ஞாயிறு, 31 டிசம்பர், 2023

நான் படித்த பள்ளியின் நினைவுகள் – தாளவாடி (Talavadi) இறுதிப் பகுதி : நெல்லைத்தமிழன்

 

நான் படித்த பள்ளியின் நினைவுகள் தாளவாடி (Talavadi) இறுதிப் பகுதி

நான் 7 மற்றும் 8ம் வகுப்பு படித்த, மலை கிராமமான தாளவாடி பற்றிய நினைவலைகள் இந்த வாரமும் தொடர்கிறது.

தாளவாடியின் குளிர், குளிப்பதற்கான வெந்நீரில் யூகலிப்டஸ் இலைகளையும் போட்டுக் கொதிக்கவைத்துக் குளிப்பது, மண்டை வெல்லம் இல்லாமல், 2 இஞ்ச் X 2 இஞ்ச் அளவில் அச்சுவெல்லம் (அப்போது 25 பைசாக்கள்) என்பதெல்லாம் எனக்குப் புதிதாக இருந்தது. அந்த ஊர் குளிருக்கு நல்லது என்று நல்லெண்ணெய்க்குப் பதிலாக விளக்கெண்ணெய் தேய்த்து வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கம் வந்தது. அந்த ஊரில் பட்டுப்பூச்சி வளர்ப்பு என்பது குடிசைத் தொழிலாக இருந்தது. பட்டுக்கூடு தயாரானதும் அவற்றை, பேருந்து நிலையத்தின் அருகிலேயே இருந்த பட்டுநூல் எடுக்கும் தொழிற்சாலையில் கொடுத்துவிடுவார்கள். அதிலிருந்து பட்டுநூல் எடுத்து அவற்றை கர்நாடகப் பகுதிக்கு விற்பனைக்கு அனுப்புவார்கள். பட்டு நூல் எடுத்த பிறகு வெறும் கூடும் வெந்த பட்டுப்பூச்சியும் தொழிற்சாலைப் பகுதிகளில் குப்பையாக் கிடக்கும் என்பதால் கழுகுகளும் அந்தப் பகுதியில் உண்டு. பாம்புகள் நடமாட்டம் சர்வ சாதாரணம். எங்கள் பள்ளி வளாகத்திலிருந்து அரை கிமீ தூரத்தில் அரசின் பட்டுப்பூச்சி வளர்ப்பு மற்றும் சோதனை மையம் இருந்தது.  என் அப்பா அந்த இடத்திற்கும் பட்டுநூல் எடுக்கும் இடத்துக்கும் எங்களைக் கூட்டிச் சென்றிருக்கிறார். பட்டுப் புழுக்களின் தரத்தை எப்படிப் பார்க்கிறார்கள் என்றெல்லாம் நுண்ணோக்கியைவைத்து எங்களுக்கு அங்கிருந்தவர் காண்பித்தார். எங்கள் பள்ளியிலேயே பட்டுப்புழுக்களுக்கான முசுக்கொட்டை செடிகளை வளர்ப்போம்.  பேருந்து நிலையத்துக்கு அருகிலேயே ஒரு லைப்ரரி உண்டு. நான் கதைப்புத்தகம், நாவல்கள் போன்றவற்றைச் சிறு வயதிலிருந்தே படிப்பேன். படிப்பேன் என்றால் ஒரு நாவலை எடுத்துக்கொண்டால் முடிக்காமல் விடமாட்டேன். அந்த லைப்ரரியில்தான், துப்பறியும் சாம்பு போன்ற பல நாவல்களைப் படித்தேன்.

இப்படித்தான் ஓலைத் தட்டிகளில் கூடுகளை வளர்ப்பார்கள்.

