சனி, 23 டிசம்பர், 2023

சிங்கப்பெண் சுதா, ஸ்ரீவைகுண்டம் தெய்வங்கள் மற்றும் நான் படிச்ச கதை

 



================================================================================================



==============================================================================================


=========================================================================================================



 நான் படிச்ச கதை

தேன் மாம்பழம்

வைக்கம் முகம்மது பஷீர்

தமிழில்சுகுமாரன்


 அபிமுகம்

சமீப காலமாக இப்பகுதியில் கதையைக் காட்டிலும் கதையாசியர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டதை  கவனித்திருப்பீர்கள். அதிகம் பிரபலம் அடையாத  ஆசிரியர்களின்  படைப்புகளே இப்பகுதியில் இடம் பெற்றதையும் கவனித்திருக்கலாம். பஷீர்  மலையாளத்தில் மிகவும் பிரபலம் என்றாலும் சாதாரண தமிழ் வாசகர்களுக்கு மிகவும் புதியவர். ஆகவே அவரைப் பற்றிய விவரங்கள் நிறைய  இங்கே  தரப்பட்டுள்ளது.

ஆசிரியர் வாழ்க்கைக் குறிப்பு

பேப்பூர் சுல்தான், மலையாளத்தின் சுஃபி என்றறியப்படும் பஷீர் 1908இல் தலையோலப்பறம்பில்  அப்துர் ரஹ்மானுக்கும் குஞ்சாத்தும்மாவிற்கும் முதல் மகனாக பிறந்தார். துவக்கக் கல்வியை பிறந்த ஊரான தலையோலப்பறம்பிலும் பின்னர் மேற்படிப்பை வைக்கத்திலும் தொடர்ந்தார். அச்சமயத்தில் வைக்கம் சத்தியாகிரஹத்தில் பங்கேற்க வந்த காந்திஜியை நேரில் கண்டு காந்தீயவாதியானார். 

1930 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரஹத்தில் கலந்து கொள்ள மலபார்  சென்ற அவர் கைது செய்யப்பட்டு 3 மாத சிறை தண்டனை  அனுபவித்தார். அதன் பின் உஜ்ஜீவனம் என்ற பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான ஒரு பத்திரிகையில் ஆசிரியர் ஆனார். குற்றம் சாட்டப்பட்டு கைது வாரண்ட் புறப்பிக்கப்பட்டதால் தலை  மறைவானார். 

1931 முதல் 1937 வரை அன்றைய இந்தியாவில் நாடோடியாக சுஃபி துறவியாக அலைந்து திரிந்தார். அஜ்மீர், பெஷாவர், காஷ்மீர் என்று பல இடங்களும் சுற்றித்திரிந்து பட்டினி கிடந்து, கிடைத்த  வேலைகளை செய்து எப்படியோ ஜீவனம் நடத்தி கடைசியில் கொச்சி வந்து சேர்ந்தார். இக்காலகட்டத்தில் கப்பல் கலாசி, சமையற்காரர், தெருவிற்பனையாளர், சுமைதூக்கும் தொழிலாளர், மாஜிக் நிபுணரின் உதவியாளர்  என 15க்கும் மேற்பட்ட  வேலைகளைச் செய்தார். இந்த அனுபவங்கள் பிற்காலத்தில்  கதையாக வெளி வந்தன.  

1937 முதல் திருவனந்தபுரத்தில் நவஜீவன் என்ற வார இதழில் கதைகள் எழுதி வந்தார். பிரிட்டிஷ் அரசுக்கு விரோதமாக கட்டுரைகள் எழுதியதால் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் மத்திய சிறையில் இரண்டரை ஆண்டுகள் அடைக்கப்பட்டார். சிறையில் இருக்கும்போது சில சிறந்த படைப்புகளை எழுதினார். 1944 இல் சிறையில் இருந்து வெளிவந்தபின் சொந்த பதிப்பகம் வைத்து எழுதிய புத்தகங்களை வெளியிட்டு அவரே வீடு வீடாக சென்று விற்பனை செய்தார். 

