புதன், 13 டிசம்பர், 2023

உன்னுடைய வண்டியை கொஞ்சம் கொடு!

 

சென்ற வாரமும் எங்களை யாரும் கேள்வி கேட்காததால், நாங்கள் கேட்கிறோம். இன்றைய எங்கள் கேள்விகளில் ஒரு சிறிய ஸஸ்பென்ஸ் இருக்கிறது. அது என்ன என்று வாசகர்கள் கண்டுபிடிக்கிறார்களா என்று பார்க்கப் போகிறோம். 

1) அமாவாசை வந்ததும் பவுர்ணமி எங்கே போகிறது ?

2) ஒரே கேள்வியை, உங்களிடம் வெவ்வேறு ஆட்கள் கேட்டால், கேட்பவரைப் பொருத்து உங்கள் பதில் மாறுமா? 

3) ஒற்றை வார்த்தையில் பதில் சொல்பவர்களின் மனம் எதை யோசிக்கும்?

4) விளம்பரங்களைப் பார்த்துப் பொருட்களைத் தேர்வு செய்யும்/வாங்கும் வழக்கம் உண்டா?

5) பலர் திருமண வாழ்க்கையை பற்றி ஜோக் அடிக்கிறார்கள்.  ஆனால் தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் ஆகவில்லை என்றால்  மிகவும் கவலைப்படுகிறார்கள். இது ஏன்?

= = = = = = = =

KGG பக்கம் : 

பள்ளிக்கூட நாட்கள் நிகழ்வுகளைப் பகிர்ந்து வருகின்றேன். சும்மா பள்ளி நிகழ்வுகளையே பகிராமல், அந்தக் காலகட்டத்தில் வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களையும் சேர்த்துக் கொள்வோம் என்று நினைத்ததால், அவ்வப்போது அதையும் எழுதுகிறேன். 

மேலும், இது ஒரு தொடர் கட்டுரை கிடையாது. வாசகர்கள் எப்போது வேண்டுமானாலும் படித்து துன் .. சாரி இன்புறலாம்! 

ஆறாம் வகுப்புப் படிக்க ஆரம்பித்த காலத்தில்தான், வீதிகளில் விளையாடும் ஆபத்து இல்லாத சில விளையாட்டுகளில் ஆர்வம் வந்தது. 

வீட்டில் ஒரு சைக்கிள் இருந்தால், அந்த வீட்டில் நிச்சயம் பழைய சைக்கிள் பாகங்கள் ஒரு பெட்டியில் இருக்கும். அப்படி பெட்டிகளில் அடைக்க முடியாத ஒரு பொருள், கழற்றி வீசப்பட்ட பஞ்சர் ஆன பழைய டயர். 

அந்தக் காலப் பசங்களுக்கு இருந்த ஒரு நல்ல பொழுது போக்கு, வீதிகளில் பழைய சைக்கிள் டயர் உருட்டியபடி - அதைத் தட்டிக்கொண்டே அதன் பக்கத்தில் அல்லது பின்னால் ஓடுவது. 


எங்கள் வீட்டிலும் ஒரு பழைய சைக்கிள், அப்பாவின் உபயோகத்திற்காக அவர் வாங்கி வைத்திருந்தார். 

அந்த சைக்கிள் மூலம்தான் என் அண்ணன் (சக எ பி ஆசிரியர்) Dip in C T & M (Diploma in Cycle Technology and Mechanism) பட்டம் பெற்றார். அதற்கு பேருதவி புரிந்தவர் என்னுடைய இன்னொரு அண்ணன். சைக்கிளை ஒவ்வொரு நாளும் எவ்வளவு டேமேஜ் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு செய்து, அந்த டேமேஜ் எல்லாவற்றுக்கும் வைத்தியம் பார்க்கும் பொறுப்பை டிப்ளோமா அண்ணனிடம் விட்டுவிடுவார்! 

எனக்கும், என்னுடைய தம்பிக்கும் ஆளுக்கு ஒரு தேய்ந்த டயர் அந்த சைக்கிளின் பாகத்திலிருந்து, பாகம் பிரித்துக் கொடுக்கப்பட்டன. 

அந்த டயர்களை தினமும் கழுவி, அதை ஓட்டுவதற்கு தம்பியின் உடைந்து போன ஸ்லேட்டின் மரச் சட்டத்தைப் பயன்படுத்தி வந்தோம். 

பக்கத்து வீட்டு (ஒரு சிறிய அனுமார் கோவில்) ராமன் அவ்வப்போது வந்து, " டேய் - நான் கடைக்குப் போகணும் - உன்னுடைய வண்டியை கொஞ்சம் கொடு - நான் ஓட்டிக்கிட்டுப் போய்ட்டு அப்புறம் கொண்டு வந்து தருகிறேன் " என்பான். கற்பனையில் பஸ் ஓட்டும் அவனுக்கு, நாங்கள் வைத்திருந்த சைக்கிள் டயர்தான் வண்டி. அதை தட்டிக்கொண்டு செல்லும் ஸ்லேட் சட்டம் அதன் சாவி! 