பட்டுநூல் எடுத்த பிறகு வெறும் கூடும் வெந்த புழுவும்

தாளவாடியில் ஒரு மாரியம்மன் கோவிலும் அதற்கு அருகிலேயே பள்ளிவாசலும் இருக்கும். நீங்கள் கூகுள் செய்து பார்த்தால் தெரியும், வருடா வருடம் மாரியம்மன் கோவிலில் பூக்குழி விழா நடக்கும். அதற்கான பூக்குழி கோவில் வாசலிலிருந்து பள்ளிவாசலின் முன்பு வரை பெரிதாக இருக்கும். (பூக்குழி என்றால் தீக்குழி என்பது தெரியும் என நினைக்கிறேன்). அதற்காக காட்டிலிருந்து லாரியில் விறகுகள் வரும். இரவு பத்துமணிக்கு ஏராளமானவர்கள் தீ மிதிப்பார்கள். தாளவாடியில், நாங்கள் ஸ்கூலுக்குச் செல்லும் வழியில் மிகப் பெரிய மிஷனரி ஹாஸ்பிடல் உண்டு. அப்போதெல்லாம் மதச் சிந்தனை பெரிதாக யாரிடமும் இருந்ததில்லை. பிறகு மதமாற்றம், வெளிநாட்டு நிதியால் பெரிய பள்ளிகளை உருவாக்கி அதன் மூலமாக மதத்தை வளர்ப்பதுதங்கள் மதக்கார்களாகச் சேர்ந்து வாழ்வது, குடியிருப்புகளை ஏற்படுத்துவது, ஆக்கிரமிப்பது என்று காலம் ரொம்பவே மாற்றிவிட்டது..

பூக்குழி  மாரியம்மன் கோவில் வாசலில் இருந்து, இந்தக் கல் பகுதி வரை போடுவார்கள் என்று நினைக்கிறேன்

77ல் நான் வேணுகோபால ஸ்வாமி கோவிலைப் பார்த்த நினைவு இல்லை. மாரியம்மன் கோவில், நடுவில் பள்ளிவாசல், பிறகு வேணுகோபாலஸ்வாமி கோவில் என்று அமைந்துள்ளது

தீமிதி நடக்கும் போது கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும்.

அது பெரும்பாலும் கன்னடர்களைக் கொண்ட பகுதி. பள்ளி ஆண்டுவிழாவில், தமிழ் நாடகமும் கன்னட த்தில், இராமாயணத்தின் ஒரு பகுதியையும் (அது நெடிய நாடகமாக இருந்திருக்கவேண்டும், ஹனுமான் வேஷதாரியை நினைவிருக்கிறது) நாடகமாக நடத்தினார்கள். தமிழ் நாடகத்தில் நானும் நடித்திருந்தேன். கன்னட நாடகத்தைப் பார்க்கத்தான் நிறையபேர்கள் வந்திருந்தார்கள். (ஊர் மக்கள்)

8ம் வகுப்புக்கு அப்போதெல்லாம் பொதுத்தேர்வு உண்டு. அதில் ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் முதல் இரண்டு மதிப்பெண் வாங்குபவர்களுக்கு, சத்தியமங்கலத்தில் பொதுத்தேர்வு முடிந்ததும் ஒரு போட்டித் தேர்வு வைப்பார்கள். அதில் முதலிரண்டு இடத்தைப் பிடிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் என்று 4 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்குவார்கள். என் அண்ணன் அதில் முதல் ரேங்க் எடுத்தான். நானோ பள்ளியிலேயே இரண்டாவது ரேங்க்தான். அதனால் என் அப்பா என்னிடம் கூடுதல் கவனம் செலுத்தி கணக்கு போன்றவற்றைச் சொல்லித்தருவார். கூடுதல் கவனம் என்றால், சரியாக விடை எழுதாவிட்டால் தொடையில் கிள்ளு, ஸ்கேலால் அடி. நான் ஓவியம் வரைந்தாலும், என் அப்பா, படிப்புக்குத்தான் முன்னுரிமை என்று சொல்லிக்கொண்டே இருப்பார். என்னையும் போட்டித் தேர்வுக்கு அனுப்பினார்கள் (பள்ளியில் இரண்டாவது ரேங்க்). 9ம்  வகுப்பு ஆரம்பித்துச் சில நாட்களில் ரிசல்ட் வந்தது. நானும் போட்டித் தேர்வில் வென்றிருந்தேன். பிறகு அந்த ஊரிலிருந்து என்னை, அப்பா திருநெல்வேலி தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்புக்கு அனுப்பிவிட்டார். அது வேறு கதை.

பள்ளியின் பெரிய விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதி. 