1958இல் தனது 50ஆவது வயதில் பாத்திமா என்ற 20 வயது பெண் எழுத்தாளரை மணந்தார். இவர்களுக்கு அனீஸ் என்ற மகனும் ஷாஹினா என்ற மகளும் பிறந்தனர். இடைக்காலத்தில் இரண்டு முறை மனநோய் சிகிச்சைக்காக ஆசுபத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் புகழ்பெற்ற மங்களோதயம் பதிப்பகம் இவரது நூல்களை வெளியிடத் தொடங்கியதும் பஷீர் புகழ்பெற்றார். என்றாலும் 1960 முதல் 1970கல் வரை பஷீரின் கடின வாழ்க்கை காலம் எனலாம். 

சாகித்ய பிரவர்த்தகச் சங்கம் பொறுப்பில் இருந்த டொமினிக் சாக்கோ கிழக்கேமுறி 1974-ல் வெளியேறி டி.சி.புக்ஸ் என்னும் நிறுவனத்தை தொடங்கினார். அவருடைய முயற்சியால் பஷீர் பேருரு எடுத்தார். டி.சி. பஷீரின் படைப்புகளை சிறிய நூல்களாக ஒரு ரூபாய் விலையில் வெளியிட்டார். 

பஷீர் பிற்காலத்தில் எழுதிய படைப்புகள் அவ்வளவாக சோபிக்கவில்லை. ஆனாலும் அவர் மலையாள இலக்கிய வரலாற்றில் ஒரு சிறப்பான இடம் பிடித்தார். 1994இல் அவரது பூவலக வாழ்க்கை முடிந்தது. 

பஷீரின் படைப்புகள்

ஷீரின் படைப்புகளை  புதினம் என்ற வகையிலோ அல்லது சிறுகதை என்ற வகையிலோ சேர்க்க முடியாது. அக்காலகட்டத்தில் தமிழில் வெளியான மாத நாவல்கள் போன்றவை அவை. 

பால்யகால சகி, நீலவெளிச்சம், என்ற அப்பூப்பனு ஒரு ஆன உண்டாயிருன்னு, பிரேமலேஹனம், மதிலுகள், பாத்தும்மாயுட ஆடு, சப்தங்கள், ஜன்மதினம், ஆனவாரியும் பொன்குரிசும் பொன்றவை சிறந்தபடைப்புகளாகக் கருதப்படுகின்றன. 

பால்யகால சகி, பிரேமலேஹனம், நீலவெளிச்சம், மதிலுகள், பூவன் பழம் ஆகிய கதைகள் திரைப்படங்களாகவும் வெற்றி பெற்றவை. பார்கவி நிலையம் இருமுறை இருவேறு இயக்குனர்களின் இயக்கத்தில் வெளியானது. 

பஷீரின் படைப்புகளின் சிறப்பு 

பஷீர் ஒரு புரட்சியாளர். இடது சாரி சிந்தனையும் அதிகம் கொண்டவர். காந்தியவாதியாக இருந்தபோதிலும் பகத் சிங், சுகதேவ் போன்றவர்களை பின்பற்றி தீவிர வாதத்தை ஆதரித்தவர். இக்கொள்கைகள் அவரது படைப்புகளிளும் வெளிப்பட்டன. 

எப்படி ஆதித்தனார் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை தினத்தந்தி மூலம் சாதாரண மக்களிடையில் உண்டாக்கினாரோ, அதே போன்று பஷீர் மலையாள இலக்கியத்தை பாமர மக்களிடம் கொண்டு சேர்த்தார். பாமரருக்காக, பாமரமொழியில் பாமரர்களின் கதையை பாமரரால் வாங்கக்கூடிய விலையில் வெளியிட்டமையால் அவருடைய கதைகள் மக்களிடையே பிரபலம் ஆயின. 

பஷீரின் சிறப்பு அவர் கூற விரும்பியதை அப்படியே எழுதுவார். இலக்கணத்தைப் பற்றியெல்லாம் கவலைப் படமாட்டார். 

