பணியாற்றினார், மழையில் உதயநிதி மக்களுக்காக உழைத்தார், ஏழு அமைச்சர்கள் களத்தில் இறங்கி வேலை செய்தனர், முதலமைச்சர் மக்களுக்காக மொடர்ந்து பணியாற்றினார், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், யாரேனும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியிருந்தால், அது நானாகவே இருந்தாலும் தாய் தடுத்தாலும் நடவடிக்கை நிச்சயம் என்று சொல்லிக்கொண்டிருந்தார். மாசுவும் மேயரும் தண்ணீர் எங்குமே தங்கவில்லை என்றனர். செய்திகளும் ஊடகங்களும் கூறுவது பொய்யாக இருக்காதே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Grrrrrrrrrrrrrrrrrrrrrr............ க்ரூப்பில் எழுத்தாளர் இந்துமதி எழுதிய அனுபவம் பகிர்ந்திருக்கிறேன்.  படித்துப் பாருங்கள்.

   நீக்கு
 8. கடுகு சாரின் தளத்தில் இந்தக் கட்டுரையைப் படித்திருக்கிறேன். அவரது அனுபவங்களே அலாதியானது

  பதிலளிநீக்கு
 9. கோவிட் பிரச்சனை வரப்போகும் சமயத்தில் அரிசி, கோதுமை வாங்கி ஸ்டாக் வைத்தது நினைவுக்கு வந்தது. இதுபோல பசிதம்பரம் இந்திய அரிசி ஏற்றுமதிக்குத் தடை என்று சொன்னதும் அநாவசிய பீதியில் இரண்டு அரிசி மூட்டைகளை பஹ்ரைனில் வாங்கியதும் நிழலாடியது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்.  கோவிட சமயத்தில் நாங்களும் பெரிய ஸ்டாக் செய்தோம்!  பயம், பீதி, பதட்டம்!

   நீக்கு
 10. 'சிவாஜி கணேசனும் நானும்' -- ஹி.. ஹி..
  தலைப்பு உங்களோடதா? ..

  பதிலளிநீக்கு
 11. சென்னைதில் 'சில' பகுதிகளில் வடியாத மழை நீர் --- நியூஸ் ரூம் பத்தியாளர் வாசிக்கிற செய்தித்தாளை மாற்ற வேண்டும்!

  பதிலளிநீக்கு
 12. ..வந்தபின் சம்பாதிப்பார்கள்//

  சம்.. பாதிப்பார்கள்...

  பதிலளிநீக்கு
 13. சென்னை வெள்ள மீட்புப் பணிகள்பற்றி, கண்ணில் பட்டு, நெஞ்சில் இனித்தவை இரண்டு:

  1) ஜெயலலிதாவை மிஞ்சிய பிரியா ..
  2) ஆமீர் கான், விஷால் மீட்பு. அந்த ஏழைப் பரதேசிகளின் பயண ஏற்பாடுகளுக்கு உதவிய அஜித் !


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது மாதிரி சமயங்களில் எவ்வளவு பணம் இருந்தாலும் அவசர நேரத்தில் உதவி கிடைத்தால்தான் உண்டு ஏகாந்தன் ஸார்.  நடிகை லக்ஷ்மியின் அனுபவம் நினைவிருக்கிறதா?  இப்போது கூட க்ரூப்பில் எழுத்தாளர் இந்துமதியின் அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறேன், பாருங்கள்.

   நீக்கு
 14. மின் இணைப்பு வரும் வரை பெரும் சிரமமாக இருந்திருக்கும். சமயோசிதமாகச் சமாளித்திருக்கிறீர்கள். ‘செய்திருக்க வேண்டியவை’ சிந்திக்க வைக்கும் அனுபவப் பாடங்களாகின்றன. விரைவில் நிலைமை முழுதாகச் சீராகப் பிரார்த்தனைகள். சாலைகள் சரிசெய்யப்படாத வரையில் அலுவலகம் மற்றும் வெளியில் செல்வதில் கவனம் தேவை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த சமயம் என்றில்லாமல் எந்த சமயமும் சாலைகள் மோசம்தான்! மக்களின் அரசு! நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 15. கவித்துளிகள் அருமை.