ஒருமுறை அக்காவைப் பெண் பார்க்க அயலூரிலிருந்து ஒரு குடும்பம் வந்திருந்தனர். அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, ராமன் வழக்கம்போல வந்து, " கடைக்குப் போகணும், உன்னுடைய வண்டியை எடுத்துக்கொண்டு போய் வருகிறேன். சாவி எங்கே?" என்று என்னிடம் கேட்டான். 

" வண்டிக்குப் பக்கத்திலேயே இருக்கு " என்று நான் அவனிடம் சொன்னேன். 

அக்காவைப் பெண் பார்க்க வந்திருந்தவர்கள் அசந்துபோய் விட்டார்கள். பெண் பார்க்க வந்திருந்த பையனின் அப்பா என்னிடம், " என்ன வண்டி வைத்திருக்கிறாய்? " என்று கேட்டார். 

நான் அவர்களிடம் அசடு வழிந்தவாறு, "ஹெர்குலிஸ் சைக்கிள்(இன்) டயர்" என்றேன்! 

= = = = = = = =

அப்பாதுரை பக்கம் :

ஹம்னா சபர்.

"என்னம்மா இது.. குழந்தைக்கு பேரு வைக்க சொன்னா இப்படி வச்சிருக்கிங்க? கறுப்பா இருந்தா என்ன இப்ப?" என்ற மகளிடம்,  "இல்லடி பெண்ணே.. என் பேத்தி நிறத்த பாத்து வச்ச பேரில்லே அது.  வலிமை, சக்தி, புதுமை எல்லாமே கறுப்பு நிறம் தானடி.. அம்பது வருசம் முந்தி என் பெரிய பாட்டி ராவல்பின்டிலருந்து இந்தியா ஓடினப்போ யாருமே உதவலே.. தைரியமும் சக்தியும் என் பேத்தி முகத்துல ஓடுறதப் பார்த்து அப்படிப் பேரு வச்சேன்.. கண்ணே.. உனக்கு கிடைக்காத சுதந்திரம் உன் பெண்ணுக்குக் கிடைக்கட்டும் ஹபிபி"  என்று சொல்லத் தோன்றினாலும் வாயடக்கிக் கொண்டார் மூதாட்டி ஆயிஷா. புன்னகைத்தார்.  "ஹம்னா என்றால் பெருவாழ்வு என்றும் பொருள். உன் பெண்னால் நமக்குப் பெரு வாழ்வு கிடைக்கட்டும்" என்றார்.

அடுத்த வருடமே மருமகன்  இஸ்லாமாபாதுக்கு மாற்றலாகி அங்கிருந்து அமெரிக்க  ந்யூயார்க் நகரில் டாக்சி டிரைவர் வேலை கிடைத்துக் குடியேறிவிட்டதால் பதினெட்டு வருடங்களாகப் பேத்தியைப் பார்க்கவில்லை மூதாட்டி ஆயிஷா.  

அடுத்த மாதம் பாகிஸ்தான் வருகிறாள், பாட்டியைப் பார்க்கிறாள் என்ற செய்தி அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் உள்ளூர வருத்தமாக இருந்தது.  "எல்லாம் வல்ல அல்லா. எப்படியாவது என் பேத்தியை இங்கே வராமல் தடுத்துவிடு" என்று மௌனமாக வேண்டிக் கொண்டாள்.

*

ஹம்னாவின் தந்தை சபர், ந்யூயார்க் டாக்ஸி ஓட்டிகளில் செல்வாக்கு மிக்கவனாக வளர்ந்து சமீபத்தில் ஊபர் நிர்வாகம் நியுயார்க் நகரத்தில் அடியெடுக்க விடாமல் செய்தவர்களில் ஒருவனாகி செல்வாக்கில் மேலும் வளர்ந்து ந்யூயார்க் நகர டாக்சி டிரைவர் சங்கத் தலைவனாகிவிட்டான். 

வீட்டில் கண்டிப்பும் கட்டுக்கோப்பும் நிறைந்த தந்தையாகவும் கணவனாகவும் இருந்தான்.  அமெரிக்க நாகரிகம் தன் இரண்டு பெண்களையும் சீரழிப்பதை தினம் நொந்தான்.  மனைவியும் மக்களும் அமெரிக்காவை விரும்பினாலும் தனக்கு பயந்து அடங்கி நடப்பதில் பெருமை கொண்டான். பதிமூன்று வயதிலிருந்து ஹிஜாப் அணிவதும் மாலையில் இஸ்லாமிய மத மதராஸா வகுப்புக்களுக்குச் செல்வதும் தினசரிக் கடமையாகவே  செய்திருந்தான்.  "ஆயிற்று.. ஹம்னாவுக்கு நிக்காஹ் ஏற்பாடு செய்துவிட வேண்டும்" என்றான் மனைவியிடம்.