7ம் வகுப்பிலேயே எனக்கும் ஹெட்மாஸ்டர் பையனுக்கும் அப்போ அப்போ சண்டை வந்துகொண்டே இருந்ததுஇதனால் ஹெட்மாஸ்டர், 8ம் வகுப்புக்கு தன் பையனை, கோபிச்செட்டிபாளையத்தில்  (? இப்போது நினைவில்லை) ஒரு பள்ளியில் ஹாஸ்டலில் சேர்த்துவிட்டார். அதனால் நான் போட்டித் தேர்வில் வென்றது அவர்களுக்கு நிம்மதியைத் (பையன் இனி தன்னுடன் வைத்துக்கொள்ளலாம் என்பதால்) தந்தது. ஹெட்மாஸ்டரும் தன்னுடைய கோபத்தைக் காண்பிக்கும் விதமாக அசெம்பிளியில் நான் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றதை அறிவித்து கௌரவப்படுத்தவில்லைஹெட்மாஸ்டர் குடும்பமும் பெங்களூரில்தான் இருந்ததுவெளிநாட்டிலிருந்து வெகேஷனுக்கு பெங்களூருக்கு வருவேன். என் அப்பா என்னவோ, நான் போய் அவர்களைப் பார்ப்பதை விரும்பவில்லை. என் பெங்களூர் வீட்டு கிரஹப்ப்ரவேசத்துக்கு (2004ல்) ஹெட்மாஸ்டர் பெண்ணும், அவள் தம்பியின் மனைவியும் வந்திருந்தனர். எப்போதோ ஒரு முறை போன் செய்தபோது, ‘நான் என்னப்பாசாதாரண கிளார்க் உத்தியோகம்தான் பார்க்கிறேன்என்று அவன் சொன்னான். மனதில் அவனுக்கு இன்னும் என்னுடன் ஒப்பீடு செய்யும் குணம் மாறவில்லை என்று நினைத்துக்கொண்டேன்.

சரிதற்போதைய காலத்துக்கு வருவோம்……

பாலத்தைத் தாண்டியதும் நான், காரை ஊரை நோக்கித் திருப்பு, நாம் முதலில் நாங்கள் இருந்த வீடு, பிறகு பள்ளியைப் பார்த்துவிடுவோம். பிறகு ஊர் திரும்ப நேரமாகிவிடும் என்பதால், வேறு எங்கும் போகவேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

காரை பேருந்து நிலையத்துக்கு அருகில் நிறுத்திவிட்டு, நான் எங்கள் வீடு இருந்த இடம் நோக்கி நடந்தேன். நினைவுக்கும் தற்போதைய நிலைக்கும் உள்ள பெரிய வித்தியாசம், அப்போது தூரமாக நினைவில் இருந்தவை இப்போது அருகில் இருக்கின்றன. அதாவது மனதில் பேருந்து நிலையத்துக்கும் வீட்டிற்கும் 400 மீட்டர் தூரம் இருக்கும் என்று நினைத்திருந்தேன், ஆனால் பாதி தூரம்கூட இல்லைஇப்போது காவலர் குடியிருப்பு, அடுக்கு மாடிக் குடியிருப்பாக மாறி இருக்கிறது. எங்கள் வீடு இருந்த இடம் (அங்கெல்லாம் தெரு என்று சொல்லக்கூடாது. வீடு இருந்த பகுதி என்றுதான் சொல்லமுடியும். மலைப்பகுதி என்பதால்) தெரிந்தது. ஆனால் வீடுதான் மிகவும் மாறி, முன்பிருந்த அழகிய வீடு+தோட்டம் இல்லாமல், சாதாரண கொஞ்சம் பாழடைந்த வீடாக இருந்தது. அதன் அருகில் நல்ல கட்டிடங்களும் இருந்தன. நான் இருந்தபோது, வீட்டின் எதிரே வெறும் புல்வெளிகளுடன் கூடிய காட்டு மைதானமாக இருந்த இடத்தில் தற்போது காய்/கனி மண்டியும், அதற்குப் பின்புறத்தில், உண்டு உறைவிடம் என்ற பெயரில் மிகப் பெரிய கிறித்துவப் பள்ளியும், இருந்தன. நான் என் வீடு இருந்த பகுதியையே பார்த்துக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒருவர் உதவ வந்தார். என்ன வேண்டும் என்று கேட்டார், நான் வாழ்ந்த வீடு எது என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்றேன். எத்தனை வருடங்கள் முன்பாக என்று கேட்டவரிடம் 42 வருடங்கள் என்று சொன்னதும், நாங்களே 10-20 வருடங்களாகத்தான் இங்கு இருக்கிறோம் என்றார்.

வீட்டின் எதிரே வெறும் புற்களாக இருந்த மைதானத்தில் தற்போது இருக்கும் காய்கனி மண்டி. அங்கிருந்து நாங்கள் இருந்த வீட்டின் தோற்றம். 