“பஷீர் எழுத்தாளரே அல்ல, கதைசொல்லி. பஷீரின் குரலில் அல்லாமல் அவரது கதைகளை நாம் நினைவு கூரவே கூட முடிவதில்லை. வாசகன் பஷீரைத் தொடர்ந்து பார்த்தபடியே இருக்கிறான். பஷீர் திருடனாக, நாடோடியாக, சமையற்காரராக, கைஜோசியக்கரராக மாறுவேடமிட்டு அவன் முன் வந்துகொண்டே இருக்கிறார். மெல்ல மெல்ல அவன் நெஞ்சில் ஒரு படிமமாக ஆகி நாள் செல்லச் செல்லத் தொன்ம வடிவம் ஆகிறார். …..

பஷீரின் கதைகள் வலுவான மையக்கரு கொண்டவை அல்ல. திட்டவட்டமான கதைக்கட்டுமானம் உடையவும் அல்ல. ஆழமுள்ள கதைமாந்தரும் அவர்கள் சுமக்கும் மதிப்பீடுகளும் அம்மதிப்பீடுகள் மோதும் நாடகீயத் தருணங்களும் அவற்றில் இல்லை. புனைவுத்தருணங்கள் கவித்துவ தரிசனத்தின் ஒளியுடனோ தத்துவ தரிசனத்தின் உக்கிரம் கொண்டோ வெளிப்படுவதில்லை.”

“மலையாள மொழியைக் கற்கத் தொடங்கும் வாசகன் முதலில் வாசிக்கக்கூடிய எழுத்து பஷீருடையது. மிகமிக எளிமையான நடை."

Jeyamohan.  (பஷீருக்கு ஒவ்வாத நடையில் பஷீரை விமரிசிக்கிறார் ஜெயமோகன்) 

தேன் மா என்ற இக்கதை மிகச்சிறப்பானது என்று சொல்ல முடியாது. ஆனால் பஷீரின் எழுத்து முறைக்கு ஒரு உதாரணம். நேர்கோட்டில் செல்லும். பஷீர், கதையை சாதாரண   மொழியில் நேரில் சம்சாரிப்பார்.  

“அல்ஹம்துளில்ல”….“மகத்தான இறைவனுக்கு நன்றி”  என்ற சொற்றொடர் ஒரு நூலிழையாக இக்கதையை தொகுப்பதைக் காணலாம். 

தேன் மாம்பழம்

வைக்கம் முகம்மது பஷீர்

தமிழில்: சுகுமாரன்

'நீங்கள் கேள்விப்பட்டது எதுவும் சரியல்ல. நான் எந்த மரத்தையும் ஆராதிப்பதில்லை. எந்தப் படைப்பையும். ஆனால் இந்தத் தேன்மாவுடன் எனக்குப் பிரத்தியேக அன்பு உண்டு. என்னுடைய மனைவி அஸ்மாவுக்கும் அன்பு உண்டு. மிக மகத்தான ஒரு செய்கையின் அடையாளம் இந்தத் தேன்மா. அதை நான் விளக்கமாகச் சொல்கிறேன்’

 

நாங்கள் அந்த மாமரத்தடியில்தான் இருந்தோம். மரத்தில் ஏராளமான மாங்காய்கள் இருந்தன. மாமரத்தின் அடியில் அகலமான வட்டத்தில் வெள்ளை மணல் பரப்பியிருந்தது. அதைச் சுற்றி இரண்டு வரிசை செங்கல் கட்டு வைத்து அதற்குள் வட்டமாக ரோஜாச் செடிகள் நடப்பட்டிருந்தன. பல நிறங்களிலுள்ள ஏராளமான பூக்கள். அவர் பெயர் ரஷீத். மனைவி மகனுடன் பக்கத்திலிருக்கிற வீட்டில் வசிக்கிறார். கணவனும் மனைவியும் பக்கத்திலிருக்கும் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள். அவருடைய மனைவி மாம்பழத்தைச் சீவித் துண்டாக்கித் தட்டில் போட்டு, பதினாறு வயது மகன் கையில் கொடுத்துவிட்டிருந்தார். நாங்கள் அதைத் தின்றோம். தேன்போலத் தித்திப்பு.

"மாம்பழம் எப்படி?"

"தேன் மாம்பழந்தான்"

"இதை நாம் தின்ன முடிவதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது"

"இந்த மாமரத்தை நட்டது யார்?"