"ஹம்னா இன்னும் ஹை ஸ்கூல் தானே படிக்குது? கல்லூரி டிகிரியாவது வாங்கட்டுமே?" என்ற மனைவியை அடக்கினான். "எல்லாம் ஹராமி வேலை. கல்லூரி டிகிரி எல்லாம் அவளை காபிர் ஆக்கிவிடும். அதெல்லாம் முடியாது. நான் தீர்மானித்துவிட்டேன். அடுத்த மாதம் ராவல்பின்டி போறோம்ல? அங்கே திருமணம் முடித்து விடலாம்.   என் நண்பன் அப்துல்வகாப் மகன் ஒமார் தெரியும்ல? அவனுக்கு நிக்காஹ் செய்து குடுக்குறதா பேசிட்டேன்"

"ஒமாரா? அந்தப் பிள்ளை படிக்காம குடும்ப விவசாயமும் பாக்காம.. அந்த ஜாலி இம்ரான் கட்சில சேர்ந்து போக்கிரி வேலை செஞ்சுட்டு சுத்துறதா  சொல்வீகளே.. அவனுக்கா இப்ப நம்ம மகளை.."

"நிறுத்திக்க. அவன் ஆம்பிள. எப்படி வேணும்னாலும் இருக்க குரான்லயே இஸ்திகாக் குடுத்திருக்கு.  இம்ரான் ஜாலியா இருந்தா இவனுக்கென்ன? பொறுப்பா டிரைவர் வேல பாக்குறான்ல? என்னைப் போலத்தானே?"

"நம்ம பொண்ணு படிச்சிருக்கு.  இஸ்லாத்திய ஒழுக்கம் எனக்கும் உடன்பாடுதான். அவளை இங்கயே ஒரு நல்ல இஸ்லாம் குடும்பத்துல கட்டுவோமே? லகுவார்டில வண்டி ஓட்டுறாரே இக்பால் உங்க நண்பர் தானே? அவருக்கு மகன் இருக்காரில்லே?"

"இக்பால் இந்தியாகாரன்.. அதெல்லாம் ஒத்துவராது. நம்ம நாட்டுல தான் கட்டணும். ஏற்கனவே முடிவு செய்துட்டேன்.  ஊர்ல போனதும் சேர்ந்து பேசி குபூல்னு ஒப்பந்தம் எழுதிக்குவோம். இதைப் பத்தி ஹம்னா கிட்டே மூச்சு விடக்கூடாது. எம்மேலே ஆணை".

*

ஹம்னாவுக்குப் பேரதிர்ச்சி. பாட்டியையும் சொந்தங்களையும் பார்க்க அழைத்து வந்து திடீரென்று திருமணம் நிச்சயம் செய்துவிட்டார்களே பெற்றோர்கள்? அந்த ஒமார் என்னைப் பார்க்கும் பார்வையே சரியில்லையே? இங்கிருந்து எப்படித் தப்புவது.. என்ற சிந்தனைகளில் அவதிப்பட்டாள்.  உறக்கம் வரவில்லை.  அமெரிக்கா திரும்பியதும் வீட்டை விட்டு ஓடிவிடத் தீர்மானித்தாள்.  இரண்டே நாளில் திருமணத்தையும் முடித்து அவள் அமெரிக்கா திரும்பாமலே இருக்க ஏற்பாடு நடப்பது அவளுக்குத் தெரியாது. 

*

பேத்தி இரவில் தனியாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்தா ஆயிஷா தள்ளாடி வந்தார். "ராவல்பின்டி சந்திரன் தனியழகு இல்லையா?" என்று  பேத்தியின் தோளைத் தொட்டார்.  "ஆமாம்" என்ற ஹம்னாவின் குரலில் உற்சாகம் இல்லாதது பாட்டிக்கு உடனே புலப்பட்டது. "என்ன இருந்தாலும் ந்யூயார்க் சந்திரன் போல வராது,  சரியா?" என்று சிரித்தார்.  ஹம்னா சிரிக்கவில்லை.

"நானி" என்று அழுதபடிக் கட்டிக்கொண்டாள். 

மெள்ள ஹம்னாவை அமைதிப்படுத்தி, அவள் கைகளில் ஒரு பையைக் கொடுத்தார் ஆயிஷா. "மேரி நூர்.. இதில் உன் பாஸ்போர்ட், உன் ந்யூயார்க் ரிடர்ன் டிகெட், என்னால புரட்ட முடிந்த ரெண்டாயிரம் அமெரிக்க டாலர் எல்லாம் இருக்கு. உடனே இங்கிருந்து ஓடிப்போ" என்றார்.