மாறி இருந்த வீட்டைப் பார்த்த பிறகு (வெளிப்புறத்திலிருந்துதான்), நேரே எங்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றோம். முன்பு இருந்த வாசல் பகுதியை அடைத்துவிட்டு (அதாவது பள்ளிக்கு எதிரே காட்டாறு ஓடிக்கொண்டிருந்தது), வளாகத்தின் பின்புறம் பள்ளியின் வாசலைக் கட்டியிருந்தார்கள். உள்ளே ஒரு ஈ காக்காய் இல்லை. கோவிட் நேரம் என்பதால் பள்ளிக்கு விடுமுறை. யாருமே இல்லைநாங்கள் உள்ளே சென்றோம். நான் ஒவ்வொரு இடமாகப் பார்த்து நினைவலைகளில் மூழ்கினேன். என் மனைவியிடமும் பள்ளி நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டேன். 7ம் வகுப்பு அறை, 8ம் வகுப்பு அறைகளில் படங்கள் எடுத்துக்கொண்டேன். தலைமை ஆசிரியர் அறையை வேறு கட்டிடத்திற்கு மாற்றியிருந்தனர்.



இந்தியா சுதந்திரம் பெற்று 25 வருடங்கள் ஆனதன் நினைவாக வைக்கப்பட்டிருந்த நினைவுத்தூண்.

அறிவியல் ஆய்வுக்கூடம் மற்றும் வகுப்புகள் இருந்த பகுதி.

மரங்களும் புல்வெளிகளுமாக பள்ளி அழகாக இருக்கிறது இல்லையா?

நான் 7வது படித்த வகுப்பறை. அடுத்தது 8வது படித்த வகுப்பறை. கோவிட் என்பதால் பெஞ்சுகளை ஒரு ஓரமாகப் போட்டிருந்தார்கள். 7வது படிக்கும்போதுதான் வகுப்பில் பெரிஸ்கோப் தயாரித்த தும், உட்கார்ந்த பெஞ்சிலிருந்து அதை சன்னல் வழியாக உபயோகித்து யார் யார் விளையாட்டு மைதானத்துக்குப் போகிறார்கள் என்றெல்லாம் வேவு பார்த்ததும் நினைவுக்கு வருகிறது.

ஒவ்வொரு வகுப்பறையிலும் பெரிய அளவில் திருவள்ளுவர், பாரதியார் என்று பல தலைவர்களின் படங்களை சுவற்றில் வரைந்திருப்பார்கள். 8ம் வகுப்பு தமிழ் செக்ஷன் பாரதியார் அறை என்றெல்லாம் சொல்வார்கள். அந்தத் தலைவர்கள் ஓவியங்களைக் காணோம்.

என் வலதுபுறத்தில்தான் ஹெட்மாஸ்டர் அறை நான் படித்த காலத்தில் இருந்தது.

பள்ளி மைதானம். அப்போல்லாம் சில வகுப்புகள் இந்த மைதானத்தில் நடக்கும் (வரலாறு புவியியல்). காரணம் அந்த வகுப்பை எடுத்தவர் உடற்பயிற்சிக்கான ஆசிரியர் பசுபதி அவர்கள்மற்றவர்கள் விளையாடுவதையும் கவனித்துக்கொண்டு, எங்களை ஒவ்வொருவராக பாடத்தை எழுந்து வாசிக்கவும் சொல்வார்.

நாற்பது வருடங்களுக்குப் பிறகு, ஏகப்பட்ட அனுபவங்களுடன், இந்தப் பள்ளியை மீண்டும் காண வருவேன் என்று நினைத்துப் பார்த்திருப்பேனா?

அறிவியல் கலைக்கூடம் மற்றும் பள்ளியின் காரிடார். 

பள்ளியில் உள்ள கூடைப்பந்து மற்றும் கைப்பந்து விளையாட்டு மைதானம். 

நான் படித்த பள்ளிக்கூடத்தை 42 வருடங்களுக்குப் பிறகு பார்த்தபோது என் சந்தோஷம் சொல்லமுடியாது. எத்தனை எத்தனை நினைவுகளை என்னுள் எழுப்பியது அது.

