செவ்வாய், 12 டிசம்பர், 2023

சிறுகதை : சத்ரு சங்காரம் - துரை செல்வராஜூ

 சத்ரு சங்காரம்

துரை  செல்வராஜூ 

*** *** *** *** ***

திருமுருகன் நகர்..


நெடுஞ்சாலைக்கு சற்றே உள்ளடக்கம்.. கோயில் பூங்கா - என்று அழகான வடிவமைப்பு..

பெரும்பாலும் இது மாதிரி புதிதாக உருவாகின்ற நகர்களில் பிள்ளையார் கோயில்கள் தான் அமையும்.. ஆனால், இங்கே அமைந்திருப்பதோ பால தண்டாயுதபாணி கோயில்.. 


மனிதர்களின் வாழ்க்கையை வயலும் வரப்பும் நடத்திய காலம் போய் விட - வயல்களின் வாழ்க்கையை மனிதர்கள் நடத்துகின்ற காலமாகி விட்டது.. 

மக்கள் எல்லாரும் மக்களுக்கு வைத்தியம்  பார்க்க முனைந்து விட்டனர்..

இயற்கையும் மாறி மாறி ஆட்டம் காட்டுவதால் ஆற்றில் தண்ணீர் சரியாக வருவதில்லை.. மேலும் பல்வேறு பிரச்சினைகள்.. எல்லாவற்றையும் உத்தேசித்த பலர் விவசாயத்தில் இருந்து வெளியேறி விட்டனர்..

புண்ணியங்கள் சேரட்டும் என்று  பண்ணையார் ஒருவர் - முருகன் கோயிலைக் கட்டிக் கொடுத்ததோடு தன்னுடைய நிலத்தை மனைப் பிரிவுகளாக மாற்றி விற்று விட்டார்..

இப்படி உருவான கோயிலில் நின்று கொண்ட முருகனும் எல்லாருக்கும் நல்லது செய்து வருகின்றான்.. 

அதனால் தான்  ஐப்பசித் தூறலையும் பொருட்படுத்தாமல் இவ்வளவு கூட்டம்...

புளிய மரங்கள் அற்றதான அகன்ற சாலையில் ஏகப்பட்ட வாகனங்கள்.. மழை நேரத்திலும் சீறிப் பாய்ந்து கொண்டு இருக்கின்றன..

கோயிலின் முன்மண்டபத்தின் தூண் ஓரமாக அமர்ந்திருக்கின்றேன்.. தீபாவளிக் கொண்டாட்டத்தின் வீரப் பிரதாபங்களைப் பேசிக் கொண்டு இன்னும் பலர்..

இன்று கந்த சஷ்டி இரண்டாம் நாள்..

யாக பூஜைகள் முடிந்து கலசங்கள் புறப்பாடாகி மூலஸ்தானம் சுற்றி வந்து திருமுழுக்கும் ஆகி அலங்காரத்திற்காக திரையிட்டிருக்கின்றனர்..

கோயில் வளாகம் முழுவதும் பூக்களின் வாசமும் ஏலாதி திரவியங்களின் நறுமணமும்..

அரட்டையாளர்களைத் தவிர்த்து மற்றவர்கள் சந்நிதித் திரையை நோக்கியிருந்தனர்...

இடப்பக்கமாக சிறிய பரபரப்பு.. திரும்பிப் பார்த்தேன்.. கோயிலுக்கு வந்திருக்கும் சிலர் - வாகாக அமர்வதற்கு இடம் தேடிட - எனக்குப் பக்கத்தில் இளம் பெண் ஒருத்தி அரக்கப் பரக்க வந்தமர்ந்தாள்.. அர்ச்சனைக் கூடை ஒன்று அவள் கையில்.. 

" உங்களுக்கு ஒன்னும் இடைஞ்சல் இல்லையே மேடம்?... "

" மேடமா!.. " - சிரிப்பு எனக்குள்..