ஹம்னா அதிர்ந்தாள். "நானி!".

"இன்னும் ரெண்டு நாள்ல உனக்கு நிக்காஹ் முடிஞ்சிரும். உனக்கே சொல்லாம ஏற்பாடு நடக்குது. நீ அமெரிக்கா திரும்பவே முடியாது. உங்கப்பன் நல்லவன் தான். ஆனா கொஞ்சம் வரட்டுக் கௌரவக்காரன். அவன் பழைய மரம். நீ பசுந்தளிர். நீ இங்கே சரிய நான் சம்மதிக்க மாட்டேன்" என்று பேத்தியைக் கட்டிக் கொண்டார்.  "ஓடு. தெருமுனைல சாதிக்கும் அவன் பெண்டாட்டியும் டாக்ஸியோட நின்னுட்டிருக்காங்க. லாகூர்ல ப்ளேன் பிடிச்சுப் போயிடு. அவன் எல்லாம் சொல்வான்"

"அப்பா.. என்னை விடமாட்டாரு"

"கவலைப்படாதே. உங்கப்பன் நல்லவன் தான், ஆனா கொஞ்சம் லூசு.  உன்னை இஸ்லாமாபாத்ல தான் முதல்ல தேடுவான். அவன் காலைல எழுந்து உன்னைத் தேடி இஸ்லாமாபாத் வரதுக்கு முன்னே நீ லாகூர்ல துபாய்க்கு ப்ளேன் ஏறிடலாம். அங்கிருந்து இந்த ரெண்டாயிரத்தை வச்சு ஊருக்குப் போயிடு. பாட்டியை மறந்திடாதே தங்கம்".

ஹம்னா விசும்பி அழுதாள். பாட்டியை முத்தமிட்டுப் புறப்பட்டாள்.  தன்னைத் துரத்திவரத் தாமதம் ஆகட்டும் என்பதற்காகவே அப்பா சபரின் பாஸ்போர்ட்டை கிழித்துப்போட்டு அமுக்கமாக இருந்தாள் பாட்டி என்பது ஹம்னாவுக்குப் பின்னாளில் தெரிய வந்து, எப்போது பாட்டியை எண்ணினாலும்  கண்ணீர் முட்டும்.

*

வால்:

ஹம்னா சில மாதங்கள் துபாயிலும் லன்டனிலும் நண்பர்கள் வீட்டில் தங்கினார். அங்கேயே அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து ஒரு வருடம் கழித்து அமெரிக்கா திரும்பி ராணுவத்தில் தொடர்ந்து பணிபுரிகிறார். ஹம்னா சபரின் கதை பெண் சுதந்திரத்துக்கு உதாரணமாகப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும், குறிப்பாக வெத்து டிவி நிகழ்ச்சிகளிலும், பேசப்படுகிறது.

வவ்வால்:

ஹம்னாவை அவருடைய குடும்பம் நிராகரித்துவிட்டது.

ஹம்னா சபர் : அன்றும், இன்றும். 

= = = = = = = = =

59 கருத்துகள்:

  1. ஹம்னாவுக்கு கல்யாணம் ஆச்சா இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியவில்லை.
      இந்தக் கேள்வியை டிவி நிருபர் கேட்ட போது அதிராமல் பதில் சொன்னார் ஹம்னா. தான் தன குடும்பத்தாரால் ஒத்தி வைக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட்தால் இஸ்லாம் வழக்கப்படி தன் இனம் மதத்தில் திருமணம் செய்ய முடியாதாம். அப்படி மீறி திருமணம் செய்து கொண்டால் கணவனுக்கு ஆபத்து நேரிடலாமாம்.
      எந்த அளவுக்கு இது ஒரு தடுப்பு என்றும் தெரியவில்லை. கேட்க வருத்தமாக இருந்தது. ஜாதி மதம் இனம் தொட்ட வறட்டு (?) கொள்கைகள் எத்தனை தலைமுறைகளை பாதிக்கின்றன!

      நீக்கு
  2. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. .

    தமிழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வைத்தீஸ்வரன் கோவில் பஞ்ச மூர்த்திகளில் அங்காரகனை மறந்துவிட்டீர்களே!