இருந்தாலும், வாழ்ந்த பழைய இடங்களை நாம் இப்போது பார்த்தால், அந்த இடங்களின் வளர்ச்சி சந்தோஷத்தைத் தருவதாக இல்லை. எதையோ பெரிதாக இழந்துவிட்டோம் என்ற உணர்வைத்தான் தருகிறது. கிராமங்களெல்லாம் நகரங்களானால் அல்லது நகர்ப்புற வளர்ச்சியைப் பெற்றால் அது முற்றிலும் செயற்கையாக இருக்கிறது. தாளவாடியிலிருந்து Dதொட்டகாஜனூர் சுமார் 2 கிமீ தூரத்தில் இருக்கும். அங்குதான் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் பிறந்தார். நான் 7வது படித்தபோது அவருடைய தோட்ட வீட்டிற்குச் சென்று அவரையும் அவர் மனைவியையும் பார்த்திருக்கிறேன். ஆற்றுப் பாலத்தைத் தாண்டியதும், அவருடைய விளை நிலங்கள்தாம் அங்கு. டிராக்டர்களை ஓட்டி மக்காச்சோளமோ இல்லை ஒருவகை எள்ளோ விளைவிப்பார்கள், செம்மண் பூமி. ஆனால் அந்த இடம் விற்கப்பட்டு, அங்கு ஒரு ஊரே வந்துவிட்டதுஅதுபோல பலப் பல நகர்கள் தாளவாடியைச் சுற்றிலும் முளைத்துவிட்டன.

இன்றைக்கும் என்னால் பரமக்குடியின் வரைபடத்தை என் நினைவிலிருந்து வரைய முடியும். அப்படித்தான் அந்த இடம் இப்போது இருக்குமா? நான் பார்த்த மிகவும் அகலமான பரந்த மணல்வெளியுடன் இருந்த வைகை ஆறு இப்போதும் அப்படித்தான் இருக்குமா என்றெல்லாம் யோசித்தால், நிச்சயம் பெருத்த ஏமாற்றமாயிருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால் தாளவாடி ஊரோ அல்லது பள்ளிக்கூடமோ (அதற்குப் போகும் வழியோ) அவ்வளவு வளர்ச்சியடையவில்லை, இன்றும் என்னால் இடங்களை நினைவுகூற முடிகிறது. இருந்தாலும் அந்த ஊருக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தேன்.

நாளையிலிருந்து புது வருடம். வரும் வருடம் நல்லனவற்றை நமக்குத் தரட்டும். வாசகர்கள் அனைவருக்கும் ஆங்கில புதுவருட வாழ்த்துகள்.

மத்தியரங்கம் ஸ்ரீரங்கநாதர். அவரருள் அனைவருக்கும் கிட்டட்டும்.

 

31 கருத்துகள்:

  1. காலை வணக்கம்.
    நாளை புத்தாண்டு என்று ஞாபகப்படுத்தியிருக்கிறீர்கள்.
    புத்தாண்டு பூத்துக் குலுங்கட்டும்.
    இறை அருளால் அனைவர் வாழ்விலும் புது வளங்களைக் கொண்டு வந்து சேர்க்கட்டும் என்று அவனருளால் அவன் தாள் வணங்கி இறைஞ்சிக் கேட்டுக் கொள்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார். இந்த வருடத்தின் கடைசி நாள் ஞாயிறாக அமைந்துவிட்டது. வருடம் முழுவதுமே ஞாயிறில் என் பகுதி வந்தது என்று நினைவு.

      புத்தாண்டு நம் எல்லோருக்கும் நன்மை தரும் ஆண்டாக அமையட்டும்.

      நீக்கு
  2. பள்ளி நினைவுகளைப் பகிர்ந்து கொண்டது அருமையாக இருந்தது. நிறைவான படங்கள்
    இடங்களை அடையாளப்படுத்திக் கொள்ள துணையாக இருந்தன. உங்களையும் பார்த்ததில் சந்தோஷம் நெல்லை.
    வாய்ப்பு வரும் பொழுது நேரில் சந்திக்கலாம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாகச் சந்திப்போம் ஜீவி சார்...ஒரு வாய்ப்பு கிடைத்தபோது என்னால் பெங்களூரிலிருந்து வர இயலவில்லை.

      பதிவுக்கான கருத்துக்கு நன்றி. என் மனதுக்கு நெருக்கமான ஊர் அது. என்றாவது இந்தப் பதிவு நண்பர்கள் கண்ணில் பட்டு, தொடர்பு கொள்ள நேர்ந்தால் மகிழ்ச்சிதான்.

      நீக்கு
    2. என்றாவது இந்தப் பதிவு நண்பர்கள் கண்ணில் பட்டு, தொடர்பு கொள்ள நேர்ந்தால் மகிழ்ச்சிதான்.//

      ஆ! அப்ப அந்த ஹெட்மாஸ்டர் பையன் இத வாசிச்சா அதுவும் அவரைப் பத்தி கடைசில சொல்லியிருக்கும் பகுதிய வாசிச்சா!!!