" நீ உட்காரும்மா.. ஒன்னும் பிரச்னை இல்லை.. " - என்றேன்..

சில விநாடிகளில் அந்தப் பெண் கேட்டாள்..

" அபிசேகம் முடிஞ்சதா மேடம்!.. "

" அபிஷேகம் ஆகி அலங்காரம் நடந்துட்டு இருக்கு.. " - என்றேன்...

" நேத்து என்ன அவ்ளோ நேரம் மந்திரம் சொன்னாங்க?.. I felt bored.. இன்னிக்கும் அது மாதிரி சொல்வாங்களா...  நான் அதுக்குள்ள Temple round  பண்ணிட்டு வர்றேன்.. என்றபடி எழுந்தாள்..

நான் சட்டென அவள் கையைப் பிடித்துக் கொண்டு - " சந்நிதி திரை போட்டு இருக்கறப்போ பிரதட்சணம் செய்யக்கூடாது மா.. " - என்றேன்..

" ஓ.. அப்படியா.. I'm  sorry.. " -  அமர்ந்து கொண்டாள்..

"  I don't  know anything about this system.. எனக்கு எதுவும் தெரியாது.. " 
சின்ன புன்னகை அவளிடத்தில்..

சந்நிதிக்குள் கை மணியின் ஓசை கேட்டது.. அனைவரிடத்திலும் பரபரப்பு..  சரேலென திரை விலக அடுக்கு தீப த்தின் ஒளியில் ஐயனின் தரிசனம்.. கோயில் மணி முழங்கிட இயந்திர மேளதாளமும் சேர்ந்து கொண்டது.. 
அஷ்டோத்திர நாமாவளிக்குப் பிறகு பஞ்ச தீப ஆரத்தி.. 

பெரிய தாம்பாளத்தில் வைத்து பஞ்ச தீபத்தை எடுத்து வந்த இளைஞன் ஐயரின் மகன் என்று தெரிந்தது.. தொடர்ந்து திருநீறு வழங்கி வந்தார் ஐயர்..

கூட்டம் முண்டியடித்துக் கொள்ள - அந்தப் பெண் என்னுடன் ஒதுங்கி நின்று விபூதி பெற்றுக் கொண்டு சந்நிதியை நெருங்கி கையில் இருந்த அர்ச்சனைக் கூடையைக் கொடுத்தாள்..

" யார் பேருக்கு அர்ச்சனை?.. "

" ராம் பிரசாத் ஹஸ்தம்.. ஹேமா.. உத்திரட்டாதி..  சிவ கோத்திரம்.. "

"  இவ்வளவு விவரம் போதுமே.. ஆனாலும் எதுவும் தெரியாதுன்னு சொல்றாளே..  இது எப்படி சாத்தியம்?.. " எனக்குள் வியப்பு..

" ஓம்... ராம் பிரசாத் நாம தேயஸ்ய... "

அர்ச்ச்னை சமர்ப்பித்து விட்டு ஐயர் பிரசாதம் கொடுத்தார்..

தூறலையும் பொருட்படுத்தாமல் பிரகாரத்தில் ஒருவரை ஒருவர் நெரித்துக் கொண்டனர் மக்கள்.. அங்கே  மண்டபத்தில் உபயதாரர்களின் சித்ரான்ன விநியோகம்.. 

' வரிசை.. வரிசை..' - என்று சொல்லிக் கொண்டிருந்தாலும்  வரிசை அமைய வில்லை.. அமைத்துக் கொள்ள வில்லை..

இந்தப் பெண் என்னுடன் நின்று கொண்டாள்... 

"  மேடம்.. இது ஏன் இவ்ளோ நேரம் மந்திரம் சொல்றாங்க?.. "

" அங்கே பெரியதா போர்டு வைச்சிருக்காங்களே.. பார்க்கலையா?.. "

" எனக்கு Tamil பேசவரும்.  படிக்கத் தெரியாது.. மேடம்!.. " 

" நீ எந்த ஊர் மா?... "

சொன்னாள்... 