      நீக்கு
  4. இந்த டயர் வண்டியின் சற்றே மேம்பட்ட வடிவம் ரிம் வண்டி.  ரிம் மாற்றும்போது அதை எடுத்து அப்படியே ஓட்டுவோரும், அதில் டயரை மாட்டி ஓட்டுவோரும் உண்டு.  துருப்பிடித்த பாகங்கள் கையில் குத்தி ரத்தம் வருவதும் உண்டு!  எல் போல மடித்த குச்சி ஒன்றை வைத்து அழகாக ஒட்டிச் செல்லலாம்!  வளைவுகளில் திரும்பும்போது எங்கள் திறமையை எல்லாம் காட்டுவோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் காலத்தில் சைக்கிளுக்கு ரிம் மாற்றுபவர்கள் மிக சொற்பம். டியூப் உடம்பு முழுவதும் பிளாஸ்திரி போட்டுக்கொண்டு உழைக்கும். தேய்ந்து போன டயர் மட்டுமே பையன்கள் உபயோகத்திற்கு - விளையாட கொடுக்கப்படும். எங்கள் காலத்தில், ரிம் சக்கரம் ஓட்டுபவர்கள் பணக்கார வீட்டுப் பையன்கள்!

      நீக்கு
  5. ஹம்னா.... மனதைத் தொட்ட சம்பவம். அவங்க விருப்பம்போல் வாழ்க்கை வாழ்ந்திருப்பாங்க.

    பலரின் நல்ல வாழ்க்கைக்கு ஏதோ ஒரு மெழுகுவர்த்தி காரணமாக அமைகிறது.

    பதிலளிநீக்கு
  6. சிறிய வயதிலேயே வண்டி ஓனர்... நல்ல வாழ்வுதான். கேள்வி கேட்காமலேயே, இவங்க வீட்டுல வண்டீலாம் இருக்கு என நம்பி பெண் எடுத்திருந்தால்,

    பதிலளிநீக்கு
  7. பல கேள்விகளுக்கு (அல்லது சில) எல்லோரிடமும் ஒரே மாதிரியாக பதில் சொல்ல முடியாது. கோயிலுக்குப் போனயா? சாதா கேள்வி. பெர்சனல் கேள்விக்கு பதில் ஆளைப் பொறுத்து மாறும்.

    பதிலளிநீக்கு
  8. தன்னையும் கருப்பு பெயின்ட் அடித்துவிடப் போகிறானே என சந்திரன் ஓடினாலும் திரும்பத் திரும்ப மாட்டிக்கொள்கிறது. ஒவ்வொரு நாளும் குளித்து கருப்பு நிறம் மெஹந்தி போல கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து பளிச் என்று ஆனாலும் தொடர்கதைதான்

    பதிலளிநீக்கு
  9. 5. அண்ணே நல்ல கேள்வி கேட்டீங்க. ஜோக் மத்தவ்ங்க மனதைபாதிக்காத வரை ஓகே. ஆனா...பாதிச்சா அது ஜோக் இல்லை. எப்பவுமே பொதுவாகவோ இல்லை மத்தவங்களையோ ஜோக் அடிப்பது சர்வசகஜம். பட்டாதான் தெரியும்ன்றதுதான்!!!!! நமக்கு வரும் போதுதான். அது வரை எல்லாமே ஜோக் அல்லது ஓ இப்படியும் நடக்குமா...சும்மா இதெல்லாம் டுபாக்கூர் ட்ரமாட்டிக் அப்படினு....நையாண்டி ஜோக் சொல்வது வழக்கம்.

    நமக்கு நடக்கும் போதுதான் கஷ்டம் தெரியும். இதுலயும் பாருங்க கைய சுட்டுக்கிட்டாலும் சிலர் அதை நிறுத்தறது இல்லை!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. விளம்பரம் பார்த்து வாங்கும் வழக்கம் பொதுவாக இல்லை. அப்படியே அது கவர்ந்தாலும் அதாவது பயனுள்ளது என்ற வகையில் அறிந்தாலும், ஆராய்ச்சி செய்து வாங்குவதே வழக்கம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. 2. கண்டிப்பாகக் கேட்பவரைப் பொருத்து மாறும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. 1) அமாவாசை வந்ததும் பவுர்ணமி எங்கே போகிறது ?
    எனக்குத் தெரிந்து எங்கேயும் போகவில்லை. பவுர்ணமியைக் கல்யாணம் செய்து கொண்டது. எங்கள் பெரிய தாத்தா பண்ணையில் பால் கறந்தவர் பெயர் பவுர்ணமி. ரெட்டை மாட்டு வண்டிக்காரர் பெயர் அமாவாசை.

    2) ஒரே கேள்வியை, உங்களிடம் வெவ்வேறு ஆட்கள் கேட்டால், கேட்பவரைப் பொருத்து உங்கள் பதில் மாறுமா?
    மாறாது.

    3) ஒற்றை வார்த்தையில் பதில் சொல்பவர்களின் மனம் எதை யோசிக்கும்?
    அடுத்த ஒற்றை வார்த்தையை.