  கடைசிக் கணங்கள் மனதை உறைய வைக்கிறது.

  கவலை அளிக்கின்றன நியூஸ் ரூமின் சென்னை அப்டேட்ஸ்.

  தொகுப்பு நன்று.

  பதிலளிநீக்கு
 16. சோலார் பேட்டரி பயன்பாடு சூப்பர், ஸ்ரீராம். ஃப்ரிட்ஜ், டிவி கணினி எல்லாம் அதில் இயங்குகிறதா மற்ற நாட்களில்....அட!! நல்ல விஷயம். இங்கும் செயலாக்க நினைத்தோம் இன்னும் செய்யவில்லை. நெருங்கிய உறவினரே ஸோலார் பேட்டரி தொழிலில்தான் இருக்கிறார்.

  செய்ய வேண்டியவைன்னு சொன்னது எல்லாமே நல்ல குறிப்புகள். பொதுமக்கள் கூட உஷாரா இருப்பாங்க, ஆனா மொத்தத்துல யார் உஷாரா இருக்கணுமோ அவங்க இல்லை பாருங்க அதாங்க அரசு!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // ஃப்ரிட்ஜ், டிவி கணினி எல்லாம் அதில் இயங்குகிறதா மற்ற நாட்களில்... //

   ஆம்.  முன்னரே சொல்லியிருக்கிறேன் என்று நினைவு.
   அரசா...  உஷாராகவா,,,,  அவர்கள் இதில் உஷாராக இருப்பார்கள் என்று தெரியும்தானே!

   நீக்கு
 17. அட! குட்லைஃப் அங்கும் கிடைக்குதா! பாருங்க, ஸ்ரீராம், கர்நாடகாவோட பால்தான் கடைசில கை கொடுக்கும் கையாக இருந்திருக்கு! சரி எனக்கு ஒரு டவுட் எப்பவும் வந்துட்டே இருக்கும். தமிழ்நாடு கர்நாடாகிட்ட தண்ணிக்கு ஏங்க கை ஏந்துது?! இம்புட்டு தண்ணியும் வீணாப் போகுதே! அது போல ஏரியாவுல சில சின்ன ஆறுகளை இணைத்தா கால்வா மூலம் இணைத்தா போதிய தண்ணி கிடைக்கும். ஹூம் நாம ஐடியா கொடுத்தா செய்யவும் மாட்டாங்க நமக்கு ராயல்டியா கொடுக்கப் போறாங்க?!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கர்நாடகாவிலிருந்து காவேரிதான் கிடைக்கவில்லை.  நந்தினி கிடைத்தாளே!

   நீக்கு
 18. என்னவோ எல்லா விஐபிக்களும் தண்ணில இறங்கி சேவை பிழிஞ்சாங்களாமே!! ஹூம் விளம்பரம். இதை எல்லாம் சொல்லி சொல்லி நாங்க ஹெலிகாப்டர்ல சாப்பாடு கொடுத்தோம், போட் விட்டோம், எங்க ஆரோக்கியத்த கூடப் பாக்காம, லெப்டோஸ்பைரோச்ஸில், விஷக்காய்ச்சல் க்கு கூடப் பயப்படாம தண்ணில குதிச்சு நீஞ்சி காப்பாத்தினோம் ....இத இப்படியான புயல் ஒண்ணும் புதுசில்லை அதனால சென்னை கடலாகாம இருக்க வழி பண்ணனும்னு இத்தனை வருஷம் ஆகியும் எந்த ஆட்சியும் எதுவும் செய்யாம வந்தபிறகு இப்படிச் செய்யறோம்னு சொல்லி ஓட்டுக்கு!! விளம்பரம்! இது எல்லா ஆட்சியாள்ர்களுக்கும் பொருந்தும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விளம்பரம் இல்லாமலா? ஏற்கெனவே அது அதிகம் ஆச்சே... முந்தைய அரசு இருந்தபோது இருந்த இழப்பை விட இந்தமுறை கம்மியாம்... இவர்கள் சாமர்த்தியமும்.