" அந்த ஊர்ல பிறந்துமா தமிழ் தெரியலை!.. " -   ஆச்சரியத்துடன் நினைத்துக் கொண்டேன்..

" My school life was in English ..  இப்போ marriage ஆகி  இங்கே  வந்திருக்கேன்.. fourth  street.. "

" நாலாவது தெரு ன்னா யார் வீடு.. "

" புரொபசர் சந்தான கிருஷ்ணன்.. "

" அவங்க மருமகளா நீ.. என் மக அவர்கிட்ட தான் படிச்சா..  ஐயா நல்லா இருக்காங்களா.. "

" இருக்காங்க.. மேம்!.. "

" இங்கே நேற்றிலிருந்து ஆறு நாளைக்கு சத்ரு சங்கார யாகம்.. திரிசதி  அர்ச்சனை.. "

" That means.. "

" சத்ரு சங்காரம்.. எதிரிகளை ஜெயிக்கறதுக்கும்... "

" அப்போ border ல போய் மந்திரம் சொன்னா நமக்கு defense budget  மிச்சம் தானே.. " புன்னகைத்தாள்..

கூட்டம் மெதுவாகக் குறைந்து கொண்டிருந்தது..

" அப்படி இல்லை..  அர்த்தம் அப்படி இருந்தாலும் நமக்குச் சத்ரு நம்ம மனசுக்குள்ள இருக்குற கோபம், வெறுப்பு, கருமித்தனம், பேராசை, ஆணவம், அகம்பாவம் மாதிரியான கெட்ட குணங்கள் தான்.. இதுகளத் தான் நாம  சங்காரம் செய்யணும்..  கெட்ட குணம் எல்லாம் அழியணும்.. நல்ல அறிவு வரணும் ங்கறது தான் இந்த பூஜையோட நோக்கம்.. நமக்கு எதிரி நாமே தான்... அவன் அழியணும்  இவன் ஒழியணும் ன்னு இருந்தா ஊர் தாங்காது.. " 

" ஓ!.. நம்மை நாமே correct  பண்ணிக்கிறதா!..  correct பண்றது.. ன்னா இந்த காலத்து ல வேற meaning.. "

" நம்மை நாமே correct  பண்ணிக்கிட்டா மனசு ஸ்படிகம் crystal  மாதிரி ஆகிடுது.. அதுக்கப்புறம் spiritual star தான்!..

" ஓ!.. this is  very  first time.. I like your definition .. I feel something different.. " 

" திரிசதி அர்ச்சனை ந்னா முருகனைப் போற்றி முன்னூறு தரம் சொல்றது.. "

" English ல யும் print அடிச்சி போட்டிருக்கலாம்.. sanskrite புரியலை.. " 

" சில சம்பிரதாயங்கள் விஷயங்கள்  இப்படித்தான்..  கிரிக்கெட்ல அவன் சதம் அடிச்சிட்டான் னு சத்தம் போட்டால் மட்டும் புரியுதா.. "

" சதம்.. century!.. that means hundred!.. easy english.. " 

" வருஷக் கணக்கில் தமிழ் படிக்காம இருந்தா இப்படித் தான்!.. " - சிரித்தேன்..

அந்தப் பெண்ணும் சிரித்தாள்

பிரசாத மேடைக்கு வந்து விட்டோம்..  எங்களுக்கும் பாக்கு மட்டையில் பொங்கல் புளியோதரை வடை என்று நிறைவாகக் கிடைத்தது.. அபிஷேகப் பாலும் கிடைத்தது.. 

ஒரு ஓரமாக அமர்ந்து சாப்பிட்டோம்.. 