"நானும் அஸ்மாவும் சேர்ந்துதான் இதை இங்கே நட்டோம். மாமரம் பற்றிய விவரங்களை நான் சொல்லுகிறேன். நிறையப் பேரிடம் இதைச் சொல்லியிருக்கிறேன். கேட்டவர்கள் சம்பவங்களையெல்லாம் மறந்துவிட்டு விருட்ச ஆராதனை ஆக்கிவிட்டார்கள். இதில் ஒரு ஆராதனையுமில்லை. மகத்தான ஒரு செய்கையின் நினைவு மட்டுமே.

என்னுடைய தம்பி போலீஸ் இன்ஸ்பெக்டர். இங்கேயிருந்து எழுபத்தைந்து மைல் தூரத்திலிருக்கிற ஒரு பட்டணத்தில் அன்றைக்கு வேலை செய்துகொண்டிருந்தான். நான் தம்பியைப் பார்க்கப் போயிருந்தேன். அவன் கூடத் தங்கியிருந்தேன். பெரிய பட்டணமில்லை. இருந்தாலும் சும்மா சுற்றிப் பார்க்கப் போனேன். நல்ல வேனிற் காலம். சுடு காற்று வீசிக்கொண்டிருந்தது. தண்ணீருக்குத் தட்டுப்பாடாக இருந்தது. நான் அப்படி நடந்துகொண்டிருந்தபோது, இடை வழியில் மரத்தின் நிழலில் ஒரு கிழவர் சோர்ந்து கிடப்பதைப் பார்த்தேன். தாடியும் முடியும் நீளமாக வளர்ந்திருந்தன. எண்பது வயது இருக்குமென்று பட்டது. ரொம்பவே சோர்ந்து சாகிற நிலைமை. என்னைப் பார்த்ததும் 'அல்ஹம் துலில்லா, மக்களே, தண்ணீர்' என்றார்.

நான் பக்கத்தில் தென்பட்ட வீட்டுக்குப்போய் வராந்தாவில் உட்கார்ந்து பத்திரிகை படித்துக்கொண்டிருந்த இளம் பெண்ணிடம் தண்ணீர் வேண்டுமென்று கேட்டேன். அழகான அந்த இளம் பெண் உள்ளே போய்ச் செம்பில் தண்ணீர் கொண்டு வந்தாள். நான் அதை வாங்கிக்கொண்டு நடந்ததும் செம்பையும் ஏன் எடுத்துக்கொண்டு போகிறேன் என்று கேட்டாள். வழியில் ஒரு ஆள் விழுந்து கிடக்கிறார். அவருக்குக் குடிக்கத்தான் என்றேன். இளம்பெண்ணும் என்னுடன் வந்தாள். தண்ணீரைக் கிழவருக்குக் கொடுத்தேன். கிழவர் மெதுவாக எழுந்து உட்கார்ந்தார். பிறகு அற்புதகரமான ஒரு செயலைச் செய்தார். செம்புத் தண்ணீருடன் எழுந்து பாதையோரத்தில் வாடித் துவண்டு நின்ற மாங்கன்றுக்கு அடியில் பாதித் தண்ணீரை பிஸ்மி சொல்லி ஊற்றினார். மாம்பழம் தின்ற ஏதோ வழிப் போக்கன் வீசியெறிந்த கொட்டை. அது துளிர்த்திருந்தது. வேர்கள் மண்ணுக்கு மேலாக இருந்தன. கிழவர் மர நிழலில் வந்து உட்கார்ந்து மிச்சமிருந்த தண்ணீரை பிஸ்மி சொல்லிக் குடித்தார்.. 'அல்ஹம் துலில்லா' என்று இறைவனைத் துதித்துவிட்டுச் சொன்னார்: 'என் பெயர் யூசுப் சித்திக். வயசு எண்பது தாண்டிவிட்டது. சொந்தக்காரர்கள் யாருமில்லை. பக்கீராக உலகம் சுற்றிக்கொண்டிருந்தேன். நான் சாகப்போகிறேன். உங்கள் இரண்டு பேரின் பெயர்கள் என்ன?'