    4) விளம்பரங்களைப் பார்த்துப் பொருட்களைத் தேர்வு செய்யும்/வாங்கும் வழக்கம் உண்டா?
    சில நேரம்.

    5) பலர் திருமண வாழ்க்கையை பற்றி ஜோக் அடிக்கிறார்கள். ஆனால் தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் ஆகவில்லை என்றால் மிகவும் கவலைப்படுகிறார்கள். இது ஏன்?
    தான் பெற்ற இன்பம் அவர்களும் பெறத்தான். (சும்மா விடலாமா? எத்தனை தொல்லை கொடுத்தார்கள்!?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. அது எப்படி? எவ்வளவுப்பா பேங்க்ல வச்சிருக்க என்ற மகளின் கேள்விக்கும், நம்மட்ட எவ்வளவு பணம் இருக்கு என்ற மனைவியின் கேள்விக்கும், எவ்வளவு சேர்த்திருக்கீங்க என்ற மூன்றாவது நபர் கேள்விக்கும் ஒரே பதில் வருமா என்ன? இல்லை நண்பன் கேட்கும், இளவயது காதல் கேள்விக்கும் மத்தவங்க கேட்கும் கேள்விக்கும் ஒரே பதில் வருமா என்ன?

      நீக்கு
    3. யோசிக்க வேண்டிய விஷயம்!

      நீக்கு
  13. 1. ஹிஹிஹி இதுதானே பெரீயீயீயீயீயீயீயீயீயீய சஸ்பென்ஸ்!!!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமாவாசை வந்ததும் பௌர்ணமி எங்க போகும்? எங்கயும் போவாது....

      அதான் கொஞ்சம் கொஞ்சமா - மணிரத்னம் ஸ்டைல்ல சொல்றேன் - தலையைச் சுற்றி துப்பட்டா இல்லை சாரி தலைப்பை போட்டு மூடியிருக்கும் பொண்ணு முகத்தை ஸ்லோ மோஷன்ல கொஞ்சம் கொஞ்சமா வெளியகாட்டி ஓரப்பார்வை பார்க்கறாப்ல நிலவும் ஒவ்வொரு நாளும் பூமியைப் பார்க்குமே!!! அப்புறம் முழுசா!!

      பௌர்ணமி போனா அவ்வளவுதா, பூமியின் சுழற்சியில் நிலவின் சுழற்சியால் பாதிப்புகள் இப்போதையது போன்று மனித வளர்ச்சி இருந்திருக்குமா? சான்ஸே இல்ல

      கீதா

      நீக்கு
  14. 2. கேட்கும் கேள்வியைப் பொருத்தும்...மாறும் இல்லை மாறாது. பல கேள்விகளுக்குப் பொதுவாகவே ஒரே பதில்தான் இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  15. 1. எங்க போகும்....பூமிக்கு அந்தாண்ட - இந்தாண்டப் பக்கம் எட்டிப் பார்த்துட்டு நம்ம ஊர்னா - அன்று வந்ததும் அதே நிலா இன்று வந்ததும் இதே நிலான்னு பாட வைக்கும்!!

    எல்லா நாடுகளிலும் இந்த பௌர்ணமி நிலவு பாட்டு பாட வைக்கும் போல - The moon on my shoulders னு இன்ஸ்பிரேஷனலாமே!!

    கீதா

    பதிலளிநீக்கு
  16. திருமணமோ இல்லை படிக்க வைப்பதோ இல்லை பசங்களுக்கு ஒரு குடும்பத்தை உண்டாக்கி வைப்பதோ, சமூக்க் கடமை. மத்தவங்க மாதிரியே நாம் செய்வது, அபத்தமாக இருந்தாலும்.

    பேரன் வந்துவிட்டால் மனம் லாஜிக்கோட வாழும். அதனால பேரனை படி படி எனத் துன்புறுத்துவதோ இல்லை காதல் போன்றவற்றை கண்கொத்திப் பாம்பாகப் பார்க்கும் குணமோ மாறிவிடும், அது நம்ம கடமை கிடையாது என்பதாலும் நாம் போகும் காலம் நெருங்கிவிட்டதாலும் மனது ரிலாக்ஸாகி, பையனுக்கே புத்தி சொல்லும் அளவு போய்விடும் (இவருக்கென்ன... இவர் மட்டும் நம்மை எப்படி டார்ச்சர் பண்ணி இப்படிக் கொண்டுவந்தாரு... நம்ம பையனை நாம விட்டுட முடியுமா என யோசிக்கும்)

    பதிலளிநீக்கு
  17. ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாஅவர் மனம் இங்கே இல்லை என்றாகும், அல்லது அதிகமாகப் பேசி மாட்டிக்கக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு

    பதிலளிநீக்கு
  18. 1) அமாவாசை வந்ததும் பவுர்ணமி எங்கே போகிறது ?