" எங்க சித்தப்பா சொன்னாங்க.. இந்த six day பூஜை miss பண்ண வேண்டாம்.. நல்லது நடக்கும்  ன்னு.. நான் ரொம்பவே நல்ல பொண்ணு.. ஆனா lazy... அதுக்கு மேல angry bird.. ok.. நாளைக்கு correct time க்கு வந்துடுவேன்.. முருகா.. இனிமே கோபத்தை reduce பண்ணிக் கொடுங்க ன்னு pray பண்ணிக்கறேன்..  கோபம் குறைந்தால் நல்லது தானே.. best of prayer .. நாளைக்கு meet பண்ணுவோம்.. thank you மா!..   முருகா.. My lord - give your blessing to all .." - என்றபடி கை கூப்பினாள்..

தூறல் நின்றிருந்தது.. 

***

49 கருத்துகள்:

  1. இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
    தெள்ளிய ராதலும் வேறு. .

    தமிழ் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு அன்பின் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  3. கதைச் சூழல் விவரிப்பு அழகிலேயே கதையை நகர்த்தி அதற்கு நடு மத்தியில் பொட்டுப் போல ஒரு கருத்தைப் பொதித்து வைத்து பொதித்து வைத்ததை மலர்த்திக் காட்டுவதையே கதை அம்சமாக்கி விடுவது உங்களுக்கே வாய்த்தத் திறமை.
    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி..

      நன்றி அண்ணா..

      நீக்கு
    2. தவறா நினைக்க வேண்டாம். சந்தேகத்துக்காக்க் கேட்கிறேன். தட்டச்சுத் தவறா இருக்கலாம். வாய்த்த திறமைனு தானே வரணும். அங்க ஒற்றெழுத்து வராதில்லையா ஜீவி சார்.

      நீக்கு
    3. பொதுவாக மனம் சொல்வச் சொல்ல
      அதுவே எழுத்துக்களாக வடிவெடுக்கும் எனக்கு. யோசித்து யோசித்து எழுதுவதில்லை. பின்னால் படித்துப் பார்க்கும் பொழுது
      தவறுகளையும் திருத்தங்களையும் மேற்கொள்வதுண்டு. அதே மாதிரி
      என் உச்சரிப்புக்கேற்ப
      ஒற்றெழுத்துகள் அதுவாக அமைந்து விடுவது தான், நெல்லை. தனிக் கவனம் கொள்வதில்லை.
      வாய்த்த -- திறமை
      இந்த இரண்டு சொற்களுக்கும் இடையே இடைவெளி விட்டு நான் உச்சரிப்பதில்லையாதலால் வாய்த்தத் திறமை என்று அமைந்திருக்கிறது.

      நீக்கு
    4. என் பதிலைத் தொடர்ந்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், நெல்லை?

      நீக்கு
    5. கேள்வி கேட்டு விட்டுப் போய் விடுவார் போலிருக்கு. என்ன பதில் சொல்லியிருப்பார் என்று மறுபடியும்
      வந்து பார்க்கும் ஆர்வம் இருக்காது போலும்.

      நீக்கு
    6. கேள்வி கேட்டு விட்டுப் போய் விடுவார் போலிருக்கு. என்ன பதில் சொல்லியிருப்பார் என்று மறுபடியும்
      வந்து பார்க்கும் ஆர்வம் இருக்காது போலும்.

      நீக்கு
  4. இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் கண் கவரும் படங்களுடன் எழிலூட்டிய சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.. நன்றி.

    முருகனைக் கண்டேன்..

    பதிலளிநீக்கு
  5. இந்தக் கதையில் பொதித்து வைத்திருந்தது சத்ரு
    சம்ஹாரம் என்ற வார்த்தை. நமக்கு வாழ்க்கையில் அவ்வப்போது தவிர்க்க முடியாமல் வாய்த்து விடும் எதிரிகளை எதிர் கொள்வதற்காக பிரயோகிக்கிற மந்திரம் போல மேலோட்டமாகத் தெரிவதை நம்ம மனசுக்குள்ளே இருக்கிற கோபம், துவேஷம், வெறுப்பு போன்ற கசடுகள் தாம் சத்ரு, அதைத் துடைத்து எறிந்து சம்ஹாரம் செய்வது தான் சத்ரு சம்ஹாரம் என்ற அருமையான விளக்கத்திற்கு கதை ரூபம் கொடுத்திருப்பது தான் தம்பியின் அசாத்திய திறமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. கடுகளவும் நெகட்டிவிட்டி இல்லாத கதைகள் செல்வாண்ணாவுடையவை.