      கீதா

      நீக்கு
  3. இதுவரை மறைந்திருந்தே பார்த்த நீங்கள் பள்ளி நினைவுகள் என்றவுடன் பூம் என்று புகைப்படங்களில் கருப்பு சிவப்பு உடுப்புடன் நின்று பூச்சாண்டி காட்டி விட்டீர்கள்.

    படங்கள் விவரங்கள் எல்லாம் கட்சிதமாக உள்ளன.
    பரமக்குடி எங்கே தாளவாடி எங்கே நெல்லை எங்கே எப்படி உங்கள் அப்பாவை இப்படி தூர தூர ஊராக டிரான்ஸ்பர் செய்தார்கள்.
    வெகு சீக்கிரம் பஹரைன் படங்கள் வெளியிடுவார்கள் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளியிடுவார்கள் - வெளியிடுவீர்கள்

      நீக்கு
    2. இங்கு சில பல முறை என் படம் வெளியாகியிருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த நிறம் மெரூன்.

      அப்பா, பள்ளிக் கல்வித் துறை என்பதால் தமிழகத்தின் பல இடங்களுக்கு டிரான்ஸ்பர் ஆகியிருக்கிறார். நான் திருநெல்வேலிக்குச் சென்றதும், பிறகு அவர் திருவண்ணாமலை, ஊட்டி, தூத்துக்குடி, சென்னை என பல இடங்களுக்கு மாறியிருக்கிறார்.

      இப்படி நான் தமிழகத்தின் பல இடங்களுக்கும் சென்றதில், ஒரு வட்டார வழக்குத் தமிழ் எனக்குச் சாத்தியமானதில்லை. சில பல வார்த்தைகள் அந்த அந்த வட்டாரத்திற்கு உரியதாக இருக்குமே தவிர என்னால் முழுவதுமாக, நெல்லை, மதுரை, கோவைத் தமிழில் பேசமுடியாது. ஒரிஜினல் சென்னைத் தமிழ் சேரி மற்றும் தெலுங்கு கலந்த தமிழ்.

      நீக்கு
    3. நான் இருந்த அல்லது பிரயாணித்த நாடுகளின் புகைப்படங்கள் அவ்வப்போது இங்கு வரும். யாத்திரைகளின் கோவில்களின் படப் பதிவுகளுக்கு இடையில் ஒரு மாறுதலாக வரும்.

      நீக்கு
    4. கருப்பு சிவப்பு என்று குறிப்பிட்டது DMK ஆகிவிட்டீர்களோ என்ற குசும்பு தான். MGR அவரது படங்களில் இப்படி மறைமுகமாக DMK கட்சியை நினைவூட்டுவார்.

      நீக்கு
    5. ஹா ஹா ஹா... அவனவன் (திமுக கட்சிக்காரங்க) பிச்சுக்கிட்டு பாஜக பக்கம் போகும் இந்தத் தருணத்திலா இந்தக் கேள்வி/சந்தேகம்?

      நீக்கு
    6. எதுக்குப் போறாங்க? எதுக்கு ஏத்துக்கிறாங்க? பா.ஜ.க.வை தி.மு.க.--வா வார்த்தெடுக்கவா?
      இது கூட நல்லாத்தான் இருக்கு.

      நீக்கு
  4. பள்ளிக்கு என்றவுடன் 42 வருடங்கள் முன்பு போட்ட "அரைக்கால் டவுசர்" போட்டுத்தான் போகவேண்டும் என்று எப்படித் தோன்றியது?
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெயகுமார் சார்... நான் இந்த உடையில்தான் வெளியில் செல்லும் வழக்கம். கையில் வேஷ்டி எடுத்துச் செல்வேன், கோயிலுக்குப் போகும் சந்தர்ப்பம் வந்துவிட்டால் என்ன செய்வது என்று.

      நீக்கு
    2. ஜெ கே அண்ணா நீங்க வேற...அவரு இன்னமும் குட்டிப் பையன்! மேலே வார் போட்ட அரைக்கால் டவுசர் கூடப் போட்டுக்கிட்டு படம் போட்டு கீதா ரங்கன் (கா) நான் குட்டிப் பையன்னு இப்பவாது நம்புவீங்களான்னு படம் போட்டாலும் போடுவார்!

      கீதா

      நீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. நெல்லை படங்கள் எல்லாம் சூப்பர்.

    ஷார்ட்ஸ்- அதான் நீங்கதான் சின்ன பையனாச்சே தம்மாத்துண்டு!!!