நான் சொன்னேன்: 'என் பெயர் ரஷீத். பள்ளி ஆசிரியர்'. இளம் பெண் சொன்னாள்: 'என் பெயர் அஸ்மா. பள்ளி ஆசிரியை'. 'நம் எல்லாரையும் அல்லாஹ் ஆசீர்வதிப்பாராக' என்று சொல்லிவிட்டுக் கிழவர் படுத்தார். எங்கள் கண்ணெதிரில் யூசுப் சித்திக் இறந்து போனார். அஸ்மாவை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு நான் போய்த் தம்பியிடம் விவரம் சொன்னேன். ஒரு வேனைக் கொண்டுவந்தோம். சடலத்தை மசூதிக்குக் கொண்டுபோய்க் குளிப்பாட்டினோம். புதுக்கோடியில் மூடி கபரடக்கம் செய்தோம். கிழவரின் பையில் ஆறு ரூபாய் இருந்தது.

நானும் அஸ்மாவும் அதன் கூட ஐந்தைந்து ரூபாய் போட்டு மிட்டாய் வாங்கினோம். பள்ளிக் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காக மிட்டாயை அஸ்மாவிடம் ஒப்படைத்தேன். பிற்பாடு அஸ்மாவைத் திருமணம் செய்துகொண்டேன். அஸ்மா மாஞ்செடிக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள். இந்த வீட்டைக் கட்டிக் குடிவருவதற்கு முன்பு அந்த மாஞ்செடியை வேர் அறுபடாமல் பறித்து ஒரு கோணித் துண்டில் மண்ணைப் போட்டு நானும் அஸ்மாவும் நீரூற்றினோம். இரண்டு மூன்று நாள்கள் மாங்கன்று அஸ்மாவின் படுக்கையறை மூலையில் சாய்ந்து நின்றிருந்தது. அதை இங்கே கொண்டுவந்து நானும் அஸ்மாவும் சேர்ந்து குழிதோண்டிக் காய்ந்த சாணமும் சாம்பலும் போட்டு நட்டுவைத்துத் தண்ணீர் விட்டோம். புதிய இலைகள் துளிர்த்து ஜோரானதும் எலும்புத் தூளும் பசுந்தழை உரமும் போட்டோம். அப்படியாக அந்த மாமரம் இப்படி ஆனது.

'மனோகரமான சம்பவம். சாவதற்குமுன் பேச முடியாத ஒரு மாங்கன்றுக்கு அந்தக் கிழவர் தண்ணீர் விட்டார். நான் இதை ஞாபகத்தில் வைத்திருப்பேன்.' நான் விடைபெற்றுக்கொண்டு நடந்தபோது பின்னாலிருந்து அழைப்பு. நான் திரும்பினேன்.

ரஷீதின் மகன் ஒரு காகிதத்தில் பொட்டலத்தில் கட்டிய நான்கு மாம்பழங்களைக் கொடுத்துவிட்டுச் சொன்னான்: 'பெண்டாட்டி பிள்ளைகளுக்குக் கொடுக்கச் சொன்னார்கள்'

'மோன், படிக்கிறாயா?'

'காலேஜில் படிக்கிறேன்'

'பேரென்ன?'

'யூசுப் சித்திக்'

'யூசுப் சித்திக்?'

'ஆமாம். யூசுப் சித்திக்'

இங்கே க்ளிக்கவும் கதையின் சுட்டி 

இங்கே யு டியூபில் பார்க்கலாம். 


11 கருத்துகள்:

  1. எவ்வுயிரும் தன் உயிர் போல் போற்றத்தக்கது. கிடைப்பதை பகிர்ந்து உண்ணுதல் சாலச்சிறந்தது.

    பெரியவர் 'செம்புத் தண்ணீருடன் எழுந்து பாதையோரத்தில் வாடித் துவண்டு நின்ற மாங்கன்றுக்கு அடியில் பாதித் தண்ணீரை பிஸ்மி சொல்லி ஊற்றினார். ' இச்செய்கை வள்ளலாரின் "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்ற வாக்கை நினைவூட்டியது.

    பிஸ்மில்லா என்பதன் சுருக்கமே பிஸ்மி.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணா வள்ளலார் எனக்கும் நினைவுக்கு வந்தா ர.