      நீக்கு
    2. சத்ருக்களத் தெரிந்து கொள்வதற்காகவும் அவர்களை ஒழித்துக் கட்ட என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவும் ஜோதிடம் பார்க்கச் செல்வோர் இந்தக் கதையை வாசித்து முடித்தும் தப்பாமல் நினைவுக்கு வந்தனர்.

      நீக்கு
    3. டிசம்பர் 11 -- மஹாகவியின் பிறந்த நாள். அவன் சொன்ன 'மனம் வெளுக்க மார்க்கம் காணீர்' உபதேசித்திற்கு புதுமை விளக்கமாய் கதை கொடுத்த தம்பிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

      நீக்கு
    4. இதெல்லாம் வாரியார் ஸ்வாமிகள் முதலான அருளாளர்கள் வழங்கிய அருட்கொடை..

      என்னால் ஆனதென்று ஏதும் இல்லை..

      நீக்கு
  6. கதை நன்று. இந்தக் கதை பல விஷயங்களை என்னுள் எழுப்பியது.

    பதிலளிநீக்கு
  7. கோவில் நடைமுறைகளை அறிந்துகொள்ள, அதைப் பற்றிய புரிதல் வேணும் இல்லைனா பார்த்து, சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்ட முந்தைய தலைமுறைகளைப்கோல பெரியவர்களுடன் சென்றிருக்க வேண்டும்.

    இந்த வழக்கங்கள் இல்லை என்பதால் பலருக்கு கோவில் நடைமுறைகள் தெரிவதில்லை.

    த்வஜஸ்தம்பம் தவிர, கோவிலில் எங்குமே விழுந்து வணங்கக்கூடாது, த்வஜஸ்தம்பத்தைத் தாண்டி எவ்வளவு பெரியவர் (ஆன்மீகம் அல்லது துறவி) இருந்தாலும் விழுந்து வணங்கக்கூடாது. வைணவர்கள் (பெரும்பாலும்) தாயாரைச் சேவித்தபின்தான் பெருமாள் சன்னிதி, சைவர்களில் சிவனுக்கு அப்புறம் கடைசியாக அம்பாள் சந்நிதி. பொதுவா கற்பூர ஆரத்திஐ நாங்கள் கண்களில் ஒற்றிக்கொள்வதில்லை (அது பூசாரிக்கு பணம் கொடுக்க ஒரு வாய்ப்பு). இதுபோல பல நடைமுறைகள் உண்டு.

    பூசை செய்பவருக்கு 20 ரூபாய் தட்டில் கோடணும் என்றால் சிலர் அவரிடம் 100 ரூ கொடுத்துச் சில்லரை வாங்கிப்பாங்க. இதுவும் தவறு. (சிலர் தட்டில் நூறைப் போட்டுவிட்டு அதிலிருந்தே எண்பதை எடுத்துப்பாங்க). இந்த முறை தவறு. தட்டில் கோட்டது போட்டதுதான். கோவிலுக்கு இறைவனைச் சேவிக்கச் செல்லும்போது ஒரு பூவோ இல்லை கல்கண்டோ எடுத்துச் செல்லணும். துறவி, கோவில், வயதில் பெரியவர்களை வெறும் கையுடன் பார்க்கச் செல்லக் கூடாது (நேற்று இதுபற்றி விளக்கம் கேட்டேன்)