   நீக்கு
 19. அமீர்கான், இன்னொருவர் கூட உண்டு பெயர் மறந்து போச்சு....இந்தச் செய்தி வாசித்து நொந்து போனேன் ....லட்சம் மக்கள் குடிசைல தண்ணில இருக்காங்க இடம் இல்லாம அமிர்கானை அஜித் மீட்டாராம் பயண ஏற்பாடுகல் செஞ்சு....சிரிப்புதான் வருதுப்பாஅ...இப்படியான நியூஸ் பார்த்து. இவர் படங்களின் வியாபாரத்துக்கு தூணா இருக்கற மக்களை காப்பாத்த போலை!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் அந்தச் செய்தியை வேறு வகையில் பார்த்தேன் கீதா.

   நீக்கு
 20. தேவரகசியம் வாசிச்சிட்டீங்களா ஸ்ரீராம்!! நானும் வாங்கலாமான்னு யோசனை.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கி வாசிக்கணுமா என்பது கேள்வி! கிடைத்தால் வாசியுங்கள்.

   நீக்கு
  2. ஓ அப்படின்றீங்களா...ஓகே...நானும் அப்படி டக்குனு வாங்கிட முடியாதே!!!!!! சொல்லிப் பாத்துக்குவேன் அவ்வளவுதான்! ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
 21. அடையாறு 2015 ல பாலத்துக்கு மேலயும் பாய்ஞ்சு ஓவர் ஃப்ளோ ஆச்சு!! அத பாக்கறதுக்குனே சைதாபேட் போனேன்!!!! அதெல்லாம் சென்னைல அருங்காட்சி! மத்த தினங்கள்ல நீங்க சொல்லிருப்பது போலத்தான் கண்ணுக்கே தெரியாம சாக்கடையான்னு நினைக்கற அளவுக்கு இருக்கும்.

  கீதா

  பதிலளிநீக்கு
 22. ஏகாந்தன் அண்ணாவின் அனுபவங்கள் சுவாரசியம் அதே சமயம் பகீர்! பாவம் அந்த வீரர்! இவர்களுக்கெல்லாம் தான் சம்பளம் கூடுதலாக இருக்க வேண்டும். குடும்பம் அவரில்லாமல் எவ்வளவுகஷ்டப்பட்டிருக்கும்! இப்படி எத்தனையோ வீரர்கள்.

  கீதா

  பதிலளிநீக்கு
 23. வருடம் முழுவதும் புயல்கள் இனி இவைகளும் கடந்து போகும்....

  பதிலளிநீக்கு
 24. மிக்ஜாம் புயல் பெயருக்கேத்தாப்ல சென்னையை ஜாமாக்கிருக்கு.

  கீதா

  பதிலளிநீக்கு
 25. புழல் தப்பித்ததா இல்லையா? உடையவில்லை என்று நினைக்கிறேன். உடைஞ்சிருந்தா?!! யம்மாடியோவ்! நினைச்சுப் பார்க்க முடியலை

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுவரை ஒன்றும் ஆகவில்லை. இனியும் ஆகாத்திருக்க இறைவனை வேண்டுவோம்.

   நீக்கு
 26. மீன் ஹைக்கூ - வெள்ளத்தின் பாதிப்பில் எழுந்தவையா! ஸ்ரீராம்?

  மீன் ஹைக்கூ? ரசித்தேன்.

  மூடிய இமைக்குள் கொட்டுவதையும் ரசித்தேன்...அது தனி உலகம் இல்லையா, ஸ்ரீராம்?

  ரொம்பப் பிடித்தது கண்ணிருந்தும் குருடர்கள்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது எப்பவோ எழுதி வச்சது கீதா. ரசித்ததற்கு நன்றி.