    நீங்க தாளவாடியில் இருந்த வீடு அந்த இடம் ஹையோ செமையா இருக்கு அப்ப எப்படி இருந்திருக்கும்னு நினைத்துப் பார்த்து.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு அங்கு சென்று ஒரு சில நாட்கள் தங்க வேண்டும் என்று ஆசை. நடந்தே எல்லா இடங்களுக்கும் போகணும். வாய்ப்பு கிடைக்குமான்னு தெரியலை. (எத்தனை இடங்களுக்குப் போக எனக்கு ஆசை)

      நீக்கு
  7. உங்களுக்குப் போட்டியா எல்லாம் பசங்க இருந்திருக்காங்களே! ஆனா வயசான பிறகும் மாறாதது ஒரு சிலர் அப்படித்தான். எவால்வ் ஆகாமலேயே இருப்பாங்க.

    நல்ல நினைவுகள் நெல்லை. அதுவும் இப்ப போய் பார்த்தது ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கும்.

    நானும் நாகர்கோவில் போயிருந்தப்ப நான் படிச்ச இந்துக் கல்லூரி படங்கள் எடுத்திருக்கிறேன். பதிவு போட வேண்டும்னு இன்னும் எழுதலை. நிறைய இருக்கே பதிவுகள் எழுத....மலைப்பா இருக்கு!!

    நீங்க தாளவாடி பத்தி எழுதிய பிறகு, அப்பகுதிக்குப் போய் பார்க்க வேண்டும் என்று ஆசை மலைப்பகுதிகள் ரொம்பப் பிடிக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆனா வயசான பிறகும் மாறாதது ஒரு சிலர் அப்படித்தான்.// - அப்படி இருக்காது கீதா ரங்கன். வாழ்க்கைல கொஞ்சம் முன்னேறி ஒரு நிலைக்கு வரவங்களுக்கு அப்படி இல்லை. ஆனால் சோபிக்காம அல்லது எதிர்பார்க்கும் உயரத்தை அடையலைனா மனசுல வருத்தம் இருக்கும்.

      நான் பாளையங்கோட்டை சென்றபோது என் ஹாஸ்டல், கல்லூரி, பள்ளிக்குச் சென்றிருக்கிறேன். ஜங்ஷனிலும் நடந்து செல்வேன்.

      நீக்கு
  8. உங்களுக்குப் போட்டியா எல்லாம் பசங்க இருந்திருக்காங்களே! ஆனா வயசான பிறகும் மாறாதது ஒரு சிலர் அப்படித்தான். எவால்வ் ஆகாமலேயே இருப்பாங்க.

    நல்ல நினைவுகள் நெல்லை. அதுவும் இப்ப போய் பார்த்தது ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கும்.

    நானும் நாகர்கோவில் போயிருந்தப்ப நான் படிச்ச இந்துக் கல்லூரி படங்கள் எடுத்திருக்கிறேன். பதிவு போட வேண்டும்னு இன்னும் எழுதலை. நிறைய இருக்கே பதிவுகள் எழுத....மலைப்பா இருக்கு!!

    நீங்க தாளவாடி பத்தி எழுதிய பிறகு, அப்பகுதிக்குப் போய் பார்க்க வேண்டும் என்று ஆசை மலைப்பகுதிகள் ரொம்பப் பிடிக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்முடன் படித்தவர்கள் பெரிய நிலைக்கு வந்து நாம் வரலைனா, நம் மனதில் எந்த விதமான ஆதங்கம் இருக்கும்?

      நம்மைவிட சாதாரண நிலையில் கஷ்டப்படும், தன்னுடன் படித்தவர்களுக்கு அல்லது நம் கிராமத்தில் இருந்தவர்களுக்கு உதவும் மனம் நமக்கு வருமா?

      நீக்கு
  9. இன்றைக்கும் என்னால் பரமக்குடியின் வரைபடத்தை என் நினைவிலிருந்து வரைய முடியும். //

    அப்ப மையத்த இல்லை அவங்க குடும்பத்தை சந்திச்சிருப்பீங்களே!!! இல்லை அவங்க வீட்டு ஆளுங்க அங்க படிச்சிருப்பாங்களே...அப்ப மையத்தோட (இப்பவும் கட்சி இருக்குதானே!!! டவுட்டு!) அப்பவே சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சுச்சா...அவங்க குடும்பம் அங்க நிறைய வருஷங்கள் இருந்ததே அப்புறம் தானே சென்னைக்கு ஒவ்வொருத்தரா வந்தாங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரமக்குடியில் வக்கீல் ஸ்ரீநிவாசன் அவர்களின் பையன் ரகு, என்னுடைய வகுப்புத் தோழன். அவங்க வீட்டுக்குப் பலமுறை சென்றிருக்கிறேன் (அவங்க பணக்காரங்க, ரவி தியேட்டர் எதிரே ஒரு கார்னரில் அவங்களோட தனி வீடு, மாட்டுத் தொழுவம் எல்லாம் இருக்கும்)

      மத்தபடி கமலதாசர்லாம் அங்க எங்க இருந்தார்னுலாம் தெரியாது.