    பல நடைமுறைகள் நமக்குத் தெரிவதில்லை, சௌகரியம் கருதி விட்டுவிடுகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல விளக்கம். பல நல்ல தகவல்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நீக்கு
    2. இப்போதெல்லாம் நடைமுறைகளை நாம் மதிப்பதில்லை. அரசியல்வாதிகள்னா கவுன்சிலருக்குக்கூட பயந்துகொண்டு வாலைச் சுருட்டும் நாம், வேலைபார்க்கும் இடத்தில் எம்.டியின் பி,ஏ விடம்கூட பல்லிளிக்கும் நாம் கடவுள் சந்நிதானத்தில் அனைவரும் சம்ம் என்று பேச ஆரம்பிக்குறோம். கடவுளுக்கு, அனைவரும் சம்ம். ஆனால் அங்கு வேலை பார்ப்பவருக்கு அனைவரும் சம்மாக்க் கருதும் நிலை இருக்காது, காரணம் அவர் வேலை. இதைப் பற்றி வாய்ப்பு வரும்போது எழுதுகிறேன்.அர்ச்சகர்/பூசாரிதான் நமக்குக் கொடுக்கலாமே தவிர நாமே விபூதி, குங்குமத்தை எடுத்துக்கொள்வது, சடாரி எனப்படும் திருவடியை நாமே எடுப்பது என்பது கூடாது.

      நீக்கு
    3. தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்..

      பெரும்பாலான கோயில்களில் தீர்த்தம் சடாரி மட்டுமே பட்டர் தருகின்றார்..

      துளசி குங்குமத்தை நாமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றாகி விட்டது..

      நெல்லை அவர்களது கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    4. ஒரு காணொளியில், ஒரு அர்ச்சகர் மாத்திரம் இருக்கிறார், தீர்த்தமும் அவரே கொடுக்கிறார், பிறகு சடாரி வைக்கிறார். அவசரப்பட்ட பக்தர், அவர் இன்னொருவருக்கு தீர்த்தம் கொடுத்துக்கொண்டிருந்தபோது, சடாரியைத் தூக்கித் தன் தலைமேல் வைத்துக்கொள்வதைப் பார்த்தேன்.

      நீக்கு

    5. /// இன்னொருவருக்கு தீர்த்தம் கொடுத்துக் கொண்டிருந்தபோது, சடாரியைத் தூக்கித் தன் தலைமேல் வைத்துக் கொள்வதைப் பார்த்தேன்.. ///

      தமக்குத் தாமே திட்டமோ என்னமோ?..

      யார் கண்டது!..

      நீக்கு
  8. இப்படியான அன்பின் கருத்துக்களை எதிர்பார்க்க வில்லை..

    நெகிழ்ச்சியாக இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். அனைவருக்கும் இறைவன் நலத்தை தர வேண்டுமாய் மனதாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் இறைவன் நலத்தை தர வேண்டுமாய் மனதார பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

      நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்..

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    நல்ல மனநிறைவான கதை. தெய்வங்களைப்பற்றியும், பூஜா விதிகளைப் பற்றியும், விபரங்கள் அவ்வளவாக தெரியாதாயினும், அருகிலுள்ளவர் சொல்வதை ஆர்வமாய் புரிந்து கொண்ட அந்தப் பெண்ணின் நல்ல மனதில், கால நிலை சந்தர்பங்களினால் குடி கொண்டிருந்த சத்ரு சம்ஹாரம் ஆகி விட்டான்.

    பல தெளிவான கருத்துக்களுடன் கதையை அருமையாக படைத்து தந்த துரை செல்வராஜ் சகோதரருக்கு மனநிறைவான பாராட்டுக்கள். மிக்க நன்றி.

    கதைக்கு பொருத்தமாய் அமைத்த படங்கள் அழகாக உள்ளன. சகோதரர் கௌதமன் அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// அருகிலுள்ளவர் சொல்வதை ஆர்வமாய் புரிந்து கொண்ட அந்தப் பெண்ணின் நல்ல மனதில், கால நிலை சந்தர்ப்பங்களினால் குடி கொண்டிருந்த சத்ரு - சம்ஹாரம் ஆகி விட்டான்..///

      தங்களது அன்பின் கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. சகோதரர் கௌதமன் அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. கதை மிக நன்று துரை அண்ணா.