   நீக்கு
 27. சிவாஜி பற்றிய தகவல்களை ரசித்து வாசித்தேன் யாருடான்னு பார்த்தா அட கடுகு! அதான் இத்தனை சுவாரசியம்! அந்த எழுத்து.

  கீதா

  பதிலளிநீக்கு
 28. சென்னை மழையும் சிரமங்களும் கவலை .

  நியூஸ்ரூம்,ஏகானந்தன் பக்கங்கள் நன்று.

  துணுக்கு கடிகாரம் மாப்பிள்ளை ரகசியம் அனைத்தும் சிரிப்பு.

  பதிலளிநீக்கு
 29. அந்த இரு ப்டங்களும் மனதை நெகிழ வைத்தன. கடைசித் துளிகள் இறக்கும் முன்னான நிமிடங்கள்...எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க அப்ப அவங்க மன நிலை எப்படி இருந்திருக்கும்!!?...ஜெயன் பற்றி வாசித்ததுண்டு.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜீரணமாகாத நினைவுகளாய் மனதில் என்றுமிருக்கும்.

   நீக்கு
 30. பொக்கிஷங்கள் ரசித்தேன்.

  அது பாலச்சந்தரின் இளமைக்கால படம் ஆனால் நமக்கு பாலச்சந்தரை அதன் பின் பார்த்து பார்த்து பழகியதால் அவரா இது என்று கேட்க வைக்கிறது!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான். கண்ணாடி போட்டுக்கொண்டு தலையை வேறு மாதிரி சீவி...

   நீக்கு

 31. புயல் மழை வரும் முன் தற்காப்புப் பணிகள் நீங்கள் சொல்லியிருப்பவை எல்லாமே கவனத்தில் கொள்ள வேண்டியவை, ஸ்ரீராம். மழை நீடித்திருந்தால் இன்னும் கஷ்டப்பட்டிருப்பீர்கள் சென்னை மக்கள் நீங்கள் அனைவரும்.

  எப்படியோ பால் கிடைத்ததே. பல பகுதிகளிலும் பாலின் விலை கூடுதலாக விற்றதாகச் சில காணொளிகளில் சொல்லியிருந்தார்கள். மிக்ஜாம் புயல் மழை, சென்னையில் வெள்ளம் பற்றி செய்திகளிலும் பார்த்தேன். காலம் காலமாகப் பார்த்துவருவதுதான். ஆனால் தீர்வுதான் இல்லை.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். எத்தனையோ நல்ல மனிதர்கள், வியாபாரிகள் இருக்கும் இடத்தில் இவர்கள் மாதிரியும் சிலர்! சில இடங்களில் 25 ரூபாய் தண்ணீர் கேனை நூறு ரூபாய்க்கு மேல் விற்றார்கள். நன்றி துளஸிஜி.

   நீக்கு
 32. ஏகாந்தமாய் - சட்டத்திற்குக் கட்டுப்படாதவர்களின் நிலை இனிமையாக இருக்க, சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நாட்டிற்காகப் பணிபுரிபவர்களின் நிலை இப்படிப் பரிதாபகரமாக த்தான் முடிகிறது.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதை யாரும் பெரிதாக பேசுவதுமில்லை என்பதும் கொடுமை.

   நீக்கு
 33. சிவாஜி பற்றி கடுகு சார் சொல்லியிருப்பது நேரில் போய் நாடகம் பேட்டி எடுத்தது போலவும், நாடகம் கண்டது போலவும், பராசக்தி வசனம் கேட்டது போலவும் உணர்வு. ரசித்த விவரணம்,

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 34. ஸ்ரீராம் உங்கள் கவிதைகள் எல்லாமே ரசித்தேன். புதுமனைப்புகுவிழா அங்கு மீன் என்பது கொஞ்சம் புரியவில்லை.

  பொக்கிஷம் பகுதி ரசனை, சுவாரசியம்

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலையை இன்னொரு புதிய இடம் என்று அங்கு வந்து மாட்டிக் கொள்கிறது மீன்! நன்றி துளஸிஜி.