    எதுவும் எங்கேயும் போகவில்லை. அமாவாசை பவுர்ணமி அது நிகழும் நாட்களுக்கு நாம் வைத்த பெயர். பெயர் போகாது.

    2) ஒரே கேள்வியை, உங்களிடம் வெவ்வேறு ஆட்கள் கேட்டால், கேட்பவரைப் பொருத்து உங்கள் பதில் மாறுமா?

    ஆம் கட்டாயம். ஆனால் சில பொது கேள்விகளுக்கு ஒரே பதில். இல்லாவிட்டால் முரண்பாடு உண்டாகும். உதாரணமாக கடன், கேட்பவரைப் பொறுத்து பதில் மாறும்.. ஆனால் மசால் தோசை பிடிக்குமா என்று கேட்டால் பிடிக்கும் என்ற பதிலே எல்லோருக்கும். பதிலால் ஏற்படும் வினையைப் பொறுத்து பதில் மாறுவது சகஜம்.

    3) ஒற்றை வார்த்தையில் பதில் சொல்பவர்களின் மனம் எதை யோசிக்கும்?

    ஒற்றை வார்த்தை பதில் : ஒன்றும் யோசிக்காது. கேட்பவரைப் போகச் சொல்லும்.

    4) விளம்பரங்களைப் பார்த்துப் பொருட்களைத் தேர்வு செய்யும்/வாங்கும் வழக்கம் உண்டா?

    அவசியமான பொருட்கள் என்றால் அப்படி செய்வது உண்டு.

    5) பலர் திருமண வாழ்க்கையை பற்றி ஜோக் அடிக்கிறார்கள். ஆனால் தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் ஆகவில்லை என்றால் மிகவும் கவலைப்படுகிறார்கள். இது ஏன்?

    இது ஸ்ரீராமுக்கு ஒரு உள்குத்து. பாவம் அவரை விட்டுவிடுங்கள்.

    p. s குழந்தைக்கு கல்யாணம் ஆகவில்லை என்று கவலைப் படமாட்டார்கள். பிள்ளைகளுக்கு கல்யாணம் அமையவில்லை என்றுதான் கவலைப் படுவார்கள்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :))) விளக்கமான, விவரமான பதில்களுக்கு நன்றி. ஆனால், ஸ்ரீராம் திருமண வாழ்க்கை பற்றி 'எள்ளல் ஜோக்' அடிப்பது கிடையாது.

      நீக்கு
  19. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  20. 1) அமாவாசை வந்ததும் பவுர்ணமி எங்கே போகிறது ?
    அமாவாசை இருட்டில் பவுர்ணமி எப்படி தெரியும்?


    2) ஒரே கேள்வியை, உங்களிடம் வெவ்வேறு ஆட்கள் கேட்டால், கேட்பவரைப் பொருத்து உங்கள் பதில் மாறுமா?
    ஒரே கேள்வி என்றாலும் சிலர் கேட்கும் முறையில் மாற்றம் இருக்கும், அதற்கு ஏற்றார் போலதான் நம் பதில் இருக்கும்.


    3) ஒற்றை வார்த்தையில் பதில் சொல்பவர்களின் மனம் எதை யோசிக்கும்?//

    மேல் கொண்டு இவரிடம் என்ன பேச்சு? போதும் என்று யோசிக்கும்

    4) விளம்பரங்களைப் பார்த்துப் பொருட்களைத் தேர்வு செய்யும்/வாங்கும் வழக்கம் உண்டா?

    சில நேரங்களில் விளம்பரத்தைப்பார்த்து அதை ஏற்கனவே வாங்கி இருப்பவரிடம் அது எப்படி நல்லதா என்று கேட்டு வாங்கி இருக்கிறோம். (மிக்ஸி, கிரைண்டர் போன்றவை)

    5) பலர் திருமண வாழ்க்கையை பற்றி ஜோக் அடிக்கிறார்கள். ஆனால் தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் ஆகவில்லை என்றால் மிகவும் கவலைப்படுகிறார்கள். இது ஏன்?//
    திருமண வாழ்க்கையை ஜோக் அடிப்பவர்கள் கவலையை மறக்க அல்லது மறைக்க இப்படி செய்யலாம்.

    பதிலளிநீக்கு
  21. KGG சார் பக்கம் இளமைகால நினைவுகள் அருமை. படமும் நன்றாக இருக்கிறது.

    சிறுவர்கள் விளையாட்டில் இந்த டயர் வண்டி ஓட்டும் விளையாட்டு இளமை

    //கடைக்குப் போகணும், உன்னுடைய வண்டியை எடுத்துக்கொண்டு போய் வருகிறேன். சாவி எங்கே?" என்று என்னிடம் கேட்டான்.