      கீதா

      நீக்கு
  2. தென்னக வெள்ளத்தில் தங்கள் உயிரையும் பணயம் வைத்து தண்ணீரில் சிக்கித் தவித்த மக்களுக்கு உதவிய அத்தனை பேருக்கும் நம் வாழ்த்துகளும் பாராட்டுகளும். ரயிலில் பயணம் செய்து வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்ட உணவு ம் அத்தியாவசிய பொருட்களும் கொடுத்து உதவிய கிராமத்து மக்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. மனதார வாழ்த்துவோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. தேன் மாம்பழம் கதை மனித நேயத்தைச் சொல்லுவதாக எனக்குப் பட்டது. எந்த ஒரு சம்பவமும் புனைகதைகளைவிட உயர்ந்தது

    பதிலளிநீக்கு
  4. மனித நேயம் இறந்துவிட்டது அப்படினனு நாம சொல்லிக் கொண்டு இருக்கிறோம் ஆனால் ஒவ்வொரு புயலும் மழையும் வெள்ளமும் மனிதநேயம் இன்னும் சாகவில்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

    மனித நேயம் சொல்கிறது......நான் இருக்கத்தான் செய்கிறேன் ஆனா உங்க கண்ணுக்கு தான் அது பட மாட்டேங்குது ஏன்னா
    வக்கத்த மீடியாக்கள் பலதும் எப்ப பாரு எதிர்மறை செய்திகளையே குடுத்து கொடுத்து மக்களுடைய மனச பாழாக்குது அப்படின்னு இது வந்து மறைமுகமாக சொல்வது போல் எனக்குத் தோன்றுகிறது.

    எனவே வேண்டாத விஷயங்களை பார்த்து ரொம்ப மனச கெடுத்துக்குறத விட நல்லதை பார்த்து பேசி பகிர்ந்துக்குவோம்.

    எபியின் சனிக்கிழமை பாசிட்டிவ் செய்திகளுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இன்றைய கதை, இன்றைய பாசிட்டிவ் செய்திகளுக்கு ரொம்ப பொருத்தமான கதை. எனக்கு வைக்கம் பஷீரின் கதைகள் ரொம்ப பிடிக்கும். எளிய ஆனால் நம் மனதில் ஏ தேனும் ஒரு ஆழமான செய்தியைச் சொல்லிச் செல்லும். மெல்லிய உணர்வுகளைச் சொல்லும். இதில், தேன் மாம்பழம்.கதையில் செடிக்கும் உயிர் உண்டு உணர்வுண்டு, அந்தச் செடியின் மூலம் நேயத்தையும் கூடவே விதைத்துள்ளார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலையில் குரல் வழி க்ருத்து இட்டேன் அதில் ஒரு கருத்து விட்டுப் போச்சு, கதையின் முடிவில் ரஷீதின் மகன் சொல்லும் பெயர் அதுதான் ஹைலைட்..., பெரியவர் விதைத்த அந்த நேயத்தை ரஷீக் தன்மகனுக்கும் கடத்துவதாக அமைகிறது கதை. இத்தனைக்கும் அந்த முதியவருக்கும் ரஷீதிற்கும் எந்தவித பந்தம் இல்லை. இதுதான்...கதையின் உள்மாந்திரம் இப்படியான மனதோடு இழையும் மெல்லிய உணர்வு மிக்க ஒரு நேயம்...அன்பு....மின்சாரம் கடப்பது போல கடக்கிறது.....

      இதைப் போய் இந்த அழகை ஜெமோ என்னவோ கருத்து
      சொல்லியிருக்கிறார்.

      கீதா

      நீக்கு
  6. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    நாரணன் அருளால் நலமே விளைக..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  7. செய்திகள் அருமை. கடமை, மனிதநேயம் இவற்றை சொல்கிறது.

    பதிலளிநீக்கு
  8. செய்திகள் அருமை. கடமை, மனிதநேயம் இவற்றை சொல்கிறது.. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  9. கதை மிக அருமை. நன்றாக இருக்கிறது.ரஷீத் தன் மகனுக்கு அந்த பெரியவரின் பெயரை வைத்து இருப்பது பெரியவரின் நினைவை போற்றவும் அவர் போல மனித நேயம் மிக்கவனாக மகன் இருக்க வேண்டும் என்பதாலும் இருக்கலாம்.

    அருமையான கதை தேன்மாம்பழம்.
    கதை பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!