   நீக்கு
 35. மரணதிற்குச் சற்று முன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர்களின் குடும்பத்தினர் பார்க்கும் போது அவர்களுள் எழும் உணர்வுகளைக் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியவில்லை.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 36. துளசியின் இக்கருத்தைப் போடும் போது காலைய்ல் நான் சொல்ல நினைத்து விட்டுப் போன ஒன்று - அந்த அரசியல்தலைவர் டேக்ஸா தன் கடைசி நிமிடங்களை/மணித்துளிகளைத் தானே ஏதேச்சையாக எடுத்திருப்பதை நினைக்கும் போது என்னவெல்லாமோ தோன்றுகிறது. சந்தோஷமாய் தன் குடும்பத்தை ஃபோட்டோ எடுக்கிறார். அவர்கள் கண் முன்னிலேயே அவர் மரணம் நிகழ்கிறது....கடவுளே! தன்னைக் கொல்பவரை அவரே தன் புகைப்படம் மூலம் காட்டிக் கொடுத்திருக்கிறார்! இந்தப் புகைப்படம் மிகவும் வித்தியாசமான ஒன்று! சரி கொல்பவருக்கு இவர் ஃபோட்டோ எடுப்பது தெரிந்து அந்த ஃப்ரேமிற்குள் வந்திருக்கார் பாருங்க இல்லை அவரும் கவனிக்காம டக்கென்று வந்திருப்பாரோ இல்லை நோக்கத்தோடுதான் வந்திருப்பதால் பிடிபட்டாலும் பிரச்சனை இல்லை என்று வந்திருப்பார் போலும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு துப்பறியும் அலலது திகில் கதைக்கான கரு!

   நீக்கு
  2. ஆமாம் அதே தான் எனக்கும் தோன்றியது. கதை பிறக்குது ஆனா அதை எழுதி வைக்கணுமே அது இப்போதைக்கு முடியாம இருக்கே..ச்சே இதுக்குத்தான் நம்ம மூளைக்குள்ள ஓடுறதை எடுத்து எழுதாய் வடிக்க ஒரு சின்னதா ரோபோ நம்ம கூடவே செயினின் டாலர் போலவோ காதுல கம்மல் போலவோ இருந்துட்டா நல்லாருக்கும்ல!!!!!!!

   கீதா

   நீக்கு
 37. எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையாக எல்லாம் வாங்கி வைத்து கொண்டாலும் சில தட்டுபாடுகள் ஏற்படும் தான்.
  எப்படியோ எல்லாம் சமாளித்து விட்டீர்கள்.
  வியாழன் பதிவும் போட்டு விட்டீர்கள். உறிவினர்கள் சிலர் இன்னும் நெட் வேலை செய்யவில்லை என்றார்கள். தொலைபேசி பேச முடியவில்லை என்றார்கள். தண்ணீர் மோட்டர் வைத்து இறைத்து தள்ளபடுகிறது என்றார்கள். மடிப்பாக்கம், மாங்காடு ஆகிய இடங்களில் இருக்கிறார்கள்.

  இத்தனை இடர்களுக்கு நடுவில் தேவரகசியம் அறிந்து கொண்டீர்க்ளே! நல்லதுதான்.
  (புத்தகம் வாசிப்பு)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னமும் கூட சென்னையில் பல இடங்களில் மின்சாரம் கொடுக்கபபடவில்லை. அரசு முக்கிய சாலைகளில் இருந்த தண்ணீரை எடுத்து பக்க வாட்டில் உள்ள சந்துகளில் உள்பகுதிகளிலும் விட்டிருக்கிறார்கள்.  பார்க்க மெயின் ரோட் க்ளீனாக இருக்கும்.  ஏகப்படங்களில் சாலை மறியல்.  வேளச்சேரியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளை நீக்க எவரும் வரவில்லை என்று புதனன்று கூட சம்பந்தபப்ட்டவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

   இது மாதிரி வாட்சாப், கணினி, டிவி இல்லாத நேரமாக கிடைத்ததால் புத்தகத்தை ஒரே மூச்சாக முடித்து விட்டேன்!