    எதிரி என்பதே நம் மனத்தில் தான் என்பதுதான் என் கருத்தும். நான் அடிக்கடி சொல்வது வீட்டில்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  12. @ நெல்லை..

    /// வேலை பார்க்கும் இடத்தில் எம்.டி யின் பி,ஏ விடம் கூட பல்லிளிக்கும் நாம் கடவுள் சந்நிதானத்தில் அனைவரும் சமம் என்று பேச ஆரம்பிக்கின்றோம்..///

    அற்புதம்..

    ஆ.. ஊ என்றால் அந்த நாட்டைப் பார் என்பார்கள்... சமத்துவமாம்..


    வீட்டு வேலை செய்வதற்குச் சென்று உயிரை விட்ட அபலைப் பெண்களின் மர்ம முடிச்சுகள் ஏராளம்

    இன்னும் கண் திறவாத சம்முவப் போராலிகள் (சமூகப் போராளிகள்) இங்கேயும் ஏராளம்..

    பதிலளிநீக்கு
  13. தேசிய மருத்துவக் கமிஷனின் முத்திரைச் சின்னம் சமீபத்தில் மாற்றப்பட்டுள்ளது.
    கிரேக்க மருத்துவ கடவுளான, அஸ்கிலிபியஸ் இடம் பெற்ற, அந்த அடையாளம் மாற்றம் செய்யப்பட்டு நமது நாட்டின் ஸ்ரீ தன்வந்திரி இடம் பெற்றுள்ளார்..
    https://m.dinamalar.com/detail.php?id=3502025

    பதிலளிநீக்கு
  14. சுவாரஸ்யமான சம்பவம் ஜி
    இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  15. சத்ருசம்ஹாரம் அருமையான கதை. ஒரு சம்பவத்தை வைத்தே நல்விளக்கத்துடன் நன்றாக கொண்டு செல்கிறார். வாழ்த்துகள்.


    படங்களும் ந‌ன்றாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  16. கதை நன்றாக இருக்கிறது. சத்ரு சங்காரம் விளக்கம் அருமை.
    நம் மனதில் இருக்கும் ஆறு குணங்களை சீர் அமைக்க வேண்டும்.
    சொல்வதற்கு நல்ல பெரியவர் கிடைத்தது அந்த குழந்தைக்கு அதிர்ஷ்டம். குழந்தை அதை காது கொடுத்து கேட்டது, புரிந்து கொண்டது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. .// அந்த குழந்தைக்கு அதிர்ஷ்டம். குழந்தை அதை காது கொடுத்து கேட்டது, புரிந்து கொண்டது மகிழ்ச்சி.///

      தங்களது அன்பின் கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  17. ..அவசரப்பட்ட பக்தர், அவர் இன்னொருவருக்கு தீர்த்தம் கொடுத்துக்கொண்டிருந்தபோது, சடாரியைத் தூக்கித் தன் தலைமேல் வைத்துக்கொள்வதைப் பார்த்தேன்//

    Fast food போல, ஃபாஸ்ட் பக்தி. பட்டருக்கு வெய்ட் பண்ணமுடியுமா. . எத்தனை காரியம் பாக்கியிருக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// Fast food போல, ஃபாஸ்ட் பக்தி. பட்டருக்கு வெய்ட் பண்ணமுடியுமா. . எத்தனை காரியம் பாக்கியிருக்கு!.. ///

      இது கலிகாலம்..

      தங்களது அன்பின் கருத்திற்கு மகிழ்ச்சி..
      நன்றி ஏகாந்தன்..

      நீக்கு
  18. முருகா சரணம்..

    மகிழ்ச்சி..
    நன்றி தனபாலன்..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!