    " வண்டிக்குப் பக்கத்திலேயே இருக்கு " என்று நான் அவனிடம் சொன்னேன்.//

    ரசித்தேன். பசங்க படத்தில் இது போல வண்டி ஓட்டி செல்வதை காட்டுவார்கள்.

    பதிலளிநீக்கு
  22. அப்பாதுரை சார் பக்கத்தில் அவர் சொன்ன ஹம்னா சபர் வாழ்க்கை கதை போல தான் பல பெண்களின் வாழ்க்கை இருக்கிறது.ஹம்னா பாட்டிபோல எல்லா பெண்களுக்கும் பாட்டி கிடைத்தால் விரும்பாத வாழ்க்கையிலிருந்து தப்பிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  23. சைக்கிள் டயர் நிறைய ஓஒட்டிருக்கிறேண். அது போல இரு சக்கர வாகனம் 4 சக்கர வாகன டயர்களும் ஓட்டியிருக்கிறேன். 4 சக்கர வாகனத்தின் டயர தூக்குவதே கஷ்டமா இருக்கும். அதெல்லாம் ஒரு காலம்.

    இதில் ரேஸ் கூட வைத்து விளையாடியதுண்டு. ஊரில்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லாடி கீதா நீங்கதானா! நான் அந்தக் காலத்தில் பெண்கள் டயர் ஓட்டி பார்த்தது இல்லை.

      நீக்கு
  24. ஹம்னா சபர் - நெகிழ்ச்சி. ஒரு பக்கம் வருத்தம் ஏற்பட்டாலும் மற்றொரு பக்கம் பரவால்ல அவங்களுக்கு ஒரு பாட்டி...இப்ப நல்ல பணி.

    ஆஃப்கானில் இப்பவும் பெண்கள் தப்பிக்க முடியாமல் துன்புறுகிறார்களாமே....அப்படி இல்லாம இவங்க்ளுக்கு பாட்டி அதுவும் தைரியமா இருந்ததுனால் தப்பிச்சுப் போக முடிஞ்சுச்சு இப்படி ஒரு பாட்டி இருந்தா எல்லாருக்கும் நல்லாருக்கும்,

    கீதா

    பதிலளிநீக்கு
  25. 1) அமாவாசை வந்ததும் பவுர்ணமி எங்கே போகிறது ?
    01) டே டூட்டி நபர் வேலைக்கு ஜாய்ண்ட் நைட் டூட்டி நபர் தூங்கி விடுவார்.

    2) ஒரே கேள்வியை, உங்களிடம் வெவ்வேறு ஆட்கள் கேட்டால், கேட்பவரைப் பொருத்து உங்கள் பதில் மாறுமா ?
    02) ஆம் மோதிலால் நேரு கேட்டால் பதில் ஒரு மாதிரியும், மோதி கேட்டால் வேறு மாதிரியும் பதில் சொல்வார் மாதுரி தீட்சித்.

    3) ஒற்றை வார்த்தையில் பதில் சொல்பவர்களின் மனம் எதை யோசிக்கும் ?
    03) ஒற்றை வார்த்தையைத்தான்.

    4) விளம்பரங்களைப் பார்த்துப் பொருட்களைத் தேர்வு செய்யும்/வாங்கும் வழக்கம் உண்டா ?
    04) நான் இயன்றவரை வாங்க மாட்டேன்.

    5) பலர் திருமண வாழ்க்கையை பற்றி ஜோக் அடிக்கிறார்கள். ஆனால் தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் ஆகவில்லை என்றால் மிகவும் கவலைப்படுகிறார்கள். இது ஏன் ?
    05) இது ஆதாம்-ஏவாள் தொடங்கி வைத்த விடயம் ஜி.

    பதிலளிநீக்கு
  26. @ கௌதம் ஜி..

    ///வைத்தீஸ்வரன் கோயில் பஞ்ச மூர்த்திகளில் அங்காரகனை மறந்துவிட்டீர்களே!..///

    பஞ்ச மூர்த்தி எழுந்தருளும் போது ஐந்தாவதாக சண்டிகேஸ்வரர் தான்..

    இப்போது செவ்வாய் தலம்/ கோயில் என்றே சொல்கின்றனர்..

    இனி வரும் காலங்களில் எப்படியோ...

    தமிழக கோயில்களின் தலபுராணங்கள்
    காலத்துக்கு ஏற்றவாறு மாற்றத்துக்குள்ளாக இருக்கின்றனவாம்..
    தெரிந்து கொள்ளுங்கள்..

    பதிலளிநீக்கு
  27. சிறப்பான புதன் கிழமைப் பதிவு..

    எனக்குத் தான் விவரமாக கருத்துரைக்க முடியவில்லை..

    பதிலளிநீக்கு
  28. சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
    வெல்லும்சொல் இன்மை அறிந்து

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!