   நீக்கு
 38. மௌனச்சாமி! ஆறு ஆர்பரித்து ஓடுவது பார்க்க நன்றாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் தண்ணீர் அளவு உயர்ந்தால் பாலத்துக்கு வந்து இருக்குமோ! காணொளி பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த அளவு உயர்ந்தால் பக்கவாட்டில் வழிந்து ஊருக்குள் வந்து விடும். அதுதான் 2015 ல் நடந்தது.

   நீக்கு
 39. செய்ததும், செய்யவிட்டுப்போனதும் என்று வெள்ள நெருக்கடிகளுக்கிடையே இவ்வளவு எழுதி வியாழனை வெளியே தள்ளிவிட்டீர்கள்! வாழ்த்துகள். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்..

  இந்துமதியின் பதிவைப் படித்தேன். துஸ்-இன் காலத்தாற் செய்த உதவியை நன்றியுடன் விவரித்திருக்கிறார்.

  எத்தனை எத்தனைப் பிரச்னைகளோ சாதாரணர்களுக்கு. யார் வருவார் அவர் துயர் தீர்க்க? திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்று அன்று சொல்லிவைத்தது இதற்காகத்தானோ ..

  வடியல் நிகழட்டும் வேகமாக. நார்மல் வாழ்க்கை சென்னைக்கு விரைவில் திரும்பட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதன் மாலை கரண்ட் வந்ததும் முதல் வேலையாக எழுதி விட்டேன்.  முன்னர் எழுதி வைத்திருந்த பதிவை கட் செய்து எடுத்திருந்தேன்.  அதை மறுபடி டிராப்டில் ஒட்ட மறந்து விட்டேன்.  போயே போச்!

   வடியல் தானாக நிகழ்வதுதான் அதிகம்.  விடியலால் அதை செய்ய முடியவில்லை.

   நீக்கு
 40. கவிதை நன்று.
  //ஆசையாக இரண்டு வருட வெளிநாட்டு போஸ்ட்டிங்கில் உகாண்டா சென்ற BSF இளைஞனின் கதை சோகமாய் முடிந்தது. அவனது குடும்ப நிலை என்னவோ? இளம் மனைவி, குழந்தைகள் எல்லாம் எப்படியெல்லாம் தவித்தார்களோ?//

  நாட்டுக்கு சேவை செய்யும் போது இப்படி ஏற்படுவதை படிக்கவே கஷ்டமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 41. செய்திகள் படித்தேன். சில நகைச்சுவைகளை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 42. சென்னை மழை புயல் பற்றி என்ன சொல்வது செய்வது? பேய்மாதிரி எப்போதாவது அரிதாக வருவது போய் எல்லா வருடமும் என்றாகிவிடுமோ? என்றும் தோன்றுகிறது. இறைவனையும் இயற்கையையும் பிரார்த்தனை செய்வோம் இவற்றிலிருந்து காக்க.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவ்வளவு மோசமான அளவு எப்போதாவதுதான் வருகிறது. எநண்பர்கள் ஓரிருவர் கூட சென்னையில் வீடு வாங்கலாம் என்றிருந்தேன்..  இப்போ வேண்டாம் என்று தோன்றுகிறது என்றனர்.  அப்படி இதற்காக வாங்காமல் இருக்க வேண்டாம் என்றேன்.

   நீக்கு
 43. அடையாறு ஓடுவதைக் காணொளியில் பார்த்தேன். நேரில் சென்ற போதெல்லாம் அடையாறு ஓட்டத்தில் பார்த்ததில்லை. ஓரிரு வாரங்களில் ஓட்டம் நின்றுவிடும் என்று நினைக்கிறேன்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். இப்போதே திறந்து விடும் தண்ணீரின் அளவைக் குறைத்து விட்டார்கள்.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!