      நீக்கு
  10. பள்ளி நினைவலைகளை ரசித்து படித்தேன்.

    பரமக்குடி - எமனேஸ்வரம் ஆற்றின் இருபுறமும் ஆக்கிரமிப்பு அதிகமாகி விட்டது.

    பொதுவாக எல்லா ஊர்களிலும் மாற்றம் ஆகி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது எமனேஸ்வரம் ஆறா? என் மனக்கண்ணில் மிக அகலமான மணல் பரந்த ஆறு நினைவில் இருக்கிறது. ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் சென்றதும், ஆற்றில் தண்ணீருக்காகத் தோண்டியதும், ஆற்றில் வெள்ளம் வர ஆரம்பிக்கும்போது நீருக்கு முன்னால் ஆற்றின் மணலில் ஓடியதும் (என்ன அசட்டுத் தைரியம்) நினைவில் இருக்கிறது. அந்த ஆற்றில் குளித்திருக்கிறோம் (வெள்ளம் வரும் காலங்களில்)

      நீக்கு

  11. நீங்கள் படித்த பள்ளியின் படங்கள், உங்கள் நினைவலைகள் அனைத்தும் அருமை.

    நீங்கள் அமர்ந்து படித்த உங்கள் வகுப்பறைக்கு சென்ற போது , நினைவுகளில் உங்களின் சக தோழர்கள் வந்து இருப்பார்கள்.
    இந்த பதிவை உங்களுடன் படித்தவர்கள் படித்து உங்களுடன் தொடர்பு கொண்டால் உங்களுக்கு மகிழ்ச்சி மேலும் கூடும்.

    பட்டுப்பூச்சி வளர்ப்பு பட்டுநூல் தயார் செய்யும் முறைகளை மைசூரில் பார்த்து இருக்கிறேன்.

    உங்கள் புத்தக வாசிப்பு , பள்ளி அனுபவங்கள், படித்த பள்ளிகள் விவரம் எல்லாம் நிறைய விவரங்களை சொன்னது.
    போட்டி, பொறாமை, மதம் சம்பந்தபட்டது என்றும் பலதும் .

    மத்தியரங்கம் ஸ்ரீரங்கநாதர் படம் அருமை.
    அனைவருக்கும் எல்லா நலங்களை அருள பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

    //நாளையிலிருந்து புது வருடம். வரும் வருடம் நல்லனவற்றை நமக்குத் தரட்டும். வாசகர்கள் அனைவருக்கும் ஆங்கில புதுவருட வாழ்த்துகள்.//

    உங்கள் புதுவருட வாழ்த்துகளுக்கு நன்றி.
    உங்களுக்கும் வாழ்த்துகள்.







    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்... புது வருடம் நம் எல்லோருக்கும் நல்லனவற்றைக் கொண்டுவரும் என்று நம்புவோம்.

      உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி

      நீக்கு
  12. நம் கமலா ஹரிஹரன் மேடம் மத்திய தமிழகத்திற்கு யாத்திரை சென்றார் என்பது தெரியும். ஒரு சில நாட்களா இல்லை கோவில்களின் அழகில் மனதைப் பறிகொடுத்து அங்கேயே தங்கிவிட்டாரா? அவர் உடல் நலம் சரியாகிவிட்டதல்லவா? அவருக்கும் கீதா சாம்பசிவம் மேடத்திற்கும் (அவங்க ரொம்பவே பிஸி) ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    நலமா? தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    கோவில் தரிசனங்கள் யாவும் இறைவனருளால் இனிதே முடித்து வந்து விட்டேன். தங்களின் அன்பான விசாரிப்புக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. இனி இறைவனின் அருளால் தொடர்ந்து பதிவுலகத்திற்கு வருவேன் என நம்புகிறேன்.

    இப்போது (இந்த நிமிடத்தில்) அழகாக மலர்ந்து வந்த புத்தாண்டு அனைவருக்கும் நல்லதையே தர இறைவனை பணிவுடன் பிரார்த்தித்தும் கொள்கிறேன். தங்களுக்கு என் அன்பான நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். புத்தாண்டு வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!